தாரிணியின் சொற்கள்
என்னிடம் உள்ள மிருக குணத்தை என் குருவோ அவரின் மனைவியோ அறியமாட்டார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. குரு என்றால் வயதானவர் என்று நினைத்துவிட வேண்டாம். அவருக்கு நாற்பது வயதும் அவர் மனைவிக்கு முப்பத்து ஐந்து வயதும் இருக்கலாம்.
என் தந்தை என் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். எனக்குப் படிப்பு ஏறவில்லை. நான் பாட்டுப் பாடுவதைக் கேட்டு என் சித்தப்பா என்னைக் கொண்டுவந்து பாடகர் ரவிகிருஷ்ணாவிடம் சேர்த்துவிட்டார். நான் அவருக்கு உதவியாளன் போல இருந்தேன். மாடியில் ஓர் அறை இருந்தது. அதை எனக்கு ஒதுக்கியிருந்தார்கள். மாடிப்படி வீட்டிற்கு வெளியே இருந்தது. பலசரக்கு முதல் வீட்டுக்குத் தேவையானவற்றை நான் கடைகளுக்குப் போய் வாங்கி வருவேன். காலையில் சில நாட்கள் பாட்டு சொல்லிக் கொடுப்பார். சில நாட்கள் பாட்டு சொல்லிக் கொடுக்காமல் இருந்துவிடுவார். என்றைக்குச் சொல்லிக்கொடுப்பார் என்று என்னிடம் சொல்லமாட்டார். நான் குளித்து நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு மாடியிலிருந்து இறங்கி ஹாலுக்கு வருவேன். அப்போது, “இன்றைக்குப் பாட்டு இல்லை” என்பார். அவர் மனநிலையைப் பொறுத்தது. ஆனால் ஒரு மாதத்தில் ஓரிரு நாட்கள் தவிர பிற நாட்களில் அவர் நினைத்த நேரத்தில் சாதகம் பண்ணுவார். புதிய பாடல்களைப் பாடிப் பார்ப்பார். மனனம் பண்ணுவார். நான் ஒரு மூலையில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருப்பேன். சில நாட்கள் என்னைப் போய்விடுமாறு சைகை செய்வார். நான் மாடிப்படியில் அமர்ந்து காதைக் கூர்மையாக்கி அவர் பாடுவதைக் கேட்டுக்கொண்டிருப்பேன்.
என் குருவின் குரல் மயக்கம் தருவது. கர்நாடக சங்கீதத்திற்கே உரிய குரல். அவருடைய மனைவி மேடைகளில் பரத நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தவர் என்று சொல்வார்கள். அவள் பெயர் தாரிணி. அவள் ஏற்கெனவே திருமணம் ஆனவள் என்றும் சொல்வார்கள். என் குருவின் முதல் மனைவி ஊரில் இருக்கிறார். அவரைப் பற்றி இங்கு யாருக்குமே தெரியாது. தாரிணியின் உறவினர்கள் சிலர் அவளைப் பார்க்க இங்கு வந்து நான் பார்த்திருக்கிறேன்.
மாலை நேரம். நான் மாடிப்படியில் உட்கார்ந்திருந்தேன். அடைக்கப்பட்ட வீட்டின் அறையில் பாட்டுச் சத்தம் கேட்டது. என் குரு பாடிக்கொண்டிருந்தார். சலங்கைச் சத்தம் கேட்டது. எம்.கே.டி. பாகவதரின் பாட்டு.
‘புஜமிரண்டும் ஊஞ்சல்
தளர்நடை அஞ்சி
புருவம் இடையுடனே
வளையுமே கெஞ்சி
அதிக தன்மையில்
கை தேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது
நாட்டைக் குறிஞ்சி’
இந்தப் பாட்டுக்குத் தாரிணி எப்படி நடனம் ஆடுவாள் என்று நான் கற்பனை செய்துகொண்டிருந்தேன். குரு திரும்பத் திரும்ப இந்த வரிகளைப் பாடிக்கொண்டிருந்தார். தாரிணியும் விதம் விதமாக பாவனை காட்டிக்கொண்டிருப்பாள் என்று நான் நினைத்தேன்.
பாட்டு நின்றது. நான் மாடிப்படியில் ஏறி என் அறைக்குச் சென்றேன். அந்தப் பாட்டை முணுமுணுத்துக்கொண்டிருந்தேன். தாரிணி ஒருபோதும் குண்டாக முடியாத உடல்வாகு உடையவள். கைகள் கால்கள் நீளமாக இருப்பதாகத் தோன்றும். தோள்கள் வாளிப்பானவை. ரவிக்கையிலிருந்து கழுத்து வரையான தோள் பகுதி பளபளப்பாக மின்னும். அவளது நிறம் மஞ்சள்.
வழக்கமாக காலை உணவு வாங்குவதற்காக மாடியிலிருந்து கீழே இறங்கி வருவேன். தயாராக வைத்திருக்கும் டிபன் கேரியரைத் தாரிணி என்னிடம் கொடுப்பாள். நான் டிபனைச் சாப்பிட்டுவிட்டு டிபன் கேரியரைக் கழுவி கீழே ஹாலில் உள்ள ஸ்டூலில் வைத்துவிட்டு வந்துவிடுவேன். இதே போல்தான் மதியமும் இரவும்.
குருவிடம் பாட்டு கற்றுக்கொண்டிருக்கும்போது அங்கும் இங்குமாகச் செல்லும் தாரிணி என் கண்களில் படுவாள். சரியாகக் கவனிக்க முடியாது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக என்னை அழைக்கும்போதுதான் அவளை நன்றாகப் பார்க்க முடியும். மனம் கிளர்ச்சியடையும். குருவின் மனைவி என்ற நினைப்பு வந்து கிளர்ச்சியை மறிக்கும். குரு இல்லாத நேரத்தில் ஏதாவது அசம்பாவிதத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்று என் மனதிற்குள் அச்சம் ஏற்படும்.
குரு வீட்டில் இல்லை. தாரிணி என்னை அழைத்தாள். நான் சென்றேன். சில பலசரக்குப் பொருட்களை வாங்கிவரச் சொன்னாள். நான் வாங்கிவந்து கொடுத்தேன். என்னை நாற்காலியில் அமரச் சொன்னாள். அமர்ந்தேன்.
“எப்போது பாட்டு கற்றுக்கொள்வது முடியும்?” என்றாள்.
“தெரியாது” என்றேன்.
“நீ வீட்டிலிருந்து சென்றுவிடு. ஏதாவது காரணத்தைச் சொல்லி இங்கிருந்து சென்றுவிடு.”
“சரி” என்றேன்.
நான் குருவிடம் காரணம் ஏதும் சொல்லவில்லை. இரவில் சொல்லிக்கொள்ளாமல் என் உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு நீங்கினேன்.
*
மகத்தான சக்தி
இளங்கோவைக் கொன்றுவிடுவது என்று நான் முடிவுசெய்திருந்தேன். சுகுமார் அறைக்குள் வந்து, என்னைப் பார்க்க ஒரு பெண் வந்திருப்பதாகக் கூறினான். என்னை எதற்காக ஒரு பெண் பார்க்க வந்திருக்கிறாள் என்று எனக்குக் குழப்பம் ஏற்பட்டது.
“வயதானவரா?” என்று கேட்டேன்.
“கொஞ்ச வயசுதான்” என்றான் சுகுமார்.
மேசையிலிருந்த டிராயரை இலேசாகத் திறந்தேன். துப்பாக்கி இருந்தது. கூர்மையான கத்தியும் இருந்தது.
“சரி. அந்தப் பொண்ணை வரச்சொல்லு” என்றேன்.
சுகுமார் அந்தப் பெண்ணுடன் அறையில் நுழைந்தான். அந்தப் பெண் மாநிறமாக உயரமாக இருந்தாள். சேலையில் இருந்தாள். சுகுமார் அறையிலிருந்து வெளியேறினான்.
உட்காரச் சொல்லி, “என்ன விஷயம்?” என்று அவளிடம் கேட்டன்.
“நான் இளங்கோவின் மனைவி. அவரைவிட உங்களுக்கு ஆள் பலமும் பண பலமும் ஜாஸ்தி. அவரை ஒன்னும் செஞ்சுராதிங்க. எனக்குத் தாலிப்பிச்சை கொடுங்க” என்று தாலியை வெளியே எடுத்துக் காண்பித்தாள்.
நான் “உள்ளே போடு” என்று அதட்டலாகக் கூறினேன். அவள் சேலைக்குள் திரும்பப் போட்டுக்கொண்டாள்.
“நான் இளங்கோவையும் அவன் மனைவியையும் ஒரு கல்யாண வீட்லே பாத்துருக்கேன். ஏங்கிட்டே பொய் சொல்லாதே.”
“நானும் அவர் மனைவிதான். நாலாவது மனைவி. லேட்டஸ்டா கலியாணம் பண்ணிக்கிட்டார்.”
“நாலாவது மனைவியா? எனக்கு ரெண்டு மனைவிதான்” என்றேன்.
“நீங்க நெனைச்சா அஞ்சு, ஆறு பேரைக்கூட கலியாணம் பண்ணிக்கிடலாம்” என்றாள்.
இப்படிப் பேசும் பெண்களிடம் ஆண்கள் கவிழ்ந்துவிடுவார்கள் என்று நான் அறிவேன்.
“இளங்கோதான் உன்னை அனுப்பிச்சானா? என் வழியிலே குறுக்கே வந்துகிட்டே இருக்கான். என் ஆளுங்களை அவன் ஆளுங்க ரெண்டு மூணு தடவை அடிச்சிருக்காங்க. ஆள் தெரியாம வெளையாடறான்.”
“மன்னிச்சு விட்ருங்க. அவர் ரொம்ப பீல் பண்றாரு. உங்கள தேவையில்லாம பகைச்சுக்கிட்டேன்னு புலம்பிக்கிட்டே இருந்தாரு. நான் போய் பேசிப் பார்க்கவான்னு கேட்டேன். யோசிச்சிட்டு சரி போய் பாத்துட்டு வா, சமாதானமா போயிருவோம், நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லுன்னு எங்கிட்டே சொல்லி அனுப்பி வச்சார்.”
“உன்னை எப்படி அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்?”
“சார்… என் அப்பா எனக்கு சின்ன வயசிலேயே இறந்துபோயிட்டார். எனக்குக் கீழே ரெண்டு தம்பிக. அம்மா நோயாளி. பல வீட்லே வேலை பாத்து எங்களைக் காப்பாத்துச்சு. நான் ஒரு ஜவுளிக்கடையிலே வேலை பாத்தேன். ஒரு புரோக்கர் மூலமா அமைஞ்சுது. எங்களுக்குச் செலவே இல்லை சார்… எல்லாத்தையும் அவரே பாத்துக்கிட்டாரு. எங்களுக்கு பெரிய வீடு பாத்துக் கொடுத்து நான், அம்மா, தம்பிக அந்த வீட்லேதான் குடியிருக்கோம். அவர் வந்து தங்கிட்டுப் போவாரு.”
“இது ஒரு பக்கம் இருக்கட்டும். அவன் ஏன் நாலு கலியாணம் பண்றான்?”
“சார்… ஒரு சாமியாரு அவர்கிட்டே சொன்னாராம். நாலு கலியாணம் பண்ணிக்க, நாலாவது பெண்டாட்டி மூலம் உனக்கு அதிர்ஷ்டம், பணம், செல்வாக்கு எல்லாம் உச்சத்துக்குப் போகும்ன்னு. அதனாலே என்னைக் கலியாணம் பண்ணிக்கிட்டாரு சார். குறை ஒன்னும் இல்லை சார். அவரை ஏதாவது பண்ணிராதிங்க சார். அதுக்காகத்தான் நான் வந்தேன். கெஞ்சிக் கேட்டுக்கறேன். நாங்க இப்பத்தான் நல்லா சாப்பிடறோம். அதுக்கும் கேடு வந்துடக் கூடாது சார்…”
“சரி. நாலாவதா கலியாணம் பண்ணிக்கிட்டான். வாழ்க்கையிலே உச்சத்துக்குப் போயிட்டானா?”
“கலியாணம் பண்ணி கொஞ்ச காலந்தானே ஆச்சு. இனி கொஞ்சம் கொஞ்சமாத்தானே சார் உச்சத்துக்குப் போவாரு.”
எனக்குச் சிரிப்பு வந்தது. சிரித்துவிட்டேன். அவள் என் கண்களைப் பார்த்துதான் பேசிக்கொண்டிருந்தாள்.
நான், “காபி குடிக்கிறியா?” என்றேன். அவள் தலையாட்டினாள். நான் காபி கொண்டுவரச் சொன்னேன்.
எனக்கு அவளைக் கட்டி அணைத்துக்கொள்ளலாம் என்று தோன்றி, அந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டிருந்தேன். காபி வந்தது. காபி குடிக்கச் சொன்னேன். குடித்தாள்.
“சார், உங்களைப் பாத்தா நல்லவராத் தெரியுது. அவரை ஒன்னும் செஞ்சுராதிங்க” என்றாள்.
“சரி. என் வழிக்கு வரக்கூடாதுன்னு அவன்கிட்டே சொல்லு.”
“சொல்றேன் சார்.”
“சரி. நீ போகலாம். எனக்கு வேற வேலை இருக்கு.”
அவள் எழுந்து கையை ஆட்டி விடைபெற்றுக்கொண்டு கதவைத் திறந்து வெளியேறினாள்.
பெண் மகத்தான சக்தி என்று எனக்குத் தோன்றியது. இளங்கோவை நான் கொல்லப்போவதில்லை என்று முடிவெடுத்தேன்.