தொல்காப்பியம் கூறும் ’நூல் எழுதுவது எப்படி?’

1 comment

நூலெழுதுங்கால் நூலெழுதுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன என்ன? ரைட்டேர்ஸ் ஹேண்ட்புக் – பலதும் உண்டு இக்காலத்தில். முன்னோர்களும் இத்தகைய அங்கையேடுகள் தந்துள்ளனர். இளம்பூரணர் உரை தொல்காப்பியம், மரபியல், 112க்கு கவனித்தீர்கள் என்றால் ஒரு விஷயம் புலப்படும். என்ன? ’உத்தி என்பது வடமொழிச் சிதைவு. அது சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடு காட்டுவது’ என்கிறார் இளம்பூரணர். அதாவது சூத்திரத்தின்பால் இருக்கும் பொருளை விளக்கிக் காட்டும் உரைவரைதல் என்பதைத்தான் உத்தி என்னும் சொல் குறிக்கும். அந்த உத்தியாகிய ‘உரைவரைதலும்’ அதாவது காமெண்டரி அல்லது க்ளாஸ் என்பதும் இரண்டு வகை. காண்டிகை, உரை என்று. காண்டிகையில் இரண்டு வகை. ஒன்று சூத்திரத்தின் பொருளை மட்டும் விளக்கும். இன்னொரு வகை காண்டிகை சூத்திரத்தின் பொருளை உதாரணத்தின் மூலம் இன்னும் சற்று விளக்குமுறக் காட்டும். சூத்திரத்தின் பொருளை மட்டும் உரைப்பது அல்லது எடுத்துக்காட்டுகளுடன் இன்னும் சிறிது விளக்குவது என்னும் இரு வகைக் காண்டிகைகளை வேறு விதமாகவும் உரைப்பர். சூத்திரத்தின் பொருள் மட்டும் உரைக்கும் க்ளாஸ் போன்ற வகை காண்டிகை என்றும், எடுத்துக்காட்டுகளுடன் சற்று விளக்கிச் சூத்திரப் பொருளுரைப்பது வார்த்திகம் என்றும் காண்டிகையின் இரண்டு வகைகளை இவ்வண்ணமும் கூறுவர்.

உரை என்பதற்கு இரண்டு வகையும் உண்டு. சூத்திரத்தில் சொல்லிய பொருளை மட்டுமே விளக்கியதோடு அமையாது நூலில் சூத்திரத்தில் சொல்லிய பொருளுக்கு ஒருங்குசேரும் ஒவ்வியதான விஷயங்கள் அனைத்தையும் ஒருங்குற உரைத்தல் உரை என்னும் ஒருவகை. இதை 10 ஆவது சூத்திரம் குறிப்பிடுகிறது.

”சூத்திரத்து உட்பொரு ளன்றியும் யாப்புற
இன்றியமையாது இயைபவை எல்லாம்
ஒன்ற உரைப்பது உரையெனப் படுமே.”

இதற்கே அகலவுரை என்றும் சொல்லலாம். வடமொழியில் வியாக்கியானம் எனப்படும். இன்னும் இரண்டாவது வகை உரையில் என்ன செய்யப்படும்? வெறுமனே பொருள் குறித்த விஷயங்களை எழுதியதோடு அமையாமல், அப்பொருள் குறித்து எழும் மாற்றுக் கருத்து, அதற்கு உரிய விடை, தன்னுடைய நூலினாலும், மற்றவர்கள் நூலினாலும் தகுந்த வாதங்களால் ஐயம், மருள் ஆகியவற்றைச் செவ்விய முறையில் நீக்கித் தெளிவாக ’ஒருபொருள் ஒற்றுமை’ காட்டி, அதாவது பூர்வபக்ஷங்களை மறுத்துக் காட்டியதோடு அமையாது தமது சித்தாந்தம் என்ன என்பதை நன்கு விளக்கிச் சொல்லி, அதை நன்கு திடம்பட எவ்வித நிச்சயமின்மைக்கும் இடனின்றித் துணிபாக உரைத்தல் என்பது இது உரையின் சிறப்பு வகை. வடமொழியில் பாஷ்யம் எனப்படுவது. இதற்கான தொல்காப்பிய சூத்திரம்:

“மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்த்
தன்னூலானும் முடிந்த நூலானும்
ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித்
தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளீஇத்
துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்”

எனவே காண்டிகை இரு வகை, உரை இரு வகை என்னவென்று கண்டோம். வேறு வகையில் சொன்னால் காண்டிகை, வார்த்திகம், வியாக்கியானம், பாஷ்யம் ஆகியவற்றின் இலக்கணங்கள் என்னவென்று பார்த்தோம்.

தந்திரம் என்றால் நூல் என்று பொருள். வேறு பொருளும் உண்டு. நமக்கு இவ்விடத்தில் நூல் என்ற பொருளைக் கொள்வாம். உத்தி என்பது உரை என்னும் பொருளதாய உக்தி என்னும் வடமொழியின் தமிழ்வடிவம். உத்திக்கும் வேறு பொருளுண்டு. இங்கு உரை என்னும் பொருள். நூலெழுதுவோர்க்கு 32 வகையான உரைக் குறிப்புகள் தருகிறது தொல்காப்பியம். இந்த 32 வகையான உத்திகளுக்கு உரை எழுதுங்கால் இளம்பூரணர் ஒரு விளக்கம் தருகிறார்: “தந்திர உத்தி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொழிப்பு – நுதலியது அறிதல் முதலாகச் சொல்லப்படனவும் அத்தன்மைய பிறவும் தந்திர உத்தியாம் என்றவாறு. தந்திரம் எனினும் நூல் எனினும் ஒக்கும். உத்தி என்பது வடமொழிச் சிதைவு. அது சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடு காட்டுவது.”

தொல்காப்பிய சூத்திரம் தந்திர உத்திகள் 32க்கு —

“ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின்
நுதலியதறிதல்
அதிகாரமுறையே
தொகுத்துக் கூறல்
வகுத்து மெய்ந்நிறுத்தல்
மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல்
மொழியாததனை முட்டின்றி முடித்தல்
வாராததனான் வந்தது முடித்தல்
வந்தது கொண்டு வாராதது முடித்தல்
முந்துமொழிந்ததன் தலைதடுமாற்றே
ஒப்பக் கூறல்
ஒருதலை மொழியே
தன்கோட் கூறல்
உடம்பொடு புணர்த்தல்
பிறனுடம்பட்டது தானுடம்படுதல்
இறந்தது காத்தல்
எதிரது போற்றல்
மொழிவாம் என்றால்
கூறிற்றென்றல்
தான் குறியிடுதல்
ஒருதலையன்மை முடிந்தது காட்டல்
ஆணை கூறல்
பல்பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்
தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்
மறுதலை சிதைத்துத் தன்துணிபு உரைத்தல்
பிறன்கோட் கூறல்
அறியாதுடம்படல்
பொருளிடை இடுதல்
எதிர்பொருள் உணர்த்தல்
சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்
தந்து புணர்ந்துரைத்தல்
ஞாபகம் கூறல்
உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு

மெய்பட நாடிச்
சொல்லிய அல்ல பிறவவண் வரினும்
சொல்லியவகையால் சுருங்கநாடி
மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்டு
இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்
நுனித்தகு புலவர் கூறிய நூலே.”
(மரபியல் சூத்திரம் 112)

நாம் இந்த அம்சங்களை நன்கு உணரின் நாம் இயற்றும் நூல்கள் பயன்திகழ் நூல்கள் ஆகும் அன்றோ! உரை எழுதும் பொழுதோ அல்லது நூல் எழுதும் பொழுதோ கவனிக்க வேண்டிய 32 அமிசங்களை தந்திர உத்திகள் என்று நம் முன்னோர் சொல்லியது யாங்ஙனம் என்று பார்த்தோம் அல்லவா! அதற்குச் சிறுகுறிப்பு விளக்கம் இருந்தால் நன்கு பயன்படும் என்று இவ்வணம் முயல்கின்றேன்.

1) நுதலியது அறிதல் — ‘முதலில் சொன்னதைப் புரிந்துகொள்’ என்று சொல்வோம் அல்லவா! நூல் எழுதுவோர் அல்லது உரைவரைவோர் தாமே எதற்கு விளக்கம் சொல்ல வருகிறாரோ அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது புரியாமையா என்று கேட்காதீர்கள். பல குழப்பங்களும் மூலமான வாக்கியத்தை விளக்குவோர் தாமே புரிந்துகொள்ளாமல் குழப்புவதும், நூலெழுதுவோர் தாம் நுவலவரும் கருத்தில் தாமே தெளிவுபெறாத காரணத்தாலும் எழுகின்றன. அதுதான் மூலவாக்கியங்கள் அல்லது சொல்லவரும் கருத்து அதன் சொற்கள், சொற்கள் கூடியமைந்த வாக்கியம் புரிந்தால் போதாதா என்று நினைக்கலாம். இல்லை. அதன் பயன், உட்பொருள், விளைவாகத் தோன்றும் முடிவான பொருள் என்று அனைத்தும் உள்வாங்குவதுதான் ஒரு பேஸிக் டெக்ஸ்ட் என்பதையோ அல்லது ஓர் அடிப்படைக் கருத்து என்பதையோ புரிந்துகொள்வது ஆகும். இது முதல் தந்திர உத்தி அல்லது நூலெழுதும், உரை எழுதும் போது கவனிக்க வேண்டிய அம்சம்.

2) அதிகாரமுறைமை — அதாவது விளக்கும் கருத்தின் தொடர்பின் பிணைப்பு. இதில் மூன்று விஷயங்கள் முக்கியம். முறைமை, இடம், கிழமை என்பன. இதை வடமொழியில் யோக்யதை, ஆஸத்தி, ஆகாங்க்ஷை என்று கூறுவர். முறைமை என்பது முன் சொன்னதற்கும் பின் சொல்வதற்கும் அர்த்தத்தினால் விரோதம் உண்டாகாமல் இருத்தல். ஒரு கருத்துக்கு உரியவற்றை ஓரிடத்துப் பெரிதும் விலகி இல்லாதவாறு அர்த்தம்கொள்ளும் விதத்தில் மொழிவது. கிழமை எனப்படுவது ஓரிடத்தில் சொல்லிய ஒரு கருத்து மற்ற ஓர் இடத்தில் சொல்லும் கருத்தால் முழுமை அடைவது. அதாவது ஒரு பகுதியை இன்னொரு பகுதி தனக்கு உரிமையாகவும், கிழமை உடையதாகவும் கொண்டு தொடர்பில் இருத்தல்.

3) தொகுத்துக்கூறல் — நூலிலோ, உரையிலோ பல இடங்களிலும் கூறியவற்றை ஓரிடத்தில் ஸம் அப் பண்ணிக் காட்டுதல் அல்லது ஓரிடத்துச் சொல்லும் ஒரு கருத்து யாங்ஙனம் பல இடத்துக்கும் பொருந்தும் என்று விரித்து அதன் தொகுப்பைக் காட்டுதல்.

4) வகுத்து மெய்ந்நிறுத்தல் – பலவிதமான கருத்துகளைக் கூறிய பின் அதன் உட்பிரிவுகள், வகைகள் என்ன என்று அந்தக் கருத்துகளை வகைப்படுத்திக் காட்டி, மேலும் அதன் உள் நுட்பங்களை நன்கு அறியுமாறு காட்டி நிற்றல்.

5) மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல் — தொடர்ச்சியாகக் கருத்துகளைக் கூறிவரும் பொழுது பின்னர் கூறும் கருத்து பலவகையிலும் கிளை எண்ணங்களை ஏற்படுத்தும் என்றால் முன் சொன்ன கருத்து எந்த எண்ணம் தொடர்ச்சியாகவும், விரிவாகவும், விளக்கமாகவும் அமையுமோ அந்த எண்ணத்தை நன்கு தெரியும்படி காட்ட வேண்டும்.

6) மொழியாததனை முட்டின்றி முடித்தல் — சொல்லவந்த விஷயம், அல்லது ஒரு நூலின் முடிவான கருத்தைச் சொல்வதற்காக நூலைத் தொடங்கிவிட்டு அந்த முக்கியமான ஈற்றுக் கருத்தானது சொல்லப்படாமலேயே நூலை முடிக்கக் கூடாது, அல்லது சொல்வதைப் புரியாதவகையில் மந்தணமாக்கி முடிக்கக் கூடாது. முடிந்த கருத்தை முட்டின்றி முடிக்க வேண்டும். (மந்தணம் – மர்மம்)

7) வாராததனால் வந்தது முடித்தல் — ஒன்றை விளக்கும்பொழுது சில நுட்பங்களை விளக்க இதுவரை நூலில் குறிப்பிடப்படாத விஷயங்களைக் கொண்டுவந்து உரிய இடத்தில் அமைத்து விளக்கி விரிவு காட்டும்போது அதைத் தெளிவுபடச் செய்தல் வேண்டும்.

8) வந்தது கொண்டு வாராதது முடித்தல் — ஒன்றை விளக்கிச் சொல்லும்பொழுது அதனின்றும் ஏற்பட்ட முடிவுகளும், தேற்றமும் இனி சொல்லப்பட வேண்டிய கருத்து ஒன்றிற்கு உதவியாகலாம். அதை நன்கு குறிப்பிட்டு அவ்வண்ணம் அப்பகுதி வருங்கால் மீண்டும் சுட்டிக்காட்டி அறிந்தது கொண்டு அறியாததைத் தெளிய வைக்கலாம்.

9) முந்துமொழிந்ததன் தலைதடுமாற்று — முன்னரே ஒரு பொருளை விளக்கித் தெளிவுபடுத்தியிருப்போம். அதை முற்றிலும் வேறுவகையால் மாற்றிக் கலைத்துப் போட்டுச் சொன்னால்தான் மற்ற ஒரு விஷயத்தை விளக்க முடியும் என்றால் அதை எந்த நோக்கத்துக்காகச் செய்கிறோம் என்பதை மிகவும் தெளிவுபடக் காட்டிப் பின்னர் அவ்வண்ணம் தலைதடுமாற்றி உரைக்கலாம்.

10) ஒப்பக்கூறல் — ஒன்று மொழிந்து விளக்குங்கால் அதனால் ஏற்பட்ட தெளிவினால் அதனை ஒத்த பல பொருட்களும் தெளிவுபெறக் கூடும். அப்பொழுது அவ்வண்ணம் ஒப்புமை உடைய விஷயங்களை ஒருங்குறத் தொகுத்துக் காட்டலும் ஏற்புடையதே ஆகும்.

11) ஒருதலை மொழிதல் — ஒரு விஷயத்தில் இருவேறு விதத்தில் சொல்லும் சாத்தியம் தோன்றலாம். அப்பொழுது அஃது நூலெழுதும் அல்லது உரையெழுதும் ஆசிரியனுக்கு ஒரு சவாலாக அமையும். ஏனெனில் எந்த விதத்திலும் பொருள்கொண்டாலும் தவறில்லை என்ற நிலையில் எந்தப் பொருளைக் கைக்கொள்வது இரண்டில் என்பது முற்றிலும் ஆசிரியன் நன்கு கற்றவனாகவும், சிந்தனை வாய்ந்தவனாகவும் இருந்தாலன்றி ஒன்றைத் துணிந்து தேருவது இயலாது. இப்படியும் அப்படியும் தானே அலையுண்ணும் மனத்தில் நூலின் மையக் கருத்துக்கு அதிக உதவியானது இந்த விதத்தில் கொள்ளும் பொருளே என்பது படிப்பு, சிந்தனை, தீர்க்கமான எண்ணம் உடையவர்க்கே சாலும். (வடமொழியில் இதற்கு விகல்பம் என்று கூறுவர். திருவாய்மொழியில் ஓரிடத்தில் நம்மாழ்வாரைப் பக்தரா பிரபந்நரா இரண்டு விதத்தில் எப்படிச் சொல்வது என்ற ’இருவழிப்புள்ளி’ வருகிறது. அங்கு ஈட்டின் உரைக்காரர் கூறுவது – ’ஆழ்வார் பக்தரா பிரபந்நரா என்று விகல்பிக்கலாய் இருக்கும்.’ இரண்டு விதத்திலும் சொல்லலாம். ஆழ்வாரைப் பக்தர் என்றாலும் ஒக்கும்; பிரபந்நர் என்றாலும் ஒக்கும். ஆனால் எப்படிச் சொன்னால் திருவாய்மொழிப் பொருளின் ஈறுநின்ற தேற்றப் பொருளுக்கு ஒவ்வியதாக இருக்குமோ அதற்கு ஏற்புடையதாக ஸ்ரீ நம்பிள்ளை அவர்கள் ஆழ்வார் பிரபந்நரே என்று துணிந்து மேற்செல்வார். அப்பொழுது ஆழ்வார் பக்தர் அல்லரோ என்ற கடா எழும். அதற்கு ஸ்ரீநம்பிள்ளை அவர்கள் ஆழ்வார் பிரபந்நர்; ஆயினும் அவர் வாழும் நாள் எல்லாம் அவருக்குத் தேகயாத்திரைக்கான ஈடுபாடாக அமைந்தது பக்தி என்று அழகுற நிர்வகித்துப் பொருளுரைப்பார்.)

12) தன்கோட் கூறல் – பிற நூலாசிரியர் கூறியதனைச் சார்ந்து கூறுதலன்றித் தான் சொல்லவரும் கருத்தை ஓராசிரியன் சொல்லலாம். திருவிருத்தம் வியாக்கியானத்தில் ஓரிடத்தில் ஆழ்வாருடைய பெருமையை மனத்தில்கொண்டு பல ஆசிரியர்களும் அவரைப் பலவாறாகக் கூறுவர், எம்பெருமானே என்றும், நித்ய சூரிகளுள் ஒருவர் என்றும், இவ்வாறு பலவாறு கூறுவர் என்று சொல்லிப் போந்து கடைசியில் தம் கோள் கூறுவாராய் உரையாசிரியர் உரைப்பார். ‘நம்மாழ்வாரைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பெருமையைக் கூறினாலும் அவர் உண்மையில் காரணமற்ற பகவத் கருணையால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று நித்யசூரிகளோடு ஒக்கச் சொல்லலாம்படியான மேன்மை பொலிந்த ஜீவர்’ என்னும்படியாகத் தன்கோட் கூறலாய் உரைப்பார்.

13) உடம்பொடு புணர்த்தல் – மூல நூலில் சொல்லாதனவும், தன் கருத்துக்கு வழிமுறையாக வரும் கருத்து அல்ல என்றாலும் ஒவ்விய கருத்து பலராலும் வழங்கப்படும் ஒன்று விளக்குவதற்குத் துணையாயின் அதனைப் பொருத்தமுறச் சொல்லுதல்.

14) பிறனுடம்பட்டது தானுடம்படுதல் — பிற ஆசிரியர்கள் கூறிய கருத்து தன் கருத்திற்கு இசைந்தவழி அக்கருத்தோடு தனக்கு உள்ள இசைவைக் காட்டி விளக்கல்.

15) இறந்தது காத்தல் – அதுவரை சொன்னதில் வராத ஒரு கருத்தைப் பொருத்தப்பாட்டிற்கு பங்கம் வராதவகையில் சொல்லும் நுவல்திறனும் ஓர் ஆசிரியர்க்கு வேண்டியதாகும்.

16) எதிரது போற்றல் — அதுவரை சொன்னவற்றிற்கு முரணாகாத கருத்துகளை அதன் பொருத்தம் நன்கு தெரியும்வண்ணம் எடுத்து மொழிதல் அல்லது கூறியவற்றை ஆங்காங்கே புலப்படுத்திக் காட்டுதல்.

17) மொழிவாம் என்றல் — பல பொருளையும் கூறும்பொழுது சிலவற்றை அவ்விடத்திலேயே எடுத்துரைக்காமல் பிறிது ஓரிடத்தில் உரைக்கப் போவதாக ஆசிரியன் உரைக்கலாம். அதனால் ஒரே சமயத்தில் படிப்பவருக்குத் தரப்படும் விஷயகனம் குறைக்கப்பட்டுப் புரிந்துகொள்ள இலகுவாய் ஆக்கப்படும்.

18) கூறிற்று என்றல் – ஏற்கெனவே விளக்கிய கருத்துகள் மீண்டும் வந்தால் அக்கருத்தை ஏற்கெனவே ’இந்த இடத்தில் விளக்கினதாக’ நினைவூட்டிக் கூறுவது படிப்பவருக்குப் புரிதல் தொடர்ச்சியை வலுப்படுத்தும்.

19) தான் குறியிடுதல் – வேறு விதத்தில் கருத்துகளை வகைதொகை படுத்திக் கூற வேண்டுமிடத்து ஓராசிரியன் தன் விளக்கத்திற்கொப்பச் சில குறியீடுகளில் கருத்துகளைச் சுட்ட நேரிடலாம். அஃது விளக்கத்திற்குதவியாம்.

20) ஒருதலையன்மை முடிந்தது காட்டல் — ஒரு வழியாக ஓரிடத்துச் சில கருத்துகளை விளக்கும்போது அவ்விளக்கமானது ஏற்கனவே சொன்ன கருத்துகளுக்கும், நூல் முழுமைக் கருத்திற்கும் பொது விளக்கமாக அமைந்து பொலிவூட்டலாம். அவ்வாறு நேருமிடத்து அந்த அம்சத்தைக் குறிப்பிட்டுக் காட்டுதலும் உதவியாம்.

21) ஆணை கூறல் — நூலெழுதும் ஆசிரியன் அல்லது உரைவரைவோர் ஒரு கருத்தைக் கூறுமிடத்து நிரூபணங்களோ, அல்லது பிறர்தம் கருத்துகளையோ துணைவலிவுக்குக் காட்டாமல் தாம் கூறுவது பொருந்தியதே என்று தாமே சான்றாகத் தம்வலிவைச் சார்ந்து துணிந்து உரைப்பது ஆணை கூறல். அஃது படிப்போர்க்குக் கவனத்தை ஈர்க்குமெனினும் கூடவே உரிய சான்றுகளும் பின்னர் காட்டாது போயின் வெறும் துணிச்சலாகவே முடியும் வாய்ப்பு உண்டு.

22) பல்பொருட்க்கு ஏற்பின் நல்லது கோடல் — ஒரு கருத்து அல்லது ஓர் உரை பல பொருளைத் தந்து நிற்குமாயின் அந்தப் பொருட்களில் நல்ல பொருளையே ஓர் ஆசிரியன் தேர்ந்தெடுத்துக் காட்டுதல் வேண்டும்.

23) தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் — பல பொருளையும் தொகுத்து ஓர் கருத்துரையாகவோ அல்லது ஒரு சொல்லாகவோ கூறியபின், அச்சொல் அல்லது கருத்துரை தொகுத்ததற்கு வெளியில் உள்ள ஒன்றிற்கும் பொருந்திவருமேல் அதற்கும் ஒப்பப் பொருத்திக் காட்டுதல்.

24) மறுதலை சிதைத்துத் தன்துணிபு உரைத்தல் — பிற ஆசிரியர் கூறிய கருத்தை மறுத்து ஓர் ஆசிரியன் தன்னுடைய துணிபு என்ன என்று விளக்கியுரைத்தல்.

25) பிறன்கோள் கூறல் — பிற ஆசிரியர் கூறிய கருத்துகளைத் தாமும் உடன்பட்டு அவற்றைத் தான் கூறவந்ததற்குப் பொருத்தமுற எடுத்து ஆளுதல்.

26) அறியாதுடம்படல் — பிற ஆசிரியர் கூறிய கருத்து ஒன்று தன்னால் ஒல்லும்வகையில் சுயமாக அறிய முடியாத ஒன்றாயினும் அதற்கு உடன்பட்டு அக்கருத்தைத் தழுவியுரைத்தல்.

27) பொருள் இடை இடுதல் — ஓர் ஆசிரியன் தான் ஒரு கருத்தை விளக்குங்கால் அக்கருத்தால் நினைவுபடுத்தப்படும் ஒரு பொருளைக் குறித்து அவ்விடத்திலேயே ஆற்றொழுக்காகத் தொடர்புகொண்டு வரவில்லையாயினும் சொல்லும் பொருளுக்கு இனமாதல் பற்றி இடையிட்டு உரைக்கக் கூடும்.

28) எதிர் பொருள் உணர்த்தல் — இனி கூற வேண்டியது எதிர்வரும் அமையத்து இன்ன இன்ன உள என்பதை ஆங்காங்கே முற்கூட்டியே உரைப்பதும் கற்போருக்குப் பயன்படும் உத்தியாகும். ஏற்கனவே கூறிவந்த பொருளைச் சுருக்கித் தகுந்தவிடத்துப் பிழிவாய்க் காட்டுதல் (சம்மேஷன்) என்பதை எதிரது போற்றல் என்பதில் பார்த்தோம். இங்கே இனி எவற்றைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம் என்பதைத் தகுந்தவிடத்துக் கூறி முன்னோட்டமாகக் காட்டுவது எதிர் பொருள் உணர்த்தல் ஆகிய இது. நூல் செய்வோர், உரை வரைவோர் ஆகியோருக்கு உதவும் உத்திகள் இவை.

29) சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல் — ஒரு பொருளைப் பற்றி விளக்குங்கால் அந்தத் தலைப்பின் கீழ் வரும் சிந்தனைக்கு ஒவ்விய விதத்தில் சொல்வதோடும் அமையாது சொல்லின் நேர் பொருளாகக் கிடைக்கும் பொருள் பன்மைகள் இருப்பின் அவற்றையும் விவரித்துக் காட்டுதல் பயன் இருப்பின் ஒரு நல்ல உத்தியாகும்.

30) தந்து புணர்ந்து உரைத்தல் — ஓரிடத்தில் விளக்கும் பொழுது முன் சொன்னதும், பின் சொன்னதும் இருக்க இடையே மற்ற ஓரிடத்தினின்றும் வேறொரு பொருளைச் சொல்லும் இடத்து வருவித்துக் காட்டிக் கூடுதல் விளக்கம் பெறுதலும் பயனுடைத்தாம்.

31) ஞாபகம் கூறல் – ஒரு கருத்தை அல்லது சொல்லை இருமுறை பயன்படுத்தும் போது அதற்கு இருவேறு பயன்பாடுகள் குறித்த விளக்க மாறுபாடு இருக்கக்கூடும். அதனையொட்டி விளக்குவதும் ஓர் உத்தியாம்.

32) உய்த்துக்கொண்டு உணர்தல் – ஓரிடத்து ஒன்றை விளக்குமிடத்தோ அல்லது மொழியுமிடத்தோ சில சொற்கள் அங்குப் பொருந்தாதன போல் நிற்கும். பிறிதோரிடத்தில் கூறியவற்றை அங்கு உய்த்துக்கொண்டு உரைக்கும் பொழுது பொருத்தப்பாடு தெற்றேன விளங்கும். அவ்வாறு செய்வது பொருள் விளக்கம் சிறப்பதற்குத் துணை செய்யும்.

இவை முப்பத்தியிரண்டும் தந்திர உத்திகள் அதாவது நூல் செய்யும் பொழுது பொருள் விளக்கத்திற்கு வேண்டி ஆசிரியன் கையாளும் உரைத்தலின் நுட்பங்கள். இவற்றைத் தவிரப் பொதுவாக,

மெய்ப்பட நாடிச்
சொல்லிய அல்ல பிற அவண் வரினும்
சொல்லிய வகையால் சுருங்க நாடி
மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்டு
இனத்தில் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்
நுனித்தகு புலவர் கூறிய நூலே.

என்று தொல்காப்பியச் சூத்திரம் நிறைவு செய்கிறது. சொல்லியவை அல்லாமல் பிற வகைக் கருத்துகள் வரினும் சொல்லப்பட்ட பொருளோடு ஒப்புமை வேற்றுமை ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து, குற்றம் இல்லாமல் கசடறத் தெரிந்துகொண்டு வகைபடுத்தி உரைத்தல் தக்க புலவர்களின் நுண்மாண் நுழைபுலத்திற்குச் சிறப்பாகும்.

சொல்லிய உத்திகள் அன்றிப் பிற உத்திகள் என்று சொல்லப்படுபவை மாட்டெறிதல், சொற்பொருள் விரித்தல், ஒன்றென முடித்தல், தன்னினம் முடித்தல் ஆகியனவாம். மாட்டெறிதல் என்பது முன்னர் கூறிய பொருளே இவ்விடத்தும் என்று பொருத்திக் காட்டுதல். சொற்பொருள் விரித்தல் என்பது பதம் பதமாகப் பிரித்துத் தனித்தனியே பொருள் சொல்லி விளக்கம் பெய்வித்தல். ஒன்றென முடித்தல் ஒன்றிற்கு மேல் முடிவுகள் சாத்தியம் என்னும் பொழுது ஒரு முடிவு காட்டி அதற்கு ஒப்பக் கூறியவற்றை முடித்துக் காட்டுதல். தன்னினம் முடித்தல் ஓர் ஆசிரியனின் மதம் இன்னது என்று காட்டி அதற்கு இனம் ஆகும் பொருள்களைக் காட்டி விளக்கல்.

சொல்லிய அல்ல பிற என்றதனால் இன்னும் சில உத்திகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அவையாவன – ஒரு மூல நூலை விரித்துரைக்குமிடத்து அந்த நூலில் பொருள் முறை அமைந்திருக்கும் நிரல் என்பது ஆற்றொழுக்கு, அரிமா நோக்கு, தவளைப் பாய்த்துள், பருந்து விழுக்காடு என்னும் வகையில் ஒன்றாய் அமைந்திருக்கக் கூடும். அதேபோல் அந்த மூலநூலை நாம் பொருள் கொள்ளும் போது எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்பதும் வகைபடும். அவை ஆதிவிளக்கு, மத்திம தீபம், இறுதி விளக்கு என்பன.

ஆற்றொழுக்கு என்பது அமைந்திருக்கும் நிரலிலேயே பொருள் கொள்ளக் கிடைப்பது. அரிமா நோக்கு என்பது ஒரு சிங்கம் காட்டில் வேட்டையாடுங்கால் முன்னரும் பின்னரும் நெடுநோக்கு கொள்வது போன்று மூலநூலில் பொருள் கொள்ளுங்கால் சொல்லிய பொருள் சொல்லப்புகும் பொருள் என்று அனைத்தையும் முன்னும் பின்னும் முழுதும் கணக்கில்கொண்டு பொருள் கொள்ளும்படி இருப்பது. தவளைப் பாய்த்துள் என்பது ஓரிடத்தில் பொருள் சொல்லுங்கால் விளக்கம் வேண்டித் திடுமென வேறோர் இடத்துப் பொருளைக் கூறுதல். பருந்து விழுக்காடு என்பது தன் உணவைப் பருந்தானது நெட்டுக் குத்தலாக விழுந்து பறிப்பதைப் போன்று ஒரு கிரமத்தில் இல்லாமல் நடுவே புகுந்து பொருள் கொள்ளுதல்.

பொருள் கொள்ளும் போது மூல நூல் நமக்கு அர்த்தப்படும் விதமான ஆதிவிளக்கு என்பது முதலில் சொன்ன பொருள் கடைசி வரையில் உள்ள பனுவலை விளக்கிக் காட்டுதலாம். மத்திம தீபம் என்பது நடுவில் சொன்ன பொருள் முன் சொன்னவற்றையும், இனி வருவனவற்றையும் நடுவண் நின்று விளக்கும் பெற்றிமையாம். இறுதி விளக்கு என்பது கடைசியில் கண்ட பொருள் நூல் முழுமைக்கும் முதல் வரையில் சென்று பொருள் தருவதாம். ஒரு வீட்டில் தீபம் ஏற்றினால் அது ஒளி தரும் நிகழ்வை வைத்து இப்பெயர்கள் அமைந்தன.

தொல்காப்பியரும், அவருடைய சூத்திரங்களுக்குப் பொருள் கண்ட இளம்பூரணர், பேராசிரியர் முதலிய ஆசான்களும் நமக்கு நூல் எழுதுவது, உரை வரைவது என்பதின் நுட்பங்களைக் கூறியவற்றால் நாம் நல்ல பயன் பெறலாகுமன்றோ!

1 comment

ர.கார்த்திகா April 14, 2022 - 10:23 pm

மிகவும் பயனுள்ளதாக இருந்தது.தங்களுக்கு நன்றி????

Comments are closed.