இராசேந்திர சோழன் கதைகளில் ஆண் – பெண் உறவு (பகுதி 1)

by மானசீகன்
1 comment

ஆண்- பெண் உறவின் புதிர்களும் பாவனைகளும் எப்போதும் புனைவுலகின் முடிவுறாத கருப்பொருளாக நீடித்திருக்கின்றன. அந்த உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக விதிகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. தேச, கலாச்சார, மொழி சார்ந்த வேறுபாடுகளுக்கேற்ப ‘ஒழுக்கம்’, ‘கற்பு’ ஆகியவை குறித்த வரையறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கின்றன. பெருக்கெடுத்தோடும் சுனை நடுவே, குறிஞ்சிப் பூக்களின் வாசம் கமழ, இருள் போர்த்தி முயங்கும் சங்கக் காதலர்களும், பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்பி வருவதற்குள் தொழிற்சாலையிலிருந்து பெர்மிஷன் போட்டு ஓடிவந்து தட்டப்படாத கதவுகளில் மனதை வைத்தபடி அவசரமாய் நிகழ்ந்து முடியும் ஒண்டுக்குடித்தனத்தின் பகல் கலவிகளும் ஒன்றல்ல. ‘புணர்தலும் புணர்தல் நிமித்தமும்’ என்கிற அதே உரிப்பொருளில் காலமும் சூழலும் ஏற்படுத்தியிருக்கிற மாற்றத்தைப் புகைப்படக் கலைஞனின் தேர்ந்த விழிகளோடு படைப்பாளிகள் கவனித்துக்கொண்டேயிருக்கின்றனர்.

தமிழ்ப் புனைகதை உலகில் ஆண் – பெண் உறவின் நுட்பங்களைப் பாவனையின்றிப் பேசியவர்களில் முதன்மையானவர் இராசேந்திர சோழன். அவர் கதைகளில் மிகைச் சித்திரங்களே இல்லை. சொல்லப்போனால் இராசேந்திர சோழன் காதல் கதைகளையே எழுதவில்லை. ‘காதல் கதைகளாகத்’ தோற்றம் தருகிற சில கதைகளில்கூட இறுதிக்காட்சியில் மூஞ்சியில் நீர் தெளித்து மயக்கம் தெளிவித்துவிடுகிறார். ஆனால் கதையின் தொடக்கத்திலேயே கதாபாத்திரங்களை மட்டும் கனவு காண அனுமதித்துவிட்டு வாசகர்களைக் கனவிலிருந்து வெளியே நிறுத்திவிடுகிறார். நாம் பார்த்துக்கொண்டிருப்பதும்கூட கனவுகளையல்ல. தூங்கிக்கொண்டிருப்பவனைச் சூழ்ந்திருக்கும் கசப்பான யதார்த்தங்களைத்தான். அவற்றை நம் பார்வைக்கு வைத்துவிட்டு அவர் செம்புத் தண்ணீரோடு போர்வை விலக்கி எழுப்பிவிடுகிறார். அவர் அனுபவங்களிலிருந்து சேகரித்து வைத்திருக்கும் அந்தத் தண்ணீர்க் கதையில் வருகிறவர்களோடு வாசித்துக்கொண்டிருப்பவனின் ரொமாண்டிசிஸ பிரமைகளையும் ஒரே நேரத்தில் கலைத்துவிடுகிறது. பல யதார்த்தவாத எழுத்தாளர்களும்கூட அவர்களுக்கே தெரியாமல் சுமந்துகொண்டிருந்த ரொமாண்டிசிஸப் பல்லக்கின் திரையை விலக்கி ‘ஒன்றுமில்லை’ என்று அனைவருக்கும் காட்டிவிட்டு முதல் ஆளாக மிகைக் கற்பனைகளின் சுமையுதிர்த்து வெறுங்கையோடு நடக்க ஆரம்பித்தவர் இராசேந்திர சோழன்தான்.

பதின்பருவத்துக் காமம்:

இளமைக்காலத்தில் பெண் உடல் குறித்த தீராத மயக்கங்களோடு ஆண் தனக்குள் உருவகித்துக்கொள்ளும் தூய ப்ளாட்டோனிக் காதலையோ ஆண் மனதிற்குள் பெண் உடல் உருவாக்கிவிடும் மோக வர்ணனைகளின் ஜாலங்களையோ அவர் கதைகளில் காண முடிவதில்லை.

அவருடைய பெரும்பாலான கதைகளில் ஆண்களுக்குத் தங்களைவிட வயது கூடுதலான பெண்களின் மேல் ஈர்ப்பு வருகிறது. அவர்கள் அனைவருமே திருமணமானவர்கள். எழுபதுகளில் வங்கிகளுக்கோ ஊராட்சி அலுவலகப் பணிகளுக்கோ பள்ளி ஆசிரியர்களாகவோ வருகிற முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்களும் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் விடலை இளைஞர்களுமே இந்தக் கதைகளின் நாயகர்களாக இருக்கிறார்கள்.

‘நட்சத்திரம் பகலில் தெரிவதில்லை’ கதையில் குழந்தையைச் சாக்காக வைத்து தன் வீட்டில் குடியிருக்கும் பெண் மீது மோகம்கொள்ளும் கல்லூரி மாணவனின் உளவியலைப் பேசுகிறார். அவளுக்கு உண்மை புரிந்து அவனை முறைத்த மறுநொடியே அவன் குழந்தைப் பாசம் காணாமல் போய்விடுகிறது.

‘சூழல்’ கதையில் அவன் மனம் கஷ்டப்பட்டுவிடக்கூடாது என்கிற பரிவுணர்ச்சியே அவளைக் காமத்தின் புதைகுழிக்குள் தள்ளிவிடுவதை இராசேந்திர சோழன் நுட்பமாகக் குறிப்புணர்த்தியிருப்பார்.

‘நண்பனின் அண்ணி’ கதை இன்னும் நுட்பமானது. அண்ணிக்கு எதிர்வீட்டுக்காரன் மூலமாகவே குழந்தை பிறந்திருக்கிறது என்கிற உண்மை யாருக்கும் தெரியாது. கொழுந்தனுக்கே இறுதியில்தான் தெரிய வரும். நண்பன் தற்செயலாகக் கூறிய சிறுகுறிப்பை வைத்து மனதிற்குள் கூட்டிக் கழித்து யோசித்துவிட்டு உண்மையைப் புரிந்துகொள்கிற போது அவனுக்குள் ஏற்படுவது வெறும் கலாச்சார அதிர்ச்சியோ குடும்ப கௌரவத்திற்கு நிகழ்ந்த சீர்குலைவால் உருவான பதற்றமோ மட்டுமல்ல. அந்த அதிர்ச்சிக்குள் நுட்பமான பொறாமை ஒளிந்திருப்பதை மறுவாசிப்பில் உணர முடியும். அந்தப் பொறாமை பதின்பருவத்து வேட்கையால் நிகழும் கண்கட்டிய வெறிநாய் பாய்ச்சலின் முதல் ஓட்டம் என்பதை நாம் உணர முடியும்.

‘சிதைவுகள்’ கதை பதின்பருவத்து இளைஞர்களின் பொது மனநிலையைக் கட்டுடைக்கிறது. உடல் அழகின் மீதான மிகை உணர்ச்சியால் மனம் உருவாக்கிக்கொள்ளும் பாவனைகளை இராசேந்திர சோழன் இரக்கமின்றித் தோலுரிக்கிறார். ‘அவளையல்ல, அவள் சேலை நுனியைத் தொட்டால்கூட போதும்’ என்று திருமணமாகிவிட்ட எதிர்வீட்டுப் பெண்ணை நினைத்து ‘தூய காதலோடு’ உருகும் இளைஞன், குழந்தை பெற்றபின் அழகின் பாவனைகள் காணாமல் போய் மூக்குச்சளியைச் சிந்தி சேலையிலேயே துடைத்துக்கொள்ளும் அவள் செயலைக் கண்டு அருவருப்படைவதையும் அவர் அழகாகச் சித்திரித்திருக்கிறார்.

பதின்பருவத்தில் ஆண்களின் மனம் பெண் உடலை வைத்து உருவாக்கிக்கொள்ளும் கற்பனைகளின் உள்ளீடற்ற ஜிகினா வேஷங்களை இரக்கமின்றிக் கலைத்து யதார்த்தத்தின் கண்ணாடி முன் நிறுத்துவதையே அவர் கதைகள் முதன்மையான பணியாகச் செய்கின்றன. இந்தக் கலைத்தல்களை அவர் குரூரத்திலிருந்தோ தன்னைப் படைத்த சக்திகளால் கைவிடப்பட்ட நவீன மனிதனின் ‘அந்நியமாதல்’ உணர்விலிருந்தோ செய்வதில்லை. இந்த விஷயத்தில் அவருக்குள் கருணைகூட பெரிய அளவில் செயல்படுவதில்லை. வாழ்வின் பல்வேறு அனுபவங்களை உணர்ந்த பெரியவர் ‘அடங்குங்கடா பொடிப் பசங்களா’ என்று நடுவீதியில் இரைந்து பேசுகிற தன்மையே பதின்பருவ உணர்வுகள் குறித்த அவருடைய கதைகளில் கோலோச்சுகின்றன.

திருமண உறவு:

இந்தியக் குடும்ப அமைப்பின் அடிப்படையாக மதங்களும் சமூக அமைப்பும் புனிதங்களைத் தொடர்ந்து கட்டமைத்திருக்கின்றன. ஆனால் உண்மையில் இந்தக் குடும்ப அமைப்பு புனிதங்களால் மட்டுமே நிலைபெற்றிருக்கவில்லை. தொடர் பழக்கத்தினால் உருவான மனச்சாய்வே பல தம்பதிகளைப் பிரியாமல் வைத்திருக்கிறது. இந்த உண்மையைப் பல கதைகளில் இராசேந்திர சோழன் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த உறவின் நீட்டிப்பில் அவர்களுக்கே தெரியாமல் காமம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

‘இழை’ கதையில் கணவன் வேலை முடித்து வீட்டுக்கு வந்ததில் இருந்து மனைவி வாய் ஓயாமல் அவன் மீது புகார்ப் பட்டியலை வாசித்துக்கொண்டேயிருக்கிறாள். அவனும் அதற்குக் கோபமாக பதில் கூறுகிறான். அந்தச் சண்டை நீடித்துக்கொண்டிருக்கும் போது அவன் சகஜமாக அவள் தோளில் கை வைக்கிறான். அவனை சுருதி விலகாமல் குறை கூறிக்கொண்டே அவள் தன் ரவிக்கையைக் கழற்றுகிறாள். ‘இந்த கொக்கி எங்கேயோ மாட்டிக்கின்னு இருக்கு வகைதொகை இல்லாம’ என்று அவள் சலித்துக்கொள்வதோடு கதை முடிகிறது.

இது ஓர் அற்புதமான உத்தி. ஊடல் கூடலாவதற்கான இனிய தருணங்களே கதையில் காட்டப்படவில்லை. அவர்கள் சண்டையின் தொடர்ச்சியாகவே அந்தக் காமமும் காட்டப்பட்டிருக்கிறது.

‘முனியம்மாவுக்கும்
முனியப்பனுக்கும்
பகலெல்லாம் பல சண்டை
ராத்திரியில் ஒரே சண்டை’

என்கிற மகுடேசுவரனின் கவிதையை இந்தக் கதையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

அவர்களுடைய அன்றாட வாழ்வின் பகுதிகளாகவே சண்டையும் காமமும் ஒன்றோடொன்று பிணைந்து கிடப்பதை இராசேந்திர சோழன் அடையாளம் காட்டுகிறார். இது ‘ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்’ என்கிற வள்ளுவ தரிசனமில்லை; அவர்களுடைய நீண்ட நாள் பழக்கதோஷமாக மட்டுமே காமம் எஞ்சி நிற்கிறது என்கிற குறிப்புணர்த்தலே இந்தக் கதை. அவர்கள் பிரியாமலிருப்பதும் இதன் நீட்சி மட்டுமே. மற்றபடி புனிதங்களோ அன்போ அவர்களைப் பிணைத்து வைத்திருக்கவில்லை என்பதை இராசேந்திர சோழன் மறைமுகமாக உணர்த்திவிடுகிறார்.

‘அந்த ஆம்பள வரட்டும்’ கதை இதன் தலைகீழ் வடிவம். கணவன் வீட்டில் இல்லாதபோது அவனை வகைதொகையில்லாமல் திட்டிக்கொண்டேயிருக்கும் பெண்மணி, அவன் வந்ததுமே குரலைத் தாழ்த்தி, ‘என்னாடா அவ ஒண்டிக்காரி, எதன்னு பாப்பான்னு இல்லாம இந்நேர வரிக்கும் சீட்டாடிக் கெடந்திட்டு இப்ப வாறீயே.. கொஞ்சம்கூட பச்சாதாபமே இல்லதே ஒனக்கு’ என்று பொங்கும் காமத்தோடு குழைகிறாள். அவள் உரத்த குரலைக் கேட்டுக்கொண்டே கோழிக்குழம்பு சமைக்கும் பக்கத்து வீட்டு இளைஞர்களின் அடுப்பில் நன்றாக வெந்து உச்சகட்ட கொதிப்பில் தன் கடினத்தன்மை நீங்கி இலகுவாகிவிட்ட கோழியை இராசேந்திர சோழன் அவள் மனநிலைக்கான குறியீடாக்குகிறார். கடந்த கதையில் காமம் சண்டையின் தொடர்ச்சி என்றால் இந்தக் கதையில் சண்டையே காமத்திற்கான முன்னோட்டமாக அடையாளப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கென்று இந்தச் சமூகம் விதித்த கடமைகளை அவள் விரும்பியோ விரும்பாமலோ செய்யத் தொடங்கி ஒருகட்டத்தில் ‘அந்தக் கடமைகளே தான்’ என்று அவள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது . இந்த உணர்வு அவளுக்குப் பிரக்ஞைப்பூர்வமாக ஏற்படுவதில்லை. கணவனை விட்டு விலகுகிற சூழல் வரும்போதெல்லாம் இந்தக் கடமைகளே ஒரு பூதமென மாறி அவளை வாரிச் சுருட்டிப் பாயுடனோ கரண்டியுடனோ படுக்கையறையிலும் சமையலறையிலும் மாறி மாறிப் போட்டுவிடுவதை அவள் அறிந்திருப்பதேயில்லை. துயிலென்றறியா நடமாட்டத்தையே அவள் தாம்பத்யம் என்று கருதிக்கொள்கிறாள். ‘தனபாக்கியத்தேட ரவ நேரம்’ கதை இதனை அழகாக உணர்த்துகிறது. கணவனிடம் சண்டை போட்டு வசைச்சொற்களோடு அடிவாங்கி துணிமூட்டையோடு வீட்டைவிட்டு வெளியேறும் தனபாக்கியம், வேறெங்கும் போகாமல் மாட்டுக் கொட்டகையிலே உட்கார்ந்துவிடுகிறாள். அவள் கடமைகளின் சுமை கொஞ்சம் கொஞ்சமாய் அவனை நோக்கி நகர வைக்கிறது. கடைசியில் சோறாக்கி வெஞ்சனத்துக்காக எதுவுமே நிகழாதது போல் கணவனையே முருங்கைக்காய் பறித்து வரச்சொல்கிற அளவுக்குச் சாதாரணமாகி விடுகிறாள். இந்த நெருங்கி வருதலின் முதல் கண்ணியாகக் ‘குழந்தை’ இருப்பது கதையில் நுட்பமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

‘இடம்’ அவருடைய தலைசிறந்த கதைகளில் ஒன்று. அந்தக் கதை ‘பழக்கம்’ என்கிற உணர்வே ‘பெண்களின் மனதில் கற்பாக’ நிலைகொள்வதைக் கலை மேதமையோடு முன்வைத்திருக்கிறது.

முரட்டுத்தனமான முன்கோபியும் உள்ளுக்குள் மென்மையானவனுமான சாரங்கபாணி ஒரு வீட்டில் தங்கியிருக்கிறான். அந்த வீட்டு முதலாளி மகள் கஸ்தூரி துடுக்கானவள். இருவரும் அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். ஒருநாள் உச்சகட்ட கோபத்தில் அவள் செருப்பால் அடிப்பேன் என்று கூற, அதைத் தாங்கிக்கொள்ள முடியாத அவன் தற்செயலாக வாய்த்த தனிமையில் அவளைப் பழிவாங்க வேண்டும் என்கிற அவசர உணர்வில் அத்துமீறிவிடுகிறான். அந்த நிமிடமே அவள் மீதான பகையையும் மறந்துவிடுகிறான். அதே வீட்டில் கர்ப்பிணியான சாந்தாவும் வேலை பார்க்கும் இடமே கதியென்று கிடக்கும் சுந்தரமூர்த்தியும் வாடகைவாசிகளாகத் தங்கியிருக்கின்றனர். சாந்தா மெலிந்து பாவமாயிருப்பவள். அவள் மீது சாரங்கபாணிக்குக் கருணை உண்டு. அவளுக்குத் துணியெல்லாம் துவைத்துத் தருவான். அவளும் விகல்பமில்லாமல் அவனுக்கு முதுகெல்லாம் தேய்த்துவிடுகிறாள். அவள் பிரசவத்தின்போது அத்தனை உதவிகளையும் இவன் விழுந்து விழுந்து செய்வதைக் கஸ்தூரி கவனித்துக்கொண்டேயிருக்கிறாள்.

குழந்தை பெற்ற பிறகு ஓர் இரவின் தனிமையில் சாரங்கபாணி கண்ணுக்குச் சாந்தா அழகாகத் தெரிகிறாள். அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ள முயலும்போது மென்மையாகத் தடுத்துவிடுகிறாள். அதற்குப் பிறகும் அவனிடம் இனிமையாகவே பழகுகிறாள். கஸ்தூரிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் திருமணத்திற்காக மகிழாமல் அவள் மிகவும் சோகமாக இருக்கிறாள். ‘அவள் ஏன் இப்படி இருக்கிறாள்?’ என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் சாரங்கபாணி இருளில் வெறித்தபடி உட்கார்ந்திருக்கும் அவளைப் பக்கத்தில் சென்று பார்ப்பதோடு கதை நிறைவடைகிறது.

‘இடம்’ என்கிற தலைப்புதான் கதை சொல்ல வருகிற விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. இரு பெண்களும் இரு ஆண்களுடனான உறவால் அவர்களுக்கு மனதில் தருகிற இடத்தையே தலைப்பு குறிக்கிறது. தனக்குச் சுத்தமாகப் பிடிக்காத சாரங்கபாணியோடு ஒரே ஒருமுறை விரும்பாமல் நிகழ்ந்த உறவால் கஸ்தூரி அவனுக்கு மனதில் இடமளித்துவிடுகிறாள். சாந்தாவுக்குச் சாரங்கபாணியை மிகவும் பிடிக்கும். அவள் கணவன் மீது சுத்தமாகப் பிரியமே இல்லை. அவள் மெலிந்த உடலைச் சுட்டிக்காட்டி, ‘எலிக்குஞ்சு ஒடம்பு’ என்று சாரங்கபாணி கேலிசெய்யும் போது, ‘இதுக்கு மேல உடம்பு வேணுமா? எல்லாம் இந்த ஒடம்பு போதும் அவருக்கு’ என்று விட்டேற்றியாகப் பேசுகிறாள். ஆனாலும் இந்த உடம்பு சுந்தரமூர்த்திக்கு மட்டும்தான் என்கிற இடத்தை அவனுக்குத் தந்து வைத்திருக்கிறாள்.

கஸ்தூரி, சாந்தா இருவரையுமே பெண்ணியவாதிகள் பத்தாம்பசலிகள் என்றே அழைப்பார்கள். சொல்லப்போனால் இருவரின் புரிதலும் வெவ்வேறு. ஆனால் பழக்கத்தினால் மட்டுமே அவர்கள் பிரத்யேகமாக அவரவருக்கான புரிதல்களோடு தங்களுக்கான கற்பை வரித்துக்கொள்கிறார்கள் என்கிற நுட்பத்தைக் கதை தந்துவிடுகிறது.

‘முதுமையின் மோகம்’ பழக்கத்தாலும் சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கும் ஆணின் சந்தேகம் பற்றிய கதை.

சரசா குடும்பச் சூழலுக்காக வயதான ஒருவருவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறாள். அவருடைய தாழ்வு மனப்பான்மையே தாம்பத்யத்தின் வில்லனாக மாறுகிறது.

சரசாவைப் பொறுத்தவரை அவள் அவரிடம் எதையும் பெரிதாக எதிர்பார்க்கவுமில்லை, ஏமாற்றமடையவுமில்லை. ஆனால் அவரே வலிந்து அவள் உடல்தாகம் மீதான பரிவோடும் தன் மீதான சுய இரக்கத்தோடும் பேசுகிறார். தான் இப்படிப் பேசினால் அவள் ‘அப்படியெல்லாம் இல்லை, நீங்க மன்மதன்’ என்று தன்னைப் போலியாக உயர்த்திப் பேசுவாள் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைகிறார். பொய்யான பாவனைகளைச் சிறுவயதிலிருந்து பழகாத சரசா அப்படி எதையும் கூறுவதில்லை. ஒரு கட்டத்தில் அத்தை மகன் பாஸ்கரனோடு அவளை இணைத்துப் பேசியவுடன் மனம் வெதும்பித் தாய்வீடு செல்கிறாள். அவள் சென்ற உடன் அவர் உடல்நிலை மோசமடைகிறது. மரணப்படுக்கையில் கிடப்பவர் மீது கருணை கொண்டு குடும்பத்தோடு வருகிறாள். அப்போதும் அவர் வன்மம் மாறவில்லை. ‘செத்துட்டா தூக்கிப் போடலாம்னு மொத்தமா வந்திருக்கீங்களா?’ என்று விஷத்தைக் கக்குகிறார்.

காமத்தை மட்டுமே பெண் பெரிதாகக் கருதுவாள் என்கிற ஆணின் மிகைப்படுத்தப்பட்ட கற்பிதமே இருவர் வாழ்க்கையையும் குலைத்துப் போடுவதை இராசேந்திர சோழன் இக்கதையில் சுட்டியிருக்கிறார்.

தன் ஆண்மையைப் பெண் அங்கீகரித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று ஆண் கருதுவதைப் போலவே, தன் பத்தினித்தன்மையை ஆண் பறைசாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும் என்கிற பெண்ணின் மனோபாவத்தை மிகச்சரியாகச் சித்திரித்த கதைதான் ‘புற்றில் உறையும் பாம்புகள்’. ஒருவகையில் ‘முதுமையின் மோகத்தின்’ மறுபக்கம் இது.

வனமயிலு ஆண்கள் முன்னால் வரமாட்டேன் என்றும் எதிர்வீட்டு இளைஞன் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான் என்றும் வெட்கப்படுவது மாதிரி உடல் கூசி ஒளிந்தும் பிற பெண்களோடு தன்னை ஒப்பிட்டும் கணவன் கந்தசாமி முன் தன் பத்தினித்தன்மையை வாய் ஓயாமல் பறைசாற்றிக்கொண்டேயிருக்கிறாள். ஊர் நாட்டாமை வந்ததும் உள்ளே மறைந்து தலையை மட்டும் கதவுக்கு வெளியே நீட்டுகிறாள். சொம்பில் தண்ணீர் தருவதற்கு வெட்கத்தால் கூசி நிற்கிறாள். அவளுடைய பிலாக்கணங்களையெல்லாம் கேட்டபடி கந்தசாமி அமைதியாக வேலை பார்த்துக்கொண்டேயிருக்கிறான். நாட்டாண்மை வந்துபோன பிறகு மீண்டும் அவள் எதிர்வீட்டு இளைஞனைக் குற்றம்சாட்டியவுடன் கோபமாகி, ‘சும்மா ரொம்பத்தான் காட்டினுக்கிறா.. பெரிய பத்தினியாட்டம்’ என்று அவள் நீண்ட நேரமாக கட்டியெழுப்ப முயன்ற அஸ்திவாரத்தையே தகர்த்துவிடுகிறான்.

கதையில் ஒரு நுட்பமான காட்சி உண்டு. பண்ணையார் கந்தசாமியைக் கையெழுத்து போடச் சொல்லும்போது அவரது சிவந்த விரல்களையும் எருவட்டி தூசியுடன் கூடிய கந்தசாமியின் கறுத்த விரல்களையும் வனமயிலு ஒருசேரப் பார்த்து, ‘கையை கழுவிட்டு கையெழுத்து போடலாம்ல?’ என்று கூறுகிற மாதிரி ஓர் இடம் வரும். இது வாசகர்கள் மட்டுமல்ல, கந்தசாமியும் வனமயிலை உணர்கிற இடம். ஆனால் அவன் அதை இயல்பான ஒன்றாகவே கடந்துபோகிறான். அவளின் பத்தினித்தனத்திற்கான மெனக்கெடல்கள் எல்லை மீறுகிற போதுதான் தான் உணர்ந்ததை அவளிடம் மெல்லத் திரை விரித்துக்காட்டுகிறான்.

பழக்கம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காம, குரோதத் தருணங்கள் மட்டுமல்ல. இணையரின் மனச்சலனங்களை அறிந்துகொண்டு அதை இயல்பாகக் கடந்துசெல்வதும்தான் என்கிற நுண்ணிய உணர்வை இராசேந்திர சோழன் கதைகள் வழங்குகின்றன.

குடும்ப அமைப்பில் ஆயிரம் சிக்கல்கள் இருந்தாலும் பெண்கள் எதற்காக இந்த அமைப்பைச் சகித்துக்கொண்டிருக்கின்றனர் என்கிற அடிப்படையான கேள்வியை எழுப்பி இராசேந்திர சோழன் பல கதைகளில் விவாதித்திருக்கிறார்.

‘மல்லிகா ஒரு சினிமா பைத்தியம்’ கதையில் வரும் மல்லிகா அழகானவள். ஏழ்மைச் சூழலின் காரணமாகத் தன் அழகிற்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத பரசுராமனைத் திருமணம் முடித்து வறுமையில் வாழ்ந்து இரு குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். அவளது அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளின் புற வடிவமாக சினிமாவைப் பற்றிக்கொள்கிறாள். கையில் காசில்லாவிட்டாலும் பெண்களோடு ஓசியில் சினிமாவிற்குப் போகிறாள். ஒருநாள் காசில்லாமல் பெண்கள் அவளை விட்டுவிட்டுப் போய் விடுகின்றனர். அவள் ஏக்கத்தோடு அமர்ந்திருக்கும் போது பக்கத்து வீட்டு விஸ்வநாதன், ‘மனைவிக்கு பிரசவ வலி என்பதால் அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்தேன். என்னிடம் இரு டிக்கெட்டுகள் உண்டு. நீங்க படத்திற்கு வருகிறீர்களா?’ என்று கேட்கிறான். அவள் சினிமா மோகம் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனோடு செல்ல வைக்கிறது. விஸ்வநாதனின் எதிர்பாராத நடத்தையும், பின்னாலிருப்பவர்களின் கேலிப்பேச்சும் நடுத்தெருவில் நிர்வாணமாக்கப்பட்டு பலரால் பகிர்ந்து தின்னப்படுவதான மனநிலைக்கு அவளைத் தள்ளுகிறது. பல்லைக் கடித்தபடி திரும்பி வந்து சினிமா மோகத்தோடு அனைத்து ஆசைகளையும் வீசி எறிந்துவிட்டு பழக்கத்தால் வடிவமைக்கப்படும் சாதாரணமான வாழ்விற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறாள்.

‘மனம்- மணம் – மறுமணம்’ கதையும் இதே மாதிரிதான். முதியவரை மணந்து இளமையில் பிள்ளைகளோடு விதவையான கமலாவுக்குப் பாஸ்கரன் உற்ற துணையாக இருக்கிறான். அவன் மறுமணம் செய்ய முன்வந்ததையும் நிராகரித்து சுயமரியாதையோடு வேலைக்குச் செல்ல நினைக்கிறாள். அங்கு விஸ்வநாதன் என்பவன் அவள் நிலையை அறிந்து துணிந்து நைட் ஷோவிற்குக் கூப்பிடுகிறான். அவள் மனம் ஒடிந்து பாஸ்கரனிடமே மறுமணத்திற்காகச் சரணடைவதாகக் கதை நிறைவடைகிறது.

இந்த இரண்டு கதைகளிலும் அந்தப் பெண்கள் தம் ஆசைகளை, சுய மரியாதையைப் புதைத்து விட்டுத்தான் இந்த முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்கள் வேண்டுவது விடுதலையை அல்ல, அவமானமில்லாத எளிய வாழ்க்கையை!

இந்தியச் சமூகத்தில் காக்கைக் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட ஒற்றை எலியாய் கொத்திக் குதறப்படாமல் இருப்பதற்கான எளிய பாதுகாப்பையே குடும்பங்கள் பெண்களுக்கு வழங்குகின்றன. ஆனால் அந்த ஒன்றைக் காட்டியே அவளுடைய அனைத்து உரிமைகளையும் ஒன்றுமில்லாமல் பறித்துவிடுகின்றன. ஆனாலும்கூட, எல்லாச் சுமைகளையும் தாண்டி அது ஒன்றே அவளுக்குப் போதுமானதாக இருக்கிறது என்கிற புரிதலை அவர் கதைகள் முன்வைக்கின்றன.

இந்தப் புரிதல் அவர் தீர்வாக முன்வைக்கும் தத்துவ தரிசனமோ சமூக முன்மொழிதலோ அல்ல. அவர் கற்றுணர்ந்த தத்துவங்களுக்கும் வாழ்வின் யதார்த்தத்திற்கும் இடையிலான மேடு பள்ளங்களையே அவர் இந்தக் கதைகளில் படைத்துக் காட்டியிருக்கிறார்.

இராசேந்திர சோழன் தன்னுடைய பல கதைகளில் பாத்திரங்களின் பெயருக்குப் பதிலாக ‘அவன்’, ‘அவள்’ என்றே குறிப்பிடுகிறார். அக வாழ்க்கையைப் பற்றிப் பேசிய சங்க இலக்கியங்கள், ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர்’ என்று தனி மனித அனுபவத்தைப் பொது அனுபவமாக நம் பார்வைக்கு வைத்திருக்கின்றன. இராசேந்திர சோழனும் யாரோ ஓர் இணையின் கதையாக எதனையும் கூறுவதில்லை. நவீன வாழ்வு உருவாக்கும் சுமைகள் ஆண் – பெண் உறவுக்குள் உருவாக்கிவிட்ட எந்திரத்தன்மையை அவர் கதைகள் அடையாளம் காட்ட முனைந்திருக்கின்றன.

ஆண் – பெண் உறவு குறித்த அவர் கதைகளின் முடிவில் ஆச்சரியமோ அருவருப்போ மன நெகிழ்வோ உருவாவதில்லை. ‘ஆமால்ல.. இப்படித்தானே இருக்கோம்?’ என்கிற ஒற்றை வரி ஆமோதிப்போடு நாம் அடுத்த கதைக்குத் தாவிவிடுவோம். ஏனென்றால் அந்தக் கதைகளில் புனைவின் அம்சங்கள் குறைவு. அவை நம் வாழ்வாக இருக்கின்றன. வாழ்வின் சுமைகளை அதீதமாக உணர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கை ஆச்சரியமாகவோ இனிமையாகவோ துன்பமாகவோ இருப்பதில்லை. வெறும் பழக்கமாகிவிடுகிறது. பழக்கமாக உறைந்துவிட்ட நவீன வாழ்வைப் புரிந்துகொள்ள முயலும் தீராத தேடலே இராசேந்திர சோழனின் தனித்தன்மையாக அவர் எழுத்துகளில் விரவியிருக்கின்றன. அது கசப்பின் குரலோ கருணையின் குரலோ அன்று. ஆனால் அந்தக் குரல் தன் சாதாரணத் தன்மையால் நம்மை மிக நெருக்கமாக உணரச் செய்துவிடுகிறது. அதுவே அவர் கதைகளின் மிகப்பெரிய பலம்.

-தொடரும்.

1 comment

Jayalakshmi February 27, 2022 - 12:40 am

அருமை… உங்கள் விமர்சனம் இவருடைய புத்தகங்களை வாங்கி படிக்கத் தூண்டுகிறது. நன்றி.

Comments are closed.