கல் கட்டிடத்தின் சுவரை ஒட்டி இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது இரண்டு செக்யூரிட்டிகள் வேகமாக ஓடிவந்தார்கள். “சார், இங்க நிறுத்தக்கூடாது, வெளிய பார்க்கிங்ல போய் நிறுத்துங்க” என்றார் ஒருவர். என் மனைவி வண்டியிலிருந்து இறங்கி, “பேஷண்ட் இல்ல, டாக்டர் ரவிச்சந்திரனோட கெஸ்ட், அவர்தான் வண்டிய இங்க நிறுத்திட்டு வரச்சொன்னாரு” என்றாள் நிதானமான குரலில். இந்த மாதிரியான இடங்களில், அதிகாரத்துக்கான, அலட்சிய முகபாவத்தை வெளிப்படுத்துவது அவளுக்கு இயல்பாகவே வருகிறது என்பதை மீண்டும் உணர்ந்தேன். அதே அலட்சியத்துடன் என் பக்கம் திரும்பி, “நான் முன்னாடி போறேன், நீங்க வண்டிய நிறுத்திட்டு வாங்க” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

“சார், யாராவது ஒரு டாக்டர் பேரைச் சொல்லி நீங்க நிப்பாட்டீட்டு போயிருவீங்க, இது ஆம்புலன்ஸ் வந்து நிக்கற எடம், டீன் பார்த்தாருன்னா எங்களத்தான் திட்டுவாரு” என்றார் செக்யூரிட்டி.

எங்கு நிற்கிறேன் என்பதையே அப்போதுதான் கவனித்தேன். அவசர சிகிச்சைப் பிரிவின் வாசல் அது. யோசிப்பதற்குள் ஆம்புலன்ஸ் ஒன்று சைரன் ஒலியோடு வந்துநின்றது. ஆண் செவிலியர்கள் இரண்டு பேர் கட்டிடத்திற்குள்ளிருந்து ஓடி வந்து ஆம்புலன்ஸின் கதவைத் திறந்து உள்ளே ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்த நபரை இறக்குவதில் மும்முரமானார்கள். செக்யூரிட்டி என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையில் இருந்தது இறைஞ்சுதலா, எரிச்சலா என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த மாதிரி ஒரு முகபாவத்தை வரிந்துகொள்வது அவருக்கும் இயல்பாகக் கைகூடி வந்திருக்கும் என்று சட்டென்று தோன்றியது.

“நான் வெளிய நிறுத்திக்கறேன்” என்றபடி வண்டியைத் திருப்பி, சாலையில் இறக்கினேன். அடுத்த நுழைவாயிலில் இருந்த வாகனக் காப்பகத்தின் வாசலிலேயே “ஒரு எடம்கூட இல்ல” என்று கறாராகச் சொல்லி என்னைத் திருப்பி அனுப்பினார் ஒரு பெரியவர்.

 “உள்ளேயும் நிறுத்தக்கூடாது, பார்க்கிங்லையும் இடமில்லைன்னா, வேற எங்கதான் வண்டிய நிறுத்தறது?” என்று குரலை லேசாக உயர்த்தினேன்.

அவர் எனக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்துவிட்டு எனக்குப் பின்னால் வந்த இன்னொருவரிடம், “ஒரு எடம்கூட இல்ல” என்ற அதே வசனத்தைச் சொல்லித் திருப்பி அனுப்ப ஆரம்பித்தார். வேறு வழியில்லாமல் மருத்துவமனையின் சுற்றுச்சுவரை ஒட்டிச்சென்ற சாலையில் வண்டியை மெல்ல உருட்டிக்கொண்டே போனேன். சுவரையொட்டி நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நின்றுகொண்டிருந்தன. மூத்திர வாடையும், மருந்து வாடையும் நாசியைத் துளைத்தது. வெயில் அதைச் சகிக்க முடியாத அளவுக்குத் துர்நாற்றமாக மாற்றியிருந்தது. சற்று தூரம் தள்ளி வண்டியை நிறுத்தினேன்.

“நானா, மார்ச்சுவரி பக்கத்துலதான், வெளிய நிக்கறேன், இன்னும் பாடிய கொடுக்கல, நேரமாகும் போல, எரிச்சலா இருக்கு, பேசாம கெளம்பலாம்னு பாக்கறேன்” என்று ஒரு ஆள் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அனேகமாக நான் பைக்கை நிறுத்திய சுவரின் மறுபுறம் பிணவறை இருக்கக்கூடும். ஏற்கெனவே தெரிந்ததுதான், ஆனாலும் அந்த ஆள் ‘மார்ச்சுவரி’ என்று சொன்னதும் என்னுடல் மெல்ல தன்னிச்சையாகக் கூசியது.

அங்கிருந்து மெல்ல நடந்தேன். என்னுடைய தோள்பையை மனைவியிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. இப்போது அதைத் தூக்கிக்கொண்டு நடப்பதற்கு வேறு எரிச்சலாக இருந்தது. கட்டிடத்தின் வாசலில் காதுகளில் தண்டட்டி அணிந்திருந்த கிராமத்துப் பெண்கள் கூட்டத்திலிருந்து திடீரென ஒரு பெண் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க, மற்றவர்கள் அந்தப் பெண்ணைச் சூழ்ந்துகொண்டு தேற்ற ஆரம்பித்தார்கள்.

கறுப்புக் கடப்பா கற்கள் பாவப்பட்ட கட்டிடத்துக்குள் உள்ளே நுழைந்ததும் உடல் முழுக்கக் குளிர்ச்சி பரவியது. வெளியிலிருந்த வெக்கை, கசகசப்பு, தூசி, பெண்களின் அழுகுரல், வாகன இரைச்சல் மொத்தத்தையும் வாசலிலிருந்த ஒற்றைக் கண்ணாடிக் கதவு தடுத்து நிறுத்தியிருந்தது. என் முகத்தில் மாட்டியிருந்த மாஸ்க்கையும் தாண்டி ப்ளீச்சிங் பவுடர், பினாயில், இன்னபிற மருந்துகள் கலந்த வீச்சம் முகத்தில் அறைந்தது. வெளியே இருந்த மூத்திர வாடை உள்ளே இல்லை. நேரே நடந்து, இடது புறம் திரும்பியவுடன் டாக்டர் ரவிச்சந்திரனின் பெயர் பொறித்த பலகையைப் பார்த்தேன். அதற்குக் கீழே இருந்த நாற்காலி ஒன்றில் என் மனைவி அமர்ந்திருந்தாள். அந்த இடத்தில் மட்டும் மருந்து வாடை சற்று மட்டுப்பட்டு ரூம் ஃபிரஷ்னரின் எலுமிச்சை வாசனை கூடுதலாகச் சேர்ந்திருந்தது.

“எங்கங்க போனீங்க, இவ்ளோ நேரம் ஆச்சு?”

“அது ஆம்புலன்ஸ் நிக்கற இடம், அதனால வண்டிய வெளியே போய் நிப்பாட்டிட்டு வர்றேன்.”

“எங்க?”

“மார்ச்சுவரி பக்கத்துல.”

“திரும்பிப் போகும்போது நான் வரமாட்டேன், நீங்களே போய் எடுத்துட்டு வாங்க” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே டாக்டர் ரவிச்சந்திரன் வெளியே வந்தார். என் மனைவியைப் பார்த்து ‘வாங்க’ என்பதைப் போலத் தலையை மட்டும் அசைத்தார். என் மனைவி என்னைக் காட்டி “என் ஹஸ்பெண்ட்” என்றாள். “ஹலோ சார்” என்றார், நான் பதிலுக்குச் சொல்வதற்குள் “வாங்க” என்றபடி முன்னால் நடந்து போனார்.

அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சற்று முன்னேயிருந்த காத்திருப்போர் அறைக்கருகில் போனதும் என் மனைவி என்னிடம் “ஏங்க, நீங்க உள்ள வர்றதுன்னா வாங்க, இல்லன்னா வெளிய இங்க வெய்ட்டிங் ரூம்ல இருந்தாலும் சரி” என்றாள். 

“நான் இங்கேயே இருக்கேன், கொஞ்சம் மெயில் பாக்கணும்” என்றேன்.

“ஹாஃப் அன் ஹவர் ப்ளீஸ்…” என்றாள். அப்போது என்னை வேலை வாங்கும்போது காட்டும் லேசான கெஞ்சல் முகபாவத்தைக் காட்டினாள்.

ரொம்பவே சுத்தமாகவும், சற்றே பெரிதாகவும் இருந்த அந்த அறையில், என்னோடு சேர்த்து ஏழெட்டு பேர் இருந்தார்கள். ஐசியூவுக்குள்ளிருந்து வரும் ஒரு தகவலுக்காக யுகங்களாகக் காத்திருக்கும் அசதி அவர்களது கண்களில் தெரிந்தது. மின்விசிறிகள் கடனே என்று ஓடிக்கொண்டிருந்தன. நான் ஒரு மின்விசிறியிலிருந்து காற்று வருகிறதா என்று பார்த்துவிட்டு, அதற்குக் கீழே வரிசையாக இருந்த நாற்காலிகளில் ஒன்றின் மீதமர்ந்தேன்.

என்னுடைய மடிக்கணினியைத் திறந்து, இணைய இணைப்பைக் கொடுத்து, அலுவலக மின்னஞ்சலைத் திறந்தேன். வழக்கமான தினசரி அறிக்கைகளை அனுப்ப வேண்டியதிருந்தது. அவற்றை அனுப்பிய பிறகு, திரையில் வந்து குவிந்த வெவ்வேறு தளங்களின் அறிவிப்புகளைப் பின்தொடர்ந்து போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிலும் மனம் ஒட்டவில்லை. மடிக்கணினியை அணைத்து, பையில் வைத்துவிட்டு, அங்கிருந்தவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த அறை வழியாக அவ்வப்போது ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். ஐசியூவுக்குள்ளிருந்து ஒரு அம்மாவைக் கைத்தாங்கலாகவும், இன்னொரு சிறு பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்தும் வெளியே அழைத்துப் போனார்கள்.

இலேசாகக் கண்ணயர்ந்திருந்தேன். “நிக்காதீங்க, தயவுசெய்து சேர்ல உட்காருங்க, நான் உள்ள போயி ட்யூட்டி டாக்டர வரச்சொல்றேன்” என்ற சத்தமான குரல் கேட்டு, நிகழ் உலகுக்குத் திரும்பினேன். ஒரு பெண் செவிலியர், ஓட்டமும் நடையுமாக அறையிலிருந்து ஐசியூக்குள் நுழைந்தார். நின்று கொண்டிருந்த சுடிதார் அணிந்த இளம் பெண்ணொருத்தி மெதுவாக நாற்காலியில் அமர்ந்தாள். அந்தப் பெண்ணுடைய சுடிதாரைப் பிடித்துக்கொண்டே, தலையில் கௌபாய் தொப்பி வைத்த, ஐந்து அல்லது ஆறு வயதுடைய சிறுவனும் அவளுக்கடுத்த நாற்காலியில் அமர்ந்துகொண்டான். அந்தப் பெண் நுனி நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன் கை கால்களை ஆராய ஆரம்பித்தாள். அவளது சுடிதாரின் இடுப்புப் பாகம் அருகே கந்தலாகக் கிழிந்திருந்தது. முழங்கைக்கு மேலே நன்றாகச் சிராய்த்து, மேற்தோல் வழன்று, ரத்தம் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. கால் பாதங்களுக்கு மேலேயும் நன்றாகச் சிராய்த்திருந்தது. காலுக்குக் கீழே அவளது செருப்பு நைந்து பிய்ந்து போய்க் கிடந்தது.

அந்தச் சிறுவன் மெல்ல எழுந்து வரிசையாக இருந்த நாற்காலி ஒன்றின் மேல் ஏறி நின்று தரையில் குதித்தான். பிறகு மேலும் இரண்டு மூன்று முறை அதே நாற்காலி மேலேறிக் குதித்துவிட்டு, அடுத்த வரிசை நாற்காலி ஒன்றில் ஏறிக் குதிக்க ஆரம்பித்தான். பிறகு ஒவ்வொரு நாற்காலியாக ஏறி அதையே செய்தான்.

அவனைக் கவனித்த அந்தப் பெண், “அஜய், சேர் மேல ஏறிக் குதிக்கக் கூடாது, இங்க வா” என்று ஈனஸ்வரத்தில் சிலமுறை அழைத்தாள். அவளது வார்த்தைகளுக்கு அவன் கட்டுப்படவே இல்லை. அவளது குரலில் எரிச்சல் இருந்தது. அந்தச் சிறுவன் முதல் வரிசையை முடித்துவிட்டு இரண்டாம் வரிசை நாற்காலிகளில் ஏறிக் குதிக்க ஆரம்பித்திருந்தான்.

இன்னொரு செவிலி வேக நடையில் வந்து அந்தப் பெண்ணிடம், “எங்க விழுந்தீங்க?” என்று கேட்டாள்.

“இங்கதான், ஜிஹெச் வாசல்லை வச்சு, ஒருத்தன் பைக்க ரேஸ் மாதிரி ஓட்டிட்டு வந்து இடிச்சுட்டு, திரும்பிப் பார்க்காம போயிட்டான்.” 

“எங்கங்க அடிபட்டிருக்கு?”

“கைல, கால்ல, இடுப்புகிட்ட இன்னும் எங்கெங்கேன்னு தெரியல, வண்டி சறுக்கிட்டே பத்தடி தூரத்துக்கு வந்திருச்சு” என்றபடி சோகையாகச் சிரிக்க முயன்றாள். பிறகு தனது இடுப்பருகே கிழிந்திருந்த சுடிதாரைப் பார்த்து “ஓ ஷிட்…” என்றபடியே அதில் ஒட்டியிருந்த மண்ணையும் தூசியையும் தட்டிவிட்டாள். செவிலி, “யாருக்காவது போன் பண்ணி இங்க வரச்சொல்லணும்னா சொல்லுங்க” என்றாள். சுடிதார் பெண்ணின் கண்களில் லேசான பயம் தெரிந்தது. “அவுங்க அப்பா, காலைலதான் வெளியூர் போனாங்க, இப்ப ட்ராவல் பண்ணிட்டு இருப்பாங்க, இப்ப சொன்னா திட்டுவாரு, அப்புறம் சொல்லிக்கலாம்” என்றாள்.

பிறகு, “அஜய் இங்க வா” என்று அந்தச் சிறுவனை அழைத்தாள். அவன் மறுப்பாகத் தலையசைத்துவிட்டு இன்னொரு நாற்காலியில் ஏறினான். அவள் தனது கைப்பையைத் திறந்து மொபைல் போனை எடுத்து “கேம்ஸ் விளையாடறியா?” என்றவுடன் ஓடிவந்து அவளது கையிலிருந்த அலைபேசியைக் கிட்டத்தட்ட வெடுக்கென்று பிடுங்கி, சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு என்னருகே காலியாக இருந்த நாற்காலியைத் தேடி வந்து அமர்ந்து, அலைபேசியைத் திறந்து ஏதோ ஒரு விளையாட்டை விளையாட ஆரம்பித்தான். துப்பாக்கிக் குண்டுகள் சுடும் சத்தம் மட்டும் எனக்குக் கேட்டது.

முதல் செவிலி வந்து சுடிதார்ப் பெண்ணின் புறங்கையில் வழிய ஆரம்பித்திருந்த ரத்தத்தையும், மண் தூசியையும் துடைத்துச் சுத்தம் செய்ய ஆரம்பித்தபடியே, “வேற எங்கேயாவது அடிபட்டிருக்கா?” என்றாள்.

“தலைல வலிக்கற மாதிரி இருக்கு” என்றவுடன், செவிலி லேசாகச் சந்தேக பாவனை காட்டினாள். “எங்க காட்டுங்க..” என்றபடி, சுடிதார் பெண்ணை அமர வைத்துவிட்டு அவளது தலைமுடியை ஒதுக்கி ஆராய்ந்தாள்.

செவிலி, காயங்களைத் துடைத்துக்கொண்டிருந்த முதல் செவிலியைப் பார்த்த அதே நொடி, அவளும் நிமிர்ந்து பார்த்தாள். ஒருவித நம்பிக்கையற்ற தொனியை அவர்கள் பார்வைகள் பரிமாறிக்கொண்டன. “என்ன இன்னும் டாக்டர காணோம்? எமர்ஜென்ஸி வார்டுக்கு வந்தாலும் ஆடி அசைஞ்சுதான் வருவாங்க” என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டு உள்நோக்கி நடந்தாள்.

சுடிதார்ப் பெண் “அஜய், போனைக் கொடு, டாடிக்கு போன் பண்ணனும்” என்றாள். இப்போது அவளது குரல் கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போலிருந்தது. சிறுவன் உதட்டைப் பிதுக்கி ‘ஊஹூம்’ என்று தலையசைத்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தான். நான் அவன் என்ன விளையாடுகிறான் என்று பார்த்தேன். ஒரு கார்ட்டூன் கேரக்டர் ஒவ்வொருவராக அடித்து, உதைத்து வீழ்த்தியபடியே முன்னேறிப் போய்க்கொண்டிருந்தது. ஒவ்வொரு எதிரியும் செத்து விழும்போது தங்க நாணயங்களாக மாறிகொண்டிருந்தார்கள். ஒரு பெரிய தடியன் கேரக்டரை ரொம்ப நேரம் போராடி வீழ்த்தியவுடன் பெரியதொரு பண மூட்டை வந்தது. அதைக் கார்ட்டூன் கேரக்டர் தூக்கியவுடன் “ஊஹூ” என்று உடலைக் குறுக்கிக்கொண்டு சிரித்தது.

காத்திருப்பு அறை திடீர் பரபரப்புக்கு உள்ளாகியிருந்தது. உள்ளிருந்து வெள்ளை கோட், கழுத்தில் ஸ்டெத்தாஸ்கோப் அணிந்த ஒரு இளம் வயது பெண் மருத்துவரும், அதே வயது ஆண் மருத்துவரும் வெளியே வேகமாக ஓடி வந்தார்கள். அவர்களுக்குப் பின்னே காயத்தைத் துடைத்த செவிலி ஓடி வந்தாள். சுடிதார்ப் பெண்ணைக் கவனித்தேன். நாற்காலியின் முதுகில் தலையை நன்கு சாய்த்திருந்தாள். கை, கால்கள் துவண்டிருந்தன.

“அன்கான்ஷியஸ் ஆகிட்டாங்க போல, ஸ்ட்ரெச்சர் எடுத்துட்டு வாங்க, போங்க” என்று ஒரு செவிலியை விரட்டிவிட்டு, சுடிதார்ப் பெண்ணின் கன்னத்தை மெதுவாகத் தட்டி, “மேடம்.. மேடம்” என்று அழைத்தாள் அந்த இளம் பெண் மருத்துவர். அனேகமாகப் பயிற்சி மருத்துவராக இருக்கக்கூடும் என்று தோன்றியது. பிறகு சுடிதார்ப் பெண்ணின் கண் இமைகளைப் பிரித்துக் கூர்ந்து பார்த்தாள். “கூட யார் வந்திருக்காங்க?” என்று கேட்டவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “ஆக்ஸிடண்ட் கேஸா, ஏஆர் எண்ட்ரி போட்டீங்களா, இல்லியா?” என்றாள். “உள்ள வரும்போது அவுங்களா நடந்துதான் மேடம் வந்தாங்க, இவ்ளோ நேரம் நல்லாத்தான் இருந்தாங்க, ஓபிலையே அனுப்பற மாதிரித்தான் இருந்துச்சு இந்தப் பொண்ணு” என்றாள் செவிலி.

“மேம் பின்னந்தலைல…” என்றபடியே செவிலி சுடிதார்ப் பெண்ணின் தலையைத் திருப்பினாள். அவரது காது மடல்களின் பின்புறம் ரத்தம் மசமசவென்று தலைமுடியோடு ஒட்டிப் பிசின் போல இருந்ததைப் பார்த்தேன்.

“மை காட்” என்றபடி கூட இருந்த ஆண் மருத்துவரிடம், “ஸ்ட்ரெச்சர் சொல்லு அருண்” என்று சொல்லிவிட்டு, “ரவி சாருக்கு இன்ஃபார்ம் பண்ணு போ, எக்ஸ்ரே, ஸ்கேனுக்கு அவர்தான் எழுதணும்” என்றாள் வெள்ளை கோட் அணிந்த டாக்டர் பெண்.

பிறகு செவிலியர்கள் பக்கம் திரும்பி, “பேஷண்ட் பேர் என்ன?” என்றாள். 

“கேக்கறதுக்குள்ள அன்கான்ஷியஸ் ஆகிட்டாங்க மேடம்.”

“ப்ச்ச்… எதையுமே ஒழுங்கா செய்ய மாட்டீங்களா?” என்றாள். பிறகு “அருண்” என்று விளித்துவிட்டு, “போய்ட்டானா, இவன் ஒருத்தன் அவசரக் குடுக்கை” என்றபடி சுடிதார்ப் பெண்ணின் மணிக்கட்டைப் பிடித்து நாடித்துடிப்பைக் கவனித்தாள், கண் இமைகளைத் திறந்து பார்த்தாள். நெற்றியில் துளிர்த்த வியர்வையைப் புறங்கையால் துடைத்துக்கொண்டாள். பிறகு, “ப்ச்ச்… கெளம்பர நேரத்துல….” என்றாள். ஒரு முறை அனிச்சையாகத் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள்.

நான் என் பக்கத்தில் அமர்ந்திருந்த அஜய் என்றழைக்கப்பட்ட அந்தச் சிறுவனின் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அவனொரு சாமுராயாக மாறி, வாளால் பேய்களை வெட்டிக்கொண்டிருந்தான். விதவிதமான பேய்கள், வெளவால்கள் ரத்தம் சிதற வீழ்ந்துகொண்டிருந்தன. 

“தம்பி, உங்க அம்மா பேர் என்ன?” என்று கேட்டேன்.

பார்வையை மொபைலிலிருந்து எடுக்காமலேயே தலையை மட்டும் மறுப்பாக ஆட்டினான் அவன். எனது கேள்வியை அவன் உள்வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை. நான் அவனது மொபைல் போன் திரையை உள்ளங்கையால் மறைத்து, “உங்க அம்மா பேரு என்னடா?” என்று மிரட்டும் தொனியில் கேட்டென். 

சட்டென்று எழுந்தவன், என்னைப் பார்த்து முறைத்துவிட்டு இரண்டு நாற்காலிகள் நகர்ந்து போய் உட்கார்ந்துகொண்டான். நானும் எழுந்து அவன் பக்கம் அமர்ந்து மீண்டும் அவன் மொபைல் திரையை மறைத்தேன். “அய்யோ… கைய எடுறா” என்றான். அவன் என்னை ஒருமையில் அழைத்ததால் சட்டென்று எரிச்சலானேன். அவனுக்கு ஒரு அறை கொடுக்க வேண்டுமெனத் தோன்றியது. அதே நேரத்தில் அவன் வைத்திருந்த மொபைல் போன் ஒலித்தது. “ப்ச்ச்ச்…” என்றவன் அந்த அழைப்பை, நொடி நேரத்தில் துண்டித்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தான். நான் அவனது மொபைல் போனைப் பிடுங்கி வைத்துக்கொண்டு, “அம்மா பேரைச் சொல்லு.. மொபைல் தர்றேன்” என்றேன். அவன் எனக்குப் பதில் சொல்லாமல் நாற்காலியிலிருந்து இறங்கி, இன்னொரு நாற்காலியில் ஏறி நின்று குதித்தான். நான் அந்த மொபைலைப் பார்த்தேன். லாக் ஆகி இருந்தது. அவனிடம், “இந்த லாக்க எடுத்துக்கொடு” என்றேன். எனக்குப் பதிலளிக்காமல் ஒரு நாற்காலியிலிருந்து இன்னொரு நாற்காலி மேல் நடந்து சென்று அதிலிருந்து கீழே குதித்தான்.

நான் திரும்பிப் பார்த்தபோது அந்தப் பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து உள்ளே கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள், அவர்களுக்கு முன்னே அந்த இளம் பெண் மருத்துவரும், பின்னே செவிலியர்களும் போனார்கள். நான் அந்தச் சிறுவனைப் பற்றிச் சொல்வதற்காக “ஹலோ மேடம்” என்று அழைத்தேன். யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. அறையிலிருந்த மற்றவர்கள் தங்களது ஸோம்பி வேடத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள்.

நான் நேரம் பார்த்தேன். வந்து அரை மணி நேரம் கடந்திருந்தது. அலுவலகத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மட்டும்தான் அனுமதி வாங்கியிருந்தேன். மதியம் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது. அதற்கு அலுவலகத்திற்குப் போய்த் தயாராக வேண்டியதிருந்தது. “லேட்டாகுமா?” என்று என் மனைவிக்கு வாட்ஸப் செய்தேன்.

சற்று நேரம் கழித்து, “டென் மினிட்ஸ்” என்று பதில் வந்தது. நான் சலிப்புற்று மொபைல் திரையை அணைத்து வைத்து, திரும்பி அவன் பக்கம் பார்த்தேன், ரொம்ப நிதானமாக ஒவ்வொரு நாற்காலியாக ஏறிக்குதிக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தான். அவனது மொபைல் என் கையில் இருந்தது எனக்கே அபத்தமாக இருந்தது. சுடிதார்ப் பெண்ணின் கைப்பை அவள் அமர்ந்திருந்த நாற்காலி அருகே கவனிப்பாரற்று தரையில் விழுந்து கிடந்தது. நான் எழுந்து போய் அதை எடுத்து அவனருகே போய் மொபைல் போனை அவனிடம் கொடுத்தேன். அவன் சுடிதார்ப் பெண்ணிடம் செய்தது போலவே என்னிடமிருந்தும் அதை வெடுக்கென்று பிடுங்கினான். பிறகு ஒரு நாற்காலியைத் தேடி, அதிலமர்ந்து இன்னொரு விளையாட்டைத் திறந்து விளையாட ஆரம்பித்தான். நான் அந்தப் பெண்ணின் கைப்பையை அவன் மடியில் வைத்து, “இது அம்மாவோடது, பத்திரமா பார்த்துக்கோ” என்று சொன்னேன். அவன் என் பக்கம் ஒரு நொடி நேரம் மட்டும் பார்வையைத் திருப்பிவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தான். 

நான் அவனருகே போய் உட்கார்ந்துகொண்டேன். அவன் விளையாடுவதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். சலிப்புறும் கண்கள் அவனுக்கு. மனமும்தான் போல. எந்தவொரு விளையாட்டையும் அவன் பொறுமையாகவே விளையாடவில்லை. ஒன்றில் தோற்றவுடன் அடுத்த விளையாட்டை ஆரம்பித்தான். அதில் முதல் நொடியிலேயே தோற்றாலும் உடனடியாக அடுத்த விளையாட்டுக்குத் தாவினான். நான் பார்த்தபோது ‘மரியோ’ முதல் முள்செடியிலேயே கடிவாங்க, ‘டடட்டடட்டடாய்ங்’ என்ற சத்தம் வருவதற்குள் அதை ஒரு விரலால் தள்ளிவிட்டு அடுத்து ஒரு பைக் ரேஸை ஆரம்பித்திருந்தான். பிறகு இன்னொன்று.

அவனுடைய அம்மாவுக்குக் காயங்களைத் துடைத்த செவிலி வெளியே வந்தாள். நான் அவளிடம், “அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டேன். “நீங்கதான் கூட வந்தீங்களா?” என்று அவள் அதிர்ச்சி முகபாவத்துடன் கேட்டதும், நான் அதிர்ந்து, “இல்லல்ல, நான் டாக்டர் ரவிச்சந்திரனோட ஃபிரண்ட்” என்றேன்.

நான் கேட்ட கேள்விக்குச் சம்பந்தமே இல்லாமல், “டாக்டர் உள்ள இருக்காங்க” என்று பதில் சொல்லிவிட்டுப் போனாள் அவள். சற்று நேரத்தில் அருண் என்றழைக்கப்பட்ட இளம் மருத்துவர் இன்னொரு ஆண் ஊழியரோடு வெளியே வந்தார். நான் என்னுடைய நாற்காலியிலிருந்து எழுந்து நிற்கலாமா என்று யோசிப்பதற்குள் அந்த அறையைக் கடந்து வேகமாக வெளியேறினார்கள்.

நான் திரும்பவும் அவன் பக்கம் திரும்பி “அஜய்” என்று கூப்பிட்டேன். அவன் வழக்கம்போல மொபைல் திரையிலிருந்து கண்ணை எடுக்காமலேயே இருந்தான். அவன் விரல்கள் அதிவேகமாக இயங்கிக்கொண்டிருந்தன. நான் எட்டிப் பார்த்தேன். ஒரு கார் தனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த பல கார்களை இடித்துத் தள்ளியபடி வேகமாக விரைந்தது. நான் அவன் தோள்களை மெல்லத் தொட்டேன். அவன் சட்டென்று திரும்பி எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு அமர்ந்தான். அடுத்து என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. அறையிலிருக்கும் வேறு யாராவது என்னையும் அவனையும் கவனிக்கிறார்களா என்று பார்த்தேன். அவர்களோ தங்களது வெறித்த பார்வையைக் கைவிடாமலிருந்தார்கள்.

மெதுவாக எழுந்து இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்து எனது மொபைல் போனை எடுத்து, வந்திருந்த புது வாட்ஸப் மெஸேஜ்களைத் திறந்து பார்த்தேன். வழக்கமான ஃபார்வர்டு மெஸேஜ்கள். சிலரது வாட்ஸப் ஸ்டேடஸ்களைப் பார்த்தேன். பிறகு சலிப்புற்று ஃபேஸ்புக்கைத் திறந்து ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்தேன். ஒரு பாடல் சத்தம் ஒலித்ததும் எனது பைக்குள்ளிருந்து ஹெட்செட்டை எடுத்து மாட்டிக்கொண்டு முழு சத்தம் வைத்துக்கொண்டேன். “கள்ளூரப் பார்க்கும் பார்வை உள்ளூரப் பாயுமே” என்கிற பின்னணிப் பாடலுக்கு, மாநிறத்து இளம்பெண் ஒருவரது ரொம்பவே அழகான கண்களைக் க்ளோஸப்பில் காட்டிக்கொண்டிருந்தார்கள். மெல்ல அதில் லயிக்க ஆரம்பித்தேன்.

சுய நினைவு வந்தபோது, கால்களை மடித்து நாற்காலி மேல் வைத்தபடி இன்னும் விளையாடிக்கொண்டுதான் இருந்தான் அவன். நடுவில் பலபேர் உள்ளும் வெளியுமாக நடந்து போய்க்கொண்டு இருந்தார்கள். ஏற்கெனவே இருந்தவர்களில் சிலர் வெளியே போய், புதிதாகச் சிலர் வந்திருந்தார்கள். அவர்களில் யாரிடமாவது அஜயைப் பற்றிச் சொல்லி அவனை ஒப்படைக்க வேண்டும், அவன் அம்மாவுக்கு என்ன ஆனது என்று விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது. அறையிலிருப்பவர்கள் யாரும், யாரிடமும் முகம் கொடுத்துப் பேசுவது போலத் தோன்றவில்லை, அல்லது வேகவேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.

சற்று நேரத்தில் நான் முதலில் பார்த்த செவிலி வெளியே வந்தார். சட்டென்று எழுந்து அவரை மறிப்பது போல நின்று, “அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டேன்.

“எந்தப் பொண்ணுக்கு, பேஷண்ட் பேரு?”

“இப்போ சுடிதார் போட்டு, தலைல ரத்தமா இருந்ததே?” 

“ஓ, அந்தப் பொண்ணா? அன்கான்ஷியஸா இருக்காங்க, ஆமா நீங்க யாரு?”

“நான் யாருங்கறது இருக்கட்டும், இந்தப் பையன் அந்தப் பொண்ணுகூட…” நான் பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளிருந்து ஏதோ குரல் வர, “இந்தா வர்றேன்” என்று சத்தம் கொடுத்துவிட்டு உள்நோக்கி நகர்ந்தாள். அவளைத்தான் அழைத்தார்களா, இல்லை என்னிடமிருந்து தப்பித்து ஓடுகிறாளா என்ற குழப்பத்தில் நான் சோர்வுற்று நாற்காலியில் அமர்ந்தேன். அந்தப் பெண் இறந்துவிட்டது போலவும், அஜய் கவனிக்க ஆளில்லாமல் சாலையில் திரிவது போலவும் கொஞ்ச நேரத்துக்குக் கற்பனைகள் உள்ளுக்குள் கிளர்ந்துகொண்டிருந்தன. எனக்குப் பின் பக்கமிருந்து அருண் என்றழைக்கப்பட்ட இளம் டாக்டர் காத்திருப்பு அறைக்கு உள்ளே வந்தார். நான் அவரிடம், “சார் அந்த தலைல அடிபட்ட பொண்ணு..” என்றேன். “ட்ரீட்மெண்ட் பார்த்துக்கிட்டு இருக்கோம், சொல்லுவாங்க” என்று சொல்லிவிட்டு, என் பதிலுக்குக் காத்திராமல் உள்ளே போனார்.

எனக்கு, “டேய்” என்று சத்தமாகக் கத்த வேண்டும் போலிருந்தது.

அவர் உள்ளே போவதற்கும் என் மனைவி வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. “நடுவுல ஏதோ ஆக்ஸிடண்ட் கேஸ், ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணும்போதே அன்காஷியஸ் ஆயிருச்சு, சீரியஸ் கேஸ்னு வெளியே போய்ட்டாரு. அதான் இவ்ளோ லேட்டு, போலாமா?” என்றாள்.

நான், “அந்தப் பொண்ணு இப்ப எப்படி இருக்காம்?” என்று கேட்டேன்.

“எந்தப் பொண்ணு?” என்றாள் ஆச்சரியமாக.

“அதான் அந்த ஆக்ஸிடண்ட் கேஸ், அன்காஷியஸ் ஆச்சுல்ல?” என்றேன்.

“ஓ! அது பொண்ணா, அதுவே எனக்குத் தெரியல, ஐ டோண்ட் நோ” என்றாள்.

பிறகு குரலைத் தழைத்துக்கொண்டு, “பொறுப்பெடுத்துக்க அவர் தயாரா இல்ல, கவர்மெண்ட் விவகாரம், நாளைப்பின்ன ஏதாவது பிரச்சினையாச்சுன்னா என் தலைதான் உருளும்ங்கறாரு, நானும் தலைகீழா நின்னு பார்த்துட்டேன், நடக்காது” என்றாள்.

நான் அவளிடம், “ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு அஜயின் அருகில் போய் நின்றேன். அவன் யூட்யூபைத் திறந்து வேக வேகமாக ஸ்க்ரோல் பண்ணிக்கொண்டிருந்தான். பிறகு ஒரு வீடியோவை ஓட விட்டான். பிறகு இன்னொன்று, பிறகு இன்னொன்று, சட்டென்று நான் அடிக்கடி கேட்கும் இப்போதைய பாடல் ஒன்று பின்னணியில் ஒலித்தது. நான் சில நொடிகள் அப்படியே நின்றேன். இரண்டு நாற்காலிகள் தாண்டி அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியிடம், “இவனோட அம்மாவுக்கு அடிபட்டு உள்ள இருக்காங்க, யாராவது வந்தாங்கன்னா…” என்று நான் பேச ஆரம்பிப்பதற்குள், ‘எனக்கும் நீ பேசுவதற்கும் சம்பந்தமில்லை’ என்பதைப் போல முகத்தைத் திருப்பிக்கொண்டார் அந்த அம்மா. வேறு யாரிடம் சொல்லலாம் என்று யோசித்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனவுலகத்தில் இருப்பது போல இருந்தது. நான் என் மனைவியின் பக்கம் திரும்ப எத்தனிக்கையில் அவனது மொபைல் போன் ‘க்ளிங், க்ளிங்’ என்று சத்தம் கொடுத்தது. நான் பார்த்துக்கொண்டிருந்த போதே பேட்டரி தீர்ந்து, அதன் திரை அணைந்தது.

அஜய், “அச்சச்சோ…” என்றான். பிறகு என் கண்களை, நேருக்கு நேராகப் பார்த்து, தெளிவான குரலில், “அங்கிள்… உங்ககிட்ட டைப் சி சார்ஜர் இருக்கா?” என்றான். அவன் குரலில் அப்படியொரு குழைவும், குழந்தைமையும் வெளிப்பட்டது. மீண்டுமொருமுறை அவனைச் சப்பென்று அறைய வேண்டும் போலத் தோன்றியது.

நான், “ப்ச்ச் இல்லை” என்றேன். உடனே அசுவாரசியமான முக பாவத்துக்கு மாறி உதட்டைச் சுழித்தபடி, “இந்த மம்மி எப்பதான் வருவா… லூசு மம்மி” என்றான். பிறகு முகத்தைத் திருப்பிக்கொண்ட பெண்மணியைப் பார்த்து, “ஆண்ட்டி உங்ககிட்ட டைப் சி சார்ஜர் இருக்கா?” என்றான். அந்த அம்மா, அவனது கேள்விக்கும் வெறித்த பார்வையைப் பதிலளித்தாள்.

நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன். என் மனைவி, “என்னங்க, கெளம்புவோம்” என்றபடி கடிகாரத்தைப் பார்த்தாள். நான் அஜயின் அருகில் குனிந்து அவனுக்கு ஐசியூடைய கதவின் திசையைக் கை காட்டி, “அங்க போய் யார்கிட்டயாவது கேளு” என்று சொன்னேன். அவன் எழுந்து அந்தச் சுடிதார்ப் பெண்ணின் பிய்ந்து போன செருப்பருகே போய் அதை எட்டி உதைத்தான். அது சற்றுத் தள்ளி விழுந்ததும், “ஊஹூ…” என்று கைதட்டிச் சிரித்தான்.

நான் என் மனைவியின் பக்கம் திரும்பி, “ம்ம்ம்… போலாம் வா” என்றேன்.

6 comments

Senthilkumar July 25, 2022 - 11:27 am

அருமை குழந்தைகளின் மனநிலை இப்போது இப்படித்தான் இருக்கிறது.
சுஜாதா கதையில் விபத்தில் சிக்கிய
வனை அவனது மிக செல்லமாய் வளர்த்த நாய் யாரையும் அருகில் விடாமல் அவன் சாவதாய் முடியும்

கே.எஸ்.சுரேஷ்குமார் July 25, 2022 - 2:46 pm

தான் தோன்றித்தனமாய், சுற்றி என்ன நடக்கிறது எனும் குறைந்தபட்ச பிரக்ஞை கூட இல்லாம வளரும் குழந்தைகள் குறித்து அச்சமாக இருக்கிறது. மரு.ரவிச்சந்திரனை எதற்குப் பார்க்க வந்தார்கள் எனும் தகவல் இங்கே தேவையில்லை என்றாலும் கடைசியில் ’பொறுப்பெடுத்துக்க அவர் தயாராயில்லை’ எனும் பதில் அந்த சுடிதார்ப் பெண்ணைப் பற்றியதோ எனும் ஒரு சின்ன குழப்பம் வந்து போனது. அட்டகாசமான விவரிப்பு இளங்கோவன்.

KGD KARTHICK July 25, 2022 - 8:42 pm

கொஞ்ச நேரம் நானும் அந்த ஆஸ்பத்திரியில் உலாவி கொண்டிருந்ததாக நினைக்க ஆரம்பித்து விட்டேன். அந்த சுடிதார் பெண்ணுக்கு என்ன ஆனது என்று சொல்லவே இல்லையே

Chandrasekaran Santhanam July 25, 2022 - 11:24 pm

அருமை சார்

Balakrishnan N July 28, 2022 - 5:43 pm

Excellent.one line story like as a cinema

manguni July 31, 2022 - 3:45 am

துறப்பு. ஒவ்வொருவரின் கருணையை பொறுத்து, பொறுப்பு ‘துறப்பு’ நேரம் வேணுமென்றால் மாறலாம். மாறாதது துறப்பு ஒன்றே. மொத்தத்தில் அந்த டாக்டர், நர்ஸ், அந்த அடிபட்ட பெண்ணின் கணவன் (சொன்ன திட்டுவாரு), வார்டு பொம்பளை, நம்ம ஹீரோ, அவரோட பொண்டாட்டி மொத்த ஜனமும் ஒண்ணுதான்.. எதோ காத்திக்கிட்டு இருக்கிற நேரத்தில் ஹீரோவுக்கு கருணை வழியுது.. அப்புறம் அவரும் ஓடறாரு . உலகமே இப்படிதான் போய்க்கிட்டு இருக்கு.. நல்ல கதை. ஆனால் ஜெயமோகன் அறம் மாதிரி கொஞ்சம் பொசிடிவ் கதைகள் எழுதலாமே சார். 🙂 🙂 🙂

Comments are closed.