The White Ribbon: திரைக்கதை (பகுதி 3) – மைக்கேல் ஹனகே

1 comment

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

21. வெளியே / பகல்: பண்ணை வீட்டுத் திடல்

விருந்து தடபுடலாக நிகழ்கிறது. மக்கள் உரக்க ஆடிப் பாடி மகிழ்கின்றனர். சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடி ஆடுகின்றனர். இளைஞர்கள் அரிவையர் முன்பு தம்மை மிடுக்காகக் காட்டிக்கொள்கின்றனர்; சண்டையிட்டும் கொள்கின்றனர். மங்கையர் குழுக்களாகச் சேர்ந்து அலர் பேசுகின்றனர். சில உழவர்கள் நிலக்கிழாரைச் சுற்றி நட்புணர்வுடன் பேசுகின்றனர். அவர்கள் பேசுவது நமக்குக் கேட்கவில்லை. 

நரம்புத் தளர்ச்சிகொண்ட சீமானது மனைவி இந்தக் கும்பல்களைக் கடந்து எதையோ பார்க்கிறாள். பள்ளியாசிரியருடன் பேசிக்கொண்டிருக்கிறாள். 

பீட்ரிக்ஸ்

உங்களுடைய ஞானச்சிறுவர்களைக் கொண்டு ஒரு குழுப்பாடலைப் பாடவிருப்பதாக உறுதியளித்திருந்தீர்கள்தானே?

பள்ளியாசிரியர்

நீங்கள் போதகரிடம் அதுகுறித்துப் பேசினால் நல்லது சீமாட்டியே. நாங்கள் இன்னும் பெருவிழாவிற்காக ஒரு குழுப்பாடலைப் பயில்வதில் முனைப்புடன் இருந்து வருகிறோம்.

பீட்ரிக்ஸ்

(ஆச்சரியத்துடன்)

ஆனால் அவ்விழாவோ குளிர்காலத்தில்தானே நடக்கும்! நாம் இப்போதுதான் இலையுதிர்காலத் தொடக்கத்தில் இருக்கிறோம்.

பள்ளியாசிரியர்

(சங்கடத்துடன் புன்னகைத்தவாறு)

ஆம், உண்மைதான். ஆனால் என்னுடைய எல்லா சிறு பாடகர்களும் அத்தனை சிறப்பான இசைக்கலைஞர்கள் என்று சொல்ல முடியாது. மன்னிக்கவும்.

22. வெளியே / பகல்: பண்ணை வீட்டுத் திடல்: எலுமிச்சை மரத்தடியில்.

மாளிகையிலேயே அமைதியான இடம்.

பெரிய நிழல்தரும் மரத்தினடியில் நிலக்கிழாரின் குடும்பத்தினர் இருவர் நடை முடித்து வருவதைக் காண்கிறோம். சிறிய மேசை. சில நாற்காலிகள். ஏவா இரட்டையர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தவாறு வண்ணமயமான விழாக்கோலத்தைக் கண்டு இரசிக்கிறாள். அவளுக்கு அருகே மாளிகைக்கு முதுகு காட்டி தன் குழந்தைக்கு முலையூட்டுகிறாள் மேற்பார்வையாளனின் மனைவி எம்மா. மேற்பார்வையாளர் ஆண்களது அணியில் இருந்து பிரிந்து அந்த இரு பெண்டிரை நோக்கி வருகிறார். வந்தபடியே அவர்களை நோக்கி உரக்கப் பேசுகிறார்.

மேற்பார்வையாளர்

இரு தாய்மார்களே! இந்த விழாவில் பங்கெடுக்க உங்களுக்கு ஆர்வமில்லையா?

தன்னையும் தாய்மார் என்று குறிப்பிட்ட இந்த நகைச்சுவைக்கு எப்படி மறுவினை ஆற்றுவது என்று புரியாது மேற்பார்வையாளரின் மனைவியைப் பார்க்கிறாள் ஏவா. ஆனால் அப்பாவித்தனமான அவளோ தன் கணவர் சொல்லும் எத்தகைய நகைச்சுவைக்கும் சிரிக்கக்கூடியவள். அவரை நோக்கிச் சொல்கிறாள்.

எம்மா

இங்கு நிழல் இனிமையாக இருக்கிறது.

மேற்பார்வையாளர் அருகே வந்து சேர்கிறார். அவர் குழாய் புகைத்தபடி இருக்கிறார்.

மேற்பார்வையாளர்

(மகிழ்ச்சியான மனநிலையில்)

நம் மகன் அதை மிக இரசித்து உறிஞ்சுவது போலத் தெரிகிறதே.

எம்மா

ஆமாம்.

மேற்பார்வையாளர்

என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. யாருக்குத்தான் அது பிடிக்காமல் போகும்.

எம்மா

(அவரை மென்மையாகக் கடிந்தாள்)

ஜியார்ஜ்!

மேற்பார்வையாளர்

(ஏவாவிடம்)

நீ என்ன நினைக்கிறாய்? அங்கிருக்கும் இளைஞர்களோடு சேர்ந்து களிக்காமல் பிறருடைய குழந்தையைப் பேணிக் காத்து அமர்ந்திருப்பதால் உனக்குச் சலிப்பு உண்டாகவில்லையா?

ஏவா

(தயக்கத்துடனும் வரவழைக்கப்பட்ட மகிழ்ச்சியுடனும்)

இல்லை அய்யா. நான் குழந்தைகளோடு இருப்பதை மிகவும் விரும்புகிறேன்.

அவர் தன் மனைவியை ஒருகணம் பார்த்துவிட்டுப் பிறகு ஏவாவின் அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்கிறார்.

மேற்பார்வையாளர்

சரி, உனக்கு என்ன வயதாகிறது?

ஏவா

பதினெட்டு, அய்யா.

மேற்பார்வையாளர்

பதினெட்டு. இந்த வயதில் உன் காதலனை மடியில் ஏந்துவதற்குப் பதிலாக முதலாளியம்மாவின் குழந்தையை ஏந்துவதுதான் பிடிப்பதாக நீ சொல்வதை நான் நம்ப வேண்டுமோ?

எம்மா

(பண்புடன்)

ஜியார்ஜ்! அவளை விடுங்களேன்.

மேற்பார்வையாளர்

நான் அவளை ஒன்றும் தொந்திரவு செய்யவில்லையே. எம்மா எங்களுக்கு உண்ண ஏதும் கிடைக்குமா?

ஏவா

(எழுந்து எம்மாவின் அருகே சென்று)

குழந்தையைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டீர்கள் எனில் நான் சென்று அனைவருக்கும் உண்ண ஏதேனும் எடுத்து வருகிறேன்.

மேற்பார்வையாளர்

(அவரும் எழுகிறார்)

அஞ்சாதே இளவரசியே. நான் கிளம்புகிறேன். பீதியடையத் தேவையில்லை.

23. வெளியே / பகல்: பண்ணை வீட்டிலிருந்து காய்கறித் தோட்டத்திற்குச் செல்லும் பாதை.

தங்களது விடுமுறை நாள் உடைகளில் சிறப்பாகத் தோற்றமளிக்கும் 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் இருந்தனர். அவர்களுள் மேரி, மார்டின் இருவரும் தம் கைகளில் வெள்ளை நாடாக்களைக் கட்டியிருந்தனர். போதகருடைய மற்ற குழந்தைகளான செனியா, ருடோல்ஃப் ஆகியோருடன் ஹேன்ஸ், லிஸல், ஜியோர்ஜ், ஃபெர்டினாண்ட், சிஜி ஆகியோரும் அங்கு இருந்தனர். 

அவர்கள் மாளிகையிலிருந்து கிளம்பி வயல்களை நோக்கி நடந்தனர். காய்கறித் தோட்டத்தைக் கடந்து செல்லும்போது முட்டைகோஸ்கள் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு நின்றனர். சில அதைப் பார்த்துச் சிரிக்க, வேறு சிலர் தயக்கத்துடன் காணப்பட்டனர். பெரும்பாலான சிறுவர்கள் வயல் வெளிக்குள் ஓடினர்.

24. வெளியே / பகல்: பண்ணை வீடு. கொட்டகைக்கு வெளியே. 

பண்ணைத் தொழிலாளர்களும் குத்தகைதாரர்களும் மேசையைச் சுற்றி அமர்ந்து உண்டனர். அதிலொருவர் சொல்லும் கதை, சுற்றியிருக்கும் இரைச்சலால் நமக்கு அரைகுறையாகக் கேட்கிறது.

முதல் குத்தகை உழவன்

.. அந்த ஆள் கூண்டின் உச்சியிலிருந்து சேவலைத் திருடும் முயற்சியில் மிகுந்த களைப்படைந்திருந்தான். முழுமையாகச் சோர்ந்திருந்தபோதும் அவனை யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை. பேருடலன் பாருங்கள். அவர்கள் ‘விழுந்தால் விழட்டும். அதோடு முடிந்துவிடும்’ என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டனர். ஆனால் முதல் சாளரம் இருந்த தட்டிவரைதான் அவனால் செல்ல முடிந்தது. தன் வலுவைத் திரட்டியும் இடிதாங்கி மீது அவனால் ஏற முடியவில்லை என்பதால் சாளரத்திலேயே நின்றான். அந்த மடையன் என்ன செய்தான் என்று நினைக்கிறீர்கள்? காகம் போலக் கரையத் தொடங்கினான்! ‘நான்தான் உச்சிக்கோபுரத்தில் இருக்கும் சேவல்; என்னை உங்களால் ஒருபோதும் பிடிக்க முடியாது’ என்று உரக்கக் கத்தினான். அண்டை அயலார் எல்லாம் சத்தம் கேட்டு விழித்தெழுந்தனர். அப்படியொரு கூத்தினை நடத்திவிட்டான்..

அதே சமயம் வேறுசிலர் ஆர்பரித்தபடி அங்கு வந்து சேர்ந்தனர். 

பண்ணைத் தொழிலாளர்கள்

இன்னும் வேண்டும், மது வேண்டும், இல்லையெனில் நான் விழுந்து விடுவேன்! ஆஹா!

இன்னும் வேண்டும், மது வேண்டும், இல்லையெனில் நான் விழுந்து விடுவேன்!

எனக்கு மது பரிமாறாத நிலக்கிழார் இன்னும் 

தூக்கிட்டுக்கொள்ளவில்லையா என்ன?

இன்னும் வேண்டும், மது வேண்டும், இல்லையெனில் நான் விழுந்து விடுவேன்!

சிரிப்பொலி. ஃபிரான்ஸின் தங்கை லெனியும் இன்னொரு பெண்ணும் உழவர்களின் தாகத்திற்கேற்ப தங்களால் இயன்றவரை விரைந்து பரிமாறினர். அவ்விரு பெண்களும் மனமார்ந்து பணிசெய்ய முயன்றபோதும் விருந்தினர்களின் ஆபாசமான நகைச்சுவையும் நாகரிகமற்ற சைகைகளும் அவர்களுக்குச் சிரமம் தந்தன.

லெனி

இருங்கள் வருகிறேன். என்னிடம் மாயக்கோல் ஒன்றும் இல்லை.

முதல் பண்ணைத் தொழிலாளன்

(அசட்டுச் சிரிப்புடன்)

நான் வந்து உதவட்டுமா லெனி? உனக்கு உதவத்தான் ஏங்கியிருக்கிறேன்.

இரண்டாவது பண்ணைத் தொழிலாளன்

(அவனும் அசட்டுச் சிரிப்புடன்)

அவளுக்கு என்ன உதவி செய்ய உத்தேசம்?

பெரும் சிரிப்பு.

முதல் பண்ணைத் தொழிலாளன்

எல்லா உதவியும்தான். முன்னும் பின்னும் ஒன்றுவிடாமல்.

சிரிப்பு அதிகமாகிறது. 

மூன்றாவது பண்ணைத் தொழிலாளன்

(லெனியிடம்)

சீமானிடமும் இப்படித்தான் மெதுவாக நடந்துகொள்வாயா?

இரண்டாவது குத்தகை உழவன்

அவளைச் சீண்டாமல் இரு.

இரண்டாவது பண்ணைத் தொழிலாளன்

உனக்கு அவளை அவ்வளவு பிடிக்குமெனில் நீ சென்று உதவிசெய்.

நான்காவது பண்ணைத் தொழிலாளன்

(இரண்டாவது பண்ணைத் தொழிலாளன் அருகே அமர்ந்தபடி இரகசியக் குரலில்)

இவளது அம்மாவுக்குத்தான் விபத்து நடந்தது. உனக்குத் தெரியாதா?

அதே சமயம் ஒரு பத்து வயதுச் சிறுவன் முதல் பண்ணையாளிடம் வந்து இடைமறித்துச் சொன்னான்.

சிறுவன்

அப்பா, யாரோ சீமானுடைய முட்டைகோஸ்களை எல்லாம் வெட்டிவிட்டார்கள்.

முதல் பண்ணைத் தொழிலாளன்

என்ன?

சிறுவன்

(இளித்தபடி)

சீமானுடைய முட்டைகோஸை எல்லாம் வெட்டிவிட்டார்கள். 

மேசையில் சில கண்ணாடிக் குவளைகளில் மதுவை வைத்தபடியே வியப்புடன் அந்தச் சிறுவனைக் கண்கொட்டாமல் பார்த்தாள். 

25. வெளியே / பகல்: பண்ணைத் திடல். நடன மேடை.

மேடையில் ஏவாவும் பள்ளியாசிரியரும் நடனமாட முயல்கிறார்கள். இருவருக்குமே நடனமாடும் திறமை இல்லை. ஏவா சங்கடத்துடன் தன் பாதங்களையே பார்த்து சிரித்தவண்ணம் இருக்கிறாள்.

ஏவா

நான் ஒருபோதும் இதைக் கற்கவில்லை.

பள்ளியாசிரியர்

(புன்னகைத்தவாறு)

நானும்தான். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் சத்தமாக நடன அடிகளை எண்ணுதல் மட்டுமே. ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று..

அவர்கள் அகலமாக அடிவைத்து ஆடுகின்றனர். நடனம் விகற்பமாக இருக்கிறது. அவர்கள் சங்கடப்பட்ட போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். சில நடன அசைவுகளுக்குப் பிறகு பேசிக்கொள்கின்றனர். 

ஏவா

இப்படி நீங்கள் என்னோடு நடனமாடுவதைப் பார்த்து உங்கள் மாணவர்கள் சிரிக்கக்கூடும் என்ற அச்சம் இல்லையா அய்யா உங்களுக்கு?

பள்ளியாசிரியர்

சிரிக்காமல் இருப்பதுதான் அவர்களுக்கு நல்லது. என்னிடம் இத்தனை முறைமை பின்பற்றத் தேவையில்லை. எனக்கொன்றும் அத்தனை வயதாகிவிடவில்லைதானே?

ஏவா சிரிக்கிறாள். தயக்கத்துடன் நிலம் நோக்குகிறாள்.

ஏவா

ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று. 

பள்ளியாசிரியர்

பாரேன். இப்போது இருவரும் முன்பைவிட நன்றாகவே ஆடுகிறோம்.

ஏவா

ஆமாம்

பள்ளியாசிரியர்

உன் பாதங்களையே பார்ப்பதை நிறுத்து.

அவள் தலையை உயர்த்தி அவரைப் பார்க்கிறாள். தடுமாறுகிறாள். அவர்கள் சிரித்து மீண்டும் நடனத்தைத் தொடர்கிறார்கள். 

26. வெளியே / பகல்: காய்கறித் தோட்டம். 

மாளிகையைக் கடந்து கிராமத்தினரது இசை சன்னமாய்க் கேட்கிறது. 

காய்கறி வயலுக்கு சீமாட்டி வந்து சேர்கிறாள். அதன் பிறகு போதகரின் மனைவி, இசையாசிரியன், கிராமத்திலிருந்து சில பெண்கள் ஆகியோர் வந்து சேர்கின்றனர். தட்டியைக் கடந்து சிரச்சேதம் செய்யப்பட்ட முட்டைகோஸ்களின் நடுவே சீமானும் மேற்பார்வையாளனும் சில உழவர்களும் கூடி நிற்கின்றனர். ஒரு சில ஆர்வமான கிராமத்தினரும் அங்கு நின்று வேடிக்கை பார்க்கின்றனர். அவ்வப்போது முனகலும் சிரிப்பொலியும் கேட்கிறது. 

சீமான் தன் மனைவியை நோக்கித் திரும்பி தன்னைச் சுற்றிக் கிடக்கும் முட்டைகோஸ் தலைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

சீமான்

நல்ல வேலை செய்திருக்கிறார்கள், இல்லையா?

எத்தனை பெரிய சிதைவு என்பதை விரிவிழியால் பார்த்துவிட்டு சிடுசிடுப்புடன் பேசினாள் சீமாட்டி.

சீமாட்டி

கொடுமை 

அவர்களை நோக்கி அருகே வந்த மேற்பார்வையாளர் தன் எஜமானர்களிடம் மெல்லிய அங்கதத்துடன் அணுகுகிறார்.

மேற்பார்வையாளர்

இது ஒரு பழைய சடங்கு!

(ஒரு பாட்டை மேற்கோளிட்டுக் காட்டுகிறார்.)

அறுவைக் காலம் முடிந்தது பணம்

பெறும் காலம் வந்தது

எந்தக் கருமியேனும் எங்களை விட்டுவிட்டால்

அந்த வயலின் முட்டைகோஸ் தலைகள் வெட்டப்படும்!

இந்தக் குறியீட்டுத்தனமான பாடலை முற்றாகவே வெறுத்த சீமாட்டி அவரைச் சற்று நேரம் முறைத்துப் பார்த்துவிட்டு திரும்பி முட்டைகோஸ் கொலைக்களத்தைப் பார்க்கிறாள். சடுதியில் திரும்பி அங்கிருந்து அகன்று மாளிகையை நோக்கிச் செல்கிறாள். அவள் நடக்கும்தோறும் அங்கு நிற்பவர்கள் விலகி வழிவிடுகின்றனர்.  

27. உள்ளே / மாலை: போதகரது மனை. படிப்பறை.

போதகர் தன் மேசையில் அமர்ந்து வேலை செய்கிறார். சடுதியில் கதவைத் தட்டும் ஓசை கேட்கிறது. 

போதகர்

(நிமிர்ந்து பார்த்து)

உள்ளே வாருங்கள்.

ஃப்ளோரியன் தயக்கத்துடன் உள்ளே வருகிறான்.

போதகர்

என்ன வேண்டும் உனக்கு?

ஃப்ளோரியன்

(நாணமும் அச்சமும் கலந்த பாவனையுடன்)

அப்பா, உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.

போதகர்

என்ன? சொல்.

சிறுவன் மேசைக்கு அருகில் வருகிறான். தன் சட்டையின் சில பொத்தான்களை அவிழ்த்து உள்ளிருந்து எதையோ எடுக்கிறான். சட்டை திறந்ததும் சிறு பறவை ஒன்றின் தலை நமக்குத் தெரிகிறது.

போதகர்

அதற்கு என்னவாயிற்று?

ஃப்ளோரியன்

இதை நான் கண்டெடுத்தேன். இதற்கு காயம் பட்டிருக்கிறது.

சிறு அமைதி.

போதகர்

உனக்கு என்ன வேண்டும்?

ஃப்ளோரியன்

(மன்றாடும் குரலில்)

நான் இதை வைத்துக்கொள்ளட்டுமா?

சிறு அமைதி. 

தன் கடைசி மகனின் இந்தக் கோரிக்கையைக் கேட்டு உணர்ச்சி வயப்பட்டாலும் போதகர் அதை வெளிக்காட்டாமல் கரந்துகொள்கிறார்.

போதகர்

அதை வைத்து என்ன செய்யப் போகிறாய்?

ஃப்ளோரியன்

காயத்தை ஆற்றுவோம்.

போதகர்

(மென்மையான குரலில்)

காயம் ஆறிய பிறகு?

அதற்கு என்ன பதில் சொல்வதென அறியாமல் தன் வட்டமான விழிகளால் அவரைப் பார்க்கிறான் ஃப்ளோரியன். என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் விழிக்கிறான். போதகர் தொடர்ந்து பேசுகிறார்.

போதகர்

அதன் பின்னர் அதனோடு நீ மிக நெருக்கமாகி விடமாட்டாயா? உண்மையாகவே அதைப் பறக்கவிட உன்னால் முடியுமா?

ஃப்ளோரியன் சிந்திக்கிறான். மேசைக்குப் பின்னால் இருந்த கூண்டினைப் பார்த்து ஆமோதித்துத் தலையசைக்கிறான். 

ஃப்ளோரியன்

‘பிப்ஸி’யும் கூண்டில்தானே வசிக்கிறது?

ஒரு கணம் போதகர் அந்தக் கூண்டைப் பார்க்கிறார். தன் புன்னகையைக் கரந்தபடி ஃப்ளோரியனை நோக்கித் திரும்புகிறார். 

போதகர்

ஆமாம். ஆனால் பிப்ஸி பிறந்தது முதலே கூண்டிலேயே வளர்கிறது. (தன் புருவத்தால் ஃப்ளோரியனிடம் இருந்த பறவையைச் சுட்டிக்காட்டி) ஆனால் இது சுதந்திரமாக வாழ்ந்து பழகிய ஒன்றல்லவா?

என்ன பதில் சொல்வதென அறியாமல் மீண்டும் விழிக்கிறான் ஃப்ளோரியன். தன் தந்தையை இறைஞ்சும் விழிகளால் கூர்ந்து பார்க்கிறான். 

போதகர்

(மீண்டும்)

அதற்கு காயம் ஆறிய உடனே அதைச் சுதந்திரமாகப் பறக்கவிடுவாயா?

ஃப்ளோரியன் தலைகுனிந்து கனத்த இதயத்துடன் ஆமோதித்துத் தலையசைக்கிறான்.

போதகர்

அம்மாவிடம் ஏற்கெனவே கேட்டுவிட்டாயா?

ஃப்ளோரியன் ஆர்வத்துடன் தலையசைக்கிறான்.

போதகர்

அப்படியானால், அவர்கள் என்ன சொன்னார்கள்?

ஃப்ளோரியன்

அப்பாதான் முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

போதகர்

(மெல்லிய புன்னகையுடன்)

அப்படியா சொன்னார்கள்? 

ஃப்ளோரியன் தலையாட்டிவிட்டு ஆர்வமான விழிகளால் அவருடைய பதிலை எதிர்பார்த்து நிற்கிறான். 

போதகர்

நீ உண்மையாகவே இதைக் கவனித்துப் பார்த்துக்கொள்வாயா? அது மிகப் பெரிய பொறுப்பு. புரிகிறதா?

தன் தந்தை எதிர்ப்பாக இல்லை என்பதை உணர்ந்தவனாய், ஆர்வத்துடன் ஆமோதித்துத் தலையசைக்கிறான் ஃப்ளோரியன்.

போதகர்

சரி. இனி நீதான் அதற்குத் தந்தையும் தாயும். 

இப்போது ஃப்ளோரியன் இன்னும் வேகமாய் தலையசைக்கிறான். போதகர் சிரிப்பைச் சிரமப்பட்டு அடக்குகிறார். 

போதகர்

முதலில் உன்னுடைய நோயாளிக்கு நாம் ஒரு கூண்டை உருவாக்க வேண்டும். 

ஃப்ளோரியனால் நம்ப முடியவில்லை. தன் தந்தையை அணைத்துக்கொள்ளத் துடிக்கிறான். ஆயினும் அத்தனை தைரியம் அவனுக்கு வரவில்லை. எனவே அங்கு நின்றபடியே மகிழ்ச்சியுடன் தோன்றுகிறான்.

ஃப்ளோரியன்

நன்றி அப்பா! 

28. வெளியே / மாலை: உழவரின் வீட்டுக்குச் செல்லும் பாதை. 

லெனி முகத்தில் ஆச்சரியத்துடன் நடந்து வருகிறாள். ஓடுவதைப் போல விரைந்து நடக்கிறாள். பண்ணையை அடைந்தது உள்ளே சென்று மறைகிறாள். 

29. உள்ளே / மாலை: உழவரின் வீடு. அறை.

குடும்பமாக அமர்ந்து உண்கிறார்கள். அவர்கள் விழாவில் கலந்து கொள்ளாததால் வேலை செய்யும் உடையிலேயே இருக்கிறார்கள். லெனி மட்டும் விழாவின் உடையை அணிந்துகொண்டு அப்போதுதான் அறைக்குள் நுழைகிறாள். அவளுக்கு மூச்சிரைக்கிறது. ஆர்வமாகத் தோற்றமளிக்கிறாள். உழவர் மிகவும் கவனச்சிரத்தையுடன் இருக்கிறார்.

உழவர்

(ஃபிரான்ஸிடம்)

இது உண்மையா?

ஃபிரான்ஸ்

(சினத்துடன், உண்டபடியே)

எனக்கு எதுவும் தெரியாது.

உழவர்

(அச்சுறுத்தும் தொனியில்)

இது – உண்மையா?

ஃபிரான்ஸ்

(அவரைப் பார்த்து வெறியுடன்)

எதுவுமே உண்மை இல்லை! அப்படியே உண்மையாக இருந்தால் மட்டும் என்ன? அந்தக் கருமிக்கு அது தகுந்ததுதான்!

உழவர்

(தன்னைக் கட்டுப்படுத்த கடுமையாக முயன்றபடி)

நீ அதைச் செய்தாயா, இல்லையா?

ஃபிரான்ஸ் பதிலளிக்காமல் தொடர்ந்து தின்றுகொண்டிருந்தான். 

லெனி

யாரோ உன்னைப் பார்த்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

ஒரு கணம் அமைதியாக அமர்ந்திருந்த ஃபிரான்ஸ் சடுதியில் உரக்கப் பேசுகிறான்.

ஃபிரான்ஸ்

(லெனியிடம்)

அதனால் என்ன? அவர்கள் தலை எஞ்சியதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியடை வேண்டும். (உழவரிடம் திரும்பி) அப்பா இதைக் கேளுங்கள். அந்தச் செயல் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்!

இதைக் கேட்டதும் அவன் கன்னத்தில் வலுவாக அறைகிறார் உழவர். ஃபிரான்ஸ் குதித்தெழுகிறான்.

உழவர்

(ஃபிரான்ஸைக் கண்ணுறாமலேயே உத்தரவிடும் தொனியில்)

உட்கார்! 

ஒரு கணம் ஃபிரான்ஸ் எப்படி மறுவினை புரியப்போகிறான் என்று நமக்குத் தெரியவில்லை. மூலையில் இருந்த பலகையில் தம் சகோதர சகோதரிகளுக்கிடையே அமர்ந்திருந்ததால் அவனால் எங்கும் நகரமுடியவில்லை. அனைவரும் சங்கடத்துடன் அமர்ந்திருக்க எதிரில் அமர்ந்திருக்கும் பவுல் மட்டும் நிமிர்ந்து அவனைப் பார்க்கிறான். ஃபிரான்ஸ் மீண்டும் அமர்கிறான். அமைதி. தன் தட்டையே பார்த்து அமர்ந்திருக்கும் உழவர் சிரமப்பட்டு அமைதியாகப் பேச முயற்சி செய்கிறார். அது அவர் குரலில் பிரதிபலிக்கிறது. 

உழவர்

நீ என்ன செய்யலாம் என்ற உத்தேசத்தில் இருக்கிறாய்?

ஃபிரான்ஸ் பதிலளிக்காததால் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்கிறார். அவன் திரும்பிக்கொள்கிறான்.

உழவர்

ம்.. என்ன? பதில் சொல்.

ஃபிரான்ஸ் அவரை நேருக்கு நேர் முறைத்துப் பார்க்கிறான். உழவர் இன்னும் மென்மையாகப் பேசுகிறார்.

உழவர்

ம். சொல்.

ஃபிரான்ஸ்

(பேச இயலாதவனாய்)

எல்லாம் உங்களுக்கே தெரியும் தந்தையே!

உழவர்

(நெடிய அமைதிக்குப் பின்)

உன் அம்மாவின் மரணத்தாலா? அவர்கள்தான் அவள் மரணத்திற்குக் காரணம் என்று நீ கருதுவதாலா? அதுதானே? இந்தத் துன்பத்திற்கு நிவாரணம் செய்யும் அளவு நான் ஆண்மைகொண்டவனல்ல என்று நீ நினைப்பதாலா? அப்படித்தானே நினைக்கிறாய்?

ஃப்ரான்ஸ் தொடர்ந்து முறைத்தபடி அமைதியுடன் இருக்கிறான். தந்தை நேரே பார்த்தபடி அமைதியைக் காக்க முயன்றபடி இருக்கிறார். அவர் கரண்டியால் பாலுணவை இரண்டு முறை எடுத்து உறிஞ்சுகிறார். கரண்டியைக் கீழே வைத்துவிட்டு மீண்டும் ஃபிரான்ஸைப் பார்க்கிறார்.

உழவர்

உன் செயல்கள் இந்தக் குடும்பத்தை எப்படிப் பாதிக்கும் என்று ஒருமுறையாவது யோசித்துப் பார்த்தாயா? நம் தலைக்கு மேல் வெள்ளம் போகாமல் ஓராண்டாகக் காப்பாற்றிய லெனியின் வேலை போய்விட்டால் என்னவாகும்? இனி கோடையில் நம்மால் அங்கு வேலை செய்யவே முடியாமல் போய்விட்டால் என்னவாகும்?

பொறுமையின்றி அசைந்த ஃபிரான்ஸ் தன் கரண்டியை எடுத்து தின்பதைத் தொடர முற்படுகிறான். உழவர் அவன் கையைப் பிடித்து கிழே வேகமாக வைக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர். ஒருகணம் என்னவாகப் போகிறது என்று நமக்குத் தெளிவில்லை. 

உழவர்

நீ மணமுடித்து இரண்டு ஆண்டுகளில் இந்தப் பண்ணையின் பொறுப்பேற்கத் தயாராக இருக்கிறாயா? மாளிகையின் உதவி இல்லாமல் இவர்கள் அனைவருக்கும் எப்படி உணவளிக்கப் போகிறாய்? (மற்ற பிள்ளைகள் அனைவரின் தலைகளையும் சுட்டிக் காட்டுகிறார்.)  

ஃபிரான்ஸ் தலையைத் திருப்பிக்கொள்கிறான். அவர் பேச்சை அவன் ஏற்கவில்லை என்றபோதும் என்ன பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. 

உழவர்

சரி. அவர்கள்தான் பொறுப்பு என்று எப்படி உனக்குத் தீர்க்கமாகத் தெரியும்?

ஃபிரான்ஸ் அவரை நோக்கி வெடுக்கெனத் திரும்பினான்.

ஃபிரான்ஸ்

அவர்கள் அதற்குப் பொறுப்பில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

புருவம் உயர்த்தி உழவர் ஃபிரான்ஸைப் பார்க்கிறார். ஒரு நெடிய அமைதி. 

உழவர்

(அமைதியாக)

எனக்குத் தெரியாது.

இன்னொரு அமைதிக்குப் பின்.

உழவர்

எனக்கு அவர்கள்தான் பொறுப்பு என்றும் தெரியாது.

30. உள்ளே / இரவு: மாளிகை. மாடிப்படிகள். 

கீழே நின்றுகொண்டு படிகளின் மேல் நிற்கும் இசையாசிரியனைப் பார்த்துக் கத்துகிறார் சீமான்.

சீமான்

‘அங்கே இல்லை’ என்றால் என்ன அர்த்தம்?

இசையாசிரியன்

அவனைக் காணோம். நான் ஏற்கெனவே எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டேன். என்னால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சீமான்

மடத்தனம். அவன் என்ன காற்றில் கரைந்தா போயிருப்பான்? அவனை எப்போது நீ கடைசியாகப் பார்த்தாய்?

இசையாசிரியன்

இரண்டு மணியளவில்

சீமான்

(சினம் பொங்க)

இரண்டு மணியா? இப்போது மணி என்ன தெரியுமா?

இசையாசிரியன்

(குற்ற உணர்வுடன்)

புரிகிறது அய்யா.

கடும் சினத்துடன் அந்த மூடனைப் பார்க்காமல் திரும்புகிறார். சிந்திக்கிறார். பிறகு மீண்டும் அவனைப் பார்க்கிறார்.

சீமான்

என் மனைவி என்ன சொல்கிறாள்? அவளுக்கு இது தொடர்பாக ஒன்றும் தெரியவில்லையா?

இசையாசிரியன்

அம்மாதான் என்னை உங்களிடம் அனுப்பினார்கள். அவர்களே பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சீமான்

(எரிச்சலுடன்)

என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. (இசையாசிரியனைப் பார்த்து) ஹியூபர் நீ ஒரு மடையன். நீ இங்கு எதற்காக இருக்கிறாய்? ஒரேயொரு குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்காக. அது அத்தனை கடினமான பணியா?

இசையாசிரியன்

(மென்மையாக)

என்னை மன்னித்துவிடுங்கள் சீமான் அவர்களே.

சீமான்

நீ எதற்கும் பயனில்லாத உதவாக்கரை.

சீமான் திரும்பி வாசலை நோக்கி நடக்கிறார். சற்று நேரத்தில் திரும்பி மீண்டும் கேட்கிறார்.

சீமான்

என் மகனைக் கடைசியாக எங்கே பார்த்தாய்?

இசையாசிரியன்

வெளியே. மைதானத்தில். அவன் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடப் போவதாகச் சொன்னான்.

சீமான்

எங்கே?

இசையாசிரியன்

அதை அவன் சொல்லவில்லையே.

சீமான்

என் மனைவி இது எதையுமே கவனிக்கவில்லையா?

இசையாசிரியன்

முட்டைகோஸ் வெட்டப்பட்ட நிகழ்விற்குப் பிறகு அம்மா தன் அறைக்குச் சென்றுவிட்டார். அவர்கள் உடல்நலம் குன்றிக் காணப்பட்டார்கள்.

சீமான்

(கேலியாக)

என்ன? உடல்நலக் குறைவுடனா?

இசையாசிரியன்

ஆம். அவர்களுக்குக் கடுமையான ஒற்றைத் தலைவலி.

சீமான்

(தனக்குத்தானே)

கடவுளே. இந்த இடம் ஒரு மிருகக்காட்சிசாலை!

அவர் திரும்பி மைதானத்தை நோக்கி நடந்தார். இசையாசிரியன் அவரைப் பார்த்தபடி பின் தொடர்ந்து நடந்தான். தனக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லை என்று அவன் கருதினான். சீமான் தன்னை இகழ்வதை வெறுத்தான். இறுதியில் மீண்டும் படிகளில் ஏறினான்.

-தொடரும்.

1 comment

Geetha Karthik netha February 18, 2022 - 2:06 pm

மகிழ்ச்சி ணா. அடுத்த பகுதியை எதிர்பார்த்திருக்கிறேன்.

Comments are closed.