அங்கே சொற்களுக்கு அவசியமில்லை

1 comment

வெற்றிடம் – அம்ருதா ப்ரீதம் (Amrita Pritam)

இரண்டு இராஜ்ஜியங்கள் மட்டுமே அங்கேயிருந்தன.

முதலாவது அவனையும் என்னையும் வெளியேற்றியது.

இரண்டாவதை நாங்கள் புறக்கணித்தோம்.

வெறுமையான வானத்தின் கீழ்

நான் நெடுங்காலமாக 

என் மேனியின் பொழிவில் மூழ்கிப்போயிருந்தேன்.

அவனோ தனது ஈரத்தில் அழுகிக்கொண்டிருந்தான்.

பிறகு வருடக்கணக்கான நேசத்தை விஷத்தைப் போலப் பருகியவன்,

தனது நடுங்கும் கைகளால் எனது கரத்தைப் பற்றியவாறு சொன்னான்

“அதோ,நமக்கு முன்பாக, உண்மைக்கும் பொய்க்குமிடையே  சிறியதொரு வெற்றிடம் இருக்கிறதே அங்கே, 

நம் தலைகளுக்கு மேலாக

ஒரு கூரையை வனைந்துகொள்வோம்,வா!”

*

எப்படி விடைபெறுவது என்று நமக்குத் தெரியவில்லை – அன்னா அக்மதோவா (Anna Akhmatova)

எப்படி விடைபெறுவது என்று தெரியாமல்

நாம் தோளோடு தோள் சேர்ந்தபடி அலைகிறோம்.

அந்தி, முன்னதாகவே இருண்டுகொண்டிருந்தது.

நீ எதோ யோசனையில் ஆழ்ந்திருக்க

நான் மெளனமானேன்.

நாம் தேவாலயம் ஒன்றிற்குப் போகலாம்

ஒரு திருமணம், பெயரிடுதல்,நல்லடக்கம்

எதையேனும் காண்போம்.

பிறகு ஒருவரை ஒருவர்

ஏறெடுத்தும் பாராமல் அங்கிருந்து கிளம்புவோம்

என்ன குறை நமக்கு?

அல்லாது போயின்

கல்லறைத் தோட்டமொன்றிற்குச் செல்வோம்

மெதுவாக மூச்செறிந்தவாறு

இறுகி உறைந்துவிட்ட பனி மீது அமர்வோம்.

ஒரு சிறிய குச்சியால்

மாட மாளிகைகளை நீ வரைவாய்

அங்கே நாம் எப்போதும் சேர்ந்திருப்போம்.

*

கனவில் – அன்னா அக்மதோவா (Anna Akhmatova)

இருண்டதும் நீடிக்கக்கூடியதுமான

இப்பிரிவினை சரிசமாக உன்னோடு பகிர்ந்துகொள்கிறேன்.

எதற்காக அழுகிறாய்?

உனது கையைக் கொடு

திரும்ப வருவேனென உறுதியளி.

நீயும் நானும்

நெடிதுயர்ந்த மலைகளைப் போன்றவர்கள்

நெருங்கி வர இயலாது.

எப்போதாவது எனக்கு செய்தி அனுப்புநள்ளிரவில் நட்சத்திரங்கள் வழியாக.

*

ஈடேற்றம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி (Charles Bukowski)

வான்கா

தனது காதை அறுத்து

விலை பெண்னொருத்தியிடம் கொடுக்க,

அவளோ 

அளவிறந்த அருவருப்போடு

அதைத் தூர எறிகிறாள்.

வான்,

விலைப் பெண்டிர்

காதுகளை விரும்புவதில்லை;

அவர்கள் வேண்டுவது

பணத்தை.

நிறைய விஷயங்களை

நீ புரிந்துகொள்ளவில்லை

என்றே எண்ணுகிறேன்.

அதனால்தான்

அவ்வளவு பெரிய ஓவியனாக உன்னால்

ஆக முடிந்தது.

*

தெரிவு – எஸ்ரா பவுண்ட் (Ezra pound)

தேவதைகளைக் காட்டிலும்

தெய்வங்களே அதிகமும்

உனக்கு நலம் பயப்பனயென

நீ கூறுவது மெய்யாக இருக்கலாம்.

ஆயினும் அதற்கும் மேலாக

அரியதொரு வெண்புரவியின் மீது

ஒரு கதையில் வரும் விசித்திரமான அரசியென

நானுன்னைக் கண்டேன்.

*

கைதி – கமலா தாஸ் (Kamala Das)

தண்டனைக் கைதியொருவன்

தனது சிறையின் நிலவியலைக்

கற்றறிவதுபோல

அன்பே!

உனது உடலின் கண்ணிகளை

உற்றறிகிறேன்.

அதன் வலையினின்றும்

தப்பும் வழியை என்றேனும்

கண்டறியவும் செய்வேன்.

*

உனது பெயர் – மரினா ஸ்வெடேவா (Marina Tsvetaeva)

உனது பெயர்-என் கையிலிருக்கும் பறவை;

என் நாவின் மீதுறையும் பனிக்கட்டி;

உதடுகளின் சிணுக்கம்.

உனது பெயர்-ஐந்து அசைகள்

பறந்தெழுகையில் பிடிபட்ட பந்து;

என் வாயினுள் ஒரு வெள்ளி மணி

அமைதியான நீர்நிலையில் எறியப்படுமொரு கல் 

ஒலிக்கிறது உனது பெயரை.

இரவுகளில் மிதமாக விரையும் குளம்பொலி

உனது பெயர்-

எனது நெற்றிக்கு நேராகக் குறிவைக்கப்பட்ட 

துப்பாக்கி விசையின் கிறீச்சிடல்

உனது பெயர்- 

அசாத்திய நிகழ்வு

என் கண்களின் மீது மெத்திட்ட முத்தம்

மூடிய இமைகளின் மீதிறங்கும் குளிர்ச்சி

உனது பெயர்-

ஒரு பனி முத்தம்.

குளிர்ந்த ஊற்று நீரின் நீல மிடறு.

உனது பெயருடன் அடர்கிறது உறக்கம்.

*

நீரின் திறவுகோல் – ஆக்டேவியா பாஸ் (Octavio Paz)

ரிஷிகேசத்திற்குப் பிறகும்

பசுமையாகவே இருக்கிறது கங்கை.

சிகரங்களுக்கு நடுவே உடைகிறது

கண்ணாடித் தொடுவானம்.

பளிங்கின்மீது நாம் நடக்கிறோம்

மேலும் கீழும்

அமைதியின் பெரும் குடாக்கள்.

நீலவெளியிடையே

வெண் பாறைகளும் கருமேகங்களும்

நீ சொன்னாய், “இது ஊற்றுகளால் நிரம்பியிருக்கும் நிலம்.”

அன்றிரவு உன் முலைகளில்

என் கைகளைக் கழுவினேன்.

*

எப்போதும் – பாப்லோ நெருடா (Pablo Neruda)

என் முன்னால் வந்தது

எதுவாயினும் நான் பொறாமைப்படவில்லை;

உனது தோளில்

ஒருவனுடன் வா!

நூறு பேரை

உனது கூந்தலிலும்

ஆயிரம் பேரை

உனது மார்பிற்கும் கால்களுக்குமிடையிலும்

கொண்டுவா!

மூழ்கிய மனிதர்களால் நிரம்பிய

ஒரு நதியைப் போல

கடலை நோக்கி,

காலத்துடனான

முடிவற்ற கலத்தலுக்காக

அவர்களனைவரையும் சுமந்து வா!

உனக்காக நான் காத்திருக்குமிடத்திற்கு;

எப்போதும் அங்கே தனித்திருப்போம்!

நீயும் நானுமாக

இப்புவியில் நமது வாழ்வைத்

தனியே தொடங்குவோம்!

*

பணி ஓய்வு – டி. பி. ராஜீவன் (T. P. Rajeevan)

நானொரு கடவுளாக இருந்தால்

இன்னொரு கடவுளைப் படைத்து,

கடவுளுக்குரிய எனது கடமைகளையெல்லாம் 

அவரிடம் ஒப்படைத்துவிட்டு,

ஓய்வாக அமர்ந்து

உனது கண்களை

உற்றுப் பார்த்தவாறு இருப்பேன்!

1 comment

Geetha Karthik netha March 2, 2022 - 4:45 pm

♥️

Comments are closed.