மலையைக் கடந்து வந்த கரடி – ஆலிஸ் மன்ரோ

by இல. சுபத்ரா
0 comment

ஃபியோனா தன் பெற்றோரின் இல்லத்தில் வசித்துவந்தாள். அவளும் க்ராண்ட்டும் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுவந்த நகரத்தில் அது இருந்தது. மிகப்பெரிய அவ்வீடு, கூண்டுவடிவ வெளித்தள்ளிய ஜன்னலைக்கொண்டிருந்தது. விரிப்புகள் தரையில் கலைந்து கிடக்க, காபிக் கோப்பைகளின் அடிவளையங்கள் மேஜையின் மேற்பூச்சில் தழும்புகளாய்ப் படிந்திருக்கும் அவ்வீட்டினை ஒழுங்கற்றதும் சொகுசானதும் எனக் க்ராண்ட் எப்போதும் கருதியிருக்கிறான். ஐஸ்லாந்திய குணாதிசயங்கள் கொண்ட அவளது அம்மா, ததும்பும் வெண்கூந்தலையும் தீவிர இடதுசாரி அரசியலையும் வரித்தவர். நகரின் முக்கியமான இதய சிகிச்சை மருத்துவரான அவளது அப்பாவிற்கு, மருத்துவமனையில் நல்ல மரியாதை இருந்த போதிலும் வீட்டில் பணிவுடன் இருப்பதையே விரும்பினார், மனைவியின் நீண்ட விசித்திரமான வசைபாடல்களைத் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாமல் புன்னகையுடன் கேட்டுக்கொள்வார். ஃபியோனா தனக்கென்று ஒரு காரும் சில காஷ்மீரி ஸ்வெட்டர்களும் கொண்டிருந்தாள் எனினும் எந்த மகளிர் சங்கத்திலும் அவள் உறுப்பினராகவில்லை. அவளது அம்மாவின் அரசியல் செயல்பாடுகளே அதற்குக் காரணமாக இருக்கக்கூடும். இல்லையென்றாலுமே அவளுக்கு அதிலெல்லாம் அதிகம் ஆர்வம் இல்லை.

”நான்கு கிளர்ச்சித் தளபதிகள்” பாடலையோ சில நேரங்களில்  ”சர்வதேசம்” பாடலையோ ஒலிப்பதிவுக் கருவியில் மிகச் சப்தமாகப் பாடிப் பதிவுசெய்ய அவள் விரும்பினால் என்றாலும், மகளிர் சங்கங்களை அவள் வெறும் நகைச்சுவையாகத்தான் கருதினாள், அரசியலும் அவளுக்கு அப்படித்தான். யாரேனும் விருந்தினர் வந்தால் இவ்வாறு பாடுவதன் வாயிலாக அவர்களைச் தர்மசங்கடப்படுத்த முடியும் என அவள் கருதினாள். சுருள் முடியும் சோபையான தோற்றமும் கொண்ட அயல்நாட்டினன் ஒருவன் அவளை நேசித்தான்- ஆனால் அவள் அவனை விஸிகோத் எனக் கூறிவிட்டாள். வேறு சில மரியாதைக்குரிய பதற்றமான இடையீட்டாளர்களுக்கும் அதே நிலைதான். அவள் அவர்கள் அனைவரையும் கேலி செய்தாள், க்ராண்ட்டையும்கூட. அவனது சிறுநகரத்தின் சொல்லாடல்களைக் கிண்டலாகத் திரும்பச் சொல்வாள். குளிர்ந்த, பிரகாசமான ஒரு நாளில் ஸ்டான்லி துறைமுகக் கடற்கரையில் வைத்து அவள் அவனிடம் காதலைச் சொன்னபோது அவள் ஏதோ விளையாடுகிறாள் என்றுதான் நினைத்தான். அவர்களது முகத்தில் மணற்துகள்கள் அழுத்திக்கொண்டிருக்க அலைகள் அவர்களது காலடியில் சரளைக்கற்களைக் கொணர்ந்து குவித்துக்கொண்டிருந்தன. 

“அது மகிழ்ச்சியானதாக இருக்கும் என நீ நினைக்கிறாயா?” என ஃபியோனா உரத்துக் கேட்டாள். “நாம் திருமணம் செய்துகொண்டாள் அது மகிழ்ச்சியைத் தரும் என நீ நினைக்கிறாயா?” அவன் அதை ஏற்றுக்கொண்டு ஆமாம் எனப் பதிலுக்குக் கத்தினான். அவன் ஒருபோதும் அவளிடமிருந்து விலக விரும்பியதில்லை. அவளிடம் வாழ்க்கைக்கான ஒளி இருந்தது. 

வீட்டிலிருந்து அவர்கள் கிளம்பிய அந்த நொடியில்தான் ஃபியோனா சமையலறையின் தரையில் ஒரு கறையைக் கவனித்தாள். அன்று காலையில் அவள் அணிந்திருந்த மட்டமான, வீட்டுக்குள் அணிந்துகொள்கிற கறுப்புக் காலணியிலிருந்து அது அங்கு பட்டிருக்க வேண்டும். வழக்கமான எரிச்சலுடனும் கோபத்துடனும் ”இப்படிக் கறைபடுத்துவதை அது நிறுத்திவிடும் என நான் நினைத்தேன்” எனக் கூறியபடி வண்ண மெழுகுப் பென்சிலின்  கறைபோல் தரையில் படிந்திருந்த அதனைத் துடைத்தாள். 

தன்னுடன் இப்போது அதை எடுத்துக்கொள்ளாததால் இனிமேல் அவள் இவ்வாறு செய்ய வேண்டியதே இருக்காது என்றும் குறிப்பிட்டாள். 

“இனி எப்போதுமே நான் கிளம்புவதற்குத் தயாராக இருப்பேன் என நினைக்கிறேன்” என்றாள் அவள். “அல்லது, பாதி தயாராக. ஒரு விடுதியில் தங்கியிருப்பது போல.“

பயன்படுத்திய பழைய துணியை அலசியவள், கைகழுவும் தொட்டியின் அடியில் இருந்த அலமாரியின் கதவினுள்ளே அதனைக் காய வைத்தாள். அடுத்ததாகத் தனது பொன்-பழுப்பு நிற, ரோமக் கழுத்துப்பட்டை கொண்ட மேலங்கியையும் பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட இளமஞ்சள் கால்சட்டையையும் அணிந்துகொண்டாள். கழுத்தை மூடிய கம்பளிச்சட்டைக்கு மேல் அவள் இவற்றை அணிந்தாள். உயரமான, குறுகிய தோள்களைக்கொண்ட எழுபது வயதுப் பெண் ஃபியோனா. என்றாலும், நிமிர்ந்த நேர்த்தியான தோற்றமும் நீண்ட கால்களும் பாதங்களும் மென்மையான மணிக்கட்டும் கணுக்கால்களும் கொண்ட அவளுக்கு, சற்று சிரிப்பை வரவழைக்கும் சிறிய காதுகள். வெள்ளெருக்கம்பஞ்சை ஒத்த அவளது கூந்தல் இளம்பொன்னிறத்திலிருந்து வெண்ணிறமாகியிருந்தது. அந்த மாற்றம் எப்போது நிகழ்ந்ததென்பதை க்ராண்டால் துல்லியமாக நினைவுகூர முடியவில்லை. அவளது அன்னையைப் போல இப்போதும் அவள் அதனைத் தோள்வரை தழுவவிட்டிருந்தாள். (ஒரு சிறிய நகரத்தில் மருத்துவர் ஒருவரின் வரவேற்பாளராகப் பணியாற்றிய க்ராண்ட்டின் அம்மாவை அதுதான் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஃபியோனாவின் வீட்டின் நிலவரத்தைவிட, அவளது அம்மாவுடைய நீண்ட வெண்முடிகள்தான் அரசியல் பற்றியும் அணுகுமுறைகள் பற்றியும்  அவள் அறிந்துகொள்ள வேண்டியவை பற்றி எச்சரித்தது.) மற்றபடி, நேர்த்தியான வடிவமும் நீலமணிக் கண்களுமாக ஃபியோனா அவளது அன்னைக்கு எந்த விதத்திலும் தொடர்பற்றிருந்தாள். சற்றே வளைந்த உதடுகளைக்கொண்ட அவள் அவற்றைச் சிவப்புப்பூச்சு கொண்டு மிகைப்படுத்தியிருந்தாள். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்முன் அவள் கடைசியாகச் செய்துகொள்கிற காரியமாக அதுதான் எப்போதும் இருக்கும்.

அன்று அவள் கச்சிதமாக அவளைப் போலவே தோற்றமளித்தாள்- வெளிப்படையானவளாகவும் குழப்பம் மிகுந்தவளாகவும் – அவளின் இயல்புப்படி இனிமையானவளாகவும் சிடுசிடுப்பு மிக்கவளாகவும். 

ஒரு வருடத்திற்கு முன்னதாக வீடெங்கும் சிறிய சிறிய மஞ்சள் காகிதக் குறிப்புகள் ஒட்டப்பட்டிருப்பதை க்ராண்ட் கவனித்தான். அது ஒன்றும் புதிதல்ல. விஷயங்களைக் குறித்து வைக்கிற பழக்கம் ஃபியோனாவிற்கு எப்போதுமே உண்டு –  வானொலியில் அவள் கேட்ட ஒரு புத்தகத்தின் பெயரை, அன்றைய நாளில் முடித்தாக வேண்டிய வேலைகளை.. அவளது காலை நேர அட்டவணைகூட ஒட்டப்பட்டிருக்கும். அதன் துல்லியம் எப்போதும் அவனை மர்மமாகவும் நெகிழ்வாகவும் உணரச் செய்யும்: 7  யோகா. 7:30 – 7:45 பற்கள், முகம், கூந்தல். 7:45 – 8:15 நடை. 8:15 க்ராண்டும் காலை உணவும். 

ஆனால் இந்தப் புதிய குறிப்புகள் மாறுபட்டவை: சமையலறையின் இழுப்பறை மேலே – வெட்டுக்கருவிகள், பாத்திரம் துடைக்கும் துண்டுகள், கத்திகள் என எழுதி ஒட்டப்பட்டிருக்கும். வெறுமனே அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறதென அவள் அறிந்துகொண்டால் போதாதா? 

இன்னும் மோசமான விஷயங்கள் நடந்தேறின. நகரத்திற்குச் சென்றவள் ஒரு தொலைபேசிச் சாவடியிலிருந்து க்ராண்டிற்கு அழைத்து வீட்டிற்கு எப்படி வருவதென வினவினாள். சமவெளியைக் கடந்து வனத்திற்குத் தனது வழக்கமான நடைக்குச் சென்றவள், வேலிப்பாதையின் வழியாக தேவையில்லாமல் நீண்டதூரம் நடந்து வீடு வந்தாள். வேலிகள் எப்போதும் எங்கேனும் இட்டுச் சென்றுவிடும் என்பதை அடையாளமாகக் கொண்டு அவள் வீடு வந்ததாகக் குறிப்பிட்டாள். வேலியைப் பற்றிச் சொல்லும்போது, அதைக் கண்டறிவதே ரொம்பச் சிரமமாக இருந்தது என ஒரு நகைச்சுவையைப் போலச் சொன்னாள். ஆனால் தொலைபேசி எண்ணை நினைவு வைப்பதில் அவளுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை. 

“பயப்படுவதற்கு எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை” என்று கூறிய அவள், “நான் கொஞ்சம் கொஞ்சமாக என் நினைவுகளை இழக்கப்போகிறேன் என நினைக்கிறேன்” என்றாள். 

தூக்க மாத்திரை எதுவும் எடுத்துக்கொள்கிறாளா என அவன் கேட்டான்.

“இருக்கலாம், ஆனால் நினைவில்லை” என்றாள். பிறகு இத்தனை அலட்சியமாக பதில் சொல்வதற்கு மன்னிப்புக் கோரியவள், “அப்படி எதுவும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. இனிதான் நான் மாத்திரைகள் சாப்பிட வேண்டும் போல. விட்டமின் மாத்திரைகள்” என்றாள். 

விட்டமின்கள் உதவவில்லை. வாசலில் நின்றபடி தான் எங்கே செல்ல நினைத்தோம் என்பதை நினைவுகூர முயல்வாள். காய்கறிகள் வைத்துவிட்டு அடுப்பைப் பற்றவைக்கவோ காபிப் பாத்திரத்தில் நீர் ஊற்றவோ மறந்துபோனாள். நாம் எப்போது இந்த வீட்டிற்கு வந்தோம் என க்ராண்டிடம் வினவினாள். 

“கடந்த வருடமா அதற்கு முந்தைய வருடமா?” 

“பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு” என்றான் அவன்.

”அவள் எப்போதுமே சற்று இப்படி இருந்திருக்கிறாள்” என க்ராண்ட் மருத்துவரிடம் சொன்னான். ஃபியோனாவின் ஆச்சரியங்களும் மன்னிப்புக்கோரல்களும் இப்போதெல்லாம் வழக்கமான ஒரு நடைமுறையாக மாறி வருவதை அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மருத்துவரிடம் க்ராண்ட் சொல்ல முயன்றதில் தோல்வியே எஞ்சியது. ஏதோ ஒரு எதிர்பாராத சாகசத்திற்குள் கால் இடறி குதித்துவிட்டது போலவும் அல்லது விரைவிலேயே க்ராண்ட்டும் வந்து இணைந்துகொள்வான் என அவள் நம்பிய ஒரு விளையாட்டிற்குள் இருப்பதுபோலவும். 

“ம், சரி. ஆரம்பத்தில் அது சில விஷயங்களில் மட்டும் இருக்கலாம். நம்மால் கணிக்க முடியாது. இல்லையா? சிதைவடைவதில் இருக்கிற ஒழுங்கின் அடிப்படையைக் காணும்வரை நம்மால் எதையும் சொல்லமுடியாது.” 

சற்றுக் காலத்திலேயே அதற்கு என்ன பெயர் சூட்டுவதென்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லாமல் ஆகிவிட்டது. அதன்பிறகு ஃபியோனா தனியே வெளியே செல்லாத போதும், ஒருமுறை வணிக வளாகத்தில் க்ராண்ட் வேறுபுறம் திரும்பியிருந்தபோது காணாமல் போய்விட்டாள். பல கட்டடங்கள் தாண்டி சாலையின் நடுவே நடந்துகொண்டிருந்த அவளை ஒரு காவலன் கண்டு நிறுத்தினான். அவளது பெயரை அவன் கேட்டபோது உடனே சொல்லிவிட்டாள். அடுத்து அவன் அவளிடம் பிரதம மந்திரியின் பெயரைக் கேட்டான். 

“இதுகூட உனக்குத் தெரியவில்லையென்றால், இளைஞனே, நீ இப்படிப்பட்ட பொறுப்பான பணியில் இருக்கவே கூடாது” என்றாள். 

சிரித்தான் அவன். ஆனால் அதன்பிறகு, போரிஸையும் நடாஷாவையும் அவன் பார்த்திருக்கிறானா என வினவுகிற தவறைச் செய்துவிட்டாள் அவள். இரு ரஷ்ய வேட்டை நாய்கள் அவை. பலகாலம் முன்பு ஒரு நண்பருக்கு உதவும்பொருட்டு அவற்றைத் தத்தெடுத்து பின் அவற்றின் வாழ்காலம் முழுவதும் தன்னை அவற்றிற்கு அர்ப்பணித்துக்கொண்டாள். தற்போது அவை இறந்துவிட்டன. அவற்றை அவள் தத்தெடுத்துக்கொண்டது அவளுக்குக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை என்பதை அவர்கள் கண்டறிந்த காலத்திலாய் இருக்கலாம். அவளது குழாய்களில் ஏதோ அடைப்போ திருகலோ – க்ராண்ட்டிற்கு இப்போது நினைவில்லை. பெண்களின் இதுசார்ந்த உறுப்புகளைப் பற்றிச் சிந்திப்பதை அவன் எப்போதுமே தவிர்த்து வந்திருக்கிறான் அல்லது அது அவளது அம்மா இறந்த பிறகாகவும் இருக்கலாம். அந்த நாய்களின் நீண்ட கால்களும் வழுவழுப்பான ரோமமும் ஒடுங்கிய நளினமான பிடிவாதமான முகமும் அவற்றை அவள் நடைக்கு அழைத்துச்சென்ற போது மிகப் பொருத்தமாக இருந்தன. அப்போது பல்கலைக்கழகத்தில் (அரசியல் கறையைத் தாண்டி அவனது மாமனாரின் பணம் அவனை அங்கு வரவேற்றிருந்தது) தன் முதல் வேலையில் சேர்ந்த க்ராண்ட்டும்கூட ஃபியோனாவின் இதுபோன்ற ஒரு விசித்திரமான விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு போஷித்து பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட தேர்வாகவே சிலரால் கருதப்பட்டிருக்கலாம். நல்லவேளையாக பல காலங்களுக்கு அவன் அதனை உணர்ந்திருக்கவில்லை. 

டிசம்பர் மாதத்தில் மெடோலேக்கில் யாரும் அனுமதிக்கப்படக் கூடாதென்கிற சட்டம் இருந்தது. நிறைய உணர்வுரீதியான ஆபத்துகளுக்குச் சாத்தியமானதாக இருந்தது விடுமுறைக் காலம். எனவே அவர்கள் அந்த இருபது நிமிடப் பயணத்தை ஜனவரியில் மேற்கொண்டனர். அவர்கள் நெடுஞ்சாலையை அடையும் முன்னதாக கிராமத்துச் சாலை தற்போது உறைந்துவிட்டிருந்த சதுப்புப்பகுதிக்குள் கடந்து சென்றது. 

ஃபியோனா, “அட, நினைவிருக்கிறது” என்றாள்.

”நானும் அதைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றான் க்ராண்ட். 

“அது நிலவொளியில் என்பது மட்டும்தான் வேறுபாடு” என்றாள்.

பௌர்ணமிகளில் கருமைபடிந்த பனியில் அவர்கள் பனிச்சறுக்கிற்குச் சென்ற காலங்கள் பற்றிக் குறிப்பிடுகிறாள். கடும்பனிக்காலத்தில் மட்டுமே ஒருவர் வரமுடிகிற இந்த இடத்தில்  குளிரில் மரக்கிளைகளும்கூட நடுங்குவதை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். 

அவளால் அதனை இவ்வளவு சரியாகவும் விரிவாகவும் நினைவுகூர முடிகிறதென்றால், அவள் குறித்து வருந்துவதற்கு எதுவும் இல்லையோ? ஏன் வாகனத்தைத் திருப்பி வீட்டிற்கே செலுத்திவிட முடியவில்லை அவனால்?

மேற்பார்வையாளர் அவனுக்கு விளக்கிய இன்னொரு விதிமுறையும் இருந்தது. புதிதாகக் குடிவருகிறவர்களை முப்பது நாட்களுக்கு யாரும் வந்து பார்வையிடக்கூடாது. பலருக்கும் அங்கே தங்களை நிலைநிறுத்திக்கொண்டு இயல்பாக அந்தக் காலம் தேவைப்பட்டது. இந்த விதிமுறையைச் செயல்படுத்துவதற்கு முன்பாக அங்கே கெஞ்சல்களும் அழுகைகளும் ஆங்காரங்களும் நிரம்பியிருந்தன, விருப்பத்துடன் அங்கே வந்தவர்களும்கூட இதற்கு விதிவிலக்கில்லை. மூன்றாவது நான்காவது நாட்களிலேயே அவர்கள் அழத்தொடங்கி வீட்டிற்கு அழைத்துச்செல்லச் சொல்லிக் கெஞ்ச ஆரம்பித்துவிடுவார்கள். இதனைக் கண்டு சில உறவினர்கள் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றால் நிலைமை முன்பைவிட மோசமாகத்தான் ஆகும். ஆறு மாதங்களிலோ அல்லது சில வாரங்களிலேயோ மீண்டும் அத்தனை பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். 

”ஆனால் முதல் மாதத்தில் அவர்களை அவர்கள் போக்கிலேயே விடும்போது அமைதியானவர்களாக மகிழ்ச்சியானவர்களாக ஆகிவிடுகிறார்கள்” என்றார் மேற்பார்வையாளர். 

பல வருடங்களுக்கு முன்பு திரு. ஃபகூஹரைக் காணும்பொருட்டு இவர்கள் மெடோலேக்கிற்குச் சிலமுறை வந்திருக்கிறார்கள்தான். மணமுடிக்காத அந்த முதிய விவசாயி அவர்களுக்கருகே வசித்துவந்தவர். முழுமையடையாத செங்கல் வீடொன்றில்தான் அவர் இந்நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தனியாக வசித்துவந்தார். ஒரு குளிர்சாதனப்பெட்டியும் தொலைக்காட்சிப் பெட்டியும் கூடுதலாகச் சேர்ந்ததைத் தவிர தொடக்கத்திலிருந்த அதன் தோற்றத்தில் எவ்வித மாற்றமுமே நிகழவில்லை. ஆனால் அதன்பிறகு அது இல்லாமலாகி, டொரொண்டோவிலிருந்து வார இறுதிகளில் மட்டும் வந்து தங்கும் ஒரு குடும்பத்தினரின் பகட்டான தோற்றம்கொண்ட மாளிகையாக மாறிவிட்டிருந்தது. இந்நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பிறகுதான் உருவாகியிருந்தபோதும் பழைய மெடோலேக்கும் அப்படித்தான் இல்லாமலாகிவிட்டிருந்தது. குவிமாடம் கொண்ட இந்தப் புதிய கட்டடம் விலாசமானதாய் இருந்தது, அதன் காற்றில் மெல்லிய இனிய பைன் மணம் கமழ்ந்தது. நடைபாதையினோரம் இருந்த பெரிய பெரிய மண்பாண்டங்களில் பசுஞ்செடிகள் அடர்த்தியாக முளைத்து எழுந்திருந்தன. 

என்றபோதிலும், அவளை நேரில் பார்க்காமல் கழிக்க வேண்டியிருந்த அந்த நீண்ட ஒரு மாதம் முழுவதும் அவன் பழைய மெடோலேக்கில்தான் ஃபியோனாவைக் கற்பனை செய்துகொண்டான். ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் அழைத்த அவன் க்றிஸ்டி என்கிற செவிலியுடன்தான் உரையாட விரும்பினான். இவனது தொடர்ச்சியான அழைப்புகளைக் கண்டு அவள் சற்றே ஆச்சரியமடைந்தது போல் தோன்றினாலும், அவன் பேச நேர்ந்த வேறெந்த செவிலியையும்விட இவளே முழுமையான அறிக்கைகளை அவனுக்குச் சொன்னாள்.

முதல் வாரத்தில் ஃபியோனாவிற்கு ஜலதோசம் பிடித்தது என்று சொன்ன அவள் புதிதாக இங்கே வருகிறவர்களுக்கு இது சகஜம்தான் என்றும் கூறினாள். ”உங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லத் தொடங்குவதைப் போலத்தான்” என்றும் கூறினாள். ”முற்றிலும் புதிதான கிருமிகளுக்கு மத்தியில் விடப்பட்டிருப்பதால் ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு நிறையத் தொந்தரவுகள் ஏற்படத்தான் செய்யும்” என்றாள் க்றிஸ்டி.

அதன்பிறகு ஜலதோஷத்திலிருந்து தேறினாள். மாத்திரைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கே வந்த புதிதில் இருந்த அளவிற்கு இப்போது அவளுக்குக் குழப்பங்கள் இல்லை. (இப்போதுதான் மாத்திரைகள் பற்றியும் குழப்பங்கள் பற்றியும் முதன்முதலாக க்ராண்டிடம் சொல்கிறார்கள்.) அவளது பசி சீராக இருந்தது, சூரிய ஒளிபடும் கண்ணாடி அறையில் அமர விரும்பினாள். போலவே, அவள் சில நட்புகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறாள் என்றாள் க்றிஸ்டி.

யாரேனும் தொலைபேசினால் இயந்திரமே பதில் சொல்லும்படி செய்தான். வெளியில் அவர்கள் எப்போதேனும் சந்தித்துக்கொண்ட நபர்கள், அண்டைவீட்டார் இல்லை, இவர்களைப் போலவே பணிஓய்வு பெற்று கிராமத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசித்த அவர்கள் அவ்வப்போது சப்தமின்றி வெளியேயும் சென்றனர். இப்போது ஃபியோனாவும் இவனும்கூட அதுபோன்ற ஒரு பயணத்தில் இருப்பதாகத்தான் அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். உடற்பயிற்சிக்காக க்ராண்ட் பனிச்சறுக்கு மேற்கொண்டான். நீலவிளிம்புகளாலான பனி அலையை எல்லையாகக்கொண்ட ஒரு கிராமத்தின் அருகே வானத்தை வெளிர்சிவப்பாக்கியபடி சூரியன் கீழிறங்குவதைப் பார்த்தபடி, வீட்டிற்குப் பின்புறமிருந்த வெளியில் அவன் திரும்பத் திரும்பப் பனியில் சறுக்கினான். அதன்பிறகு, இருண்டுகொண்டிருக்கும் வீட்டிற்குத் திரும்புகிற அவன் தொலைக்காட்சியில் செய்திகளை ஓடவிட்டபடி இரவுணவைத் தயாரிப்பான். பொதுவாக அவர்கள் இருவரும் இணைந்துதான் இரவுணவைத் தயாரிப்பார்கள். ஒருவர் பானங்களையும் ஒருவர் கனலையும் ஆயத்தமாக்கியபடி அவனது வேலையைப் பற்றியும் (பழம்பெரும் நார்ஸ் ஓநாய்கள் – குறிப்பாக உலகத்தின் முடிவில் ஒடினை விழுங்குகிற மதிப்புமிக்க ஃபென்ரிர் ஓநாய்- பற்றி அவன் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதிவந்தான்.) ஃபியோனா அன்று என்ன வாசித்தாள் என்பது பற்றியும் உரையாடுவார்கள். ஒரே மாதிரியான அந்த நாளில் அவர்கள் தனித்தனியாக உணர்ந்த மாறுபட்ட வண்ணங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். அவர்களுக்கிடையேயான உயிரோட்டம் ததும்பும் மிக நெருக்கமான தருணங்கள் அவை. உறங்கும்முன் படுக்கையில் உணரும் ஐந்து அல்லது பத்து நிமிட இனிமையான தருணங்களும் இருக்கத்தான் செய்தன. பெரும்பாலும் அவை கலவியில் முடியாவிட்டாலும் கலவிக்கான சாத்தியங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை என்னும் நம்பிக்கையை அளித்துவந்தன. 

கனவில், சக ஊழியன் ஒருவனிடம் ஏதோ ஒரு கடிதத்தைக் காண்பிக்கிறான் க்ராண்ட். அவன் சமீபத்தில் அதிகம் சிந்தித்திராத ஒரு பெண்ணின் அறைத்தோழியிடம் இருந்து வந்திருந்த அது விழுமிய ரீதியானதாகவும் வெறுப்பாலானதாகவும் குறைகூறி அச்சுறுத்துவதாகவும் இருந்தது. மிக கண்ணியமாகச் சமீபத்தில் அவளிடமிருந்து விலகியிருந்த அவன் அதன்மூலம் பிரச்சினைகள் ஏதும் வருமென்று எண்ணியிருக்கவே இல்லை. ஆனால் அவள் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தது குறித்தெல்லாம் விலாவாரியாக அதில் எழுதப்பட்டிருந்தது.

சக ஊழியன் ஒரு நண்பனைப் போலத்தான் தோன்றினான். வீட்டிற்கு வந்தவுடன் கழுத்துப்பட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு வெளியேறி, தன் அலுவலகத்திற்கோ வகுப்பிற்கோ வரும் போதையூட்டும் இளம்பெண்ணுடன் எங்கோ ஒரு மெத்தையில் கிடந்தபடி கஞ்சாவையும் தூபத்தையும் நுகர்கிற கணவர்களில் ஒருவனாகத்தான் அவன் இருந்தான். ஆனால் இப்போது அவன் மாற்றிப் பேசினான். 

”நான் சிரிக்கவில்லை,” என்றான் அவன் க்ராண்டிடம். அவன் சிரிக்கிறான் என்றே க்ராண்ட் நினைக்கவில்லை. 

“நானாக இருந்தால் ஃபியோனாவை இதற்குத் தயார்படுத்தத்தான் முயல்வேன்” என்றான் அவன். 

இதைக் கேட்டு ஃபியோனாவைக் காண மெடோலேக்கிற்குச் – பழைய மெடோலேக்கிற்கு- செல்கிற க்ராண்ட் தனது வகுப்பறைக்குள் நுழைகிறான். அவன் பாடத்தைத் தொடங்குவதற்காக எல்லோரும் அங்கே காத்திருக்கிறார்கள். உயரமான கடைசி வரிசையில் உணர்ச்சிகளற்ற முகத்துடன் கருப்பாடை அணிந்து துக்கம் அனுஷ்டிக்கிற தோற்றத்தில் சில பெண்கள் அமர்ந்திருந்தனர். கசப்பு மண்டும் தங்களது முறைப்பை அவனை விட்டு விலக்காத அவர்களில் யாருமே அவன் நடத்திய எதையும் பொருட்படுத்தவோ குறிப்பெடுக்கவோ இல்லை. 

எதனாலும் பாதிக்கப்படாதவளாக ஃபியோனா முதல் வரிசையில் அமர்ந்திருந்தாள். “அடச்சே,” என்ற அவள், “இந்த வயதுப் பெண்கள் எப்படித் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம் என்பது பற்றித்தான் எப்போதும் பேசிக்கொண்டு திரிவார்கள்” என்றாள். 

கனவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டவன் மாத்திரைகளை உண்டுவிட்டு எது உண்மை எது கனவு என்பதைப் பிரித்தறிய முயன்றான். 

ஒரு கடிதம் வரத்தான் செய்தது. அவனது அலுவலகக் கதவில் “எலி” என்று எழுதப்பட்ட போது, தன்மேல் ஒரு பெண் தீவீரமாக மோகம் கொண்டிருந்ததாக அவன் ஃபியோனாவிடம் கூறினான். கிட்டத்தட்ட கனவில் சொன்னதைப்போன்ற எதோ ஒன்றைத்தான் அவள் சொன்னாள். சக ஊழியன் இவ்விஷயத்தில் இருந்திருக்கவில்லை, யாரும் தற்கொலை செய்துகொள்ளவும் இல்லை. க்ராண்ட் அவமானப்படுத்தப்படவும் இல்லை. இரண்டாண்டுகளுக்குப் பிறகு அது நிகழ்ந்திருந்தால் எதிர்கொண்டிருக்கக் கூடியதைவிட சுலபமாகவே பிரச்சினைகள் தீர்ந்தன. என்றாலும் விஷயம் வெளியே பரவியது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு வெகு சிலரே இவர்களை அழைத்திருந்தனர். புத்தாண்டின் மாலையைத் தனியே கழித்தனர். மது அருந்திய க்ராண்ட், ஃபியோனாவிற்கு ஒரு புதிய வாழ்க்கையை உறுதியளித்தான். அதற்கான தேவை எதுவும் இருந்திருக்கவேயில்லை, கடவுள் புண்ணியத்தில் பாவமன்னிப்புக் கோருகிற தவறையெல்லாம் செய்துவிடவில்லை அவன்.

ஒரு பெண் பித்தனின் (கனவில் வந்த அந்தச் சக ஊழியன் அடைந்தவற்றுள் பாதி வெற்றியைக்கூட அடைந்திடாத க்ராண்ட் தன்னை அப்படித்தான் அழைத்துக்கொள்ள வேண்டுமாயின்) வாழ்வில் பெருந்தன்மைக்கோ தியாகத்திற்கோ இடம் இருப்பதாக இதுவரை எங்கேயுமே சொல்லப்படவில்லை. ஒரு பெண்ணின் கர்வத்தையும் பலவீனத்தையும் அங்கீகரிக்கும் பொருட்டு, உள்ளுக்குள் உணராத போதும் சற்றே கூடுதலான அன்பை – இலேசான ஈடுபாட்டை – க்ராண்ட் காட்டியிருக்கிறான்தான். எல்லாவற்றிற்கும் பிரதியுபகாரமாகச் சுயமரியாதையைக் காயப்படுத்தியதாகவும் சுரண்டியதாகவும் சிதைத்ததாகவும் இப்போது குற்றப்படுத்தப்படுகிறான். ஃபியோனாவிற்குத் துரோகமிழைத்தது உண்மைதான். எத்தனையோ பேர் தங்கள் மனைவியை விட்டுவிட்டுப் போனதுபோல இவனும் போயிருந்தால் சரியாக இருக்குமோ? அவன் ஒருபோதும் அப்படி நினைத்ததில்லை. அவன் ஃபியோனாவுடன் படுப்பதை ஒருபோதும் குறைத்துக்கொள்ளவே இல்லை. ஓர் இரவுகூட வீட்டிலிருந்து வெளியே தங்கியதில்லை. சான் ஃப்ரான்சிஸ்கோவிலோ மனிடோலின் தீவின் ஒரு குடிலிலோ வார இறுதியைக் கழிக்கும் பொருட்டு அவளிடம் நீண்ட கதைகளைச் சொல்லியதும் இல்லை. தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகள் சமர்பித்து, குழுக்களில் பங்குபெற்று தன் தொழிலில் முன்னேறியவாறே இந்தப் போதைகளை அவன் இலாவகமாகக் கையாண்டான். வேலையையோ திருமணத்தையோ தூக்கி எறிந்துவிட்டு கிராமத்திற்குச் சென்று தச்சு வேலை செய்யவோ தேனீ வளர்க்கவோ அவன் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை. 

ஆனால் இறுதியில் அதுபோன்ற ஒன்றுதான் நடந்தேறியது. குறைவான ஓய்வூதியத்துடன் அவன் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டான். ஜார்ஜியன் விரிகுடாவிற்கு அருகில் உள்ள அந்தப் பெரிய வீட்டில் சில காலம் திகைப்பும் சிலகாலம் துறவு மனநிலையுமாக வசித்த ஃபியோனாவின் அப்பா இறந்தபிறகு அந்தப் பண்ணை வீடும் சொத்தும் அவளுக்கே வந்துசேர்ந்தன. அவர் பிறந்து வளர்ந்ததும் அங்கேதான்.

அது ஒரு புதிய வாழ்க்கை. ஃபியோனாவும் அவனும் அந்த வீட்டைச் செம்மைப்படுத்தினர். வயல்களின் ஊடாகப் பனிச்சறுக்க முடிந்தது. அதிகம் சகஜத்தன்மை கொண்டவர்கள் இல்லை எனினும் கொஞ்சம் கொஞ்சமாகச் சில நண்பர்களைக் கண்டடைந்தார்கள். மூச்சுமுட்ட வைக்கிற சல்லாபங்கள் இல்லை, இரவு விருந்துகளில் மேஜைக்குக் கீழே ஆண்களின் கால்சட்டைக்குள் நுழைகிற பெண்கால்கள் இல்லை. வலைவீசுகிற மனைவிகளும் இல்லை. 

குற்ற உணர்வு நீங்கி நிதானமாக யோசித்தபோதுதான் சரியான நேரத்தில் இது நடந்துவிட்டதென்பதை க்ராண்டால் புரிந்துகொள்ள முடிந்தது. பெண்ணியவாதிகளும் துயருற்றிருந்த அந்தப் புத்திகெட்ட பெண்ணும் அவளது நண்பர்கள் என்று அறியப்பட்ட கோழைகளும் சரியான நேரத்தில் அவனை வெளியேற்றி இருக்கிறார்கள். இன்னும் இன்னும் மோசமாகிக்கொண்டிருந்த, ஃபியோனாவையே விலையாகத் தர நேர்ந்திருக்க வாய்ப்புள்ள ஒரு சூழலிலிருந்து அவர்கள் அவனை வெளியேற்றி இருந்தார்கள். 

மெடோலேக்கிற்குத் திரும்பிச் செல்ல வேண்டிய அந்த முதல்நாளில் க்ராண்ட் அதிகாலையிலேயே எழுந்துகொண்டான். புதிய பெண்களைச் சந்திக்கத் திட்டமிட்ட அந்தப் பழைய நாட்களில் உணர்ந்தது போலவே உள்ளுக்குள் பரவசமாக உணர்ந்தான். அது காமம் சார்ந்ததென அறுதியிட்டுவிட முடியாது (அந்தச் சந்திப்புகள் சகஜமாகியிருந்த போது அதில் அது மட்டும்தான் எஞ்சியிருந்தது). அதில் ஒரு கண்டுபிடிப்பிற்கான – கிட்டத்தட்ட ஒரு ஆன்மீக அறிதல் – எதிர்பார்ப்பு இருந்தது. கூச்சமும் பணிவும் எச்சரிக்கையும்கூட.  

சாலையில் ஏராளமான பனி இருந்தது. ஆனால் பனிக்காலத்தின் தொடக்கத்தில் இருக்கிற கடினமான மின்னுகிற பனி உடைந்திருந்தது. சாம்பல் வானத்தின் கீழே குவியல் குவியலாகக் கிடந்த இந்தப் பனி குப்பை போல் தோற்றமளித்தது. மெடோலேக் நகருக்கு அருகே மலர் அங்காடி ஒன்றினைக் கண்டவன் ஒரு பெரிய பூங்கொத்தினை வாங்கிக்கொண்டான். இதற்குமுன் ஃபியோனாவிற்கு அவன் பூங்கொத்தே பரிசளித்ததில்லை. வேறு யாருக்குமே தந்ததில்லை. கேலிச்சித்திரங்களில் வரும் நம்பிக்கையற்ற ஒரு காதலன் போலவோ தவறிழைத்துவிட்ட ஒரு கணவன் போலவோ அவன் கட்டடத்திற்குள் நுழைந்தான். 

“அட, இவ்வளவு காலையிலேயே நார்சிஸஸ் பூக்களா! நீங்கள் நிறைய செலவு செய்திருக்க வேண்டும்” என்றாள் க்றிஸ்டி. அவனுக்கு முன்பாக முகப்புக்கூடத்தில் நடந்துசென்றவள் விளக்கை எரியச் செய்துவிட்டு ஜாடியைத் தேடினாள். மிகவும் பருத்திருந்த அந்த இளம்பெண் கூந்தல் தவிர்த்து மற்ற எதன் தோற்றம் குறித்தும் அக்கறை கொள்ளாதவள் போல் தோன்றினாள். பொன்நிறமான அது செழித்து அடர்ந்திருந்தது. சுவாரஸ்யமற்ற அந்த உடலுக்கும் முகத்துக்கும் மேலே, மதுவிடுதியில் காக்டெய்ல் பரிமாறுகிற அல்லது ஆடை கழற்றி நடனமாடுகிற பெண்ணிற்குரிய சிகையலங்காரம் போன்ற சொகுசுடன் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது அது. 

“அங்கே” முகப்பறையின் தூரத்தில் கைகாட்டினாள் க்றிஸ்டி, “கதவின் மேலேயே பெயர் எழுதப்பட்டிருக்கும்” என்றாள்.   

அதே போலவே நீலப்பறவைகளால் அலங்கரிக்கப்பட்ட பெயர்ப்பலகையில் அது காணப்பட்டது. கதவைத்தட்ட வேண்டுமா என யோசித்த அவன், கதவைத் தட்டிவிட்டு அதைத் திறந்து அவளது பெயர் சொல்லி அழைத்தான்.

அவள் அங்கே இல்லை. அலமாரி மூடியிருந்தது. படுக்கை கசங்கலின்றி இருந்தது. படுக்கைக்கு அருகிலுள்ள மேஜையிலும் கொஞ்சம் திசுத்தாள்கள் ஒரு டம்ளர் நீரையும் தவிர வேறொன்றுமில்லை. எந்தப் புகைப்படமோ சித்திரமோ புத்தகமோ பத்திரிகையோ இல்லை. அதையெல்லாம் அலமாரிக்குள் வைக்கவேண்டும் போல! 

செவிலியின் மேஜைக்குத் திரும்பச் சென்றான். ”இல்லையா?” என வினவிய க்றிஸ்டியின் ஆச்சரியம் செயற்கையாகத் தோன்றியது. கையில் பூக்களுடன் தயங்கி நின்றான். “சரி. சரி. நாம் அந்தப் பூங்கொத்தை இங்கே பொருத்தலாம்” என்றாள். பள்ளியின் முதல் நாளில் காணநேர்கிற ஒரு பின்தங்கிய குழந்தையைப் போல அவனை எண்ணியபடி பெருமூச்செறிந்தவாறே முகப்பறையைக் கடந்து பொதுவான சந்திப்பறை போன்ற விலாசமான கண்ணாடி அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள். சுவரையொட்டி சாய்வு நாற்காலிகளில் சிலர் அமர்ந்திருக்க, தரைவிரிப்புக்கு மேலே மையமாய்ப் போடப்பட்டிருந்த மேஜையைச் சுற்றி மற்றவர்கள் அமர்ந்திருந்தனர். யாருமே பார்ப்பதற்கு அவ்வளவு மோசமாக இல்லை. சக்கர நாற்காலி தேவைப்படும் அளவிற்கு உடல் நலிவுற்ற முதியவர்களாய் இருந்தபோதும் கண்ணியமாய் இருந்தனர். திரு. ஃபகூஹரைக் காண இவர்கள் வந்தபோது சில அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் காண நேர்ந்தது. தாடி வளர்ந்த சில மூதாட்டிகள், அழுகிய ப்ளம் போல வீங்கி வெளித்தள்ளிய கண் கொண்ட ஒருவன், தடுமாறுபவர்கள், தலை ஆடுபவர்கள், பைத்தியம்போல உளறுபவர்கள். ரொம்பவும் மோசமான நபர்களைக் களையெடுத்துவிட்டது போன்ற தோற்றம் இப்போது. 

“பார்த்தீர்களா?”, மென்மையான குரலில் வினவினாள் க்றிஸ்டி, “அமைதியாகச் சென்று அவளுக்கு ஹலோ மட்டும் சொல்லுங்கள். அதிர்ச்சியூட்டிவிட வேண்டாம். செல்லுங்கள்.”

சீட்டு விளையாட்டு நிகழ்ந்த மேஜைகளில் ஒன்றிற்கு நெருக்கமாக அமர்ந்திருந்த ஃபியோனாவின் பக்கவாட்டுத் தோற்றத்தை அவன் பார்த்தான். ஆனால் அவள் விளையாடவில்லை. அவளது முகம் சற்றே பூசினாற்போல் தெரிந்தது. இதற்கு முன்பு இல்லாததுபோல அவளது கன்னக்கதுப்பு வாயின் முனையை மறைத்திருந்தது. அவளுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்த ஆணின் விளையாட்டை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்க்கும் விதமாக அவன் சீட்டுகளைச் சாய்த்துப் பிடித்திருந்தான். மேஜைக்கு அருகே க்ராண்ட் சென்றபோது அவள் நிமிர்ந்து பார்த்தாள். மேஜையில் விளையாடிக்கொண்டிருந்த அனைவருமே, தொந்தரவு எதையும் அனுமதிக்க விரும்பாதவர்கள் போல, எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்தனர். ஆனால் ஃபியோனா தனது வெட்கம் கலந்த கவிழ்ந்த அமைதியான வசீகரமிக்க புன்னகையை அவனுக்குத் தந்தாள். நாற்காலியைப் பின்னால் தள்ளி எழுந்து சுற்றி வந்தவள் விரலினை வாயில் அழுத்திக்கொண்டாள். ”ப்ரிட்ஜ் விளையாடுகிறார்கள்- மிகத் தீவிரமாக. அதில் வெறித்தனமாக இருக்கிறார்கள்.” அவனிடம் பேசியவாறே காஃபி மேஜைக்கு அழைத்து வந்தாள்.

என் கல்லூரி நாட்களில் இதே போல் நான் சில காலம் இருந்ததை நினைவுகூர முடிகிறது. நானும் என் நண்பர்களும் வகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு பொது அறையில் அமர்ந்து புகைத்தபடி கொலைவெறியுடன் விளையாடுவோம்.

”நீங்கள் எதாவது சாப்பிடுகிறீர்களா? தேநீர் தரட்டுமா? இங்கே காஃபி அப்படி ஒன்றும் நன்றாயில்லை.” 

க்ராண்ட் ஒருபோதும் தேநீர் அருந்தியதில்லை. 

அவனால் அவளது இடையைச் சுற்றி அணைத்துக்கொள்ள முடியவில்லை. அவளது குரலிலும் சிரிப்பிலும் இருந்த ஏதோ ஒன்று – விளையாடிக்கொண்டிருந்தவர்களிடமிருந்தும் அவர்களது வெறுப்பிலிருந்தும் அவனைக் காத்து நிறுத்திய அந்த ஒன்று – அதை முடியாததாக்கியது.

”நான் உனக்குக் கொஞ்சம் பூக்கள் கொணர்ந்தேன்” என்றான். “அவை உனது அறையைப் பிரகாசமாக்கக்கூடும் என நினைத்தேன்.  ஆனால் நான் சென்றபோது நீ அங்கே இல்லை.” 

“ம்ம், இல்லை,” என்ற அவள், “நான் இங்கே இருந்தேன்” எனக் கூறியபடி மேஜையை நோக்கித் திரும்பினாள். 

“உனக்கு ஒரு புது நண்பன் கிடைத்திருக்கிறான்” என்றபடி அவள் அருகில் அமர்ந்திருந்த மனிதனை நோக்கித் தலையாட்டினான் க்ராண்ட். இப்படிச் சொல்வதற்கும் அந்த மனிதன் நிமிர்வதற்கும் சரியாக இருந்தது. அவன் நிமிர்ந்து நோக்குவதை உணர்ந்ததாலோ க்ராண்ட்டின் வார்த்தைகளாலோ ஃபியானோவும் அவனைத் திரும்பி நோக்கினாள். 

“அது ஆப்ரே” என்றாள். “சுவாரஸ்யம் என்னவென்றால் அவனைப் பல வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும். என் தாத்தா இரும்புப் பொருட்கள் வாங்குகிற கடையில் அவன் வேலை பார்த்தான். நானும் அவனும் எப்போதும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தபடியே இருப்போம். ஆனால் என்னிடம் நெருங்குவதற்கான தைரியத்தை கடைசி வரை அவன் அடையவே இல்லை. கடைசி வார இறுதியில்தான் அவன் என்னைப் பந்து விளையாட்டிற்கு கூட்டிச் சென்றான். ஆனால் அது முடிவதற்குள்ளாகவே என்னை அழைத்துச் செல்வதற்கு என் தாத்தா வந்துவிட்டார். என் தாத்தா பாட்டியைக் காண்பதற்காக நான் கோடை விடுமுறையில் அங்கே சென்றிருந்தேன்- அவர்கள் பண்ணை வீட்டில் வசித்தார்கள்.”

“ஃபியோனா, அவர்கள் எங்கே வசித்தார்கள் என்பது எனக்குத் தெரியும். நாம் அங்கேதான் வசிக்கிறோம், வசித்தோம்.”

“நிஜமாகவா?” என வினவியளின் கவனம் இங்கேயே இல்லை. தூரத்தில் சீட்டாடுகிற அவன் இவளுக்கு அதிகாரமிக்க கண் ஜாடைகளை அனுப்பிக்கொண்டிருந்தான்.

அவனுக்கும் க்ராண்டின் வயதோ அல்லது கொஞ்சம் கூடுதலோதான் இருக்கும். முரடான வெண்முடிக்கற்றை நெற்றியில் விழுந்திருக்க அவனது தோல் சொரசொரப்பாகவும் வெளிறியும் இருந்தது. வெண்மஞ்சள் நிறம் கொண்ட அது சிறுவனின் பழைய சுருக்கம் விழுந்த கையுறையைப்போல் இருந்தது. நீண்ட அவனது முகம் கம்பீரமாகவும் துக்கம் படிந்ததாகவும் இருக்க, வலிமைமிக்க ஊக்கமிழந்த ஒரு முதிய குதிரையின் சாயல் இருந்தது அவனிடம். ஆனால் ஃபியோனாவின் விஷயத்தில் அவன் ஊக்கம் இழந்ததாகத் தெரியவில்லை. 

புதிதாய்ப் பூரித்திருந்த முகத்தில் வெட்கம் படிய, “நான் போய்விடுவதுதான் நல்லது” என்றாள் அவள். “நான் அங்கே அமராமல் அவன் விளையாட முடியாதென நினைக்கிறான். இது வேடிக்கையானது, எனக்கு இப்போது அந்த விளையாட்டே தெரியாது. நான் இப்போது கிளம்பினால் நீங்கள் சமாளித்துக் கொள்வீர்கள்தானே? இது எல்லாமே உங்களுக்கு வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் எவ்வளவு சீக்கிரம் நாம் இதற்குப் பழகிவிடுகிறோம் என்பதை அறியும்போது நீங்கள் ஆச்சரியமடைந்துவிடுவீர்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஒரு சிலர் தங்களை மூடிமறைத்துக் கொள்வதுண்டுதான் – நாம் எல்லோரையுமே நம்மைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்க முடியாதில்லையா?”  

தன் நாற்காலிக்குள் மீண்டும் நுழைந்துகொண்டவள் ஆப்ரேயின் காதில் ஏதோ சொன்னாள். அவன் அவளது விரல்களை தன் கரத்தின் பின்புறத்தால் தட்டினான். 

க்றிஸ்டியைத் தேடிச்சென்ற க்ராண்ட் முகப்பறையில் அவளைப் பார்த்தான். ஆப்பிள், திராட்சை, பழரசங்கள் நிறைந்த குடுவைகளை ஒரு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டிருந்தாள் அவள். 

“வேறென்ன?” என்றாள் அவள். 

“நான் யார் என்பதாவது அவளுக்குத் தெரியுமா?” என்றான். அவனால் அதுகுறித்து முடிவுக்கு வரவே இயலவில்லை. அவள் விளையாட்டிற்காக அப்படிச் செய்திருக்கலாம். அப்படிச் செய்யக்கூடியவள்தான். புதிதாக அங்கே தங்குவதற்கு வந்தவர்களில் ஒருவன் இவன் என்பதுபோல இறுதியாக அவள் பேசிய பாசாங்கு அவளைக் காட்டிக்கொடுத்துவிட்டது. அது ஒருவேளை பாசாங்காக இருந்தால்..

“நீங்கள் ஒரு தவறான தருணத்தில் அவளைச் சந்தித்துவிட்டீர்கள், அவ்வளவுதான். அவள் விளையாட்டில் இருந்தாள்” என்றாள் க்றிஸ்டி.

“அவள் விளையாடவில்லையே?”

”ஆனால் அவளது நண்பன் விளையாடினானே? ஆப்ரே.”

”சரி.. யார் இந்த ஆப்ரே?” 

“அதுதான் அவன். ஆப்ரே. அவளது நண்பன். பழரசம் அருந்துகிறீர்களா?”

வேண்டாம் எனத் தலையாட்டினான் க்ராண்ட்.

“பாருங்கள், இதுபோன்ற உறவுகளை அவர்கள் இங்கே பெறத்தான் செய்கிறார்கள். சில காலங்களுக்கு அது நீடிக்கவும் செய்கிறது. ’சிறந்த நண்பன்’ என்பது போல. இதுவும் ஒரு காலம்தான்.”

”அவள் நிஜமாகவே என்னை மறந்திருக்கலாம் என்று சொல்கிறீர்களா?”

“இருக்கலாம். இன்று அப்படியிருக்கலாம். நாளை ஒருவேளை மாறலாம், நமக்குத் தெரியாதில்லையா? தொடர்ந்து இங்கே வந்து செல்லும்போது நீங்களே அறிந்துகொள்வீர்கள். இதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதை அறிவீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக இதைப் புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.” 

கொஞ்சம் கொஞ்சமாக. ஆனால் விஷயங்களில் அப்படி எந்த மாற்றமும் ஏற்படவுமில்லை, அதை ஏற்றுக்கொள்ள அவன் பழகவுமில்லை. ஃபியோனாதான் இவனைப் பழகிக்கொண்டதாகத் தோன்றியது, ஆனால் தனிப்பட்ட ஆர்வம்கொண்டு தொடர்ந்து அவளைப் பார்க்க வருகிற ஒரு பார்வையாளனாக மட்டுமே. அவளது பழங்கால நடத்தை விதிகளின்படி, தவிர்க்க வேண்டிய தொந்தரவென்றும் அவள் இவனைக் கருதலாம். அவள் அவனிடம் ஒருவகையான ஒட்டுதலற்ற, வெளியாளுடனான அன்பையே வெளிப்படுத்தினாள். அது அவனை அவளிடம் அந்த முக்கியமான வெளிப்படையான கேள்வியைக் கேட்பதிலிருந்து தடுத்து வைத்தது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இவன்தான் அவளது கணவன் என்பது அவளுக்கு நினைவிருக்கிறதா? அது போன்ற ஒரு கேள்வி அவளைத் தர்மசங்கடப்படுத்தும் என அவன் எண்ணினான் – அவளை எண்ணி அல்ல, அவனை எண்ணி.

களைக்கொல்லிகளையும் ’அதுபோன்ற வேறு அனைத்துப் பொருட்களையும்’ விவசாயிகளுக்கு விற்கிற ஒரு பிரதிநிதியாக ஆப்ரே பணியாற்றியதாக க்றிஸ்டி க்ராண்டிடம் கூறியிருந்தாள். முதுமையோ ஓய்வோ அடைவதற்கும் முன்பாகவே அவன் ஒரு வித்தியாசமான சிக்கலை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

“அவனது மனைவிதான் அவனைப் பார்த்துக்கொள்கிறாள். ஒரு சிறிய ஓய்வின் பொருட்டு தற்காலிகமாக அவனை இங்கே விட்டிருக்கிறாள். இப்போது அவளது சகோதரிக்காக ஃப்ளோரிடாவிற்குச் சென்றிருக்கிறாள். உங்களுக்குத் தெரியுமா, அவள் ரொம்பவும் சிரமப்பட்டுவிட்டாள். அவனைப் போன்ற ஒருவனுக்கு இப்படி ஒரு பிரச்சினை வருமென யாரும் நினைத்திருக்கவே மாட்டார்கள் – விடுமுறைக்காக வெளியே சென்றிருந்தபோது எதோ ஒரு பூச்சியினால் கடும் காய்ச்சல் தொற்றியிருக்கிறது. பிறகு அவன் கோமா நிலைக்குச்சென்று இன்று இருக்கிற நிலையில் விட்டிருக்கிறது.” 

பெரும்பாலான பின்மதியங்களில் இந்த ஜோடியைச் சீட்டாட்ட மேஜையில் பார்க்க முடியும். ஆப்ரே தடித்த விரல்களுள்ள பெரிய கைகளைக் கொண்டிருந்தான். சீட்டுகளைக் கையாளுவதில் அவனுக்குச் சிரமம் இருந்தது. அவனுக்காகச் சீட்டுகளைக் கலைத்துத் தந்த ஃபியோனா அவனது விரல்களிலிருந்து அது நழுவுகின்ற சமயங்களில் சட்டெனச் செயல்பட்டு அதை நேராக்கினாள். தூரத்திலிருந்து அவளது துள்ளலான நகர்வுகளையும் புன்னகை ததும்பும் மன்னிப்புக்கோரல்களையும் க்ராண்ட் பார்த்தபடியிருப்பான். அவளது முடிக்கற்றை அவனது முகத்தில் படும்போது கணவனுக்குரிய முகச்சுழிப்பை ஆப்ரே வெளிப்படுத்துவதையும் அவன் காண முடிந்தது. அவள் நெருக்கமாய் இருக்கிற தருணங்களில் ஆப்ரே அவளைத் தவிர்க்க முயன்றான். ஆனால் க்ராண்ட் அங்கே வருவதற்கான உரிமையை ஒப்புக்கொள்வதன் அடையாளமாக அவள் அவனை நோக்கிப் புன்னகைப்பதையோ நாற்காலியைத் தள்ளி எழுந்துவந்து தேநீர் தருவதையோ பார்க்கும்போது அவனது முகம் சோகத்தையும் திகைப்பையும் அணிந்துகொள்ளும். சீட்டுகளைக் கையிலிருந்து நழுவவிட்டு ஆட்டத்தைக் கெடுத்துவிடுவான். உடனே ஃபியோனா பரபரப்பாகி அதையெல்லாம் சரிசெய்ய வேண்டி வந்துவிடும்.

சீட்டாட்ட மேஜையில் இல்லாத சமயங்களில், ஃபியோனாவும் ஆப்ரேயும் முகப்புக்கூடத்தில் நடந்துகொண்டிருப்பதைக் காண முடியும். அவனது ஒரு கை, பதிக்கப்பட்டுள்ள நீள்கம்பியைப் பற்றியிருக்க, மறுகை ஃபியோனாவின் தோளையோ கரத்தையோ பிடித்திருக்கும். கட்டடத்தின் ஒருபுறம் இருக்கும் கண்ணாடி அறையிலிருந்து மறுபுறம் இருக்கும் தொலைக்காட்சி அறைக்குச் செல்வதற்கெல்லாம் சக்கர நாற்காலி இன்னமும் தேவைப்பட்டதென்றாலும், ஃபியோனா இப்படி அவனைச் சக்கர நாற்காலியில் இருந்து சற்று விடுவித்ததை செவிலியர்கள் பெரிய அதிசயம் என்றே குறிப்பிட்டனர். 

கண்ணாடி அறையில் எப்போதுமே இந்த ஜோடி வெப்பமண்டலத் தோற்றம் கொண்ட அடர்த்தியான பசுஞ்செடிகளின் மத்தியில்தான் அமர்ந்திருக்கும், பந்தலுக்குக் கீழேயும்கூட. எப்போதேனும் க்ராண்ட் பசுஞ்செடிகளுக்கு மறுபுறம் நின்று அவர்கள் பேசுவதைக் கவனிப்பதுண்டு. இலைகளின் சலசலப்பும் தெறிக்கின்ற நீரோசையும் கலந்து ஃபியோனாவின் மென்மையான குரலும் சிரிப்பும் ஒலிக்கும். பிறகு சப்தமான சிரிப்பும். முன்பிருந்தது போல இப்போது ஆப்ரேவின் குரல் ஒலிப்பதில்லை என்றபோதும் அவனால் பேச முடிந்தது.  இப்போது அவன் ஏதோ சொல்வதுபோலத் தெரிகிறது. தடிமனான ஈரசைச் சொற்கள். கவனம், என் அன்பே, அவன் இங்கிருக்கிறான்.

புதன்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் மட்டும் அவளைப் பார்க்கச் செல்லும்படி தன்னை க்ராண்ட் சிரமப்பட்டு பழக்கிக்கொண்டான். சனிக்கிழமைகளில் விடுமுறை நாளின் சலசலப்பும் பரபரப்பும் நிறைந்திருக்கும். கும்பல் கும்பலாகக் குடும்பங்கள் வந்தன. பெரும்பாலும் அம்மாக்கள்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு; அவர்கள்தான் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டிருப்பார்கள். ஆண்கள் பயந்ததுபோலும் பதின்வயதினர் அடக்கப்பட்டது போலவும் காட்சியளித்தனர். எந்தக் குழந்தைகளோ பேரக்குழந்தைகளோ ஆப்ரேவைக் காண வந்ததாகத் தெரியவில்லை. சீட்டாட்ட மேஜைகளை ஐஸ்கிரீம் கொண்டாட்டங்கள் எடுத்துக்கொள்வதால் அவர்கள் சனிக்கிழமை அங்கு வருவதில்லை. கண்ணாடி அறை வேறெதையும்விட அவர்கள் இருவரது நெருங்கிய உரையாடல்களுக்கென பெயர் பெற்றிருந்தது. இப்போது அது மூடப்பட்டிருக்கும் ஃபியோனாவின் அறைக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கலாம். பூட்டியிருந்த அதன் வெளியேயே சற்று நேரம் நின்று அதில் ஒட்டப்பட்டிருந்த டிஸ்னி-பாணி பெயர்ப்பலகையை ஆத்திரம் நிறைந்த வெறுப்புடன் நோக்கிக்கொண்டிருந்த க்ராண்டால் அதைத் தட்டாமல் இருக்க முடியவில்லை.  

அவர்கள் ஆப்ரேயின் அறையில் இருக்கலாம். ஆனால் அது எங்கே இருக்கிறதென்பது அவனுக்குத் தெரியவில்லை. மேலும் மேலும் அந்த இடத்தை அறிந்துகொள்ள முயன்று மேலும் மேலும் தாழ்வாரங்களையும் சாய்தளங்களையும் இருக்கைகளையும் அவன் அறிந்துகொண்டாலும் இன்னமும் அவற்றுள் தொலைந்துபோக வாய்ப்புள்ளவனாகத்தான் இருந்தான். ஒரு சனிக்கிழமையில் ஒரு ஜன்னலின் வழியாக ஃபியோனாவைப் பார்த்தபோது – அது ஃபியோனாவாகத்தான் இருக்க வேண்டும் – பனி அகற்றப்பட்ட ஒரு பாதையில் அவள் ஆப்ரேவைச் சக்கர நாற்காலியில் வைத்து நகர்த்திக்கொண்டிருந்தாள். ஊரில் பல்பொருள் அங்காடியில் அவன் பார்க்கிற பெண்கள் போல, மட்டமான ஒரு கம்பளித் தொப்பியும் நீல, ஊதா சுருள்களால் அலங்கரிக்கப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்தாள். ஒரே அளவுடைய பெண்களது ஆடைகளைச் சரியாகப் பிரித்துத் தருவதில் அவர்கள் கவனம் செலுத்தியிருக்காமல் இருக்கக்கூடும், அந்தப் பெண்களுக்கும் அவர்களது ஆடைகள் நினைவில் இருக்கப் போவதில்லையே! அவர்கள் அவளது கூந்தலையும் கத்தரித்திருந்தார்கள். தேவதை போன்ற அவளது ஒளிவட்டமே நீங்கியிருந்தது. 

வழக்கம்போல் சீட்டாட்டங்கள் நிகழ்ந்தபடியும் கைவினைப் பொருட்கள் அறையில் பெண்கள் பட்டுப்பூக்களையும் அலங்கார பொம்மைகளையும் உருவாக்கிக்கொண்டுமிருந்த ஒரு வழக்கமான புதன்கிழமையில் ஆப்ரேயையும் ஃபியோனாவையும் அவன் சந்தித்தான். தன் மனைவியுடனான சுருக்கமான நட்பார்ந்த பித்துப்பிடிக்கும் உரையாடலை அவன் மேற்கொள்ள வாய்த்தது – “உனது முடியை ஏன் அவர்கள் வெட்டிவிட்டார்கள்?” என அவன் அவளிடம் கேட்டான். 

தலைமேல் கைவைத்து அதைச் சோதித்த ஃபியோனா, “ஏன்? நான் அதற்கு வருந்தவேயில்லை” என்றாள். 

முதன்முதலில் க்ராண்ட் ஆங்லோ-சாக்ஸன் இலக்கியமும் ஆங்கில இலக்கியமும் கற்பித்தபோது வழக்கமான மாணவர்களே வகுப்பிற்கு வந்தனர். ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு அவனால் ஒரு மாற்றத்தை உணர முடிந்தது. திருமணமான பெண்கள் கல்லூரிக்குத் திரும்பச் செல்ல ஆரம்பித்தனர். ஒரு வேலைக்கோ அல்லது இப்போதிருப்பதைவிட நல்ல வேலைக்கோ தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வதற்காக இல்லை, வழக்கமான வீட்டு வேலைகளுக்கும் பொழுதுபோக்கிற்கும் மாற்றாக இன்னும் ஆர்வமூட்டும் எதையேனும் சிந்திப்பதற்கு வேண்டித்தான் அது. அவர்களது வாழ்வை வளப்படுத்திக்கொள்வதற்காக. அப்பாடத்தை அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களையும் அது இயல்பாகவே உள்ளடக்கிக்கொண்டது. தினந்தோறும் அவர்கள் சமைத்துப்போட்டுப் படுக்கையைப் பகிர்ந்துகொண்ட ஆண்களைவிட இந்த ஆண்கள் புதிதானவர்களாகவும் விரும்பத்தக்கவர்களாகவும் தோன்றினர்.

க்ராண்டின் பாடத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள் ஏற்கெனவே ஸ்காண்டிநேவியன் இலக்கியத்தில் அறிமுகம் உடையவர்களாகவோ, வேக்னர் அல்லது வரலாற்று நூல்கள் மூலமாக நார்ஸ் புராணத்தை அறிந்தவர்களாகவோ இருக்கலாம். அவன் செல்டிக் மொழியைக் கற்பிப்பதாக எண்ணியவர்களும் உண்டு, அவர்களுக்கு செல்டிக்கைச் சார்ந்த எல்லாமுமே எதோ ஒரு மர்மமான கவர்ச்சியை அளித்தன. அப்படிப்பட்டவர்களிடம் நேர்மையாகவே அவன் கூறிவிடுவான். 

“அழகான மொழியொன்றைக் கற்க வேண்டுமென நினைத்தால் ஸ்பானிஷ் கற்றுக்கொள்ளுங்கள். மெக்ஸிகோவிற்குச் செல்லும்போது அது உங்களுக்கு உபயோகப்படும்.”

சிலர் அவனது எச்சரிக்கையை ஏற்றுக்கொண்டு வெளியேறிவிட்டனர். வேறுசில பெண்களோ அவனது குரலின் கட்டாயப்படுத்தலைத் தனிப்பட்ட வகையில் தீவிரமாக எடுத்துக்கொண்டு மிகத் தீவிரமாக உழைத்து, அவனது  அலுவலகத்திற்குள்ளும் திருப்தியான ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் தங்களது முதிர்ச்சியால் விளைந்த ஆச்சரியமூட்டும் இணக்கத்தின் மலர்தலையும் ஒப்புதலுக்கான நடுங்கும் நம்பிக்கையையும் கொணர்ந்தனர்.  

ஜாக்வி ஆடம்ஸ் என்கிற ஒரு பெண்ணை அவன் தேர்ந்தெடுத்தான். ஃபியோனாவிற்கு எதிர்ப்பதமாக அவள் இருந்தாள் – குட்டையாக, குண்டாக, கரிய கண்களுடன், உணர்ச்சிமிக்கவளாக. முரணாக, முன்பின் அறியாதவளும்கூட. அவளது கணவனுக்குப் பணிமாறுதல் ஆகும்வரை ஓராண்டிற்கு இந்தத் தொடர்பு நீடித்தது. அவளது காரில் அவர்கள் விடைபெற்றுக்கொண்டபோது கட்டுப்படுத்த முடியாமல் ஜன்னி வந்ததுபோலக் குலுங்கி அழுதாள் அவள். அவனுக்குச் சிலமுறை கடிதங்களும் எழுதினாள். ஆனால் அவை உணர்ச்சிமிக்கவையாகத் தோன்றியதால் எப்படி பதில் எழுதுவதென அவனுக்குத் தெரியவில்லை. பதில் எழுதுவதற்கான காலத்தை அவன் நழுவவிட்டுக்கொண்டே வந்தபோது எதிர்பாரா மாயம்போல, ஜாக்விக்கு மகள் வயது இருக்கக்கூடிய ஒரு பெண்ணுடன் அவனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. 

அவன் ஜாக்வியுடன் ஆர்வமாக இருந்தபோது கிறுகிறுக்கும்படியான ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தது. நீண்ட கூந்தலுடைய, செருப்பணிந்த பெண்கள் அவன் அலுவலகத்திற்குள் நுழைந்து உடலுறவுக்குத் தயாரென வெளிப்படையாக அறிவித்தனர். ஜாக்வியுடன் பழகும்போது தேவைப்பட்ட கவனமான முன்னெடுப்புகளும் மென்மையான உணர்வுகளுமெல்லாம் மலையேறியிருந்தன. எல்லோரையும் போலவே அவனையும் ஒரு சூறாவளி தாக்கியது. உணர்ச்சிமயமான காட்சி அரங்கேற்றங்களும் அவதூறுகளும் வெடித்துக் கிளம்பின, ஆனால் ஒருவகையில் அதெல்லாம் நல்லதாகத்தான் போயிற்று. தண்டனைகள் வழங்கப்பட்டன, வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். வேலையிழந்தவர்கள் அதைவிடச் சிறிய, கூடுதல் சகிப்புத்தன்மை கொண்ட கல்லூரிகளிலோ தனியார் கற்பித்தல் மையங்களிலோ பணியில் சேர்ந்தனர். இதனால் விட்டுச்செல்லப்பட்ட அவர்களது மனைவியர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, தங்களது கணவர்களை மயக்கிய இளம்பெண்களின் ஆடையையும் காமம் சார்ந்த அலட்சிய மனோபாவத்தையும் அணிந்துகொண்டனர். கணித்துவிட முடிகிறவையாய் இருந்த அலுவலகக் கொண்டாட்டங்கள் இரகசியச் சுரங்கங்களாய் ஆகின. ஸ்பானிஷ் ஃப்ளூ போன்ற ஒரு பெருந்தொற்று பரவியது. இம்முறை தொற்றினால் பாதிக்கப்படவே பலரும் விரும்பினர். பதினாறிலிருந்து அறுபது வயதிற்கிடையிலான வெகுசிலரே மீந்திருக்க விரும்பினர். 

அது கொஞ்சம் மிகைப்படுத்தல் என்பது உண்மைதான். ஃபியோனாவிற்கு விருப்பம் இருந்தது. க்ராண்டும் அதிக உணர்ச்சிவயப்படவில்லை. வாழ்வின் நலன் சார்ந்து ஒரு மாபெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பதாக அவன் உணர்ந்தான். பன்னிரண்டு வயதிற்குப் பின்பு ஒருபோதும் இல்லாதவாறு சற்றே சதை போட்டிருப்பதாக உணர்ந்தான். ஒரே நேரத்தில் இரண்டு படிகள் ஏறினான். அலுவலக ஜன்னலூடாகத் தெரிந்த மேகங்களுக்கிடையேயான போட்டியை, பனிக்கால சூரிய அஸ்தமனத்தை,  அண்டை வீட்டாரின் வரவேற்பறை, திரைச்சீலைகளுக்கிடையே ஒளிரும் பழமையான விளக்கின் ஒளியினை, மாலையில் பனிச்சறுக்கிய மலையிலிருந்து வீடு செல்ல விரும்பாமல் குழந்தைகளிடும் கூச்சலைப் புதிதாக இரசித்தான். அடுத்த கோடையில் அவன் பூக்களின் பெயர்களைக் கற்றுக்கொண்டான். தனக்கு மரணதண்டனை அளித்த ராஜா எரிக் ஃப்லடேக்ஸின் மீது கவிஞன் ஒருவன் பாடிய கம்பீரமும் கோரமுமான ஹேவ்யுலேஸ்ன் (Höfudlausn) பாடலை வகுப்பறையில் ஒப்புவித்தான். அவனது, குரலற்ற மாமியார்தான் அவனுக்கு அதனைப் பயிற்றுவித்திருந்தாள் (அவளுக்குத் தொண்டையில் புற்று இருந்தது).

ஐஸ்லாண்டிக் மொழியை ஃபியோனா ஒருபோதும் கற்றுக்கொள்ளவேயில்லை, அம்மொழியில் இருந்த – க்ராண்ட் பயிற்றுவித்த ஆய்வுசெய்த – கதைகளை ஒருபோதும் அவள் மதித்ததுமில்லை. அதன் நாயகர்களை அவள் ’முதிய ஞ்சால்’ என்றோ ‘பழைய ஸ்னோர்ரி’ என்றோ அழைத்தாள். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அவள் இந்த நாட்டின் மீது கொஞ்சம் ஆர்வம்கொண்டு சுற்றுலாக் கையேடுகளைப் பார்க்க ஆரம்பித்தாள். வில்லியம் மோரிஸ், ஆடன் போன்றோரின் பயணங்களைப் பற்றி வாசித்தாள். அங்கு செல்லவெல்லாம் அவள் திட்டமிடவில்லை. நாம் அறிந்த, விரும்பிய, ஏங்கிய ஆனால் சென்று பார்க்க முடியாத ஏதேனும் ஒரு இடம் அங்கு இருக்கலாம் என்றாள். 

என்றாலும் அடுத்தமுறை மெடோலேக்கிற்குச் சென்ற போது ஐஸ்லாந்திற்குச் சென்ற ஒரு பெண் பிரயாணியால் வரையப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புத்தகத்தை ஃபியோனாவிற்காக எடுத்துச் சென்றான். அது ஒரு புதன்கிழமை. சீட்டாட்ட மேஜைக்கு அவளைக் காணச் சென்றபோது அவள் அங்கே இல்லை. 

”அவள் அங்கு இல்லை. அவளுக்கு உடல்நலமில்லை” என்று அவனை அழைத்தாள் ஒரு பெண். அவளது குரல் சுய பிரக்ஞை மிகுந்ததாகவும், இவன் அவளை அறியாவிட்டாலும் அவன் இவளை அறிவாள் என்கிற பரவசம் மிகுந்ததாகவும் ஒலித்தது. ஃபியோனாவைப் பற்றி, ஃபியோனாவின் வாழ்க்கை பற்றி இவன் அறிந்ததைவிட அதிகமாக அறிந்திருக்கிறோம் என்பதனால் வந்த மகிழ்வாகவும் அது இருக்கலாம்.

“அவனும் இங்கு இல்லை” என்றாள் கூடுதலாக.

அவன் க்றிஸ்டியைத் தேடிச் சென்றபோது அவளுக்கு இவனிடம் உரையாட நேரம் இருக்கவில்லை. முதன்முதலாக வந்திருப்பது போல் தோன்றிய, அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அவள் பேசிக்கொண்டிருந்தாள். 

ஃபியோனாவைப் பற்றி அவன் வினவியபோது, “பெரிதாக ஒன்றுமில்லை” என்றாள். “அவள் இன்றைய நாளை படுக்கையில் கழிக்கிறாள். கொஞ்சம் மனமுடைந்திருக்கிறாள்.”

ஃபியோனா படுக்கையில்தான் நேராக அமர்ந்திருந்தாள். இதற்குமுன் இந்த அறைக்கு வந்த சமயத்தில் இது இப்படி உயர்த்த முடிகிற ஒரு படுக்கை என்பதை அவன் கவனித்திருக்கவில்லை. கழுத்து வரை மூடிய அங்கி ஒன்றை அணிந்திருந்த அவளது முகம் எதோ மாவு பூசியதுபோல வெளிறி இருந்தது. 

அருகில் சக்கர நாற்காலியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருக்கமாக அமர்ந்திருந்தான் ஆப்ரே. வழக்கமாக அவன் அணிகிற அசுவாரசியமான சட்டையைப் போலன்றி ஒரு மேலங்கியும் கழுத்துப்பட்டையும் அணிந்திருந்தான். வசீகரமான அவனது நூல்தொப்பி படுக்கையில் இருந்தது. எங்கோ ஒரு முக்கியமான காரியத்திற்காகச் சென்று வந்ததைப் போலத் தோன்றினான் அவன்.

அது என்னவாயினும், அவன் அதனால் மிகவும் சோர்ந்திருப்பதாகத் தோன்றியது. அவனது முகமும் துக்கம் பூண்டிருந்தது. துக்கம் மண்டிய முகத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்த அவர்களது முகத்தில், வந்திருப்பது அவனென்பதைப் பார்த்ததில் ஒரு ஆசுவாசம் படர்ந்தது. அவர்கள் நினைத்த ஆள் இல்லை அவன். ஒருவரது கரத்தை ஒருவர் பற்றியிருந்த அவர்கள் அதை விடுவித்துக்கொள்ளவில்லை. 

மெத்தையிலிருக்கும் தொப்பி. மேலங்கியும் கழுத்துப்பட்டையும்.

ஆப்ரே எங்கேயும் சென்று வந்திருக்கவில்லை. அவன் எங்கே சென்று வந்தான் அல்லது யாரைப் பார்த்து வந்தான் என்பதல்ல விஷயம். அவன் எங்கே போகிறான் என்பதுதான் விஷயம். 

ஃபியோனாவின் மற்றொரு கரத்தின் அருகே படுக்கையில் புத்தகத்தை வைத்தான் க்ராண்ட். 

”இது ஐஸ்லாந்தைப் பற்றியது. இதைப் பார்க்க உனக்குப் பிடிக்கும் என நினைத்தேன்” என்றான். 

“ஏன், நன்றி,” என்ற ஃபியோனா புத்தகத்தைப் பார்க்கவில்லை.

“ஐஸ்லாந்து” என்றான் அவன்.

அவளும் “ஐஸ்லாந்து” என்றாள். சொல்லின் முதல்பகுதியில் ஆர்வம் தொனித்தது போல் தோன்றினாலும் மறுபகுதி உணர்வற்று ஒலித்தது. என்னவாயினும், தனது தடித்த கரத்தினை அவளது கரத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முயலும் ஆப்ரேவை நோக்கி அவள் தனது கவனத்தைத் திருப்பியாக வேண்டும். ”என்ன இது?”என்றாள் அவள், “என்ன இது என் அன்பே”. இத்தனை மென்மையான பதத்தை அவள் இதற்கு முன் பிரயோகித்து க்ராண்ட் பார்த்ததேயில்லை. 

 “அட, வேண்டாம்,” என்ற அவள், “அட இங்கே பார்,” என்றபடி படுக்கைக்கு அருகில் இருந்த பெட்டியில் இருந்து டிஸ்யூக்களை எடுத்தாள், ஆப்ரே அழுதுகொண்டிருந்தான். “இங்கே, இங்கே” என்றபடி கொஞ்சம் க்ளீனெக்ஸ்களை எடுத்தவள் அவனது முகத்தில் அவற்றை வைத்து அலங்கோலமாகத் துடைத்தாள். க்ராண்டை நோக்கித் திரும்பியவள், “இங்கிருப்பவர்கள் நீங்கள் சொன்னால் கேட்பார்களா? நீங்கள் அவர்களுடன் பேசுவதைப் பார்த்திருக்கிறேன்” என்றாள் இரகசியமாக. 

எதிர்ப்பையோ சோர்வையோ வெறுப்பையோ வெளிப்படுத்தும்படியான ஒரு ஒலியை உண்டாக்கினான் ஆப்ரே. அவனது உடலின் மேற்பகுதி அவளைக் கட்டிக்கொள்ள விரும்புவது போல முன்னோக்கி உந்தியது. அவள் படுக்கையிலிருந்து பாதி வெளியே வந்து அவனைப் பற்றி அணைத்துக்கொண்டாள். அவளுக்கு உதவுவது சரியென க்ராண்டிற்குப் படவில்லை.

“அமைதி,” என்றாள் ஃபியோனா. “அமைதியாய் இரு என் இனியவனே. நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளலாம். சந்தித்தே ஆக வேண்டும். நான் உன்னை வந்து பார்ப்பேன். நீ என்னை வந்து பார்ப்பாய்.” 

அவள் மார்பில் முகம் புதைத்தபடி ஆப்ரே மீண்டும் அதே போன்ற ஒலியை ஏற்படுத்தினான். அங்கிருந்து வெளியேறுவதைவிட கண்ணியமாக வேறெதையும் செய்ய முடியும் என க்ராண்ட் கருதவில்லை. 

அவன் க்றிஸ்டியை நோக்கி ஓடியபோது, “அவனது மனைவி சீக்கிரம் இங்கே வரக்கூடாதா என்றிருக்கிறது எனக்கு” என்றாள் அவள். அவள் வந்து அவனை அழைத்துச்சென்றால் இந்தத் துயரக் காட்சிகளெல்லாம் ஒரு முடிவுக்கு வரும். நாங்கள் சீக்கிரம் இரவுணவைப் பரிமாற வேண்டும். இன்னமும் அவன் அங்கேயே இருந்தால் நாங்கள் எப்படி அவளை எதையாவது சாப்பிட வைப்பது?” 

”நான் இருக்க வேண்டுமா? என வினவினான் க்ராண்ட்.

”எதற்காக? அவள் ஒன்றும் நோயுறவில்லையே?”

 “அவளுக்குத் துணையாக” என்றான் அவன்.

க்றிஸ்டி மறுத்துத் தலையாட்டினாள். 

 “இதுமாதிரி விஷயங்களிலிருந்து அவர்களேதான் மீள வேண்டும். அவர்களுக்குப் பெரும்பாலும் குறுகிய கால மறதி உண்டு. சில நேரங்களில் அதுவும் நல்லதற்குத்தான்.” 

ஃபியோனாவின் அறைக்கு மீண்டும் செல்லாமலேயே க்ராண்ட் கிளம்பினான். காற்று இதமாகவும் காகங்கள் சப்தமிட்டுக்கொண்டும் இருப்பதையும் அவன் கவனித்தான். வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் வண்ணக்கோடுகளிட்ட கால்சட்டை அணிந்த ஒரு பெண் மடிக்கப்பட்ட சக்கர நாற்காலியை கார் டிக்கியிலிருந்து வெளியே எடுத்துக்கொண்டிருந்தாள். ஃபியோனா அவளது துயரிலிருந்து மீளவில்லை. உணவுகளைக் கைக்குட்டையில் மறைத்து வைத்துக்கொண்டு, உண்டுவிட்டது போல் நடித்தாளே தவிர உண்ணவில்லை. அவளுக்கு நாளில் இருமுறை சத்து பானம் வழங்கப்பட்டது– யாரேனும் அருகேயே அமர்ந்து அவள் அதை விழுங்குவதை உறுதிசெய்ய வேண்டியிருந்தது. தினசரி படுக்கையிலிருந்து எழுந்து உடைமாற்றிக்கொண்ட போதும் அதன்பிறகு அவள் செய்ய விரும்பியதெல்லாம் அறையிலேயே அமர்ந்திருப்பதுதான். க்றிஸ்டியோ, பார்வையிட வரும்போது க்ராண்டோ அவளைத் தாழ்வாரத்திற்கோ வெளியிலோ நடத்தி அழைத்துச்செல்லாவிடில் அவளுக்கு உடற்பயிற்சியே இருந்திருக்காது. அவளது கண்கள் அழுது அழுது சிதைந்தும் மங்கலாகவும் ஆகியிருந்தன. அவளது சட்டை பட்டன்கள் – அவளுடையதுதானா – அலங்கோலமாகப் பொருத்தப்பட்டிருக்கும். கூந்தலை வாரிக்கொள்ளாமலோ நகங்களைக் கத்தரிக்காமலோ இருக்கும் நிலைக்கு அவள் இன்னும் வரவில்லை. ஆனால் சீக்கிரமே அந்நிலைமை வரக்கூடும். அவளது தசைகள் வலுவிழந்து வருவதாகக் கூறிய க்றிஸ்டி, தன்னைக் கவனித்துக்கொள்ளாவிடில் நடப்பதற்கு உதவியாக அவளுக்கு ஏதேனும் கருவியை நாங்கள் தர வேண்டியிருக்கும் என்றாள். 

 “ஆனால் அப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் முழுவதுமாக அதையே சார்ந்திருக்கத் தொடங்கிவிடுவார்கள், அதிகம் நடக்கவே மாட்டார்கள். அதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அவளுக்கு நிறைய கவனம் செலுத்த வேண்டும். அவளை ஊக்கப்படுத்த முயலுங்கள்.” 

ஆனால் க்ராண்டிற்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவன்மீது ஃபியானோ ஒருவகை வெறுப்பை வளர்த்துக்கொண்டுவிட்டதைப் போலத் தோன்றியது. அவள் அதை மறைக்க முயன்றபோதும் இயலவில்லை. ஒருவேளை ஒவ்வொருமுறை அவனைப் பார்க்கும்போதும், ஆப்ரேவுடனான அவளது கடைசித் தருணங்களும் க்ராண்ட் அவளுக்கு உதவவில்லை என்பதும் அவளுக்கு நினைவுக்கு வந்திருக்கலாம்.

அவர்களது திருமணத்தைப் பற்றிச் சொல்வதில் எந்தப் பயனும் இருப்பதாக அவனுக்கு இப்போது தோன்றவில்லை. 

மேற்பார்வையாளர் தனது அறைக்கு அவனை அழைத்திருந்தாள். சத்துபானங்கள் வழங்கப்பட்டும்கூட ஃபியோனாவின் எடை குறைந்துகொண்டிருப்பதாக அவள் கூறினாள். 

“உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன், இங்கே முதல் தளத்தில் நெடுநாட்களுக்கு நாங்கள் யாரையும் படுக்கையில் வைத்து கவனித்துக்கொள்வதில்லை. அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போனால் தற்காலிகமாக நாங்கள் கவனித்துக்கொள்வதுண்டு. ஆனால் தன்னைக் கவனித்துக்கொள்ள முடியாத அளவிற்கும் நடமாட முடியாதவாறும் பலவீனமாக அவர்கள் மாறும்போது நாங்கள் மேல்தளங்கள் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும்.”

அந்த அளவிற்கு அவள் படுத்த படுக்கையாகிவிடவில்லையே என்றான் அவன். 

”இல்லை, தன் உடலிற்கு அவள் தெம்பூட்டிக்கொள்ளவில்லை என்றால் அந்த நிலைதான் நேரும். அந்த எல்லையில்தான் அவள் இப்போது இருக்கிறாள்.”

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் இரண்டாம் தளம் எனத் தான் நினைத்ததாக க்ராண்ட் கூறினான்.

“அதுவும்தான்” என்றாள் அவள். 

ப்ளகாக்ஸ் லேன் என்றழைக்கப்பட்ட தெருவில் பயணித்துக்கொண்டிருந்தான் க்ராண்ட். அங்கிருந்த வீடுகள் எல்லாமே ஒரே சமயத்தில் – முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு – கட்டப்பட்டதைப் போலத் தோன்றின. விசாலமானதாகவும் வளைந்தும் சென்ற அந்தச் சாலையின் ஓரத்தில் நடைபாதைகள் இருக்கவில்லை. ஃபியோனாவின் நண்பர்கள் தங்களுக்குக் குழந்தைகள் பிறந்தபோது இதுபோன்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். இன்னமும்கூட அவர்கள் இங்கே வசித்தனர். வாகன நிறுத்துமிடத்தின் கதவுகளில் கூடைப்பந்தாட்ட வளையங்கள் பொருத்தப்பட்டிருக்க பாதைகளில் மூன்று-சக்கர மிதிவண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. மலையடிவாரத்திலும் சில வீடுகள் இருந்தன. சாலைகளில் சக்கர அச்சுக்கள் பதிந்திருந்தன, ஜன்னல்கள் மென்தகடுகளால் அடைக்கப்பட்டோ வெளிறிய கொடிகள் தொங்கவிடப்பட்டோ இருந்தன. ஆனால் அந்த வீடுகள் புதியதாக இருந்தபோது குடிவந்து, பின் அங்கிருந்து கிளம்புவதற்கான தேவையோ வசதியோ ஏற்படாத சிலரால் முடிந்த அளவிற்கு அவை நன்றாகத்தான் பராமரிக்கப்பட்டிருந்தன. 

ஆப்ரேவிற்கும் அவனது மனைவிக்கும் சொந்தமானதென தொலைபேசிப் புத்தகத்தில் குறிக்கப்பட்டிருந்த ஒரு வீடும் அவற்றில் ஒன்றுதான். முன்பகுதியில் செவ்வகக் கற்கள் பதிக்கப்பட்டிருக்க அதன் ஓரங்களைப் பதுமராகப் பூக்கள் அலங்கரித்தன. சீனப் பூக்களைப் போலவே விறைப்பாக நின்ற அவை வெளிர்சிவப்பும் நீலமும் என மாறி மாறிப் பூத்திருந்தன.

ஆப்ரேவின் மனைவி அணிந்திருந்த வண்ணக் கால்சட்டையைத் தவிர அவள் பற்றி அவனுக்கு வேறெதுவும் நினைவில் இல்லை. சக்கர நாற்காலியை எடுப்பதற்காக அவள் காருக்குள் குனிந்தபோது அவளது சட்டையின் பின்நுனி அகலத் திறந்தது. ஒடுங்கிய வயிறும் அகன்ற புட்டமும் அவனது மனக்கண்ணில் தோன்றின. 

இன்று அவள் வண்ணக் கால்சட்டை அணிந்திருக்கவில்லை. பழுப்பு பெல்ட்டுடைய தளர்ந்த கால்சட்டையும் வெளிர்சிவப்பு ஸ்வெட்டரும் அணிந்திருந்தாள். வயிறு பற்றி அவன் நினைத்தது சரிதான், அவள் அணிந்திருந்த இறுக்கமான பெல்ட் அதை அவள் எடுத்துக்காட்ட விரும்பியதைத் தெரிவித்தது. அவள் அப்படிச் செய்யாமலேயே இருந்திருக்கலாம் – ஏனெனில் அதற்கு மேலேயும் கீழேயும் அவள் பிதுங்கிக்கொண்டிருந்தாள். 

கணவனைவிட அவள் பத்து அல்லது பன்னிரண்டு வயது இளையவளாக இருக்க வேண்டும். குட்டையான அவளது சுருள்முடி செயற்கையாகச் செந்நிறமாக்கப்பட்டிருந்தது. அவளுடைய நீலக் கண்கள்– ஃபியோனாவின் நீலத்தைவிட வெளிறிய நீலம் – ராபின் பறவையின் தட்டையான முட்டை அல்லது இரத்தினக்கல்லின் நீலம் – இலேசாகப் புடைத்துச் சாய்ந்திருந்தன. வால்நட்-வண்ண அலங்காரம் முகத்தின் சுருக்கங்களை வெளிப்படையாக்கியிருந்தது அல்லது அது அவளது ஃப்ளோரிடா பழுப்பாக இருக்கலாம். 

தன்னை எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வதெனத் தெரியவில்லை என்றான் அவன்.

“உங்கள் கணவரை நான் மெடோலேக்கில் பார்த்திருக்கிறேன். அங்கே நான் அடிக்கடி செல்வதுண்டு.”

கன்ன அசைவுகளில் ஆங்காரம் வெளிப்படும் விதமாக ”ஆமாம்” என்றாள் அவள். 

“இப்போது உங்கள் கணவர் எப்படி இருக்கிறார்?”

 “நன்றாக இருக்கிறார்” என்றாள் அவள். 

“என் மனைவியும் அவரும் ஒரு நெருங்கிய நட்பிற்குள் விழுந்திருந்தனர்.”

“அதைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.”

“உங்களிடம் ஒருவிஷயம் பற்றிப் பேசலாமா, ஒரு நிமிடம் ஒதுக்க முடியுமா?” 

 “உங்கள் மனைவியுடனான எந்த உறவையும் என் கணவர் ஆரம்பிக்கவில்லை. நீங்கள் அதைப் பற்றியா பேச விரும்புகிறீர்கள்? அவர் அவளை ஏமாற்றவில்லை. அவரால் அது முடியவும் முடியாது, அவர் அதைச் செய்யவும் மாட்டார். நான் கேள்விப்பட்டதென்னவோ வேறு.”

”இல்லை. இது அதைப் பற்றியே அல்ல. நான் எந்தப் புகார்களுடனும் இங்கு வரவில்லை” என்றான் க்ராண்ட். 

“ஓ, என்னை மன்னியுங்கள். நான் அப்படி நினைத்துவிட்டேன். தயவுசெய்து வீட்டிற்குள் வாருங்கள். வாசல் வழியாகக் குளிர் உள்ளே அறைகிறது. வெளியே தெரிவது போல காலநிலை அப்படி ஒன்றும் இதமாயில்லை இன்று.” 

வீட்டிற்குள் நுழைவதே ஒருவகையான வெற்றி போல் தோன்றியது அவனுக்கு. 

”நாம் சமையலறையில்தான் அமர வேண்டும். அங்கேதான் ஆப்ரே பேசுவதை என்னால் கேட்க முடியும்” என்றபடி வரவேற்பறையைக் கடந்து அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். 

முன் ஜன்னல் திரையின் இரண்டு அடுக்குகளை க்ராண்ட் காண நேர்ந்தது – ஒன்று பட்டுத்துணி, மற்றொன்று நூல்துணி – இரண்டுமே நீலநிறம். அதற்குப் பொருத்தமாக நீல நிற ஸோஃபாவும் அடிக்கிற வெளிர்நிறத்தில் தரைவிரிப்பும், நிறைய வண்ணக்கண்ணாடிகளும் ஆபரணங்களும். இதுபோன்ற முகத்திலறைகிற திரைச்சீலைகளை ஃபியோனா என்னவோ சொல்லி அழைப்பாள். அந்த வார்த்தையை வழக்கமாகப் பிரயோகிக்கும் பெண்கள் அதற்கு மோசமான பொருள் கொண்டிருந்தபோதும் ஃபியோனா அதை ஒரு நகைச்சுவை போல் சொன்னாள். ஃபியோனா ஒழுங்குபடுத்துகிற அறைகள் வெறுமையாகவும் பளிச்சென்றும் இருக்கும். இவ்வளவு சிறிய இடத்தில் இவ்வளவு அலங்காரப் பொருட்கள் குவிந்திருப்பதைக் கண்டு அவள் மிகவும் வருந்தியிருப்பாள். சமையலறைக்கு அருகில் இருந்த- கண்ணாடி அறை போன்ற ஓர் இடத்தில் இருந்து (பின்மதிய வெயிலைத் திரைச்சீலை கொண்டு மறைத்திருந்தார்களெனினும்) – தொலைக்காட்சிச் சத்தம் கேட்டது.  

ஃபியோனாவின் வேண்டுதல்களுக்கான பதில் சில அடிகளில் இருந்தது – எதோ ஒரு பந்து விளையாட்டைப் பார்த்தபடி. அவனது மனைவி அவனை உள்ளே எட்டிப் பார்த்தாள். 

“ஒன்றும் பிரச்சினை இல்லையே” என வினவியபடி கதவினைப் பாதி சாத்தினாள்.

“நீங்களும் ஒரு காஃபி அருந்துங்கள். ஒரு விளையாட்டுச் சேனலை கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ்ஸின் போது எங்கள் மகன் வாங்கித்தந்தான். அது இல்லாவிட்டால் நாங்கள் என்ன ஆவோம் எனத் தெரியவில்லை.” 

காஃபி இயந்திரம், மிக்ஸி, சாணை பிடிக்கும் கருவி என சமையலறை அலமாரிகளில் எல்லா வகையான பொருட்களும் இருந்தன. வேறு சில பொருட்களையோ, இன்னும் சிலவற்றின் பயன்களையோகூட  க்ராண்ட் அறிந்திருக்கவில்லை. அப்போதுதான் உறையிலிருந்து எடுக்கப்பட்டது போலவோ அல்லது தினமும் மெருகூட்டப்பட்டது போலவோ எல்லாமே புதிதாகவும் விலை உயர்ந்ததாகவும் தோன்றின. 

இவையெல்லாவற்றையும் பாராட்டுவதுகூட சிறந்த வழிதான் என க்ராண்ட் எண்ணினான். அவள் உபயோகித்துக்கொண்டிருந்த காஃபி தயாரிக்கும் இயந்திரத்தைப் பாராட்டியவன் அவனும் ஃபியோனாவும்கூட அது போன்ற ஒன்றை வாங்க எண்ணியிருந்ததாகக் கூறினான். இது முற்றிலும் பொய் – ஒரு சமயத்தில் இரண்டே இரண்டு கோப்பைக் காஃபியினைத் தயாரிக்கும் ஒரு ஈரோப்பிய இயந்திரத்தினையே அவள் உபயோகித்தாள்.

“இதை எங்களுக்கு அவர்கள் தந்தார்கள்,” என்றாள் அவள். “எங்களது மகனும் அவனது மனைவியும். அவர்கள் கம்லூப்ஸ் பி.சி.யில் வசிக்கிறார்கள். எங்களால் கையாள முடிவதைவிட அதிகமான பொருட்களை அவர்கள் எங்களுக்கு அனுப்புவார்கள். இதற்குப் பதிலாக எங்களை வந்து பார்த்துச் செல்வதற்கு அவர்கள் இந்தப் பணத்தைச் செலவழிக்கலாம்.” 

க்ராண்ட் தத்துவார்த்தமாகப் பதிலளித்தான், “தங்களது வாழ்க்கையை வாழ்வதற்கே அவர்களுக்கு நேரம் சரியாய் இருக்குமாய் இருக்கும்.”

”கடந்த பனிக்காலத்தில் ஹவாய்க்குச் செல்வதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருந்ததே. வேறு யாரேனும் நெருங்கிய உறவு எங்களுக்கு இருந்தால் பரவாயில்லை. இவன் மட்டும்தான் இருக்கிறான்.”

மேஜை மேல் இருந்த பீங்கான் மரம் ஒன்றின் வெட்டப்பட்ட கிளையிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு பழுப்பு-பச்சை வண்ண பீங்கான் கோப்பைகளில் காஃபியை ஊற்றினாள். 

”மனிதர்கள் தனிமையாக உணரத்தான் செய்கிறார்கள்.” இது அவனுக்கான நேரம் என க்ராண்ட் நினைத்தான். “அவர்கள் விரும்புகிற யாரேனும் ஒருவரைக் காண முடியாமல் போகும்போது அவர்கள் துக்கம் அடைகிறார்கள். எடுத்துக்காட்டாக எனது மனைவி ஃபியோனா.” 

“ஆனால் நீங்கள் அவளைச் சென்று பார்த்ததாகக் கூறினீர்களே?”

 “ஆமாம், நான் போகிறேன்” என்றான் அவன். “ஆனால் அது அல்ல விஷயம்.” 

அடுத்து அவன் தான் கேட்க வந்த உதவியை தைரியமாகக் கேட்கத் துணிந்தான். வாரம் ஒருமுறை ஆப்ரேவை மெடோலேக்கிற்கு அவளால் அழைத்துச் செல்ல முடியுமா? அது இங்கிருந்து சில மைல்கள் தூரத்தில்தான் இருக்கிறது அல்லது அந்த நேரத்தில் அவள் ஓய்வெடுக்க விரும்பினால் – க்ராண்ட் இந்தச் சலுகையைத் திட்டமிட்டிருக்கவே இல்லை. அதை அவன் உச்சரிப்பதை அவனே அதிர்ச்சியுடன் கேட்டான் – இவனேகூட ஆப்ரேவை அங்கு அழைத்துச் செல்வான், அதில் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவனால் அதைச் சமாளித்துக்கொள்ளவும் முடியும். அவன் பேசிக்கொண்டிருக்கும்போது தனது மூடிய வாயையும் அதனுள் ஒளிந்திருந்த நாக்கையும் எதோ ஒரு நம்ப முடியாத சுவையை அறிந்துகொள்ள முயல்வதுபோல அசைத்தாள். அவனது காஃபிக்காக பாலும் ஒரு தட்டில் இஞ்சி பிஸ்கட்டுகளும் கொணர்ந்தாள்.

தட்டை மேஜையில் வைத்தபடி, “வீட்டிலேயே செய்தது” என்றாள். விருந்தோம்பலைவிட அதில் சவாலே தொனித்தது. இருக்கையில் அமர்ந்து தன் காஃபிக்கும் பால் ஊற்றிக் கலக்கிற வரை அவள் எதுவும் பேசவில்லை.

அதன் பிறகு அவள் முடியாதென்றாள்.

“என்னால் அதைச் செய்ய முடியாது. அவனைத் தொந்தரவுக்குள்ளாக்க நான் விரும்பவில்லை என்பதே அதற்குக் காரணம்.”

“அது அவனைத் தொந்தரவுக்குள்ளாக்குமா?” கபடமின்றிக் கேட்டான் க்ராண்ட். 

“ஆமாம், நிச்சயமாக. நிச்சயமாக. அதற்கு வாய்ப்பே இல்லை. வீட்டிற்கு அழைத்துவந்த பிறகு மீண்டும் அவனை அங்கே கூட்டிச் செல்வதாவது! அது அவனைக் குழப்பிவிடும்.”

”அது வெறுமனே பார்வையிடுவதற்காக என்பதை அவன் புரிந்துகொள்ள மாட்டானா? அதற்கு அவன் பழகிக்கொள்ள மாட்டானா?”

அவன் ஏதோ அப்ரேவை அவமானப்படுத்திவிட்டது போல் எடுத்துக்கொண்ட அவள், “அவனுக்கு எல்லாமே புரியும். என்றாலுமே அது ஒரு தொந்தரவுதான். மட்டுமின்றி, நான் அவனைத் தயார்செய்து காருக்குள் ஏற்றவேண்டும். நீங்கள் நினைப்பது போல அது அவ்வளவு சுலபமானதல்ல. அவனது உருவம் மிகப் பெரியது. மிக மிகக் கவனமாக நான் அதைச் செய்ய வேண்டும். அவனது சக்கர நாற்காலியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இவை எல்லாம் எதற்காக? இதையெல்லாம் செய்வதாய் இருந்தால் அவனை இன்னும் மகிழ்விக்கக்கூடிய வேறு எதோ ஒரு இடத்திற்குத்தான் நான் அவனை அழைத்துச் செல்வேன்.”

”ஆனால் இதையெல்லாம் நானே செய்வதாக ஒப்புக்கொண்டாலும் கூடவா? உண்மையாகத்தான் சொல்கிறேன். நீங்கள் எந்த சிரமமும் படவேண்டி இருக்காது.” நம்பிக்கையும் நியாயமும் தொனிக்கிற குரலில் வினவினான் க்ராண்ட்.

“உங்களால் முடியாது” என்றாள் அவள் தட்டையாக. “உங்களுக்கு அவனைத் தெரியாது. நீங்கள் இதையெல்லாம் செய்வதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த எல்லாச் சிரமங்களுக்கும் பலனாக அவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது?”

ஃபியோனா என்று மீண்டும் சொல்லவேண்டிய அவசியம் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. 

 “அவனை ஏதேனும் வணிக வளாகத்திற்கு அழைத்துச் சென்றால் அது இன்னும் பொருளுள்ளதாக இருக்கும்” என்றாள் அவள். “அல்லது ஏரியில் இப்போது படகுச்சவாரிகள் ஆரம்பித்துவிட்டன. அதைச் சென்று பார்க்கிற வாய்ப்பேனும் அவனுக்குக் கிடைக்கும்.”

எழுந்துகொண்ட அவள் கை கழுவும் இடத்திற்கு மேலிருந்த ஜன்னலில் இருந்து சிகரெட்டையும் லைட்டரையும் எடுத்தாள். 

”நீங்கள் புகைப்பீர்களா?”

தனக்கு ஒன்று தருவதற்காகக் கேட்கிறாளா என்பது பற்றி யோசிக்காமலேயே ”வேண்டாம், நன்றி” என்றான்.

”எப்போதுமே புகைத்ததில்லையா? அல்லது விட்டுவிட்டீர்களா?”

”விட்டுவிட்டேன்.”

”எப்போதிருந்து?’

”முப்பது ஆண்டுகளுக்கு முன்பு. இல்லை, அதற்கும் மேலிருக்கும்.”

ஜாக்வியுடன் தொடர்பில் இருந்த காலத்தில் அவன் புகைப்பதை நிறுத்த முடிவுசெய்தான். முதலில் புகைப்பதை நிறுத்திவிட்டு அதற்கான பெரிய பரிசாக அவள் வந்ததை நினைத்தானா அல்லது இப்படி ஒரு வலிமையான வசீகரம் கிடைத்திருப்பதால் இதனைப் பயன்படுத்தி சிகரெட்டை விட்டுவிட நினைத்தானா என்பது அவனுக்கு நினைவில்லை.

சிகரெட்டைப் பற்றவைத்தவாறே, ”நான் நிறுத்துவதை நிறுத்திவிட்டேன்” என்றாள். “நிறுத்துவதை நிறுத்துவதென உறுதிமொழி எடுத்துக்கொண்டுவிட்டேன், அவ்வளவுதான்.”

இந்த முகச்சுருக்கங்களுக்கு அதுவே காரணமாய் இருக்கலாம். யாரோ –ஒரு பெண் – அவனிடம் சொல்லியிருக்கிறார்கள்- புகை பிடிக்கும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட அமைப்பில் முகச்சுருக்கங்கள் ஏற்படுகிறதென. ஆனால் அது வெறும் சூரியனால் இருக்கலாம், அல்லது அவளது தோலின் இயல்பாக இருக்கலாம் – அவளது கழுத்திலும் குறிப்பிடத்தக்க அளவு சுருக்கங்கள் இருந்தன. சுருக்கங்களுடைய கழுத்து, இளமை பொங்கும் நிமிர்ந்த பெருத்த முலைகள். இந்த வயதுப் பெண்களிடம் பொதுவாகவே இதுபோன்ற முரண்கள் காணப்படத்தான் செய்கின்றன. நல்ல அம்சங்களும் மோசமான அம்சங்களும், மரபுரீதியான கொடைகளும் குறைகளும் எல்லாமும் கலந்த கலவை. வெகு சிலரே முழுமையான, தன்மையான அழகினைக் கொண்டிருந்தார்கள் – ஃபியோனாவைப் போல. ஒருவேளை அதுவும்கூட பொய்யாக இருக்கலாம் – ஃபியோனாவை இளம் வயதிலிருந்தே அவன் பார்த்து வருவதால் அப்படித் தோன்றலாம். ஆப்ரே தன் மனைவியைக் கண்டபோது, இலேசாகச் சரிந்த நீலக்கண்களும் மறுக்கப்பட்ட சிகரெட் பொருத்தப்பட்ட மூடிய உதடுமாக துணிச்சலும் வெறுப்பும் நிரம்பிய ஒரு மேல்நிலைப்பள்ளி மாணவியா அவளில் தெரிந்திருப்பாள்? 

“அப்படியாக, உங்கள் மனைவி சோர்வுற்றிருக்கிறார்… அவரது பெயர் என்ன? மறந்துவிட்டேன்” என்றாள் ஆப்ரேவின் மனைவி. 

“ஃபியோனா.”

“ஃபியோனா. உங்களது பெயர் என்ன? அதை நீங்கள் சொல்லவேயில்லை என நினைக்கிறேன்.” 

“க்ராண்ட்” என்றான் க்ராண்ட்.

“ஹலோ க்ராண்ட். நான் மரியன்.” 

“இப்போது நாம் ஒருவர் பெயரை ஒருவர் அறிந்துகொண்டோம். நான் என்ன நினைக்கிறேன் என்பதைச் சொல்லாமல் மறைப்பதில் எந்த அர்த்தமுமில்லை. இன்னமும் அவன் உங்களது – ஃபியோனாவைக் காண்பதில் ஆர்வமாக இருக்கிறானா என எனக்குத் தெரியவில்லை. இல்லை. நான் அவனிடம் கேட்கவில்லை, அவன் சொல்லவுமில்லை. அது வெறும் ஒரு தற்காலிக மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம். அவனை மீண்டும் அங்கே அழைத்துச் சென்று அது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தால்? என்னால் அப்படிப் பணயம் வைக்க முடியாது. ஏற்கெனவே நான் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறேன். புதிதாக இந்தப் பிரச்சினையும் சேர்ந்து அவன் மோசமானால், எனக்கு வேறு உதவியும் இல்லை. நான் மட்டும்தான் இருக்கிறேன். நான் மட்டும்.” 

“நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா – அப்படி ஒரு முடிவு எடுப்பது உங்களுக்குச் சிரமம்தான் – அவரை முழுமையாக அந்த மையத்திலேயே விட்டுவிட எப்போதேனும் நினைத்திருக்கிறீர்களா?”

இரகசியம் பேசுகிற அளவிற்கு அவன் தன் குரலைத் தழைத்திருந்தான், ஆனால் அவள் அதற்கான தேவை இருப்பதாகக் கருதவில்லை. 

“இல்லை, நான் அவனை இங்கேயேதான் வைத்திருக்கப் போகிறேன்.”

“ம்.. மிகவும் நல்லது, நீங்கள் மிகவும் உயர்வானவர்” என்றான் க்ராண்ட். ‘உயர்வானவர்’ என்ற தன் வார்த்தையில் எள்ளல் எதுவும் வெளிப்பட்டுவிடவில்லை என அவன் நம்பினான், அவனுக்கு அந்த நோக்கம் இருந்திருக்கவில்லை.

 “அப்படியா நினைக்கிறீர்கள்?” என்றாள் அவள். “உயர்வானவளாக இருப்பதற்கெல்லாம் நான் இதைச் செய்யவில்லை.”

”இருந்தாலும், அது அவ்வளவு சுலபமானதில்லை.”

“இல்லை, விஷயம் அது பற்றியில்லை. நான் இருக்கிற நிலையில் எனக்கு வேறு வழியில்லை. அவனை அந்த மையத்திலேயே விட்டுவிடுகிற அளவிற்கு என்னிடம் பணம் இல்லை, இந்த வீட்டை விற்றால்தான் ஆயிற்று. இந்த வீடு மட்டும்தான் எங்களுக்குச் சொந்தமாய் இருக்கிறது. பணத்திற்கு எனக்கு வேறு எந்த வழியும் இல்லை. அடுத்த ஆண்டு அவனது ஓய்வூதியமும் எனது ஓய்வூதியமும் எனக்குக் கிடைக்கும். அதற்குப் பிறகும்கூட அவனை அங்கே விட்டுவிட்டு நான் இங்கே வீட்டில் இருக்கிற அளவிற்கு என்னிடம் பணம் இருக்காது. அதோடு, இந்த வீடு எனக்கு மிக முக்கியம், பல வகைகளில் முக்கியம்.” 

 “இது ரொம்பவும் அழகாக இருக்கிறது“ என்றான் க்ராண்ட்.

 “ம், பரவாயில்லை. நான் இதில் நிறைய வேலை செய்திருக்கிறேன். நிறைய. அதைச் சரிசெய்வதற்கும் பராமரிப்பதற்கும். இதை இழக்க நான் விரும்பவில்லை.”

”சரிதான். எனக்குப் புரிகிறது.”

“அவனது அலுவலகம் எங்களை அம்போவென விட்டுவிட்டது. அதைப் பற்றி எனக்கு விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் அவனை வெளியே துரத்திவிட்டார்கள். இவன்தான் அவர்களுக்குப் பணம் தர வேண்டியிருப்பதாக அவர்கள் இறுதியில் சொன்னபோது நான் அவற்றைப் பற்றி விசாரிக்க முயன்றேன். ஆனால் அவன் என்னை அதில் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டான். எதோ முட்டாள்தனமாக இவன் செய்திருக்க வேண்டும். ஆனால் நான் அதையெல்லாம் கேட்கக்கூடாது, எனவே நான் அமைதியாகிவிட்டேன். நீங்களும் திருமண வாழ்வில் இருந்திருக்கிறீர்கள். இருக்கிறீர்கள். உங்களுக்கே தெரியும் அதைப் பற்றி. நாங்கள் ஒரு பயணத்திற்குச் சென்றிருந்த போதுதான் இடையில் இதையெல்லாம் நான் அறிய நேர்ந்தது. அதே பயணத்தில் இதுவரை கேள்விப்பட்டேயிராத ஒரு வைரஸால் தாக்கப்பட்டு இவன் கோமாவிற்கும் செல்கிறான். அப்படியாக அவன் அந்தப் பிரச்சினையிலிருந்து தப்பித்துவிட்டான்.” 

”கெட்ட நேரம்தான்,” என்றான் க்ராண்ட்.

“அவன் வேண்டுமென்றே நோய்வாய்ப்பட்டான் என நான் சொல்லவில்லை. அது அப்படி நிகழ்ந்துவிட்டது. இப்போது அவனுக்கு என்மீது எந்த மோகமும் இல்லை, எனக்கும் அவன் மீது இல்லை. இதுதான் வாழ்க்கை. நம்மால் வாழ்க்கையை வெல்ல முடியாது.”

சட்டென நாக்கை ஒரு பூனை போல் வெளியே நீட்டி உதட்டின் மேலிருந்த பிஸ்கட் துகளை எடுத்துக்கொண்டாள். “நான் ஒரு தத்துவவாதி போலப் பேசுகிறேன், இல்லையா? நான் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராய் இருந்திருக்க வேண்டும் என அவர்கள் சொன்னார்கள்.”

 “கொஞ்ச நேரம் முன்பு,” என்றான் க்ராண்ட்.

”நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என எனக்குத் தெரிந்துவிட்டது, நான் ஒரு காரியக்காரி என நினைக்கிறீர்கள்தானே?” என்றாள்.

”நான் யாரைப் பற்றியும் தீர்ப்பெழுதுவதில்லை. இது உங்கள் வாழ்க்கை.”

“நீங்கள் அப்படித்தான் நினைக்கிறீர்கள்.”

இன்னும் கொஞ்சம் சமாதானமாக இதை முடிக்கவேண்டும் என அவன் நினைத்தான். பள்ளிக்காலத்தில் அவளது கணவன் ஏதேனும் அடிசரக்குக் கடையில் கோடைகாலங்களில் வேலை பார்த்திருக்கிறானா எனக் கேட்டான். 

“அப்படி எதையும் நான் கேள்விப்படவேயில்லை,” என்றாள் அவள். “நான் இந்த ஊரில் வளரவில்லை.” 

ஆப்ரேவின் மனைவியிடம் தன் முயற்சி தோற்றுவிட்டதென்பதை க்ராண்ட் புரிந்துகொண்டான். ஒரு பெண்ணின் அடிப்படைப் பொறாமையை – ஆத்திரத்தை, பொறாமையின் எச்சமான பிடிவாதத்தை மட்டுமே அங்கு காண நேர்ந்ததாக திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டும் அவன். அவள் இந்த விஷயங்களை எப்படி அணுகுவாள் என்பது பற்றி முன்பு அவனுக்கு எந்த அனுமானமும் இருந்திருக்கவில்லை. என்றாலும் இந்த உரையாடல் அவன் முற்றிலும் எதிர்பாராத வகையிலும் இல்லை. அவனது வீட்டில் இதே போன்ற பல உரையாடல்களை ஏற்கெனவே கேட்டிருக்கிறான். அவனது சொந்தங்கள் – அம்மாவும்கூட – மரியனைப் போலத்தான் சிந்தித்திருப்பார்கள். பணம்தான் முக்கியம். அப்படி நினைக்காதவர்கள் யதார்த்தத்தினூடான தொடர்பிலிருந்து விலகிவிட்டார்கள் என்றே அவர்கள் கருதினார்கள். மரியனும் இவனை அப்படித்தான் நினைத்திருப்பாள். புத்திகெட்டவன், எதோ ஒரு அதிர்ஷ்டத்தினால் வாழ்வினைப் பற்றிய நிஜத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட, சலிப்பூட்டும் வியாக்கியானங்கள் கொண்ட ஒருவன். வீட்டினைப் பாதுகாக்க வேண்டிய அவசியமின்றி, இன்னொரு மனிதரை மகிழ்ச்சியூட்டும் என அவன் நம்புகிற பெருந்தன்மையான திட்டங்கள் குறித்து கனவு கண்டுகொண்டு திரிபவன். எப்படி ஒரு முட்டாள் என இப்போது அவள் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். 

இதுபோன்ற ஒரு மனிதருக்கு எதிராக நிற்பது அவனை நம்பிக்கையிழக்கச் செய்வதாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இறுதியில் தனிமையில் தள்ளுவதாகவும் இருந்தது. ஏன்? இது போன்ற மனிதர்களுக்கு எதிராக தனது கருத்துகளில் உறுதியாக நிற்பதை அவன் சிரமமாக உணர்ந்ததாலா? இறுதியில் அவர்கள்தான் சரி என அவனுக்குத் தோன்றிவிடுவதாலா? அவன் தனது நிலையிலேயே இருந்திருந்தால் இவளையோ இவளைப் போன்ற ஒரு பெண்ணையோதான் திருமணம் செய்திருப்பான். இவனை ஈர்க்கும்படியாகத்தான் அவளும் இருந்திருப்பாள். ஒரு சல்லாபக்காரியாகவேனும். அவளது புட்டத்தை சமையலறைச் நாற்காலியிலிருந்து நகர்த்தியதில் இருந்த பகட்டு, மூடிய அவளது வாய், செயற்கையாய்ச் சூட்டிக்கொண்ட சிறிய அதட்டல் – ஒரு சிறு நகரச் சல்லாபக்காரியின் வெகுளித்தனமான கவர்ச்சியில் இறுதியில் எஞ்சியிருப்பது அது ஒன்றுதான்.  

ஆப்ரேவைத் தேர்ந்தெடுத்தபோது அவளுக்குச் சில நம்பிக்கைகள் இருந்திருக்கக்கூடும். அவனுடைய நல்ல தோற்றம், விற்பனைப் பிரதிநிதி வேலை, மேல்தட்டு வாழ்க்கை முறை. தற்போது இருப்பதைவிட நல்ல நிலைக்கு இந்தத் திருமணம் தன்னை எடுத்துச் செல்லும் என அவள் நம்பியிருப்பாள். ஆனால் இப்படியானவர்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் முடிந்துவிடுகிறது. அவர்களது கணக்கீடுகளையும், உள்ளுணர்வுகளையும் தாண்டி அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வாழ்க்கை அவர்களை எடுத்துச் செல்வதில்லை. அது அநியாயம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சமையலறையில் அவனை முதலில் ஈர்த்தது தொலைபேசியில் பதிலளிக்கும் இயந்திரத்தில் மினுக்கிய ஒளிதான். எப்போதும் போலவேதான் இப்போதும் நினைத்தான் – ஃபியோனா. மேலங்கியைக் கழட்டும் முன்பாகவே பொத்தானை அழுத்தினான். 

”ஹலோ க்ராண்ட், நான் சரியான ஆளிடம்தான் பேசுகிறேன் என நினைக்கிறேன். எனக்கு ஒன்று தோன்றியது. இங்கே சனிக்கிழமை இரவு தனியர்களுக்கான ஒரு நடனக் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. அதன் மதிய உணவு ஏற்பாட்டுக் குழுவில் நானும் இருக்கிறேன். எனவே நான் இலவசமாக ஒரு விருந்தினரை அழைக்க முடியும். உங்களுக்கு ஒருவேளை அதில் கலந்துகொள்ள ஆர்வம் இருக்குமோ என எண்ணினேன். வாய்ப்பிருந்தால் திரும்ப அழையுங்கள்.”

ஒரு பெண்ணின் குரல் தொலைபேசி எண் ஒன்றைச் சொன்னது. அடுத்து ஒரு பீப் ஒலிக்குப் பிறகு மீண்டும் அதே குரல் ஒலிக்கத் தொடங்கியது. 

“அது யார் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன் என்பது இப்போதுதான் நினைவுக்கு வந்தது. குரலை நீங்கள் அடையாளம் கண்டிருக்கக்கூடும். நான் மரியன். நான் இன்னும் இதுபோன்ற இயந்திரங்களுக்குப் பழகவில்லை. நீங்கள் தனித்திருப்பவர் இல்லை என்பதை நான் அறிவேன், அப்படி நான் நினைக்கவும் இல்லை. நானும்கூட அப்படித்தான். ஆனால் எப்போதேனும் வெளியே செல்வதில் தவறேதும் இல்லை. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் நீங்கள் எனக்கு அழைக்கலாம், விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடுங்கள். வெளியே செல்வதற்கான வாய்ப்பை நீங்கள் விரும்பக்கூடும் என நான் நினைத்தேன். நான் மரியன் பேசுகிறேன். ஏற்கெனவே இதைச் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். சரி, வைக்கிறேன்.” 

வீட்டில் சற்று நேரம் முன்பு அவன் கேட்ட குரலிலிருந்து இப்போது கேட்கிற குரல் மாறுபட்டிருந்தது. முதல் செய்தியில் கொஞ்சமும் இரண்டாவது செய்தியில் நிறையவும் மாற்றம். குரலில் ஒரு நடுக்கம், போலியான அசட்டை, சீக்கிரம் அடைவதற்கான ஆர்வமும் விட்டுவிட மனமில்லாமையும். 

அவளுக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது. ஆனால் எப்போது? அது அவனைக் கண்ட உடனே தோன்றியிருந்ததெனில், அவன் உடன் இருந்த அவ்வளவு நேரமும் வெற்றிகரமாக அதை மறைத்திருந்திருக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இது தோன்றியிருக்க வேண்டும், அவன் கிளம்பிய பிறகு. பெரிய ஈர்ப்பு என்று சொல்லிவிடமுடியாது. இவனிடம் அதற்கான ஒரு வாய்ப்பிருக்கிறதென எண்ணியிருக்கலாம், தனியாக இருக்கிறான் என்பதால். கிட்டத்தட்ட தனியாக. இதைத் தொடர்வதற்கான சாத்தியம் அவளுக்கும் இருக்கிறதென்பதால்.  

ஆனால் இந்த முயற்சியின் தொடக்கத்தில் அவளுக்கு ஒரு நடுக்கம் இருந்தது. அவள் தன்னை ஒரு ஆபத்திற்குள் இறக்குகிறாள். எவ்வளவு தூரத்திற்கு என்பதை அவளால் சொல்ல முடியவில்லை. பொதுவாகவே பெண்களது பலவீனம் நேரம் செல்லச் செல்ல, விஷயங்கள் வளர வளர அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் சொல்ல முடிவதெல்லாம், தொடக்கத்தில் அது கொஞ்சமேனும் இருந்தால் முடிவில் அது அதிகமாய் ஆகும் என்பதுதான். அப்படி ஒரு உணர்வை அவளில் தோற்றுவித்ததில் அவனுக்குத் திருப்தி தோன்றியது – ஏன் மறுக்க வேண்டும்? அவளது ஆளுமையில் ஒரு மினுக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்த முடிந்திருக்கிறது அவனால். அவளது அந்த விலாவாரியான பேச்சில் இந்த மறைமுக வேண்டுதலைக் கேட்டதில் மகிழ்ச்சி. 

காளானும் முட்டையும் கலந்து ஒரு ஆம்லெட் இட்டுக்கொண்டான். கொஞ்சம் குடிக்கவும் செய்யலாம் என நினைத்தான். 

என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அது நிஜம்தானா – என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? உதாரணமாக – ஆப்ரேவை ஃபியோனாவிடம் அழைத்துச் செல்லுவது குறித்து இவன் பேசுவதை ஒப்புக்கொள்ளும் அளவிற்கு இவன் அவளை மாற்ற முடியுமா? வெறுமனே சென்று பார்த்து வருவதற்காக அல்ல – ஆப்ரேவின் எஞ்சிய வாழ்நாள் முழுமைக்கும். ஆப்ரேவை ஃபியோனாவிடம் ஒப்படைத்த பிறகு இவனும் மரியனும் என்ன ஆவார்கள்?

இவன் அழைப்பிற்காக மரியன் அவள் வீட்டில் இப்போது காத்துக்கொண்டிருப்பாள். தன்னை எதற்குள்ளேனும் மூழ்கடித்துக்கொள்வதற்காக, ஏதேனும் வேலையிலும் ஈடுபட்டிருக்கக்கூடும். க்ராண்ட் காளான்கள் வாங்கி வீட்டிற்கு வந்துகொண்டிருந்த நேரத்தில் அவள் ஆப்ரேவிற்கு உணவளித்திருக்க வேண்டும். இப்போது அவனைப் படுக்கைக்குத் தயார்படுத்திக் கொண்டிருப்பாளாயிருக்கும். ஆனால் இவை எல்லாவற்றின் போதும் அவள் தொலைபேசியிலேயே கவனமாய் இருப்பாள் – தொலைபேசியின் அமைதியில். வீட்டிற்குச் செல்வதற்கு க்ராண்டிற்கு எவ்வளவு நேரம் ஆகும் என அவள் கணக்கிட்டிருப்பாள், தொலைபேசிப் புத்தகத்தில் இருந்த அவனது முகவரி அவன் எங்கே வசிக்கிறான் என்பது பற்றி அவளுக்குச் சொல்லியிருக்கும். இரவுணவிற்குத் தேவையான பொருட்களை வாங்க கடைக்குச் சென்றுவிட்டு (ஆண்கள் இதற்காகத் தினமும் கடைக்குச் செல்வார்கள் என்பதைக் கணித்து) வீட்டிற்குச் செல்ல ஆகும் நேரத்தைக் கணித்திருப்பாள். அதன்பிறகு அவனுக்கு வந்த செய்திகளைக் கேட்பதற்குக் கொஞ்ச நேரம் அல்லது வீட்டிற்குச் செல்லும் முன்பு முடிக்க வேண்டிய வேறு சில வேலைகள் அல்லது வெளியிலேயே இரவுணவும் சந்திப்புகளும் முடித்துவிட்டு வீட்டிற்குத் தாமதமாகச் செல்லக்கூடும்.

இவனுக்கு இதில் என்ன பெருமை. எல்லாவற்றையும் தாண்டி அவள் ஒரு விவேகமான பெண். அவன் இன்னும் செய்திகளைப் பார்த்திருக்க மாட்டான் எனவும் எப்படியாயினும் சிறப்பாக நடனமாடுவான் எனவும் நினைத்தபடி வழக்கமான நேரத்தில் உறங்கச் சென்றிருப்பாள். மிகவும் விறைப்பானவன், பேராசிரியருக்கான குணநலம் கொண்டவன். பத்திரிகைகளைப் பார்த்தபடி தொலைபேசிக்கு அருகே அமர்ந்திருந்த போதும் அது மறுபடி ஒலித்தபோது அவன் எடுத்துப் பேசவில்லை. 

“க்ராண்ட். இது மரியன். கீழே தரைத்தளத்தில் துணிகளை உலர்ப்பானில் இட்டுக்கொண்டிருந்தபோது இங்கே மேலே தொலைபேசி ஒலித்தது போல் இருந்தது. மேலே வருவதற்குள் நின்றுவிட்டது. ஒரு வேளை அது நீங்களாய் இருந்தால், ஒருவேளை நீங்கள் வீட்டிற்குச் சென்றிருந்தால், நான் கீழே போயிருந்தேன் என்பதைச் சொல்ல நினைத்தேன். செய்திகளைச் சேமித்துவைக்கிற வசதி என்னிடம் இல்லாததால் உங்களால் செய்தி அனுப்பியிருக்க முடியாது. அதனால்தான், இதை உங்களுக்குச் சொல்லிவிட விரும்பினேன். வைக்கிறேன்.” மணி இப்போது பத்து இருபத்தைந்தாகி இருந்தது. 

எடுத்திருந்தால், இப்போதுதான் வீடுவந்ததாகச் சொல்லியிருப்பான். விஷயத்தின் சாதக பாதகங்களை யோசித்தபடி அவன் இங்கே அமர்ந்திருப்பதைப் பற்றி அவளுக்குச் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. 

மறைப்பு. அந்த நீலத்திரைச்சீலைகளை மறைப்பு என்றுதான் ஃபியோனா அழைத்திருப்பாள். ஏன் அழைக்கக்கூடாது? அந்த இஞ்சி பிஸ்கட்டுகளின் கச்சிதமான வட்ட வடிவத்தை நினைத்துப் பார்த்தான். அது வீட்டில் செய்ததென பிரகடனப்படுத்த வேண்டியிருந்தது அவளுக்கு, பீங்கான் மரத்தின் மேல் பீங்கான் கோப்பைகள், தரைவிரிப்பைப் பாதுகாக்கும் பொருட்டு அதன் மேல் ஒரு பிளாஸ்டிக் விரிப்பு. அவனது அம்மா ஒருபோதும் அடைய முடிந்திராத, ஆனால் இரசித்திருக்கக்கூடிய, உயர்ரக பளபளப்பு. ஒருவேளை அதனால்தான் அவனுக்கு அங்கிருந்த அன்பில் செயற்கைத்தன்மை தோன்றுகிறதா? அல்லது முதல் பானத்திற்குப் பிறகு மேலும் இரண்டு அருந்தியதாலா? 

அந்த முகத்திலும் கழுத்திலும் இருந்த வால்நட் நிற பழுப்பு – அது வெயிலின் பாதிப்பு என இப்போது அவன் முடிவுசெய்திருந்தான் – நிறைந்த வாசமும் கவர்ச்சியும் மிக்க மார்புப் பிளவுக்குள்ளும் அவளது ஆழ்ந்த சுருக்கங்கள் நீண்டிருக்கலாம். ஏற்கெனவே எழுதி வைத்திருந்த அவளது எண்ணை டயல் செய்தபடி இதையெல்லாம் அவன் யோசித்தான். அதையும் உணர்ச்சிமிகுந்த அவளது பூனை நாக்கையும். இரத்தினக்கல் போன்ற அவளது கண்கள். 

ஃபியோனா அவளது அறையில் இருந்தாள், ஆனால் படுக்கையில் அல்ல. வழக்கமாக அணிகிற வகையிலான, ஆனால் பளீர் நிறம் கொண்ட குட்டையான ஆடை அணிந்தபடி திறந்த ஜன்னல் அருகே அமர்ந்திருந்தாள். வெளியில் மொத்தமாகப் பூத்திருந்த லைலாக்கும் நிலமெல்லாம் விரவப்பட்டிருந்த வசந்தகால எருவும் அதன்வழியாக அறைக்குள் வாசமாய்ப் படர்ந்தன. 

அவளது மடியில் திறந்த புத்தகம் ஒன்று இருந்தது. 

“என்னிடம் இருக்கும் இந்த அருமையான புத்தகத்தைப் பாரேன். இது ஐஸ்லாந்தைப் பற்றியது. இதுபோன்ற மதிப்புமிக்க புத்தகங்களை நமது அறையில் வைப்பார்களென நாம் நினைத்திருக்கவே மாட்டோம். ஆனால் ஆடைகளையெல்லாம் குழப்பி வைத்திருக்கிறார்கள் – நான் ஒருபோதும் மஞ்சள் அணிந்ததேயில்லை.”  

“ஃபியோனா” என்றான். 

“கிளம்பத் தயாராக எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு விட்டோமா நாம்?” என்றாள். அவளது குரலின் பிரகாசம் சிறிது தடுமாறுவதாகத் தோன்றியது அவனுக்கு. ”உன்னை நெடுநாட்களாகக் காணவேயில்லை.”

“ஃபியோனா, நான் உனக்கு ஒரு ஆச்சரியம் கொணர்ந்திருக்கிறேன். உனக்கு ஆப்ரேவை நினைவிருக்கிறதா?”

காற்றலைகள் அவள் முகத்தில் வலுவாக மோதியது போல க்ராண்டை ஒரு நொடி வெறித்தாள். அவள் முகத்தில், அவள் தலைக்குள் எல்லாவற்றையும் கலைத்துப்போடும் விதமாக. தளர்ந்த பின்னல்களும் கந்தல் துணிகளுமாக.

 “பெயர்கள் என் நினைவில் நிற்பதில்லை,” என்றாள் கோபமாக. 

பின் அந்தப் பார்வை, முயன்று எதையோ மீட்டெடுத்து கேலி கலந்த நளினத்துடன் பின்வாங்கியது. புத்தகத்தைக் கவனமாகக் கீழே வைத்துவிட்டு எழுந்தவள் கைகளை உயர்த்தி அவனைச் சுற்றி வளைத்துக்கொண்டாள். அவளது சருமமோ சுவாசமோ இலேசானதொரு புதிய மணத்தை வெளிப்படுத்தியது- அது அவனுக்கு நீருக்குள்ளிருக்கும் ஒரு பச்சைத்தாவரத்தின் வாசனையை நினைவூட்டியது. 

“உன்னைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்ற அவளது குரல் ஒரே நேரத்தில் அன்பானதாகவும் சம்பிரதாயமானதாகவும் ஒலித்தது. அவனது காதுமடலை அழுத்திக் கிள்ளினாள். 

“நீ அப்படியே திரும்பிச் சென்றிருக்கலாம்,” என்றாள் அவள். “எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் என்னை அப்படியே விட்டுச் சென்றிருக்கலாம். என்னைவிட்டுப் போயிருந்திருக்கலாம். போயிருக்கலாம்.”

அவளது வெண்முடியின் மேல், வெளிர்சிவப்பு உச்சியில், இனிமையான வடிவம் கொண்ட தலையில் தன் முகத்தை வைத்துக்கொண்டான்.

”வாய்ப்பே இல்லை,” என்றான்.

*

ஆங்கில மூலம்: The Bear Came Over the Mountain by Alice Munro, From the book Hateship, Friendship, Courtship, Loveship, Marriage, Published by Vintage, 1st edition (1 August 2002).