The White Ribbon: திரைக்கதை (பகுதி 7) – மைக்கேல் ஹனகே

0 comment
  1. முதல் பகுதி
  2. இரண்டாம் பகுதி
  3. மூன்றாம் பகுதி
  4. நான்காம் பகுதி
  5. ஐந்தாம் பகுதி
  6. ஆறாம் பகுதி

61. வெளியே / பகல்: விசாலமான வீதி.

பள்ளியாசிரியரும் ஏவாவும் குதிரை வண்டியில் செல்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் இருக்கும் நகரத்தைச் சில கணங்கள் காண்கிறோம்.

கதைசொல்லி

நகரத்தின் ரயில் நிலையத்தில் சந்திக்க முடிவுசெய்திருந்தோம். ஏவா ஊரில் எங்கள் இருவரையும் யாரேனும் பார்த்துவிடுவார்கள் என்பதால் அப்படி ஒரு ஏற்பாடு. அவள் தனது தூரத்து உறவினருடன் வாழ்ந்து வருகிறாள். அவர்கள் அவ்வப்போது அவளது செயல்பாடுகளைப் பற்றி அவளது பெற்றோரிடம் அறிக்கை அளித்து வந்தனர். அவள் இளைத்திருந்தது அவளுக்கு இன்னும் அழகேற்றியிருந்தது. அவளது குழந்தைத்தனத்தாலும் வெடித்துப் பேசும் இயல்பினாலும் நான் மீண்டும் ஒருமுறை வியந்து போனேன். 

ஏவா

(யாரையோ நடிப்பது போல)

“…. உனக்குத் தலைசீவும்போது வாகு இடமிருந்து எடுக்க வேண்டுமா அல்லது வலமிருந்தா?” “ஒன்று இடமிருந்து வலதாகவும் இன்னொன்று வலமிருந்து இடதாகவும் எடுத்தால் பரவாயில்லையா?”

(இருவரும் வாய்விட்டுச் சிரிக்கின்றனர். அந்த ஓய்வறையில் இருந்த அனைவரும் தலை கழன்று விடுவதைப் போல வெடித்துச் சிரிக்கின்றனர். ஒருபோதும் புன்னகைத்தே இராத திரு. மியூரர்கூட சிரித்தாக வேண்டியதாயிற்று. சிறிய இடைவெளி. சிரிப்பொலி குன்றுகிறது.) 

பள்ளியாசிரியர்

அப்படியானால் கொடூரமாக எதுவும் இல்லை, சரியா?

ஏவா

இல்லை. ஆனால் ஒரு நாள் முழுவதும் தலைக்கு வகிடெடுப்பதா? அதற்கு இரட்டையர்களைப் பார்த்துக்கொண்டதே பரவாயில்லை என்பேன். ஆனாலும் இது நன்றுதான். குறையொன்றுமில்லை.

(பள்ளியாசிரியர் அவளை ஓரக்கண்ணால் பார்த்துப் புன்னகைக்கிறார்.)

பள்ளியாசிரியர்

இல்லையா?

(அவள் அவரைப் பார்க்கிறாள். தங்களது கட்டாயப் பிரிவைப் பற்றி அவள் சொல்ல வேண்டுமென அவர் விரும்புவதை அறியாமல் ஆர்வமாக மீண்டும் சொல்கிறாள்.)

ஏவா

உண்மையாகவே இல்லை.

(அவளுடன் ஒரு புன்னகைப் பார்வையைப் பகிர்ந்துவிட்டு சாலையை நோக்கித் திரும்புகிறார் பள்ளியாசிரியர்.)

பள்ளியாசிரியர்

(புன்னகைத்தபடி)

இரட்டையர்களைத் தவிர வேறெதையும் நீ இழக்கவில்லையா?

(அவரை வியந்து புருவம் உயர்த்திப் பார்க்கிறாள். சடுதியில் அவளுக்குப் புரிகிறது. சிறு புன்னகையுடன் தலையை இடவலமாக ஆட்டுகிறாள். அவரது கையைப் பிடித்துத் தன் மடமைக்காக வெட்குவதை உணர்த்தும்படி பார்க்கிறாள்.)

ஏவா

இல்லை. நிச்சயமாக உங்களையும் இழக்கிறேன்!

(அவள் தன் கைமீது கை வைத்திருப்பதை அவர் பார்க்கிறார். அதற்குள் அவள் கையை எடுத்துவிடுகிறாள். இருவரும் உவகையுடன் இருக்கின்றனர். சில நொடிகளுக்குப் பிறகு குதிரை கனைத்து உலுப்ப, ஏவா சாய்ந்து பள்ளியாசிரியரின் தோளில் தன் தலையை வைக்கிறாள். சாலையின் குண்டுகுழி அந்தத் தோரணையில் தலையை வைக்க அனுமதிக்காததால், இருவரும் அருகருகே அமர, வண்டி தொடர்ந்து செல்கிறது. இறுதியாக…)

ஏவா

புதிய தாதி எப்படி? அவர்கள் இத்தாலிய மொழி மட்டுமே பேசுகிறார்களா?

பள்ளியாசிரியர்

எனக்குத் தெரியவில்லை. மேற்பார்வையாளர் அப்படித்தான் என்னிடம் சொன்னார்.

ஏவா

அப்படியா?

(அப்போது சிறு வனத்தில் நகரும் ஒரு குறுகிய நீரோடையைக் கடக்கிறார்கள். பாலத்திற்குப் பிறகு பிரிந்துசெல்லும் பாதையில் வண்டியைச் செலுத்துகிறார் பள்ளியாசிரியர்.)

ஏவா

எங்கே போகிறீர்கள்?

பள்ளியாசிரியர்

அங்கே. காட்டிற்குள். சிற்றோடைக்குப் பின்புறம். அங்கு அமர்ந்து நாம் இளைப்பாறலாம். உணவு கட்டி எடுத்து வந்திருக்கிறேன்.

ஏவா

(மென்மையாக)

எனக்கு அது வேண்டாம்.

பள்ளியாசிரியர்

(குழப்பத்துடன்)

ஏன்?

(ஏவா தலை குனிந்து ஆட்டுகிறாள். பள்ளியாசிரியர் வண்டியை நிறுத்தி அவளை நோக்கித் திரும்புகிறார்.)

என்ன ஆயிற்று?

ஏவா

ஒன்றுமில்லை. தயவுசெய்து வேண்டாம்.

(இப்போது அவருக்குப் புரிகிறது. இருந்தாலும் தன்னைப் பற்றி அப்படித் தவறாக நினைக்கிறாளா என்பதில் உறுதிப்பாடு அவரிடம் இல்லை. இப்போது அவர் ஒரு குழந்தையிடம் பேசுவதைப் போல வியப்புடனும் உறுதியுடனும் சொல் அளிக்கிறார்.)

பள்ளியாசிரியர்

நீ எதற்கும் தடைபோட்டுக்கொள்வதை நான் விரும்பவில்லை. இந்த நேரத்தை நீ மகிழ்வுடன் களிக்க வேண்டும் அவ்வளவுதான்.

(அவள் அவரை நிமிர்ந்து பார்க்கிறாள்.)

ஏவா

தயவுசெய்து.

பள்ளியாசிரியர்

(திகைப்புடன்)

என் வருங்கால மனைவிக்கு இழுக்கு ஏற்படுத்திவிடுவேன் என்று நினைக்கிறாயா?

(அவள் இப்போது அவரைக் கெஞ்சும் பாவனையில் பார்க்கிறாள். இறுதியாக அவர் தன் எண்ணத்தை ஏமாற்றத்துடன் கைவிடுகிறார்.)

அப்படியானால் சரி. நான் வண்டியைத் திருப்புகிறேன்.

(அவர் வண்டியைத் திருப்புகிறார். சற்று தொலைவு நகர்ந்த பிறகு ஏவா அவர் கைகள் மீதும் குதிரை வாரின் மீதும் கை வைக்கிறாள். அவர் வண்டியை நிறுத்த அவள் அவரைப் பார்க்கிறாள்.)

ஏவா

நன்றி..

(என்ன சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். சடுதியில் அவரை நோக்கிச் சாய்ந்து அவர் உதடுகளில் நிதானமாக முத்தமிடுகிறாள் ஏவா. இருவரும் நெடுநேரம் உடல்கள் தொட்டுக்கொள்ளாதபடி அதே நிலையில் இருக்கின்றனர். உதடுகள் பிரிந்த பிறகு அவர்களுக்கு மூச்சுவிடுவது மறந்துபோயிருந்தது. தயக்கமும் குழப்பமும் மெல்ல வடிந்த பிறகு இருவரும் வேறு திசைகளுக்குத் திரும்புகின்றனர். மீண்டும் வாரை ஆட்டி வண்டியினைச் செலுத்துகிறார் பள்ளியாசிரியர். அது சாலையில் எழும்பித் தாழ்ந்து முன்செல்ல, இருவரும் பேருவகையின் கணத்தை எண்ணியபடி அமைதியுடன் மகிழ்ந்திருக்கின்றனர்.)

62. உள்ளே / பகல்: தேவாலயம்

தேவாலயம் நிறைந்திருக்கிறது. மதச் சடங்கில் எட்டுப் பிள்ளைகள் ஞானக்குளியலுக்காகப் பலகை வரிசையில் மண்டியிட்டிருக்கின்றனர். போதகர் ஒன்றன் பின் ஒருவருக்காக உதடுகளில் கோப்பையை வைக்கிறார்.

போதகர்

இதை ஏற்று அருந்துவீராக! இது புதிய ஏற்பாட்டின் ரத்தம். உங்கள் பாவங்களுக்காகச் சிந்தப்பட்ட இறையானவரின் தூய ரத்தம்.

(வரிசையில் ஐந்தாவதாக மண்டியிட்டிருக்கும் மேரியிடம் சென்றதும் நீண்ட கணம் தயங்கியபடி நிற்கிறார். அவர் காலத்தைக் கடத்த கடத்த பல எரிச்சலான பார்வைகள் அவர் மீது படிகின்றன. பிற பிள்ளைகளைவிட மேரி அதீத ஆர்வத்தில் இருக்கிறாள். அவள் மீண்டும் மயங்கி விழக்கூடுமோ என்று தோன்றுகிறது. அதன் பிறகு அவர் கோப்பையை அவளிடமும் நீட்டி அவளுக்கு அருந்தத் தருகிறார்.)

இதை ஏற்று அருந்துவீராக! இது புதிய ஏற்பாட்டின் ரத்தம். உங்கள் பாவங்களுக்காக, புதிதாகச் சிந்தப்பட்ட இறையானவரின் தூய ரத்தம். உங்கள் மீட்புக்கான ரத்தம்.

(ஒவ்வொரு பிள்ளையும் அருந்திய பிறகு துடைப்பதைப் போலவே மேரி அருந்திய பிறகும் கோப்பையின் முனையைத் துடைத்துவிட்டு அடுத்த பிள்ளையிடம் சென்று சடங்கின் சொற்களை மீண்டும் சொல்கிறார்.)

63. வெளியே / இரவு: வனம்.

சேய்மையிலிருந்து குரல்கள் கேட்கின்றன. முதலில் எதுவும் புரியவில்லை. மெல்ல அவை என்னவென்று நமக்குப் புரிகிறது.

குரல்கள்

ஹன்சி? எங்கே இருக்கிறாய்? இருந்தால் சத்தம் போடு. ஹன்சி எங்கே இருக்கிறாய்?

(இங்குமங்கும் நிழல்களாக உடல்கள் நகர்கின்றன. சிலர் கைவிளக்கையும் சிலர் தீவற்றிகளையும் ஏந்தி நடக்கின்றனர். அவர்களை நெருங்கிப் பார்க்கும் வரை யாரென்பது தெளிவாகத் தெரியவில்லை. அனைவரும் அந்த ஊரின் ஆண் பெண்கள். சற்று நேரம் கழித்து ஒரு ஆணின் குரல்.)

ஆண்குரல்

(விளிக்கிறது)

இங்கே வாருங்கள். இங்குதான் இருக்கிறான்.

(பலரும் ஓடிச் செல்கின்றனர். சிறுவன் ஒருவன் மரத்தில் கட்டப்பட்டிருக்கிறான். அவன் தலை முழுவதும் கந்தல் துணியால் கட்டப்பட்டிருக்கிறது. நாசிக்கு மட்டும் சிறிய துவாரம் விடப்பட்டிருக்கிறது. அவன் முனகுகிறான். ஒரு வெள்ளை நாடாவால் அவன் கழுத்தைச் சுற்றி ஒரு காகிதம் கட்டப்பட்டிருக்கிறது. மக்கள் குழந்தையை நோக்கி விரைகின்றனர். கட்டுகளை அவிழ்க்கின்றனர். குழந்தை வலுவிழந்து மடங்குகிறான். அவனது தலைக்கட்டுகளை அவிழ்த்ததும் உள்ளே ரத்தக்கறை இருக்கிறது. அது செவிலியின் மங்கோலாய்டு மகன். திகைப்புடன் இருந்தவர்களில் ஒருவர் தாளில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்ததைப் படிக்கிறார்.)

யாம் சினமிக்கக் கடவுள். என்னை வெறுக்கும் நான்காம் தலைமுறைப் பிள்ளைகளின் மீது தந்தையர் நிகழ்த்தும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு செல்ல வந்தோம்.

64. உள்ளே / நாள்: பள்ளிக்கூடம்.

தாழ்வாரம்.

மேரி, மார்டின், பவுல், ஜியார்ஜ் ஆகியோருடன் இன்னும் சில பிள்ளைகளும் சேர்ந்து வகுப்பறை கதவருகே நிற்கின்றனர். அவர்கள் அமைதியாக உற்றுக் கவனிக்கின்றனர்.

கதைசொல்லி

மனநலமற்ற சிறுவன் மீது இத்தனை கொடூரமான வன்முறை நிகழ்த்தப்பட்டதை அடுத்து சீமான் உள்ளிட்ட அனைவரும் நகரக் காவல்துறையை அணுகி அவர்களிடம் உதவி கேட்பதே சரி என்ற முடிவுக்கு வந்தனர். எனவே இரண்டு நாட்களுக்குப் பிறகு சீருடை அணிந்த இரு காவல்துறை அதிகாரிகள் வந்து குற்றம் நிகழ்ந்த இடங்களை உன்னிப்பாக நோட்டமிட்டனர். அருகில் இருந்த வீட்டாரிடம் சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகளைப் பார்த்தார்களா என்று விசாரணை நடத்தினர்.

வகுப்பறை.

இரு துப்பறிவாளர்களும் வகுப்பறையில் ஆசிரியர் முன்னிலையில் லீசலை விசாரிக்கின்றனர். மெல்ல மெல்ல அவர்களது விசாரணை கடுமையாகிறது. லீசல் அழத் தொடங்குகிறாள்.

கதைசொல்லி

ஹன்சியின் நிலையை அறிந்ததும் எனக்கு உடனடியாக லீசல் சொன்னது நினைவுக்கு வரவில்லை. பின்னர் அது நினைவுக்கு வந்ததும் அதிகாரிகளிடம் அதைச் சொல்லத் தயங்கினேன். இத்தகைய அபத்தமான தற்செயல் நிகழ்வுக்காக மேற்பார்வையாளரின் குடும்ப மரியாதையைச் சிதைக்க நான் விரும்பவில்லை. ஆனால் இந்தக் காயங்களால் ஹன்சி பார்வை இழக்க நேரிடும் என்று தெரிந்ததும் ஒரு பிற்பகலில் லீசலைப் பள்ளிக்கு வரவழைத்து காவல்துறையினருக்கு அவளது கனவினைப் பற்றித் தெரிவித்தேன். 

முதல் காவல்துறை அதிகாரி

நீ நினைக்கும் அளவு நாங்கள் மடையர்களாக இல்லாமல் போனதற்குக் கடவுளுக்கு நன்றி.  

லீசல்

(தேம்பி அழுதபடி)

இல்லை, நான் அதைக் கனவுதான் கண்டேன்.

(இடைவெளி. லீசலின் கதையை எப்படிப் புரிந்துகொள்வது என்று ஏற்கெனவே குழப்பத்தில் இருந்த பள்ளியாசிரியரை இரு அதிகாரிகளும் பொறுமையிழந்து பார்க்கின்றனர். அவர் அவளைப் பார்த்தபடி சிந்தித்தார். அதிகாரிகள் மீண்டும் அவளை நோக்கித் திரும்புகின்றனர்.)

முதல் காவல்துறை அதிகாரி

நன்றாகக் கவனித்துக்கொள். நான் உனக்கு இறுதியாக இன்னொரு வாய்ப்பு தருகிறேன். அந்தச் சிறுவனைக் காயப்படுத்தும் திட்டத்தைப் பற்றி உன்னிடம் யார் சொன்னது என்பதை எங்களுக்குச் சொல்லிவிடு. எங்களிடம் சொன்னது யார் என்பதை வெளியே சொல்ல மாட்டோம். புரிகிறதா?

(லீசல் தாளாதவளாய் மறுத்து தலையசைத்தபடி மீண்டும் அழுகிறாள். அதிகாரி ஆசிரியரைப் பார்க்கிறார். பின்னவர் தான் ஏதும் பேச வேண்டுமா என்பதைப் போல பார்க்கிறார். அந்தப் பெண்ணுக்காக வருந்துகிறார். இறுதியாகப் பேசுகிறார்.)

பள்ளியாசிரியர்

அவள் ஏற்கெனவே இது போல உண்மையாக நிகழ்ந்ததை முன்பே கனவாகக் கண்டிருக்கிறாள்.

முதல் காவல்துறை அதிகாரி

(முரண் தொனியில்)

அப்படியா? அது என்ன கனவு என்று நான் தெரிந்துகொள்ளலாமா?

பள்ளியாசிரியர்

(அவள் அதைப் பற்றிச் சொல்லி துன்பப்பட வேண்டாம் என்று நினைத்து)

அவள் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வு அது.

முதல் காவல்துறை அதிகாரி

(அதே இளக்காரத் தொனியில்)

அப்படியா? அவள் குடும்பத்தில் நிகழ்ந்தது. அது உண்மை என்று நீங்கள் உறுதி செய்துவிட்டீர்கள்?

பள்ளியாசிரியர்

(சற்றே எரிச்சலுடன்)

இல்லை.

(ஆசிரியரை எரிச்சலுடன் பார்த்துவிட்டு அதிகாரி தன் துணையதிகாரியை நோக்கித் திரும்புகிறார்.)

முதல் காவல்துறை அதிகாரி

(ஏளனமாக)

அவை அனைத்துமே உண்மையாக இருந்துவிட்டுப் போகட்டும். உலகின் மிக முக்கியமான மனோவசியக்காரியிடம் நாம் உரையாடிக்கொண்டிருக்கிறோமோ? எத்தனை பேறு பெற்றவர்கள் நாம் என்பதைச் சரியாக உணராமல் இருக்கிறோம். அப்படியானால் இதைச் செய்தவர்கள் யார் என்று நேரடியாகக் கேட்டாலே போதும். இவளை வீட்டிற்கு அனுப்பி உறங்க வைப்போம். கொஞ்சம் கனவு காணட்டும். நாளை வந்து யார் இந்தக் கொடூரத்தைச் செய்தது என்று சொல்லிவிடுவாள். இது எப்படி இருக்கிறது? எல்லாமே சாத்தியம்தான், இல்லையா?

(சடுதியில் அவர் லீசலை நோக்கிக் கத்துகிறார்.)

அழுகையை நிறுத்து!

(லீசல் அச்சத்தில் நடுங்குகிறாள். காவல் அதிகாரி அவளுக்கு நேர் எதிரே நிற்கிறார்.)

காரியக்கார பிலாக்கணம் என்னிடம் நடக்காது. உன்னைப் பேச வைக்க நிறைய வித்தைகள் என்னிடம் இருக்கின்றன. எனக்கு மந்திரக்காரிகள், சூன்யக்காரிகள் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. உன்னைப் போன்ற வாளிப்பான சிறுமிகள் இயற்கைக்கு மீறிய மாயக்காட்சிகளை உணர்வதன் மீதும் நம்பிக்கை இல்லை. எனவே உண்மையைச் சொல்வதற்கு அணியமாகிக்கொள். ஏனெனில் எனக்கு ஒப்பில்லாமல் – நீ நிரபராதி என்று எனக்குத் தெரியாமல் – நீ தப்பவே முடியாது. புரிகிறதா? சரி. இப்போது உன் கதையின் போக்கு உண்மையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக உன் பெற்றோரைச் சந்திக்கக் கிளம்புகிறோம்.

(அவர் சிறுமியை இழுத்துத் தரையில் தள்ளுகிறார். அவள் கடும் பீதியால் சூழப்பட்டு மெலிதாகத் தும்முகிறாள். அதன்பிறகு அவளைக் கதவருகே கூட்டிச்சென்று பள்ளியாசிரியரைத் திரும்பிப் பார்க்கிறார்.)

நீங்களும் வந்தால் நன்றாக இருக்கும். 

(பள்ளியாசிரியர் அதிகாரியின் நடத்தை மிகக் கொடியதாக இருப்பதாக உணர்ந்தபோதும் அரை மனதுடன் பின்தொடர்கிறார்.)

பள்ளியாசிரியர்

நிச்சயம் வருகிறேன்.

(தாழ்வாரத்தை நோக்கிக் கதவு திறந்ததும் அங்கு ஒட்டுகேட்டபடி குழுமியிருந்த பிள்ளைகளின் மீது மோதும்படி அது சென்றது.)

முதல் காவல்துறை அதிகாரி

அட! இங்கே என்ன கூட்டம்?

மேரி

(கனிவுடன்)

மதிய வணக்கம். மதிய வணக்கம் ஐயா. 

பிற பிள்ளைகள்

(கனிவுடன் ஒருமித்த குரலில்)

மதிய வணக்கம். மதிய வணக்கம் ஐயா. 

(அங்கு அவர்களைப் பள்ளியாசிரியர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை என்றபோதும் காவல்துறை அதிகாரிகள் முன் அதை வெளிக்காட்டவில்லை.)

பள்ளியாசிரியர்

மதிய வணக்கம்.

மேரி

(பணிவுடன்)

ஆசிரியரைப் பார்க்க வெளியாட்கள் வந்திருக்கிறார்கள் என்று பார்த்தோம். இடைஞ்சல் செய்ய வேண்டாமென்று இருந்தோம். ஆசிரியரிடம் பேச வேண்டும் அவ்வளவுதான்.

(இடைவெளி. காவலதிகாரி ஆசிரியரைப் பார்க்கிறார்.)

பள்ளியாசிரியர்

உங்களுக்கு என்ன வேண்டும்?

மேரி

(அந்நியர்கள் முன்னிலையில் கேட்கக் கூச்சப்படுவதைப் போல)

ஹன்சியைப் பற்றி உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.

(மீண்டும் காவலதிகாரி ஆசிரியரைப் பார்க்கிறார்.)

பள்ளியாசிரியர்

என்ன?

மேரி

(ஒரு கணம் தயங்கி தைரியத்தை வரவழைத்து)

அவனுக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டோம். எங்களால் ஏதும் உதவ முடியுமா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

65. உள்ளே / இரவு: செவிலியின் இல்லம்.

மருத்துவர் ஹன்சியின் காயங்களை மிகக் கவனமாக ஆராய்கிறார். குறிப்பாகக் கண்களைச் சுற்றியுள்ள காயங்கள் கடுமையாக இருக்கின்றன. சிறுவன் மென்குரலில் முனகியபடி இருக்கிறான். அவருக்குப் பக்கத்தில் அமைதியாக இருக்க முயன்றபடி நிற்கிறாள் செவிலி. ஆனால் அவள் அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறாள். அவள் முகமே இன்னும் அதிர்ச்சியின் பிடியில் இருந்து விடுபடவில்லை. கடும் அமைதி நிலவுகிறது. தொடர்ந்து முனகியபடி இருக்கும் சிறுவனிடம் மருத்துவர் கனிவுடன் மென்மையான குரலில் பேசுகிறார்.

மருத்துவர்

(மென் குரலில்)

நலமே. எல்லாம் நலமே. ஹன்சி… உனக்கு வலிக்கும் என்பதை நான் அறிவேன். நீ கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும். எல்லாம் சரியாகிவிடும். எல்லாம்.

(சிறுவனின் கண்களுக்கு மீண்டும் கட்டு போடுகிறார். சிகிச்சையை முடித்துக்கொண்டு எழ விரும்புகிறார். ஹன்சியின் கை அவரது கையைப் பற்றிக்கொள்கிறது. அவர் ஒரு கணம் தயங்குகிறார். செவிலியும் அவரும் பார்வையைப் பரிமாறிக்கொள்கின்றனர். பிறகு மெல்ல சிறுவனின் கையிலிருந்து தனது கையை விடுவித்துக்கொள்கிறார்.)

ஹன்சி, இப்போது நான் சென்றாக வேண்டும். கவலைப்படாதே. நாளை மீண்டும் வருவேன். 

(சிறுவன் மீண்டும் உரக்க முனகியபடி மருத்துவரின் கையைப் பற்ற நினைக்கிறான். ஆனால் அவனால் யாரையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் செவிலியும் அவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர். செவிலி சிறுவன் அருகே அமர்ந்து அவன் கையைப் பற்றிக்கொள்கிறாள்.)

செவிலி

எல்லாம் நலமாகிவிடும் ஹன்சி. அஞ்சாதே. மருத்துவர் திரும்பி வருவார்.

(செவிலியைப் பார்த்து, சிறுவனை விட்டு விலகாமல் அவனைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கையசைக்கிறார் மருத்துவர். பின்னர் அங்கிருந்து ஒலியின்றி அவசரமாக வெளியேறுகிறார்.)

66. வெளியே / பகல்: நீரோடையும் மேய்ச்சல் நிலமுமான ஒரு வெளி.

நீரோடையின் ஓரத்தில் அமர்ந்தபடி சிஜி, ஃபெர்டினாண்ட், ஜியார்ஜ் மூவரும் தத்தம் மடிப்புக் கத்திகளால் மூங்கில் குழாய்களை ஓட்டையிட்டு அதை ஊதி ஒலியெழுப்ப முயல்கின்றனர். அவர்கள் கால்கள் நீரில் அளைந்தபடி இருக்க வேலையில் மும்முரமாக இருக்கின்றனர். ஜியார்ஜ் முதலில் செய்து முடிக்கிறான். பெருமிதத்துடன் அவன் ஊதியபோது போதிய குழலோசை எழவில்லை. தனது ஏமாற்றத்தை மறைத்து துளைகளை இன்னும் சரியாக அமைக்க முயல்கிறான். இப்போது சிஜியின் குழல் தயாராகிவிட்டது. அது மிகச் சிறப்பாக ஒலியெழுப்புகிறது. சிஜிக்குப் பெரும் மகிழ்ச்சி. தன் போட்டியாளர்களைப் பெருமிதத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு புற்தரையில் சாய்ந்து குழல் ஊதத் தொடங்குகிறான். ஜியார்ஜ் அவனது செருக்கைப் பார்த்துவிட்டு மீண்டும் தன் குழலைச் சரிசெய்வதில் கவனத்தை ஊன்றுகிறான். மறுமுறை ஊதிப் பார்த்தபோதும் போதிய ஒலி எழவில்லை. சிஜியின் இசை ஜியார்ஜை எள்ளி நகையாடுகிறது. ஃபெர்டினாண்ட் ஜியார்ஜைக் கெக்கெலிப்புடன் பார்க்கிறான். சடுதியில் ஜியார்ஜ் சிஜி மீது தாவி அவனது குழலைப் பிடுங்க முயல்கிறான். சிஜி அதை விடாமல் பிடித்துக்கொள்கிறான். ஃபெர்டினாண்ட் இருவரையும் பார்த்துச் சிரித்தபடி நிற்கிறான். 

இத்தாலிக்குச் சென்று வரும் முன்பு இருந்ததைப் போல வலுவற்றவனாக சிஜி இல்லாவிட்டாலும் தன்னைவிட மூன்று வயது பெரியவனாக இருக்கும் ஜியார்ஜ் தன் உடல் எடையால் ஏறி அமுக்க, சிஜி நழுவி ஓடையில் விழுகிறான். அவனது குழலை ஜியார்ஜ் பிடுங்கி இருந்தான். இந்தத் தள்ளுமுள்ளு காரணமாக சிஜிக்கு ஏறத்தாழ மூச்சடைத்துவிட்டது. ஆழம் அதிகமாக இல்லாத ஓடைதான் என்றபோதும் அவனது தலை நீரில் மூழ்கி எழுகிறது. ஜியார்ஜுக்கு இந்த ஆபத்து புரிந்தாலும் அவனது கர்வம் அவனுக்கு உதவத் தடுத்தது. தனது தீய நடத்தையைத் தானே ஏற்பதுபோல உணர்ந்தும் அதைச் செய்கிறான். ஒரு கணம் அவன் முகத்தில் தயக்கம் நிறைந்து, அவன் முகத்தில் ஒரு விதமான கொடிய புன்னகை தோன்றி மறைகிறது. ஃபெர்டினாண்ட் அதற்குள் நீரில் குதித்து சிஜியைப் பற்றித் தூக்கிவிடுகிறான். குற்ற உணர்வும் வெறியும் ஒரு சேர, ஜியார்ஜ் அவனைப் பார்த்து விரல் நீட்டிச் சொல்கிறான்.  

ஜியார்ஜ்

(அச்சுறுத்தும் தொனியில்)

என்னைச் சொல்லிக் கொடுத்தால் மிகவும் வருத்தப்படுவாய்!

67. உள்ளே / பகல்: மதபோதகரது வாசிப்பறை.

போதகர் தன் மேசையில் அமர்ந்து பணியாற்றுகிறார். கதவு தட்டும் ஓசை கேட்கிறது. 

போதகர்

உள்ளே வாருங்கள். 

(ஃப்ளோரியன் தயக்கத்துடன் உள்ளே வருகிறான். அவனது கையில் ஒரு பறவைக் கூண்டு இருக்கிறது. அந்தக் கூண்டினைச் சிறுவனது படுக்கையறையில், இரவில், காட்சி எண் 49ல் முன்பே கண்டிருக்கிறோம். கூண்டிற்குள் நன்றியுரைத்தல் விழாவின்போது கண்டெடுத்த பறவை சற்றே உடல் தேறி இருக்கிறது.)

போதகர்

என்ன சொல்?

(சிறுவன் நெளிகிறான். தன் தந்தையைப் பார்க்கிறான். மெல்ல அவர் அருகே வந்து அவர் மேசையில் கூண்டை வைக்கிறான். ஃப்ளோரியன் நெருங்கி வருவதைப் போதகர் வியப்புடன் பார்க்கிறார். வைத்த பிறகு ஃப்ளோரியன் சற்றே பின்னோக்கி நகர்ந்து நின்று மெல்லத் தலைகுனிகிறான்.)

போதகர்

(ஒன்றும் புரியாதபடி)

என்ன இது? உனக்கு என்ன வேண்டும்?

ஃப்ளோரியன்

(மென்மையாக)

பிப்சிக்காக.

(சிறு அமைதி. பின் மேலும் மென்மையான குரலில் தொடர்கிறான்.)

அப்பா சோகமாக இருப்பீர்கள் என்பதற்காக.

(எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் அவனைப் பார்க்கிறார் போதகர். பின் கரகரப்பான குரலில் சினத்துடன் இருப்பது போன்ற பாவனையுடன் சொல்கிறார்.)

போதகர்

நன்றி.

ஃப்ளோரியன்

(தந்தையின் உணர்ச்சியை அறிந்தவனாக)

மகிழ்ச்சி தந்தையே.

(ஒரு கணம் இருவருக்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை. பின்னர் சிறுவன் அறையை விட்டு வெளியேறுகிறான். அவனை விழியால் பின்தொடர்கிறார் போதகர். பின்னர் அமர்கிறார். தனது உறுதியைக் காக்க முயன்றவராய் இருந்தவர் இறுதியில் கண்ணீர் சிந்துகிறார். அவரது அழுகை பெருகி வெளியே கேட்டுவிடக்கூடாது என்பதற்காக மெல்ல அழுகிறார்.)

68. உள்ளே – வெளியே / பகல்: மேற்பார்வையாளரது இல்லம்.

குழந்தைகளின் அறை. ஜியார்ஜ் சாளரத்தின் அருகே நின்றபடி கீழே இருந்த மைதானத்தைப் பார்க்கிறான். மாளிகையிலிருந்து கிளம்பி சுறுசுறுப்பாக நடந்து வருகிறார் மேற்பார்வையாளர். ஜியார்ஜ் சாளரத்தை நீங்கி மேசையருகே அமர்ந்து தன் வீட்டுப்பாடங்களை எழுதுகிறான். கீழ்தளத்தின் பெருவாசல் திறக்கப்படுவதையும் தந்தையின் காலடிகள் படிகளில் விரைவாக ஏறுவதையும் நம்மால் கேட்க முடிகிறது. கடைசியாக தந்தை கதவருகே தோன்றுகிறார். அவர் மூச்சிரைக்கும்போதும் கோபத்துடன் தோன்றினாலும் மென்குரலில் பேசுகிறார்.

மேற்பார்வையாளர்

அந்தக் குழலை என்னிடம் தா!

(ஜியார்ஜ் தன் தந்தையின் சொல் புரியாதவனைப் போல் பார்க்கிறான்.)

ஜியார்ஜ்

என்ன?

மேற்பார்வையாளர்

(வலுக்கட்டாயமான சினத்துடனும் கட்டுப்படுத்தப்பட்ட அமைதியுடனும்)

அந்தக் குழலை என்னிடம் கொடு!

ஜியார்ஜ்

எந்தக் குழல்?

(இந்த இடத்தில் சிறுவன் மீது பாய்ந்தவர் அவனைக் கடுமையாக அடிக்கிறார். அவன் நாற்காலியில் இருந்து கீழே விழுகிறான்.)

மேற்பார்வையாளர்

என்னிடம் கொடு!

ஜியார்ஜ்

(தரையில் கிடந்தபடி)

எந்தக் குழல்?

(மேற்பார்வையாளர் அவனை வெடுக்கென இழுத்து சுவரோடு ஒட்டி நசுக்குகிறார். ஜியார்ஜ் தடுமாறி இடையில் இருந்த மேசையில் தடுக்கி மல்லாக்க விழுகிறான். தன் மீது அடி விழும் என்பதால் தன் முகத்தைக் கைகளால் மூடுகிறான்.)

மேற்பார்வையாளர்

இப்போதே கொடு! இல்லாவிடில் உன்னைக் கொன்றுவிடுவேன். 

ஜியார்ஜ்

(முனங்கியபடி)

என்னிடம் எந்தக் குழலும் இல்லை.

(அவனை விடுவித்த பிறகு சினத்துடன் மீண்டும் மீண்டும் அடிக்கத் தொடங்குகிறார்.)

ஜியார்ஜ்

(அலறுகிறான்)

அய்யோ! அய்யோ!

மேற்பார்வையாளர்

சனியனே! வீணனே!

ஜியார்ஜ்

(அலறுகிறான்)

அய்யோ! வேண்டாம். அடிக்காதீர்கள்.

(இந்தச் சத்தம் கேட்டு எம்மா – ஜியார்ஜின் தாயார் உள்ளே வருகிறார்.)

எம்மா

அய்யோ ஜியார்ஜ்! கடவுளின் பெயரால் நிறுத்துங்கள். நம் மகன் என்ன செய்தான்?

(தாயின் வரவு கண்மூடித்தனமான சினத்திலிருந்து தந்தையைத் தணியச் செய்கிறது. அவர் அவளைப் பார்க்கிறார். மீண்டும் தன் மகனை நோக்கித் திரும்பியவர் மூச்சிரைத்தபடி தன் சினத்தைக் கட்டுக்குள் வைக்கிறார்.)

மேற்பார்வையாளர்

கடைசியாகக் கேட்கிறேன். என்னிடம் தந்துவிடு.

ஜியார்ஜ்

(வலியால் அழும் நிலைக்கு வந்தபடி)

ஆனால் நீங்கள் கேட்பது என்னவென்றே எனக்குப் புரியவில்லை அப்பா. 

(அம்மா ஒருவரை மாற்றி ஒருவரைக் குழப்பத்துடன் பார்த்துக்கொள்கிறாள். இறுதியாகத் தன் கணவனிடம் மன்றாடும் குரலில் இறைஞ்சுகிறாள்.)

எம்மா

என்ன நடக்கிறது? உங்களுக்கு என்ன வேண்டும்?

மேற்பார்வையாளர்

(ஜியார்ஜிடம்)

நான் என்ன சொல்கிறேன் என்பது உனக்கு நன்றாகவே தெரியும்.

(மீண்டும் இந்தச் சூழ்நிலையைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காக இருவரையும் மாறி மாறிப் பார்க்கிறாள்.)

எம்மா

சொல்லுங்கள்! இங்கு என்ன நடக்கிறது?

(அவளது வலியுறுத்தலால் எரிச்சலடைந்து அவளை நோக்கித் திரும்பிய மேற்பார்வையாளர் அவளை நெடுநேரம் பார்த்தபடி நின்றுவிட்டு பிறகு ஜியார்ஜை முறைத்துவிட்டு பாதத்தைத் திருப்பித் தன் அறைக்குச் செல்கிறாள்.)

படிக்கட்டுகள். மேற்பார்வையாளர் படியில் விரைந்து இறங்க அவர் மனைவியும் பின்தொடர்கிறாள்.

எம்மா

(உணர்ச்சி மிகுந்தவளாய்)

பொறுங்கள்! நம் மகன் என்ன செய்தான்? தயவுசெய்து சொல்லுங்கள். ஏன் இத்தனை கோபம்?

(அவர் கதவைத் திறப்பதற்கு முன் சரியாக அவர் முன்னால் சென்று வழியைத் தடுத்தபடி நிற்கிறாள்.)

எம்மா

(மன்றாடும் தொனியில்)

தயவுசெய்து அமைதி கொள்ளுங்கள். என்னிடம் சொல்லுங்கள்.

மேற்பார்வையாளர்

(அவளை விட்டு நீங்கிச் சென்றாக வேண்டும் என்ற தேவையுடன்)

தயவுசெய்து இதில் தலையிடாதே. என்னைத் தனியாக விடு. இப்போதே நான் சீமானைச் சென்று சந்தித்தாக வேண்டும். அவர்…

(சரியாக அந்நொடியில் மாடியிலிருந்து சிஜியின் குழலொலி தெளிவாகக் கேட்கிறது. நீண்டு நெடியதாய் அது ஒலிக்கிறது. ஒரு நொடி தன்னிலை மறந்துபோன மேற்பார்வையாளர் அருகில் இருந்த மாட்டியில் தொங்கிய குதிரை விளாற்றை எடுத்துக்கொண்டு படியில் ஏறினார். அறையில் தன் மகனை அடித்து வெளுக்கும் குரல் கேட்கிறது. அதைத் தொடர்ந்து ஊதல் ஒலிக்கு மாற்றாக ஜியார்ஜ் வலியால் அலறும் குரல் கேட்கிறது. சிறு தயக்கத்திற்குப் பிறகு தன் கணவனைத் தொடர்ந்து படிகளில் ஏறுகிறாள் எம்மா. இப்போது அவள் தன் கணவனைக் கட்டுப்படுத்த செய்யும் முயற்சிகள் வீணாகும் ஒலி கேட்கிறது.)

எம்மா

தயவுசெய்து விட்டுவிடுங்கள். அவனைக் கொன்றுவிடாதீர்கள். 

69. உள்ளே – வெளியே / பகல்: பண்ணை. உணவு அறை. முற்றம்.

சாப்பாடு முடிந்தது. குற்றேவல்காரி ஒரு பெரிய தாம்பாளத்தில் பாத்திரங்களை எடுத்து வைத்து மேசையைத் தூய்மை ஆக்குவதை சீமாட்டி கவனிக்கிறாள். சீமான் தன் மனைவிக்கு முதுகைக் காட்டியபடி நிற்கிறார். தனக்கென ஒரு குவளை பிராந்தியை ஊற்றிக்கொள்கிறார்.

சீமான்

அங்கே ஏஜென் பகுதியில் தென்படும் பூச்ச மரங்களோடு சேர்த்தால் 6000 கன மீட்டர்கள் வரும். தொடர்ந்து வேலை வாங்கினால் மூன்றே வாரங்களில் அவர்களால் இந்தப் பணியை முடிக்க முடியும். மாதத்தின் கடைசி வரை நாம்..

(குற்றேவல்காரி தாம்பாளத்துடன் நகர்கிறாள்.)

சீமாட்டி

(அவரை இடைமறித்து)

நான் இங்கே இருக்க மாட்டேன்.

சீமான்

(ஒன்றும் புரியாதவராய்)

என்ன சொன்னாய்?

சீமாட்டி

நான் இங்கே இருக்க மாட்டேன்.

சீமான்

(அவளை நோக்கித் திரும்பி)

இதற்கு என்ன அர்த்தம்?

சீமாட்டி

அதாவது நான் என் பிள்ளைகளுடன் இங்கிருந்து கிளம்பப் போகிறேன் என்று அர்த்தம்.

சீமான்

பிள்ளைகளைக் கூட்டிச் செல்கிறாயா? என்னதான் நினைக்கிறாய் நீ?

சீமாட்டி

ஆர்மின்! இதைப் புரிந்துகொள்வது அத்தனை கடினம் இல்லையே?

(அமைதி.)

சீமான்

அதை எப்படி நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறாய் என்பதை நான் அறியலாமா?

சீமாட்டி

(மெளனமாக)

இப்போது வரை அறியேன். ஆனால் என்ன நடந்தாலும் சரி, நாங்கள் இவ்விடம் நீங்குகிறோம்.

சீமான்

(கேலியாக)

நாங்கள்.

(சீமாட்டியின் பார்வை, இந்த நகைப்புக்கெல்லாம் நான் ஆளில்லை என்பதாக இருந்தது.)

சீமாட்டி

ஆம்.

(மேசையின் எச்சங்களைத் தூய்மையாக்க மீண்டும் குற்றேவல்காரி அங்கே வருகிறாள். அது நீண்ட மெளன இடைவெளிக்குக் காரணமாகிறது. சீமான் தன் மதுவை அருந்திவிட்டு அங்கிருந்து நகர்ந்து சாளரத்தின் அருகே சென்று காத்திருக்கிறார். குற்றேவல்காரி நகரும்போது கவனமாகச் சீமாட்டியை உற்றுப் பார்க்கிறாள்.)

சீமாட்டி

(குற்றேவல்காரியிடம்)

இனி உனக்கு வேலை ஏதும் இல்லை. நீ செல்லலாம்.

குற்றேவல்காரி

நல்லிரவு சீமாட்டியே! நல்லிரவு சீமானே!

சீமாட்டி

நல்லிரவு.

(குற்றேவல்காரி நீங்கிய பிறகும் அவர்கள் நெடுநேரம் மெளனமாகவே இருந்தனர். இறுதியாக அவள் பேசினாள்.)

சீமாட்டி

நான் ஒரு மரியாதை காரணமாகவே இத்தாலியிலிருந்து திரும்பி வந்தேன். நமக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்துக்கொள்ள விரும்பினேன்.

சீமான்

(திரும்பி)

நீ எனக்கு வாய்ப்பளிக்க விரும்பினாயா?

சீமாட்டி

ஆம்.

சீமான்

அப்படியா! என்னே அருமை! இப்போது அந்த வாய்ப்பையும் பறிகொடுத்துவிட்டேனா என்ன?

(மெளன இடைவெளி.)

சீமாட்டி

(மென்குரலில்)

இது நம் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சீமான்

என்ன?

சீமாட்டி

உங்கள் நையாண்டிப் பேச்சு.

சீமான்

சரி, நமக்கிடையே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைதான் என்ன?

(சீமாட்டி அவரை நோக்குகிறாள். எழுந்தவள், அந்த அறையை விட்டு வெளியேற விரும்புகிறாள்.)

சீமான்

(சடுதியில் கத்துகிறார்)

இங்கேயே இரு!!

(அவள் திரும்பி அவரைப் பார்க்கிறாள்.)

சீமான்

(மென்மையாக)

நான் சொன்ன பிறகுதான் இந்த அறையை விட்டு நீ செல்ல வேண்டும்.

(அவள் அவரைப் பார்க்கிறாள்.)

சீமாட்டி

நன்று.

(அவள் மீண்டும் இருக்கையில் சென்று அமர்கிறாள்.)

சீமாட்டி

நான் இதைச் சொல்ல வேண்டாமென்று எண்ணி இருந்தேன். ஆனால் என்னை நீங்கள் கட்டாயமாக அந்த நிலைக்குத் தள்ளிவிட்டீர்கள். எட்வார்டோ மாமாவுடன் நான் வசித்தபோது ஒருவருடன் காதல் வயப்பட்டேன். அவர் வங்கியில் பணியாற்றுகிறார். எட்வர்டோ மாமாவுக்குப் பணமுடை ஏற்பட்டபோது அதைத் தீர்த்துத் தந்தார். அவர் என்னுடன் காதல் செய்தார். குழந்தைகளையும் மிகவும் நேசித்தார். சிஜி சற்றே ஆரோக்கியத்துடன் இருக்கிறான் என்றால் அதற்கு அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இதையும் தாண்டித்தான் நான் இங்கு மீள வந்தேன். ஏன்? ஏனென்றால் உங்களுடனான வாழ்க்கைக்கு மதிப்பளித்தேன். ஆனால் இந்த இடத்தை இனியும் என்னால் தாள முடியாது. இது எனக்கான தனிப்பட்ட முடிவல்ல. உங்களோடு சேர்ந்து வாழ்வது மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதை நான் ஏற்பேன். ஆனால் சிஜிக்காகவும் இரட்டையர்களுக்காகவும் அவர்கள் இந்த வன்மம், வெறி, மனிதாபிமானம் இன்மை, தீங்கு யாவும் நிறைந்த இந்தச் சூழலில் வாழாமல் இருப்பது அவசியம் என்பதாலும் நான் இங்கிருந்து கிளம்பியாக வேண்டும். சிஜியின் குழல் விசயத்தில் நடந்ததே இறுதி எச்சரிக்கை. எனக்கு இந்தத் தண்டனைகள், அச்சுறுத்தல்கள், பழிவாங்கும் வெறிச்செயல்கள் யாவையும் கடும் சோர்வை அளிக்கின்றன.

(மெளனம்.)

சீமான்

நீ அவனுடன் படுத்தாயா?

சீமாட்டி

(ஏளனமாகச் சிரித்தபடி)

உங்களுக்கு எதுவுமே புரியாது?

சீமான்

நீ அவனுடன் படுத்தாயா?

(மெளனம்.)

சீமாட்டி

(மெல்லிய குரலில்)

இல்லை. நான் அவருடன் படுக்கவில்லை.

(மெளனம்.)

சீமான்

நீ பொய் சொல்கிறாய், இல்லையா?

(சீமாட்டி அவரைப் பார்க்கிறாள். அவள் எழுந்து மீண்டும் அறையை விட்டு வெளியேற நினைக்கிறாள். அதே கணத்தில் யாரோ கதவைத் தட்டுகின்றனர். எரிச்சலைத் தன் முகத்தில் காட்டிவிட்டு சீமான் அழைக்கிறார்.)

சீமான்

உள்ளே வாங்க!

(மேற்பார்வையாளர் வருகிறார்.)

மேற்பார்வையாளர்

நன்னாள். உங்களோடு சற்று பேச வேண்டும் சீமான் அவர்களே!

சீமான்

(எரிச்சலுடன்)

ஏன் நாளைக்கு ஒத்திவைக்க முடியாத அவசரமா?

மேற்பார்வையாளர்

மிகவும் அவசரமான செய்தி. இல்லாவிடில் இத்தனை நேரம் கழித்து உங்களைத் தொந்தரவு செய்திருக்க மாட்டேன்.

(எரிச்சலுடனேயே சீமான் அவரை அழைத்துக்கொண்டு அறையை நீங்குகிறார். அவர்கள் செல்லும்போது சீமாட்டியைப் பார்த்துத் தலையசைத்து முகமன் செய்கிறார் மேற்பார்வையாளர். கதவு மூடப்பட்டதும் அவள் ஒரு கணம் நின்று, சாளரத்தின் அருகே சென்று சிந்தனையுடன் வெளியே பார்க்கிறாள். மதுக்கூடத்திற்குச் சென்று சிறிய குவளையில் பிராந்தியை நிரப்பி அருந்துகிறாள். அவள் கைகள் சிறிது நடுங்குகின்றன. குவளையில் அவ்வப்போது ஒரு சிறு மிடறை அருந்தியபடி வெளியே பார்த்துக் காத்திருக்கிறாள்.)

கீழே முற்றத்தில்.

சில மக்கள் அச்சத்துடன் நடந்தபடி இருக்கின்றனர். ஆனால் அப்படியொன்றும் விசித்திரமாகவும் இல்லை. சேணம் பூட்டப்பட்ட குதிரையொன்று கொட்டிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. இறுதியில் உணவறையின் கதவு மீண்டும் திறக்கப்படுகிறது. சீமான் உள்ளே வருகிறார். அவர் பதற்றத்துடன் இருக்கிறார். அதற்குக் காரணம் தன்னுடனான உரையாடலா அல்லது மேற்பார்வையாளர் சொன்ன செய்தியா என்று தெரியாமல் தவிக்கிறாள் சீமாட்டி. சீமான் சில அடிகள் நடந்து ஆழ்சிந்தனையுடன் நின்று தன் மனைவியைப் பார்க்கிறார். அவள் இறுதியாகக் கேட்கிறாள்.

சீமாட்டி

என்ன நடக்கிறது?

சீமான்

ஆஸ்திரிய அரசணையின் வாரிசை அவர்கள் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். செராஜிவோவில். 

70. வெளியே / பகல்: கிராமமும் அதைச் சுற்றிய வெளியும்.

காட்சி 57ல் இருந்த அதே அமைப்பு. கிராமம் கோடையின் மிளிர்வில் அழகுக் கோலம் பூண்டிருக்கிறது.

கதைசொல்லி

செய்தி கிராமம் முழுவதும் காட்டுத்தீயைப் போலப் பரவியது. விளைவுகள் எப்படி இருக்கும்? முதன்முதலில் போர் என்ற சொல்லைப் பயன்படுத்தியவருக்குக் கடுமையான எதிர்வினைகள் வந்தன. ஆனால் அது சொல்லப்பட்ட பின்னர் எங்கள் அனைவரது எண்ணங்களிலும் மர்மமான முறையில் பிடிவாதமாக அது நிலைத்தது. நான் போர் தொடங்கினால் என்ன செய்வது என்பது பற்றி முடிவெடுப்பதற்காக ஏவாவைச் சந்திக்க நகரத்திற்குச் செல்ல விரும்பினேன். ஒருவேளை அவளது தந்தை குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு முன்பாகவே திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கக்கூடும். இதற்கு முன்பு தன் பெற்றோரைக் காண்பதற்காக ஏவா ஓட்டிச்சென்ற அதே மிதிவண்டியைச் சீமாட்டியிடம் கோரினேன். வருகின்ற வார இறுதியில் அதில் சென்று அவளைச் சந்திக்க வேண்டுமெனத் திட்டமிட்டேன்.

-தொடரும்.