சோர்பா என்ற கிரேக்கன் – நீகாஸ் கசந்த்சாகீஸ்

0 comment

என்னைத் துயில் முற்றாக ஆட்கொண்டிருந்தது. நான் விழித்தெழுந்தபோது சோர்பா வெளியே சென்றிருந்தார். குளிரடித்தது. எழவேண்டும் என்று எனக்குத் துளியும் எண்ணமில்லை. என் தலைக்கு மேல் இருந்த புத்தக அடுக்குகளில் துழாவி, என்னுடன் எடுத்துவந்த நூல்களுள் ஒன்றான, எனக்குப் பிடித்த மாலர்மேவின் கவிதைகளை எடுத்தேன். நான் மெதுவாக மனம் போன போக்கில் பத்திகளைத் தேர்வுசெய்து வாசித்தேன். நூலை மூடினேன். மீண்டும் திறந்தேன். இறுதியாகக் கீழே தூக்கிப் போட்டேன். என் வாழ்விலேயே முதல்முறையாகக் குருதியற்ற, மணமற்ற, மானுட சாரமே இல்லாத ஒன்றாக அது வெறுமையுடன் காட்சியளித்தது. மேம்போக்கான வெளிர்நீலச் சொற்கள் வெற்றுத்தாளை நிரப்பியிருந்தன. ஒரு பாக்டீரியாகூட இல்லாதபடி காய்ச்சிக் கிருமி நீக்கம் செய்த நீரைப்போல அது இருந்தது. கூடவே அதில் எந்த ஊட்டச்சத்தும் இல்லாமல் உயிரற்றிருந்தது.

படைப்பின் ஒள் எரி மங்கிப்போய் மதங்களின் கடவுளர் போல் இறுதியில் வெற்றுப் படிமங்களாகவோ அல்லது மானுடத் தனிமை என்னும் சுவரில் வனைந்த அணிச் சித்திரங்களாகவோ எஞ்சிவிடுகின்றன. அதைப் போலவே இந்தக் கவிதைக்கும் ஏதோ நிர்மூலம் நிகழ்ந்துவிட்டது. இதயத்தின் துள்ளலான உத்வேகங்களோடு நிலமும் விதையும் ஒன்றெனப் பிணைந்த பிழையற்ற மதிநல விளையாட்டு ஒன்று உருவாகிறது. உச்சத்தில், பேரறிவு பொங்கியும் அது உயிர்ப்பற்ற நுண்ணிய செதுக்கல்களாலான சிற்பத்தைப் போன்றதாகிறது.

நான் மீண்டும் நூலைத் திறந்து வாசித்தேன். இந்தக் கவிதைகள் ஏன் இத்தனை ஆண்டுகளாக என்னைப் பீடித்திருந்தன? தூய கவிதை! ஒரு துளிக் குருதியற்ற, ஒளி ஊடுருவக்கூடிய, தெள்ளிய பொருளாக உருமாறிவிட்டது. பிரபஞ்சத்தில் மானுட அங்கம் என்பது உண்மையில் கொடூரமானது, அருவருப்பானது, களங்கம் நிறைந்தது. அதில் உயிர்க்காதல், உடல்தசை, வலி ஓலம் அனைத்துக்கும் இடமுண்டு. இது அப்படியே ஒரு கருத்தாகப் பதங்கமாகட்டும். ஆன்மாவின் கலத்தில் பல்வேறு வேதி வினைகளுக்குட்பட்டுத் திரவமாகி இலகுவாகி மேலெழுந்து ஆவியாகட்டும். 

என்னை இதற்கு முன்பு கிளர்ச்சியடையச் செய்த இவை அனைத்தும் இன்று காலையில் வெறும் மூளை ஜாலங்கள் என்றும் நுண் கண்கட்டு வித்தைகள் என்றும் தோன்றுகின்றன! ஒவ்வொரு நாகரீகத்தின் வீழ்ச்சிகளின் போதும் இவ்வாறுதான் நிகழும். இவ்விதமாகத்தான் – தூய கவிதை, தூய இசை, தூய எண்ணம் போன்ற மேதாவித்தனமான மயக்கு வித்தைகளின் வாயிலாகவே – மனிதனின் வேதனை முழுமை பெறக்கூடும். அனைத்து உளமயக்குகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்ட கடைசி மனிதனுக்கு அஞ்சவும் எதிர்நோக்கவும் ஏதுமிருக்காது. அவன் தன் அடிப்படை அலகான களிமண்ணைக் கண்ணுறுகிறான். அவனுடைய ஆன்மா வேர் பற்றி வளர – தாவர உயிர் ஊன்றி வளர – அந்த மண் தோதில்லை என்று அறிகிறான். கடைசி மனிதன் தன்னையே முற்றாக இழந்து வெறுமையாகிறான். இனியொரு விதையில்லை, இனியொரு கழிவில்லை, இனியொரு துளிக் குருதியில்லை. அனைத்தும் சொற்களாக மாறிவிடுகின்றன. சொற்குவைகள் முயங்கி இசையெனும் மாய வித்தையாகிறது. கடைசி மனிதன் இன்னும் கொஞ்ச தூரம் சென்று கொடுமுடித் தனிமையில் அமர்ந்து அந்த இசையையும் ஒலியற்ற கணிதச் சமன்பாடுகளாகச் சிதைத்துத் திரிக்கிறான். 

நான் தொடங்கினேன். ‘புத்தர்தான் கடைசி மனிதன்!’ என்று கத்தினேன். அதுவே அவரது இரகசியமும் தீவிரமும் சிறப்பும் ஆகும். புத்தர் தன்னைத்தானே வெறுமையாக்கிய ‘தூய’ ஆன்மா. அவருக்குள் வெறுமை இருக்கிறது, வெறுமைக்குள் அவர் இருக்கிறார். ‘உடலை வெறுமையாக்குக! ஆன்மாவை வெறுமையாக்குக! இதயத்தை வெறுமையாக்குக!’ என்று பேரொலி எழுப்புகிறார். அவர் பாதம் பதிக்கும் இடமெங்கும் நீர்ச்சுழல் பாய்வதில்லை, பசும்புல் வளர்வதில்லை, கொஞ்சும் மதலைகள் பிறப்பதில்லை.

நான் சொற்களைத் திரட்டி அதன் மந்திர ஆற்றல் வழியாக மாய இலயங்களை எழுப்பிச் சுற்றிவளைத்து மாயக்கட்டு ஒன்றை வீசியெறிந்து அவரைப் பிடித்து என் பாதையிலிருந்து அகற்றியாக வேண்டும்! அவர்மீது படிமங்களாலான வலையை வீசி விலங்கிட்டுத் தளைத்துவிட்டு நான் விடுதலை அடைய வேண்டும்!

உண்மையில் புத்தரைப் பற்றி எழுதுவது இலக்கியப் பயிற்சி என்ற நிலையில் முற்றுப்பெறாது. என்னுள் பதுங்கியபடி பேராற்றலுடன் என்னை அழிக்கத் தயாராக இருக்கும் உள்சக்தியுடனான போரில் வாழ்வா சாவா நிலை உருவாகிவிட்டது. ஒருபுறம் ஆசையை முற்றாக மறுதலிக்கும் நேருக்கு நேரான சமரில் என் இதயம் நசிந்தபடி இருக்கிறது. மறுபுறம் இந்தப் போட்டியின் விளைவைப் பொறுத்தே என் ஆன்மாவின் மீட்பும் இருக்கிறது.

தீர்மானத்துடனும் சுறுசுறுப்புடனும் கைப்பிரதியை எடுத்தேன். என் நோக்கத்தைக் கண்டெடுத்துவிட்டதால் எனக்கு இப்போது எங்கே அடிக்க வேண்டும் என்று தெரிந்தது! புத்தர் கடைசி மனிதனாக இருந்தவர்! நாமோ ஆரம்பத்திலேயே இருக்கிறோம். நாம் புசிக்கவோ அருந்தவோ காமுறவோ இல்லை. இன்னும் முற்றாக நாம் வாழவே இல்லை. அனைத்தையும் அற்பமாகக் கருதும் இந்தக் கனிந்த முதியவர்  நம்மிடம் வெகுவிரைவாக வந்து சேர்ந்துள்ளார். அவரைக் கூடிய விரைவில் நம்முள் இருந்து வெளித்தள்ளியாக வேண்டும்! 

அதனால் நான் என்னுடன் உரையாடியபடி எழுதத் தொடங்கினேன். இது உண்மையில் எழுத்தன்று. இது ஒரு சமர், கருணையற்ற வேட்டை, ஆக்கிரமிப்பு, கொடுவிலங்கை அதன் கரவுக் குழிக்குள் இருந்து வெளியே இழுப்பதற்கான அழைப்பு. கலை என்பது மாய உச்சாடனம். நம் பாதைகளில் விழிக்குப் புலப்படாத தீவினை ஆற்றல்கள், கொலைப்பசி நாவுடன், அழிப்பு, வெறுப்பு, கீழ்மை எனும் ஆயுதங்களோடு காத்திருக்கின்றன. அப்போது கலை மட்டுமே தன் இனிய குழலோசையுடன் நம்மை மீட்க வரும்.

நாள் முழு முனைப்புடன் எழுதினேன், தொடர்ந்தேன், போராடினேன். மாலைப்பொழுதில் முற்றிலும் சோர்ந்தேன். ஆயினும் நான் முன்னகர்ந்திருப்பதை உணர்ந்தேன். பகைவனது கோட்டையை நோக்கிச் சில பல அடிகள் முன்னோக்கிச் சென்று சாதித்திருக்கிறேன். சோர்பா இன்னும் வராததால் பதற்றம் எழுந்தது. அவராக வந்தால்தான் உண்டு. எழுந்ததும் விடியலில் மூளவிருக்கும் போருக்கு நல்லுறக்கமே என்னை ஆற்றல் மிக்கவனாக்க முடியும்.

சோர்பா வந்தபோது இருண்டிருந்தது. அவர் முகத்தில் மலர்ந்த பாவனை இருந்தது. அவருக்கும் ஏதோவொரு பதில் கிடைத்திருப்பது போலத் தோன்றியது. நான் காத்திருந்தேன்.

அவர்மீது மெல்ல மெல்லப் பொறுமையிழந்து வருகிறேன். சில நாட்கள் முன்பாக அவரிடம் ‘சோர்பா நம் நிதி குறைந்து வருகிறது. என்ன செய்தாக வேண்டுமோ அதை விரைவாகச் செய்யுங்கள்! இந்த கம்பித்தடத்தை ஓட விடுங்கள். நிலக்கரியில் தோல்வியுற்றால் மொத்தமாக மரத்தொழிலுக்கு மாறிவிடுவோம். இல்லாவிடில் தேங்கிவிடுவோம்!’ என்று சினத்துடன் சொன்னேன்.

சோர்பா தலையைச் சொறிந்தார். 

‘தலைவா, நிதி குறைந்து வருகிறதா என்ன? அது நன்றல்லவே!’ 

‘அவை போய்விட்டன. நாம் நிறைய விழுங்கிவிட்டோம். ஏதேனும் செய்யுங்கள்! உங்கள் பரிசோதனை எந்த நிலையில் உள்ளது? இதுவரை நல்வாய்ப்புகள் ஏதும் கிட்டியதா?’

வெட்கித் தலைதொங்கிய சோர்பாவிடமிருந்து பதிலேதும் இல்லை. பின்னர், ‘அந்தக் கருமம் பிடித்த சாய்வுக்கோணம்!’ என்று எரிச்சலுடன் சொன்னார். ‘அதை நிச்சயம் கண்டறிவேன்! வென்றெடுப்பேன்!’ இப்போது சடுதியில் அவர் முகம் வெற்றியின் மிளிர்வு பூண்டது. 

‘நான் அதைக் கண்டுபிடித்துவிட்டேன் தலைவா!’ என்று கத்தினார். ‘செங்கோணத்தைக் கண்டறிந்துவிட்டேன்! என் கைகளில் இருந்து அது நழுவியபடியே இருந்தது. ஆனால் அதைச் சரியாகப் பற்றி ஆணியடித்து விட்டேன் தலைவா!’

‘அப்படியானால் அருமை. உடனடியாக அந்தத் தடத்தைக் கட்டியமைத்து விடுங்கள்! உங்களுக்கு இன்னும் என்னென்ன தேவை? சோர்பா, இப்போதே சொல்லுங்கள்!’

‘நாளை காலை புலரும் முன் நகரத்திற்குச் சென்று பாரமிழுக்கும் கயிற்றை வாங்க வேண்டும். கூடவே தடித்த இரும்புக் கம்பி, கப்பிகள், தாங்கிகள், ஆணிகள், கொக்கிகள் எல்லாம்.. நான் சென்று விரைவில் திரும்புவேன். கவலை வேண்டாம்!’

சற்று நேரம் கழித்து அவர் தீமூட்டிச் சமைத்த உணவை, பெரும்பசியுடன் நாங்கள் உண்டு மது அருந்தினோம். இருவரும் அன்று நன்றாகப் பணியாற்றினோம். 

மறுகாலை நான் சோர்பாவுடன் ஊர் எல்லை வரை சென்றேன். நிலக்கரிப் பணி பற்றித் தீவிரமான சிந்தனை கொண்டவர்களைப் போல இருவரும் உரையாடினோம். சரிவில் இறங்கும்போது சோர்பா ஒரு கல்லை எற்றினார். அது சரிவில் உருண்டது. பிரமிக்க வைக்கும் இந்த அற்புத நிகழ்வை முதல்முறை காண்பவரைப் போல ஒருகணம் வியப்புடன் நின்றார். அவர் திரும்பி என்னைப் பார்த்தபோது அவரது விழியில் மீதியிருந்த மென்திகைப்பை என்னால் காண முடிந்தது. 

ஒரு வழியாகத் ‘தலைவா அதை நீங்கள் கவனித்தீர்களா?’ எனக் கேட்டார். ‘சரிவுகளில் கற்களுக்கு உயிர் வந்துவிடுகிறது.’

நான் ஒன்றுமே சொல்லவில்லை, ஆயினும் ஆழ்ந்த மகிழ்ச்சியை உணர்ந்தேன். இப்படித்தான் மாபெரும் தத்துவவாதிகளும் மகாகவிகளும் அனைத்தையும் புத்திளம் விழிகளால் பார்ப்பார்கள் என்று நினைத்தேன். அவர்கள் உண்மையில் பார்ப்பதில்லை, படைக்கிறார்கள். 

சோர்பாவைப் பொறுத்தவரை பூமியில் கால்வைத்த முதல் மனிதனுக்குத் தோன்றியதைப் போல உலகம் ஒரு பருண்மையான, தீவிரமான தரிசனம். விண்மீன்கள் அவரது உச்சியில் உரசிச் சென்றன, ஆழித்திரை அவரது நுதலில் மோதித் தெறித்தது. அவர் பகுத்தறிவின் இடையீட்டினால் திசைதிரும்பாதவராய், புவியாகவும் நீராகவும் விலங்குகளாகவும் கடவுளாகவும் வாழ்ந்தார். 

செய்தி அறிந்த ஹார்டென்ஸ் அம்மணி தன் வாயிற்படியில் எங்களுக்காகக் காத்து நின்றாள். வதனமெங்கும் பொடி பூசி வர்ணம் தீட்டி தவிப்புடன் இருந்தாள். சனி இரவின் குதூகலத்திற்குத் தயராக இருப்பவள்போல ஒப்பனை செய்திருந்தாள். அவள் முன்றிலில் முன் கோவேறு கழுதை நின்றது. சோர்பா அதன் முதுகில் ஏறிக் கடிவாளத்தைப் பற்றினார்.

முதிய மோகினி பயந்தவள்போல அருகில் வந்து தன் ஆருயிர் அன்பர் கிளம்பிச் செல்வதைத் தடுக்க விரும்புபவள் போல, தன் பருத்த கையினை அம்மிருகத்தின் கழுத்தில் வைத்தாள். 

கால் விரல் நுனியில் எம்பி ‘சோர்பா…’ என்று கூவினாள். ‘சோர்பா…’

சோர்பா தன் தலையைத் திருப்பினார். பயணத்தின் நடுவே இடைபுகுந்து காதலி தரும் இத்தகைய முட்டாள்தனத்தைச் சகியாது வெறுத்தார். அவர் முகபாவத்தைப் பார்த்த அவள் அஞ்சியிருந்தாள். ஆயினும் இன்னும் அவள் கரம், தன் கனிந்த மன்றாட்டை வைப்பதுபோல் கோவேறு கழுதையின் கழுத்தைப் பற்றியிருந்தது. 

‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று சோர்பா சினத்துடன் வினவினார்.

அவள் மன்றாடினாள். ‘சோர்பா.. பத்திரமாக இரு.. என்னை மறவாதே சோர்பா..பத்திரமாக இரு..’

பதிலளிக்காமல் சோர்பா கடிவாளக் கயிற்றைச் சுண்டினார். கோவேறு கழுதை கிளம்பியது.

‘நன்மை பெறுக சோர்பா!’ என்று கத்தினேன். ‘மூன்றே நாள், கேட்கிறதா? அதற்கு மேல் இல்லை!’

அவர் திரும்பித் தன் பெரிய கையை அசைத்தார். அவளது கண்ணீர் பொடி பூசிய கன்னமேட்டில் நழுவியது.

சோர்பா ‘நான் உங்களுக்கு வாக்கு அளிக்கிறேன் தலைவா!’ என்று கத்தினார். ‘வருகிறேன்.’

ஒலிவ மரங்களுக்குக்கடியில் சென்று மறைந்தார். அம்மணி தொடர்ந்து அழுதபடி இருந்தாள். தன் இனியவர் வசதியாக அமர்ந்து செல்ல வேண்டும் என்பதற்காகப் பார்த்து பார்த்துப் பொருத்திய அமர்வுத் துணியின் அடர்சிவப்பு நிறத்தைக் கண்கொட்டாமல் பார்த்தாள். அது தொடர்ந்து மரங்களின் வெள்ளியிலைச் செறிவுக்குள் மறைந்தவண்ணம் இருந்தது. அதுவும் விரைவில் முழுமையாக மறைந்து போனது. அம்மணி தன்னைச் சுற்றிப் பார்த்தாள். உலகு வெறுமையாக இருந்தது. 

நான் கடற்கரைக்குத் திரும்பிச் செல்லவில்லை. கவலையுடன் மலையை நோக்கி நடந்தேன். மலைப்பாதையை அடைந்ததும் எனக்குப் பறைச்சாற்றொலி கேட்டது. தான் வந்திருப்பதை நாட்டுப்புறத்து அஞ்சல் அலுவலர் அறிவித்தார். 

‘ஐயா!’ என்று அவர் என்னை நோக்கிக் கையசைத்து அழைத்தார்.

என்னருகே வந்து சில இலக்கிய அறிக்கைகளையும் இரு கடிதங்களையும் ஒரு செய்தித்தாள் கட்டையும் தந்தார். முதல் கடிதம் என் மனநிலையில் ஓய்வும் அமைதியும் நிலவக்கூடிய மாலை வாசிப்புக்கானது என முடிவுசெய்து உடனடியாக என் பையில் பதுக்கினேன். அதை எழுதியவர் யாரென்று அறிவேன், ஆயினும் அதற்காக ஏங்கும் சிறு இன்பத்தை இன்னும் நீட்டிக்க விரும்பியே அவ்வாறு செய்தேன்.

மற்றொரு கடிதத்தை அதன் கூரிய, கோணலாக ஆடுகின்ற எழுத்தால், அயல்நாட்டு அஞ்சல் வில்லைகள் ஒட்டியிருந்ததால் கண்டுபிடித்தேன். இது பால்யகால நண்பர்களுள் ஒருவனான காராயானிஸிடமிருந்து வந்திருந்தது. இது தங்கன்யிகாவிற்கு அருகில் இருந்த கடுமையான ஆஃப்ரிக்க மலைவாழிடத்திலிருந்து வந்துள்ளது.

அவன் விசித்திரமான, துடுக்குத்தனமான, கரிய மனிதன். அவனுடைய அதிவெண்மையான கோரைப் பற்களுள் ஒன்று காட்டுப்பன்றியின் தந்தம் போன்று நீட்டியிருக்கும். அவனுக்கு ஒருபோதும் பேசவே வராது, கத்தத்தான் தெரியும். ஒருபோதும் விவாதம் செய்ததில்லை, சண்டைதான் கைவரும். தன்னுடைய சொந்த நாடான கிரீட்டை விட்டு வெளியேறும்போது அவன் இளம் இறையியல் ஆசிரியராகவும் துறவியாகவும் இருந்தான். அவன் மாணவிகளுள் ஒருத்தியிடம் பாலியல் ரீதியான சபலச் சொற்களை விளையாட்டாய்ச் சொன்னான். எதிர்பாராவிதமாக இருவரும் வயல்வெளியில் முத்தமிட நேர்ந்தது. அதைக் கண்ட அனைவரும் கேலிசெய்து பேரொலி எழுப்பினர். அதே நாளில் இந்த இளம் ஆசிரியன் தன் மதத் தொப்பியைத் தூக்கி எறிந்துவிட்டுக் கப்பலேறினான். ஆஃப்ரிக்காவில் இருந்த தன் மாமாவுடன் சேர்ந்து கடுமையாக வேலை செய்தான். கயிறுத் தொழிற்சாலை ஒன்றை நிறுவி நன்கு சம்பாதித்தான். அவ்வப்போது எனக்கு எழுதுவது அவனுக்கு வாடிக்கையாக இருந்தது.  எப்போதும் தன்னிடம் வந்து ஆறு மாதமாவது தங்கும்படி கோருவான். அவனுடைய கடிதங்களுள் ஒன்றை எப்போது நான் திறந்தாலும், அதை வாசிக்கத் தொடங்கும் முன்பே, தாள் கற்றைகள் நூலால் தைக்கப்பட்டு, அதன் பக்கங்களில் இருந்து ஒரு கடிய மூச்சுக்காற்று வெளிப்பட்டு என் மயிர்கால்களை விறைத்து நிற்கச் செய்யும். அவனை ஆஃப்ரிக்காவிற்குச் சென்று பார்க்க எப்போதும் விரும்பினேன் என்றாலும் நான் சென்றதில்லை. 

பாதையை விட்டு விலகி ஒரு பாறையில் அமர்ந்து கடிதத்தைத் திறந்து வாசிக்கத் தொடங்கினேன். 

‘கிரேக்கத்தின் பாறைகளில் ஒட்டுண்ணி வாழ்க்கை நடத்தும் ஈன நத்தையே, எப்போதுதான் உனக்கு இங்கு வந்து என்னைப் பார்ப்பதற்கான மனநிலை வாய்க்கப் பெறும்? நீயும் விடுதியில் பொறுக்கி உண்டு, காஃபியகத்தில் உருண்டு புரளும் வாழ்க்கை கொண்ட கேவலமான சராசரி கிரேக்கனாக மாறிவிட்டாய். காஃபியகங்களை மட்டும் காஃபியகம் என்ற சொல்லால் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நூல்களையும் உன் பழக்கங்களையும் விலைமதிப்பற்ற கொள்கைகளையும் சேர்த்தே சொல்கிறேன். அவை அனைத்துமே வெற்றுக் காஃபியகங்களே. இன்று ஞாயிற்றுக்கிழமை, எனவே உன்னைப் பற்றிச் சிந்திப்பதைத் தவிர எனக்குச் செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லை. சூரியன் இங்கு கொதிக்கும் உலையைப் போலத் தகிக்கிறது. இங்கு ஏப்ரல், மே மாதங்களில் மழை வரும்; அப்போது பயங்கரப் பிரளயமாக இருக்கும். 

‘நான் தனிமையில் இருக்கிறேன். எனக்கு அது பிடிக்கிறது. இங்கு நிறையக் கேடுகெட்ட கிரேக்கர்கள் இருக்கின்றனர். (இந்த அற்பப் பூச்சிகள் இல்லாத இடமொன்று புவியில் உண்டா என்ன?) ஆனால் அவர்களோடு பழக எனக்கு விருப்பமில்லை. அவர்கள் என்னை வெறுப்புறச் செய்கிறார்கள். இங்கும்கூட விடுதிப் பொறுக்கிகளே – நாசமாய்ப் போங்கள் – உங்களுடைய பெருநோயையும், முதுகில் குத்தும் குணத்தையும் ஏற்றுமதி செய்துவிட்டீர்கள். இவைதான் அரசியலாக இருக்கிறது, கிரேக்கத்தைப் பாழாக்குகிறது!  அது மட்டுமின்றி சீட்டாட்டம், மடமை, மோகப் பாவங்கள் யாவும் பெருகிவிட்டன.

‘எனக்கு ஐரோப்பியர்களைக் கண்டால் வெறுப்பு ஏற்படுகிறது. அதனால்தான் உசும்பராவின் மலைகளில் நான் நடமாடுகிறேன். நான் ஐரோப்பியர்களை வெறுக்கிறேன் என்றாலும் கீழ்த்தரமான கிரேக்கர்களையும் கிரேக்கத்தாலான எதையும் மேலும் கடுமையாக வெறுக்கிறேன். நான் இனியொருபோதும் கிரேக்கத்தில் மீண்டும் கால் வைக்க மாட்டேன். இங்குதான் என் முடிவு. எனக்கான சமாதியை ஏற்கெனவே கட்டிவிட்டேன். இங்குதான் என் குடிசையின் முன்பு, செறிந்த மலையடுக்கில். கற்களை அடுக்கிக் கொட்டை எழுத்துகளில் நானே வாசகத்தையும் பொறித்துவிட்டேன். ”கிரேக்கர்களை வெறுத்த கிரேக்கன் இங்கே உறங்குகிறான்.”

‘கிரேக்கத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நான் வெடித்துச் சிரிப்பதும் காறி உமிழ்வதும் கடுஞ்சொல் உதிர்ப்பதும் கண்ணீர் சிந்துவதுமாக இருக்கிறேன். ஆகவே எந்தக் கிரேக்கனையும் கண்ணால் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக நாட்டையே தலைமுழுகிவிட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறினேன். நான் இங்கு வரும்போது என் ஊழையும் அழைத்து வந்தேன். ஊழ் என்னை அழைத்து வரவில்லை, ஒரு மனிதன் என்ன தேர்வுசெய்கிறானோ அதையே நிகழ்த்தவும் செய்கிறான்! நான் என் ஊழை இங்கு இடமாற்றித் தொழும்பனைப் போல உழைத்தேன், உழைத்து வருகிறேன். வியர்வை ஆறாய்ப் பெருக உழைக்கிறேன். நிலத்துடன், வளியுடன், மழையுடன், வேலையாட்களுடன், என் செந்தொழும்பர்களுடன், என் கருந்தொழும்பர்களுடன் என அனைத்துடனும் போராடுகிறேன்.

‘எனக்கென்று எந்த இன்பங்களும் இல்லை. ஒன்றே ஒன்று இருக்கிறது. உழைப்பு! உடல் உழைப்பும் உள்ள உழைப்பும். பெரும்பாலும் உடல் உழைப்பே. கடுமையாக வியர்வை சிந்தி என் எலும்புகள் நெரிபடும் ஓசை கேட்டு நான் தளரும்வரை உழைக்க விரும்புகிறேன். என் பணத்தில் பாதியை எங்கெல்லாம் எப்படியெல்லாம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் அப்படியெல்லாம் வீணடிக்கிறேன். நான் பணத்திற்கு அடிமை அல்லன்; பணமே எனக்கு அடிமை. ஆனால் உழைப்புக்கு நான் அடிமை என்பதைப் பெருமிதத்துடன் சொல்வேன். நான் மரம் வெட்டினேன். எனக்கு ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் உண்டு. நான் கயிறு திரித்தேன். இப்போது பருத்தியும் விளைவிக்கிறேன். நேற்றிரவு இங்கிருக்கும் இரு கறுப்பினப் பழங்குடியினருக்கிடையே ஒரு பெண்ணுக்காகக் கடும் சண்டை நடந்தது. அவள் விலைமகள். கிரேக்கத்தில் இருப்பதைப் போலவே, வெற்று கெளரவம்தான் காரணம், வேறொன்றுமில்லை. இழிசொற்கள், கூச்சல்கள்! அவற்றைத் தொடர்ந்து இரு அணியினரும் தெருவிற்கு வந்தனர். அவளுக்காக மாறி மாறி அடித்து மண்டையை உடைத்துக்கொண்டனர். அந்தப் பெண் நள்ளிரவில் ஓடிவந்து கத்தி என்னை எழுப்பி அவர்களிடையே நடுவர் பணிபுரிந்து சமாதானம் செய்ய வேண்டினாள். நான் சினத்துடன் அவர்கள் அனைவரும் நரகத்தில் வீழட்டும் என்று சபித்தேன்; இல்லாவிடில் காவல்துறையிடம் சிக்கட்டும் என்றேன். ஆனால் அவர்கள் முழு இரவும் என் முற்றத்தில் நின்று குரைத்தவாறு இருந்தனர். பொழுது விடிந்ததும் நான் வெளியே சென்று இடையீடு செய்தேன். 

‘நாளை காலை விடிந்ததும் உசும்பரா மலையின் மீது ஏறப்போகிறேன். அதன் அடர்கானகமும் புதுப்பொழில்களும் அணிநிழற்பசுமையும் கடந்து மலையேறுவேன். பாபிலோனிய கிரேக்க அற்பனே, நீ எப்போது ஐரோப்பாவிலிருந்து உன்னைத் துண்டித்துக்கொள்ளப் போகிறாய்?… “விரிகடல்களின் நடுவே அமர்ந்திருக்கும் அந்தப் பெரும் பரத்தையைப் புவியின் பேரரசர்கள் அனைவரும் புணர்வர்..!” எப்போது நீ வருவாய், நாமிருவரும் ஒன்றாக எப்போது இந்தத் தூய வனத்தில் மலையேறுவோம் என்றிருக்கிறது.

‘ஒரு கறுப்புப் பெண்ணால் எனக்கொரு குழந்தை பிறந்தது. பெண் குழந்தை. அவளுடைய தாயைத் துரத்திவிட்டேன். அவள் பட்டப்பகலில் சூரியன் உச்சியில் இருக்கும்போதே அண்மையில் இருக்கும் அத்தனை புதர்களிலும் ஒளிந்து கள்ளப்புணர்வு செய்து வந்தாள். அதனால் விரட்டினேன். ஆனால் குழந்தையை வைத்துக்கொண்டேன். மகளுக்கு அகவை இரண்டுதான் ஆகிறது. அவள் நடக்கிறாள், பேசவும் தொடங்கிவிட்டாள். நான் அவளுக்கு கிரேக்க மொழி கற்றுத் தருகிறேன். முதலில் நான் சொல்லித் தந்தது என்ன தெரியுமா? “கிரேக்க அற்பர்களே.. உங்களைக் காறி உமிழ்கிறேன்; கீழ்மை நிறைந்த கிரேக்க இழிமகன்களே.. உங்களைக் காறி உமிழ்கிறேன்!”

‘அவள், அந்தக் குட்டிப் போக்கிரி, என்னைப் போலவே இருக்கிறாள். அவள் அம்மாவிடம் இருந்து அகன்ற நாசி மட்டும் வந்திருக்கிறது. நான் அவளை நேசிக்கிறேன்; அதுவும் ஒரு பூனையைப் போலவோ நாயைப் போலவோ மட்டுமே. இங்கு வா, வந்து ஒரு உசும்பாரா பெண்ணோடு கலந்து ஒரு மகனைப் பெற்றெடு. நம் மகிழ்ச்சிக்காக – அவர்களுடைய மகிழ்ச்சிக்காகவும்தான் – ஒருநாள் நாம் அவர்கள் இருவருக்கும் மணமுடித்து வைப்போம்! 

‘விடைபெறுகிறேன்! இனிய நண்பா, சாத்தான் உன்னைப் பீடிக்கட்டும், என்னையும்தான்!

’காராயானிஸ், சாத்தானின் சேவகன்’

என் முழங்காலின் மேல் கடிதத்தைத் திறந்த நிலையிலேயே போட்டேன். இன்னொரு முறை அங்கு செல்வதற்கான தீவிர இச்சை எழுந்தது. நான் இங்கிருந்து அகன்று செல்ல வேண்டும் என்பது அதன் பொருள் இல்லை. இந்தக் கிரீட் கடற்கரையில் நான் மகிழ்வுடனும் விடுதலையுணர்வுடனும்தான் இருக்கிறேன். மரணத்திற்கு முன் புவியனைத்தையும் கடல்களையும் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவுக்குப் பார்க்கவும் தீண்டவும் விழையும் ஒற்றைப் பெரும் இச்சையுடனேயே நான் எப்போதும் வாழ்கிறேன். அதுவே நான் அங்கு செல்ல விரும்பியதற்கான காரணம். 

நான் எழுந்தேன், மனத்தை மாற்றியவனாய் மலையில் ஏறுவதைக் கைவிட்டு மீண்டும் விரைந்து கடற்கரை நோக்கி நடந்தேன். என் புறமேற்சட்டையின் பையில் இன்னொரு கடிதம் இருப்பதை உணர்ந்தேன். இனியும் பொறுமை காக்கத் தேவையில்லை. வியர்வை வழிந்தது. மகிழ்ச்சிக்கு முந்தைய இனிய நினைவுகளும் தேவையான அளவுக்கு நீடித்தாயிற்று. 

குடிசைக்கு வந்து, நெருப்பைப் பற்றவைத்து, தேநீர் தயாரித்து, ரொட்டி, தேன், ஆரஞ்சுகளுடன் பருகினேன். உடை களைந்து மஞ்சத்தில் கைநீட்டி முறித்துக் கடிதத்தைத் திறந்தேன்:

‘குருவே புதுநிலத்தில் வேர்கொண்ட தாவரமே – வந்தனங்கள்!

‘இங்கு எனக்கு மிகப்பெரிய கடுமையான பணி. ”கடவுளுக்கு” நன்றி! ஆபத்தான சொல்லை இரட்டை மேற்கோளிட்டுக் குறிப்பிட்டுள்ளேன். (கூண்டுக்குள் இருக்கும் கொடிய மிருகத்தைப் போன்றது.) ஏனெனில் அப்போதுதான் நீ இக்கடிதத்தைத் திறந்தவுடன் உவகைகொள்ள மாட்டாய். ஆம், நிச்சயம் மிகக்கடிய பணிதான். “கடவுளுக்கு” மகிமை உண்டாகுக! தெற்கு ரஷ்யாவிலும் காகஸஸ் பகுதியிலும் ஐந்து லட்சம் கிரேக்கர்கள் ஆபத்தில் உள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினர் ரஷ்ய மொழியையோ துருக்கிய மொழியையோ பேசுகின்றனர் எனினும் அவர்களுடைய இதயங்கள் கிரேக்கத்தையே வெறியுடன் நாடுகின்றன. நம் இனத்தவர் அவர்கள், அவர்களைப் பார்ப்பதே – அவர்கள் இமைகளைச் சிமிட்டுவதும், புன்னகைப்பதும், முதலாளிகளாகி ரஷ்யாவில் உள்ள மெளஜிக்குகளை வினைவலராக்கி ஏவுவதையும் பார்த்தால் போதும் – அவர்கள் உன்னுடைய ஓடிசஸ் பரம்பரைதான் என்று உனக்கு நிரூபணமாகும். ஆகவே எவராலும் அவர்களை நேசிக்கவே இயலும்; அவர்கள் சீரழிவதை எவரும் விரும்பமாட்டார்கள். 

’ஆனால் அவர்களே அழியும் ஆபத்தான நிலையில்தான் இருக்கின்றனர். அவர்கள் தம்முடைய உடைமைகள் அனைத்தையும் இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். பசித்து வாடுகின்றனர். ஒருபுறம் போல்ஷ்விக்குகளாலும் மறுபுறம் குர்தியர்களாலும் நசுக்கப்படுகின்றனர். ஜியார்ஜியாவிலும் அர்மீனியாவிலும் உள்ள நகரங்களை நோக்கி அகதிகளாக ஈசல்களைப் போலத் திரண்டு வந்தபடி உள்ளனர். உணவில்லை, உடையில்லை, மருந்தில்லை. மீண்டும் தாய்நாட்டிற்குத் தங்களை அழைத்துச் செல்வதற்காகக் கிரேக்கக் கப்பல்கள் ஏதும் வந்துவிடாதா என்ற ஏக்கத்துடன் அவர்கள் தொடுவானத்தை எதிர்நோக்கிக் குழுமி நிற்கின்றனர்.  நம் இனத்தின் ஒரு பகுதியினர் – நம் ஆன்மாவின் ஒரு பகுதி என்பதே அதன் பொருள் – பீதியால் பீடிக்கப்பட்டுள்ளனர்.  

’அவர்களை ஊழின் கரங்களில் ஒப்படைத்தோம் எனில் அழிந்து போவார்கள். அது மட்டுமின்றி, நாம் அவர்களைக் காப்பற்றி நம் இனத்தவர் அதிகம் புழங்கும் மேசிடோனியாவின் மாநிலங்களுக்கோ அதனருகில் இருக்கும் திரேஸ் நிலப்பகுதிக்கோ அழைத்து வரப்போகிறோம். எனில், அச்செயலை முடிப்பதற்கு அளவற்ற அன்பு, புரிந்துகொள்ளுதலோடு தாளாண்மையும் களநிலவரம் பற்றிய அறிவும் நிச்சயம் தேவைப்படுகிறது. அது மட்டுமே, நம்மையும் உள்ளடக்கிய ஆயிராமாயிரம் கிரேக்கர்களைக் காப்பதற்கான ஒரே வழி. நான் இங்கு வந்து சேர்ந்ததுமே நீ சொல்லித் தந்தபடி ஒரு வட்டம் வரைந்து அதற்கு ”என் கடமை” என்று பெயரிட்டேன். நான் “இந்த வட்டம் மொத்தத்தையும் காப்பாற்றிவிட்டால் நானும் பிழைப்பேன்; அதைச் செய்யத் தவறினால் நானும் ஒழிவேன்!” என்றும் சொல்லிக்கொண்டேன். ஆனால் பாரேன், வட்டத்திற்குள் ஐந்து லட்சம் கிரேக்கர்கள் இருக்கிறார்கள்!

‘நான் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று அங்கிருக்கும் அனைத்து கிரேக்கர்களையும் ஒன்று திரட்டி, அறிக்கைகள் எழுதுவது, தந்தி அனுப்புவது, ஏதென்ஸில் இருக்கும் நம் அலுவலர்களைத் தொடர்புகொண்டு படகுகள், உணவு, உடை, மருந்து போன்றவற்றைப் பெற்று இந்தப் பாவப்பட்ட உயிர்களை கிரேக்கத்திற்கு அனுப்பி வருகிறேன். வைராக்கியத்துடனும் ஆர்வத்துடனும் மல்லுக்கட்டுவதற்கு மகிழ்ச்சி என்று பெயரிட்டால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றே பொருள். உன் சொற்களால் சொல்வதெனில் மகிழ்ச்சியை என் உயரத்திற்குக் குறுக்கி வரையறுத்துக்கொண்டேன்; அப்படிக் குறிப்பிடலாமா என்று தெரியவில்லை. சொர்க்கத்தைக் கைப்பற்றி உயர்நிலைக்கு உய்யவே விரும்புகிறேன். என் கனவு எந்த எல்லை வரை நீண்டிருக்கிறதோ அத்தனை தொலைவு நான் என் மகிழ்ச்சியை நீட்டி வரையறை செய்கிறேன் – அதுதான், கிரேக்கத்தின் தொலைதூர எல்லைவரை! இலட்சியக் கதைகள் போதுமென்று நினைக்கிறேன்! உனக்கு நேரமிருக்கிறது, கிரீட் கடற்கரை மணலில் அமர்ந்து அலைகளின் ஒலியையும் சந்தூரி இசையையும் இரசித்துக்கொண்டிருக்கிறாய்! எனக்கோ நேரமில்லை. நான் செயலூக்கத்தால் பிணைந்திருக்கிறேன்; அதற்காக மகிழ்ச்சியடைகிறேன். செயல் புரிக, என் சோம்பேறிக் குருவே! செயலே தீர்வு, மீட்சிக்கு அதையன்றி வேறொரு பாதை இல்லை!

‘என் ஊழ்கத்திற்கான கருப்பொருள், உண்மையில் மிக எளியது, ஒரே நோக்கம் கொண்டது. அதாவது போண்டஸிலும் காகஸஸிலும் வசிப்பவர்கள், கார்ஸின் குடியானவர்கள், டிஃப்லிஸ், படும், நோவோ ரோஸ்ஸிக், ரோஸ்டோவ், ஓடிசா, கிரிமியா ஆகிய ஊர்களில் உள்ள சிறு பெரு வணிகர்கள் என அனைவரும் நம்மவர்கள், நம் இரத்தம். நம்மைப் போலவே அவர்களுக்கும் கிரேக்கத்தின் தலைநகரம் கான்ஸ்டாண்டிநோபிளே. நம் அனைவருக்கும் தலைவர் ஒருவரே. நீங்கள் அவரை ஒடீசியஸ் என்று அழைக்கிறீர்கள், வேறு சிலர் கான்ஸ்டாண்டினோஸ் பேலியோ லோகோஸ் என்று அழைக்கின்றனர். இந்த நபர் பைசாண்டிய மதில்களின் நிலவறையில் கொல்லப்பட்டவர் அல்ல, இன்னொருவர். நின்றபடியே சலவைக்கல் சிலையாக உறைந்துபோய் சுதந்திர தேவியின் வருகைக்காகக் காத்திருப்பாரே ஒரு கதாநாயகன், அவர். உன் அனுமதியோடு நம்முடைய இந்தத் தலைவரை அக்ரிடாஸ் என்று அழைக்கிறேன். இந்தப் பெயரையே நான் மிக விரும்புகிறேன். இதுவே கம்பீரமாகவும் மறவீறுடனும் ஒலிக்கிறது. அதைக் கேட்டவுடனேயே நம்முள், போர்க்கோலம் தரித்து, ஓய்வும் முடிவும் இன்றி தொடர்ந்து எல்லைகளில் போரிடும் நிரந்தர ஹெலனிகளின் தோற்றம் நம்முள் கிளர்ந்தெழுகிறது. தேசிய, மதிநல, ஆன்மீக அகச்சாரங்களில் எல்லாம் நிறைகிறது. அப்பெயருடன் டைஜெனிஸ் என்ற பதத்தையும் சேர்த்தால், கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்த பண்பாட்டு கலவையை – நம் இனத்தை – முழுமையாகக் குறிப்பிட்ட உணர்வு உண்டாகிறது. 

‘நான் இப்போது கார்ஸில் இருக்கிறேன். சுற்றுப் பகுதிகளில் உள்ள ஊர்களுக்குச் சென்று அங்கிருக்கும் கிரேக்கர்களைத் திரட்டுவதுதான் நோக்கம். நான் வந்துசேர்ந்த அன்று குர்தியர்கள் ஒரு கிரேக்க ஆசிரியரையும் பாதிரியையும் சுற்றி வளைத்துப் பிடித்து அவர்கள் கால்களில் குதிரை இலாடத்தை அடித்தனர். பலரும் பீதியடைந்து, நான் தங்கியிருந்த இடத்திற்குள் தஞ்சம் புகுந்தனர். தொடர்ந்து குர்தியர்களின் துப்பாக்கி வெடியோசை கேட்டபடியே இருந்தது. அவர்களைக் காப்பாற்றுவதற்கான ஆற்றல் என் ஒருவனிடம் மட்டுமே இருப்பதைப்போல அங்கிருந்த எல்லாக் கிரேக்கர்களின் விழிகளும் என் மீது நிலைத்திருந்தன. 

‘நாளை டிஃப்லிஸுக்குப் புறப்படத் திட்டமிட்டிருந்தேன், ஆனால் இப்போது இந்த ஆபத்துக் காலத்தில் இப்படியே விட்டுச்செல்ல என் மனம் ஒப்பவில்லை. அதனால் இங்கேயே தங்கிவிட்டேன். எனக்கு அச்சமில்லை என்று சொல்லமாட்டேன், அச்சமாகத்தான் இருக்கிறது. ஆயினும் இங்கிருந்து கிளம்பிச் செல்வது அதைவிட வெட்கமாக இருக்கிறது. ரெம்ப்ராண்டின் போர்வீரன் போல் எனது போர்வீரனும் இச்செயலையே செய்திருப்பான்தானே? அவனும் தங்கியே இருப்பான், ஆதலால் நானும் தங்குகிறேன். குர்தியர்கள் இந்நகரத்திற்குள் வந்தால், நிச்சயம் இலாடம் கட்டும் பட்டியலில் நான் முதல் ஆளாக இருப்பேன். குருவே, நீ உன் மாணவன் இப்படி ஒரு நிலையை அடைவான் என்று கனவிலும் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டாய் என்று அறிவேன்!

’வழக்கம்போல் முடிவை எட்டாமல் நீண்ட கிரேக்க விவாதங்களுள் ஒன்றை முடித்துக்கொண்டு, தத்தம் கோவேறு கழுதைகள், குதிரைகள், கால்நடைகள், பெண்டு பிள்ளைகள், இதர உடைமைகளோடு கிளம்பி வடக்கு நோக்கி ஓடுவதற்காக, புலரியில் இங்கு ஒன்றுகூட வேண்டும் என்று முடிவெடுத்தோம். நான் மந்தையை வழிநடத்தும் செம்மறியாக முன்னால் நடப்பேன். 

’மலைத்தொடர்களையும் புராணப்பெயர்கள் சுமந்த நிலவெளிகளையும் கடந்து செல்லும் தேசபக்திமிக்க வெளியேற்றம்! நான் ஒருவகையில் மோசஸ். மோசஸின் நகல்! இந்தத் தேர்ந்தெடுத்த இனத்தை முன்னின்று புனித நிலத்தை நோக்கி அழைத்துச் செல்கிறேன். அந்நிலம் இந்த எளிய மக்களால் கிரேக்கம் என்று அழைக்கப்படுகிறது. நீ வழக்கமாகப் பரிகசிக்கும் என் ஆடம்பரமான இறுகிய கால்சராயைக் கழற்றி எறிந்துவிட்டு ஆட்டுத்தோலை உடுப்பாகச் சுற்றிக்கொண்டால்தான் இந்த மோசஸ்தனமான கடமைக்கு நான் தகுதியானவனாவேன் என்பது உண்மைதான். அதுமட்டுமில்லை, காற்றில் அலையும் எண்ணெய் மினுங்கும் நீண்ட தாடியையும் வளர்த்தாக வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக இரு கொம்புகள் தேவைப்படும். ஆனால் மன்னிக்க! உனக்கு அந்த மகிழ்ச்சியை நான் தரப்போவதில்லை. எனக்கு உடை மாற்றுவதைவிட ஆன்மாவை மாற்றுவது எளிமையாக இருக்கிறது. நான் இறுகிய கால்சராய்களையே அணிகிறேன். முட்டைக்கோஸ் தண்டினைப்போல வழவழப்பான கால்களுடன் இருக்கிறேன். இன்னும் நான் மணமாகாதவன்.

’குருவே, இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்குமென நம்புகிறேன். ஒருவேளை என் இறுதிக் கடிதமாகவும் இது இருக்கக்கூடும். யாரறிவார்? மானுடர்களைக் காப்பதற்காக சில சக்திகள் இரகசியமாக இயங்குகின்றன என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. குறிப்பான நோக்கங்களின்றி, வன்மத்துடன் கண்மூடித்தனமாக மனிதனை நாயடி பேயடி அடித்து நொறுக்குவதும், வழியில் எதிர்ப்பட்டவரைத் தன் விருப்பத்திற்கேற்ப கொன்று குவிப்பதுமாக ஆடும் சாத்தான்களின் மீதுதான் என் நம்பிக்கை குவிகிறது. ஒருவேளை இப்புவியில் இருந்து நான் விடைபெற்றால் (யாரையும் பயமுறுத்தக்கூடாது என்பதால், உரிய சொல்லைக் குறிப்பிடாமல் ’விடைபெறுதல்’ என்று குறிப்பிட்டேன்.) இந்தப் புவியில் இருந்து நான் விடைபெற்றால், நீங்கள் நலமாகவும் மகிழ்வுடனும் வாழவேண்டும் என விரும்புகிறேன்! இதைச் சொல்லத் தயக்கமாக உணர்கிறேன் என்பதால் பொறுத்துக்கொள்க – நானும் உன்னை ஆழமாக நேசிக்கிறேன்.’

கீழே அவசரமாகப் பென்சிலால் கிறுக்கிய இந்தப் பின்குறிப்பும் இருந்தது.

‘பி.கு. நான் கிளம்பிய அன்று கப்பலில் இருந்தபோது செய்துகொண்ட உடன்படிக்கையை இன்னும் நான் மறக்கவில்லை: இந்தப் புவியில் இருந்து நான் ’விடைபெற்றால்’ – உனக்கு எச்சரிக்கையாகச் சொல்கிறேன் – நீ எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் அச்சூழல் உன்னை அச்சுறுத்த அனுமதிக்காதே!’

*

நீகாஸ் கசந்த்சாகீஸின் “Zorba, the Greek” நாவலின் மொழியாக்கமான “சோர்பா என்ற கிரேக்கன்” நூலிலிருந்து ஒரு பகுதி. தமிழினி வெளியீடு.