இலையுதிரும் காலம் – வில்லியம் ஃபாக்னர்

by கார்குழலி
0 comment

I

செப்டம்பர் மாத அந்திநேரத்து வானம் செக்கச் சிவந்திருந்தது. அறுபத்தி இரண்டு நாட்களாக ஒரு பொட்டு மழையில்லை. அந்த வதந்தி, அந்தக் கதை, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், காய்ந்த புல்லில் பற்றிய நெருப்பு போலப் பரவியது. செல்வி மின்னி கூப்பர், ஏதோவொரு கறுப்பினத்தவன், இருவரையும் பற்றியது. தாக்கப்பட்டார், அவமதிக்கப்பட்டார், அச்சுறுத்தப்பட்டார். யாருக்கும் உண்மையில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது ஒரு சனிக்கிழமை மாலை, முடி திருத்தும் கடையில் அவர்கள் கூடியிருந்தார்கள். கூரையில் இருந்த மின்விசிறி சுழன்றுகொண்டிருந்தாலும் புழுக்கமான காற்றைத்தான் வீசியது. தலைக்குப் பூசும் க்ரீமின் வாசனையையும் கூடியிருந்த மனிதர்களின் வெப்பமான மூச்சுக்காற்றையும் வியர்வை நாற்றத்தையும் கீழிருந்து மேலே இழுத்து மறுபடியும் கீழ்நோக்கி செலுத்தியது.

“அது வில் மேய்ஸ் இல்லை என்பது மட்டும் தெரியும்,” என்றான் முடி திருத்துபவர்களில் ஒருவன். நடுத்தர வயது, மெலிந்த தேகம், பழுப்பு நிறம், உணர்வுகளை மிதமாக வெளிப்படுத்தும் முகம். வாடிக்கையாளருக்கு முகச்சவரம் செய்துகொண்டிருந்தான். “எனக்கு வில் மேய்ஸை நன்றாகத் தெரியும். கறுப்பினத்தவன், நல்லவன். எனக்கு செல்வி மின்னி கூப்பரையும் நன்றாகத் தெரியும்.”

“அவரைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்றான் முடி திருத்துபவர்களில் இன்னொருவன்.

“யார் அவர்?” என்றார் ஒரு வாடிக்கையாளர். “இளம்பெண்ணா?”

“இல்லை, நாற்பது வயதிருக்கும் என்று நினைக்கிறேன். இன்னும் மணமாகவில்லை. அதனால்தான் நம்பமுடியவில்லை…”

“நம்புவதா, நாசமாய்ப் போக!” அந்த இளைஞன் வாட்டசாட்டமாக இருந்தான். அவன் அணிந்திருந்த பட்டுச் சட்டையில் வியர்வைக் கறை படிந்திருந்தது. “ஒரு வெள்ளைக்காரப் பெண் சொல்வதை நம்பாமல் கறுப்பினத்தவன் சொல்வதை நம்புகிறாயே?”

“வில் மேய்ஸ் அதைச் செய்திருப்பான் என்று நம்பமுடியவில்லை. எனக்கு வில் மேய்ஸைத் தெரியும்.”

“யார் செய்தது என்பது உனக்குத் தெரியுமோ என்னவோ. அவன் இங்கிருந்து தப்பிச் செல்ல உதவி செய்தாயோ என்னவோ. நாசமாய்ப் போன கறுப்பினப் பிரியனே.”

“யாரும் எதையும் செய்தார்கள் என்பதை நான் நம்பவில்லை. எதுவும் நடந்தது என்பதையும் நம்பவில்லை. வயதான திருமணமாகாத பெண்கள் ஓர் ஆண் எதைச் செய்வான் என்பதைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்க முடியும் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.”

“நீ ஒரு சுவாரசியமான வெள்ளைக்காரன்தான்,” என்றார் வாடிக்கையாளர். போர்த்தி இருந்த துணிக்குக் கீழே இளைஞனின் உடல் நகர்வது தெரிந்தது. குதித்து எழுந்து நின்றான். 

“நீ நம்பவில்லையா? அந்த வெள்ளைக்காரப் பெண் பொய் சொல்கிறாள் என்கிறாயா?”

நாற்காலியில் இருந்து பாதி தூரம் வரையில் மேலே எழுந்திருந்தார் வாடிக்கையாளர், அவரின் தலைக்கு மேலே சவரக்கத்தியைப் பிடித்திருந்தான் முடி திருத்துபவன். 

“எல்லாவற்றுக்கும் காரணம் இந்த மோசமான வானிலைதான்,” என்றான் இன்னொருவன். “இது ஒரு மனிதனை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும். அவளைப் போன்றவளிடம்கூட.”

ஒருவரும் சிரிக்கவில்லை. கடுமையில்லாத, ஆனால் பிடிவாதமான குரலில் பேசினான் முடி திருத்துபவன். “நான் யாரையும் எதற்காகவும் குற்றம் சாட்டவில்லை. எனக்குத் தெரியும், உங்களுக்கும் தெரியும். இதுவரை திருமணமாகாத பெண்….”

“நீ ஒரு நாசமாய்ப் போன கறுப்பினப் பிரியன்,” என்றான் இளைஞன். 

“வாயை மூடு, புட்ச்,” என்றான் இன்னொருவன். “நாம் செயல்படத் தொடங்குவதற்குள் எல்லா உண்மை விவரமும் தெரியவரும்.”

“யாருக்கு? என்ன விவரம் தெரியவரும்?” என்று கேட்டான் இளைஞன். “உண்மை விவரம்! நாசமாய்ப் போக.”

“நீ ஒரு நாகரிகம் தெரிந்த வெள்ளைக்காரன்,” என்றார் வாடிக்கையாளர். “அப்படித்தானே?” நுரை தடவிய தாடியோடு இருந்தவரைப் பார்க்கும்போது திரைப்படங்களில் வரும் மேற்கத்திய பாலைவனப் பகுதியைச் சேர்ந்தவரைப்போல இருந்தார். “நீ அவர்களிடம் சொல், ஜாக்,” என்று இளைஞனிடம் சொன்னார். “நான் வெறும் விற்பனையாளன், இந்த ஊருக்குப் புதியவன். இருந்தாலும் இந்த ஊரில் வெள்ளைக்கார ஆண்களே இல்லை என்றால் உங்களுக்கு உதவலாம் என நினைக்கிறேன்.”

“எல்லாம் சரிதான்,” என்றான் முடிதிருத்துபவன். “முதலில் உண்மையைக் கண்டுபிடியுங்கள். எனக்கு வில் மேய்ஸைத் தெரியும்.”

“அடக் கடவுளே!” கத்தினான் இளைஞன். “இந்த ஊரைச் சேர்ந்த வெள்ளைக்காரன் இப்படிப் பேசுவானா…”

“வாயை மூடு, புட்ச்,” இரண்டாவதாகப் பேசியவன் சொன்னான். “நிறைய நேரம் இருக்கிறது.”

வாடிக்கையாளர் எழுந்து உட்கார்ந்தார். பேசிக்கொண்டிருந்தவனைப் பார்த்தார். “ஒரு கறுப்பினத்தவன் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியைத் தாக்குவதை நியாயப்படுத்தும் காரணம் இருக்கும் என்கிறாயா? நீ ஒரு வெள்ளைக்காரனாக இருந்தாலும் அதை ஆதரிக்கிறேன் என்கிறாயா? பேசாமல் எங்கிருந்து வந்தாயோ அந்த வடக்குப் பகுதிக்குச் சென்றுவிடு. தெற்கில் உன்னைப் போன்றவர்கள் தேவையில்லை.”

“என்ன வடக்கு?” என்றான் இரண்டாமவன். “நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன்.”

“அடக்கடவுளே!” என்றபடி தான் என்ன சொல்லவேண்டும் அல்லது செய்யவேண்டும் என்பதை நினைவூட்டிக்கொள்பவனைப் போல அழுத்தத்தோடும் குழப்பத்தோடும் சுற்றிலும் பார்த்தான் இளைஞன். தோளை உயர்த்தி வியர்வை வடியும் முகத்தை அதில் துடைத்தான். “ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கு நடந்ததை பற்றிக் கேட்கக்கூடாது என்றால் நீ நாசமாய்ப் போக.”

“நீ சொல், ஜாக்,” என்றார் விற்பனையாளர். “கடவுள் சத்தியமாக, அவர்கள்…”

அப்போது மெல்லிய வலைக் கதவை உடைப்பதுபோலத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் அவன். கனமான உடம்பைத் தாங்கிப் பிடிக்கும் வகையில் காலை அகட்டி வைத்து நின்றான். அவன் அணிந்திருந்த வெண்ணிறச் சட்டையின் மேல்பொத்தான் திறந்து கிடந்தது. தலையில் வெல்வட்டாலான  தொப்பி. கனன்றுகொண்டிருக்கும் கடுமையான பார்வையால் கூடியிருந்தவர்களைத் துழாவினான். பெயர் மேக்லெண்டன். பிரெஞ்சு போர்க்களத்தில் இராணுவப் படையின் தளபதியாக இருந்தவன். வீரத்துக்கான பதக்கம் பெற்றவன்.

“நல்லது, இங்கேயே உட்கார்ந்துகொண்டு கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவன் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை ஜெஃபர்சனின் தெருக்களில் பாலியல் வன்முறை செய்வதை அனுமதிக்கப் போகிறீர்களா?”

புட்ச் குதித்து மேலே எழுந்தான். அவன் அணிந்திருந்த பட்டுச் சட்டை அவனது புடைத்த தோள்களோடு ஒட்டிக்கொண்டு இருந்தது. அக்குளில் பிறைநிலா வடிவத்தில் வியர்வை படர்ந்திருந்தது. “அதைத்தான் நானும் சொல்லிக்கொண்டிருந்தேன். அதைத்தான் நானும்…”

“உண்மையாகவே அப்படி நடந்ததா?” என்றான் மூன்றாமவன். “இது ஒன்றும் ஆண்களைப் பற்றிய அவளின் முதல் புகார் அல்ல என்கிறான் ஹாக்சா. ஏற்கெனவே ஒரு முறை, ஒரு வருடமிருக்கும், அவள் உடைமாற்றும் போது சமையலறை கூரையில் இருந்து யாரோ ஒருவன் எட்டிப் பார்த்தான் என்று சொன்னாள் அல்லவா?”

“என்னது?” என்றபடி மேலே எழுந்தார் வாடிக்கையாளர். “அது எப்போது நடந்தது?” முடிதிருத்துபவன் அவரை மெல்ல அழுத்தி மீண்டும் நாற்காலியில் உட்கார வைத்தான். முழுவதுமாகச் சாயாமல் தலையை உயர்த்திப் பிடித்தவரை கீழே அழுத்தினான். 

வேகமாகச் சுழன்று மூன்றாமவனைத் திரும்பிப் பார்த்தான் மேக்லெண்டன். “நடந்ததா என்றா கேட்டாய்? இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? அந்தக் கறுப்பன்களின் மகன்களில் ஒருவன் உண்மையாகவே அதைச் செய்து முடிக்கும் வரையில் விட்டுவைக்கப் போகிறாயா?”

“நானும் அதைத்தான் சொன்னேன்,” கத்தினான் புட்ச். முடிவேயில்லாமல் நீண்ட நேரத்துக்கு எல்லோரையும் சபித்தான்.

“இங்கே பார்,” என்றான் நான்காமவன். “இத்தனை உரக்கப் பேசாதே, இத்தனை உரக்கப் பேசாதே.”

“சரி. இனி யாரும் பேச வேண்டிய அவசியமில்லை. நான் பேசி முடித்துவிட்டேன். யார் என்னோடு வரப்போவது?” கேட்டான் மேக்லெண்டன். குதிங்கால்களை உயர்த்தியபடி பார்வையைச் சுழலவிட்டான். முடிதிருத்துபவன் விற்பனையாளரின் முகத்தை அழுத்திப் பிடித்து கத்தியைத் தயார்செய்தான். “முதலில் உண்மையான தகவலைச் சேகரியுங்கள், மக்களே. எனக்கு வில்லி மேய்ஸைத் தெரியும். அதைச் செய்தது அவனில்லை. காவல் ஆய்வாளரின் துணையோடு எதையும் சரியான முறையில் நாம் அணுகவேண்டும்.”

கோபம் கொப்பளிக்கும் கடுமையான முகத்தை அவன் பக்கம் திருப்பினான் மேக்லெண்டன். முடிதிருத்துபவன் தன்னுடைய பார்வையை விலக்கிக்கொள்ளவில்லை. இருவரும் முற்றிலும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களைப் போல பார்த்துக்கொண்டார்கள். மற்ற முடிதிருத்துபவர்களும் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த வாடிக்கையாளர்களுக்குச் செய்துகொண்டிருந்த சேவையை நிறுத்தினார்கள். “ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியின் சொல்லுக்கு எதிராக ஒரு கறுப்பினத்தவனின் சொல்லை நம்புவேன் என்று சொல்ல வருகிறாயா? நீ ஒரு நாசமாகப் போன கறுப்பினப் பிரியன்.”

மூன்றாமவன் எழுந்து மேக்லெண்டனின் கையைப் பிடித்தான். அவனும் இராணுவ வீரன்தான். “பொறுமையாக இரு. என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கலாம். உண்மையாக என்ன நடந்தது என்பது யாருக்குத் தெரியும்?”

“உண்மையைக் கண்டுபிடிக்கிறார்களாம்!” கையை வெடுக்கென இழுத்தான் மேக்லெண்டன். “என் பக்கம் இருப்பவர்கள் எல்லோரும் மேலே எழுங்கள். என்னுடன் இல்லாதவர்கள்…” பார்வையைச் சுழற்றியபடியே முகத்தைச் சட்டைக் கையால் துடைத்தான்.

மூன்று பேர் எழுந்து நின்றார்கள். விற்பனையாளன் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தான். “இதோ,” என்றபடி கழுத்தைச் சுற்றிப் போர்த்தியிருந்த துணியை வெடுக்கென இழுத்தான். “இந்தக் கந்தல் துணியை அவிழ்த்துவிடுங்கள். நானும் அவர்களோடு போகிறேன். நான் இந்த ஊரைச் சேர்ந்தவனில்லை. என்றாலும், கடவுளே! நம்முடைய தாய்மாரும் மனைவிகளும் சகோதரிகளும்…” துணியால் முகத்தைத் துடைத்துக் கீழே வீசினான். நடுவில் நின்ற மேக்லெண்டன் எல்லோரையும் சபித்தான். இன்னுமொருவன் எழுந்து அவனை நோக்கிச் சென்றான். மற்றவர்கள் தர்மசங்கடத்தோடு ஒருவரையொருவர் பார்க்காமல் உட்கார்ந்திருந்தார்கள். பிறகு ஒவ்வொருவராக எழுந்து அவனுடன் சேர்ந்துகொண்டார்கள். முடிதிருத்துபவன் தரையில் இருந்த துணியை எடுத்து சீராக மடித்தான். “மக்களே, அப்படிச் செய்யாதீர்கள். வில் மேய்ஸ் அதைச் செய்திருக்கவே மாட்டான். எனக்குத் தெரியும்.”

“வாருங்கள்,” என்றான் மேக்லெண்டன். வேகமாகச் சுழன்றான். அவனுடைய கால்சட்டையில் இருந்த தானியங்கி கைத்துப்பாக்கியின் பிடி வெளியே துருத்தியது. எல்லோரும் வெளியே போனார்கள். வலைக் கதவை அறைந்து சாற்றினார்கள். சலனமில்லாத வெளியில் அது அதிரும் ஓசை துல்லியமாகக் கேட்டது. 

முடிதிருத்துபவன் கத்தியைக் கவனமாகவும் இலகுவாகவும் துடைத்து உள்ளே வைத்தான். கடையின் பின்பக்கம் சென்று சுவரில் மாட்டியிருந்த தொப்பியை எடுத்துக்கொண்டான். “முடிந்த வரையில் சீக்கிரம் வந்துவிடுகிறேன்,” என்று சக பணியாளர்களிடம் சொன்னான். “இதை அனுமதிக்க முடியாது…” வெளியே சென்றதும் ஓடத் தொடங்கினான். மற்ற இரு பணியாளர்களும் அவனைப் பின்தொடர்ந்து சென்று கதவுக்கு வெளியே எட்டிப் பார்த்தார்கள். தெருவில் இருந்த காற்று சலமனமற்று உயிர்ப்பின்றி இருந்தது. நாக்கின் அடியில் உலோகத்தின் ருசி தட்டுப்பட்டது.

“அவனால் என்ன செய்யமுடியும்?” முதலாமவன் கேட்டான். “ஏசுவே, ஏசுவே,” சன்னமான குரலில் புலம்பினான் இரண்டாமவன். மேக்லெண்டனுக்குக் கோபம் ஏற்படுத்தினால் வில் மேய்ஸாக இருந்தாலும் ஹாக்காக இருந்தாலும் ஒன்றுதான்.”

“ஏசுவே, ஏசுவே,” இரண்டாமவன் முணுமுணுத்தான்.

“அவன் அவளை அப்படிச் செய்திருப்பான் என்று நினைக்கிறாயா?” என்றான் முதலாமவன்.

II

அவளுக்கு முப்பத்து எட்டு அல்லது முப்பத்து ஒன்பது வயதிருக்கலாம். நோய்வாய்ப்பட்ட தாயுடனும் மெலிந்த மஞ்சள் நிற உடலுடன் இருந்தாலும் ஓய்வெடுக்காத சித்தியுடன் சின்ன மரச் சட்டத்தாலான வீட்டில் வசித்தாள். ஒவ்வொரு நாளும் காலை பத்து மணி முதல் பதினொரு மணிக்குள் வீட்டின் முன்புறத்துக்கு வரும்போது படுக்கையறையில் அணியும் லேஸ் வேலைப்பாடு செய்த தொப்பியை அணிந்திருப்பாள். பன்னிரண்டு மணி வரையிலும் முகப்பில் இருக்கும் ஊஞ்சலில் ஆடுவாள். மதிய உணவுக்குப் பிறகு வெயில் தாழும் வரையில் படுத்துக்கொள்வாள். மாலையில் ஒவ்வொரு கோடை காலத்திலும் வாங்கும் மூன்று அல்லது நான்கு புதிய வாயில் உடைகளில் ஒன்றை அணிந்துகொண்டு மற்ற பெண்களோடு கடைவீதிக்குப் போய் பொழுதைக் கழிப்பாள். அங்கே பொருட்களைக் கையிலெடுத்து கடுமையான குரலில் பேரம் மட்டும் பேசுவார்கள், எதையும் வாங்கும் எண்ணம் இருக்காது.

சௌகரியமான வாழ்க்கை வாழும் மனிதர்களில் ஒருத்தி – ஜெஃபர்சனிலேயே சிறந்த மனிதர்கள் எனச் சொல்லமுடியாது என்றாலும் நல்லவர்கள் எனலாம். சாதாரணமான தோற்றத்தில் பளிச்சென்று இருந்தாலும் நடவடிக்கையும் உடையும் சோர்வுற்றவளைப் போலக் காட்டின. இள வயதினளாக இருக்கையில் மெலிந்த உடலும் எளிதில் பதற்றம் கொள்பவளாகவும் இருந்தபோதும் ஒருவிதமான உயிர்ப்புடன் இருந்ததால் ஊர் இளவட்டங்களின் மத்தியில் புகழ்பெற்றவளாக இருந்தாள். குழந்தைகளிடையே வர்க்கபேதம் காலூன்றாத பருவத்தில் உயர்நிலைப் பள்ளி விருந்துகளிலும் சர்ச் கூட்டங்களிலும் சமகாலத்தவர்களின் மத்தியில் சிறந்து விளங்கினாள்.

சமகாலத்தவர்களிடையே தனக்கிருந்த இடம் பறிபோவதை இறுதியில்தான் புரிந்துகொண்டாள். மற்றவர்களை விடவும் பிரகாசமாகவும் பெரிதாகவும் அவளின் சுடர் எரிந்தது. என்றாலும் ஆண்கள் போலிப் பகட்டை விரும்புபவர்களாகவும் பெண்கள் பதில் தாக்குதல் தொடுப்பதில் இன்பமடைபவர்களாகவும் இருந்தார்கள். அப்போது முதல் அவளது முகத்தில் சோர்வு படர்ந்தது. கோடைக்காலத்தில் நிழலார்ந்த முற்றங்களிலும் புல்வெளிகளிலும் நடந்த விருந்துகளுக்கு அந்தத் தோற்றத்தை முகமூடியாக அணிந்துகொண்டோ பதாகையாகத் தூக்கிக்கொண்டோ செல்லத் தொடங்கினாள். உண்மையை மறுதலிக்கும் சீற்றத்தையும் குழப்பத்தையும் கண்கள் பிரதிபலிக்க உலா வந்தாள். ஒரு மாலை நேர விருந்தில் பள்ளித் தோழர்கள் அவளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டது முதல் விருந்துக்குப் போவதையே நிறுத்திவிட்டாள்.  

அவளின் சமவயது பெண்களுக்குத் திருமணமாகி புகுந்த வீட்டுக்குப் போவதையும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதையும் கவனித்தாள். ஆனால் அவளைத் தேடி எந்த ஆணும் வரவில்லை. மற்ற பெண்களின் குழந்தைகள் அவளை ‘அத்தை’ என்று அழைக்கத் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. அவர்களின் அம்மாக்கள் அந்தக் காலத்தில் இளம்பெண்ணாக இருந்தபோது மின்னி அத்தை எத்தனை பிரபலம் என்பதைப் பற்றிப் பேசுவார்கள்.

அதற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மதியங்களில் வங்கிக் காசாளருடன் அவள் காரில் பயணம் செய்வதை ஊர் மக்கள் பார்த்தார்கள். அவருக்கு நாற்பது வயதிருக்கும். மனைவியை இழந்தவர். சிவந்த முகம். அவர்மீது எப்போதும் முடிதிருத்தும் கடையின் மணமோ விஸ்கியின் வாசனையோ வீசும். அந்த ஊரில் முதலில் கார் வாங்கியது அவர்தான். சிவப்பு நிறக் கார். காரில் பயணம் செய்கையில் அணிந்துகொள்ளும் தொப்பியையும் முகத் திரையையும் அந்த ஊரில் முதலில் வாங்கியது மின்னிதான். அப்புறம் ஊரார் இப்படிப் பேச ஆரம்பித்தார்கள்: “பாவம் மின்னி”, “தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும் வயதாகிவிட்டது.”

அந்தச் சமயத்தில்தான் பள்ளித் தோழர்களின் குழந்தைகள் தன்னை அத்தை என்று அழைக்காமல் சம வயது உறவினரைக் குறிக்கும் சொல்லால் ‘கஸின்’ என்று அழைக்க வேண்டும் எனச் சொல்லிவைத்தாள். அவள் நடத்தை கெட்டவள் என்ற பரவலான எண்ணம் ஏற்பட்டு இன்றுடன் பன்னிரண்டு ஆண்டுகளாகிறது. வங்கிக் காசாளர் மெம்ஃபிஸில் இருக்கும் கிளைக்கு மாற்றலாகிப் போய் எட்டு ஆண்டுகளாகிறது. ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸின் போது ஒரேயொரு நாள் ஊருக்கு வருவார். ஆற்றருகே இருக்கும் வேட்டையாடும் மன்றத்தின் மணமாகாத ஆண்களுக்கான வருடாந்திர கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்துகொள்வார். 

விருந்துக்காக ஊருக்குள் அவர் வந்துபோவதை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் திரைச்சீலைக்குப் பின்னால் ஒளிந்து நின்று வேடிக்கை பார்ப்பார்கள். பிறகு அவளிடம் அவர் பார்க்க நன்றாக இருந்தாரென்றும் நகரத்தில் வளமாகவும் சிறப்பாகவும் வாழ்கிறாரென்று கேள்விப்பட்டதாகவும் சொல்லுவார்கள். பளிச்சென்றிருந்தாலும் சோர்வுற்றிருக்கும் அவள் முகத்தை இரகசியமாகக் கவனிப்பார்கள். வழக்கமாக அந்த நேரத்தில் அவளிடம் விஸ்கியின் வாசம் வீசும். “என் செலவில் வாங்கித் தருகிறேன். கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும் உரிமை இவருக்கும் உண்டல்லவா?” என்றபடியே சோடா விற்பனை நிலையத்தில் வேலைசெய்யும் இளைஞன் வாங்கித் தருவான். 

இப்போதெல்லாம் அவளுடைய தாய் தன்னுடைய அறையைவிட்டு வெளியே வருவதேயில்லை. ஒற்றைநாடி தேகமும் கடுகடுத்த முகமும் கொண்ட சித்திதான் வீட்டை நிர்வகிக்கிறார். இந்தப் பின்னணியில் மின்னியின் பளீரென்ற உடைகளும் வெறுமையும் சோம்பலும் நிறைந்த நாட்களும் ஒருவிதமான போலித் தோற்றத்தோடு இருந்ததால் எரிச்சலூட்டியது. இப்போதெல்லாம் மாலைப் பொழுதுகளில் அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்களோடுதான் திரைப்படத்துக்குப் போகிறாள். ஒவ்வொரு பின்மதியத்திலும் புதிய உடைகளில் ஒன்றை அணிந்துகொண்டு ஊருக்குள் தனியாகப் போவாள். அங்கே மென்பட்டுத் தலைமுடியும் மெலிந்த தேகமும் கைகளும் தன்னுணர்வுகொண்ட இடைகளும் கொண்ட அவளின் இளவயது உறவினர்கள் சோடா விற்பனையகத்தில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து கிறீச்சிட்டபடி பையன்களோடு சோடி சேர்ந்து கொக்கரிப்பார்கள். ஒன்றோடென்று ஒட்டிவைத்தது போல நெருக்கமாக அமைந்த கடைகளைத் தாண்டும்போது கதவருகே உட்கார்ந்தபடி பொழுதைக் கழிக்கும் ஆண்களில் ஒருவரும் அவளை ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை.

III

முடிதிருத்துபவன் வேகமாக நடந்தான். மங்கலான தெரு விளக்குகள் சலனமற்ற காற்றில் விறைப்பாகவும் உக்கிரமாகவும் உமிழ்ந்த ஒளிக்கற்றைகளுக்கு நடுவே பூச்சிகள் வட்டமிட்டன. பிணச்சீலை போல விரிந்திருந்த புழுதிக்குள் அந்த நாள் மறைந்தது. இருண்ட சதுக்கத்துக்கு மேலே இருந்த வானத்தைப் புழுதி மறைத்தது. வெண்கல மணிக்குள் இருக்கும் வெற்றிடத்தைப் போன்ற வண்ணத்தில் இருந்த கீழ்வானத்தில் வளர்பிறை நிலவு தென்பட்டது.

அவர்களை எட்டிப்பிடித்த போது மேக்லெண்டனும் மற்ற மூவரும் குறுகலான பின் தெருவொன்றில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ஏறிக்கொண்டிருந்தனர். காருக்கு வெளியே தடித்த தலையை நீட்டிய மேக்லெண்டன், “மனம் மாறிவிட்டாய் போல இருக்கிறதே?” என்றான். “நல்லதுதான். கடவுளே! இன்று இரவு நீ என்னவெல்லாம் பேசினாய் என்பதை நாளைக்கு இந்த ஊர் கேட்டால்…” 

“இரு இரு,” என்றான் முன்னாள் இராணுவ வீரன். “ஹாக்சாவுக்கு ஒன்றுமில்லை. வா, ஹாக், ஏறிக்கொள்.”

“வில் மேய்ஸ் அதைச் செய்தே இருக்க மாட்டான், மக்களே,” என்றான் முடிதிருத்துபவன். “வேறு யாரும் செய்திருப்பார்களா என்பதும் சந்தேகம்தான். என்னைப் போலவே உங்களுக்கும் நன்றாகவே தெரியும். எந்த ஊரை விடவும் நம்மூரில் இருக்கும் கறுப்பினத்தவர்கள் சிறந்தவர்கள் என்பது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். ஒரு பெண் எந்தக் காரணமும் இல்லாமல் ஆண்களைப் பற்றி எது வேண்டுமானாலும் யோசிப்பாள் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே? அதுவும் மின்னி…”

“சரி, சரி,” என்றான் இராணுவ வீரன். “அவனோடு கொஞ்சம் பேசப் போகிறோம், அவ்வளவுதான்.” 

“பேச்சா! நாசமாய்ப் போக,” என்றான் புட்ச். “அதைச் செய்து முடித்ததும்…”

“கடவுளே! கொஞ்சம் வாயை மூடேன்!” என்றான் இராணுவ வீரன். “ஊரில் இருக்கும் எல்லோருக்கும்…”

“அவர்களிடம் சொல்லேன்,” என்றான் மேக்லெண்டன். “ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை இப்படிச் செய்ய அனுமதிக்கும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல்லேன்.”

“சரி கிளம்பலாம், கிளம்பலாம். அதோ அந்தக் கார் கிளம்பிவிட்டது.” இரண்டாவது காரொன்று தெரு முனையில் இருந்து மேகம் போல எழுந்த புழுதிக்கு நடுவே இரைச்சலோடு கிளம்பியது. 

மேக்லெண்டன் காரைக் கிளப்பி முன்னால் விரைந்தான். புழுதி பனிமூட்டத்தைப் போலத் தெருவை மறைத்தது. தெருவிளக்குகள் மழையால் சூழப்பட்டது போலத் தோன்றின.

ஊருக்கு வெளியே விரைந்தார்கள். 

வண்டிப் பாதை செங்கோணத்தில் இரண்டாகப் பிரிந்தது. அங்கேயும் நிலத்தையும் வானையும் புழுதி முற்றிலும் மறைத்திருந்தது. பனிக்கட்டிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையின் கறுத்த நிழல் வானைத் தொட்டு உரசியது. அங்கேதான் இரவு நேரக் காவல் பணியில் இருந்தான் அந்தக் கறுப்பின வில் மேய்ஸ். 

“இங்கேயே நிறுத்திக்கொள்வது நல்லது, என்ன சொல்கிறாய்?” என்றான் இராணுவ வீரன். மேக்லெண்டன் பதிலேதும் சொல்லாமல் காரை இன்னும் கொஞ்சம் முன்னால் செலுத்தி சடாரென்று நிறுத்தினான். காரின் மின்விளக்குகள் வெற்றுச் சுவரொன்றின்மீது ஒளியை உமிழ்ந்தன.

“சொல்வதைக் கேளுங்கள், பையன்களே,” என்றான் முடிதிருத்துபவன். “அவன் இங்கே இருந்தால் அவன் அதைச் செய்யவில்லை என்பது உறுதியாகிவிடும். செய்திருந்தால் இந்நேரம் ஓடிப்போயிருப்பான். உங்களுக்கும் அது தெரியுமல்லவா?”

இரண்டாவது காரும் வந்து சேர்ந்தது. மேக்லெண்டன் காரை விட்டு இறங்கினான். புட்ச் கீழே குதித்தான். “சொல்வதைக் கேளுங்கள், மக்களே,” என்றான் முடிதிருத்துபவன்.

“விளக்கை அணையுங்கள்!” என்றான் மேக்லெண்டன். உயிரற்ற இருட்டு அவர்களைச் சூழ்ந்தது. இரண்டு மாதமாக அந்த வறண்ட நிலத்திலும் புழுதியிலும் வாழ்க்கையை ஓட்டிய அவர்களின் நுரையீரல்கள் வேகமாக காற்றைக் உள்ளே இழுக்கும் ஓசையைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. மேக்லெண்டன், புட்ச் இருவரின் நறநறவென்ற காலடி ஓசை கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மறைந்தது. ஒரு நொடி கழிந்த பிறகு மேக்லெண்டனின் குரல் கேட்டது: “வில்… வில்!”

புழுதி சூழ்ந்த வானில் இரத்தம் தோய்ந்த வண்ணத்தில் மங்கலாக ஒளிர்ந்தது நிலவு. நிலத்தின் மேலே நின்று காற்றையும் புழுதியையும் உருகிய எக்கில் முக்கி எடுத்தது போல ஒளிரச் செய்தது. பறவையோ பூச்சியோ எதுவும் ஓசை எழுப்பவில்லை. அவர்களுடைய மூச்சொலியையும் காரின் உலோக உடம்பு மெல்லச் சுருங்கும் ஓசையையும் தவிர வேறு எதுவுமே கேட்கவில்லை. உடலின் ஈரப்பதம் முற்றிலும் வற்றிவிட்டிருந்ததால் அவர்களின் உடல்கள் ஒன்றோடொன்று உரசும்போது வறண்ட வியர்வைதான் வெளியேறியது. “ஏசுவே! இங்கே இருந்து போய்விடலாம்,” என்றது ஒரு குரல்.

முன்னால் விரிந்துகிடந்த இருட்டுக்குள் இருந்து வித்தியாசமான ஒலிகள் எழும் வரையில் யாரும் நகரவில்லை. மூச்சை உள்ளே இழுத்து நிறுத்திக்கொண்டது போன்ற சலனமற்ற இருட்டில் பதற்றத்தோடு நின்றிருந்தார்கள். அப்போது இன்னொரு ஓசை கேட்டது. அடி விழுந்ததும் சீற்றத்தோடு மூச்சு வெளியேறியது, கூடவே  மேக்லெண்டன் முணுமுணுப்பான குரலில் சாபமிட்டான். ஒரு நொடி தயங்கினார்கள், பிறகு முன்னோக்கி ஓடினார்கள். எதையோ கண்டு அஞ்சி ஓடுவது போல இருந்தது, எல்லோரும் ஒன்றாக ஓடியதில் தடுக்கிவிட்டது. “அவனைக் கொல்லுங்கள், அந்த ஆளைக் கொள்ளுங்கள்,” என்று ஒரு குரல் முணுமுணுத்தது. மேக்லெண்டன் அவர்களைத் தள்ளினான்.

“இங்கே வேண்டாம். காருக்குள் ஏற்றுங்கள்,” என்றான். “அவனைக் கொல்லுங்கள். அந்தக் கறுப்பனின் மகனைக் கொல்லுங்கள்,” என்று அந்தக் குரல் முணுமுணுத்தது. அந்தக் கறுப்பினத்தவனைக் காருக்கு இழுத்து வந்தார்கள். காரிலேயே காத்துக்கொண்டு இருந்தான் முடிதிருத்துபவன். வியர்த்து ஊற்றுவதையும் வயிற்றைப் பிரட்டுவதையும் தெளிவாக உணரமுடிந்தது. 

“என்ன விஷயம், தலைவா?” என்றான் கறுப்பினத்தவன். “நான் எதுவுமே செய்யவில்லையே. கடவுள் சத்தியமாக, திருவாளர் ஜான் அவர்களே.”

யாரோ கைவிலங்கை எடுத்து நீட்டினார்கள். அந்தக் கறுப்பினத்தவனை மரக்கட்டையைப் போல நடத்தினார்கள். அமைதியாக மும்முரமாகத் தடங்கல் இல்லாமல் வேலை செய்தார்கள். கைவிலங்கைப் பூட்டுவதற்கு அமைதியாக அனுமதித்தான். இருட்டில் ஒவ்வொரு முகத்தையும் வேகமாக தீர்க்கமாகப் பார்த்தான். 

“உங்களை எல்லாம் அடையாளம் தெரியவில்லையே, தலைவா,” என்றபடி முன்னால் சாய்ந்து ஒவ்வொரு முகமாக உற்றுப் பார்த்தான். அவர்களால் அவனுடைய மூச்சுக் காற்றை உணரமுடிந்தது. அவனது வியர்வை நாற்றத்தை முகர முடிந்தது. அவர்களில் ஓரிருவரை அடையாளம் கண்டு பெயரைச் சொன்னான். “நான் என்ன குற்றம் செய்தேன் என்று சொல்கிறீர்கள், திருவாளர் ஜான்?”

மேக்லெண்டன் கார் கதவை வெடுக்கெனத் திறந்தான். “உள்ளே ஏறு.”

கறுப்பினத்தவன் நகரவே இல்லை. “என்னை என்ன செய்யப் போகிறீர்கள் திருவாளர் ஜான்? நான் எதுவுமே செய்யவில்லையே. வெள்ளைக்காரர்களே, தலைவர்களே, நான் எதுவுமே செய்யவில்லை. கடவுள் சத்தியமாகச் சொல்கிறேன்.” இன்னொரு பெயரைச் சொன்னான். 

“உள்ளே ஏறு.” மேக்லெண்டன் கறுப்பினத்தவனை ஓங்கி அடித்தான். மற்றவர்கள் சீறும் ஓசையோடு மூச்சை வெளியேற்றினார்கள். கண்டமேனிக்கு அடித்தார்கள். அப்படியும் இப்படியும் சுழன்றபடி அவர்களைச் சபித்தான், கைவிலங்கு பூட்டப்பட்ட கைகளை அவர்களின் முகத்துக்கு நேரே நீட்டியபோது முடிதிருத்துபவனின் வாயைக் கிழித்தது, அவனும் அடித்தான். 

“உள்ளே ஏற்றுங்கள்,” என்றான் மேக்லெண்டன். எல்லோருமாகச் சேர்ந்து அவனை உள்ளே தள்ளினார்கள்.

போராடுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஏறி உட்கார்ந்தான். மற்றவர்கள் அமைதியாக அவரவர் இடத்தில் அமர்ந்தனர். முடிதிருத்துபவனுக்கும் இராணுவ வீரனுக்கும் நடுவில் இருந்ததால் அவர்கள்மீது பட்டுவிடக்கூடாதென்று கையையும் காலையும் குறுக்கிக்கொண்டான். கண்களால் ஒவ்வொரு முகமாக அவசரத்தோடு துழாவியபடி இருந்தான். புட்ச் காரின் பக்கவாட்டில் கையைக் கொடுத்து தொங்கிக்கொண்டு நின்றான். கார் புறப்பட்டது. முடிதிருத்துபவன் கைக்குட்டையால் வாயை ஒத்தி எடுத்தான். 

“என்ன ஆனது ஹாக்?” கேட்டான் இராணுவ வீரன்.

“ஒன்றுமில்லை,” என்றான் முடிதிருத்துபவன். முக்கியச் சாலைக்கு வந்ததும் ஊருக்கு எதிர்ப்புறத்தில் செல்ல ஆரம்பித்தனர். பின்னால் வந்துகொண்டிருந்த இரண்டாவது கார் புழுதிக்குள் மறைந்துவிட்டிருந்தது. நிறுத்தாமல் போய்க்கொண்டே இருந்தார்கள், வண்டி வேகம் பிடித்தது. ஊரின் கடைசியில் இருந்த வீடுகள் முழுவதுமாக மறைந்தன. 

“கடவுளே, இவன்மீது நாற்றம் வீசுகிறது!” என்றான் இராணுவ வீரன். 

“அதைச் சரிசெய்துவிடுவோம்.” முன்னால் மேக்லெண்டனின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த விற்பனையாளன் சொன்னான். எதிர்த்து வீசிய சூடான காற்றைச் சபித்தான் புட்ச். முடிதிருத்துபவன் மேக்லெண்டனின் தோளைத் தொட்டான். 

“என்னை இறக்கிவிடு, ஜான்,” என்றான்.

“கறுப்பினப் பிரியனே! கீழே குதி.” தலையைத் திருப்பாமல் சொன்னான் மேக்லெண்டன். வண்டியை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டே இருந்தான். பின்னால் புழுதிக்குள் மறைந்திருந்த இரண்டாவது கார் கண்ணுக்குத் தெரியவில்லை. அதன் முகப்பு விளக்குகளின் ஒளி மட்டும் தெரிந்தது. மேக்லெண்டன் சட்டென குறுகிய தெருவொன்றுக்குள் நுழைந்தான். யாரும் பயன்படுத்தாமல் அது பாழடைந்திருந்தது. யாரும் புழங்காத செங்கற்சூளைக்குச் சாலை இட்டுச்சென்றது. ஆங்காங்கே குவிந்து கிடந்த செம்மண் மேடுகளில் புதர் மண்டியிருந்தது. தரைக்குள் புதைந்திருந்த பெரிய மட்பாண்டங்களில் கொடிகள் படர்ந்திருந்தன. எப்போதோ மேய்ச்சல் நிலமாகப் பயன்பட்ட இடம். கோவேறு கழுதைகளுள் ஒன்று காணாமல் போனதும் அவற்றின் எஜமானர் இந்தக் குழிகளுக்குள் குச்சியைவிட்டு தேடிப் பார்த்தார். அவற்றின் அடிப்பகுதி எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு யாருமே அங்கு வருவதில்லை.

“ஜான்,” என்றழைத்தான் முடிதிருத்துபவன்.

“வெளியே குதி என்று அப்போதே சொன்னேனே,” என்றான் மேக்லெண்டன். கார் கரடுமுரடான சாலையில் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. முடிதிருத்துபவனின் பக்கத்தில் அமர்ந்திருந்த கறுப்பினத்தவன் அவனைத் “திருவாளர் ஹென்றி,” என்று அழைத்தான்.

முன்னால் நகர்ந்து உட்கார்ந்தான் முடிதிருத்துபவன். சுரங்கப்பாதை போன்ற குறுகிய சந்தில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்தது கார். முற்றிலும் இயக்கத்தை நிறுத்திக்கொண்ட உலையடுப்பில் இருந்து வெளியேறும் காற்றைப் போல சுற்றுப்புறம் கொஞ்சம் குளிர்ந்திருந்தது என்றாலும் உயிரற்று இருந்தது. கார் மேடு பள்ளங்களில் தூக்கிப்போட்டபடியே பயணம் செய்தது. 

“திருவாளர் ஹென்றி,” என்றழைத்தான் கறுப்பினத்தவன்.

முடிதிருத்துபவன் கார் கதவை உக்கிரமாக இழுத்தான். “கவனமாக இரு,” என்று இராணுவ வீரன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கதவை உதைத்துத் திறந்து காரின் பக்கவாட்டு பகுதியில் காலை எட்டி வைத்தான்.  இராணுவ வீரன் கறுப்பினத்தவனைத் தாண்டி கையை நீட்டி அவனைப் பிடித்து இழுப்பதற்குள் கீழே குதித்துவிட்டான். வேகத்தைக் கொஞ்சமும் குறைக்காமல் போய்க்கொண்டே இருந்தது கார்.

காரின் வேகம் தூக்கி எறிந்ததில் பாதையோரத்தில் புழுதி படிந்த களைச்செடிகள் மூடியிருந்த சாக்கடைக்குள் விழுந்து நொறுங்கினான் முடிதிருத்துபவன். அவனைச் சுற்றிலும் புழுதி கிளம்பியது. வறண்ட செடிகள் முறியும் ஓசை கேட்டது. தொண்டை இறுகிப்போய் மூச்சுவிட முடியவில்லை, அடிவயிற்றை எக்கி இருமினான். இரண்டாவது கார் அவனைக் கடந்து போனது. அதன் ஓசை மறைந்ததும் மேலே எழுந்து உடையில் படிந்த புழுதியைத் துடைத்தான். நொண்டியபடியே சாலையை அடைந்து ஊருக்குள் போகும் பாதையில் திரும்பினான்.

நிலவு இன்னும் உயர எழும்பி இருந்தது. இப்போது புழுதிப் படலத்தின் பின்னே அது மறைந்திருக்கவில்லை. புழுதிக்குக் கீழே கண்ணைக் கூசும் ஒளி ஊர் முழுவதின்மீதும் படர்ந்தது. நொண்டியபடியே ஊருக்குள் நடந்தான். கார்கள் வரும் ஓசை கேட்டது. அவனுக்குப் பின்னால் சூழ்ந்திருந்த புழுதியில் அவற்றின் ஒளி அதிகரித்துக்கொண்டே போனது. சாலையின் பக்கவாட்டில் இறங்கி களைச்செடிகளுக்குள் மண்டியிட்டு அவர்கள் கடந்துசெல்லும் வரையில் ஒளிந்துகொண்டான். மேக்லெண்டனின் கார் கடைசியாக வந்தது. உள்ளே நான்கு மட்டுமே இருந்தார்கள். புட்ச் காரின் கதவைப் பிடித்துக்கொண்டு தொங்கவில்லை.

நிற்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். புழுதி அவர்களை விழுங்கியது. கண்ணைக் கூசும் ஒளியும் ஓசையும் முற்றிலுமாக மறைந்தன. 

அவர்கள் எழுப்பிவிட்டுச் சென்ற புழுதி இன்னும் அடங்கவில்லை. ஆனால் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் புழுதி அதையும் உள்வாங்கிக்கொண்டது. 

முடிதிருத்துபவன் மீண்டும் சாலையில் ஏறி ஊரை நோக்கி நொண்டியபடி நடந்தான்.

IV

அந்தச் சனிக்கிழமை மாலையில் இரவு உணவுக்காக அலங்கரித்துக்கொண்டிருந்த போது உடம்பு காய்ச்சல் கண்டது போலச் சுட்டெரித்தது. ஆடையின் கொக்கிகளைப் பொருத்த முயன்ற கைகள் நடுங்கின. கண்களிலும் காய்ச்சலின் வேகம் தென்பட்டது. தலைமுடி வறண்டு போயிருந்தது, சீப்பால் வாரும்போது உடைந்துபோனது. அவள் அலங்காரம் செய்துகொண்டிருக்கும் போதே வந்துசேர்ந்த தோழியர், அறைக்குள் வந்து உட்கார்ந்தார்கள். உடல் பாகங்கள் வெளியே தெரியும் மெல்லிய உள்ளாடைகளை அவள் அணிந்துகொள்வதைப் பார்த்தார்கள். காலுறையையும் புதிய வாயில் உடையையும் அணிந்தாள். “வெளியே போகும் அளவுக்குத் தெம்பிருக்கிறதா?” என்று கேட்டார்கள். பளிச்சிட்ட அவர்களின் கண்களில் ஒருவிதமான கருமையான ஒளி தெரிந்தது. “இந்த அதிர்ச்சியில் இருந்து தெளிந்ததும் என்ன நடந்தது என்பதை விளக்கமாகச் சொல்ல வேண்டும், சரியா? அவன் என்ன செய்தான், சொன்னான் என எல்லாவற்றையும் சொல்ல வேண்டும்.”

எல்லாப் பக்கமும் சூழ்ந்திருந்த இருளுக்கு நடுவே ஊரின் சதுக்கத்தை நோக்கி நடந்தபோது உடம்பு நடுங்கியது. நீருக்குள் ஆழ முழுகுவதற்கு முன்னால் செய்வது போல ஆழ்ந்து சுவாசித்து நடுக்கத்தை நிறுத்த முயன்றாள். தாங்கமுடியாத வெக்கையினாலும் அவளுக்கு ஆறுதலாக இருக்கவேண்டியும் மற்ற நால்வரும் மெதுவாக நடந்தனர். ஆனால் சதுக்கத்தை நெருங்குகையில் மீண்டும் நடுங்க ஆரம்பித்தாள். தலையை உயர்த்திப் பிடித்திருந்தாள், கைகளை முஷ்டியாக மடக்கி பக்கவாட்டில் வைத்திருந்தாள். அவளைச் சுற்றிலும் குரல்கள் முணுமுணுக்கும் ஒலி கேட்டது. அவளைப் பார்த்த கண்கள் காய்ச்சலின் வெம்மையைப் பிரதிபலிக்கும் பளீரிடும் தன்மையோடு இருந்தன.

சதுக்கத்துக்குள் நுழைகையில் தோழியர் குழுவின் நடுவில் இருந்தாள், புத்தம்புதிய ஆடையில் மெலிந்து வலுவற்றவளாகத் தோன்றினாள். மிகவும் மோசமாக நடுங்கினாள். ஐஸ்க்ரீமைச் சாப்பிடும் குழந்தைகள் போல அவளின் நடையில் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்தது. தலையை உயர்த்திப் பிடித்திருந்தாள். துவண்டுபோன கொடியைப் போன்ற முகத்தில் கண்கள் பளிச்சிட்டன. உணவு விடுதிக்கு வெளியே  நடைபாதையில் அமர்ந்திருந்த விற்பனையாளர்கள் அவளைத் திரும்பிப் பார்த்தார்கள். “அவள்தான் பாருங்கள். இளஞ்சிவப்பு வண்ண ஆடையில் நடுவில் இருப்பவள்தான்”, “அவள்தான் என்று நன்றாகத் தெரியுமா? அந்த கறுப்பினத்தவனை என்ன செய்தார்கள்? அவனை…”, “என்னது, அவன் நன்றாக இருக்கிறானா?”, “நன்றாகவா இருக்கிறான்?”, “ஓ, அவனைக் கூட்டிக்கொண்டு போனார்களா?”

அடுத்து இருந்த மருந்துக்கடை வாசலில் வெட்டியாக நின்றிருந்த இளைஞர்கள் தொப்பியைக் கழற்றி வணக்கம் சொன்னார்கள். அவளின் அசையும் இடையையும் கால்களையும் அவர்களின் கண்கள் தொடர்ந்தன.

தோழியர் எங்கேயும் நிற்காமல் நடந்துகொண்டே இருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் தொப்பிகளைக் கழற்றி வணக்கம் சொன்ன ஆண்களின் குரல் திடீரென்று சன்னமானது, மரியாதையும் பாதுகாப்பும் தொனித்தது. “கவனித்தீர்களா?” தோழியர்கள் அவர்களுக்குள் சொல்லிக்கொண்டனர். பாம்பின் சீறொலியைப் போலத் தொனித்த அவர்களின் குரல்கள் வெற்றிக் களிப்பைப் பறைசாற்றின. “சதுக்கத்தில் ஒரு கறுப்பினத்தவனைக்கூட காணவில்லை. ஒருவன்கூட இல்லை.”

திரையரங்குக்குள் நுழைந்தனர். முகப்புக்கூடத்தில் விளக்குகள் ஒளிர்ந்தன, அச்சிடப்பட்ட வண்ணப் படங்கள் சுவர்களில் மாட்டப்பட்டிருந்தன. எல்லாமாகச் சேர்ந்து வாழ்க்கையின் அச்சமூட்டும் மாற்றங்களையும் அழகான மாற்றங்களையும் ஒருங்கே பிரதிபலிக்கும் சின்னஞ்சிறு தேவதை உலகத்தைப் போலத் தோற்றமளித்தது. அவள் உதடுகள் பயத்தில் துடித்தன. விளக்குகள் அணைக்கப்பட்டு திரைப்படம் தொடங்கியதும் சரியாகிவிடும். சீக்கிரமே வீணடிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தோடு சிரிப்பை அடக்கிக்கொண்டாள். கூடியிருந்தவர்கள் அவளைக் கவனித்து வியப்போடு முணுமுணுக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் வழக்கமான இருக்கைகளில் போய் அமர்ந்துகொண்டார்கள். இருக்கைகளுக்கே இடையே இருக்கும் பாதையில் ஜோடி ஜோடியாக வந்த இளம்வயது ஆண்களையும் பெண்களையும் திரையின் வெள்ளிப் பிரதிபலிப்பில் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

விளக்குகள் அணைக்கப்பட்டன, வெள்ளித் திரை ஒளிர்ந்தது. கண் முன்னே விரிந்த வாழ்க்கை அழகானதாகவும் உணர்ச்சிமிக்கதாகவும் துயரமூட்டுவதாகவும் இருந்தது. இன்னமும் அரங்குக்குள் வந்துகொண்டே இருந்த இளம் ஜோடிகளின் நறுமணத்தையும் சீறுவதைப் போன்ற மூச்சொலியையும் உணரமுடிந்தது. அவர்களின் மிருதுவான வழவழப்பான மெலிந்த உடல்களின் நிழலுருவை அரங்கின் அரைவெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. அவர்களின் உடல்கள் தெய்வீகமான இளமைத் துடிப்போடு விரைந்தும் இலாவகமாகவும் நகர்ந்தன. முன்னால் இருந்த திரையில் அவர்களின் ஒன்றிணைந்த வெள்ளிக் கனவுகள் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே இருந்தன. அவள் சிரிக்க ஆரம்பித்தாள். அதை அடக்க முனைந்த போது முன்னைக் காட்டிலும் அதிக ஒலியை எழுப்பியதால் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே இருந்தவளை எழுப்பி வெளியே அழைத்துப் போனார்கள் தோழியர். நடைபாதையில் நின்றவள் வாடகைக் கார் வந்து அதில் ஏறும் வரையில் உரத்த குரலில் சிரித்துக்கொண்டே இருந்தாள்.

அவள் அணிந்திருந்த இளஞ்சிவப்பு ஆடையையும் மெல்லிய உள்ளாடைகளையும் காலுறைகளையும் களைந்து படுக்கையில் கிடத்தினர். பனிக்கட்டியை உடைத்து அவளின் நெற்றிப்பொட்டுகளில் வைத்தனர். மருத்துவருக்குச் சொல்லியனுப்பினார்கள். அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என்பதால் அதிக ஓசையெழுப்பாமல் முணுமுணுக்கும் குரலில் பேசியபடி அவளுக்கு உதவி செய்தனர். இன்னும் கொஞ்சம் பனிக்கட்டியை எடுத்து வந்தனர். விசிறிவிட்டனர். பனிக்கட்டி உருகும் வரையில் சிரிப்பதை நிறுத்திவிட்டு அமைதியாகப் படுத்திருந்தாள். அவ்வப்போது முனகினாள். ஆனால் அடுத்து கொஞ்ச நேரத்திலேயே உரக்கச் சிரிக்க ஆரம்பித்தாள். உரத்த குரலில் அலறினாள். 

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்! ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!” என்றபடியே உருகாத பனிக்கட்டி பொதிந்த துணியை நெற்றிப்பொட்டில் ஒற்றினர். தலைமுடியை மென்மையாகக் கோதிவிட்டு நரைமுடி ஏதேனும் இருக்கிறதா என்று நோட்டமிட்டனர். “பாவம்!” அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்: “உண்மையாகவே நடந்திருக்கும் என்று நம்புகிறாயா?” இரகசியத்தையும் உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய அவர்கள் கண்கள் கருமையாக ஒளிர்ந்தன. “ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்! பாவம் இந்தப் பெண்! பாவம் மின்னி!”

V

மேக்லெண்டன் வீடு வந்து சேரும்போது நள்ளிரவாகியிருந்தது. புதிய நேர்த்தியான வீடு. பச்சை வெள்ளை வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் சுத்தமாக நேர்த்தியாக சிறியதாக பறவைக் கூண்டை ஒத்திருந்தது. காரைப் பூட்டிவிட்டு படிகளில் ஏறி தாழ்வாரத்தை அடைந்தான். இரவு விளக்கை எரியவிட்டு படித்துக்கொண்டிருந்த அவன் மனைவி நாற்காலியை விட்டு எழுந்தாள். மேக்லெண்டன் நின்றான்.  கண்கொட்டாமல் அவளை உற்றுப்பார்த்தான். அவள் விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.

“கடிகாரத்தைப் பார்,” கையை நீட்டி சுவரைச் சுட்டினான். முகத்தைத் தாழ்த்தியபடியே நின்றிருந்தாள். கைகளில் ஏதோ பத்திரிகையை வைத்திருந்தாள். அழுத்தமும் சோர்வும் அவள் முகத்தை வெளுக்கச் செய்திருந்தது. “நான் வரும்வரையில் இப்படி கண்விழித்து காத்துக்கொண்டு இருக்காதே என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா?”

“ஜான்,” என்று அழைத்தபடியே பத்திரிகையைக் கீழே வைத்தாள். குதிகால்களை நிலத்தில் பதித்து நின்றவன் வியர்வை வடியும் முகத்தில் இருந்த சுட்டெரிக்கும் கண்களால் அவளை மிரட்டலாகப் பார்த்தான்.

“ஏற்கெனவே சொல்லியிருக்கேன் அல்லவா?” அவளருகே போனான். தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவளது தோளைப் பிடித்தான். எதுவுமே சொல்லாமல் அவனைப் பார்த்தபடி அமைதியாக நின்றாள். 

“வேண்டாம் ஜான். என்னால் தூங்க முடியவில்லை… வெக்கையாக இருந்ததாலோ என்னமோ! தயவுசெய்து விடு ஜான். வலிக்கிறது.”

“ஏற்கெனவே சொல்லியிருக்கேன் அல்லவா?” தோளை விடுவித்து அவளை ஓங்கி அடித்து பின்னால் இருந்த நாற்காலியின்மீது தள்ளிவிட்டான். அவன் அறையைவிட்டு ஏதும் சொல்லாமல் போவதைப் பார்த்தபடி கீழே விழுந்து கிடந்தாள்.

வீட்டுக்குள் நுழைந்து வலை திரையிட்ட பின்வாயிலுக்குச் சென்றான். இருட்டாக இருந்தது. சட்டையைக் கழற்றி தலையையும் தோள்களையும் துடைத்து கீழே வீசினான். இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து படுக்கைக்கு அருகில் இருந்த மேசையின்மீது வைத்தான். படுக்கையில் அமர்ந்து காலணிகளைக் கழற்றினான். எழுந்து நின்று கால்சட்டையைக் கழற்றினான். மீண்டும் வியர்வை துளிர்க்க ஆரம்பித்ததால் கீழே எறிந்த சட்டையைத் தேட ஆரம்பித்தான். கிடைத்ததும் எடுத்து உடம்பைத் துடைத்தான். தூசி நிறைந்த திரையின்மீது உடலை அழுத்தி நின்றவனுக்கு மூச்சு வாங்கியது. எந்த அசைவோ ஓசையோ இல்லை. பூச்சிகளின் ரீங்காரம்கூட இல்லை. குளிர்ந்த நிலவும் கண்சிமிட்டாத விண்மீன்களும் வானத்தில் ஒளிர்ந்தன, கீழே உலகம் இருண்டு அடிபட்டுக் கிடந்தது.

*

ஆங்கில மூலம்: Dry September by William Faulkner, Published in “American Short Story Masterpieces” (Thrift Editions), Dover Publications Inc. (29 April 2013)