ஓசியானின் கவிதை (Ossian) கதேயைப் பெரிதும் பாதித்திருப்பதை “The Sorrows of Young Werther” நாவலின் போக்கில் நம்மால் உணரமுடியும். ஓசியான் ஒரு ஐரிஷ் கவிஞர். போர் சாகசங்களையும் வீர மரணங்களையும் குறித்துப் பெருமளவு பாடிய இவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக் கவிஞர் என்று கருதப்படுகிறார். ஸ்காட்லாந்தின் கெய்லிக் என்ற புராதன மொழியில் எழுதப்பட்டிருந்த இவருடைய கவிதைகளைக் கண்டுபிடித்து உலகிற்குத் தந்தவர் ஸ்காட்லாந்தின் பிரபல கவிஞர் ஜேம்ஸ் மக்பெர்சன் (James Macpherson) ஆவார்.

ஜேம்ஸ் மக்பெர்சன்

1760ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் பழங்கவிதைத் திரட்டொன்றைப் பதிப்பித்த மக்பெர்சன், 1762ஆம் ஆண்டு ஓசியான் எழுதிய ‘பிங்கல்’ காவியத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டார். இது ஹோமரின் காவியங்களுக்கு இணையாகக் கருதப்படுகிறது. 1765ஆம் ஆண்டு ஓசியானின் மொத்தத் தொகுப்பையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மக்பெர்சன் வெளியிட்டார். இக்கவிதைகள் ஐரோப்பாவில் பெருமளவு பிரபலமாகி அன்றைய கற்பனாவாதக் கவிதைகளைப் பாதித்தன. ஆனால் சாமுவேல் ஜான்சன் 1778இல் ஓசியான் எழுதியதாகச் சொல்லப்படும் கவிதைகளில் பெருமளவு மக்பர்சனே எழுதியவை என்று தன் சந்தேகத்தை வெளியிட்டபோது ஐரோப்பிய கவிதை உலகில் பெரும் சர்ச்சைகளும் விவாதங்களும் நடந்தன.

*

என்னிடம் எந்தத் தவறும் இல்லை என்ற லாதேவினுடைய தூயமனம் அவளுடைய சுயமரியாதையை உசுப்பிவிட்டது. ஆல்பர்ட்டின் குழப்பமான மனப்போக்கைக் கண்டுகொள்ளக்கூடாது என்று தீர்மானித்தாள். அவளுடைய மனத்தூய்மை அவளுக்குத் திடமளித்தது. எனவே வேலைக்காரியை அறைக்குள் அழைக்க நினைத்திருந்த அவள் அப்படிச் செய்யாமல் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக கொஞ்ச நேரம் ஹார்பிகார்டை வாசித்தாள். தனது மனக்குழப்பத்தைச் சரிப்படுத்திக்கொண்டாள். அமைதியாக சோபாவில் வெர்தரின் அருகில் அமர்ந்தாள். ‘உன்னிடம் படிப்பதற்கு ஒன்றுமில்லையா?’ என்று கேட்டாள். அவனிடம் ஒன்றும் இருக்கவில்லை. ‘ஓசியானின் பாடல்கள் சிலவற்றை நீ மொழிபெயர்த்திருந்தாயே? அவை அதோ என் மேசையில் இருக்கின்றன. நான் இன்னும் படிக்கவில்லை. நீ வாசித்துக் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் வெகுநாட்களாகவே நீ எதற்கும் லாயக்கில்லாதவனாகிவிட்டாய்’ என்றாள்.

அவன் மெல்லச் சிரித்தான். அந்தப் பாடல்களை எடுத்து வந்தான். அவற்றைக் கையில் எடுத்துக்கொண்டபோது ஒரு நடுக்கம் உடலெங்கும் பரவியோடியது. கண்ணில் நீர் ததும்பியது. அமர்ந்து வாசிக்கத் தொடங்கினான்.

*

ஸெல்மாவின் பாடல்கள்

சரியும் இரவு நட்சத்திரமே! 

மேற்கில் உன் குன்றிய ஒளி. 

மேகத்திலிருந்து தலை நிமிர்த்துகிறாய். 

மலைப்பாதையில் அசைவற்ற உன் காலடிகள். 

சமவெளியில் என்ன பார்க்கிறாய் நீ? 

சூறாவளி அடங்கிவிட்டது. 

தொலைவில் காட்டாற்றின் சலசலப்பு. 

நெடிய பாறைகளில் தாவியேறும் அலைகளின் சீற்றம்.

வயல்வெளிகளில் உதிரும் சிறகுகளுடன் ஈசல்களின் ரீங்காரம். 

மஞ்சள் வெயிலே, 

உன் ஒளி சொல்வதென்ன? 

உன் புன்முறுவல்தான் பதிலா? 

விடைபெற்றுப் போகிறாய். 

அலைகள் உனைக் குதூகலத்துடன் சூழ்கின்றன. 

உன் அழகிய கூந்தலை அவை அலசுகின்றன. 

மெளன ஒளியே, போய்வருகிறேன், 

ஓசியானின் ஆன்மஒளி உதிக்கட்டும். 

ஒளி தன் உறுதியிலிருந்தே எழுகிறது. 

பிரிந்த என் நண்பர்களைப் பார்க்கிறேன். 

முன்போலவே அவர்கள் லோராவில் குழுமியிருக்கிறார்கள். 

பனித்திரை போல ஃபிங்கெல் தோன்றுகிறான். 

அவனது வீரர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். 

அதோ நாடோடிப் பாடகர்கள்

ஃபிடில் மீட்டி பாடும் நாடோடிகள்! 

நரை விழுந்த உலினைப் பாருங்கள். 

இதோ உறைந்த ரய்னோ! 

இனிய குரலுடன் அல்பின்! 

மினோனாவின் மெல்லிய புலம்பல்கள்…!  

பாறைகளை உரசியபடி 

இன்னொலி எழுப்பும் புற்களை 

வளைத்து வீசும் இளவேனிற் காற்றுபோல 

பூரிப்புடன் திரிந்த நீங்கள் எல்லோரும் 

ஸெல்மாவின் விருந்திற்குப் பிறகு மாறிப் போனீர்கள். 

நிலம் கவிந்த பார்வையும் நீர்கோர்த்த கண்களுமாய் 

அழகிய மினோனா வருகிறாள். 

மலைகளிலிருந்து விட்டுவிட்டு விரையும் காற்றில் 

அவளது கூந்தல் மெல்ல அலைகிறது. 

அவள் இனிய குரலில் பாடும்போது 

வீரர்களின் இதயங்கள் துயர் கொண்டன. 

வெண்முலைக் கோல்மாவின் இருண்ட வசிப்பிடம் 

சல்காரின் கல்லறைதான். 

அதனை அவர்கள் பலமுறை கண்டிருக்கிறார்கள். 

மலைகளின் மீது கோல்மா, 

இனிய குரலுடன் தனியே திரிகிறாள். 

சல்கார் வருவதாக உறுதியளித்திருந்தான். 

ஆனால் இரவு கவிந்துவிட்டது. 

மலையின் தனிமையில் காத்திருக்கும் கோல்மா 

இதோ பாடுகிறாள்.

*

கோல்மா

இந்த இரவில் தனித்திருக்கிறேன்

புயலடிக்கும் மலை மீது தனித்திருக்கிறேன்.

காற்று மலைகளின் மீது உரத்து வீசுகிறது.

காட்டாற்று வெள்ளம் பாறையில் மோதி வழிகிறது.

மழையிலிருந்து ஒதுங்கிக்கொள்ள எனக்கு

எந்தக் குடிசை வாசலும் திறக்கவில்லை.

காற்றடிக்கும் இந்த மலை மீது தனித்திருக்கிறேன்.

நிலவே, மேகங்களின் பின்னிருந்து வெளியே வருக.

இரவின் மீன்களே, விழித்தெழுக!

விரட்டும் இத் தனிமையிலிருந்து

என் காதலன் உறைவிடத்துக்கு செல்ல

ஒளி காட்டுக, வழி நடத்துக.

நாணேற்றாத அவனது வில் அருகில் கிடக்கிறது.

நாய்கள் அவனைச் சுற்றிக் குழைந்துத் திரிகின்றன.

ஆனால் நான் மட்டும் இங்கே

சீறும் நீரோடை அருகே இந்தப் பாறைமீது

தனிமையில் அமர்ந்திருக்கிறேன்.

குழறும் நீரோடை. காற்றின் பேரோலம்.

என் காதலன் குரலை என்னால் கேட்கமுடியவில்லை.

மலைகளின் அரசனான என் சல்கார் ஏன் இன்னும் வரவில்லை?

வருவதாய் வாக்களித்தவனுக்கு இன்னும் ஏன் தாமதம்?

இதோ இங்கே பாறையும் மரமும் பாயும் நீரோடையும். 

இன்றைய இரவில் இங்கே வருவதாகத்தானே சொன்னான்?

ஐயோ! என் சல்கார் எங்கே போய்விட்டான்?

என் தந்தையை விட்டும், கெளரவமிக்க அண்ணனை விட்டும் 

நான் உன்னுடன் வந்துவிடுவேன்.

வெகுகாலமாக நம் இனங்கள் விரோதிகள்தான் சல்கார், 

ஆனால் நாம் பகைவர்கள் அல்ல.

காற்றே, சற்று நேரம் பேசாமலிரு.

நீரோடையே, நீயும் கொஞ்சம் சலசலக்காமலிரு.

என் குரல் கேட்கட்டும்.

தேடித் திரியும் என் காதலனுக்கு என் விளிக்குரல் கேட்கட்டும்.

கோல்மாதான் அழைக்கிறேன் சல்கார்,

இதோ நீ சொன்ன இந்த மரத்தருகில் பாறைக்கருகில்

சல்கார், என்னுயிரே, இதோ நான் இங்கிருக்கிறேன்.

நீ வராமல் இன்னும் ஏன் தாமதிக்கிறாய்?

இதோ பார், சாந்தமாய் நிலவு உதித்துவிட்டது.

பாயும் வெள்ளம் ஒளி கொள்கிறது.

பாறை முகடுகள் சாம்பல் வண்ணத்தில் மின்னுகின்றன.

கண்தொடும் தொலைவுவரை அவனைக் காணவில்லை.

அவன் வருகையை முன்னறிவிக்க 

குரைத்தபடியே வரும் அவனது நாய்களையும் காணவில்லை.

இங்கே, நான் இன்னும் தனிமையில் காத்திருக்கவேண்டும்.

இதோ இந்தப் பாழ் நிலத்தில் யார் கிடக்கிறார்கள்?

என் காதலனும் அண்ணனும்தானா?

நண்பர்களே, சொல்லுங்கள். 

கோல்மாவுக்கு அவர்கள் பதில் சொல்லவில்லை.

என்னிடம் பேசுங்கள். நான் தனித்திருக்கிறேன்.

என் இதயம் அச்சத்தில் நொய்ந்துபோய்விட்டது.

ஐயோ, அவர்கள் மாண்டு போயினர்.

மோதிய அவர்கள் வாட்கள் சிவந்துகிடக்கின்றன.

அண்ணா, என்னருமை அண்ணா! 

நீயேன் என் சல்காரைக் கொன்றாய்?

ஓ சல்கார், நீ ஏன் என் அண்ணனைக் கொன்றாய்?

நீங்கள் இருவருமே என் உயிருக்கு நிகர். 

யார் சிறந்தவர் என்று நான் எப்படிச் சொல்வது?

இம் மலைவாசிகள் ஆயிரம் பேரில் நீயே அழகானவன்.

என் அண்ணனோ வாள் வீச்சில் வல்லவன்.

இதோ நான் அழைக்கிறேன். என் குரல் கேட்கிறதா?

என் அன்பானவர்களே, நான் அழைப்பது தெரிகிறதா?

அவர்கள் மெளனமாய் இருக்கிறார்கள். 

எப்போதைக்குமாய் மெளனம் கொண்டுவிட்டார்கள்.

மண்ணோடு அவர்களது இதயங்கள் உறைந்துபோய்விட்டன.

மலை மீதிருக்கும் பாறைகளிலிருந்து,

காற்று சுழன்றடிக்கும் வரைகளிலிருந்து

இறந்தவர்களின் ஆவிகளே, பேசுங்கள்.

பேசுங்கள், நான் அஞ்சமாட்டேன்.

ஓய்வெடுக்க நீங்கள் எங்கே சென்றீர்கள்?

எந்தக் குகையில் பிரிந்தவர்களை நான் கண்டுபிடிக்க?

இந்தக் கடுங்காற்றில் முனகும் குரல்கள் புதைந்துபோகின்றன.

காற்றின் ஓலத்தில் அரைகுறைப் பதில்களும் அமுங்கிப்போகின்றன.

துயரே இருப்பாய் அமர்ந்திருக்கிறேன் நான்.

விடியலுக்காக அழுதபடியே காத்திருக்கிறேன்.

கல்லறையின் அருகில் சோகமாய் சூழ்ந்திருக்கும், 

இறந்தவரின் நண்பர்களே! 

கோல்மா வரும்வரை அதை மூடிவிடாதீர்கள்.

என் வாழ்க்கை ஒரு கனவைப்போல 

எனை விட்டுப் பறந்து போகும்போது

நான் மட்டும் ஏன் இங்கே காத்திருக்கவேண்டும்?

பாறையை அறைந்து புலம்பும் இந்த ஓடையின் அருகிலேயே

நானும் நேசித்தவர்களுடன் சேர்ந்துவிடுகிறேன்.

மலை மீது இரவு கவியும் வேளையில்

ஓலமிடும் காற்று விரைந்து வீசும்போது

என் ஆவி அந்தக் காற்றினூடே நின்று

என் நேசர்களின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தட்டும்.

வேடன் தன் குகையிலிருந்து என் குரலைக் கேட்கட்டும்.

என் அழுகுரல் கேட்டு அவன் அஞ்சக்கூடும், 

ஆனாலும் என் குரலைக் கேட்கவே அவன் விரும்புவான்.

நண்பர்கள் அனைவருக்கும் என் குரல் இனிமையானதே!

*

மெலிதாய் நாணும் மினோனா, டார்மனின் மகளே, 

உனது பாடல் அப்படித்தான் இருந்தது.

கோல்மாவுக்காக நாங்கள் கண்ணீர் உகுத்தோம்,

எங்கள் இதயங்கள் துயர்கொண்டன.

உலின் தன் ஃபிடிலுடன் வந்தான். 

ஆல்பின் இன்குரலில் கீதங்களைப் பாடினான்.

ரய்னோவின் இதயமோ தீக்கொழுந்து.

ஆனால் குறுகிய இடத்தில் அவை உறைகின்றன.

அவர்களது குரல்கள் ஸெல்மாவில் உறைந்துவிட்டன.

வீரர்கள் எல்லோரும் வீழ்வதற்கு முன்பு ஒருநாள்

உலின் தான் தேடுவதை விட்டுவிட்டுத் திரும்பி வந்தான்.

மலையின் மீதிருந்து எழுந்த அவர்களின் கூக்குரலைக் கேட்டான்.

அவர்கள் பாடல் இரங்கல் துயர் கொண்டிருந்தது.

மாண்டவர்களின் முதல்வன் மோராருக்காகத் துக்கம் காத்தனர்.

அவனுடைய இதயம் ஃபிங்கலின் இதயம் போன்றது.

மோராரின் வாள் ஆஸ்கரின் வாளைப் போன்றது. 

ஆனால் அவன் வீழ்ந்துவிட்டான். 

அவனுடைய தந்தை துயர்கொண்டார்.

அவருடைய தங்கையின் கண்கள் நிரம்பின.

தேரோட்டியான மோராரின் தங்கை மினோனாவின் 

கண்களும் கண்ணீர் உகுத்தன.

மழை வரும் என்று தெரிந்ததும் மேற்கே நிலவு 

முகிலின் பின் முகம் மறைத்துக் கொள்வதுபோல

உலின் பாடிய பாடலில் அவள் தன்னையே மறைத்தாள்.

உலினது ஃபிடிலை நான் தொட்டேன்.

துக்கம் காக்கும் ஒரு மலரின் கீதம் துயருடன் எழுந்தது.

*

ரைனோ

காற்றும் மழையும் ஓய்ந்துவிட்டன.

உச்சிவேளை அமைதியில் ஆழ்கிறது.

மேகங்கள் சுவர்க்கத்தில் ஒதுங்கிவிட்டன.

பசுமை கொஞ்சும் மலைகளின் மீது 

நிலையற்ற ஆதவன் அலைகிறான்.

பளிங்குப் பாறைகள் செறிந்த பள்ளத்தில் விழுந்து வரும் 

மலையோடை குருதிபோல் சிவந்து பெருக்கெடுக்கிறது.

ஓடையே, உன் புலம்பல்களைக் கேட்கிறேன்.

ஆனால் அதைவிட நான் கேட்கும் 

இக்குரல் இன்னும் துயர் தோய்ந்திருக்கிறது.

பாடல்களின் புதல்வனான ஆல்பினின் குரல்தான் அது.

இறந்தவர்களுக்காக அவன் பாடும் இரங்கல் அது.

மூப்படைந்த அவன் தலை தொங்கிக் கிடக்கிறது. 

கண்கள் அழுதழுது சிவந்திருக்கின்றன.

பாடல்களின் மகனே, ஆல்பின்! 

மெளனமான அந்த மலை மீது மட்டும் ஏன் பாடுகிறாய்?

அடர் கானகத்தில் அலையும் காற்றைப்போல

தனித்த கரையினில் தவழும் அலையைப்போல

நீயேன் வேதனையில் வேகிறாய்?

*

ஆல்பின்

ஓ ரைனோ! என் கண்ணீரெல்லாம் இறந்தவர்களுக்காக. 

அவர்களுக்காகவே என் பாடலும்.

மலையில் உனது வலிமை ஒப்பற்றது. 

இந்த நிலத்தின் இளைஞர்களிலேயே அழகானவன் நீ. 

ஆனால் மோராரைப் போல நீயும் வீழ்ந்திடுவாய். 

துக்கம் காப்பவன் உன் கல்லறையில் அமர்ந்திருப்பான்.

இந்த மலைகள் உன்னை இனி அறிந்திடாது.

உனது வில் வெறுமனே இனி உன் வீட்டில் கிடக்கும்.

ஓ மோரார்! தரிசில் ஓடும் மான் போல உன் வேகம்.

எரி நட்சத்திரத்தைப் போல சீறும் அது

புயலைப் போன்றது உன் சினம்.

போர்க்களத்தில் சுழலும் உனது வாள் வானத்து மின்னல்.

உனது குரல் மழைவெள்ள ஓடை.

தொலைதூர மலையில் கேட்கும் இடியோசையாய்

உன் ஆயுதங்களால் வீழ்ந்தவர் பலர்.

உன் சினத்தின் தீநாக்குகளால் வெந்தனர்.

ஆனால் போர்க்களத்திலிருந்து நீ திரும்பி வரும்போது

உன் கண்களில்தான் எத்தனை சாந்தம்! 

மழைக்குப் பிறகான சூரியன் உன் முகம். 

இரவின் அமைதியில் ஒளிவிடும் நிலவு அது.

உரத்தக் காற்று அடங்கிய பிறகான

ஏரியின் மார்பைப் போல அது அமைதி கொண்டிருக்கும்.

இப்போது உன் இருப்பிடம் மிகக் குறுகலானது.

நீ வசிக்குமிடம் இருள் சூழ்ந்தது.

மூன்றடிகளில் முடியும் உன் கல்லறையை நான் சுற்றி வருகிறேன்.

உன்னை விடச் சிறந்தவர் யார் இருக்க முடியும்?

பாசியடர்ந்த நான்கு கற்தூண்கள் மட்டுமே 

இப்போது உன் நினைவகம்.

இலை துளிர்க்காத ஒரு மரமும்

காற்றில் நீண்டசையும் புற்களும்தான் 

வேடனின் கண்களுக்கு

வெல்லற்கரிய மோராரின் கல்லறையை

அடையாளம் காட்டுகின்றன.

மோரார், உன் புகழில் பெருமைப்பட யாரும் மிஞ்சவில்லை.

உன்னை எண்ணி அழுதிட அன்னையும் இல்லை.

காதலுடன் உனையெண்ணிக் கண்ணீர்விடவும் ஒருத்தியில்லை.

உனக்காக அவள் கொண்டுவந்தது இந்த மரணம்தான்.

மார்கலானின் மகளும் விழுந்துபட்டாள்.

தன் படைகளுடன் வரும் இவன் யார்?

நரைத் தலையுடன் வரும் இவன் யார்?

அழுதழுது கண் சிவந்த இவன் யார்?

ஒவ்வொரு காலடிக்கும் குலுங்கியழும் இவன் யார்?

ஓ மோரார், அவர் உன் தந்தை.

வேறு யாருமல்ல, உன் தந்தைதான்.

போரில் உன் வீரத்தை அவர் கேட்டறிந்தார். 

ஆனால் நீ காயமடைந்ததை அவர் அறியவில்லையா?

மோராரின் தந்தையே, அழுங்கள். 

ஆனால் உங்கள் மகன் அதைக் கேட்கமாட்டான். 

இறந்தவர்களின் தூக்கம் ஆழமானது. 

மண்ணாலான தலையணையும் பூமியில் வெகு கீழே உள்ளது.

உங்கள் குரலை அவன் இனி ஒருபோதும் கேட்கமாட்டான்.

உங்கள் குரல் கேட்டு இனி விழிக்கவும் மாட்டான்.

கல்லறையில் தூங்கிக் கிடப்பவனை உணர்த்தும் எழுஞாயிறு

இனி உதிப்பது எப்போது?

வீரனே, போய் வா. 

செருக்களம் வென்றவனே, சென்று வா. 

ஆனால் போர்க்களம் இனி ஒருபோதும் உனைக் காணாது. 

அடர்ந்த இக்காடும் இனி உன் வாள்வீச்சால் ஒளிகொள்ளாது.

நீ எதையும் விட்டுச் செல்லவில்லை.

இந்தப் பாடலே உன் பெயரைப் பாதுகாக்கட்டும்.

எதிர்காலம் உனைக் கேட்டிருக்கும்.

வீழ்ந்த மோராரின் கதைகளை அவர்கள் கேட்டிருப்பார்கள்.

*

அனைவரது துக்கங்களும் பொங்கியெழுந்தன.

ஆனால் வெடித்தெழுந்தது ஆர்மினின் அழுகுரல்தான்.

இளமையிலேயே வீழ்ந்த தன் மகனின் மரணம் 

அவனுக்கு நினைவு வந்துவிட்டது.

கால்மல் நகரத் தலைவன் கார்மர் அருகில் இருந்தான்.

ஆர்மினின் அழுகை ஏன் இப்படி வெடிக்கிறது என்று கேட்டான்.

அழுவதற்கு ஏதும் காரணம் உண்டா?

இதயத்தை உருக வைத்து, ஆறுதல் சொல்ல

அந்தப் பாடல் வந்தது, இசையுடன்.

ஏரியிலிருந்து எழுந்து

ஓசையற்ற நிலத்தில் பொழியும்

பனியைப் போன்றது அது. 

பசுமையிலும் மலர்களிலும் அனைத்திலும் பனி படர்ந்துவிட்டது.

ஆனால் ஆதவன் தன் தீரத்துடன் எழுந்து வந்ததும்

பனி விலக மலர்கள் ஒளிர்ந்தன.

கடல் சூழ்ந்த கோர்மாவின் தலைவனே,

ஆர்மின், நீ ஏன் சோகமாயிருக்கிறாய்?

சோகமாகவா, நானா?

என் துயரத்திற்கான காரணம் அப்படியொன்றும் சிறிதல்ல.

கார்மர், வீரத்திருமகனை நீ இழந்ததில்லை.

கோல்கார் போன்றொரு மகனை நீ இழந்ததில்லை.

அழகிற் சிறந்த அனிரா போன்றொரு மகளையும் நீ இழந்ததில்லை.

உன் வீடு மிகப் பெரியதாய் இருக்கலாம், ஓ கார்மர்!

உன் இனம் பெருகிக்கொண்டிருக்கலாம்.

ஆனால் ஆர்மின்தான் அவனது இனத்தின் கடைசி ஆள்.

ஓ தெளரா, இருண்டது உன் படுக்கை,

உன் கல்லறைத் துயில் ஆழமானது.

எப்போது நீ பாடல்களுடன் துயிலெழப் போகிறாய்?

உன் குரல் எப்போது ஒலிக்கும்?

கோடைகாலக் காற்றே, புறப்படு.

இத் தரிசு நிலத்தினூடாக வீசு.

மலையருவிகளே, ஆர்ப்பரியுங்கள்.

புயல்களே, ஓக் மரக் கூட்டங்களிடையே புகுந்து திமிறுங்கள்.

சிதைந்த மேகங்களினூடே நடந்து சென்று, நிலவே

இடையிடையே உன் முகம் காட்டு.

ஆற்றல்மிக்க அரின்தாலும்

இனிமையான தெளராவும் வீழ்ந்த பிறகு

என் எல்லாச் செல்லங்களும் வீழ்ந்த பிறகு

என் இதயத்தை இருளச் செய்துவிடு.

தெளரா, என் மகளே! நிலவைப் போல் நீ அழகானவள்.

பனியைப் போல வெண்மையானவள்.

தென்றலைப் போல இனிமையானவள்.

அரின்தால், உனது வில் மிக உறுதியானது.

போர்க்களத்தில் உனது வேல் வேகமானது.

அலை மீதான பனிபோன்றது உன் பார்வை.

உனது கேடயம், புயல் நடுவில் சிவந்த மேகம்.

போர்க்களத்தின் அடலேறே ஆர்மர்

வா, இங்கே வந்து தெளராவின் காதலை யாசித்து நில்.

அவனது காதல் மறுக்கப்படாதென்ற 

நண்பர்களின் நம்பிக்கை நியாயமானதே.

ஓட்கலின் மகன் ஈராத் துயரம் அடைந்துள்ளான்.

அவனது அண்ணனை ஆர்மர் கொன்றுவிட்டான்.

கடல் மைந்தனைப் போல அவன் நொய்ந்துபோய் வருகிறான்.

அலை மீது வெகு அழகாய் அவனது படகு.

சொற்பத் தலைமயிர் நரைத்துள்ளது. 

அவனது கூரிய பார்வையிலோ அமைதி.

ஆர்மினின் அருமை மகள் பேரழகி என்கிறான் அவன்.

கடலுக்குள் ஒரு பாறைத்தீவு. 

அதுவொன்றும் தொலைவில் இல்லை.

அதன் ஒரு புறம் ஒரு மரம்.

அம் மரத்தின் கனிகள் சிவப்பாய் மின்னும்.

அங்கேதான் ஆர்மர் தெளராவுக்காகக் காத்திருக்கிறான்.

அவனது காதலை ஏற்கவே வந்திருக்கிறேன் என

அவள் சென்று ஆர்மரை அழைத்தாள்.

பாறையின் செல்வன் ஆர்மரிடமிருந்து பதிலேதுமில்லை.

அன்பே, என் அன்பே, என்னை ஏன் பயமுறுத்துகிறாய்?

ஆர்னார்டின் மகனே, நான் அழைப்பது கேட்கிறதா?

உன் தெளராதான் உன்னை அழைக்கிறேன். 

நகைத்தபடி துரோகி ஈராத் கரைக்கு ஓடினான்.

அவள் குரலுயர்த்திக் கத்தினாள். 

தந்தையையும் தமையனையும் அழைத்துக் கதறினாள்.

ஆரின்தால்! ஆர்மின்!

உங்கள் தெளராவைக் காப்பாற்ற யாரும் வரவில்லையா!.

கடல் தாண்டி அவள் குரல் கேட்டது.

அரின்தால் மலையிலிருந்து பதறி இறங்கினான்.

அவனது அம்பறாத்தூணியில் அம்புகள் கலகலத்தன.

கையில் வில் ஏந்தியிருந்தான்.

கருஞ்சாம்பல் நாய்கள் ஐந்தும் அவனுக்கு முன்னேகின.

வெறிகொண்ட ஈராத்தை அவன் கரையில் கண்டான்.

அவனைப் பிடித்து ஓக் மரமொன்றில் கட்டினான்

அவனது கைகால்களை வாரால் சுற்றிப் பிணைத்தான்

ஈராத்தின் உறுமல்கள் காற்றை நிறைத்தன.

தெளராவை கரைக்குக் கொண்டுவர 

அரின்தால் படகிலேறிச் சென்றான்

அப்போது வெஞ்சினத்துடன் வந்து சேர்ந்தான் ஆர்மர்.

சாம்பல் இறகுகள் கோர்த்த ஈட்டியை ஓங்கி எறிந்தான்

பாய்ந்தது அது உன் இதயத்தின் ஆழத்தில், ஓ அரின்தால்!

துரோகி ஈராத்துக்கு மாறாக நீ இறந்தாய்.

அக்கணமே துடுப்பு அசைவற்று அப்படியே நின்றது. 

பாறையில் துடித்து விழுந்து அரிந்தால் மரித்தான்.

ஓ தெளரா, 

உன் அண்ணனின் ரத்தம் உன் பாதங்களை நனைத்தபோது

நீ எத்தனை துடித்துப் போயிருப்பாய்?

படகு இரண்டாகப் பிளந்து போனது.

ஆர்மர் கடலில் குதித்தான். 

தன் தெளராவைக் காப்பாற்றவா? 

இல்லை தானும் மாண்டு போகவா?

அப்போது திடீரென்று மலையிலிருந்து 

ஏதோவொன்று வெடித்து அலைகளின் மீது இறங்கியது.

மூழ்கிப் போன ஆர்மர் மீண்டும் தலைதூக்கவில்லை.

கடல்திரை மோதும் பாறையில் தனித்திருந்த 

என் மகளின் அழுகுரல் கேட்டது.

இடைவிடாமல் அவள் அழுதாள், கதறி அழுதாள். 

அவளது தந்தையால் என்ன செய்ய முடியும்?

இரவு முழுதும் நான் கரையில் நின்றிருந்தேன்.

நிலவின் ஊமை ஒளியில் அவளை நான் கண்டேன்.

இரவு முழுதும் அவள் அழுதிருக்கக் கேட்டேன்.

காற்று பேரோலமாய் வீசியது

மழை வலுத்துப் பொழிந்தது மலையெங்கும். 

பொழுது புலரும் வேளை அவளது குரல் ஓய்ந்திருந்தது.

பாறையின் மேல் அடர்ந்த புற்களினூடே வீசும்

மாலைக் காற்றைப்போல அது தேய்ந்து ஓய்ந்தது.

துயரத்துடன் அவள் இறந்து போனாள்.

என்னைத் தனிமையில் விட்டுவிட்டுப் போய்விட்டாள்.

போரில் என் திறன்களெல்லாம் அருகிப் போயின

மங்கையர் போற்றும் என் பெருமையெல்லாம் அழிந்துபோயின

புயற் காற்று சுழன்றடிக்கும்போது

மேற்கில் கடல் அலைகள் உயர எழுந்து சீறும்போது

இரையும் இக்கரையில் நான் அமர்ந்திருக்கிறேன்

அவளை பலி கொண்ட அந்தப் பாறையைப் பார்த்தபடியே!

நிலவு மறையும்போதெல்லாம் 

நான் என் செல்லங்களின் ஆவிகளை தரிசிக்கிறேன்

கண்ணால் நாம் முழுக்கக் காணவியலா உருவாய் 

துயரத்துடன் ஒன்றுசேர்ந்து அதோ நடந்து போகிறார்கள்.

*

லாதேவின் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் நொய்ந்துபோன அவள் இதயத்திற்கு ஆறுதல் தந்தது. வெர்தர் வாசிப்பதை நிறுத்தினான். தாள்களை எறிந்துவிட்டு அவள் கைகளைப் பற்றிக்கொண்டான். குலுங்கி அழுதான். இன்னொரு கையால் தன் முகத்தைத் தாங்கிக்கொண்டிருந்த லாதே கண்களைக் கைத்துகிலால் மூடியிருந்தாள். இருவரின் மனக்கொதிப்பும் தாங்கமுடியாததாய் இருந்தது. விதிவசத்தால் அவரவர் வாழ்வில் வாய்த்த பரிதாபமான நிலையை எண்ணி வருந்திய அவர்கள் தம் இருவரின் துயரத்தையும் ஒன்றாகவே உணர்ந்தனர். அவர்களின் கண்ணீரும் ஒன்றுகலந்தது. வெர்தரின் உதடுகளும் கண்ணீரும் லாதேவின் கையைச் சுட்டன. மெல்லிய நடுக்கமொன்று அவளது உடலில் பரவியோடியது. விலகிக்கொள்ளத்தான் விரும்பினாள். ஆனால் அவளது துக்கமெல்லாம், அவளது கருணையெல்லாம் கனத்து அவள் மீது அழுத்தியது. பெருமூச்சுடன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட அவள், கண்ணீருடன் தொடர்ந்து அவனைப் படிக்கச் சொல்லிக் கெஞ்சினாள். ஆன்மாவின் ஆழத்திலிருந்து வந்த குரலுடன் அவனிடம் கெஞ்சினாள். வெர்தர் நடுங்கினான். அவன் இதயம் வெடித்துவிடும் போலிருந்தது. தாளை எடுத்து உடைந்த குரலில் வாசிக்கத் தொடங்கினான்.

வேனிற்காலத் தென்றலே, 

என்னை ஏன் எழுப்பினாய்?

‘சொர்க்கத்தின் துளிகளால் உன்னை மூடுகிறேன்’ 

என்று என் மீது கருணை கொண்டு ஏன் சொன்னாய்?

ஆனால் நான் உதிரும்காலம் நெருங்கிவிட்டது.

பலமாய் ஒரு உலுக்கல் போதும் 

என் இலைகள் அனைத்தும் உதிர்ந்துவிடும்.

நாளை அந்தப் பயணி இங்கே வரக்கூடும்.

நான் அழகாய்ப் பூத்துக் குலுங்கிய காலத்தில் 

எனைக் கண்டவன் வரக்கூடும்.

இந்த வெளியில் அவன் கண்கள் எனைத் தேடி நிற்கும்.

ஆனால் அவனால் என்னை ஒருபோதும் பார்க்க முடியாது.

இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் கைகளைப் பற்றினான். கண்களிலும் நெற்றியிலும் வைத்து அழுத்திக்கொண்டான். அதிர்ச்சிகரமான அவனது துயர முடிவைக் குறித்த உள்ளுணர்வு அவளது மனத்தில் பளிச்சிட்டது. அவளது மூளை குழம்பியது. அவனது கைகளை இறுகப் பற்றித் தன் மார்பின் மீது வைத்து அழுத்திக்கொண்டாள். துயரப் பெருமூச்சுடன் அவனைத் தழுவினாள். தகிக்கும் இருவரது கன்னங்களும் உரசின. உலகத்தை மறந்தனர். அவளைக் கைகளால் பின்னித் தன் மார்போடு இறுகத் தழுவி நடுங்கித் துடித்த அவளது இதழ்களில் ஆவேசத்துடன் முத்தமிட்டான். ‘வெர்தர்!’ தவிக்கும் குரலுடன் கத்திய அவள் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ‘வெர்தர்!’ பலவீனமான கைகளால் அவனைத் தன் மார்பிலிருந்து விலக்கித் தள்ள முயன்றாள். ‘வெர்தர்!’ கௌரவமான அமைதியான குரலில் அழுதாள். அவன் தடுக்கவில்லை. 

தன் அணைப்பிலிருந்து அவளை விடுவித்தான். வெறிபிடித்தவன் போல் அவள் காலில் விழுந்தான். அவசரமாக விலகிக்கொண்ட அவள், காதலுக்கும் கோபத்துக்குமிடையே தவித்தவளாய், பதற்றத்துடனும் குழப்பத்துடனும் சொன்னாள், ‘இதுதான் கடைசி வெர்தர்! இனி நீ என்னைப் பார்க்கக்கூடாது.’ உவகையையே அறிந்திராத அவன் மீது காதலின் துயரம் கனக்கும் அவள் பார்வை தவித்தது.

பிறகு அடுத்த அறைக்கு ஓடிய அவள் உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டாள். அவளைப் பிடித்து நிறுத்தத் துணிவற்றவனாய் அவளை நோக்கிக் கைகளை விரித்து நின்றான்.

*

குறிப்புகள்:

  1. பிங்கல் – ஓசியானிக் கவிதைகளின் தலைவனான ஓசியானின் தந்தைக்கு மக்பர்ஸன் இட்ட பெயர்.
  2. ஸெல்மா என்பது பிங்கலின் தலைநகர் அல்லது அரண்மனை.
  3. மினோனா – குலப்பாடகி.
  4. லோரா – இப்பாடல்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு நீர்நிலை.
  5. உலின் – தலைமைக் குலப்பாடகன்.
  6. ரைனோ – பிங்கலின் புதல்வர்களில் ஒருவன், துரிதகதியில் செயல்படும் ஆற்றலுக்குப் பெயர்பெற்றவன்.
  7. அல்பின் – இன்னொரு குலப்பாடகன்.
  8. சல்கார் – ஒரு வேட்டைக்காரன்.
  9. கோல்மா – அழகிய கூந்தலையுடையவள்.

*

கதேயின் காதல் காவியமான ‘காதலின் துயரம்’ நாவலின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது ‘ஓசியானின் பாடல்’களின் ஒரு பகுதி.

1 comment

Geetha Karthik netha May 4, 2022 - 11:47 pm

காதலின் துயரம் ♥️

Comments are closed.