வெங்கி என்னைவிட நான்கு வயது இளையவன். அவன் குழந்தையாய் இருந்த காலத்தை நினைக்க முயலும்போது, அம்மாவின் மடியில் கிடந்த ஒரு காட்சி மட்டும்தான் நினைவுக்கு வருகிறது. பேறுகாலத்தின் வாசனையுடன் இருந்த அம்மாவிடம் போகப் பிடிக்காமல் அப்பாவின் அருகிலிருந்து அவனை நான் பார்த்திருந்தேன். வெங்கியை நான் என் தம்பியாக உணர்ந்தது அவன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய பிறகுதான். அவனுக்கு மூன்று வயது இருக்கும்போது ஒரு நாள் உடம்பு இலேசாகச் சுட சோர்ந்து படுத்திருந்தான். தறிக்குழியருகே விளையாட வரும் பேரனைக் காணாமல் கோவணத்துடன் வந்த தாத்தா அவன் கண்ணையும் நாக்கையும் பரிசோதித்துவிட்டு, “ஏட்டு கொணம். அய்யாவுகிட்ட ஏடு எழுதி சாயங்காலமா கட்டிடு. காலையில செரியா போயிரும்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தறிக்குப் போய்விட்டார். அப்போதே நான் ஏடு எழுதி வாங்கத் தயாராகிவிட்டேன்.
மாலை மங்கி மஞ்சள் வெயிலும் தணியத் தொடங்கிய போது அம்மாவிடம் சொல்லிவிட்டு ஏடு வாங்கக் கிளம்பிவிட்டேன். அய்யாவு என்றுதான் எல்லோரும் அவரை அழைத்துப் பழக்கம். அவருடைய பெயரே அய்யாவுதானா என்று எனக்குத் தெரியாது. சராசரிக்கும் கூடுதலான உயரம். ஒல்லியான உடல்வாகு. தலையில் அவ்வளவாய் முடி கிடையாது. கன்னத்து எலும்புகள் எடுப்பாகத் தெரியும். கரகரப்பான குரலில் ஒரு சில சொற்கள்தான் பேசி நான் பார்த்திருக்கிறேன். சாயங்கால நேரங்களில் குழந்தைகளுக்கு ஏடு எழுதித் தருவார். சிறு வயதுக் குழந்தைகள் சுறுசுறுப்பில்லாமல், சரியாகச் சாப்பிடாமல், சிணுங்கிய வண்ணமாகவே இருந்தால் ஏட்டுகுணம் என்று சொல்லுவார்கள். ஏட்டுகுணத்தைக் குழந்தைகளின் வாய்வாடையிலிருந்தே உணர்ந்துகொள்வார்கள் அனுபவசாலிகள். அய்யாவுவிடம் ஏடு எழுதி வாங்கி, சாம்பிராணி போட்டு இடுப்பில் கட்டிவிட்டால் மறுநாள் விடியும்போது குழந்தை சரியாகிவிடும்.
மாலை நாலு மணிக்கெல்லாம் ஓட்டுக்கூரையில் செருகியிருக்கும் பனையோலைகளிலிருந்து இரண்டு ஓலைகளைத் தேர்ந்தெடுத்து அய்யாவுவின் மனைவி துளசி தொட்டித் தண்ணீருக்குள் போட்டுவிடுவாள். நான் வேப்பமரத்தைத் தாண்டிப் போகும்போதே தொட்டியை எட்டிப் பார்த்தேன். தொட்டிக்குள் பளபளவென்று இரண்டு ஓலைகள் மிதந்தன. அய்யாவு அப்போதுதான் தறியிலிருந்து எழுந்திருத்தார். ”தம்பிக்கு ஏடு வேணும், அம்மா வாங்கிட்டு வரச்சொன்னாங்க” என்றேன். தலையை ஆட்டிக்கொண்டே இடுப்பில் வேட்டியை சுற்றிக்கொண்டவர் வாசலுக்குப் போனார். தொட்டியிலிருந்து வாளியில் தண்ணீரை இறைத்து முகம் கழுவினார். தண்ணீரை முகத்தில் அறைந்து இரண்டு கைகளாலும் தேய்த்துக் கழுவியவர், நீண்ட கைகளையும் பாதங்களையும் கழுவிக்கொண்டார். கொடியிலிருந்த துண்டால் முகத்தைத் துடைத்தபடியே உள்ளறைக்குப் போனவர், வெளியில் வரும்போது நெற்றியில் ஈரமாய் விபூதிப்பட்டை பளபளத்தது. வீட்டின் கூடத்தில் ஒரு எழுது மேசை உண்டு. அய்யாவு கோயமுத்தூரில் நூல் வாங்கி சேலையாக்கித் தரும் வியாபாரத்தில் இருந்ததால் சாயங்கால நேரங்களில் தறிக்காரர்களின் வரவு செலவு நடக்கும். அப்போதெல்லாம் அய்யாவுவின் முன்னால் அந்த எழுதுமேசை இருக்கும். புழக்கத்தில் அதன் மேற்பரப்பு பளபளவென்று எண்ணெய் போட்டது போல மின்னும். அய்யாவுவிடம் ஒரு இங்க் பேனாவும் உண்டு. பட்டையான நிப்புடன் மரக்கட்டையால் செய்தது போன்ற சற்றே தடிமனான பேனா. அந்தப் பேனாவில்தான் கணக்கெழுதுவார். அவரேதான் அதைக் கழுவி மையிட்டுக்கொள்வார்.
எழுதுமேசையை நகர்த்திக்கொண்டு அவர் உட்காரவும், அவரது மூன்றாவது மகள் விமலா ஓலைகளை எடுத்துவந்து ஈரம்சொட்ட அவரிடம் தந்தாள். கூடவே ஏடெழுதும் கதிராணியையும் தந்தாள். கதிராணி கூர்மையான இரு முனைகளைக் கொண்டது. அது தார் சுற்றுவதற்கென்று இருப்பது. அய்யாவுக்கு ஏடெழுத அதுதான் பேனா. ஓலையின் பரப்பில் கதிராணியின் கூர் நுனி அழுத்தமாக எழுதும். ஈர ஓலையை எடுத்து தோள் துண்டால் துடைத்துவிட்டு, ஒரு நுனியிலிருந்து கை அகலத்திற்கு ஒரு துண்டை வெட்டினார். பிறகு அதன் நுனிகளைச் சீராக நறுக்கினார். அதன் நாலாப்பக்கமும் ஒழுங்குடன் இருப்பதை உத்தரவாதப் படுத்திக்கொண்டதும் கத்திரியைக் கீழே வைத்துவிட்டு கதிராணியை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு கண்களை மூடிப் பிரார்த்தித்தார். எழுதப்படாத அந்த ஓலைத்துண்டு இளம்பச்சை நிறத்தில் எழுதுமேசை மீது பளபளத்தது. ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு விரல்களுக்கு நடுவில் கதிராணியை இறுகப் பற்றிக்கொண்டு அழுத்தமாக எழுதத் தொடங்கினார்.
அய்யாவுவிடம் பலமுறை ஏடெழுதி வாங்கிச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதில் அவர் என்னதான் எழுதுகிறார் என்று படிக்க முயன்றிருக்கிறேன். அவரது எழுத்தும், சொல் அமைப்பும் என் தமிழறிவுக்கு எட்டாததாகவே இருந்தது. கல்வெட்டு எழுத்துகள் போலச் சீராக வாக்கிய ஒழுங்குடன், ஒரு வெண்பாவின் வடிவத்தில் இருக்கும் அதை என்னால் படிக்கவே முடிந்ததில்லை. படிக்க முயலக்கூடாது, ஏட்டைக் கையில் வாங்கிக்கொண்டு நேராக வீட்டுக்குத்தான் போகவேண்டும் என்று தொடக்கத்தில் அய்யாவு சொன்னதுண்டு. ஆனாலும் ஒவ்வொரு முறையும் நான் அதைப் படிக்க முயன்றிருக்கிறேன். இந்த முறையும் ஏட்டைக் கையில் வாங்கிக்கொண்டு நேராக வீட்டுக்குப் போகாமல் செட்டியார் கடை வாசலில் இருந்த தெரு விளக்கின் வெளிச்சத்தில் நின்று அதைப் படிக்க முயன்றேன். முற்றிலும் புதியதொரு மொழியில் வடிவில் அந்த ஏடு என் கண் முன்னால் விளையாட்டு காட்டியது. சில நாட்களுக்கு முன்பு நாமும் ஒரு ஏடு எழுதிப் பார்க்கலாமே என்று நான் செய்த முயற்சி நினைவுக்கு வந்தது.
அய்யாவு போலவே ஒரு பனையோலையை என் வீட்டுத் தொட்டியில் மிதக்க வைத்து, சிறிது நேரம் கழித்து எடுத்து, என் வீட்டுத் திண்ணையில் வைத்துக்கொண்டேன். ஒரு பழைய கத்திரி அப்பாவின் தறி மேடையில் இருக்கும். சாயங்காலமாய் அவர் தறியிலிருந்து எழுந்த சமயமாய் கத்திரியை எடுத்து வைத்துக்கொண்டேன். அய்யாவு ஓலையை நறுக்குவதுபோல அவ்வளவு சுத்தமாயும், நறுவிசாயும் இந்தக் கத்திரி எனக்குக் கைகொடுக்கவில்லை. தாறுமாறாகப் பிசிறுடன் வெட்டியெடுத்து, கதிராணியைக் கொண்டு எழுதத் தொடங்கினேன். என்னவென்று தொடங்குவது என்று ஒரு குழப்பம். எல்லோரும் பிள்ளையார் சுழியுடன்தானே எழுதுகிறார்கள், அதையே நாமும் வைத்துக்கொள்ளலாம் என்று பிள்ளையார் சுழியைப் போட முயன்றேன். கதிராணி ஏட்டில் குத்திக்கொண்டு நகர மறுத்தது. விரல்களின் நடுவே கதிராணியைப் பிடிப்பதும் அவ்வளவு சுலபமாய் இருக்கவில்லை. பென்சில் பேனாவைப் போல தடிமனாக இருந்தால் விரல்களுக்கு நடுவே பிடித்துக்கொள்ள இலகுவாக இருக்கும். கம்பி போன்று மெலிசான கதிராணி நழுவிக்கொண்டு சரிந்தது. திடீரென்று ஒரு பயம். யாருக்குமென்று இல்லாமல் இப்படி விளையாட்டாக ஏடெழுதப் போய் வினையாக முடியப்போகிறது என்று மனம் தடுமாறியது. சட்டென்று ஓலையை எடுத்துச் சுருட்டி எறிந்தேன். மந்தரித்து இடுப்பில் கட்டிவிடப்பட்ட ஏடு பிறகு ஏதாவது ஒரு நாளில் கழன்றுகொள்ளும்போது அந்த ஏட்டை இப்படி எறிய முடியாது. தலையை மூன்று சுற்று சுற்றி கூரையில்தான் எறியவேண்டும்.
அம்மா சாம்பிராணி போட்டு வைத்திருந்தாள். ஏட்டை வாங்கி மஞ்சள் தடவினாள். பிறகு மெதுவாக அதைச் சுருட்டி மெல்லிய நூல்கொண்டு சுற்றிக் கட்டினாள். நூலும் மஞ்சளாகத் திரிந்தது. ஏட்டைக் கையில் வைத்தபடி கண் மூடிப் பிரார்த்தித்தாள். பிறகு வெங்கியின் இடுப்புக் கயிற்றில் அதைக் கோர்த்துக் கட்டினாள். அம்மாவின் கண் கலங்கியிருப்பது போல இருந்தது. நான் சோர்ந்து படுத்திருக்கும் வெங்கியைப் பார்த்தேன். சரியாகிவிடும் என்று அம்மா மெதுவாகச் சொன்னாள். வெங்கிக்கு மறுநாளே காய்ச்சல் இறங்கிவிட்டது. அவனுடைய இடுப்பு அரைஞாண் கயிற்றில் மஞ்சள் துலங்க ஏடு ஆடிக்கொண்டு கிடந்தது.
அய்யாவுக்கு கஞ்சிராக்காரர் என்று இன்னொரு பெயரும் உண்டு. பண்டரி பஜனை கோஷ்டியில் அப்பா மிருதங்கம், அய்யாவுதான் கஞ்சிரா. என்னவோ அந்த வயதில் கஞ்சிரா வாசிப்பது மிருதங்கம் அல்லது ஆர்மோனியம் வாசிப்பதைவிடச் சுலபம் என்ற எண்ணமிருந்தது. கைக்கு அடக்கமாய் முரட்டுத் தோலால் விரல்பட அதிரும் அந்தக் கருவியின் மீது ஒரு ஈர்ப்பிருந்தது. முதலையின் தோல் எனவும் உடும்பின் தோல் எனவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லப்பட்டிருந்ததால் அதன் தோல்பரப்பில் விரல்கள் நகரும்போதெல்லாம் முதலையை அல்லது உடும்பைத் தடவுவது போல ஒரு சிலிர்ப்பு இருக்கும். சுற்றுக்கட்டையில் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வட்டமான சிறிய உலோகத் தட்டுகள் ஏற்படுத்தும் கூட்டதிர்வு கஞ்சிராவின் இசைக்கு கூடுதல் பரிமாணத்தைக் கொடுக்கும். கஞ்சிராவின் ஓசை மிருதங்கத்தின் ஓசையைப் போன்று இல்லாமல் கூடுதலான ஒரு அதிர்வுடனும் முறுக்குடனும் இருக்கும். உடம்பை அதிரவைக்கும். நான் பஜனையின்போது அதிகமும் கவனிப்பது ஓங்கியக் குரலில் வெள்ளிங்கிரி வாத்தியார் பாடும்போது அவர் முகம்கொள்ளும் வெவ்வேறு பாவங்களையும், கஞ்சிராவின் மீது துள்ளும் அய்யாவுவின் விரல்களையும்தான்.
கஞ்சிரா வாசிக்கும்போதான அய்யாவுவே வேறு ஒரு ஆள் என்ற நினைப்பு எனக்கு வரும். பிற நேரங்களில் அவர் உடலில் இல்லாத ஒரு சுறுசுறுப்பையும், வேகத்தையும் கஞ்சிராவில் அதிரும் அவருடைய விரல்களில் பார்க்க முடியும். மூடிய கண்களுடன் அவருடைய முகம் அதனிசையில் இலயித்து அசையும். பாடலும் கூட்டிசையும் உச்சத்தை எட்டும்போது கஞ்சிராவுடன் அவருடைய உடலும் சேர்ந்து துள்ளுவது போல ஒரு வேகமும் ஆவேசமும் இருக்கும். அப்பா அவ்வப்போது சில நாட்களில் வீட்டில் உட்கார்ந்து மிருதங்கம் வாசித்ததுண்டு. ஆனால் அய்யாவு பஜனையின்போது தவிர கஞ்சிராவைக் கையில் எடுத்து நான் பார்த்ததில்லை.
அய்யாவுக்குப் பேசத் தெரியுமா என்று கேட்கிற அளவுக்குப் பேசவே தெரியாதவர். பஜனை கோஷ்டியில் உள்ள பதினொரு பேர்களில் மீதி பத்துபேரும் பேசுவதில் சளைக்காதவர்கள். அதுவும் காடபாளையம் ராமசாமியும் பாயிண்ட கோவிந்தராசும் பேசினால் மீதி யாரும் பேசமுடியாது. அப்படி ஒரு ஆக்கிரமிப்பும் குரலும் அவர்களுக்கு. இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது முகத்தில் மெல்லிய புன்னகையுடன் அய்யாவு தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டிருப்பாரே தவிர பேசவே மாட்டார். இவர்கள் என்ன சொன்னாலும் ஆமோதிக்கிறாரா, இல்லை வேறு ஏதும் சொல்லவேண்டுமா என்று எதற்கும் அவர் தலையை மட்டும்தான் ஆட்டுவார். வீட்டிலும் அவர் பேசாதவர்தான். என்னவோ எல்லாக் காரியங்களும் அவர் நினைப்பிற்கு ஏற்ப நடப்பதுபோன்று இருக்கும். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விஷயங்கள் போன்று அவ்வளவு கச்சிதமாக ஒவ்வொன்றும் இருக்கும்.
கோயமுத்தூர் அழகிரி பேப்ரிக்ஸூக்கு புடவை நெய்து கொடுப்பது என்பது அப்போது பெரிய விஷயம். தொடர்ந்து பல வருடங்கள் அய்யாவு அழகிரிக்காக நெய்து கொடுத்தார். அவர் வீட்டில் இருந்த நான்கு தறிகள் தவிர வெளியில் தறிகளுக்கு நூல்கொடுத்து புடவை நெய்து வாங்கினார். ஒவ்வொரு சனிக்கிழமையும் நெய்த புடவைகளை மூட்டையாகக் கட்டி கோயமுத்தூருக்கு கொண்டுபோகும் வைபவம் நடக்கும். மடித்து வைக்கப்பட்டிருக்கும் புடவைகளை மறுபடி எடுத்து, சீர்பார்த்து இரண்டு மெல்லிய மரப்பலகைகளுக்கு நடுவிலாக அடுக்கி வைத்து இதற்கென முறுக்கியெடுத்த மெல்லிய உறுதியான கயிற்றால் இரண்டு பக்கங்களிலும் கட்டி, பிறகு கெட்டியான சிமெண்ட் கலர் காடா துணியில் மூட்டையாகக் கட்டுவார் அய்யாவு. மூட்டை கட்டி முடித்தபிறகு காடா துணியால் உருவாக்கப்பட்ட ஒரு பெட்டியைப் போலக் கச்சிதமாக இருக்கும். புடவைகளை எடுத்து ஒழுங்கு பார்க்கும்போது அவருக்குத் தேவையான சிறிய கத்திரி, எங்காவது நெசவு சீராக இல்லாமல் இருந்தால் அதைச் சரிப்படுத்த கூரான முள், மூட்டையைக் கட்ட தேவையானவைகள் என்று ஒவ்வொன்றும் அவர் எதிர்பார்க்கும் நேரத்தில் கைக்கு வரும். கடைசி மகள் மாலாமணியோ இல்லை துளசியோ அவருடைய பார்வைக்கும் தலையசைவுக்கும் ஏற்ப காரியங்களைச் செய்வார்கள்.
அப்போது கோயமுத்தூருக்கு மதியம் இரண்டு மணிக்குச் சாந்தாமணி பஸ் குமார் நகர் பஸ் நிறுத்தத்திற்கு வரும். மூன்று ரூபாய் கட்டணம். அய்யாவுக்காகவே அந்த பஸ் சில நிமிடங்கள் சனிக்கிழமைகளில் காத்திருக்கும். கோயமுத்தூரிலிருந்து அவர் திரும்ப இரவாகிவிடும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் தறிக்காரர்கள் கூலி வாங்க வந்து காத்திருப்பார்கள். காலையில் ஏழு மணிக்கெல்லாம் பட்டுவாடா தொடங்கிவிடும். கைக்கு அடக்கமான சிறிய சிட்டா நோட்டில் தறிக்காரர் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். இங்க் பேனாவில் பற்று எழுதி ரூபாய்களைத் தருவார். துளசி கறிக்கடையிலிருந்து எட்டு மணிக்குத் திரும்பும்போது பட்டுவாடா முடிந்திருக்கும்.
அய்யாவு அசைவப் பிரியர். புதன், ஞாயிறுகளில் கட்டாயம் அசைவம் உண்டு. பெரும்பாலும் ஆட்டிறைச்சியோ கோழியோதான். மீன் அந்தப் பகுதியில் வருவது வெகு அபூர்வம். இப்போதுபோல ஐஸ்பெட்டி மீன்கள் வராத காலம் அது. எல்லாவிதமான இறைச்சிகளையும் ருசிக்கும் ஆர்வம் உண்டு அய்யாவுக்கு. காலை நேரத்தில் தெருவில் அணில், முயல், புறா, கெளதாரி என்று கூவிக்கொண்டு வருவார்கள். கண்ணகி நகரில் இவர்கள் நேராக வந்து நிற்பது அய்யாவு வீட்டில்தான். அணிலையும் முயலையும் கறியாக்கிச் சமைத்துச் சாப்பிடவும் செய்வார்களா என்று நான் கேட்கும்போது அம்மா, ”அய்யே, அதெல்லாம் அவங்க வீட்லதான் சாப்புடுவாங்க. நமக்கு வேண்டாம்” என்று முகம் சுழிப்பார்கள். எங்கள் வீட்டு ஆட்டுக்கல்லில் மிளகு அரைக்க வரும் அய்யாவுவின் இரண்டாவது மகள் கலாவிடம் அம்மா கிண்டலாகக் கேட்பாள் ”உங்க வீட்டத்தாண்டி ஒரு பாம்பு போனாக்கூட, புடிச்சு சட்டியில போட்டிருவாங்களே?” அப்படித்தான் ஒரு நாள் அய்யாவு வீட்டு வாசலில் காலையில் எட்டு மணிக்கெல்லாம் ஒரு கும்பல் கூடிவிட்டது. இன்னும் பாவடியில் வேலையே முடிந்திருக்கவில்லை.
அய்யாவு வீட்டு வேப்பமரத்தடியில் மூன்று அடி நீளத்திற்கு உடும்பு ஒன்று கிடந்தது. அது உயிருடன் இருக்கிறதா, இல்லையா என்று முதலில் தெரியவில்லை. ”உசுரோடதான் இருக்குது சாமி” என்று ஒரு குச்சியால் அதைத் தொட்டதும் மெதுவாக நெளிந்தது உடும்பு. குத்தவைத்து உட்கார்ந்திருந்தவன் தலையில் தாறுமாறாக உருமாலை கட்டியிருந்தான். உடம்பு முழுவதும் புழுதி. வெற்றிலையும் சாராயமுமாய் ஒரு வாடை. வேட்டியைச் சுற்றிக்கொண்டு மெல்லிய புன்னகையுடன் அய்யாவு வந்தார். உடும்பைப் பார்த்ததும் அந்தப் புன்னகை சிரிப்பாகியது. இதுபோல முயல்கறி, கெளதாரி என்றால் அய்யாவுடன் கூட்டு சேர்ந்துகொள்ளும் கரியப்பனும் குஞ்சானும் வேகமாக வந்தார்கள். ”நல்ல உருப்படியாட்ட இருக்கு அய்யாவு” என்று கரியப்பன் உடும்பைக் குனிந்து பார்த்தான். அய்யாவு குஞ்சானைப் பார்த்துச் சிரித்தார். ”அது சரி, இத எப்பிடி வெட்டி எப்புடி சமைக்கறது?” என்றாள் துளசி. ”அதெல்லாம் நா வெட்டித் துண்டுபோட்டு தர்றங்க. சமைக்கறது கறி சமைக்கற மாதிரிதான்”. சிரித்தான் உடும்பைக் கொண்டுவந்தவன்.
உடும்புக்குச் சுவரொட்டி என்று ஒரு பெயர் உண்டு என்று சொல்லிய கரியப்பன் உடும்பின் வாலில் கயிற்றைக் கட்டி சுவரில் எறிந்து அதன் வழியாக எத்தனைபேர் வேண்டுமானாலும் ஏறலாம் என்று கதை சொன்னார். மராட்டிய சிவாஜி உடும்பைக் கொண்டுதான் கோட்டைச் சுவரின் மேல் ஏறினார் என்று உடும்பின் வரலாற்றுப் பெருமைகளை எங்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். ”இப்ப இந்த செவுத்தல இத போட்டு இழுத்துப் பாக்கலாமா?” என்று கேட்டேன் நான். ”யாருடா அது? மத்தாளத்துக்காரரு பையனா? இப்ப செவுத்துல போட்டு அது அங்கயே ஒட்டிக்கிச்சுனா எப்பிடிடா சமைக்கறது? நேரமாயறாதா? இன்னோரு நாளு செவுத்துல போட்டு உன்ன ஏத்திவுடறேன்” என்றார். உடும்பைப் பார்க்கும்போது உடம்பு கூசியது. அதன் அழுக்கான நிறமும் முரட்டுத் தோல் பரப்பும் கூரிய நகங்களும் இடுங்கின கண்களும் அருவருப்பைத் தந்தன. விலைபேசிக்கொண்டிருக்கும் போதே தேர்பெட்டிக்காரர் வீட்டிலிருந்து அம்மணி வந்தாள். ”உடும்பு ரத்தத்தைப் போட்டு தேச்சா மொடக்குவாதம் செரியாகுன்னு வைத்தியர் சொன்னாரு. வெல பேசினா எனக்கும் ஒரு பங்கு போடுங்க. எங்க மாமாதான் கைகால் வெளங்காத கெடக்கறாரே” என்று புடவையை உதறிக்கொண்டு நின்றாள்.
கல் அடுப்பை மூட்டி ஒரு அண்டா நிறைய தண்ணீரை நிறைத்தார்கள். உடும்பின் வாலைப் பிடித்துத் தூக்கி சூடாகத் தொடங்கியிருந்த தண்ணீருக்குள் மெதுவாக இறக்கினான். நெளிந்து பிறகு துள்ளியது உடும்பு. சட்டென்று அண்டாவின் ஓரப்பரப்பைப் பற்றிக்கொண்டு மேலேறப் பார்த்தது. தண்ணீரின் வெதுவெதுப்பு கூடத்தொடங்கிய பிறகும் உடும்பு அசையவில்லை. ”நல்லா சூடு தாங்கும் பாத்துக்குங்க..” என்று அடுப்பை இன்னும் திகுதிகுவென்று எரியச் செய்தான். கொதிக்கிற தண்ணீருக்குள்ளிருந்து இப்போது உடும்பு வெளியேறும் வழி தேடி துள்ளிச் சாடியது. தண்ணீர் வெளியில் தெறித்தது. நீண்ட ஒரு குச்சியை வைத்து உடும்பைத் தண்ணீருக்குள்ளேயே அழுத்திப் பிடித்தான். துள்ளித் துள்ளி பிறகு உடும்பு மெல்ல அடங்கியது. ”உனிமேதான் தோலை உரிக்க முடியும் சாமியோவ்” என்று உயிரடங்கிய உடும்பை வெளியே எடுத்துப் போட்டான். இப்போதும் உடும்பு முன்பு போலவேதான் கிடந்தது. கொதிக்கும் நீரில் அதன் தோல்பரப்பு மெலிந்திருக்கவேண்டும்.
உடும்புக் கறி சமைத்த அந்த நாளுக்குப் பிறகு சில நாட்கள் வரை நான் அய்யாவு வீட்டுப் பக்கமே போகவில்லை. எப்போதும் அந்த உடும்பு வேப்பமரத்தடியில் கிடப்பதுபோன்று ஒரு உணர்வு. ”அதென்னவோ ருசியே இல்லே. சவக் சவக்குன்னு மண்ணு மாதிரிதான் இருந்துச்சு” என்று துளசி மறுநாள் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அய்யாவுவின் மூன்று மகள்களும் சாப்பிடவில்லை. அருவருப்பில் குமட்டிக்கொண்டு வருவதாகச் சொல்லி மறுத்துவிட்டார்களாம்.
அய்யாவு குடிப்பார் என்பது வெகுநாட்கள் கழித்துத்தான் எனக்குத் தெரிந்தது. இன்னும் பலருக்கு அவர் குடிப்பார் என்றே தெரியாது. சொன்னாலும் நம்ப மாட்டார்கள். குடியையும் அவர் அப்படியொரு பழக்கம் இருப்பதையே வெளியே தெரியாத அளவுக்கு வெகு அலாதியாகத்தான் வைத்திருந்தார். ஆச்சரியமாக இருந்தது எனக்கு. அப்போதெல்லாம் குடிக்க வேண்டும் என்றால் பட்டைச் சாராயம்தான். பாறைக்குழியை அடுத்து வெயிலோடிக் கிடக்கும் கள்ளிவேலி மறைவில் பிளாடரும் ஒரு கண்ணாடி டம்ளருமாகப் படுத்திருக்கும் ஒத்தக்கையனிடம் அல்லது மேட்டாங்காட்டில் ஒத்தைக்கண் பாலத்துக்குப் பின்னால் சிந்தாமணியிடம்தான் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் கள்ளிவேலிக்குப் போய்வருபவர்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாக இருக்கும். ஒரு டம்ளர் மூன்று ரூபாய். அய்யாவுவைத் தப்பித் தவறியும் கள்ளிவேலிப் பக்கமாய் யாரும் பார்த்தது இல்லை. மேட்டாங்காட்டுக்கு கண்ணகி நகரிலிருந்து போய் குடித்துவிட்டு வருவதற்குள் போதை இறங்கிவிடும். ஆனாலும் அவர் பஜனை, கோயமுத்தூர் போகும் நாட்கள் என்று சில தினங்களைத் தவிர மற்ற நாட்களில் சாயங்காலம் தினசரி குடிக்கிறார் என்றால் பெரிய புதிராகத்தான் இருந்தது.
தற்செயலாக ஒரு நாள் கந்தனின் முடி திருத்தும் நிலையத்தில் காத்திருந்தபோது தம்மானும் பொரிக்கடை ராமசாமியும் பேசிக்கொண்டிருந்ததில்தான் அந்தப் புதிர் அவிழ்ந்தது. அய்யாவு சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் கை கால் முகம் கழுவிக்கொண்டு புறப்படுவார். பளிச்சென்று சட்டை. காலில் கதர்கடை முரட்டுச் செருப்பு. அவரது நடை வழக்கத்திற்கும் அதிகமான வேகம்கொண்டது. சற்றே காற்றில் எம்பி எம்பி நடக்கும் சுபாவமுடையவர். காலில் உள்ள ஆணிதான் காரணம். எதிர்படும் எவரிடமும் நின்று பேசமாட்டார். ஒரு சிரிப்புடன் தலையை அசைத்தபடியே கடந்துவிடுவார். எம்.ஜி.ஆர் காடு மேடு வரையில் அதே வேகம். மேடு ஏறியதும் சற்றே ஆசுவாசப்படுவதுபோல நடையின் வேகம் சற்றே குறையும். இந்நேரம் நல்ல இருட்டு கூடிவந்திருக்கும். மேட்டுப்பாளையம் முனிஸ்வரன் கோயில் தாண்டியதும் கிழக்குப் பக்கமாய்ப் பார்த்து பறையங்காடு மாரியப்பனின் மட்டன் கடை. வாரத்தில் ஏழு நாட்களிலும் காலை நேரங்களில் கடையில் ஆட்கூட்டம் மொய்த்துக்கொண்டிருக்கும். வாடிக்கையாளர்களின் இரசனைக்கேற்ப மாரியப்பன் மட்டன் வெட்டிப் போடுவார். ஆட்டுத் தலைக்கும், கால்களுக்கும் முன்கூட்டியே சொல்லி வைக்கவேண்டும். மட்டன்கடையை நெருங்கும்போது அய்யாவுவின் நடைவேகம் சற்றே மட்டுப்படும். சாயங்காலத்தில் மட்டன்கடையில் வியாபாரம் கிடையாது. மதியம் மூன்று மணிக்கெல்லாம் மட்டன் வெட்டும் முட்டிகளையும் கத்திகளையும் கழுவி மஞ்சள் இறைத்து சுத்தம் செய்துவிடுவார் மாரியப்பன். கடையையொட்டி தெற்குப் பக்கமாய் ஒரு நடை. 82 என்ற எண்ணிட்ட அந்தக் கதவு எப்போதும் சாத்தியேதான் கிடக்கும்.
அய்யாவு கதவைத் திறந்துகொண்டு உள்ளே போவார். நீண்ட சந்து. சற்று தாட்டியமான ஆட்கள் அந்தச் சந்தின் வழியே நடப்பது கடினம். வழியிலேயே முனிசிபல் குடிதண்ணீர் குழாய். உள்ளே ஆட்டுத் தோல்கள் உப்பிட்டுத் தேய்த்து காயவைக்கப்பட்ட முற்றத்தைத் தாண்டியதும் ஓடுவேய்ந்த அந்த ஒற்றை அறையில் மாரியப்பன், செல்வி பேப்ரிக்ஸ் மணி, ஜோதி தியேட்டரில் கேண்டீன் வைத்திருக்கும் வேடியப்பன். சில நாட்களில் வேடியப்பன் இருக்கமாட்டார். நால்வர் கூட்டணி சேர்ந்ததும் மாரியப்பன்தான் பாட்டிலைத் திறந்து டம்ளர்களில் அளவுபார்த்து ஊற்றுவார். உயர்தரமான சிவப்பு பூக்கள் போட்ட கண்ணாடி டம்ளர்கள். தட்டில் வறுத்த மீன், கோழி, மட்டன் என்று தொடுகறிகள். நாட்டுச் சரக்கோ பட்டைச் சாராயமோ கிடையாது. உயர்தரமான பிராந்தி. மாதம் ஒரு முறை கேரளாவுக்குப் போகும் மணிதான் சரக்கு ஏற்பாடு. தட்டுப்பாடில்லாமல் பார்த்துக் கொள்வார். ஒரு மணி அல்லது ஒன்றரை மணிநேரம்தான். நிதானமாகக் குடிப்பார்கள். அய்யாவு இரண்டு ரவுண்டுதான் எப்போதும். மற்றவர்கள் மூன்றாவது ரவுண்டோடு நிறுத்திக்கொள்வார்கள். எட்டு மணிக்கெல்லாம் அய்யாவு திரும்பவும் வீட்டைப் பார்த்து நடக்கத் தொடங்கிவிடுவார். எட்டரை அல்லது எட்டே முக்காலுக்கு வீடு. கொஞ்சமாய் சாப்பாடு. சாப்பிட்டுவிட்டு பத்து நிமிடம் வாசல் வேப்பமரத்துக்கடியில் அப்படியும் இப்படியுமாக நடப்பார். கிழக்குப் பக்கமாய் போட்டிருக்கும் கட்டிலில் உட்கார்ந்து ஒரு முறை மேலே பார்ப்பார். ஒன்பதரை மணிக்குத் தூக்கம். காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிடுவார்.
அவர் குடிப்பார் என்று அவருடைய வீட்டில் எல்லோருக்கும் தெரிந்துதான் இருந்தது. யாருக்கும் அதைப்பற்றி எந்தக் குறையும் இல்லை. நாளெல்லாம் உழைக்கிறார், சாயங்காலமாய் அலுப்புத் தீரக் குடித்துவிட்டு வந்து யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் படுத்துவிடுகிறார் என்று சமாதானமாய் இருந்துவிட்டார்கள்.
அவருக்கு மூன்று பெண்கள். மூத்தவள் ரமணி, இரண்டாமவள் கலா, மூன்றாமவள் விமலா. அய்யாவு வீட்டில் இருந்த மூன்று வேப்பமரங்களுக்கும் இவர்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. மூத்த மகள் ரமணிக்கு சாவக்கட்டுபாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் நிச்சயமாகிய மறுநாள், கொல்லைப் புறத்திலிருந்த பெரிய வேப்ப மரத்தை வெட்டிப் போட ஏற்பாடு நடந்தது. அகன்று கிளை பரப்பி நின்ற மரம். கிளைகளில் தொடங்கி அடிமரம் வரை வெட்டி எடுப்பதற்கு இரண்டு நாட்கள் ஆனது. மரம் பெருகிப் பெருகி நிற்பதுபோல வெட்ட வெட்ட அத்தனை கிளைகள். அத்தனை துண்டுகள். அந்தப் பகுதி முழுக்க வேப்பமரத்தின் ஈரவாடை காற்றில் நிறைந்திருந்தது. வெட்டிய விறகுத் துண்டுகள் அய்யாவு வீட்டு வாசலிலும், கொல்லைப்பக்கத்திலும் ஒரு மாதம் வரை காய்ந்துகொண்டிருந்தன. இந்தப் பெரிய மரத்தில் ஆடி நோம்பியின்போது தூரி கட்டி ஆடிய நாட்களின் நினைவுகளைச் சொல்லி கையில் மருதாணி இட்டுக்கொண்டாள் ரமணி. இரண்டாமவள் கலாவின் கல்யாணத்தின்போது துவைக்கிற கல்லருகே வளர்ந்து நின்ற வேப்பமரம் வெட்டுப்பட்டு விறகானது. விமலாவின் கல்யாணம் மட்டும் அவர் நினைத்ததுபோல் அமையாமல் போனது. கல்யாணமாகி ஒரு மாதத்திலேயே மாப்பிள்ளையின் சுபாவம் தெரிந்துவிட்டது. விமலாவின் கதை கண்ணீர் கதையாகியது.
ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறந்த சில நாட்களிலேயே அய்யாவு வேப்ப மரத்தை அந்தந்த இடங்களில் வேப்பம் நாற்றை நட்டிவிட்டார். மூன்று இடங்களுமே தினமும் தண்ணீர் புழங்கும் இடம். மரம் தானாக வளர்ந்து செழித்துவிட்டது. கல்யாணத்தின்போது வெட்டிப் போட விறகாகிவிட்டது. விமலாவின் கல்யாணத்தின்போது அப்பா இதை அவரிடம் சொல்லிக் கேட்டபோது ”வெட்டிப் போட்டது மரத்த மட்டுமா முருகேசு?” என்று மெதுவாகச் சொல்லிவிட்டுச் சிரித்தார். அவர் எதற்குச் சொன்னார் என்று தெரியாது. ஆனாலும் விமலாவின் வாழ்க்கை திசைகெட்டுப் போயிற்று.
விமலாவின் கல்யாணத்துக்குப் பிறகு அய்யாவுவின் வீட்டில் திடீரென்று ஒரு சூனியம் குடிகொண்டுவிட்டது. எப்போதும் தறிச்சத்தமும், பெண்களின் சிரிப்பும் பேச்சுமாக இருந்த வீடு இப்போது ஓசையில்லாமல் நடமாட்டம் இல்லாமல் உறைந்துபோனது. மூத்தவர்கள் இரண்டுபேர் கல்யாணத்துக்குப் பிறகுகூட அய்யாவுக்கு இந்த விசனம் வரவில்லை. விமலா தறி நெய்தாள். எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருந்தாள் என்பதால் அய்யாவுக்கு அந்த நினைப்பு வரவில்லை. அவள் போன பிறகு அவருக்கு எதுவுமே கைவரவில்லை. எந்த வேலைக்கு எது வேண்டுமானாலும் அவர் நினைத்த மாத்திரத்தில் கத்திரியோ, கயிறோ, பேனாவோ எல்லாம் கைக்கு வந்துவிடும். எப்போதுமே எல்லாமே தயார்நிலையில் இருக்கும். இப்போது ஏடு எழுத ஓலையைக்கூட சாயங்காலங்களில் தேட வேண்டியிருக்கிறது. கதிராணியை இராட்டையிலிருந்து கழற்றி எடுக்கவேண்டியிருக்கிறது. எல்லா வேலையுமே அவர் திட்டமிட்டபடி நடக்கவில்லை. அய்யாவு இப்போதுதான் கோபப்படத் தொடங்கினார்.
துளசிக்கு அதற்கு மேல் விசனம். விமலா இருந்தவரைக்கும் வீட்டு வேலைகள் ஒரு சுமையாகவே தெரியவில்லை. இத்தனைக்கும் விமலாவுக்கு கல்யாணம் நிச்சயமான சமயத்திலேயே மூத்தவள் ரமணி அவளிடம் எச்சரித்திருந்தாள். ”அவளும் போயிட்டா அப்பாவும் கஷ்டப்படுவாங்க, நீயும் சிரமப்படுவே. மொதல்லேயே எல்லாத்தையும் நீ பழகிக்க”. புள்ளாகோயில் சேந்து கிணத்திலிருந்து ரெண்டு நடை தண்ணீர் கொண்டுவருவதே சிரமமாகப் போயிற்று. ஒரு நாள் மெதுவாக அய்யாவுவிடம் ”நீயும் இந்த சைக்கிள்ல ரெண்டு கொடத்தப் போட்டுட்டு வந்தா நாலு கொடம் தண்ணி சேருமில்ல. என்னால தூக்கிட்டு நடக்க முடியலே” என்ற கேட்டாள். அய்யாவு வெடுக்கென்று அவளை உற்றுப் பார்த்தார். சைக்கிளில் தண்ணீர் எடுப்பது என்பது சாதாரணமாய் எல்லா வீட்டிலும் செய்துகொண்டிருப்பதுதான். ஆனால் அய்யாவு இதுவரைக்கும் தண்ணீரைப் பற்றியோ அது எப்படி வீடு வந்துசேருகிறது என்பதைப் பற்றியோ கவலைப்பட்டவரில்லை. எப்போதும் தொட்டியில் தண்ணீர் நிறைந்துகிடக்கும். ஒன்றுமே சொல்லாமல் சைக்கிளை எடுத்து நிறுத்தினார். ஒரு கோணிப் பையை மடித்து கேரியரில் போட்டார். ”சொல்லிட்டு அப்பிடியே நின்னா கொடம் தாணாவா வந்து உக்காரும்? எடு சீக்கிரம்” என்று அவர் கத்தியதைத் தெருவில் போனவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.
அன்றிலிருந்து தினமும் அய்யாவு வீட்டில் தறிச்சத்தம் வந்ததோ இல்லையோ இருவருக்குமான சண்டையின் உக்கிரம் மட்டும் வலுத்தபடியே இருந்தது. பஜனைக்குப் போவதில் முன்புபோல அவரால் அக்கறை காட்ட முடியவில்லை. கஞ்சிராவில் விரல்கள் இசையாமல் தடுமாறின.
அன்றைக்கு வாசலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுப் படுத்திருந்தவர் வெகு நேரம் வானத்தையே பார்த்துக்கொண்டு கிடந்தார். நட்சத்திரங்கள் பெருகி வானத்தை நிறைத்தன. அவற்றின் ஒளிகூடியபடியே இருந்தன. வீட்டைத் திரும்பிப் பார்த்தார். இருண்டு கிடந்தது. தறிகளில்லாத கூடம் வெறுமையில் நிரம்பியிருந்தது. கண்ணீர் பெருகி வழிய குலுங்கி அழத் தொடங்கினார். ஒரு நொடிதான். நெஞ்சுக்கூட்டின் மையத்தில் ஏதோவொன்று சுருக்கென்று குத்தி இழுத்தது. மார்பைப் பிடித்துக்கொண்டார். வலியின் உச்சத்தில் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. கட்டிலில் இருந்து எழவேண்டும் போலிருந்தது. ஆனால் அவரால் முடியவில்லை. இடது கையைத் தூக்கி ஆவேசமாய் அசைத்தார். துளசி திண்ணையில் படுத்திருந்தவள் அவசரமாய் எழுந்து வந்தாள்.
ஒன்றரை மாதம் கழித்து அய்யாவு ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வந்தபோது அவரைத் தூக்கிக் கொண்டுவந்து கட்டிலில் கிடத்தினார்கள். அவருடைய வலது பக்கம் முடங்கிப்போனது. வாயும் கோணிக்கொண்டு பேச முடியாமல் ஆனது. இதற்கு மேல் எதுவும் வாய்ப்பில்லை, இருக்கிற வரைக்கும் இருக்கட்டும் என்று மருத்துவம் கைகட்டிக் கொண்டுவிட்டது. எழுதுமேசையைப் போட்டு சேலைகளைத் திருத்திய அதே இடத்தில், ஏடு எழுதிய அதே இடத்தில் இப்போது அவருடைய கயிற்றுக் கட்டில். ஒல்லியாய் எலும்புகள் மட்டுமே கொண்ட ஒரு உடலாய் அய்யாவு அதில் கிடக்கிறார். எழுந்திருக்கும்போது ஒத்தாசையாய் இருக்க ஒரு பெரிய கம்பு அந்தக் கட்டிலில் கிடக்கிறது. மூன்று மகள்களும் மாற்றி மாற்றி ஒரு வாரம் பத்து நாள் இருந்து துளசிக்கு ஒத்தாசை செய்தார்கள். எத்தனை நாள் ஓடும் இதெல்லாம்?
இப்போதெல்லாம் பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம் அய்யாவு துளசியை அருகே அழைக்கிறார். குளறிப்போன ஒரு கரகரப்பான சத்தம். அதுதான் அவருடைய அழைப்பு. துளசி வந்ததும் இடது கையை அசைத்து அசைத்து நிறைய சொல்லுவார். வாயிலிருந்து சத்தம் வராததால் கையின் அசைவு அதை நிரப்புவது போல காற்றில் எழுதும். அவருக்கு நிறைய பேச வேண்டும் போல, ஏதேதோ சொல்லவேண்டும் போல. திரும்பத் திரும்ப துளசியை அழைப்பார். இடது கை ஏதேதோ சொல்லத் துடிக்கும். தொடக்கத்தில் பொறுமையாகத்தான் துளசி ”தண்ணி வேணுமா? சாப்பாடா? ஒன்னுக்குப் போகணுமா?” என்று கேட்டுக்கொண்டு செய்தாள். பிறகு ஏதாவது வேலையில் இருக்கும்போது அவருடைய அழைப்பைப் பொருட்படுத்தாமல் இருந்தாள். ”இதப்பாரு, சும்மா சும்மா கூப்புட்டு காத்துல கோலம் போட்டுட்ட கெடக்காத. நூல் சுத்திக் குடுத்தாத்தான் ரெண்டு பேருக்கும் புவா. எதாச்சும் பாத்ரூம் போணும், பசிக்குதுன்னா மட்டும் கூப்புடு” என்று சொல்லிவிட்டு நகர்ந்துபோய் நூல் சுற்றத் தொடங்குவாள். ”நல்ல காலத்துலயெல்லாம் ஒரு பேச்சு சிரிப்போட கரிசனையா பேசுனது கெடையாது. இப்ப பேச்சடங்கி மொடங்குன காலத்துல பக்கத்துல உக்காந்து பேசிட்டே இருக்கணுங்குது” என்று முணுமுணுத்தபடியே கண்ணீரைத் துடைத்துக் கொள்வாள்.
பலமுறை அழைத்தும் அவள் வராத, திரும்பியும் பார்க்காத தருணங்களில் அய்யாவுக்கு கோபம் வந்துவிடும். இடது கையால் அந்தக் கம்பைத் தூக்கி எறிவார். அது தாறுமாறாக மேலே சுற்றி தரையில் விழும். ”ற்றக, ற்றக” என்ற சத்தம் அவருடைய கோபத்தைச் சொல்லும். கண்களில் ஒரு வெறி. ஏதும் செய்ய முடியவில்லை என்று உணரும் நொடியில் அந்தச் சத்தம் பெரும் கேவலாய் மாறும். ”கேற்ற்..கேற்ற்” என்று அழுகையின் உச்சத்தில் அவர் தொண்டை இடறி ஓசையெழுப்பும்போது துளசியும் சேர்ந்து அழுவாள்.
சில நாட்கள் முன்பு துளசி வாசலில் கோதுமையைப் புடைத்துக்கொண்டிருந்தாள். அய்யாவு அழைப்பது கேட்டது. திரும்பிப் பார்த்தாள். கம்பு அசைந்தது. எழுந்து அருகே போனாள். அவருடைய கை ஓட்டுக்கூரையைச் சுட்டிக் காட்டியது. கண்கள் மேலேயே இருந்தன. துளசியும் மேலே பார்த்தாள். அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் ஒன்றும் இருக்கவில்லை. ”என்ன வேணும்?” என்று கேட்டதும் திரும்பவும் கம்பால் கூரையைச் சுட்டிக் காட்டினார். இப்போதுதான் துளசி சற்று தள்ளி கீழ்ப்பக்கமாய் கூரையில் செருகிக் கிடந்த பனையோலைக் கட்டைப் பார்த்தாள். ”அது எதுக்கு இப்ப.. யாருக்கு ஏடு எழுதி என்ன செய்யப் போற..” என்று சற்று கோபமாய்க் கேட்டாள். “அதை எடு” என்பது போலக் கம்பை அசைத்தார் ஆவேசமாக. புகையும் தூசியுமாக நிறம் மங்கிப் போயிருந்த ஓலைக்கட்டை எடுத்தாள். வெளியே எடுத்துப் போய் தூசிபோகத் தட்டியெடுத்து வந்தாள். இதற்குள் இரண்டு மூன்று தும்மல் போட்டிருந்தாள். ”என்ன செய்யணும்?” என்று நீட்டினாள்.
கண்களில் ஆவேசத்துடன் மீண்டும் கம்பை அசைத்தார். குரலில் வேகம். வெறி. குச்சி மேலும் கீழும் ஆடியதைப் பார்த்து ”வெட்டணுமா?” என்று கேட்டாள். இப்போது கம்பு குறுக்கும் மறுக்குமாக அதே வேகத்துடன் அசைந்தது. ”கிழிச்சி போடவா?” துளசி ஓலையை கிழித்துக் காட்டினாள். தலை ஆமோதித்தது. ஓலைகளை ஒடித்துப் போடத் தொடங்கினாள். நாள்பட்டு காய்ந்து கிடந்த ஓலை சத்தத்துடன் ஒடிந்து உதிர்ந்தது. ஓலைகள் ஒடிந்து உதிர்வதை அய்யாவுவின் கண்கள் வெறியுடன் பார்த்திருந்தன. ஓலைகள் இப்போது உடைந்து தரையில் குவிந்து கிடந்தன. மீண்டும் அய்யாவு குரல் எழுப்பினார். இடது கையால் காற்றில் எழுதினார். அவருடைய செய்கையின் அர்த்தம் துளசிக்கு விளங்கியது. குரல் தடுமாற ”எதுக்கு இப்பிடி ஒரு கோபம். வேணாமே. அது உன்ன என்ன செய்யுது?” என்று சொன்னதும் அய்யாவு கோபத்துடன் கம்பை வீசினார். அது அவளுடைய புறங்கையில் விழுந்தது. ”செரி, செரி. கோவப்பட வேணாம். செய்யறேன்” என்று அழுதபடியே அடுப்படிக்கு போனாள். தீப்பெட்டியையும் மண்ணெண்ணெய்ப் புட்டியையும் எடுத்து வந்தாள். அவற்றைப் பார்த்ததும் அய்யாவுக்கு ஒரு ஆசுவாசம் வந்ததுபோலத் தெரிந்தது. கண்களைத் துடைத்தபடியே ஓலைகளைக் குவித்து மண்ணெண்ணையை வார்த்தாள். ஒரு தரம் அய்யாவுவைப் பார்த்தவள் நிதானமாக நெருப்புக் குச்சியை உரசி சுடர்ந்த நெருப்பின் துளியை ஓலைகளின் மீது எறிந்தாள். குப்பென்று பற்றிக்கொண்டது. மண்ணெண்ணையின் வாசனையுடன் காய்ந்த ஓலைகள் திகுதிகுவென்று எரியத் தொடங்கின. நெருப்பின் சுவாலைகளைக் கண்டதும் அய்யாவு தொண்டையைச் செருமிக்கொண்டார். ஓலைகள் எரிந்து சாம்பலாகும் வரை அந்தச் சத்தம் ஒரு உறுமலைப் போலக் கேட்டுக்கொண்டே இருந்தது.