மன்னிப்பு கேட்பதன் சிக்கல்கள்

0 comment

என் வேலையிட வளாகத்தில் நான் சக்கர நாற்காலியில் புழங்குவேன். ஒருநாள் உணவகம் ஒன்றில் காப்பி வாங்கிவிட்டுத் திரும்புகிறேன். ஜனநெருக்கடி அதிகமான இடமது. நின்றாலோ திரும்பினாலோ நீங்கள் யார் மீதாவது கவிழ நேரிடும். கையை உயர்த்தினாலோ நீட்டினாலோ யாரையாவது “இடிக்கவோ” “குத்தவோ” நேரும். தலையைத் திருப்பினால், உங்கள் உயரத்தைப் பொறுத்து, யாரோ ஒருவரது கன்னத்தை உரசவோ அல்லது உங்கள் நாசியால் அவரது வியர்வை கசகசக்கும் கழுத்தை நிரடவோ மூக்கால் ஒரு குறுகுறு தாடியை உரசவோ நேரும். நான் சக்கர நாற்காலியில் இருப்பதால் எனக்கு அத்தகைய சங்கடங்கள் நேரிடாது. ஆனால் சில நேரம் என் முகம் சதா பலரது இடைகளுக்கும் முஷ்டியின் விசாரிப்புகளுக்கும் பலியாகும். சிலநேரம் நான் சக்கர நாற்காலியில் இருந்தபடி திரும்பும்போது என் பாத-தாங்கியில் இருக்கும் கால்பாதங்கள் பக்கத்து நபரின் முழங்காலை உரசும், இடிக்கும். அப்படிச் சமீபத்தில் நடந்தபோது அது என் தவறல்ல என நினைத்தேன். அவர்தான் கவனமின்றி என்னை நோக்கித் திரும்பின வேகத்தில் இடித்தார். ஆனாலும் ஒரு பாதி தவறு எனதல்லவா, நான் மன்னிப்பு கேட்டேன். அப்போது மனத்தின் ஓரம் அவர் என்னிடம் மன்னிப்பு கோருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ பவனி வரும் மன்னரைப் போல என்னை நோக்கி “இருக்கட்டும்” என்பது போலத் தலையசைத்து பாவனை பண்ணிவிட்டு கடந்து போனார். எனக்குச் சட்டெனக் கோபம் தோன்றி தலை வரை ஏறியது. “என்ன மனிதர் இவர், தவறு முழுக்க என்னுடையதா? நான் மன்னிப்பு கேட்டால் அவர் அதை அப்படியே ஏற்பதா? அவர் தரப்பிலும் தப்பு இல்லையா?” என எண்ணங்கள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டன. அப்போதுதான் எனக்குள் இந்தக் கேள்விகள் எழுந்தன – 

“நாம் மன்னிப்பு கேட்கும்போது நிஜத்தில் மன்னிப்புதான் கேட்கிறோமா?”

“மன்னிப்பு கோரும்போது நாம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதாகக் கருதுகிறோமா?”

“மன்னிப்பு கோரும்போது நாம் தவறு என்பதை இடம் மாற்றி எதிர்தரப்பின் மீது சுமத்துகிறோமா?”

ஆங்கிலத்தில் “It’s ok”, “No problem” போன்ற சொற்றொடர்களை மன்னிப்பு கோருகிறவர்களை நோக்கி உதிர்க்கிறோம். தமிழில் “பரவாயில்லைங்க”, “அதெல்லாம் ஒன்னுமில்ல”, “ஏன் பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க” எனச் சொல்வது நம் வழக்கம். இப்படிப் பதிலளிப்பதே நாகரிகம் என நினைக்கிறோம். ஏன்? 

நான் ஒரு தவறை இழைக்கிறேன். அது ஒருவரது முழங்காலை இடிப்பதோ காலை மிதிப்பதோவாக இருக்கலாம். அப்போது நான் மன்னிப்பு கேட்கிறேன். அதை அவர் முழுமையாக ஏற்கும்போது நான் தவறு செய்தவன் என்பது உறுதியாகிறது. அது என் கன்னத்தில் பளாரென அறைவதைப் போல் ஆகிறது. ஏன்? நான் செய்தது தவறல்ல என நான் உள்ளுக்குள் நினைப்பதாலா? இல்லை. நான் தப்பே பண்ணவில்லை என நினைத்தால் நான் முதல் காரியமாக மன்னிப்பு கோரியிருக்க மாட்டேன் அல்லவா? அவர் தரப்பில் குற்றம் உண்டென்றால் அதைச் சுட்டிக்காட்டி நான் அவரிடம் சண்டைக்குப் போயிருக்க வேண்டும் அல்லவா? நான் இந்த இரண்டையும் செய்யவில்லை. தவறு என்னுடையதே என அறிகிறேன். ஆனாலும் ஒருவர் என் மன்னிப்பை ஏற்றுக் கடந்துபோகும் போது நான் அவர் அப்படி செய்திருக்கக் கூடாது என நினைக்கிறேன். ஏன்?

நான் மற்றொரு உதாரணத்தையும் தந்துவிட்டு இந்தக் கேள்விக்கான என் விடைக்கு வருகிறேன்:

இன்று நாம் தவறு செய்துவிட்டு அதை மறைக்கவே விரும்புகிறோம். அது மிகச்சிறிய தவறாக இருந்தாலும் கண்டிக்கப்படுவதை நாம் வெறுக்கிறோம். ஆக கண்டிக்கப்படும் சூழலை முழுக்கவே தவிர்க்க எண்ணுகிறோம். நமது மத்திய அரசு பொருளாதார மந்தநிலையை ஏற்கவே இன்னும் தயாராக இல்லை – ஒரு பக்கம் பொருளாதாரத்தை முட்டுக்கொடுக்க வேண்டிய முடிவுகளை அரசு எடுத்துவிட்டே பொருளாதாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனப் பாவனை பண்ணுகிறது; நிஜமான ஜி.டி.பி புள்ளிவிபரத்தை அதை வெளியிடுவதில்லை, பூடகமாக அனைத்தையும் கையாள்கிறது, கண்ணை மூடி உலகமே அற்புதமாக இயங்குகிறது எனக் கனவு காணும் ஒரு பூனையைப் போல நம் அரசு உள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இது நம் மத்திய அரசின் சிக்கல் மட்டுமல்ல, இன்று மாநில அரசுகளும் இப்படியே உள்ளன – அரசுகள் தமது தவறுகளை ஒப்புக்கொள்ள அஞ்சுகின்றன. தனிமனிதர்களும் தம் குற்றங்களை எதிர்கொள்ளப் பதறி தள்ளிப்போடுகிறார்கள். சந்திரயான் நிலவில் ஏவப்பட்டு அது தொலைந்து போனதை ஒரு தோல்வியாக ஐ.எஸ்.ஆர்.ஓ செயர்மேன் சிவன் ஒப்புக்கொள்வதற்குத் தயாரில்லை, அதை 98% வெற்றி என அவர் முன்வைக்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்கள் முதலில் அதை மறுப்பார்கள். உடனே பிக்பாஸ் நிர்வாகம் காணொளி ஆதாரத்தை வழங்கும். “மாட்டிக்கிட்டாங்க, இனிமேல் தப்ப முடியாது” என மக்களும் பிற பங்கேற்பாளர்களும் நினைக்கும்போது சம்பந்தப்பட்டவர் ஆதாரமே முழுமையாக இல்லை என அதையும் மறுப்பார். பிக்பாஸின் முதல் பருவத்தில் ஜூலியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு காணொளி ஆதாரத்துடன் அதை நிரூபித்த போது ஜூலி திரும்பத் திரும்பத் தன் மீதான குற்றம் கட்டமைக்கப்படுவதாகக் கோரினார். ஐந்து வினாடிகள் முன்பு என்ன நடந்ததென காட்டினால் தனது நியாயம் நிரூபணமாகும் என்றார். ஐந்து நொடிகள் முன்பு ஒன்றுமே இல்லை என பிக்பாஸ் சொன்ன பிறகும், கேமரா இருப்பதையே காட்டும், இட்டுக்கட்டாது எனக் கமல்ஹாசன் திரும்பத் திரும்பச் சொல்லியும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

மற்றொரு பக்கம், பங்கேற்பாளர்கள் தம் தவறை ஒப்புக்கொள்வார்கள், ஆனால் உடனே “ஆனால்” என ஆரம்பித்து அது தன் தவறே இல்லை என முரணாகப் பேசுவார்கள். இதைக் கேட்பவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

ஏன் இப்படி யோசிக்கிறோம்?

நாம் மன்னிப்பு கேட்கும்போது நம் குற்றம் உறுதியாகிறது, கேட்பவர் நம்மை மேலும் பல கேள்விகளைக் கேட்டு நம்மை மேலும் மட்டமாய் சித்தரித்துவிடுவார் என அஞ்சுகிறோம். இந்த அச்சம் என்பது ஒரு சமகால மனநிலை – முன்பு குற்றம் செய்தவர்கள் அதைப் பட்டவர்த்தமாய் ஒப்புக்கொண்டு தண்டனையை வாங்கிக்கொள்ளத் தயாராக இருந்தார்கள். இன்று நாம் தவறை ஒப்புக்கொள்ளும் போதே அத்தவறை நாம் செய்யவில்லை என எதிர்தரப்பு ஆறுதல்படுத்த வேண்டும் எனக் கோருகிறோம். இந்த மனநிலைக்கான அடிப்படை எங்குள்ளது? இது நமது அணுகுமுறையின் தவறா அல்லது இன்று நமது தன்னிலையை நாம் உணரும் விதமே இப்படியாகத்தான் உள்ளதா?

இன்றைய பின்னமைப்பியல் உளவிலாளர்கள் நமது தன்னிலை நிலையற்ற, அடித்தளமற்றதாக மாறி உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். நான் இதைச் செய்கிறேன், நான் இப்படிச் சிந்திக்கிறேன், ஆகையால் இதுவே நான் எனத் திடமாக என்னை நானே இன்று வகுத்துக்கொள்வதில்லை. மாறாக, நான் இன்று ஒரு மற்றமையைக் கட்டமைத்து அதன் மீது என் செயலுக்கான பொறுப்பைச் சுமத்தி தப்பித்துக்கொள்கிறேன். “ஆமாம், இந்தச் செயலுக்கு நானே காரணம், ஆனால் நான் பொறுப்பல்ல” என நைசாக கழன்றுகொள்கிறேன். அதாவது யாருமே “இதை நான் சொல்லவே இல்லை, பண்ணவே இல்லை” என நியாயப்படுத்துவதில்லை. ஆதாரங்கள் குவிந்து கிடக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில் அது சாத்தியமல்ல. ஆகையால் நாம் “நான்தான் சொன்னேன், ஆனால் ஏன் சொன்னேன் என நீங்கள் சிந்திக்க வேண்டும்” என மற்றமை மீது பழியைப் போட்டு நகர்ந்துகொள்கிறோம். இந்த அணுகுமுறையை ஸிஸெக் ‘displaced beliefs’ என்கிறார். அதாவது இடம் மாற்றி வைக்கப்பட்ட நம்பிக்கைகள்.

அதென்ன ‘இடம் மாற்றி வைக்கப்பட்ட நம்பிக்கைகள்?’ நீங்கள் இன்று ஒரு மூடநம்பிக்கையைப் பின்பற்றினால் அது உங்களது மூடநம்பிக்கையினால் அல்ல – அடுத்தவர்கள் உங்களை அப்படி நம்புமாறு வற்புறுத்துகிறார்கள் என்று நினைக்கிறோம். சாதியை நாம் பின்பற்றுவது நாம் சாதியை நம்புவதால் அல்ல, பிறரால்தான் என வலியுறுத்துகிறோம். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் “அடுத்த சாதிக்காரன் என் சாதியைத் தாக்குவதால் நான் வேறு வழியின்றி என் சாதியை மேலெடுக்க வலியுறுத்தப்படுகிறேன்” எனப் பேசுகிறார்கள். இந்தியா எனும் தேசிய அடையாளத்தை இந்துத்துவர்கள் கட்டமைப்பதே தேசபக்தி அற்ற, தேசவிரோதச் சக்திகள் இன்று பெருகிவிட்டார்கள் எனத் தொடர்ந்து கோருவதன் மூலம்தானே? சாதிப் பற்றாளன் ஒருவன், “நான் என் சாதியை அதனளவிலேயே நம்புகிறேன், அதனால் அதைப் பின்பற்றுகிறேன்” எனப் பெரும்பாலும் கோருவதில்லை. தேசவிரோதி எனும் மற்றமை இன்றி, “இது என் தேசம், அதனாலே இதை நேசிக்கிறேன்” எனத் தேசப்பற்றாளன் ஒருவன் கோருவதில்லை. இதனால்தான் சாதி மோதல்கள் நடக்கும் போதெல்லாம் ஒரு சமூகத்தில் சாதிப்பற்று தீயாகப் பரவுகிறது; அண்டை நாட்டுடன் போர் நடந்தால் தேசப்பற்று புயலாக எங்கும் வீசுகிறது. “பாரத் மாதா கீ ஜெய்” எனக் கூவுகிறோம்; தேசக்கொடியைப் பறக்க விடுகிறோம். ஒருவேளை மற்றமையே இல்லை எனில் என்னவாகும்? சாதியும் தேசமும் மறைந்துவிடுமா? இன்றைய சூழலில் நம்மால் இதைக் கற்பனையே பண்ண முடியாது. 

மேற்கில் கிறித்துவ மத அடிப்படைவாதம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பின்னணியில் தோன்றி வளர்வதை ஸிஸெக் சுட்டிக்காட்டுகிறார். அதாவது கிறித்துவ மத அடிப்படைவாதிகள் கிறித்துவத்தின் மீது பெரும் பற்றோ பிடிப்போ கொண்டவர்கள் அல்ல. அவர்கள் கிறித்துவுக்காகவே அடிப்படைவாதி ஆவதில்லை. இஸ்லாமியரின் அடிப்படைவாதத்தை மற்றமையாக முன்வைத்து அதை தமது அடிப்படைவாதத்துக்கான நியாயமாக்குகிறார்கள். இந்தியாவிலும் “இந்து” எனத் தம்மை மார்தட்டி முன்வைப்பவர்களில் பெரும்பாலானோர் கடவுளைத் தீவிரமாக நம்புகிறவர்கள் அல்ல. ஒரு கோயிலுக்காக இரத்தம் சிந்த முன்வரும் ஒருவர் அந்தக் கோயிலுக்குள் உறையும் தெய்வத்தைப் பொருட்படுத்தாதவர் என்பது ஒரு விசித்திரமே. சாவர்க்கர் இதற்கு ஒரு நல்ல உதாரணம். இந்து தேசியவாதத்தின் தந்தையான அவர் கடவுள், மதம், சடங்கு, சம்பிரதாயம் எதையும் ஏற்காதவர். ஆனால் இந்துச் சமூகத்துக்காகத் தன்னைத் தியாகம் பண்ணத் தயங்காதவர். கடவுளுக்காக இரத்தம் சிந்துவது என்பதே முரண் அல்லவா, கடவுளை நம்புகிறவனால் எப்படி மற்றொருவரை வெறுக்க முடியும், கத்தியைத் தூக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கு விடை காண நாம் இன்றைய காலகட்டத்தின் தன்னிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். 

இன்று ஒரு தேவரோ, கவுண்டரோ, வன்னியரோ தன்னை ஆதாரமாக அப்படி நினைப்பதில்லை – தம்மை அப்படி நினைக்க பிறர் அனுமதிக்க மாட்டார்கள் எனும் பீதியே அவர்கள் அப்படித் தம்மை ‘முன்வைக்க’ ஆதாரமாகிறது. ஓர் (தீவிர வலதுசாரி) இந்து இன்று தன்னால் இந்துவாக இயங்க முடியாதோ எனும் எண்ணத்தினாலேயே இந்துவாகிறான், அவன் இந்து என்பதால் அல்ல. 

அது மட்டுமல்ல, நாம் இன்று எந்தவோர் அடிப்படையான நம்பிக்கையையும் வெளிப்படையாக ஏற்கத் தயங்குகிறோம். ஏனென்றால் நாம் எல்லா அடிப்படைகளிலும் நம்பிக்கை அற்றவர்களாகவும், அதே சமயம் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறோம் என்கிறார் ஸிஸெக். (The Puppet and the Dwarf நூலில்) குழப்புகிறதா?

நாம் இன்றைய நவபொருளாதாரச் சந்தையின் அதீத லௌகீகவாதத்துக்கும், பணப்பெருக்கத் தந்திரங்களுக்கும் ஆட்படுகையில் நம்மை அடிப்படைவாத சிந்தனையற்ற, ஆனால் மதத்தை வெறும் பண்பாட்டு வடிவமாக மட்டுமே பார்க்கிற “நம்பிக்கையாளர்களாக” மாறிவிட்டோம் எனக் கூறுகிறார் ஸிஸெக். மேற்குலகில் இவர்கள் அவ்வப்போது தேவாலயத்துக்குச் செல்கிறவர்களாக, சடங்குகளை மட்டும் நம்பிக்கொண்டு கடவுளை ஏற்காதவர்களாக, கிறித்துமஸ் மாதத்தில் சாண்டாவின் வேடமிட்டு பரிசுகளைக் கொடுக்கிறவர்களாக, வாங்குகிறவர்களாக, அதேவேளையில் நன்மை-தீமை எனும் இருமை, சொர்க்கம், நரகம் ஆகிய கருத்தமைவுகளை ஏற்காதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தமது நம்பிக்கையை அவநம்பிக்கை எனும் மற்றமையை நோக்கித் “தள்ளிவிட்டபடியே” இருக்கிறார்கள் என்கிறார்கள் ஸிஸெக். அதெப்படி நம்பிக்கையாளர்கள் அவநம்பிக்கையாளர்களை நோக்கித் தம் நம்பிக்கையை இடமாற்றிப் போட்டபடி இருக்க முடியும்? 

முடியும், இன்றைய பிளவுண்ட மனிதனால் அது முடியும் என்கிறார் ஸிஸெக். இன்றைய மனிதனுக்குள் ஒரு நம்பிக்கையாளனும் ஒரு அவநம்பிக்கையாளனும் ஒரே சமயத்தில் வசிக்கிறார்கள். இது முரணை ஏற்படுத்தாமல் இவர்கள் சௌகரியமான கூட்டிசைவுடன் வாழ்கிறார்கள். “நான் இதையெல்லாம் நம்பவில்லை, ஏனென்றால் நான் நம்பவில்லை, ஏனென்றால் நான் ஒரு அவநம்பிக்கையாளன், அதே நேரம் நான் இதையெல்லாம் பின்பற்றுகிறேன், ஏனென்றால் நான் அல்ல அந்த அவநம்பிக்கையாளன், அவன் எனக்குள் இருக்கும் மற்றொரு ஆள்” என நினைக்கிறோம். அதாவது “எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்” எனும் கவுண்டமணி நகைச்சுவையைப் போல. அந்த “மேலே இருப்பவன்” இருக்கிறான் என உறுதியாகத் தோன்றினால் நாம் இதைக் கோர மாட்டோம், ஆனால் அவன் இருக்கிறான், ஆனால் அவன் இந்த நொடியில் நானில்லை என நினைப்பதால் நாம் நமது முடிவுகளை அவனது மேசைக்குத் தள்ளிவிட்டபடியே இருக்கிறோம். அதாவது நாம் இன்று நம்பிக்கையாளனும் அல்லன், அவநம்பிக்கையாளனும் அல்லன், இரண்டுக்குள்ளும் மாறி மாறி கூடு தாவிக்கொண்டிருக்கிறோம். 

இதை இந்தியச் சூழலுக்கும் நாம் பொருத்திப் பார்க்க முடியும். இன்றைய கார்ப்பரேட் குருக்களான ஜக்கி, ஶ்ரீஶ்ரீ போன்றோர் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு ஆன்மீக, உளவியல் அறிவுரைகளைத் தருகிறார்கள். வாழ்க்கையில், நேர மேலாண்மையில் இருந்து பணத்தை நிர்வகிப்பது, மதநம்பிக்கைகள், சடங்குகளை நவீன மொழியில் புரிந்துகொள்வது வரை தொடர்ந்து தமது உரைகளில் விளக்குகிறார்கள். ஆனால் இவர்கள் யாரும் “கடவுள் நிச்சயமாக இருக்கிறார், அவரிடம் உறுதியான நம்பிக்கை வையுங்கள்” என்று வலியுறுத்துவதில்லை. ஏனென்றால் இவர்களுடைய பக்த கோடிகளில் கணிசமானோருக்குக் கடவுள் எனும் அசைக்க முடியாத, சாராம்சவாத கருத்தமைவின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் இவர்களுக்குக் கடவுளை மையமாகக் கொண்ட இந்து மதக் கலாச்சாரம், மரபு, ஆச்சாரங்கள், தொன்மங்களை அறிந்துகொள்ளவும் பின்பற்றவும் தேவையுள்ளது. அது தமது வாழ்க்கைக்கு அர்த்தம் வழங்குவதாக இவர்கள் நினைக்கிறார்கள். மத வழிபாட்டை ஒரு கேளிக்கையாக இந்தச் சாமியார்கள் மாற்றும் போது ஒருவிதமான சரணடைதலையும் கோருகிறார்கள், கடவுளிடம் அல்ல தம்மிடம் முழுமையாகச் சரணடையும்படி தம் பக்தர்களுக்குப் பயிற்சியளிக்கிறார்கள். இது கடவுள் நம்பிக்கைக்கான பதிலியாக இருக்கிறது. அதே நேரம் அது இந்தக் குருமார்களைக் கடவுளாக்கும் செயலும் அல்ல. ஜக்கியிடமும் ஶ்ரீஶ்ரீயிடமும் கேட்டால் “நான் கடவுள் இல்லை” என்றே சொல்லுவார்கள். ஆனால் ஒருவித “இடமாற்றப்பட்ட கடவுளாக” அவர்கள் இருக்கிறார்கள்.

இந்துத்துவத்தை எடுத்துக்கொண்டால் அதற்குள்ளும் நாம் பக்தி மரபில் கண்ட முழுமையான சரணாகதி நிலை இல்லை. இந்துத்துவர்கள் இந்துக் கடவுள்களை அரசியல் குறியீடாக முன்னெடுக்கையில் அவர்கள் முழுமையான கடவுள் அல்ல, ஒருவிதமான குறியீடுகள் மட்டுமே எனத் தெளிவாக இருக்கிறார்கள். சாவர்க்கரேகூட கடவுள் நம்பிக்கையாளர் அல்ல என நாம் அறிவோம். நமது பிரதமர் ஆலயங்களுக்குச் சென்ற பல படங்களை வெளியிடுகிறார், ஆனால் அவர் எங்குமே கடவுள் குறித்த தன் பார்வையை முன்வைத்ததில்லை. ஏனென்றால் இந்துத்துவா என்பது கடவுளைத் தள்ளிவைத்து அந்த இடத்தில் தேசத்தை முன்வைக்கும் கோட்பாடு.

இந்த இடத்தில் இந்து மதத்தின் தொன்மையான சடங்குகள், தொன்மங்களை உள்ளடக்கிய பக்தி மரபை நாம் அதன் இலக்கிய, பண்பாட்டுச் சாரத்துக்காக தக்க வைப்பதும், முன்னெடுப்பதும் அவசியம் என ஜெயமோகன் தனது சில கட்டுரைகளில் தொல்படிமக் கோட்பாட்டின் அடிப்படையில் கோரிக்கை வைத்ததை நினைவுகொள்ளலாம். ஜெயமோகன் மறைமுகமாகச் சொல்வது நமக்கு அத்வைதம் வேண்டும், ஆனால் தெய்வம் வேண்டாம், நமக்குக் கோயில்கள் வேண்டும், சடங்கு சம்பிரதாயங்களின் பண்பாட்டுச் செறிவு வேண்டும், ஆனால் அக்கோயில்களில் உறைவதாக நம்பப்படும் கடவுளர்கள் வேண்டாம் என்பதே. ஏனென்றால் இன்றைய நவீன இந்து தலைமுறையில் இப்படியான உள்முரணான மனநிலை கொண்ட ஏராளமானோர் இருக்கிறார்கள், அவர்களில் ஜெயமோகன் தனது வாசகர்களையும் காண்கிறார் என்று கொள்ளலாம். இப்படிக் கோருபவர்களை நம்பிக்கையாளர்கள் என்றோ அவநம்பிக்கையாளர்கள் என்றோ வகைப்படுத்த முடியாது. இரு பூக்களில் மாறி மாறிப் பறந்தமர்ந்து தேனுண்ணும் வண்டு ஒன்று நான் இதில் இருக்கையில் அதிலும் அதிலிருக்கையில் இதிலும் இருக்கிறேன் என மயங்குவதை இதனுடன் ஒப்பிடலாம். 

நமது அன்றாட உலகிலும் இம்மனநிலை வெளிப்படுகிறது. நான் செய்கிற சின்னதொரு தவறுக்குக்கூட நான் பொறுப்பேற்க அவசியம் இல்லை, முடிந்தால் என்னால் பாதிக்கப்பட்டவரின் இடத்தில் என்னை வைத்து “நான்தான் மன்னிப்பு கேட்கப்பட வேண்டியவன்” என்று விசித்திரமாகக் கற்பனை பண்ணுகிற மனநிலை எனக்கு இன்று ஏற்பட்டுள்ளது. “சரிப்பா மன்னிச்சுக்கோ” என்று என்னிடம் சொன்னால் “நான்தானே தப்பு செஞ்சேன்” என்று அடுத்த முகமூடியை அணிந்துகொள்ளுவேன். அப்படியானால், “நீ மன்னிப்பு கேளுப்பா.” “நானா? ஆனா நான் பண்ணினதை தப்புன்னும் சொல்ல முடியுமா? அது நடக்கிறதுக்கு நீ அல்லவா முதல் காரணம்?” – இப்படி மியூசிக்கல் சேர் ஆடிக்கொண்டே இருப்பதுதான் இன்றைய மனநிலை! இன்று நாம் குற்றத்திலும் மன்னிப்பிலும் அடிப்படையான நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறோம், ஒரு குற்றத்தை ஏற்று, மன்னிப்பைக் கோரும் அல்லது வழங்கும் நபரை நமக்குள் இருக்கும் அந்த இன்னொருவராக / மற்றமையாகக் கருதி அவரது மேசைக்குத் தள்ளிவிடுகிறோம். அதனால்தான் “மன்னிச்சுக்கோ” என்று சொல்ல வேண்டியவர்கள் “என்னிடம் மன்னிப்பு கேளு” என்று கொதித்தபடி இருக்கிறார்கள். இதைச் சமூக வலைதளங்களில் நாம் அதிகமாகப் பார்க்கிறோம் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லைதானே?