The White Ribbon: திரைக்கதை (பகுதி 4) – மைக்கேல் ஹனகே

0 comment
  1. முதல் பகுதி
  2. இரண்டாம் பகுதி
  3. மூன்றாம் பகுதி

31. வெளியே / இரவு: மாளிகை.

விழாப்பந்தங்கள் அணையும் நிலையில் இருக்கின்றன. ஓரிரு விளக்குகள் மட்டும் துப்புரவுப் பணிக்கு உதவியாக ஆங்காங்கே எரிகின்றன. கதவைத் திறந்து வெளிவந்த சீமான் நீண்ட முற்றத்தைக் கடக்கிறார். சற்று தூரம் சென்றதும் கத்துகிறார். 

சீமான்

பிரேக்கர்…

(விழாவில் பயன்படுத்திய அமர்வுப் பலகைகளைக் களஞ்சியத்தின் உள்ளே அடுக்கிவந்த பத்துப் பன்னிரண்டு பணியாளர்களை வேலை வாங்கிக்கொண்டிக்கிறார் மேற்பார்வையாளர். சீமானை நோக்கி நடந்து வருகிறார்.)

சீமான்

என் மகனைப் பார்த்தீர்களா?

மேற்பார்வையாளர்

(வியப்புடன்)

இல்லையே!

சீமான்

(மென்குரலில்)

உங்கள் ஆட்களிடம் விசாரித்துச் சொல்கிறீர்களா? சிஜி தனியாகச் செல்லவில்லை. குழந்தைகளோடு சேர்ந்துதான் சென்றிருக்கிறான். 

மேற்பார்வையாளர்

இதோ உடனடியாகச் செய்கிறேன். 

(விவசாயிகளிடம் உரக்கச் சொல்கிறார்)

துப்புரவு பணி முடிந்ததும் யாரும் கிளம்பிவிடாதீர்கள். எனக்காகக் காத்திருங்கள். இன்னும் வேலை இருக்கிறது. புதிய பந்தங்களையும் விளக்குகளையும் அணியமாக வையுங்கள்.

சீமான்

இதற்கிடையில் நான் சிலரைச் சந்தித்து விசாரித்துவிட்டு வருகிறேன்.

(மேற்பார்வையாளர் தன் வீட்டிற்கும் சீமான் கட்டிடங்களை நோக்கியும் செல்கின்றனர். அங்கிருந்து மேற்பார்வையாளர் எச்சரிக்கைச் சங்கொலியை எழுப்புகிறார்.)

கதைசொல்லி

மேற்பார்வையாளரின் பிள்ளைகள் சிஜியைக் கொஞ்ச நேரம் மட்டுமே பார்த்ததாகவும் அவன் பிற பிள்ளைகளோடு சென்றுவிட்டதால் தாங்கள் கவனிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். 

32. மாண்டேஜ்கள் / உள்ளே /வெளியே / இரவு

(மைதானத்தில்)

வெவ்வேறு அகவை நிரம்பிய ஆண்கள் பந்தங்களையும் விளக்குகளையும் கையிலேந்தி இருக்கின்றனர். சீமான் சிறு விளக்கம் அளிக்க, ஒவ்வொருவரும் தேடவேண்டிய இடத்தை மேற்பார்வையாளர் பிரித்தளிக்கிறார். இவையனைத்தும் தெளிவாகக் கேட்காதபடி கதைசொல்லியின் குரல் ஒலிக்கிறது. 

கதைசொல்லி

நள்ளிரவுக்குப் பின் தேடல் தொடங்குகிறது. அதற்கு முன்பாக, சீமான் உணவுப்பந்தலுக்குச் சென்று அங்கு உறங்கிய பிள்ளைகளிடம் விசாரித்தார். அங்கு அவருக்குப் புதிதாக பயனுள்ளதாக எந்தத் தடயமும் கிட்டவில்லை. 

கொட்டில், பண்ணைக் கட்டிடங்கள், வனம், வயல், ஓடை போன்ற பல்வேறு நிலப்பரப்புகள்.

தேடல் தொடர்ந்து நடைபெறுகிறது.

கதைசொல்லி

தேடுபவர்கள் அவர்களது தீராத குடிபோதை, களைப்பு அடிப்படையில் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு குழு கட்டிடங்களின் மூலைமுடுக்குகளை ஒவ்வொன்றாகத் தேட, மற்றொரு குழுவோ சுற்றியிருக்கும் நிலத்தினைச் சலித்தெடுத்தனர்.

இரண்டரை மணி ஆகியிருந்தது. சிலர் தள்ளாட்டத்துடன் படுத்துறங்கித் தம் களைப்பைக் குறைக்க முயன்றபோது மீண்டும் சங்கொலி எழும்பி அவர்களை வேலைக்கு அழைத்தது.

(மைதானத்தில்)

ஆட்கள் படுக்கையைத் தூக்கி வந்தனர்.

கதைசொல்லி

அவர்கள் சிஜியைக் கண்டுபிடித்திருந்தனர். பழைய மர அறுவை ஆலையில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட நிலையில் அவன் கண்டெடுக்கப்பட்டிருக்கிறான். அவனது கால்சராய் கழற்றிவிடப்பட்டிருந்தது. சவுக்கு விளாறல்களால் அவன் புட்டங்களில் இரத்தம் வழிந்திருந்தது. அவன் உறைந்த நிலையில் நடக்க இயலாதிருந்தான். அவனைக் குப்புறப் படுக்க வைத்து இடமாற்றும் படுக்கையில் ஏந்தி வந்திருந்தனர். 

33. உள்ளே / நாள்: தேவாலயம். 

பிரார்த்தனை அறை நிரம்பியிருக்கிறது. ஒட்டுமொத்த கிராமமும் ஒன்று திரண்டிருக்கிறது.

கதைசொல்லி

மறு ஞாயிறன்று பிரசங்கம் முடிந்த பிறகு தன்னை ஓரிரு வார்த்தைகள் சொல்ல அனுமதிக்குமாறு பாதிரியாரைச் சீமான் கோரியிருந்தார். 

சீமான்

என் மகன் சிகமண்டுக்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள். நகரத்தில் இருந்து காவல்துறையினர் இந்த வாரம் இங்கு வந்திருந்தார்கள். அவர்கள் உங்களில் பலரையும் விசாரணை செய்தனர். ஒரு பலனுமில்லை. முட்டைகோஸ் தலைகளை வெட்டிய அதே ஆட்கள்தான் என் மகனையும் துன்புறுத்தியிருக்கக்கூடும் என்று முதலில் நான் எண்ணினேன். 

(கூடியிருந்தவர்களிடையே சலசலப்பு உருவாகிறது.)

அவர்கள் என்னைப் பழிவாங்கக் கருதியதால் அப்படி நினைத்தேன். எதற்காகப் பழிவாங்கும் எண்ணம்? தங்களது தாய் மர அறுவை ஆலையில் இறந்ததாலும் அதற்கு நானே பொறுப்பு என்ற அபத்தமான காரணத்தைக் கற்பித்துக்கொண்டதாலும்.

(லெனி, பிற குழந்தைகள் உட்பட உழவர் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்தனர். ஃபிரான்ஸ் மட்டும் அங்கு இல்லை. சலசலப்பு அதிகரித்தது.)

குறைந்தபட்சம் ஃபிரான்ஸ் ஃபெல்டர் விசாரணையின்போது தனது ‘தலை வெட்டிய வீரத்திற்கு’ அதையே காரணமாகத் தெரிவித்துள்ளார். நான் எப்போதும் ஃபெல்டர் குடும்பத்திற்கு உதவியும் துணைநின்றும் வந்திருக்கிறேன். ஆனால் எப்போதும் எல்லோரும் செய்நன்றியறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அது தனிப்பட்ட பண்புநலன் சார்ந்தது. 

(உழவர் தேவாலயத்தில் இருந்து வெளியேற முற்படுகிறார்.)

சீமான்

ஓடாதீர்கள் ஃபெல்டர். உங்கள் கெளரவத்தைக் காக்கும் நோக்குடன்தான் நான் பேசுகிறேன். ஃபிரான்ஸ் ஃபெல்டர் தன் வருங்கால மனைவியின் முன் தன் வீரதீரச் செயலைப் பிரகடனப்படுத்தியதாகத் தெரிய வருகிறது. அதன்பிறகு கோழையாகத் தன் குடும்பத்தினிடையே ஒளிந்துகொண்டதால் என் மகனை அவர் துன்புறுத்தியிருக்க வாய்ப்பில்லை. ஒன்றுமட்டும் உறுதி. இந்த விசயத்தில் தன் மகன் பிழைசெய்திருந்தால் வழி பிறழ்ந்த அவனைக் காப்பதைவிட தன் நாவை அறுத்துக்கொள்ளவும் பெரியவர் தயங்க மாட்டார் என்பதை நான் நன்கு அறிவேன். நீங்கள் அனைவரும் மறந்துவிட்ட ஒன்றை நான் நினைவூட்ட விரும்புகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு விபத்தில் காயம்பட்ட மருத்துவர் இன்னும் உடல்நலமுறாமல் மருத்துவமனையிலேயே உள்ளார். அவரை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கும் நோக்குடன் அவரது தோட்டத்தில் கட்டப்பட்ட ஒரு கம்பியால் அது நிகழ்ந்தது. அந்த நிகழ்விலும் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. யாரும் எதையும் கேள்விப்படவும் இல்லை. பார்க்கவும் இல்லை.

(ஒழுங்கற்ற பேச்சொலிகள் பரவுகின்றன.)

என் மகன் அனுபவித்த கொடிய காயங்களுக்கும் மருத்துவர் அனுபவிக்கும் வலிக்கும் காரணமானவர்கள் இங்கு நம்மிடையே அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த வகையான குற்றங்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதை நான் ஏற்க மாட்டேன். உங்கள் குழந்தைகளுக்கும் இதைப் போன்ற ஒன்று நிகழ நான் விரும்பவில்லை. அதனால் உங்கள் அனைவரையும் குற்றவாளியையோ குற்றவாளிகளையோ கண்டுபிடிக்க ஒத்துழைக்குமாறு கோருகிறேன். கேள்வி கேளுங்கள், செவிகளைத் திறந்து வையுங்கள். கவனத்துடன் இருங்கள். உண்மையைக் கண்டுபிடிக்கத் தவறினால் நம் சமுகத்தில் இருக்கும் அமைதிக்குக் குந்தகம் நேரும். நன்றி பங்குத்தந்தையே!

(பாதிரியார் சொல்கிற சில சொற்கள் நமக்குச் சரிவர கேட்கவில்லை. அதற்கு மேல் கதைசொல்லியின் குரல் ஒலிக்கிறது. ஒருவர் பிறரிடம் கவலையுடன் பேசியவாறு தேவாலயத்தில் இருந்து மக்கள் வரிசையாக மெல்ல வெளியேறினர்.)

கதைசொல்லி

நிலக்கிழாரின் பேச்சு அனைவரிடையே பதற்றத்தை உருவாக்கியது. அனைவரும் நன்றி விழா தினத்தில் நடந்ததைப் பொதுவாக அறிந்திருந்தனர். ஆனால் அது என்னவென்று துல்லியமாக யாருக்கும் தெரியவில்லை. அதில் அவர்கள் ஈடுபாடு காட்டவும் இல்லை. சீமான் கிராமத்தினரிடையே புகழ்பெற்றிருக்கவில்லை என்றபோதும் முக்கியச் சமூகநிலையில் இருப்பவராகவும் ஒட்டுமொத்தக் கிராமத்துக்கும் வேலை வாய்ப்பளித்தவராகவும் அறியப்பட்டிருந்தார். 

34. வெளியே / நாள்: தேவாலயத்தின் முன்பு. (காட்சி தொடர்ச்சி.)

மக்கள் தேவாலயத்தில் இருந்து வெளியேறுகின்றனர். குழுக்கள் உருவாகின்றன. உழவர் ஃபெல்டரும் அவரது பிள்ளைகளும் வெளியேற கூட்டம் விலகி வழிவிட்டது. அவர் குடும்பம் கிராமத்துத் தெருவில் நடக்கிறது. காமிரா பின்தொடர்கிறது.

கதைசொல்லி

சமூகத்தின் அமைதி குலையும் என்ற அவரது வார்த்தை நிச்சயம் நல்ல அறிகுறியல்ல. அதேசமயம் இந்த விதமான குற்றங்களை விதைக்கும் மர்மமான நபரைப் பற்றி எண்ணும்போது குடியானவர்களிடையே ஆயிரமாண்டுகளாக வேர்கொண்டிருந்த நம்பிக்கையின்மை மீண்டும் வளர்ந்தது. 

35. உள்ளே / இரவு: பள்ளிக்கூடம்.

பள்ளிக்கூட வகுப்பு காலியாக இருக்கிறது. ஹார்மோனியத்தின் மேல் கன்னெய் விளக்கு எரிகிறது. பள்ளியாசிரியர் வாசிக்கிறார். 

சற்று நேரம் கழித்து யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்கிறது. பள்ளியாசிரியர் வாசிப்பதை நிறுத்துகிறார். 

பள்ளியாசிரியர்

(வியப்புடன்)

உள்ளே வாருங்கள்.

தயக்கத்துடன் கதவைத் திறக்கிறார்கள். இருளில் ஏவாவின் முகம். அவள் விளக்கில் இருந்து தள்ளி இருப்பதால் முகம் தெளிவாகத் தெரியவில்லை.

பள்ளியாசிரியர்

(மகிழ்ச்சியும் வியப்புமாக)

ஏவா!

ஏவா

(புரிந்துகொள்ள முடியாதபடி மென்குரலில்)

உள்ளே வரலாமா?

பள்ளியாசிரியர் எழுந்து அவளருகே சென்று நின்று வியப்புடன் சிரித்தவாறு சொல்கிறார்.

பள்ளியாசிரியர்

என்ன கேள்வி இது? மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். உள்ளே வா. என்னவாயிற்று?

அவள் தடுமாறக் கூடுமென்பதால் விளக்கின் அருகே சென்று அவள் வர வழிவிட்டு நின்றார் ஆசிரியர்.

பள்ளியாசிரியர்

என்ன நடந்தது?

ஏவா

அவர்கள் என்னைப் பணிநீக்கம் செய்துவிட்டார்கள்.

பள்ளியாசிரியர்

(துணுக்குறலுடன்)

என்ன சொல்கிறாய்? என்ன ஆயிற்று?

அவள் தன் தோளைக் குலுக்குகிறாள்.

ஏவா

ஒன்றுமில்லை. என்னை வெளியேற்றிவிட்டார்கள். அவ்வளவுதான். (சிறு அமைதி) இசையாசிரியனையும் துரத்திவிட்டார்கள்.

(ஒரு சொற்றொடரை முடிப்பதற்கு முன் வெள்ளமெனக் கண்ணீர் சிந்தி அழுகிறாள். இருப்பினும் தன் முகத்தை அவனுக்குக் காட்டாதவாறு திரும்பிக்கொள்கிறாள். அவளருகே சென்று தயக்கத்தால் அவளைத் தொடாமல் நிற்கிறார் பள்ளியாசிரியர். திடீரென்று அவரை நோக்கித் திரும்பியவள் வெதும்பி அழுதபடி சொல்கிறாள்.)

ஏவா

எனக்கு எங்கு செல்வதென்று தெரியவில்லை. இந்த நடு இரவில் வீட்டுக்கும் போக முடியாது. தனியாகச் சாலையில் நடந்து செல்வதற்கும் பயமாக இருக்கிறது.

பள்ளியாசிரியர்

(அவளைச் சாந்தப்படுத்தியவாறு)

வருந்தாதே. அமைதியாக இரு. இதில் கவலைகொள்ள ஒன்றுமே இல்லை.

ஏவா

(அழுதபடி)

இருக்கிறது.

பள்ளியாசிரியர்

(அவளைச் சாந்தப்படுத்தும் புன்னகையுடன்)

இங்கு வந்து அமர். அமைதியாகச் சொல். என்ன நடந்தது?

(அவள் அவரருகே இருந்த பள்ளி அமர்வுப் பலகையில் அமர்கிறாள். அவளுக்கு முன்னால் இருந்த உயர்மேஜை மீது ஆசிரியர் அமர்கிறார்.)

சொல்.

(அவள் அமைதியடைய சில நிமிடங்கள் ஆகிறது.)

என்னவாயிற்று?

(மெல்ல அவள் அமைதியடைகிறாள். சிலமுறை ஆழ்ந்து சுவாசிக்கிறாள். அவளது குழந்தைத்தனமான துயரத்தைக் கண்டு ஆசிரியர் வியக்கிறார்.)

ஏவா

சீமானுடைய மகன் உடல்நிலை மோசமாக இருக்கிறது. அவன் பெற்றோர் கடும் சினத்துடன் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் நானும் இசையாசிரியனும் என்று அவர்கள் இப்போது சொல்கிறார்கள். நாங்கள் சரியாகப் பிள்ளையைப் பார்த்துக்கொள்ளவில்லையாம். ஆனால் நான் இரட்டையர்களைப் பார்த்துக்கொள்ளத்தான் அங்கு பணியில் இணைந்தேன். 

(அவள் மீண்டும் கேவியழத் தொடங்குகிறாள்.)

நான் அவர்களை எப்போதும் கவனமாகப் பார்த்து வந்திருக்கிறேன். நீங்களும் நானும் நடனமாடும் போதுகூட சீமாட்டியின் அனுமதி பெற்றே வந்தேன். நான் உண்மையில் எந்தக் குற்றமும் செய்யவில்லை. 

பள்ளியாசிரியர்

நான் அறிவேன். அழாதே. அமைதிகொள்.

ஏவா

நான் இப்போது எங்கு போவேன்? என் ஊதியம் எங்கள் குடும்பத்துக்குத் தேவை.

பள்ளியாசிரியர்

உனக்கு வேறு வேலை நிச்சயம் கிடைக்கும். அதுமட்டுமின்றி சீமான் முன்கோபக்காரர் என்பதை நீயே அறிவாய். அவரைப் பொறுத்தவரை தோற்றத்தில் இருப்பதுபோல மிகக் கடுமையானவர் அல்லர் அவர்.

ஏவா

(விரைவாகத் தலையை உலுக்கி)

இல்லை, எல்லாம் முடிந்துவிட்டது. எனக்கு நிச்சயம் தெரியும். சீமாட்டி யாரையும் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் தன் பிள்ளைகளைத் தன்னுடன் நகரத்திற்கோ தன் பெற்றோர் வீட்டிற்கோ – எனக்குச் சரியாகத் தெரியவில்லை – அழைத்துச் செல்ல ஆயத்தமாகிறார்கள்.

பள்ளியாசிரியர்

(சற்று மெளனத்திற்குப் பிறகு)

நான் அவரிடம் பேசிப் பார்க்கிறேன். கொஞ்ச நாளுக்கு முன்பு நாங்கள் இருவரும் ஒன்றாக இசைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 

(புன்னகையுடன்)

துரதிருஷ்டவசமாக நான் சிறப்பாக வாசிக்கவில்லை. இப்போது வேறொரு ஆசிரியரை நியமித்துக்கொண்டார்கள். அவர் என்னைவிடச் சிறப்பாக வாசிக்கிறார். எனக்குத் தெரிந்தவரை அவர் நகரத்தில் இசை பயின்றவர்.

ஏவா

(தன் துயரைச் சற்று மறந்தவளாய்)

அவர் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக வாசிப்பவரில்லை.

பள்ளியாசிரியர்

உண்மைதான்.

ஏவா

(ஒரு நீண்ட மெளனத்திற்குப் பிறகு மீண்டும் தீவிர தொனியுடன்)

யார் இப்படியொரு காரியத்தைச் செய்திருக்கக்கூடும்?

பள்ளியாசிரியர்

என்ன?

ஏவா

ஒரு குழந்தையை இப்படி அடித்துப் போட்டிருக்கிறார்கள்.

பள்ளியாசிரியர்

அது எனக்கும் தெரியவில்லை.

(நீண்ட மெளனம். அவள் மெல்ல பேசத் தொடங்குகிறாள்.)

ஏவா

இன்றிரவு நான் இங்கு தங்கிக்கொள்ளட்டுமா? என்னை வெளியே துரத்திவிடாதீர்கள் ஐயா. தயவுசெய்து.

பள்ளியாசிரியர்

எப்படி உன்னால் இப்படி யோசிக்க முடிகிறது?

ஏவா

விடிந்து முதல் கதிர் வரும்வரை தங்கிவிட்டு, வந்ததும் இங்கிருந்து கிளம்பிவிடுவேன். 

(சடுதியில் அவள் மீண்டும் அழத் தொடங்குகிறாள்.)

வீட்டில் யாருமே இதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். நான் ஏதோ பிழை செய்துவிட்டதாகவே கருதுவார்கள்.

(சிறு அமைதி.)

பள்ளியாசிரியர்

என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்ல விழைகிறாயா?

ஏவா

என்ன சொல்கிறீர்கள்?

பள்ளியாசிரியர்

(மகிழ்வுடன்)

நாளை பள்ளி முடிந்த பிறகு. நாம் செல்வதற்கு ஒரு வண்டியைப் பிடித்துக்கொண்டு மாலை திரும்பி வந்துவிடுகிறேன்.

ஏவா

நீங்கள் ஏன் அதைச் செய்ய வேண்டும் ஐயா?

பள்ளியாசிரியர்

மிகவும் கறாராக நடந்துகொள்ளாதே.

ஏவா

(சில நொடிகளுக்குப் பின்)

நீங்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்?

(அமைதி. பள்ளியாசிரியர் எழுந்து நின்று பேச்சைத் தொடர்ந்தார்.)

பள்ளியாசிரியர்

எழுந்து இங்கு வா. உனக்காக நான் ஒன்று வாசித்துக் காட்டுகிறேன். 

(ஒரு நொடி சிந்திக்கிறாள். பின்னர் ஆர்வத்துடன் ஆமோதித்துத் தலையசைக்கிறாள். அவர் ஹார்மோனியத்தின் முன் அமர, அவள் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறாள். அருகில் இருந்த அமர்வுப் பலகையில் உட்காருகிறாள். அவர் வாசிக்கத் தொடங்குகிறார்.)

36. உள்ளே – வெளியே / பகல்: பன்றிக்குட்டிகளின் கொட்டில்.

சிறிய பன்றிக்கொட்டிலை உழவரும் பவுலும் துப்புரவு செய்துகொண்டிருக்கின்றனர். பன்றிகள் இதைத் தொந்தரவாக நினைத்து உறுமுகின்றன.

சடுதியில் ஃபிரான்ஸ் உள்ளே நுழைகிறான்.

ஃபிரான்ஸ்

காலை வணக்கம் தந்தையே.

(நிமிர்ந்து பார்த்தவர் யாருமே வராதது போலத் தன் வேலையைத் தொடர்கிறார். பவுல் ஃபிரான்ஸைப் பார்த்து வரவேற்பது போலத் தலையசைத்துவிட்டு அமைதியாகிறான். சற்று நேரத்தில் வேலையை முடித்தபிறகு ஃபிரான்ஸைத் தவிர்த்துவிட்டு வெளியே சென்றார் உழவர்.)

ஃபிரான்ஸ்

நான் வெளியே வந்துவிட்டேன். அவர்கள் என்னை விடுதலை செய்துவிட்டார்கள்.

(உழவர் அவனை நோக்கித் திரும்பி அவன் விழிகளில் உற்றுப் பார்க்கிறார்.)

உழவர்

பார்த்தாலே அது தெரிகிறது. அதற்கென்ன இப்போது?

ஃபிரான்ஸ் தலைகுனிகிறான். தன் தந்தையைப் பின்தொடர்ந்து நடந்துவரும் பவுல் பன்றிக்கொட்டிலில் இருந்து வெளியேறியதும் தன் அண்ணனை ஓரக்கண்ணில் விகற்பமாகப் பார்க்கிறான். உழவர் முன்னோக்கி நடந்துசென்று ஊற்றில் தன்னைக் கழுவுகிறார். அவரை மெதுவாகத் தொடர்ந்து சென்ற ஃபிரான்ஸ், அவர் தன்னை அலட்சியம் செய்வதைக் கண்டு பேசத் தொடங்கினான்.

ஃபிரான்ஸ்

(மென்மையாக)

என்னை உங்களால் மன்னிக்கவே முடியாதா தந்தையே?

(கை கழுவுவதை நிறுத்திவிட்டு அவனை நோக்கித் திரும்புகிறார்.)

உழவர்

உன்னை எதற்காக மன்னிக்கச் சொல்கிறாய்? எனக்குப் பண்ணையில் இனிமேல் வேலை தரமாட்டார்கள் என்பதற்காகவா? லெனி அவமானப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டதற்காகவா? இன்னும் சில நாட்களில் உன் சகோதர சகோதரிகள் உண்பதற்கு எதுவுமின்றி தவிக்கப்போகிறார்கள். அதற்காகவா? இதற்காக மன்னிக்கச் சொல்கிறாயா, இல்லை வேறேதும் குறிப்புணர்த்துகிறாயா?

37. வெளியே / பகல்: மருத்துவரின் நிலம். நாட்டுப்புறத்திற்குச் செல்லும் சாலை.  

ஏவாவும் பள்ளியாசிரியரும் இருக்கும் வண்டியைக் காமிரா பின்தொடர்கிறது. 

கதைசொல்லி

மறுநாள் சிஜியின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காகவும் ஏவாவை மீண்டும் பணியில் அமர்த்த முயல்வதற்காகவும் மாளிகைக்குச் சென்றேன். அன்று விடியற்காலையிலேயே சீமாட்டி குழந்தைகளுடன் கிளம்பிவிட்டதாக அறிந்தேன். ஏவாவை அவளது இல்லத்தில் விடுவதற்காக நான் குதிரை வண்டியைக் கோரியதால் மேற்பார்வையாளர் தயக்கத்துடன் வண்டியைத் தந்தார்.

(அவர்கள் இருவரும் செல்லும் எதிர்த்திசையிலிருந்து மருத்துவர் உள்ளிருக்க, திறந்த நிலையில் ஒரு வண்டி வருகிறது. இரு வண்டிகளின் பயணிகளும் ஒருவருக்கொருவர் கையசைத்துக்கொள்கின்றனர். காமிரா ஏவா, பள்ளியாசிரியர் இருவரையும் விட்டுவிட்டு மருத்துவரைப் பின்தொடர்கிறது. மருத்துவருடைய ஒரு கையில் கட்டு போட்டு தொங்குகிறது. மருத்துவருடைய நிலத்திற்குள் வந்ததும் வண்டி நிற்கிறது. மருத்துவர் கீழிறங்குவதற்கு ஓட்டுநர் உதவுகிறார். தன் தந்தையை வரவேற்கும் பொருட்டு செனியா வீட்டிலிருந்து ஓடிவருகிறாள். ஓட்டுநர் மூட்டைகளை இறக்குகிறார். மருத்துவரும் செனியாவும் வீட்டுக்குள் செல்கின்றனர்.)

கதைசொல்லி

நாங்கள் கிராமத்தில் இருந்து வெளியேறும் சமயத்தில் சரியாக மருத்துவரைப் பார்க்க நேரிட்டது.

நன்றி பகர்வு விழாவுக்குச் சில நாட்கள் கழித்து அவருடைய நான்கு வயது மகன் ருடோல்ஃப் சடுதியில் தொலைந்து போனான். சமீபத்திய நிகழ்வுகளால் பதற்றமுற்றிருந்த அனைவரும் இதனால் மேலும் வருத்தமடைந்தனர். இறுதியில் அரைகுறையாக உடையணிந்து நகரத்தை நோக்கிப் பயணம் செய்வதற்காகச் செல்லும்போது அவனைக் கண்டறிந்தார்கள். அவன் எங்கு செல்வதாகக் கிளம்பியிருக்கிறான் என விசாரித்தபோது தன் தந்தையைப் பார்க்க நகரத்திற்குச் செல்வதாகப் பதிலளித்திருக்கிறான். வீட்டிற்கு இழுத்து வந்தவர்களிடம் கத்திக் கதறி அவர்களை நகங்களால் பிராண்டி இருக்கிறான்.  

மருத்துவரிடம் யாரோ இதுபற்றிச் சொல்லியிருக்க வேண்டும். 

கூடிய விரைவில் நல விடுவிப்பு செய்யப்பட உள்ள நிலையில் இந்தச் செய்தி அறிந்ததும் அவரே தனது மருத்துவமனை வாசத்தை முன்வந்து முடித்துக்கொண்டிருந்தார். 

38. உள்ளே / பகல்: மருத்துவரின் இல்லம். படிக்கட்டுகள்

மருத்துவர் பலமுறை விளிக்கிறார்.

மருத்துவர்

ரூடி?

அவர் வினாப் பார்வையைச் செனியா மீது வீசினார். ஏதுமறியாதவளாய் செனியா தன் தோளைக் குலுக்கினாள். 

செனியா

சற்று நேரத்திற்கு முன்பு அவன் கூடத்தில்தான் இருந்தான்.

கூடத்திற்குச் செல்லும் முன் ஓட்டுநர் மூட்டைகளுடன் உள்ளே வருகிறார். மருத்துவர் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு பணம் அளிக்கிறார். ஓட்டுநர் வெளியேறுகிறார். செனியா கதவு நிலையில் காத்து நிற்கிறாள். இப்போது அவர்கள் ஒன்றாகக் கூடத்திற்குச் செல்கிறார்கள். அங்கு யாரும் இல்லை. அடுப்படிக்குச் செல்கிறார்கள். அங்கும் யாரும் இல்லை. அடுப்படி மேசைக்குக் கீழே குனிந்து பார்த்தார்கள். இல்லை.

மருத்துவர்

ரூடி… எங்கே இருக்கிறாய்?

(மீண்டும் படிக்கட்டுகள்.)

இது தொடர்பாக அழுவதா சிரிப்பதா என்று புரியாத மனநிலையில் மருத்துவர் இருக்கிறார். துணி மாட்டும் கொக்கியருகே சென்று தன் புறச்சட்டையைக் கழற்ற முற்படுகிறார். கையில் கட்டு இருப்பதால் செனியாவின் உதவி தேவைப்படுகிறது. அப்போதுதான் அவள் கழிப்பறையைக் கவனிக்கிறாள். அவள் தன் தந்தையிடம் புன்னகையோடு குறிப்பிடுகிறாள். செனியா தந்தையின் புறச்சட்டையைத் தொங்கவிட அவர் கழிப்பறைக் கதவின் கைப்பிடியைப் பற்றித் திறக்க முயல்கிறார். அது பூட்டியிருக்கிறது. அதற்கு முன்பாக நின்றுகொள்கிறார்.

மருத்துவர்

(மென் குரலில்)

உள்ளே யார்? ரூடி? அப்பாவுக்கு வணக்கம் சொல்ல விருப்பமில்லையா உனக்கு? 

(அமைதி.)

என்னை மருத்துவமனையிலேயே வந்து பார்ப்பதற்காக நீ கிளம்பியதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் இப்போது கதவைப் பூட்டிக்கொண்டு ஒளிந்திருக்கிறாயே?

(அமைதி.)

(பெட்டியைத் தூக்கிக்கொண்டு படிகளில் ஏறிச்செல்லும் செனியாவை ஒரு நொடி பார்க்கிறார். பின் ரூடோல்ஃபிடம் பேச்சைத் தொடர்கிறார்.)

சரி. எனக்கும் உன்னைப் பார்க்க விருப்பமில்லை. நான் கிளம்புகிறேன். உன் விருப்பப்படி நீ கழிப்பறையிலேயே தங்கலாம். 

(வாசலை நோக்கிச் சில அடிகள் எடுத்து வைத்து நடந்தவர் ஒரு நொடி நின்று பார்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.)

39. வெளியே / பகல்: மருத்துவரின் நிலம். மைதானம்.  

மருத்துவர் பலமுறை விளிக்கிறார்.

கதவைத் திறந்து வெளியே வந்த மருத்துவர் தோட்டத்தில் நடக்கிறார். கம்பி கட்டப்பட்டிருந்த மரத்தின் அருகே செல்கிறார். மரப்பட்டையில் கம்பியின் தடத்தை உற்று கவனிக்கிறார். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தவர் சீரமைக்கப்பட்ட புல்வெளியைப் பார்க்கிறார். 

சற்று நேரம் கழித்து செனியா அவரிடம் வருகிறாள். அவர் அவளை ஒரு கணம் பார்த்துவிட்டு மீண்டும் புல்வெளியைப் பார்க்கிறார். இருவரும் அமைதியாக இருக்கின்றனர். சற்று நேரம் கழித்து செனியா பேச்சைத் தொடங்குகிறாள்.

செனியா

உங்கள் மருத்துவ அறையில் அனைத்தும் அணியமாக உள்ளன. திருமதி வேக்னர் நேற்றே அனைத்தையும் ஒழுங்குபடுத்தி ஒருக்கிவிட்டார்.

(அமைதி.)

மருத்துவர்

ஏன் அதை இப்போது என்னிடம் சொல்கிறாய்?

(செனியா அவரைப் பார்த்து வியப்புடன் தன் தோளைக் குலுக்குகிறாள்.)

செனியா

குறிப்பாக ஒன்றுமில்லை. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தேன். அவ்வளவுதான்.

(அமைதி.)

மருத்துவர்

அவள் உன்னை நன்கு கவனித்துக்கொண்டாளா?

செனியா

ஆம்.

மருத்துவர்

(செனியாவை நோக்கித் திரும்பி)

உனக்கு இப்போது என்ன வயது?

செனியா

பதினான்கு.

மருத்துவர் அவளைப் பார்த்து மெளனமாகச் சிரித்துத் தன் தலையை மென்மையாக ஆட்டுகிறார். மீண்டும் புல்வெளியைப் பார்த்தபடி அவர் பேசுகிறார். 

மருத்துவர்

உன் அம்மாவின் சாயல் உன்னிடம் ததும்புவது மிக அற்புதமானதாக உள்ளது. 

(செனியா அமைதி காக்கிறாள். சடுதியில் மென்குரலில் அழைக்கிறாள்.)

செனியா

அப்பா…

மருத்துவர் அவளை நோக்கித் திரும்புகிறார். அவள் தன் இல்லத்தை நோக்கித் தலையைக் காட்டிக் குறிப்பிடுகிறாள். அவள் பார்வையை அவர் பின்தொடர்கிறார். தொலைவில் இருந்து பார்க்கையில் இன்னும் சின்னவனாகத் தெரிந்த ரூடோல்ஃப் தயக்கத்துடன் கதவைத் திறந்து வெளி வருகிறான். தான் சிரமப்பட்டு எம்பிப் பிடித்த கைப்பிடியில் வைத்த கையுடனேயே முடிவெடுக்க இயலாதவனாய் எதிர்ப்புக்கும் ஏக்கத்துக்கும் இடையே போராடுகிறான். 

40. உள்ளே / பகல்: போதகர் இல்லம். படிப்பறை 

தன் மேசைக்குப் பின்னால் இருக்கும் சிறு பறவையின் கூட்டைத் தூய்மை செய்தபடியே தன் முன்னால் நிற்கும் மார்டினுடன் பேசுகிறார். மார்டின் கையில் இன்னும் வெள்ளை நாடா கட்டப்பட்டிருக்கிறது. 

போதகர்

உன் அம்மாவும் நானும் கவலையில் இருக்கிறோம். உன்னைப் பற்றித்தான்… கவலை. யோசித்துச் சொல். நீ சரிவர தூங்குவதில்லையா? கடுமையாகக் களைப்புற்றிருக்கிறாயா? 

மார்டின்

(கேள்வி புரியாதவனாக)

இல்லை.

போதகர்

எனக்குத் தெரியாமல் பள்ளியில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா?

மார்டின்

(மீண்டும் புரியாதவனாக)

இல்லை அப்பா.

போதகர் சடுதியில் தன் மகனை நோக்கித் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் கூண்டுப்பறவையைப் பார்க்கிறார். 

போதகர்

நாங்கள் ஏன் கவலைப்படுகிறோம் என்பது அநேகமாக உனக்குப் புரியாமல் இருக்கலாம். உனக்கு அந்த வருத்தத்திற்குரிய காரணத்தைச் சற்றே விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். பிர்கென்பர்னுக்கும் ஹெபர்னுக்கும் நானே கூடுதல் பொறுப்பேற்று போதகராகத் தொண்டாற்றி வருகிறேன் என்பது உனக்குத் தெரியும். பிந்தைய இடத்திற்கு என்னைப் பார்க்கும்பொருட்டு ஒரு தாய் வந்திருந்தாள். அவளுக்கு உன்னைப் போலவே ஒரு மகன். அவனும் நீ சில நாட்களாய் காட்டும் அறிகுறிகளுடன் இருந்திருக்கிறான். நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருந்த அவனிடம் சடுதியில் கடும் களைப்பும் கண்களைச் சுற்றிக் கருவளையங்களும் மகிழ்ச்சியின்றி மனவழுத்ததுடன் காணப்பட்டிருக்கிறான். உணர்ச்சி நிலையும் கடுமையாக மாறி இருக்கிறது. முன்பெல்லாம் இனிமையாக, நகைச்சுவை உணர்வுடன் இருந்தவன் இப்போதெல்லாம் சோகமே உருவாக இருந்திருக்கிறான். அவனால் தன் பெற்றோரைக் கண்களைப் பார்த்துப் பேச முடியவில்லை. சிறியதாகவும் பெரியதாகவும் பொய்களைச் சொல்லி மாட்டிக்கொண்டிருக்கிறான்.

(போதகர் கூண்டைச் சுத்தம் செய்துவிட்டு, பறவைக்கு உணவளித்து, தன் நாற்காலியில் அமர்கிறார். எதிரே மார்டின் நிற்கிறான்.)

அது ஆறுமாத காலம் நீண்டிருக்கிறது. அதன்பிறகு எல்லாம் மிக வேகத்தில் நடைபெற்றிருக்கிறது. பசியுணர்வு இல்லை. தூக்கம் தொலைந்தது. முழு முகமும் அவன் விழிக்கீழ் கரும்பழுப்பை அடைந்தது. கைகள் நடுங்கின. ஞாபகம் மங்கியது. முதலில் முகத்தில் ஆரம்பித்து பின்னர் உடலெங்கும் எண்ணற்ற கொப்புளங்கள் உண்டாகின. இறுதியில் அவன் இறந்துவிட்டான். நான் ஆசீர்வதித்த அவன் உடல் முதியவரது உடலைப்போல் இருந்தது.  

(போதகர் மார்டினைக் கூர்ந்து அவதானிக்கிறார்.)

போதகர்

நான் ஏன் கவலையுறுகிறேன் என்று இப்போது உனக்குப் புரிகிறதா?

(மார்டின் மெல்லிய தலை அசைவின் மூலம் ஆமோதிக்கிறான்.)

போதகர்

சரி உன்னைப் பொறுத்தவரை இந்தப் பையனுடைய சோகமான முடிவுக்குக் காரணமாக இருந்தது எது?

மார்டின்

எனக்குத் தெரியவில்லை.

போதகர்

உனக்கு நன்றாகத் தெரியும் என்று நான் கருதுகிறேன்.

(மார்டின் என்ன சொல்வதென்று தெரியாமல் தலைகுனிகிறான். போதகர் அவனை நெடுநேரம் இமைக்காமல் பார்த்துவிட்டு எழுந்து மேசையைச் சுற்றி நடந்து வந்து அதன் விளிம்பில் சாய்ந்து அமர்ந்தவண்ணம் மார்டின் முகத்துக்கு நேரே தன் முகத்தை வைத்திருக்கிறார்.)

என்னிடம் சொல்லமாட்டாயா? சரி அப்படியென்றால் நான் சொல்கிறேன். தன் உடலில் கடவுள் எழுப்பிய புனித மதில்களைத் தாண்டி உள்ளிருந்த முக்கியமான நரம்பு ஸ்தானத்தை ஒருவன் தொந்திரவு செய்வதை அவனிடமிருந்து அச்சிறுவன் கற்றிருக்கிறான். அவனால் அப்படிச் செய்யாமல் இருக்க முடியவில்லை. அப்படியே தொடர்ந்து தன் உடலின் நரம்புகளை இம்சித்திருக்கிறான். இறுதியில் அதனாலேயே இறந்தும் போனான்.

(மார்டின் முகத்தில் கடும் சஞ்சலம் தோன்றுகிறது. தலையைக் குனிகிறான். எச்சில் விழுங்குகிறான். மூச்சுவிடுவதற்குச் சிரமப்படுகிறான்.)

மார்டின், என்னைப் பார்.

(அச்சத்துடன் அவரைப் பார்க்கிறான். மீண்டும் சடுதியில் முகத்தைத் திருப்பிக்கொள்கிறான்.)

நான் உன்னை நேசிக்கிறேன். என் இதயப்பூர்வமாக. உனக்கு உதவவே முயல்கிறேன். என்னைப் பார்.

(மார்டின் தன் தந்தையின் விழிகளை நேரெதிரே நோக்குகிறான்.)

நேர்மையாளனாய் இரு மார்டின். அந்தப் பாவப்பட்ட சிறுவனின் கதையைச் சொன்னதும் நீ ஏன் முகம் சிவந்து அச்சமடைகிறாய்?

மார்டின்

முகம் சிவந்ததா… அவன் மீது எனக்குப் பரிதாபம் எழுந்தது, அதனால்தான்.

போதகர்

அது மட்டுமே காரணமா? இல்லையே மார்டின்… வேறேதோ இருக்கிறது. உன் முகமெங்கும் எழுதியிருக்கிறது. நேர்மையாய் இரு. நேர்மையே உன்னை மானுடர்களுக்கும் நம் தேவருக்கும் அருகே அழைத்துச் செல்லும். 

மார்டின்

(அழத் தொடங்குகிறான்)

அடக்கடவுளே!

(அவன் அழுததைப் பார்த்து போதகர் கண்ணிலும் நீர் கசிந்தது. அவர் தன் மகனைத் தழுவிக்கொள்கிறார். மகன் தந்தையின் கையைப் பற்றி அழுத்தமாக முத்தமீகிறான்.)

போதகர்

மார்டின், ஏன் அழுகிறாய்? அதை உன் வாயால் ஏற்பாய் என்று நான் காத்திருக்கிறேன். நீயும் அந்தப் பாவிச் சிறுவன் செய்த செயலைச் செய்தாய் அல்லவா?

மார்டின்

(அழுதபடியே)

அடக்கடவுளே! ஆமாம்.

திரை கருமையாகிறது.

-தொடரும்.