கார்ல் ஊவ் கிளெனஸ்கார்டின் எனது போராட்டம்: சில குறிப்புகள் – ஜேம்ஸ் லே

0 comment

A DEATH IN THE FAMILY நூலின் முதல் வரிகள் எளிய சொற்கள் மூலம் கச்சிதமாக நம் கவனத்தைத் தூண்டிலிட்டு ஈர்க்கின்றன. ‘இதயத்தைப் பொறுத்தவரை, வாழ்தல் எளிமையானது’ என்று தொடங்குகிறது. உடனடியாக இந்தச் சொற்றொடர் ஒரு காதல் கதையின் தேய்வழக்கைப் போல நம்மை ஆரத்தழுவி வெப்பமூட்டி அமைதியளிக்கிறது. இதயம் எளிமையானது என்று நினைத்துவிடுகிறோம். ஆனால் அது ஒரு மடமையான எண்ணம். இதயம் எங்கு வேண்டுமானாலும் நம்மை அழைத்துச் செல்கிறது. பகுத்தறிவால் இதயத்தின் தீர்வைக் காண முடியாது. அது எதை விரும்புகிறதோ அதையே விரும்புகிறது. ஆனால் கார்ல் ஊவ் கிளெனஸ்கார்டின் மனத்தில் இருப்பது அத்தகைய எளிமை அல்ல. இதயம் மெல்லுணர்ச்சிகளின் கூடாரம் என்ற எண்ணத்தை அளித்து நம்மை வருடியபடியே ‘இதயத்தைப் பொறுத்தவரை வாழ்க்கை எளிமையானது. அது தன்னால் எவ்வளவு முடியுமோ அதுவரை துடிக்கும். பிறகு நின்றுவிடும்’ என்ற இலக்கியபூர்வமான உண்மையை முகத்திலறைவது போல் முன்வைக்கிறார்.

அடுத்து வரும் பத்தி மரணத்தை மர்மமான ஒரு தத்துவப் பொருளாகக் கருதாமல் உடலியல் யதார்த்தமாக வர்ணிக்கிறது. ஓட்டம் நின்ற குருதித் தேக்கம், குளிர்ந்து விறைக்கும் சடலம், உடற்சிதைவைத் தொடங்கி வைக்கும் பாக்டீரியாக்களின் படையெடுப்பு. இந்த இயல்பான, இன்றியமையாத நிகழ்வுக்கு நாம் ஏன் பாராமுகம் காட்டுகின்றோம் என்று வியக்கிறார் கிளெனஸ்கார்ட். ஏன் இறந்தவர்களை அவசரமாக மூடி அப்புறப்படுத்துவதில் நாம் முனைப்புடன் இருக்கிறோம்? பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாரடைப்பு வந்து இறந்த ஓர் ஆசிரியரின் சடலம் அன்று மாலை வரை அங்கேயே பாதுகாப்பாகக் கிடக்க இயலுமே! ‘இடையிடையே ஒரு பறவை அவர் மீது இறங்கிக் கொத்துவதால் என்ன குறைந்துவிடும்?’   

முதல் பார்வைக்கு இது ஒரு மெல்லுணர்ச்சி தன்மையற்ற ஆழமான தொடக்கம். பூடகமான விதப்புக்கு எதிரானவர் இந்த எழுத்தாளர் என்று குறிப்பிடும் தொடக்கம். எளிதில் சகிப்புத்தன்மையை இழக்காமல் எடுத்துக்கொண்ட மையப் பொருளைக் கண்கொட்டாமல் எதிர்கொள்ளும் நூல் A DEATH IN THE FAMILY என்ற அறிவிப்பாக அது இருக்கிறது. இருப்பினும் ஒரு அடிப்படை சிக்கல் முன்வைக்கப்படுகிறது. கிளெனஸ்கார்டைப் பொறுத்தவரை அவர் முதல்பார்வைக்குத் தோன்றுவதைப் போல பொருள்முதல்வாதியாக இல்லை. ‘இதயம்’ என்பதை அதன் உருவகப் பொருளில் பலமுறை பயன்படுத்துகிறவராக இருக்கிறார். அவர் குறிப்பிடும் இதயத்தின் வலிகளும் இச்சைகளும் எளியனவாக இல்லை. பள்ளி மைதானத்தில் இருக்கும் சடலத்தின் பணி எதார்த்தமாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவரது தந்தையின் மரணம் நூலின் முக்கியப் பகுதியாக இருக்கிறது. ஆசிரியராக இருந்த அவரது தந்தையின் மரணம் இந்தக் கதாபாத்திர விவரிப்பில் சன்னமான சில குறிப்புகளை ஏற்றிச் செல்கிறது. இடையூறற்ற தெளிந்த விவரணைகளைச் சாத்தியமாக்குகிறது. இது கிளெனஸ்கார்டின் நுண்ணிய படைப்பாற்றலுக்கு ஒரு உதாரணம்.

கற்பனையான நிகழ்வுகளின் மீது தனது சொந்த எண்ணங்களை ஏற்றிச் சொல்ல அவருக்குக் கைவருகிறது. எத்தனை நுட்பத்துடன் அவர் தன் படைப்பை அணுகுகிறார் என்பதையும் எத்தனை கவனத்துடன் படிமங்களையும் குறியீடுகளையும் அதில் பயன்படுத்துகிறார் என்பதையும் இதன் மூலம் அறிய முடியும். A DEATH IN THE FAMILY மட்டுமின்றி அதன் தொடர் நாவலாகிய A MAN IN LOVE-ம் படைப்பாளர் தன்னைப் புரிந்துகொள்ளுதல், பகுத்தறிவுடன் திகழுதல், உலகை எவ்விதச் சாய்வுமின்றி கண்ணுறுதல் ஆகியவற்றுக்கும் துன்பம், அவமானம், சினம், சலிப்பு, காமம், எரிச்சல் போன்ற அனைத்து விதமான கட்டுக்கடங்காத உணர்ச்சித் தொகுப்புகளால் நிறமேற்றப்பட்ட அவரது புலன்வழி அறிதல்களுக்கும் இடையேயான பதற்றத்தையே கதையமைப்பாகக் கொண்டுள்ளது.

தனது அகப்பொருளைப் புறவயமாகக் காணும் தலைகீழ் முயற்சியே இந்த நூல்களின் தன்மை. தன்வரலாற்றுக் கதைகளில் இந்தத் தலைகீழ் அம்சம் தவிர்க்க முடியாதது எனினும் வழமையான தன்மை விதப்பு நூல்களில் இருப்பதைவிடவும் உயர்ந்த நிலையை கிளெனஸ்கார்டின் அந்தரங்கமான வெளிப்பாடுகள் அடைந்திருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. மிகத் தெளிவான காரணம், இந்தப் படைப்பின் வியத்தகு விரிவு. எனது போராட்டம் (My Struggle) என்ற தொகுப்புத் தலைப்பின் கீழ் அறியப்படும் A DEATH IN THE FAMILY, A MAN IN LOVE ஆகிய இரண்டும் ஆறு நாவல்கள் கொண்ட தொகுதியின் முதலிரு நாவல்கள். மிக விரிவான விவரணைகளுடன் தன் வாழ்வை நுண்ணிய கூறுகளிட்டுத் தன் குடும்பத்தினர், சுற்றத்தினர் ஆகியோரைப் பற்றி வெளிப்படையாகவும் எழுதியிருப்பது – இறுதி நாவல் 2011ல் வெளியான – அவருடைய சொந்த நாடான நார்வேயில் கடும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. 

ஒரு படைப்பாளி தனக்கு நெருங்கியவர்களுடனான அனுபவங்களைத் தன் இலக்கிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வது சரியா தவறா என்ற ஒழுக்கரீதியான வினா ஒருபுறம். நவீன தன்வயத்தின் இயல்பை ஆராய்ந்திருக்கும் இந்நாவல்களின் ஆழம் சந்தேகத்திற்கிடமின்றி போற்றுதலுக்குரியது. கிளெனஸ்கார்டின் ‘போராட்டம்’ அவருடைய தினசரி இருப்போடு அதை எழுதுவதற்கான படைப்புப் போராட்டத்தைப் பிணைப்பதுடன் மட்டும் நிறைவடையாது. வாழ்வின் பொருளை இழந்த உணர்வோடு அகவயமாகப் போராடி அவர் மீட்சியடைவதும் உலகில் இருந்து ஆச்சரியத்தையும் உவகையையும் ஏற்படுத்தும் உணர்வு தொலைந்துவிட்டதாக எண்ணி அவற்றை மீண்டும் கைப்பற்ற ஏங்குவதும் விரிவான பேசுபொருளை நோக்கமாகக் கொண்டவை. கிளெனஸ்கார்ட் உலகை நவீனத்துவத்தின் பார்வையில் புரிந்துகொள்வதற்கான கருவிகளாக இந்த இன்மைத் தத்துவங்களைப் பொருட்படுத்துகிறார் என்பதால் ஒருவரால் இந்தத் தீவிரமான, தன்வய நாவல்களைப் பொதுவான வாதமாக மாற்றிக்கொள்ள இயலும்.  

இதுவே அதன் ஆழ்நிலை முரண்; முடிவற்ற மர்மத்திற்கான மூலம். முதல் நூலின் கருப்பொருள் மரணமாக இருக்கிறது. ஏனெனில் சால் பெல்லோ சொன்னதைப் போல வாழ்க்கைக் கண்ணாடியில் எதையேனும் பார்க்க அதன் பின்புறம் பூசப்பட்டிருக்கும் ரசமான மரணம் மிக அவசியம். வாழ்வை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்ளானதாக அது காட்டும் போது, ஒவ்வொரு கணமும் மதிப்பு மிகுந்ததாகிறது. பதிலீடு செய்யவியலாத, ஒவ்வொரு அதிமுக்கிய தருணத்தையும் நினைவு மீட்டெடுத்து அதில் நாம் லயிக்க வழிவகுக்கிறது. அதேசமயம், நம் வாழ்வின் அடிப்படை நிலையாமை ஒரேயொரு முற்றுக்குத்தான் நாம் அனைவரும் வந்துசேர முடியும் என்பதையும் அது உறுதிசெய்கிறது. கிளெனஸ்கார்ட் தன் தந்தையின் சடலத்தை இறுதிச்சடங்கு அறையில் இரண்டாவது முறை காண்பதோடு A DEATH IN THE FAMILY நாவல் முடிவடைகிறது. அது அநேகமாகத் தோற்றப்பிழையாக இருக்கக்கூடும் என்றும் தன் தந்தை இன்னும் உயிரோடு இருக்கச் சாத்தியங்கள் உண்டென்றும் அவருக்குள் ஐயம் எழுகிறது. இறுதியில், ‘இனி என் தந்தையாக இருந்தவருக்கும் அவர் கிடத்தப்பட்டிருப்பதற்கும் அந்த மேசைக்கும் அல்லது அந்த மேசையின் கால்கள் நிற்கும் தரைக்கும் அல்லது சாளரத்தின்று கீழ் நிற்கும் அறையின் தூண்களுக்கும் அல்லது அவருக்குப் பக்கவாட்டில் இருக்கும் மேசை விளக்கை நோக்கி நீண்டுசெல்லும் கம்பிவடத்திற்கும் எந்த வேறுபாடும் இருக்கப்போவதில்லை’ என்ற புரிதலை மெல்ல வந்தடைகிறார். 

ஏற்பின் தருணமே இந்நாவலை ஒரு முழு வட்டமாக்குகிறது. அவர்களிடையேயான உறவை வலியுடன் கூறிடும் தருணங்களை உள்ளடக்கியவற்றின் முடிவாக அதைக் கருத முடிகிறது. அந்தப் பதற்றமான உறவே எனது போராட்டத்தின் மூலமாகவும் அடிப்படையாகவும் இருக்கிறது. A DEATH IN THE FAMILY முழுவதும் கிளெனஸ்கார்ட் தன் வாழ்வின் சிறுசிறு தருணங்களையே தொடர்ந்து மனத்தில் ஆடிப்பிம்பங்களாகக் கைப்பற்றுகிறார். தன்வரலாற்றுக் கலைஞனின் ஒரு மரபார்ந்த கூறு அது. ஆயினும் இத்தருணங்கள் தந்தையும் மகனுமே ஒருவர் பிறரின் பிம்பங்கள் என்ற உண்மையின் அடிப்படையில் இன்னும் சிடுக்கு மிகுந்த ஒத்திசைவை உண்டாக்குகிறது. அவருக்குத் தன் தலைமுடிக்குள் விரல்களை ஓடவிட்டுத் தன்னைக் கண்ணாடியில் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அப்படிச் செய்யும்போது அதே பழக்கம் தன் தந்தைக்கும் இருந்தது புரிகிறது. இந்த நூலின் பல்வேறு இடைவெளிகளைக் கூர்ந்து அவதானித்தால், இருவருக்கிடையில் பல இணைகோடுகளை வரைந்து தந்திருக்கிறது. கிளெனஸ்கார்டின் குடி ஆர்வம் – தந்தையின் குடிப்பழக்கம்; தான் குழந்தைகளுடன் நிதானமற்று நடந்துகொள்வது – தந்தையுடன் வளர்ந்தபோது தனக்கு ஏற்பட்ட அச்சம். பெரும்பாலும் அவருடைய அவதானிப்புகள் இந்த வகைச் சிக்கலான இரட்டைமயத்தால் அடிக்கோடிடப்பட்டிருக்கின்றன. அவர் தன் தந்தையைச் சாளரங்கள் வழியாகவும் கதவுகள் வழியாகவும் தொடர்ந்து கவனிக்கிறார். அவர்கள் இருவரும் தனித்தனியாகவும் ஒரே நெருக்கமான எல்லைகளுக்குள் இருக்கின்றனர். அவர் தந்தை வெகு தொலைவில் இருக்கும் ஆகிருதி. எளிதில் உய்த்துணர இயலாதவர்; அவர் இருப்பே பல்வேறு தடைகளிடுவது. ஆயினும் அவர் கொந்தளிப்பான நெருக்கத்துடன் பழகியவராகவே தோற்றமளிக்கிறார். 

A Death in the Family-ல் கிளெனஸ்கார்ட் இவ்வாறு எழுதுகிறார்: ‘உலகைப் புரிந்துகொள்வதற்கு அதனிடமிருந்து சற்று தொலைவு விலகி இருந்து பார்ப்பது அவசியம்.’ அவரது தந்தையுடனான பால்ய நினைவுகளே அத்தகைய விலக்கத்தைத் தொடங்கி வைக்கிறது; அதே சமயம் ஒருவிதமான நினைவேக்க நெருக்கத்தையும் அது தூண்டுகிறது.

’1976ம் ஆண்டு அன்றைய மாலைப்பொழுதில் என் தந்தையின் தோற்றம் இருபடித்தாகக் (twofold) காட்சியளிக்கிறது. ஒருபுறம் நான் அன்று அவரை எப்படிப் பார்த்தேனோ அப்படியே, எட்டு வயதுச் சிறுவனின் விழிகளால் பார்க்கிறேன். மறுபுறம் அவருடைய தோழனைப் போலத் தொடர்ந்து, பொருள் பொதிவுகளை வழங்கியபடி இருக்கும் அவருடைய வீங்கிப் பெருக்கும் வாழ்நாளைப் பார்க்கிறேன்.

தன்னறிதலுடன் கூடிய இந்த இரட்டைமயம் இந்த நூலின் விதப்பு வடிவத்தில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. இக்காரணத்தினாலேயே இந்நூல்கள் தனது வெளிப்படையான தன்வரலாற்றுக் கூறோடு சேர்த்து ‘நாவல்கள்’ என்ற அடையாளத்தையும் ஏந்தி நிற்பதாக நான் கருதுகிறேன். இது கிளெனஸ்கார்டின் இலக்கிய சாதனைக்கான உறுதிப்பாடு எனும்போதும் புனைவுக்கும் வாழ்க்கைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை ஆராய்வது அத்தனை ஆர்வமூட்டுவதாக இல்லை. A Death in the Family-ன் தொடக்கத்தில் ஃபிப்ரவரி 2008ஆம் ஆண்டு ஒரு மாலைப்பொழுதில், தனது மனைவியும் குழந்தைகளும் உறங்கச் சென்ற பிறகு, காவியப் படைப்பான இந்தத் தன்வரலாற்று நூலின் ஆரம்பப் பக்கங்களை – இப்போது நாம் வாசிக்கும் இதே பக்கங்களை – எழுதத் தொடங்கினார். A MAN IN LOVE-ன் இறுதிப்பகுதியில் பின்னாட்களில் A DEATH IN THE FAMILY என்று அறியப்பட்ட நூலின் முந்தைய வரைவுகளைச் சேகரித்தது அறிய வருகிறது. அவர் அடிக்கடி அலுவலகத்தில் அடைகாப்பதுபோல அமர்ந்து இருப்பார். அங்குதான் அவர் எழுதச் செல்வார். இரண்டு நூல்களும் கலை இலக்கியம் குறித்த அவரது பார்வையையும் தான் ஏன் எழுதுகிறேன் என்பதற்கான காரணத்தையும் பற்றி விவரிக்கும் பல விரிவான பத்திகளைக் கொண்டுள்ளன. எழுத்துச் செயல்பாட்டிற்கும் முந்தைய ஆயத்தப் பணிகளும் இந்தப் பணியின் மதிகூர்மை மிகுந்த அடிப்படைகளும் ‘எனது போராட்டம்’ என்ற இந்தப் படைப்பைத் தனித்தன்மை வாய்ந்ததாக்குகின்றன. இச்செயல்பாட்டின் வழியாக கிளெனஸ்கார்ட் ஒருவித படைப்பழிப்பை உருவாக்கி நிகழ்த்துகிறார். இலக்கிய வடிவத்தின் அதிகாரத்தைப் பிடுங்கும் பணியைச் செய்வதன் மூலம் வடிவம் வெளிப்பாடு ஆகியவற்றை மீள்கண்டுபிடிப்பு செய்கிறார். 

பல ஆண்டுகளாக நான் என் தந்தையைப் பற்றி எழுத முயல்கிறேன். ஆனால் உருப்படியாக என்னால் எதையும் எழுத முடியவில்லை. கருப்பொருள் என் வாழ்வுடன் மிக நெருக்கமாகப் பிணைந்திருந்ததே அதற்குக் காரணமாக இருக்கலாம். அதனாலேயே இலக்கியத்தின் அடிப்படைத் தேவையான ’ஒரு வடிவத்திற்குள்’ அதைக் கட்டாயமாகத் தள்ளுவது எளிதாக இருக்கவில்லை. இலக்கியத்தின் முதன்மை விதியே அதுதான். அனைத்துமே ஒரு வடிவத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தாக வேண்டும். இலக்கியத்தின் பிற கூறுகளான தொனி, கதைப்பின்னல், கரு, இழை போன்றவை வடிவத்தை மீறினாலோ அல்லது வடிவத்தைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயன்றாலோ விளைவு மோசமானதாக இருக்கும். இதனால்தான் நல்ல சொற்திறம் கொண்ட எழுத்தாளர்கள் பல சந்தர்ப்பங்களில் தரம் குன்றிய நூல்களை எழுதிவிடுகின்றனர். நல்ல மையக்கரு கொண்ட எழுத்தாளர்களும் அதே காரணத்தால்தான் தரம் குன்றிய நூல்களை எழுதிவிடுகிறார்கள். வலுவான கருவும் எழுத்து தொனியும் இலக்கியம் வழக்கத்திற்கு வரும் முன்பு துண்டுகளாக்கிப் பயன்படுத்தப்பட்டது. இந்தத் துண்டாக்குதலே ‘எழுத்து’ என்றும் அறியப்பட்டது. எழுத்து படைப்பு என்பதைவிட படைப்பழிப்புடனே அதிகம் தொடர்புடையது.

கிளெனஸ்கார்ட் பதிவுசெய்யும் பல அனுபவங்களும் தன்னளவில் சிறப்பானவை. முதல் நூல் அவருடைய ஆரம்பகாலப் பாலியல் உறவுத் தடுமாற்றங்களையும் வயதுக்கு வராமல் குடித்ததையும் உயர்நிலைப் பள்ளியில் தான் இருந்த அபத்தமான ராக் இசைக்குழுவையும் விவரிக்கிறது. இரண்டாவது நூல் அவரது முதல் பெண்குழந்தையின் பிறப்பை மைய நிகழ்வாகக் கொண்டது. அது பெற்றோரின் சலிப்புக்குரிய கடமைகளை மிக விரிவாக வர்ணிக்கிறது. குழந்தைகளின் கொண்டாட்டால் விளைந்த உபாதைகள், அனைவரையும் களைப்புறச் செய்யும் சுற்றுலாக்கள் மீதான திகைப்பு போன்றவை அவற்றுள் சில. ஆனால் தன் வாழ்வைக் காலவரிசைப்படுத்தாமல் – நாம் காலவரிசைப்படியே வாழ்கிறோம் என்றபோதும் காலவரிசைப்படி ஒருபோதும் சிந்திப்பதோ, நினைவுகூர்வதோ, புரிந்துகொள்வதோ இல்லை என்ற உண்மையின் அடிப்படையில் – கிளெனஸ்கார்ட் சம்பவங்களை முன்வைக்கிறார். அநேகமாக இதுவே எனது போராட்டத்தின் மிக உன்னதமான அங்கம்.

உணர்ச்சிகரமான கதையோட்டத்தின் மீது – முக்கியத்துவமிக்க முக்கியத்துவமற்ற சம்பவங்களாலான – மதிக்கூர்மை மிகுந்த கதையோட்டம் பின்னப்பட்டிருக்கிறது. தனது இளம் சுயத்தின் மீதான திகைப்பும் அதில் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு நூலிலும் உருவக இதயம் வெளிப்படைத்தன்மை என்ற நோக்கத்தோடு அடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கட்டுப்பாடு மிகுந்த தலைசிறந்த படைப்பான A Death in the Family-ல் அப்படித்தான் தொழிற்பட்டிருக்கிறது. ஆயினும் எப்படியோ இந்த நூல்கள் தளர்வாக அடுக்கப்பட்டும் விசாலமானதாக இருப்பதான தோற்றத்தை நம்முள் விதைத்துவிடுகின்றன. அதில் உள்ள அவதானிப்புகள் தற்செயலாக கிளெனஸ்கார்டின் சிந்தனைகளை ஒட்டிப் பின்தொடர்ந்து வருவதுபோலக் காட்சியளிக்கின்றன. 

கிளெனஸ்கார்ட் ஒரு பேட்டியில் தன்னை ஒரு ‘தீவிர ப்ரூஸ்ட்டாளன்’ (Proustian) என்று சொல்லிக்கொண்டார். அதன் வாயிலாக ஃபிரெஞ்சு எழுத்தாளரின் முக்கியக் கருதுகையான தன்னார்வ ஞாபகத்திற்கும் ஒரு பொருளுடன் புலன்கொண்ட தொடர்பினால் கிளைத்து விரிந்து செல்லும் முந்தைய அனுபவத்திற்குமான வேறுபாட்டைக் குறிப்பிடுகிறார். (தன்னார்வ ஞாபகத்தை ‘மதிநலமிக்க ஞாபகம்’ என்ற பதத்தால் ப்ரூஸ்ட் குறிப்பிடுகிறார். அதற்கு இறந்தகாலத்தை அப்படியே மீட்டெடுப்பதற்கான திறன் இருக்காது என்றும் சொல்கிறார்.) 

A Death in the Family-ன் ஆரம்பப் பகுதிகளில் தான் எப்படி ப்ரூஸ்டின் மாபெரும் நாவல் தொகுதியான In Search of Lost Time-ல் (1913-27) ஆழ்ந்து அமிழ்ந்து இருந்தேன் என்பதை கிளெனஸ்கார்ட் விவரித்துள்ளார். ஒப்பீடு செய்து பார்த்தால், இரண்டுக்கும் இடையில் தன்னம்பிக்கை மிக்க தனித்துவம் காணக்கிடைக்கிறது. கிளெனஸ்கார்டின் கரடுமுரடான உரைநடையில் ப்ரூஸ்டின் நுண்ணிய வேலைப்பாடுகள் மிகுந்த அணித்தன்மை நிச்சயம் இல்லை. ஆனால், நேரடித்தன்மை, மனத்தின் முரண்களோடு அதன் ஆற்றலை நேரடியாகச் சொற்களாக்கி முன்வைத்தல் ஆகியவற்றோடு நூல்களின் காத்திரத்தின் குறிப்புகள் குன்றாமலும் அதன் நியாயமான வேதனைகள் பிறழாமலும் மிகச்சரியாக அவதானித்து எழுதப்பட்ட டான் பார்ட்லெட்டின் இயல்நயமிக்க மொழிபெயர்ப்பு ஆகியவையே இந்நூல்களைத் தனித்தன்மை மிக்கவை ஆக்குகின்றன.

ஆனால் – வாழ்ந்த அனுபவங்களை புறத்தே முற்றிலுமாக பிடித்து கைக்கொண்டுவிட முடியாது என்ற – ப்ரூஸ்டின் நவீன ரோமானிய நம்பிக்கை கிளெனஸ்கார்டுக்கும் இருக்கிறது. A DEATH IN THE FAMILY நூலின் பிற்பகுதியில் ஒரு பத்தி உள்ளது. அதில் நீரைத் தூய்மையாக்கும் க்ளோரின் பொடி, அது வைக்கப்பட்டிருந்த நீலப் புட்டி, அதன் வடிவம் எதுவும் குழந்தைப்பருவத்தில் இருந்து மாறாமல் அப்படியே 1970களில் கிளெனஸ்கார்டை வந்தடைகிறது. அவர் அதிலிருந்து இறந்தகாலத்தில் இருந்து நினைவில் எழும் ஒரு ஒலியை, வாசனையை, சுவையை அப்படியே மீட்டு எழுதி இணைப்பதன் மூலம் இறந்தகாலத்திற்குச் செல்ல முடியும் என்ற தூண்டுதலைத் தருகிறது. ஆயினும், அதேசமயம் நிகழும் வாசனை இழப்புணர்வு அவரது ‘போராட்டத்திற்கு’ அடிப்படையாக அமைகிறது. இந்தப் பாடுகளின் வாயிலாக அவர் சில துணிபுகளை அடைகிறார். ’குழந்தையின் யதார்த்தத்திற்கும் பெரியவர்களின் யதார்த்தத்திற்கும் இடையேயான ஒரே வேறுபாடு பொருளின்மையால் இலகுவாயிருப்பதே. உலகம் ஒன்றாக இருக்கும்போதே வேறுபட்டும் இருக்கிறது. அதன் பொருள் இடமாறியிருக்கிறது. பொருளின்மையை நோக்கியபடியே அது செல்கிறது.’

இந்த இடமாற்றம் பகுதியில், குழந்தையின் இயல்பான வியப்புத்திறம் தேய்வதிலிருந்து வருகிறது. உலகு புதிதாகவும் ஆச்சரியமூட்டுவதாகவும் இல்லாமல் மெல்ல மெல்லத் தீர்வதால் வருகிறது. ஆனால் அதுமட்டுமின்றி இது கிளெனஸ்கார்டின் மனச்சோர்வின் அறிகுறியாகவும் உள்ளது. உலகம் இதைவிட இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்கலாமே என்ற உள்ளார்ந்த கற்பனாவாதம் அவருக்குள் அதிருப்தியை விளைவிக்கிறது; அவருக்குள் மந்தமான யதார்த்தத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது. 

A MAN IN LOVE-ல் அவர் இப்படி எழுதுகிறார். 

தினசரி வாழ்வின் கடன்களும் நடைமுறைகளும் நான் தாங்கிக் கடந்தவையே. மாறாக அதில் ஒன்றையும் நான் மகிழ்ச்சியுடனோ பொருள்கொண்டதாகவோ உணரவில்லை. என்னைச் சுற்றி இருந்த வாழ்வில் ஒரு பொருளும் இருக்கவில்லை. அதிலிருந்து விலகி இருக்கவே நான் எப்போதும் ஆவல்கொண்டிருந்தேன். அப்படியே விலகியும் இருந்தேன். ஆகவே நான் கடத்திய வாழ்வு என்னுடையதன்று. அதை என்னுடையதாக்க முயன்றேன் என்பதே என் போராட்டம். ஏனெனில் நான் அப்படியிருக்க விரும்பினேன். ஆனால் தோல்வியுற்றேன். வேறொன்றுக்காக ஏங்கும் என் உள்ளம் என் அனைத்து முயற்சிகளையும் வீணாக்கின.

விமர்சனக் கண்ணோட்டத்தில் இந்த மேற்கோளிடும் தன்மையே ‘எனது போராட்டத்தை’ வியப்பின் குறிப்பாகவோ நம்பிக்கையின்மையின் குறிப்பாகவோ மாற்றுகிறது. (விளையாட்டு அணியினரிடம் சேர்வதில் தயக்கம், தன் பெண் குழந்தையுடன் கைகுலுக்கி ஆர்வமாக மகிழ்வது – இவையெல்லாம் போராட்டங்களா?) ஆனால் கிளெனஸ்கார்ட் இருளையும் சாதாரணமான வாழ்வின் பின்புலத்தில் அவருக்கு நிகழும் பின்னடைவுகளையும் அவர் முன்வைக்கும் விதத்தில் இந்த நூல்கள் சுய அடிப்படைகளை மிகத் துல்லியமாகவும் மிக நுணுக்கமாகவும் கடந்து விரிகின்றன. 

2

எனது போராட்டம் தொகுப்பின் முதல் நூலில் தந்தை குடித்து இறந்த விதம் கிளெனஸ்கார்டின் ஞாபகங்களில் இருளைப் படர்த்துகிறது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இறுதி கட்டத்தில் இறப்பவரைக் கருத்தில் கொண்டால் அது பெரிய துக்கமாகத் தோன்றாது. ஆனால் குடிப்பழக்கத்தின் இடைநிலையில் இருந்தவாறு அவர் இறந்தது கடுந்துயர். இடைப்பட்ட அகவையில் மணமுறிவு ஏற்பட்டதும் அவரது தந்தை உலகைப் புறக்கணித்தார். தன் தாயுடன் தனியாக வாழ்ந்தார். தன்னை அழித்துக்கொள்ளும் பயங்கரமான நோக்கத்துடன் வாழ்வைத் தொடர்ந்தார்.  

A DEATH IN THE FAMILY நூலின் இரண்டாம் பாதியில் பெரும்பகுதி அம்மரணத்தின் பின்விளைவுகளைப் பற்றிய குறிப்புகளே. கிளெனஸ்கார்டு தன் அண்ணன் இங்க்வேவுடன் தன் தந்தை இறுதி நாட்களைக் கழித்து, சீர்குலைத்துச் சென்ற வீட்டிற்குச் செல்கின்றனர். அழுக்கான பிச்சைக்காரனது வசிப்பிடம் போல் அது காட்சியளிக்கிறது. எல்லா அறைகளிலும் புட்டிகளும் குப்பைகளும் குவிந்திருந்தன. தரையில் சிறுநீர் கறை. மேசை நாற்காலிகளில் காய்ந்த நரகல். கொல்லைப்புறத்தில் முடை நாற்றமெடுக்கும் அழுக்கு உடைகள் பெருங்குவியலாக இருந்தன. இத்தனை கழிவுக்கும் அழுக்குக்கும் மத்தியில் கிளெனஸ்கார்டின் பாட்டி அந்தச் சீர்குலைவு தன்னை விழுங்கியதற்கு எதிர்வினை ஆற்ற இயலாத தள்ளாட்டத்துடன் அங்கு வாழ்ந்து வந்தார். வீட்டை குப்பைமேடாக்கி குடித்துக் குடித்து இழிந்த சாவைத் தேடிக்கொண்ட தன் மகனிடமிருந்து குடிப்பழக்கத்தைத் தானும் ஏற்றுக்கொண்ட அவரை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறெந்த உதவியும் யாராலும் செய்ய இயலாது. 

பாட்டியின் குழப்பமான கூற்றுகளின் அடிப்படையில் தந்தையின் மரணத்திற்கான தெளிவான காரணத்தை வரையறுக்க இயலாத நிலை இருந்தது. (’அவர் எப்படி இறந்தார்?’ என்று தன் அண்ணனைக் கேட்டபோது ‘எனக்குத் தெரியாது’ என்ற பதிலைப் பெற்றார் கிளெனஸ்கார்ட். ‘அநேகமாக மாரடைப்பாக இருக்கலாம்.’) கிளெனஸ்கார்டின் தந்தை வாழ்வை முற்றிலும் கடுமையாக மறுதலித்தார் என்பதற்கான தெளிவான சாட்சி அங்கிருந்து கிட்டிய குறிப்புகளையும் கடந்ததாக இருந்தது. A DEATH IN THE FAMILY நூலின் பிற்பகுதியில் கிளெனஸ்கார்ட் தன் அண்ணனுடன் சேர்ந்து வீட்டைச் சுத்தம் செய்கிறார். இந்த நீண்ட சம்பவத்திற்குப் பின்னால் மறுப்பின் கசப்பு நெளிந்தபடியிருந்து வாழ்வின் பொருளின்மைக்கு எதிரான எழுத்தாளரின் போராட்டத்தை முடுக்கிவிடுகிறது. தன் தந்தையின் இறப்போடு போராடுவது மறைமுகமாகத் தன் இறப்புடனும் போராடுவது மட்டுமல்ல. ஒருவர் தனக்கெதிராகத் திரும்பும்போது அது மிக நெருக்கமானவர்களிடமிருந்து வரும் அத்தனை உதவிகளுக்கும் அப்பால் அவரைக் கொண்டுசென்றுவிடும் என்பதற்கான பயங்கரமான எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.

A MAN IN LOVE நூலில் கிளெனஸ்கார்ட் தன் தந்தையின் இறுதிச்சடங்கில் பாதிரியார் வழங்கிய பிரசங்கத்தை நினைவுகூர்கிறார். ’இந்த உலகத்தோடு நீங்கள் ஒட்ட ஒழுக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கான மறைமுகப் பொருள் என் தந்தை அவ்வாறு இல்லை என்பதே. அவர் சொன்னது மிகச்சரி. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகத்தோடு ஒட்ட ஒழுகாமல், பிடியைத் தளரவிடுவதற்குப் பல்வேறு நியாயமான காரணங்கள் அவரிடம் இருந்தன என்பதையும் புரிந்துகொண்டேன். மெல்ல விழுந்தவாறே பாதாளத்திற்குச் சென்று உடைந்து துண்டுகளாகச் சிதறும் வரை பிடிகளைக் கைவிட முடியும்.’

’போராட்டம்’ என்பது மதிப்பிழந்த பொருளாகிவிட்டது. இலகுவாக எள்ளி நகையாடி ஒதுக்கித்தள்ள ஏற்றது. இருத்தலிய நோக்குடன் ஒருவன் தன் தனிப்பட்ட அகப்பேய்களோடு சமரிடுவதைப் பற்றிப் பேசுவது அரைகுறைத்தனம் என்றும் சுயநலமிக்கதென்றும் குறிப்பிடும் நிலை உண்டாகியுள்ளது. A Man in Love-ல், ‘தஸ்தயேவ்ஸ்கி பதின்மர்களுக்கான எழுத்தாளராகிவிட்டார்’ என்று புலம்புகிறார் கிளெனஸ்கார்ட். ‘இன்மைவாதமே பதின்மத்திற்கான ஒரு கோட்பாடு என்றாகிவிட்டது.’ ஆயினும் தானும் இந்த வெறுமைக்கு மேலேயே தொங்கிக்கொண்டிருப்பதை அவர் உணரத் தவறவில்லை. கலைந்து கரைதல், சீர்குலைவு ஆகியவற்றைப் பற்றி எழுதும்போது இவற்றுக்கெல்லாம் சுருக்கமான வரையறைகள் ஏதும் இல்லை என்கிறார். தன்னைத்தானே அழித்துக்கொள்வதற்கு நிறைய ‘நியாயமான காரணங்கள்’ இருக்கலாம். அவை நாள்தோறும் முன்னிற்கும் சிறுமைகளை எதிர்த்துப் போரிடுவதற்கு எதிராகக் கைவிடுதலை நோக்கி ஒருவரை உந்தக்கூடும். அவரது தந்தையின் மரணம் பார்ப்பதற்குக் கொடூரமாக இருக்கவில்லை. ஆனால் அதன் உடனடியாகப் புரிந்துகொள்ள ஏதுவான தன்மையே அதைக் கோரமானதாக்குகிறது. 

3

எனது போராட்டம் நூல்களுக்கு முன்பாக கிளெனஸ்கார்ட் இரண்டு நாவல்களை எழுதியுள்ளார். அவரது இரண்டாவது நாவலான A Time for Everything (2004) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனது போராட்டத்தில் பல இடங்களில் இந்த நாவலுக்கான ஆராய்ச்சிப் பணிகளையும் நாவல் எழுதியதையும் பற்றிய குறிப்புகள் வருகின்றன. சுவனத்திற்குக் கீழான அனைத்து நோக்கங்களுக்குமான காலம் என்ற தலைப்பும் இடப்படுகிறது. (ஆங்கிலப் பதிப்பில் பைபிளின் உருவகத்தை நேரடியாகவே சுட்டுகிறது.) கிளெனஸ்கார்ட் இந்த நூலின் மீதான தனது அதிருப்தியைத் தெரிவிக்கிறார். அதனாலேயே தனது முற்கால எழுத்துத் தொனியை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு, நேரடியாக, சலித்துப் பிரிக்காத, ஆடையணி சூடாத தன்வரலாற்று வகைமையில் எழுதத் தொடங்குகிறார். A Time for Everything ஒரு விகாரமான, வாசிக்கச் சிரமமான, சோர்வூட்டுகிற நாவல். ஆண்டெனுவஸ் பெல்லோரி என்ற பதினாறாம் நூற்றாண்டு மதபோதகர் தேவதூதர்களுடன் தொடர்புகொள்கிறார். இளம் வயதில் இந்தப் பொருளில் ஆழ்ந்த கல்வியுடன் ஒரு உடன்படிக்கையை எழுதச் சென்றவரது மனம், மெல்ல மரணம், கடவுள், பிரபஞ்சத்தின் குருட்டு இருப்பு ஆகியவற்றைப் பற்றி எதிர்மறையான விமர்சன நோக்கில் சிந்திக்கத் தொடங்குகிறது. இந்த நாவலின் இடையிடையே வேதாகமத்தின் கெயின் – ஆபெல், நோவா போன்ற தொன்மங்களின் மறுவார்ப்புகளும் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவைப் பற்றிய மயிர் உதிர வைக்கும் கட்டுரைகளும் நிறைந்திருக்கின்றன. 

உலகத்தின் நவீன பார்வைக்கும் அதற்கு முந்தைய பார்வைக்கும் இடையேயான பிரிவின் வரலாற்றுத் தருணத்தைப் புரிந்துகொள்வதற்கான நேரடி முயற்சியாக A Time for Everything-ஐச் சொல்லலாம். மத்திய காலங்களின் சமயம் சார்ந்த மனநிலையில் இருந்து விடுபட்டு அறிவியலும் மெய்யியலும் வெளியேறத் தொடங்கிய வரலாற்று புள்ளியாக அதை வரையறுக்கலாம். தற்போது தழைத்தோங்கி இருக்கும் அறிவியல் நோக்குக்குப் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலேயே வெற்றி கிட்டியது என்று கிளெனஸ்கார்டின் விதப்பாளர் வாதிடுகிறார். உண்மையான போராட்டத்தினைப் புரிந்துகொள்வதற்குப் பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டுகளுக்கு – எப்போது இந்தப் பாகுபாடு தெளிவற்றிருந்ததோ அப்போது – சென்றாக வேண்டும். ‘ஒன்றுக்கொன்று நேரெதிராகத் தோற்றமளிக்கும், பொருத்தமற்ற வெவ்வேறு மனோபாவங்களும் அருகருகே தழைத்திருக்க முடியும் என்பது புரிந்துகொள்வதற்கு மிகக் கடினமானது.’

எனது போராட்டத்தின் மதச்சார்பற்ற தனிப்பட்ட உலகில் இருந்து சமய, வரலாற்றுப் பரிமாணங்கள் கொண்ட A Time for Everything மிகத் தொலைவில் இருப்பதாகவே தோன்றுகிறது. இவ்வாறு முற்றிலும் வேறான திசையில் இருந்து அணுகும்போதும் பிந்தைய நாவல் முந்தைய நாவலின் சில விசாரணைகளைத் தானும் மேற்கொள்கிறது. இரண்டையும் பிணைக்கும் திரியாக இருப்பது A Time for Everything-ல் வரும் இறுதிப்பகுதியே. அது ஹெண்ட்ரிக் வான்கெல் என்ற நார்வேக்காரனை விதப்பாளராக அடையாளம் காட்டுவதன் மூலம் நவீன உலகில் வந்து முடிவடைகிறது. கடைசி ஐம்பது பக்கங்களில் ஹென்ரிக் தனது கட்டுப்பாடற்ற தந்தையுடனான உறவை விவரிக்கிறார். முதுகுத்தண்டு சில்லிடும் ஒரு காட்சியில் அவரது தந்தை தன் முகத்தில் மின்கல விளக்கை ஒளிரவைத்து, ‘என்னைக் கண்டு நீ அஞ்சுகிறாயா?’ என்று கேட்கிறார். அங்கு கிளெனஸ்கார்டின் தன்வரலாற்றுப் பணி மொட்டுவிடுவதை நம்மால் அறிய முடிகிறது. ஹென்ரிக் தனது படைப்பாளரை ஒத்திருப்பதும் பல காட்சிகள் எனது போராட்டத்தில் வருவதை ஒத்திருப்பதும் மட்டுமே அதற்குக் காரணமல்ல. மாறாக தன்னைக் கடந்து வெளியேறும்போது எந்தவிதமான பொருளையும் தராமல் இருக்கும் உலகத்தில் அவர் வாழ்வதும் ஒரு காரணமாக இருக்கிறது. இறுதிப்பகுதியில் ஹென்ரிக் தனிமையாக ஒரு தீவில் வசிக்கிறார். அவ்வசிப்பு அவருடைய அந்நியப்படுதல் உணர்வை மேலும் தீவிரமாகப் பிரதிபலிக்கிறது. நஞ்சேறிய கோட்பாட்டை உருவாக்கிக்கொள்ள அவரை ஒரு கருவாக்குகிறது அத்தனிமை. அதன் வாயிலாக அவர் தன் தனிப்பட்ட அவமான உணர்வை யதார்த்தத்திலிருந்து பிரித்துக்கொள்ள இயலாத நிலையை அடைகிறார். அவரது தலைக்குள் இருக்கும் உள்ளடக்கத்திலிருந்து பிரபஞ்சத்தைப் பிரித்தறிய இயலாத நிலை உண்டாகிறது. 

அடுத்த சில நாட்களுக்குத் தலைகுனிந்தபடி தீவைச் சுற்றி வந்தேன். அனைத்திற்கும் குருடாக என் விரக்தி மட்டுமே உண்மை என்ற எண்ணத்துடன் இருந்தேன். என் எண்ணம் நிலக்காட்சிகளை விழுங்கித் தன்மயமாக்கிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்ததாக இருந்தது. மாலையில் பாறைகளில் அமர்ந்து சூரிய மறைவைப் பார்க்கும் போது அதுவும் என் மனத்தில் உதித்த ஒரு எண்ணமே என்றே நினைத்துக்கொண்டேன். சூரியன் எனக்குள் அஸ்தமிக்கிறது. என்னுடைய மிளிரும் பிம்பத்தையே கடல் கழுவுகிறது. எங்கிருப்பதைவிடவும் தூயதாகக் காட்சியளிக்கும் விண்மீன்கள் நிறைந்த வானம்கூட என்னுள் இருப்பதே. இந்த அனைத்தும் என்னை நானே தெய்வமாக்கிக்கொண்டதைப் போல கம்பீரமாகத் தோன்றலாம். ஆனால் உண்மை அதற்கு நேரெதிரானது. என் மனநிலை அனைத்திலிருந்தும் அதன் அழகைக் களைந்துவிடுகிறது. நான் கண்ட யாவும் என்னைப் போலவே குன்றியவையாகவும் பொருளற்றவையாகவும் மாறிவிடுகின்றன.

மனத்தில் கபடமின்றி இறைஞ்சும் குரல் எனது போராட்டத்தினுடையது. உள்முகமாகத் திரும்பி அவமானத்தை ஏந்திய முகத்துடன் இருந்தாலும் தன்னைத் தெய்வநிலையில் வைத்துக்கொண்டு மன்றாடும் குரல். உண்மையுடன் தன் மனநிலையைப் பொருத்திப் பெருக்கிக்கொள்வது எத்தனை அபத்தம் என்றறிந்த மதிக்கூர்மை மிகுந்த ஒருவனது குரலாக இருந்தபோதும் தனக்குள் சிக்கிச் சிறைபட்டவனின் உணர்வுடன் ஒலிக்கும் குரலாகவும் அது இருக்கிறது. கிளெனஸ்கார்டின் யதார்த்தத்துடனான அனுபவங்களும் அவருடைய மனநிலையைப் பொறுத்தே அமைகின்றன. அதன் இயல்பும் பொருளும் நிலையற்றதாக, தீர்வற்றதாக இருக்கிறது. அழகாகவும் கொந்தளிப்புடனும் காணப்படும் உலகம் மறுகணமே தட்டையாகவும் பலனற்றதாகவும் தோற்றமளிப்பது என்கிற தலைகீழாக்கம் எனது போராட்டத்தின் நெடுகே தொடர்ந்து நிகழ்ந்தபடி இருக்கிறது. உலகம் குறியீடுகளையும் தெளிந்த மகிழ்ச்சிதரும் ஒளிர் தருணங்களையும் தருவதே அவை அழிந்து சிதைந்து மறைவதற்காகத்தான். A Death in the Family-ன் பிற்பகுதியில் முகில்களுக்கு வடிவம் என்று ஒன்றுமே இல்லை என்று கிளெனஸ்கார்ட் குறிப்பிடுகிறார். அவை உலகத்துக் குறியீடுகளில் எல்லாம் உள்ள வெறுமையைக் குறிக்கும் குறியீடு. ‘அவற்றின் எந்தக் கணத் தோற்றமும் தற்செயலானது. எனவே மேகங்களுக்குப் பொருள் ஏற்ற வேண்டுமெனில் அவை பொருளின்மையின் மிகக் கச்சிதமான தூய வடிவம் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம்.’  ஆயினும் A MAN IN LOVE-ன்  நடுப்பகுதியில் பின்னாளில் தனது இரண்டாவது மனைவியானவளுடனான காதல் தொடர்பைப் பற்றிய விவரணைகள் வருகின்றன. அதில் அவர் முன்பு குறிப்பிட்ட கூற்றைக் கேலிசெய்வது போல இதயத்தின் வடிவத்தில் ஒரு மேகம் மிதந்து செல்கிறது என்கிறார். 

எனது போராட்டத்தில் தலைக்கு மேல் வட்டமிடும் கடல்புறாக்களே கிளெனஸ்கார்டின் சிடுக்கு மிகுந்த இரட்டைக் குறியீட்டுவாதத்தின் பகட்டான எடுத்துக்காட்டுகள். அதன் வாயிலாக அவரது பாதிப்படையாத வாக்குமூலங்கள் எல்லாம் சிந்திச் சிதறித் தன்னுணர்வுடன் கூடிய இலக்கியமாக மாறுகின்றன. அவை அடிக்கடித் தோன்றுவது செக்காவின் நாடகத்தில் வரும் தெய்வீகக் ‘கடல்புறா’வைப் பகடியாகச் சுட்டுவதைப் போல் இருக்கிறது. அந்நாடகத்தில் வரும் கடல்புறாவே வாழ்வின் பொருளைக் கலைப்படுத்துவதில் இருக்கும் சிரமத்தைப் பெரிதுபடுத்தும் வாதத்தின் குறியீடாகவே உள்ளது. தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஒரு காட்டுப்பறவை பாட்டியின் வீட்டில் வந்து சாளரத்தைக் கொத்தும்போது கிளர்ந்தவராய் இங்க்வேயிடம் ‘அவர் எப்போதாவது கடல்புறாவைப் பார்த்திருக்கிறாரா?’ என்று கேட்கிறார் கிளெனஸ்கார்ட். இங்க்வே பதிலுக்கு ‘நாடகமா? திரைப்படமா?’ என்று எதிர்வினாவுகிறார். இரண்டாவது தொகுதியில் கிளெனஸ்கார்ட் செக்காவிய பெயரிடப்பட்ட தனது மகள் வான்யா குழந்தை தள்ளுவண்டியில் அமர்ந்தபடி கடல்புறாக்களைச் சுட்டிக்காட்டும் பழக்கம் கொண்டிருந்ததைக் குறிப்பிடுகிறார். ஆனால், ’செக்காவ் படித்ததுண்டா?’ என்ற தன் மனைவியின் கேள்விக்கு ‘இல்லை’ என்று பதிலளிக்கிறார்.

இந்த விஷமத்தனமான குறிப்புகள் எந்த விதத்திலும் எனது போராட்டத்தில் வரும் கடல்புறாக்களின் குறியீட்டு முக்கியத்துவத்தை மட்டுப்படுத்தவில்லை. அதன் முக்கியத்துவம் A Time for Everything வரைகூட நீட்சியடைந்துள்ளது. நண்டு பிடிப்பதற்காகத் தன் அண்ணனுடனும் தந்தையுடனும் சேர்ந்து செல்லும்போது ஒரு இறந்த கடல்புறாவைக் கடக்க நேரிடுகிறது. அதை ஹென்ரிக் தன் தந்தையிடம் சுட்டிக்காட்ட அவர் ஒரு காலத்தில் கடல்புறாக்கள் தேவதைகளாக இருந்தவை என்று சொல்லி அதன் நைந்த கரத்தை மூடியிருந்த இறக்கையை உயர்த்திக் காட்டுகிறார். மீண்டும் இந்தக் காட்சி கிளெனஸ்கார்டின் முந்தைய தோல்வியுற்ற நாவலில் வரும் குறியீட்டுக் கடல்புறாக்கள் மீதான முறுகலான நகைச்சுவையாக இருக்கக்கூடும். ஆனால் A MAN IN LOVE-ல் கிளெனஸ்கார்ட் இந்தக் கதையை எழுதுவதற்குத் தனது முந்தைய முயற்சிகள் எப்படிப் போதுமானவையாக இல்லை என்பதைக் குறிப்பிடுகிறார். அதோடு தனது வண்டு பிடிக்கும் சுற்றுலாவின் ஞாபகம் எவ்வாறு அதை எழுதத் தூண்டியது என்றும் மீண்டும் மீண்டும் தனிப்பட்ட உணர்ச்சிகளோடு ஒத்திசைந்து உள்ளிழுத்துக்கொள்ளும் விதமாக எப்படி அமைந்தது என்றும் சொல்கிறார்.

கிளெனஸ்கார்ட் சில தருணங்களின் தன்மையை விவரித்த உடனேயே அவரது ஞாபகச் சிலுவையில் பொதிந்துள்ள தீர்க்கமற்ற நம்பிக்கைகளும் ஒழுங்கற்ற முரணான அவரது மெய்யறிவுத் தேடல்களும் ஒருவிதமான குறியீட்டுத்தன்மையை அடைகின்றன. இந்த நூல்களெங்கும் விரவியிருக்கும் வெளிப்படையான சமயக் குறியீடுகளும் குறிப்புகளும் இந்தப் பின்னணியிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவரது அலுவலகத்தில் மரத்தால் இழைக்கப்பட்ட தரையில் கிறித்துவின் முகம் தோன்றுவதை ‘அரை மறுதலிப்புடன், வலியோடிருப்பது போல விழிகளை நிலன் நோக்கித் தலையில் முட்கிரீடத்துடன்’ இருந்தது என்று வர்ணிக்கிறார். சமயத்தின் மீதான கிளெனஸ்கார்டின் மனோபாவம் தீர்மானமின்மையால் வரையறுக்கப்பட்டு இருக்கிறது. A Death in the Family-ன் ஆரம்பத்தில் தனது எட்டு வயது சுயத்தைக் கிறித்துவனாக அடையாளமிடுகிறார். அதற்கு அவர் தந்தை அவரைக் கேலி செய்கிறார். பதின்ம வயதில் அவர் ’கடுமையான கிறித்து எதிர்ப்பாளராகவும் என் இதயத்தின் இதயத்தில் பொருள்முதல்வாதியாகவும்’ ஆகிறார். சமீபத்தில் வேதாகமத்தை நார்வே மொழிக்கு மொழிபெயர்த்த ஒரு குழுவில் கிளெனஸ்கார்டும் அங்கமாக இருந்திருக்கிறார். ஆன்மீகக் கருத்துகளுக்குப் பதிலாக உணர்ச்சிகரமான உடல் சார்ந்த வேதாகமத்தின் பல கதைகளும் அவரைக் கவர்ந்திருக்கின்றன.  

A MAN IN LOVE-ன் நீண்ட உச்சக்காட்சி, பல்வேறு செய்திகள் நிறைந்தது. கிளெனஸ்கார்டுக்கும் அவரது நண்பர் கெயருக்கும் இடையேயான குடிபோதையில் நிகழ்ந்த உரையாடல் அது. கெயர் இந்த நூல்களில் நல்ல நகைச்சுவைத் திறன் மிகுந்த படலங்களில் இருந்து மிதமிஞ்சிய அச்சம் கொண்ட படைப்பாளர் ஆனது வரை குறிப்பிடப்பட்டிருக்கிறார். தஸ்தயேவ்ஸ்கிய உரையாசிரியராக இருந்த கெயர், தன் நண்பனின் முரணான குணநலன்களைப் பற்றி நீண்ட, மிகத் தெளிவான சித்திரத்தை முன்வைக்கிறார். கிளெனஸ்கார்ட், ‘வாழ்வுக்கும் தார்மீக உணர்வுக்கும் நேரடியான உறவு உண்டு’ என வாழ்வதால் அவரை ‘ஒழுக்க ரீதியாகத் தாக்குவதோ’ இரண்டையும் தனித்துப் பிரித்தறிவதோ இயலாததாகிறது. அவர் ஒரு ‘ஆழ்படிம எதிர்ப்பாளர்.’ அவரால் திருப்தியுணர்வை அடையவே இயலாது. ஒருவன் மதிநலமிக்கவனாகவும் கற்றறிந்தவனாகவும் இருந்தவாறே எப்படியோ குன்றாத மனத்தூய்மையையும் அப்பாவித்தனத்தையும் ஒருங்கே கொண்டிருப்பது நவீன உலகில் காணக்கிடைக்காத அரிய எடுத்துக்காட்டாகிவிடும். ஒரு கத்தோலிக்க முனிவரைப் போல அவன் குறியீட்டு ரீதியாக உலகைத் துறந்து துறவறம் பூண்டு தூய்மையடையும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். உலக வாழ்வை அடிப்படையில் சமயச்சார்புடன் பார்க்கிறான். இருப்பினும் அவன் ஒரு நாத்திகன். வான்யாவுக்கு ஞானஸ்நானம் வழங்கப்படும் ஒரு காட்சியில் (கிளெனஸ்கார்டைத் தொந்தரவுக்குள்ளாக்கிய சடங்கு அது) தனது நண்பன் ஒருவனால் மட்டுமே இறைமறுப்பாளனாக இருந்தபோதும் சடங்கைப் பழிக்காமல் அதில் பங்கேற்க முடியும் என்று குறிப்பிடுகிறார். 

தனது நண்பன் தனித்துவமான சமயச்சார்பற்ற ஆசாமி என்றும், எந்தக் கட்டமைக்கப்பட்ட நிறுவனத்தையும் சாராத உள்ளார்ந்த, சுதந்திரமனான, ஒழுக்க ரீதியான மறுவினைகளே அவனது வெளிப்பாடுகள் என்றும், அவனது நாண உணர்வு இயல்பிலேயே இருக்கும், சிந்தனைக்கு முந்தைய, யதார்த்தத்திற்கு எதிர்வினையானது என்றும் அவர் சொல்லும், இந்த விதமான முரண்களைக் கிளெனஸ்கார்ட் கொண்டிருப்பதை கெயர் அழுத்திச் சொல்வதாலேயே எனது போராட்டத்தின் தீரமிக்கக் கோணத்தை நம்மால் கண்டுகொள்ள முடிகிறது. நவீன உலகம் அனைத்தையும் கொண்டிருப்பதாலேயே ஒன்றுமே இல்லாதது என்ற முரண் கருத்துக்கு வாழும் உதாரணமாகத் தன்னை – இழப்புக்கும் இழிவுக்கும் மத்தியிலான தனது வாழ்வை – ஒரு தியாகச் சின்னமாக கிளெனஸ்கார்ட் முன்வைக்கிறார். ஒரு பிரதிநிதியாக முன்வைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. நவீன உலகின் காயமேற்படுத்தும் அறிவலைகளால் பாதிக்கப்பட்டு அவற்றை உள்ளீர்த்துக்கொண்ட ஒருவனாகத் தன்னை முன்வைக்கிறார். அதன் சமய, சமயச்சார்பற்ற தன்மைகள், பகுத்தறிவு, கற்பனாவாதம் ஆகியவற்றை முன்வைப்பதோடு தனது உணர்ச்சிக் கொந்தளிப்பை மெய்யறிவுச் சிந்தனைகளுக்கிடையேயான மோதல் என்கிறார். 

A Death in the Family-ன் பல்வேறு மன எண்ணங்களை விவரிக்கும் பத்திகளுள் ஒன்றில் இவ்வாறு எழுதுகிறார். 

குழப்பமும் கணிக்க முடியாமையும் வாழ்வு, மரணம் இரண்டின் கூறுகள். ஒன்று இன்னொன்று இல்லாமல் பூர்த்தியாகாது. நம் முடிவை நோக்கியே அனைத்து முயற்சிகளும் நகர்கின்றன என்றபோதும் அதன் ஒளியிலோ அல்லது இப்போது வாழ்வதைப் போல இருளிலோ சிறு நம்பிக்கையின்மையே போதுமானதாகிவிடுகிறது. குழப்பம் புவியீர்ப்பு விசையைப் போன்றது. வரலாற்றின் இயைபுகளை, நாகரீங்களின் உச்சங்களை, வீழ்ச்சிகளை உணரும்போது அவை குழப்பத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. துருவங்கள் ஒன்றை ஒன்று ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த குழப்பத்திலும் மிக நேர்த்தியாகக் கட்டுப்படுத்தப்படும் உலகத்திற்கும் தனிமனிதன் ஒரு பொருட்டே இல்லை. வாழ்க்கையே அனைத்தும். இதயம் எந்த உயிருக்காகத் துடிக்கிறது என்ற பொருட்டின்றித் துடிக்கிறதோ அதேபோல ஒரு நகரம் தனது செயல்பாடுகள் யார் கைகளில் உள்ளது என்ற தெளிவின்றியே இங்கி வருகிறது.

மிக அந்தரங்கமான கண்டடைதல்களில் இருந்து மிக பிரம்மாண்டமான அவதானிப்புகளுக்குத் தாவும் வரை, மரண பயம், தனிப்பட்ட மனச்சோர்வுகள் தொடங்கி நாகரிகங்களின் உச்சம், வீழ்ச்சிகள் வரை, தன்போக்கில் துடிக்கும் இதயத்தில் இருந்து தேன்கூட்டைப் போல பணிநிகழும் பெருநகரங்கள் வரை தன் இயல்பான ஓட்டத்தின் வாயிலாக வியக்க வைக்கிறது. இதுவே நூல் முழுவதுமான பண்பாக இருக்கிறது. இவ்விரு நூல்கள் முழுவதும் கிளெனஸ்கார்ட் மானுடர்கள் இந்தப் பொருள் உலகில் இன்னொரு பொருளே என்று உறுதியாகச் சொல்கிறார். தொடர்ந்து உலகை மாற்றி வரும் தொகுவிசை எதையும் பொருட்படுத்தாத ஒன்று என்கிறார். நம் எளிய தனியர்களது தேவைகளைவிடப் பெரிதானது என்பது மட்டுமின்றி அவர்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பற்றது. தன்னைத் தாண்டி எதையும் தனது அறிவினாலும் மடமையாலும் அளந்து புரிந்துகொள்ள முடியாது என்பதை அவன் ஒத்துக்கொள்கிறான். அவன் தான் அறிந்தவற்றை உண்மையென நம்புவதற்கு இந்தக் கருத்தைப் பயன்படுத்திக்கொள்கிறான். எனது போராட்டத்தின் மிகப்பெரிய முரண் என்பது தன் கருவாக்கத்தில் இருந்தே விளைவுக்குத் தொடர்பற்ற தன்மை என்ற கருத்தைத் தொடர்ந்து எதிர்ப்பதே. ஒருவரது வாழ்வை மாபெரும் இலக்கியச் சாதனையாகக் குறிப்பிட்டுச் சொல்வதன் வாயிலாக படைப்புக் கர்வமும் நோக்கமும் எங்கும் எஞ்சப் போவதில்லை. ஒருவரது தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து பொதுவான கொள்கைகளை உருவாக்கும் பழக்கமும் அதற்கில்லை. 

இருப்பினும் எனது போராட்டம், அது மறைமுகமாகக்கூடத் தன்னைப் போற்றிக்கொள்வதில்லை. அதுவே அதன் குறிப்பிடத்தகுந்த சிறப்பு. அதற்கு நேரெதிராக, இந்த நூல்கள் அப்பட்டமாகத் தோலுரிப்பவை. கிளெனஸ்கார்ட் தனது சுய கீழ்மைகளை – சிறிய மடமைகள், சமூகத் தயக்கங்கள் ஆகியவற்றிலிருந்து அவரது அவமானத்திற்குரிய கீழ்மையான எண்ணங்கள், செயல்கள் வரை – பதிவுசெய்யும் பணியை மேற்கொள்கிறார். தோல்விகளுக்குத் தன்னைத்தானே தண்டித்துக்கொள்கிறார். A MAN IN LOVE-ல் படைப்பாளர்களின் தற்பெருமை பற்றிப் பேசும் ஒரு பத்தியில் தனக்குள்ளும் அப்பண்பு இருப்பதைக் கண்டதும் இந்த அசாதாரண எழுச்சி நிகழ்கிறது. 

நமது – இத்தனை அரைகுறைத்தனம் நிலவும் – இந்த யுகத்தில், குறிப்பாக நான் கற்றுக்கொண்ட, எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும் ஒரேயொரு செய்தி இதுதான்:

நீங்கள் முக்கியமானவர் என்று நம்பாதீர்கள்.

நீங்கள் முக்கியமானவர் என்று நிச்சயம் நம்பாதீர்கள். ஏனெனில் நீங்கள் அவ்வாறு இல்லை. வெறும் அரைகுறைக் கீழ்மை. 

நீங்கள் எவ்வகையிலேனும் சிறப்பானவர்கள் என்று நம்பாதீர்கள். நீங்கள் எவ்வகையிலேனும் பயனுள்ளவர்கள் என்று நம்பாதீர்கள், ஏனெனில் நீங்கள் பயனற்றவர்கள். 

எனவே தலையைக் குனிந்து உங்கள் வேலையைப் பாருங்கள், அற்பமானவர்களே. அப்போது சற்றேனும் வாழ்வின் சாறைப் பெறுவீர்கள். வாயை மூடிக்கொண்டு, தலையைக் குனிந்து, நீங்கள் எதற்கும் தகுதியற்றவர்கள் என்று அறிந்துகொண்டு பணியாற்றுங்கள். 

நான் கற்றது ஏறத்தாழ இதுதான்.

என் அனுபவங்களின் சாரம் இதுதான். 

இங்கேயும் ஒரு அறிவுரை தொனி இருக்கிறது. ஆயினும் கிளெனஸ்கார்டின் ஆண்மை மிகுந்த உன்னத அகத்தை (super ego) அடித்து நொறுக்கும் கண்டனக் குரலே முதன்மையாக ஒலிக்கிறது. அது இரண்டாவது நூலில் இன்னும் செறிவாகிறது. அதில் எழுத்தாளர் தன்னைக் காயப்படுத்திக்கொள்வது உடல்ரீதியானதாக மாறுகிறது. A MAN IN LOVE-ன் முக்கியமான திருப்பங்களில், அவர் ஒரு எழுத்தாளர் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு அங்கு கவர்ச்சிகரமான லிண்டா போஸ்த்ரம் என்ற ஒரு கவியைச் சந்திக்கிறார். தனது முதல் மனைவி தொன்யேவுடன் வாழ்ந்துவந்தபோதும் சடுதியில் கவரப்பட்டுவிடுகிறார். ஐந்து நாள் முகாம் காலத்தில் அவர் குடித்து, லிண்டாவை எண்ணி மேலும் மேலும் குடித்து பரஸ்பரம் இந்த ஈர்ப்பு இருக்கக்கூடும் என்று முடிவுக்கு வருகிறார். இறுதிநாள் மாலையில் அவர் குடித்து தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தைரியத்தை வரவழைத்துக்கொள்கிறார். லிண்டா அவரை மறுதலிக்கிறார். அதனால் அவமானத்துடன் தன் அறைக்குச் சென்றவர் ஒரு கண்ணாடிக் குவளையை உடைத்து அதன் துண்டில் ஒன்றை எடுத்துத் தன் முகத்தைக் கீறிக்கொள்ளத் தயாராகிறார். 

A Time for Everything நாவலின் ஈற்றில் ஹென்ரிக் வான்கெல் இதே போல கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்கிறார். தசைக்குக் கசையடிகள் வழங்குவதன் மூலம் பாவத்தைக் கழுவும் காட்டுமிராண்டித்தனமான இடைக்கால பழக்கத்தை இது ஒத்திருந்தது. ‘வலி நித்தியத்துடன் தொடர்புடையது’ என்கிறார் ஹென்ரிக். ’சிறிய, சற்றுநேரம் நீடிக்கும் வலியல்ல. மாறாக, சுழன்று ஆழமாகத் துடிக்கவைக்கும் தொடர்ந்த வலி.’ கடவுளின் இன்மையில் இந்தச் செயல் வெறும் வன்மமாகிவிடுகிறது. தனது செறிந்த அவமான உணர்வைக் கடப்பதற்காக ஹென்ரிக் தன் மீதே சுயமாக ஏற்றிய கொடூர தண்டனை. இது கிளெனஸ்கார்டின் முட்டாள்தனமான, கொடூரமான குறிப்புணர்த்துதல். இதன் மூலம் இது ஆழ்படிம ஒத்திசைவைக் கொண்டிருக்கிறது. தன்னை வெட்டிக்கொள்வதால் உள்ளத்து வலிகளை உடலுக்கானதாக மாற்றுகிறார். அவ்வாறு தன் முகத்தைக் காயம் செய்வதன் மூலம் தன் அவமானத்தை அப்பட்டமாக்குகிறார். ‘என்னால் மறைக்க முடியவில்லை. அனைவரும் அதைப் பார்ப்பார்கள். நான் என்னையே குறியிட்டுக்கொண்டேன்.’

எனது போராட்டத்தின் சிக்கலான உளவியல் நாடகத்தின் வேதாகமப் பிம்பமாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை கிளெனஸ்கார்ட் இந்த ஓலத்தின் மூலம் முன்வைக்கிறார். அது கெயின். அவமானத்தாலும் வெறுப்பாலும் உந்தப்பட்டு அவன் தலைகுனியவும் அவனை முதல் கொலைகாரனாக ஆக்கவும் காரணமாக இருந்த புறக்கணிப்பைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. மனிதர்களிடமிருந்து தனித்து வைக்கப்படுவதற்காக அல்லாமல், பழிவாங்கும் உணர்ச்சியால் அவன் கொல்லப்படமால் இருப்பதற்கு கடவுளால் காப்பாற்றப்பட்டவன். A Time for Everything-ல் ஹென்ரிக் சொல்வதைப் போல, ’ஒருபோதும் அமைதியை உணராமல் தொடர்ந்து இழிவில் உழல்வதே கெயினுடைய விதியாகிறது. அவன் வாழப் பணிக்கப்பட்டான் என்பதே அவனுக்கான தண்டனை.’ 

4

அநேகமாக நூலில் உள்ள பல்வேறு இலக்கிய குறிப்புகளைவிடவும் My Struggle என்ற பொதுத் தலைப்பே (நார்வே மொழியில் Min Kamp) சிக்கலாகவும் குழப்பமாகவும் இருப்பதோடன்றி பெரும் கவனத்தையும் ஈர்க்கிறது. காரணம், அடால்ஃப் ஹிட்லரின் – Mein Kampf (1925) – தன் வரலாற்று நூலுக்கும் அதே தலைப்பு. இந்த நூல் தொடரின் இறுதி நூலில் இந்தப் பிரச்சினை தொடர்பாக கிளெனஸ்கார்ட் மிக விரிவாகப் பதில் அளித்துள்ளார். அவர் என்ன சொன்னார் என்பதை அறிய ஆங்கில வாசகர்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இது தற்செயல் மட்டுமல்ல என்பதும் தலைப்பு பல விபரங்களைத் தெளிவாக்குகிறது என்றும் புரிகிறது. A DEATH IN THE FAMILY நூலில் அவரது தந்தை இறப்புக்குப் பிறகான சீர்குலைவில் கிளெனஸ்கார்டு, இங்க்வே ஆகியோருடன் சேர்ந்து குடித்த அவர்களது பாட்டி, இரண்டாம் உலகப்போரின் போது ஆக்கிரமிப்பு செய்த ஜெர்மானியர்களுடன் தான் நட்புறவுடன் இருந்ததையும் போருக்குப் பிறகு அவர்களைச் சென்று சந்தித்ததையும் பேச்சினினூடே சொல்கிறாள். அடுத்த நூலில் நூற்றுக்கணக்கான பக்கங்களுக்குப் பிறகு சர்ச்சைக்குரிய நார்வே ஆசிரியர்களைப் பற்றிய விவாதத்தில் விட்குன் குவிஸ்லிங் (Vidkun Quisling) என்ற நார்வே அரசியல்வாதியைப் பற்றிய குறிப்பு வருகிறது. அவர் பெயரே கூட்டுப்பணியாளர் என்னும் பதத்துடன் சேர்த்தே எப்போதும் அறியப்படுகிறது. 

கிளெனஸ்கார்டின் நார்வே எழுத்தாளர் என்ற இலக்கிய அந்தஸ்துக்கு, தேசிய வரலாறு பற்றி அவர் எழுதிய இழிவேற்படுத்தும் அத்தியாயத்தின் மீதான விமர்சனங்கள் நீங்கா கறையாக உள்ளது. இரண்டாவது நாவலில் ஒரு காட்சியில் கிளெனஸ்கார்டும் லிண்டாவும் சில நண்பர்களுடன் மாலையுணவு உண்கின்றனர். பேச்சு இயல்பாக மகப்பேறு நோக்கித் திரும்புகிறது. சில மிடறுகள் மது வயிற்றுக்குள் சென்றதும் கிளெனஸ்கார்ட் சிசேரியன் அறுவை முறையில் குழந்தைப்பேறு தொடர்பாகச் சில மடமை மிகுந்த கருத்துகளைத் தெரிவிக்கிறார். விருந்தினர்களுள் ஒருவர், ‘உண்மையான நார்வே மனநிலையினாக’ இருந்ததற்கு அவரைக் கேலி செய்ததோடு நில்லாமல் அன்று மாலை முழுவதும் ‘ஹம்சுன்’ என்றே அவரை அழைக்கிறார். அந்தப் பெயர் கிளெனஸ்கார்டை மிகவும் எரிச்சலடையச் செய்கிறது. அது எரிச்சலேற்படுத்தக் கூடிய பெயர்தான். நட் ஹம்சுன் (Knut Hamsun) மிகத் திறமையான, அதிர்வுகளை ஏற்படுத்திய எழுத்தாளர். ஆனால் விகற்பமான, தலைக்கணமிக்க, பாதுகாப்புணர்வற்ற, வெறுப்பு நிறைந்த முரண்பாடுகள் மிக்க மனிதன். இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் நோக்கத்தை ஆதரித்தார். தனது நோபல் பரிசை ஜோசப் கோயபல்ஸுக்கு மரியாதை நிமித்தமாகப் பரிசளித்தார். ஹிட்லரின் மறைவுக்கு அணிநயமிக்க இரங்கற்பா ஒன்றை எழுதினார். போருக்குப் பின்னர் தேசத்துரோகியாக இனம்காணப்பட்ட அவர், முதுமையின் பலனால் சிறைக்கு அனுப்பப்படவில்லை. 

அதே நூலில் இன்னொரு நார்வே எழுத்தாளர், கவிஞர், நாட்குறிப்பாளர் ஓலவ் ஹாக் (Olav H. Hauge) பற்றியும் தன் இளம் வயதில் அவரைப் பேட்டி காண முயன்றதைப் பற்றி கிளெனஸ்கார்ட் எழுதியுள்ளார். அந்த வாய்ப்பை அவர் அரைகுறையாக மழுப்பியே எழுதியுள்ளார். இந்த அத்தியாயத்தில் அவரது தயக்கத்தையும் திகைப்பையும் பொருத்திப் பார்த்தால் அவர் தன் உரைநடை சுயபகடி மிக்கதாக மாறும்வரை எப்படி அதைச் சுழற்றி மீள மீள எழுதிப் பார்க்கிறார் என்பது புரியும். ‘அவர் மரணத்தைப் பற்றி மிக மேலான கிளர்ச்சியான ஒரு கருத்தைச் சொன்னார். அவரது குரல் விலகியும் தனிமையில் ஆழ்ந்தும் இருந்தது. ஆனால் அதில் அங்கதம் இல்லாமல் இல்லை. ‘இதை நான் நினைவில் வைத்தே ஆக வேண்டும். இது மிகவும் முக்கியம். என் வாழ்வின் எஞ்சிய நாட்கள் முழுவதும் இதை நினைவில் வைத்தாக வேண்டும். ஆனால் ஹார்டெஞ்சர் யோர்டுக்குச் செல்லும் பாதையில் மகிழுந்தில் பயணம் செய்யத் தொடங்கியதும் அதை நான் மறந்துவிட்டேன்.’ 

ஆழ்ந்த ஆறுதல் தரும் இலக்கியப் பிரதிகளாகக் கிளெனஸ்கார்ட் கருதும் ஹாகின் விரிவான நாட்குறிப்பேடுகள் பற்றிய குறிப்புகள் A MAN IN LOVE-ல் எனது போராட்டத்தின் மற்றொரு முன்னோடி பற்றிய குறிப்பாக வருகிறது. அதை வரலாற்றுக் கறையும் தீண்டாமல் இல்லை. ஒருமுறை கிளெனஸ்கார்ட் ஹாக் பற்றி ஒரு கட்டுரை எழுதப்போவதாகச் சொன்னபோது கெயர் ஹாக் ஒருமுறை ஹிட்லரை ‘மாமனிதன்’ என்று குறிப்பிட்டதாகச் சுட்டிக்காட்டினார். ஹாக் பற்றிய மற்றொரு உரையாடலில் கெயர் மீண்டும் அதையே சுட்ட, கிளெனஸ்கார்ட் தன் புரிதலை மறுவினையாகச் சொல்கிறார். 

நம்முள் அழுகிய நிலையில் இருக்கும் அற்பங்களையும் மனக்குறுக்கங்களையும் தொலைத்துவிட்டு, ஒருவரைச் சினமாகவோ துக்ககரமாகவோ ஆக்கும் அனைத்து அற்ப பொருட்களையும் விலக்கிவிட்டு, ஏதோவொரு தூய சிறந்த மாபொருளைத் தோற்றுவித்து அதற்குள் அனைவரையும் கரைத்து மறையச் செய்திடல் வேண்டும். இந்தக் கருமங்களை எல்லாம் உதறித்தள்ளியாக வேண்டும், இல்லையா? ஒரே மக்கள். ஒரே குருதி. ஒரே பூமி. இப்போது மிகத் துல்லியமாக இதையே முற்றாக ஒழித்தாக வேண்டும். அதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள எனக்கொரு பிரச்சினையும் இல்லை.

கிளெனஸ்கார்ட் யாராக இருந்தாலும் நிச்சயம் ஃபாசிஸ்டு இல்லை. தெளிவற்றதாகத் தோற்றமளித்தாலும் அவரது அரசியல் நிலைப்பாடுகள் யாவும் ஒரு கோட்பாட்டு நிலையில் இல்லாமல் வெறும் மனநிலை என்றே சொல்லத்தக்கன. இந்த நாவல்களில் அவர் அரசியலிலும் தற்காலச் செய்திகளிலும் தினசரி மாற்றங்களில் அவர் ஆர்வத்துடன் இருப்பதாக ஒரு சிறிய குறிப்பு வருகிறது. ஒரு இடத்தில் செய்தித்தாள் வாசிப்பது குறித்து ‘குப்பைக் கூளங்கள் நிறைந்த பையைத் திறந்து தலையில் கொட்டிக்கொள்வது’ என்று குறிப்பிடுகிறார். 

தன் பதின்ம சுயத்தை அவதானித்து எனது போராட்டத்தின் முதல் நூலில் இவ்வாறு எழுதுகிறார். 

நான் மென்மையானவர்களின் பக்கம் இருந்தேன். போர், ஆட்சியதிகாரம், படிநிலைகள், அனைத்து வகை வன்முறைகள் ஆகிய அனைத்துக்கும் எதிராக இருந்தேன். பள்ளிகளில் தேர்வுக்காக மாணவர்களை அணியப்படுத்துவதை நான் விரும்பவில்லை. உலகின் செல்வங்கள் யாவும் சமநிலையின்றி குவிக்கப்படுவது என்னுள் ஆத்திரமூட்டியது. வாழ்வின் இன்பங்கள் அனைவருக்குமானது என்று கருதினேன். முதலாளித்துவமும் தனவந்தர்களின் அரசாட்சியும் பகையென்று கருதினேன். அனைவரும் சமமான மதிப்புடையவர்கள் என்றும் ஒரு ஆளின் புறத்தோற்றத்தைவிட அகத்தின் குணங்களே மிகவும் முக்கியம் என்றும் கருதினேன். எளிதாகச் சொன்னால் மேலோட்டத்திற்கு மாற்றாக ஆழத்தையும் தீமைக்குப் பதிலீடாக நன்மையையும் வன்மத்திற்கு மாற்றாக மென்மையையும் தேர்ந்தெடுத்தேன்.”

‘தீமைக்கு எதிரான நன்மையின் போர்’ என்ற பொருளற்ற வாக்கியத்தில் கிளெனஸ்கார்ட் தனக்குள் கண்டுபிடித்த இருளுடனான அற்பச் சமரும் மர்மமான புதிரும் பொதிந்துள்ளது. அவர் தனது நூல்கள் கோட்பாடுத்தன்மைக்கு எதிரானவை என்கிறார். இது உண்மை என்றே தோன்றினாலும் நேரடியாக அவ்வாறு ஏற்பதற்கு குறிப்பேதுமில்லை. ஆரம்பத் தொகுதிகள் கோட்பாடுகளை ஓரளவிற்குப் பொருட்படுத்தவே செய்கின்றன. கோட்பாடுகள் இலட்சியவாதத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் பொதுவாகப் பொருட்கொள்ள முடியும். தனியன் தன்னை யதார்த்தத்திலிருந்து பிடுங்கிக்கொள்வதற்கான இச்சையை எதிர்க்கும் ஒரு வழிமுறையாகவும் மனத்துக்கண் மாசிலனாதல் என்ற எண்ணத்தைத் தழுவவும் தன்னுணர்வைத் தொலைக்க அனுமதியளித்துக்கொள்ளவும் அவை தினசரி வாழ்வில் ஊன்றிப் பிணைந்துள்ளன. கிளெனஸ்கார்டின் எழுத்தில் உருவாகும் நாடகீயப் பதற்றங்களில் பெரும்பான்மையானவை இன்றியமையாத கவனத்தைத் தொடர்வதன் சிரமத்தில் இருந்து உருவாகின்றன. தனது மிக அந்தரங்கமான சம்பவங்களையும் இந்நூலின் பல இடங்களில் எட்டிப்பார்க்கும் வரலாற்று வன்முறை நிகழ்வுகளையும் பிணைப்பது அத்தகைய பதற்றங்களே என்று அவர் நினைவுகூர்கிறார். இதனை வில்லியம் ஹாஸ்லிட், ‘வெறுத்தலின் உவகை’ என்ற பதத்தைக் குறிப்பிடுகிறார்.

நம்மைச் சுற்றியுள்ள சகுணங்கள் அனைத்தும் நமக்கான முழுத் திருப்தியை உத்திரவாதம் அளிக்கும் நிலையில் இருந்தால், விபரீதமான மானுடப் பழக்கமானது அதுவே தன்னை அதிருப்தி கொள்ளச் செய்யும். அது சக மனிதர்களுக்கு எதிரியாக ஒருவரை மாற்றும் இயல்புடையது. ஒரு அநீதியை உணர்ந்ததும் நமக்குள் இயல்பாக உருவாகக்கூடிய வெறியே நமது ஒழுக்கரீதியான இருப்புக்கு அடிப்படை என்றும் சக மனிதர்களின் உண்மைகளைக் கற்பனை செய்யத் திறன்வாய்ந்த நம் உள்ளார்ந்த பரிவுணர்ச்சியே அந்த வெறியுணர்ச்சிக்கான அடிப்படை மூலம் என்றும் குறிப்பிடுகிறார். இதே கற்பனைத் திறனையே நாம் ஆணவம் என்று அழைத்து அதை அதிகாரத்துடனும் அரசியல் பலத்துடனும் தொடர்புபடுத்திக் கொள்கிறோம் என்பதே ஒரு வன்மமான திருப்பம். ஒழுக்கமும் உளவியலும் இணையும் இந்த அடிப்படைத் தளத்தில் கிளெனஸ்கார்டின் போராட்டம் அரங்கேறுகிறது. மிகத் துல்லியமாக இந்த ‘மென்மையான’ உணர்ச்சிகளே ஒருவனை வலுவின்மையைப் பறைசாற்றவும் காயப்படுத்தவும் இன்றியமையாத – காக்க அரிதான பண்புகளாக உள்ளன. ‘சில நேரங்களில் காயம்பட்ட ஓட்டப்பந்தைய வீரரின் மூட்டைச் சுற்றி இருக்கும் குறுத்தெலும்பு கிழிவதைப் போல அனைத்து மென்மையான உணர்ச்சிகளும் என்னுள் இருந்து கிழிந்துவிட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வதுண்டு. மெல்லுணர்ச்சி, பரிதாப உணர்ச்சி, பரிவுணர்ச்சி என எதுவும் இல்லை.’

இவ்விரு நாவல்களிலும் கிளெனஸ்கார்டின் போராட்டம் வெளிப்படையாக இருப்பதாக எந்தக் குறிப்பும் இல்லை. வறுமை, அரசியல் அதிகாரம் ஆகியவற்றின் பேய்த்தன்மையை அவர் எதிர்கொள்ளவே இல்லை. A MAN IN LOVE-ன் பெரும்பகுதியில் அவர் தன் குடும்பத்துடன் ஸ்டாக்ஹோமில் வசதியுடன் அமைதியான வாழ்வை மேற்கொள்கிறார். குறிப்பாகச் சொன்னால் அவர் நிலைத்த, நவீன, வளமான ஒரு சமூகத்தில் வாழ்ந்து வருவதால் அவர் தனது ஆடம்பரத்தில் திளைக்கச் சாத்தியம் இருக்கிறது. ஆனால் அதுவே அதிருப்தி உணர்வைத் தூண்டி அவரது பிற்போக்கான மனநிலையை வெளிப்படுத்துகிறது. ஸ்வீடன் தெருக்கள் சுத்தமாகவும் அதன் மக்கள் மதிக்கூர்மையுடனும் நல்ல பண்புடனும் இருப்பதே நார்வேயினனாகிய கிளெனஸ்கார்டின் – வேறுபாட்டையும், ஒப்பீட்டளவில் கரடுமுரடான பண்புகளையும் தன் மொழியின் விகற்பத்தையும் காட்டிக்கொடுக்கும் – தன்னுணர்வைத் தூண்டுகிறது. இந்தத் தினவு அவருக்குள் மிகவும் தெளிவற்ற வெறுப்புணர்வை நிரப்புகிறது. இறுதியில் அது வெடிக்கிறது.

“பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஸ்வீடன் மண்ணில் ஒரு போர் நிகழவில்லை. யாரேனும் ஸ்வீடனுக்குப் படையெடுத்து நுழைந்து, அதன் கட்டிடங்களைக் குண்டுவைத்துத் தகர்த்து, நாட்டில் பசி பஞ்சத்தை விளைவித்து, ஆண்களைச் சுட்டுக்கொன்று, பெண்களை வன்புணர்ந்து, தப்பிய ஸ்வீடன் நாட்டவர் சிலி, பொலிவியா போன்ற தொலைதேசங்களால் அகதிகளாக வரவேற்கப்பட்டு, தாங்கள் ஸ்காண்டிநேவியாவை மிகவும் நேசிப்பதாக அந்நாட்டவர் இன்மொழி கூறுவதைக் கேட்டு ஸ்வீடன்காரர்கள் ஏமாந்து, அவர்கள் தங்களுடைய நகரங்களின் வெளிப்புறத்துச் சேரிகளில் ஸ்வீடன்காரர்களைக் குப்பைக் குவியல் போல வாழ வைப்பதைப் பார்க்க வேண்டும். இதற்கெல்லாம் அவர்கள் என்ன சொல்வார்கள் என்று தெரிந்துகொள்வதற்காகவே இவற்றைச் செய்ய வேண்டும்.

இதோ தீய எண்ணம். தயக்கம், அவமானம், தகுதியற்ற உணர்வு, தந்தை அவர்மீது கடுமையாகக் காட்டிய சிதைவு உணர்ச்சிகள், அத்தகைய சினத்தைக் கிளெனஸ்கார்டே தன்மீது நிகழ்த்தியது, அனைத்தும் சேர்ந்து புறத்தே ஒரு பொருளை நோக்கிக் குவிந்து வன்மமாகவும் வெறுப்பாகவும் தீயவர்களை நோக்கிப் பாயாமல் நல்வாய்ப்புடையவர்களின் மீது குவிந்து பாய்கிறது. ஸ்வீடன் சமூகத்தின் அளவுக்கதிகமான பாதுகாப்புணர்வையும் நாகரீக இயல்பையும் அது தன் அகதிகளை எப்படிக் கையாள்கிறது என்பதன் விமர்சனத்தையும் அடிப்படையாகக் கொண்டு கிளெனஸ்கார்டின் பொதுவான அரசியல் கருத்தை ஏற்பதென்பது அவரைப் பாராட்டுவதாக மட்டுமே அமையும். இந்த வெளிப்பாடு கட்டற்றது, பிற்போக்கானது, காயம்பட்ட ஆணவத்தின் மறுவினை. வரிக்கப்படாத, தெள்ளிய மறுவினை.

A MAN IN LOVEல் நவீனமாக இருத்தல் என்ற மாயையை கிளெனஸ்கார்ட் கண்டனம் செய்யும் ஒரு பத்தி வருகிறது. வசதி வாய்ப்பு என்ற ஆடம்பர முலாமுக்கு அடியில் மாறாத உடல்களும் தேவையும் இருந்துவருகின்றன. ‘மூளைக் கட்டியுடன் யாரால் நவீன மனிதனாக இருக்க முடியும்?’ என்று அரற்றுகிறார். ‘விரைவிலேயே அனைத்தும் மண்ணுக்கடியில் கிடந்து அழுகப்போகிறது என்று தெரிந்தபிறகு எப்படி நாம் நவீனமானவர்கள் என்று நம்புவதாக நடிக்க முடியும்?’ ஆயினும் இதில் தொனிக்கும் இன்மைவாதத்தையும் அவரது எழுத்து எதிர்க்கிறது. வாழ்வின் பொருள் தேடித் தொடங்கிய போராட்டம் அத்தியாவசியமானது. ஏனெனில், அதற்கான மாற்று இன்னும் கொடியது. A Time for Everything-ல் ஹென்ரிக் வான்கெல் நார்வேயில் ரோலிக்டெனில் போர்காலக் கயமைகள் நிகழ்ந்த ஒரு பகுதியைக் கடந்து நடந்துசெல்கிறார். அங்கு பல நூறு மனிதர்கள் சுடப்பட்டு புதைக்கப்பட்ட குவியல் மயானம் இருக்கிறது. அவர் இப்படி எழுதுகிறார். 

…கொன்றவர்கள் கொலையுண்டவர்கள், அங்கிருந்து உயிருடன் மீண்டவர்கள், அங்கேயே சடலமாக அழுகியவர்கள் என அனைவரிடமிருந்தும் உடல்களைத் தவிர அனைத்தையும் உருவிச் சென்றனர். ஆன்மா இல்லை, மனிதம் இல்லை, உணர்ச்சிகள் இல்லை, நன்மை தீமை இல்லை; வெறும் விழிகளும் வாய்களும் முடியும் பற்களும் விலா எலும்புகளும் கரங்களும் முட்டிகளும் பாதங்களும் புற்களும் மரங்களும் நீரும் நிலமும் காற்றும் சூரிய ஒளியும் இவற்றோடு நீல வானமும் மட்டும் இருந்தன.

ஆன்ந்த்ரே பிரிவிக் (Anders Breivik) நடத்திய 2011 திரள்படுகொலையோடு எனது போராட்டத்தின் இறுதித் தொகுதி முடிவடையும் என்று ஒரு பேட்டியில் கிளெனஸ்கார்ட் தெரிவித்தார். முகத்திரை கிழிந்த அந்தக் கொடுங்கோலனின் கோட்பாட்டு ரீதியான வன்முறைகளைப் பற்றி கிளெனஸ்கார்ட் கருத்து தெரிவித்திருக்கிறார். 

“நம் பூமியும் மேலிருக்கும் கருத்தியலான சுவனமும் மோதித் தெறித்த நிகழ்வு இது. இதுவேதான் நாஸிக்களின் காலத்திலும் நிகழ்ந்தது. ஹிட்லரும் குறியீட்டுப் படிமத்தை முன்வைத்து உலக எதார்த்தத்தின் நிம்மதியைக் குலைத்தார். தினசரி வாழ்வில் இது நிகழும்போது அதுவே என்னை ஆர்வமூட்டுகிறது.”

தன்னையே எடுத்துக்காட்டாக முன்வைப்பதிலும் தன் ஆழத்தில் இருக்கும் பிற்போக்குத்தனம், அவமானத்திற்குரிய இச்சைகள் அனைத்தையும் இழுத்து வந்து வெளிச்சமிட்டுக் காட்டுவதிலும் அவர் தன் சொந்த வேரின் மையத்தைத் தேடிச் செல்கிறார். தீமைக்கான மானுடத்திறன் எங்கே கரந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அங்கு வந்துசேர வேண்டுமென விழைகிறார். அடுத்து வருவது எதுவாக இருந்தாலும் நிச்சயம் செறிந்த இருளைக் கொண்டிருக்கும் என்பது திண்ணம்.

*

ஆங்கில மூலம்: Notes on ‘Kamp’: My Struggle by Karl Ove Knausgaard by James Ley, Published in Sydney Review of Books, December 2013.