முள்

by எம்.கே.மணி
0 comment

அதுவொரு மூச்சடைப்பு. அவளுடைய மார்புப் பிளவை எவ்வளவு நேரம் வெறித்து நின்றேனோ? அங்கிருந்து பார்வையை விலக்கினாலும் மனம் அடித்துக்கொண்டிருந்தது. மஞ்சுவைப் போல ஒரு அழகியை நான் அதுவரை பார்த்தது இல்லை என்பது உறுதி. இடுப்பில் ஒரு வேட்டி கட்டி, ஒரு ஜாக்கெட்டுடன் முந்தானை போடாமல் நிற்கிற அத்தனை பெண்களும் எனக்கு வியப்புதான் என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆயினும் பேசும்போது, சிரிக்கும்போது, என்னிடம் மழலை கொஞ்சும்போது, எல்லாவற்றையும்விட எனது தலையைக் கோதிவிட்டுச் செல்லும்போது என்னை நான் வெடித்துவிடாமல் பார்த்துக்கொண்டிருப்பது போல உணர்ந்தேன்.

“உன்னியே, நீ மாம்பழம் சாப்பிடுவாயா?“

“ம்.“

“சேச்சி சாயந்திரம் பறித்துத் தருகிறேன், என்ன?“

நான் நினைவுகளை மாற்றி நிறுத்தி, பேருந்தைவிட்டு இறங்கினேன். மற்றும் சிலர் இருந்தார்கள். அவர்கள் நடக்க ஆரம்பித்திருந்த மண் பாதைக்குச் சாலையை விட்டு இறங்கினேன். கையில் ஒரு துணிப்பை மட்டுமே. அதில் கோவில் பக்கத்தில் வாங்கின இரண்டு பட்டை சாக்லேட்டுகளும், அன்னாசிப் பழத்துண்டுகளும் இருக்கின்றன. ஒரு தண்ணீர் பாட்டீல். ஆட்கள் விரைவாக நடந்து மறைந்துகொண்டிருந்தார்கள். சில பட்சிகளின் சீட்டி காற்றைக் கிழித்துக்கொண்டு போயிற்று. அப்புறம் வருகிற அமைதியைக் கூர்ந்து கவனிக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மேடுகள் வர ஆரம்பித்தன. சற்று நடந்த பிறகு ஒரு பாறை மீது அமர்ந்து மூச்சுவிட்டுக்கொண்ட போது, வியர்வை நனைந்திருந்த உடம்பு குளிர்ந்தது.

அருகில் தெரிந்த குன்றுகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நேரம் போகிறது என்கிற குற்ற உணர்வும் இருந்தது.

அன்று முதல்முறையாக மஞ்சுவைப் பார்த்து நின்ற நாள் கேரளாவைப் பார்த்த நாளும்கூட. ஒரு கல்யாணத்துக்காகக் குடும்பத்துடன் சென்றிருந்தோம். நினைவிருக்கிறது, அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். யார் என்ன கேட்டாலும், புரிந்தால், தமிழில் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். பல மக்களும் சிரித்தார்கள். மஞ்சு அப்படி இல்லை. அதிகம் சிரிக்கிறவர்களைக் கண்டித்தாள். சாயந்திர நேரங்களில் உட்கார வைத்து மாம்பழங்களை அரிந்து கொடுத்தாள். கை முழுக்கத் தேங்காய் எண்ணெய் பூசிக்கொண்டு பலாப்பழச் சுளைகளைப் பிய்த்துத் தட்டில் போட்டுக் கொடுத்தாள். ஓரிரு முறை அவள் செய்த கள்ளப்பத்தை விரும்பிச் சாப்பிட்டேன்.

எனது முகத்தில் ஒரு புன்னகை இருந்திருக்கலாம். மனசில் கள்ளமே இருந்தது. பின் வந்த காலங்களில் சுய இன்பத்தைக் கற்றுக்கொண்டு முகங்களைத் துழாவும் போது மஞ்சு நினைவுக்கு வராமல் இல்லை. அப்போது ஒரு ஸ்தம்பிதம் நிகழும். அவள் எனக்கு அக்காள் முறை என்பதால் அல்ல. நமக்குள் அள்ளக் குறையாத முறைகேடுகள் கொஞ்சமா நஞ்சமா? அது வெளியே தெரியாத வரையில் நாம் நிரபராதிகள் அல்லவா? வேறு ஏதோ ஒன்று. அவளை நான் கசக்க விரும்பவில்லை. அதை அப்புறம் என்று தள்ளிப்போட்டுவிட்டு வேறொரு முகத்தைக் கண்டடைவேன்.

அவளுடைய திருமணத்துக்குப் போக முடியவில்லை.

பின்னால் அவ்வளவாக நேரம் இல்லாத ஒரு நாள் அவளுடைய வீட்டுக்குச் செல்ல முடிந்தது. அடேங்கப்பா, மனம் மலராமல் ஒருத்தியால் இவ்வளவு புன்னகைக்க முடியாது. வரவேற்க முடியாது. அவளுடைய புருஷன் அவளுக்கு எங்கேயோ இருந்தான். ஆனால் குணத்தில் தங்கம். குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறவன். முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் சந்தோஷம் அதைப் பறைசாற்றியது.

“உன்னியே, நீ வாத்துக் கறி சாப்பிடுவாயா?“

“ம்.“

“இரவு செய்து தருகிறேன். ஏட்டன் பிராந்தி கொண்டுவருவார். கூட வைத்துச் சாப்பிடு.“

வேறு வழியில்லை. தங்கினேன். செய்து வைத்ததை எல்லாம் மறுக்க மனமின்றி வயிறைத் தடவிக்கொண்டு உறக்கம் விழித்து காலையில் எழுந்து ஓடினேன். மஞ்சுவைக் காதலித்தும் அவளை அடைய முடியாமல் போன எத்தனையோ பையன்களின் துரதிர்ஷ்டத்தை நினைத்தவாறு, வழியனுப்ப வந்த மச்சானைத் திருப்பி அனுப்பி வைத்தேன். அவளுக்கும் சரி, இவனுக்கும் சரி, நிற்க நேரமில்லை. என்னைக் காட்டிலும். அவள் காடு சூழ்ந்த வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருந்து, ஆடு மாடு கோழிகளை மேய்த்து, பாக்குக் கொட்டைகளைத் தினமும் பரப்பிப் போட்டு காய வைத்து எடுத்து, சமைத்து, பிள்ளைகளைப் படிக்க அனுப்பி, மிச்சமிருக்கிற அத்தனை சில்லறை வேலைகளையும் முடித்து நள்ளிரவில் குளித்துப் படுத்து, விடியலில் எழுந்தாக வேண்டும். ‘ஏன் இந்தளவு நிறமிழந்து வெளிறிப் போனாய்?’ என்று தொண்டை வரை வந்ததைக் கேட்காமல் விட்டேன். அப்புறம் அவளுடைய கண்களும் குரலும் எப்போதும் எனக்குள் மறக்காமல் இருந்தது. 

சில குன்றுகளைச் சுற்றிக் கடந்து ஒரு மலையின் மீது சாக்லேட் சாப்பிட அமர்ந்தபோது தெரிந்த பள்ளத்தாக்கு எண்ணங்களை ஒழித்துக் கட்டியது என்றே உணர்ந்தேன். சொல்லப்போனால், என்னை என்னால் தொகுத்துக்கொள்ள முடியவில்லை. உடைந்து பரவிக்கொண்டிருந்தேன். கூடவே தொடர்ந்து வருகிற நோய்களின் நிபந்தனையால் வெகுகாலமாக அறியாத ருசி மூளையைத் தட்டியபோது வாழ்வு எவ்வளவு மலினம் என்று பட்டதில் தொடங்கி நான் என்னை மிகவும் சின்னவனாக அறிந்தேன். எனது ஆறு வயதுப் பேத்தியுடன் நான் இப்போது சரிசமமாக விளையாட முடியும் போல. சற்றே தீவிரம் சூழ்ந்ததும் பள்ளத்தாக்கில் இருந்த மரங்களின் சிரசுகளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவற்றின் அசைவுகளால் மனம் குளிர்ந்து வந்தது. வெண்மையான பறவைகள் கூட்டம் அந்த மரங்களின் மடியில் புதைந்து மறைந்தது. நான் என்னைக் கூர்மை செய்துகொண்டிருந்தேன். ஆம், கீழே நதி சலசலத்துச் செல்லும் சப்தம். 

அடுத்த பேருந்து வந்திருக்க வேண்டும். மேலும் சிலர் என்னைக் கடந்து போயினர். மிகவும் சிறிதாக இருந்த கோவில். கட்டட வேலைகள் நடைபெற்று மெல்ல வளர்ந்துகொண்டிருக்கிறது.

சாம்பார் சாதம், நெய் மணக்க மணக்க, சுவையோடு இருந்தாலும் கொஞ்சமாகத்தான் எடுத்துக்கொண்டேன். சக்கரைப் பொங்கல் தொண்டைக்குள் வழுக்கிக்கொண்டு இறங்கும்தோறும் எனக்கு ஒரு விதமான திரில். மரணத்துடன் விளையாடுவது போல. நான் அங்கிருந்த பூசாரி ஒருவரிடம் பச்சை காஜா வாங்கிப் புகைத்தவாறு, எதிரே பரந்திருந்த புல்மேடுகளைப் பராக்கு பார்த்து அமர்ந்திருந்தபோது, முன்பு என்னைக் கடந்துபோன கூட்டத்தினர் வேகமாகத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எனக்கு நேரம் ஆவியாகிக்கொண்டிருப்பது பற்றின பிரக்ஞை கிட்டவில்லை. மலை இறங்கும்தோறும் வெயில் வெகு விரைவாக இறங்கிக்கொண்டிருப்பது புரிந்தது. எவ்வளவு விரைவாக நடந்துவிட முடியும்? எனக்குக் குறுக்கே ஒரு நாய் பாய்ந்து சென்றது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அது நரியாக இருக்கலாம் என்று நினைத்தேன். வயதுக்கு மீறின வேகத்தில் எட்டு வைத்து நடந்து, மண் பாதை முடிந்து, சாலைக்கு வந்துவிட்டேன் என்றாலும் அப்போதுதான் அசலான பீதி முற்றுகையிட்டது. பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஆள்கூட இல்லை.

அசைவுகளே இல்லை. காடு உம்மென்று இருந்தது.  இருள் ஒரு எதிரி போல ஓடி வந்தது. என்னால் எனது கரங்களைக்கூடப் பார்க்க முடியாத அளவில் வந்து மூடியது.

நான் பதற்றத்துடன் நடக்கத் தொடங்கினேன். முழுக்க முழுக்க அது குருட்டுத்தனமே. இருளில் இருந்து இருளுக்கு. எங்கே சென்று சேர்ந்துவிட முடியும்? என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் ஏதோ மிருகங்களின் சப்தங்கள் கேட்கின்றன. நான் வியர்வையில் குளித்துக்கொண்டிருந்தேன். சாலை ஒன்றைத் தவிர வேறு நம்பிக்கைகளே இல்லை. எங்கே முட்டிக்கொள்ளப் போகிறேன்? எந்தப் பள்ளம் காத்திருக்கிறது?

கால்கள் பின்னின.

பாதையில் மட்டுமல்ல, கண்களுக்குள்ளும் அது இறங்கியது. அது என்ன வெள்ளையாக? எப்படியோ அந்தச் சிறிய பாலத்தின் ஓரமாக அமர்ந்துகொண்டு விட்டபோது உடலும் மனமும் கிறங்கின. அசாத்தியமான ஒரு சுகம். இனி என்ன நடக்கும்? என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். மகன் கீழே கோவிலுக்கு அருகில் லாட்ஜில் இருக்கிறான். அலைபேசியைக் கொண்டுபோகச் சொல்லி அவன் வற்புறுத்தியபோதும் கேட்கவில்லை. தேடத் தொடங்குவானா? எப்போது? காலையிலா?

எதற்கோ வெகு தூரத்தில் மனம் சிரித்துக்கொள்வதை அறிகிறேன்.

மஞ்சு கல்யாணத்திற்கு முன்பு உழைப்பை வெறுத்தவள். காசு இல்லாமல் முடியாது என்பதால் தனது சகோதரிகளுடன் அல்லது தோழிகளுடன் பிற கூலிப் பணிகளுக்குச் சென்றாலும் அறுவடைக் காலத்தில் விவசாயக் கூலியாக இருப்பதை அடியோடு வெறுத்தாள். வெயிலில் நின்று தன்னுடைய நிறம் கருப்பாக மாறுவதை அவளால் செரிக்கவே முடியவில்லை. அவள் என்னைப் போலவே தம்பி முறையில் இருந்த ஜெயனிடம் அதை முறையிட்டவாறு இருப்பாள். அவனும் அந்த ஊரில் இருந்து தப்பித்துச் செல்லத் துடித்துக்கொண்டிருந்தான். பின்னால் அரைகுறையாகக் கற்று வைத்திருந்த தையல் தொழிலுடன் மும்பைக்கு ரயிலேறி அந்தத் தொழிலில் செழித்து கடை போட்டு அங்கேயே செட்டில் ஆனான். கல்யாணம் செய்து மனைவியை அங்கேயே கூட்டிச்சென்று பிள்ளைகளைப் படிக்க வைத்தான். அவனுடைய அப்பா இறந்தபோது ஊருக்கு வந்தான். கூட்டத்தில் மஞ்சு இல்லை. அவளுடைய புருஷனும் பிள்ளைகளும் இருந்தார்கள்.

மஞ்சுவிற்குப் புத்தி பேதலித்திருக்கிறது என்றார்கள்.

அவள் தன்னைதானே பூட்டிக்கொள்கிற அறையில் இருக்கிறாள். வன்முறைப் போக்கு அதிகம். யாராலும் தாக்குப் பிடிக்க முடியாது என்றார்கள்.

ஜெயன் சம்மதிக்கவில்லை.

கதவை எப்படியோ திறக்க வைத்தார்கள்.

“என்ன மஞ்சு? எதற்கு அப்படிப் பார்க்கிறாய்? நான் ஜெயன். உன்னுடைய சகோதரன். என்னைத் தெரியவில்லையா?“

“தெரியும்!“

“என்ன தெரியும்?“

“நீ ஜெயன். என் சகோதரன்“ என்றாள். அவளுடைய கண்கள் அவனுடைய கண்களுக்குள் பார்த்தன. “அதற்கு என்ன இப்போது?“ என்றாள்.

மூன்று நாட்களுக்கு முன்பு அவளுடைய உடல்நலம் முழுமையாக மோசமடைந்துவிட்டதாகச் செய்தி வந்தது. ‘போக வேண்டுமா?’ என்று மனைவியும் பிள்ளைகளும் கேட்டார்கள். ‘நீ உன்னி. எனது சகோதரன். அதனால் என்ன இப்போது?’ இல்லை, நான் கேரளா செல்லுவதாக இல்லை என்று முடங்கினேன். மகனுடன் இங்கே கிளம்பி வந்தேன். எப்படியும் அவள் இன்றோ நாளையோ செத்துவிடுவாள். நான் அவளுடைய சடலத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு நிற்க முடியாது.

நான் ஒட்டுமொத்தமாக மனித வாழ்வைப் பற்றி யோசிப்பது போல அதில் இறங்கிய போது நல்ல உறக்கம் வந்துவிட்டது.

“உன்னியே!“

“ம்?“

“உனக்கு கய்த சக்க பிடிக்குமா?“

“ம்.“

“உன் பையில் நீ அதை வைத்திருக்கிறாய். எடுத்துச் சாப்பிடு!“ இளமையும் அழகின் ததும்பலுமாக நின்ற மஞ்சுவின் புன்னகையைத் தாங்க முடியாமல் திடுக்கிட்டு எழுந்தேன். இந்த முறை அவளுடைய மார்புப் பிளவு தெரிந்ததா என்று தெரியவில்லை.

அரிந்து கொடுக்கப்பட்டிருந்த அன்னாசிப் பழத்துண்டுகளைத் தின்றவாறு சாலையில் நடந்தேன். உப்பும் மிளகாய்த் தூளும் இடப்பட்டிருந்தது. ஒரு வேலிப் புதர்ச்செடியில் முளைத்து வருகிற ஒரு முள் பழம். உலகில் இதைக் காட்டிலும் சுவையான ஒன்று இருக்கவே முடியாதெனச் சத்தியம் செய்வேன்.

நடுரோட்டில் நின்று ஒரு லாரியை வழிமறித்தேன். லாட்ஜுக்கு வந்துசேர்ந்தேன். போன் வந்துவிட்டிருக்கிறது.

செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள்.