மானு மோராஸ்

5 comments

”இந்த ஊரிலேயே பேரழகி என ஒருத்தியைக் காட்டுகிறேன். எப்பாடுபட்டாவது அவளை எனக்கு இரையாக்கிவிடு” என ரெகார்டோவிடம் சொன்னபோது, உடனடியாக அவன் “மானு மோராஸ்” என்றான். அதுவொரு கெட்ட வார்த்தை என்பது எனக்கு உடனடியாகவே புரிந்தது. “இதுதான் எனக்கு வேலையா?” என அவன் அடுத்த வாக்கியத்தைச் சொன்ன பிறகே அவ்வார்த்தையின் மிகக் கெட்ட அர்த்தத்தை விளங்கினேன். ரெகார்டோ இப்படித்தான் எப்போது பார்த்தாலும் இந்த வார்த்தையை அடிக்கடி எச்சிலைப் போலத் துப்பிக்கொண்டே இருப்பான். இந்தியாவில் அம்மாவைக் குறிக்கும் வசைச்சொல் போல அது கடுமையானதாக இருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டேன்.

ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனம் ஒன்றின் களப்பணி ஆற்றும் பொறுப்பில் இருக்கும் நான், முதன்முதலாக ரெகார்டோவை நண்டு வளர்ப்பு மையம் ஒன்றில்தான் சந்தித்தேன். ஆஸ்திரேலிய நாட்டு நிதியுதவியுடன் உள்ளூர் மீனவர்களுக்குக் காயல் நண்டு வளர்க்கும் பயிற்சியை அளிக்கும் திட்டம் அது. கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரமான காயலில்தான் இந்நண்டுகள் உயிர்வாழும். காயலில் இருக்கும் அலையாத்திக் காடுகளின் அடியில் இவை கூட்டமாய் கொடுக்குகளை ஆட்டியபடி ஊறிக்கொண்டிருக்கும். அந்த இடத்தில் நண்டுக் குஞ்சுகளை வாங்கி செயற்கையாகப் பொறிக்கச்செய்து அவற்றை வளர்க்க வேண்டும். 

வெளிநாடுகளில் அவற்றிற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அவற்றை ஏற்றுமதி செய்து உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அந்தத் தன்னார்வ அமைப்பு வேலை செய்துகொண்டிருந்தது. அந்த அமைப்பின் தலைவி பிரிட்டிஷ்காரி. என்னைவிட ஐந்து வயது மூத்தவள். நேரிடையாகவே எப்போது அறைக்கு வருகிறாய் எனப் பலதடவை கேட்டுவிட்டாள். உடல் கொதிக்கப் படுத்தபடி யோசித்தும், அவளது முகத்தின் கன்னத்துச் சதையில் இருந்த அதிகப்படியான சுருக்கம் என்னை எழுச்சிகொள்ள வைக்கவில்லை. ஆனால் முகத்திற்குக் கீழுள்ள அவளது உடல் என்னைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்தது. முகத்தை மட்டும் விட்டுவிட்டு ஒட்டுமொத்த உடலையும் எப்படி அணைத்துக்கொள்வது என்கிற தீவிர சிந்தனையில் இருந்தேன். 

அவளது முகத்தை மறந்துவிட்டு, சில நேரங்களில் படுக்கையில் புரண்டிருக்கிறேன். உச்சத்தை அடைகிற பயணத்தில் கடைசி நிமிடத்தில் முகம் அவசியமாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். தனியான சந்தர்ப்பங்களில் அவள் என்னை மெல்ல உரசும் போது, வேண்டாம் என்று மறுத்ததில்லை. அவளது முகத்தைப் பார்க்காமல் நானும் உரசிக்கொள்வேன். என்றைக்காவது ஆத்திர அவசரத்திற்குத் தேவைப்படுவாள் என்கிற மாதிரி நண்டின் வலையிலேயே வைத்திருந்தேன். அவளுக்குமே அது போதுமானதைப் போலவும் பட்டது எனக்கு.

இரண்டு கொடுக்குகளையும் விரித்து ஒரு புல்டோசர் நடந்து வருவதைப் போல நடந்துவந்த அந்தப் பச்சை நண்டை அப்படியே முதுகிற்குப் பக்கத்தில் பிடித்துத் திருப்பிப் போட்டு, தனது பெருவிரலால் அதன் வயிற்றை மிதித்தான் ரெகார்டோ. நண்டு தனது கூர்கொடுக்குகளை வானை நோக்கி ஆட்டியது. பின்னர் சணல் கயிற்றால் அதன் கொடுக்குகளைக் கட்டி, முதுகோடு சேர்த்துக் கோர்த்து மண்ணில் போட்டான். நண்டு அப்போதும் அசைந்துகொண்டிருந்தது. ஆனால் அதன் உலகம் மனிதனின் கால் சுற்றளவிற்குச் சுருங்கிவிட்டது. ஒவ்வொரு நண்டாய் இப்படி அவன் கட்டும் வேகத்தை வியந்து பார்த்தேன். “கொடுக்குதான் ஆபத்து. மத்தபடி பயனுள்ள உயிர்” என்றான் விநோதமாகப் பார்த்துக்கொண்டிருந்த என்னிடம்.

உள்ளூரில் கொஞ்சம் படித்த ரெகார்டோ, தட்டுத்தடுமாறி சுமாரான ஆங்கிலம் பேசிவிடுவான். அவனுக்கு அந்தத் தீவு தேசத்தின் மேல்மட்ட அரசியல்வாதிகள் வரை நல்ல தொடர்பு இருந்தது. ஆனால் யாரிடமும் அவன் கையேந்தி நின்றதில்லை என்பதையும் பார்த்திருக்கிறேன். அவனுடைய அப்பா சுதந்திரப் போராட்டத் தியாகிக்கான பென்சன் வாங்கிக்கொண்டிருக்கிறார். அதனாலேயே என்னவோ நாட்டுக்கு எதிரான தீவிரமான திட்டங்கள் எதிலும் பங்கெடுத்துக்கொள்ளவே மாட்டான். ஒருதடவை ஆமைக்கறி வேண்டுமென கேட்டபோது, “ஐ.நா அதைப் பிடிப்பதற்குத் தடைசெய்திருக்கிறது அல்லவா? அப்புறம் ஏன் எங்கள் நாட்டில் மட்டும் அதைப் பிடிக்கச் சொல்லுகிறாய்? இல்லாமல்பட்டவர்கள் என்றால் இளக்காரமா?” என்றான் தீவிரமான குரலில்.

அதற்கடுத்து அவனோடு அந்த மாதிரி விஷயங்களைப் பேசுவதை நிறுத்திக்கொண்டேன். ஒருதடவை இந்தியாவில் இருந்து மிகப் பெரிய எண்ணெய் நிறுவனம் அந்த நாட்டில் காலூன்ற விரும்பி என் வழியாகத் தொடர்புகளைத் திரட்டச் சொன்னார்கள். அது பெரும் பணம் ஈட்டும் திட்டம் என்பதால் ரெகார்டோவிடம் நைச்சியமாகப் பேசிப் பார்த்தேன். “என்றைக்காவது இப்படி எங்களது மண்ணை உறிஞ்ச ஆட்கள் கிளம்பிவந்து அதில் வெற்றியும் பெறத்தான் செய்வார்கள். அதை என்னால் தடுக்க முடியாது என்பது தெரியும். ஆனால் அப்படியொரு வேலையில் என் கை இருப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். இந்த மண்ணில் இருந்து எடுத்து உண்டிருக்கிறேன்” என்றான்.

இதுபோன்ற வேலைகளில் நானுமே கத்துக்குட்டிதான் என்பதையும் ரெகார்டோ அறிந்திருந்தான் என்பதால், என்னை விலக்கமாகக் கருதவில்லை. என்னுடைய கனவுகள், திட்டங்கள் எல்லாவற்றையும் அவனிடம் விவரித்திருக்கிறேன். அவனுக்குமே அப்படியானவைகள் இருக்கின்றன என்பதால் என்னோடு அதிக நெருக்கம் காட்டி, அவனது உள் வளையத்திலும் இணைத்துக்கொண்டான். என்னுடைய நிறுவனதின் புராஜெக்ட்களில் அவன் இலாப நோக்கம் தாண்டி எனக்காகப் பங்கெடுத்தான். நானுமே அவனுக்கு நியாயமான வழிகளில் பணம் வருவதற்கு வழிவகைகள் செய்து கொடுத்தேன். அந்த வகையில் எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. அவன் வழியாக தேத்தூம் மொழியை நான் கற்கவும் செய்தேன்.

நேவல் மலையின் உச்சியில் இருக்கும் கிராமம் ஒன்றில் அடிப்படை வசதியை மேம்படுத்தித் தரும் பணி ஒன்றை எங்களது நிறுவனம் மேற்கொண்டது. அங்கே இரண்டு மாதங்கள் நான் போய் தங்கியிருந்து அந்தப் பணிகளை ஒருங்கிணைத்து முடித்துக் கொடுக்க வேண்டுமென நிறுவனம் கோரியது. இப்பணியைச் சிறப்பாக முடித்துக் கொடுத்தால் மலேசியாவில் ஊதிய உயர்வுடன் இன்னொரு புராஜெக்ட் என்றார்கள். என்னால் தனியாகப் போக முடியாது என்பதால் ரெகார்டோவையும் உடன் அழைத்துச் செல்ல நிறுவனத்தின் சிறப்புப் பிரிவு அனுமதி தந்தது.

அதற்கு முன்னே நான் அப்படியான மலைகளில் ஏறியதே இல்லை. எங்களூரில் மலை என்று சொல்லி சிறியதொரு குன்றே இருந்தது. சிறு குன்றில் ஏறியவனை அம்மலையுச்சி ஈர்த்தது. நகரின் சூப்பர் மார்க்கெட்டிற்கு என்னை அவனுடைய வெள்ளை ஆம்னி வேனில் அழைத்துப் போனான் ரெகார்டோ. ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கி அடுக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த ரெகார்டோ, “எங்களுடைய நாட்டில் யாரையும் பசியோடு இருக்க அனுமதிக்க மாட்டோம். இப்படி நீ வாங்கிக் குவிப்பது உன்னுடைய அவநம்பிக்கையைக் காட்டுகிறது” என்றான்.

அதை அவன் சீண்டப்பட்டவன் வெளியிடும் மூச்சுக் காற்றைப் போலத் தீவிரமான குரலில் சொன்னதால், பட்டும்படாமல் சில பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு விரைந்தேன். அவனுக்கும் எனக்கும் தரமான விஸ்கி பாட்டில்களையும் போகிற போக்கில் பொறுக்கிக்கொண்டேன். அந்த வகையில் அவனுக்குமே மகிழ்ச்சிதான் என்பதைச் சிப்பி போல் ஒளிர்ந்த தன்னுடைய வெண்பற்களைக் காட்டிச் சிரித்தபோது உணர்ந்துகொண்டேன். எதிர்பார்த்ததைவிட உயர்ந்து பெருகிக்கொண்டே இருந்தது மலை. ஒருகட்டத்திற்கு மேல் ஆம்னி வேன் மூலமாகச் செல்ல முடியாது என்றார்கள். அங்கேயே ஒரு வீட்டில் நிறுத்திவிட்டு மேலும் இரண்டு மலைகளைக் கடந்து நடக்க வேண்டும் என்று சொன்ன போதுதான் முதன்முறையாக எனக்குள் அவநம்பிக்கை பீறிட்டது. என்னால் ஏறவே முடியாது என அக்கணத்தில் உணர்ந்தேன்.

அந்த வேலையை உதறிவிடலாம் என்றுகூட அந்த நேரத்தில் தோன்றியது. அதை ரெகார்டோவிடம் சொல்லவும் செய்தேன். “இந்த உச்சிக்கே இப்படியா? உலகத்தில் இது மாதிரி பல உச்சிகள் இருக்கு. மலைக்கு உன்னை ஒப்புக் கொடுத்திட்டு சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு மட்டும் நட. அது உன்னைக் கைப்பிடிச்சு மேல தூக்கிட்டு போயிடும்” என்றான் பதிலுக்கு. ஏனோ அந்த நேரத்தில் அவனுடைய குரலைவிட அதை அவன் சொன்னவிதம் எனக்கு உத்வேகமாக இருந்தது. முதல் மலையைத் தாண்டுவதற்கு முன்பே எனக்கு மூச்சு முட்டிவிட்டது. மிச்சமிருந்ததைத் தவழ்ந்தே கடந்தேன். கடைசி அடியை எடுத்து அந்த மலையுச்சியில் வைத்தபோது வெண்மேகக் கூட்டமொன்று என்னைக் கடந்து போனது. முகத்தில் சில்லென்ற ஓர் உணர்வு.

உச்சியை முத்தமிட்டுவிட்டேன் என்கிற பெருமிதம் என் நெஞ்சில் பரவியதை உணர்ந்தேன். எழுந்து ஆசுவாசப்படுத்திவிட்டு, உச்சியில் இருந்து பள்ளத்தைப் பார்த்து என்னை நானே வியந்துகொண்டேன். இத்தனை உயரத்தை நானா ஏறி வந்தேன்? என் மனநிலையை ரெகார்டோவும் உணர்ந்து, என்னை ஊக்கப்படுத்தும்படியான பல சொற்களை உதிர்த்துக்கொண்டிருந்தான். நானொரு நிலைக்கு வந்தபிறகு ரெகார்டோவை அணைத்துக் கட்டிக்கொண்டேன். இந்த உலகத்தில் எதையும் என்னால் செய்ய முடியும் என அக்கணத்தில் உணர்ந்தேன். 

அன்றைய இரவு எங்களுக்குத் தங்க ஒதுக்கப்பட்டிருந்த குடில் வாயிலில் நெருப்பு மூட்டி எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார் ஊர்த்தலைவர். அவர் தேசச் சண்டையில் பங்கெடுத்ததற்கான பதக்கத்தைத் தன்னுடைய தோளில் கிடந்த சால்வையில் அணிந்திருந்தார். பொது இடங்களில் புழங்குகையில் இவ்வாறு குத்திக்கொள்வது அவர்களுடைய வழக்கம் என அறிந்துகொண்டேன். அவ்வாறு அணிவதை அவர்கள் பெருமையாகவும் கருதினார்கள். அந்தப் பதக்கத்தை வருடியபடி அந்த இரவில் அந்த நாட்டின் முழுக் கதையையும் என்னிடம் சொன்னார் அந்த ஊர்த்தலைவர். அந்தக் கதை ரெகார்டோவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது என்பதால் அவன் எழுந்து குச்சிகளை எடுத்துவந்து நெருப்பை அணைய விடாமல் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தக் காட்சியே ஒரு உருவகம் போல எனக்குத் தோன்றியது.

கடுமையான மலையேற்றம், தரமான விஸ்கி போதை இணைந்த இலயத்தில் அந்தக் கணப்பிற்கு அருகிலேயே தூங்கிவிட்டேன். குளிரடிக்கிற உணர்வே இரவுத் தூக்கத்தின் இடையே ஏற்படவில்லை. நிலவும் நட்சத்திரங்களும் ஒளிர்ந்துகொண்டிருந்த நள்ளிரவில் விழித்துப் பார்த்தபோது அப்போதும் ஊர்த்தலைவர் அமர்ந்து கணப்பை அணையவிடாமல் நெருப்பு மூட்டிக்கொண்டிருந்தார். அந்தத் தூக்கத்திலும் பதற்றம் வந்துவிட்டது எனக்கு. எல்லோரையும் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறேன் என என்னை நானே கடிந்துகொண்டு, எழுந்து, தட்டுத்தடுமாறிக் குடிலுக்குள் போய்ப் படுத்தேன். அங்கே ரெகார்டோ குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தான்.

காலையில் எங்களுக்கு ஊர்ப் பொதுமுனையில் கூட்டம் இருந்தது. ஏதோ தேவகுமரன் மண்ணில் இறங்கி வந்ததைப் போல அந்த மக்கள் என்னை நடத்துவதை குடிலின் வாயிலில் கால் வைத்த நேரத்திலிருந்து புரிந்துகொண்டேன். வயதில் பெரியவர்கள்கூட மண்டியிட்டு வணங்கினார்கள். பெண்கள் வணங்கிவிட்டு வெட்கப்பட்டுக்கொண்டு எதிரே இருந்த எதுவோ ஒன்றின் பின்புறம் மறைந்தார்கள். குழந்தைகளை மட்டுமே பக்கத்தில் பார்க்க முடிந்தது. மற்ற எல்லோருமே ஒருவகையில் விலகி தொண்டனிடுவதைப் போலவே என்னைச் சுற்றிப் போர்த்தினார்கள்.

அவர்களுக்குக் கல்வி, சுகாதாரம் என அடிப்படை வசதிகளிலேயே நிறையத் தேவைகள் இருந்தன. என்னுடைய செல்போனை வியப்பாக வாங்கித் தொட்டுத் தடவிப் பார்த்தார்கள். ரெகார்டோ நான் பேசியதை எல்லாம் தேத்தூம் மொழியில் விரிவாக அவர்களுக்குப் புரிய வைத்தான். நானுமே இடையிடையே தேத்தூம் மொழியில் சில வாக்கியங்களைப் பேசினேன். அப்போதெல்லாம் பெண்கள் மத்தியில் இருந்து சிரிப்பலை வந்தடங்கியது. அந்தக் கூட்டத்தில் ஒருபெண் மட்டும் எனக்குத் தனித்துத் தெரிந்தாள். அதிகம் போனால் இருபது வயது இருக்கலாம். ஆனால் இடுப்பில் ஒரு குழந்தையைத் தாங்கி இருந்தாள். வெள்ளை பனியனுக்குப் பின்னே இரண்டு திரண்ட மார்புகள் குலுங்கிக்கொண்டிருந்தன. அப்படி உருண்டையாய் ஒன்றுதிரண்ட மார்புகளை அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை என்பதையும் அக்குறுகிய நொடிகளில் உணரவும் செய்தேன். என்னை அந்தப் பெண் கூர்ந்து பார்த்ததைப் போல இருந்ததால் சட்டென என் பார்வையை விலக்கியும் கொண்டேன்.

இறுதியாக ஊர்த்தலைவர் அந்த மக்களிடம் பேசுகையில், ஊரை உயர்த்த வந்திருப்பதாக எல்லாம் மிகையாகச் சொன்னதைக் கேட்கையில், கூச்சமாக இருப்பதைப் போல உடல்மொழியைக் கூட்டத்திடம் வெளிக்காட்டினேன். காட்டுக் கோழியொன்றை முழுவதுமாக வறுத்து பெரிய அரிசிச் சோற்றில் ஊறுகாய் மாதிரி ஒரு திரவத்தைப் பிசைந்து பச்சைக் கீரையொன்றுடன் சாப்பாடு தயார் செய்திருந்தார்கள். எல்லோரையும் கவனித்துப் பார்த்தேன், யாருமே அங்கே பெருந்தீனி உண்ணவில்லை. பிறகு இதைப் பற்றி ரெகார்டோவிடம் கேட்டபோது, “எங்களுடைய தேசத்தில் போர் நடந்துகொண்டிருந்த போது மிகப்பெரிய உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் மக்கள் பிறருக்கும் உணவு வேண்டும் என்று சொல்லி அரைவயிறு மட்டும் வலுக்கட்டாயமாகச் சாப்பிட்டார்கள். இப்போது சுதந்திரம் கிடைத்த பிறகும் அந்தப் பழக்கம் எங்களைத் தொடர்கிறது. வானம் பெரிதாகிவிட்டது. வயிறு மட்டும் இன்னமும் ஒரு பறவையைப் போலச் சுருங்கியே இருக்கிறது” என்றான்.

முதல்நாள் கூட்டத்தில் நான் பார்த்த பெண்ணின் வயிறுமே அவ்வாறே இருந்தது. அவளது வயிறு உள்ளொடுங்கி இரு மார்புகள் விண்ணென முன்னோக்கித் தள்ளி நின்றன. இந்தியாவில் சிலைகளில் மட்டுமே இவ்வாறான காட்சியை அதற்குமுன் கண்டிருக்கிறேன். இரண்டாவது தடவை இந்தக் காட்சியை நான் பார்த்தபோது அவள் ஊர்த்தலைவரின் வீட்டின் பின்புறம் நின்றிருந்தாள். அப்படி உற்றுக் கவனிப்பதை அவளுமே உணர்ந்திருந்தாள் என்பதை அவளுடைய அங்கத்தின் மெல்லசைவுகளில் உணர்ந்தேன். ரெகார்டோ எனக்குப் பின்னால் நடந்து வருகிற சத்தத்தைக் கேட்டவுடன் பார்வையை விலக்கி, ஊர்த்தலைவரைத் தேடினேன்.

முதல்கட்ட உதவிப் பொருட்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவலை அவரிடம் சொல்லப்போன போதுதான் இந்தக் கணநேரத் தரிசனம் கிடைத்தது. அவர் எங்களுக்கு பானகம் எடுத்துவரச் சொன்ன போது, அந்தப் பெண் அறையில் இருந்து வெளியே வந்தார். ‘ஏமி’ என எனக்கு அவளை அறிமுகப்படுத்தினார் ஊர்த்தலைவர். அவருடைய மனைவியவள் என்பதை அப்போதுதான் அறிந்துகொண்டேன். அப்போது எனக்குச் சற்றே ஏமாற்ற உணர்வு எழுந்தது. அவளுமே என் கண்களைச் சந்திக்காமல் ஒரு பூனையைப் போல நடந்து வெளியேறி என் இருப்பை உறுதிசெய்தாள்.

திரும்பப் போகையில் என் மௌனத்தைக் கவனித்தபடி நடந்து வந்தான் ரெகார்டோ. நானுமே எந்தச் சந்தேகத்தையும் வழங்கிடாதபடி தீவிரமாக வேலையைப் பற்றி யோசிப்பது போல என் தொலைபேசியை எடுத்து அடிக்கடி நோண்டிக்கொண்டு நடந்து போனேன். பிறகு பல சந்தர்ப்பங்களில் அவளைப் பார்த்தேன். தனியாக இருக்கும் சமயங்களில் அவள் தள்ளியே இருந்தாள். ஆனால் சிலரை நிறுத்திப் பேசிக்கொண்டிருக்கையில் மட்டும் கூட்டத்தோடு வந்து கலந்துகொண்டாள். 

ஆர்வமாக என் உதடுகளையே கூர்ந்து பார்த்து நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பாள். அத்தகைய சமயங்களில் நான் அவளுடைய மார்புகளை நோட்டம் விடுவேன். ஒருதடவை அவளது குழந்தை அவளது சட்டைப் பித்தான்களைக் கழற்றி அவளது மார்பில் கைவிட்டுத் துழாவிய போதும், அதை அறியாமல் என் உதடுகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் குழந்தையில்லாமல் வந்து நிற்கிற போது எனக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். என்னை யாராவது பார்க்கிறார்களா என்கிற உணர்வின்றிகூட சில சமயங்களில் அவளை வெறித்துப் பார்த்திருக்கிறேன். காட்டு மரங்களிடையே நுழைந்து வளைந்து போகும் காற்றைப் போல என் கண்கள் சுழலும்.

அவளைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி இப்படி கும்பலைக் கூட்டிப் பிரசங்கம் செய்வது எனக்கு வழக்கமாகிப் போனது. ரெகார்டோ அதை அறிந்திருப்பானா என்கிற குறுகுறுப்பும் எனக்கிருந்தது. உயரதிகாரி என்பதால் பிரசங்கம் எங்களது பிறப்புரிமை என்பதில் யாருக்குமே கேள்வி இருக்காது என்கிற எண்ணம் எனக்கு ஆசுவாசத்தைத் தந்தது. அடிக்கடி ஊர்த்தலைவர் நானிருக்கிற இடத்திற்குத் தேடிவந்து மண்டியிட்டு வணங்கிப் போவார். “அவர் கடவுளுக்கு அடுத்து உதவி பண்ற உனக்குத்தான் இப்படி மண்டியிட்டு கும்பிடறார்” என்றான் ரெகார்டோ ஒருதடவை.  அவர் இருக்கிற சமயத்தில் மறந்தும் நான் எதையும் வேடிக்கை பார்ப்பதில்லை. கூர்மையாக அவரோடு மட்டுமே என் கவனத்தைக் குவித்திருப்பேன். ஏனெனில் கண்களைச் சுருக்கி உற்றுப் பார்த்துப் பேசும் வழக்கமுடைய மனிதர் அவர்.

அன்றைக்கு அவர் வந்தபோது, வரவிருக்கும் பொருள், பண உதவிகள் பற்றிய காகிதத்தை அவரிடம் நீட்டினேன். உடன் இருந்த ரெகார்டோ, இவ்வளவு பெரிய உதவி இந்தப் பிராந்தியத்தில் வேறு யாருக்குமே கிடைத்ததில்லை என்று அவரிடம் உரத்த குரலில் சொன்னான். அகமகிழ்ந்த அவர், விரைவில் விருந்தொன்றைத் தயார் செய்வதாகச் சொன்னார். அங்கே நானிருந்த குறுகிய காலகட்டத்தில் அவளிடம் நல்ல பார்வைகளைச் சம்பாதிப்பதற்காகச் சுற்றிச் சுற்றிப் பணியாற்றினேன். இரவுகளில் அவளை நினைத்தால் உடல் மதமதப்பாக இருந்தது. வலுக்கட்டாயமாக வேறு பெண்களின் மீது கண்களைச் செலுத்திப் பார்த்தேன். எங்கும் மனநிறைவு எனக்குக் கூடிவரவில்லை. எண்ணங்கள் அவளது உதட்டுச் சுழிப்பை மட்டுமே சுற்றி வந்தன. அந்தக் காட்டில் அவளைப் பல மறைவிடங்களில் நிறுத்தி, கற்பனையிலேயே பலமுறை கூடிப் பார்த்தேன்.

அங்கு வந்து ஒன்றரை மாதங்கள் கடந்திருந்தன. இன்னும் பதினைந்து நாட்களில் இம்மலையைவிட்டு இறங்க வேண்டும் என்கிற நினைப்பே எனக்கு வேப்பம் பட்டையைப் போலக் கசப்பாக இருந்தது. மூக்கு முட்ட அன்றைக்குக் குடித்திருந்த ரெகார்டோவிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். “ஊர்த்தலைவர் வயசானவரு. ஆனா அந்தப் பொண்ணு சின்ன வயசா இருக்கே. எப்படி?” என்றேன். போதை விலகியவனைப் போலத் தெறித்து வெறித்து என்னையே பார்த்தான். பின்னர் சிகரெட்டை அணைத்துவிட்டு என் கண்களைப் பார்த்து, “ஊர்த்தலைவரின் மனைவி சின்னப் பெண்ணோ பெரிய பெண்ணோ.. ஆனால் அவள் எங்களுடைய தாய். ஏனெனில் அவர் எங்களுடைய தந்தை. எல்லோருமே இதை இங்கே விதியைப் போலப் பின்பற்றுகிறோம். இந்த மண்ணில் கால் வைத்த உனக்குமே அவ்வாறுதான். கொடுக்கு இருப்பதாலேயே நண்டின் காலைக்கூடக் கட்டுகிறோம். சுதந்திரமாய் இருப்பவர்களுக்குப் பொறுப்புண்டு” என்றான். குற்றவுணர்வுடன் கண்களைத் தாழ்த்திக்கொண்டேன். அதற்கடுத்து என் முதுகிற்குப் பின்னால் ரெகார்டோவின் கண்கள் தொடர்வதைப் போலவே எனக்கொரு எண்ணம் இருந்தது.

அவனுக்கு வேறு வேலைகள் கொடுப்பதைப் போல வேறு திக்கில் அனுப்பிவிட்டேன். ஆனாலும் அவனது பார்வை உறுத்தல் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. இறுதியாய் அவர்களுக்கான உதவிப் பொருட்களை வழங்கிவிட்டு மலையிறங்குவதாகத் திட்டம். அடுத்ததாக மலேசியாவில் நடைபெறவுள்ள ஒன்றரை வருடப் புராஜெக்டிற்கு உடனடியாகக் கிளம்ப வேண்டும் எனச் செய்தி ஒன்றையும் அலுவலகம் அனுப்பியிருந்தது. அதுவும் ரெகார்டோவிற்கு நன்றாகத் தெரியும். மலேசியா போய்ச் சேர்ந்த பிறகு அங்கே அவனை அழைத்துக்கொள்வதாக வாக்கும் கொடுத்திருந்தேன். அதனால் கொஞ்சம் மிகையான பணிவுடன் அவன் என்னிடம் நடந்துகொள்வதைப் போலக்கூட எனக்குத் தோன்றியது. ரெகார்டோ கீழே போய் தேவையானவைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் மலையேறி என்னை அழைத்துக்கொண்டு போவதாகத் திட்டமிட்டு, அதன்படி ரெகார்டோ கிளம்பிப் போனான். அதுவரையில் பீடித்திருந்த ஒன்றிலிருந்து விடுபட்டுவிட்ட உணர்வை அடைந்தேன். யானைக் காதைப் போலவிருந்த பெரிய இலையொன்று காற்றில் ஆடுவதை வேடிக்கை பார்த்தேன். 

என்னுடைய குடிலில் அமர்ந்திருந்த போது, ஊர்த்தலைவர் வந்து தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். கையில் விஸ்கி போத்தலுடன் அவருடன் கிளம்பிப் போனேன். எனக்கு முயல் ஒன்றை வறுத்து வைத்திருந்தார். அவருடைய பதக்கத்தை வருடியபடி பழம்கதையை எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். அவள் என் பார்வையில் படுகிற தோரணையில் அப்பக்கம் சுற்றுவதை அறிந்தே இருந்தேன் என்றாலும், அவர் இருக்கிறார் என்பதால் அந்தப் போதையிலும் கவனத்தைச் சிதறவிடாமல் இருந்தேன். ஏனோ அன்றைக்கு அவர் அதிகமாகக் குடித்தார். சில தடவை தடுத்துக்கூடப் பார்த்தேன்.

என் பேச்சைக் கேட்கும் நிலையைத் தாண்டியிருந்தார். தன் பதக்கம் தாங்கிய தோள்துணியை மண்ணில் கீழே போட்டுவிட்டு, வெறிகொண்டு குடித்தார். ஆனால் ஒரு வார்த்தை மீறிப் பேசி என்னோடு சண்டையிடவில்லை. என் அமைதியையும் அவர் அனுமதித்தார். அந்த நெருப்பின் நடனத்தைப் பார்த்துக்கொண்டே முழுப் போத்தலையும் கையில் தூக்கி வாயில் கவிழ்த்துச் சப்பிக் குடித்தார். நினைவு தடுமாறி அவர் கால்நீட்டி நெருப்பின் தடத்தில் விழுந்து உறங்கத் தொடங்கினார். அவரைத் தட்டி எழுப்பிப் பார்த்தேன். அவரால் காலையில்கூட எழுந்திருக்க முடியுமா என்கிற சந்தேகம் அப்போது எழுந்தது.

எந்தத் திட்டமும் இல்லாமல் அவரது குடிலை நோக்கி நடந்தேன். என் வருகையை எதிர்பார்த்திருந்தவள் போல, அமைதியாய் கையில் ஒரு குவளையை ஏந்தி நின்றாள். தயக்கத்தோடு அருகில் இருந்த சுவரில் சாய்ந்துகொண்டேன். அதிக முறை கற்பனைகளில் நிகழ்த்திப் பார்த்த நெருக்கம்தான் அது என்ற போதிலும், அப்போது படபடப்பாக இருந்தது. என் மூச்சுக்காற்று எனக்கே நன்றாகக் கேட்டது. அவளிடம் எந்த மொழியில் பேசுவது என்கிற குழப்பம் அப்போது எழுந்தது. எங்களுக்கு இடையில் காற்று கடந்துபோனதைத் துணியாடலில் உணர்ந்தேன்.

தட்டுத்தடுமாறி தேத்தும் மொழியில், “அவரை என்ன செய்வது?” என்றேன். ஒன்றும் செய்ய வேண்டாம் எனச் சைகை செய்துவிட்டு குடிலின் பின்பக்கம் அவள் நடந்து போனபோது, பின்னாலேயே தொடர்ந்தேன். இடுப்பு உயர மர மேசை ஒன்றின் மீது ஏறிப் படுத்தாள். கால்களை நீட்டி, கைகளை விரித்து, உதட்டைச் சுழித்து, என்னை வாவென அழைத்தாள். அதுவரை இருந்த தயக்கங்களை மீறி அவள் மீது துள்ளி ஏறிப் படுத்து அவளது மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டேன். என் முதுகிற்குப் பின்னே நெருப்பின் நடனம் தொடர்ந்தது.

பெருமூச்சடங்கி எழுந்து அவளது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து, வேகமாக உடைகளை அணிந்து குடிலைச் சுற்றிக்கொண்டு ஓடிவந்து பார்த்தேன். ஊர்த்தலைவர் அப்போதும் அசந்து உறங்கிக்கொண்டிருந்தார். என் குடிலுக்குத் திரும்பிவந்து மேலும் குடித்து அதை மறக்க விரும்பினேன். ஆனாலும் நாவில் சுவையாய் ஒரு இனிப்பு நீடித்தது. அதை விரைவில் விஸ்கியின் கசப்பு அலைபோல் எழுந்து மூடியது.

அடுத்த நாளே நாங்கள் திரும்பிக் கிளம்பிப்போக வேண்டியிருந்தது. அதிகாலை எழும்போது சோர்வு அதிகமாக இருந்தது. “என்ன நேத்து ரெண்டு பேரும் பயங்கர குடியோ? அவரும் கீழே நம்மோட வர்றாரு. மினிஸ்ட்டரீல அவரும் ஒரு கையெழுத்து போடணுமாம்” என்ற ரெகார்டோவின் பார்வையைத் தவிர்க்க விரும்பினேன். கீழே இறங்குகையில் இருவரிடமுமே குறைவான சொற்களில்தான் பேசினேன். ஆனால் ஊர்த்தலைவர் என்னோடு சகஜமாகப் பேசிக்கொண்டிருப்பது போலத் தோன்றியது.

எல்லோரும் இயல்பாய் அந்த மலையைவிட்டு இறங்கி நகரத்தை அடைந்த உணர்வு அங்கே மேலோங்கியது. மறுநாள் விமானத்தில் மலேசியாவிற்கு நான் பெட்டி, படுக்கைகளுடன் கிளம்பும்போது, அந்த ஊர்த்தலைவரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். ரெகோர்டோவையும் அவரையும் சேர்த்துப் பார்த்தபோது கண்களைத் தாழ்த்திக்கொண்டேன். எனக்கு லைட்டர் ஒன்றை வாங்க ரெகார்டோ சென்றிருந்த இடைப்பட்ட நேரத்தில் ஊர்த்தலைவர் என்னுடைய கையில் காகிதமொன்றைத் திணித்தார். தூரத்தில் இருந்து ரெகார்டோ அதைப் பார்த்த மாதிரிக்கூடத் தோன்றியது எனக்கு. பின்னர் நிமிர்ந்து தன் முகத்தில் அப்போது அவர் காட்டிய பாவத்தை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நிச்சயம் சிரிப்பில்லை அது. ஆனால் வெறுப்புமில்லை. அதைத் தாண்டிய வேறொன்று இருந்தது அதில். என்ன அது? ரன்வேயில்கூட துரத்தியது அதன் அர்த்தம்? 

விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் அந்தக் காகிதத்தை விரித்துப் பார்த்தேன். தேத்தூமில் எழுதப்பட்ட ஒற்றை வரி இருந்தது.

”மலையிலிருந்து யாரையும் பசியோடு கீழிறங்க நாங்கள் அனுமதிப்பதில்லை.”

5 comments

கார்த்திக் புகழேந்தி April 26, 2022 - 11:12 am

மலை யாரையும் பசியோடு கீழே இறங்க அனுமதிப்பதில்லை.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, சரவணன் சந்திரன் அண்ணனின் ஐந்து முதலைகளின் கதை வாசித்தவன். நண்பர் கவிமணி தான் கையில் கொடுத்தார். பிறகு தொடர்ச்சியாக அவரது 17 புத்தகங்களையும் வாசித்து முடித்த பிறகும், எப்போது பேசினாலும் ஐ.மு.க தான் என் evergreen என்பேன் சரவணன் சந்திரன் அண்ணனிடம்.

இன்று தமிழினியில் வெளியாகியுள்ள சரவணன் சந்திரனின் மானு மோராஸ் சிறுகதை ஐமுக நாவலின் ஒரு சின்னத் துண்டு தெறித்து விழுந்தது போல, எழுதப்பட்டிருக்கிறது. அதனாலேயே படித்து முடித்ததும் போனடித்துப் பேசினேன். ரொம்ப நாளைக்குப் பிறகு ‘எழுதியது’ பற்றிப் பேசுறடா தம்பி என்றார். அது உண்மைதான். ரொம்ப நெருங்க நெருங்க வாசிப்பு விலகிச்செல்கிறது போல.

கலியபெருமாள் May 5, 2022 - 1:27 am

ஜி.நாகராஜன் சொன்னது மனிதன் ஒரு சல்லிப் பயல்
இங்கே மனிதன் மனிதனின் பார்வையையும் ஏக்கத்தையும் தேவையையும் அறிந்து அது தன்னை பாதிக்கும் என்பதை அறிந்தும் அதையும் தாண்டி உதவி செய்யும்போது அந்த வார்த்தை தவறு எனத் தோன்றுகிறது

வி.சிற்றரசன் April 28, 2022 - 2:56 pm

அற்புதமான கதை ஊர் தலைவர் கடைசி வரிகள்

Kasturi G May 1, 2022 - 8:55 pm

Fabulous story. Native People who are like crystal clear water, have larger purpose in life and are generally not interested in material things and it was precisely presented by the Village head in his parting note .I wonder in the name of ushering in development what all basic human values would be lost to the world of consumerism in the long run in the hill tribes life.
Thanks

R.JEYABAL May 2, 2022 - 9:54 pm

எழுத்து இவரிடம் நடனமாடிச் செல்கிறது. ஊர்த்தலைவர் உதிர்த்த கடைசி வரிகள் அம் மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.

Comments are closed.