இரவு பத்து மணி. தோட்டம் முழுதும் பௌர்ணமி பொலிந்தது. ஷூமியின் பாட்டி மர்ஃபா மிஹலோவ்னா கேட்டுக்கொண்டதால் ஷூமியின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாலை வழிபாட்டுக் கூட்டம் அப்போதுதான் நிறைவடைந்தது. தோட்டத்துக்குச் சென்ற நாடியா இரவு உணவுக்காக மேஜை தயாராக இருப்பதையும் பேரழகான பட்டாடையில் பாட்டி ஆரவாரத்துடன் வளையவருவதையும் பார்த்தாள். மாவட்டத் தலைமைத் திருக்கோயிலின் தலைமைப் பாதிரியான திரு. ஆண்ட்ரே, நாடியாவின் அம்மா, நீனா இவனோவாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே நின்றிருந்த அவருடைய மகன் ஆண்ட்ரே ஆண்ட்ரிச் அவர் பேசுவதைக் கூர்ந்து கவனித்தான். ஜன்னலின் ஊடாகத் தெரிந்த அந்தி ஒளியில் நீனா இவனோவா ஏனோ மிக இளமையாகத் தெரிந்தாள்.
தோட்டம் குளிர்ச்சியாகவும் சலனமின்றியும் இருந்தது. கறுத்த நிழல்கள் அசைவின்றித் தரையில் கிடந்தன. நெடுந்தொலைவில் எங்கிருந்தோ தவளைகள் கூச்சலிடுவது கேட்டது. இளவேனிலின் இனிய உணர்வு காற்றில் பரவியது. பாவங்கள் நிரம்பிய, பலவீனமான மனிதர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக வசந்தம் திகழ்கிறது. மர்மமும் அழகும் செழிப்பும் தூய்மையும் நிறைந்த அது, நெடுந்தொலைவில் வானுக்குக் கீழே காடுகளிலும், வயல்வெளிகளிலும், மரங்களின் உச்சியில் முகை விரிப்பதைக் கற்பனை செய்து பார்க்கும் ஆசை ஒருவருக்கு ஏற்படலாம். காரணமேதுன்றி அவருக்கு அப்போது அழவும் தோன்றலாம்.
நாடியாவுக்கு ஏற்கனவே இருபத்து மூன்று வயதாகிறது. தன் பதினாறு வயதிலிருந்து தன் திருமணம் குறித்து உணர்வு பொங்க கனவு கண்ட கொண்டிருந்தவளுக்கு இப்போதுதான் ஆண்ட்ரே ஆண்ட்ரிச்சுடன் நிச்சயமாகியிருக்கிறது. அவளுக்கு அவனைப் பிடித்திருந்தது. திருமணம் ஜூலை ஏழு அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவளுடைய மனதில் மகிழ்ச்சியே இல்லை, சரியான தூக்கம் இல்லை, அவளுடைய உற்சாகம் முழுதுமாக வடிந்துவிட்டருந்தது. திறந்திருந்த சமையலறை ஜன்னலின் வழியே பணியாட்கள் வேகமாகப் போய் வரும் சலசலப்பும், உணவு மேஜையில் பயன்படுத்தப்படும் கத்திகள் உரசுவதில் ஏற்படும் கடகட ஓசையும், வேகமாக இழுத்து மூடப்படும் தானியங்கிக் கதவின் ஓசைகளும் கேட்டன. பழுப்புச் சர்க்கரையில் ஊறி மிருதுவான செர்ரிப் பழங்கள் வறுத்த வான்கோழியின்மீது வைக்கப்பட்டிருந்தன. அதன் வாசம் அடித்தது. தன் வாழ்நாள் முழுவதும் இவ்வாறே இருக்கப் போவதாக அவளுக்கு ஏனோ அந்த நொடியில் தோன்றியது.
யாரோ வீட்டிலிருந்து வெளியே வந்து படிகளில் நிற்பது தெரிந்தது. எல்லோராலும் சாஷா என்று அழைக்கப்படும் அலெக்சாண்டர் டிமொஃபயிட்ச். பத்து நாட்களுக்கு முன் மாஸ்கோவில் இருந்து வந்தவன் அந்த வீட்டில் அவர்களுடன் தங்கியிருந்தான். மரியா பெட்ரொவ்னா என்றொரு ஏழை விதவைப் பெண் பாட்டிக்கு தூரத்துச் சொந்தம். நோய்வாய்ப்பட்டு நோஞ்சானான உடலுடன் எதாவது உதவி கேட்டு அந்த வீட்டுக்கு அவள் அடிக்கடி வந்து போவதுண்டு. அவளுக்கு ஷாஷா என்று ஒரு மகன் இருந்தான். அவன் கலைத் திறமையுள்ளவன் என்று எப்படியோ அனைவரும் நம்பினர். சிறிது காலம் கழித்து அவனுடைய அம்மா இறந்துவிட்டாள். அவளுடைய ஆத்மா சாந்தியடையவேண்டும் என நினைத்த நாடியாவின் பாட்டி அவனை மாஸ்கோவில் உள்ள கொமிசொரௌஸ்கி பள்ளிக்கு அனுப்பினாள். இரண்டாண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து ஓவியப் பள்ளிக்குச் சென்றவன், பதினைந்து ஆண்டுகளை அங்கு கழித்தபின் கட்டிடக்கலைப் பிரிவில் நடந்த தேர்வைப் போராடி வென்று வெளியேறினான். ஆனாலும் அவன் அந்தத் துறையில் வல்லுநர் ஆகாமல் அச்சுப் பத்திரிகை வெளியிடும் ஒருவரிடம் பணியில் சேர்ந்தான். ஏறத்தாழ ஒவ்வொரு வருடமும் கடும் உடல்நலக் குறைவுடன் இங்கு வருபவன் நாடியாவின் பாட்டியுடன் தங்கியிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு உடல்நலம் தேறியபின் திரும்பிச் செல்வான்.
மேலிருந்து கீழ் வரை பூட்டப்பட்ட பொத்தான்களுடனான நீண்ட அங்கி அணிந்திருந்தவனுடைய கான்வாஸ் காற்சட்டை நைந்து போயிருந்ததுடன் அதன் கீழ்ப் பகுதியில் இருந்த மடிப்புகள் கசங்கிக் காணப்பட்டன. சட்டையோ சலவை செய்யப்படாமல் இருந்தது. மொத்தத்தில் பளிச்சென்ற தோற்றத்துடன் அவன் காணப்படவில்லை. மெலிந்த உடலும் பெரிய கண்களும் நீண்ட மெல்லிய விரல்களும் கறுத்த தாடியுமாக அவன் அழகாகத் தெரிந்தான். அவன் ஷுமின்சில் இருந்தபோது அந்தக் குடும்பத்தின் உறுப்பினர் போலவே காட்சியளித்தான். அது அவனுடைய சொந்த வீடு போலவே இருந்தது. அவன் அங்கிருந்தபோது தங்கியிருந்த அறை பல வருடங்களாக சாஷாவின் அறை என்றே அழைக்கப்பட்டுவந்தது. படிகளில் நின்றுகொண்டிருந்தவன் நாடியாவைப் பார்த்ததும் அவளை நோக்கிச் சென்றான்.
“இந்த இடம் அருமையாக இருக்கிறது” என்றான்.
“ஆமாம். இது மிக அருமையான இடம்தான். நீங்கள் இலையுதிர் காலம்வரை இங்கு தங்கியிருக்கவேண்டும்”
ஆமாம். அப்படித் தான் ஆகப் போகிறது. நான் செப்டம்பர் மாதம்வரை உங்களோடு தங்கியிருக்கவேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றவன் காரணமின்றிச் சிரித்தபடி அவளுக்கருகே அமர்ந்தான்.
நாடியா “நான் இங்கே அமர்ந்து அம்மாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பார்வைக்கு அவள் அவ்வளவு இளமையாகத் தெரிகிறாள். அம்மாவிடம் சில குறைகள் இருந்தாலும் அவள் மிக அரிதான பெண்மணி” என்றாள்.
“ஆமாம். அவள் மிகச் சிறந்தவள். ஒருவகையில் உன் அம்மா மிக இனிமையானவள். ஆனால்…. நான் இதை எப்படி சொல்வது? இன்று அதிகாலையில் நான் சமையலறைக்குச் சென்றபோது நான்கு பணியாளர்கள் அங்கு தரையில் படுத்துக் கிடப்பதைப் பார்த்தேன். படுக்கைகளோ, படுக்கையின் மீது இடுவதற்கென பழந் துணிகளோ இல்லை. கடும் துர்நாற்றம், பூச்சிகள், வண்டுகள் ….இவை அனைத்துமே இரண்டு வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தனவோ அதே நிலைதான் இன்றுமிருக்கிறது. ஒரு மாற்றமும் இல்லை. பாட்டியைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், என்ன சொல்வது….கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும். பாட்டியிடமிருந்து இதைத்தவிர நாம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்? ஆனால் உன் அம்மா ஃபிரெஞ்சு பேசுகிறாள். அத்துடன் நாடகங்களிலும் நடிக்கிறாள். அவளுக்கு இதெல்லாம் புரியும் என்று தான் இங்குள்ள எல்லோரும் நினைப்பார்கள்.”
யாரிடம் பேசினாலும் நோயால் உருக்குலைந்து கிடந்த நீளமான தன் இரண்டு விரல்களை அவர்களின் முன்னே நீட்டியபடி பேசுவது சாஷாவின் வழக்கம். இப்போதும் அவன் அவ்வாறே தன் விரல்களை நாடியாவை நோக்கி நீட்டிக் கொண்டே பேசினான்.
“பழக்கம்விட்டுப் போனதில் இப்போது இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இங்கு எப்போதும் யாருமே எதுவுமே செய்வதில்லை. உன் அம்மா நாள் முழுக்க மகாராணி போல நடை பயின்றுகொண்டிருப்பாள். பாட்டியும் எதுவும் செய்வதில்லை. நீ மட்டும் என்ன? அப்புறம்….உன் ஆண்ட்ரே ஆண்ட்ரீச்சும் எதையும் செய்வதில்லை” என்றான்.
போன வருடம், அதற்கு முந்தைய வருடம், அதற்கும் முந்தைய வருடம் எனப் பல முறை அவன் இதைச் சொல்வதை நாடியா கேட்டிருக்கிறாள். சாஷாவால் இதைத்தவிர வேறெந்தக் குறையும் கூறமுடியாது என்பதும் அவளுக்குத் தெரியும். அவன் இப்படிப் பேசுவது முன்பெல்லாம் அவளுக்குச் சிரிப்பூட்டுவதாக இருந்தது. ஆனால் அதுவே இப்போது அவளுக்கு எரிச்சலூட்டியது.
“இதெல்லாம் அரதப் பழசு. காலத்துக்கும் இதைக்கேட்டுக் கேட்டு எனக்கு அலுத்துவிட்டது. நீ ஏதாவது புதிதாக முயற்சிக்கலாமே” என்றாள்.
அவன் சிரித்தபடியே எழுந்து கொண்டான். அவர்கள் இருவரும் வீட்டை நோக்கி ஒன்றாக நடந்தார்கள். உயரமாகவும் அழகாகவும் நல்ல உடற்கட்டுடனும் இருந்தவள் அவனருகே இன்னும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் அழகிய ஆடையுடனும் தோற்றங்காட்டினாள். இதை அவள் உணர்ந்திருந்ததால் அவனை நினைத்து வருத்தமடைந்தாள். அது மட்டுமின்றி அது ஒரு விகாரமான விஷயமாக அவளுக்குப் பட்டது.
“நீ தேவையற்றதையெல்லாம் பேசுகிறாய். நீ என் ஆண்ட்ரேவைப் பற்றி பேசினாய். ஆனால் உண்மையில் உனக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது” என்றாள்.
“என் ஆண்ட்ரே….. இல்லையில்லை….. உன் ஆண்ட்ரே. இப்படிப் பேச வைப்பது உன் இளமைப் பருவம்தான்..! அதற்காக நான் வருத்தப்படுகிறேன்”
அவர்கள் உணவருந்தும் அறைக்குள் நுழைந்தபோது இரவு உணவுக்காக அனைவரும் முன்பே அங்கு கூடியிருந்தனர். கனத்த உடல்வாகும் அடர்த்தியான புருவங்களும் உதட்டின் மீது சிறிய பூனைமயிருடனும் தோற்றமளித்த பாட்டி சத்தமாக பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேசிய தொனியிலிருந்தும் தோரணையில் இருந்தும் அவள்தான் அந்த வீட்டின் முக்கியமான நபர் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஊர்ச் சந்தையில் நிறைய கடைகள், தூண்கள் வைத்துக் கட்டப்பட்ட பழங்கால வீடு ஒன்று ஆகியவை அவளுக்குச் சொந்தமாக இருந்தன. ஆனாலும் அழிவிலிருந்து தன்னைக் காக்குமாறு அவள் தினம் இறைவனிடம் வேண்டுவாள். அப்படி வேண்டும்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழியும். இப்போது உணவு மேஜையருகே பாட்டியின் மருமகளும் நாடியாவின் அம்மாவுமான, நீனா இவனோவா அமர்ந்திருந்தாள். இறுக்கமான மார்க்கச்சையும், முகத்தில் நீண்டு தொங்கும் சங்கிலி வகையிலான கண்ணாடியும் அணிந்திருந்த வெண்ணிறத் தலைமுடியுடைய நீனாவின் எல்லா விரல்களிலும் வைர மோதிரங்கள் மின்னின. ஏதோவொரு வேடிக்கையான விஷயத்தைச் சொல்லப் போகிற பாவனையில் எப்போதும் தோன்றுகிற பொக்கை வாயுடைய பாதிரி ஆண்ட்ரேயும், நல்ல உடல்வாகும் கலைஞர்களையும் நடிகர்களையும் போல சுருட்டை முடியும், அழகான தோற்றமுங்கொண்ட அவருடைய மகன் ஆண்ட்ரே ஆண்ட்ரிச்சும் அங்கிருந்தனர். அவர்கள் அனைவரும் ‘அறிதுயில்’ குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.
பாட்டி, “இங்கிருந்தால் நீ ஒரே வாரத்தில் நலம் பெற்றுவிடுவாய். என்ன, நீ ஒழுங்காகச் சாப்பிட வேண்டும். பார்ப்பதற்கு படுமோசமாக, எப்படி இருக்கிறாய் பார். உண்மையில் மனந்திருந்திய மைந்தன் அடிக்கடி வருவது போலத்தான் நீ வந்து போகிறாய். அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது” என்றாள் சாஷாவைப் பார்த்து.
பாதிரி ஆண்ட்ரே, மெல்லிய குரலில், “அதுவும் அவனுடைய அப்பாவுக்கு இருந்த மதிப்பையெல்லாம் ஆர்ப்பாட்டமான தன் வாழ்க்கை முறையால் வீணாக்கிய பிறகு” என்றார் புன்னகை பூத்த கண்களுடன். “பயனற்ற விஷயங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதிலேயே தன் பெரும்பகுதி வாழ்வை சாஷா கழித்துவிட்டான்” என்றும் கூறினார்.
“எனக்கு என் அப்பாவைப் பிடிக்கும்” என்றபடி தன் தந்தையின் தோள்களைத் தொட்டவன், “அவர் ஒரு அற்புதமான மனிதர். மனத்துக்கு மிக நெருக்கமான ஒரு மனிதர்” என்றான் ஆண்ட்ரே அண்ட்ரீச்.
எல்லோரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தனர். எதிர்பாராதவிதமாகத் திடீரென சத்தமாகச் சிரித்த சாஷா, உடைகளின்மீது உணவுப் பொருட்கள் சிந்திவிடாதிருக்க மேஜையில் வைக்கப்படும் சிறு கைக்குட்டை வகைத் துணியைத் தன்னுடைய வாயின்மீது வைத்து அழுத்திக் கொண்டான்.
பாதிரி ஆண்ட்ரே, நீனா இவனோவாவைப் பார்த்து, “அப்படியானால் அறிதுயில் மீது உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?” என்றார்.
தீவிரமான முகபாவத்துடன், “அப்படி உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் மர்மமான, நம் அறிவுக்கெட்டாத பல விஷயங்கள் இயற்கையில் உள்ளன என்பதை நிச்சயமாக என்னால் சொல்லமுடியும்” என்றாள்.
“மர்மமான விஷயங்களை மதம் மிகத் துலக்கமாகச் சுருக்கிவிடுகிறது என்றாலும், நீ சொல்வதை நான் முழுமையாக ஏற்கிறேன்” என்றார்.
கொழுத்த வான்கோழி பரிமாறப்பட்டது. பாதிரி ஆண்ட்ரேவும் நீனா இவனோவாவும் தங்கள் உரையாடலைத் தொடர்ந்தனர். அவளுடைய விரல்களில் இருந்த மோதிரங்கள் ஜொலித்தன. பிறகு அவளுடைய கண்களுக்குள் நீர்த்துளிகள் ஒளிர்ந்தன.
இப்போது அவள் உற்சாகத்துடன், “நான் உங்களுடன் வாக்குவாதம் செய்ய நினைக்கவில்லை என்றாலும் தீர்வு காண இயலாத பல புதிர்கள் வாழ்வில் உள்ளன என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்றாள்.
“அப்படி ஒன்றுகூட இல்லை என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற முடியும்.”
இரவு உணவுக்குப் பின்ஆண்ட்ரே ஆண்ட்ரிச் வயலின் வாசிக்க, அவனுடன் சேர்ந்து நீனா இவனோவா பியானோ வாசித்தாள். பத்து வருடங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் பட்டம் பயின்றவனான ஆண்ட்ரே ஆண்ட்ரிச் அதுவரை எந்தப் பதவியும் வகித்ததில்லை. சொல்லிக்கொள்ளும்படியான எந்தப் படைப்பையும் நிகழ்த்தியதில்லை. தர்ம காரியங்களுக்காக நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் மட்டுமே அவ்வப்போது வாசித்து வந்தான்; அந்த ஊர் அவனை இசைக் கலைஞன் என்று கருதியது.
அவன் வாசித்ததை அனைவரும் அமைதியாகக் கவனித்தனர். மேஜையின் மீதிருந்த அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட தேநீர்க் கலன் சத்தமிடாது கொதித்துக்கொண்டிருந்தது. சாஷா மட்டும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தான். பனிரெண்டு மணி அடித்தது. அதே நொடியில் வயலினின் ஒரு கம்பி எதிர்பாராமல் முறிந்துவிட்டது. அனைவரும் அதைக் கேட்டு சிரித்தனர். பிறகு இரைந்து பேசியபடி அங்கிருந்து விடைபெறத் தொடங்கினர்.
தன் வருங்காலக் கணவரை வழியனுப்பிவைத்த பிறகு நாடியா மாடியில் இருந்த தன் அறைக்குச் சென்றாள். அவளுடைய அம்மாவின் அறையும் அங்கு தான் இருந்தது (பாட்டி கீழ்த் தளத்தை ஆக்ரமித்திருந்தாள்). உணவு உண்ணும் அறையின் விளக்குகளை அணைத்துக் கொண்டிருந்தனர். அப்போதும் சாஷா அங்கு அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டிருந்தான். மாஸ்கோ சென்றதில் இருந்து அதே பாணியில் அவன் எப்போதுமே தேனீர் அருந்துவதற்கு அதிக நேரம் செலவிட்டான். ஏறத்தாழ ஏழு குவளைகள் தேனீரை ஒரே சமயத்தில் அவன் குடிப்பதுண்டு. நாடியா தன் உடைகளைக் களைந்து படுக்கைக்குச் சென்று வெகுநேரமான பின்னும் பணியாளர்கள் பொருட்களை அப்புறப்படுத்திச் சீர்படுத்தும் ஓசையும் பாட்டி கோபமாகப் பேசும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. இறுதியில் அனைத்தும் ஓய்ந்து அடங்கினாலும் சாஷா அடிக் குரலில் இருமும் சத்தம் மட்டும் அவனுடைய அறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தது.
2
நாடியா கண்விழித்தபோது அதிகாலை 2 மணி இருக்கும். மெல்ல விடியத் தொடங்கியிருந்தது. எங்கோ தொலைவில் இரவுக் காவலாளி தரையில் தட்டும் ஓசை கேட்டது. அவளுக்கு அதற்குமேல் உறக்கம் வரவில்லை. அவளுடைய படுக்கை மிக மிருதுவாகவும் அதே சமயத்தில் அசௌகரியமாகவும் இருந்தது. படுக்கையின்மீது அமர்ந்த நாடியா தீவிரமான சிந்தனையில் மூழ்க ஆரம்பித்தாள். இது ஒவ்வொரு மே மாதமும் நடப்பதுதான். அவளுடைய எண்ணவோட்டம் எப்போதும் நிகழ்வது போலவே பயனற்ற அதே விஷயங்களையே தொடர்ந்து சுற்றிச் சுழன்றது. ஆண்ட்ரே தன்னுடன் நெருங்கிப் பழகத் தொடங்கியது, அவள்மீதான தன் விருப்பத்தை அவளிடம் தெரிவித்தது, அவள் அதை ஏற்றுக்கொண்டது, பிறகு அவனுடைய கனிவான சுபாவத்தையும் புத்திசாலித்தனத்தையும் மெல்ல மெல்ல அறிந்தது என அதே விஷயங்களை அவளுடைய மனம் அசைபோட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது, திருமணத்துக்கு மிஞ்சிப் போனால் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் சூழலில் இனம்புரியாத ஏதோ குழப்பமும், தன்னை அடக்கி ஒடுக்கப்போகிற ஏதோவொரு விஷயம் தன்னை எதிர்நோக்கி இருப்பதாகவும் நினைத்து அச்சமுற்ற அவளுடைய மன அமைதி குலையத் தொடங்கியிருந்தது.
இரவுக் காவலாளி “தட் தட், தட் தட்” என்று தட்டும் சத்தம் இப்போது மறுபடி மென்மையாகக் கேட்டது.
அங்கிருந்த பழங்கால ஜன்னலின் வழியே தோட்டமும் சிறிது தொலைவில் பனியில் மயங்கி உயிர்ப்பற்றுக் கிடந்த வெளிர் சிவப்பு நிற நறுமணம் வீசும் மலர்ப் புதர்களும் அவள் கண்களில் தட்டுப்பட்டன. அடர்ந்த வெண்ணிறப் பனிப் படலம் அந்த பூக்களின் மீது மிருதுவாகத் தவழ்ந்து அவற்றை மூட முயற்சித்துக் கொண்டிருந்தது. மரங்களின் மீதிருந்து சேவல்கள் அரைத் தூக்கத்தில் கூவுவது எங்கோ தொலைவில் இருந்து கேட்டது.
“இறைவா, என் இதயம் ஏன் இவ்வளவு பாரமாக இருக்கிறது?”
ஒருவேளை திருமணத்திற்கு முன் எல்லாப் பெண்களுக்கும் இப்படித்தான் இருக்குமோ. இதை எப்படிக் கண்டுபிடிப்பது. இல்லை இது சாஷாவின் பேச்சு ஏற்படுத்தும் தாக்கத்தால் இருக்குமோ? ஆனால் பல வருடங்களாக சாஷா நகல் எடுக்கப்பட்ட ஒரு நூலைப் போல இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறான். அத்துடன் அவன் பேசும்போது அப்பாவியைப் போலவும் விசித்திரமாகவும் தெரிவான். ஆனால் அவனைச் சிந்தனையில் இருந்து ஏன் முற்றிலுமாக என்னால் தூக்கி வீசமுடியவில்லை? இதற்கு என்ன காரணம்?
சிறிது நேரத்தில் வாயிற்காவலாளி தரையில் தட்டிக்கொண்டே அங்கிருந்து கிளம்பிவிட்டான். பறவைகள் ஜன்னலுக்கு கீழே கீச்சிட்டுக்கொண்டிருந்தன. தோட்டத்திலிருந்த பனி மறைந்துவிட்டிருந்தது. இளவேனிற் காலச் சூரிய ஒளியில் அனைத்தும் ஒரு புன்னகையைப் போல ஒளிர்ந்தன. மொத்த தோட்டமும் சூரியக் கதிர்களின் வருடலில் உயிர்த்தெழுந்தன. இலைகளின் மீதிருந்த பனித்துளிகள் வைரத் துகள்களைப் போல் ஒளிவீசின. கவனிப்பாரற்ற அந்தப் பழைய தோட்டம் இப்போது இளமையாகவும் நன்கு அலங்கரிக்கப்பட்டுக், களிப்புடனும் காட்சியளித்தது.
பாட்டி விழித்துவிட்டிருந்தாள். சாஷாவின் மெல்லிய இருமலும், பணியாளர்கள் அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட தேநீர்க் கலத்தை மேஜையில் வைத்துவிட்டு, நாற்காலிகளை நகர்த்தும் ஓசையும் கீழே அமர்ந்திருந்த நாடியாவின் காதுகளில் விழுந்தது. நேரம் நத்தையாக ஊர்ந்தது. நாடியா தோட்டத்தில் வெகுநேரம் நடந்தும்கூட காலைவேளையைக் கடத்துவது சிரமமாக இருந்தது.
கண்ணீர்க் கறை படிந்த முகத்துடன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ஒரு குவளையில் ஏந்தியபடி நீனா இவனோவா அங்கு வந்தாள். அவளுக்கு ஆன்மீகத்தின்மீதும் ஹோமியோபதி மருத்துவ முறையின் மீதும் விருப்பம் இருந்தது. அவள் நிறைய நூல்களை வாசித்து தனக்குத் தோன்றிய சந்தேகங்கள் குறித்துப் பேசுவாள். இவை அனைத்தும் ஒருவித விசித்திரமான முக்கியத்துவம் கொண்டவையாக நாடியாவுக்குத் தோன்றின.
தன் தாயை முத்தமிட்ட நாடியா அவளோடு இணைந்து நடக்கத் தொடங்கினாள். “நீ ஏன் அழுதுகொண்டிருந்தாய் அம்மா?” என்று கேட்டாள்.
“நேற்றிரவு நான் வாசித்த கதையொன்றில் வயதான அப்பாவும் மகளும் இருந்தனர். அந்த முதியவர் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறார். அவருடைய உயர் அதிகாரி அந்த முதியவரின் மகள் மீது காதல் வசப்படுகிறார். அந்தக் கதையை நான் இன்னும் முழுதாக வாசித்து முடிக்கவில்லை. ஆனால் அதிலிருந்த ஒரு பத்தியைப் படித்ததும் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை” என்ற நீனா இவனோவா குவளையில் இருந்த நீரைச் சிறிது அருந்தினாள். பிறகு, “இன்று காலை அதை நினைத்ததும் நான் மறுபடி அழுது விட்டேன்” என்றாள்.
நாடியா தன் அம்மாவிடம், “இப்போதெல்லாம் நான் மிகுந்த மனச் சோர்வுடன் இருக்கிறேன்” என்றவள் சிறிது இடைவெளிவிட்டு “நான் ஏன் இரவுகளில் உறங்குவதே இல்லை?” என்றாள்.
“எனக்குத் தெரியவில்லையே. எனக்கு உறக்கம் வரவில்லை என்றால் நான் என் கண்களை இப்படி இறுக்கமாக மூடிக்கொண்டு அன்னா கரீனா நடந்துபோவதாகவோ, யாரிடமோ பேசுவதாகவோ, அல்லது பழங் காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க எதையாவதையோ நினைத்துப் பார்ப்பேன்…..”
தான் பேசுவது தன் அம்மாவுக்குப் புரியவில்லை என்பதுடன் அவளுக்குப் புரிய வாய்ப்பே இல்லை என்பதையும் நாடியா உணர்ந்தாள். இப்படி அவள் நினைத்தது அவள் வாழ்நாளில் முதல்முறையாக இப்போதுதான் நிகழ்ந்தது. இது அவளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. எங்காவது ஓடிப் போய் ஒளிந்துகொள்ள விரும்பியவள் வேகமாகத் தன் அறையை நோக்கிச் சென்றாள்.
இரண்டு மணிக்கு அவர்கள் உணவு அருந்துவதற்கு அமர்ந்தார்கள். அது ஒரு புதன்கிழமை. உபவாசம் இருக்கும் தினம். ஆகவே காய்கறி சூப், மீன், வேகவைத்த சில தானிய வகைகள் ஆகியவை பாட்டிக்குப் பரிமாறப்பட்டன.
பாட்டியைச் சீண்டுவதற்காக இறைச்சியாலான சூப், காய்கறி சூப் என இரண்டையுமே சாஷா பருகினான். உணவின் இடையிடையே தொடர்ந்து நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய வேடிக்கைப் பேச்சுகள் அத்தனையும் வலிந்து திணிப்பவையாகவும் பெரும்பாலும் அறநெறிகளை வலியுறுத்துபவையாகவும் இருந்தன. அவன் நகைச்சுவையாக ஏதாவது பேசத் தொடங்கு முன் தன்னுடைய மெலிந்த நீண்ட விகாரமான விரல்களை உயர்த்துவான். இதன் விளைவாக அங்கிருந்தவர்களுக்கு அவன் பேசியது நகைச்சுவை உணர்வையே ஏற்படுத்தவில்லை; அவன் மிகுந்த உடல்நலக் குறைவுடன் இருப்பதும் வெகுகாலம் இந்த பூமியில் வாழப் போவதில்லை என்பதும் நினைவுக்கு வந்ததும் அவனுக்காக வருத்தப்பட்டவர்கள், எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடக் கூடிய நிலையில் இருந்தனர்.
உணவுக்குப்பின் உறங்குவதற்காகப் பாட்டி தன் அறைக்குச் சென்றாள். சிறிது நேரம் பியானோ வாசித்த நீனா இவனோவாவும் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
“நாடியா! நான் சொல்வதைக் கேள்! நான் சொல்வதைக் கேளேன்” என்று சாஷா தன் வழக்கமான பிரசங்கத்தை ஆரம்பித்தான்.
ஒரு புராதனமான நாற்காலியில் அவனைவிட்டு வெகுதூரம் தள்ளி அவள் அமர்ந்திருந்தாள். அவன் அந்த அறையின் ஒவ்வொரு மூலையாக மெதுவாக நடந்துகொண்டிருந்தான்.
“நீ மட்டும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தால் எப்படி இருக்கும் தெரியுமா!” என்றான். “தெள்ளிய அறிவுடையவர்களும் புனிதமானவர்களும் மட்டுமே சுவாரசியமானவர்கள். அவர்கள் மட்டுமே இந்த உலகிற்குத் தேவைப்படுகின்றனர். அத்தகைய மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கின்றனரோ அவ்வளவு விரைவில் இறைவனின் ராஜ்ஜியம் இந்த பூமியில் தோன்றும். இந்த நகரத்தின் ஒரு பாறை கூட மிஞ்சியிராமல், அஸ்திவாரம் தொடங்கி அனைத்தும் வெடித்துச் சிதறி, ஏதோ மாயவித்தை நிகழ்ந்தது போல அனைத்துமே மாறிவிடும். அதன் பிறகு இங்கு பிரமாண்டமான வீடுகள், அற்புதமான தோட்டங்கள், அதியற்புதமான நீரூற்றுகள் இவற்றுடன் மேன்மையான மக்களும் இருப்பர். ஆனால் அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. அப்போது தீமை என்பதே இல்லாமல் ஒவ்வொரு மனிதனும் நம்பிக்கை உடையவனாகவும், எதற்காக வாழ்கிறோம் என்ற புரிதல் கொண்டவனாகவும் இருப்பான். யாருமே மக்கள் திரளிடம், அதாவது நாம் இப்போது பயன்படுத்தும் மக்கள் திரள் என்ற சொல்லின் பொருளைக் குறிப்பவர்களிடம் தனக்கான தார்மீக ஆதரவை இறைஞ்சி நிற்கமாட்டான் என்பதே முக்கியமானது. அன்பே நாடியா, செல்லமே, இங்கிருந்து போய்விடு! தேங்கிப் போன, வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் ஏதுமற்றதும், பாவம் சூழ்ந்ததுமான இந்த வாழ்வை நீ வெறுக்கிறாய் என்பதை அனைவருக்கும் தெரிவி. குறைந்தபட்சம் உனக்கு மட்டுமாவது அதை நிரூபி!”
“என்னால் இயலாது சாஷா. நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்”
“ஐயோ, அதுவொரு அபத்தம். அதனால் என்ன பயன்!”
பேசிக்கொண்டே நடந்து தோட்டத்திற்குள் நுழைந்தவர்கள் அதனுள் முன்னும் பின்னுமாக மெல்ல நடந்தபடி தங்கள் உரையாடலைத் தொடர்ந்தார்கள்.
“எது எப்படியானாலும் சரி, அன்பே, வீணாகப் பொழுதைக் கழிக்கும் உன்னுடைய இந்த வாழ்க்கை எவ்வளவு அழுக்கான ஒழுக்கமற்ற ஒன்று என்பதை நீ நிச்சயம் சிந்தித்து உணரவேண்டும். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் கேள். நீ, உன் அம்மா, பாட்டி என யாருமே எதுவுமே செய்யாமல் இருக்கிறீர்கள் என்றால் அதன் பொருள் வேறு யாரோ ஒருவர் உங்களுக்காக உழைக்கிறார்கள் என்பதே. வேறொருவரின் வாழ்வை உங்கள் பசிக்கு நீங்கள் இரையாக்குகிறீர்கள். இது தூய்மையான ஒன்றா என்ன? அது அருவருப்பானது இல்லையா?” என்றான்.
நாடியா, “ஆம். அது உண்மைதான்” என்றும் “தனக்குப் புரிகிறது” என்றும் சொல்ல விரும்பினாள். ஆனால் அவள் கண்களில் நீர் நிறைந்தது. அவளுடைய உற்சாகம் வடிந்துபோய் தனக்குள் ஒடுங்கியவளாகத் தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டாள்.
மாலை நெருங்குகையில் அங்கு வந்த ஆண்ட்ரே ஆண்ட்ரிச் வழக்கப்படி வெகுநேரம் வயலின் வாசித்தான். அவன் பெரும்பாலும் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. வயலின் வாசிப்பது அவனுக்கு மிகப் பிடித்தமான ஒன்றாக இருக்கக் காரணம் அதை வாசிக்கையில் அவன் அமைதியாக இருக்கலாம் என்பதாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. தன் நீண்ட மேலங்கியை அணிந்துகொண்டு பதினோரு மணிக்கு அவன் அங்கிருந்து கிளம்புகையில் நாடியாவை அணைத்து ஆசையுடன் அவள் முகத்திலும் தோள்களிலும் கைகளிலும் முத்தமிடத் தொடங்கினான்.
“இனியவளே! என் மனதை மயக்கும் வித்தை அறிந்தவளே! நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா! என்னால் என் உணர்வெழுச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை” என்று முணுமுணுத்தான்.
பன்னெடுங்காலத்துக்கு முன்பே இச்சொற்களை வேறெங்கோ கேட்டதாகவோ அல்லது படித்துவிட்டு வீசியெறிந்த பழைய நாவல் ஒன்றின் வரிகளாகவோ அவளுக்கு அது தோன்றியது. சாஷா உணவு மேஜையருகே அமர்ந்து தன் ஐந்து நீளமான விரல்கள் தேநீர்க் கோப்பையை விழுந்துவிடாதபடி லாவகமாக ஏந்தியிருக்க, தேநீர் அருந்திக் கொண்டிருந்தான். பாட்டி பொறுமையைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தாள். நீனா இவனோவா நூல் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தாள். இறைவனுடைய படத்தின் முன் எரிந்து கொண்டிருந்த விளக்குச் சுடர் அசைந்து எழுப்பிய சிறு ஓசையைத் தவிர அனைத்தும் அமைதியாகவும் இயல்பு நிலையிலும் இருப்பதாகத் தோன்றியது. இரவு வணக்கம் சொல்லிவிட்டு படுக்கையறைக்குச் சென்று கட்டிலில் படுத்த நாடியா உடனே உறங்கிப் போனாள். ஆனால் முந்தைய நாளைப் போலவே விடிவதற்கு முன்பே அவளுக்கு விழிப்புவந்துவிட்டது. அவளுடைய இதயம் அமைதியின்றி ஒடுக்கப்பட்ட ஏதோவொரு உணர்வால் தவித்தது. தன் தலையை முழங்கால்களில் முட்டுக் கொடுத்தபடி அமர்ந்தவள் தன் திருமணத்தையும் தன் வருங்காலக் கணவனையும் குறித்து சிந்தித்தாள். தன்னுடைய தாய்க்குத் தன் தந்தையின்மீது காதல் இல்லை என்பதும், இப்போது தன் கைவசம் எதுவும் மிஞ்சியிராமல் தன் மாமியாரை அண்டிப் பிழைக்கும் சூழலில்தான் இப்போதும் தன் அம்மா இருப்பதும் ஏனோ அவளுக்கு நினைவுக்கு வந்தது. இவ்வளவு நாட்களாக அம்மாவைச் சிறப்பானவளாகவும் அரிதானவளாகவும் பார்த்தவள் உண்மையில் அவளொரு எளிய, சாதாரண, மகிழ்ச்சியற்ற பெண்ணாக இருந்ததை எப்படி இவ்வளவு காலமும் கவனிக்காமல் போனோம் என்று யோசித்தாள். எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்தும் நாடியாவால் அதற்குரிய காரணத்தைக் கற்பனை செய்யவே இயலவில்லை.
சாஷா உறங்காமல் இருமிக் கொண்டிருக்கும் ஓசை கீழ்த் தளத்தில் இருந்து கேட்டது. அவன் விசித்திரமான மனநிலையுடைய ஒரு அப்பாவி என்று நாடியா நினைத்தாள். அவனுடைய கனவுகள், அற்புதமான தோட்டங்கள், அதியற்புதமான நீரூற்றுகள் என அனைத்திலும் ஏதோ அபத்தம் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. ஆனால் அவனுடைய வெகுளித்தனத்துக்கும் இந்த அபத்தமான எண்ணங்கள் ஆகியவற்றுக்கும் இடையிலும் அழகான ஏதோவொன்றும் இருக்கவே செய்தது. பல்கலைக்கழகத்திற்குக் கல்வி பயிலச் செல்லும் வாய்ப்பை நினைத்ததும் அவளுடைய இதயம் மகிழ்ச்சியில் ஜில்லிட்டது. அவள் நெஞ்சு களிப்பாலும் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பாலும் பொங்கியது.
“ஆனால் அதைப் பற்றி யோசிப்பது நல்லதில்லை. நல்லதே இல்லை. நான் அதைப் பற்றி சிந்திக்கக் கூடாது” என்று கிசுகிசுத்தாள்.
எங்கோ தொலைவில் இரவுக் காவலாளி ஏற்படுத்தும் “தட் தட்” ஓசை கேட்டது.
3
ஜூன் மாதத்தின் இடையில், அதற்கு மேலும் அங்கிருப்பதில் திடீரெனச் சலிப்படைந்த சாஷா மாஸ்கோவுக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்தான்.
“என்னால் இந்த ஊரில் இருக்கவேமுடியாது. தண்ணீர் விநியோகம் இல்லை. கழிவுநீர்க் குழாய்கள் இல்லை. சமையலறையில் இருந்து வரும் படுமோசமான துர்நாற்றத்தால் இந்த வீட்டில் உணவருந்தவே எனக்கு குமட்டுகிறது….” என்று வருத்தத்துடன் சொல்லிக்கொண்டே போனான்.
கிசுகிசுப்பான குரலில், “ஏழாம் தேதியன்று திருமணம் நடக்கவுள்ளது. அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கொள், ஊதாரிப் பிள்ளையே!” என்று பாட்டி அவனை ஏற்றுக்கொள்ளச் செய்ய முயற்சித்தாள்.
“எனக்கு விருப்பம் இல்லை.”
“நீ செப்டம்பர் வரை எங்களுடன் தங்குவதாகச் சொன்னாயே?”
“ஆனால் இப்போது எனக்கு விருப்பமில்லை. எனக்கு சில வேலைகள் உள்ளன” என்றான்.
கோடை, மேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியாக இருந்தது. மரங்கள் ஈரமாக இருந்தன. தோட்டத்தில் இருந்த அனைத்தும் சோர்வாகவும் கவர்ச்சியற்றும் இருந்தன. இக்காட்சிகள் எவரையுமே தம் வழக்கமான பணிச் சூழலுக்குள் தள்ளிவிட்டுவிடக் கூடியதாக இருந்தன. அவளுக்கு முன்பின் அறிமுகமற்ற பெண் குரல்கள் கீழ்த்தளத்திலிருந்தும் மேற்தளத்திலிருந்தும் கேட்டன. பாட்டியின் அறையில் இருந்து தையல் இயந்திரத்தின் தடதட சத்தம் கேட்டது. அவர்கள் மணப்பெண்ணுக்கான உடைகளை வடிவமைப்பதற்காகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தனர். கம்பளி வகையில் மட்டுமே நாடியாவுக்கு ஆறு மேலங்கிகள் அளிக்கப்பட்டிருந்தன. பாட்டியின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் விலை மலிவான அங்கியின் விலையேகூட முந்நூறு ரூபில்கள் இருக்கும். இந்த வீண் பகட்டு சாஷாவை எரிச்சலடைய வைத்தது. வெளியே வர விருப்பமின்றி அவன் தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். ஆனால் அனைவரும் அவனை அங்கு தங்கியிருக்கும்படி வற்புறுத்தினர். ஜூலை முதல் தேதிவரை அங்கிருப்பதாக அவன் உறுதியளித்தான்.
காலம் வேகமாகக் கடந்தது. புனித பீட்டர் தினத்தன்று உணவருந்திய பின்னர் ஆண்ட்ரே ஆண்ட்ரீச் நாடியாவை அழைத்துக்கொண்டு மாஸ்கோ சாலையில் அவர்கள் சில காலத்திற்கு முன் வாங்கிக் குடியேறத் தயார் நிலையில் இருந்த வீட்டை மறுபடி ஒருமுறை சென்று பார்த்தான். அது இரண்டு தளங்கள்கொண்ட வீடானாலும் மேல் தளம் மட்டுமே வீட்டுக்குத் தேவையான பொருட்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கூடத்தின் தரை பளபளப்பாக வண்ணம் பூசப்பட்டு மரவேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வியன்னாவில் தயாரான நாற்காலிகள், ஒரு பியானோ, வயலின் வைப்பதற்கென ஒரு நிலையடுக்கு ஆகியன அங்கிருந்தன. கூடம் முழுதும் வண்ணச் சாயத்தின் வாசம் நிறைந்திருந்தது. சுவரின் மீது தொங்கிக்கொண்டிருந்த தங்கச் சட்டமிடப்பட்ட பெரிய ஓவியத்தில் நிர்வாணப் பெண் ஒருத்தியும் அவளுக்கருகே கைப்பிடி உடைந்த கத்தரிப் பூ வண்ண பூச் சாடி ஒன்றும் காணப்பட்டன.
“இது ஷிஸ்மாட்செவ்ஸ்கி வரைந்த எழில் மிகுந்த ஓவியம்” என்றபோது ஆண்ட்ரே ஆண்ட்ரீச் வெளிப்படுத்திய பெருமூச்சில் மரியாதை வழிந்தது.
வரவேற்பறையில் வட்ட மேஜையொன்றும், பளீர் நீல சோஃபாவும், திண்டுகள் இணைக்கப்பட்ட சாய்வு நாற்காலிகளும் இருந்தன. பாதிரிகள் அணியும் வெல்வெட் தொப்பியுடனிருந்த ஆண்ட்ரேவின் மிகப் பெரிய புகைப்படமொன்று சோஃபாவுக்கு மேலே சுவரில் தொங்கியது. பிறகு அவர்கள் உணவுக் கூடத்துக்குச் சென்றனர். அங்கு உணவுத் தட்டுகள் அடுக்கிவைக்கும் நிலையடுக்கு ஒன்று இருந்தது. அதன்பின் இரண்டு கட்டில்கள் அருகருகே இடப்பட்டிருந்த படுக்கையறைக்குள் நுழைந்தனர். படுக்கையறை என்பது எப்போதுமே மிக இணக்கமான ஒரு இடமாக இருக்கவேண்டும் என்பது போலவும் அதைத் தவிர வேறேதும் அங்கு நிகழச் சாத்தியமில்லை என்பது போலவும் அதன் அலங்காரம் அமைந்திருந்தது. ஆண்ட்ரே ஆண்ட்ரிச் நாடியாவின் இடுப்பை அணைத்தபடி அவளை ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்றான். அவள் பலவீனமாகவும் தன் மனசாட்சி உறுத்துவது போலவும் உணர்ந்தாள். அந்த வீட்டின் அறைகள், படுக்கைகள், சாய்வு நாற்காலிகள் என அங்கிருந்த அனைத்தையும் அவள் வெறுத்தாள். நிர்வாணப் பெண்ணின் ஓவியத்தைப் பார்த்து அவளுக்குக் குமட்டியது. ஆண்ட்ரே மீது தனக்கிருந்த காதல் தீர்ந்துவிட்டது இப்போது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அல்லது ஒருவேளை அவனை இதுவரை காதலிக்கவே இல்லையா? ஆனால் இதையெல்லாம் எப்படி, யாரிடம் என்னவென்று சொல்வது என்று அவளுக்குப் புரியவில்லை. இரவும் பகலும் யோசித்தும் அவளுக்குப் புரிபடவேயில்லை. ஆண்ட்ரே அவளுடைய இடுப்பைத் தன் கைகளால் வளைத்தபடி மிகப் பிரியத்துடனும் மிக கண்ணியமாகவும் பேசிக்கொண்டு தன்னுடைய அந்த வீட்டை மகிழ்ச்சியுடன் உலா வந்தான். ஆனால் அவளுக்கோ முட்டாள்தனமான, பண்பற்ற, சகித்துக்கொள்ள முடியாத அளவு ஆபாசத்தைக் தவிர வேறு எதுவும் அங்கு கண்ணுக்குத் தெரியவில்லை. தன்னுடைய இடுப்பைத் தழுவியிருந்த அவனுடைய கை இரும்பு வளையம் போலக் கடினமாகவும் உணர்ச்சியற்றும் இருந்ததாக அவளுக்குத் தோன்றியது. அங்கிருந்து தப்பித்து ஓடிப் போகிற, வெடித்துக் கதறுகிற, அங்கிருந்த எதோவொரு சாளரத்தின் மீது பாய்ந்து வெளியே குதித்துவிடுகிற மனநிலையில்தான் ஒவ்வொரு நொடியும் அவள் இருந்தாள். இப்போது ஆண்ட்ரே அவளை அந்த வீட்டின் குளியலறைக்குள் அழைத்துச் சென்றான். சுவரில் பொருத்தப்பட்டிருந்த குமிழை அவன் அழுத்தியதும் அதிலிருந்து தண்ணீர் வழிந்தது.
“இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்!” என்று கேட்டுச் சிரித்தவன், “இப்படிக் கலைநயத்துடன் குளியலறையில் தண்ணீர் வரவேண்டும் என்பதற்காக இருநூறு கேலன்கள் தண்ணீரைப் பரணில் உள்ள தொட்டியில் ஊற்றவேண்டியிருந்தது” என்றான்.
வீட்டை முழுதுமாக சுற்றிப் பார்த்த பிறகு அவர்கள் முற்றத்தின் குறுக்கே நடந்து சாலையை அடைந்து ஒரு மகிழ்வுந்தில் ஏறினார்கள். அடர் கறுப்பில் புழுதிக் காற்று வீசியது. மழை வரும் போலிருந்தது.
புழுதியை ஊடுருவிப் பார்த்த ஆண்ட்ரே, நாடியாவிடம், “உனக்குக் குளிரவில்லையே?” என்றான்.
அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“நேற்று சாஷா என்னிடம் நான் எதுவுமே செய்வதில்லை என்று குற்றம் சாட்டினான்” என்றவன் சில நொடிகள் மௌனமாக இருந்தான். பிறகு, “ஆம். அவன் சொல்வது சரிதான். மிகச் சரி. நான் எதுவும் செய்வதில்லை. என்னால் செய்யவும் இயலாது. எனதருமைப் பெண்ணே! இது ஏன் இப்படி இருக்கிறது? என்றாவது ஒரு நாள் நான் என் தொப்பியில் வண்ண இழைப் பட்டை ஒன்றைப் பொருத்திக்கொண்டு அரசு ஊழியத்திற்குப் போவேன் என்ற நினைவு தோன்றிய அடுத்த நொடி என் நெஞ்சுள் அவ்வளவு வெறுப்பு பரவுகிறதே! அது ஏன்? ஒரு வழக்கறிஞரையோ, லத்தீன் கற்பிக்கும் ஆசிரியரையோ, உள்ளாட்சி மன்ற உறுப்பினரையோ பார்த்ததுமே நான் ஏன் அவ்வளவு அசௌகரியமாக உணர்கிறேன்? ஓ ரஷ்யாவே! என் தாய் நாடே! சோம்பேறித்தனமும் எந்தப் பயனுமற்ற எத்தனை ஆட்களின் சுமையை இன்னும் நீ சுமந்து கொண்டிருக்கிறாயோ? நெடுங்காலமாய்த் துயருற்றுள்ள என் தாயே, என்னைப் போல் இன்னும் எத்தனை பேரை நீ தாங்க வேண்டியிருக்கிறது தாயே!” என்றான்.
தன் வெட்டித்தனத்தைப் பொதுவான ஒரு விஷயம் போலவும், அன்றைய காலகட்டத்தின் இயல்பான அறிகுறி போலவும் மாற்றிப் பேசிக்கொண்டிருந்தான். “நமக்குத் திருமணம் ஆனதும் நாம் கிராமத்துக்குப் போய்விடலாம். நதியின் அருகே தோட்டம் அமைந்துள்ள ஒரு சிறு துண்டு நிலத்தை வாங்கி அதில் உழைத்து நம் வாழ்வைக் கழிப்போம். ஆகா! அது எவ்வளவு அற்புதமாக இருக்கும்!”
அவன் பேசியது அத்தனையையும் நாடியா அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் பேசிக்கொண்டே தன் தொப்பியைத் தலையில் இருந்து எடுத்துவிட்டு தலைமுடி காற்றில் அலைபாய நிற்கும் அவனைப் பார்த்து, “கடவுளே! இப்போது நான் என் வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும்” என்று நினைத்தாள்.
நாடியாவின் வீட்டை அவர்கள் நெருங்கும்போது அவர்கள் பாதிரி ஆண்ட்ரே அவர்கள் எதிரே வந்தார்.
“இதோ அப்பா வந்துவிட்டார்” என்ற உற்சாகக் கூக்குரலுடன் ஆண்ட்ரே தன் தொப்பியை அவரை நோக்கி ஆட்டினான். மகிழுந்து ஓட்டுனருக்குப் பணத்தைக் கொடுத்துக்கொண்டே, “உண்மையிலேயே என் அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு அற்புதமான மனிதர். மிகச் சிறந்தவர்” என்றான்.
வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே நாடியா மோசமான மனநிலையில் இருந்தாள். மாலை முழுதும் தொடர்ந்து வருகை புரிந்தபடி இருக்கப் போகிற விருந்தினர்களை வரவேற்று, பொழுதுக்கும் புன்னகைத்தபடி, வயலின் வாசிப்பையும், மற்ற எல்லா விதமான அபத்தமான விஷயங்களைக் கேட்டுக்கொண்டும், தன் திருமணம் தவிர வேறெதையும் பேசாமல் இருக்கவேண்டிய தன் நிலையை நினைத்துப் பார்த்தாள்.
பட்டாடையில் கண்ணியமாகவும் பேரெழிலுடனும் பாட்டி தோற்றமளித்தாள். விருந்தினர் முன் வழக்கம்போல இறுமாப்புடனும் காணப்பட்டவள் அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட தேநீர்க் கலம் வைத்திருந்த மேஜையின் முன்னே இப்போது அமர்ந்திருந்தாள். பாதிரி ஆண்ட்ரே தந்திரமிக்க புன்னகையுடன் உள்ளே நுழைந்தார்.
அவர் பாட்டியிடம், “நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதைப் பார்க்கும்படி நான் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தருகிறது” என்றபோது அவர் கிண்டல் செய்கிறாரா அல்லது உண்மையாகத்தான் சொல்கிறாரா என்று கண்டறிவது கடினமாக இருந்தது.
4
சாளரத்தின்மீதும் கூரை மீதும் வேகமாக வீசிக்கொண்டிருந்த காற்றினால் ஏற்பட்ட ஓசை சீழ்க்கை அடிப்பது போலிருந்தது. வீட்டின் காவல் தெய்வத்தின் பாடல் சோகத்துடனும் வருத்தத்துடனும் அடுப்பினுள் தாழ்ந்து அடங்கியது.
நேரம் நள்ளிரவைக் கடந்துவிட்டிருந்தது. வீட்டில் இருந்த அனைவரும் படுக்கைக்குச் சென்ற பின்னும் யாரும் உறங்கியிருக்கவில்லை. கீழ்த் தளத்தில் இன்னமும் வயலின் வாசிக்கும் ஓசை கேட்பதாகவே நாடியாவுக்குத் தோன்றியது. ஒரு பலத்த சத்தம் கேட்டது. கதவுகளின் அடைப்புப் பலகையொன்று சாத்தப்பட்ட சத்தமாக இருக்கலாம். இரவு உடையுடனிருந்த நீனா இவனோவா ஒரு நிமிடத்திற்குப் பிறகு மெழுகுவர்த்தியுடன் நாடியாவின் அறைக்குள் நுழைந்தாள்.
“அது என்ன சத்தம் நாடியா?” என்று கேட்டாள்.
தலைமுடியை ஒற்றை சடையாகப் பின்னியிருந்த அவளுடைய அம்மாவின் முகத்தில் அச்சவுணர்வுடன் கூடிய ஒரு புன்னகை இருந்தது. புயலடிக்கும் அந்த இரவில் அவள் இன்னும் மூப்புடனும், சாதாரணமாகவும், குள்ளமாகவும் தெரிந்தாள். சிறிது நேரத்திற்கு முன்பு தன் அம்மாவை ஒரு ஈடு இணையற்ற பெண்ணாக அவள் கருதியதையும், அம்மா பேசிய விஷயங்களை எல்லாம் பெருமையுடன் கவனித்ததையும் நினைத்துப் பார்த்தாள். இப்போது அவை அனைத்தும் மறந்துபோயிருந்தன. நினைவில் தவழ்ந்தவை யாவும் மிகச் சிறிய பயனற்ற விஷயங்களாகவே இருந்தன.
அடுப்பில் இருந்து பற்பல குரல்கள் அடிமட்ட சுருதியில் ஒன்றிணைந்து பாடுவது கேட்டது. ‘ஓ…ஓ.. ஓ…மை காட்’ எனும் பாடல்கூட அவள் காதில் விழுந்தது. தன் படுக்கையின் மீது அமர்ந்த நாடியா தன் தலைமுடியைக் கைகளில் பற்றியபடி கேவி அழ ஆரம்பித்தாள். “அம்மா! அம்மா! எனக்கு என்ன ஆயிற்று என்பதுமட்டும் உங்களுக்குப் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.உங்களிடம் நான் மன்றாடிக் கேட்கிறேன். என்னை இங்கிருந்து செல்ல அனுமதியுங்கள். உங்களை மன்றாடிக் கேட்கிறேன் அம்மா!”
கட்டில் மீது அமர்ந்த நீனா இவனோவா என்ன நடக்கிறது என்று புரியாதவளாக, “என்ன சொல்கிறாய்?நீ எங்கே போகவேண்டும்?” என்று கேட்டாள்.
வெகுநேரம் அழுதுகொண்டிருந்த நாடியாவால் ஒரு வார்த்தைகூடப் பேசமுடியவில்லை. இறுதியில், “நான் இந்த ஊரைவிட்டுப் போகிறேன். இந்தத் திருமணம் நடக்காது. நடக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நான் அவரைக் காதலிக்கவில்லை….. என்னால் அவரைப் பற்றி பேசக்கூடமுடியவில்லை” என்றாள்.
அதைக் கேட்டுப் பெரும் அதிர்ச்சியடைந்த நீனா இவனோவா, “இல்லை, மகளே, இல்லை. நீ சிறிது அமைதிகொள். உன் மனம் அமைதியின்றி இருக்கிறது என்பதே இதற்குக் காரணம். இதெல்லாம் சரியாகிவிடும். இப்படி நடப்பது சகஜம்தான். உனக்கு ஆண்ட்ரேவுடன் ஏற்பட்டுள்ள ஊடலால்கூட இப்படித் தோன்றலாம். ஆனால் காதலர்களின் உரசல்கள் முத்தத்தில் தான் எப்போதும் முடிவுறும்.”
“அம்மா, இங்கிருந்து போய்விடுங்கள். போய்விடுங்கள் அம்மா” என்று கேவினாள் நாடியா.
சில நொடிகளுக்குப் பிறகு நீனா, “ஆமாம். குழந்தைப் பருவத்தையும் சிறுமிப் பருவத்தையும் சில காலத்துக்கு முன்புதான் நீ கடந்திருக்கிறாய். அதற்குள் உனக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அனைத்துப் பொருட்களும் தம் நிலை திரிபடைவது என்பது இயற்கையின் படைப்பில் தொடர்ந்து நடக்கும் ஒன்று. நாம் எங்கிருக்கிறோம் என்று நீ புரிந்துகொள்ளும் முன்பே தாயாகி, விரைவில் கிழவியாகவும் ஆகிவிடுவாய். உன் மகள்கள் என்னுடைய மகளைப் போலவே புரட்சிக்காரியாக இருப்பார்கள்” என்றாள்.
இதைக் கேட்ட நாடியா தன் அம்மாவைப் பார்த்து, “என் செல்லமே, இனியவளே, நீ புத்திசாலி. ஆகவே, நீ சந்தோஷமாக இல்லை என்பது உனக்கே தெரியும். நீ கொஞ்சம்கூட சந்தோஷமாக இல்லை. நீ மிக மந்தமான, சாதாரணமான விஷயங்களை ஏன் இப்போது பேசுகிறாய்? கடவுளே! நீ ஏன்தான் இப்படிப் பேசுகிறாய்?” என்று கேட்டாள்.
நீனா இவனோவா ஏதோ பேச முயற்சித்தாள். ஆனால் அவளால் ஒரு வார்த்தைகூடப் பேச இயலவில்லை. ஒரு கேவலை வெளிப்படுத்தியவள், தன் அறைக்குச் சென்றுவிட்டாள். நாடியாவுக்கு திடீரென பயமாக இருந்தது. கட்டிலில் இருந்து துள்ளி எழுந்தவள் வேகமாகத் தன் அம்மாவைத் தேடிச் சென்றாள். வெளிர் நீலப் போர்வையைப் போர்த்திக்கொண்டு ஒரு புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி நீனா இவனோவா தன்னுடைய கட்டிலில் கண்ணீர் வழிய படுத்துக்கொண்டிருந்தாள்.
“அம்மா, நான் சொல்வதைக் கேளுங்கள். நான் மீண்டும் உங்களிடம் வந்து மன்றாடுகிறேன் என்பது எனக்குப் புரிகிறது. நம் வாழ்க்கை எவ்வளவு அற்பமானதாகவும், அலட்சியம் கொள்ளத் தக்கதாகவும் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்தால் நன்றாக இருக்கும். என் கண்கள் திறக்கப்பட்டுவிட்டன. எனக்கு இப்போது எல்லாக் காட்சிகளும் தெரிகின்றன. ஆண்ட்ரே ஆண்டரிச் என்ன புத்திசாலியா? உனக்குக் கடவுள் கிருபை புரியட்டும் அம்மா, புரிந்துகொள்ளுங்கள். அவர் ஒரு முட்டாள்” என்றாள்.
இதைக் கேட்டதும் திடுமெனப் படுக்கையில் அமர்ந்தாள் நீனா இவனோவா. “நீயும் உன் பாட்டியும் என்னை வேதனைப் படுத்துகிறீர்கள்” என்று தேம்பியழுதாள். “நான் வாழ விரும்புகிறேன். வாழ விரும்புகிறேன்!” என்று அதையே மீண்டும் மீண்டும் சொன்னவளாகத் தன் சிறிய கை முட்டிகளைக் கொண்டு நெஞ்சின் மீது இரண்டு முறை அறைந்துகொண்டாள். “என்னைச் சுதந்திரமாக விடுங்கள். நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன். நான் வாழ விரும்புகிறேன். நீங்கள் இருவரும் சேர்ந்து என்னை வயது முதிர்ந்தவளாக மாற்றிவிட்டீர்கள்” என்றாள்.
பெருந் துயரத்துடன் வெடித்து அழுது போர்வைக்குள் சுருண்டுகொண்டவளை இப்போது பார்த்தால் அவ்வளவு சிறுமை கொண்டவளாகவும், பரிதாபகரமானவளாகவும் அவ்வளவு முட்டாள்தனத்துடனும் தெரிந்தாள். தன் அறைக்குச் சென்ற நாடியா வேறொரு உடையணிந்து சாளரத்தின் அருகே அமர்ந்து விடிவதற்காகக் காத்திருந்தாள். முற்றத்தில் யாரோ அடைப்புப் பலகையின்மீது தாளமிட்டு சீழ்க்கையடித்துக்கொண்டிருக்க இரவெல்லாம் ஏதேதோ யோசனைகளுடன் நாடியா அங்கேயே அமர்ந்திருந்தாள்.
இரவு வீசிய காற்று எல்லா ஆப்பிள்களையும் அடித்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும், முதிர்ந்த பிளம் மரம் ஒன்றை முறித்துப் போட்டுவிட்டதாகவும் பாட்டி காலையில் குறைபட்டுக் கொண்டாள். மெழுகுவர்த்தியின் ஒளி தேவைப்படும் அளவுக்கு அந்த இடமே இருள் சூழ்ந்து துயருற்றுக் கறுத்துக் கிடந்தது. மழை ஜன்னல்களின் அடித்துப் பொழிந்தது. எல்லோரும் குளிர்வதாகத் தமக்குள் புகார் கூறிக் கொண்டனர். தேநீர் அருந்தியபின் சாஷாவின் அறைக்குச் சென்ற நாடியா ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அந்த அறையின் மூலையில் இருந்த கை வைத்த நாற்காலியின் முன் முழங்காலிட்டு அமர்ந்து தன் முகத்தை தன்னுடைய இரண்டு கைகளால் மறைத்துக் கொண்டாள்.
சாஷா, “என்னாயிற்று?” என்று கேட்டான்.
“என்னால் முடியாது. எனக்குப் புரிபடாத, தனிப்பட்ட எந்தக் கருத்தும் இல்லாத இந்தச் சூழலில், நான் இன்னும் எவ்வளவு காலம் இங்கு வாழமுடியும்? எனக்கு நிச்சயமாகியுள்ள மாப்பிள்ளையை நான் வெறுக்கிறேன். இப்படி வீணில் பொழுதைக் கழிக்கிற, அர்த்தமற்ற இந்த வாழ்வை நான் வெறுக்கிறேன்” என்றாள்.
சாஷா, “சரி. சரி” என்றானே தவிர அவள் பேசுவதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. “ஒன்றும் இல்லை. எல்லாம் நல்லதற்கே” என்று அவளுக்கு ஆறுதலாகப் பேசினான்.
நாடியா, “எனக்கு இந்த வாழ்வு வெறுத்துப் போய்விட்டது. இன்னும் ஒரு நாள்கூட என்னால் இதைச் சகித்துக்கொள்ள முடியாது. நாளை நான் இங்கிருந்து கிளம்புகிறேன். கடவுளின் பேரில் உன்னை வேண்டிக் கேட்கிறேன். என்னை இங்கிருந்து அழைத்துப் போய்விடு” என்றாள்.
ஒரு நொடி திகைத்துப்போய் அவளைப் பார்த்த சாஷா இறுதியில் புரிந்துகொண்டவனாக ஒரு சிறு குழந்தையைப் போல குதூகலித்தான். தன் கைகளைக் காற்றில் வீசியபடி தன் காலணிகளைத் தரையில் தாள லயத்துடன் தட்டி, ஏறக்குறைய ஆனந்த நடனமொன்றை ஆடினான்.
பிறகு பரபரவெனத் தன் உள்ளங்கைகளைத் தேய்த்துவிட்டுக் கொண்டவன், “அற்புதம்! கேட்கவே இது எவ்வளவு நன்றாக இருக்கிறது” என்றான்.
வசியத்துக்கு ஆளானவள் போல இமைக்காது அவனை வெறித்துப் பார்த்தவள் பிரியம் மினுங்கும் கண்களுடன், ஒவ்வொரு நிமிடமும் முக்கியமான ஏதோவொரு விஷயத்தைப் பற்றி அவன் பேசப் போவது போலக் காத்திருந்தாள். அதற்குப் பிறகு அவன் அவளிடம் எதுவுமே பேசவில்லை என்றாலும் அதுவரை அவள் அறிந்திடாத புதிதான அரிதான ஒன்று தன் முன்னே மடலவிழ்வது போல அவள் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வை அவள் எதையும், ஏன் மரணத்தைக் கூட எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதாகத் தோற்றம் காட்டியது.
சில நொடிகள் எதோ யோசித்தவன், “நான் நாளை கிளம்புகிறேன். உனக்கும் சேர்த்து பயணச் சீட்டு வாங்கிவிடுகிறேன். உன்னுடைய பொருட்களை என் பிரயாணப் பையிலேயே எடுத்துக் கொண்டு சென்றுவிடுகிறேன். நீ என்னை வழியனுப்ப புகைவண்டி நிலையத்துக்கு வா. மூன்றாவது மணி அடிக்கும்போது நீ உன்னுடைய பெட்டியில் ஏறிவிடு. நாம் ஒன்றாகப் போய்விடலாம். நான் மாஸ்கோவரை உன்னுடன் வருவேன். பிறகு நீ தனியாக பீட்டர்ஸ்பர்க் சென்றுவிடு. உன்னிடம் கடவுச் சீட்டு இருக்கிறதா?” என்று கேட்டான்.
“இருக்கிறது.”
“இதை நினைத்து நீ எப்போதும் வருத்தப்படமாட்டாய். நீ அங்கே சென்று படிப்பாய். விதி உன்னை எங்கு கொண்டு செல்கிறதோ அங்கு செல்வாய். உன்னுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறும். எல்லா விஷயங்களும் மாறிவிடும். உன் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றுவது என்பதுதான் மிகப்பெரிய விஷயம். மற்ற அனைத்துமே முக்கியமற்றது. ஆகவே நாம் நாளை இங்கிருந்து கிளம்பிவிடுவோம். சரியா?”
“நிச்சயமாக. கடவுள் மீது ஆணையாக.”
தனக்கே தனக்கென முழுமையாகக் கிடைக்கப்போகும் ஒரு காலத்தை நினைத்து நாடியா மிக மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தாள். அதே நேரம், தன் இதயம் முன்னெப்போதையும்விட கனமாக இருப்பதையும் அவள் உணர்ந்தாள். ஆனாலும் மேல் தளத்திற்குச் சென்று படுக்கையில் படுத்த அடுத்த நொடி, முகத்தில் படிந்திருந்த கண்ணீர்த் துளிகளோடும், மலர்ந்து விகசித்த புன்னகையோடும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிய நாடியா மாலைதான் கண்விழித்தாள்.
5
அவளை அழைத்துச் செல்வதற்காக ஒரு மகிழுந்து வந்திருந்தது. நாடியா தொப்பியும் மேலங்கியும் அணிந்து மேல் தளத்திற்கு சென்று தன்னுடைய தாயை ஒரு முறை பார்த்தாள். அந்த அறையில் இருந்த அத்தனைப் பொருட்களையும் ஒருமுறை பார்வையிட்டாள். படுக்கையைச் சுற்றி வந்து தன்னுடைய அம்மாவிடம் சென்றாள். நீனா இவனோவா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் அந்த அறை பேரமைதியுடன் இருந்தது. நாடியா தன்னுடைய அம்மாவை முத்தமிட்டு, தலைமுடியைக் கோதியபடி சில நிமிடங்கள் அமைதியாக அங்கேயே நின்றாள். பிறகு மாடிப் படியைவிட்டு மெதுவாகக் கீழே இறங்கி நடந்தாள்.
மழை பலமாகப் பெய்து கொண்டிருந்தது. தலைப்பகுதியை மூடும் நீண்ட மேலங்கி அணிந்த மகிழுந்து ஓட்டுநர் மழையில் நனைந்தவாறு வாசலில் காத்துக் கொண்டிருந்தார்.
பணியாளர்கள் பெட்டிகளை எடுத்து உள்ளே வைத்துக் கொண்டிருக்கையில் பாட்டி, “உனக்கு இது தேவையே இல்லை நாடியா. இத்தகைய ஒரு வானிலையில் சாஷாவை வழியனுப்பச் செல்வது என்பது எவ்வளவு மோசமான ஒரு யோசனை. நீ வீட்டில் இருப்பதே நல்லது. கடவுளே, எவ்வளவு மழை பெய்கிறது!” என்றாள்.
நாடியா பதில் சொல்ல முயன்றாள். ஆனால் அவளால் எதுவும் பேச முடியவில்லை. சாஷா அவள் வண்டியில் ஏறுவதற்கு உதவி செய்தான். அவளுடைய பாதங்கள் வெதுவெதுப்பாக இருப்பதற்காக ஒரு சிறு கம்பளியைப் அவற்றின் மீது போர்த்தியவன், அவளுக்கருகே அமர்ந்துகொண்டான்.
“கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். மாஸ்கோவில் இருந்து நிச்சயமாக நீ எங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும்” என்று பாட்டி படிகளில் நின்றபடி சாஷாவைப் பார்த்துக் கூச்சலிட்டாள்.
“சரி. போய் வருகிறேன் பாட்டி.”
“விண்ணரசி உன்னை நலமாக வைக்கட்டும்.”
“என்ன வானிலை!” என்றான் சாஷா.
இப்போதுதான் நாடியா அழத்தொடங்கினாள். தான் உறுதியாக அங்கிருந்து போவது இப்போது அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. தன் தாயிடமும் பாட்டியிடமும் விடை பெற்றபோதுகூட அங்கிருந்து கிளம்பிச் செல்வோம் என்பதை அவள் நம்பியிருக்கவில்லை. “என் சொந்த ஊரே, போய்வருகிறேன்!” என்று மனத்துக்குள் பேசிக் கொண்டாள். இப்போது திடீரென அவளுக்கு ஆண்ட்ரே, அவனுடைய அப்பா, அந்த வீடு, பூச்சாடிக்கு அருகே நிற்கும் நிர்வாணப் பெண் என அனைத்தும் நினைவுக்கு வந்தன. ஆனால் அவை எதுவுமே அவளை அப்போது அச்சுறுத்தவில்லை. அவள் மீது பாரமாகக் கவிழவில்லை. அதற்கு பதில் அவை தெளிவற்ற கலங்கிய சிறிய உருவங்களாக வெகு தொலைவில் பின்னோக்கி நகர்ந்தபடியே இருந்தன. அவர்கள் புகைவண்டிப் பெட்டியில் ஏறிய பிறகு ரயில் நகர ஆரம்பித்தது. மிகப்பெரியதாக, தீவிரமாக இருந்த கடந்த காலம் மீச்சிறிதான ஒன்றாக சுருங்கிவிட்டது. மிகப்பெரிய எதிர்காலம் அதுவரை அவள் சிறிதும் நினைத்துப் பார்த்திராத, கவனிக்காத ஒரு மிகப்பெரிய எதிர்காலம் அவள் கண் முன்னே மொட்டவிழ்ந்தது. மழை ரயில் பெட்டிகள் மீதும் ஜன்னல்கள் மீதும் சத்தத்துடன் விழுந்து தெறித்தது. பசிய நிற வயல்வெளிகளைத் தவிர வேறு எதுவும் கண்களுக்கு தெரியவில்லை. தந்திக் கம்பங்களுடைய கம்பிகளின் மீதமர்ந்த பறவைகள் சட்டெனப் பறந்தபடி இருந்தன. சந்தோஷத்தில் அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. தன்னுடைய சுதந்திரத்தை நோக்கிச் செல்வதும், கல்வி பயிலப் போவதும், பன்னெடுங் காலமாகச் சொல்லப்பட்டு வருகின்ற கொசாக்ஸ் ராணுவத் தளபதிகளின் உக்ரேனிய விடுதலைப் பயணத்துக்கு ஒப்பானதாக அவளுக்குத் தோன்றியது.
ஒரே சமயத்தில் சிரிப்பும் அழுகையுமாக அவள் கடவுளை வேண்டிக்கொண்டாள். புன்னகையுடன் அவளை பார்த்த சாஷா, “சரி. சரி” என்றான்.
6
இலையுதிர்காலம் முடிந்து பனிக் காலமும் கடந்துவிட்டது. வீட்டைப் பற்றிய நினைவு நாடியாவை வாட்டியது. தன் அம்மாவையும் பாட்டியையும் அவள் தினந்தினம் நினைத்துப் பார்த்தாள். சாஷாவைப் பற்றிய நினைவுகளும் தோன்றின. வீட்டிலிருந்து வந்த கடிதங்கள் கனிவான மென்மையான தொனியில் இருந்தன. அனைத்தும் மன்னிக்கப்பட்டும் மறக்கப்பட்டும்விட்டதாகத் தோன்றியது. மே மாதத் தேர்வுகளுக்குப் பிறகு ஆரோக்கியமான உடலுடனும் பெரும் உற்சாகத்துடனும் தன்னுடைய ஊருக்குக் கிளம்பியவள் வழியில் மாஸ்கோவில் சாஷாவைச் சந்தித்தாள். சென்ற வருடம் பார்த்தது போல அதே தாடியுடனும் கலைந்த தலைமுடியுடனும் பெரிய அழகிய கண்களுடனும் இருந்தான். இப்போதும் அதே மேலங்கியும் கேன்வாஸ் காற்சட்டையும் அணிந்திருந்தான். ஆனால் உடல் நலமின்றியும் கவலையோடும் காணப்பட்டவன் முன்பைவிட வயது முதிர்ந்தும் இன்னும் மெலிந்தும் இருந்தான். தொடர்ந்து இருமிக்கொண்டிருந்த சாஷாவைப் பார்த்த நாடியாவுக்கு அவன் ஏனோ வசீகரமற்றவனாகவும் குறுகிய மனப்பான்மை கொண்ட ஒருவனாகவும் இப்போது தெரிந்தான்.
“இறைவா! நாடியா வந்திருக்கிறாளா! என் செல்லக்குட்டி” என்று ஆனந்தமாகச் சிரித்தான்.
புகையிலை வாசமும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மையின் வாசனையும், வண்ணச் சாயத்தின் வாசமும், புகையும் சூழ்ந்த அச்சடிக்கும் அறையில் அவர்கள் சிறிது நேரம் அமர்ந்தனர். அதன் பிறகு அவர்கள் அவனுடைய அறைக்குச் சென்றனர். அங்கும் புகையிலை நாற்றமடித்தது. எச்சில் துப்பிய கறைகளும் தரையில் ஆங்காங்கே இருந்தன. சூடு ஆறிப் போயிருந்த அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட தேநீர்க் கலத்தின் அருகே அடர்நிறத் தாளுடன் ஒரு உடைந்த தட்டு இருந்தது. மேஜையின் மீதும் தரையிலும் இறந்துபோன பூச்சிகள் குவியலாகக் கிடந்தன. தன் வாழ்க்கையைச் சோம்பலுடனும், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் எனும் விதத்திலும், சொகுசான வாழ்க்கையின்மீது எந்த மதிப்பும் இன்றி சாஷா வாழ்ந்து வருவதை இவை காட்டின. தனிப்பட்ட மகிழ்ச்சி, தனிப்பட்ட வாழ்க்கை அல்லது அவன் மீது பாசம் வைத்திருப்பதாக யாராவது அவனிடம் பேசியிருந்தால் அதை அவனால் புரிந்து கொண்டிருக்கக் கூட முடியாது. அதைக் கேட்டு அவன் நிச்சயமாகச் சிரித்தும் இருப்பான்.
நாடியா அவசரமாக, “பரவாயில்லை. எந்தப் பிரச்சினையும் இல்லை. அம்மா என்னைப் பார்க்க பீட்டர்ஸ்பர்க் வந்திருந்தார். பாட்டி என்மீது கோபமாக இல்லை என்றும் அடிக்கடி என் அறைக்குச் சென்று சுவர்களின் மீது சிலுவைக் குறி இடுவதாகவும் சொன்னார்” என்றாள்.
பார்வைக்கு மகிழ்வுடன் இருப்பதாகத் தோன்றினாலும் சாஷா தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்ததுடன் உடைந்துபோன தெளிவற்ற குரலில் பேசினான். உண்மையாகவே உடல்நலக் குறைவுடன் இருக்கிறானா அல்லது அது தன்னுடைய கற்பனையா என்பது புரியாமல் நாடியா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அன்பே சாஷா, உனக்கு உடம்பு சரியில்லை!”
“உடம்பு சரியில்லைதான். ஆனால் அவ்வளவொன்றும் மோசமில்லை”
இதைக் கேட்டுக் கவலையுற்ற நாடியா, “நீ ஏன் ஒரு மருத்துவரைப் போய் பார்க்கக் கூடாது? உன்னுடைய உடல் நலத்தில் நீ ஏன் அக்கறை செலுத்துவதில்லை? என் அன்பே, செல்லமே சாஷா” என்றாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. ஆண்ட்ரே அண்ட்ரிச் வீட்டில் அவள் பார்த்த அந்த நிர்வாணப் பெண்ணின் ஓவியம் நாடியாவின் கண்முன்னே தோன்றியது. எப்போதோ நினைவில் இருந்து விலகிப்போன குழந்தைப் பருவத்தைப் போல அவளுடைய கடந்த காலம் இப்போது வெகுதொலைவில் தெரிந்தது. அத்துடன் சென்ற வருடம் இருந்த அளவுக்குப் புதுமையான கருத்துகள் கொண்டவனாகவோ பண்பட்ட நடத்தை கொண்டவனாகவோ சுவாரஸ்யம் மிகுந்தவனாகவோ சாஷா அவள் கண்களுக்குத் தெரியவில்லை.
“அன்பே சாஷா, உன் உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது. நீ நலம்பெற நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். உனக்கு நான் அந்தளவு கடன்பட்டிருக்கிறேன். நீ எனக்காக எவ்வளவு செய்திருக்கிறாய் என்று உனக்குத் தெரியாது. எனக்கு நெருக்கமாக இருப்பவன் இப்போது நீ மட்டும்தான்.” அவர்கள் அங்கேயே அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நாடியா பீட்டர்ஸ்பர்க்கில் பனிக்காலத்தைக் கழித்திருந்தாள். காலாவதியாகிவிட்ட, பழைய பாணியிலான, சொல்லப் போனால் நெடுங்காலத்திற்கு முன்பே முடிந்துபோன ஒன்றாக, ஏற்கனவே மரணித்துப் புதைக்கப்பட்டதற்கான சாத்தியமுள்ள ஒரு விஷயமாக அவனுடைய உருவம் இப்போது அவளுக்குத் தோற்றங்காட்டியது.
சாஷா, “நான் வால்காவுக்குச் சென்ற பிறகு குதிரைப் பாலில் நொதித்துச் செய்த தேறலை அருந்தப் போகிறேன். என்னுடன் ஒரு நண்பரும் அவருடைய மனைவியும் வருகிறார்கள். அவருடைய மனைவி ஒரு மிகச் சிறப்பான பெண். பல்கலைக்கழகத்துக்குச் சென்று கல்வி பயிலத் தூண்டும்பொருட்டு நான் அவளுடைய கவனத்தைப் பெறத் தொடர்ந்து முயன்றுவருகிறேன். நான் அவளுடைய வாழ்வைத் தலைகீழாக மாற்ற விரும்புகிறேன்” என்றான்.
பேசிமுடித்த பிறகு அவர்கள் புகைவண்டி நிலையத்திற்குச் சென்றனர். சாஷா தேநீரும் ஆப்பிள்களும் நாடியாவுக்கு வாங்கித் தந்தான். ரயில் நகரத் தொடங்கியது. அவன் தன் கைக் குட்டையை அவளை நோக்கிப் புன்னகையுடன் ஆட்டியபோது ஜன்னல் வழியே தெரிந்த அவன் கால்கள்கூட அவனுடைய மோசமான உடல்நிலையையும், அவன் நீண்ட காலம் வாழப்போவதில்லை என்பதையும் காட்டின.
நாடியா தன் சொந்த ஊரைச் சென்றடைய நண்பகல் ஆனது. ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு மகிழ்வுந்தில் போகும் வழியில் இருந்த வீதிகள் அனைத்தும் மிக விசாலமாகவும், வீடுகள் மிகச்சிறியதாகவும் குட்டையாகவும் இருந்ததாக அவளுக்குப் பட்டது. அங்கு எங்குமே ஆட்களே கண்ணுக்குப் புலப்படவில்லை. அடர் பழுப்பு நிறத்தில் நீண்ட அங்கி அணிந்திருந்த ஜெர்மனியயைச் சேர்ந்த பியானோ இசைக் கலைஞரைத் தவிர அவள் யாரையும் சந்திக்க இயலவில்லை. எல்லா வீடுகளும் புழுதியால் சூழப்பட்டது போலத் தெரிந்தன. பாட்டி இன்னும் வயது முதிர்ந்தவளாகத் தெரிந்தாலும் கனத்த உடலுடனும் அழகின்றியும் இருந்தாள். தன்னுடைய கைகளை நீட்டியவள் நாடியாவை அணைத்துக்கொண்டு வெகுநேரம் அவளுடைய தோளில் தன்னுடைய முகத்தை வைத்துப் பிரித்தெடுக்க முடியாதது போல அழுதாள். நீனா இவனோவா இன்னமும் வயது முதிர்ந்தும் முன்பைவிட அழகற்றவளாகவும் இருந்தாள். உடல் நைந்து சுருங்கிக் போயிருந்தாலும் இப்போதும் இறுக்கமான மார்க் கச்சையணிந்து இருந்தவளுடைய கை விரல்களில் இப்போதும் வைரங்கள் மின்னின.
“என் அன்பே, என் அன்பே” என்றவளுடைய உடல் நடுங்கியது.
அதன்பிறகு அவர்கள் ஏதும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அழுகையாக வந்தது. கடந்து சென்ற காலம் கடந்து விட்டது என்பதையும் என்றைக்கும் அது திரும்பி வராது என்பதையும் இருவருமே உணர்ந்துகொண்டது தெளிவாகத் தெரிந்தது. அவர்களுக்கு இப்போது சமூகத்தில் எந்தவித அந்தஸ்தோ, முன்போல விருந்தினரை வரவேற்கும் உரிமையோ இல்லை. இவை எல்லாமே மகிழ்ச்சியான இரவொன்றில் அந்த வீட்டிற்குள் நுழைந்த காவல்துறை அக் குடும்பத்தின் தலைவர் பணத்தைக் கையாடல் செய்ததாகவோ திருட்டுக் கையெழுத்து போட்டதாகவோ கண்டுபிடித்தது. அத்துடன் மகிழ்ச்சியான, கவலையற்ற அந்த வாழ்க்கை ஒரேயடியாக முடிவுக்கு வந்துவிட்டது.
மேல் தளத்திற்குச் சென்ற நாடியா அதே படுக்கையை, நீல ஜன்னல் திரைகளைக் கொண்ட அதே சாளரங்களை, சாளரங்களுக்கு வெளியே இரைச்சலான சூரிய ஒளியில் மூழ்கியிருந்த அதே தோட்டத்தைப் பார்த்தாள். மேஜையைத் தொட்டவள் அங்கேயே அமர்ந்து சிந்தனையில் மூழ்கிப் போனாள். நல்ல இரவு உணவை உண்டவள், அதிருசியான பாலாடையுடன் கூடிய தேநீரை அருந்தினாள். ஆனால் எதுவோ குறைந்தது போல் உணர்ந்தாள். அங்கிருந்த அறைகளில் வெறுமையான ஒரு உணர்வு இருந்தது. கூரைகள் தாழ்வாகத் தெரிந்தன. மாலையில் படுக்கைக்குச் சென்று போர்த்திப் படுத்தவளுக்கு அந்த சொகுசான மெத்தென்ற படுக்கையில் படுத்திருப்பது ஏனோ வேடிக்கையாக இருந்தது.
நீனா இவனோவா உள்ளே நுழைந்தாள். குற்ற உணர்ச்சி கொண்டவர்கள் அமர்வது போன்ற ஒரு தோரணையில் அமர்ந்து அவளைப் பார்த்தாள்.
சில நொடிகள் கழித்து, “சொல் நாடியா! இப்போது திருப்தியுடன் இருக்கிறாயா? நல்ல திருப்தியுடன் இருக்கிறாயா” என்று கேட்டாள்.
“ஆமாம். அம்மா.”
இதைக் கேட்டதும் நீனா இவனோவா நாடியாவின் நெற்றியிலும் சாளரங்களின் மீதும் சிலுவைக் குறியிட்டாள்.
” பார்த்தாயா, நான் மிகுந்த மத நம்பிக்கையை நம்பிக்கை உடையவளாகிவிட்டேன். உனக்குத் தெரியுமா? நான் தத்துவம் படிக்கிறேன். எப்போதும் தொடர்ந்து யோசனையில் இருக்கிறேன். நிறைய விஷயங்கள் பகற் பொழுதின் ஒளியைப் போல எனக்கிப்போது மிகத் தெளிவாகத் தெரிகின்றன. எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், வாழ்க்கை என்பது ஓரு நிறப் பிரிகையின் வழியே ஊடுருவிப் போவது போலக் கழியவேண்டும்.”
“பாட்டியின் உடல்நிலை எப்படி இருக்கிறது அம்மா?”
“நன்றாக இருப்பதாகத்தான் தெரிகிறது. நீ சாஷாவுடன் சென்றுவிட்ட பிறகு உன்னிடமிருந்து வந்த தந்தியை வாசித்த பாட்டி அப்படியே தரைமீது சாய்ந்துவிட்டாள். மூன்று நாட்கள் அப்படியே அசையாதுகிடந்தாள். அதன் பிறகு எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டும் அழுதுகொண்டும் இருந்தாள். ஆனால் இப்போது இயல்பாக இருக்கிறாள்” என்றவள் அறைக்குள்ளேயே சற்று நடந்தாள்.
“தட்…தட்” இரவுக் காவலாளி கம்பைத் தட்டும் சத்தம் கேட்டது. “தட்…தட்”
நீனா இவனோவா, “எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் வாழ்க்கை என்பது ஒரு நிறப் பிரிகை வழியாக ஊடுருவுவது போலக் கழியவேண்டும். இதை வேறுவிதமாகச் சொல்லவேண்டும் என்றால் உணர்வு நிலையில் வாழ்வது என்பது, வாழ்க்கையின் எளிய கூறுகளை ஏழு அடிப்படை வண்ணங்களைக் கொண்டு ஆராய்ந்து ஒவ்வொரு கூறையும் தனித்தனியாகப் பிரித்தறியவேண்டும் என்பதே” என்றாள்.
மேற்கொண்டு நீனா பேசிக்கொண்டே போனதோ, அங்கிருந்து கிளம்பியபோது சொன்னதோ எதுவுமே நாடியாவுக்குக் கேட்கவில்லை. ஏனெனில் அவள் எப்போதோ உறங்கிவிட்டிருந்தாள்.
மே மாதம் கடந்து ஜூன் தோன்றியது. வீட்டில் இருப்பது நாடியாவுக்குப் பழகிவிட்டிருந்தது. அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட தேநீர்க் கலத்தின் அருகே நின்றிருந்த பாட்டி பெருமூச்சுடன், தன்னைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டாள். இப்போதெல்லாம் மாலை நேரங்களில் நீனா இவனோவா தத்துவம் குறித்துப் பேசுகிறாள். அந்த வீட்டில் ஒரு ஏழை உறவினரைப் போல அவள் இப்போதும் வசிக்கிறாள். இப்போதும் ஒற்றை ரூபிள் வேண்டும் என்றாலும் பாட்டியிடம்தான் அவள் கேட்க வேண்டியிருந்தது. அந்த வீட்டில் ஏராளமான பூச்சிகள் இருந்தன. மேற்கூரை நாளுக்கு நாள் தாழ்ந்து கொண்டிருந்தது. பாட்டியும் நீனா இவனோவாவும், ஆண்ட்ரேவையும் ஆண்ட்ரே ஆண்ட்ரிச்சையும் சந்திப்பதற்கு அஞ்சி வெளியே தலைகாட்டாமல் இருந்தனர். தோட்டத்திலும் சாலைகளிலும் நடந்துசெல்கிறபோது நாடியா சாம்பல் பூத்த வேலிகளைப் பார்ப்பாள். நகரில் இருந்த எல்லாமே பழையதாகி, காலாவதியான தோற்றத்துடன், முடிவுக்காகவோ அல்லது ஒரு புதிய மலர்ச்சி நிறைந்த துவக்கத்துக்காகவோ மட்டுமே காத்துக்கொண்டிருப்பது போல அவளுக்குத் தோன்றியது. அந்தப் புதிய ஒளி மிகுந்த வாழ்க்கை அதிவிரைவில் வந்துவிட்டால்! அந்த வாழ்க்கையில் ஒருவர் தன் விதியைத் துணிவுடனும் நேரடியாகவும் எதிர்கொள்ளக் கூடும், தான் நினைப்பது சரி என்று அறிய முடியும், மகிழ்ச்சியான மனநிலையும் சுதந்திரமும் ஒருவருக்கு இருக்கும். வெகு விரைவிலோ அல்லது சில காலம் கழித்தோ அத்தகைய ஒரு வாழ்க்கை சாத்தியமாகும். பாட்டியின் வீட்டில் பணிபுரியும் நான்கு பணியாளர்களும் நிலவறைப் பகுதியில் உள்ள நாற்றம் வீசும் அழுக்கு நிறைந்த ஒரே அறையில் வசிக்கும் வகையில் வீட்டில் உள்ள பொருட்கள் சீராக அடுக்கி வைக்கப் பட்டிருக்கக் கூடிய காலம் ஒன்று வரும். அந்த வீடு இருந்த சுவடற்றுப் போய், யாருக்கும் அது குறித்த எந்த நினைவுமின்றி, அனைவரும் அதனை மறந்துபோவதற்கான காலம் வரும். நாடியாவின் ஒரே பொழுதுபோக்கு பக்கத்துவீட்டுச் சிறுவர்கள்தான். அவள் தோட்டத்தில் நடைபோகும்போது அவர்கள் வேலியைத் தட்டி, “திருமணம் நிச்சயக்கப்பட்டவள்” என்று கேலியாகச் சத்தமிட்டமிட்டனர்.
சரடோவிலிருந்து சாஷா எழுதிய கடிதம் வந்துசேர்ந்தது. தன்னுடைய வோல்கா பயணம் மிகப் பெரிய வெற்றி பெற்றாலும், அங்கு உடல்நலமின்றிப் போய் கடந்த ஒருவாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் கிறுக்கலான கையெழுத்தில் எழுதியிருந்தான். அதற்கு என்ன பொருள் என்று அவளுக்குத் தெரியும். ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்கிற உள்ளுணர்வு அவளை பெருமளவுக்கு ஆட்கொண்டது, ஏறத்தாழ ஒரு தீர்ப்புக்கான பிரகடனம் போல அது இருந்தது. இந்த எச்சரிக்கையூட்டும் உள்ளுணர்வும் சாஷாவைப் பற்றிய எண்ணங்களும் முன்போல் தன்னை இப்போது அவ்வளவாக வேதனைப்படுத்தவில்லை என்பது அவளை விரக்தியடையச் செய்தது. அவளுக்கு வாழ்வின்மீது தீவிரமான ஆசை இருந்தது. பீட்டர்ஸ்பர்கில் வசிக்க அவள் ஏங்கினாள். சாஷாவுடனான அவளுடைய நட்பு இனிமையான ஒன்றாக இருந்தாலும் இப்போது நினைத்துப் பார்க்கையில் அதனைவிட்டு தான் வெகு தொலைவு வந்துவிட்டது போலத் தோன்றியது. இரவு முழுக்க உறங்காதிருந்தவள் காலையில் ஜன்னல் அருகே அமர்ந்திருந்தாள். கோபமான குரலில் பாட்டி விரைந்து கேட்கும் கேள்விகளும் வேறு சில ஓசைகளும் கீழ்த் தளத்தில் இருந்து கேட்டன. பிறகு யாரோ அழும் ஓசை எழுந்தது. நாடியா கீழ்த் தளத்திற்குச் சென்றபோது இறைவனுடைய படத்தின் முன் நின்று பிரார்த்தித்துக் கொண்டிருந்த பாட்டியின் கண்கள் கலங்கியிருந்தன. மேஜையில் ஒரு தந்தி இருந்தது.
பாட்டி அழுவதைக் கேட்டுக்கொண்டே அறையில் முன்னும் பின்னுமாக நடந்த நாடியா சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தியை எடுத்துப் படித்தாள்.
அது அலெக்சாண்டர் டிமொஃபெயிட்ச் அல்லது சுருக்கமாகச் சொல்லவேண்டும் எனில் சாஷா முந்தைய தினம் சரடோவில் காசநோயால் மரணமடைந்ததாகத் தெரிவித்தது.
சாஷாவுக்கான நினைவுப் பிரார்த்தனைக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்வதற்காகப் பாட்டியும் இவனோவாவும் தேவாலயத்திற்குச் சென்றனர். நாடியா ஆழ்ந்த சிந்தனையுடன் அறைகளைச் சுற்றி வந்தாள். சாஷா விரும்பியது போலத் தன் வாழ்க்கை இப்போது தலைகீழாக மாறிவிட்டதை அவள் உணர்ந்தாள். இங்கு அவள் வேற்றுக் கிரகவாசியாக, தனிமைப்பட்டு, யாருக்கும் எந்தப் பயனும் அற்றவளாக இருந்தாள். அத்துடன், அங்கிருந்த அனைத்துமே அவளுக்கும் எந்தப் பயனையும் தரவில்லை. கடந்தகாலம் இப்போது அவளிடமிருந்து முழுமையாக பிய்த்தெடுக்கப்பட்டு மறைந்தே போயிருந்தது. எரிக்கப்பட்டுவிட்ட அதன் சாம்பல் காற்றில் பரவிக் கிடப்பது போல அது அவள் கண்களுக்குத் தெரியவில்லை. சாஷாவின் அறைக்குச் சென்றவள் அங்கு சிறிது நேரம் நின்றாள்.
“சென்று வா சாஷா” என நினைத்தாள். புதியதும் விசாலமானதுமான ஒரு வாழ்க்கையின் எழிலான தோற்றம் அவளுடைய மனத்தில் எழுந்தது. இப்போதுவரை தெளிவற்றதும் மர்மங்கள் நிறைந்ததுமான அந்த வாழ்க்கை கை நீட்டி அவளை வா வா என அழைத்தது. அது அவளைப் பெரிதும் கவர்ந்து இழுத்தது.
பயணத்திற்கான பொருட்களைப் பெட்டியில் அடுக்குவதற்காக நாடியா மாடியில் இருந்த தன்னுடைய அறைக்குச் சென்றாள். அடுத்த நாள் காலை, தன் குடும்பத்திடமிருந்து விடை பெற்றாள். அந்த நகரத்தை விட்டுப் பெரும் களிப்புடனும் உற்சாகத்துடனும் வெளியேறும்போது இது நிரந்தரமானது என்று நாடியா தன் மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள்.
*
ஆங்கில மூலம்: The Betrothed by Anton Chekhov, Selected Stories of Anton Chekhov, Modern Library Classics, October 2000 Edition.