முஃமின் புறாக்கள்

2 comments

செடிகளும் புதர்களும் மண்டிக்கிடந்தன தர்காவின் சுற்றுப்புறத்தில். பின்பக்கமாய் பக்கிங்காம் கால்வாய்க்குக் குறுக்கே பறக்கும் ரயில்தடம் பாய்ந்து சென்றது. சுமார் முன்னூறு வருட தர்கா. தஸ்தகீர் பாபா சாகிப் ஜீவசமாதியான இடம். துருக்கியரான தஸ்தகீர் பிஜப்பூரின் அடில் ஷாஹி அரச வம்சாவழி. பதினேழாம் நூற்றாண்டில் தனது உடலின் இறுதிச்சடங்கை எந்த இமாமும் செய்ய வேண்டாமென்றபடி பின்னர் தானே தன்னுடலுக்கான ஜனாசா ஈமக்கிரியைகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

வாயில் வளைவு கடந்து உள்ளே நடந்துசெல்ல மிக உயர்ந்த இரண்டு மினாராக்கள் நின்றன. சுற்றுப்புறமெங்கிலும் நிறைய இஸ்லாமியர் கல்லறைகள். இடப்புறம் ஈச்ச மரமொன்று தனித்து நின்றது. மண்டபங்களில் ஞானியரது சமாதிகள்.

ஆடிசம் கொண்ட மெலிந்து உயர்ந்த இளம் வாலிபன் உதட்டோரம் சுரக்கும் எச்சிலைத் தோளில் தேய்த்தபடி உள்நுழையும் ஒவ்வொருவருக்கும் புறங்கையில் வாசனைத் திரவிய உருளையைத் தடவிவிட்டான். ஒருவித ஆழ் கிறக்கம் தரும் நறுமணம் உடலெங்கும் பரவிற்று. விரலளவான குட்டி நீள் கண்ணாடிக் குப்பிகளில் வேறுபட்ட வண்ணத்தில் வாசனைத் திரவியங்கள் அடைக்கப்பட்டு வரிசையாய்த் தரையில் நின்றிருந்தன.

உள்ளே நுழைகையில் கீரிப்பிள்ளையொன்று பதைப்பின்றி கதிமாற்றித் தளர்ந்தோடிப் புதரில் மறைந்தது. மனிதர்களுடனான பரிச்சயம் அதன் போக்கில் தென்பட்டது. ஆங்காங்கே கல்லறைகள் மண்மேடுகளாகச் சமைந்திருந்தன. ஜரிகை மினுக்கும் அலங்காரத் தாள்கள் சூரியக்கதிரில் ஒளிர்ந்தன. பத்திப்புகை நெளிந்து கலையும் போக்கைக் காட்டித் தந்தன அந்தி வெயில் கதிர்கள்.

கை கால் வாய் முகம் தலை செவிமடலென வரிசை வரிசையான சதுர அமர்வுத் திண்டுகளின் முன்னிற்கும் பொழிகுழாய் ஒன்றில் மெய் சுத்தம் செய்துபின் மசூதியின் பக்கவாட்டு நடைவழியில் புகுந்து தொடர்ந்தன கால்கள். சமாதியின் மஞ்சள் நிற மரக்கதவுகள் ஒன்றில் ஈய வண்ணத்தில் பிறையும் நட்சத்திரமும் பதிந்திருந்தன. சமாதியறை வாசலின் வலது வெளிப்புறத்தில் பழைய தூண் மண்டபம் சில பொற்கால்களுடன் நின்றிருந்தது. பொன்வண்ணம் பூசியிருந்தது. சுற்றி சில கல்லறைகள் அமிழ்ந்திருந்தன. உயர்ந்ததோர் அத்தி மரத்தின் நெளிந்த பெருங்கிளைகளில் குண்டு குண்டாய்ப் பச்சிளங் காய்கள் கொத்தென ஒட்டிக் கிடந்தன.

கலை வேலைப்பாடு கொண்ட ஒற்றை உலோகப் படி தாண்டி சமாதி அறைக்குள் காலடி எடுத்து வைக்க உடல் அதிர்ந்தது. அறையின் மத்தியில் நீள்செவ்வக சமாதியின் மேல் படரவிட்டிருந்த அடர் பச்சைப் பொற்போர்வையின் விளிம்போரம் வேலிமுள்ளென வெள்ளி நூலிழைகள் வெளிநீட்டி நின்றன. தனித்தனியாக ரோஜாப்பூக்கள் பரவிக்கிடந்தன. மேற்சரிவில் இருபக்கமும் செண்டுமல்லிப் சமாதி மேட்டில் பூச்சரங்கள் வளைந்து நெளிந்தோடின. சிலர் புதிய பட்டுத்துணிகளைச் சமாதியின் மேல் மூடி வணங்கிப் போயினர். சின்னக் கண்ணாடிக் குப்பிகளில் நறுமணத் திரவத்தை ஊற்றி அபிஷேகம் செய்தனர். அறையில் சூழ்ந்திறங்கிற்று சுகந்தம்.

சமாதியின் நான்கு மூலையில் சட்டகக்கால்கள் நின்றிருந்தன. கதவு தாண்டி இருபக்கமும் மேலுமொரு சமாதி இருந்தது. ஞானி தஸ்தகீர் சாகிப்பின் வழித்தோன்றல்களாக இருக்கலாம். மையச் சமாதியைக் கட்டங் கட்டியதுபோல கனத்த நீளமான செப்புத் தகடுகள் நான்கு பக்கங்களில் பதிக்கப்பட்டிருந்தன. வலது மூலையில் சர்க்கரை, கற்கண்டு, உலர் பழங்கள், இனிப்பு வகைகள் என யாவரும் சுவைக்கப் பொதுவில் தட்டில் குவிந்திருந்தன. நீள்சதுர வெண்சலவைக் கற்களாலான தரை. தினமும் யாரோ ஒருவரால் அவ்வப்போது தரை கூட்டி சுத்தமானது. புறாக்களின் காய்ந்த கழிவுகள் கீறி அகற்றப்பட்டன. சில நாட்களில் முல்லா ஒருவர் சமாதியின் முன் வலதுமுனையில் அமர்ந்து மயில் தோகைக்கட்டு கொண்டு தலையுச்சியிலும் முதுகின் இருபுறத்திலும் இலேசாகத் தட்டி தூய்மைப்படுத்துவதின் ஆசிர்வதிப்பதின் குறிப்புணர்த்துதலைக் காட்டுவார். சோடோ ஜென் தியானப் பயிற்சியில் இப்படி முதுகில் கெய்சகு எனும் தட்டையான மெலிந்த குச்சி கொண்டு படீரென அடிப்பார் ஆசிரியர். மாணவர் வலிந்து முன்வந்து குனிந்து தலைவணங்கிப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

குகு குகுவெனப் புறாக்கள் குனுகின. அவ்வொலியலை மினாராவின் உட்பக்கச் சுவர்களில் பட்டு அதிர்ந்தது. அது ஒருவித மோனநிலைக்கு மனத்தைத் தகவமைத்தது. தப்புக்குறி போன்ற குறுக்குச் சட்டத்தின் மேல் விரித்தபடி அமைந்திருந்த குர்ஆன் பக்கங்களை தரையில் சம்மணமிட்டு அமர்ந்து அமைதியோடு முணுமுணுத்தார் நடுவயதுத் தாடிக்காரர். சமாதித் தூணில் தொங்கிக்கொண்டிருந்த உருள்மணிச் சரடுகளை எடுத்து பழுத்த முதியவரொருவர் சமாதிச் சுற்றுக்கட்டையில் சரிந்து மண்டியிட்டு செபித்தார். வஜ்ஜிராசனத்தில் ஓரிளைஞன் அமைந்து தலைதூக்கி விண்ணிலிருந்து பொழியும் அருளைப் பெற்றுக்கொள்வதாகக் கண்மூடி ஏங்கி நிற்க அவனருகில் ஐந்தாறு வயதுச் சிறுவனொருவன் கால் மடக்கி மௌனமாகச் சமாதியை நோக்கி அசையாது அமர்ந்திருந்தான். முக்காடிட்ட பெண்களும் கருப்பு பர்தா உருவங்களும் சமாதியின் இடத்தில் அமர்ந்து மௌனமாகப் பிரார்த்தனை செய்தனர். இறைமையைத் தேடி அதனடிப்படையில் தம் வாழ்விதத்தை அமைத்துக் கொள்பவரை, அவ்வாறு முழு உள்ளத்துடன் விழைபவரை முஃமின்கள் என்றழைக்கிறார்கள். அவ்வடியெடுப்பே இங்குள்ளவர்களின் முயற்சியாக இருக்கிறது.

சமாதியின் காலடியில் குனிந்து தொட்டு வணங்கி வலப்புறச் சுவரோரம் கால் மடக்கி அமர்ந்தேன். சலவைக்கல் தரை சில்லென ஊடேறிற்று. முதுகு நிமிர்த்தி விழிப்பை ஒருமுகப்படுத்தி நிலைகொள்ள குபுகுபுவென ஆற்றல் உட்திரண்டு கபாலக் குழிக்குள் செறிவுற்று மூச்சில் அடர்த்தியாய் இறங்கியது. தண்டுவடத்தில் குளிர் மின்னல் வெட்டி தேகம் விதிர்த்தது. மலைப்பாம்பொன்று உடலைச் சுற்றி வளைத்து தலைமுதல் கால்வரை சூழ்ந்து முறுக்கிற்று. மென்மையும் ஊக்கமுமாய் ஊடேறி உடலுக்குள் பாம்பாய், பாம்புக்குள் உடலாய் ஒன்றாகி ஊர்ந்து ஊர்ந்து மேன்மேலும் பெருகிற்று. சற்றைக்குள் உடலும் பாம்பும் மாயமாகி மிகுவிழிப்பு மட்டுமே தழைத்து நின்றது.

உடல்நிறை புவிஈர்ப்போடு கரைந்து பூராவும் வெற்றாய் உணர்த்திற்று. முதுகுத்தண்டின் அடிப்பகுதியின் உள்வால் நுனி ஊக்கமுற்று உடலைத் தூக்கித் தூக்கிச் சாய்க்கப் பார்த்தது. அப்பூமிப் பகுதியின் உயிர்காந்த ஆற்றல் உடலை உலுக்கியது. தக்கையென உணர்த்தியது யாக்கை. புறாக்களின் முகுமுகுவென தொடரொலி அறையில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. ஜவ்வாதுடன் வித்தியாசமான பரிச்சயமற்ற புதுவித வாசனைத் திரவங்களின் பெருங்கமழ்ச்சி காற்றில் கலந்தோடியது. அது சுவாசத்தில் கலந்து நுரையீரலடியில் போய் உதரவிதானம் தொட்டு தொப்புழை இழுத்து உள் முதுகில் கட்டி வைத்தது.

பிரத்தியேக நுட்பத்துடன் நெருப்புக்கங்குகள் தரித்த கருங்குவளைக்குள் சாம்பிராணியும் இன்னும் பிற வாசனைப் பொடிகளும் கொண்டு ஊதியூதிப் பெருக்கப்பட்ட நறுமணப்புகை அறைமுழுதும் கிளர்ந்து மூடுகிறது. அறையில் விரவிப் பரவும் வேறுபட்ட வாசனைத் தைலங்களின் உள்ளூறல் மெய்யின் அத்தனை தாதுக்களையும் திரள வைத்து சூழ்ந்து தழுவும் வெண்ணாற்றல். ஐம்பூதங்களின் புராதன தாதுத்தொகுப்பாகத் தேனீக்களின் ஒலியற்ற ரீங்காரமாக மூள்கிறது உடல். மண்துகள்களூடேயான ஆகாச வெளியில் உடல் நீர்மைகொண்டு உட்சார்கிறது. பாலை மண்ணில் ஊற்றிய குவளை நீராக கணத்தில் நிலத்தினுள் இறங்கி மாயமாகி, தரையில் வெறுமனே தன் நீர்மைத் தடத்தைச் சில கணங்களுக்குத் தங்க வைத்துப் போனது.

திடுமெனத் தலைக்கு மேல் புறாவின் இறக்கையடிப்பு கூடியது. சாதாரணமாக அவை அவ்வப்போது உள்ளே வந்து சமாதியின் மேலுள்ள சாரங்களில் அமர்ந்து போகும். ஐம்பதடி உயரே கோபுரத்தின் உட்புறத்தில் ஒலியலைகளைப் பெருக்கி, மெருகேற்றி, அதிர்வெண்ணைக் கூட்டி, ஆலாபனைக்கு உள்ளாக்கி செவிகளுக்கு மதுரமாய், தெய்வாம்சமாய் கடத்தித் தரும் வெவ்வேறு வடிவ குழிந்த மினாராவின் மேற்புறங்கள் சுண்ண வெண்மைகொண்டு நிற்கும். இவற்றுக்கிடையில் அமையப்பெற்ற செவ்வக மாடங்களில் புறாக்கள் வந்துபோகும். அவ்வப்போது சடசடக்கும், குகுகுகுவென்றும் முகுமுகுவென்றும் பாடி கூடத்தின் அமைதியை அதிரப் பண்ணும்.

அன்று கடகடவென்ற சத்தமும் அதைத் தொடர்ந்து இறக்கைப் படபடப்பும் சேர்ந்து இறக்கை வழியான காற்று முதுகை வருடிப் போனது. அண்ணார்ந்து பார்க்கத் தன் பிணையுடன் குறுக்குச் சாரக்கம்பியில் சமன் குலையாதிருக்க அவ்வெண்புறாவின் முயற்சி இரைச்சலைக் கிளப்பியிருந்தது. படைப்பூக்கத்திற்கான நாளமில்லாச் சுரப்பிகளின் உச்ச விளைவு பிணைகளுக்குள்ளே செழித்தோங்கியது. தியானத்தின் உச்சத்தில் தலைக்கு மேல் கலவியில் திளைக்கும் மாடப்புறாக்களின் சிற்றின்பப் பிரியம் மனத்திற்கு எதுவாகவும் படவில்லை. கீழிருந்து அப்புறாக்களின் செழித்த மென் வயிற்றடியும் வெளிர் செம்பிஞ்சுக் கால்களும் தென்பட்டன. வெறுமனே புன்னகைக்க நேர்ந்தது.

புணர்ச்சியில் மெய்துய்த்து இன்பமறிந்து அப்பிணைகள் கூடிக் கூடிப்பிரிந்தன. புலன் வசம் தொலைத்து மெய்வழி சுரந்தூறும் உயிரின் பிரபஞ்ச உள்ளோட்டங்களூடே சமநிலை கொண்டு உயிரியல் ஆக்கத்திற்குத் தன்னை முற்றிலுமாய் சமர்ப்பித்து காம உச்சம் தொட்டு சமைந்து நிற்கையில் தண்டுவடம் ஏறி, தன்னுணர்வு பூரிதப்பட்டு தலையுச்சிக்கு மேல் மையம்கொண்டு சுழன்று திரளும் வாசத்தின் முழு வீச்சை கிரகித்து அண்டத்தின் தன்மையமாய் நின்றது விழிப்பு.

படைப்புருவில் ஈர்க்கப்பட்டால் சிற்றின்பம், படைப்புச்சாரத்தில் ஈர்க்கப்பட்டால் பேரின்பமாம். சாயுங்கால மக்ரீப் பிரார்த்தனை முடித்து முல்லா ஒருவர் துஆ பாடினார். அரபி மொழியின் இசைமொழி மாடச்சுவர்க் குழிகளில் பட்டுத் திரும்பி எவ்வொரு உயரிய தொழில்நுட்பக் கருவிகளைக் காட்டிலும் பிரம்மாண்டமான ஒலித்திரளை உருவாக்கி அதி ஊக்கமும் நாதமும் கூடிப் பொலிந்தது. சுவையூறிற்று. ‘மனிதர்களைப் படைத்திருப்பதிலும், பிற உயிரினங்களினூடே அவ்வாற்றல் விரவிக் கிடப்பதைக் காண்பதிலும் படைப்பின் சான்றுகள் உறுதிப்படுகின்றன’ என்றுணர்த்துகிறது குர்ஆன். வாத்தியங்கள் ஒன்றுமற்று வெற்றான நல்குரல் வளமிக்க துஆ முழக்கம் மினாராவின் உச்சிச் சுவர்களில் பட்டுத் திரும்பி அலையலையாக இறையாம்சத்துக்குள் இட்டுச் செல்கிறது. அரபி மொழிப் பாடலின் சுரக்குறிப்புகள் நரம்புமண்டலங்களின் சிகரங்களை வருடி வருடி உச்சத்திற்கு மீட்டிக்கொண்டு போயின. குட்டி வெண்குல்லாய் அணிந்த அச்சிறுவன் தனது வாப்பாவுடன் கால்மடக்கி அப்படியே அசையாது அமர்ந்திருக்கிறான், மிகச் சுலபமாக பல நிமிடங்களுக்கு. 

முடுக்கிவிடப்பட்ட மூலாதாரம் சிரசின் உச்சத்தை நாண் பூட்டி இழுக்கிறது. தேகத்தில் மூச்சுவழி சூல்கொண்ட ஆதார மையம் முதுகுத்தண்டு, உள்வால் நுனி, குரல்வளை, நெற்றிப்பொட்டு, விழிக்குழி, சிரசின் உச்சியெனத் தன் சூழல் குவியத்தை மாற்றி மாற்றிப்போனது. அடிவயிறு உட்சுருண்டு பின்முதுகுச் சுவர் தொட்டு உதரவிதானம் முழுதாய் நாணென விசைகொண்டு நிற்க, மூச்சு அப்படியே நிலைத்துத் தன்னை நிறுத்திக்கொள்ள, ஊர்த்துவ சுழல் தலைக்குமேல் திரண்டு நின்றது. மூச்சுக்காற்று நாசி நுனியில் சூழ் காற்றோடு கலந்து தன்வசமிழந்தது. கயிறு இழுத்துக் கட்டிய பாய் மரமாய் சுவாசிக்க காற்றின் ஆழ் உந்துதலில் விழிப்பூக்கம் கூடி தன்னுணர்வுவழி உடலின் அனைத்துத் துவாரங்களிலும் பாய்ந்தோடியது.

மூச்சு தன்னையே நெஞ்சுக்குழிக்குள் நிறுத்தி அசுரகதியில் முழு உடலைத் தனக்குள் மூழ்கடிக்கும் வெண்ணாற்றலில் இளைப்பாறி நிற்கிறது. ஊர்த்துவ சுழலாக மூச்சுக்காற்று சிரசில் திரட்சி கொண்டு மெல்ல மெல்லப் பரவி வளியோடு ஒன்றறக் கலந்து காணாமல் போனதின் விழிப்பாக உயிருக்குள் திளைக்கிறது. மேனி புறத்தோலில் சிலிர்த்திருக்க உள்ளே எண்பும் சதையும் ஆவியாகி கிளர்ந்து கரைந்து மாயத்தொகுப்பாய் அமர்ந்திருக்கிறது. ஒன்றரை மணிநேரம் புறாக்களின் மென்காற்றுச் சிறகடிப்பில் தவழ்ந்து தழுவிச் செல்லும் காற்றைப்போலக் கடந்து சென்றது.

துணை வாத்தியங்களோ, சுரப்பெட்டிகளோ இன்றி, தன் குரல்வளையையே இசையூற்றின் அனைத்து ஆக்கக்கூறுகளாகவும் விரித்து அம்மாலை வேளையில் முல்லாவின் ஓதுதல் முழங்கிற்று. பண்டிகை, சிறப்புக் காலங்கள் இல்லாத சாதாரண, ஓய்ந்த நாட்களில் இறை நினைப்பை வளர்க்கவென முறைப்படுத்தப்பட்ட தராவீஹ் பாடிவிட்டு தொடர்ந்து அல்குர்ஆன் துஆக்களை அரபியில் பாடினார். ‘நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்’. அற்புத குரலொலி அலைக்கற்றைகள் வெண்சுவர் வளைவுகளில் மோதித் திரும்பி ஒன்றை நூறெனப் பெருக்கி நுட்பமாய் அதிர்வைக் கூட்டி பிரதியொலியென காற்றுவழி செவிகளுக்குள்ளேறி உடலெங்கும் வியாபித்தது.

‘பூமியிலோ வானத்திலோ எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்துற்றதாய் இல்லை’. புறாக்கள் படபடத்துப் பறந்து திரும்பின. சின்னச் சின்ன மலை முகடுகளில் துரிதமும் இலாவகமும் கொண்டு ஏறுவதும் சரிவதுமாய் பாடலொலி உள்ளத்தைக் கிளர்த்தி இறைமையின் ஆதாரச் சுனைகளைச் சுரக்கச் செய்து உள்ளுக்குள் படிந்த யாவற்றையும் சுத்தமாய் கழுவித் துடைத்துப் போட்டு வெற்றென்றாக்கியது. ‘நீ ரஹ்மத்தாலும் ஞானத்தாலும் அனைத்து பொருட்களையும் சூழ்ந்திருக்கிறாய். உன்னிடமே எங்களின் மீளுதல் தங்கியிருக்கிறது’. கூடியிருந்தோர் அனைவரின் இருதயம் பாட்டுப் பொருளின் அர்த்தங்களை முழுதாக உணர்ந்து தமதனைத்தையும் ஒப்புக் கொடுப்பதாய் பாவனை தோன்றியது. அதில் நிறைவும் பூரண அமைதியும் தோய்ந்திருந்தது. தற்போதம் பரபோதமாகி காற்றில் விரிந்தது. மெய்யறிவின் மாயவுருக்கள் உடலுக்குள் புகுந்தோடின. 

நெருப்பாற்றின் தண் சுனைத் தழல் செம்பொழிலாய்க் கசிந்தோடிற்று. நெருப்பற்று தண்ணென்ற ஒலிநீர்மையில் தேகம் வெந்து, பாடல் முடிவில், மெல்லத் தணிந்தது உடலெனும் காடு. தழல் ஆற்றல் தீரத்தில் தமதென்றும் பிறிதென்றும் ஏதுமற்றுப் போனது. ‘நிச்சயமாக, நீயே கேட்பவராகவும் அறிபவராகவும் இருக்கின்றாய்’. இறையம்சம் பொதிந்த அம்மாலை வேளையில் அறையில் கமழும் புகையும் நறுமண தைலமும் துஆவோடு கரைந்து காற்றில் படிந்து கலந்தது. சரண்புகப் பணிந்து எழ, சரணடைய உள்ளே ஏதுமற்று உணர்த்தியது. சரண் அளிக்கப் பாத்திரமற்று இருந்தது. கொள்ளளவு என்றெதுமின்றிப் போனது. பாத்திரம் நழுவி விட்டிருந்தது. எதைச் சரணுக்குட்படுத்த? மெல்ல எழுந்து சமாதியின் காலடியை மீண்டுமொருமுறை தொட்டு வணங்கி வெளி நடக்க தேகம் இலேசாகக் கடந்தது நடைவழியை. மாடப்புறாக்கள் பாடலொன்றை உதிர்த்தன.

‘உன்னதங்களின் மென்னூற்றுச் சுனை 

அடர் திரட்டாய் ஆற்றல்…

நாட்டங்கள் அடங்கி 

வழுவுதல் அன்றி 

அறிதற்கரிய சுடர்ந்தெழும் சூழமைவில்

அகப்பெருவெளி சுவைத்துத் தொழுது  

உள்ளுணர்வாய் விளங்கி 

உள் வெளி தான் பிற ஏதுமற்று  

செம்பொருள் பொலிந்த 

செவ்வருட்காட்சி… 

 திளைக்காமல் திளைக்கும் 

அவ்வுலகில் இப்பிறப்பு’  

தர்கா வாசலில் தொழுநோய் கண்ட முதியவரின் மேல் குட்டிப்பூனைகள் இரண்டு மடியேறி விளையாடின. அவரது சிதைவுற்ற மொட்டை விரல்கள் ஈகை உள்ளங்களின் குறுங்கொடைகளை வேண்டி உயிர் பிழைத்துக் கிடைப்பதற்கான குறைந்தபட்ச விருப்புடன் தயங்கி நீண்டன. பணத்தாள் ஒன்றை அவ்விரலிடுக்கில் செருகித் திரும்புகையில் வெளிதேசத்தில் எங்கிருதோ வந்திருந்த இஸ்லாமிய புண்ணியத்தலம் பயணிக்கும் கூட்டமொன்று மெல்ல காரிலிருந்து கலைந்து இறங்கிற்று. 

புறாக்கூட்டமொன்று வாசலண்டை நின்றிருக்கும் பெருந்தூணிலிருந்து புறப்பட்டு வளாகத்தை வட்டமிட்டுத் திரும்பியது. பறந்து திரியும் அவற்றின் நிழலுருக்கள் உயர் மாடங்களில் படர்ந்து மறைந்தன. வந்துபோகும் மக்கள் தரையில் பரப்பும் தானியங்களைத் தின்று தணிகின்றன புறாக்கள். அவற்றுக்கு வளாகத்தின் பூரண நிறைவில் தழைத்து பெருகி நல் இளைப்பாறுதல் இயல்பாக நிகழ்ந்தது. அப்புறாக்களைப் போன்றே சிலர் அங்கேயே கிடக்கிறார்கள் லுங்கியும் நீள்தாடியும் வெண்சட்டையுமாய். 

‘நீங்கள் அவரைக் காண இயலாவிடினும் கட்டாயம் அவர் உங்களை எப்போதும் பார்க்கிறார்’ எனும் ரூமியின் பாடல் நினைவில் வந்தது. தன்னுணர்வுக்குள் விழிப்பு எப்போதும் பார்த்தே இருக்கிறது. அதில் உள்ளென்றும் புறமென்றுமில்லை, இருமையும் ஓர்மையும், நன்மை தீமை என்றேதுமில்லை என்றுணர்த்தியது. இறைவழி மக்கள் முஃமின்கள். மினாராவின் மாடங்களிலும் சாரங்களிலும் அண்மை மரத்தொகுப்புகளிலும் அமர்ந்திருக்கும் புறாக்கள் முஃ…மின்… முஃ…மின்… முஃ…மின்களென எப்போதும் கூவி விளிப்பது யாராக இருக்கும்?

2 comments

V.MATHARASI January 31, 2022 - 12:31 pm

Honstely a Woderful job. Very many words are very new to myself. I have learned a lot. A big thanks to the writer may God bless him.

ஹனீஸ் February 12, 2022 - 7:37 pm

வார்த்தைகளெறும் ககையாடல்.

வாழ்த்துக்கள்

Comments are closed.