நாத்திகரின் பூசை – பால்சாக்

by ராஜேந்திரன்
0 comment

மருத்துவர் ஒருவர் மனித உடற்கூறு பற்றி மிகச் சிறப்பான கோட்பாட்டை வழங்கியதற்காக விஞ்ஞான உலகமே அவருக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. அவர் பாரிஸ் நகர மருத்துவப் பாடசாலையின் புகழ்பெற்ற வல்லுநர்களில் ஒருவராகத் தனது இளம் வயதிலேயே திகழ்ந்து சாதனை படைத்தார். உயர்தரக் கல்வியைப் புகட்டுகிற பாரிஸ் நகரின் மருத்துவப் பாடசாலை ஐரோப்பிய மருத்துவர்கள் அனைவருமே புகழ்ந்து போற்றுவதாகும். மருந்து சம்பந்தமான ஆராய்ச்சிகளில் தம்மை அர்ப்பணித்துக்கொள்வதற்கு முன்னதாக பியான்கன் என்னும் அந்த மருத்துவர் அறுவை சிகிச்சையைத்தான் நீண்ட காலமாகச் செய்துவந்தார். ஃப்ரெஞ்ச் அறுவை சிகிச்சையாளர்களில் தலைசிறந்தவரான டெஸ்ப்ளேன் என்பவரது வழிகாட்டுதலின்படி அவரது ஆரம்பகால மருத்துவப் பயிற்சியைப் பெற்றார்.

பலராலும் கொண்டாடிப் போற்றப்படுகிற டெஸ்ப்ளேன் விஞ்ஞான உலகில் எரிநட்சத்திரத்தைப் போன்று பிரகாசித்து மறைந்தவர். வேறு எவருக்கும் பயிற்றுவிக்க முடியாத ஒரு வழிமுறையும் அவருடன் சேர்ந்து கல்லறையில் புதைபட்டுவிட்டதாக அவரது எதிரிகள்கூட ஒப்புக்கொள்கின்றனர். எந்த ஒரு மேதைக்கும் வாரிசு இல்லாததைப் போல அவருக்கும் வாரிசுகள் யாருமில்லை.

அறுவை சிகிச்சையாளரின் புகழ் என்பது ஒரு நடிகரின் புகழைப் போன்றது. அவர் உயிருடன் உள்ள வரையில் மட்டுமே அதுவும் நிலைபெற்றிருக்கும். அவர் மறைந்த பிறகு அவரது புகழும் மங்கி, மேன்மேலும் போற்றுதற்குரியதாக இருப்பதில்லை. நடிகர்களுக்கும் அறுவை சிகிச்சையாளர்களுக்கும் இது பொதுவானது. மேலும் பெரும் பாடகர்கள், நுட்பமான திறனுடைய இசை வல்லுநர்கள் ஆகியோரும் தங்களது ஆற்றலால் இசையின் தரத்தைப் பத்து மடங்கு உயர்த்தினாலும் அவர்களும் அக்கணத்தின் நாயகர்களே.

இவ்வாறாகத் தோன்றி மறைந்துவிடுகிற மேதைகளோடு ஒத்திருந்த டெஸ்ப்ளேனது வாழ்வும் அந்த விதிமுறைக்குச் சான்றாகவே விளங்கியது. நேற்று பெரும் புகழோடு விளங்கிய அவரது பெயர் இன்று மறக்கப்பட்டுவிட்டது. அவரது சொந்தத் துறையில் மட்டுமே அவரது நினைவு நீடித்திருக்கக்கூடும். அத்துறையைக் கடந்து நிலைத்திருக்காது. ஆனால் ஒரு சான்றோரது பெயர் அவரது விஞ்ஞானத் துறையைக் கடந்து அனைத்து மனித குலத்திற்கும் பொதுவான சரித்திரத்தில் இடம்பெறுவதற்கு அசாதாரணச் சூழல் அத்தியாவசியமாகிறது. ஒரு காலகட்டத்தின் பெருங்குரலாகவோ பிரதிநிதியாகவோ ஒரு மனிதனை உருவாக்கிவிடுகிற அத்தகைய பரந்த அறிவு டெஸ்ப்ளேன் அவர்களுக்கு இருந்ததா?

டெஸ்ப்ளேன் தெய்வத்திற்கு ஈடான தீர்க்கமான பார்வையைக் கொண்டிருந்தார். இயற்கையாக வாய்த்த அல்லது அவராக முயன்றுபெற்ற உள்ளுணர்வின் மூலமாக நோயாளியையும் அவரது நோயையும் முழுமையாகப் புரிந்துகொள்ளும் திறன்பெற்றிருந்தார். அதன் காரணமாக அந்தக் குறிப்பிட்ட மனிதரின் நோய்க்கான மூலகாரணத்தை அவரால் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிந்தது. ஆகவே இயற்கைச் சூழல், நோயாளிக்கே உரித்தான தனிப்பட்ட குணநலன்கள் ஆகியவற்றையும் கருத்தில்கொண்டு எந்த நாளில், எத்தனை மணிக்கு, எந்த நிமிடத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதைத் துல்லியமாக முடிவுசெய்வார்.

இவ்வாறாக இயற்கையோடு இணைந்து செயல்படுவதற்குத் தேவையான கல்வி அறிவை அவர் எவ்வாறு பெற்றார்? ஜீவராசிகளின் முடிவேயற்ற பரிணாம ஒருங்கிணைவு பற்றியெல்லாம் அவர் அறிந்துள்ளாரா? இந்தப் பூமி படைத்துள்ள இயற்கையின் சுற்றுச்சூழலில் காணக்கூடிய மூலக்கூறுகளை ஆட்கொண்டு, அவற்றைக் குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிற மனிதனின் குணாம்சம் போன்றவை குறித்தெல்லாம் அவர் ஆழமாகக் கற்றுக்கொண்டுள்ளாரா? குவியரின் மேதமைக்கும் காரணமான ஒப்புமை, அனுமானம் போன்ற வழிவகைகளை இவரும் பயன்படுத்திக்கொண்டாரா? எப்படி இருந்தாலும் சரி, தேகத்தின் மர்மங்களை மிகச்சரியாக அவர் புரிந்துகொண்டிருந்தார். அதன் தற்போதைய நிலையை ஆராய்ந்து அதன் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் உணர்ந்துகொள்ளக் கூடியவராக இருந்தார்.

இருப்பினும் ஹிப்பாக்ரேட்டஸ், கேலன், அரிஸ்டாடில் ஆகியோரைப் போன்று விஞ்ஞானத்தை முழுமையாகத் தன்னகத்தே அவர் கொண்டிருந்தாரா? மொத்த மருத்துவத் துறைக்கும் புது உலகங்களை எடுத்துக்காட்டினாரா? இல்லை என்ற போதிலும்கூட மனித உடலின் ரசாயனத்தில் தொடர்ந்து ஆழ்ந்த கவனம் செலுத்தியவரை நுட்பமாக ஆய்ந்து பார்க்காமல் அவ்விதமாக மறுப்பதற்கில்லை. ஏனெனில் புராதன விஞ்ஞானமாகிய மேகிஸம், அதாவது மூலக்கூறுகளின் ஒருங்கிணைவு, உயிரின் தோற்றத்திற்கான மூலகாரணம், உயிர் தோன்றுவதற்கு முன்பிருந்த ஆக்கசக்தி, அத்தகைய சக்தி தோன்றுவதற்கு முன்பிருந்த நிலை, அது எதிர்காலத்தில் என்னவாக இருக்கக்கூடும் என்பது பற்றியெல்லாம் அவருக்கு முடிவான கருத்துகள் இருந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை யாவும் அவரது சொந்த அபிப்பிராயங்களாகவே அமைந்துவிட்டன.

அவரது தற்பெருமையே அவரது வாழ்வைத் தனிமைப்படுத்திவிட்டது. அந்தத் தற்பெருமையே அவரது புகழின் அழிவிற்கான காரணம். ஒரு மேதை தனது சுயமுயற்சியால் தேடிக் கண்டடைந்த மர்மங்களை வருங்காலத் தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாக அவருக்கு ஒரு சிலை நிறுவப்பட்டு இருக்கலாம். ஆனால் அவரது கல்லறையில்கூட அது நிறுவப்படவில்லை. டெஸ்ப்ளேனது திறன் அவரது சொந்த அபிப்பிராயங்களைச் சார்ந்திருந்ததாகக்கூட கூறலாம். ஏனெனில் அவர் மறைந்ததன் விளைவாக அதுவும் அழிந்துவிட்டது.

அவரைப் பொறுத்த வரையில் இப்புவியில் காணக்கூடிய சூழலானது இனப்பெருக்கத்திற்கான களமாகவே இருந்தது. இந்தப் பூமியை அவர் முட்டை ஓடாகவே கருதினார். ஆனாலும் கோழி முதலில் தோன்றியதா அல்லது முட்டை முதலில் தோன்றியதா என்பதை உணராதவராக இருந்தார். ஆக சேவல், முட்டை இரண்டையுமே அவர் மறுத்தார். மனிதனுக்கு முன்னரும் பின்னரும் உள்ள விலங்கு, ஆத்மா போன்ற எதிலும் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

அவருக்கு எது குறித்தும் சந்தேகமே இல்லை. அவர் தீர்க்கமான அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தார். ஏனைய சான்றோர்களின் அறிவுக்கு இணையாக அவரது வெளிப்படையான கலப்படமற்ற நாத்திகம் இருந்தது. இவர்களே உலகின் தலைசிறந்த மனிதர்கள். திருத்தவே முடியாத நாத்திகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவ்வாறானவர்களும் உள்ளனர் என்பதை ஆன்மீகவாதிகள்தான் நம்புவதில்லை.

வேறு விதமான அபிப்பிராயம் அவரிடத்தில் இருப்பதற்குச் சாத்தியமே இல்லை. ஏனெனில் தனது இளமைப் பருவத்தில் இருந்தே உயிரினங்களைக் கூறு கூறாகப் பிளந்து ஆராய்வதில் நிகரற்ற நிபுணராக அவர் இருந்தார். வாழ்விற்கு முன்னும் பின்னும் அல்லது வாழ்கிறபோதும் உடலின் அனைத்துச் செயல்பாடுகளையும் ஆய்வுசெய்யும் வேளையில், ஆன்மீகக் கோட்பாட்டாளர்களுக்கு அவசியமான தனித்துவமிக்க ஆத்மா என ஒன்றிருப்பதை அவரால் கண்டறியவே முடியவில்லை.

மூளை மண்டலம், நரம்பு மண்டலம், விநியோக மண்டலம் போன்றவற்றை டெஸ்ப்ளேன் அங்கீகரித்தார். அவற்றில் முதல் இரு மண்டலங்களும் ஒன்றுக்கொன்று சீராகக் கடமையாற்றி வருவதையும் உணர்ந்தார். எனவே அவரது வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டும்போது, கேட்பதற்குச் செவிப்புலன் அத்தியாவசியமானதல்ல என்றும், காண்பதற்குப் பார்வைப் புலன் அவசியமானதல்ல என்கிற முடிவிற்கும் வந்திருந்தார். வயிற்றுக் கொப்புளில் உள்ள நரம்பு வலைகள் அவற்றுக்கு மாற்று வழியாகச் செயல்படக்கூடும் என்றும், எவரும் உணராமலேயே அவ்வாறான மாற்றம் நிகழக்கூடும் என்ற முடிவிற்கும் அவர் வந்திருந்தார். இப்படியாக ஒரு மனிதனுக்குள் இரண்டு ஆன்மாக்கள் இருப்பதை அவர் கண்டறிந்தார். இருந்தபோதிலும் அவை இரண்டுமே கடவுள் பற்றி நமக்கு எதையும் தெரியப்படுத்தவில்லை. இந்த உண்மை அவரது நாத்திகத்தை உறுதிப்படுத்தியது. இறுதி வரை தனது முடிவைக் குறித்து எவ்விதக் குற்றஉணர்வும் கொள்ளாமலே அவர் இறந்தும் போனார். துரதிர்ஷ்டவசமாக பல மேதைகள் இவ்விதமே இறக்கின்றனர். கடவுள் அவர்களை எல்லாம் மன்னிப்பாராக!

உண்மையிலேயே பெரிய மனிதரான அவரது வாழ்வில் பலவிதச் சிறுமைகளும் காணப்பட்டன. பொறாமை கொண்ட அவரது எதிரிகள் அவரது புகழை மங்கச் செய்வதற்கென சிறுமையைத்தான் பிரதானப்படுத்தினர். ஆனால் தெளிவாகக் காணக்கூடிய முரண்பாடு என்று அதைக் குறிப்பிடுவதே பொருத்தமானதாகும். மேன்மையான அறிவாளிகளின் செயல்பாடுகளைக் குறித்த விளக்கங்களோ அல்லது அவற்றுக்குரிய காரணங்களோ முட்டாள்களுக்கும் பொறாமை கொண்டவர்களுக்கும் விளங்காதவை. தொலைநோக்கோடு அவர் அறிவிக்கும் திட்டங்களில் உள்ள மேலோட்டமான சில முரண்பாடுகளை மட்டுமே சாதுர்யமாகப் பயன்படுத்தி அக்கணத்தில் தோன்றுகிற முடிவை முன்வைத்து அவர்கள் குற்றம் சாட்டுவர். ஒருவேளை சில காலம் கழித்து அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த அதே திட்டங்கள் வெற்றி அடைந்தாலும், அவராக முனைந்து மேற்கொண்ட முன்னேற்பாடுகள் எதிர்பார்த்த விளைவுகளோடு ஒத்திசைந்தாலும்கூட, முன்கூட்டியே பரப்பப்பட்ட அவதூறுகளில் சில நிலைத்துவிடுகின்றன.

டெஸ்ப்ளேனது புகழையும் விஞ்ஞான அறிவையும் எதிர்க்க முடியாத நிலையில், அவரது மனநிலையையும் குணஇயல்பையும் எதிரிகள் குற்றம் சாட்டினர். ஆனால் ஆங்கிலேயர்கள் எக்ஸண்டிரிக் எனச் சாதாரணமாகக் குறிப்பிடுவது போல, உண்மையில் அவர் இயல்புக்கு மாறான தனிப்போக்கு உடையவர். சில வேளைகளில் அவர் அற்புதமாக நேர்த்தியான ஆடைகளை அணிவார். வேறு சில சமயங்களில் உடை பற்றி எந்தவித அக்கறையும் செலுத்தாமல் இருப்பார். சமயங்களில் நடந்துசெல்வார். அவ்வப்போது வண்டியிலும் செல்வார். சில சமயங்களில் சிடுசிடுவென எரிந்து விழுவார். வேறு சமயங்களில் கனிவுடன் நடந்துகொள்வார். கடினமானவராகவும் கஞ்சத்தனம் மிக்கவராகவும் தோன்றுவார். நாடு கடத்தப்பட்ட ஆட்சியாளர்களுக்குத் தனது செல்வத்தை வழங்கக்கூடியவராகவும் இருப்பார். அவர்களும் சிறிது நாட்களுக்கு அதை ஏற்று அவரைக் கௌரவித்தும் உள்ளனர். அவரைப் போல முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தோற்றுவிக்கும் படியாக வேறு எவராலும் நடந்துகொள்ளவே முடியாது.

மேல்தட்டிலும், கீழ்தட்டிலும் உள்ள மனிதர்களை நுட்பமாக ஆராய்ந்ததன் விளைவாக, அனைத்து மனிதர்களின் மீதும் அவருக்கு ஆழமான வெறுப்புணர்வு இருந்தது. புனிதமான சடங்கை ஒருவர் செய்யும்போதும், அல்லது கீழ்த்தரமான ஏதோவொரு காரியத்தைச் செய்யும்போதும் எவ்விதப் போலித்தனமும் இன்றி வெகுசாதாரணமாக அச்சூழலை எதிர்கொண்டு அவர்களை ஆச்சரியப்படுத்துவார்.

பெரிய மனிதர்களும் தனிப் பெருந்திறனும் இணைந்தே காணக் கிடைக்கும். அத்தகைய பெரிய மனிதர்களிடம் திறமை அதிகமாக இருந்து நகைச்சுவை உணர்வு குறைவாக இருந்தாலும், அந்த நகைச்சுவை உணர்வும்கூட அலாதியானதாக இருக்கும். சாதாரணமாக ஒருவரை நகைச்சுவை உணர்வு மிக்கவர் என நாம் குறிப்பிடுவதைக் காட்டிலும், பெரிய மனிதர்களது நகைச்சுவை உணர்வு மேன்மையானதாக இருக்கும். 

அந்த மருத்துவர் ஒரு மன்னரின் உயிரைக் காப்பாற்றிய போது எழுந்த கேள்வி, “அரசரின் உடல்நிலை எவ்வாறாக உள்ளது?” அதற்கு அவர் அளித்த பதில், “அரசர் உயிர் பிழைத்துவிட்டார். தொடர்ந்து அவருக்குள்ளிருக்கும் மனிதரும் விழித்துக்கொள்வார்.” இவ்வாறாகப் பதில் அளிக்கக் கூடியவர் சாதாரண மருத்துவரோ அல்லது அறுவை சிகிச்சையாளரோ மட்டுமல்லாது, மிக நுட்பமான அறிவும் ஆழ்ந்த நகைச்சுவை உணர்வும் கொண்டவரே ஆவார். அறுவை சிகிச்சையாளருக்கான திறன் அவருக்கு எந்தளவு இருந்ததோ, அதேயளவு ஆற்றல் அரசவை அமைச்சராகச் செயல்படுவதற்கும் அவரிடமிருந்தது. அதை அந்த மருத்துவரே உணர்ந்திருந்தது போல அவரை ஆழ்ந்து கவனிப்பவரும் உணரக்கூடும்.

பொதுவாக அனைத்து மேதைகளுக்கும் ஒழுக்கம் குறித்த உள்ளுணர்வு இருக்குமென நாம் அனுமானிக்கலாம். பிரத்யேகமான ஒரு துறையில் அந்த உள்ளுணர்வை அவர் பயன்படுத்தவும் கூடும். மனிதர்களைப் பொறுமையாக ஆழ்ந்து கவனிக்கக்கூடிய ஒருவர் டெஸ்ப்ளேனுடன் நெருங்கிப் பழக நேர்ந்தால், அவரது வரம்பற்ற போலிப் பகட்டுகளையும் நியாயப்படுத்தவே செய்வார். மலரைக் காண்கிற கண்கள் சூரியனையும் காணத்தானே வேண்டும்!

டெஸ்ப்ளேனது சமகாலத்தவர்களுக்கு அவரது வாழ்வு வெளிப்படுத்திய பல புதிர்களில் மிகுந்த ஆர்வமூட்டுகிற ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். ஏனெனில் அவருக்கு எதிராகக் கூறப்பட்ட மடத்தனமான குற்றச்சாட்டுகளில் பலவற்றுக்கான தீர்வுகளை இக்கதையின் முடிவில் உணர இயலும்.

டெஸ்ப்ளேனின் மருத்துவமனையில் பல மாணவர்கள் பயின்று வந்த போதிலும் அவர்களில் ஹோரெஸ் பியான்கனிடமே அவர் மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தார். ஹோட்டல் டியூவில்1 தங்கிப் பயிற்சி பெறுவதற்கு முன்னர் ஹோரெஸ் பியான்கன் மருத்துவ மாணவராக இருந்தபோது, லா மெய்ஸன் வாக்வர்2 என வழங்கப்படுகிற இலத்தீன் பகுதியில் மிக ஏழ்மையான சூழலில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். பாவப்பட்ட அந்த இளைஞர் அங்கு கொடுமையான வறுமையை அனுபவித்திருந்தார். அவ்வாறான வறுமை களங்கப்படுத்தவே இயலாத தூய்மையான பெரும் திறனாளிகளை வார்த்து வழங்குகிற உருக்கும் கலமாகத் திகழ்ந்தது. எத்தகைய அதிர்ச்சிகளையும் உடைபடாது தாங்கக்கூடிய வைரங்களைப் போன்று அவர்களும் வாழ்ந்து வந்தனர். கட்டற்ற பேரார்வம் பொங்கித் ததும்பியதால் அசைக்க முடியாத நேர்மை அவர்களிடம் காணப்பட்டது. ஆவல் மிகுந்திருப்பினும் அதனை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகமில்லை என்பதால் அவர்கள் நீடித்த உழைப்பில் ஆழ்ந்தனர். எனவே எத்தகைய துன்பங்களுக்கும் அவர்கள் பழகிவிட்டனர். இவை அனைத்து மேதைகளுக்கும் பொதுவான குணாதிசயங்களாகும்.

ஹோரெஸ் நேர்மையான இளைஞர். மேன்மையான காரியங்களில் ஈடுபடும்போது வஞ்சகமாகவோ ஏமாற்றும் விதமாகவோ செயல்படுவது அவருக்குச் சாத்தியமேயில்லை. சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுகிற சுபாவமுள்ளவர். நண்பர்களுக்காகத் தனது நேரத்தையும் தூக்கத்தையும் தியாகம் செய்யக்கூடியவர். தனது மேலங்கியைக்கூட அவர்களுக்காக அடமானம் வைக்கத் தயங்காதவர். சுருக்கமாகச் சொல்வதென்றால், கொடுப்பதை விடவும் அதிகமாகத் திரும்பக் கிடைக்குமா என்பதைப் பற்றிக் கவலைப்படாத நண்பர்களில் ஒருவர் ஹோரெஸ். கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அதிகமாகவே கிடைக்கும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பகட்டில்லாத அவரது நல்ல குணம் அவர் மீதான உள்ளார்ந்த மரியாதையை நண்பர்களிடத்தில் தோற்றுவித்திருந்தது. தவறு செய்தால் கடுமையாகக் கண்டிக்கிற அவரது போக்கினால் நண்பர்களில் பலர் அவரிடம் ஒருவித பய உணர்வு கொண்டிருந்தனர். ஆனால் ஹோரெஸ் இவ்வாறான நல்ல பண்புகளை எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியாகவே வெளிப்படுத்தினார்.

பிறருக்குப் புத்திமதி கூறுகையில் அதனை அழுத்தந்திருத்தமாக ஆணையிட்டு வலியுறுத்துவார். எனினும் அவர் தீவிரமான கட்டுப்பாடு உடையவரோ அல்லது அதைப் பிரசங்கிப்பவரோ அல்ல. சந்தர்ப்பம் வாய்க்கும்போது களிப்பூட்டும் நண்பர்களுடன் சேர்ந்து நல்ல உணவைச் சுவைத்து மகிழவும் செய்வார். தோழமையோடு பழகக்கூடியவர். எளிதில் முகம் சுழிக்காதவர். எதையும் நேரடியாக வெளிப்படையாகப் பேசிவிடுவார். மாலுமிகளின் வெளிப்படையான குணத்தைப்போல அல்ல. மேலும் தற்கால மாலுமிகள் சாதுர்யமான தந்திரசாலிகள், வஞ்சகம் நிறைந்தவர்கள். அவ்வாறின்றி வாழ்வில் ஒளிப்பதற்கு ஏதுமற்ற அற்புதமான இளைஞர் அவர். இதயத்தில் பாரமின்றித் தலைநிமிர்ந்து நடந்து செல்பவர்.

தனது வறுமையை மகிழ்ச்சியாக அவர் ஏற்றுக்கொண்டார். அதுவே மேன்மையான துணிவின் அடையாளமாகும். வசதிகள் ஏதும் இல்லாத பலரைப் போல இவரும் மிகச் சொற்பமாகவே கடன்பட்டிருந்தார். ஒட்டகம் போன்ற சாந்தமும், மானைப் போன்ற சுறுசுறுப்பும் கொண்டவர். தனது நடத்தையிலும் கொள்கையிலும் தடுமாற்றம் இல்லாதவர்.

புகழ்பெற்ற அறுவை சிகிச்சையாளரான டெஸ்ப்ளேன், பியான்கனின் நன்னடத்தையையும் தவறுகளையும் சீர்தூக்கிப் பார்த்து தனது பிரத்யேக அன்பிற்குரியவராக ஏற்றுக்கொண்ட நாளே அவரது வாழ்வின் மகிழ்ச்சியான காலகட்டம் தொடங்கிய நாளாகும். அதன் காரணமாக நண்பர்களிடத்திலும் இரட்டிப்பு மதிப்பு வாய்ந்தவரானார் மருத்துவர் ஹோரெஸ் பியான்கன். ஒரு மருத்துவப் பிரிவின் முதன்மையாளர் ஒரு இளைஞனைப் பிரத்யேக சீடராக ஏற்கும்போது, அந்த இளைஞனது வளமான எதிர்காலம் நிச்சயிக்கப்பட்டு விட்டதாகவே முடிவுசெய்து கொள்ளலாம்.

டெஸ்ப்ளேன் செல்வந்தர்களின் வீடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் தனது உதவியாளராக பியான்கனையும் அழைத்துச் செல்வார். அதனால் அந்த மாணவருக்கும் ஒரு தொகை கிடைக்கும் படியாக அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இவ்வாறாகப் புற நகரில் இருந்து வந்த அந்த இளம் பயிற்சியாளருக்குப் பாரிஸ் நகர மேன்மக்களது வாழ்வின் மர்மங்கள் புரிபடத் தொடங்கின.

அறுவை சிகிச்சை பற்றிய கலந்துரையாடலின் போதும் பியான்கன் தன் அருகிலேயே இருக்கும்படியாக டெஸ்ப்ளேன் பார்த்துக்கொள்வார். அப்போது ஏதேனும் ஒரு வேலையையும் அவருக்குத் தந்துவிடுவார். பணக்கார நோயாளி எவரேனும் ஸ்பா எனப்படும் ஆரோக்கிய நீராடலுக்குச் செல்ல வேண்டி இருந்தால் அவருக்குத் துணையாக பியான்கனை அனுப்பி வைப்பார். சுருக்கமாகச் சொல்வதென்றால் அவருக்கு எல்லாவிதமான பயிற்சிகளையும் அளித்து வந்தார். இதன் விளைவாக சிறிது காலத்திற்குப் பின்னர் அறுவை சிகிச்சையின் முடிசூடா மன்னருக்கு விசுவாசமான ஓர் அடிமை கிடைத்தார். இருவரும் ஆத்மார்த்தமான நண்பர்களாகிவிட்டனர். ஒருவர் தனது தொழிலில் தலைசிறந்தவராகவும் புகழேணியின் உச்சியில் பேரளவிலான செல்வச் செழிப்புடனும் நற்பெயருடனும் வாழ்பவர். மற்றொருவர் தன்னடக்கத்துடன் வாழ்வின் கடைநிலையில் இருப்பவர்; செல்வமோ புகழோ இல்லாதவர். இருப்பினும் மாமனிதரான டெஸ்ப்ளேன் தனது உதவியாளருக்கு அனைத்து நுணுக்கங்களையும் பயிற்றுவித்தார்.

குறிப்பிட்ட பெண்மணி தனது குருவின் அருகிலுள்ள ஆசனத்தில் அமர்ந்தாரா அல்லது அவர் உறங்கும் புகழ்பெற்ற அறுவை சிகிச்சைக்கான சாய்வுக்கட்டிலில் படுத்தாரா என்பதையும்கூட பியான்கன் அறிவார். சிங்கம் போன்றும் எருது போன்றும் தோற்றம் பெறுகிற அந்த மன எழுச்சியின் மர்மங்களைப் பியான்கன் அறிந்திருந்தார். அதன் விளைவாக அந்த மாமனிதரது மார்புப் பகுதி அசாதாரண வளர்ச்சியுற்று இதயம் விரிவடைந்த காரணத்தினால் அவர் மரணமும் அடைந்தார்.

டெஸ்ப்ளேனது பரபரப்பான வாழ்வின் விசித்திரங்களை அவரது மாணவரான பியான்கன் ஆழ்ந்து கவனித்தார். அற்பத்தனமான பேராசையுடன் கூடிய அவரது எதிர்காலத் திட்டங்கள், விஞ்ஞானியின் மறுபக்கத்தில் மறைந்துள்ள அரசியல்வாதிக்குரிய இலட்சியங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டார். மென்மையான அவரது இதயம் கடினமாகி விட்டிருந்தாலும் அதில் ஒளிந்திருந்த ஒரேயொரு நெகிழ்ச்சியான உணர்வையும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய ஏமாற்றத்தையும் பியான்கன் முன்கூட்டியே உணர்ந்தார்.

செயின்ட் யாக்வஸ் பகுதியில் வாழ்ந்து வருகிற தண்ணீர் விநியோகிக்கும் ஒரு பரம ஏழை சோர்வினாலும் தளர்ச்சியாலும் ஏற்பட்ட வியாதியால் நலிவுற்று வாடுகிறார் என்று பியான்கன் ஒருநாள் டெஸ்ப்ளேனிடம் தெரிவித்தார். 1821ல் கடுங்குளிர் வீசி அனைவரது உயிரையும் உலுக்கியபோது அந்த ஓவெர்ஞா வெறும் உருளைக்கிழங்கை மட்டுமே உண்டு பிழைத்திருந்தார். இந்தச் செய்தியைக் கேட்டதும் காத்திருந்த அனைத்து நோயாளிகளையும் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து அகன்றார் டெஸ்ப்ளேன். தனது குதிரை சாகக்கூடிய அபாயத்தையும் பொருட்படுத்தாது எந்தளவு விரைந்து செல்லும்படியாக அதனை விரட்ட முடியுமோ அந்தளவு விரைந்து சென்றார். பியான்கனும் அவருடன் சென்றார். நேரே அந்த ஏழையின் இல்லத்திற்குச் சென்ற அவர் தனது கைப்பட அந்த நோயாளியைத் தூக்கி ஃபாபூர்க் செயிண்ட் டெனிஸ் பகுதியிலுள்ள புகழ்பெற்ற டூபாய்ஸ் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்.

அவரது உடல்நலனில் டெஸ்ப்ளேன் ஆழ்ந்த கவனம் செலுத்தினார். அவர் நலமானதும் தண்ணீர் எடுத்துச்செல்ல ஒரு வண்டியும், அதனை ஓட்டிச்செல்வதற்கான குதிரையையும் விலைக்கு வாங்கிக்கொள்ளும்படியாகக் கூறி அதற்கான பணத்தையும் அவருக்குக் கொடுத்தார். அந்த ஓவெர்ஞாவிற்கு தனித்துவமான ஓர் அற்புத குணாதிசயம் இருந்ததால் அவர் மறக்க முடியாதவராய் ஆனார். ஒரு சமயம் அவரது நண்பர் ஒருவர் நோய்வாய்ப்பட்டார். உடனே அவரை டெஸ்ப்ளேனிடம் அழைத்துச் சென்று தனக்கு நன்கொடை அளித்த அவரிடம் சொன்னது, ‘வேறு எந்த மருத்துவரிடமும் செல்ல அவரை நான் அனுமதித்திருக்கவே மாட்டேன்.’ சிடுசிடுவென்று சீறுகிற தன்மையுடைய டெஸ்ப்ளேன் அந்தத் தண்ணீர் விநியோகிப்பவரின் கைகளைப் பிடித்துச் சொன்னது, ‘அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்.’

கேண்டல் பகுதியில் இருந்து வந்துசேர்ந்த அந்த உழவனை ஹோட்டல் டியூ என்கிற மாபெரும் மருத்துவமனையில் சேர்ப்பித்துப் பெரும் அக்கறையுடன் அவரைக் கவனித்துக்கொண்டார். தனது ஆசானுக்கு ஓவெர்ஞாக்களிடம் அதிலும் குறிப்பாகத் தண்ணீர் சுமந்து செல்பவர்களிடம் ஏதோ ஒரு வகையான தனி நாட்டம் உள்ளதை வெகுகாலமாகவே பியான்கன் கவனித்து வந்திருந்தார். ஆனால் ஹோட்டல் டியூவில் தங்கியிருந்த அனைத்து நோயாளிகளுக்கும் மிகுந்த கவனத்துடன் மருத்துவம் பார்ப்பதில் அவருக்கிருந்த அலாதியான பெருமையினால், எவ்வித விநோதமான வித்தியாசத்தையும் அந்த மாணவர் உணரவில்லை.

ஒரு நாள் பியான்கன் செயிண்ட் சல்பைஸ் என்கிற இடத்தைக் கடக்கும்போது, காலை சுமார் ஒன்பது மணியளவில் தனது ஆசான் தேவாலயத்திற்குள் நுழைவதைப் பார்த்தார். டெஸ்ப்ளேன் அக்காலகட்டத்தில் குதிரை வண்டியின்றி ஓர் அடிகூட எடுத்து வைத்தது கிடையாது. ஆனால் இப்போது கால்நடையாக டூ பெடி லயன் சாலையிலுள்ள கதவின் வழியாக, தகாத காரியங்கள் நடைபெறுகிற வீடு எனப் பிரபலம் ஆகியிருந்த ஓர் இடத்திற்குச் செல்வதுபோல அதனுள் நழுவிச் செல்வதைக் கண்டார். பியான்கனின் மனதில் இயற்கையாகவே பெரும் ஆர்வம் பொங்கியது. ஏனெனில் தனது ஆசானது அபிப்பிராயங்களை அவர் நன்றாக அறிந்திருந்தார். அவர் அரக்கத்தனமான நாத்திகர்.

பியான்கன் அத்தேவாலயத்தினுள் சென்று பார்த்தும் அதிர்ச்சி அடையவில்லை. ஒருபோதும் விண்ணுலக தேவதைகளுக்குக்கூட சற்றும் இரக்கம் காட்டாத தீவிர நாத்திகரான டெஸ்ப்ளேன் அங்கே மண்டியிட்டுப் பணிவுடன் திருப்பலிப் பூசையைக் கேட்டவாறிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும்படியான நோய் ஏதும் இருக்கவில்லை. வாய்வுத் தொல்லையோ சளித் தொந்தரவோகூட இல்லை. அச்சமேயின்றித் தெய்வங்களை ஏளனம் செய்கிறவர் எங்கு மண்டியிட்டு அமர்ந்திருந்தார்… கன்னிமேரியின் முன்பாக! அங்கிருந்தாவாறே பூசையைச் செவியுற்றார். அந்தச் சடங்கிற்குரிய செலவை ஏற்றார். ஏழைகளுக்குத் தானம் அளித்தார். எல்லாக் காரியங்களையும் அறுவை சிகிச்சை செய்வது போலவே நேர்த்தியாகப் பயபக்தியுடன் செய்தார்.

நிச்சயமாக மேரியின் பிறப்பைக் குறித்த கேள்விகளுக்கு விடை காண இங்கு வரவில்லை என்று எண்ணிய பியான்கன் எல்லையற்ற மலைப்பிற்குள்ளானார். கார்பஸ் கிறிஸ்டி சடங்கின்போது அலங்காரக் குஞ்சத்தைக் கைகளில் ஏந்தி நடந்து சென்றிருந்தால்கூட எள்ளி நகையாடுகிறார் என எண்ணி இருக்கலாம். ஆனால் இந்த நேரத்தில் தனியாக இங்கு வந்து யாரும் பார்க்காத வகையில் இவ்வாறு செய்வது ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுகிறதே என்று பியான்கன் தனக்குள்ளாக ஆலோசித்தார். ஹோட்டல் டியூவின் தலைமை அறுவை சிகிச்சையாளரை வேவு பார்ப்பது போலாகிவிடக்கூடாது என்ற எண்ணம் உதித்ததும் பியான்கன் அந்த இடத்திலிருந்து அகன்றார்.

தன்னுடன் சேர்ந்து உணவருந்தும்படியாக பியான்கனை தற்செயலாக அன்று டெஸ்ப்ளேன் அழைத்தார். ஆனால் வீட்டிற்கு அழைக்காமல் ஓர் உணவகத்துக்கு அழைத்திருந்தார். உண்டு முடிக்கும் தறுவாயில் பியான்கன் திறமையாக திருப்பலிப் பூசை சம்பந்தமாக உரையாடலை நகர்த்தி, அது போலி நாடகம் என்றும் கேலிக்கூத்து என்றும் கூறினார்.

‘கேலிக்கூத்தா!’ என்ற டெஸ்ப்ளேன், ‘அச்சடங்கின் காரணமாக நெப்போலியனது அனைத்துப் போர்களிலும் சிந்தப்பட்டதைவிடவும், பூர்சேஸிலுள்ள மொத்த அட்டைப்பூச்சிகள் குடித்ததைவிடவும் அதிக ரத்தத்தைக் கிறிஸ்துவம் குடித்துள்ளது. கார்பஸ் கிறிஸ்டி சடங்கை நிலைநாட்டுவதற்கு அந்தளவு குருதி வெள்ளம் பாய்ந்தோடியுள்ளது! ஹாக் எஸ்ட் கார்பஸை அடிப்படையாகக் கொண்டு போப் கண்டுபிடித்த அச்சடங்கு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னர் வழக்கத்தில் இருந்ததில்லை. அச்சடங்கை நிறுவுவதன் வாயிலாக ரோம் நீதிமன்றத்தின் வெற்றி உறுதியானது. அச்சடங்கின்போது தேவன் உண்மையாகவே இறங்கி வருகிறாரா என்பது குறித்த கோஷ்டிப் பூசலின் காரணமாக மூன்று நூற்றாண்டுகள் திருச்சபை போராட நேர்ந்தது. தாவ்லூஸ் பிரபுக்களுக்கும், அல்பி ஜெனிஸியர்களுக்கும் இடையே நிகழ்ந்த போர்கள் அப்பூசலின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தவையாகும். அல்பிஜெனிஸியர்களும்3 வாடோயிஸ்களும் அக்கண்டுபிடிப்பை ஏற்கவே மறுத்தனர்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் தனது நாத்திக ஏளனத்தைக் கட்டவிழுத்துவிட்டு டெஸ்ப்ளேன் அகமகிழ்ந்து காணப்பட்டார். வால்டேர் எள்ளி நகையாடுவது போல மதத்திற்கெதிரான நகைப்பிற்குரிய பல்வேறு விஷயங்களை வெள்ளமாகப் பொழிந்து தள்ளினார். துல்லியமாகக் கூறுவதென்றால் அச்சடங்கைக் கடுமையாகக் கேலி செய்தார்.

‘காலையில் நான் பார்த்த பக்திமான் எங்கே?’ என்று பியான்கன் தனக்குள்ளாகக் கேட்டுக்கொண்டார். ஆனால் அதுபற்றி அவரிடம் ஏதும் கேட்கவில்லை. செயிண்ட் சல்பைஸில் உண்மையாகவே இவரைத்தான் பார்த்தோமா என்ற சந்தேகமும் கொண்டார். பியான்கனிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் டெஸ்ப்ளேனிற்கு இல்லை. இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டிருந்தனர். இதுபோன்ற தீவிரமான பல விஷயங்களைக் குறித்துத் தமது கருத்துகளைப் பரிவர்த்தனை செய்துகொண்டிருந்தனர். டி நேச்சுரா ரேரம் என வழங்கப்படுகிற கோட்பாட்டையும், அதாவது இயற்கையில் காணப்படும் அனைத்துப் பொருட்களின் தன்மை பற்றியும் அதன் செயல்முறைகள் குறித்தும் வெளிப்படையாகக் கலந்துரையாடி உள்ளனர். அவநம்பிக்கை என்னும் கூர்மையான கத்தியால் அவற்றைத் துண்டாடி உள்ளனர்.

மூன்று மாதங்கள் கழிந்தன. செயிண்ட் சல்பைஸில் தான் கண்டது பியான்கனின் நினைவில் ஆழமாகப் பதிந்திருந்தாலும் அது பற்றிக் கேள்வி ஏதும் எழுப்பவில்லை. அதே வருடத்தில் ஒருநாள் ஹோட்டல் டியூவில் ஒரு மருத்துவர் கேள்வி கேட்கும் விதமாக டெஸ்ப்ளேனின் கையைப் பிடித்தார். இது பியான்கன் எதிரிலேயே நிகழ்ந்தது.

‘அன்பிற்குரிய முதன்மையாளரே! செயிண்ட் சல்பைஸிற்கு எதற்காகச் சென்றீர்கள்?’ என்று அவர் கேட்டார்.

‘மூட்டு வலியால் அவதிப்படுகிற ஒரு பாதிரியாரைப் பார்க்கச் சென்றேன். மேடம் லா டச்சஸ் அங்கோலிம் அவர்கள் என்னை சிபாரிசு செய்து கௌரவித்தார்’ என்றார் டெஸ்ப்ளேன்.

இந்த பதிலைக் கேட்டு அந்த மருத்துவர் திருப்தி அடைந்தார். ஆனால் பியான்கன் திருப்தி அடையவில்லை. ‘ஓ! மூட்டு வலியைக் குணப்படுத்தவா தேவாலயத்துக்குச் செல்கிறார்! அவர் பூசையில் பங்கேற்கத்தானே போகிறார்’ என்று அந்த மாணவர் தனக்குள்ளாக நினைத்துக்கொண்டார்.

டெஸ்ப்ளேனைக் கண்காணிக்க பியான்கன் முடிவுசெய்தார். எந்த நாளில், எந்த நேரத்தில் அவர் செயிண்ட் சல்பைஸிற்குள் நுழைந்து தன்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கினார் என்பதை நினைவுபடுத்திப் பார்த்தார். அடுத்த வருடத்தில் அதே நாளில், அதே நேரத்தில் அங்கு செல்வது என்றும் தீர்மானித்தார். அதே போல் மீண்டும் தன்னை ஆச்சரியப்படுத்துவாரா என்பதை அறியவும் ஆவல்கொண்டார். ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால், குறிப்பிட்ட நாளில் தொடர்ந்து செய்யப்படும் அந்த வழிபாடு விஞ்ஞான ரீதியான ஆய்விற்குரிய விஷயமாகிவிடும். ஏனெனில் இத்தகைய ஒரு மாமனிதரிடம் சொல்லுக்கும் செயலுக்கும் நேர் எதிரான முரண்பாடு இருக்கலாகாது.

அடுத்த வருடத்தின் அதே நாளில், அதே நேரத்தில் பியான்கன் டெஸ்ப்ளேனிடம் உதவியாளராக இல்லாதிருந்த போதிலும் அறுவை சிகிச்சையாளரது வண்டி ரூடி டூர்னன், ரூடி பெடி லயன் சந்திப்பின் ஓரத்தில் வந்து நிற்பதைக் கண்டார். நண்பர் அங்கிருந்து செயிண்ட் சல்பைஸின் சுவரோரமாக ஊர்ந்து செல்வது போல நடந்து சென்றார். மீண்டும் கன்னிமேரியின் பலிபீடத்திற்கு முன்பாக மண்டியிட்டுப் பூசையைச் செவியுற்றார். நிச்சயமாக அவர் டெஸ்ப்ளேன்தான். தலைமை அறுவை சிகிச்சையாளர் எப்போதும் மனப்பூர்வமாகத் தீவிர நாத்திகர். ஆனால் சில சமயங்களில் மட்டும் பக்திமான். இந்த நாடகத்தில் மேலும் அதிக ஈடுபாடு கொண்டார் பியான்கன்.

தேவாலயத்திலிருந்து டெஸ்ப்ளேன் சென்ற பின்னர், அந்தப் பிரத்யேக வழிபாட்டிற்குரிய இடத்தின் பாதுகாவலரிடம் பியான்கன் சென்று, ‘அந்தக் கனவான் தொடர்ந்து இங்கு வருகிறாரா?’ என்று கேட்டார்.

‘நான் இங்கு இருபது வருடங்களாக இருக்கிறேன்’ என்றார் அந்தத் திருக்கோயிலின் உபதேசியார். ‘ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை இந்தப் பூசைக்காக அவர் வந்துகொண்டிருக்கிறார். இதை ஏற்பாடு செய்தவரே அவர்தானே!’ என்றும் கூறினார்.

‘ஏற்பாடு செய்தவரே அவர்தானே!’ என்று திரும்ப முணுமுணுத்தபடியே பியான்கன் அங்கிருந்து அகன்றார். ‘தூய அன்னை என்பது எவ்வளவு மர்மமானதோ அதேயளவு இதுவும் மர்மமாகவே உள்ளது. அந்தக் கருத்தே அவரை நாத்திகராக்கிவிடுமே’ என்றெல்லாம் பியான்கன் எண்ணினார்.

டெஸ்ப்ளேனது ஆத்மார்த்தமான நண்பராக மருத்துவர் பியான்கன் இருந்த போதிலும், அவரது வாழ்வின் விந்தைக்குரிய அச்செயல் பற்றிக் கேட்பதற்கான சந்தர்ப்பம் சிறிது காலம் கழிந்த பின்னரே வாய்த்தது. ஏதேனும் ஒரு சமூக நிகழ்ச்சியிலோ, மருத்துவ ஆலோசனைக்காகவோ சந்திக்கும் போதும், தனிமையில் மனப்பூர்வமாகப் பேசுவதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இருவர் மட்டுமே கணப்பின் முன்பாகச் சாய்வுநாற்காலியில் அமர்ந்து ரகசியங்களைப் பரிமாறிக்கொள்ளும்படியான சூழல் கூடி வரவில்லை.

1830ம் ஆண்டில் நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர், பேராயருக்கு எதிராக மக்கள் வெள்ளமெனத் திரண்டெழுந்தனர். குடியரசுக் கருத்துகளால் மக்கள் கிளர்ச்சியுற்றனர். தெருக்கள் வன்முறையும் அவநம்பிக்கையும் இணைந்து தாண்டவமாடின. அப்போது ஊர் முழுக்கத் தங்கநிறச் சிலுவைகளைப் பிளந்து நொறுக்கிய போது, பெரும் கடலைப் போன்று பரந்திருந்த வீடுகளில் அவை மின்னலைப் போன்று பிரகாசித்தன.

இறுதியில் ஏழு வருடங்களுக்குப் பிறகு பியான்கன் செயிண்ட் சல்பைஸிற்குள் நுழைந்து டெஸ்ப்ளேனை ஆச்சரியப்படுத்தினார். அறுவை சிகிச்சையாளர் அவரைப் பின்தொடர்ந்து சென்று அருகில் அமர்ந்தார். ஆனால் ஆச்சரியமோ அதற்கான அறிகுறியையோ சிறிதேனும் அவர் வெளிப்படுத்தவில்லை. ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூசையை இருவருமே கேட்டனர்.

அவர்களிருவரும் தேவாலயத்தை விட்டு வெளியே வந்ததும் பியான்கன் டெஸ்ப்ளேனிடம், ‘நண்பரே! இவ்வாறான பக்தியை வெளிப்படுத்தியதற்கான காரணம் என்னவென்று எனக்குச் சொல்வீர்களா?’ என்று கேட்டார். ‘ஏற்கெனவே மூன்று முறை நீங்கள் பூசையில் கலந்துகொண்டதைப் பார்த்திருக்கிறேன். நீங்களா இப்படிச் செய்கிறீர்கள்? இந்த மர்மமான செயலுக்குரிய காரணத்தை எனக்குக் கண்டிப்பாக நீங்கள் தெரிவிக்க வேண்டும். உங்களது அபிப்பிராயங்களுக்கும் நடத்தைக்குமிடையே வெளிப்படையாகக் காணக்கூடிய இந்த முரண்பாட்டிற்கான விளக்கத்தையும் எனக்குத் தர வேண்டும். நீங்கள் கடவுள் நம்பிக்கையற்றவர். இருப்பினும் பூசைக்குச் செல்கிறீர்கள். எனது அன்பார்ந்த தலைமையாளராகிய நீங்கள் இதற்குப் பதிலளிக்கத்தான் வேண்டும்.’

‘நானும் பெரும்பாலான பக்திமான்களைப் போலத்தான். ஆழ்ந்த பக்தி உள்ளதைப் போலத் தற்போது காணப்பட்டாலும் உள்ளூர நாத்திகராகவே இருக்கக்கூடும். நீயும் நானும் போல’ என்றார் டெஸ்ப்ளேன். மேலும் அரசியல் பிரமுகர்களது சாதுர்யமான வாசகங்கள் பலவற்றை அருவியாகப் பொழிந்தார். இந்த நாற்றாண்டில் வெளியாகியுள்ள மோலியர் டார்டூஃபின் புதிய பதிப்பு அந்த அரசியல் பிரமுகர்களில் பல முக்கியஸ்தர்களது வாசகங்களை நமக்கு வழங்கியுள்ளது.

‘நான் அவற்றைக் குறித்து உங்களிடம் பேசவில்லை’ என்றார் பியான்கன். ‘இங்கு நீங்கள் செய்து வருகிற காரியத்திற்கான காரணமென்ன? இந்தப் பிரத்யேக பூசையை எதற்காக நீங்கள் ஏற்பாடு செய்துள்ளீர்கள்?’

‘நல்லது எனதினிய நண்பரே!’ என்றார் டெஸ்ப்ளேன். ‘கல்லறையின் விளிம்பில் உள்ள நான் எனது வாழ்வின் தொடக்கத்தைக் குறித்து உங்களிடம் வெளிப்படையாகச் சொல்வதற்கு எவ்விதத் தடையும் இருப்பதாகத் தோன்றவில்லை.’

அத்தருணத்தில் பியான்கனும் அந்த மாமனிதரும் ரூ டெஸ் குவார்ட்டர்- வெண்டஸ் என்கிற பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தனர். அது பாரிஸ் நகரிலேயே மிகவும் மோசமான, ஏழ்மை நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும். அங்கிருந்த வீடுகளில் ஒன்றின் ஆறாவது மாடியை டெஸ்ப்ளேன் சுட்டிக்காட்டினார். அந்த வீடுகள் சதுர வடிவிலும் மேற்புறம் கூம்பாகவும் இருக்கும். கதவு நடுத்தரமான அளவிலும் அதைத் திறந்ததும் ஒரு நடைபாதையும் காணப்படும். அந்த நடைபாதை முடியும் இடத்தில் சுழல் மாடிப்படிகள் உள்ளன. ஜோர்ஸ் டி சூஃப்ரென்ஸ் என வழங்கப்படுகிற அத்துளைகளின் வழியாகப் படிகளுக்கு வெளிச்சம் கிடைக்கும். அவர் சுட்டிக்காட்டிய வீடு பச்சை நிறத்தில் இருந்தது. கீழ்த்தளத்தில் மரச்சாமான்கள் விற்பனை செய்பவர் வசித்து வந்தார். அங்குள்ள ஒவ்வொரு தளத்திலும் வித்தியாசமான வறுமை வசித்து வருவதைப் போலத் தோன்றியது.

உணர்ச்சிகரமாகத் தனது கையை உயர்த்தி அழுத்தமான சைகையைக் காட்டிய டெஸ்ப்ளேன், ‘இங்கு நான் இரண்டு வருடங்கள் வாழ்ந்திருந்தேன்’ என்று பியான்கனிடம் கூறினார்.

‘எனக்கிந்த இடம் நன்றாகத் தெரியும். டி ஆர்தெஸ் இங்குதான் வசித்தார். சிறு வயதில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நான் இங்கு வந்ததுண்டு. அப்போது நாங்கள் இப்பகுதியைப் பெரிய மனிதர்கள் தங்கியுள்ள ஜாகை என்றே குறிப்பிடுவோம். சரி அதனால் என்ன?’ என்றார் பியான்கன்.

‘டி ஆர்தெஸ் வாழ்ந்திருந்ததாக இப்போது நீங்கள் தெரிவித்த இதே இருப்பிடத்தின் மேல் மாடியிலுள்ள சிறு அறையில் நான் வசித்தபோது நடந்த சில சம்பவங்களுக்கும் தற்போது நான் கேட்ட பூசைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அந்தப் பூந்தொட்டிக்கு மேலே துணிகள் உலர்வதற்கான கொடிக்கயிறு தொங்கிக்கொண்டிருக்கிறதே அங்குதான் எனது இருப்பிடம் இருந்தது. எனதினிய பியான்கன், எனது வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் நான் பெரும் கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். பாரிஸில் கொடுமையான வறுமையின் துயரங்களை அனுபவித்த எந்த ஒரு மனிதரிடமும் நான் அனுபவித்த துயரங்களுக்கு அவை ஈடாகாது என்று என்னால் விவாதித்து வெல்ல முடியும். பசி, தாகம், கையில் பணமில்லாத நிலை, அணிவதற்குச் சீரான மேலங்கி, காலணி எதுவுமேயின்றி வறுமை வழங்குகிற அனைத்துத் துயரங்களையும் அளவிற்கதிகமாக அனுபவித்திருக்கிறேன். இந்த ஜாகையில் குளிரினால் உறைந்துபோன எனது விரல்களை ஊதி ஊதிச் சூடேற்றி இருக்கிறேன். உங்களோடு திரும்பவும் ஒருமுறை சென்று நான் வாழ்ந்த அந்த இருப்பிடத்தைப் பார்க்கவும் விரும்புகிறேன்.’

‘ஒரு குளிர்காலத்தில் நான் வேலையில் ஆழ்ந்திருந்தபோது, எனது தலையைச் சுற்றிலும் ஆவி சூழ்ந்திருப்பதை உணர்ந்தேன். உறைபனிக் குளிரில் குதிரையின் சுவாசம் போல எனது மூச்சுக் காற்றே அடர்ந்து வெளியேறி மேகம் போன்றிருந்தது. வாழ்வை அவ்வாறாகத் தாங்கிக்கொள்வதற்கான ஆற்றல் ஒரு மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. உதவுவதற்கு யாருமின்றி நான் தனியாக இருந்தேன். எனது மருத்துவப் படிப்பிற்குப் பணம் கட்டவும் புத்தகங்கள் வாங்கவும்கூடப் போதிய பணமில்லை. எனக்கு நண்பர்களும் இல்லை. எளிதில் உணர்ச்சி வசப்படுகிற, எரிச்சல் அடைகிற அமைதியற்ற எனது சுபாவத்தினாலும் எனக்கு எந்த நன்மையும் விளையவில்லை. சமூக ஏணியின் கீழ் தளத்திலிருந்து மேலே ஏறுவதற்காக அரும்பாடுபடுகிற எனது கடும் உழைப்பும் கஷ்டங்களுமே அவ்வாறான சுபாவத்திற்குக் காரணம் என்பதையும் யாரும் உணரவில்லை.’

‘உங்களிடம் நான் போலியாக நடிக்க வேண்டிய அவசியமில்லை. மென்மையான குணமும் ஆழ்ந்த நுட்பமான உணர்வும் அடிப்படையில் எனக்கிருந்தன. நீண்ட காலமாக வறுமையின் பிடியில் சிக்கி இருப்பவர்கள் எத்தகைய உயர்ந்த சிகரத்தையும் அடைவதற்குரிய வலிமையைப் பெறுவதற்கான அதிகாரத்தையும் உரிமையையும் அத்தகைய பண்புகள்தான் வழங்கும். இதை நான் உறுதியாக உங்களுக்குக் கூற முடியும்.

‘எனது வீட்டிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் கிடைத்து வந்த சொற்பத் தொகை போதுமானதல்ல. அவர்களிடமிருந்து அதிகமாகக் கிடைக்கவும் வாய்ப்பில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால் எனது வாழ்வின் அக்காலகட்டத்தில் காலை வேளைகளில் ஒரேயொரு வட்டவடிவிலான ரொட்டித் துண்டு மட்டுமே உண்ணக் கிடைக்கும். டூ பெடி லயன் வீதியிலுள்ள ரொட்டி சுடுபவர் அதைக் குறைந்த விலையில் எனக்குத் தருவார். ஏனெனில் அது முந்தைய நாள் அல்லது அதற்கும் முந்தைய நாளில் சுட்டதாக இருக்கும். அதைப் பாலில் கரைத்து விழுங்கிவிடுவேன். எனவே எனது காலை உணவிற்கான செலவு இரண்டு காசுகள் மட்டுமே. தங்கும் விடுதியில் ஒருநாள் விட்டு ஒருநாள் மதிய உணவைச் சாப்பிடுவேன். அதன் விலை பதினாறு காசுகள். இவ்விதமாக ஒரு நாளைக்கு ஒன்பது காசுகள் மட்டுமே செலவு செய்வேன். தவிர எனது ஆடைகளையும் காலணிகளையும் கவனமாகப் பராமரித்துக்கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரிந்தது போல உங்களுக்கும் தெரிந்திருக்கும். பிற்கால வாழ்வில் உடன் வேலை செய்பவரின் தைக்கப்படாத காலணி பல் இளித்தாலும் அல்லது மேலங்கியின் தோள் பகுதி கிழியும் சத்தத்தைக் கேட்க நேர்ந்தாலும் நீங்களும் நானும் முகம் சுழிப்பதில்லை என்றே எண்ணுகிறேன்.

‘அப்போதெல்லாம் நான் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தினேன். உணவகங்கள் மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்திருந்தேன். ஜாப்பிஸ் உணவகம் எண்ணிப் பார்க்கவே இயலாத சொர்க்கம் போலவும், லத்தீன் பகுதியில் வாழ்கிறவர்களில் லூசிலி மட்டுமே அங்கு வாடிக்கையாளராக இருக்க முடியும் என்றும் தோன்றும். என்றாவது ஒருநாள் அங்கு சென்று ஒரு கோப்பை காபியாவது நம்மால் குடிக்க முடியுமா, அல்லது அங்கு அமர்ந்து டொமினோஸ் ஆட முடியுமா என்றெல்லாம் சில வேளைகளில் நான் எண்ணியதுண்டு.

‘சுருக்கமாகச் சொல்வதென்றால் வறுமை எனக்குள் திணித்த வெறியை நான் உழைப்பின் மீது செலுத்தினேன். விஞ்ஞான அறிவில் தலைசிறந்தவனாகக் கடும் முயற்சி செய்தேன். எனவே இருண்ட வாழ்விலிருந்து வெளிச்சத்துக்கு வரும்போது மேன்மையான இடத்தை அடைவதற்குரிய சொந்தத் தகுதியைப் பெருமளவு உயர்த்திக்கொள்ள எண்ணினேன். விடாமுயற்சியுடன் விழித்திருந்து படிப்பதற்கான விளக்கு வெளிச்சத்திற்குத் தேவைப்படுகிற எண்ணெய்க்கு உணவை விடவும் அதிகமாகச் செலவழித்தேன். எனது போராட்டம் நீண்டதாகவும் கடினமாகவும் ஓயாததாகவும் இருந்தது.

‘என்னைச் சுற்றியிருந்தவர்களிடம் எவ்வித நட்புணர்வையும் நான் தோற்றுவிக்கவில்லை. நண்பர்களாகப் பழகுவதற்கு நம்மைவிடவும் வயதில் குறைந்தவர்களிடம் அன்னியோன்யமாகப் பழக வேண்டும். நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். எனவே அவர்களோடு சேர்ந்து குடிக்கலாம். எங்கெல்லாம் மாணவர்கள் செல்கிறார்களோ அங்கெல்லாம் நானும் போகலாம். என்னிடம் எதுவுமே இல்லை. எதுவுமில்லை எனும்போது எந்தவொன்றும் அறவேயில்லை என்பதைப் பாரிஸ் நகரில் உள்ள எவருமே உணர்வதில்லை. எனது ஏழ்மையை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் நேரும்போது உணர்ச்சிக் கொந்தளிப்பினால் நடுக்கமுற்று, பதற்றமுற்று தொண்டை அடைத்துப் போகும். காண்பவர்களுக்கு அடிவயிற்றிலிருந்து உணவுக்குழாய் வழியாக ஒரு பந்து மேலேறிக் குரல் வளையை அடைப்பது போலத் தோன்றும்.

‘செல்வந்தர்களாகப் பிறந்த, எதற்குமே எந்தக் குறைவும் இல்லாத மக்களைப் பிற்காலத்தில் சந்தித்தேன். அவர்கள் எந்தப் பிரச்சினை பற்றியும் ஒன்றுமே அறியாதவர்கள். அந்தப் பகட்டான முட்டாள்கள் என்னிடம், ‘ஏன் கடனாளி ஆனாய்? நெருக்கடியான கடமைகளை ஏன் ஏற்றுக்கொண்டாய்?’ என்று கேட்டிருக்கின்றனர். ஓர் இளவரசி தனது குடிமக்கள் பசிக்கொடுமையால் மரிக்கின்றனர் என்பதைக் கேள்விப்பட்டபோது, ‘அவர்கள் ஏன் கேக்குகளை வாங்கி சாப்பிடக்கூடாது?’ என்று கேட்ட சம்பவமே அப்போது எனது ஞாபகத்திற்கு வந்தது.

‘இப்போதும் அத்தகைய பணக்காரர்களில் ஒருவரைச் சந்திக்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நான் பெரும் பணம் வசூலிப்பதாக அவர் புகார்செய்து புலம்ப வேண்டும். பாரிஸ் நகரில், தனிமையில், கையில் ஒரு காசுமின்றி, நண்பரின்றி, கடன் தருபவர் யாருமின்றி, உயிர் வாழ்வதற்கு இரு கைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழலில் நான் என்ன செய்ய முடியும்? எங்கு எவ்வாறு என் பசியை நான் போக்கிக்கொள்வது?

‘எனதினிய பியான்கன், சில வேளைகளில் நான் கசப்புடனும் கடினமாகவும் இருப்பதை நீங்கள் கண்டிருந்தால் அதற்குக் காரணம் எனது ஆரம்பகாலத் துயரங்களை அவர்கள் மீது சுமத்துகிறேன் என்றேயாகும். மேல்தட்டு மக்களது சுயநலம், அவர்களது பச்சாதாபமற்ற உணர்வு ஆகியவற்றை நான் பெருமளவு அனுபவித்திருக்கிறேன். அவற்றைக் குறித்து ஆயிரக்கணக்கான உதாரணங்களை என்னால் எடுத்துக்காட்ட இயலும், அல்லது வெற்றிக்கும் எனக்குமிடையே தடையாக அமைந்த பொறாமை, வெறுப்பு, அவதூறுகள் ஆகியன நினைவிற்கு வரும்போதும் நான் கடுமையாக நடந்துகொண்டிருக்கக்கூடும்.

‘பாரிஸ் நகரில் குதிரையின் லகானைப் பிடித்து முன்னேறிச் செல்வதற்கு நீங்கள் தயாராக இருப்பதைக் கண்டவுடனே, உங்களது அங்கியைப் பிடித்துப் பின்னுக்கு இழுப்பதற்கென்றே குறிப்பிட்ட சிலர் இருக்கின்றனர். வேறு சிலரோ உங்களது இருக்கையின் முடிச்சைத் தளர்த்திவிட்டு நீங்கள் கீழே விழுந்து மண்டை உடைபடுவதை இரசிக்கக் கூடியவர்கள். ஒருவர் குதிரையின் குளம்பைப் பிடுங்கிவிடுவார். மற்றொருவர் உங்களது சாட்டையைத் திருடிவிடுவார். நேர் எதிரே துப்பாக்கியுடன் வந்து சுட்டுக் கொல்பவர், மிகக் குறைந்த அளவு நயவஞ்சகமானவர் என்று உறுதியாகக் கூறலாம்.

‘எனதினிய அன்பரே! நடுத்தட்டு மேல்தட்டிற்கு எதிராக நிகழ்த்தி வருகிற முடிவேயற்ற போரை வெகு சீக்கிரமாக நீங்களும் எதிர்கொள்வீர்கள். அதற்குப் போதுமான திறமையும் உங்களிடம் உள்ளது. ஒரு மாலையில் நீங்கள் இருபத்தைந்து லூயிகளை இழந்தால், உங்களது நெருங்கிய நண்பர்கள் உங்களைச் சூதாடி எனக் குற்றம்சாட்டி, நீங்கள் இருபத்தைந்தாயிரம் ஃப்ராங்குகள் இழந்ததாக அறிவிப்பார்கள். உங்களுக்குத் தலை வலித்தால், பைத்தியம் பிடித்துவிட்டதெனக் கெக்கலிப்பார்கள். ஒருமுறை நீங்கள் கோபித்தால், சமூக வாழ்விற்குப் பொருந்தாதவர் என்று கூக்குரலிடுவார்கள்.

‘இவ்வாறான சிறுமைத்தனம் நிறைந்த கூட்டத்தினரை எதிர்க்க உங்களது மேன்மையான சக்தி அனைத்தையும் ஒருங்கே திரட்டினால், நீங்களே அனைவரையும் விழுங்க எண்ணுவதாக நெருங்கிய நண்பர்களே முழக்கமிடுவார்கள். பிறரைவிடவும் மேலானவராக எண்ணிக்கொள்கிற கர்வி என்றும், அதிகாரத்தால் ஆதிக்கம் செலுத்துபவர் என்றும் வலியுறுத்துவார்கள். சுருங்கச் சொல்வதென்றால், உங்களது நல்ல குணங்களைக் குறைகளாகவும், குறைகளை ஒழுக்கக்கேடாகவும், நல்ல பண்புகளையும்கூட குற்றங்களாகவும் மாற்றிவிடுவார்கள். ஒருவரைக் காப்பாற்றி இருந்தால், அவரைக் கொன்றுவிட்டதாகக் கூறுவார்கள். உங்களது நோயாளி ஆரோக்கியமாக நடமாடி வந்தால், நிகழ்காலத்திற்காக எதிர்காலத்தைப் பலி கொடுத்துவிட்டதாகக் குறிப்பிடுவார்கள். அவர் மரிக்கவில்லை என்றால் விரைவில் மரித்துவிடுவார் என்பார்கள். அவர்களை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டத்தில் சிறிது தயக்கம் காட்டினாலும் உங்களைத் தொலைத்துவிடுவார்கள்.

‘ஏதேனும் சுயமாகக் கண்டுபிடித்து அதற்குரிய சன்மானத்தைக் கோரினால், ஏமாற்றுப் பேர்வழி என்பார்கள். அவரோடு பெருந்தொல்லை, இளைஞர்களின் வளர்ச்சிப் பாதையில் குறுக்கிடுகிறார் என்றெல்லாம் குற்றம் சாட்டுவார்கள். எனவே எனதினிய அன்பரே! கடவுள் மீது எனக்கு நம்பிக்கை அறவே இல்லை என்றால், அதையும்விட குறைந்த அளவிலேயே மனிதர்களை நான் நம்புகிறேன். டெஸ்ப்ளேன் குறித்து அனைவரும் குறை கூறிப் பேசுகின்றனர். இருப்பினும் அதே டெஸ்ப்ளேன் வேறுவிதமாக உங்களுக்குத் தோன்றுகிறார் இல்லையா? ஆனால் இந்தக் குப்பைக்கூளங்களை எல்லாம் நாம் இப்போது கிளற வேண்டாம்.

‘நல்லது! இந்த வீட்டில்தான் நான் வசித்திருந்தேன். முதல் பரிட்சையில் வெற்றி அடைவதற்கான முயற்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தேன். கையில் ஒரு சல்லிக்காசும் இல்லை. தீவிரமான வறுமைச் சூழலில் சிக்கியுள்ள ஒருவர் ராணுவத்தில் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று எண்ணுவார் என்பதை நீங்களே அறிந்திருப்பீர்கள். நானும் அத்தகைய இக்கட்டான சூழலில் இருந்தேன். ஒரேயொரு நம்பிக்கை எனக்கிருந்தது. ஒரு பெட்டி நிறைய லினன் துணிமணிகள் எனது வீட்டிலிருந்து வரப்போவதை எதிர்பார்த்திருந்தேன். எனது வயதான அத்தைகள் அனுப்பி வைத்த பரிசு அது. அவர்களுக்கெல்லாம் பாரிஸ் நகரைப் பற்றி ஏதும் தெரியாது. அவர்கள் சட்டையைக் குறித்துத்தான் சிந்திக்கின்றனர். மாதம் முப்பது ஃப்ராங்குகளை வைத்துக்கொண்டு நான் இங்கு கேவியர் போன்ற விலையுயர்ந்த உணவு வகைகளை உண்டு வாழ்வதாகக் கற்பனை செய்துகொள்கின்றனர்.

‘பாடசாலையில் நான் இருக்கும்போது அந்தப் பெட்டி வந்துசேர்ந்தது. அதைக் கொண்டுவருவதற்கான வண்டிச்செலவு நாற்பது ஃப்ராங்குகள். மாடியிலுள்ள ஒரு அறையில் தங்கியிருந்த செருப்புத் தைக்கும் ஜெர்மன் காவலாளி அந்தப் பணத்தைச் செலுத்திப் பெட்டியை வாங்கிவைத்திருந்தார். அன்றுமாலை நான் டெஸ் ஃபாஸஸ் – செயிண்ட் – ஜெர்மேன் – டெஸ் பிரஸ் வீதியிலும் டி லிகோல் – டி – மெடிசின் வீதியிலும் நடந்தவாறு இருந்தேன். ஆனால் நாற்பது ஃப்ராங்குகளைத் தராமல் அந்தப் பெட்டியைக் கையகப்படுத்துவதற்கான திட்டம் ஏதும் எனக்குப் புலனாகவில்லை. அதிலுள்ள துணிகளை விற்றால் அந்தப் பணத்தைச் சுலபமாகக் கொடுத்துவிடலாம். அப்போதுதான் அறுவை சிகிச்சையைத் தவிர வேறு எதற்குமே நான் இலாயக்கற்றவன் என்பதை எனது முட்டாள்தனம் எனக்கு உணர்த்தியது.

‘எனதினிய அன்பரே! நுட்பமான மனிதர்களின் திறன் மிக உயர்ந்த தளத்திலேயே இயங்கும். சமயோசிதமாகச் சிந்திக்கக் கூடியவர்களே சதியாலோசனையில் தேர்ந்தவர்கள். அவர்களே திட்டமிடும் திறன் உடையவர்கள். அத்திறன் நுட்பமான மனிதர்களுக்கு வாய்க்காத ஒன்று. அவர்களது மேதமை அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கக்கூடிய வாய்ப்பில்தான் உள்ளது. அவர்கள் வாய்ப்புகளை நாடுவதில்லை. அது தற்செயலாக அவர்களுக்குக் கிட்டுகிறது.

இரவில்தான் நான் வீடு திரும்பினேன். அதே சமயத்தில்தான் எனது பக்கத்து அறையில் வசிக்கும் தண்ணீர் சுமப்பவரும் வந்துகொண்டிருந்தார். அவரது பெயர் பூர்கே, செயிண்ட்-ஃப்ளோரில் இருந்து வந்தவர். அவரும் வீட்டிற்குத்தான் சென்றுகொண்டிருந்தார். ஒரே தளத்தில் குடியிருக்கும் இருவர் எந்தளவு பரிச்சயம் கொண்டிருப்பார்களோ அந்தளவில்தான் ஒருவருக்கொருவர் நாங்கள் அறிமுகமாகி இருந்தோம். இருவருமே அடுத்தவர் உடை அணிவதை, தூங்குவதை, இருமுவதைப் பார்த்தும் கேட்டும் உள்ளதன் காரணமாக இறுதியில் ஒருவருக்கொருவர் பழக்கமாகி விட்டிருந்தோம். வீட்டின் சொந்தக்காரர் என்னை வெளியேற்றி விட்டதாகவும், அடுத்தநாள் நான் வீட்டைக் காலிசெய்ய வேண்டும் என்று உத்திரவிட்டிருப்பதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். அப்போது மூன்று மாதங்களுக்கான வாடகைப் பணம் நான் தர வேண்டியிருந்தது. தான் செய்யும் தொழிலின் காரணமாகத் தன்னையும் வீட்டைக் காலி செய்யும்படியாகக் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வாழ்வின் மிகத் துயரமான அந்த இரவை நான் எப்படியோ கழித்தேன். எனது பாவப்பட்ட தட்டுமுட்டுச் சாமான்களையும் புத்தகங்களையும் அங்கிருந்து சுமந்து செல்லக் கூடியவரை எங்கு போய்த் தேடுவேன்? யாரேனும் கிடைத்தாலும் அவருக்கும், எனது பெட்டியை வைத்துள்ள காவலாளிக்கும் எப்படி பணம் கொடுப்பேன்? தங்குவதற்கு வேறு எங்கு போவேன்? பதிலளிக்க முடியாத இதே கேள்விகளையே கண்ணீரின் ஊடாகத் திரும்பத் திரும்ப என்னையே நான் கேட்டவாறிருந்தேன். சித்தம் கலங்கியவன் ஒரே பல்லவியை மீண்டும் மீண்டும் ஒப்பிப்பதைப் போல அவற்றையெல்லாம் எண்ணியபடியே உறங்கிவிட்டேன். ஏழ்மைக்கே உரித்தான சில அனுகூலங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சுகமான கனவுகளுடன் கூடிய உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

அடுத்த நாள் காலை பழைய ரொட்டித் துண்டையும் பாலையும் அருந்தும் வேளையில் பூர்கே என் அறைக்குள் வந்தார். தனது மோசமான ஃப்ரெஞ்ச் உச்சரிப்பில், “இனிய மாணாக்கரே! நான் ஒரு ஏழை மனிதன். செயிண்ட்-ஃப்ளோர் மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட அநாதை. எனக்குத் தாயோ தந்தையோ இல்லை. யாரையும் மணந்துகொள்ளுமளவு எனக்கு வசதியும் இல்லை. உனக்கும் இங்கு எந்த உறவினர்களும் இல்லை. ஒரு மணி நேரத்திற்கு இரண்டு காசுகள் தருவதாகப் பேசி ஒரு கை வண்டியை வாடகைக்கு எடுத்துக் கீழே நிறுத்தியிருக்கிறேன். நமது அனைத்து சாமான்களையும் எடுத்துக்கொள்வோம். உனக்குச் சம்மதமானால் நாம் இருவரும் சேர்ந்து வேறொரு இடம் பார்ப்போம். நம்மைத்தான் வெளியேறச் சொல்லிவிட்டார்களே. மேலும் இந்த இடம் அப்படி ஒன்றும் பூலோக சொர்க்கமும் இல்லையே.”

“பூர்கே! எனதினிய அன்பரே! எனக்கும்கூட அது தெரிந்ததுதான்” என்று நான் பதிலளித்தேன். “ஆனால் எனக்கு ஒரு சிக்கல் உள்ளது. நூறு க்ரௌன்கள் பெறுமானமுள்ள லினன் துணிகள் அடங்கிய எனது பெட்டி கீழே உள்ளது. அதிலுள்ளதை விற்று வீட்டுக்காரருக்கும் காவலாளிக்கும் என்னால் பணம் தந்துவிட இயலும். ஆனால் இப்போது என்னிடம் நூறு காசுகள்கூட இல்லை .”

“அது பற்றிப் பரவாயில்லை. என்னிடம் கொஞ்சம் பணம் உள்ளது” என்று குதூகலமாகப் பதிலளித்த பூர்கே அழுக்கடைந்த பழைய தோல் பணப்பையை என்னிடம் காட்டினார். “உனது லினன்களை நீயே வைத்துக்கொள்” என்றார்.

எனது மூன்று மாத வாடகை, அவரது வாடகை, காவலாளிக்குத் தர வேண்டிய பணம் என மொத்தக் கணக்கையும் தீர்த்தார் பூர்கே. எங்களது தட்டுமுட்டுச் சாமான்களையும், எனது லினன் துணிகள் அடங்கிய பெட்டியையும் அந்தக் கைவண்டியில் வைத்துத் தெருத்தெருவாக இழுத்துச் சென்றார். இது வாடகைக்காக என்ற அறிவிப்புப் பலகை தொங்குகிற ஒவ்வொரு வீட்டின் முன்பும் நிறுத்தினார். உள்ளே சென்று எங்கள் இருவருக்கும் அது ஒத்து வருமா என்று பார்த்து வருவதுதான் என்னுடைய வேலை. நண்பகல் வரை இலத்தீன் பகுதியைச் சுற்றி வந்தபடியே இருந்தோம். எந்த வீடும் கிடைக்கவில்லை. வாடகைத் தொகைதான் மிகவும் கஷ்டப்படுத்தியது.

மதிய உணவை இங்கு அருந்துவோம் என்று பூர்கே ஒரு மதுபான விற்பனைக் கடையைக் காட்டித் தெரிவித்தார். கதவருகே எங்களது கைவண்டியை நிறுத்தி வைத்துவிட்டுச் சாப்பிட்டோம். மாலை நெருங்குகிற போது கூர் டி ரோஹன் பகுதியில் பேசேஜ் டூ காமர்ஸில் ஒரு வீட்டை நான் கண்டுபிடித்தேன். அது இரண்டு அறைகளைக் கொண்டிருந்தது. வீட்டின் மேல்தளத்திலிருந்த அறையையும் மற்றொரு அறையையும் மாடிப்படிகள் பிரித்தன. ஒவ்வொரு அறைக்குமான வாடகை ஆண்டிற்கு அறுபது ஃப்ராங்குகள். எளிமையான எனது நண்பரும் நானும் இறுதியாக இந்த வீட்டைக் கண்டடைந்தோம். அன்றைய இரவு உணவையும் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டோம்.

‘பூர்கேவின் வருமானம் ஒரு நாளைக்கு ஐம்பது காசுகள். அவரிடம் நூறு க்ரௌன்கள் இருந்தன. தண்ணீர் எடுத்துச் செல்வதற்கான வண்டியும் ஒரு குதிரையும் வாங்கிவிடும் அவரது இலட்சியத்தை நெருங்கியிருந்தார் அவர். எனது சூழலைப் புரிந்துகொண்டதும், தனது வாழ்வின் இலட்சியத்தையே எனக்காகச் சில காலம் விட்டுக்கொடுக்க முன்வந்தார். இயற்கையாக அமைந்திருந்த அவரது நல்ல குணத்தினாலும், சூட்சுமமான தந்திரத்தினாலும் எனது இரகசியங்களை எல்லாம் வெளிப்படுத்திவிடும்படியாகச் செய்தார். அந்த நினைவுகள் இப்போதும் என் மனதை நெகிழச் செய்கின்றன. இருபத்து மூன்று வருடங்களாக அவர் தெருக்களில் அலைந்து திரிந்து தண்ணீர் சுமந்து சம்பாதித்து சேமித்த அந்த நூறு க்ரௌன்களையுமே அவர் எனது எதிர்காலத்திற்காகத் தியாகம் செய்தார்.’

பொங்கி எழுந்த உணர்ச்சி வேகத்தினால் டெஸ்ப்ளேன் பியான்கனது கைகளைப் பற்றிக்கொண்டார்.

‘நண்பரே! நான் பரீட்சை எழுதுவதற்குத் தேவையான கட்டணத்தை அவரே செலுத்தினார். எனக்கு ஒரு குறிக்கோள் இருப்பதை அவர் உணர்ந்தார். அவருடைய இலட்சியத்தைவிடவும் எனது அறிவாற்றலுக்கான தேவைகள் அதிக முக்கியத்துவமானவை என்பதையும் அவர் புரிந்துகொண்டார். எனது நலனில் அவர் அக்கறை செலுத்தினார். என்னை மகனே என்று அழைத்து புத்தகங்கள் வாங்குவதற்குத் தேவையான பணத்தையும் எனக்குத் தந்தார். சமயங்களில் சப்தம் எழுப்பாமல் என் அறைக்குள் வந்து நான் ஆழ்ந்து படிப்பதைக் கவனிப்பார். ஒரு தாயைப் போல என்னை அவர் கவனித்துக்கொண்டார். உணவுப் பற்றாக்குறையும் வேறு வழியின்றி கெட்டுப்போன உணவையும் உட்கொள்ள வேண்டியிருந்த நிலையை மாற்றி, ஆரோக்கியமான உணவு அதிகப்படியாக எனக்குக் கிடைக்கும்படியாகப் பார்த்துக்கொண்டார்.

‘பூர்கேவின் வயது கிட்டத்தட்ட நாற்பது இருக்கும். மத்தியகாலத்தைச் சார்ந்த ஒரு மனிதரைப் போன்ற முகம். உருண்டையான நெற்றியுடன் கூடிய அவரது தலையைக் காணும் ஓவியர்கள் லைகுர்கஸ் அவர்களின் தோற்றத்தை வரைவதற்கு முன்மாதிரியாக அவரைப் பயன்படுத்தி இருக்கக்கூடும். அந்தப் பாவப்பட்ட மனிதரது இதயத்தில் பொங்கி வழிந்த அன்பை வெளிப்படுத்துவதற்கான வடிகால் ஏதும் அவருக்குக் கிட்டியிருக்கவில்லை. அவரை நேசித்த ஒரேயொரு ஜீவராசி பிரியமான ஒரு சடைநாய். அதுவும் சிறிது காலத்திற்கு முன்னர்தான் மரித்துவிட்டிருந்தது. அதைக் குறித்துத் தொடர்ந்து என்னிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார். அதன் ஆத்மசாந்திக்காகப் பூசை சடங்கைத் தேவாலயங்கள் செய்யுமென்று நீ எண்ணுகிறாயா என்றெல்லாம் என்னிடம் கேட்டார். தனது நாய் உண்மையான கிறிஸ்துவ சமய நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், தன்னுடன் பன்னிரண்டு ஆண்டுகள் தேவாலயத்திற்குள் வந்திருந்ததாகவும், ஒருபோதும் அது அங்கு குரைத்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார். வாய் திறவாமல் இசைக்கருவியில் இருந்து எழும் நாதத்தைக் கேட்டபடியிருக்கும் அதன் முகபாவமும் கண்களும் தன்னுடன் சேர்ந்து அது பிரார்த்தனை செய்வது போலவே இருக்கும் என்பார் அவர்.

‘அந்த மனிதர் தனது மொத்த அன்பையும் என் மீது பொழிந்தார். தனிமையில் வாடும் துயருற்ற ஜீவனாக என்னை அவர் ஏற்றுக்கொண்டார். பாச மிகுதியால் மிக ஆழ்ந்த கவனம் செலுத்துகிற தாய்மார்களில் ஒருவருக்கு நிகரானவராக அவர் எனக்குத் திகழ்ந்தார். மிகுந்த நயத்துடன் பவ்யமாக எனக்குச் சேவை செய்துவந்தார். எவ்வித எதிர்பார்ப்புமின்றிச் செய்யும் அந்தச் சேவையே அவருக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. தண்ணீர் எடுத்துச்செல்லும் வேளையில் தெருவில் அவரை நான் காண நேரிடும்போது, அசாதாரண பெருந்தன்மையும் ஆழமான புரிதலும் கலந்த ஒரு பார்வையால் என்னைப் பார்ப்பார். உடனே எவ்விதப் பாரமும் சுமக்கவில்லை என்பது போன்ற பாவனையுடன் நடந்து சென்றுவிடுவார். நான் நல்ல ஆடைகள் அணிவதையும் ஆரோக்கியமாக இருப்பதையும் பார்த்து சந்தோஷம் அடைந்தார். பிறருக்காகவே தன்னை அர்ப்பணித்த ஒருவரின் அலாதியான திருப்தி அது. உழைக்கும் பெண்மணியின் அன்பானது வேறொரு உயர்ந்த களத்தை அடைவது போன்றது அவரது பரிபூரணமான அன்பின் வெளிப்பாடு.

‘எனது எளிய வேலைகளையும் அவரே செய்தார். இரவில் எந்த நேரம் எழுப்பச் சொன்னாலும் குறித்த நேரத்தில் என்னை எழுப்பிவிடுவார். எனது விளக்கைத் துடைப்பார். வீட்டைப் பளபளவென்று வைத்துக்கொள்வார். எந்தளவு நல்ல தந்தையாக இருந்தாரோ அந்தளவு சிறந்த வேலைக்காரனாகவும் இருந்தார். ஆங்கிலேயப் பெண்மணியைப் போன்று அனைத்தையும் சுத்தமாக வைத்திருப்பார். வீட்டின் பராமரிப்பு வேலைகளையும் அவரே பார்த்தார். திறன் வாய்ந்த கிரேக்கன் போல அவரே மரம் இழைப்பார். செய்யும் காரியங்களை எளிமையாகவும் பெருமையுடனும் செய்வார். செய்யும் காரியங்களுக்கு அந்தப் பெருமையே மேன்மை சேர்ப்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

‘அந்த நல்ல மனிதரை விட்டு ஹோட்டல் டியூவில் தங்கிப் பயில நேர்ந்தபோது, என்னுடன் இனியும் சேர்ந்து வாழ இயலாது என்பதை எண்ணி விவரிக்க இயலாத துக்கத்தில் ஆழ்ந்தார். ஆனால் அதன் காரணமாக எனது ஆய்வுக் கட்டுரைக்கான செலவிற்குத் தேவைப்படுகிற பணத்தைச் சேமிக்க இயலும் என்று அறிந்ததும் ஆறுதல் அடைந்தார். எனது ஓய்வு நாட்களில் கண்டிப்பாக அவரைச் சந்திக்க வேண்டும் என்கிற உறுதிமொழியை என்னிடம் பெற்றுக்கொண்டார். என்னைக் குறித்து அவர் பெருமைப்பட்டார். எனக்காகவும் தனக்காகவும் அவர் என்னிடம் அன்பு பாராட்டினார். எனது ஆய்வுக் கட்டுரையைப் படித்தால் அதை அவருக்கு நான் சமர்ப்பணம் செய்திருப்பதை நீங்கள் அறியலாம்.

‘எனது பயிற்சிக் காலத்தின் இறுதி ஆண்டின்போது போற்றுதற்குரிய அந்த ஓவெர்ஞாவுக்கு நான் கடன்பட்டிருந்த மொத்தப் பணத்தையும் திரும்பக் கொடுத்துவிடும் அளவிற்கு நான் சம்பாதித்தேன். நான் அவருக்கென ஒரு வண்டியையும் குதிரையையும் வாங்கித் தந்தேன். பணத்தை எனக்காகச் செலவழிக்காமல் அவருக்காக அவற்றை வாங்கியது குறித்து சீற்றம் அடைந்தார். இருப்பினும் தனது இலட்சியம் நிறைவேறியதற்காக சந்தோஷமும் அடைந்தார். சிரிப்பையும் வசவையும் சேர்த்து வழங்கினார். வண்டியையும் குதிரையையும் பார்த்தார். விழிகளில் வழிந்த ஒருதுளி கண்ணீரைத் துடைத்து எறிந்தார். “நீ செய்த காரியம் நல்லதல்ல! ஓ, என்ன ஒரு அற்புதமான வண்டி! இதை நீ செய்திருக்கவே கூடாது! ஒரு ஓவெர்ஞாவைப் போல இந்தக் குதிரை திடகாத்திரமாக உள்ளதே” என்றார். மனதைத் தொட்டு நெகிழ வைத்த அந்தக் காட்சியைப் போன்று நான் வேறு எங்கும் எப்போதும் கண்டதேயில்லை. கருவிகளை வைத்துக்கொள்ள வெள்ளி பதித்துச் செய்யப்பட்ட பெட்டி ஒன்றை எனக்காக வாங்கியே தீருவேன் என்று அடம்பிடித்தார் அவர். எனது படிப்பறையில் அதனை நீ கண்டிருக்கக்கூடும். அங்கிருக்கக்கூடிய அனைத்தையும்விட அதுவே எனக்கு விலை மதிப்பற்றதாகும்.

‘எனது ஆரம்ப வெற்றிகளைக் குறித்து அவர் மெய்சிலிர்த்துப் போனார். இருப்பினும் தவறியும்கூட இவரது வெற்றிக்குக் காரணம் நானே என்று ஒருபோதும் சொன்னதில்லை. அதற்கான அறிகுறிகூட அவரிடம் தென்படவில்லை. ஆனால் அவர் இல்லையெனில் வறுமையே என்னைக் கொன்றிருக்கும். அந்தப் பாவப்பட்ட மனிதர் எனக்கு உதவுவதற்காகத் தனது சவக்குழியைத் தானே தோண்டிக்கொண்டார். இரவில் கண் விழித்துப் படிக்க எனக்குக் காபி தேவைப்படும் என்பதற்காகப் பூண்டு தடவிய ரொட்டியை மட்டுமே அவர் சாப்பிட்டு வந்திருந்தார்.

‘அவர் நோய்வாய்ப்பட்டார். அவரது படுக்கையின் அருகிலேயே எனது இரவுகளை நான் கழித்தேன் என்பதை நீங்களே புரிந்துகொண்டிருக்கக்கூடும். முதல்முறை என்னால் குணப்படுத்த முடிந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் நோய் அவரைத் தாக்கியது. தொடர்ந்து நான் செலுத்திய ஆழ்ந்த கவனம், மருத்துவ விஞ்ஞானத்தின் பெருமுயற்சிகள் ஆகியவற்றை எல்லாம் மீறி அவர் மரணம் அடைந்தார். அவருக்குக் கிடைத்த அற்புதமான கவனிப்பு எந்தவொரு மன்னருக்கும்கூடக் கிடைத்திருக்காது.

‘ஆம் பியான்கன்! மரணத்திடமிருந்து அவரது உயிரைக் காப்பாற்ற நான் பேரளவிலான முயற்சிகளைச் செய்தேன். எனக்காக அவர் செய்த சேவையின் பலன்களை உணர வேண்டும். என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைகளை மெய்ப்பிக்க வேண்டும். எனது நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த ஒரேயொரு நன்றியுணர்வு பூர்த்தியடைய வேண்டும். இன்றும் என்னுள் எரிந்து கொண்டிருக்கும் அத்தீச்சுடர் அணைய வேண்டும் என்றெல்லாம் நான் பெரிதும் ஆசைப்பட்டேன். இவற்றுக்காக எல்லாம் அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும் விரும்பினேன்.’

மிகவும் உணர்ச்சிவசப்பட்ட டெஸ்ப்ளேன் சற்று நிதானித்த பின் மீண்டும் தனது கதையைத் தொடங்கினார்.

‘எனக்கு இரண்டாவது தந்தையான பூர்கே எனது கைகளில் சாய்ந்தபடியே இறந்துபோனார். அவரிடமிருந்த அனைத்தையும் எனக்கே எழுதி வைத்திருந்தார். பொதுமக்களுக்காக விண்ணப்பங்களும் கடிதங்களும் எழுதித்தரும் ஒரு நபரிடம் அதை அவர் எழுதி வாங்கியிருந்தார். நாங்கள் இருவரும் கூர் டி ரோஹனுக்கு ஒன்றாகச் சென்று வசித்த அதே ஆண்டின் ஒரு நாள்தான் அதில் குறிப்பிட்டிருந்த தேதி.

‘விறகை எரித்து அடுப்புக்கரி தயாரிப்பவருக்கு இருக்கும் எளிய தெய்வ நம்பிக்கைதான் அவருக்கும் இருந்தது. மனைவியை நேசிப்பதுபோல அவர் ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மேரியிடம் அளவற்ற அன்பு செலுத்தினார். அவர் தீவிரமான கிறிஸ்துவராக இருந்த போதிலும்கூட தெய்வ நம்பிக்கையற்ற என்னைக் குறைகூறும் விதமாக ஒரு வார்த்தைகூடப் பேசியது கிடையாது. அவரது உயிருக்கு ஆபத்து வந்தபோது தேவனின் உதவியை அவர் பெறுவதற்கு என்னால் சாத்தியமாகக்கூடிய எதையும் செய்யும்படியாக என்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அவர் குணமாவதற்கென பிரத்யேகப் பூசையை ஒவ்வொரு நாளும் செய்யும்படியாக நான் ஏற்பாடு செய்திருந்தேன்.

‘இரவுகளில் அவரது எதிர்காலத்தைக் குறித்த பயங்களை அவ்வப்போது வெளிப்படுத்துவார். போதுமான அளவு புனிதமான வாழ்வை அவர் கடைப்பிடிக்கவில்லை என்கிற அச்சத்தையும் தெரிவித்தார். பாவம் அவர்! காலை முதல் இரவு வரை கடுமையாக உழைத்தவர். சொர்க்கம் என ஒன்றிருந்தால் அது அவரைத் தவிர வேறு யாருக்கு உரித்தானது?

‘ஒரு புனிதருக்குரிய ஈமக்கிரியை போல அவரது இறுதிச்சடங்கு நிகழ்ந்தது. அவரது போற்றுதலுக்குரிய வாழ்விற்கு ஈடாக அவரது மரணச்சடங்கும் இருந்தது. அவரது ஈமச்சடங்கில் கலந்துகொண்ட ஒரே ஆள் நானே. எனது ஒரேயொரு நன்கொடையாளரைப் புதைத்தவுடன், அவருக்கு நான் பட்ட கடனை எவ்வாறு தீர்ப்பது என்று ஆலோசித்தேன். அவருக்கு மனைவி மக்களோ குடும்பமோ நண்பர்களோ இல்லை. இருப்பினும் அவர் தெய்வ நம்பிக்கை உடையவர். அவருக்குத் தீவிரமான ஆன்மீக உணர்விருந்தது. அதை மறுக்க எனக்கென்ன அதிகாரம் உள்ளது?

‘இறந்தவர்களது ஆத்ம சாந்திக்காக செய்யப்படுகிற பூசையைக் குறித்து சற்று வெட்கத்துடன் என்னிடம் அவர் பேசியுள்ளார். என்றாலும் அந்தக் கடமையை என் மீது திணிக்க அவர் விரும்பவில்லை. அவ்வாறு கேட்பது அவர் செய்த சேவைக்குரிய பிரதியுபகாரத்தைக் கோருவது போலாகும் என்று அவர் கருதினார்.

‘ஓர் அறக்கட்டளையை நிறுவுவதற்குப் போதுமான நிதி கிடைத்தவுடன் செயிண்ட் சல்பைஸ் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை அவரது ஆத்மசாந்திக்கான பிரத்யேகப் பூசையை ஏற்பாடு செய்து அதற்கான தொகையையும் அளித்தேன். நான் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக இருந்தது பூர்கேவின் ஆன்மீக ஆசை மட்டுமே. ஒவ்வொரு பருவத்தின் ஆரம்ப நாளில் அந்தப் பூசை நடைபெறும்போது ஒரு அவநம்பிக்கையாளனின் உண்மையான நம்பிக்கையுடன் நான் வேண்டுவது, “ஓ கடவுளே! மிக மேன்மையாக வாழ்ந்து மரித்தவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறப்பான இடத்தை ஒதுக்கியிருந்தால், நல்ல மனிதரான பூர்கேவை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். ஒருவேளை அவர் இன்னும் துயருற வேண்டிய நிலை இருந்தால் அத்துயரங்களை எனக்குத் தாருங்கள். எனவே சொர்க்கம் என வழங்கப்படுகிற இடத்திற்கு அவர் விரைந்து செல்லட்டும்.

எனதினிய அன்பரே! நாத்திக உணர்வுடைய நான் அதிகப்படியாகச் செய்யக்கூடியது அதுதான். பண்புடையவராகவே கடவுள் இருக்க வேண்டும். எனது இந்தச் சுபாவத்தைத் தவறாகக் கருதமாட்டார் என்றே எண்ணுகிறேன். இப்போதும் நான் உறுதியாக ஆணையிட்டுக் கூறுவேன், பூர்கே போன்ற பக்தியாளர்களுக்கு எனது செல்வம் அனைத்தையும் வழங்குவேன்.

டெஸ்ப்ளேன் இறுதியாக நோயுற்றபோது அவரைக் கவனித்து வந்த பியான்கன், அந்தப் புகழ்பெற்ற அறுவை சிகிச்சையாளர் நாத்திகராகவே மரித்தார் என்றெல்லாம் தற்போது சொல்வதே இல்லை. முன்னர் இப்புவியின் இன்ப வாசலைத் திறந்ததுபோல, அந்த எளிமையான ஓவெர்ஞா சொர்க்கத்தின் கதவையும் டெஸ்ப்ளேனுக்காகத் திறந்து வைத்திருப்பார் என நம்பிக்கையாளர்கள் கருதக்கூடும். 

‘ஆக்ஸ் க்ரான்ட்ஸ் ஹோம்ஸ் லா பாட்ரி ரிகானைஸான்ட்.’4 

-1836

*

குறிப்புகள்:

  1. ஹோட்டல் டியூ என்பது பாரிஸ் நகரின் மிகப் பழமையான முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாகும்.
  2. லா மெய்ஸன் வாக்வர் பகுதியின் வாழ்வு பற்றி லா பியர் கோரியோ என்னும் நாவலில் பால்ஸாக் விரிவாக விவரித்துள்ளார்.
  3. அல்பிஜெனிஸியர்களும் வாடோயிஸ்களும் சமயக் கருத்துகளை எதிர்த்த தென் ஃப்ரான்ஸைச் சேர்ந்த பிரிவினர்.
  4. பாரிஸில் பெரும் புகழுடன் மரித்தவர்களுக்கான நினைவிடத்தின் வாசலில் இவ்வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. ‘எங்களது மேன்மையான மக்களுக்காக, அவர்களது நன்றியுள்ள நாட்டினரிடமிருந்து’ என்பது அதன் அர்த்தம்.

*

ஆங்கில மூலம்: The Atheist’s Mass by Honoré de Balzac, Published by Penguin Classics, UK Edition (26 February 2015).