துக்க ருசி: வி.அமலன் ஸ்டேன்லியின் “வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்”

0 comment

“நான் என்னையே தேடிச் செல்கிறேன். இத்தேடலில்தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின்போது நான் நடந்து செல்லும் பாதை கவிதையினுடையது.” பிரமிள் தனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டதே மேற்கண்ட பத்தி.

கலைகள் எனும் பாதை வழி நிகழ்வது சாராம்சம் நோக்கிய பயணமே. கலையின் பண்பும் பயனும் அதுவே. இந்திய மரபுக் கலைகள் யாவும் கொண்டிருந்த இந்த அடித்தளம், தமிழ் நிலத்தில், நவீன யுகத்தில், நாவல் கலையில் நவீனத்துவ நோக்கும் அழகியலும் உள்ளே வருகையில் பிரக்ஞைபூர்வமாகவே தவிர்க்கப்பட்டது.

அந்தத் தவிர்ப்புக்கு எதிரான வலுவான விமர்சனக் குரல்களில் ஒன்றே பிரமிளுடையது. அவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி முதல் யோகி ராம்சுரத்குமார் வரை பல்வேறு மெய்யியல் ஆளுமைகளை நவீனத்துவம் ஓங்கிய தீவிரத் தமிழ் இலக்கியச் சூழலில் உரையாடலுக்குக் கொண்டுவந்தார். அவர் பேசிய சூழலில் அன்றைய நவீனத்துவ ஆளுமைகள் எவருக்கும் இந்திய மெய்யியல் ஓடைகள் மீது எந்த ஆர்வமும் இருந்திருக்கவில்லை. அதே போல, நவீனத்துவத்தின் மீது ஆழமான தத்துவார்த்த பயிற்சியும் புரிதலும் கிடையாது. ஆகவேதான் தமிழில் நவீனத்துவ, இருத்தலியல்வாத, தத்துவார்த்த ஆழமற்ற, நவீனத்துவ நோக்கும் அழகியலும் கொண்டு எல்லைகள் சுருங்கிய ஆக்கங்கள் மட்டுமே தோன்றின. தமிழில் யூமா.வாசுகி மொழியாக்கத்தில் வாசிக்கக் கிடைக்கும் முதல்தர நவீனத்துவ நாவல் கசாக்கின் இதிகாசம். அதன் ஆசிரியர் ஓ.வி.விஜயன் நவீனத்துவத் தத்துவங்களில் ஆழங்கால் பட்டவர். தமிழ் நவீனத்துவ ஆக்கங்களில் எது குறைகிறது என்பதைக் கசாக்கின் இதிகாசம் நாவலை ஒப்பிட்டு அறியலாம்.

அதே சமயம், மெய்யியல் நோக்கிய தேட்டம் என்பதைத் தவிர்க்கவே இயலாமல் கையாண்ட நவீனத்துவ ஆக்கங்களுமே உண்டு. உதாரணத்திற்கு, அசோகமித்திரனின் பயணம் கதை. இந்திய யோக மரபு, குரு சீட உறவு, அந்த வாழ்க்கை, இவற்றின் மீதான இருத்தலியல் நோக்கிலான விமர்சனம் என்று அக்கதையைச் சொல்லிவிட முடியும். இவற்றுக்கு வெளியே மெய்யியல் தேட்டத்தைச் சாராம்சமாகக் கொண்ட மானசரோவர் போன்ற புனைவுகளையும் அசோகமித்திரன் எழுதி இருக்கிறார். அந்த வரிசையில் ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து, யதார்த்தவாத அழகியலில் ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்று பத்துக்குள் அடங்கிவிடும் ஒரு சிறு பட்டியலைப் போட முடியும்.

இந்த ஓட்டத்தில் மிக முக்கிய மெய்த்தேட்டப் புனைவாக்கம் ஒன்று தீவிர இலக்கியக் களத்துக்கு வெளியே, வெகுஜன இலக்கியத்தில் நிகழ்ந்தது. ம. நடராஜன் ஆசிரியத்துவத்தில் தமிழரசி எனும் வாராந்திரியில் 1995ஆம் ஆண்டு, ஒரு வருடம் தொடராக வெளியான ஆக்கம் அது. புனைவின் பெயர் திருப்பூந்துருத்தி. எழுதியவர் பெயர் பாலகுமாரன். யோகி ராம்சுரத்குமார் வழியே பாலகுமாரன் அடைந்த தியான ஆத்மீக அனுபவங்களை மணி எனும் கதை நாயகன் வழியே ஒரு குறிப்பிட்ட சூழலைப் பின்புலத்தில் வைத்து விவரித்த கதை. அக்கதையின் வெகுஜன அம்சங்களை உதறிவிட்டு அந்த நாயகனின் அனுபவங்களை மட்டுமே கருத்தில்கொண்டால், அதுவரையிலான தீவிர இலக்கியக் களம் தொட்டுக்கூடப் பார்க்காத பல்வேறு தனித்த அக அனுபவங்களை அப்புனைவு வெளிப்படுத்தியது. இந்தப் புனைவு, தொடர்புகொள்ள இயலாத உணர்வுத்தளங்கள் வழியே நகர்ந்ததால் பாலகுமாரன் வாசகர் உட்பட பிற பொது வாசகர் எவருமே இதை வாசிக்கவில்லை.

அன்றைய தீவிர இலக்கிய வகையறாக்கள் வெகுஜன இலக்கியத்துடன் அன்னம் தண்ணி புழங்கா தீட்டு கடைபிடித்ததாலும், அவர்களுக்கு மெய்யியல் தேட்டம் போன்ற பெரிய பெரிய தவிப்புகள் ஏதும் இல்லாததாலும் அவர்கள் பார்வையிலும் இந்தத் திருப்பூந்துருத்தி நாவல் படவே இல்லை. பின்னர் ஒரு அறைகூவலுடன் வந்த ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலே தமிழில் மெய்யியல் தேட்டப் புனைவு எனும் சவாலை முழுதாக எதிர்கொண்ட முதல் நாவல் என்று சொல்லலாம். பின்னர் வெளியான யுவன் சந்திரசேகர் எழுதிய குள்ளச்சித்தன் சரித்திரம் போல இன்ன பிற புனைவுகள் வழியே மெய்யியல் தேட்டம் எனும் களம், அதன் வண்ண பேதங்கள் வழியே கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கம் கண்டு வருகிறது. அந்த விரிவாக்கத்தின் மிக முக்கிய வரவாக, தமிழினி வெளியீடாக வி.அமலன் ஸ்டேன்லி எழுதிய வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம் நாவல் அமைகிறது.

*

உனக்கும் எனக்குமன்றி,

என்னிடமிருந்தே எனக்கும்.

வி. அமலன் ஸ்டேன்லி எழுதிய தூரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதையின் இறுதி வரிகள் இவை. இப்படித் தன்னிடமிருந்தே தொலைவாகி நிற்கும் ‘தான்’ – அங்கேதான் தொடங்குகிறது மெய்மைத் தேட்டத்தின் ஆதிக் கேள்வியான, தீராக் கேள்வியான, ‘நான் யார்?’ எனும் வினா. புத்தருக்கு 2500 வருடம் கழித்து வந்த ரமணருக்கு வந்த வினா. ‘எனக்குப்’ பசிக்கிறது, ‘நான்’ சாப்பிடுகிறேன் எனும் வரிசையில் எனக்குப் பசிக்கிறது என்று உணரும் நான் யார்? நான் சாப்பிடுகிறேன் என்று ‘தீர்ப்பிடும்’ நான் யார்? நான் என்பது ஞானத்தின் தொடக்கப்புள்ளி. புத்தரின் கேள்விக்கும் ரமணரின் கேள்விக்கும் இடையே 2500 வருடப் பண்பாட்டுச் சுமை உள்ளது. இந்த 2020ல் இந்த நான் யார் எனும் அடிப்படைக் கேள்வி மீது மேலும் அதிகமாக நின்றிருக்கும் பாரம் எது? வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம் நாவல் அதையே விசாரணை செய்கிறது.

ஜெரி எனும் ஜெரால்டின் தன்வரலாற்று மொழிபு போன்ற பாவனையில் ஜெரியின் நோக்கு நிலையில் அமைந்த இந்தப் புனைவு, 1970-இல் தொடங்கி 2020 வரையான அரை நூற்றாண்டு காலத்தில், கிறிஸ்துவ அம்மாவுக்கும் இந்து அப்பாவுக்கும், ஏழு குழந்தைகளில் கடைக்குட்டியாக ஜெரி – எட்டு மாதக் குழந்தையாகக் குறைப்பிரசவத்தில் – பிறப்பது தொடங்கி, அவனது மகள் +2 வகுப்பு போகும் வரை ஜெரி பெற்றவை இழந்தவை மீது மையம்கொண்டு நிகழ்கிறது.

ஜெரி தான் இழந்தது எதுவோ அதிலிருந்துதான் தனது கதையையே சொல்லத் தொடங்குகிறான். தாய் போல, அவளுக்கும் மேலாக நின்று அவனை வளர்த்த சாந்தா அக்காவின் மரணம். அதுதான் அதுவரை அவனுக்குள் அரூபமாகத் திரண்டுகொண்டிருந்த வினாக்களுக்கு முகம் கொடுக்கிறது. ஸ்தூலம் கொண்ட வினா வழியே கொதித்துக் கொதித்து அவன் சென்றடையும் புள்ளி எது? ஜெரி கேள்விப்படும் முதல் மரணம் அவன் அண்ணன் கென்னியுடயது. கென்னியின் மரணமே ஜெரியைக் குடும்பத்தின் செல்லப்பிள்ளை என்றாக்குகிறது. பின்னர் புறத்தே இருந்து அவன் பெரும் பல நூறு தகவல்களில் ஒன்றாக ராமேஸ்வரம் புயலில் ரயில் மொத்தத்துடனும் மூழ்கிப்போன உயிர்களின் பத்தாவது வருட நினைவு தினம். அதன் பின்னர் அவன் வளர்த்த நாய் தொடங்கி பால்ய நண்பர்கள், ஆச்சி அப்பா அம்மா, ஈழத் தமிழர் படுகொலைகள் என எத்தனை எத்தனை மரணங்கள்.

அடி அப் எனும் பைத்தியம், போலீஸ் மாமா மனைவி மல்லிகா சாம்பல் மூட்டையாக எஞ்சுவது, கூட கிரிக்கெட் விளையாடிய பரத் விளையாட்டில் தலையில் அடிபட்டுச் சாவது, முதல் காதலி தேவியின் அண்ணன் காதலியுடன் சேர்ந்து விஷம் குடித்துச் சாவது, உடன் வேலை செய்யும் ராம் தனது காதலியுடன் ரயிலில் பாய்வது, தனது மகனுக்கு உயிரளித்துவிட்டுச் சாகும் ராவுத்தர். இவை போக சேவல், குருவி, பாம்பு. தனது சோதனைச் சாலை எலிகள், பட்டாம்பூச்சி எனப் பற்பல சாவுகள். ஜெரி தனது கோபத்தைக்கூடத் தனது கல்லறையை வரைந்து காட்டி வெளிப்படுத்துபவனாகவே இருக்கிறான். இதுவே ஜெரி அகத்தை வடிவமைத்து சாந்தா அக்கா சாவின் பிறகு கூர்மைகொண்டு சாரம் நோக்கிய வினாவாகப் பரிணாமம் கொள்கிறது.

மரணம் அளவே ஜெரி அகத்தை வடிவமைக்கும் மற்றொன்று, காமம். அவனது அப்பாவின் ஆளுமை, அம்மா காதல் மனைவியாக இருக்கும் போதே வேறு சில பெண் தொடர்புகள் கொண்டிருப்பவர் என்று சித்தரிக்கப்படுகிறது. அவனது பால்யத்தில் (அன்று காமத்தால் மதி மயங்கி மின் விசிறியில் அடிபட்டுச் சாகும் குருவி, காமம் தாங்காது துரத்திக் கடிபட்டு வலியில் துயருரும் நாய் குறித்த சித்திரங்கள் சில வருகின்றன.) கண்ணிழந்த ஒருவன் ஜெரியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்கிறான். காமம் ஊறிய ஜெயந்தி அக்காவின் அணைப்பு, ஜெரோம் எனும் பெண் பித்தன் என ஜெரி வாழ்நாள் நெடுக வந்துகொண்டே இருக்கிறது காமத்தின் அலைக்கழிப்புச் சித்திரங்கள்.

இத்தகு காமத்தால் நிகழும் முறைகேடான உறவுகளும் உண்டு. தேவராஜ் அண்ணனுக்கும் விஜயாவுக்குமான நிறைவேறா உறவு, முறை தவறி பிறக்கும் சார்லஸ் கதை, கஸ்தூரி, கோமதி சகோதரிகள் ஈன வாழ்வு, நியாஸ் கொண்ட பெண் தொடர்புகள், ராம் கொண்ட மூத்த பெண் தொடர்பு, செல்வம் – கல்பனா கள்ள உறவு எனப் பொருந்தாக் காமங்களின் நிரை.

ஒவ்வொரு வாழ்வும் பலநூறு மடங்கு எடைகொண்டது. குறிப்பாகக் கஸ்தூரி – கோமதி சகோதரிகளின் கதை. தனது கணவனால் கர்ப்பமான தனது தங்கையை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லும்போது, தெருமுனையில் எந்தச் சலனமும் இன்றி அதை வெறுமனே பார்த்தபடி அமர்ந்திருக்கும் கஸ்தூரியின் கணவன் ஈஸ்வரனின் சித்தரிப்பு இந்த நாவலின் உச்ச கணங்களில் ஒன்று. கஸ்தூரி போலன்றி முதல் தொடர்பிலேயே உறவை வெட்டிவிட்டு நகரும் பார்வதி, ஸ்ரீதர் விட்டுச்சென்ற பிறகு நித்ய கன்னியாகவே வாழ்வை வீண் செய்யும் ஜெனிபர் எனப் பலப்பல குணாதிசயம் கொண்ட பெண் வகைமாதிரிகள். அதே போல ஆண்களிலும். இவை போக வயதான காலத்தில் ‘ஓடிப்போகும்’ பட்டாபி – அமலி தம்பதி, பள்ளி வாத்தியார்கள் முதல் உயர் படிப்பின் பேராசிரியர் அனில் அகர்வால், மனநோயாளிகள், பால் திரிபாளர்கள், நாய்கள், பூனைகள், பிற உயிர்கள் வரை ஜெரியை மையம் கொண்டு விரிகிறது ஒரு முழுமையான உலகம். இந்த உலகில் குறைப்பிரசவத்தில் பிறந்தவனாக, சுமாராகப் படிப்பவனாக, நண்பர்கள் சூழ்ந்தவனாக, அம்மா கோண்டாக, ஏசுவுக்காக உருகுபவனாக, அம்மா இறந்த நாளில் பெரிதாகத் துயர் கொள்ளாதவனாக, பாதிரியாராக விரும்பித் தோற்றவனாக, கம்யூனிஸ்டாக, சுமாரான இசைக் கலைஞனாக, தோற்கும் காதலனாக, குஷ்டரோகி தாத்தா கையால் தூக்கிக் கொஞ்சப்பட்டு முத்தமிடப்படும் தனது மகளின் பொருட்டு செய்வதறியாது அருவருப்பில் கூசி குடும்ப வாழ்வைச் சிதைத்துக்கொள்ளும் தகப்பனாக, தனது நிலத்தில் சூழலியல் பிரக்ஞை உருவாகப் போராடும் சேவகனாக, தியானியாக விதவிதமாகப் பரிணாமம் கொள்கிறான் ஜெரி.

ஒவ்வொரு மரணத்துக்குப் பின்னாலும், பிறழ் உறவுக்குப் பின்னாலும், தாளவே இயலாத துயர்மிகு வாழ்வு ஒன்று சித்தரிக்கப்படுகிறது. இத்தனை வாழ்க்கை வழியே 1970ல் தொடங்கி தமிழ் நிலத்தில் நிகழ்ந்த சமூக அரசியல் நகர்வுகள், சென்னையின் பெரம்பூர் ரயில்வே குடியிருப்பு, அங்குள்ள கிறிஸ்துவர் இடையே உள்ள வேறுபாடு, அயநாவரம் மேட்டுத்தெரு, அங்குள்ள ஆங்கிலோ இந்தியர் வாழ்வு, அவர்களுக்கும் பல்லஸ்வரம் ஆங்கிலோ இந்தியர்களுக்கும் உள்ள வேறுபாடு, அவர்கள் மெல்லக் கரைந்து மறைந்தமை, சென்னை கண்ட வேலையில்லாத் திண்டாட்டம், பெருகிய பேச்சுலர் வாழ்க்கை முறை எனப் பல்வேறு மாற்றங்கள் ஊடாகச் சமகாலம் வரை பின்னிப் பிணைந்து விவரிக்கப்படுகிறது நாவல்.

பலநூறு நுண்ணிய சித்திரங்கள் வழியே விவரணை கொள்ளும், ஜெரியின் அகத்தை வடிவமைக்கும், மற்றொரு பிரதான கூறு பீபத்சம். ஜெரியின் கண்ணில் தாய்ப்பாலைப் பிழிகிறாள் சாந்தா அக்கா. அங்கிருந்து வயிறு உப்பி, ஐஸ் கட்டி வழியே உடல் விறைத்து, முகத்தில் பேன் ஊரும் பிணமாகக் கிடக்கும் சாந்தா அக்காவுக்கு வந்துசேருகிறான் ஜெரி. பால்யத்தில் அவன் கண்முன் கனவோ என்று எழுந்து பறக்கின்றன பொன் வண்ணப் பட்டாம்பூச்சிகள். பின்னர் அவனது சோதனைக்கு அவை ஆணிகள் கொண்டு அறையப்படுகின்றன. அவர்களின் மலச்சுமையைச் சுமந்து செல்கிறாள் மூக்கருந்த தோட்டிச்சி. அப்பச்சி குனியும்போது காலிடுக்கில் முட்டை போலப் பிதுங்கித் தொங்கும் அவள் கருப்பை, அய்யனார் கோயிலில் வெட்டப்படும் ஆடுகள், சோதனைச் சாலையில் கிழிபடும் ஓணான், புற்றுக்கட்டி வளர்ந்து அதை உடல் போலச் சுமந்து திரியும் எலிகள், முதுகெலும்பில் ஓட்டை போட்டு உறிஞ்சப்படும் குருதி, பிறப்புறுப்பில் கேன்சர் கண்ட அம்மா, வாகனம் ஏறி வயிறு கிழிந்து சாகும் அப்பா, காதலியை அணைத்தபடி ரயிலில் உடல் சிதறிச் சாகும் நண்பன், பிணவறையில் அவர்களின் உடல் கிடக்கும் நிலை, யானைக்கால் வியாதி கண்ட கால்கள், நிணமும் குருதியும் வீச்சமுமாக உள்பக்கம் வெளியாகப் புரண்டு நிற்கும் உடல்களின் வரிசைகள். இவற்றுக்கெல்லாம் மேலாக ஜெரி தனது நச்சுயியல் மேற்படிப்பில் காணும் சூழல் சீர்கேடு.

இதற்கு இணையாகவே அவன் முதன்முதலாகப் படிக்கும் காமிக்ஸ் தொடங்கி, பின்னர் வளர்ந்து, ஓஷோ, ஜேகே, ரமணர் என்று தொடர்ந்து, அனுபவங்கள் – இலக்கிய வாசிப்பின் வழியே அவனே கவிஞனாகி அவன் கொள்ளும் யூமா வாசுகி போன்றோரின் நட்புகள், மேல் படிப்பில் அவன் காண நேரும் ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம், வந்தனா சிவா, கிருஷ்ணம்மாள் ஜகன்நாதன் போன்ற ஆளுமைகளும் ஜெரி அகத்தை வடிவமைக்கிறார்கள். இதன் வழியே, ஜெரி அகத்தில் ஒருங்கு திரண்ட கேள்விகள் வழியே, அவன் சென்றடையும் இடமே கொடைக்கானல் போதி ஜிண்டோ மையமும், அதன் வழியே அவன் பெறும் அகவய அனுபவங்களும் தெளிவும்.

ஜெரி நோக்கின் வழியே, அரை நூற்றாண்டு காலச் சென்னையின் வளர்சிதை மாற்றங்களின் ஊடாக, அரசியல், சமூக,கலாச்சார, ஆன்மீக (போதி ஜிண்டோ எனும் மையம் ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் உருவாக்கியது) மாற்றங்கள் ஊடாக, எண்ணிறந்த பாத்திரங்கள் வழியே, அவர்கள் வாழ்வுத் தருணங்கள் வழியே, இவற்றுடன் இணைந்த ஜெரியின் வாழ்வு வழியே, பல நூறு வாழ்வுகளை அறிந்துவிட்டோம் எனும் விகாசத்தை வாசகருக்கு அளிக்கும் வண்ணம் விரியும் இந்தப் புனைவின் வலிமையான அம்சங்கள் இரண்டு.

ஒன்று, ஒட்டுமொத்த உயிர்க்குலத்தையும் ஒன்றெனக் கண்டு, அந்த ஒன்றைச் சூழலியல் சீர்கேடானது கேன்சர் கட்டி போல ஊடுருவி உள்நின்று வளரும் நிலையைச் சித்தரித்தமை. இரண்டு, ஜெரி கொள்ளும் தியான அனுபவங்கள்.

இப்புனைவின் பலவீனமான அம்சம் அதன் வடிவ உருவாக்கத்தில் இருக்கிறது. ஜெரி நோக்கு நிலையில் இருந்து சேவியர் நோக்கு நிலைக்கு இப்புனைவு மாறுவதற்கு கலை ரீதியான (வேறொரு பெர்சப்ஷன் போல) எந்தக் காரணமும் நாவலுக்குள் இல்லை. ஜெரி எனும் நோக்கு நிலையில் நகரும் புனைவு, ஜெரி எனும் ‘தன்மை’ நிலையை நோக்கிப் பெரிதும் நகரக்கூடாது என்ற கவனத்துடன் நிகழ்த்திய செய்நேர்த்தி என்றே சேவியர் நோக்கு நிலைக்குப் புனைவு மாறுவதைக் கொள்ளவேண்டியுள்ளது. அந்த உத்தி இன்றியே நாவலின் மொத்த உணர்வுநிலையும் – கதைசொல்லியின் நோக்கு நிலையால் ‘துருத்தி நிற்கும்’ தன்மை கொண்டுவிடாது – மிகச் சமநிலை கொண்டே விளங்குகிறது.

இந்த நாவலைத் தமிழின் தனித்தன்மை கொண்ட நாவலாக ஆக்கும் கூறுகள் இரண்டு. ஒன்று, தன்னை ஆக்கிய அனைத்து ஆற்றல்களாலும் கைவிடப்பட்ட தனி மனிதனின் இருத்தலியல் வாதைப் புலம்பல்கள் கொண்ட நவீனத்துவ ஆக்கங்களைக் கடந்து, தெருமுனை பச்சை டப்பாவில் சென்று சேரவேண்டிய பின்நவீனக் கோட்பாட்டு ரீதியான வாழ்க்கை உளறல் புனைவுகளைத் தாண்டி, இன்று இப்போது இந்த நாவல் பேசும் உண்மை. உயிர்க்குலம் அனைத்தும் ஒன்றே என்று சொல்லும் அந்த இனிய உண்மை.

இரண்டு, இந்த நாவல் கட்டமைக்கும் வாழ்க்கை குறித்த நோக்கு. துக்கம் மூன்று நிலைகள் கொண்டது என்கிறது பௌத்தம். முதல் நிலை சுயத்தால் விளைவது. அப்படி ஒன்று இருப்பதாக அது தன்னை முன்வைப்பதால் விளைவது. இரண்டாம் நிலை உடலால் விளைவது. பிறப்பு, பசி, காமம், நோய், முதுமை, சாவு எனும் நிலைகளால் விளைவது. மூன்றாம் நிலை வாழ்வால் சமூக சூழலால் கலாச்சார அசைவுகளால் விளைவது. இந்த மூன்றுமே நிறை நிலையில் இல்லை. ஆகவேதான் அது நிலையற்றது. ஆகவேதான் அது மாறிக்கொண்டே இருக்கிறது. ஆகவேதான் அது சாரமற்றது. இந்நிலையை உணராதிருப்பதே துக்கம்.

துக்கம் உண்டு. துக்க நிவர்த்தி உண்டு. துக்க நிவர்த்திக்கு வழியும் உண்டு.

அதையே இப்புனைவு நாவலுக்குள் தன்னைச் சூழலுக்கு ஏற்ப வண்ணம் மாறி தகவமைத்துக்கொள்ளும் அந்துப்பூச்சி வாழ்வைச் சித்தரித்துச் சொல்கிறது.

பௌத்தத்தில் மனிதன் அனுபவிக்கும் இன்பம் குறித்த ஒரு உருவகக்கதை உண்டு. பள்ளம் ஒன்றில் விழுந்த மனிதன் பிடித்துத் தொங்கும் கிளையில் பாம்பு. கீழே வெள்ளம், அதில் முதலைகள். மேலும் கீழும் சாவு. அக்கணம் அவன் நாவில் சொட்டுகிறது கொம்புத் தேன்துளி. அந்தச் சூழலில் அந்த மனிதனுக்கு தேன் அளிக்கும் ருசி சூழலை மறக்கச் செய்வதாக இருக்கிறது. இப்புனைவின் மொத்த வாழ்வுச் சித்தரிப்புகள் இடையே வரும் பாஷா குறும்புகள், ராவுத்தர் பேசும் அழகு தமிழ் போன்ற தேன் தருணங்களை இந்த உருவகக் கதைக்கு ஒப்புசொல்ல முடியும்.

நவீன மெய்யியல் தேட்டம் விரிந்து பரவும் களங்களான தியானம் மரபியல், மூளை நரம்பியல், சூழலியல், உயிர் வலைப் பின்னல், அனைத்தையும் கொண்டு துக்கத்தை விவாதிக்கும், துக்க நிவர்த்தி உண்டு என்று நம்பிக்கை சொல்லும் இப்புனைவு சித்தரித்துக் காட்டும் வாழ்க்கைக்கு ஒரே ஒரு ருசிதான். அது துக்க ருசி.

*

நூல்: வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம், தமிழினி வெளியீடு, விலை ரூ.550