நோற்றலுக்கு இணையான விரும்பி ஏற்கப்படும் மதிப்புமிக்கத் துன்பங்களில் ஒன்று எழுதுதல். இதை எழுதும் இவ்வேளையில் குஸ்தவ் மாஹ்லரின் ஐந்தாம் சிம்பொனி ஒலிக்கிறது. எழுத்து மேஜையில் புத்தகங்கள் சிதறிக் கிடக்கின்றன. அசோகமித்திரனின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பும் கண் முன்னேயிருக்கிறது. 1647 பக்கங்களிருக்கும் அப்புத்தகத்தை கையிலெடுத்து க.சீ. சிவகுமார் சொன்னார்: “அசோகமித்திரனை விடவும் எடை அதிகமா இருக்கே”.
அப்போது நான் புன்னகைத்தேன். இப்போதும் அவர் சொன்னது நினைவிலிருந்து புன்னகைக்கத் தூண்டுகிறது. ஆனால் நீத்தார் நினைவுக்குறிப்பை எழுதும் போது புன்னகைப்பதை யார் விரும்புவார்களோ இல்லையோ நிச்சயம் க.சீ. சிவகுமார் விரும்பவே செய்வார்.
கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார் முன்னெப்போதையும்விட சூடு அதிகமாக இருக்கும் எனப் பயமுறுத்தப்பட்ட கோடைகாலத்திற்கு முன்பே ஓர் அபத்த மரணத்தை அடைந்தார். முன்பு சந்தித்த விபத்துக்களுக்கான சிகிச்சை காலங்களில் விபத்திலேயே மரணமடைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொன்னார். போன முறை, அதற்கு முந்தின முறை என்று கணக்குச் சொல்வதற்கு நிறைய விபத்துகளை அவர் சந்தித்திருந்தார். அவை எல்லாம் கிடைமட்டத்தில் நிகழ்ந்தவை. அவருடைய மரணமோ செங்குத்தானது. உயரமும், ஆழமும் விபத்துகளில் தப்பிப் பிழைப்பதற்கான சாத்தியங்களைக் குறைப்பவை.
புகைபோக்கியின் முனையில் அடர்ந்து தேங்கியிருக்கும் கருமையை க.சீ. சிவகுமாரும், நானும் மூன்றாம் மாடியிலிருந்த ஒரு மதுவிடுதியின் திறந்திருந்த ஜன்னலின் வழியே பார்த்தோம். நீலப் பின்னணியில் புகைபோக்கியின் முனை பிரபஞ்ச இருளின் துடைத்தழிக்க முடியாத கறையாகத் தோற்றமளித்தது. அன்று மழை பெய்யத் தொடங்கவும், உறக்க வேளையில் பெய்துவிட்டுப் போகும் மழையைப் போன்ற மரணமே கருணையானதென, மனிதர்கள் பயமின்றி மரணமடைய எவ்விதத்தில் அவர்களுக்கு மரணம் நிகழ வேண்டுமென்ற உரையாடலின் இறுதியில் நாங்களிருவரும் ஒரு முடிவை எட்டினோம். க.சீ. சிவகுமாரின் மரணம் நிச்சயம் அவருக்கு, எனக்குமேகூட, கருணைமிக்கதாக இல்லை.
அபத்தமான வாழ்விற்குப் பொருத்தமான மரணம். அவருடைய வாழ்வை அபத்தமானதென்று நாம் யாருமே சொல்லிவிட முடியாது. ஆனால் அவருடைய மரணத்தை அப்படியொரு சொல்லால் அழைப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது. வாழ்க்கை அபத்தமானதென்று அவர் வெகு வருடங்களுக்கு முன்பே உணர்ந்துவிட்டதாக ஒரு முறை சொன்னார். “வெகு வருடங்கள்” என்பது கன்னிவாடிக்கு அருகே ஓடும் ஒரு சிறு நதி வறண்டு நீரேயில்லாமல் திரிந்து கிடப்பதைப் பார்த்த பிறகோ, அவருடைய “காதல் ஒளிக” தொடர்கதை “நாடோடிகள்” என்ற பெயரில் திரைப்படமாகத் திருடப்பட்டிருப்பதை அறிந்த பிறகோ, கதைகளுக்குச் சன்மானமான வெறும் 1500 ரூபாய்க்கான காசோலையை மாற்ற வங்கியில் காத்திருக்கும் நேரத்திலோ, எல்லோரும் வேலை செய்து, சம்பாதித்து இன்புற்றிருக்க தான் மட்டும் உலகின் கண்களே பதியாத ஒரு மேஜையின் மீது, நமது சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட பணியொன்றைச் செய்துகொண்டிருக்கிறோம் என்ற போதம் (இலங்கையில் இச்சொல்லுக்கு வேறு பொருளும் உண்டு) தோன்றியிருக்கக்கூடிய கணத்திலோ தொடங்கியிருக்கலாம்.
அபத்ததை ஈடுசெய்ய மகிழ்ச்சி ஒன்றே மீதியிருக்கிறதென்று அவர் நம்பினார். நகைச்சுவையை அதற்கான கருவியாகவே கைக்கொண்டார். அங்கதமும், மொழி விளையாட்டுமிக்க ஒரு வாக்கியமுமே சொல்வதற்குப் போதுமென்று கதைகளை எழுதினார். அவையே எங்களிருவருக்குமான விலகல் புள்ளிகள். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான “கன்னிவாடி” புத்தகத்திற்குப் பின் வந்த அவருடைய வேறெந்த புத்தகங்களையும் நாடிச் சென்று வாசித்ததில்லை. ஆனந்த விகடன் குழுமத்தில் சுஜாதாவிற்குப் பிறகு இடமளிக்கப்பட்ட இளவயது எழுத்தாளன் என்பதில் அவருக்குப் பெருமையிருந்தது. பாப்புலாரிட்டிக்காக தன்னை வீணடித்துக்கொண்டவர் என்று சுஜாதாவைச் சொல்லியிருக்கிறார்.
க.சீ. சிவகுமார், ஓர் ஆனந்த விகடன் எழுத்தாளரென்ற இடத்தை அடைந்திருக்காமல் தவிர்த்திருக்கலாம். வெகுஜன இதழ்களில் எழுதுபவர் தன்னுடைய வாழ்வை இந்தளவு வருத்தியிருக்கவும் தேவையில்லை. சுஜாதாவைக் குறித்து அவர் சொன்னது அவருக்கும் பொருந்தக்கூடியதே. அவருடைய சினிமா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. வெகுஜன ஊடகப் பரப்பில் இயங்குவதற்குத் தேவையான குயுக்தியும், புத்திசாலித்தனமும், தாக்குப் பிடித்தலும் அவரிடம் மிகக் குறைவாகவே இருந்தன. ஆனந்த விகடன், தினமலர், கவுண்டர் சங்கப் பத்திரிகையான காராளர் என ஒரு சில நிறுவனங்களிலும், டைல்ஸ் கடையில் மேற்பார்வையாளர், வட்டி வசூலிப்பவர் என இன்னும் பல வேலைகளையும் செய்திருக்கிறார். எதிலும் நீடித்திருப்பதற்கான பக்குவத்தை அவர் வேண்டுமென்றே அடையவில்லை அல்லது அது அவருக்குக் கைகூடாமல் போனது. வேலைக்குச் செல்வதும், சராசரி வாழ்முறைகளும் இலக்கிய வாழ்வை வாழ விடாமல் செய்பவை என இலக்கிய வாழ்வு எவ்வளவு வெறுமையானதென்று அவர் அறிந்திருப்பினும் நம்பினார். அவர் பிடிவாதமாகப் பற்றியிருந்த ஒன்றே ஒன்று இந்த நம்பிக்கை மட்டுமே. இலக்கிய வாழ்க்கை வாழ்வதற்கான சகல தியாகங்களையும், அவமானங்களையும் அவருடைய சக்திக்கு மீறி தாங்க முனைந்தார். தடுமாற்றத் தருணங்களில் மதுவால் மனநிலையைச் சமன் செய்ய முனைந்தார். மதுவின் தற்காலிக மகிழ்ச்சியில் எல்லையற்ற இன்பத்தின் மாயத் துளிகள் கலந்திருப்பதை உணர்ந்தார். திளைத்தார். அது மேலும் பல சிக்கல்களுக்கு அழைப்பிதழானது. முக்கியமாக மனரீதியான சிக்கல்களுக்கு.
வெளிச்சத்தைவிடவும் இருளை அதிகம் விரும்பினார். அது அவர் மனதிலிருந்த இருள். “ஒரே இருட்டாயிருக்கே பாலா” என்று பத்து வருடங்களுக்கு முன்பு அவர் சொன்னது இப்போது நினைவில் எழுகிறது. அதனோடு போராடினாரென்றே சொல்வேன். ஆனால் அது அவருடைய முயற்சிகளின் பலத்தையும் மீறி வளர்ந்தது. மன அழுத்தத்திற்கான சிகிச்சையை மேற்கொண்டாலும் தொடர்ந்து தன்னை மீட்டுக்கொள்வதில் அக்கறையில்லாதவராக இருந்தார். யாருமில்லாத வீட்டில், அசையாப் பகல் வேளையின் அழுத்தத்தை, தன் விதியை எண்ணி குமைவதைத் தவிர்த்து வேறு என்ன செய்து கடந்திருப்பார்?
இசைப் பிரியரான அவர் சினிமா இசையைப் பெரிதும் விரும்பினார். சினிமா இசையல்லாத வேறு இசை வடிவங்களில் அவருக்கு ஆர்வமில்லையென்றாலும் என்னுடைய அறையில் கர்நாடக சங்கீதமோ, மேற்கத்திய செவ்வியல் இசையோ, கவ்வாலியோ ஒலித்தால் ஆழ்ந்து கேட்டிருக்கிறார் (ஜான் லென்னானின் பாடல்களைக் கேட்ட நினைவு இடையீடு செய்கிறது). இளையராஜா பாடல்களே இல்லாத என்னுடைய அறையை எதன் காரணமாகவோ அவர் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டும். ஜென்ஸியின் குரலில் அவருக்கு ஒரு மயக்கமே உண்டு. அவருடைய வீட்டில் சினிமா பாட்டுப் புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன். அசட்டு மேட்டிமைத்தனத்தோடு அதை மட்டம் தட்டியுமிருக்கிறேன். முழுப்பாடலாக இல்லாமல் ஒன்றிரண்டு வரிகள் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். அவையெல்லாம் மகிழ்ச்சியாக அவர் இருக்கும் தருணங்களில் பாடப்படுபவை. துயர மனநிலையில் பாடலுக்குப் பதிலாக உள்முகமாகத் திரும்பிய அமைதியே திகழும். பெரும்பாலும் டூயட் பாடல்களையே விரும்பினார்.
அரசியலைப் பொறுத்தவரை இடதுசாரிச் சார்புள்ளவர். தமுஎகச அமைப்பில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் எங்களது நட்புக்காலத்தில் அவரது ஈடுபாடு குறைபட்டிருந்தது அல்லது முற்றாகக் குறைந்துவிட்டது. ச. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, ஞாநி ஆகியோர் மீதும் மதிப்புகொண்டிருந்தார். அவருடைய இலக்கிய நோக்கங்கள், உந்துதல்கள், ஆதர்சங்கள் குறித்தெல்லாம் எங்களுடைய உரையாடல்களுக்கு இடையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதில்லை. பிரமிள் கவிதைகளையும், பிரம்மராஜன் மொழிபெயர்த்த போர்ஹேஸ் கதைகளையும் அவர் வீட்டில்தான் முதல்முறையாக வாசித்தேன். ஆனால் பிரமிளை உள்வாங்கிய அளவிற்கு அவரால் போர்ஹேஸை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. அவருடைய ஈடுபாடுகள் வேறு தளத்தில் இருந்தன. ஆங்கில வாசிப்பு இல்லையென்றாலும் அதைப் பற்றி குறைபட்டதும் இல்லை. அவர் பேசுவதைக் கேட்கக்கூடியவராகவும் இருந்தார். அவரது கருத்துகளை வலியுறுத்திச் சொல்ல விரும்பாதவர் என்பதால் எழுத்தாளர் குணா கந்தசாமி, அவர், நான் உரையாடும் பொழுதுகளில் இடையீடுகள் செய்யாமல் அமைதியாகக் கேட்பார். நகைச்சுவைகளைப் பகிர்ந்துகொள்வார், கேலி செய்வார். நவீனம், பின் நவீனம் குறித்தெல்லாம் அபிப்ராயங்கள் சொல்லாதவர். அவருடைய கிராமமும், அதன் வாழ்வுமே சொல்வதற்குப் போதுமானதென்ற நம்பிக்கையுடையவர் என்றாலும் கி.ராஜநாரயணன், ந.முத்துசாமி வரிசையில் வரக்கூடியவரென்ற சுய அனுமானமும் இல்லாதவர். அவரை ஆக்கிரமித்ததெல்லாம் வெகுஜனப் பரப்பே என்றாலும் பழந்தமிழ் இலக்கியங்களை ஊன்றி வாசித்திருப்பவர். சட்டென அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாடலைச் சொல்லுவார். அதற்காக மெனக்கெட்டு அவர் யோசிக்கத் தேவையிருக்கவில்லை. அப்படியே சிலப்பதிகாரமும், நாலடியாரும்.
இன்பமளிப்பவை எவையென்று அவர் நம்பினாரோ அவை எல்லாவற்றையும் அவருடைய வரம்பிற்கு உட்பட்டு செய்தார். துய்ப்பில் விருப்பமிருந்தாலும் பொருட்களைச் சேகரிப்பதில் நாட்டமில்லாதவர். ஏறக்குறைய ஒரு துறவியின் நிலை. அவருக்கு கால உணர்வு ஏறக்குறைய இல்லையென்றே சொல்லலாம். “இன்னைக்கு என்ன தேதி?” என்று பல முறை கேட்டிருக்கிறார். அவர் வேறொரு காலக்கோட்டில் வாழ்ந்தார். உலகை அறிவதற்கு அவருக்கு உள்ளுணர்வே போதுமானதாக இருந்தது.
காமம் அவருடைய தனிப்பட்ட பேரார்வம் என்றாலும் அவர் ஜி.நாகராஜனுடையதைப் போன்ற ஒரு வாழ்வை வாழவில்லை. அவருடைய ஆக்கங்களில் காமத்திற்கு முன்னுரிமையில்லை.
“பெண்களே சொர்க்கம், பெண்கள் (தர்மத்தை) போதிக்கிறார்கள்
உண்மையில் பெண்களே அதிஉயர் தவம்
பெண்களே புத்தர், பெண்களே சங்கம்
பெண்களே ஞானத்தின் முழுமை”
– சண்டமஹாரோசன தந்திரம்
கடைசியாக ஒருமுறை என்னுடைய அறைக்கு அவர் வந்திருந்திருந்த நேரத்தில் நாங்கள் இந்திய புத்த மதம் அறிமுகம் புத்தகத்தில் இதனை வாசித்தோம். அப்புத்தகமும் என் மேஜையில் இருக்கிறது. க.சீ மறைந்துவிட்டார் என்பது திரும்பத் திரும்ப பல நினைவூட்டல்கள் வழி என்னுடைய மனதில் ஓர் உண்மையை ஏற்றுக்கொள்ள வற்புறுத்துகின்றன. வலையில் சிக்குண்ட நிலை. அவர் மரணமடைந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குச் சரியாக உறங்க முடியவில்லை. அந்த இரண்டு வாரங்களும் என்னுடைய சில உடல்மொழிகள் அவர் போலவே இருப்பதாக எனக்கொரு தோற்றம். நான் அவருடைய மரணம் உண்டாக்கிய அவஸ்தையிலிருந்து விரைந்து தப்பிக்கவே விரும்பினேன். அவருடைய மரணம் என்னளவில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிடவில்லை என்றாலும் எனக்கு அது சுமக்கக் கடினமான துயரமே.
நண்பர்களுக்கு அவருடைய வீட்டில் மிக்க சுதந்திரம் உண்டு. அவர் வீட்டில் வசித்த நாட்களில் மிகுந்த உபசரிப்பிற்கும், அன்பிற்கும் உரியவனாக இருந்தேன். அவர் வீட்டில் வசித்த நாட்களில் எழுதிய கதையே “ஆப்பிள்”. அக்கதை ஆனந்த விகடனில் வெளிவர அவர் காரணமாக இருந்தார். அவருடைய இலக்கிய வாழ்விற்கு ஒரு கண்ணாடி சாட்சியமாக இருந்திருக்கிறேன்.
முழுமையாக அவர் குறித்து என்னால் எழுத முடியாத அளவிற்கு நினைவுகள் தொந்தரவூட்டுகின்றன. அவற்றை அனுமதிக்காமல் தொடர்ந்து எழுத முனைகிறேன். ஒவ்வொரு இரவும் ஓர் அமர நினைவு என்று கு.ப.ராஜகோபாலன் ஒரு சிறுகதையில் எழுதியிருக்கிறார். அவருடன் நட்பு கொண்டாடிய நாட்கள் ஒவ்வொன்றும் ஓர் அமர நினைவே. ஆறு வருடங்களுக்கு முன் ஒரு தீபாவளியை அவர் வீட்டில்தான் கொண்டாடினேன். பின்பகலில் ஆரம்பித்து அடுத்த நாள் விடியும் வரை உரையாடிக்கொண்டிருந்தோம். என்னுடைய பால்யத்தில் பார்த்த ஆறடிக்கும் நீளமான கருநாகத்தைப் பற்றிப் பேசும் போது நான் அழுதேன். அப்படியொரு கருநாகத்தை இனிமேல் வாழ்வில் ஒரு முறையும் பார்க்க முடியாதென்று புலம்பினேன். மாலையின் நீல வெளிச்சத்தில் கற்களுக்குள்ளிருந்து வெளிவந்த கருநாகத்தை நான்கைந்து பேர் சேர்ந்து அடித்துக் கொன்றனர். பால்யத்தில் பார்த்த கருநாகத்தின் கருமையே கண்ணில் நிற்கிறது. க.சீ. சிவகுமாரின் மரணக் கருமையும் கண்ணில் நிற்கிறது. முயங்கிய நிறங்களே மரணத்தின் பூச்சாக உள்ளன.
அவர் மரணத்திற்குப் பிறகே ஜுஸெப்பி டார்டினியின் “Devil’s Trill Sonata” இசைத் துண்டைக் கேட்க ஆரம்பித்தேன். தீமையின் நாயகன் அவருடைய கனவில் வந்து வாசித்துக் காட்டிய இசையின் பங்கப்பட்ட துண்டே டார்டினியால் உருவாக்க முடிந்ததென்று அவர் சொல்லியிருக்கிறார். க.சீ. சிவகுமாருக்கும் அப்படியொரு இசை நிலத்தின் ஆழத்தில் கேட்டிருக்க வேண்டும். அதன் அழைப்பிற்கு இணங்கவே நிலத்தில் தலை மோதி மரணமடைந்தார். எந்த மருத்துவமனையைக் கடந்து போகும் வேளையில் “மகிழ்ச்சியில்லை என்றால் உயிர்த்திருந்து என்ன பயன்?” என்று கேட்டாரோ அதே மருத்துவமனையின் பிணவறையின் உலோக இழுவைக்கு உள்ளே மாறாப் புன்னகையோடு அவர் உடலைப் பார்த்தேன்.
பிணக்கூறாய்விற்கு அவருடைய உடல் விக்டோரியா மருத்துமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு தள்ளுப்படுக்கையில் அவர் உடலை உள்ளுக்கு இழுத்து ஒரு கதவு மூடிக்கொண்டது. கதவிடுக்கு வழியே அவர் உடல் மீதிருந்த ஆடைகள் களையப்படுவதைப் பார்த்தேன். அவருடைய நிர்வாண உடலும் ஒரு காட்சியாகத் தெரிந்தது. அவர் எய்த நிலையே அதுவென்று எண்ணிக்கொண்டேன். புன்னகை அவர் உடல் அடக்கம் செய்யப்படும் வரை மாறாமல் இருந்தது. மண்டை உடைந்து இறந்த பின்னும் அப்படியொரு புன்முறுவல் அவருக்கு மட்டுமே சாத்தியம். “அறிதுயில்” என்பதுவும் அதுவாகத்தான் இருக்கும்.
நானும் எனது நண்பரும் அவர் விழுந்து இறந்த இடத்தைப் பார்த்துவிட்டு ஓசூர் திரும்பினோம். மரணத்தால் குறியிடப்பட்ட ஒரு தெருவை ஒட்டிய சந்து.
ஆத்மநாமிற்குப் பிறகு பெங்களூரு நகரில் ஓர் இலக்கியவாதியின் துர்மரணம். நானும் நண்பர் குணாவும் ஆத்மநாம் விழுந்து இறந்த கிணறை ஒரு நாள் தேடினோம். ஆனால் அந்தக் கிணறைப் பார்க்க முடியவில்லை. க.சீ. சிவகுமாரும் அப்படியொரு பார்க்க முடியாத இடத்தில், எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடிய வயதில் மரணமடைந்திருக்கலாம்.
மீண்டுமொரு டார்டினியின் இசைத்துண்டைக் கேட்கத் தொடங்கியிருந்தேன். அது முடிந்ததே தெரியாமல் ராஹ்மானினஃபின் (இரஷ்யப் பெயர்கள் உச்சரிக்கக் கடினமானவை) “இறந்தோர் தீவு” எனும் இசைத்துண்டு ஒலிப்பதை அறிகிறேன். என்ன ஒரு முரண். அப்படியொரு தீவில் இருந்து கொண்டு மகிழ்ந்திருங்கள் க.சீ.
இனி இவ்வுலகத் துன்பங்கள் ஒரு போதும் உங்களை அணுகாது. தவறியும் ஒரு முறையாவது என்னுடைய அறைக்குப் பழக்கத்தின் காரணமாக வந்துவிடாதீர்கள். பேருந்து ஏறும் முன் விடைபெற்றுச் சென்று அடுத்த முறை சந்திப்பதைப் போன்றதல்ல இறந்த பின் திரும்ப வருதலென்பது. உங்களோடு செலவழித்த நாட்களின் நினைவே போதுமான அளவு உங்கள் இருப்பின் அசைவாக உள்ளது. அனைத்திற்கும் நன்றி.