கிளாரா – ராபர்ட்டோ பொலான்யோ

1 comment

தடமுலைகள், மெலிந்த கால்கள், நீல விழிகள். அவளை அப்படித்தான் ஞாபகத்தில் வைக்க விரும்புகிறேன். நான் ஏன் அவளை வெறித்தனமாகக் காதலித்தேன் என்று அறியேன். ஆனாலும் காதலித்தேன். முதல் நாட்கள், முதல் மணித்துளிகள் என்று தொடக்கம் மிகச் சிறப்பாகவே கடந்தன. அவள் பார்செலோனாவுக்கு விடுமுறையைக் கழிக்க வந்தாள். பின்னாட்களில் கிளாரா தெற்கு ஸ்பெயினில் தான் வசித்த நகரத்திற்குத் திரும்பியதும் எல்லாம் சிதையத் தொடங்கின. 

ஓரிரவு என் கனவில் தேவதூதன் வந்தான். வெறுமையாக இருந்த அகன்ற மதுவகக் கூடத்தில் நான் நடந்தபோது ஒரு மூலையில் தன் கைமூட்டினை மேசையில் ஊன்றித் தனக்கு முன்பிருந்த பால் நிறைந்த காஃபியைப் பார்த்தபடி அமர்ந்திருந்த அவனைக் கண்டேன். என்னை நிமிர்ந்து பார்த்து, ‘அவளே உன் வாழ்வின் உயிர்முடிச்சு’ என்று அவன் சொன்னபோது அவன் பார்வையின் வீரியமும் விழியில் கனன்ற அழலும் என்னை அறையைவிட்டே வீசி எறிந்தது. ‘பரிசாரகரே! பரிசாரகரே!’ என்று நான் ஓலமிட்டபடி விழிதிறந்து அந்தக் கொடுங்கனவிலிருந்து தப்பினேன். பல இரவுகளில், நான் யாரைப் பற்றியும் கனவு காணாதபோதும் கண்ணீர் சிந்தியபடியே விழித்தெழுந்தேன். அதற்கிடையே கிளாராவுக்கும் எனக்கும் கடிதப் பரிமாற்றம் தொடங்கி இருந்தது. அவளது கடிதங்கள் சுருக்கமானவை: ‘ஏய், எப்படி இருக்கிறாய்? இங்கு மழை. உன்னை நேசிக்கிறேன். அன்பு..’ ஆரம்பத்தில் அக்கடிதங்கள் என்னை அச்சுறுத்தின. காதலில் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். அவற்றைக் கூராய்வு செய்த பிறகே அவள் இலக்கணப் பிழைகளைத் தவிர்க்க விரும்பியே தன் கடிதங்களைச் சுருக்கமாக அமைக்கிறாள் என்று அறிந்தேன். கிளாரா செருக்கு மிக்கவள். அவளுக்குச் சொற்றொடர்களைச் சீராக அமைக்க வராது. என்னைக் காயப்படுத்தும் விதமாக அவை சுருக்கென வெளிப்பட்டாலும் பரவாயில்லை, தன் இயலாமை வெளிப்படக் கூடாது என்று விரும்பினாள். 

அவளுக்கு அப்போது வயது பதினெட்டு. உயர்நிலைப் பள்ளியை முடித்துவிட்டு தனியார்க் கூடத்தில் இசை பயின்றாள். ஓய்வுபெற்ற நிலக்காட்சி ஓவியரிடம் வரையவும் கற்றாள். அவளுக்கு இசை மீதோ, ஓவியம் மீதோ பெரிய ஆர்வமெல்லாம் இல்லை. அவளுக்கு அவை பிடித்திருந்தன, ஆனால் வேட்கையெல்லாம் இல்லை. ஒருநாள் அவளது வழமையான சுருக்கத் தொனியில், தான் அழகிப் போட்டியில் பங்குபெறப் போவதாகச் சொல்லி எழுதிய கடிதம் வந்தது. மூன்று இருபக்கத் தாள்களை நிரப்பி நான் எழுதிய மறுமடல் அவளது சலனமற்ற அழகு, இனிமை பொங்கும் விழிகள், கச்சிதமான உடல்வாகு உள்ளிட்ட சகலத்துக்குமான போற்றிப்பாடலாக இருந்தது. ரசனை தரத்தில் அக்கடிதம் மோசமாகவே இருந்தது. அதை எழுதி முடித்ததும் அனுப்புவதா வேண்டாமா என்று குழம்பி, ஒருவழியாக அனுப்பிவிட்டேன்.

அவளிடமிருந்து பதில் வர சில வாரங்கள் ஆகின. நான் தொலைபேசியில் அழைத்திருக்கலாம். ஆனால் அழைக்கவில்லை. அந்நாட்களில் நான் நொடித்துப் போயிருந்தேன். போட்டியில் கிளாரா இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தாள். அதற்காக ஒரு வாரம் மன உளைச்சலில் இருந்தாள். ஆச்சரியமாக எனக்கு ஒரு தந்தி அனுப்பியிருந்தாள்: ‘இரண்டாம் இடம் (நிறுத்தம்) உன் கடிதம் கிடைத்தது (நிறுத்தம்) வந்து என்னைச் சந்தி.’

ஒரு வாரம் கழித்து அவள் வசிப்பிடத்திற்குச் செல்லும் புகைவண்டியில் ஏறினேன். விடிந்ததும் கிளம்பும் முதல் வண்டி அது. அதற்கு முன்பு, தந்தி வரப்பெற்றதற்குப் பின் நாங்கள் தொலைபேசிகளில் பேசினோம். அழகிப் போட்டிக் கதையை நான் பலமுறை கேட்டிருந்தேன். இயல்பாகவே, அது கிளாரா மீது தீவிர தாக்கம் செலுத்தியது. எனவே என் பைகளைக் கட்டி, எவ்வளவு விரைவாகக் கிளம்ப முடியுமோ – புகைவண்டியைப் பிடித்து – அவ்வளவு விரைவாகக் கிளம்பி மறுநாள் காலை, நானறியாத அந்தப் புது நகரத்தைச் சென்றடைந்தேன். கிளாராவின் அடுக்ககத்திற்குச் சென்றபோது மணி ஒன்பதரை. அதற்கு முன்பு புகைவண்டி நிலையத்திலேயே காஃபி அருந்தி, சில சிகரெட்டுகளைப் பிடித்து நேரத்தைப் போக்கினேன். கலைந்த கூந்தலுடன் ஒரு குண்டுப் பெண் கதவைத் திறந்தாள். கிளாராவைச் சந்திக்க வந்திருப்பதாகத் தெரிவித்த என்னை இறைச்சியகத்திற்குச் செல்லும் ஆட்டுக்குட்டியைப் பார்ப்பதைப் போலப் பார்த்தாள். அங்கிருந்த கூடத்தில் கிளாராவை எதிர்நோக்கிச் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தேன். அந்நிமிடங்கள் அப்போது வெகு நீண்டவையாகத் தோன்றின. (பின்னொரு நாளில் அதைப் பற்றிச் சிந்தித்தபோது உண்மையாகவே நான் நெடுநேரமாக காத்திருந்தேன் என்று புரிந்தது.) குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதுமில்லை என்றபோதும் அந்த அறை ரம்மியமாக, வரவேற்பளிப்பதாக இருந்தது. நிறைய இரைச்சலோடு நிரம்ப ஒளியும் அங்கிருந்தது. கிளாரா உள்ளே நுழையும் தருணத்தில் தேவதையின் ஆவியைப் போல் இருந்தாள். இப்படி யோசிப்பதும் இப்படிச் சொல்வதும் மடமை என்று அறிவேன். எனினும் அது அப்படித்தான் இருந்தது.

தொடர்ந்து வந்த நாட்கள் இனிமையாகவும் எரிச்சலூட்டுபவையாகவும் இருந்தன. நிறைய திரைப்படங்கள் பார்த்தோம், அநேகமாக நாளுக்கொன்று! காமக்களி புரிந்தோம். (கிளாரா கலவி கொண்டது முதலில் என்னுடன்தான். அது விபத்தைப் போலவோ, கதையைப் போலவோ தோன்றினாலும் இறுதியில் எனக்கு நிறைய படிப்பினையைத் தந்தது.) நாங்கள் தெருக்களில் நடந்தோம். கிளாராவின் நண்பர்களைச் சந்தித்தேன். இரண்டு மோசமான விருந்துகளுக்குச் சென்றோம். அவள் என்ன பதில் அளிப்பாள் என்று தெரிந்தும் என்னோடு வந்து பார்செலோனாவில் வசிக்குமாறு அவளைக் கேட்டேன். ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு இரவு நேர புகைவண்டியைப் பிடித்து பார்செலோனாவுக்குத் திரும்பினேன். அது கொடும் பயணமாக என் ஞாபகத்தில் படிந்திருக்கிறது.

விரைவிலேயே, தான் எழுதியதிலேயே நீண்ட கடிதத்தில், தான் ஏன் இவ்வுறவைத் தொடர முடியாது என்பதற்குச் சில விளக்களைத் தந்திருந்தாள். நான் அவளுக்குத் தாளமுடியாத மன அழுத்தம் (நாங்கள் ஒன்றாக வாழ்வதைக் குறிப்பிடும் விதமாக) தருகிறேனாம். எல்லாம் முடிந்தது என்று குறிப்பிட்டிருந்தாள். அதன்பிறகு மூன்று அல்லது நான்கு முறை தொலைபேசியில் பேசினோம். நானும் அவளை அவமதிக்கும் சொற்களாலும் காதலைப் பறைசாற்றும் வரிகளாலும் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். ஒருமுறை மொராக்கோவுக்குப் பயணம் போனபோது நான் அல்ஜிசிராஸில் தங்கியிருந்த விடுதியிலிருந்து அவளை அழைத்தேன். அப்போது எங்களுக்குள் நாகரிகமான உரையாடல் நிகழ்ந்தது. குறைந்தது அவளேனும் அப்படிக் கருதினாள் அல்லது நான் கருதினேன்.

ஆண்டுகள் கழிந்தன. நான் அறியாமல் விட்ட அவளது வாழ்க்கைப் பக்கங்களை என்னிடம் பகிர்ந்தாள். மீண்டும் சில ஆண்டுகள் கழிந்தபிறகு அவளும் அவள் தோழிகளும் அவள் கதையை ஆரம்பத்திலிருந்தே – குறிப்பாக நாங்கள் பிரிந்ததற்குப் பிறகானதைச் – சொன்னார்கள். நான் வெகு சிறிய கதாபாத்திரம் என்பதால் அவர்களுக்கோ, எனக்கோ, என் இருப்பையோ, விடுதலையோ ஒரு பொருட்டாகக் கருத வாய்ப்பில்லை என்றபோதும் ஏற்றுக்கொள்ள அது எளிதாக இல்லை. எங்கள் அணுக்கத்தின் (அணுக்கம் என்பது அதீதமான சொல்தான் என்றாலும் எனக்குத் தோன்றியதிலேயே அதுதான் சிறப்பான சொல்.) முடிவுக்குப் பிறகு, வெகு விரைவிலேயே கிளாராவுக்குத் திருமணம் நடந்தது. நான் ஏற்கெனவே அவளது ஊருக்குச் சென்றபோது சந்தித்த நண்பர்களுள் ஒருவனே அந்த அதிர்ஷ்டசாலி – கணக்கு சரியாகத்தான் இருந்தது.

ஆனால் திருமணத்துக்கு முன்பு அவளுக்கு உளவியல் பிரச்சினைகள் இருந்தன. அவளது கனவில் எலிகள் வந்தன. இரவுகளில் படுக்கையறையில் கடுமையாக எலிக்கீச்சிடல் கேட்கும். மாதக்கணக்கில், திருமணம் நடப்பதற்கு முன்பாக அவள் கூடத்தில் இருந்த நீளிருக்கையில் படுத்தே உறங்கினாள். திருமணத்துக்குப் பின் அந்த எலிச்சனியன்கள் எல்லாம் மறைந்துவிட்டன என்று நினைக்கிறேன்.

எப்படியோ கிளாராவுக்குத் திருமணம் முடிந்தது. கணவனோ – கிளாராவின் ஆசைக் கணவன் – அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான், அவளையும் சேர்த்து. ஓரிரு ஆண்டுகள் கழித்து – சரியான காலம் எனக்கு நினைவில்லை, மறந்திட்டேன் – அவர்கள் பிரிந்தனர். அது ஒரு இணக்கமான பிரிவு அல்ல. அவன் கத்தினான். கிளாராவும் கத்தினாள். அவனை ஓங்கி அறைந்தாள். அதற்கு மறுவினையாக அவன் விட்ட குத்தில் அவளது தாடை இடம்பெயர்ந்தது. சில நேரங்களில் தனிமையில் இருக்கும்போது எனக்குத் தூக்கமும் வராது, விளக்கை ஏற்றவும் விருப்பம் இருக்காது. அத்தகைய சமயங்களில், அழகிப் போட்டியில் இரண்டாவதாக வந்த கிளாரா, தன் உடைந்த தாடை தொங்க அதைச் சரிவர பொருத்த முடியாமல் ஒரு கையில் மகிழுந்தை இயக்கியபடி மறுகையில் தன் தாடையைத் தூக்கித் தாங்கிக்கொண்டே அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் செல்வதைக் கற்பனையாக நினைப்பேன். அதை வேடிக்கையாக எண்ணிச் சிரிக்க விரும்பினாலும் என்னால் அப்படி எண்ண முடியவில்லை.

எனக்கு உண்மையில் வேடிக்கையாக இருந்தது அவளது முதலிரவுதான். அதற்கு முந்தைய நாளில் ரத்தக்கசிவுக்காக ஒரு அறுவை சிகிச்சை செய்திருந்தாள். எனவே என்னால் அந்தச் சம்பவம் எப்படியும் முழுமையாக நடந்திருக்காது என்றே ஊகிக்க முடிகிறது. என் கற்பனைப்படி இல்லாமலும் இருக்கலாம். அவள் தன் கணவனோடு கலவி செய்தாளா இல்லையா என்று நான் ஒருபோதும் கேட்டதில்லை. அறுவை சிகிச்சைக்கு முன்பே செய்திருப்பார்கள்! எப்படியிருந்தால்தான் என்ன? இந்த விபரங்கள் எல்லாம் அவளைப் பற்றிச் சொல்வதைவிட என்னைப் பற்றித்தான் நன்கு சொல்கின்றன.

எப்படியோ கிளாரா தன் கணவனுடன் ஓரிரு ஆண்டுகளில் மணமுறிவு செய்துவிட்டு படிக்கத் தொடங்கினாள். அவள் மேனிலைப் பள்ளியை முறையாக முடிக்காததால் பல்கலைகழகத்தில் சேர முடியவில்லை. மற்றபடி ஒளிப்பதிவு, ஓவியம் தீட்டுதல் (அவளுக்கு தான் நல்ல ஓவியராவோம் என்ற நம்பிக்கையே இல்லை, இருந்தாலும் ஏன் மீண்டும் மீண்டும் அதைக் கற்க முயன்றாள் என்று தெரியவில்லை), இசை, அச்சுத் தட்டுதல், செய்தித் தொழில்நுட்பம் எனத் தோன்றியவற்றில் எல்லாம் – இளைஞர்கள் வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலையில் அவசரமாகப் படிக்கும் -ஓராண்டு பட்டயப் படிப்புகளைத் தேர்வுசெய்து கற்றாள். அடிக்கும் கணவனை விட்டுத் தப்பியதற்காகக் கிளாரா மகிழ்ச்சியாக உணர்ந்தாலும் ஆழ்மனத்தில் அவள் ஆற்றொணா துயரத்துடனேயே இருந்தாள்.

எலிகள் மீண்டும் வந்தன. அதையடுத்து மன அழுத்தமும் மர்மக் காய்ச்சலும் பின்தொடர்ந்தன. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு, மருத்துவர்கள் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கண்டறியும் வரை – வயிற்றுப் புண்களுக்கு (குறைந்தபட்சம் வயிற்றிலேனும் எந்தப் பிரச்சினையும் இல்லை) மருத்துவம் எடுத்தாள். அந்த நாட்களில்தான் அவள் விற்பனைச் செயலாளர் லூயியைச் சந்தித்தாள். அவர்கள் காதலித்தனர். அவன் அவளை வணிக நிர்வாகம் தொடர்பாக எதையேனும் படிக்கும்படி வற்புறுத்தினான். கிளாராவின் நண்பர்களைப் பொறுத்தமட்டில் அவள் தன் வாழ்நாளின் அன்பனைக் கண்டடைந்துவிட்டாள். வெகு விரைவிலேயே அவர்கள் கூடி வாழ்ந்தனர். கிளாராவுக்கு ஒரு சட்ட ஆலோசனை மையத்திலோ அல்லது ஒரு செயல் நிறுவனத்திலோ அலுவலக வேலை கிடைத்தது. சிரிப்புக்காக எந்தக் குறிப்பையும் விடாமல் ‘மிகவும் சுறுசுறுப்பான வேலை’ என்று அதைக் குறிப்பிட்டாள் கிளாரா. இந்த முறை அவள் வாழ்க்கை மிகச் சரியான பாதையில் சென்றுகொண்டிருந்தது. லூயி எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன் (அவன் அவளை ஒருபோதும் அடித்ததில்லை). நாகரிகமானவன் (இருபது லட்சம் ஸ்பானியர்களில் மொசார்ட்டின் மொத்தத் தொகுப்பையும் தவணை முறையில் வாங்கியது இவனொருவன் மட்டுமே என்று நினைக்கிறேன்.). மிகவும் நிதானமானவன் (அவள் பேச்சை ஒவ்வொரு இரவிலும் வார இறுதிகளிலும் கேட்டு கவனித்தான்.) கிளாராவுக்குத் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ள ஒன்றுமே இல்லை என்றாலும் அவள் தற்புராணம் பாடுவதில் சலிப்படைவதே இல்லை. அவள் இப்போதெல்லாம் அழகிப் போட்டியைப் பற்றி பீற்றுவதில்லை என்றாலும் அவ்வப்போது அந்த நினைவை மீட்டெடுத்துச் சொல்வதுண்டு. இப்போதெல்லாம் தனது மன அழுத்தம், மன நிலையின்மை, தான் தீட்ட விரும்பித் தீட்டாமல் விட்ட ஓவியங்கள் ஆகியவைதான் அவளது முதன்மை பேசுபொருட்கள்.

அவர்களுக்கு ஏன் குழந்தை இல்லை என்று தெரியவில்லை. லூயி குழந்தைகள் மீது மிகப் பிரியமுடையவன் என்று கிளாரா சொல்லியிருந்தாலும் அதற்கான நேரமின்மை அவர்களுக்குக் குழந்தைப் பேறை அளிக்கவில்லை போலும். அவள் தன் நேரத்தை இசை கேட்பதிலும் படிப்பதிலும் செலவிட்டாள். (மொசார்ட்டையும் பின்னாட்களில் வேறு சில இசையமைப்பாளர்களையும் தீவிரமாகக் கேட்டாள்.) புகைப்படங்களும் எடுப்பாள், ஆனால் அவற்றை யாரிடமும் காட்டியதில்லை. அவள் தனக்கே உரித்தான விசித்திரமான பயனற்ற வழிகளில் கற்கவும் தன் விடுதலையைப் பாதுகாக்கவும் முயன்றாள்.

அவள் தன் முப்பத்தொரு வயதில் அலுவலகத்தில் உடன் பணிபுரிந்தவன் ஒருவனுடன் சம்போகித்தாள். அது யதார்த்தமாக நடந்த ஒன்று, பெரிய விசயமில்லை. அவர்கள் இருவருக்குள்ளேயே முடிந்திருக்க வேண்டியது. ஆனால் அதை லூயியிடம் சொல்லும் பெரும்பிழையைச் செய்தாள். கடுமையான சண்டை. தான் வாங்கி வந்த ஓவியத்தின் மீது நாற்காலியை ஓங்கி அடித்தான் லூயி. குடித்தான். அவளிடம் ஒரு மாதம் வரை பேசவில்லை. கிளாராவைப் பொறுத்தவரை அன்றிலிருந்து எதுவுமே சரியில்லை. சமாதானப் பேச்சு, கடற்கரை நகருக்குச் சென்று வந்த சுற்றுலா இரண்டும் உதவவில்லை. அந்தச் சுற்றுலாவே மந்தகதியில் நடந்து சோகமாக முடிந்தது.

முப்பத்திரண்டு வயதின் போது அவளது காம வாழ்வு அருகி ஏறத்தாழ இல்லாமலே போனது. அவளுக்கு முப்பத்து மூன்று வயதாகும் நிலையில் லூயி அவளிடம் தான் அவளை மிகவும் நேசிப்பதாகவும் மரியாதை செய்வதாகவும் ஒருபோதும் மறக்கமாட்டான் என்றும் தெரிவித்தான். ஆனால் தான் பணிபுரியும் இடத்தில் இருக்கும் இன்னொருத்தியைச் சில மாதங்களாக விரும்புவதாகவும் அவள் மணமுறிவு பெற்று குழந்தைகளுடன் வாழ்பவள் என்றும் புரிதலும் அன்பும் கொண்டவள் என்றும் அவளுடன் சென்று தன் வாழ்க்கையைத் தொடரவிருப்பதாகவும் தெரிவித்தான்.

மேலோட்டமாகப் பார்த்தால் கிளாரா இந்தப் பிரிவை இலகுவாகக் கையாண்டதாகத் தெரிந்தது. (அவளை ஒருவர் விட்டுப் பிரிந்து செல்வது இதுவே முதல்முறை.) ஆனால் சில மாதங்களிலேயே அவள் மீண்டும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உளச்சிகிச்சை பெற்றாள். அது பெரிதும் பயனளிக்கவில்லை. அவளுக்குத் தரப்பட்ட மாத்திரைகள் அவளது காம உணர்ச்சியை நசுக்கின. அவள் வலிந்து, திருப்தியற்ற சம்போகங்களை சில ஆண்களிடம் (என்னையும் உள்ளிட்ட) முயன்று பார்த்தாள். பயனில்லை. மீண்டும் எலிகளைப் பற்றிச் சொன்னாள். அவை அவளைத் தனியாக விடுவதே இல்லை. பதற்றம் ஏற்படும்போது அடிக்கடி குளியலறை செல்வாள். (நாங்கள் ஒன்றாகப் படுத்துறங்கிய முதல் இரவில் அவள் பத்து முறை சிறுநீர் கழிக்கச் சென்றாள்.) அவள் தன்னையே படர்க்கையில் வைத்துப் பேசினாள். ஒருமுறை தனக்குள் – சிறுமி, குடும்பத்தால் அடிமைப்படுத்தப்பட்ட கிழவி, இளம்பெண் என்ற – மூன்று கிளாராக்கள் இருப்பதாகச் சொன்னாள். அந்த இளம் கிளாரா – உண்மையான கிளாராதான் அந்த நகரத்திலிருந்து எப்போதைக்குமாக வெளியேறி, ஓவியம் தீட்டி, புகைப்படம் எடுத்து, பயணம் செய்து வாழ்வாங்கு வாழ விரும்பியவள். நாங்கள் மீண்டும் இணைந்த பின் முதல் சில நாட்களில் அவளுடைய வாழ்க்கை குறித்து மிகவும் விசனப்பட்டேன்.

சில நேரங்களில் நான் திரும்பி வருகையில் இறந்து கிடப்பாளோ என்ற அச்சத்தில் கடைகளுக்குச் செல்வதைத் தவிர்த்திருக்கிறேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல என் அச்சம் மெல்ல மங்கி, கிளாரா தற்கொலை செய்துகொள்ள மாட்டாள் என்ற எண்ணம் திடப்பட்டது. (அல்லது என்னை நானே அப்படி சமாதானப்படுத்தினேன்.) அவள் அடுக்ககத்தின் உச்சியில் இருந்து குதிக்கப்போவதில்லை. அதுபோன்ற மடத்தனங்கள் எதையும் செய்யப்போவதில்லை.

அதற்குப் பிறகு விரைவிலேயே அவளை விட்டுப் பிரிந்தேன். ஆனால் இம்முறை அவளுக்கு அடிக்கடி தொலைபேசியில் அழைப்பது என்றும் அவள் தோழிகளுள் ஒருத்தியோடு அவ்வப்போது தொடர்பில் இருந்து அவளது நிலையைத் தொடர்ந்து அறிவது என்றும் முடிவெடுத்தேன். அப்படித்தான் சில விசயங்கள் தெரிய வந்தன. அவையாவும் அறியாமல் இருப்பதே நல்லது என்ற வகையைச் சேர்ந்தவை. என் மன அமைதிக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காதவை. தன்னகங்காரம் கொண்டவர்கள் எப்படியேனும் தவிர்த்துவிட வேண்டியவை.

கிளாரா மீண்டும் வேலைக்குச் சென்றாள். அவள் எடுத்துக்கொண்ட மாத்திரைகள் அவளது இனிய தோற்றத்திற்குப் பல மாயங்கள் செய்திருந்தன. சில நாட்களில் நிர்வாகம் அவளது நீண்ட விடுப்புக்குச் சிறு தண்டனையாக அவளை இன்னொரு அந்தாலூசிய நகரத்திற்கு – அது நெடுந்தொலைவில் இல்லாதபோதும் – பணியிட மாற்றம் செய்தது. அவள் அங்கு குடியேறினாள். உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லத் தொடங்கினாள். (முப்பத்து நான்கு வயதில் – பதினேழு வயதில் நானறிந்த – அழகின் எந்தத் தடயமும் அவளிடம் இருக்கவில்லை.) சில புதிய நண்பர்களைப் பெற்றாள். அங்குதான் அவள் பாக்கோவைச் சந்தித்தாள். அவனும் அவளைப் போலவே மணமுறிந்தவன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். தொடக்கத்தில் பாக்கோ தான் சந்திக்கும் எவரிடமும் கிளாராவின் புகைப்படங்களையும் ஓவியங்களையும் சிலாகித்துப் பேசுவான். கிளாரா அவனுக்கு நல்ல ரசனையும் மதிநலமும் இருந்ததாக எண்ணினாள். காலம் செல்லச் செல்ல பாக்கோ, கிளாராவின் அழகியல் செயல்பாடுகளின் மீது ஆர்வம் குன்றி, தனக்குக் குழந்தை வேண்டுமென்று வற்புறுத்தினான். கிளாராவுக்கு முப்பத்தைந்து வயது. ஆரம்பத்தில் அவளுக்கு இந்த எண்ணத்தில் விருப்பமில்லை என்றபோதும் பிறகு விட்டுக்கொடுத்தாள். அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. கிளாரா தன் ஆழ்ந்த ஏக்கங்களைத் தம் குழந்தையே சரிசெய்தது என்றாள். அவள் அந்தச் சொற்களையே குறிப்பிட்டாள். அவள் தோழிகளோ அவள் நிலை மோசமாகி வருவதாகக் குறிப்பிட்டனர். அது எந்தப் பொருளில் என்று எனக்கு முழுமையாகப் புரியவில்லை.

இந்தக் கதைக்குத் தொடர்பற்ற காரணங்களின் பொருட்டு ஒருமுறை அரிதாகக் கிளாராவின் நகரத்தில் ஓரிரவைக் கழிக்க வேண்டி இருந்தது. என் விடுதியில் இருந்து அவளை அழைத்து, நான் இருப்பதைச் சொல்லி மறுநாள் அவளைச் சந்திக்க அணியமானேன். நான் அன்றிரவே அவளைச் சந்திக்க விழைந்தேன். இருந்தபோதும் முந்தைய சந்திப்பில் கிளாரா என்னை – சரியான காரணங்களோடு – ஒரு எதிரி என்று குறிப்பிட்டிருந்தாள். அதனால் நான் அவளைக் கட்டாயப்படுத்தவில்லை.

அவளை அடையாளமே தெரியவில்லை. எடை மிகுந்து, ஒப்பனையையும் மீறி வறண்ட தோலுடன் மனச்சோர்வுடன் காட்சியளித்தாள். கிளாராவுக்கு எதிலும் தீவிர வேட்கை இருந்ததாக நான் நினைக்காததால் அவள் எதையோ இழந்ததைப் போன்ற மனச்சோர்வுடன் இருந்தது எனக்கு வியப்பளித்தது. ஒருவருக்கு எதிலும் பெரிய வேட்கை இல்லாவிடில் ஏமாற்றம் எப்படி ஏற்படும்? அவளது புன்னகையும் வெகுவாக மாறியிருந்தது. முன்பு கதகதப்பாகவும், சற்றே கோணலாகவும் இருந்த தலைநகர்வாழ் இளம்பெண்ணுடைய புன்னகை, இப்போது கடுமையான, வலிதரும் புன்னகையாக இருந்தது. அதற்குப் பின்னால் இருக்கும் அழுக்காறு, சினம், ஆற்றாமை அனைத்தும் எளிதாக அடையாளம் காணும்படி இருந்தன. ஒரு முட்டாள் இணையைப் போல ஒருவரையொருவர் கன்னங்களில் முத்தமிட்டு, அமர்ந்தோம். சில நொடிகள் என்ன சொல்வதென்று தெரியாமல் இருந்தோம். நான்தான் முதலில் மெளனத்தை உடைத்து அவள் மகனைப் பற்றிக் கேட்டேன். அவன் பராமரிப்புப் பள்ளியில் இருப்பதாகச் சொல்லி என் மகனைப் பற்றி விசாரித்தாள். அவன் நலமாக இருப்பதாகச் சொன்னேன். ஏதேனும் செய்யாவிட்டால் இந்தச் சந்திப்பு தாள முடியாத வருத்தமாக மாறும் என்று இருவரும் உணர்ந்தோம். ’நான் எப்படி இருக்கிறேன்?’ கிளாரா வினவினாள். தன்னை ஓங்கி அறை என்று விளிப்பது போலிருந்தது அவ்வினா. நான் வழமைபோல் தன்னிச்சையாக ஏதோ பதிலளித்தேன். இருவரும் காஃபி அருந்தியது நினைவிருக்கிறது. பின்னர் உயரமான மரங்கள் சாலையில் இருமங்கிலும் இருக்க நடந்தோம். அப்பாதை எங்களைத் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. என் வண்டி கிளம்ப ஆயத்தமாக இருந்தது. வாசலில் இருவரும் பிரியாவிடை அளித்துக்கொண்டோம். அதுவே அவளை நான் இறுதியாகப் பார்த்தது.

ஆனால் அவள் இறப்பதற்கு முன் நாங்கள் தொலைபேசியில் பேசினோம். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கொரு முறை அவளை நான் அழைப்பதுண்டு. அந்தரங்க விசயங்களையும் உணர்ச்சிப்பூர்வமான விசயங்களையும் பேசக்கூடாது என்ற பட்டறிவு எனக்கிருந்ததால் அவளுடைய குடும்பத்தைப் பற்றியோ, (அது எங்களுடைய விவாதத்திற்குள் ஒரு கியூபிசக் கவிதையைப் போல மர்மப் பொருளுடன் உலாவியது.) அவளுடைய மகன் செல்லும் பள்ளியைப் பற்றியோ, அவளது வேலையைப் பற்றியோ இருந்தது. அவள் இன்னும் அதே அலுவலகத்திலேயே பணியாற்றினாள். இத்தனை ஆண்டுகளில் அவள் சக பணியாளர்களின் பிரச்சினைகள், அவர்களது தனி வாழ்க்கைகள், நிர்வாகிகளின் சிக்கல்கள் என அனைத்தையும் அறிந்து வைத்திருந்தாள். இந்த ரகசியங்களை அறிந்திருப்பது உள்ளத்தில் அவளுக்குப் பேரானந்தத்தை அளித்தது. ஒருமுறை நான் அவளது கணவனைப் பற்றிச் சொல்ல முனைந்தபோது அவள் அதை மெளனத்தால் முறியடித்தாள். ‘நீ சிறந்த கணவனை அடையத் தகுதி பெற்றவள்’ என்று சொன்னேன். ‘என்ன விசித்திரமான சொற்கள்’ என்று கிளாரா மறுமொழி சொன்னாள். ‘இதிலென்ன விசித்திரம்?’ என்று கேட்டேன். ‘நீ இதைச் சொல்வதே விசித்திரம்தான்’ என்றாள். நான் சடுதியில் திசைத்திருப்பும் விதமாக நாணயங்கள் தீர்ந்துவிட்டன என்று சொல்லி அவசரமாகப் பிரியாவிடை பகர்ந்து தொலைபேசியை வைத்தேன். (என்னிடம் சொந்தமாகத் தொலைபேசி கிடையாது. எப்போதும் வைத்துக்கொள்ளவும் மாட்டேன். எப்போதும் நான் தொலைபேசிச் சாவடியில் இருந்தே பேசுவேன்.) கிளாராவிடம் இன்னொரு விவாதத்தை என்னால் எதிர்கொள்ள முடியாது என்று உணர்ந்தேன். முடிவில்லாமல் நீளும் சுயநியாப் பட்டியலை அவள் தொடர்ந்து நீட்டிக்கொண்டிருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை.

சமீபத்தில் ஓரிரவில் அவள் தனக்குப் புற்றுநோய் இருப்பதைச் சொன்னாள். எப்போதும் போலவே அவளது குரல் சுரணையற்று இருந்தது. அக்குரலில் அவள் மோசமான ஒரு கதைசொல்லி ஆர்வமின்றி சொல்லும் விதப்பு முறையில், தேவையற்ற இடங்களில் வியப்புக்குறியிடுவதும் ஆழமாகச் சென்றிருக்க வேண்டிய இடங்களில் விரைந்து முடிப்பதுமான தொனி இருந்தது. மருத்துவரைச் சென்று பார்த்தாளா, இல்லை தானாகவே (அல்லது பாக்கோவின் உதவியுடன்) தனக்குப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தாளா என்று அவளைக் கேட்டது நினைவிருக்கிறது. சொல்லி முடித்த போது ஒரு கூக்குரல் கேட்டது. அவள் சிரித்தாள். எங்கள் குழந்தைகளைப் பற்றிச் சுருக்கமாகப் பேசினோம். அதற்குப் பிறகு என் வாழ்க்கையைப் பற்றி  எதையேனும் சொல்லும்படி கோரினாள். (அவள் தனிமையாகவும் வெறுமையாகவும் உணர்ந்திருக்க வேண்டும்.) அந்த இடத்திலேயே எதையோ கதையைப் புனைந்து திரித்தேன். அவள் அடுத்த வாரம் என்னை அழைக்கும்படிச் சொன்னாள். அன்றிரவு எனக்குச் சரியாக உறக்கமில்லை. அடுத்தடுத்து கொடுங்கனவுகள் தோன்றி என்னை எழுப்பித் திடுக்கிட்டுக் கத்த வைத்தன. கிளாரா என்னிடம் பொய் சொன்னதாகவும் அவளுக்குப் புற்றுநோய் இல்லை என்றும் சொல்லியபடி அக்கனவுகள் என்மீது மோதின. அவளுக்கு ஏதோவொன்று இருக்கிறது அதுமட்டும் உறுதி. ஏற்கெனவே இருபதாண்டுகளாக நடப்பவை போல ஏதோவொன்று. சிறிய, ஏடாகூடமான, பாவங்களும் சிரிப்புகளும் நிறைந்தவை. ஆனால் நிச்சயம் அவளுக்குப் புற்றுநோய் இல்லை. காலை ஐந்து மணி. நான் எழுந்து நடந்து, என் முதுகில் இன்வளி புரள பேசோ மாரிடிமோவுக்குச் சென்றேன். அது விசித்திரமாக இருந்தது. ஏனெனில் எப்போதும் காற்று கடலில் இருந்து நம்மை நோக்கியே வீசும், எதிர்த்திசையில் வீசுவது மிக மிக அரிது. பேசோவில் இருந்த மிகப் பெரிய காஃபியகத்தின் அருகே இருந்த தொலைபேசிச் சாவடிக்குச் செல்லும் வரை எங்கும் நான் நிற்கவில்லை. மாடி வெறுமையாக இருந்தது. இருக்கைகள் மேசைகளோடு சங்கிலியிட்டுப் பிணைக்கப்பட்டிருந்தன. இன்னும் சற்று முன்பு சென்று கடலின் அருகே பார்த்தால் ஒரு வீடிலி விசுப்பலகையில் படுத்து, தன் கால் முட்டியைக் குறுக்கிய நிலையில் உறங்கிக்கொண்டிருந்தான். அவ்வப்போது மோசமான கனவுகளைக் காண்பவன் போலத் துடித்தான்.

கிளாராவின் நகரத்தில் ஒரேயொரு தொலைபேசி எண் மட்டுமே என் குறிப்பேட்டில் இருந்தது. நெடுநேரத்திற்குப் பிறகு ஒரு பெண்மனியின் குரல் பதிலளித்தது. நான் யாரென்று சொன்னதும் என்னால் வேறு எதையுமே சொல்ல முடியவில்லை என்பதை உணர்ந்தேன். அவள் பெற்றியை வைத்துவிட்டாள் என்று நினைத்தபோது அவள் சிகரெட் கொளுத்தியைச் சொடுக்கும் ஒலியோடு உதடுகளின் வழியே புகை வெளியேறும் ஒலியும் கேட்டது. ‘இன்னும் இருக்கிறாயா?’ என்று அப்பெண் கேட்டாள். ‘ஆமாம்’ என்றேன். ’கிளாராவிடம் பேசினாயா?’ ‘ஆமாம்’ என்றேன். ‘அவள் தனக்குப் புற்றுநோய் என்று சொன்னாளா?’ அதற்கும் ‘ஆமாம்’ என்றேன். ‘ம். அது உண்மைதான்.’

கிளாராவைச் சந்தித்தது முதலான இத்தனை வருடங்களும் எடைமிகுந்து என் மீது உடைந்து என்னை நசுக்கின. என் வாழ்வின் எதுவும் அவளோடு தொடர்புடையன அல்ல என நம்ப விழைந்தேன். நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்து தொலைபேசியின் மறுமுனையில் இருப்பவள், அதற்குப் பிறகு வேறென்னென்ன சொன்னாள் என்பதை அறியேன். ரூபென் தாரியோவின் கவிதையில் வருவதைப் போல என்னையும் மீறி அழுதேன். என் பைகளில் சிகரெட்களைத் தேடினேன். மருத்துவர்கள், முலையறுவை சிகிச்சை, கலந்துரையாடல்கள், வெவ்வேறு நோயாராயும் கோணங்கள், ஆலோசனைகள், கிளாராவின் தினசரி நடவடிக்கைகள் என்று துண்டுத் துண்டாகக் கேட்டேன். இப்போது இவற்றையெல்லாம் என்னால் அறிந்து உணர முடியாது. என்னை இனி ஒருபோதும் கிளாராவால் காப்பாற்ற முடியாது.

நான் தொலைபேசியை வைத்தபோது வீடிலி இளைஞன் ஐந்தடி தூரத்தில் நின்றான். அவன் என்னை நெருங்கி வருவதை நான் கவனிக்கவில்லை. அவன் நல்ல உயரம், அந்த சீதோஷ்ணத்திற்கு உகக்காத சூடான உடை அணிந்திருந்தான். என்னையே – கிட்டப்பார்வைக்காரனைப் போல – உற்றுப் பார்த்தான். நான் திடுக்கென அவ்விடம் விட்டு நகர்ந்துவிடுவேனோ என்று அஞ்சுபவனைப் போலப் பார்த்தான். எனக்குப் பயமேற்படாத அளவுக்குத் துக்கத்தில் இருந்தேன். ஆனால் அதன் பிறகு நகர் மையத்திற்கு வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் திரும்பிச் செல்லும்போது அவனைப் பார்த்த சிறு தருணத்தில் மட்டும் நான் முதல்முறை – முதல்முறை மட்டுமே – கிளாராவை மறந்திருந்தேன் என்பதை உணர்ந்தேன்.

அதற்குப் பிறகு நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசினோம். சில வாரங்களில் நாளிருமுறை அவளை அழைத்தேன். எங்கள் உரையாடல்கள் சிறியனவாகவும் மடத்தனமாகவும் இருந்தன. என்ன சொல்ல விரும்பினேனோ அதைச் சொல்வதற்கு வழிகளே இல்லாதிருந்தன. அதனால் எதையெல்லாமோ, என் தலையில் உதித்தவற்றையெல்லாம் பேசினேன். அவளைச் சிரிக்க வைப்பதற்காக என் முட்டாள்தனமான பேச்சு உதவக்கூடும் என்று நினைத்தேன். உணர்ச்சி வசப்படும் நேரங்களில் கடந்த நாட்களை நான் நினைவில் மீட்பதுண்டு. ஆனால் கிளாரா தன் உறைந்த கவசத்தைப் போட்டுக்கொள்வாள். அதை விரைவில் புரிந்துகொள்ளும் நான் நினைவேக்கத்தை உதறித் தள்ளுவேன். அறுவை சிகிச்சைக்கான நாள் வரவர என் அழைப்புகளும் அதிகரித்தன. ஒருமுறை அவள் மகனோடு பேசினேன். இன்னொரு முறை பாக்கோவோடு. அவர்கள் இருவரும் நலமாக இருந்தனர். நன்றாகப் பேசினர். குறைந்தபட்சம் என்னளவுக்கு அச்சத்தோடு இல்லை. ஒருவேளை நான் சொல்வது பிழையாகவும் இருக்கலாம். கண்டிப்பாகப் பிழைதான். அனைவருமே என்னை எண்ணி வருந்துவதாகக் கிளாரா ஒரு நாள் மதியம் சொன்னாள். அவள் தன் கணவனையும் மகனையும் சுட்டுவதாக நினைத்தேன். ஆனால் ‘அனைவரும்’ என்பது நிச்சயம் நிறைய ஆட்களை, என்னால் கற்பனை செய்ய முடியாத அளவு நிறைய ஆட்களை உள்ளடக்கும் சொல்லாகவே இருக்கும். அவள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முந்தைய நாள் மதியம் நான் அழைத்திருந்தேன். பாக்கோ பதிலளித்தான். கிளாரா அங்கில்லை. இரண்டு நாட்களாக அவளை யாரும் பார்க்கவும் இல்லை அவளிடமிருந்து எந்தவிதத் தொடர்பும் இல்லை. பாக்கோவின் குரல் ஒலித்த தொனியில் இருந்து அவள் என்னோடு இருக்கக்கூடும் என்று அவன் சந்தேகித்ததை உணர முடிந்தது. அவனிடம் அவள் அங்கு இல்லை என்றும் முழுமனத்தோடு அவள் தன் அறைக்கு வரவேண்டும் என்று நான் விரும்பினேன் என்றும் நேரடியாகவே தெரிவித்தேன். அவளுக்காக விளக்குகளை ஏற்றி வைத்துக் காத்திருந்தேன். இறுதியில் நீளிருக்கையில் படுத்து உறங்கினேன். ஒரு அழகான பெண் – கிளாரா அல்ல – என் கனவில் வந்தாள். உயரமானவள், மெலிந்த தேகம், சிறிய முலைகள், நீளமானக் கால்கள், ஆழ்பழுப்பு நிறக் கண்கள். அவள் ஒருபோதும் கிளாராவாக இருக்கவே முடியாது. அவளது இருப்பு கிளாராவை மங்கச் செய்வது. கிளாராவைக் குன்றச் செய்து வறுமையில் தள்ளித் தொலைத்து நாற்பதுக்கு மேலான வயதானவளாக ஆக்குவதே அவளது இருப்பு.

அவள் என் அடுக்ககக் குடியிருப்புக்கு வரவே இல்லை. 

மறுநாள் நான் பாக்கோவை அழைத்தேன். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அழைத்தேன். கிளாராவைப் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. மூன்றாம் முறை பாக்கோவை அழைத்தபோது அவன் தன் மகனைப் பற்றி நிறைய பேசினான், கிளாராவின் செயல்களைக் குறை கூறினான். அவள் எங்கு இருப்பாளோ என்று ஒவ்வொரு இரவும் தான் வருந்துவதாகச் சொன்னான். அவனது குரலின் தொனியிலும் உரையாடல் குழைந்துத் திரும்பும் திசையிலும் அவனுக்கு என்னிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ ஒன்றேயொன்றுதான் – அது நட்பு – தேவை என்று புரிந்தது. ஆனால் அவனுக்கு ஆறுதல் தரும் நிலையில் நான் இல்லை.

*

ஆங்கில மூலம்: Clara by Roberto Bolaño, Complete Stories of Roberto Bolaño, Vintage Publications, Oct, 2018 Edition.

1 comment

Mu.இராம+சுப்ரமணிய+ன் October 12, 2022 - 8:40 am

நன்றி.அருமை.

Comments are closed.