இந்திரஜித்

by எம்.கே.மணி
0 comment

இந்திரஜித் இறந்துவிட்டதாகத் தங்கை மகி போன் செய்திருந்தாள். நான் சற்று நேரம் ஒன்றும் செய்யாமல் வெறித்திருந்துவிட்டு, அந்தச் செய்தியைச் சிவதாசனுக்கு அறிவித்தேன். போனில்தான். அப்படியா என்ற பிறகு சிறிது நேரம் பேச்சில்லை. “விடு, என்ன செய்வது“ என்பது போல எதையோ சொன்னான் என்று நினைக்கிறேன். அடுத்த வாரம் ஒரு கதையைப் பேச, திருவண்ணாமலைக்குச் செல்வதாக ஏற்பாடு இருக்கிறது. காலையில் இருந்து வாய் ஓயாமல் பேசித் தீர்த்தாலும் அன்றைய இரவின் குடிப்பொழுதில் நாங்கள் இருவரும் மட்டுமாக எஞ்சும் போது அவன், இந்திரஜித்தைப் பற்றிப் பேசக்கூடும். மனக்கண்ணில் விரிந்த கரும்பாறைகளுக்கு நடுவே நிலவும் இரவின் சாலைகளும் வந்து போயின.

பெருமாள் கோவில் இருந்த தெருவின் முனையில் அறிஞர் அண்ணா படிப்பகத்துக்கு அருகே இப்போதும் பூமாலைகள் விற்கிற கடை இருக்கிறது. இரவு நேரத்தில் சுண்டல் கடை போடுகிறார்களோ, இப்பவும்? நினைவுகள் பலவும் அவிழ்ந்துவிட்டன. மாலையை வாங்கி வண்டியில் வைத்துக்கொண்டு வரும் வழி தற்போது கட்டப்பட்ட மெட்ரோ ஸ்டேஷனைச் சுற்றி வரும் வழியாகும். அது முன்பு ஒரு பூங்காவாக இருந்தது. இந்தச் சுற்றுவட்டாரத்தில் நெடுங்காலமாக வாழ்கிற பலருக்கும் அந்தப் பூங்கா தங்களுடைய வாழ்வின் ஓர் அங்கமாக இருந்திருக்கும். முக்கால் கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட விஸ்தாரமான அந்தப் பூங்காவின் பசுமையைப் பற்றிக்கொண்டு நாங்கள் வளர்ந்துகொண்டிருந்தோம்.

ஒருபோதும் அதையெல்லாம் விவரிக்கப் போகக்கூடாது. அமிழ்ந்து போகாமல் நகர்ந்துவிட வேண்டும்.

என்றாலும் மாலா நினைவில் இருக்கிறாள். அவளுடைய காதலன் மனோகரும்கூட.

நாங்கள் ஒரு ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு முதுகுப் பன்ச்சர் விளையாடுகிற அந்தக் கெடுபிடிப் பொழுகளின் இடைவெளிகளில் மூச்சு வாங்க அமர்ந்து ஓய்வெடுக்கும்போது ஓரக்கண்களால் அந்தக் காதலர்களைப் பார்த்து கிசுகிசுத்துக்கொள்வோம். அவர்களைப் பற்றின என்னவோ ஒரு பெருமை இருந்தது. இப்போது புரிகிறது என்றாலும் அன்று தெளியாதிருந்த அந்த மதிப்புணர்வுக்கு அவர்கள் இருவருடைய கம்பீரம்தான் காரணம். அவர்கள் தன்னளவில் என்னவோ நிறைவுகொண்டிருந்தார்கள். மனோகர் இரண்டு கைகளையும் பின்னுக்கு ஊன்றி, கால் மேல் கால் போட்டு, படுத்த வாக்கில் அலட்சியமாக அமர்ந்திருப்பான். அவனுடைய கண்கள் மட்டும் அவளை எடுத்தவாறு இருக்கும். அவள் அப்படியே அவனைத்தான் பார்த்துக்கொண்டிருப்பாள். அநேகமாக அவனுடைய உடலில் எங்காவது சாய்ந்திருப்பாள். அவர்கள் தொட்டுக்கொள்வதில் அந்தக் கால ஆட்கள் யாரும் அசூயை கொள்ளவில்லை என்பதாக ஒரு நினைப்பு இப்போதுகூட இருக்கிறது. ஆனால் அது எங்களுக்குத் தெரியாத ஒன்றுமாக இருந்திருக்கலாம்.

அவர்கள் ஒரு கட்டத்தில் அங்கே இல்லாது போன போது எவ்வளவோ பேசிக்கொண்டோம். நான்கு பக்கமும் வந்த செய்திகளின் சேகரிப்பு திருப்தி கொள்வதாக அமையவில்லை. பூங்காவில் இருந்து இறங்கி நீண்டு செல்லும் பிள்ளையார் கோவில் தெருவில்தான் இரண்டு குடும்பங்களும் இருந்தன. எல்லோருமா ஊரைவிட்டுச் சென்றுவிடுவார்கள்? ஆனால் கண்ணாமூச்சி அல்லது பிற விளையாட்டுகள் முடிந்து, அந்தி மயங்குகையில் சிவதாசன் பையன்களும் பொண்ணுகளுமாகக் கொஞ்ச நாட்களில் டிராமா செய்ய ஆரம்பித்தான். அதன் நாயகன் நாயகி பெயர்கள் அதேதான். மாலா, மனோகர். அந்தக் காதலர்களைச் சாதியும் வர்க்கமும் கொண்ட மனிதர்கள் பிரிக்கிறார்கள். மாலாவாகக் குயில் பேச்சு பேசிய எட்டாம் வகுப்பு கீதா ராணியைச் சீட்டு குலுக்கிப் போட்டு, எங்கள் ஏழு பேரில் யார் காதலிக்கலாம் என்று முடிவுசெய்வதற்குள் அவளுடைய குடும்பமும் தில்லிக்கு மூட்டை கட்டிக்கொண்டு போயிற்று. நாடக முஸ்தீபுகளை விட்டுவிட்டு சிவதாசன் கையெழுத்துப் பத்திரிகை நடத்த ஆரம்பித்தான். அதில் மாலா மனோகர் படக்கதை தொடங்கியது.

மகியின் வீட்டருகே நல்ல ஜனம்.

அந்தத் தெருவில் எந்தச் சாவும் அமர்க்களப்படும்.

தங்கையிடம் மாலையை ஒப்படைத்துவிட்டு, அவள் கொடுத்த காபியைக் குடித்துக்கொண்டிருந்தேன். இந்திரஜித் முதுமையும் நோய்மையும் கொண்டிருந்து, இரண்டு நாட்கள் படுத்து, நேற்று நள்ளிரவு இறந்த கதையை அவள் விவரமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். எல்லாம் வழக்கமானது மட்டுமே. நான் அசிரத்தையில் இருந்தாலும் அவள் அதை ஏறிட்டுத் தன்னுடைய வளவளப்பை நிறுத்தப் போவதில்லை. மற்றும், அவளுக்கு இந்திரஜித் மீது ஒரு வாஞ்சையிருந்தது. எப்போதாவது கதவைத் தட்டி பசிக்குது என்பான். இவள் எதையாவது தேற்றிக் கொடுக்காமல் இருந்ததில்லை. அதைப் போலவே சாக்கடை அடைப்பு, குப்பைகளைக் கொட்டச் செல்லுதல் போன்ற நெருக்கடியான நேரங்களில் அவனைத்தான் தேடுவாள். அவன் மீது இருக்கிற பெரிய மரியாதையே என்னவென்றால், அவனுக்குத் தன்னுடைய பேத்திகள் மீதிருந்த பாசம்தான். ஐம்பதோ, நூறோ கொடுத்தால் அது சின்னது பெரிசு என்று சொல்லப்படுகிற அவர்களுக்குத்தான். இத்தனைக்கும் அவனுக்குப் பிள்ளைகள் இல்லை, அவனுடைய அண்ணன் வழி குழந்தைகள் அவர்கள். ஒருநாள் இந்திரஜித் கொஞ்சம் ஜிகினாப் பேப்பர்களைக் கொண்டுவந்து ஒரு குழந்தைக்குப் பள்ளிப் பிராஜக்ட் ஒன்றைச் செய்து தரச்சொல்லிக் கேட்டபோது, அவள் அதை மறுப்பு சொல்லாமல் செய்து கொடுத்தபோது, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுப் போனானாம். அப்படி இப்படி என்று நல்லவர் என்று மகி கண்களைத் துடைத்துக்கொண்டு போனதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

“சரி விடு, தலை வலிக்குது“ என்றேன். 

“இப்பதானே காபி குடிச்சே?“

“அதில்ல. செத்தவன் ஒன்னும் மகாத்மா இல்ல. அவன் கதைய விட்டுத்தள்ளுன்னு சொன்னேன்!“

அவள் நீயெல்லாம் ஏன் இப்படி இருக்கிறாய் என்பது போலப் பார்த்தாள். அவளுடைய மகன் கல்யாண் கல்லுரியை விட்டு வந்ததும் அவனுடன் சாவுக்குச் சென்று மாலையைச் சார்த்திவிட்டு வந்தாள். பேத்திகள் தாத்தாவைக் கூப்பிட்டு அழுவது அவளை நிலைகுலையச் செய்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் என்ன ஆறுதலைச் சொல்லுவது என்பதை நான் துழாவிக்கொண்டிருக்கும்போது என் மீது பாய்ந்தாள். “செத்தவரைக்கூட நீ அவன், இவன்னு சொல்ற இல்ல? மனசே ஆற மாட்டேங்குது“ என்றாள். மூக்கு விடைக்க அவள் அதைச் சொல்லிக்கொண்டு உள்ளே போனது நிறைய நேரம் கவலையாக இருந்தது.

வெளியே வந்து, பம்மிக்கொண்டிருந்த ஒரு சிறிய பெட்டிக்கடையில் வாங்கின சிகரெட்டைப் புகைத்தேன்.

எங்களுக்கு இந்திரஜித்தைத் தெரியும்.

பள்ளியில் நானும் சிவதாசனும் படித்துக்கொண்டிருந்தோம். சீனியர் அவன். எதுவோ ஒரு மாணவர் ஸ்டிரைக்கில் அவன் எறிந்த கற்கள் அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்தது ஒரு சிலிர்ப்பான நினைவு. பள்ளியைப் பொறுத்தவரை எங்காவது தட்டுப்பட்டுக்கொண்டிருந்தவன், ஒருநாள் அங்கிருந்து காணாமல் போனது எங்களுடைய கவனத்தில் இல்லை. ஆனால் பிற்பாடு எஸ்.எஸ்.எல்.சி.யில் தோற்று, புகை பிடிக்கக் கற்றுக்கொண்டு, காதலுக்குத் திட்டங்கள் வகுத்துக்கொண்டு, கொஞ்சம் எதிர்காலம் பற்றின கவலையுடன் பூங்காவில் அமர்ந்து கவிதைகள் பற்றிப் பேசுகிற இடத்தில் இருந்தோம். தான் எழுதியவற்றைக் கவிதைகள் என்று சிவதாசன் நிறுவிக்கொண்டிருந்தான். ஏதாவது ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க முடியுமா என்கிற விவாதம் மற்றொரு புறம் சூடு பிடித்துக்கொண்டிருந்தது. இந்திரஜித் அடிக்கடி எங்களுடைய ஜமாவில் அனுமதியின்றி வந்து உட்கார்ந்தான். நாங்கள் சற்றே பேச்சற்று போவது உண்மை. அவன் இருக்கும்போது அவன் மட்டுமே பேசிக்கொண்டிருந்தான். நாங்கள் சில சந்தேகங்களைக் கேட்பதுடன் சரி.

பூங்காவின் ஓய்ந்த பகுதியான அந்த இடம் கொடுக்கிற சுதந்திரம் பயத்தையும் உருவாக்கும். அவன் காட்டின அந்த மரத்தின் மீதிருந்து காதலர்கள் நடுவில் குதிக்க வேண்டுமாம். முதலில் அந்தக் காதலனை இரண்டு கன்னங்களிலும் அறைய வேண்டும். அவன் எப்படியும் ஒரு பேடியாகவே இருப்பான். அப்படி இல்லாவிட்டாலும் கத்தியைக் காட்டியதும் ஓடாதவன் இல்லை. அப்படி ஓடியதும் அவளை அந்தப் புதருக்கு இழுத்துச்செல்ல வேண்டும். முதலில் மார்புப் பக்கத்துத் துணியைக் கிழித்துவிட்டு அவளைக் குலையச் செய்துவிட்டால் அடுத்த ஷாக் இது என்றான்.

அவன் எப்போதும் ஒரு குட்டை டிரவுசர்தான் போட்டிருப்பான். அவனுடைய விதைக்கொட்டைகள் தொங்குகிற பகுதி கிழிக்கப்பட்டிருக்கும். ஒரு சின்ன அசைவில் அவனுடைய உறுப்பு மொத்தமும் வெளியே வந்ததை அனைவரும் பார்த்தோம். நிஜமாகவே அதன் நீளம், வர்ணம் ஆகியவை எதிர்பாராததாக இருந்தன. குறியின் முனையில் இலேசாக வருடிக் கொடுத்தால் அது எப்படி நிமிரும் என்பதை விளக்கமாகச் சொன்னான். பயத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள். உள்ளே நுழைத்து செய்துவிட வேண்டியதுதான் என்பதைச் சகஜமாகச் சொன்னான். எவ்வளவோ பெண்கள் என்றான். சிவதாசன் மாலா என்கிற பெண்ணைப் பற்றின அடையாளம் சொல்லிக் கேட்டபோது அவனுக்குப் பேரெல்லாம் தெரியவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டாலும் அவன் சொன்னது, ”ஒத்தா, விடுங்கடா. சொல்றேன் இல்ல? எவ்வளவோ பொண்ணுங்கடா!“

அவன் தன்னைக் காட்டிலும் வீரமான அப்பனின் தாத்தனின் பெருமை சொன்னதாக நினைவுண்டு. ”ஊர்ல எல்லாம் நம்ம ஆளுங்க குதிரைய வச்சு தூக்குவாங்க. அதுவும் இங்க, இப்டின்னு சொல்லி எல்லாம் வெச்சு தூக்குவோம், தெரியுமா?“

எவ்வளவோ பேர் எவ்வளவோ பக்கமாகப் போனார்கள். நல்ல வேலையில் அமர்ந்து நானெல்லாம் செட்டிலாகி முடித்த பிறகும் சிவதாசன் சுற்றிக்கொண்டுதான் இருந்தான். பலருக்குப் பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததைக் கண்டுகொள்ளாமல் சினிமா பக்கம் இருந்து உலகை மாற்ற பிரயத்தனங்கள் பண்ணிக்கொண்டிருந்த போதெல்லாம் சிவதாசனுக்கும் எனக்கும் அவ்வளவாகப் பேச்சுகூட இல்லை. ஆனால் அவ்வப்போது என்னை வந்துசேர்ந்த அவனுடைய எழுத்தையெல்லாம் படித்துக்கொண்டுதான் இருந்தேன். தங்கையின் புருஷனுக்கு மாற்றலாகி அவர்கள் குடும்பம் சென்னையில் செட்டில் ஆகும்போது இந்திரஜித் அந்த ஏரியாவில்தான் இருந்தான்.

நொறுங்கி இருந்தான்.

போலீஸ் அவனை ஒரு கொலை வழக்கில் சிக்க வைத்து நொறுக்கி முடித்தார்கள். ஜெயிலில் அடையாளம் தெரியாத ஒரு கூட்டத்தாரால் கஞ்சா சண்டை என்கிற பெயரில் அடித்து முடித்து இரண்டு வருடங்கள் படுக்கையில் படுக்க வைத்தார்கள். ஒரு மாமாங்கம் முடிந்து திரும்பி வந்தவன், வெகு காலத்துக்கு அப்புறம் எழுந்து நடந்ததும், அந்தப் பகுதியில் தொடங்கப்பட்ட ஒரு ஸ்கேனிங் நிறுவனத்தின் முன்னால் செக்யூரிட்டியாக இருக்கிற வேலை கிடைத்தது. அங்கே திடீர் என்று பார்த்ததும் குசலம் விசாரித்து தேநீரும் கேக்கும் வாங்கிக் கொடுத்தேன். அவனுடைய தீர்க்கமான முடிவின்படி அவனைச் சிதைத்துப்போட ஒரு குடும்பம் இருந்திருக்கிறது. ”கூடவே நடந்து பாத்துகிட்டே இருந்து என்னை சில்லு சில்லா நாஸ்தி பண்ணிட்டாங்க ஜோ, அவ்ளோதான் சொல்லணும். நானும் இனிமே உத்தமனா வாழ்ந்து சாவணும்னு நெனைக்கறேன். அதாவது வேற ஒன்னுத்தயும் நெனைக்க முடியாது!“ சிரித்தானா, அது எனது பிரமையா எனத் தெரியவில்லை.

சிவதாசன் அன்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டான். அவனை நொறுக்கியவர்கள் மாலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்பது அவனுடைய நம்பிக்கை. அதற்கான சாத்தியக்கூறுகளை எல்லாம் விவாதித்தான்.

சுடுகாட்டுக்கு வந்திருக்கிறேன். இந்திரஜித்தைப் புதைக்கிற சடங்குகள் முடிந்து கூட்டம் குறைந்துகொண்டிருந்தபோது ஒரு நிழலில் அமர்ந்து சிவதாசனுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். மூடின குழியின் அருகே ஒரு ஆள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைச் சொல்லுகிறேன். சிதிலமடைந்த உருவம். எதற்கோ குழி மூடின மண்மேட்டை, சடங்கு அடையாளங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

யாரோ மனநிலை பிசகிய ஒருத்தனாக இருக்கலாம் என்று சொல்லி முடிப்பதற்குள் சிவதாசன், “மனோகராகூட இருக்கலாம் இல்ல?“ என்று கேட்கிறான்.

இங்கே தலையில் அடித்துக்கொள்ள வேண்டும். ஆனால் தயங்குகிறேன்.