திருமலையின் குறுஞ்செய்தி சற்று முன்புதான் வந்திருந்தது. ஒரே வரிதான். ‘நாளை மறுநாள் அஃப்ரீனுக்குக் கல்யாணம். திடீர் ஏற்பாடாம்.’
ஏற்கெனவே மிகுந்த குழப்பத்தோடு இருந்த போதுதான் இந்தக் குறுஞ்செய்தி வந்துசேர்ந்திருக்கிறது. நேரில் வந்து தொலைக்கப் போகிறேனே! கொஞ்சம் பொறுத்திருந்து இந்த இடியை நாளைக்கு என் தலையில் போட்டிருந்தாலென்ன?
அம்மா சற்று முன்புதான் அழைத்திருந்தாள். நன்னிமா பற்றி ஒரே புலம்பல். நடுராத்தியில் எழுந்து உட்கார்ந்து, ‘தன் ராதிமா மௌத்தாகிவிட்டார். யாரும் கிளம்பலையா?’ என்று கேட்கிறார். குளிக்கப் போனால் ஒரு மணி நேரமாகக் கதவைச் சாத்திக்கொள்கிறார். கதவில் துணிகள் அப்படியே கிடக்க, உடுத்தியிருந்ததைத் தரை ஈரத்தில் களைந்து போட்டுவிட்டு முழு நிர்வாணமாக முக்காலியில் உட்கார்ந்திருக்கிறாராம். கடைசியில் கூறியதுதான் ஆச்சரியமாக இருந்தது. ‘யாருடனும் சாதாரணமாகப் பேசுவதேயில்லை.’
நான் உடனே ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்று யோசித்தது இதைக் கேட்டுத்தான். பேசாத நன்னிமாவை என்னால் கற்பனைகூடச் செய்ய இயலவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அந்த வாய் ஓய்ந்ததேயில்லை. இவளும் அப்படித்தான். தான் வயசுக்கு வந்த நாள் குறித்து ஐம்பது தடவையாவது என்னிடம் வர்ணித்திருப்பாள். நான் பார்த்தேயிராத அந்த நாளையும், சிவப்புக் கறை படிந்த நீல வண்ணப் பாவாடையையும், மஞ்சள்நிற டிஸ்டம்பர் பூசிக்கொண்ட ராயப்பன்பட்டி ஆக்னஸ் பள்ளி வகுப்பறையையும், ‘அஃப்ரீன் இட்ஸ் நாட் டெத். வீ ஆர் நாட் இஸ்ராயில். ஸ்டாப் யுவர் புவர் க்ரை’ என்று அந்தத் தருணத்திலும் இங்கிலீஷ் டீச்சராகவே பேசிய ஜெபமாலையம்மாளின் கிறீச்சிட்ட குரலையும் என் மூளையின் பரப்பில் வீசியெறிந்துவிட்டு திசையறிய முடியாத சுழல் பாதையில் ஓடி மறைந்துகொண்டவள்தானே இவள்?
என்னால் நன்னிமாவையும் அஃப்ரீனையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. இரு வெவ்வேறு காலங்களில் வந்து விழுந்த ஒன்றின் துண்டுகள் என்றே அடிக்கடி கற்பனை செய்துகொள்வேன். திருமலை உள்ளிட்ட அனைவரும் இந்தக் கற்பனையின் அபத்தத்தைத் தம் தர்க்கங்களால் எத்தனையோ முறை உடைக்க முயன்றிருக்கின்றனர். அப்போதெல்லாம் நானே உடைபடுவது போலிருக்கும். என் வாழ்வின் அர்த்தமே இந்த ஒற்றைக் கற்பனையில்தான் வேர் கொண்டிருக்கிறதென்று நம்புவதே எனக்குப் பிடித்தமானதாக இருந்தது.
‘பிள்ளையார் ஃபிலாசபிதான் இது. அவருக்கு அம்மா. உனக்கு நன்னிமா. சொல்லப்போனா இது இந்திய ஆண்களின் பொதுப் பிரச்சினையும்கூட. நாம சாகும் வரை தாய் முலையிலிருந்து வாயை எடுக்கறதே இல்ல. நீ கொஞ்சம் வித்தியாசமா உனக்கு முலை தந்தவளை குழந்தையாக்கி அவ உறிஞ்சுற மார்பில கண்ணு வச்சிருக்க’ என்று சீனியர் அன்பு சொன்னபோது அவ்வளவு கோபம் வந்தது.
‘அபத்தமா இல்லையா? நீ சொல்றது இந்து மத உருவகம். நா ஒரு முஸ்லிம்.’
‘அதனாலென்ன? நீ கன்வர்டெட் பிள்ளையார். உங்க மரபில ஞானம்ங்கறது தீர்க்கதரிசிகளின் பரம்பரை வழி தலைமுறை தலைமுறையா கடத்தப்படுதுல்ல? அதனாலதான் கொஞ்சம் முன்னேறி இந்தத் தொப்பி போட்ட பிள்ளையார் நன்னிமாவின் மடியில படுத்துக் கிடக்கிறார்.’
அஃப்ரீனை முதன்முதலாகப் பார்த்தபோது என்னைக் கவர்ந்ததே அவள் உதட்டின் வலது புறத்திற்குக் கீழ் இருந்த சிவந்த மச்சம்தான். பொட்டு வைத்தது மாதிரியான மச்சம் அது. நகல் எடுத்தது மாதிரி அது மிகச்சரியாக நன்னிமாவைப் போல் அதே இடத்தில் இருந்தது.
‘ஆதமைப் படைக்க எடுத்த சிவந்த மண்ணின் துளியொன்று நகக்கண்ணில் ஒட்டிக் கிடக்க, வீசியெறிந்த தேவனின் வேலைப்பாடன்றோ இந்த மச்சம்? நம்ரூதுவின் விரல்கள் மூட்டியது விறகுகளை மட்டும் எரிக்க, படர முடியாத இப்ராஹிமின் மேனி கண்டு திகைத்து நின்ற செந்தழலின் அசைவோ இது? வாயிலிட்ட போது மோசஸின் கண்களில் தெரிந்த தீத்துண்டோ இது? உன் கனாக்களில் மழை தூவும் மங்கையொருத்தியின் மீது காலமிட்ட முத்திரை இது. சொந்தம் கொண்டாட முடியாத பெருவடிவைச் சொந்தம் கொண்டாடுவதால் உருவாகும் துயரம் கலந்த மகிழ்வே உன் வாழ்வாய் ஆகும். சிறகுகளை ஒடிக்காவிட்டால் உன்னையே ஒடித்துப் பறக்கும் பறவையின் வலையில் நீ விழுந்திருப்பதைக் கண்டு மரியானவள் புன்னகைக்கிறாள். அவளின் கீழுதட்டிலும் இதே மச்சம். இடுப்பிலிருந்து அதைத் தொட முயலும் தேவகுமாரன் மெல்ல முனங்குகிறான். இதோ இருக்கிறது தேவனின் ராஜ்ஜியம். சிலுவையும் பொய், உயிர்த்தெழுதலும் பொய்.’
இப்படி ஒரு குரலை அசரீரி போல் கேட்டது கனவிலா நனவிலா? இரண்டுமல்லாத பிரமையா?
‘என்னைப் பொறுத்தவரை புத்தகம் மனிதனை கிறுக்காக்கும் மாப்ள. நமக்குள்ள என்னென்னவோ குரல் கேட்கும். ஆனா நிஜமா யாரோ கூப்பிடற குரல் காதுலயே விழுகாது. எனக்கெல்லாம் பாட பொஸ்தகம் மட்டுமே போதும். மனப்பாடம் பண்ணமா பரிட்சை எழுதினமா எடைக்கு போட்டமா பொரிகடலை வாங்கித் தின்னு குசுவை போட்டுட்டு எல்லாத்தையும் மறந்தமான்னு நிம்மதியா இருந்துடலாம். மத்ததெல்லாம் கீழ்பாக்கத்துக்கு போறதுக்கு எடுக்கிற விசா மாதிரித்தே…’
திருமலை சொல்வதுதான் நிஜமா? என் அதீதக் கற்பனைதான் அந்தக் காதலுக்கும் இந்தப் பிரிவின் தீராத துயருக்கும் காரணமா?
நன்னிமாவுக்குத் திருமணம் நடந்தபோது பத்து வயதாம். அப்போது வயதுக்குக்கூட வந்திருக்கவில்லை. அன்று மாலையே மாப்பிள்ளை செத்துவிட்டார். அவர் முகத்தையே நன்னிமா பார்த்ததில்லை. ‘பூ நாகம் தீண்டியதாக’ யாரோ அவர் காதில் சொல்லி அலங்காரத்தை அழித்து அலங்கோலமாக்கியிருக்கிறார்கள். இப்போதும் அந்த மாப்பிள்ளையை நன்னிமா ‘ஓங்க பெரிய நன்னா’ என்றுதான் சொல்வார். உறவுப்பெயர் சொல்லாமல் யாரையுமே அவரால் குறிப்பிட முடியாது. துணி எடுக்க வரும் வண்ணான் கருப்பையாவை என்னிடம் காட்டி ‘வெள்ளாவி மாமா’ என்பார். காதில் விழுந்தால் அம்மா உடனே முறைப்பார். யார் முறைத்தாலும் நன்னிமா உடனே தரை பார்த்தபடி குனிந்து அமைதியாகிவிடும். சோறு போட்டு முன்னால் வைத்தால் மட்டும் சட்டென்று நிமிர்ந்து குளிர்ந்த பார்வை பார்க்கும். நிகழ்ந்ததை மறந்துவிட்டதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். யாராவது அது பற்றிக் கேட்டால், ‘அன்ன முகமது தட்டுல உக்காந்திருக்காஹ.. நம்ம கோபம் அவுஹளை விடவா பெரிசு?’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்கும். நன்னிமா சிரிக்கிறபோது ரொம்ப அழகாக இருக்கும். விரிந்தே கிடக்கும் தாமரையின் மீது கூட்டமாக வண்டுகள் அமர்ந்தால் உருவாகும் அதிர்வுதான் அந்தச் சிரிப்பு. அப்போது சிவந்த நீர்த்துளியென அந்த மச்சம் ஒட்டிக் கிடக்கும்.
அவளை நான் முதன்முதலாக அந்த மச்சத்தில்தான் முத்தமிட்டேன். மென்மையாக, மிதமாக, வேகமாக, ஆவேசமாக அதே இடத்தில் மீண்டும் மீண்டும் முத்தமிட்டு நாவை நீட்டி வருடிய பின் வலிக்காமல் கடித்தேன்.
‘நீ லவ் பண்றது என்னையா மச்சத்தையா?’
‘இதென்ன கேள்வி? குழந்தை தேடுறது தாய்ப்பாலையா? அம்மாவையா? அது மாதிரிதான்.’
‘நீ பேசுறதையெல்லாம் என் ஃபிரெண்ட்ஸ் கிட்ட சொன்னேன்னு வை நட்டு கழண்ட லூசுன்னு சொல்வாங்க.’
‘சொன்னியா?’
‘இல்ல…’
‘ ஏன்?’
‘ஏன்னா நானும் லூசு.. இன்னொரு லூசுக்காக மச்சத்தோடு காத்திருந்த பெண் லூசு.’
2
‘ஒங்க மாமாவை பிடிச்சுதான் கல்யாணம் பண்றியாடி?’
மிருதுளா இதே கேள்வியை இந்த வாரம் முழுவதும் பலமுறை கேட்டுவிட்டாள். அஃப்ரீன் ஒருதடவைகூடப் பதில் சொல்லவேயில்லை. உண்மையில் அவளுக்கே இதற்குச் சரியான பதில் தெரியாதென்பதே நிஜம்.
‘பிடிச்சிருக்கான்னு தெரியல.’
‘அப்ப கட்டாயமா?’
‘இல்ல.. அம்மா ரொம்ப நாளா சொல்லிட்டேதான் இருக்காங்க.. நா அப்பப்ப மறுத்திடுவேன். ஆனா இப்ப ஒத்துக்கிட்டது நானாத்தான்.’
‘ஏன்?’
‘தப்பிச்சு ஓட வேற வழி தெரியல’.
‘கொள்ளிக்கட்டைக்கு பயந்து ஆத்துல குதிக்கிற மாதிரியா?’
அஃப்ரீன் மௌனமாக இருந்தாள்.
‘ஒன்னைய சின்ன வயசுல இருந்து பார்த்துட்டே இருக்கேன். ஆனா இந்த ஆறு மாசமாத்தான் இப்படி ஊமைக்கொத்தானா மாறிருக்க. தண்ணியே வராத ஆணைக்குழா மாதிரி தெரியுறடி நீ.’
‘இப்ப நா என்ன பேசுனாலும் அது கசப்பாதான் இருக்கும். என் கசப்பை இன்னொருத்தருக்கு தர விரும்பல, அதான்..’
‘நீ இன்னம் ஏன் அவனை விட்டு விலகினன்னுகூட என்கிட்டச் சொல்லலையே?’
‘இப்ப உக்காந்து யோசிச்சா அந்தக் காரணம்கூட எனக்கு அல்பமா தெரியுது. அதனாலதான் சொல்லாம இருக்கேன்.’
‘ ……………..’
‘கூடவே, அவன் என்னை காதலிச்சதுக்கான காரணமும்.’
‘மச்சமா?’
‘ம்..’
‘காதல்ங்கிறது இது மாதிரி அழகான முட்டாள்தனங்களால் ஆனதுதானே?’
அஃப்ரீன் முகம் சுருங்குவதைப் பார்த்துவிட்டு மிருதுளா அவள் கைகளைப் பற்றி மென்மையாகக் கேட்டாள். ‘சரி அதெல்லாம் விடு.. இப்ப நீ எதையோ நினைச்சு கவலைப்படுற மாதிரி தெரியுதே. ஏண்டி?’
அஃப்ரீன் மௌனமாக நிமிர்ந்து அவளைப் பார்த்தாள்.
‘சொல்லப் பிடிக்கலன்னா வேணாம்.’
‘ஒன்கிட்ட சொல்லாத ஒரு விஷயம் உண்டு. நா இப்ப வர்ஜின் கிடையாது தெரியுமா?’
‘ஸோ வாட்… அப்ப அதுதான் பிரிஞ்சதுக்குக் காரணமா? ஃபோர்ஸ் பண்ணினானா.. இல்ல, ஏதாவது ஏமோஷனல் பிளாக்மெயில்..’
‘இல்ல.’
அவள் தீர்மானமாகத் தலையசைத்து மறுத்தாள்.
‘இதெல்லாம் பழைய காலத்து பிரச்சினைடி. நாம வாழ்றது வேற ஒரு காலம்.’
‘அதில்ல. நிறைய ஃபோட்டோஸ் எடுத்திருக்கோம். நெருக்கமா.. ரொம்ப நெருக்கமா.. அந்தரங்கமா. எல்லாமே அவன் மொபைல்ல இருக்கு.’
அவள் கண்களில் பதற்றத்தின் பொறி தெரிந்தது.
‘ஓ! பயப்படுறியா? அவ்வளவு மோசமானவனா அவன்?’
‘இல்ல.. என்னதான் இருந்தாலும் அவன் ஒரு ஆம்பளை இல்லையா? அதான்.’
‘ஷிட். நா கேக்கிறதுக்கு நெசமா பதில் சொல்லு.. அவன் பார்த்த ஒடனே உன்னைக் காதலிச்சதுக்கு காரணம் மச்சம். நீ ஏன் காதலிச்ச? தன் பாட்டியின் பிரதிபிம்பமா நினைக்கிறது ஒனக்கு பிடிச்சிருந்ததா?’
‘இல்ல.. ஆனா அவன்கிட்ட பாதுகாப்பா உணர்ந்தேன். அப்பா இல்லாத வாழ்க்கைல அம்மா மூலமா கேள்விப்பட்ட ஆண்கள், பார்த்த ஆண்கள் இப்பிடி எல்லாரும் என் மனசுக்குத் தந்த பதற்றத்தை அவன்கூட இருக்குறப்ப உணரல. அதான்..’
‘அப்படிப்பட்ட ஆளு தப்பா எதும் பண்ணிட மாட்டான். நிம்மதியா கல்யாணம் பண்ணிட்டு மெட்ராஸ் போ.’
‘என் உள்ளுணர்வு தப்பா என்னமோ சொல்லுது.’
‘அதே உள்ளுணர்வுதானே அவனை நல்லவன்னு சொல்லுச்சு.’
‘………..’
‘அப்ப அது ஒரு வெக்கங் கெட்ட பச்சோந்தி. அதைத் தூக்கி குப்பைல போடு.’
‘இல்ல, நான்…’
‘ப்ளீஸ் அபி.. நா ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டியே?’
‘……………’
‘அவன் அப்டி ஏதாவது ஒரு கர்மத்தை யாருக்காவது அனுப்பி வச்சு இந்தக் கல்யாணம் நின்னாக்கூட பரவாயில்லன்னு ஒன் மனசு விவகாரமா யோசிக்குதா?’
மிருதுளா இதைச் சொல்லிவிட்டு நகரும்போது சுவரைப் பார்த்து திரும்பி அமர்ந்திருந்த அஃப்ரீனின் முதுகு மெல்லக் குலுங்கிக்கொண்டிருந்தது.
3
மதுரையில் வெயில் உக்கிரமாக இருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழி அதுவொரு முரட்டுக் குழந்தையைப் போல் நுழைந்து கழுத்தை இறுக்கிப் பிடித்து அனைவரையும் மூச்சுத் திணற வைத்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் இன்றுதான் ஊருக்குப் போகிறேன். இளங்கலைத் தேர்வுகள் முடிந்திருந்தன. அடுத்த வாரம்தான் முதுகலைக்கான தேர்வுகள் தொடங்குகின்றன.
‘டிக்கெட்.. டிக்கெட்..’
‘ரெண்டு தேனி… ஸாரி ஒரு தேனி.’
‘ரெண்டா? ஒன்னா?’
‘ஒன்னுதான்.’
உமையொரு பாகன் உடலில் பாதியை தேவிக்குத் தந்த திருக்கோலத்தோடு பேருந்தில் ஏறினால்கூட இவர் உடனே வழிமறித்து ‘ஒன்னா? ரெண்டா? எத்தனை டிக்கெட்?’ என்றுதானே கேட்பார் என்றொரு அபத்தக் கற்பனை எழுந்து உடனே மறைந்தது.
மூன்று வருடங்களாக அவளுடன் ஒன்றாக ஊருக்கு வந்த பழக்கம். ஆறு மாதத்துக்கு முந்தைய ஒரு நாளில் எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் பேருந்தில் ஏறியதும் அனிச்சையாக வாய் இரண்டு டிக்கெட் கேட்கிறது.
பழக்கம்தான் மனிதனின் மிகப்பெரிய பிரச்சினையா? காதலும் ஒரு பழக்கம்தானா? இந்த ஆறு மாதங்களாய் பிரிவும் துயரும் பழக்கமாகியிருந்தது. ஆனால் இதுவரையிலான தன்னிரக்கம் திடீரென்று காணாமல் போயிருக்க, இப்போது பீறிட்டெழும் உக்கிரமான கோபம் எங்கிருந்து வந்தது? அவள் இன்னொருத்தனுக்குச் சொந்தமாகப் போகிறாள் என்கிற நிஜத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத மனதின் பேயாட்டமா?
‘நல்லா இருந்துச்சா?’
‘ச்சீ.. இப்பிடியா ஓப்பனா கேப்ப?’
‘நமக்குள்ள என்னடி வெட்கம்? அப்ப கல்யாணத்துக்குப் பின்னாடி நமக்கு நடக்கப் போறது முதலிரவு இல்ல, ரெண்டாமிரவு. மாலையும் கழுத்துமா நம்மை உக்கார வச்சு எல்லோரும் அதைப் பத்தியே ஜாடைமாடையா பேசறப்ப நமக்குச் சிரிப்பு சிரிப்பா வரும்ல? அந்தக் கள்ளச்சிரிப்பை நா பாக்கணும். கள்ளச் சிரிப்பழகி… மறக்க மனம் கூடுதில்லையே!’
அவள் உடலில் மெல்லத் தாளம் போட்டேன்.
‘அப்ப ரெண்டுக்கும் நடுவுல வேற ராத்திரி கிடையாதா? ஹேமா சித்தப்பா இவ்ளோ பெரிய வீட்டை தனியா விட்டுட்டு அடிக்கடி ஃபாரின் போவாரே?’
‘அடி கள்ளி..’
நிர்வாணக் கவுச்சியை அறை முழுவதும் நிரப்பிவிட்டு போர்வையைச் சுற்றிக்கொண்டே பாத்ரூமுக்கு ஓடியவளை இப்போது பார்த்தால் அதே நிர்வாணத்தோடு அறையத் தோன்றுகிறது. அவள் தலையைச் சுவரோடு அழுத்தி….
‘நமக்குள் ஒத்து வராது. பிரிஞ்சுடலாம்.’
இதுதான் அவள் கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தி. அதற்கு முந்தைய நாள் வரையிலான அத்தனை குறுஞ்செய்திகளையும் அவன் அழிக்காமல்தான் வைத்திருந்தான். அந்த ஒற்றை வரி சர்ப்பமாக ஏறி ஆயிரக்கணக்கான கொஞ்சல்களின், வழிதல்களின், கரைதல்களின், மிஸ் யூ லவ் யூக்களின் கழுத்தை வளைத்து தன் நீல நிற விடத்தை அதற்குள் துப்பியிருந்தது.
அடுத்த நொடியே வாட்ஸ் அப்பில், முகநூலில், மெசஞ்சரில் என்று வரிசையாக பிளாக் செய்திருந்தாள். இருவருக்கும் பொதுவான அத்தனை பேரின் எண்களும் என்னைத் தூக்கி கதவுகள் மூடப்பட்ட ஓர் உலகத்தின் வெளியே எறிந்திருந்தன.
அத்தனை அடையாளங்களும் அழிக்கப்பட்டு கடை வீதியில் தனித்து விடப்பட்டவனாகத் தன்னை உணர்ந்த நிமிடத்தில் என்னால் அழக்கூட முடியவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகுதான் அழுகையே வந்தது. அதற்குப் பிறகு எதைக் கண்டாலும், கேட்டாலும், நினைத்தாலும் பச்சைப் புள்ளை மாதிரி அழுதேன். நண்பன் திருமலையிடம் மட்டும் ஒரே ஒருமுறை புலம்பிவிட்டு அவளைத் தேடுவதை முழுமையாகக் கைவிட்டிருந்தேன். அவள் வீடிருக்கும் தெருவின் பெயர்கூடத் தெரியாது. ஊரின் பெயர் மட்டும் நினைவிருக்கிறது.
அம்மா நேற்று பேசியது வரையிலான இந்த இடைப்பட்ட ஆறு மாதங்களில் நன்னிமா முகமே நினைவுக்கு வரவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. முழுக்க முழுக்கத் தன்னிரக்கத்திலேயே மூழ்கிக் கிடந்தேன். மூச்சடங்கி வாயு பிரிந்து செத்துக் கிடக்கிறபோது ஊரே என் காதலைப் பற்றிப் பேசுகிற மாதிரி, அடுத்த ஜென்மத்தில் அவள் என்னைச் சந்தித்துக் கதறியபடி மன்னிப்பு கேட்கிற மாதிரி, நியாயத் தீர்ப்பு நாளின் தராசில் அவளுக்கு எழுதிய காதல் கடிதங்களை என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடியே வானுலகின் மலக்கொருவர் தராசில் வைக்கிற மாதிரி, அவள் இறந்த செய்தி கேட்டு பதறியோடி கூட்டத்தைப் பிளந்து கொண்டு உள்ளே போய் அவள் மீது விழுந்து அடுத்த நொடியே உயிர்விடுவது மாதிரி, ஆவி வடிவங்களாய் நாங்கள் மொத்த உலகையும் பார்த்தபடி மேலே நகர்வது மாதிரி, இப்படி விதவிதமாய்.. ஒவ்வொரு முறையும் அழுது முடித்தவுடனே அந்த நிர்வாணப் புகைப்படங்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
ஒன்றிரண்டு முறை அவற்றை வெறியோடு பார்த்துக்கொண்டே, மந்திர உச்சாடனம் போல் அவள் பெயரைப் பைத்தியம் பிடித்த மாதிரி மீண்டும் மீண்டும் உச்சரித்து, எதையோ என்னிலிருந்து வெளியேற்ற முயல்பவன் போல் கை நடுங்க, உடல் வியர்த்து இயங்கி, அடுத்த நொடியே தீராத அருவருப்பிலும் குற்ற உணர்விலும் விழுந்திருக்கிறேன்.
இந்த நிமிடம் அவளை நினைக்கும் போது பெருங்கசப்பு எழுந்தது. என்னை பிளாக் பண்ணிய போது அவள் முகம் எப்படி இருந்திருக்கும்? அந்த முகம் அவள் முகமாய் இருந்திருக்காது. மிக முக்கியமாய் அந்த மச்சம் உதிர்ந்திருக்கும். அதே மச்சத்தை ஏந்திய நன்னிமாவின் பரந்த முகத்தை நினைவில் மீட்டி இந்த இருபத்து இரண்டு ஆண்டுகளில் ஒரு முறையாவது அதில் கசப்பின் சாயலை உணர்ந்திருக்கிறோமா என்று யோசித்தேன். எத்தனையோ தருணங்களை மனம் உடனே பிரதியெடுத்துத் தந்தது. ஒன்றில்கூட அவளிடம் முகச்சுழிப்பின் கொழுந்து இலையைக்கூடக் காண முடியவில்லை. அவளை நிறைய முறை அழுது பார்த்திருக்கிறேன். அவள் வாழ்வே அழுகையின் பெருவெளிதான். ஆனால் கசப்பை மட்டும் எங்கோ எறிந்துவிட்டு அவள் இத்தனை தூரம் வந்துவிட்டாள்.
பதினான்கு வயதில் பூட்டத்தாவின் பிடிவாதத்தால் அவளுக்கு மறு திருமணம் நடைபெற்றது. பூட்டத்தா ஜின்னா சாகிப்பின் சிநேகிதர் என்று சொல்லிக்கொள்வார்கள். அதற்கு எந்த ஆதாரமும் வீட்டில் இல்லை. பெரும் பணக்காரனாய் வாழ்ந்த அவர், சாகும்போது ஒரே ஒரு காரை வீட்டோடு விட்டு வைத்திருந்து செத்துப் போனதற்கு பல காரணங்கள் உண்டு. மிக முக்கியமான காரணம் நன்னா.
நன்னா அப்போதே பியூசி வரை படித்தவர். ஏழ்மை நிரம்பிய குடும்பம். கரி மாதிரி கறுப்பாக இருப்பார். நல்ல உயரம். நன்னிமா பொன்னிறம். தன்னைப் பணக்கார வீட்டில் இரண்டாவது புருஷனாய் விற்றுவிட்டார்கள் என்கிற ஆங்காரமும் நன்னிமாவின் அழகிய தோற்றத்தால் உருவான தாழ்வு மனப்பான்மையும் அவரைப் பிடுங்கித் தின்றிருக்க வேண்டும். முதல் ராத்திரியில் நன்னிமாவைப் பார்த்த உடனே அவர் கேட்ட முதல் கேள்வி இதுதானாம். ‘ஒம் மொத புருஷன் சாயங்காலம் செத்தானா? உங்கூட படுத்திட்டு மறுநா ஃபஜ்ரு வாக்க வாயை பொளந்திட்டானா?’
அவர் வெறும் கேள்விகளோடு நிறுத்தவில்லை. இந்தக் கேள்விகளுக்கான பதில் தேடி எங்கெங்கோ அலைந்தார். பூட்டத்தாவின் சொத்தை குடி, சீட்டாட்டம், பெண் தொடர்பு என்று மொத்தமாக அழித்தார். மாமனார் முன்னால் மட்டும் வரமாட்டாராம். அப்படியொரு விசித்திரமான மரியாதை. ஏழு பிள்ளைகள் பெற்று பேரன் பேத்திகள் பிறந்து பக்கவாதத்தில் விழுகிற வரை, ‘பொண்டாட்டியின் மொதப் புருஷனோட படுக்கையை’ மட்டும் அவர் மறக்கவேயில்லை.
நன்னிம்மா இட்லி சுட்டு, வீட்டு வேலைக்குப் போய், ஊருக்கே தண்ணீர் சுமந்து, என்னென்னவோ செய்து குடும்பத்தைத் தூக்கி நிப்பாட்டியது.
கடைசிக் காலத்தில் அவருக்குப் பண்டுதம் பார்த்து பீ, மூத்திரம் அள்ளிப்போட்டு அவர் ‘ம்’ என்று முனகினால் எங்கிருந்தாலும் ஓடிவந்து பணிவிடை செய்கிற நன்னிம்மாவின் முகம் அதே மலர்ச்சியோடுதான் இருக்கும். பிள்ளைகள், பேரன்மாரெல்லாம் புருஷனைத் திட்டினாலும் அவர் தலையைக் குனிந்தபடி கண்ணீரை மாலை மாலையாய் ஊத்துவார். சமயத்தில் குனிந்தபடியே வலக்கையை அருள்வாக்கு சொல்வது மாதிரி மேலே உயர்த்தி நீட்டி ‘போதும்’ என்பார். ‘அவுஹ’ என்கிற சொல்லைத் தாண்டி வேறொன்றையும் நன்னிமாவிடம் கேட்டதில்லை.
நன்னா என்றில்லை, நன்னிமாவுக்கு எந்த மனிதர் அல்லது மனுஷி மீதும் துளிக்கூட வெறுப்போ சலிப்போ வந்ததில்லை. நன்னா, அவர் அக்கா என்று அவரைப் படுத்திய அத்தனை பேரும் சாகும்போது அவள் கால்களைத் தொட்டு கண்ணில் ஒற்றியபடிதான் மடிந்திருக்கிறார்கள். அவள் அடுத்த நொடியே கால்களை விலக்கிவிட்டு வாசலுக்கு ஓடிவந்து ஓவென்று ஒப்பாரி வைப்பாள்.
உறவுகள் இல்லாத மனிதர்களிடத்திலும் அப்படியே. அவளை எவர் வேண்டுமானாலும் ஏமாற்றிவிட முடியும். ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்தால் விரக்தியாய் சிரிப்பாள். மீண்டும் வந்து மன்னிப்பு கேட்டால் அவர்களை உடனே மன்னித்துவிட்டு ஓவென்று கதறி அழுவாள். கைகளைப் பற்றிக்கொள்ளாமல் யாரோடும் அவளால் பேச முடியாது.
ஃபைசலாகிய நான் அவளுக்குப் பதினாறாவது பேரன். எனது அம்மா நபீஸாதான் நன்னிமாவுக்குக் கடைசிப் பிள்ளை. என் மீது நன்னிமாவுக்கு ஒட்டுதல் அதிகம். தன்னுடைய எல்லாப் பாடுகளையும் கதைகளையும் சலிப்பின் சாயலே இல்லாமல் கேட்கிறவன் என்கிற பற்றுதல் அவளுக்கு. எப்போதாவது அந்தச் சிவப்பு மச்சத்தைச் சுட்டி ஏதாவது சொல்வேன். அதுபோன்ற தருணங்களில் நன்னிமாவின் முகம் தீ மாதிரி சிவந்துவிடும். அந்த முகத்தில் குடியேறும் பிரத்யேகமான வெட்கத்தை வேறு எந்தத் தருணத்திலும் பார்க்க முடியாது. ஒரே ஒரு தடவை நன்னிமாவிடம் அஃப்ரீன் புகைப்படத்தைக் காட்டி, ‘நன்னிமா.. இது அஃப்ரீன். நல்லா இருக்கா?’ என்று கேட்டபோது உற்றுப் பார்த்துவிட்டு பதிலே சொல்லாமல் கைகளை நெட்டி முறித்து பேரனைத் திருஷ்டி சுற்றிவிட்டு மௌனமாய் எழுந்து போய்விட்டது.
‘ஒன்னை நினைச்சு நினைச்சு
உருகிப் போனேன் மெழுகா’
ரிங்டோன் ஒலித்ததும் எடுத்துப் பார்த்தேன். திருமலைதான். மனம் குரங்கைப் போல் ஒரே எட்டில் தாவி கிளைகளற்ற பனை மரத்தின் உச்சியில் உட்கார்ந்துகொண்டது.
‘மாப்ள அவ நல்லவ இல்லடா. அவளைப் போயி எங்க நன்னிமான்னு நினைச்சேனே. ச்சேய் அவ…’
காதுகள் கூசும் வசவொன்றை உதிர்த்து அந்த வசவு தனக்காகச் சொல்லப்பட்டதாகக் கற்பனை செய்துகொண்டு அழ ஆரம்பித்தேன்.
‘யே மாப்ள…’
மீண்டும் மீண்டும் ‘நன்னிமா மாதிரி இல்ல’ என்று குடிகாரனைப் போல் உளறிக்கொண்டேயிருந்தேன்.
பக்கத்து சீட்டில் யாருமில்லையென்றாலும் முன்னால் இருந்தவர் திரும்பி விநோதமாய் பார்க்க, முகத்தைத் துடைத்தபடி குனிந்துகொண்டேன்.
‘மாப்ள, ஒன் ஃபீலிங்ஸ் புரியுது. தப்பா மட்டும் யோசிச்சுடாத. நீ இதுல இருந்து வெளில வர ஒரு வழி இருக்கு. அப்புறம் பேசறேன், இப்ப ஃபோனை வை.’
திருமலை எல்லாவற்றையும் செய்கையால் நிரூபிக்கிறவன். அவனைப் பொறுத்தவரை சொல் என்பது அநாவசியமான விரயம். ஆனால் என்ன சொன்னாலும் செய்வான். அப்படி என்ன செய்யப் போகிறான்? ‘இதுல இருந்து வெளில வர ஒரு வழி இருக்கு’ என்கிற சொல் ஒரு விநோதமான பூச்சியாகி என்னையே சுற்றிக்கொண்டிருந்தது.
சின்னமனூரைத் தொடும்போது திருமலையிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.
‘மாப்ள.. அந்தப் பொண்ணு வகையா சிக்கிருச்சு. மாப்ள வாங்கித் தந்த புது செல் கைல இருக்காம். எஞ் சித்தி பொண்ணு தீபா மாப்ளை வீட்டுக்குப் பக்கத்து வீடு. நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள நம்பரை கண்டுபிடிச்சிடுவேன். நீ என்ன செய்யணும்னு வாய்ஸ் கால் அனுப்பிருக்கேன். பீ கூல் மாப்ள. நம்மளை அழ வச்சவளை பதிலுக்கு அழ வைக்கணும். அவந்தேன் ஆம்பளை.’
புஜபலம் காட்டும் அந்த ஸ்மைலியையே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
வீட்டிற்குள் நுழைந்தபோது படுத்துக் கிடந்த நன்னிமாவைத்தான் முதலில் பார்த்தேன். வாடிய பூ மாதிரி இருந்தார். வழக்கமாக அவர் முகத்தின் மீது முகம் வைத்து மூச்சுக்காற்றாலேயே எழுப்பிவிடுவேன். நள்ளிரவின் மத்தியில் தூக்கம் கலைந்தபோதும் நன்னிமா சிரிப்பு மாறாமல் ‘ஃபைசலு’ என்று கழுத்தை வளைத்துக்கொள்வார்.
வெறுமையோடு நன்னிமாவைக் கடந்து அறைக்குள் போனேன்.
‘சாப்டியா?’
‘ம்.’
‘நன்னிமாவை நாளைக்குச் சாயங்காலம் டாக்டர்ட்ட கூட்டுப் போனுண்டா.. காலைல சீக்கிரமா கோதுமை மாவரைக்கணும். ஆறு நாள்ல தீந்து போச்சு. நீ கூட வர்றியா? ஆமா இவ்வளவுதேன் துணியா?’
நான் கொண்டுவந்த பையை ஆராய்ந்தபடியே பேசிக்கொண்டிருந்தாள்.
கைலியைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தவன், ‘ம்’, ‘ம்’ என்று பொதுவாகப் பேசிக்கொண்டே நகர்ந்தபோது மூலை அறையில் தங்கச்சி ரஹீமாவின் போர்வைக்குள் அலைபேசியின் மெல்லிய வெளிச்சம் தெரிந்தது. அவள் உள்ளூர் கல்லூரியில்தான் படிக்கிறாள்.
‘ரஹீமா’. வீடே அதிரும்படி உரக்கக் கத்தினேன். அத்தா நடையிலிருந்து லேசாகக் கணைத்தார். அந்தச் சிறு கணைப்புக்கு, ‘எதுக்குடா உங்கொப்பன் தூங்கிட்டிருக்கிற நடு ராத்திரிச் செவைல இந்த அலப்பறை?’ என்கிற பொருள் உண்டென்று எனக்குத் தெரியும்.
‘நீ படிக்கப் போறியா அழிஞ்சு நாசமாகப் போறியான்னு எனக்குத் தெரியல. ஒன்னை தட்டிக் கேட்க இந்த வீட்ல யாருக்கும் துப்பில்ல. இந்நேரத்துக்கு என்னடி அந்த பலாவை நோண்டிட்டு இருக்க? வர வர பொட்டச்சிஹ போக்கே சரியில்லை. எல்லா வீட்லயும் துளிர்விட்டுப் போயி அலையுதுஹ. மத்தவளுஹளவிட துலுக்கசிஹ ஆட்டம் ரொம்பக் கூடுதலா இருக்கு.’
என்னுடைய முரட்டுத்தனமான கத்தலில் அலைபேசியை மேஜையில் வீசிவிட்டு எழுந்து உட்காரந்து கலைந்த தலையோடு நைட்டியை சரிசெய்தபடி ரஹீமா நடுங்கிக்கொண்டிருந்தாள். இதுவரை என்னை அவள் இப்படிப் பார்த்ததேயில்லை. அவள் கண்களில் குழப்பம் தெளிவாகத் தெரிந்தது.
அவள் விழிகளைப் பார்க்க முடியாமல் பாதித் தண்ணீரோடு செம்பை வீசிவிட்டு நகர்ந்து அறைக்குள் போய் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டவனை அம்மா நபீஸா விநோதமாகப் பார்த்தாள்.
‘எவண்டி இவன்? நடுராத்திரில வந்து கால்ல வென்னி விழுந்த கெட்ட ஜின்னு மாதிரி அடித்தொண்டைல கத்துறவன்.. அடியே ஒனக்கும் அந்த செல்ஃபோன் புருஷன் இல்லாம ஒரு செகண்டுகூட இருக்க முடியாது. எல்லாத்தையும் மூடிட்டு பேசாம படுறீ. அத்தா முழிக்கப் போறாஹ.’
பழைய துணிகளை வாஷிங் மிஷினுள் போட்டுவிட்டு, ‘அவ கிட்டதே செத்த மெதுவா போயி இதைச் சொல்லலாம்ல? இதுக்கு ஏன் இபுலீசு மாதிரி கத்துறான்? இவன் என்னமோ செல்போன் பொண்டாட்டிக்கு தலாக்கு விட்டுட்ட மாதிரி.. வீட்டுக்குள்ள வர்றப்பகூட அந்த பலாயை நோண்டிக்கிட்டேதேன் வந்தான்’ என்றாள்.
அம்மாவின் குரல் மெல்ல மெல்ல சுதி குறைய, அத்தா மீண்டும் ஒருமுறை கணைத்தார். யாராவது சிறு தும்மல் போட்டாலும், ‘பாவி மகளே என்னாச்சுடி’ என்று பதறிப்போய் எழுந்துவிடும் நன்னிமா, இவ்வளவு அலப்பறையிலும் அப்படியே தூங்கிக்கொண்டிருந்ததை நினைத்து ஆச்சரியமாயிருந்தது.
திருமலை ஆன்லைனில் இருக்கிறானா என்று ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை பார்த்துக்கொண்டே இருந்ததில் விழிகள் நழுவி தூக்கத்தில் விழுந்தேன்.
கண் விழித்த போது நேரம் சரியாகத் தெரியவில்லை. மதியமா சாயங்காலமா என்கிற குழப்பம் வந்தது. வீட்டில்தான் படுத்திருக்கிறோம் என்பதை உணர சில நிமிடங்கள் பிடித்தன. இந்தத் தூக்கத்தில் பத்து கனவுகளாவது வந்திருக்கும். ஒன்றே ஒன்று மட்டும் நினைவில் இருந்தது.
அவளுக்குத் திருமணம் நிகழ்கிறது. ஆனால் அவன் முகம் சரியாகத் தெரியவில்லை. ஆள் கிழவன் போலிருந்தான். அவள் கொஞ்சம்கூட அழவில்லை. மலர்ந்த முகத்தோடு இருந்தாள். தலை நிறைய மல்லிகைப் பூ. அந்தக் கிழவனைப் பார்த்து அருவருப்பின்றி லேசான வெட்கத்தோடு சிரித்துக்கொண்டே இருந்தாள். அடுத்த காட்சியிலேயே அவள் தலைநிறைய பூவும் மிதமிஞ்சிய அலங்காரமுமாய் உள்ளே வருகிறாள். கட்டிலில் திருமலை கத்தியோடு அமர்ந்திருக்கிறான். அவள் ஒரு கணம் திடுக்கிட்டு அடுத்த கணமே இயல்பாகி திருமலையை நோக்கி நடந்து வருகிறாள்.
‘அவர் எங்கே?’
‘கொன்றுவிட்டேன்.’
‘அப்பிடின்னா.. இது உனக்குத்தான்.’
தன் உடலை அவனிடம் சுட்டி சேலையை நழுவ விட்டபடியே வெறும் ஜாக்கெட், பாவாடையேடு அவனைத் தழுவ முற்படுகிறாள்.
திருமலை கண்களை மூடிக்கொண்டே, ‘ஃபைசல் என் நண்பன், ஃபைசல் என் நண்பன்’ என்று பெருங்குரலில் கத்துகிறான்.
‘அப்ப நீ ஏன் கத்தியோட ரூமுக்குள்ள வந்த?’
‘அந்த மச்சத்தைக் கொடுத்திடு, நா போயிடறேன். ஃபைசலுக்கு அது வேணுமாம்.’
திருமலை முன்னால் திரும்பியபடி கண்களை மூடிக்கொண்டே கைகளை நீட்டுகிறான். அவள் உரக்கச் சிரித்தபடியே அறை முழுவதும் உயர்த்தெழுகிறாள். ‘இந்தா நீ கேட்ட மச்சம்.’ அந்தக் குரல் அலையலையாய் எழுந்து எதிரொலிக்க, திருமலையின் கையிலிருந்த கத்தி எதிர்பாராமல் ஒரே நொடியில் அவள் கைக்குப் போகிறது.
உள்ளங்கையில் ரத்தம் வழிய வழிய வைக்கப்பட்டது அந்தச் சிவந்த மச்சமில்லை, நன்னிமாவின் தலை. சட்டென்று திரும்பிய போது அந்தத் தலையைப் பிடித்திருந்தவனின் முகம் திருமலையுடையதாக இருக்கவில்லை. என்னுடையதாகியிருந்தது.
அந்தக் கனவை இப்போது நினைத்தாலும் உடலின் தந்திகள் அதிர்ந்தன. அந்த அதிர்வில் மனம் இப்போது பெண்குறியளவுக்கு வளர்ந்துவிட்ட மச்சத்தைப் புணர்ந்துகொண்டிருந்தது.
4
ஜன்னலைத் திறந்து பார்த்தபோது சூரியன் உக்கிரமாக இருந்தது. கோபம் கொண்ட முள்ளம்பன்றியொன்று பிணங்கள் நிரம்பிய நகரத்தில் மூர்க்கத்தோடு ஊர்ந்து வருவதைப் போல அந்தச் சூட்டை உணர்ந்தேன். ‘உலகம் அழியும் நாளில் சூரியன் ஒற்றைப்பனை மர உயரத்தில் உதிக்கும்’ என்று வேதம் சொல்கிறதே? இது அந்த நாளா? அந்த நாளாக இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? மனதை அழுத்தும் எல்லாத் துயரங்களில் இருந்தும் மொத்தமாக விடுதலையடைந்து விடலாம். நான், அவள், நாளைய மணமகன், அந்தச் சிவப்பு மச்சம் எல்லோரும், எல்லாமும் ஒரே நெருப்பாற்றில் அமிழ்ந்து கிடப்போம். வந்த பாதையும் போகும் பாதையும் பிரித்தறிய முடியாத முடிவிலியில்… ‘சிராத்தல் முஸ்தகீன்’ பாலத்திற்குக் கீழே ஓடும் நெருப்பு நதியின் பெயரற்ற சிறு துகளாய்… யாரோ ஒரு நல்லடியாரின் காலடிக்குக் கீழே… அந்த நல்லடியார் கூட்டத்தில் கண்டிப்பாக நன்னிம்மாவும் இருப்பார். ஆனால் நான் இருளுக்குள் கிடப்பேன். தன்னிரக்கத்தின் இருளில், பொறாமையின் இருளில், ஆற்றாமையின் இருளில்!
திருமலையின் திட்டம் மீண்டும் ஒருமுறை நாகப் பாம்பின் விஷமென மண்டைக்குள் ஏறி சுர்ரென்றது.
‘நாளைக்குள்ள நம்பர் அனுப்பிடறேன் மாப்ள. நீ ஒவ்வொரு போட்டாவா அனுப்பு. இந்தத் தடவை கண்டிப்பா பிளாக் பண்ண மாட்டா. ஆனா உடனே பதிலும் வராது. அதிர்ச்சியோட உக்காந்து திரும்பத் திரும்ப பாப்பா. ஸிவிட்ச் ஆஃப் பண்ணிட்டு பதறிப் பதறி ஆன் பண்றப்ப எல்லாம் அவ கண்ணுல புதுசா ஒரு போட்டோ தெரியணும். இடையில ஏதாவது கேட்பா, பதில் சொல்லாத. ரொம்பக் கெஞ்சுவா, அழுவா, புலம்புவா, மன்னிப்பு கேட்பா. அதுக்கப்புறம் உன் புருஷன் நம்பரும் எனக்குத் தெரியும், அவனுக்கு அனுப்பவான்னு கேளு. பெறவு பதில் சொல்லாம போட்டோக்களை அனுப்பிட்டே இரு. ஒன்னொன்னா நிதானமா விஷத்தை வாயில ஊத்தற மாதிரி. நிக்கா பொஸ்தகம் வாசிக்கிறதுக்கு நாலு மணி நேரம் முன்னாடி டக்குன்னு நிறுத்திடு. செல்லை பார்த்துக்கிட்டே அவ பொழுது கழியணும். உடம்பும் மனசும் மேடைல இருக்கக்கூடாது. ஒன் காலுக்குக் கீழ மானசீகமா விழுந்து கதறணும். நைட்டு வரைக்கும் அமைதியா இரு. சரியா பத்து மணியானதும் திரும்ப ஆரம்பி. செத்துருவா… காலைல வரைக்கும் விடாம அனுப்பிக்கிட்டே இரு. காலைல நிறுத்திட்டு தொடரும்னு போட்டு கமாவா டைப் பண்ணு. அத்தோட விட்ரலாம். போயி ஒழியுறா. அவனுக்கெல்லாம் அனுப்ப வேணாம். ஆனா அவனுக்கு போயிருமோ, பாத்துட்டா என்னாகுமோன்னு பயத்தோடவே கொஞ்ச நாளைக்கு அவன்கூட படுத்து எந்திரிக்கெட்டும். தேவடியா மவளுவ போறதுதே போறாளுஹ, என்ன மயிரு கோவம்னு சொல்லிட்டு போலாம்ல? ஆம்பள என்ன சொம்பையா? இவளுஹ தடவிக் கொடுக்கச் சொன்னா தடவணும், ச்சூன்னு விரட்டுனா போயிடணுமா? ஆம்பள ஒன்னும் நக்குற நாயி இல்ல, கடிக்கிற நாயின்னு காட்டணும் மாப்ள. அப்பத்தே அடங்குவாளுஹ. நாளைக்கு மதியம் வரைக்குந்தே அவ சூத்துக் கொழுப்பெல்லாம்.’
அந்தக் குரலின் வன்மம் இப்போதும் என்னை அறைந்தது. இவ்வளவு வன்மத்தைத் திருமலை எங்கே வைத்திருந்தான்? இது என் மீதான பிரியமா? பெண்களின் மீதான வெறுப்பா? அல்லது யார் மீதோ கொட்ட வேண்டிய நெருப்பை இவள் தலையை நோக்கிக் குறி வைக்கிறானா? ஆனால் அதே வன்மம்தானே என்னிடமும் இருக்கிறது? இவ்வளவு தரக்குறைவாக நான் உயிருக்கு உயிராக நேசித்த ஒருத்தியைப் பற்றி நாக்கில் நரம்பில்லாமல் பேசிய கொம்பேறி மூக்கனின் குரலை மீண்டும் மீண்டும் ஏன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்? வாயில் எச்சில் ஒழுக எதற்காக அந்த எண் வரட்டுமென்று காத்திருக்கிறேன்?
‘மனதில் ஊறும் வன்மத்தின் துளிகளைச் செயலாக்காமல் தவிர்த்துவிடுபவர்களே இந்த உலகில் மனிதர்களாக எஞ்சுகிறார்கள்.’
நேற்று அன்பு அனுப்பியிருந்த ஃபார்வர்டு மெசேஞ் நினைவுக்கு வந்தது. அடுத்த நிமிடமே அந்த வாக்கியத்தை வெறுப்பதற்கான தர்க்கங்களை உருவாக்கிக்கொண்டேன். ‘ஆனால் நான் மனிதனாக எஞ்ச விரும்பவில்லை. எனக்கு அவளின் நிழல் சூழாத நிம்மதியான தூக்கம் வேண்டும்.’ இதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே அலைபேசியைப் பார்த்தேன். எந்தச் செய்தியுமில்லை. திருமலைக்கு ஃபோன் அடித்தேன். ‘ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் தூங்குகிறான் தாலேலோ’. சூழலுக்குக் கொஞ்சம்கூடப் பொருந்தாத ரிங்டோன் ஒலித்தது. அவன் எடுக்கவில்லை.
வீட்டில் நன்னிமாவைத் தவிர யாருமில்லை என்பதை உணர முடிந்தது. ‘நன்னிமா..’ என்று செயற்கைத்தனம் ஒலிக்க மிகையாகக் கூவிக்கொண்டே அருகில் போனேன்.
‘வாத்தா.. நைட்டுதே வந்தியா?’
அம்மா சொல்வதைப் போலில்லை. நன்னிமாவுக்கு மனப்பிறழ்வோ ஜின் சகவாசமோ எதுவுமேயில்லை. அவர் வழக்கமான தெளிவுடன் இருக்கிறார் என்பதைப் பார்த்தவுடனே புரிந்துகொண்டேன். ஆனால் கண்களில் மட்டும் ஏதோவொரு வேறுபாடு இருந்தது. அது இன்னதென்று விளங்கவில்லை.
அலைபேசியைப் பார்த்துக்கொண்டே ஒரு மணி நேரம் நன்னிமாவோடு பேசினேன். தண்ணீர் முகர்ந்து தந்தேன். தொலைக்காட்சியைப் போட்டேன். நான் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் நன்னிமா மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் பதில் தந்தாள். ஆனால் ஒன்று புரிந்தது. எந்தப் பதிலிலும் வாஞ்சையோ ஈரமோ துளியுமில்லை.
‘எல்லாரும் எங்க நன்னிமா?’
அலைபேசியைப் பதற்றமாகப் பார்த்துக்கொண்டேதான் கேட்டேன். நன்னிமா அதைக் கவனித்தார். வழக்கமான நன்னிமாவாக இருந்தால், ‘என்னைப் பாத்துப் பேசுத்தா, அதென்ன உசுருள்ள பொண்டா புள்ளையா’ என்று கேட்டுவிட்டு மென்மையாகச் சிரிப்பார்.
‘போயிருக்காஹ.’
‘எங்க?’
‘வெளில..’
‘எதுக்கு நன்னிமா?’
‘ஆசுபத்திரிக்கு..’
சட்டென்று என்னைப் பதற்றம் தொற்றிக்கொள்ள, ‘என்னாச்சு.. அத்தாவுக்கு ஏதும்…’ என அஞ்சினேன்.
‘இல்ல.’
‘பின்ன?’
‘ஜப்பார் மகன பார்க்க.’
‘ஜப்பார் மகன்?’ சட்டென்று என் பிரக்ஞையில் ரசீதின் பிஞ்சு முகம் ஓடியது. நான்கு வயது நிறைந்த பையன். துறுதுறுவென்று இருப்பான். வீட்டிற்கு வந்தால் நன்னிமா அவன் கன்னம், நெற்றி, வயிறு, குஞ்சு என்று எல்லா இடத்திலும் முத்தம் வைத்து, ‘எந்தங்கல்ல’, ‘பொன்னுல்ல’, ‘வைடூரியம்ல’ என்று நெளிந்து நழுவுகிறவனை விட்டுவிடாமல் மடியில் போட்டுக் கொஞ்சிக்கொண்டே இருப்பார். ஒரு மணி நேரமாக அவர் என்னைத் தொட்டுப் பேசவில்லை என்பது இப்போதுதான் உறைத்தது.
‘அவனுக்கென்ன?’
‘கார் ஏத்தி உடம்பு நசுங்கிருச்சு.’
எனக்கு உடம்பு நடுங்கியது. நான்கு வயது பாலகன். ‘பைச்சு மாமா’ என்கிற மழலை விளி அபஸ்வரமாய் காதுகளில் ஒலித்தது.
‘இந்நேரம் இஸ்ராயிலு வந்திருப்பாஹ.’
தனக்குத்தானே கூறியபடி தொலைக்காட்சியை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தார். என் வேர்கள் அனைத்தும் பிடுங்கி வெட்டவெளியில் வீசப்பட்டதைப் போல உணர்ந்தேன்.
என் முன்னால் இப்படி அமர்ந்திருப்பது என் நன்னிமா இல்லை. யாரிவர்? நன்னிமாவாக இருந்திருந்தால் செய்தி கேள்விப்பட்டதும் அலறியடித்தபடி தெருவைக் கூட்டியிருப்பாள். குறைந்தபட்சம் தான் குஞ்சில் முத்தம் கொடுத்த பாலகனின் சாவை ‘இஸ்ராயில் வந்துட்டாஹ’ என்று வெறுமையாய் கூறிவிட்டு எதுவுமே நிகழாதது போல இப்படி தொலைக்காட்சி பார்த்திருக்க மாட்டாள்.
நன்னிமாவின் கண்களை உற்றுப் பார்த்தேன். அதில் என்னை அடையாளம் கண்டதற்கான எந்தத் தடமும் இல்லை. ஆனால் நான் பார்ப்பதை உணர்ந்து மெதுவாகத் தலையசைத்தார்.
எனக்குப் புரிந்துவிட்டது. அவர் வேறொரு உலகத்தில் இருக்கிறார். மனிதர்களை மனதார நேசித்த அந்த உயிர் இப்போது அதற்கும் அப்பால் போய் தன்னையே விலகி நின்று பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர் இப்போது என் நன்னிமா இல்லை. பிரியம் நிரம்பிய ஈர மனசுக்காரி இல்லை. ஏழு பிள்ளைகள் பெற்று பதினாறு பேரன் பேத்தி எடுத்த குல மூதாய் இல்லை. அவள் யாருடைய மனைவியும் இல்லை. ஏன், அவர் பெண்ணே இல்லை. உயிர், வெறும் உயிர். இருத்தலைத் தவிர எல்லாவற்றையும் கடந்துவிட்ட உயிர்.
அந்த வெறுமை என்னை அறைந்தது. நான் உயிராக நேசித்தவள் என் அருகில் இருந்தும் யாரோவாக இருக்கிறாள். அந்தத் துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை. ஒரே ஒரு கணம் மாலையும் கழுத்துமாய் யாருடனோ அமர்ந்திருக்கும் அஃப்ரீனின் நினைவு வந்துபோனது.
மதியம் வரை உச்சத்தில் இருந்த வெயில் திடீரென்று விலகி மேக மூட்டம் வெளியில் பரவியது. காற்றில் சன்னல்கள் படபடவென்று அடிக்க, மண் வாசனையை இழுத்துக்கொண்டு முதல் சாரலைக் காற்று எங்கள் மீது தெளித்தது. நான் எழுந்து சென்று கதவை அடைக்கத் தோன்றாமல் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தேன். இந்த அழுகை எதற்காக என்றொரு கேள்வியெழ, எல்லாவற்றுக்காகவும் எல்லோருக்காகவும் என்று பிரார்த்தனை போல உளறிக்கொண்டேன்.
தன் பேரனின் உதடுகள் அசைந்து எதையோ உளறுவதையும் அவன் திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுவதையும் உற்றுப் பாரத்தும் சலனமேயில்லாமல் அமர்ந்திருந்தாள் நன்னிமா.
‘ஒன்னை நினைச்சு நினைச்சு உருகிப் போனேன் மெழுகா’ என்கிற வரி வருவதற்குள் அலைபேசியை அணைத்தேன். திருமலைதான் கூப்பிடுகிறான். அவளுடைய எண் கிடைத்திருக்கும் போல. மீண்டும், ‘ஒன்ன நினைச்சு’ என்கிற சத்தம் வர அலைபேசியை அணைத்து தூர எறிந்தேன்.
மழை சுதியேறி சரசரவென்று அம்புகளை விசிறத் தொடங்கியதும் நன்னிமா மௌனமாக என்னை நோக்கிக் கதவைக் காட்டினாள்.
கதவை அடைத்துவிட்டுத் திரும்பியபோது மின்சாரம் அணைந்ததால் சூழ்ந்த கரிய இருளிலும் லேசாகப் பிளந்திருந்த இதழ்க் கடைவாயின் வலது ஓரத்தில் அணையாமல் சுடரென ஒளிர்ந்துகொண்டிருந்தது அந்தச் சிவந்த மச்சம்.
12 comments
ஒரு இஸ்லாமிய பின்புலத்தில் பண்பாட்டுக் கூறுகளின் வழியே மனிதருள் மனிதம் பூக்கும் அழகிய அனுபவத்தை பதிவுசெய்திருக்கிறது இக்கதை. விவரிப்பில் நன்னிமா முழு உருக்கொண்டு கண் முன்னே நடமாடுகிறார்…..நம் அந்தரங்கம் எழுப்பும், நாம் தவிர்க்க எத்தனிக்கும் கேள்விகளை துல்லியமாக பதிவு செய்திருப்பது அருமை……
காரணம் சொல்லாமல் விலகுவத்தின் வலி ,பிளாக் செய்வதின் மனஉளைச்சல் ஆணுக்கு எப்படி இருக்கும் என்பது தெளிவாகிறது…. அதை வன்முறையாக வெளிப்படுத்தாத பைசல் ….????????விறு விறு வென்ற கதை போக்கு சிறப்பு❤️❤️❤️❤️
அற்புதமான சிறுகதை. மொழிநடை. நன்னிம்மா சீக்கிரம் சரியாகிடணும் என்றே மனம் நினைக்கிறது. சில வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. ஆனாலும் கோர்வையாக வாசித்தபோது ஓர் அனுமானம். அப்ரின் வாழ்ந்துபோகட்டுமே. துரோகங்கள் நன்றாக வாழ்ந்ததாக வரலாறில்லையே. காதல் என்பதற்கு முழுமையான அர்த்தம் தொனிக்கும் கதை. வாழ்த்துகள் சார்.
காதலின் முழுமையான அர்த்தம். நன்னிம்மாவா அப்ரினா. யாரோ ஒருவர் இல்லை. அற்புதமான சிறுகதை. சில வார்த்தைகள் புரியவில்லை. ஆனாலும் அனுமானிக்க முடிந்தது. வாழ்த்துகள். திருமலைகள் நாட்டில் நிறைய இருக்காங்க . நன்னிமாக்கள் குறைவுதான். போன தலைமுறையில் ஓகே. அப்ரின்களும் நிறைய .
எனது நன்னிம்மாவைப் பார்த்தது போல் இருக்கிறது. தேனியின் வட்டார வழக்கும் நடுத்தர இஸ்லாமிய குடும்பத்தின் இயல்பான மொழி நடையும் கதைக்குள் கூட்டிச்சென்றுவிட்டது. எழுத்தாளர் மானசீகனது எழுத்தில் எப்போதுமே முதலிலேயே பெரிய கட்டுகளாக இறுக கட்டிவிடுவார். அது பின்பு இயல்பான சூழலால் சரியும். மனம் ஒரு மாதிரி சஞ்சலம் அடையும். ஆழந்த யோசனையில் நிறையும். அது இந்த கதையிலும் நிகழ்ந்தது.
வாழ்த்துக்கள் ஐயா
“அந்த ஒற்றை வரி சர்ப்பமாக ஏறி ஆயிரக்கணக்கான கொஞ்சல்களின், வழிதல்களின், கரைதல்களின், மிஸ் யூ லவ் யூக்களின் கழுத்தை வளைத்து தன் நீல நிற விடத்தை அதற்குள் துப்பியிருந்தது.”
“மனதில் ஊறும் வன்மத்தின் துளிகளைச் செயலாக்காமல் தவிர்த்துவிடுபவர்களே இந்த உலகில் மனிதர்களாக எஞ்சுகிறார்கள்.”
சிவந்த மச்சத்தின் ‘நிழலில்’ தவழ்ந்தவன் இருளில் நடந்து கடைசியாக சிவந்த மச்சத்தின் ஒளியில் ‘ஞானம்’ பெற்று விட்டான்.❤️
இந்த கதையில் வரும் அஃப்ரீன் போல நிறைய நபர்கள்…உள்ளனர்… தங்களின் சுயதேவைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் அடுத்தவரின் வாழ்வில் மோசமான அனுபவங்களை பரிசாக கொடுத்து செல்கின்ரறனர்…
******-
காதலின் துரோகம்.. ஒரு ஆணை எப்படியெல்லாம் சிந்திக்கச் செய்யும்…
அதையும் மீறி அவனுக்குள் இருக்கும் ஈரம்
அவனை எப்படி மடைமாற்றிப் போடும் என்பதாக
ஃபைசலின் பாத்திரம் கச்சிதம்.
திருமலைகள், அஃபரீன்கள் எதார்த்த உலகின் பாத்திரங்கள்.
காதலியின் மச்சம் குறித்த ஃபைசலின் விவரணைகள்… மானசீகனின் ட்ரேட்மார்க் கவிதைச் சாரல்கள்.
நிராகரிக்கப்பட்ட காதலனின் உளவியல் கண்ணாடி இக்கதை. மானசீகன் சார் உங்களது சொல்லாடல் உவமைகள் எப்பவும் புதிதாய் இருக்கும். இதிலும் அப்படியே. சுவாரசியம் குறையாத உங்களது எழுதும் பாணி அசத்தல் சாரே.
விறுவிறுப்பான கதை. அருமை சார்.பைசலின் வாழ்க்கையில் காதல் தரும் இன்பமும் பிரிவு தரும் வலியும் அதன் பின் வரும் ஞானமும் கண் முன்னே காட்சிகளாய் விரிகிறது. எந்த மச்சம் நேசிக்கப்பட்டதோ அதுவே பெருந்துயராகி போகிறது. பின் அதுவே ஞானம் தருகிறது.
சிறப்பான மொழி நடையில் எளியமனங்களின் போராட்டங்கள் , மனிதத்தின் தீர்வும் அருமை
Comments are closed.