2019-ம் ஆண்டு ஈரோட்டில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாகச் சிறுகதை விவாத அரங்குகள் நடத்தப்பட்டன. அதில் எழுத்தாளர் சாம்ராஜ் “இலக்கியத்தில் பகடி” என்கிற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார். தமிழ் நவீனச் சிறுகதைகளில் பகடி எனும் அம்சம் எவ்வாறு இயங்கி வந்துள்ளது என்கிற சித்திரத்தை அளித்தார். இறுக்கமான வாழ்க்கைச் சூழலில் பகடி எவ்வாறு ஆசுவாசத்தையும் தப்பிச்செல்லும் வழிகளையும் உருவாக்கிக் காட்டியது என்பதாக அவரது உரை நிகழ்ந்தது. அரங்கிற்கு வெளியே அதைப் பற்றிய உரையாடல் நீண்டது. அப்போது ஜெயமோகன் நகைச்சுவையின் வகைமைகளை விளக்கினார். “நகைச்சுவை (humor) என்பது பொதுமையான ஒரு பதம். அதில் துணுக்கு (joke), வார்த்தை விளையாட்டு (wit), பகடி, அங்கதம் எனப் பலப் பிரிவுகள் உள்ளன. முதல் இரண்டும் முதன்மையாகத் தொழில்நுட்பத்தை நம்பி இயங்குகின்றன. ரசனையின் கீழ்நிலையில் இருப்பவை. அங்கதம் அதன் உச்சநிலை. ஏனென்றால் பகடியில் இருக்கும் கசப்பும் விமர்சனத்தன்மையும் அதில் இருக்காது. வெறும் ஞானத்தின் துணை கொண்டு மட்டும் வெளிப்படுவது அங்கதம். கருணையைத் தன் சாரமாகக் கொண்டுள்ளது” என்றார். உலக இலக்கியத்தில் சகியின் (Saki) சிறுகதைகளையும் இந்திய இலக்கியத்தல் பஷீரின் எழுத்துகளையும் அவ்வகைமையைச் சேர்ந்தவை என்றார். “தமிழ் இலக்கியத்தில் எவரேனும் இருந்துள்ளார்களா?” எனக் கேட்டேன். கொஞ்சம் யோசித்து “எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தைச் சொல்லலாம்” என்றார்.
தமிழ் நவீன இலக்கியத்தில் முன்னோடிகள் எனும் வகையில் மட்டும் சிலரின் பெயர்கள் நினைவுறுத்தப்படும். ஒரு குறிப்பிட்ட அழகியல் வகைமையைத் தொடங்கி வைத்தவர் என்பதால் அவ்விடம் அவர்களுக்கு இருக்கும். உதாரணமாக ந.பிச்சமூர்த்தி. முன்னோடி என்பதால் மட்டும் நினைவுகூரப்படுபவர். அவருடைய படைப்புகளை வாசிக்கும் புதிய வாசகர்கள் அரிதினும் அரிது. அவ்வரிசையில் இன்னொரு பெயராகவே எம்.எஸ்.கல்யாணசுந்தரமும் இருந்தார். ஆனால் “இலக்கிய முன்னோடிகள்” நூலில் அவரைப் பற்றிய ஜெயமோகனின் கட்டுரையைப் படித்ததும் அவரது படைப்புகளை, குறிப்பாக அவரது “இருபது வருஷங்கள்” நாவலைப் படிக்கும் ஆவல் ஏற்பட்டது.
எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அதிகமாக எழுதியவரில்லை அல்லது அவர் எழுதியவற்றில் அதிகம் கிடைக்கவில்லை. அவரது காலத்துக்குப் பிறகுதான் அவரது நூல்கள் அச்சேறின. “பொன்மணல்” எனும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் “பகல்கனவு”, “இருபது வருஷங்கள்” எனும் இரு நாவல்களும் மட்டுமே கிடைக்கின்றன. அவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களும் அதிகம் கிடைக்கவில்லை. அவருடைய சமகாலத்தவர்களான தி.ஜ.ரா, கா.நா.சு முதலானோர் எழுதிய குறிப்புகள் மூலமே அவரைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. தபால் தந்தி துறையில் வேலை பார்த்திருக்கிறார். இந்தியா முழுக்கச் சுற்றியிருக்கிறார். அறிவியலில் ஆர்வம் இருந்திருப்பது அவருடைய சிறுகதைகளின் கருக்களில் வெளிப்படுவதைக் காணலாம். சிறந்த உடல்நிலை கொண்டவரல்ல. இறுதிக் காலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் படைப்புகளை எதிர்கொள்வதற்கு இன்றைய வாசகருக்கு ஒரு சிக்கல் உள்ளது. அச்சிக்கல் இதுவரை தமிழின் சிறந்த நாவல்களாக இருப்பவற்றின் பொதுத்தன்மையால் எழுவது. அதை இவ்வாறு சொல்லலாம். பெரும்பாலும் அனைத்து சிறந்த நாவல்களும் எதிர்மறைத்தன்மையை நம்பி இயங்குபவை. இலக்கிய விமர்சகர்கள் அதை இக்கட்டு (crisis) எனக் கூறுவர். அதை எவ்வளவு வலிமையாக எதிர்கொள்கிறதோ படைப்பு அவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பர். உதாரணமாக, “அம்மா வந்தாள்” நாவல், பாபு காவிரிக் கரையோரமாக இருந்துகொண்டு அன்றைய இரவு தான் தங்கியிருக்கும் வீட்டிற்குச் செல்லத் தயங்குவதில் ஆரம்பமாகிறது. இந்துவை எதிர்கொள்வதில் இருக்கும் இக்கட்டிலிருந்து நாவல் மேலெழுகிறது. உண்மையில் வாசகர்கள் நாவலில் ஒன்றிணையும் புள்ளியென்பது அதுதான். அவ்வாறாக, படைப்புகள் அவ்வகையான தடைப்புள்ளிகளால் தன் எலும்புச் சட்டகத்தை உருவக்குகின்றன.
எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் “இருபது வருஷங்கள்” நாவலில் அவ்வகையான தடைகள் இல்லை. ஆகையால் நாவலை வாசிக்கும் வாசகர் இயல்பாக நாவல் மேலோட்டமாக இருக்கிறது என்றோ தீவிரத்தன்மை இல்லை என்றோ கருதும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. எதிர்மறைத்தன்மையே தீவிரம் என நம்மையும் அறியாமல் நாம் கொண்டுள்ள வாசிப்புப் பழக்க மனத்தால் ஏற்படும் குறைபாடு அது.
நாவல் கேசவ ராவ் எனும் லட்சியவாதியின் வாழ்க்கைப் பயணத்தைத் தன் மையக் கதையோட்டமாகக் கொண்டுள்ளது. காந்திய இயக்கத்தால் தூண்டப்பட்டு தான் வகிக்கும் சாரணர் இயக்கத்தின் தலைமைப் பதவியை ராஜினாமா செய்வதில் நாவல் ஆரம்பமாகிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பலருடன் சேர்ந்து கேசவ ராவ் சிறை செல்கிறார். வழக்கமான தீவிர இலக்கியப் படைப்புகளில் இத்தருணத்தில் அவர்களது சித்ரவதைகளும் இன்னல்களும் சித்தரிக்கப்படும். ஆனால், எம்.எஸ்.கல்யாணசுந்தரம் வேறொரு உலகத்தைக் காட்டுகிறார்.
அங்கு சிறைப்பட்டிருக்கும் காந்தியவாதிகளைச் சிறை அதிகாரிகளால் சமாளிக்க முடியவில்லை. உழைக்காமல் உண்பது தங்களது கொள்கைகளுக்கு எதிரானது என்று கூறி தங்களுக்கு ஏதாவது வேலை தருமாறு சிறைக் காவலதிகாரியை நிர்பந்திக்கின்றனர். அவர் திணறுகிறார். அதன் விளைவாக எவ்விதப் பயனுமின்றி பலநூறு கைப்பைகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் அங்கிருக்கும் கைதிகளுக்கிடையே இயல்பாக ஒரு கூட்டுக்குழுத்தன்மை ஏற்படுகிறது. புதிதாக வருபவர்களுக்கு வரவேற்பு விழா எடுப்பது தொடங்கி விடுதலையாகிச் செல்பவருக்கு வழியனுப்பும் விழா செய்வதுவரை நீள்கிறது.
கேசவ ராவிற்கு வீட்டிலிருந்து கடிதம் வருகிறது. மனைவி சரியாகச் சாப்பிடாமல் அவரையே எண்ணி கவலைகொண்டிருக்கிறார். அதற்கு கேசவ ராவ், தான் இங்கு கேசரி, முந்திரிப் பாயாசமென உண்டு மகிழ்வாக இருப்பதாகவும், மனைவியைக் கவலையின்றி நன்றாகச் சாப்பிட்டு உடம்பைக் கவனித்துக்கொள்ளுமாறும் ‘புத்திசொல்லி’ பதில் கடிதம் எழுதுகிறார். இப்படியான சின்னச் சின்னச் சித்திரங்கள் வழியாக நாவல் விரிகிறது. இவற்றிற்குப் பின் இருக்கும் வாழ்வின் விசித்திரங்களையும் மனித மனத்தின் இயல்புகளையும் தனக்கேயுரிய அங்கதப் பார்வையுடன் சித்தரிக்கிறார் ஆசிரியர். இதையே அவரது முதன்மைச் சிறப்பு எனக் கூறலாம்.
இவ்வகையான நேர்நிலை வாழ்க்கைப் பார்வை மூலமாக அவரிடமிருந்து வெளிப்படும் மற்றொரு தனித்தன்மை இதில் வரும் துணைக் கதாபாத்திரங்கள். முக்கியமாக, இதில் பைரி (பைரவன் எனும் பெயரின் பெண்பால் என நினைக்கிறேன்) எனும் நாய் வருகிறது. கேசவ ராவ் விடுதலையடைந்து வீட்டின் தெருமுனையை நெருங்குகையில் அவருக்குக் கவலை சூழ்ந்துகொள்கிறது. வீட்டில் நெருக்கியடித்து குழுமியிருக்கும் உறவினர்களும் அண்டை வீட்டாரும் துக்கம் விசாரித்து உயிரை வாங்குவார்கள் என நினைக்கிறார். நல்லவேளையாக, அவரது செல்ல நாய் அவரை நோக்கிப் பாய்ந்து வந்து அவரைச் சுற்றி ‘தட்டாமாலை’ ஆடுகிறது. வீட்டிற்கு நுழைந்த பின்பும் துள்ளிக் குதித்து அனைத்து இடங்களுக்கும் தாவி அங்கிருக்கும் சூழலையே மாற்றிவிடுகிறது. உண்மையில், இத்தருணத்தை இந்த நாவலுக்கான கவியுருவகமாகவே (Metaphor) சொல்ல முடியும். வாழ்வின் அனைத்து இக்கட்டுகளிலும் விதவிதமான பைரிகளை நடுவில் ஓடவிடுகிறார் ஆசிரியர். அது நம்மைச் சுற்றிப் படர்ந்து குதூகலத்தால் நம்மை நிறைத்துவிடுகிறது.
எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தை ஏதாவது ஒரு காரணத்திற்காக மட்டும் நினைவுகூர வேண்டுமென்றால் அவரது பெண் கதாபாத்திரங்களுக்காக எனக் கூறலாம். நம் தமிழிலக்கிய முதன்மைப் படைப்பாளிகளான அசோகமித்திரன், ஜானகிராமன் தொடங்கி சு.வேணுகோபால் வரை பலரும் விதவிதமான பெண் கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் நிச்சயம் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்திற்குத் தனித்த இடமொன்று கொடுக்கலாம். ஏனெனில் இவர் காட்டும் கதாபாத்திரங்கள் இலட்சியங்களால் உந்தப்பட்டவர்கள். அதே சமயம் பெண்களுக்கான இயல்பான நுண்ணுவர்வும் நளினமும் கொண்ட கதாபாத்திரங்கள்.
உதாரணமாக, சாவித்திரி எனும் கதாபாத்திரம். கேசவ ராவ் சிறையிலிருந்து வெளிவந்து குறைந்த செலவில் மருத்துவமனை ஆரம்பித்து சிகிச்சையளிப்பதைக் கேள்விப்பட்டு மதுரையிலிருந்து தனியாகக் கிளம்பி வந்துவிடுகிறாள். அவளைக் கேசவ ராவின் மனைவி வீட்டில் எதிர்கொள்ளும் காட்சி அழகான தருணங்களில் ஒன்று. வந்தவளோ இலட்சியக் கனவுகளுடன் வாழ்வை எதிர்கொள்ளத் துடிக்கும் இளம்பெண். இங்கிருப்பவளோ வீடும் கணவனுமாகவே தன் உலகத்தை அமைத்துக்கொண்டவள். அவர்களிடையே மெல்லிய கிண்டலும் கேலியுமாக உரையாடல் நீள்கிறது. அதே போல், இன்னொரு பெண் கதாபாத்திரம் ஜானகி. முரண்டு பிடிக்கும் நோயாளியை நயந்து மருந்தைக் கொடுக்கும் இடம் உதாரணம். பரிவும் தாய்மையும் இனிமையுமாக அத்தருணம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். இயல்பாகவே பெண்களுக்கு இருக்கும் ஆட்கொள்ளும் தன்மையின் கீற்றை நம்மால் அங்கு உணர்ந்துகொள்ள முடியும்.
இங்கு முக்கியமான ஒன்றைச் சொல்ல வேண்டும். மேற்கூறிய நேர்நிலை அம்சங்கள் அனைத்தும் வாசகரை ஒரு சௌகரிய இனிய மனநிலையில் (feel good) வைத்திருப்பதற்காகச் செய்யப்படுவதல்ல. உண்மையில், இத்தருணங்கள் வழியாக ஆசிரியர் ஒரு பயணத்தை நிகழ்த்துகிறார். அதுவே நாவலுக்கு வடிவ ஒருமையை அளிக்கிறது. இல்லையெனில் இந்த நாவல் வெறும் உதிரி இனிய தருணங்களை மட்டும் காட்டும் படைப்பாக நின்றிருக்கும்.
அந்தப் பயணம் என்பது ஒரு மையமாக எழும்பி, கேள்வி மூலம் நிகழ்த்தப்படுகிறது. கேசவ ராவின் வாழ்க்கை இலட்சியவாதத்தன்மை கொண்டது. வாழ்வின் அனைத்து கூறுகளிலும் ஒளியைக் காண்பவர் அவர். ஆகவே ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு, இன்னும் பெரியவற்றுக்குச் செல்கிறார். அது எதுவரை செல்லும் என்பதே ஆசிரியரின் மையக் கேள்வியாக இருக்கிறது. இறுதிவரை மனிதனுக்கு அந்த அருள் இருக்கிறதா என வினவிப் பார்க்கிறார்.
ஊரில் குறைந்த செலவில் நடத்தப்படும் மருத்துவமனை வெற்றிகரமாகச் செயல்படுகிறது. ஆதலால் மேலும் பெரிதாக ஒன்றைச் செய்கிறார். அப்போது இரண்டாம் உலகப்போர் ஆரம்பிக்கிறது. அதில் பிரிட்டிஷ் ராணுவம் சார்பாக மருத்துவ சேவை புரிய மலேசியாவிற்குச் செல்கிறார். அங்கு ஜப்பானியப் படையினரால் பிரிட்டிஷார் சிறை பிடிக்கப்படுகிறார்கள். அதில் கேசவ ராவும் இருக்கிறார். ஆனால் கடும் தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக அவர்கள் ஒரு தீவிற்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு தொற்றுநோய் தாக்கி இரு தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். இருவருக்கும் பொதுவாக கேசவ ராவ் மருத்துவம் பார்க்கிறார். நாவலின் சிறப்பான தருணங்களில் ஒன்று இப்பகுதி. சுற்றியிருக்கும் இயற்கையே அவர்களுக்கு மருத்துவப் பொருட்களாக மாறுகிறது. அத்தீவில் விளையும் இளநீர்க் காய்கள் அவர்களின் நரம்புகளில் செலுத்தப்படும் குளுகோஸ்களாக மாறுகின்றன. அதே போல் சிறு சிறு புண்களைத் தைப்பதற்கு அங்கிருக்கும் தென்னை மட்டைகளின் நார்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் இறுதியாக ஒரு இடர் வருகிறது. நாவல் இருண்மை அடையும் முதல் இடம் இதுதான். உலகப்போர் முடிந்து நாடு திரும்பும் கேசவ ராவ், தன் சிகிச்சைக்கான வெகுமதியாக ஜப்பானியப் படைத்தளபதி அளித்த துப்பாக்கியின் பொருட்டு இந்தியாவில் விசாரிக்கப்படுகிறார். அவரின் பதில்களால் திருப்தியுறாத இந்திய அரசாங்கம் அவரைச் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறது. ஒருவழியாக வெளிவரும் கேசவ ராவால் வீட்டில் இருக்க முடியவில்லை. மனம் மீண்டும் மீண்டும் தீவுகளில் கழித்த நாட்களையே நினைக்கிறது. ஒவ்வொரு நாளையும் நிச்சயமின்மையில் கழித்தாலும் தான் முழு வீச்சோடு வாழ்ந்தது அத்தீவில் செலவிட்ட காலகட்டத்திலேயே என அவருக்குத் தோன்றுகிறது. சமயம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டை விட்டுச்சென்று அலைந்துவிட்டு வேறுவழியின்றி மீண்டும் வீட்டுக்கே வருகிறார். தன் இறுதி நாட்களில் மரணப்படுக்கையில் அவர் தவிப்பாக இருப்பதுடன் நாவல் நிறைவுகிறது. அவருடைய ஆயுள் இருபது வருஷங்கள் என்றும் அதுவே அவர் உண்மையாக வாழ்ந்த வயது என்றும் அவ்வாறு பார்த்தால் நமது வயது எல்லாம் சில வினாடிகள் மட்டுமே எனும் கூற்றுடன் நாவல் முடிவுறுகிறது.
ஓர் இலட்சியவாதி சரிவுறும் காலகட்டம் என்பது அவரது முதுமைப் பருவமாக நாவலில் காட்டப்படுகிறது. தன் உடலாற்றல் தீர்ந்தவுடன் சோர்வு அவரைப் பீடித்துக்கொள்கிறது. நாவலின் முதற்பகுதியில் மகிழ்ச்சித் தருணங்களாகக் காட்டப்பட்ட வீடு, இப்போது அவருக்குச் சலிப்பைத் தருகிறது. வாழ்க்கையின் பெரு நிச்சயமின்மையை வெளியே கழித்த நாட்களுக்குப் பிறகு அவரால் வீட்டில் அமைய முடியவில்லை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குச் சென்றுகொண்டிருந்த அவரது வாழ்க்கைப் பயணத்தில் திரும்புதல் என்பது அறவே இல்லை. அப்படிச் சென்றால் அது பின்தங்குதல் என்றேயாகும். அதில் அவர் நிலைகுலையாமல் சமநிலை பேண முடியாது. ஒருவகையில் இந்த முடிவு சரியானதுதான். இந்த நாவல் நிஜ மனிதரை அடிப்படையாகக் கொண்ட படைப்பு என்பதால் மையச் சம்பவங்களை மாற்ற முடியாது. அவ்வாறாகத்தான் நாவல் முடிவடைய முடியும்.
ஆனால் நாவலுக்கு வெளியே நாம் யோசித்துப் பார்க்க முடியும். அவரது இயல்பான அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்க முடியும்? நம் மரபில் துறவறம் என்கிற கருத்தாக்கம் உள்ளது. வாழ்க்கை முழுவதையும் நிச்சயமின்மைக்குக் கொடுத்துவிடுவதும், தீவில் தானிருந்த சில நாட்களையே தன் மிச்ச வாழ்நாளாக மாற்றிக்கொள்வதும் துறவறம். ஒருவேளை அவ்வாறாக கேசவ ராவ் சென்றிருந்தால் இந்த இறுதிகட்டச் சோர்வு அவரில் நிகழ்ந்திருக்காதோ?
முன்னோடிகள் முக்கியத்துவம் பெறுவதில் ஒரு பொதுமை இருப்பதாகத் தோன்றுகிறது. உதாரணமாக, கு.ப.ரா. தனியாகப் பார்த்தால் அவருடைய சிறுகதைகளைச் சிறப்பானவை எனக் கூற முடியாது. ஆனால் அவருக்குப் பின் அசோகமித்திரன், ஆதவன் என ஒரு நிரை வந்து சிறந்த படைப்புகளை எழுதியதால் கு.ப.ரா.வுக்கு ஒரு முன்னோடித் தன்மை ஏற்பட்டுவிட்டது. அதாவது, ஒரு அழகியல் மரபானது வழித்தொடர்ச்சி கொள்ளும் போதுதான் ஒரு முன்னோடியின் இடம் முக்கியத்துவம் பெறுகிறது.
அப்படிப் பார்க்கும் போது எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் எழுத்துக்கு வழித்தொடர்ச்சி அமையவில்லை. ஆகவே அவருடைய எழுத்துகளை வாசிப்பதில், அவரை ரசிப்பதில், பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. அதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் இல்லாமல் இல்லை. அவர் எழுதிய காலகட்டத்தில் வணிக இலக்கியம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. போலியான நம்பிக்கையூட்டல்களுக்கும் உத்வேகக் கிளர்ச்சிகளுக்கும் எதிராகவே நம் நவீன இலக்கியம் உருவாகி வந்தது. அதனால் நடைமுறை யதார்த்தத்தை, அதன் சிக்கல்களைக் கறாராகச் சொல்ல வேண்டியிருந்தது. ஆகவே, அதை எழுதியவர்களே தீவிர இலக்கியச் சூழலில் பொருட்படுத்தப்பட்டனர்.
ஆனால் இப்போது நடைமுறைப் பார்வை என்ற பெயரில் எதிர்மறையும் சோர்வும் கொண்ட விஷயங்களே மையப்போக்காக உள்ளன. எவ்வித நம்பிக்கையூட்டும் அம்சமும் கேலியுடனேயே அணுகப்படுகிறது. சமூக ஊடகங்களை ஒருமுறை வலம் வந்து பார்த்தாலே நமக்கு அது புரியும். இன்றைய படைப்பாளிக்குச் சவால் என்பது வாழ்வின் இயல்பான வெளிச்சங்களை, பழக்கத்தின் களிம்பு படிந்தவற்றில் இருந்து தருணங்களின் ஒளியைத் துலக்கி எடுப்பதில் உள்ளது.
நமக்குச் சில காலம் கழித்தே ப.சிங்காரம் வந்துசேர்ந்தார். அதே போல, எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தை மீண்டும் வாசிக்கவும் அவரின் அழகியலைப் புரிந்துகொள்ளவும் எப்போதையும்விட இன்றைய காலகட்டமே அவசியமானது. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு விதை தூவப்பட்டு கைப்பிடி நீருக்காகக் காத்திருக்கிறது. நம் வாசிப்பால் அதைச் செழிக்கச் செய்வோம். ‘ஒளியே பார்வையை உண்டாக்குகிறது’ என்றொரு வாசகம் உண்டு. எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் மீதான வாசிப்பும் கவனப்படுத்தலும் அவரது எழுத்துகளுக்கான வழித்தொடர்ச்சியைக் கொண்டுவரட்டும்.