சோம்பலான தங்கத்தைப் போன்ற உடல்கொண்ட வெண்கலக் கிண்ணியில் கறவைப்பால் வெதுவெதுப்பாக நுரைத்திருந்தது. நல்ல தலையளவு மட்டத்திற்கு அது நிறைந்திருப்பதைப் பார்த்தால் அமிர்தா ஈன்றிருக்க வேண்டும். ஆனால் அவள் அகன்ற வயிற்றோடு தொழுவில் நின்றதாக நினைவில் இல்லை. முதலில் இது எந்த இடம்? பட்டறைச் சந்திலிருந்த பூர்வீக வீடா? தெரியவில்லை. பார்க்கும்போதே எங்கிருந்தோ சிவபாலன் டவுசர் பனியன் அணிந்து வந்தான். பத்து வயதிற்கு மீறிய உடல்வாகுதான். கரணை கரணையான புஷ்டிக் கட்டுகள் குழந்தைமைக்குப் பிறகும் நீங்காத உடல். அவனது சிரிப்பிலும்கூட இன்னமும் அது இருக்கிறது. அதே சிரிப்போடு வெண்கலக் கிண்ணியின் நிறைபாலைத் தூக்க முடியாமல் தூக்கி வேறொரு பாத்திரத்திற்குச் சரிக்க முயன்றான். அவன் ஏன் இதைச் செய்கிறான்? அவனுக்கு இது பழகாத விஷயமும்கூட. பால் வெண்கலக் கிண்ணியின் வாயிலிருந்து உள்மடிப்பாக வழிந்து கீழே சிந்துகிறது. இன்னமும் தூக்கி ஊற்ற முயல்கிறான். இன்னமும் வேகமாக வழிகிறது. அவனால் நிறுத்த முடியாத வேகத்தில் பால் தரைக்குப் போய்க்கொண்டிருக்க, முன்போலவே எங்கிருந்தோ கையில் சிறிய குச்சியோடு தொழுவக்காரன் கோபால் வருகிறான். வந்த வேகத்தில் குச்சியில் சிவபாலனின் புஷ்டி உடல்மீது விளாசுகிறான். சிவபாலன் குறுகிக்கொள்கிறான். பால் இன்னமும் வழிந்துகொண்டிருக்கிறது. முகத்தில் சிரிப்பும் குழப்பமுமாகக் கோபாலைப் பார்க்கிறான். எதுவோ திட்டியபடி கோபால் இன்னமும் வேகமாக அடிக்கிறான். அடியை வாங்கியபடி சிரிக்கும் சிவபாலனது முகத்தின் குழந்தைத்தனத்தைக் காணக் காண சகுந்தலாவின் வயிறு கோபத்தால் குழைகிறது. குச்சியைப் பிடிக்க கை நீட்டுகிறாள். அது எழவேயில்லை. தூரத்தில் இதைப் பார்த்தபடி பேப்பர் படிக்கும் தினகரனை நோக்கி கூக்குரல் போடுகிறாள். தொண்டைக்குள் எதுவோ அழுந்தி அமர்ந்திருக்கிறது. பேப்பரை வாசிக்கும்போதிருந்த அதே உணர்ச்சியற்ற கண்களோடு தினகரன் இதைப் பார்த்துக்கொண்டே இருந்தான். வலுவீச்சாக ஒருமுறை கையை எக்கி வீசினாள். ஆற்றுநீரைக் குத்துவது போல கை பிடிமானமின்றி எங்கோ புதைகிறது.

‘தட்’ எனும் ஒலியோடு சுவரைக் குத்திய வேகத்தில் வளையல்கள் சில்லுசில்லாகத் தெறித்து விழுந்தன. மறுகணம் கையில் வாங்கிய வலி உடல் முழுக்க விழித்தெழச் செய்தது. சகுந்தலா விழித்து அமர்ந்தாள். சிறிய அறை முழுக்கச் சுண்ணாம்பு வாசம். அந்தச் சுண்ணாம்பின் அவியல் வெக்கை அறை முழுக்க நிரம்பியிருக்க, வியர்வை வழிகின்ற உடலோடு அருகே தினகரன் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். சற்றே தூரத்து பைபாஸ் சாலையில் நள்ளிரவு கனரக வாகனங்கள் கடந்துசெல்கின்ற ஓசை இரைச்சலாக இல்லாத ஒழுங்கிற்குள் வந்திருந்தது. சற்றே திறந்த வாயோடு தினகரன் உறங்கியபடியிருக்க, புழுதிபடிந்த அவனது சாரதிவேட்டி அவனை மேலும் பரிதாபமாக்கியது. மாத்திரை போடாமல்விட்ட இந்த ஒருவார காலத்தில் அவனது முகமும் உடலும் வயசாளியாக அவனைக் காட்டின. மோதிரமும் செயினுமாகப் பார்த்துப் பழகிய அவனது உடல் இப்போது அவையில்லாமல் இயல்பான மனிதனைவிடப் பரிதாபகரமானவனாகத் தோற்றமளித்தது. சகுந்தலா கைவிரல்களை இருளுக்குள் நீவிப் பார்த்தாள். பிசுபிசுப்பான ரத்தம். அடிவாங்கியபடி சிரித்த சிவபாலனின் முகம் திரும்பவும் அதே துல்லியத்தோடு நினைவில் எழ, அவளுக்குள் எது எதுவோ உடைந்து கண்ணீர் பெருகிவிட்டது. அடித்தால் வலிக்கிறது எனச் சொல்லக்கூடத் தெரியாதவனாகவா சிவபாலனை ஆளாக்கி வைத்திருக்கிறோம்? தெரியவில்லை. இருளுக்குள் சிறிதுநேரம் அமர்ந்தபடி அதனை நினைத்து நினைத்து விசும்பிக்கொண்டாள். அந்தச் சிறிய அறையின் மூலையில் பத்து நாட்களுக்கு முன்பாகக் கொண்டுவந்திருந்த சிறிய சூட்கேஸும் லெதர்பேகும் அப்படியே கிடந்தன. இரவுணவாகத் தினகரன் வாங்கிவந்திருந்த கவர்கூட இன்னமும் அப்படியே இருந்தது. எந்தெந்த திசைநோக்கியோ செல்கின்ற இரவு வாகனங்களின் ஓசைகள் ஒருவித ஆறுதலளித்தன.

சிவகாசியிலிருந்து தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றிய வேன் நாளை இரவு வருமெனத் தினகரன் சொல்லியிருந்தான். அது கல்கத்தாவிற்குச் சரக்குகள் கொண்டுசெல்லும் வாகனம். மிக நீண்ட தொலைவுதான். முற்றிலும் பரிச்சயமில்லாத நிலமும்கூட. ஆனால் வேறு வழியில்லை. காசி அண்ணன் வலுவாக எச்சரித்திருந்தார். கேரளாவிற்குள்ளோ ஆந்திராவிற்குள்ளோ தப்பியோடுவது மிகவும் ஆபத்தான காரியம். தினகரனின் மீது இப்போது ஐந்து வழக்குகளாகிவிட்டன. அனைத்துமே மாவட்ட அளவில் பெரிய வக்கீல்கள் வைத்துப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. டி.வியில்கூட நான்கைந்து முறை வந்துவிட்டதாகக் கூறினார்கள். இந்தப் புதிய ஊரில் அவனை வெளியே அனுப்பவே பயந்துபோய் சகுந்தலாவே சாப்பாடு மாத்திரை வாங்கி வந்தாள். சேர்ந்தாற்போல இன்னமும் ஒரு வாரத்திற்குத்தான் கையிருப்பு இருக்கிறது. இது குறித்த பதற்றங்களின் சுவடெல்லாம் நீங்கிய முகத்தோடு தினகரன் தன்னையறியாமல் உறங்கிக்கொண்டிருந்தான். தூக்கம்தான் எவ்வளவு கருணையான தாதி.

சாக்கடையும் பிளாஸ்டிக் குடங்களின் வரிசைகளிலுமாகச் சிதறிக்கிடந்த லட்சுமிபுரம் குறுக்குச்சந்திற்கு உள்ளிருக்கும் காம்பவுண்ட் வீட்டில் சகுந்தலாவைப் பெண் பார்க்க வந்த அந்தத் தினம், தினகரன் குடும்பத்தார் வந்திருந்த கார்கள் நுழைவதற்கு இடமில்லாமல் மெயின்ரோட்டிலேயே நின்றுவிட்டன. கார் டிரைவர்கள்கூட ரகசியமாகத் தங்களுக்குள் சிரித்தபடி பரிமாறிக்கொண்ட சமிக்ஞைகளைப் பொருட்படுத்தாமல், எப்போதும் போலத் தனது வியப்பை மறைக்க முடியாத கண்களோடும் சிரிப்போடும் ஈரம் இல்லாத இடமாகப் பார்த்துப் பார்த்து எட்டுவைத்து சகுந்தலாவின் வீட்டிற்கு தினகரன் வந்தான். 

சகுந்தலாவின் அப்பா மிகச் சாதாரணமான வேட்டி சட்டையோடுதான் அவர்களை வரவேற்றார். லாலா சத்திரத்து முக்கில் தீப்பெட்டி அளவு பலசரக்குக் கடை நடத்தும் மனிதருக்கு அந்த எளிமையே உண்மையின் அழகாக விளங்கியது. கூடவே அவரது நண்பரும் மில் அதிபருமான நடேசன் இன்னொரு பெரிய மனிதராக நின்றபடி அவர்களைக் கும்பிட்டார். மலைக்கும் மடுவிற்குமான இந்தத் திருமணச் சம்பந்தத்தைக் கேலியும் சந்தேகமுமாக எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்த காட்சிகளில் தினகரன் ஒரு நோயாளி, தினகரனுக்கு ஏற்கெனவே ரகசியமாக ஒரு மனைவி இருக்கிறாள், தினகரனுக்கு இரண்டுதார ஜாதகம் – அதற்காக முதல்தாரப் பலியாகச் சகுந்தலாவைக் கூட்டிச்செல்கிறார்கள் என்கின்ற, கேட்டவுடன் எளிய தகப்பனைக் கலங்கடிக்கச் செய்த எண்ணற்ற வதந்திகளுக்கு நடேசன்தான் தைரியம் தந்து சம்மதிக்க வைத்தார். ”நல்ல கருப்பட்டி மலைமேல இருந்தாலும் எறும்பு தேடிவரும் கணபதி. சகுந்தலாவுக்கு இப்படி ஒரு பொக்கிஷம் கிடைக்கணும்னு ஜாதகத்துல எழுதியிருக்கு. சந்தேகப்பட்டு அதை உடைச்சிடாத.”

துளித்துளி அளவில் சிறிய தங்க நகைகளே வீட்டில் இருந்தன. சகுந்தலாவின் கற்சிலை போன்ற முகத்தில் நகைகள் தருகின்ற வெளிச்சத்திற்கு அதிக முக்கியத்துவம் தேவைப்படவில்லை. ஈரம் தொட்டுவைத்து கருங்கல்லின் மீது எழுதுவது போல அவள் அந்தத் துளித்துளித் தங்கங்களை அணிந்துகொண்டபோது சிறிய கல்மண்டபம் போல முகம் நிறைந்துவிட்டது.

பெண் பார்த்து அவர்கள் திரும்பிய பிறகு, காம்பவுண்ட் வீட்டு வரிசையில் முதல் வீட்டின் திண்ணையில் எப்போதும் படுத்தே கிடக்கிற வயசாளி வெள்ளையம்மாள் சகுந்தலாவை அழைத்து திறந்துகிடந்த பாத்ரூம் கதவைக் காட்டினாள். ஒவ்வொரு வீட்டாரும் அவரவர் தேவைக்கென எடுத்து வைத்திருந்த நீர் பிடித்து வைத்த பக்கெட்டுகளில் சில கவிழ்ந்து கிடந்தன. கிளம்பும் முன் தினகரன் கால்களைக் கழுவ அங்கே வந்திருந்தான்.

”காலாலயே உதைச்சு சாய்ச்சுவிட்ருக்கான் பாரு… சொகுசும் சோம்பேறித்தனமும் ஐஸ்வர்யக் கேடுல்ல. உனக்கு சொல்ல வேண்டியதில்ல, இருந்தாலும் சொல்றேன்.”

சகுந்தலாவிற்கு எப்போதும் கையில் கண்களில் வார்த்தைகளில் தராசு தொங்குகின்ற வழக்கமுண்டு. தினகரனைத் திருமணம் செய்து வந்தபிறகும் அவளுக்குள் சிறிய பெட்டிக்கடைக்கார கணபதியின் மகள் சகுந்தலா இருந்துகொண்டிருந்தாள். தினகரனின் அம்மாவிற்கு சகுந்தலாவின் இந்தக் கடிவாளம் கொண்ட கைக்குணம்தான் நிரம்பப் பிடித்திருந்தது. அவர்கள் குடும்பம் தழைக்கத் தொடங்கிய காலத்தில்தான் தினகரன் பிறந்தான். ஏழ்மையும் உழைப்பும் காடுமேடாக அலைந்து திரிந்து வீட்டிற்கு அழைத்துவந்த ஐஸ்வர்யத்தை அவர்களுக்கு யாரிடம் ஒப்படைப்பதெனத் தெரியவில்லை. தினகரனின் அப்பாவிற்கு கடிகாரம்கூடக் கைக்குப் பாந்தமாக அமராமல் கோமாளியைப் போலவே அவரைக் காட்டிக் கொடுத்தது. புத்தம்புதிதான பிசிறுகள் கொண்ட பொன் ஆபரணங்களைத் தினகரனின் அம்மா அணியும்போது அவளுக்குள் ஊறித் தேங்கி களிம்பாகவே மாறிவிட்டிருந்த அந்தச் சோகக்களையைக் கேலி செய்வதுபோலத் தங்கங்கள் அபத்தமாக மின்னின. அப்போதுதான் தினகரன் பிறந்தான்.

அவனது அம்மா அப்பாவைப் போலக் கலங்கலான இறந்தகாலம் இல்லாத அந்த சிசுவின் மீது தாங்கள் இழுத்துவந்த ஐஸ்வர்யத்தை எவ்விதத் தயக்கமும் யோசனையுமின்றி அவர்கள் கொட்டிக் கவிழ்த்தனர்.

தினகரனுக்கு வறுமை தெரியாது. அதனால் அவனிடம் எப்போதும் எங்கேயும் தோற்றுத் திரும்பினாலும் அகலாத சிரிப்பு இருக்கும். அப்பாவால் அவன் தொடங்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் பாதாளத்திலிருந்து பொற்காசுகளை அள்ளி இறைக்க முடிந்தது. ஆனால் தோற்றுத் திரும்பிச் சிரிக்கின்ற அந்த முகத்தில் நாளை வெல்வதற்கான கடுமையை, அவமானத்தை ஒருபோதும் கொண்டுவர முடியவில்லை. வளர்ந்த பிறகும் குழந்தையைப் போல அவனை அருகே அமரவைத்து, தோளில் கைபோடும் எந்த வியாபாரியிடமும் வியாபாரம் பேசாதே, சுருக்குக் கயிறைவிட வலுவானவை எலும்புகளாலான கரங்கள் என எச்சரித்துக்கொண்டே இருப்பார். எப்போது எங்கே கைவிட்டாலும் அங்கே பணம் இருக்கின்ற வீட்டில் வளர்ந்து பழகிய தினகரனுக்கு லாபம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு லாபத்திற்குப் பின்னே எத்தகைய பகடையாட்டங்கள் இருக்கின்றன எனவும் தெரியாது.

முதன்முதலாகக் கடையாள் காசியுடன் தூரத்திற்குக் கொள்முதலுக்குப் போய்வந்த இரண்டு நாட்களும் அங்கே தெருக்களில் விற்ற இனிப்புவகைகளை, அவற்றின் ருசியைப் பற்றியே கடைச் சிப்பந்திகளிடம் பேசிக்கொண்டிருந்ததை அப்பா அவ்வளவு அசூயையாகப் பார்த்தார். அவரது பார்வையின் உள்ளர்த்தம் புரிந்தவராகக் காசியண்ணன் தனக்குள் திரண்ட சிரிப்பையோ எதையோ அடக்கியவராக அங்கிருந்து நகர்ந்தார். ஒரு மனிதனின் தோள் குலுக்கலையும் கண்சிமிட்டலையும் வைத்தே அவனது அந்த நேரத்து மனநிலையை அளவிட்டு விடுகின்ற அவருக்கு, காசி பெருந்தன்மையாக எழுந்து சென்றதன் கசப்பு ஆறவேயில்லை.

திருமணமாகி வந்த மூன்றாவது நாளே சகுந்தலா தினகரனை எடைபோட்டுவிட்டாள். அவளை வெளியே அழைத்துச்சென்ற இடங்களிலெல்லாம் அவள் விரும்பிக்கேட்ட சின்னச் சின்னப் பொருட்களுக்குப் பாக்கெட்டிலிருந்து தாள்களை உருவிக்கொடுத்தவன், அவர்கள் திரும்பத்தந்த சொச்சப் பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, ‘அடுத்து?’ எனும்விதம் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனையே சற்றுநேரம் பார்த்தவள், பிறகு தான் வாங்கிய முழம் பூவை சாலையிலேயே நின்றபடி பொறுமையாக ஒவ்வொரு விரலாக எண்ணிப் பார்த்து திருப்தியடைந்தவளாகத் தலையில் சூடிக்கொண்டாள்.

இரவில் விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவளை முத்தமிட முனையும்பொழுதில் துளி கற்பனை இல்லாத பகலுக்குள் அலைவதைப் போன்ற அவளது கண்களைப் பார்த்தவன், “ஏன் இவ்வளவு படபடப்பாவே எப்பவும் இருக்க?” என்றான்.

சகுந்தலாவிற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அவனுக்காக அந்தக் கண்களில் அவள் மென்மையையும் குழைவையும் கொண்டுவர முயன்றாள். ஆனால் மூளைக்குள் வினாடிமுள்ளின் துடிப்பைப் போல எதுவோ ஒன்று படுபிரக்ஞையோடு அவளை விழிப்பாகவே வைத்திருக்கச் செய்தது. வெள்ளையம்மா அடிக்கடி அவளது கண்களைப் பார்த்துக் கூறுகின்ற, “கொஞ்சமாச்சும் அமர்த்தி வைடி. வெருகுப்பூனை மாதிரி கண்ணை உருட்டி உருட்டி எல்லாத்தையும் எடை போடாம” என்கிற அதட்டல் அப்போது நினைவில் எழும்.

அவளது கண்களில் எப்போது வெருகுப்பூனையின் அம்சம் குடியேறியது என அவளுக்குத் திட்டவட்டமாக நினைவிருக்கிறது. அது அவளது அப்பா பஜார் முக்கில் கடைவைத்து நஷ்டமாகி சிறிய சந்துக்குள் பெருச்சாளியைப் போலப் பெட்டிக்கடை நடத்தவேண்டிவந்த காலத்தில் வந்தது.

நஷ்டமாகிப்போன பெரிய கடையில் மிச்சமாகி நின்ற பெரிய பெரிய எடைத்தராசுகளும் இரும்புக் கல்லாப்பெட்டியும் இறந்துவிட்ட யானையின் அலங்காரப் பொருட்களைப் போல வீட்டிற்குள் கிடந்தன. அப்பா ஒருபோதும் அந்தப் பெருமிதங்களைத் திரும்பிப் பார்க்கத் துணியாதவராக அதைத் திரும்ப அடைந்துவிடுகின்ற கனவை இழந்தவராக அழுக்கு வேட்டியை இடுப்பில் சுற்றிக்கொண்டு தனது புதிய சிறிய பெட்டிக்கடைக்குள் ஓடி ஒளிந்துகொள்வார். உண்மையில் அவருக்குத் தனது கடை எங்கே அடி வாங்கியது, எவ்வளவு பள்ளத்தில் விழுந்தது என்றுகூடத் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ளவும் அவர் விரும்பவில்லை. அப்படிக் கிடந்த காலியான முந்திரி டின்களை ஒருமுறை அம்மா பழைய இரும்புக்காரனுக்கு எடைக்குப் போட்டுக்கொண்டிருந்தாள். அதிலிருந்த ஒரு பெட்டியில் ரப்பர் சுற்றிவைக்கப்பட்ட, அழுக்கேறி நைந்துபோன பற்று சிட்டைக் கட்டு வெளியே வந்து விழுந்தது. அப்பா அதனைக் கண்டும் காணாதவராக, “பீடைய கிழிச்சுப் போடுறி. பார்க்கப் பார்க்க வயிறெரியும்” என்றபடி கடைக்குப் போய்விட்டார்.

சகுந்தலா அன்றைய பகல் முழுவதும் ஒன்றுடன் ஒன்று மை கசிந்து ஒட்டிப்போய்விட்ட அந்தச் சிட்டைகளை, அதிலிருந்த கடன் வாங்கியவர்களின் விவரத்தை, பாதித் தொகையோடு நின்றுபோயிருந்த வரவு கலத்தைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். ஒரு கையெழுத்தோ உறுதிமொழியோ இன்றி நம்பிக்கையின் அடிப்படையில் வீச்செழுத்துகளில் எழுதி வைக்கப்பட்டிருந்த தொகை விவரங்கள். வெறும் எண்கள். கையகலச் சிட்டையில் இப்படிச் சிறுகச் சிறுக யார் யாரோ வாங்கிப்போயிருந்த கடன்கள். ஒரு துண்டுக் காகிதத்தால் பஜார் முக்கிலிருந்த ரெட்டைமாடி மளிகைக்கடையை வீழ்த்த முடியுமா? ஆனால் வீழ்த்தியிருக்கிறது. சகுந்தலா பொறுமையாக ஒவ்வொரு சீட்டிலும் வசூலாகாமல் நின்றிருந்த பாக்கிகளைத் தனியாக ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டே வந்தாள். எழுத எழுத ஒவ்வொரு சிட்டைக்குள்ளிருந்தும் நைச்சியமான குரல்கள், குழைவான பாவனைகள், இரக்கமற்று ஓடி ஒளிந்துகொண்ட பாதங்கள், வாங்கிய கடனைத் திரும்பத் தராமல் – அதற்காகத் துளி வெட்கப்படாமல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சென்ற முகங்கள் எல்லாம் துலங்கி எழுந்தன. அவளுள் அவ்வளவு  நேரம் நிரம்பியிருந்த சாந்தம் அகன்று, அப்பா சொன்னதைப் போல நெஞ்சு பதைபதைக்க வயிற்றுக்குள் அழுகையும் கேவலுமான ஒன்று குழைந்து திமிற, கண்ணீர் திரண்ட அந்தக் கண்களுக்குள்ளிருந்து வெருகுப்பூனையின் கண்கள் புதிதாகப் பிறந்துவந்தன.

வீட்டிற்கு வந்து பத்திரிகை வைக்கின்ற மனிதர்கள் நடைபாதையிலேயே அவளது அப்பாவிற்குச் சம்பிரதாயமாக அதனை வைத்துச்செல்லும்போது அந்த விசேஷத்திற்கு யார் போக வேண்டும், எவ்வளவு நேரம் அங்கு நிற்க வேண்டுமென்பதைச் சகுந்தலாவே முடிவெடுத்தாள். இன்னும் துல்லியமாக அங்கே எந்தளவிற்குச் சிரிக்க வேண்டும் என்பதையும். அம்மா அதை ஒரு குணக்கேடு என்பாள். அப்பாவிற்கு அந்தக் கொடுக்கல் வாங்கலின் நீதி எதுவோ ஒருவகையில் புரிபடும். அமைதியாகத் தலையாட்டிக்கொள்வார்.

சங்குவிலாஸ் ஹோட்டலில் ரேஷன் மண்ணெண்ணெய்க்கு அதிக விலை தருவதாகக் கூறப்பட்ட நேரத்தில், அப்பா இரண்டொருமுறை அதனை ரகசியமாக ஆள்வைத்துக் கொண்டுவரும்போது மாட்டிக்கொண்டார். பெரிதாகப் பிரச்சினை ஆகவில்லை. ஆனால், மனிதர் பதறிவிட்டார். தொழில் நஷ்டத்தோடு மான நஷ்டமும் சேர்ந்துகொண்டதாகப் பதறித் திரிந்தார். ஆற்றுமணலைச் சலித்து சாயப்பொடி கலந்து கலர் கோலப்பொடிப் பாக்கெட்டுகளாக மாற்றி பக்கத்து வீடுகளுக்கு விற்றுக்கொண்டிருந்த சகுந்தலா, வாழ்ந்துகெட்ட மனிதனின் ஆன்மாவிற்குள் எப்போதைக்குமாகச் சிக்கிக்கொண்ட மீன்முள்ளையும் அதன் வழியான அவஸ்தைகளையும் பார்த்தபடியிருந்தாள். சின்ன வயதிலிருந்து பெரியவளாக அவள் மாறிக்கொண்டிருந்த நாட்கள் அவை. இனி அணிய முடியாது, தேவையில்லை என ஒதுக்கி வைக்கப்பட்டுக்கொண்டிருந்த பல விஷயங்களைப் போல அவளுக்குள்ளிருந்த அந்த வயதிற்கேயுரிய ஒன்றும் மெல்ல மெல்லக் கரைந்துகொண்டிருந்தது. முதல் சலவையிலேயே சாயங்கள் வழிந்துகொண்டிருந்த, இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஆடைகள் வெயிலுக்குக் கீழே காய்ந்துகொண்டிருந்தன.

மீன் துண்டங்கள் எண்ணெயில் சிவந்து பொரிந்துகொண்டிருக்க, டைனிங் ஹாலில் தினகரனும் காசியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மாமாதான் காசியை வரச்சொல்லியிருந்தார். 

புதிய ஏஜென்சி ஒன்றை எடுத்து நடத்துவது குறித்து அவர்கள் பேசினார்கள். தினகரன் மீன் துண்டுகளை ருசித்தபடி, அந்த உரையாடலின் ஆழங்களுக்குள் செல்ல விரும்பாமல் – அப்படி அவர்கள் செல்லும்போது அதற்குள் வரத்திணறுகிற அவனது இயலாமையை அப்பாவின் எரிக்கின்ற கண்கள் பார்ப்பதைத் தவிர்க்க விரும்புவதற்காகச் சம்பந்தமில்லாத நகைச்சுவைகளை உதிர்த்தபடி இருந்தான். வழக்கம்போல காசி பெருந்தன்மையாகச் சிரித்தபடி அதனை அங்கீகரித்தான். “வாயை மூடிட்டு சாப்பிடு” என்று மட்டும்தான் அப்பா சொல்லவில்லை. முழுக்கவே அவமானத்தால் உருவான உடலைப் போலத் தினகரன் அவருக்கு எஞ்சியிருந்தான்.

சமயலறைக்குள் நின்றிருந்தாலும் – தினகரன் அவளுக்கு முதுகு காட்டியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் – சகுந்தலா அங்கே நிகழ்கின்ற உரையாடலை உன்னித்துக் கொண்டுதானிருந்தாள். யாருடைய குரல் எவ்வளவு தாழ்கிறது, ஒருமுறை சொன்ன சொல்லைத் திரும்பவும் சொல்லாமல் அடுத்த கண்ணியை நோக்கி யாருடைய குரல் உறுதியாக முன்னேறுகிறது, யாருடைய சிரிப்பில் ஜீவனே இல்லை என்பதையும்.

வேறு வழியே இல்லை. இது மிகவும் கவனமாக வரவுசெலவுகளை நிர்வகித்துச் செய்ய வேண்டிய ஏஜென்சி பணி. இதில் விளையாட்டுக்கு இடமே இல்லை, அல்லது நகைச்சுவைக்கும். பொதுவாக, பொருள் வந்தபிறகு அதனை விற்று லாபம் எடுத்தபிறகு அசலை மட்டும் திரும்ப அனுப்புகின்ற வழக்கமான சொகுசான வியாபாரத்திற்கு மாறாக முன்கூட்டி பணம் செலுத்தி பொருளைத் தருவிக்கின்ற வியாபாரம். பதற்றமும் கோபமும் மட்டுமே புழங்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அதில் காசிக்குத் தினகரனின் அப்பாவிடம் சிறுவனாகச் சேர்ந்து வேலை பழகிய அனுபவம் இருந்தது. ஏஜென்சியைக் காசி பெயரில் ஆரம்பிக்க தினகரனின் அப்பா முடிவெடுத்தார். பொரிந்த மீன் துண்டுகளைப் புரட்டியெடுக்க மறந்தவளாய் சகுந்தலா ஆழ்ந்திருந்தாள். தினகரனின் அம்மா தண்ணீர்ப் பாத்திரத்தைத் திறந்து மூடும் சத்தம் கேட்டது. ஒருகணம் கழித்து அந்தச் சத்தத்திற்குத் திடுக்கிட்ட சகுந்தலாவைப் பார்க்காமலேயே அவள் கூறினாள், “காசி நம்ம வீட்டுப் பையந்தான். தினகரனுக்கு வலது கையாத்தான் இருப்பான் சகுந்தலா. மலைக்காத, எல்லாஞ் சரியா வரும். இவங்களும் இருக்காங்கள்ல? தினகரன் சீக்கிரம் கத்துப்பான்.”

இலேசான கூச்சத்தோடுதான் கடைசி வரியை அவளால் சொல்ல முடிந்தது.

சகுந்தலா மீன் துண்டுகளைத் தட்டில் அடுக்கியவாறு தினகரனின் முதுகைப் பார்த்தாள். கள்ளமற்றுத் திளைத்து வளர்ந்த உடல். ஆதலால் எல்லா அபாயங்களுக்கும் தன்னை ஒப்புக்கொடுப்பது தவிர வழியேயற்று சரிந்திருக்கும் அதன் தோற்றம். அவள் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தாள். காசியண்ணன் முகத்தில் இப்போது சிரிப்பு மலர்ந்திருந்தது. முன்னைவிடத் தீர்க்கமான சிரிப்பு. கவனமாக ஒருதுளி பணிவையும் அதில் வைத்திருந்தார். அந்தச் சிரிப்பு, சூழலுக்குள் எதையோ இன்னும் இறுக்கமாக்கிக்கொண்டிருந்தது. தினகரன் எப்போதும் போல மகிழ்வாகவே இருந்தான். அப்பாவின் கைதான் சோற்றில் சிந்தனையாக அளைந்துகொண்டிருந்தது. சகுந்தலா இரண்டாவது மீன் துண்டைக் காசியண்ணனின் தட்டில் வைக்கும்போது, சிறிய பதறலும் உள்ளூர ஏற்புமாக, “போதும்மா… போதும்” என்றார். மீன் துண்டை அவரது தட்டில் வைத்த கணத்தில் அவர் அப்படிச் சொன்னார். சகுந்தலா, “அப்படியா” எனும் விதமாகப் பார்வை மட்டும் பார்த்துவிட்டு வைத்த துண்டைச் சிறிதும் யோசிக்காமல் திரும்ப எடுத்துக்கொண்டாள். அவரது முகத்தில் சிறிய ஏமாற்றமும் சிரிப்பும் எஞ்சியிருந்தன.

“ஏய், வைச்சதப் போய் ஏன் எடுக்கற?” தினகரன் கிசுகிசுப்பாக உறுமினான். சகுந்தலா காசியண்ணனைப் பார்த்தபடி, “வேணாம்னு சொன்னாரே…” என்றாள். அவளது முகத்தில் கொஞ்சம்கூட இல்லாத அப்பாவித்தனம் காசியண்ணனை மேலும் உள்ளூர சுருளச் செய்தது.

“ஆமாமா, போதும். சாப்பிட முடியாது”. திணறலாகச் சொல்லியபடி கைகழுவ எழுந்து சென்றார்.

“வைச்சதைப் போயி யாராச்சும் எடுப்பாங்களா? சிறுக்கி”. தினகரன் மட்டும் முனகிக்கொண்டிருக்க, அவளது கண்களில் வந்துவிட்டிருந்த வெருகுப்பூனையையே மாமா பார்த்துக்கொண்டிருந்தார்.

நீண்ட நாட்களுக்கு அந்த நிகழ்வைச் சகுந்தலாவின் கஞ்சத்தனத்திற்கும் சிறிதும் இரக்கமில்லாத தன்மைக்கும் உவமையாகத் தினகரன் கூறியபடியிருந்தான். சிவபாலன் பிறந்த கொஞ்ச நாளிலேயே மாமா இறந்துவிட்டார். அமிர்தாவிற்கு நாலு தட்டு புல்லுக்கட்டுகளை மதிய சாப்பாட்டிற்கு வரும்போது கையோடு வாங்கி வந்திருந்தவர், தொழுவில் அவளுக்கு அதைப் பரப்பி உதிர்த்துப்போட்ட கையோடு சரிந்துவிட்டார்.

அதன்பிறகு சில நாட்களுக்கு அப்பா உருவாக்கி வைத்திருக்கும் அழுத்தத்தைத் தாங்குபவனாகத் தன்னை மாற்றிவிட்டவனைப் போலத் தினகரன் அசட்டுப் பரபரப்புடன் கடைக்கும் வீட்டுக்கும் அலைந்து காட்டினான். சகுந்தலா அவனை ஏறிடும்போதெல்லாம் அந்த அசட்டுத்தனத்தில் ஒன்று நொறுங்கி வீழும்.

தோற்றுக்கொண்டிருப்பவர்கள் இன்னும் பெரிதாகத் தங்களைத் தனது குடும்பத்திடம் ஊதிக்காட்டுகிறார்கள். அப்போது கொஞ்ச காலம் குடும்பம் தங்களது கைகளின் நகங்களை மறைத்து நடந்துகொள்கிறது. சகுந்தலா அப்படித்தான் நடந்துகொண்டாள். மாமா இருக்கும்போது வீடுவரை வருகின்ற வணிகப் பேச்சுகளும் காரசார உரையாடல்களும் இப்போது நிகழ்வதில்லை. இவர்களது குடும்பத்திற்குப் பட்டிருக்கும் நன்றிக்கடனுக்காகக் காசியண்ணன் தனியொரு நபராக உழைத்துத் தேய்கிறார் என வெளிப்படையாகவே பலர் பேசத் தொடங்கியிருந்தனர். அந்தப் பேச்சுகளை முறியடிக்க தினகரன் இன்னும் இன்னுமெனச் சுதந்திரங்களையும் அதிகாரங்களையும் கடையில் அவருக்கு அளித்தான் – குறைந்தபட்சமாக அந்தக் குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்காகவேனும். ஒரு அதிகாரத்தைக் கை மாற்றும்போது அதனூடே பல்லாயிரம் வேர்கள் கொண்ட கண்ணுக்குத் தெரியாத சிறிய அதிகாரங்களும் சேர்ந்தே போகின்றன. தனது தயாள குணத்தின் வழியே தன்னை இன்னமும் பெரிதானவனாகத் தனது குடும்பத்திடம் ஊதிக்காட்டிய பலவீனத்தின் மீது சகுந்தலாவின் கண்களுக்குள்ளிருந்த வெருகுப்பூனையின் பாதங்கள் தங்களது கூரிய நகங்களுடன் இரக்கமின்றி பதிந்தபோது அவன் செய்வதறியாது திகைத்து நின்றான்.

பிறகு இந்த இரவுக்கு வந்துசேர அவர்களுக்கு நீண்ட நாட்கள் ஆகவில்லை. ஒவ்வொரு அலைக்கும் கைப்பிடி மணலாகப் பறிபோய்க்கொண்டிருந்த அந்த நாட்களின் நடுவே அத்தையின் மரணம்கூட ஞாபகத்தில் பதியாத ஒன்றாகக் கடந்து போனதற்கு எதிர்காலம் குறித்த பீதியும் ஒரு காரணம். காசியண்ணனின் ஏஜென்சி தவிர எல்லாமே மூழ்கிவிட்டன. சட்டையைப் பிடித்துக் கேட்பதற்கு பலரது கரங்களும் தயாரான நாளொன்றில்தான் அவர்கள் ஊரைவிட்டு ஓடிவந்திருந்தனர்.

ஜன்னல் வழியே நீண்டு விழுந்த வாகனத்தின் முகப்பு வெளிச்சம் ஒரு கணம் பொன்னைப் போல அறையை நிறைத்து மறைந்தது. பிறகு அதே இருள். சகுந்தலா எழுந்து ஜன்னல் வழியே பார்த்தாள். துயருடன் தனியே இருப்பவர்களைப் போலத் தெருவிளக்குகள் அமைதியாக, யாருமற்ற இடத்தில் வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருந்தன. சிவபாலனைக் காசியண்ணன் வசம் ஒப்படைத்துவிட்டு இங்கே வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. சிவபாலனை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் எனும் நம்பிக்கையைக் காசியண்ணன் திரும்பத் திரும்ப அளித்திருந்தார். அந்தக் குரலில் எங்கேனும் கேலிக்குரிய பரிதாபம் தென்படுகிறதாவென சகுந்தலா உன்னித்துக்கொண்டுதானிருந்தாள். தினகரனுக்கு அந்தப் பதற்றத்தில் அதை விசாரிக்கவே தோன்றவில்லை. பிரச்சினைகள் ஓய்ந்ததும் வருகிறோம் என்று மட்டுமே சொல்ல முடிந்தது. அவை அவ்வளவு சீக்கிரம் ஓயக்கூடிய பிரச்சினைகள் அல்ல என்று சகுந்தலாவிற்குத் தெரியும். வியர்வையும் பதற்றமுமாகக் காசியண்ணனிடம் பேசிக்கொண்டிருந்த தினகரனது வழக்கமான அசட்டுப்புன்னகையை அப்போது எரித்து அழிக்கவே தோன்றியது. இன்னும் கொஞ்சம் அளவாகச் சிரித்திருந்தால் இறுக்கமாகி நின்றிருக்க வேண்டிய கோட்டையை இப்போது அவன் இழந்திருக்கிறான். ஆனால் அவனுக்கு அந்த இழப்பின் அளவுகூடத் தெரியாது. மாத்திரைகள் அவனுக்குத் தந்திருந்த ஆழ்ந்த உறக்கத்தின் வழியே பயம் நீங்கிய, பழைய மகிழ்வான தினகரனாக அவன் உறங்குவதைப் பார்த்தாள். பிறகு, அமைதியாகத் தாழ்ப்பாளை விலக்கி கதவைத் திறந்து வீதியில் இறங்கினாள்.

பால் கறவைக்குச் செல்கின்ற மனிதர்களோ, வைக்கோல் கூளம் கூட்டி வைத்து நெருப்பு வளர்த்து நெஞ்சுச்சளியை இளக்கிக்கொண்டிருக்கும் முதியவர்களோ இன்னும் எழாத அதிகாலையில் சகுந்தலா ஊருக்குள் நுழைந்தாள். இரண்டாவது முறை கதவைத் தட்டும்போதே காசியண்ணன் தூக்கக் கலக்கக் கண்களோடு கதவைத் திறந்துவிட்டார். சகுந்தலாவைப் பார்த்ததும் அதிர்ந்து, பிறகு அமைதியான குரலில், “உள்ள வாம்மா… வா.” என்றார்.

சகுந்தலா சிவபாலனை மட்டுமே கேட்டாள். சிறிது நேரம் யோசித்தவர், பிறகு அமைதியாகக் கிட்டங்கியில் தங்க வைத்திருப்பதாகக் கூறினார். இவளது கண்களைப் பார்க்க விரும்பாமல், தெருவில் ஆட்கள் நடமாட்டத்தைக் கவனிப்பவராகத் தலையைத் திருப்பிக்கொண்டிருந்தார். சகுந்தலா மென்மையாகச் சிரித்தாள். அதனைப் பார்த்ததும் அவருக்குள் சூடுபட்டது போல எதுவோ அதிர்ந்தடங்கியது. சட்டையை அணிந்தபடி அவளை அழைத்துக்கொண்டு கிட்டங்கி நோக்கிச் சென்றார்.

பருத்தியும் கேப்பையும் மூடைகளாக அட்டியல் போட்டிருந்த கிட்டங்கியின் வாசலிலேயே சகுந்தலா நின்றுகொண்டாள். கடைப்பையன்கள் உறங்குகின்ற மேல்தளத்தின் மரப்படிக்கட்டுகளில் காசியண்ணன் ஏறிச்சென்றார்.

மாடியில் மஞ்சள்பல்பு ஒளிர்ந்ததைத் தொடர்ந்து காசியண்ணன் சிவபாலனை உசுப்புகின்ற அரவங்கள் கேட்டபடியிருந்தன. சகுந்தலாவிற்கு அழுகை வரும்போல் இருந்தது. ஆனால் இறுக்கமாக்கிக்கொண்டாள். சிறிது நேரத்தில் தூக்க அசதியும் விலாசமை இழுவிய கைவைத்த பனியனுமாகச் சிவபாலன் இறங்கி வந்தான். கரணை கரணையான அவனது புஷ்டிக் கட்டுகள் மீது சணல்சாக்குகளின் பிசிறுகள் இன்னமும் அப்பிக் கிடந்தன. பின்னாலேயே பணிந்த நடையோடு வந்த காசியண்ணன், “கடைப் பசங்களோட சும்மா நில்லுய்யான்னுதான் சொல்லியிருந்தேன். தம்பியா போய் மூடையெல்லாம் தூக்கிருக்காப்ல” என்றார்.

சிவபாலன் அவ்வளவு தூக்கக் கலக்கத்திலும் திரும்பி அவரது முகத்தை ஒருமுறை ஏறிட்டான். அப்போது அவன் சிரிக்கவில்லை. சகுந்தலாவிற்குள் திரண்டிருந்த அழுகைக்கு நடுவே, சிரிக்காத, ஒருகணம் யோசிக்கின்ற சிவபாலனது அந்த முகம் மலர வைத்தது.

“பரவால்ல, இப்பென்ன? என்னிக்குனாலும் அவன் தெரிஞ்சுக்க வேண்டிய விசயம்தான?”

இருபுறமும் அட்டியல் போட்டிருந்த மூடைகளுக்கு நடுவே தன்னை நோக்கி வருகின்ற சிவபாலனை நோக்கித் தன்னையுமறியாமல் இரண்டு கைகளையும் விரித்து நின்றாள் சகுந்தலா. மூடைகளைப் பிடித்தபடி நடந்துவந்த சிவபாலன், வரும்வழியில் கவிழ்த்து வைத்திருந்த பஞ்சாரத்தை லேசாகத் தட்டிவிட்டான். உள்ளே முட்டைகளின் வரிசைமீது அடைக்காக அமரவைத்திருந்த கோழியொன்று ஆவேசமாகக் கேறியபடி எழுந்து நின்றது. சிவப்புக் கண்களும் சிலநூறு சிறிய ஆயுதங்களை ஏந்தியிருப்பது போல விதிர்த்து விரித்த இறக்கைகளுமாக ஒரு துர்தேவதையைப் போல அது எழுந்து நிற்பதைப் பஞ்சாரத்தின் இடைவெளிகளின் வழியே பார்த்த சிவபாலன், வெருகுப்பூனையின் கண்களோடும் காற்றில் படபடக்கும் சேலை முந்தியோடும் இரு கைகளை விரித்தவளாகத் தன்னை நோக்கி நிற்கும் அம்மாவை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டான்.

6 comments

Senthilkumar July 25, 2022 - 11:13 am

வாழ்ந்து கெட்ட மனிதர்களின் ஏற்ற இறக்கத்தை அதன் வலியை அருகில் இருந்து
பார்க்கும் உணர்வு.

Selvam kumar July 25, 2022 - 12:57 pm

மிகவும் தமிழை அலங்கரித்து அருமையான படிமத்தோடு வரைந்து தந்திருக்கிறீர்கள், வாழ்த்துகள்

Gurusamy July 25, 2022 - 8:40 pm

இன்று (25.07.2022) தமிழினியில் பா. திருச்செந்தாழையின் ‘வீழ்ச்சி’ கதை வெளியாகியிருக்கிறது. வழமையான ஒரு நடத்தையை புதியதொரு உத்தியிலும் சொல்ல முடியும் என்பதற்கு அவரின் ‘தேவைகள்’ கதை நல்ல உதாரணம். அதற்குப் பிறகு அவருடைய கதைகளை விரும்பி வாசித்தேன். சமீபத்தில் வெளியான அவரது ‘விலாஸம்’ கதைத் தொகுதி, கதை சொல்லலின் பல புதிய கோணங்களைப் பரிசோதித்திருந்தது.
திருச்செந்தாழையின் கதைகள் வணிக உலகத்தின் ஏற்றம், மாற்றம், துரோகம், போலியான கரிசனம், பெருவணிகத்தின் வரவு, சிதறும் சிறுவணிகம், வணிகத்தில் தாக்குப் பிடிக்கும் வல்லமை பற்றி அசாத்தியமான புனைவில் அமைந்தவை. வணிகம் என்பது வணிக லாபம் பார்ப்பது மட்டுமல்ல. சக வணிகனை வெல்வதும், களத்தை விட்டே துரத்தியடிப்பதும் வணிகம் தான் என்பதை வேறுவேறு கோணத்தில் நின்று வாசகனை உணர வைப்பவை.
சிவபாலன், சகுந்தலா, தினகரன், காசி நால்வரும் தான் வீழ்ச்சி கதையின் முக்கியப் பாத்திரங்கள். சகுந்தலாவின் அப்பா பெரிய அளவில் இரட்டை மாடி மளிகைக்கடை நடத்தியவர். தொழில் வீழ்ச்சி அடைந்து இன்று தீப்பெட்டி அளவிலான கடையில் இருந்து தொழில் செய்கிறவர். அவரது வீழ்ச்சிக்கான காரணம் யாராலும் அறியப்படாததாக இருக்கிறது. அவரே உணர்ந்தும் உணராமலும் தன்னைக் காட்டிக் கொள்கிறார். கடனுக்குச் சரக்குக் கொடுத்த கணக்கை எழுதிவைத்த கணக்குச்சிட்டையில் காரணம் கண்டு பிடிக்க முயல்கிறாள் சகுந்தலா. ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து மிகச் சரியாக் கணிக்கிறாள் சகுந்தலா.
தினகரன் சகுந்தலாவின் கணவன். செல்வந்தன். பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே அள்ளி செலவழிப்பவன். பணம் கொடுத்து செலவு போக வாங்கும் மீதப் பணம் எவ்வளவு என்றாலும் எண்ணி பார்க்காமலேயே பையில் வைத்துக் கொள்கிறவன். வியாபார உலகின் சூது அறியாதவன்.
சிவபாலன் சகுந்தலாவின் மகன். பத்து வயது சிறுவன். விளையாட்டுப் பிள்ளை. அடித்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கும் வெகுளி. வயதுக்கும் உடலுக்கும் அறிவுக்கும் இயைபு இல்லாதவன். காசி சூதன். தினகரனின் குடும்ப உதவியில் தொழில் தொடங்கியவன்.
சகுந்தலாவின் பிறந்த வீடும் புகுந்த வீடும் வியாபாரத்தில் நட்டமடைந்து அதலபாதாளத்தில் கிடக்கும் போது ,அதிலிருந்து மீண்டும் விட எத்தடனிக்கும் சகுந்தலா பற்றிய விவரிப்பு கதையின் முக்கியமான இடம். வணிக உலகில் சக வணிகனிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் துரோகம் இழைக்கப்படலாம் என்பதை, காசி வழியாகச் சித்தரித்த இடம் யதார்த்தம் தாண்டிய, வாசகனுக்குள் உறைநிலையை ஏற்படுத்தும் பாடியானது.
கடன்பட்டு சகுந்தலா வேறொரு ஊருக்கு ஓடிய பின் காசியுடன் விட்டுவந்த தன் மகன் சிவபாலனைப் பார்க்க போகிறாள். சிவபாலன் அங்கு மூட்டை தூக்குபவனாக இருக்கிறான். சிவபாலனின் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவரின் ஒத்துழைப்பால் தான் இன்றைக்கு வணிகத்தில் இருக்கிறோம் என்பது காசிக்கு தெரியும். என்ற போதிலும் நிராதரவாக விட்டு விட்டுப் போன குழந்தைத்தனம் மாறாத சிவபாலனை மூட்டை தூக்க வைக்கிறார் காசி. தன் மகன் மூட்டைதான் தூக்கியிருக்கிறான் என்பதைத் தெரிந்துவிட்ட சகுந்தாவின் முன் சமாளிக்கும் காசியை சிவபாலன் பார்க்கும் பார்வை, காசிக்கும் சகுந்தலாவுக்கும் வேறுவேறு உணர்வைக் கடத்துவது அருமை.
சகுந்தலாவின் கனவு, காசிக்கு மீன் வைப்பது, சகுந்தலாவின் மாமனார் புரிதல், கோழியின் சிலிர்ப்பு ஆகிய விவரிப்புகளைக் கதையின் போக்கோடு தொடர்பு படுத்தி இருக்கும் இடம் அழகு.
சகுந்தலாவைப் புரிந்து கொள்ள கதையில் வரும் உருவங்களும் பூடக விவரிப்புகளும் முக்கியமானவை. உருவகங்கள் வழியாக கதைக்குள் கதை சொல்ல முடியும், வாசகனின் மனவெளியை அவனுக்குள் அவனையே விஸ்தரிக்க வைக்கும் கலையை நிகழ்த்தி விடமுடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தக் கதையை உறுதியாகச் சொல்லலாம்.

Sakthi July 25, 2022 - 11:28 pm

“துளி கற்பனை இல்லாத பகலுக்குள் அலைவதைப் போன்ற அவளது கண்களைப் பார்த்தவன்” – இது ஒன்றே போதும்.

Sakthi July 25, 2022 - 11:46 pm

when life beatens you, you have two choices. You could become more wiser or more wounded. Sagunthala took the second choice as most people take. Kasiyannan could have also got wounded by his poverty in childhood and when he gets chance, he tries to sweap away his owner’s money. This is how society becomes more exclusive and this story narrates it clearly.

Karuppasamy July 27, 2022 - 9:48 am

யோவ். மனுசா நீ. பேய்த்தனமா எழுதி வச்சிருக்க. ‘வெறுகுப் பூனையின் கண்கள் ‘ மிரட்டுதுயா..
#
கதையை வாசிக்கும் போதே எனக்கும் வெருகுப்பூனையின் கண்வந்து மறுக்கா போய் ஒரு தடவ தூளாவி படிச்சுட்டு வந்தேன். சந்தேகமே இல்லை. திருச்செந்தாழை ஒரு ராட்சசன்.

Comments are closed.