துருக்கிய நாவலாசிரியை எலிஃப் ஷஃபாக் எழுதியது. 2009-ல் ஆங்கிலத்தில் வெளியான இந்நூல் ஏழரை லட்சம் பிரதிகளைக் கண்டது. பேராசிரியர் ரமீஸ் மிக நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார். சூஃபிவழி பயணிப்பதால் கதை மிகச் சிறப்பாக அவரால் பகிரப்பட்டுள்ளது.

பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நாவலை ஆழ்ந்து நாலைந்து மாத காலம் இடைவெளி விட்டு விட்டு முழுதாக மறுபடியும் மறுபடியும் வாசித்தது நிறைவாயிருந்தது. மொழிபெயர்ப்பு நாவல்களில் ரஷிய நாவல்களுக்கும் சில இந்திய நாவல்களுக்கும் பிறகு இதமான, சுவையான வாசிப்பின்பம் திளைத்து விதந்தோதி நின்றது.

கடந்த வருட மத்தியில் வேறுபட்ட தர்காக்களில் தவமாற்றி ஆழ்ந்து கிடந்த தருணம் சூஃபி மரபு குறித்த தீவிர விசாரணைகளில் கிடந்தேன். அத்தேடலின்படி பிரசுரித்தவுடன் முதன்முதலில் வாங்கி வீட்டிற்குள் நுழைந்து மேசையில் நூலை வைத்ததும் இளம் மகள்கள் இருவரும் தலைப்பைப் படித்துவிட்டுக் குறும்பாக ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். இவருக்கு என்ன ஆயிற்று, காதல், விதி என்று இப்படியானவொரு நூலை வாங்கி வந்திருக்கிறார் என்று. தவம், மெய்யியல் போன்றவைதான் வீடு முழுக்கக் கிடக்கும். அவர்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டவுடன் நாங்கள் எல்லோருமே சிரித்தோம்.

இந்நாவல் பதிமூன்றாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் பிரபலமாயிருந்த பெருங்கவி ரூமிக்கும் அவரது உயிர் நண்பர் தர்வேஷ் ஷம்சி தப்ரேஸுக்குமான ஆன்ம உறவைக் கூறுவது. 1244-ல் இருவரும் பாக்தாத்தில் முதன்முறை சந்தித்து நட்புகொண்டதை இரு கடல்களின் சங்கமம் என்கின்றனர்.

அதேவேளை தற்போதில் பாஸ்டனில் தன் கணவன், மூன்று பிள்ளைகளுடன் நிறைவற்றதொரு வாழ்வைத் தொடரும் ‘எல்லா’ என்பவளுக்கும் சூஃபியாக இசை, நடனம், தவப் பயிற்சியெனக் கண்டங்களுக்குத் திரியும் அஸீஸ் ஸெட் ஸஹ்ரா என்பவருக்குமான ஆன்மவுறவும் பெருங்கதையாக விரிகிறது. ஏராளமான பாத்திரங்கள். பஞ்சபூதங்களின் சாரமாக நாவல் ஐம்பிரிவுகளாக மண்ணில் தொடங்கி ஆகாசத்தில் முடிவடைகிறது. அனைத்து பாத்திரங்களும் தன்னிலையில் இந்நால்வரையும் மையமாகக் கொண்டு தனித்தனியே கதையாடுகின்றன. பிரமிப்பூட்டும் வகையில் பாத்திரங்கள் ஊடாடிப் போகின்றன. இஸ்லாத்தின் மெய்ஞானச் சுவை பக்கங்களுக்குப் பக்கம் வழிந்தோடும் இனிய மெய்யனுபவம்.

கதையினூடே ஒவ்வொன்றாக காதலின் நாற்பது விதிகள் பகிரப்படுகின்றன. அந்த நாற்பது விதிகளையே குவித்துத் தனித்தொரு மெய்யியல் நூலெழுதலாம். தனிமனித அளவில் இவ்விருப்பின் துயரங்கள் ஒரே மாதிரியானவையாகத் தோன்றினாலும் அவரவரது வலிகள் அவரவர்க்குப் பெருஞ்சவாலாகவும் சுமையாகவும் தன்முனைப்பின் வேறாகவும் உணரப்படுகிறது. நாவலைப் படித்து முடித்ததும் எழும் பூரண நிறைவும் இவ்வுலக வாழ்வு பற்றிய மென்மையான புரிந்துணர்வும், நம்முள் எப்போதும் சுடர்ந்திருக்கும் தன்னுணர்வில் முகிழ்க்கும் மெய்ஞானச் சுடர் மேலும் ஒளிகொண்டு திகழ்வதையும் உணரமுடியும்.

ஒரு பிரபல பதிப்பகத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றும் எல்லா, ஒரு கட்டத்தில் அவள் பணிசார்ந்து மதிப்பிடும் அஸீஸ் ஸெட்.ஸஹ்ராவின் ‘இனிய துரோகம்’ எனும் புனைவின் வழி காதல் வயப்படுகிறாள். குடும்பமெனும் கட்டுகளைக் களைந்து அவள் தன் கண்டறிவில்தேட்டம் கொண்டோடுவது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிகழ்வு. பெண்களுக்கான ஆன்மத்தேடல் குறித்த விடுதலை இன்றளவும் பிற்படுத்தப்பட்டும் குறைபாடுடைத்துமே உள்ளது.

மெய்யான மானுட உறவு – அது உற்ற நட்போ, காதலோ, பேரன்போ – என்பது ஒருவரையொருவர் பிரதிபலிப்பதாகத் தொடங்கி, வளர்ந்து கிளைத்துப் பெருகி, இறுதியில் தன்முனைப்பு நீங்கி, பூரண தன்னறிதலாக, வாழ்வர்த்தமாக அவரவருக்கான மீட்சியாகப் பிரகாசிப்பதையே வேறுபட்ட நூற்றாண்டுகளில் நிகழும் உயருறவுத் தொடர்பாக இக்கதையில் பகிரப்படுகிறது.

‘நிராகரிப்பவருக்கு எதிரான போரல்ல, ஒருவரது நஃப்ஸ் எனும் ஆழ் மனத்தின் தன்முனைப்புக்கும் இச்சிப்பிற்கும் எதிரானதே ஜிஹாது’ என்கிறார் ரூமி. ‘ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான சொந்த வழியும் வழிபாடும் உண்டு. இறைவன் வார்த்தைகளை அன்றி நமது உள்ளங்களை ஆழ்ந்து நோக்குகிறான். சடங்கும் சம்பிரதாயங்களும் பொருட்டல்ல; நமது இதயங்கள் தூய்மையாக இருக்கின்றனவா இல்லையா என்பதே நோக்கு’ என்கிறார் தர்வேஷ்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றின் ஒவ்வொருவரின் வழியாகவும் இறைவனை உற்றறிய இயலும். இறைவன் பள்ளிவாசலிலோ கோயிலிலோ தேவாலயத்திலோ அடைபட்டில்லை. அதைத் தாண்டி இறைவன் எங்கிருக்கிறான் என்று வலியுறுத்துவீராயின் அவனைக் காணக்கூடிய ஒரே இடம் உண்மைக் காதலனின் உள்ளம் மட்டுமே என்கிறார் தர்வேஷ்.

அன்பு சுரந்திருக்கும் ரூமி முஸ்லீம்கள் மட்டுமன்றி கிறிஸ்தவர், யூதர், பிற இறைவாதிகள் என அனைத்து சமயத்தோரையும் கனிவுடன் ஆரத் தழுவுகிறார். தர்வேஷின் நட்பிற்குப் பிறகு ரூமியின் மனம் மேலும் கனிந்து விசாலப்பட்டு சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளானோர், விளிம்பு நிலையினர், கணிகையர், குடிகாரர்கள், பிச்சைக்காரர்கள் என மறுபக்கத்திற்கும் மடைமாற்றம் பெறுகிறது. 

நோயுற்றோருக்குப் பிரார்த்தனை செய்யவெனத் தொழுநோயாளிகளை வாடகைக்குக் கூட்டிச்செல்வது வழக்கம். ஏனெனில் அவதியுறும் அவர்களது வேண்டுதல்களை இறைவன் கேட்கிறான் என்கிற நம்பிக்கை. ஆனால் பள்ளிவாசலில் பிரார்த்தனை செய்வது போல் தான் பாசாங்கு மட்டுமே செய்ய முடியும் என்கிறான் இரவலன் ஹசன். கடவுள் தனக்குச் செவிமடுக்கிறார் என்று அவன் நம்பவில்லை. அதற்கான சான்றுகளுமில்லை என்கிறான். அவன் ரூமியின் சொற்பொழிவைப் பள்ளி வாசலொன்றின் வெளியே நின்று கேட்கிறான். ரூமியைப் பார்த்ததும் பெருங்கூட்டம் முழுதும் எழுந்து நிற்கிறது. சூழலில் பெருமிதம் கூடுகிறது. ரூமி வாழ்க்கையின் துன்பம் பற்றி பேசுகிறார். நாம் அனுபவிக்கும் வேதனைகளே நம்மை இறைவனுக்கு நெருக்கமாக்குகிறது என்று போதிக்கிறார். வேதனை பற்றி அவருக்கென்ன தெரியும் என்று ஆத்திரப்படுகிறான் தொழுநோயாளி ஹசன். சமூகமே வெறுத்தொதுக்கும், யாசிக்கையில் அருவருப்புடன் தனது முகத்தைக்கூடப் பார்த்துவிடாமல் விட்டெறியப்படும் காசுகள் என்ற நிலையில், தன்னிலையில் தான் அனுபவிக்கும் நிஜமான துன்பத்தைக் கொண்டு ரூமியின் தகுதிகளை ஆராய்கிறான். அது ஒருவித அறச்சீற்றம்தான். மிக நியாயமானதுமாகும்.

மார்க்க அறிஞராகவும் சமய போதகராகவும் திகழ்ந்த ரூமியின் வாழ்வு இறுதியில் கவிதையால் பூரிதப்பட்டுத் ததும்புகிறது, அவரியற்றிய கவித் தொகுப்பான மஸ்னவீயின் வரிகளை அவரால் திரும்பக் குறிப்பிட இயலாது போகுமளவுக்கு. அவர் கூறுகிறார்: ‘கவிதையோ, உரையோ, வார்த்தைகள் வலசைப் பறவைகளைப் போல் கூட்டங்கூட்டமாக எழுகின்றன, சட்டெனக் கிளம்பி வருகின்றன. வெப்ப நிலங்களை நோக்கிப் பறந்துபோகும் பாதையில் அவை இடைத்தங்கி இளைப்பாறும் ஆற்றுப்படுகை மட்டுமே நானாக இருக்கிறேன்’ என்று. கவிமனது அப்படிப்பட்டதாகத்தானே எக்காலமும் இருக்கிறது!

ஒருவிதத்தில் ஏசுவைப்போல தர்வேஷ் ஷம்சி தப்ரேஸ் மதநிந்தனை செய்வதாகக் குற்றப்படுத்தப்பட்டு தம் மதத்தினராலேயே கொல்லப்படுகிறார். ஆங்காங்கே புத்தரும் கூறப்பட்ட விதிகளினூடே புன்னகைத்துப் போகிறார். அடையுமிடம் என்றெதுமில்லை என்றபோதும் நீங்கள் நடந்துகொண்டே இருக்க வேண்டும் என்கிறார் தர்வேஷ்.

வாழ்வின் மேல் நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் பற்றுதல்களும் ஏக்கங்களும் அவாக்களும் அவை சார்ந்த மானுடத் துன்பங்களும் தாண்டி எப்போதுமே தன் விடுதலைக்கெனவும் அதன்வழி மானுட விடுதலைக்கு உபாயமென ஒரு கூட்டம் தோன்றி, தடம் அமைத்துப் பின் மறைந்து போய்க்கொண்டே இருக்கின்றன. மனிதகுல வரலாற்றில் அது அப்படித்தான் நீள்கிறது. அது இஸ்லாமிய சூஃபிகளாகவோ தமிழ் மெய்த்தவ சித்தர்களாகவோ, புத்த ஜென் துறவிகளாகவோ இருக்கலாம். அவர்கள் தமக்குள் குறிப்பிட்ட சமய மரபுகளின் வேர்களைக் கொண்டிருந்தாலும் மரங்களின் மலர்களும் கனிகளும் உலகின் யாவரும் சுவைக்கக் கிடைப்பன. அம்மரச் சூழலானது யாரும் அதனடியில் அமர்ந்து இளைப்பாற எல்லாச் சாதகங்களையும் தன்னுள் தடையின்றி கொண்டுள்ளது. அங்கே வேற்றுமைகளே இருப்பதில்லை; அரசன், சமயப் பெரியோர் முதல் பிச்சைக்காரன், கணிகையர், பணியாள் என எப்பாகுபாடுமில்லை. ஏன், தான், பிறனென்ற வேற்றுமையின் எல்லைக்கோடுகள்கூட ஒரு கட்டத்தில் அழிந்துவிடுகின்றன.

சிறுபிராயம் கொண்டே தனித்துவமிக்க நபராய் தன் வீட்டாருக்கே புதிராய் விளங்கும் தர்வேஷ் ஷம்சி தப்ரேஸ் அதுபோன்ற மானுடத்தின் அனைத்து வேற்றுமை எல்லைகளையும் அதிகாரங்களையும் தனது விட்டேற்றியான, ஆனால் ஆழ்ந்த ஞானச் சொற்களால், தர்க்கங்களால் தகர்த்துப் போகிறார். இனி வாழ இயலாது. ஆன்மவொளி அணைந்துவிட்டது. இனி என்றென்றும் இருளடர்வே என்று உங்களது கண்கள் மூடிக்கொள்கையில் இதயத்தில் மூன்றாம் விழி ஒளி துலங்கத் தொடங்குகிறது. புறப்பார்வையிலிருந்து முரண்பட்ட அகவிழிப்பு; அங்கு இன்னொரு நீ தோன்றுகின்றாய் என்று மானுட விடுதலையைச் சுட்டுகிறார்.

‘இறைவனை நாம் எப்படிக் காண்கிறோம் என்பது நம்மை நாம் எப்படிக் காண்கிறோம் என்பதன் நேரடி பிரதிபலிப்பு. இறைவனை அன்பும் அருளும் கொண்டவனாகக் கண்டால் நாமும் அப்படியேதான்’ என்கிறது தர்வேஷின் முதல் விதி. அதுபோன்றே ‘சத்தியத்தின் பாதை இதயத்தின் பணியாகும்; புத்தியின் வேலையல்ல. மனத்தையன்றி இதயத்தையே உனது முதன்மை வழிகாட்டியாகக் கொள். இதயத்தை அணுகு, போராடு, இறுதியில் நஃப்ஸைக் கட்டுக்குள் கொண்டு வா. அவ்வழியை அறிவதே இறையறிதலுக்கு இட்டுச் செல்லும்’ என்கிறது ஒரு விதி.

நாற்பதாவது விதி ‘காதலே உயிர் நீர், காதலனோ ஆன்மத் தீ, நீரைத் தீ காதலுறுகையில் புதுமை கொண்டு சுழல்கிறது இப்பிரபஞ்சம்’ என்கிறது. இதனடிப்படையிலேயே ஒவ்வொருவரும் இதயத்தை அணுகி, காதல் பெருகி நிறைவுறுதலைக் கூறுகிறது இந்நாவல். பானையின் உட்புற வெறுமையிலேயே நிறைவுக்கான வாழ் சந்தர்ப்பங்களும் அர்த்தப்பாடுமாகிறது.

ஷரீஅத் என்பது மெழுகுவர்த்தி போன்று மேலான ஒளியைத் தருகிறது. இருள் வெளியில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடம் போவதற்குத்தான் மெழுகுவர்த்தி உதவக்கூடும் என்பதை மறந்துவிட்டு அம்மெழுகுவர்த்தியின் மீது கவனத்தைக் குவிப்பது நன்மை பயக்காது என்கிறார் தர்வேஷ். உலகின் பிரச்சினைகளில் பெரும்பாலானவை மொழிப் பிழைகளாலும் தவறான பொருள் விளக்கங்களாலும் ஏற்படுகின்றன. ஒருபோதும் சொற்களை புற மதிப்பீட்டில் அடக்காதீர்கள். காதலின் எல்லைக்குள் நுழைகையில் நாம் அறிந்திருக்கும் கோணத்தில் அவ்வார்த்தைகள் அர்த்தமிழந்து விடுகின்றன. மௌனத்தால் மட்டுமே புரிந்துகொள்ளக் கூடிய அர்த்தங்களுமுண்டு.

சமய வேறுபாடுகளின் அடிப்படையில் சிறுபான்மையினரின் குடியுரிமையையே நிராகரித்து வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கி முழுதாகத் தமது சொந்த மண்ணிலேயே அழிக்கப் பார்க்கும் இன்றைய நாட்டு நடப்பில் இதுபோன்ற தர்வேஷ்களின் பணி முன்னிலும் இன்றியமையாததாகவும், இதுபோன்ற இலக்கியப் படைப்புகள் முன்னிலும் மிக முக்கியமானதாகவும் அம்முன்னெடுப்புகளை நாம் முன்னிலும் அதிகமாக வாசிப்பதும் பகிர்வதும் பரப்புவதும் பிரதானமானதாகவும் படுகிறது.

தலைப்பை வைத்து இளம்பருவம் என்பதால் நான் ஒருவேளை என் மகள்களுக்காகத்தான் அந்நூலை வாங்கி வந்தேனோ என்றுகூட நினைத்தார்களாம். படித்து முடித்ததும் அது அவர்களுக்கானது மட்டுமல்ல தவமாற்றும் எனக்கும்தான் என்று சொல்லத் தோன்றியது. 

மகா பிரக்ஞா இருதய சூத்திரம் உருவே வெறுமை, வெறுமையே உருவென்கிறது. ஆரம்பத்தில் தான் ஒரு கவியாகத் திகழ முடியாது என்று ரூமி நினைக்கிறார். தர்வேஷின் இழப்பால் பெருங்கவியாகி இப்படி எழுத் தொடங்குகிறார்:

‘கிறிஸ்தவனோ யூதனோ முஸ்லிம், ஹிந்துவோ பெளத்தனோ அல்லன்; சூஃபியோ ஜென்னோ அல்லன். நான் கிழக்கையோ மேற்கையோ சேர்ந்தவனல்லன். என் இடமோ இடமற்றது, என் தடமோ தடமற்றது.’

மானுட உறவுகளின் வழி இறைக்காதலின் சுவையை அனுபவிப்பது இக்கதையின் சாரமாக உள்ளது. படைப்புருவில் ஈர்ப்பாவது சிற்றின்பமெனில் படைப்பின் சாரத்தில் திளைப்பது பேரின்பம் என்றே நான் மெய்வழிப்பாதையின் நோக்கெனப் புரிந்துகொள்கிறேன். தடமற்ற இடமே நித்திய பூரணமாம்.

*

காதலின் நாற்பது விதிகள், தமிழில்- ரமீஸ் பிலாலி, சீர்மை பதிப்பகம், சென்னை (2022), 496 பக்கங்கள், ரூ.590