நாணாவுக்கு விழிப்பு தட்டியது. அரைமயக்கத்தில் அருகில் ஜன்னல் கம்பிகளின் இடைவெளிகளில் காலை ஒளி கசிவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். மயக்கம் தெளிந்த பிறகு, ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து கீழே படுக்கை விரிப்பைத் தடவினான். நறநறவென்று இருந்தது. அவனது நெற்றியிலும் உடம்பிலுமிருந்து ஆங்காங்கே போடப்பட்டிருந்த மஞ்சள் பற்று காய்ந்து பெயர்ந்து படுக்கை விரிப்பில் உதிர்ந்து கிடந்தது.  அவன் வெற்றுடம்பில் கன்றிய அரச இலைகள் ஒட்டிக்கிடந்து சரசரத்தன. நேற்று மாலை எங்கோ விளையாடித் திரிந்து வந்தவன் உடம்பைச் சொறிந்த படியே வீட்டுக்குள் நுழைந்திருக்கிறான். பாட்டியும் தாத்தாவும் அவனைக் கண்டபோது உடம்பில் கைகால் முதுகெங்கிலும் தடித்துப் போய் இருந்தது. 

“ஏதோ பூச்சிப் பொட்டு பட்டிருக்குமோ?” என்றார் தாத்தா. 

“எதாவது செரங்கா இருக்கப் போறது. இவன் அம்மா வந்து கேட்டா நம்ம என்ன சொல்றது? வீட்டுக்குள்ளேயே கடனா கடக்க மாட்டேங்கிறான் கடங்காரன். சதா சர்வ காலமும் அந்த அரைக்காப்படி பயலோட சேர்ந்துண்டு தெருப்புழுதிலேயே கடந்து, கட்டி உருண்டா?” என்று நீட்டி முழக்கினாள் பாட்டி.

“நீ வேற உடனே ஆரம்பிக்காத. அதலாம் ஒன்னும் இருக்காது. ஏதோ அலர்ஜி மாதிரி தான் தோன்றது.”

“எதுக்கும் அவன் தூங்குறதுக்கு முன்னாடி அரச எலையில வேப்ப எண்ணெயத் தடவி அங்கங்க அவன் உடம்புல மஞ்சள் பத்து போட்டு விட்டுடலாம்.  காலம்பற சரியாகிடும்.”

நாணா போர்வையை விலக்கி எழப்போனான். நேற்று இருந்த தினவு அடங்கி இருந்தது போல உணர்ந்தான். அம்மா எப்போ வருவாள்? மூன்று நாள் கழித்து அவனைக் கூட்டிப் போவதாக சொல்லியிருக்கிறாளே.

படுக்கையுள்ளில் ஏற்பட்ட சலசலப்பு கேட்டு பாட்டி எங்கேயோ இருந்தவாறே “நாணுக்கண்ணா எழுந்துண்ட்டியா? இரு பாட்டி வரேன்” என்றாள்.

பின்னர் தாத்தா ரேழியில் இருந்து சைக்கிளைக் கீழிருக்கும் சத்தம் கேட்டது. எங்கோ கிளம்புகிறார். 

“நாளைக்கு ரதசப்தமி. நாளும் கெழமையுமா இருக்கு. நெனைவு இருக்கா? மறந்துடாதேள்” என்றாள் பாட்டி.

“நன்னாவே ஞாபகம் இருக்கு. முந்தா நாளே பஞ்சாங்கத்த பாத்துட்டேன். சரி, நான் போய்டு வந்துடறேன். பேராண்டிய பாத்துக்கோ”

பாட்டி எதையோ டவரா டம்ளரில் ஆற்றிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

“பாட்டி, தாத்தா எங்க போறா?”

“எரவாஞ்சேரிக்கு போறா டி தங்கம்”

“இந்தா வெறும் வயித்துல இத குடி. அப்புறம் பல் தேச்சதும் கோதுமை ரவா கஞ்சி போட்டுத் தரேன்”

“பல் தேய்க்க வேணாமா பாட்டி?”

“இல்ல வேணாம்”

“இப்போ அரிப்பு நின்னுடுத்தா?”

“ஆமாம் பாட்டி. எழுந்துண்டதுலேந்து அரிக்கல.”

நாணா பாட்டி கையில் இருந்ததை யோசிக்காமல் வாங்கிக் குடித்தான். ஏதோ கசாயம் தான். ஒரு சொட்டு நாவில் பட்டவுடன் கடுத்தது. கசந்தது. ஆனால் பரவாயில்லை. நாவில் பட்டுக்கொள்ளாமல் அண்ணார்ந்து நேராக தொண்டைக்குள் ஊற்றிக்கொள்ள நாணா பழகியிருந்தான். ருசி தெரியவில்லை. மிதமான சூடு. ஒரே மடக்கில் குடித்துவிட்டான். பின்னர் தொண்டையைக் கையால் பிடித்து நிறுத்தி ஒரு செருமல். கசாயம் குடித்த சுவடே இப்போது அவனுக்குத் தெரியவில்லை.

“காய்ச்சல், தலை வலிலாம் ஏதும் இல்லையே?” என்றாள் பாட்டி.

“அதலாம் இல்ல பாட்டி”

“சரி ஒரு ஒன்பது மணியாகட்டும். வெந்நீர் போடறேன். கஞ்சி சாப்பிட்டு உடம்புல இருக்கற மஞ்சக் கரைலாம் போற அளவுக்கு நன்னா தேச்சு குளிக்கலாம். சரியா?”

*

தேவவிரதன் தூரத்திலிருந்தே, கங்கைக் கரையை ஒட்டியிருந்த மண் அரித்து, கரையோரமாய் நின்றிருந்த கடம்ப மரங்களின் வேர்கள் வெளிதெரிவதைக் கண்டு கொண்டான். இருபக்கமும் இருந்த மணல் மேடுகள் வெட்டு பட்டது போல சரிந்து விழுந்து கங்கையின் ஒழுக்கால் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது.  திடீரென என்ன ஆயிற்று? இமயப் பனிப் பாறைகள் இந்த காலத்தில் உருகாதல்லவா?  இது மழைக்காலமும் இல்லையே? கங்கையின் நீள அகல விரிவுகளை அதன் வளைவுகளை இவன் நன்கு அறிவான். கங்கையின் வழித்தடத்தில் அமைந்த ஒவ்வொரு கூழாங்கல்லின்  குளிர்ச்சியையும் இவன் அறிவான்.  இன்று புதிராய் கங்கை அவன் கண் முன்னே பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.   

“அன்னையே” என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான். பிறகு தன் புரவியில் இருந்து கீழிறங்கி கங்கைக்கு அருகே சென்று பார்த்தான்.  நாணல் புதர்களின் முனைகளில் ஆடும் வெண்பூக்கள் நீரில் அமிழ்ந்து மூழ்கும் அளவுக்கு நீரின் உயரம் அதிகரித்திருந்தது. நீர்மட்டம் கூடியிருந்தது.  நாணலுக்குத் தெரியும்.  அது கங்கையை நன்கறியும். கங்கையின் உயரம் தெரிந்தே அதுவும் வளரும். 

தூரத்தில் சுழித்துச் சென்று கொண்டிருந்த கங்கையின் பரப்பில் ஒரு பெருங்கொப்பரையின் அடியை ஒற்றி எடுத்தாற் போல ஒரு நீர்ச்சுழல் பள்ளம் உருவாகிவிட்டிருந்தது.  அது  பெருக்காமலும் சிறுக்காமலும் ஒரே அளவினதாய் அவன் கண் முன்னே ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

“வெள்ளம். வெள்ளம். ஆம் அது தான்.” 

“கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஆம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்”

சட்டென அவன் புரவியில் ஏறி புரவியை கங்கைக்கரையில் அமைந்த அந்த கடம்ப வனத்தினுள் கங்கை ஒழுகும் திசையிலேயே விரைவாகச் செலுத்தினான். கங்கை பெருக்கெடுத்துக் கொண்டிருக்கும் அந்த சுழல் மையப் பகுதியைக் கண்டடைந்து விரைவாகவே நெருங்கிவிட்டிருந்தான்.

அங்கே அவன் ஒன்றைக் கண்டுகொண்டான். அந்தச் சுழிமையத்தின் முன் விளிம்பில் கங்கையின் ஆற்றொழுக்கில் ஆயிரம் ஆயிரம் இளஞ்சிவப்பு நிற மீன்கள் துள்ளிச் சென்று கொண்டிருந்தன. நீருக்கு அடியில் இன்னும் இன்னும் என அவை அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றின் பின்னாலும் கங்கையின் ஒழுக்கு அலையலையென எழுந்து அடங்கிக் கொண்டிருந்தது. இவை தான் காரணமா?  ஆம். இவை தான் கங்கையை இழுத்துக் கொண்டு வந்திருக்கின்றன. ஒவ்வொரு மீனும் அதன் வால் துடுப்பில் கங்கையை கட்டி இழுத்து வருவது போல கங்கையில் எழுந்த அலைக்கோடுகள் தெரிந்தன. ஒரு கணம் மீன்கள் கங்கையை தன் வாலாகவே மாற்றியிருந்ததோ என்றும் கூட அவனுக்குத் தோன்றியது.

இந்த மீன்கள் எங்கிருந்து வந்தன? எப்படி இப்படி திடீரென பெருகின? எதற்காக வந்திருக்கின்றன? தேவவிரதனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் இவை தான் வெள்ளத்திற்கு காரணம். அது மட்டும் நன்றாகப் புரிந்தது. 

அவன் பிறிதொரு நாழிகை  தாமதியாமல், தன் குடிலுக்கு விரைவாக புரவியைச் செலுத்தி இலக்குக்கு வேண்டிய அம்புகளைக் கணித்து தன் அம்பறாத் தூணியில் நிரப்பிக்கொண்டான். பிறகு சாய்த்து வைக்கப்பட்டிருந்த தன் வில்லை எடுத்துக்கொண்டான். பின்னர் விரைவாகவே சுழல் பள்ளம் ஊர்ந்து கொண்டிருந்த அவ்விடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தான். தோள்பட்டையில் மாட்டியிருந்த தன் வில்லினை எடுத்தான். தன் புரவியில் அமர்ந்திருந்தவாறே முதுகுக்குப் பின் கட்டியிருந்த அம்பறாத்தூணியில் இருந்து அம்புகளை எடுத்து வில்லில் வைத்து ஒவ்வொன்றாய் குறிபார்த்துத் தொடுத்தான். 

இனி அந்த மீன்களா என் அம்புகளா? பார்த்துவிடலாம். என் அம்புகள் காற்றுவெளியை  அறுத்துச்  செல்லும் பிறிதொருவகை மீன்கள் தான். அவன் அம்புகள் சரமாரியாக அம்மீன்களைச் சென்று தாக்கின. துள்ளி எழுந்த மீன்களை அவன் அம்புகள் காற்றிலேயே வைத்து குத்திக் கிழித்துப் பதம் பார்த்தன.  நீருக்குள் ஊடுருவிச் சென்ற அம்புகள் மீன்களை நீருக்கடியில் இருந்த நிலத்தோடு சேர்த்துக் குத்தி நின்றன. முன் சென்ற அம்புகளின் வால் துடுப்பு இடைவெளிகளில் பின் வந்த அம்புகள் சொருகி நின்றன.  இப்படிப் பக்கவாட்டிலும் மேலிலும் அடுக்கடுக்காக அம்புகளால் ஆன அரண் எழுந்து நீரின் வேகத்தைக் குறைத்தது. சில நாழிகைக்குள்ளாகவே கங்கையின் குறுக்கே அம்புகளினால் ஆன தடுப்பணை ஒன்று உருவாகியிருந்தது. கங்கையின் ஒழுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

அவன் தன் எண்ணங்களை அம்புகளாக்கிக் கொண்டிருந்தான். மேலும் மேலும் என தன் எண்ணங்களை ஒழிந்து கொண்டிருந்தான். அவன் தன் மனத்தை ஒரு காலி அம்பறாத்தூணியாக ஆக்க முற்படுவதுபோல செயல்பட்டுக் கொண்டிருந்தான். கங்கையின் ஒழுக்கைச் சீர் செய்துவிட்டோம் என்று உணர்ந்த போது சற்று பெருமூச்சுவிட்டான்.  

அவன் கை அவனை அறியாமலே தன் முதுகுப் பக்கம் அம்பிற்காக துழாவியது. அவனுக்கு இன்னும் ஒரு அம்பு எஞ்சியிருப்பது போல இருந்தது. ஆனால் அம்பறாத்தூணி ஒழிந்து கிடந்தது. 

அப்போது எதிரே கங்கையில் சட்டென அவன் அமைத்து வைத்திருந்த அம்பு வேலியைத் தாண்டி ஒரு இளஞ்சிவப்பு மீன் துள்ளிச் சென்றது. இவனும் தன் முதுகில் இன்னும் அந்த ஒற்றை அம்பின் எடையை உணர்ந்தவனாக அம்பை எடுக்க கையைத் துழாவினான். ஆனால் அம்பு கைக்கு அகப்படவில்லை. 

அவன் அந்த மீன் சென்ற திசையிலேயே மீண்டும் அதன் துள்ளல் கண்ணில் படுகிறதா என்று நோக்கினான். அவனால் அதனைப் பின் தொடரமுடியவில்லை. அவன் அமைத்த வேலியே அதனை பின்தொடர முடியாமல் செய்துவிட்டதோ என்று ஒருகணம் எண்ணினான்.  உண்மையில் ஒரு மீன் துள்ளிச் சென்றதா என்ன என்று மறுகணம்  தன்னிடமே கேட்டுப் பார்த்துக்கொண்டான்.  இல்லவே இல்லை. இருக்கவே இருக்காது.

பிறகு ஒருகணம் அவன் முதுக்குச் சுமையை இறக்கி கண்களால் தன் அம்பறாத்தூணியை துழாவிப் பார்த்துக் கொண்டான்.  அதில் அம்பு எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை. ஆனால் அவன் கணக்கில் இன்னும் ஒரு அம்பு மிஞ்சியிருப்பது போல இருந்தது.  எங்கே சென்றது அது? 

தேவவிரதன் தன் புரவியை வந்த வழியில் திருப்பினான்.  எதிரில் கங்கையின் மறுகரையில் ஏதோ ஒரு முழக்கம் கேட்டது. ஒளியை நாணும் அடர் பசுங்கானகம் அது.  ஏதோ ஒரு காட்டு விலங்கின் தோல் அதிர்வது போலிருந்தது அவ்வொலி.  அவன் அதனைக் கேட்டிராதவனாகத் தன் புரவியை மெதுவாய் நகர்த்திச் சென்றுகொண்டிருந்தான்.  

*

“தாகம், தாகம்” என்று உறக்கத்தில் நா உழல அவரது தொண்டை நலுங்கியது. முலை ஊறிய தாய் போல மண் அருகில் நெகிழ்ந்தது. அதில் சிறு துளை. அதில் ஈரம் சுரந்து வந்து சிறிது நேரத்திற்குள் நீர் பீய்ச்சி அடித்தது.  

“பிதாமகரே உங்களுக்குத் தாகம் என்றால் இதில் உங்கள் அன்னை கனிவாள்” என்று சொல்லி அர்ஜூனன் தன் அம்பை அருகில் இருந்த வெற்று நிலத்தில் செலுத்தித் துளை ஏற்படுத்தி வைத்துச் சென்றிருந்த ஊற்றுமுகம் அது. 

அவர் “அன்னையே” என்று ஒருமுறை தனக்குள் எண்ணிக்கொண்டு பிறகு கிடைமட்ட நிலையில் இருந்து கொண்டே அந்த ஊற்றுநீரை அருந்தினார். படுத்தே இருந்து குடித்ததனால் நீரை வயிற்றுக்குக் கடத்த சிரமப்பட்டார். அவரது நெஞ்சு விம்மி அடங்கியது.

அந்த ஊற்றின் உச்சியில் வழியும் நீர் திரண்டு இறுகி மெழுகு போலாகி அதில் ஒரு மனித முகம் தோன்றியது. அதுவும் ஒரு பெண் முகம். அது வாய் திறந்து அவரைக் கண்டு “மகனே” என்றது.

“அன்னையே தங்கள் பொற்பாதம் பணிகிறேன். சிரம் தாழ்கிறேன்” என்றார் அந்த முகத்தைக் கண்டு கம்மி இருமியபடி.

அந்த முகம் “கடினப்படுத்திக் கொள்ளாதே மகனே. புரையேறிவிடப் போகிறது. என் ஆசி என்றும் உனக்கு உரித்தாகுக” என்று பதிலளித்தது. 

“நான் என் கடைத்துயிலை வெகுவிரைவாகவே எட்டிவிட வேண்டும் என்று ஆசியளியுங்கள் அன்னையே.”

“என்னால் எப்படி அது இயலும் மகனே?”

அந்த நீராலான முகத்தின் கண்களில் கண்ணீர் துளிர்த்து வருவதை அவர் கண்டார்.

“கங்கை கரிக்கக் கூடாது அன்னையே. கரையாதீர்கள்” என்று அவர் தாயைத்  தேற்றினார்.

மேலும் “நான் வந்த வேலை முடிந்தது. இனி என்னை தாங்கியிருக்கும் இந்த அம்புகளுக்கும் இம்மண்ணுக்கும் நான் வெற்று பாரம் தான் இல்லையா?” 

“மகனே நீ இம்மண்ணுக்கானவன். இந்த பாரத வர்ஷத்திற்கே உரித்தானவன். நீ எப்படி இங்கே வெற்றுச் சுமையாகிப் போவாய்? உன்னை இனிவரும் அத்தனை தலைமுறைகளும் எண்ணும். நீ ஒரு விதை மகனே. இந்த அம்புகள் உன்னை இந்த மண்ணில் ஊன்றியிருக்கின்றன. உனக்கு அழிவில்லை. நான் இருக்கும் வரை நீ இருப்பாய். நான் பாய்ந்தோடும் நிலங்களில் மட்டுமல்ல நான் பாய்ந்தோடாத பாலை நிலங்களிலும் உன் பெயர் நிலைக்கும். வறள் பாலையின் ஒவ்வொரு வேரும் தன்னகத்தில் கங்கையை அறியும். அவை மண்ணுக்கடியில் தேடித் துழாவுவது இக்கங்கையைத்தான். கங்கை அறியாத வேர் இப்பாரத வர்ஷத்தில் உண்டா சொல் மகனே? உன்னை நான் தழைக்கச்செய்வேன்.”

“எதுவெனினும் தாய்க்கு தன் மகன் சளைத்தவன் இல்லை தானே?” பிதாமகர் நகைத்தார்.

“அப்படியல்ல மகனே.”

“விடுங்கள் அன்னையே. என்னை இந்த உயிர்ப்பீடை பீடித்து வைத்திருக்கின்றது. விட்டொழிய மாட்டேன் என்கிறது. ஆனால் என் உடலோ உயிரற்ற ஊனத்தில் தான் திளைக்க விழைகிறது. இச்சை மரணம் என்றார்கள். நீயாகவே உன் மரணத்தை முடிவெடுக்கலாம் என்றார்கள். இதோ ஐம்பத்தியேழு இரவுகள் இப்படுக்கையிலேயே கிடந்து கழித்துவிட்டேன். பகலவன் வடதிசை நோக்கித் தன் தேர் சகடங்களைத் திருப்பி புறப்பட்டுவிட்டான். அவனது எழுதேர் புரவிகளும் என் காதுகளில் தடதடக்கின்றன. ஆனால் இன்னும் என் இன்னுயிர் பிரியவில்லை. என்னை என்னைத் தவிர வேறெவரும் கொல்ல இயலாது என்பது போய் என்னை என்னாலேயே விடுவித்துக் கொள்ள இயலவில்லையே ஏன்? இது வரம் தானா? போதும் அன்னையே இப்புவி புளித்துவிட்டது.”

“அரற்றாதே மகனே”

பிதாமகர் மௌனமானார். தாகம் அடங்கி நெஞ்சுக்குழியின் விம்மல் அடங்கியிருந்தது. நீராலான மெழுகு முகம் தளர்ந்து நீர்த்து உருகி ஊற்றின் ஒழுக்கோடு கலந்துவிட்டிருந்தது. ஊற்று கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுருங்கி அத்துளைக்குள்ளேயே சென்று மறைந்துவிட்டது. பிதாமகர் கண்களை மூடினார்.

*

“நீங்கள் கனவு கண்டதுண்டா?  உங்கள் கடைசி கனவு எது? நீங்கள் கண்ட கனவுகள் எல்லாம் நினைவிருக்கிறதா?” வேதவியாசர் பீஷ்மரிடம் உசாவினார். அவர் அவ்வப்போது பிதாமகரைக் காண வருவார். ஓய்ந்த பொழுதுகளில் உடன் இருந்து பிதாமகருடன் நட்பு பேசிச் செல்வார். 

பிதாமகர் “விளையாடுகிறீர்களா வியாசரே?  நான் இருக்கும் இந்த நிலைக்கு இதனைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறேன்? இது அவசியம் தானா? என் நிலையை நன்றாக உணர்ந்தவர் நீங்கள். நீங்களா இப்படிக் கேட்பது? என் இச்சை மரணம் பொய்த்துக் கொண்டு வருகிறதே அது பற்றிச் சொல்வீர்கள் என்று பார்த்தால் இதையெல்லாம் கேட்கிறீர்களே.”

“இல்லை. யோசித்துப் பாருங்கள். பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.”

பிதாமகர் ஆழ்ந்து யோசித்தார். தான் கண்ட கடைசி கனவு எது? சட்டென நினைவு வரவில்லை. முதலில் கனவு என்கிற ஒன்றைக் கண்டதாகவே நினைப்பில்லை. அப்படியிருந்தால்தானே என்ன கனவு என்பதை நோக்கி நகரலாம். எவ்வளவு யோசித்தும் பதிலே கிடைக்கவில்லை.

“இல்லை வியாசரே என் நினைவில் எதுவும் தங்கவில்லை.”

“ஞாபக மறதியோ? மூப்பின் பொருட்டு நினைவுகள் அழிந்திருக்கக் கூடுமல்லவா?”

“எனக்கா? மறதியா? இல்லை அப்படிச் சொல்ல முடியாது. நான் கனவே கண்டதில்லை என்றுதான் நினைக்கிறேன்”

“அது சரி” என்று சொல்லி வியாசர் நகைத்தார்.

தான் கனவே கண்டதில்லையா? என்ன இது? மனிதப் பிறவியில் இது சாத்தியம் தானா?  பிரக்ஞை, அரசு, பொறுப்பு, போர் என்றே காலம் கடத்திய தனக்கு கனவென்று எதுவுமே இல்லையா? இல்லை நினைவு மழுங்கிவிட்டதா? பிதாமகர் துணுக்குற்றார்.

ஆனாலும் தன் எண்ணத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறுதலிப்பவராக வியாசரிடம்,”அது எதற்கு இப்போது வியாசரே? என் பிரச்சினைக்கு வழி சொல்லுங்கள்” என்றார்.

“இல்லை பீஷ்மரே. காரணமாகத்தான்.  உங்கள் பிரச்சினைக்கு அங்குதான் வழியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. ஏதோ எனக்கு மனதில் பட்டதைக் கேட்டு வைத்தேன். வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். நான் இனி கேட்கவில்லை.”

வியாசர் அருகில் இருந்த சேவகனிடம், “பிதாமகருக்கு உணவளியுங்கள்” என்று ஆணையிட்டார். 

“உணவருந்திவிட்டு நன்றாக துயிலுங்கள் பிதாமகரே. பிறகு நிதானித்து யோசித்து பாருங்கள். நான் மாலை வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு அமர்ந்திருந்த மனையில் இருந்து எழுந்து கொண்டார்.

“கோபித்துக் கொண்டு விட்டீர்களா?” 

“இல்லை இல்லை. பொழுதேறிவிட்டது அல்லவா? செல்ல வேண்டுமே.”

“சரி செல்லுங்கள். என்னால் உறுதியாக சொல்ல முடியும். என் நினைவில் பிசகில்லை. நான் கனவென்று எதனையும் கண்டதே இல்லை. நிச்சயமாக சொல்வேன்” என்று உரக்கச் சொன்னார்.

“சரி” என்று சொல்லி வியாசர் நகைத்துக் கொண்டே வெளிநடந்தார்.

*

மாலை வியாசர் வந்து பார்த்த போது பிதாமகரின் கண்களில் அத்தனை துடிதுடிப்பு. விட்டால் எழுந்து அமர்ந்துவிடுபவர் போல தென்பட்டார். உடலில் ஆங்காங்கே வழக்கத்துக்கு மாறான அசைவுகள். உயிர் ஒரு சிறுவனின் துள்ளலை அவரிடம் அப்போது வழங்கியிருந்தது.

அவர் வியாசரைப் பார்த்து “அமருங்கள் வியாசரே. நான் கனவு கண்டிருக்கிறேன். நான் கனவு கண்டிருக்கிறேன்” என்று தழுதழுத்தார். 

வியாசர் மெல்லிய நகையுடன் “நல்ல முன்னேற்றம் தான்”   என்றார். சில நாழிகைகள் கழித்து எதையோ  யோசித்து   அசைபோட்டபடி  இருந்த பிதாமகரிடம்   “எப்போது? என்ன கனவு?”  என்றார். 

“என்ன கனவு என்பது நினைவில் இல்லை. ஆனால் நான் பீஷ்மன் என்று அறியப்படும் முன்பு என்று தோன்றுகிறது”

வியாசர் நன்றாகவே நகைத்து “நான் யூகித்திருந்தது சரி தான்” என்றார்.

“என்ன யூகித்திருந்தீர்கள்? எது சரி? இச்சை மரணத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” பிதாமகர் உரத்த குரலில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தார் . 

“உங்களுக்கு இன்னும் விளங்கவில்லை. நீங்கள் இன்னும் உங்கள் மரணத்தை இச்சிக்கவில்லை. அதற்கு இன்னும் ஒழுங்காக ஆசைப்படவில்லை. அதனால் அது இன்னும் பலிக்கவில்லை”

“நீங்கள் உளறுகிறீர்கள் அல்லது என்னை மேலும் நிம்மதியிழக்கச் செய்கிறீர்கள்.”

“இல்லை நான் உளறவில்லை. இச்சை என்பது அடிமனம் ஆழ்மனம் சம்பந்தப்பட்டது.  உங்கள் ஆழ்மனத்தை நீங்கள் இன்னமும் உணரவில்லை. அது தான் நான் சொல்ல வருவது”

பிதாமகர் புருவத்தைச் சுருக்கினார். 

“அரசு, அரியணை, மணிமுடி, மனைவி, மைந்தன் இது எதுவுமே வேண்டாம் என்று நீங்கள் எடுத்த பிரதிக்ஞை உங்கள் பிரக்ஞையோடு நின்றுவிட்டது.  பிரக்ஞையைத் தாண்டி உள் செல்லவில்லை.” வியாசர் சற்று நிதானித்து மௌனமானார். 

பிதாமகர் இடிந்து போனவராய்க் காணப்பட்டார். தன் பிரதிஞ்ஞையின் மேல் அவருக்கிருந்த கட்டுறுதியை, பிடிமானத்தை வியாசரின் அவ்வாக்கியம் அசைத்துப் பார்த்துவிட்டதாக, கலைத்துப் போட்டுவிட்டதாக எண்ணி கனத்துப் போயிருந்தார்.  அவரது மேனி வியர்த்து வழிந்தது. உடல் நடுக்கம் கண்டது. அந்த நடுக்கம் அவரைத் தாங்கியிருந்த அம்புகளில் திகழ்ந்தது. நிலத்தை தொட்டுக்கொண்டிருந்த அவற்றின் கூர் முனைகள் உடைப்பட்டு நொறுங்கிவிடும் என்பது போல கனம் கண்டிருந்தன  அவை. 

வியாசர் மீண்டும் “ஆம் அது அவ்வாறு தான் நிகழும். வேறு வழியில்லை. நீங்கள் உங்களைப் பூட்டிக்கொண்டுவிட்டீர்கள். அது அந்த நிகழ்வு மூலம் நடந்தேறியிருக்கிறது. அதற்கு முன் இருந்த நீங்கள் வேறு. அதற்கு பின் இப்போது இருக்கும் நீங்கள் வேறு.  நீங்கள் இப்போது வெறும் மேல் மனத்தால் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பதிலும் உறுதிப்பாடும் அதில் இருந்து எழுபவையே.  நீர்நிலைகளில் நின்றிருக்கும் அல்லிமலர் நீரில் அமிழ்ந்திருக்கும் தன் தண்டை அறியாது. அடிச்சேற்றில் பாவியிருக்கும் தன் வேரினை அது அறியாது இருப்பது போலத்தான் நீங்களும்.  நீருக்கு மேல் அலைக்கழிக்கும் காற்றும் தேனுண்ண மொய்க்கும் தும்பிகளும்தான் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. வெறும் மேல்மனம். வெறும் மேல்மனம்.  ஆழ்மனம், நனவிலி இவற்றையெல்லாம் நீங்கள் ஏற்ற பிரதிக்ஞை மறத்துப் போகச் செய்துவிட்டது”

“என்ன சொல்கிறீர்கள் வியாசரே? இனி நான் செய்வதற்கென  ஏதுளது?” பிதாமகரின் அக்கேள்வி கேவலாக ஒலித்தது.

“நீங்கள் உங்கள் ஆழ்மனதைத் திறக்க வேண்டும். உங்களுக்கேயான ஏக்கம், உங்களுக்கேயான ஆசை, உங்களுக்கேயான காமம், உங்களுக்கேயான குரோதம் என்று ஏதேனும் உளதா என்று நோக்க வேண்டும்.”

“செருக்களத்தில் பாண்டவப் படையினரின் ஆயிரம் ஆயிரம் வீரர்களை கொன்றேனே. அவ்வஞ்சம்?”

“இல்லை அவையெல்லாம் உங்களுக்கானதல்ல அல்லவே. அது நீங்கள் நெறியின் கண் நின்றதனால் ஏற்பட்டதன் விளைவு. அது உங்கள் குரோதம் இல்லை.  அடையைக் கலைத்தால் தேன் குளவி கொட்டுமே அது போன்றதொரு வஞ்சம்தான்.  ஓர் உடனடி எதிர்வினை. அந்நேரத்திற்கானது. அதில் உங்களுக்கென எதுவும் இல்லை.  வெறும் போர் வீரன் தான் அதில் நீங்கள். பீஷ்மர் வெறும் காற்றின் திசையில் ஆடுபவர். உங்களைக் காற்று உபயோகித்துக் கொண்டது மட்டும் தான் நிகழ்ந்திருக்கிறது. ஆம் அது மட்டுமே.”

“இனி நான் என் கடையேற்றத்தை  எப்படிக்  கண்டுகொள்வது  வியாசரே?”

“பீஷ்மருக்குத் தனக்கெனவென்று எதுவுமே இருந்திடாது. அவர் தனியானவர். ஏதும் அற்றவர். அதனால் பீஷ்மரால்  அது முடியாது. ஆனால்… “

“ஆனால் என்ன? சொல்லுங்கள் வியாசரே.”

“அது தேவவிரதனால் முடியும். நான் கணித்தது அது தான். அவனுக்கு ஆசைகள் இருந்திருக்கும். காமக்ரோதமோகங்கள் இருந்திருக்கும். அவை அவனுக்கேயானவை. ஆசைகள் இருப்பதனால் கனவுகள் இருந்திருக்கும். அவன் நிச்சயம் கனவு கண்டிருப்பான். பீஷ்மர் கனவுகள் அற்றவர். ஆனால் அவன் அப்படி இல்லை.”

“உங்கள் ஆழ்மனம் அடைபட்டுக்கொண்டுவிட்டது. அதன் தாழ் நீங்கியாக வேண்டும். உங்கள் ஆழ்மனத்தைத் திறக்க அவனிடத்தில் இருக்கிறது சாவி.  உங்கள் ஆழ்மனம் திறந்து கொண்டால் உங்கள் இறுதி விழைவு நடந்தேறும். இச்சை மரணம் சித்திக்கும். அவனை நீங்கள் அடையக் கூடுவது அவன் கண்ட கனவு வழியாகவே. அக்கனவை நினைவுப்படுத்திப் பார்த்தல் வழியாகவே. அவனை நீங்கள் முற்றிலுமாக  தொலைத்துவிடவில்லை என்றே நான் நம்புகிறேன். அவன் இல்லாமலாகிவிடவில்லை, இருக்கிறான்.   அது போதும் அல்லவா? ஆனால் உங்களுக்கு  வெகுதொலைவில் இருக்கிறான். அவனை அருகணையுங்கள். அவனை உங்களுக்கு நினைவுப்படுத்திப் போவது மட்டுமே என் பணி. நான் அதனைச் செய்துவிட்டேன். என்னால் சொல்ல இயன்றது இவ்வளவு தான் பிதாமகரே. இனி உங்கள் கையில்.  அவனாக இருந்த போது நீங்கள் கண்ட ஒரு கனவு. ஒரே ஒரு கனவு. அது இருந்தால் போதும். அது உங்களைக் கொண்டு சென்றுவிடும்.  அப்படியொரு கனவை உங்கள் நினைவுகளில் தேடி மீட்டெடுங்கள். ”

*

பீஷ்மரின் குருகுலத்தில் வில்வித்தை பயின்ற மாணவர்களிடத்தில் ஒரு நெறி புழங்கி வந்தது.  அவர்கள் ஒவ்வொரு முறை பொருதும் போது அவர்களுக்கான அம்புக்கணக்கை முன் கூட்டியே அவர்கள் அறிந்திருக்கவேண்டும். அப்படி அறிந்து அவர்கள் தத்தமது அம்பறாத்தூணிகளை நிரப்பிக் கொள்ளவேண்டும்.  பயிற்சியின் போது அவர்களின் வில்வித்தை திறத்தை நிர்ணயிப்பது அவர்களது காலி அம்பறாத்தூணிகளாகவே இருந்தது.

ஒரு இலக்கு குறைந்தபட்சம் இத்தனை அம்புகளில் வீழ்த்தப்படவேண்டும். இலக்கு வீழ்த்தப்பட்டும் தூணியில் அம்புகள் இன்னும் மிச்சம் இருப்பது பிழையாகக் கருதப்பட்டது. அதில் வீரன் இலக்கைக் குறைந்த அம்புகளில் வீழ்த்தியிருந்தாலும் அவனது இலக்கைக் குறித்த முன்கூட்டிய மதிப்பீடு தவறானது என்று அதுவும் கருத்தில் கொள்ளப்பட்டு, அது ஒரு படி குறைவாகவே கருதப்பட்டது. அதனைத் தவிர்க்கவே ‘ஒரு தேர்ந்த வில்லாளன் என்பவன் இலக்கையும் காலி அம்பறாத்தூணியையும் ஒரு சேர ஒரே நேரத்தில் எட்டவேண்டும்’ என்கிற பொன்விதி வகுக்கப்பட்டது. அதனால் அவரது குருகுலத்தில் வில்லாளர்கள் பொருதிய பிறகு காலி அம்பறாத்தூணியை மறுக்காமல் நோக்கும் நோன்புமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அது மனப்பயிற்சியாய் சடங்காய் இயற்றப்பட்டது. 

வேற்று குருகுலத்தவர்கள், “இவர்கள் பீஷ்மரின் மாணாக்கர்கள்” என்று எளிதில் அடையாளம் கண்டுகொண்டுவிடும்படி இருந்தது அந்த நெறி. சமயங்களில் பிதாமகர் அவரது மாணவர்களிடம், பயிற்சிப் பொருதின் முடிவில் தன் காலி அம்பறாத்தூணியை காண்பித்து அதனை நோக்கி, “நான் என் எண்ணங்களையும் அம்புகளையும் ஒருசேர ஒழிந்திருக்கிறேன். இனி ஒன்றிலும் மிச்சமில்லை” என்று நூற்றியெட்டு முறை கூறியும் அவர்களைக் கூறச்செய்தும் அவர்களுக்கு  அந்நெறியைப் பயிற்றுவிப்பார்.

*

அந்த இரவில் பீஷ்மர் சிந்தை ஒழிந்து அம்புப்படுக்கையில் கிடந்தார். அவருக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. அவருக்கு மூளை வறண்டது. நினைவுகள் வறண்டன. காலம் வறண்டது. வெளி வறண்டது. இப்படிச் சிந்தை ஒழிந்து கிடத்தலே பெரிய விடுதலை என்று எண்ணினார். எதுவோ தோன்றி அவர் தனது உடம்பைத் தைத்திருக்கும் அம்புகளை ஒவ்வொன்றாய் எண்ண ஆரம்பித்தார். தன்னை இலக்காகக் கொண்டு துளைத்த அம்புகள் இத்தனை என்று எண்ணி முடித்த பிறகு அந்த எண்ணிக்கையைத் தனக்குள் சொல்லிக்கொண்டார்.

முன்பொரு முறை எப்போதோ அவரே அவரை இலக்காக்கிக் கற்பனை செய்துகொண்டு ஒரு எண்ணிக்கையைக் கணித்திருந்தார். அந்த எண்ணிக்கையும் இப்போது எண்ணியிருந்ததும் சரியாக ஒத்திருந்தது. அது அவரை ஒரு கணம் பெருமை கொள்ளச் செய்தது. அவரது கவலையில் இருந்து விடுவித்து ஆசுவாசப்படுத்தியது.

“என் எண்ணிக்கை எப்போதும் தவறியதில்லை”

சட்டென துணுக்குற்று, “அப்படியா தவறியதே கிடையாதா?” என்று அவர் பொருதிட்ட அத்தனைப் போர்களையும் பயிற்சிப் பொருதுகளையும் காலத்தில் பின்சென்று அலசிப் பார்த்தார். 

சட்டென தேவவிரதனாக இருந்த போது கங்கைக்குக் குறுக்கே அம்பணை கட்டிய நிகழ்வு நினைவுக்கு வந்தது. அதில் ஒரு அம்பு தவறியதல்லவா? ஆம்! தவறியது போன்ற பிரமை எழுந்தது அன்று! அந்தத் தவறிய அம்பை அவர் பல இரவுகளில் கனவுகளில் தேடித் துரத்தியிருக்கிறார் என்பதைக் கணம் பொறாமல் நினைவு கூர்ந்தார். அந்த அம்பு அவரை எங்கெங்கோ கூட்டிச் சென்றிருப்பதை நினைவு கூர்ந்தார். ஆனால் எந்தச் சித்திரமும் முழுமையாக துலங்கி வரவில்லை. பீஷ்மனாக மாறிய பிறகு எப்படி இந்தக் கனவுகள் சுவடே தெரியாமல் மறைந்து இல்லாமலாயின? இவ்வெண்ணத்தால் அவர் நடுக்கம் கொண்டிருந்தார். மறுநாள் பிதாமகர் தன் இன்னுயிரை  நீத்துவிட்டிருந்தார் . 

*

நாணா தனக்கு எப்படி இந்தத் தடிப்பு ஏற்பட்டது என்று ஊஞ்சலில் ஆடியவாறே யோசித்துப் பார்த்தான். நேற்று அரைக்காப்படி பயலுடன் எங்கெல்லாம் அலைந்தோம் என்று பட்டியலிட்டான். அரைக்காப்படி தெற்குத் தெரு சிறுவன்.  சட்டையே அணிந்திருக்க மாட்டான். தோள்பட்டைகளில் இருந்து  இரு பட்டிகளால் பிடித்துக்கொள்ளப்படும்  டவுசர் ஒன்றை மட்டும் தான் அணிந்திருப்பான். அவனுக்கு சற்று தெற்றுப் பல். எப்போதுமே அவன் நாவால் அப்பல்லை தெற்றி தெற்றிதான் பேசுவான். நாணா ஊருக்கு வந்தது தெரிந்தால் அவனைத் தேடி அரைக்காப்படி வீட்டு வாசலிற்கு வந்து நிற்பான். இவனும் அவனோடுதான் வயல் வாய்க்கால் காடு கரை என்று சுற்றுவது.

நேற்று மதியம் அந்த அரைக்காப்படிப் பயல் தொட்டி மேட்டருகே உள்ள காய்ந்த வயக்காட்டில் வைத்து அவன் கையில் பதுக்கி வைத்திருந்த தாத்தா பூச்சிகளை தன் சட்டைக்குள் விட்டது நாணாவுக்குச் சட்டென நினைவு வந்தது. “அரைக்காப்படி நாயே ஏன்டா இப்படி பண்ணின?” என்று எதிரில் இளித்துக் கொண்டிருந்த அரைக்காப்படியைத் திட்டி தன் சட்டையைக் கழற்றி உதறி சரி செய்து கொண்டான். 

“டேய் லூசு, அந்த பூச்சி கடிச்சுபுட்டுனா என்ன பண்றது? இப்படீலாம் வெளையாடாத.”

“நாணு, தாத்தா பூச்சி நம்மள கடிக்காது டா.   அதுக்கு வயசாயிட்டுல்ல. பல்லு   போயிருக்கும். நம்மள ஒன்னும் பண்ணாது.”

நாணாவுக்கு முதலில் அரைக்காப்படி அவன் சட்டைக்குள் தாத்தா பூச்சிகளை விட்டபோது அவை எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. சாதாரணமாகத்தான் இருந்தது. அதற்கு பிறகு இருவரும் எங்கெங்கோ சுற்றித் திரிந்துவிட்டார்கள்.  அப்போதெல்லாம் எதுவும் தெரியவில்லை.  அரைக்காப்படி சும்மா அவனைச் சீண்டி விளையாடியிருக்கிறான் என்று தான் நாணா நினைத்துக் கொண்டிருந்தான். பிறகு, ‘ஒன்னும் ஆகலையே’ என்று கூடச் சேர்ந்து சுற்றவும் ஆரம்பித்துவிட்டான். அந்த நிகழ்வையே நாணா மறந்துவிட்டிருந்தான். ஆனால் நேற்று வீட்டுக்கு வந்து சேர்ந்த போது உடம்பு அரிக்க ஆரம்பித்துவிட்டது. 

“அந்த படவானால தான்  இது எல்லாம். வரட்டும், அப்ப தெரியுஞ் சேதி.” நாணா 

உத்தரக் கயிற்றை இறுக்கிப் பிடித்து ஊஞ்சலை நிறுத்திவிட்டு எழுந்து போனான்.

அன்று பின் மதிய வேளையில் படுக்கையுள்ளில் கிடந்த நாணாவைக் காண அரைக்காப்படி வாசல் ஏறி திண்ணையில் வந்து கம்பி ஜன்னலுக்கு அருகே நின்றான். ஜன்னல் கம்பிகளுக்கிடையில் தன் முகத்தை ஒட்டி வைத்துக்கொண்டு, “லேய்  அம்பி, தாத்தா பூச்சி அங்க கொல கொலயா கூடு கட்டி வச்சுருக்குடா. என்கூட சேந்து அத பாக்க வரியா?” என்றான். 

“டேய் வரமுடியாது போடா. உன்னால தான்டா இப்படி படுத்து கெடக்கேன். நான் உன்னோட இனி சேரமாட்டேன்.  என்னை கூப்பிடாத. நான் வரல. தாத்தா பூச்சி கடிக்காதுன்னு தானே சொன்ன. நேத்து நைட்டு என் கை காலெல்லாம் தடிப்பு தடிப்பா வந்து அரிப்பெடுத்துட்டு தெரியுமா?”

“லேய் அம்பி என்னடா சொல்ற? எனக்குலாம் ஒன்னும் ஆகலயே”

“டேய் புளுகாணி மூட்டை என்கிட்டயே பொய் சொல்லாதடா. நீ நேக்கா அதப் புடிச்சி என் சட்டைக்குள்ள போட்ட.”

அதற்குள் பாட்டியின் குரல் கேட்டது.  “அங்க என்ன சலசலப்பு அரைக்காப்படி பயலா அது.  இன்னைக்கும் வந்துட்டானா?”

அரைக்காப்படி கையில் வைத்திருந்த ஒரு தாத்தா பூச்சியை ஜன்னல் வழியாக நாணா இருந்த அறைக்குள் ஊதிவிட்டு உள்ளிருந்து வெளிப்பட்ட பாட்டியின் குரலுக்கு பயந்து சட்டென திண்ணையில் இருந்து இறங்கிக் கீழே குதித்து ஓடிவிட்டான். இருட்டு அறையில் மின் விசிறிச் சூழலில் அந்தத் தாத்தா பூச்சி அங்கும் இங்குமென அலைந்தது. நாணா எழுந்துகொண்டு அது தன் மேல் பட்டுவிடக்கூடாது என்பது போல அறைக்குள்   சுழன்றுச் சுழன்று ஓடிக்கொண்டிருந்தான்.     

*

தேவவிரதன் அன்று கங்கை நதி தீரத்தில் அமையப்பெற்றிருந்த அவன் குடிலுக்கு வந்தான்.  புரவியை அருகில் இருந்த சேனத்தில் கட்டினான். பொழுது அணைந்து கொண்டிருந்தது. குடிலுக்குள் வந்த பிறகும் ஒரு முறை தன் அம்பறாத்தூணியை பார்த்துக் கொண்டான் . அதில் எதுவும் இல்லை. 

அதன் பிறகு ஒவ்வொரு முறையும் தன் வில்லைத் தாழ்த்தும் போது அந்த ஒற்றை அம்பின் எடையை உணர்ந்தவனாக தன் காலி அம்பறாத்தூணியைப் பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். அந்த வழக்கம் அவனிடம் தொடர்ந்து கொண்டே வந்தது.  ஒரு கட்டத்தில் தான் ஏன் இப்படிச் செய்கிறோம் என்பதையே உணராமல் வெறும் பழக்கம் மட்டுமே என அது அவனிடம் எஞ்சியது. அது அவனது நினைப்பில் படிந்துப்போய் உள்ளிருந்து கொண்டு அவனை இயக்கியது. அவன் அப்படி நோக்குவதை ஒரு சடங்காகவே ஆக்கிக்கொண்டுவிட்டான். 

பிறிதொரு சமயத்தில் இருந்து தொடர்ந்து அவனுக்குப் பல கனவுகள் வரத் துவங்கின. அக்கனவுகளில் வெவ்வேறு நிலப்பரப்புகளில் நித்தம் ஒரு ஒற்றை அம்பு வந்து கொண்டிருந்தது. அவன் அந்தக் கனவுகளில் அதனை துரத்திச் சென்றுகொண்டிருப்பவனாகவே இருந்தான். இமயமலையின் வெண்பனிச் சிகரங்களில், காந்தார தேசத்தின் சுடர்ந்த வறள் பாலைகளில், தென்முனைப் பீடபூமிகளில் என அவன் அதனைத் துரத்திச் சென்றான். ஒருமுறை அவன் காதில் பறையொலிச் சத்தம் அதிர விழித்துக்கொண்டான். அன்று அவன் எந்த அம்பையும் துரத்தியிருக்கவில்லை. பிறகெப்போதோ மீண்டும் ஒருமுறை அந்த பறையொலிச் சத்தம் அவன் கனவில் எழுந்தது. அதனை அவன் செவியால் பின் தொடர்ந்து சென்றான். அவன் இது கங்கையின் மறுகரைதான் என்று உறுதிபடுத்திக் கொண்டான். இது நாள் வரை அவன் அந்த மறுகரைக்கு வந்ததே இல்லையோ அதனை அறிந்ததே இல்லையோ என்று எண்ணிக்கொண்டான். அந்தப் பறையொலி காட்டெருதின் தோல் அதிரும் ஒலி என்று உணர்ந்து கொண்டான். அவ்வொலி தாள லயத்தோடு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. 

அவன் கங்கையின் மறுகரையில் அமைந்திருந்த அப்பசுங்கானகத்திற்குள் ஒரு இலைநுனிக்கு வழுக்கிச் செல்லும் துளியாய் சலசலத்திராமல் நடந்தான். பசுமை கருமையென அக்கானகத்தில் ஒழுகிக் கொண்டிருந்தது.  பசிய இருள் அவனைச் சூழ்ந்திருந்தது. அவன் ஏதோ ஒரு மரத்தின் பின் நின்று, இலை மறைவில் இருந்து கொண்டு அக்காட்சியைக் கண்டான்.

தூரத்தில் அப்பசுங்காட்டில் வாழும் வனமக்களில் இளையவர்கள் இருபக்கமும் நின்று கொண்டு காட்டெருது தோலினால் ஆன பறையை அடித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் நடுவே கனல் மூட்டியிருந்து ஓராள் உயரத்திற்கு தீ எரிந்துகொண்டிருந்தது. இந்த மக்களைப் பற்றி தொல்கதைகளில் இருந்து அவன் அறிந்திருக்கிறான். அவர்களைச் சுற்றியும் வனப் பெண்கள் அவர்களது குழந்தைகளுடன் நின்றுகொண்டு குலவை ஒலி எழுப்பினர். அக்குழந்தைகள் அதனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தன.

அவர்கள் மூட்டியிருந்த தீ அவன் கண்முன்னே சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது. தேவவிரதன் அத்தீயின் தழலாட்டங்களுக்கு இடையிடையே அதன் பின்னால் நடந்துகொண்டிருந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தீயின் தழல் அதன் உச்சியில் காற்றை நீர்த்திரை போலாக்கி அலைவுற்று நெளிந்துகொண்டிருந்தது. விண்ணோக்கி ஓடுகின்ற நீரலைகள். அது திரையென அவன் முன் நின்றது. அந்நீர்த்திரைக்குப் பின்னால் நடந்ததெல்லாம் மங்கலாகத்தான் அவனுக்குத் தெரிந்தது.

வன மக்களுள் முதியவர் ஐவர், இளையவன் ஒருவனை அழைத்து வந்தார்கள். அவர்கள் அவனைக் கல்லால் ஆன மனையொன்றில் அமரச் செய்தார்கள். அவனுக்கு பின்னில் ஒரு பெரும்பாறை. அதில் அவன் நிமிர்ந்து சாய்ந்து அமர்ந்துகொண்டான். பிறகு அந்த ஐந்து முதுமக்களும் பின் நகர்ந்து சென்றார்கள். சில கணங்களுக்குப் பிறகு அதே ஐந்து முதியவர்கள் அவர்களின் கைகளில் மகுடப்பூக்கள் கோர்த்து கட்டப்பட்டிருந்த அந்த மணிமுடியை அவன் தலையில் வைக்கக் கொண்டு சென்றார்கள். குலவையொலியும் பறைச்சத்தமும் ஒன்றை ஒன்று நிரவி நேர்ந்து ஒற்றை ஒலியாகி உச்சத்துக்குச் சென்றுகொண்டிருந்தது. சட்டென அவன் கண்முன் நெளிந்த அந்த நீர்த்திரையை இரண்டெனக் கிழித்து ஏதோ ஒன்று ஊடுருவியது. அது அவர்கள் அந்தத் தலைமகனுக்கு அணிவிக்கவிருந்த மகுடப்பூ மணிமுடியைக் கழுகின்  அலகினைப் போல  கொத்திச் சென்று பின் இருந்த பாறையில் சொருகி நின்றது. 

அது வேறொன்றும் இல்லை. அவன் கனவுகளில் துரத்தி ஓடிய அதே அம்பு தான். அந்த அம்பின் நுனியில் இளஞ்சிவப்பு நிறத்தில் மீனின் சிறகு அசைந்து துடித்துக்கொண்டிருந்தது. அம்பு மீனை ஊடுருவி அந்த மகுடப்பூ மணிமுடியையும் ஊடுருவிப் பாறையைத் துளைத்து நின்று ஆடிக்கொண்டிருந்தது தழலாட்டத்தின் இடைவெளிகளில் அவனுக்குத் தெரிந்தது. 

பறையொலியும் குலவையொலியும் அறுந்து விழுந்தது போல சட்டென இல்லாமல் ஆகி அங்கு நின்ற அனைத்து விழிகளும் ஒருசேர தேவவிரதன் மேல் திரண்டது. சட்டென அவன் பார்வையை விலக்கிக்கொண்ட போது கனவு கலைந்து எழுந்துகொண்டான்.

*

நாணா பழையபடி மாறியிருந்தான். மறுநாள் காலை பாட்டி அவனை எழுப்பி விட்டு குளிக்கச் சொன்னாள். அடுக்கிய சில இலைகளையும் அதில் கொஞ்சம் அரிசியையும் குளியலடியில் அவனுக்காக வைத்து விட்டுச் சென்றாள்.

“நாணுக்கண்ணா இந்த ஏழு எலையையும் உச்சந்தலைல வச்சுண்டு, தோ அந்தப் பக்கம் தான் கெழக்கு, அந்த பக்கமா பாத்து நின்னுண்டு தலைக்குத் தண்ணிய விட்டுக்கோ” என்று சொல்லிச் சமையல் அறைக்குள் சென்றாள். 

நாணா அவள் சொன்னபடியே குளித்து முடித்து, துண்டைக் கட்டிக்கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான். 

“பாட்டி பாட்டி, இன்னிக்கு ஏன் இப்படி குளிக்கணும்?”    

பாட்டி தன் கூந்தலில் கட்டியிருந்த துண்டை எடுத்து உதறிவிட்டு கூந்தலை முடிந்து கட்டிக் கொண்டு, அவனுக்குத் தலை துவட்டிவிட்டாள். 

“அதுவாடா கண்ணா, இன்னிக்கு ரதசப்தமியோல்லியோ, மஹாபாரதத்துல பீஷ்மாச்சாரியார் இருக்காரோனோ, அவர் இன்னிக்கு தான் தனக்கு உகந்த நாளுன்னு உத்தராயண புண்ய காலத்துலே ரொம்ப நாளா அம்புப் படுக்கையில கிடந்தவர், தன் உயிர விட்டார். பாவம் நல்லமனுஷன். சொல்லுக்காக நின்னவர்.  ஆட்சி அதிகாரம் குடும்பம்ன்னு எதுவும் கெடையாது அவருக்கு. அஸ்தினபுரிக்கே ராஜாவா ஆகியிருக்க வேண்டியவர்.  ஆனா அரசபதவி வேண்டாம்ன்னு இருந்துட்டார். தன்னோட தம்பி பசங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டார்”

“யாராவது ராஜா பதவியை வேணான்னு சொல்வாளா பாட்டி?“

சிறிது நேரம் கழித்து,  “அவருக்கு ராஜா ஆக ஆசை இல்லையா என்ன?” என்றான். 

சட்டென போன முறை வந்திருந்த போது ஏதோ ஒரு விளையாட்டில் அரைகாப்படி அவனை ராஜாவாக விடாமல் தோற்கடித்தது நினைவுக்கு வந்து தழைந்த குரலில் கேட்டான். “அவர யாராவது தோற்கடிச்சுட்டாளா பாட்டி?”

பாட்டி சொன்னாள். “அவரை அவரே தோற்கடிச்சுண்டுட்டார்”

நாணா புரியாமல் நின்றுகொண்டிருந்தான்.

பாட்டி தொடர்ந்தாள். “என்ன பண்றது? ப்ராரத்தம்ன்னு ஒன்னு இருக்கு. சில பேருக்கு அப்படி தான் இருக்கும். ஏன், உன் தாத்தாவோட பெரியப்பா, அதாவது உன் பெரிய கொள்ளுத் தாத்தா அவரே அப்படிதான். எல்லாத்தையும் ஆண்டு அனுபவிக்க தெரியல அவருக்கு. ஆஸ்தி அந்தஸ்துன்னு  எல்லாத்தையும் தம்பி பசங்களுக்கே எழுதி கொடுத்துட்டார். நல்லாவே வாழ்ந்துருக்க வேண்டிய மனுஷன் தான் அவரும். ஆனா வாழலை. என்னமோ பற்றுதல் இல்லாம போயிடுத்து அவருக்கு. தன்னைச் சுத்தி எல்லாமே தெரண்டு கனிஞ்சு வரும் போதும் அதுகிட்டேந்துலாம் இருந்து தன்னை மொத்தமா மூடி வச்சுண்டு இருப்பா சிலபேர். யார் கண்டா. உள்ளுக்குள்ள ஆசை இருந்திருக்குமா இருக்கும். இன்னும் இதழ் விரியாத பூ தன் மொட்டுக்குள்ள தேக்கி வச்சுகிற மாதிரி. ஆனா பெரியவாளாச்சே. அவா பண்ணின தியாகங்களை மறந்துட முடியுமா என்ன?

“பீஷ்மாச்சாரியாருக்கும் உன் பெரிய கொள்ளுத்தாத்தா மாதிரி கொழந்தேள் இல்ல. கல்யாணம் பண்ணிக்கல.  ஆனா நாமெல்லாருமே அவரோட கொழந்தேள்தான். அவர் நெனச்சுண்டுதான் நாம எல்லாரும் இன்னிக்கு இப்படி குளிக்கறோம். நாளைக்கு பீஷ்மாஷ்டமி தாத்தா அவருக்காக தர்ப்பணம் பண்ணுவா பாரு.”

“அது என்ன எலை பாட்டி?”

“எருக்க எலை”

“அத ஏன் வச்சுக்கறோம்?”

“அதுக்குதான் நாம செஞ்ச பாவத்த எல்லாம் போக்கற சக்தியிருக்குன்னு ஐதீகம். நம்பிக்கை. பீஷ்மாச்சாரியார் அப்படி வச்சுண்டு தான் இறந்து போனார். “

*

நாணா மறுநாள் மாலை சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு தாத்தாவுடன் அதம்பாவூர் சாலையில் சென்று கொண்டிருந்தான். சுற்றிலும் திறந்த வயல்வெளி. அவன் வழிநெடுகிலும் ஆங்காங்கே தாத்தா பூச்சிகள் பறந்துகொண்டிருப்பதைக் கண்டான். 

“தாத்தா தாத்தா நில்லு. அன்னிக்கு இந்த பூச்சிப் பட்டுதான் எனக்கு தடிப்பு தடிப்பா வந்தது. இது தான் கடிச்சுருக்கு” என்றான் 

தாத்தா குழப்பமாய் சைக்கிள் மிதிப்பலகைகளை அழுத்திக்கொண்டிருந்தார். 

“தாத்தா தாத்தா  பாத்துப் போ. அது நம்ம மேல பட்டுட போறது”

தாத்தா என்னவென்று அறிய ஓரமாக சைக்கிளை நிறுத்தினார்.  அவனை இறக்கிவிட்டார். “இது பூச்சி இல்லடா கண்ணா. பயப்படாத.”

“அரைக்காப்படி இத என் சட்டைக்குள்ள போட்டானே. அதுக்கப்புறம் தான் எனக்கு தடிச்சுது.”

“ஓ அப்படியா? அப்போ இது பட்டு உனக்கு அலர்ஜியாயிருக்கும்.”

“அலர்ஜின்னா என்ன தாத்தா?”

“அலர்ஜின்னா…  ரொம்ப குளிருத்துனா சளிப் புடிக்கறதோனோ அது ஒரு அலர்ஜிதான். குளிர் உன்னை தெரிஞ்சுக்கறதுன்னு அர்த்தம். அது மாதிரி இதுவும் உன்னை தெரிஞ்சுக்கறது. பயப்படாத. சரியாகிடும். “

“புரிலேயே தாத்தா.  பூச்சி இல்லைன்னா இது என்ன?”

“இது வெத.  எருக்க வெத. அது தான் காத்துல இப்படிப் பறந்திண்டிருக்கும். பஞ்சு மாதிரி தான் இதுவும்.”

“எருக்க வெதனா?

“எருக்கஞ் செடி இருக்குல்ல.  சொடுக்கு பூ மொட்டு இருக்குமே. அந்த மொட்டு மூடிண்டு இருக்கும். நம்ம அத சொடுக்கினா பட்டுபட்டுன்னு வெடிக்குமே  பாத்தது இல்லையா?”

“ஞாபகம் இல்லையே தாத்தா.” 

“நீ கூட நேத்திக்கு அந்தச் செடியோட எலைய தலைக்கு வச்சு குளிச்சிருப்பியே. பாட்டி அட்சதையோட கொடுத்திருப்பாளே.”

“ஆ.. ஆமாம் தாத்தா.”

தாத்தா சுற்றியும் முற்றியும் பார்த்தார். எங்கேனும் தன் பேரனுக்கு அந்தச் செடியை காண்பித்து விட்டால் நலம். சுற்றியும் பசுமை நிறம். இங்கு எருக்கை எங்கே தேடுவது?

சற்று இன்னும் தொலைவு போகலாம். பேரனை ஏற்றிக்கொண்டு சைக்கிளை மிதித்தார். தொலைவில் ஒரு வெடித்த நிலத்தைக் கண்டார். அங்கேயும் அந்த விதைகள் பறந்து கொண்டிருந்தன. அந்நிலத்தைச் சுற்றியிருந்த வரப்பின் ஒரு மூலையில் ஒரு எருக்கஞ்செடியை கண்டு கொண்டுவிட்டார். சைக்கிளைச் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு பேரனை அழைத்துக்கொண்டு வரப்பிலேயே நடந்தார்.   

நாராயணன் தூரத்தில் இருந்தே கண்டு கொண்டு விட்டான். அந்தச் செடியின் கிளைகளின் ஓரங்களில் காய்த்திருந்தது. வெடித்து காற்றின் திசைக்கேற்ப உதிர்ந்து உதிர்ந்து பறந்து சென்று கொண்டிருந்தது. அவன் அவற்றில் ஒன்றின் மீதும் தன் மேனி பட்டுவிடக் கூடாதென கவனமாகத் தாத்தாவைப் பின் தொடர்ந்து நடந்து வந்தான். 

அதை உணர்ந்து கொண்டு தாத்தா மெலிதாக சிரித்தார். “இனிமே அது ஒன்னும் பண்ணாது.  பயந்து பயந்து நடக்காதே. அது உன்னை தெரிஞ்சுண்டுடுத்து.”  

அவன் மீண்டும் தாத்தாவிடம் ”இது பூச்சியேயில்லையா வெதயா?” என்றான். “ஏன் இந்த வெதக்கு நரைச்சுருக்கு?” 

இருவரும் அந்தச் செடியின் அருகே வந்துவிட்டனர். அது பெரிய எருக்கம் புதர். இரண்டு ஆள் உயரத்திற்கு இருந்தது. தாத்தா அதன் இலையைக் காண்பித்தார். பின்னர் தன் கை உயரத்தில் இருக்கும் நுனி மொட்டுகளை விரல்களால் வெடிக்கச் செய்து காண்பித்தார்.  “பட்” என்று சப்தம் வந்தது. 

“நாங்கல்லாம் எங்க சின்ன வயசுல இதையே வெளையாட்டா வெளையாடுவோம். மொத்த மரத்துலயும் ஒரு மொட்டுகூட மூடியிருக்காத மாதிரி பண்ணிடுவோம்.”

“நீயும் ஒரு வாட்டி வெடிச்சு பாரு.” 

அவனும் ஒரு கொத்தைப் பிடித்தான். 

“பாத்து, பாத்து அதை வளைக்கணும். ஒடஞ்சா பால் கையில பட்டுடும்” என்றார். 

அவன் பதமாக அந்தக் கொத்தைப் பிடித்து ஒவ்வொரு மொட்டாய் உடைத்தான். அது உடைபடும் போது எழும் சத்ததைக் கேட்க காதிற்கு அருகில் வைத்துக்கொண்டு உடைத்தான். உடைத்த மொட்டுக்குள் இருப்பது என்ன என்பதை அவன் பார்த்திருந்ததாகத் தெரியவில்லை. விளையாடி முடித்த பிறகு அவன் சற்று அண்ணார்ந்து அச்செடியின் உச்சியைப் பார்த்தான். எவர் கையுமே தொடமுடியாத உச்சிக் கூம்புகளில் இதழ் விரிந்து கிடந்திட்ட நூறு நூறு மகுடப்பூக்களை அவன் கண்டுகொண்டிருந்தான்.