சன்னக்கட்டை

by ஆழிவண்ணன்
2 comments

1

வாசலில் ஓலைப்பாய் விரித்துப் படுத்துக்கிடந்த மருதையன் ஆசாரிக்கு மேளச்சத்தம் நன்றாகக் கேட்டது. அச்சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வலுத்துக்கொண்டே வந்தது.

“ஏய் செயந்தி! சாமி செக்கடி திரும்பிடிச்சி. சீக்கிரமா வெத்தல பாக்கு தட்ட எடுத்துவையீ, டேய் அன்பழகா! எந்திரிடா கவுட்டிலே கைய வுட்டுக்கிட்டு தூங்கறான்” என்று காலால் அவன் உள்ளங்காலைத் தட்டினார்.

அவிழ்ந்துகிடந்த கைலியை ஒருகையால் பிடித்துக்கொண்டு அன்பழகன் எழுந்தமர்ந்தான்.

ஜெயந்தி ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழங்கள், சிறிய சூட வில்லை எல்லாவற்றையும் வைத்து வீட்டு வாசலுக்கு வந்து மருதையன் ஆசாரியிடம் கொடுத்துவிட்டு, பின் சடக்கென்று உள்ளே சென்று இரண்டு கொளஞ்சி மிட்டாயை எடுத்துவந்து தட்டில் வைத்தாள். 

மாலையிலேயே வீட்டு வாசல், சாலை என எல்லா இடத்திலும் நீர் தெளித்து கோலம் போட்டிருந்தாள்.

யானை வாகனத்தில் சாமி வந்துகொண்டிருந்தது. லைட்டு வெளிச்சத்தில் யானை மிதந்து வருவதுபோல இருந்தது மருதையனுக்கு. இரண்டு போகஸ் லைட்டுகளைச் சப்பரத்திலிருந்து சாமியைப் பார்த்து வைத்திருந்தார்கள். அதன் அதீத ஒளியால் கீழே உள்ள சப்பரம், ஜோடி மாடு, வண்டிக்காரன் எதுவுமே தெரியவில்லை. இருட்டு அதிகக் கருமை கொண்டுவிட்டது. ஐயரின் முகம் மட்டும் யானையின் தும்பிக்கைக்கு அருகில் பிரகாசமாகத் தெரிந்தது. தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அவரது தலையை மட்டும் வெட்டி யானையின் தும்பிக்கை அருகே வைத்தது போன்ற பிரமை ஏற்படுத்தியது. ஒருசில பந்தங்கள், சில பெட்ருமாஸ் லைட்டுகள் முன்னால் வந்தன. சிவபாக்கியம் மட்டும் லைட்டைக் கீழே இறக்கிவைத்துவிட்டு ‘புரிச்’ என்று வெற்றிலைச் சாறைக் கோலத்திற்கு அருகில் துப்பினாள்.

ஜெயந்தி, “இந்தாம்மா இப்டியா வூட்டு வாச முன்னாடி துப்புவாங்க? அங்கிட்டு தள்ளிபோய் துப்புனாதான் என்னவாம்? அட கருமமே! எப்புடி துப்பி வச்சிருக்கு பாரு” என்று மருதையன் கையில் தட்டினாள்.

திரும்பிப் பார்த்த மருதையனுக்குச் சட்டென்று ஒன்றுமே தெரியவில்லை. ஜெயந்தியின் முகத்தில் கருநீலமாக இரண்டு உருண்டைகள் நகர்ந்தன. 

“வர வர ஊர்பட்ட லைட்ட போட்டுப் புடுறானுங்க, கண்ணே தெரிய மாட்டேங்கிது. இந்தா செவ பாக்கியம்.. என்னா வூட்டு முன்னாடி இப்படி பண்ற? சரி நீ அத வுடு.. சாமிய பாரு.” 

“என்னாத்த பாக்குறது, சாமி வந்து இவ எச்சிலயா நிக்கும்? எனக்குன்னு வாராளுக பாரு” என்று வேகமாக வீட்டினுள்ளே சென்றாள்.

“சர்க்கார் ரோட்ல துப்புனா.. இவ என்னமோ நடுவூட்ல துப்புனா மாதிரி கத்துறா.” 

“இந்தா.. அவ வர்றதுக்குள்ள நீ நவுந்து போ.” 

“எப்பா போறேண்டாப்பா” என்று சிவ பாக்கியம் நகர்ந்தாள்.

ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்து எச்சில் இருந்த இடத்தில் ஊற்றினாள். தண்ணீர் ஒரு கரிய பாம்பு போல வளைந்து அதன் வாட்டத்தில் போய்க்கொண்டிருந்தது.

சாமி வீட்டிற்கு அருகில் வந்துவிட்டிருந்தது.

ஐயரின் நீட்டிய கைகளில் தட்டை எக்கிக் கொடுத்தாள் ஜெயந்தி. சூடம் ஏற்றப்பட்டு சாமியிடம் இலேசாகத் தூக்கிக் காட்டிவிட்டு, சிறிது துளசியைப் போட்டுத் திருப்பிக் கொடுத்தார்.

சப்பரம் சற்று முன்னால் நகர்ந்து சென்று அடுத்த வீட்டில் நின்றது. பின்பு மெல்ல நகர்ந்து சென்றது.

தண்ணீர் வளைந்து வளைந்து சென்று தனம் போட்டிருந்த கோலத்தில் போய் முடிந்திருந்தது.

“எந்தச் செருக்கி முண்ட என் கோலத்துல தண்ணிய கொட்டுனா?”

“யாரடி முண்ட கிண்டங்ற.. தட்டுவாணி.”

வாய்ச்சண்டை வலுத்துக்கொண்டிருந்தது.

அன்பழகன் ஜெயந்தியிடம், “அம்மா.. அவகிட்ட ஒனக்கு என்ன பேச்சு? உள்ள போ, சனமெல்லாம் பாக்குது.”

“அவ இவனு எங்கம்மாவ பேசுனா மூஞ்சிய பேத்துருவேன்” என்றான் தனத்தின் முதல் மகன் காசி.

வழக்கம்போல் கெட்ட வார்தைகளால் சரமாரியாகத் திட்டிக்கொண்டார்கள்.

மருதையன் வீட்டிற்கு எதிரில் உள்ள ரத்னம் டீ கடையின் பூட்டப்பட்ட கதவுக்குக் கீழே உட்கார்ந்திருந்த நல்லதம்பிக்கும் அவன் நண்பர்களுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்த அளவிற்கு வார்த்தைகள் தடித்துக்கொண்டிருந்தன. 

“பூ பூவா பூத்திருக்கு பூமியிலே, ஆயிரம் பூவிலே சிறந்த பூ என்ன பூ?” என்று நல்லதம்பி பாடியவுடன் நண்பர்கள் அனைவரும் வெடித்துச் சிரித்தார்கள். மருதையன் வீட்டிற்கு பக்கத்து வீடுகளில் உள்ள கன்னி ஆசாரி, முனிசாமி என எல்லோரும் சிரித்தார்கள். 

அன்பழகனுக்கும் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு, “டேய் நல்லு, என்ன நக்கல் மயிரா?” என்றான்.

“அட இல்லண்ணே, நாங்களே இந்த உலகத்துல எவ்ளோ கெட்ட வார்த்த இருக்குன்னு கணக்கெடுக்கலாம்னு வந்தோம்.. நீ வேற..”

தனத்தின் வீட்டுக்காரன் ராமன் கட்டிலில் அமர்ந்து காலை நீவியபடி வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். மருதையன் அமைதியாய் சப்பரத்தின் பின்னால் சென்றுகொண்டிருந்தார். 

2

மருதையன் ஆசாரிக் குடும்பமும் ராமன் ஆசாரிக் குடும்பமும் மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் இந்த ஊர்க் கோவிலில் மர வேலைகள் செய்யக் குடியமர்த்தப்பட்டவர்கள். அவர்களின் சொந்த ஊர் திருவதிகை. கோவிலின் தேர், வாகனங்கள், வேதிகைகள், பொம்மைகள், மரச் சாமான்கள் என அனைத்துமே அவர்களின் மூதாதையர்களான கோவிந்தசாமி ஆசாரியும் கருப்பண்ணன் ஆசாரியும் செய்தவைதான். மிக நேர்த்தியாகக் கலை நயத்தோடும் ஆகம சாஸ்திரத்தின்படியும் துல்லியமாகச் செய்யப்பட்டவை. தொண்ணூறு வருடங்களுக்கு மேலாக அவை இன்றும் புழக்கத்தில் உள்ளன. அவர்கள் செய்த குதிரை வாகனம் மிகவும் பிரசித்தி பெற்றது. அவர்களுக்குக் கோவில் சார்பாக அடுத்தடுத்து வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இவர்கள் இருவரிடமும் பதினைந்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் வேலை செய்தார்கள். அதற்கடுத்த தலைமுறையான சோலைமுத்து, சந்திரன் ஆசாரி காலகட்டத்தில்தான் எல்லா வாகனங்களுக்கும் வெள்ளி போர்த்தப்பட்டது.

இவர்கள் குடும்பத்தின் முக்கியமான வேலைகளில் ஒன்று தேருக்குச் சன்னக்கட்டை போடுவது. அதாவது, தேரை மாட வீதியின் திருப்பங்களில் திருப்புவது. ஆளுக்கொரு பக்கத்தை எடுத்துக்கொள்வார்கள். ஒருவர் தேரின் வலது சக்கரத்திலும் மற்றொருவர் இடது சக்கரத்திலும் சன்னக்கட்டை போட வேண்டும். வலது சக்கரத்தில் போடுவதே பிரதானமானது. கோவிலை வலம் வரும்போது தேர் அதிகமாகத் திரும்பிவிட்டால் இடது சக்கரத்தில் கட்டை போட்டு அதைச் சமன்செய்வார்கள். வயதில் பெரியவராக இருந்த கோவிந்தசாமி ஆசாரி, வலது புறத்தில் ஆபத்து அதிகம் என்பதால் அதைத் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டார். அது பரம்பரை பரம்பரையாக இன்றும் நீடிக்கிறது. கோவிந்தசாமி ஆசாரியின் பரம்பரையில் வந்தவர்கள் வலது சக்கரம். கருப்பண்ணன் பரம்பரை இடது சக்கரம். 

சன்னக்கட்டையின் வடிவமே வசீகரமான ஒன்று. நான்காம் எண்ணை இடது பக்கமாகப் படுக்க வைத்தால் கிடைக்கும் வடிவம். கைப்பிடிக்கு அருகே பெரியதாகவும் நீண்டு செல்லச் செல்லக் குறுகிக்கொண்டேயும் வரும். அதன் செய்முறையிலேயே நிறைய கணக்குகள், அளவுகள் உண்டு. தேர்ச் சக்கரத்தின் பருமனைப் பொறுத்து அது தீர்மானிக்கப்படுகிறது. சக்கரத்தின் பருமன் தேரின் உயரத்தைப் பொறுத்து அமைகிறது. ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரை நீளமும், மூன்று செங்கல் அளவு எடையும் கொண்டது. எண்ணெய்ப் பாங்கான மரத்திலேயே இது செய்யப்பட வேண்டும். தேரின் மூன்றில் ஒரு பங்கு எடையை அது தாங்க வேண்டும். முன் நாட்களில் இலுப்பை மரங்களில் மட்டுமே இது செய்யப்பட்டது. 

சாலைக்கும் சக்கரத்துக்கும் இடையே அமையும் சிறிய முக்கோண வடிவ இடத்தில் சன்னக்கட்டையின் கூரான பாகத்தைச் செலுத்தி இலாவகமாகச் சற்று வளைந்து கொடுத்து சக்கரத்தை மெதுவாகத் திசை மாற்றவேண்டும். இல்லையேல் ஓடும் கோணத்தை மாற்ற வேண்டும். மிக உலர்ந்த மரமும் கூடாது, பச்சை மரமும் கூடாது. பக்குவமான அரைக்காய்ச்சல் மரம்தான் இதற்கு ஒத்துவரும். ரொம்பவும் காய்ந்த மரம் உடைந்துவிடும், அதிகப் பச்சையாக இருந்தால் எடை அதிகமாகிவிடும். அதைத் தூக்கிக் கையாள முடியாது. கருப்பண்ணன் குடும்பம்தான் இரண்டு பக்கத்திற்கும் சேர்த்து சன்னக்கட்டை செய்வது வழக்கம்.

வழக்கம்போல் திருவிழாவிற்கு ஒரு மாதம் முன்பே கோவில் அலுவலகத்திற்குச் சென்று மரத்திற்குச் சொல்லவேண்டும். அப்போதுதான் பத்து நாட்களிலாவது மரம் கிடைக்கும். பத்து நாட்கள் அல்லது சற்று கூடுதலாக அதைக் காயவைத்து, பின் பட்டறையில் கொடுத்து அறுத்து, பெரிய பெரிய செவ்வகமான மரங்களாகக் கொண்டுவந்து செதுக்கி, சன்னக்கட்டை செய்ய வேண்டும். மருதையன் காலையிலேயே கோயில் அலுவலகம் முன்னாள் போய் நின்றுவிட்டார்.

3

“வா மருத, என்ன சங்கதி?”

“மரத்துக்கு சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.”

“ஓஹோ …”

“நல்ல இலுப்ப மரம் இருந்தா நல்லதுங்க, இந்த வருஷமாவது பாத்து எடுத்துக் குடுங்க.”

“போன வருசம் புளியமரம்தானே குடுத்தோம், இப்போ என்ன இலுப்பங்கிற?”

“அது அவ்ளோ நல்லா வராதுங்க..”

“நல்லா வருதோ இல்லையோ, குடுக்கறத வச்சி செய்ங்க. இலுப்ப மரத்துக்கெல்லாம் காசு எவன்கிட்ட இருக்கு? புளியமரம்தான் கெடைக்கும். பக்கத்து ஊர்ல ரோட்ட பெருசாக்கறன்னு புளியமரத்த பூரா வெட்டிப்புட்டான். அதுல ஒன்னு வாங்கித் தரேன். அவ்ளோதான் முடியும்.”

“ஒரு ஆறு கட்டையாவது வேணுங்க..”

“எல்லாம் நாலு போதும். ஆறு எதுக்கு?”

“இல்ல, தேவைப்படுங்க.” 

“எனக்கு தெரியாது. கெடச்சத வாங்கித் தரேன்.” 

“அப்பறோம் இன்னொரு விசயங்க.. இந்த வருசம் பையன்தான் கட்ட போடுவாங்க. நான் பக்கத்திலியே இருப்பேங்க.” 

“யாரோ போடுங்க.. தேர் ஓடுனா சரி.”

“சரி, வரேங்க.”

“சரி, அப்பறோம்.. இந்த வருஷமாவது அடிச்சிக்காம இருங்க, தேர் நெலைக்கு வர்ற வரைக்கும் சத்தமே வரக்கூடாது பாத்துக்க.”

ஒன்றும் சொல்லாமல் வெளியேறினார் மருதையன். கோவில் வாசலில் அன்பழகன் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான். மருதையன் வருவதைப் பார்த்து பேச்சை முறித்துக்கொண்டு அவருடன் சேர்ந்துகொண்டான்.

“நேத்து நான் பாக்க வேலையில சேந்த பய, எப்புடி பேசுறான் தெரியுமா? இந்த மரம்தான் வேணும்னு கேட்டதால அந்தக் கடுப்ப வச்சிக்கிட்டு குடும்பத்த அசிங்கப்படுத்துறான் தாயோளி. இவுனுகளுக்கு என்னைக்கு எது மேல அக்கற இருந்துது, இதுல இருக்க? நாலுக்கு ஆறா உண்டியல் வச்சாச்சி. வேற எதப்பத்தி கவல?”

“நம்ப குடும்பமும் ஊர் சிரிச்சி கெடக்கு. எல்லாம் விதி.”

4

இருபது வருடங்களுக்கு முன்பு பெல் நிறுவனம் தேருக்கு இரும்புச் சக்கரத்தைக் கொடையாகக் கொடுத்தது. அதற்குமுன் மரச் சக்கரம்தான் இயல்பாகவே மெதுவாக ஓடக்கூடியது. அதுவும் குண்டும் குழியுமான தார்ச்சாலையில் ஆமை வேகத்தில் நகரும். முழுதாக இரண்டு மாதங்களுக்குச் சக்கரம் மாற்றும் வேலை நடந்தது. ஒரு ஆள் உயரமும் ஒரு யானை எடையும் கொண்டது ஒரு சக்கரம், மொத்தம் நான்கு யானைகள். புதுச் சக்கரங்கள் சிகப்பு வெள்ளையில் பட்டை தீற்றபட்டு கம்பீரமாக நின்றன. தேருக்கு நேர் அடியில் இருக்கும் இரண்டு பழைய சக்கரங்களோ மரத்திலேயே நீடிக்கின்றன. இதனால் தேரின் உயரம் சற்று கூடிவிட்டது. வேலை நடந்தபோது ராமனும் மருதையனும் அருகிலேயே இருந்தார்கள். அதன் எடையையும் உயரத்தையும் கண்டு சற்று பயந்து போனார்கள்.

ஒரு வெள்ளோட்டம் விட்டுப் பார்க்கப்பட்டது. மொட்டைத் தேரை மிகக் குறைந்த ஆட்களே தள்ளிக்கொண்டு வந்தார்கள். அப்போது கட்டை போடுவதற்கு மிக எளிதாக இருந்தது. ஆனால் திருவிழாவில் தேர் இப்படி இருக்காது என்று அவர்களுக்குத் தெரியும். தேரின் மேலே பனை வாரைகளை நட்டு, தேர் வடிவம் கொடுத்து, கலசம் வைத்து, சாமி ஏற்றி, இரும்புச் சங்கிலியால் மக்கள் திரள் தேரை இழுக்கும்.

அன்று அதிகாலை நான்கரை மணிக்கு, குறித்த லக்னத்தில், சாமி தேரில் ஏறினார். தேரைச் சுற்றிச் சாத உருண்டைகள் வைத்து பலி பூஜை செய்யப்பட்டது. பிரதான நான்கு சக்கரங்களுக்குக் கீழே பூசணியும் நான்கு எலுமிச்சை பழங்களும் வைக்கப்பட்டன.

வடம் பிடிப்பதற்காகக் கோவில் டி.சி, இ. ஓ, தர்மகர்த்தா, உபயக்காரர், உள்ளூர் சிப்பந்திகள் போன்றோர் எம்.எல்.ஏ.வுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். ஒரு வழியாக அவரும் வந்து தேர் முன்னால் மாலை மரியாதைகள் நடைபெற்றன. மாலை பரிவட்டத்தை முதலில் எம்.எல்.ஏ வாங்கிக்கொண்டார். பின்னர் டி.சி.க்கு மாலை மட்டும். அதன்பின் தர்மகர்த்தாவுக்கு மாலை பரிவட்டம், அவருக்கு அடுத்து இ.ஓ, உபயக்காரர் ஆகியோருக்கு மாலை மட்டும். கடைசியாக உள்ளூர் முக்கியஸ்தர்கள். இதற்கொரு வரிசைக்கிரமம் உள்ளது. யாரும் முன்னாலோ பின்னாலோ வாங்க முடியாது. அப்படி எதாவது அசம்பாவிதம் நடந்தால் ஐயரைப் பலியாக்கிவிடுவார்கள்.

ஒரு சன்னக்கட்டையைத் தேருக்கு முன்னால் ராமன் ஆசாரி கொண்டுவந்து வைத்தார். அதற்கு அவரே ஒரு தேங்காயை உடைத்து அதன் நீரைக்கொண்டே பூஜை செய்தார். சூடம் ஏற்றிக் காட்டினார். மருதையன்தான் எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்தார். பின்பு ஐயர் ராமனுக்கும் மருதையனுக்கும் சிறு கதம்பச் சரம் ஒன்றைக் கழுத்தில் போட்டார். தர்மகர்த்தா இரண்டு கயிற்சுருள்களை எடுத்து ஆளுக்கொன்றாகக் கொடுத்தார்.

ராமன் சக்கரத்திலிருந்து ஓர் அடி தூரத்தில் வலதுபுறச் சங்கிலியில் கயிற்றைக் கட்டி மறுமுனையைத் தன் இடதுகையில் சுற்றிக்கொண்டார். சக்கரத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டார். “ஐயா சோலமுத்தையா, மதுரகாளி.. நீங்கதான் எங்க உசுர காக்கணும்” என்று வேண்டிக்கொண்டார். மருதையன் இடது சங்கிலியில் கயிற்றைக் கட்டி மறுமுனையைத் தன் வலது கையில் சுற்றிக்கொண்டார். இரண்டு பக்கமும் செம்மட்டி போடுபவர்கள் வந்து நின்றார்கள். தேர்ச் சக்கரத்தில் சன்னக்கட்டை மாட்டிக்கொண்டால் இவர்கள் செம்மட்டியால் கட்டையை அடித்து வெளியே எடுத்துத் தருவார்கள். சில சமயம் சரியாகக் கட்டை மீது தேர் ஏறி நிற்கும் அப்போது அதை உருவ முடியாது. செம்மட்டியால் கட்டையின் வெளியே தெரியும் பாகத்தில் அடித்து அடித்து வெளியே எடுக்க வேண்டும், பின்புதான் தேர் சற்று இளகி அசைந்து கொடுக்கும். தேரின் பின்புறமுள்ள உலுக்கு மரக்காரர்கள் உலுக்கு மரம் கொண்டு நெம்புவார்கள். தேர் கிளம்பிவிடும்.

மருதையனின் செம்மட்டி எடுபிடி கோவிந்தன், மருதையன் காதருகில் சென்று, “பாத்தியா, ஐயரு அவுனுக்கு எப்புடி சரம் போட்டாருன்னு? ஒனக்கு வீசி எறியிறாரு, தர்மகர்த்தா இருக்காரே? அந்தாளும் அவுனுக்கு எப்புடி கவுரத தந்தாரு… உனக்கு எப்புடி பாத்தியா?” மருதையனின் முகம் சூம்பிவிட்டது.

பின்பு எம்.எல்.ஏ, தர்மகர்த்தா, ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் செதறுகாய் போட்டார்கள். இந்தச் சடங்குகள் நடந்துகொண்டிருக்கும்போதே பக்தர் திரள் சங்கிலியைக் கையில் எடுத்துக்கொண்டது. அது களிவெறி கொண்டு ததும்பி நின்றது. தேரின் பின்னால் வாசிக்கப்படும் பறை அவர்களை மேலும் வெறிகொள்ள வைக்கும். அதன் காரணமாக, காவல்துறையினர் ஆங்காங்கே அவர்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

சாமிக்குக் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு, தர்மகர்த்தா தன் துண்டைத் தலைக்கு மேல் உயர்த்தி ஒரு சுற்று சுற்றினார்.

தேர் வடம் பிடிக்கப்பட்டது.

புது இரும்புச் சக்கரங்கள் பூசணியையும் எலுமிச்சையையும் ஒரு நொடியில் கூழாக்கின. பூசணியின் குங்குமம் கலந்த சாறு இரத்தம்போல் ராமன் மேல் தெறித்தது. இடது காலை மடித்தும் வலது காலைச் சக்கரத்திற்குப் பக்கவாட்டில் நீட்டியும் ராமன் கட்டை போட்டுக்கொண்டு வந்தார். மக்களின் வெறி கூடிக்கூடி வந்தது. தேர் கிளம்புவதற்கு முன்பிருந்த பயம் எங்கே போனதென்று தெரியவில்லை. ராமனும் மருதையனும் கட்டை போடுவதில் மூழ்கிப் போனார்கள். இலாவகமாகக் கட்டையை இழுத்து இழுத்து அதன் முனை பாகத்தைக்கொண்டே தேரைத் திருப்பினார்கள்.

முதல் வீதி திரும்பியவுடன் தேர் மேலும் வலதுபுறம் நோக்கிச் சென்றது. ராமன், “அங்குட்டு போடுரா.. கண்ண என்ன சூத்துலியா வச்சிருக்க? ஒரு பக்கமா போவுதுடா” என்று கத்தினார். மருதையன் இடதுபுறம் கட்டை போட்டு தேரைச் சமன்செய்தார். அடுத்த வீதியில் தேர் வலதுபுற கரண்ட்டு கம்பத்தை நோக்கிச் சென்றது.

“தாயோளி.. கட்டைய வலுவா குடுடா. போய் சொருவிடும் போலிருக்கு.”

“எனக்கு தெரியும்டா கூதி… உன் வேல மசுர பாரு.”

மூன்று வீதிகளைக் கடந்து தேர் வந்துவிட்டது. நான்காவது செக்கடி வீதி சற்று இறுக்கமானது. இவர்கள் இருவரது வீடுகளும் இந்த வீதியில்தான் உள்ளன. எல்லா வருடமும் இவர்கள் வீட்டின் முன்னால் தேரை நிறுத்துவார்கள். தனம், “சாமி கொஞ்சம் பூ போடுங்க” என்று ஐயரை நோக்கிக் கத்துவாள். தேரிலிருந்து ஒரு பூச்சரம் பதிலாக வரும்.

இம்முறை தேர் திரும்பியவுடன் வேகம் எடுத்தது. சக்கரத்தின் உலோக ஓசை கூடியது. இதுதான் கடைசி வீதி, தேர்நிலை இருக்கும் வீதி என்பதால் மக்களின் உற்சாகம் உச்சத்தை எட்டியது. ராமனுக்கு வியர்வை கொட்டி, பனியனும் தூக்கிச் சொருகிய வேட்டியும் அண்ட்ராயரும் தொப்பலாக நனைந்து உடலோடு ஒட்டியிருந்தது. உள்ளங்கை, நீரில் நனைந்தது போலாகி கட்டையைப் பிடிக்கவே சிரமமாக இருந்தது. அப்போது தேர் இன்னும் வேகமெடுத்தது. ராமன் கட்டையைக் கொடுக்கும் போது சக்கரம் அனாயசமாக அதன் மேலே ஏறி வந்தது. கயிற்றில் ஊசலாடிக்கொண்டே அவர் அதையே மீண்டும் செய்தார். இம்முறை கட்டை கை நழுவியது. ஒரே நொடியில் தன் தலைக்கு மேலே தேரில் சொருகி வைத்திருந்த இன்னொரு கட்டையை எடுத்துப்போட்டார். அதுவும் கைநழுவி தேரின் பின்னால் சென்றுவிட்டது. அவைகளை எடுத்துவர இருவர் தேரின் பின்னால் ஓடினார்கள். ராமன், “டேய் என்னுது ரெண்டும் போச்சுடா… வலுவா நடுவுல குடுத்து தேர நிப்பாட்டுடா” என்று கத்தினார். மருதையன் அதைக் காதில் போட்டுக்கொள்ளாதது போல ஐந்து நொடிகள் தாமதித்துவிட்டு கட்டை முழுவதையும் சக்கரத்திற்குக் குறுக்காகக் கொடுத்தார்.

தேர் பூதாகாரமாக ஆடி தரையில் தேய்த்துக்கொண்டு நின்றது, கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்த ராமனின் வலது கால் சக்கரத்தின் விளிம்பில் சென்று மோதியது. தேரின் மேலே இருந்த பனை வாரைகள் ஒன்றுக்கொன்று உரசும் சத்தமானது இடி முழக்கம் போலப் பலமாகக் கேட்டது. இதுபோல இதுவரை திடீரென்று தேர் நின்றதே இல்லை. தேர் இன்னும் சற்று முன்னால் சாய்ந்திருந்தால் கவிழ்ந்திருக்கும். இதைச் சற்றும் எதிர்பார்த்திருக்காத மக்களில் பலர் கீழே விழுந்தார்கள்.

மேலேயிருந்து ஐயர், “கட்டயாடா போடுறீங்க.. எல்லாத்தியும் சாகடிச்சிருப்பீங்களே, கம்னாட்டிங்களா..” என்று திட்டினார்.

சற்று நேரம் கழித்துதான் ராமனின் ஓலம் அனைவர் காதிலும் விழுந்தது. அவரது கணுக்கால் ஒடிந்து இரண்டாகத் தொங்கிக்கொண்டிருந்தது. அசம்பாவிதம் நிகழ்ந்த பதற்றத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுகூடிவிட்டனர். எல்லோரும் மருதையனை வசைபாட ஆரம்பித்தார்கள். மருதையன் யாருக்கும் பயப்படவில்லை. அவர் எல்லோரையும் திருப்பித் திட்டினார், “இப்பிடி நான் நிறுத்தலைனா இந்நேரம் இங்க பத்து பாஞ்சி உசுரு போயிருக்கும். ஒங்க வேல மயிர பாத்துகிட்டு போங்கடா..”

ராமனைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு சிலர் ஓடினார்கள். அவர் காலை நேராக வைத்து ஒருவன் பிடித்துக்கொண்டான். தேர்நிலைக்கு அருகில்தான் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. கோவில் ஆட்களும் காவலாளிகளும் நிலைமையைச் சரிசெய்தார்கள். தேர் மீண்டும் புறப்பட்டது. இப்போது ராமனின் சம்மட்டியான ஏழுமலை கட்டை போட்டார். தேர் நிலையை அடைந்தது. ஆனாலும் மக்களின் ஆரவாரம் சற்றுக் குறைவாகத்தான் இருந்தது. சக்கரத்திலிருந்து இருபது அடிவரை தேர் இழுத்தவர்கள் அவ்வளவாக ஆரவாரம் செய்யவில்லை, பின்னாலிருந்தவர்களே கைதட்டி விசிலடித்து களிக்கூச்சலிட்டார்கள். முன்னாலிருந்தவர்கள் சிலர் ‘இப்புடி பண்ணிப்புட்டியே சாமி’ என்று சங்கடப்பட்டார்கள். சிலர் ‘ஏதோ ராமன் செய்த பாவம்’ என்றார்கள். கற்பூர ஆரத்தி எடுத்து மேலிருந்தே பாவனையாக மக்களிடம் காட்டினார் ஐயர். மக்கள் கூச்சலிட்டுக் கும்பிட்டனர். அந்த வருடத் தேர்த் திருவிழா முடிந்தது.

5

தங்களுக்குக் கிடைத்த மரத்தில் ஐந்து சன்னக்கட்டைகள் செய்து தேர் முட்டிக்குக் கொண்டுவந்தார்கள் மருதையனும் அன்பழகனும். 

“ஏண்டா, பொட்டச்சிங்கதான் கோலத்துக்கு அடிச்சிக்கிறாளுக.. நீங்க ஏண்டா தலைய உள்ள உடுறீங்க? நம்ப வீடுகளுக்கு மானமே கெடையாதடா?”

“அவன் மொகரைய ஒடப்பென்ங்றான். நான் அப்பொறம் என்ன பண்றது? போய் மூஞ்சிய காட்டவா?” 

“நீ ஏண்டா அவன் அம்மாவ அவ இவங்கிற? உங்கம்மாள சொன்ன நீ சும்மாருப்பியா? தம்பி, பொம்பள சண்டை வீதியோட போய்டும். ஆம்பள சண்டை வெட்டுப்பழி குத்துப்பழின்னு ஆகி குடும்ப பகையா போய்டும்டா.”

“இனிமே போக என்ன இருக்கு?”

“டேய் அந்த காலத்துல ஒரு தடவ கோயில்ல சம்பளம் தரோம்னு என் தாத்தனையும் ராமேன் தாத்தனையும் வரச்சொல்லிருக்கானுக. அப்போல்லாம் நெல்லுதான் சம்பளம். ஆறு மாசத்துக்கு மூணு களம். ராமேன் தாத்தனுக்கு அளந்தப்பறம் நெல்லு ஆயிப்போச்சி. மணியக்காரரு சின்ன ஆசாரி நீ அடுத்த வாரம் வாங்கிக்கன்னு சொல்லிருக்காரு. ராமேனோட தாத்தா குடுத்தா ரெண்டு பேருக்கும் குடுங்க, இல்லனா எனக்கும் நெல்லு வேண்டாம்னு சொல்லி துண்ட ஒதறி தோள்ல போட்டுக்கிட்டு வந்துட்டாரு. அப்புடி இருந்த குடும்பம்டா. என் காலத்துக்குள்ள இதுக்கு ஒரு முடிவு வந்தா தேவலாம்.”

“நீ இத அம்மாகிட்ட சொல்லு.. ஏன் என்கிட்ட சொல்ற? நீங்க ஒத்துமயா இருந்தா நாங்களும் இருப்போம்.”

“அவகிட்ட பேச முடியாது. தலக்கணம் புடிச்ச முண்ட, அவதான் என் மனசயும் கெடுத்தா, ஒன்ன சின்ன ஆசாரின்னு சொல்றாங்க, மரியாதை இல்ல அது இல்ல இது இல்லன்னு பேசிப் பேசி மாஞ்சா. இப்ப அவனுங்களோட சேந்துகிட்டானே கோயிந்து, அவனும் ஊதிகிட்டே கெடப்பான். ஒரு கண்ணு யமைக்கிற நேரம் என் புத்தி பெரண்டு போச்சி.”

“ஏற்கனவே நான்தான் ராமேன் கால ஒடிச்சேன்னு என்மேல பகை. அதுல அவன் வேற நடக்கப்போற சமயத்துல கக்கூஸ்ல வழுக்கி விழுந்து இடுப்பொடிஞ்சி சுத்தமா நடக்க முடியாம போய்ட்டான். தனம் இன்னும் மோசமாயிட்டா.”

“……..“

“அப்பொறம் தம்பி, இந்த வருசம் நீதான் கட்ட போடப் போறேன்னு சொல்லிட்டேன். நான் பக்கத்துலியே வருவேன்.. பயப்படாத.”

“யாரு பயந்தா? நான் பாத்துக்குறேன் வுடு.” 

“அவ்ளோ சொலபம் இல்லடி இந்த வருசம், தார் ரோட சிமிண்டு ரோடா போட்டுபுட்டான். தேர் சிட்டா பறக்கும்டா.”

“அதெல்லாம் நான் போடுவேன்.”

“கால்ல நல்லா துணி சுத்திக்கோ, பலய வேட்டி கெடக்கு, அத கிலிச்சி வச்சிக்கோ.”

“இது என்ன புதுசா சொல்ற?”

“அப்புடிதாண்டா யோசனை அப்பப்போ வரணும்.”

பக்கத்துக்கு இரண்டாக கட்டைகளைச் சொருகி வைத்தார்கள். தேர் சீலை கட்டி முடித்து தொம்பய்கள் கட்டிக்கொண்டிருந்தார்கள். தேருக்குப் பின்புறம் பெரிய மூங்கிலில் இட்ட துளைகளில் கொடிகளை நட்டுக்கொண்டிருந்தான் காசி. ஓரக்கண்ணால் இவர்கள் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இந்த முறை எல்லாமே இளவட்டங்கள்தான். காசிதான் கொஞ்சம் பெரியவன். பக்கத்து டவுனில் இழைப்பு மில்லில் வேலை பார்க்கிறான். கல்யாணம் ஆனவன். அவனுக்குச் செம்மட்டி அவனது சித்தி மகன் சரவணன். இந்தப் பக்கம் அன்பழகன், செம்மட்டியாக கன்னி ஆசாரி மகன் தினேஷ்.

6

சாமி அதிகாலை நான்கே கால் மணிக்கு மீன லக்னத்தில் தேருக்கு வந்துவிட்டார். வழக்கம் போல அதே வரிசையில் மாலை மரியாதை நடைபெற்றது. உள்ளூர் சிப்பந்திகளுக்கு முன்னால் சில கட்சிக்காரர்கள் மாலை மரியாதை வாங்கிக்கொண்டார்கள். வருடாவருடம் இவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

அது முடிந்து சன்னக்கட்டைக்குப் பூஜை. காசி ஒரு கட்டை தொட்டுக் கும்பிட்டுவிட்டு, தேருக்கு முன்னால் வைத்து தேங்காய் உடைத்து, பூஜை செய்து, சூடம் காட்டி, தன் இடத்தில் நின்றான். தானாக வந்து அவன் பக்கத்தில் நின்றான் அன்பழகன். ஐயர் ஆளுக்கொரு பூச்சரம் போட்டு மரியாதை செய்தார். இருவரும் கயிற்றைப் பெற்றுக்கொண்டார்கள்.

அன்பழகன் கயிற்றைச் சங்கிலியில் சுற்றி, மறுமுனையைத் தன் வலது கையில் சுற்றி, இடது கையில் சன்னக்கட்டையுடன் தேரின் இடது சக்கரத்துக்கு முன்னால் குந்தி அமர்ந்தான். ஆளுயர இரும்புச் சக்கரத்தை நிமிர்ந்து பார்த்தவுடன் வயிற்றில் ஏதோ செய்தது. அதுவொரு தடித்த கருஞ்சுவர் என்று நினைத்துக்கொண்டான். கயிறை இன்னொரு முறை கையில் சுற்றிக்கொண்டான். இதுநாள் வரை செம்மட்டி அடித்திருக்கிறானே தவிர கட்டை போட்டதில்லை. காசி பல வருடங்களாகப் போடுகிறான்.

உலுக்கு மரத்துடன் அதன் பாத்தியப்பட்டவர்கள் தயாராக இருந்தார்கள். தேருக்குள்ளேயே தவில் நாதஸ்வரம் இசைப்பார்கள். தேர் மல்லாரி என்ற தனித்தாளமே இதற்குண்டு. அது ஒரே நடையை மீண்டும் மீண்டும் வாசிப்பதைப் போன்று கேட்கும். பறை கொட்ட ஆரம்பித்தார்கள். மக்களின் கூச்சல் உச்சத்தை அடைந்தது. தேர் வடம்பிடிக்கப்பட்டது.

எல்லா வருடமும் மாறாமல் அப்படியே இருப்பது சாமியும் மக்களின் உற்சாகமும்தான். அதே கொண்டாட்டம், துள்ளல், ஆரவாரம், விசில், கடைகள், பலூன்கள், இராட்டினம், சர்க்கஸ், தண்ணீர்ப் பந்தல். இந்த முறை தேர் ஞாயிற்றுக்கிழமையில் வேறு வந்துவிட்டது. இரட்டிப்புக் கூட்டம். கடுகு போட்டால் கடுகு கீழே விழாது.

இப்போது தேரின் குதிரையில் நிற்பவர்கள் சிவப்புக் கொடி, பச்சைக் கொடி வைத்திருக்கிறார்கள். தேரை உடனடியாக நிறுத்துவதற்குச் சில வருடங்களாகவே இந்த ஏற்பாடு. முன்பிருந்த டி.சி செய்த நற்காரியம்.

முதல் வீதியைக் கடந்து தேர் வந்துகொண்டிருந்தது. மருதையன் இடது பக்கச் சக்கரத்தின் பக்கவாட்டிலேயே அன்பழகனைக் கவனித்தவாறு நடந்து வந்துகொண்டிருந்தார். அவ்வப்போது உரக்க, ‘இப்புடி போடு, இந்தப் பக்கம் வையி’ என்று சொல்லிக்கொண்டே வந்தார்.

கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் தேர் வேகமாகச் செல்ல முடியவில்லை, தேர்ப்பாதையில் முண்டியடித்துக்கொண்டிருந்த மக்களை ஒதுங்கச் சொல்லி போலீஸ் வாகனம் ஒன்று முன்னால் சென்றது.  

“பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள். தேரோடும் பாதையில் நிற்காதீங்க.. ஓரமா போங்க, ஏய் பலூனு.. ஓரமா போய் கடபோடு. பொரி கடல வண்டிய நவுத்து. ஏம்மா குழந்தைய புடிமா.. நீ ஓடுற மொதல்ல. மீண்டும் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்…”

பங்குனி மாத வெயில் விடியும்போதே உருக்கியது. காசியும் அன்பழகனும் மழையில் நனைந்தது போல் வியர்த்துக் கொட்டி கயிற்றைப் பிடித்துக்கொண்டு மெதுவாக நடந்து வந்தார்கள். அவர்களுக்குத் தெரிந்துவிட்டது, இன்று தேர் வேகமாக ஓடப்போவதில்லை. அடி அடியாய்த்தான் நகரும்.

இரண்டு வீதிகள் தாண்டுவதற்குள் மணி எட்டைக் கடந்துவிட்டது. தேர் ஓடினால்தானே திருப்ப முடியும்? அதற்குக்கூட வழியில்லாமல் தேர் தடுமாறியது. அன்பழகனின் கண் மருதையனைத் தேடியது, அவரைக் காணவில்லை. சற்று முன் அங்குதான் நின்றுகொண்டிருந்தார். சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டார். ‘நமக்கே நாக்கு தள்ளுதே? பாவம், வயசு அறுபது ஆகப்போகுது. எப்புடி நிக்க முடியும்? எங்காவது பன்னீர் சோடா குடிக்கப் போயிருப்பார்’ என்று நினைக்கும்போதே பன்னீர் சோடா ஞாபகம் வந்தது. நாக்கை உதடு மேலே தேய்த்துக்கொண்டான். தினேஷிடம் ஒரு பன்னீர்சோடா வாங்கி வரச்சொல்லிக் குடித்தான். பனியன், கைலி, உள்ளாடை எல்லாம் நனைந்து உடல் முழுவதும் வியர்வை பிசுபிசுப்பாக ஓடியது. காசியைத் திரும்பிப் பார்த்தான். எச்சிலைக் கீழே துப்பிவிட்டு சரவணனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். காசி ஹான்ஸ் போடுவான். கையில் பிசைந்து உருட்டிக் கடைவாயில் வைத்தால் மணிக்கணக்கில் வேலை செய்வான்.

திடீரென்று ஒரே சலசலப்பு. மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வுசெய்கிறார். தேரை நகர முடியாமல் செய்யும் ஜனத்திரளைக் கட்டுப்படுத்த ஏதேதோ ஆணைகள் பிறப்பிக்கிறார். அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் தேரின் இரண்டு பக்கமும் கயிறைப் பிடித்துக்கொண்டு காவல்துறையினர் வரிசையாகச் சென்றனர். கயிற்றுக்கு உள்புறம் வரும் மக்களைப் பிடித்து வெளியே தள்ளினர். இலேசாக அடிக்கவும் செய்தனர். தேர் இப்போதுதான் ஓடத் தொடங்கியது.

அன்பழகன் திரும்பிப் பார்த்தான். மருதையனைக் காணவில்லை.

“வூட்டுக்கே போயிருக்குமோ?” என்று நினைத்தான். அப்படி கண்டிப்பாகச் செய்யமாட்டார். அவர் வளர்ந்து செம்மட்டி பிடித்த காலம் முதல் இன்று வரை, தேர் நிலைக்கு வரும்வரை, எங்கும் நகர மாட்டார் என்று மனது சொல்லியது. “சரி.. எங்கிருந்தோ நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பார். தேவைப்பட்டால் ஓடி வருவார்.”

போலீஸ்காரர்கள் மக்களை மொத்தமாகக் கயிற்றுக்கு வெளியில் கொண்டுவந்தார்கள். மூன்றாவது வீதியில் திரும்பி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தேர் வேகமாக வருகிறது. இப்போது தேர் வேகத்திற்கு ஈடுகொடுப்பதற்குச் சிரமமாக இருக்கிறது. சக்கரம் உருளும் சத்தம் சிமெண்டுக் கலவை எந்திரம் போல ஒலிக்கிறது. ஓடும்போதே தேங்காய்த் தட்டுகளைப் போலீசாரே வாங்கி, தேரின் பொம்மைக் குதிரையில் நின்றவர்களிடம் தருகின்றனர். அவர்கள் ஐயர்களிடம் அளிக்கின்றனர். துரிதகதியில் தேங்காய்த் தட்டுகள் மேலும் கீழும் சென்றுகொண்டிருக்கின்றன. அன்புக்குக் கெட்ட வார்த்தையாக வாயில் வந்தது.

“மொத தடவ மவேன் கட்ட போடுறானேன்னு அந்தாளுக்கு இருக்காப் பாரு.. எங்க நிக்கிறானோ கம்மினாட்டி..”

காசி எப்போதும் போலக் குதிகாலைத் தரையில் தேய்த்துத் தேய்த்து, கயிற்றில் தொங்கி, கட்டை போட்டுக்கொண்டு வந்தான். சிமிண்டு சாலையில் கரணையால் வருவியிருந்த இடங்களில் எல்லாம் காலைத் தேய்த்தான், கட்டை போடும் உற்சாகத்தில் கால்தோல் பிய்த்துக்கொண்டு வந்ததை அவன் சட்டை செய்யவில்லை.

நான்காவது வீதியில் தேர் திரும்பி அதிவேகம் எடுக்கவும் காசியின் குதிகால் சதை சிமெண்ட் பிசிறில் பட்டுப் பிய்ந்து இரத்தம் கொட்டவும் சரியாக இருந்தது. ஆனாலும் அவன் சமாளித்தான். தேர் நின்று கிளம்பிய நொடிப்பொழுதில் தலையில் சுற்றியிருந்த துண்டை எடுத்து காலைச் சுற்றி இறுக்கமாகக் கட்டினான். வலி கொஞ்சம் கொஞ்சமாக உறைக்கத் தொடங்கியது. முதலில் அடிபட்ட இடம் சில்லென்றிருந்தது, பின் எரிச்சல் ஆரம்பித்து பொறுக்க முடியாத வலியாக மாறியது. வியர்வையைப் பிழிந்துவிட்டு பனியனை வாயில் அடைத்துக்கொண்டான். இதற்குள் பதற்றத்தில் கட்டையை இடது பக்கம் அதிகமாகக் கொடுத்துவிட்டிருந்தான் அன்பு. அதனால் தேர் சிமெண்ட் சாலையை ஒட்டிய பள்ளத்திற்குச் சென்றுகொண்டிருந்தது. அவசரத்தில் அடுத்தடுத்து இரண்டு கட்டைகளையும் தவறவிட்டான். காசி சிவந்துபோன கண்களால் அன்பை எரித்துவிட்டு கட்டை கொடுக்கப் போனான். பிடி நழுவி முதல் கட்டை மேல் தேர் ஏறிவிட்டது. இரண்டாவது கட்டையைக் காசியால் எடுக்க முடியவில்லை. வலி உயிர் போனது.

சடக்கென்று காசியின் செம்மட்டி சரவணனைக் கையால் இழுத்துப் பின்னுக்குத் தள்ளி கட்டை போட்டார் மருதையன். முதலில் இரண்டுமுறை அளவாகக் கொடுத்து, மூன்றாவது முறை வலுவாக நடுக்கட்டையைக் கொடுத்தார். அவர் கட்டையின் கைப்பிடி மடக்கென்று முறிந்தது. எதிர்விசையால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் தலைக்கு நேரே வந்த சக்கரம், காசி கொடுத்த வலுவான கட்டையால் மிக அருகில் வந்து நின்றது.

மருதையன் எழுந்து காசியைக் கட்டி அணைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தினார். காசி “சித்தப்பா” என்று வலியும் வேதனையும் மீற, மருதையனின் வியர்வை வழிந்து ஓடிக்கொண்டிருந்த தோலைக் கவ்விக்கொண்டான்.  

அன்பழகன் கைப்பிடி முறிந்த சன்னக்கட்டையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

2 comments

சக்திவேல் April 28, 2022 - 7:39 am

அருமை…. பகையை மீறிய உறவு மிக சிக்கலான நேரத்தில் மட்டுமே வெளிப்படுகிறது…

manguni May 9, 2022 - 11:33 am

இது நிஜத்தில் நடந்தது

Comments are closed.