தனபாக்கியத்தோடே ரவ நேரம்

0 comment

தனபாக்கியம் ஆத்திரம் தாங்காமல் ஓலமிட்டு அழுதாள். பரட்டைத் தலைமயிர் காதோரங்களிலும் கன்னங்களிலும் தொங்கியது. கண்களிலிருந்து பெருகி வரும் கண்ணீரைக்கூடத் துடைத்துக்கொள்ளத் தோன்றாமல் கத்தினாள். புருஷனோடு சண்டை, வயிற்றெரிச்சல்.

‘ஒங்க எழவுங்கள எடுக்க… ஒங்க கருமாந்தரத்துக்க ஒழைச்சி ஒழைச்சிதான் ஓடா பூட்டனேடா! இன்னமும் அடிக்க வர்ரியேடா, பாவி நீ வௌங்குவியா….’

‘ஒனக்கு இன்னமும் என்னுமோ ஒடம்பு ஊரிக்னுதான் இருக்குது.’

கட்டிலில் குந்தியிருந்தவன் தலையை ஆட்டிக் கறுவினான்.

‘யாருக்கு ஊருதுன்னு ஒன்னுந் தெரியல. கேப்பார் மேப்பார் கெடையாதுன்னு நெனைச்சீங்கீறியா… எங்க பெரிய அண்ணாத்த காதுல வுழணம்… அப்புறம் தெரியும்.’

அவன் தடதடவென்று எழுந்து அவளருகில் வந்தான்.

‘என்னா சொன்ன! அவன் வந்தாயென்னா மயிரப் புடுங்கிடுவானா… வீணா ஈசாமைய கௌப்பாத…’

‘புடுங்கறதும் புடுங்காததும் அப்புறம் தெரியுது.’ அவள் அடங்காமல் பதில் சொன்னாள்.

அவன் பல்லைக் கடித்து தாங்கமாட்டாத எரிச்சலுடன், ‘ஏய்… போய் இட்டாமே பாப்பம். இன்னும் எவனெவன இட்டாரியோ இட்டா… போ!’ என்று அவள் தோளைப் பிடித்துத் தூக்கி அப்பால் தள்ளினான்.

‘இட்டாரனா இல்லியா பாரேன்’. தரையில் சாய்ந்தவள் சொல்லிக்கொண்டே நிமிர்ந்தாள்.

‘… த்தா சொல்லிக்னே ஒக்காந்திங்கீறாடா இவ…’ சட்டென்று குனிந்து பிடரிப்பக்கமாய் மயிர்க்கற்றையைப் பிடித்து இழுத்து அரிவிக் கால் பக்கமாய்க் கிடாசினான்.

‘போய் இட்டா பாப்பம்.’

‘பாவி … எரும மாடாட்டம். எங் கை சோறு ரொணம் சும்மாயிருக்குமா… உன்ன மாரியாத்தா தூக்க…’

அவள் முடிக்கவில்லை. தபதபவென்று கன்னத்திலும் காதாம் பட்டையிலும் அறைகள் விழுந்தன.

‘வ் வா வா வா…’ என்று வாயிலடித்துக்கொண்டு அழுதாள்.

‘மூடுறி வாயெ… மினியப் பிடிச்சிப் போட்டுருவேன் இப்ப!’ சின்னக் குழந்தைகளைப் பொலி போட்டுடுவேன் என்பதைப் போல அவன் ஒரு விரலைக் காட்டி கண்களில் ஆவேசம் பொங்க எச்சரித்தான்.

‘போடு… அடி… குத்து… ம்… ஒன் இஷ்டந்தான்… ஆரு கேக்கப் போறா? அவ்வளத்துக்கும் அனுபவிப்ப…’

பட்டென்று மோவாயில் ஒரு உதை. அவள் பல் கிட்டும் சப்தம்கூடக் கேட்டது. ‘பொணமாக்கிடுவேன் இப்ப.’

‘ஐயோ… ஐயோ… ஐயோ…’ தெரு பூராவுக்கும் கேட்கும்படி குலையில் குத்திக்கொண்டு அழுதாள்.

‘நீ கத்திக்னேயிரு… இன்னைக்கி ஒழிஞ்ச…’

அவள் அடங்கவில்லை. ‘நீ வெட்டிக்கூடம் போட்றா பாவி. வெட்டிப் போடு. இங்கியே சாவறேன், அப்பதான் தெரியும் தனபாக்கியம்மா யாருன்னு… ம்.. ம்… அடி… உன் இஷ்டம் எவ்வளவோ பாரு…’

அவள் தலையைத் தாழ்த்தி ஆட்டி, பின்னால் பெருசாய் வஞ்சம் தீர்ப்பதற்கு இப்போது அடங்கிப்போகிற மாதிரி வணங்கிக்கொடுத்து முதுகைக் காட்டினாள்.

‘ம்… எம்மாத் தரம் அடிக்கிறியோ அடி.’

‘…த்தா… ஜென்மமாடா இது? சாவ மாட்டாத கெடக்குது…’ அவன் சலிப்புடன் அப்பால் நகர்ந்தான்.

அவள் வெடுக்கென்று எழுந்தாள். கொடியில் கிடந்த இரண்டு மூன்று ரவிக்கைகளை ஒரு புடவையில் போட்டு மூட்டை கட்டினாள்.

‘எங்க இதெல்லாம் மூட்ட கட்டற?’ அவன் கண்களை உருட்டினான்.

அவள் பதில் பேசவில்லை. மூட்டையை அக்குளில் அணைத்துக்கொண்டு தூளியில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கக் குனிந்தாள்.

சடாலென்று எழுந்து முன்னால் வந்தவன், அவள் மயிரைப் பிடித்து இழுத்தான். ‘புள்ளைய ஏண்டி தூக்கற?’

‘சீ… வுடு…!’ அவன் பிடியிலிருந்து சிம்பினாள் அவள்.

‘தேவிடியா முண்ட… மனுஷனாவா மதிக்கற நீ…’ வெகு வேகமாய் இழுத்து அப்பால் தள்ளினான்.

‘அடி… எம்மாத் தரம் முடியுமோ பாரு! அவ்வளவோ தரமும் வட்டின்னு வச்சிக்கோ.’

‘பெருசா புடுங்கிடப் போறா இவ, எவனும் வந்து ஒன்னும் இங்க ஆட்ட முடியாது தெரிஞ்சுக்கோ…’

‘கரம்பேறிப் போய் கெடக்குதே.. முடியுமா பின்ன…’

பளார் என்று ஒரு அறை விழுந்தது. அந்த வேகத்திலேயே பக்கத்தில் இருந்த தூணில் ‘ணங்’ என்று மோதி விழுந்தாள்.

‘ம்… பாரு. வேளா வேளைக்கு வடிச்சிக் கொட்டனனே, அந்த திமிரு… தனபாக்கியம் கைராசி! பாவி… புழுத்துப் போய்த்தாண்டா சாவே நீ!’

அவன் பல்லைக் கடித்தான். அடிப்பதைத் தவிர வேறு என்ன செய்வது?

‘அப்படி எங்கனா போய் கத்து… போ! கழிசட… இனிமே இந்த வாசப்படி நொழையாத.’ கழுத்தைப் பிடித்து நெட்டி வெளியே தள்ளினான்.

நெட்டிய வேகத்தில் வெளியே வந்தவள், கீழே விழாமல் தடுமாறிச் சமாளித்து நின்றாள். மூட்டை பின்தொடர்ந்து வந்து விழுந்தது.

‘ஒழிஞ்சி போ! இனிமே இங்க வராத. நீ இல்லன்னா இன்னொருத்தி. என்னுமோ பெரிய பகுடாலு வித்த காட்டிக்னுகிறியே நீ அப்பப்ப! போய் உங்கண்ணங்காரன் மாமங்காரனை எல்லாம் இட்டுக்னு வா. இன்னம் எவனெவன் வாரானோ வரட்டும். சீ! ஒரு மனுசன் எம்மாத்தரம்னுதான் பொறுக்கறது.’

வெய்யில் சூடேறிக்கொண்டு வந்தது. மாட்டுக்கொட்டகையில பசுவும் கன்றும் எடைய எடைய கட்டியிருந்தன. மற்ற மாடுகள் எல்லாம் மந்தையோடு மேய்ச்சலுக்குப் போயிருந்தன. சற்றுத் தள்ளியிருந்த பூவரச மரத்தின் நிழலில் குந்தியிருந்தாள் தனபாக்கியம். மூட்டை மடியில் இருந்தது. குத்துக்காலிட்டு கைகளில் முகத்தைத் தாங்கியிருந்தாள். அவள் இஷ்டப்படாமலே, தானாக வழிவதைப் போல, கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது.

‘இட்டாந்து வச்சிக்னு குடுத்தனம் பண்ணப் போறாராமே? பண்ணட்டமே.. ஆரு வேண்டான்னா? இருக்கறவரிக்கும் தெரியாது தனபாக்கியம்மா யாருன்னு, பூட்டாதான் தெரியும்… ஆம்பளன்ன வாசிதான அந்தப் பேச்சி…’

‘வெயிலுன்னும் மழன்னும் பாக்காம நம்ப லோல்பட்டு, ஜன்மத்த ஒழைச்சா, தின்னுப்புட்டு நம்பளையே ஒதைக்க வர்றாருன்னா ஐயா!’

‘அங்கங்க ஊருல ஒலகத்துல பொண்டாட்டிய என்னுமா வச்சிக்னு இருக்கிறான் நெவக்கணுவுல அழுக்குப்படாம! உன்னைக் கட்டிக்னு வந்து நான் என்ன சொகத்தடா கண்டேன்? பாவி. ஆசப்பட்டது அறிபட்டதுன்னு என்னிக்காவது ஒரு நாளாவது ஏதாவது உண்டா!’

‘இன்னும் அந்த மாரில்லாம் இருந்துட்டா ஐயோ… ஒரு நாளைக்கி வப்பியா நீ!’ கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

‘என்னாதே தனபாக்கியம் இங்க வந்து குந்திக்ன…’ மூன்றாவது வீட்டுக்காரி செகதாலம்பா கேட்டாள்.

‘ஏதோ எந் தலையெழுத்து. வவுத்தெரிச்சல் கொடும. எதுனா பேசிக்னுகிறேன். நீ மாட்டுனு போயேன்.’

மூஞ்சியிலடித்த மாதிரி அவளுக்குப் பதில் சொல்லிவிட்டு மூக்கைச் சிந்தி பூவரச மரத்தில் அப்பிப் பூசினாள். காலை மட்டிபோட்டு குந்திக்கொண்டாள்.

‘போறவ இவ மாட்டுனு போறத்தான! நம்பளப் பாத்தா அது அதுக்கும் சிகுருத்தியா இருக்கறாப் போலருக்குது.’

முனகிக்கொண்டாள். பக்கத்திலிருந்த சவுக்கைக் குச்சியை எடுத்துத் தரையில் புள்ளி வைத்துக் கோலம் இழுத்தவாறே, மூக்கை உறிஞ்சிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

கொஞ்ச நேரத்தில் ஏணையிலிருந்த குழந்தை அழும் சப்தம் கேட்டது. தொடர்ந்து அவன் ஏணையை ஆட்டும், ஏணைக் கயிறு மேல் வாரையில் கிறீச்சிடும் ஒலியும் கேட்டது.

குழந்தை அழுகை ஓயவில்லை.

அவன் மாட்டை அதட்டுவது போல நாக்கை மடித்து, ‘ழ்க்கோ… ழக்கோ…’ என்று ஒலியெழுப்பினான்.

குழந்தையை ஏணையிலிருந்து வெளியே தூக்கிக்கொண்டிருக்க வேண்டும், முன்பு அடக்கமாய்க் கேட்ட அழுகை ஒலி விசாலமாய் கேட்டது.

தனபாக்கியம் எல்லாவற்றையும் காதில் வாங்கிக்கொண்டு இறுக்கமாய் உட்கார்ந்திருந்தாள்.

‘டோ… டோ… டோ… டோய்… அழாதறா கண்ணு. ழக்கோழ்க்கோ… ழக்… ழக்… ழ்க்கோ…’ குழந்தை வீறிட்டது.

‘ச்சொ… சொச்… சொச்… சொச்… சொச்சோ…’ அவன் குழந்தைக்குப் பராக்கு காட்ட முயன்றான். கதவோரம் படுத்திருந்த நாய் அவனை நெருங்கி வந்து வாலை ஆட்டியது. ‘சீச்…சனியன்…’ ஊறுகாய்ப் பானையைக் குலுக்குவது மாதிரி அவன் குழந்தையைப் போட்டுக் குலுக்கினான். அழுகை அதிகமாகியது.

‘சண்டைக்கு மின்னாடி பால் குடுத்து ஏணையிலே போட்டது. பாவம் பசிதான் போலருக்குது, கத்துது…’ தனபாக்கியம் நினைத்தாள்.

‘ஏந்தே செகதலாம்பா…’

‘என்னா செத்த மின்ன செடாச்சிக்ன… இப்ப அப்படியே நாக்குல வெல்லம் தடவிக்னு கூப்புடற…’

‘ஏதோ என் புத்தி பேதம்… செத்த அந்த புள்ளைய வாங்கியாந்து குடுத்துட்டுப் பூடேன். பசிதே… அது கத்துது.’

செகதலாம்பா புள்ளையை வாங்கியாந்து கொடுத்தப்புறம் அதற்குப் பால் கொடுத்துத் தலையைக் கோதிவிட்டு, கனிவு பொங்க அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘புள்ளைய வுட்டுட்டு பூடறதாமில்ல… இவரு வச்சி காப்பாத்திட மாட்டாரு. வீறாப்புல ஒன்னும் கொறைச்சல் இல்ல.’ இளம் கழுத்திலும் பிடரியிலும் முத்து முத்தாய் அரும்பியிருந்த வியர்வையை வாயால் ஊதிவிட்டு, ‘பாவம் புள்ளைக்கி என்னுமா வேர்த்துடிச்சிம்மா…’ என்று சொல்லிக்கொண்டாள்.

‘என் ராஜா… என் செல்லம்… புழுக்கம் தாங்க மாட்டாரு இவரு; கஷ்டாளி மாதிரிதான் வேர்வயெல்லாம்…’ பிரியத்தால் பல்லைக் கிட்டிக் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

‘ஏமா… சின்னாம்மா, ஆளுவளுக்கு கூழு கரச்சி எடுத்தாரச் சொன்னாரு பெரியவரு.’ படியாள் தொரசாமி வந்து கொட்டாய் ஓரமாய் நின்றான்.

‘எட்டு ஆளும்மா… ஒங்க மாமனாருக்கு சாப்பாடு வேணாவாம். சின்னவரு சாப்பாடானதும் கழினிக்கி வந்து அவர அனுப்பச் சொன்னாரு…’

‘அது என்னுமோ இங்க எதுவும் ஏங்கிட்ட சொல்லாத. உள்ள இருப்பாரு பாரு, அவருகிட்ட போய் சொல்லு. இல்லாட்டி புதுசா எவளோ வர்றாளாம்.. அவகிட்ட சொல்லு… அவ கரச்சி ஊத்தியனுப்புவா… தனபாக்கியம்மா இல்லன்னா எதுவும் நடக்காதா என்னா? அப்படி அப்பிடியே எல்லாம் நின்னா போயிடப் போவுது…’

‘அட வாம்மா! எதுவாயிருந்தாலும் இருக்கட்டும். ஆளுவளுக்கு சாப்பாடு குடுத்தனுப்பிப்புட்டு அப்புறம்னா கூட போய் கோவிச்சிக்னு குந்திக்குவ, வெய்யிலு வேற, இம்மாந்தூரம் நடந்து வந்ததே வெலவெலன்னு வருது. தூக்கிக்கினு அப்பறம் வேற போவணம்.’

‘அட என்னடா நீ, சிகிருதிக்கா சொல்றேன். அந்த வூட்ட இனி நான் நொழைய மாட்டேன். உள்ள இருக்கறவருகிட்ட போய் சொல்லு. கழுத நொழையுமா இனி அந்த வூட்ட…’ தனபாக்கியம் திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டாள்.

‘என்னாடாயிது வம்பா போச்சி’ என்று முணுமுணுத்தவன், ‘ஓவ் சின்னவரே ஓவ்… ஓவ்… ஐயா..’ என்று ரொம்ப நேரம் உட்பக்கமாகக் குரல் கொடுத்துப் பார்த்து ஓய்ந்ததில், ‘அட எப்படியாவது போவட்டும் போ. இங்க யாரால முடியும்?’ என்று கொட்டாயில் இருந்த வைக்கோலின் மேல், தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துப்போட்டு விரித்துப் படுத்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் குறட்டைச் சத்தம் கேட்டது.

தனபாக்கியத்துக்குச் சங்கடமாகிவிட்டது.

‘இத என்னாடியிது இமுஷை நமக்கு? எங்க போனாருன்னு தெரியலியே இந்த ஆம்பள’ என்று கொஞ்ச நேரம் முனகினாள். பிறகு குழந்தையைத் தூக்கிக்கொண்டு எழுந்தாள். ‘அந்த மனுஷன் வேற கழனிலிருந்து வந்தார்னா எல்லார் மேலயும் சுள்ளு சுள்ளுன்னு எரிஞ்சு வுழுவாரு. வர்றதல்லாம் நமக்கு வம்பாதானா வரணம்’. கொஞ்ச நேரம் ஒதுங்கி நின்று எட்டிப் பார்த்து உள்ளே நுழைந்தாள்.

கட்டிலில் புருஷன் நிம்மதியாய் குறட்டைவிட்டு, மல்லாந்து கிடந்தான். தெருக்கதவு பரக்கத் திறந்து கிடந்தது. ‘தெறந்து போட்டுட்டு தூங்கறதப் பாரேன்? சண்ட போட்டது எளப்பு ஆயிட்டாப் போலக்குது.. பாவம்!’

தோளிலிருந்த குழந்தையைக் கீழே தவழவிட்டு, சத்தம் காட்டாமல் கூழுப்பானையைத் திறந்தாள். கையைவிட்டு அள்ளி குண்டானில் போட்டாள்.

தரையில் விட்ட குழந்தை புரண்டு கவிழ்ந்து குலாவியது. ஆ… ஊ.. என்று கத்தியது. ‘த… சும்மா கெடயேன் அப்பிடி. இப்பத்தான் ஒரேடியா கொலாவுது. என்னுமோ என்னைக்குமில்லாத…’ சொம்பு தவலையில் இடித்துவிடாதபடி தண்ணீர் மொண்டு கூழைக் கரைத்தாள்.

குழந்தை கட்டிலை நோக்கி மாரால் நகர்ந்தது.

‘த… அங்க எங்க போற? இப்பிடி வா இப்பிடி… என்னா சவரட்சண பண்ணு, அது அதும் ரத்தம் வுடுதா பார்… என்னுமா ஓடுது? இப்பதான் புதுசா காணாத்த கண்டுட்டாப் போல…’ இழுத்து திசைமாற்றிவிட்டாள்.

தோட்டத்துக்கு வந்து முனியனை எழுப்பினாள். ‘ஒரு பேச்சி… ‘ம்’ன்னு சொன்னா போதும், பொழுது போறவரிக்கும் தூங்குவியே நீ? இந்தா இந்தா. பத்தரமா பாத்து எடுத்தும்போ. வரப்பு கிரப்பு தடுக்கி வுட்டுறப் போவுது. கடிச்சிக்க மேல்தாம்பளத்துலியே வச்சிருக்கறேன், குண்டான் போட்டு மூடி, பாத்து.’ அவனை அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

‘அவரு வேற வரும்போதே பசி பசின்னு வருவாரு. என்னாத்த பண்றதுன்னு ஒன்னும் தெரியல. எப்படியாவது போவட்டும் போ. வந்தா தோதான் இருக்கறாரே புள்ள. இருக்கற கூழக் கரச்சி ஊத்தறாரு, அப்பனும் மவனுமா சேந்து குடிக்கட்டும். அப்பத்தான் தெரியும்.’ முனகியவாறே குழந்தையைத் தூக்கி இடுப்பில் ஏற்றிக்கொண்டு தோட்டத்துக்குத் திரும்பினாள். தெருப்பக்கமிருந்து பஞ்சாங்க அய்யரின் குரல் கேட்டது.

‘ஏண்டா… சுப்புராயா…’

ரெண்டு குரலுக்குப் பேசாமலிருந்தாள். மறுபடியும் குரல் கேட்டது.

‘என்னா!’ எரிபுரியுடன் போய் நின்றாள்.

‘அப்பாடா!’ தெருத்திண்ணையில் குந்தினார் ஐயர்.

‘என்னா எல்லாம் சௌக்கியந்தானா, ஒம் புருஷங்காரன் எங்க?’

‘சௌக்கியத்துக்கு என்னா கொறச்சலு? அது அது வந்த விதி அனுபவிச்சுத்தான் தீரணம்.’

‘ஒம் மாமியாருக்கு நாளைக்கித் திதியோல்லியோ… சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். எங்க அவன், கழனி கட்டுக்குப் போயிருக்கானா?’

‘திதியோ கிதியோ! எதுவும் இங்க ஏங்கிட்ட சொல்லாதீங்க. எனக்கொன்னும் தெரியாது. நீங்களாச்சி அவராச்சி. அவரு தூங்றாரு.’

‘சரியாப் போச்சி…’ வெய்யிலின் களைப்போடு அலுத்திருந்த ஐயர் எழுந்தார். ‘நான் பொறப்பட்ட நேரமே சரியில்லையோ என்னுமோ, போற எடமெல்லாம் மனுஷாள் மொகக்குறியே நேக்கு ஒன்னும் சரியாப் படலே, நான் சாயரட்சை வர்ரேன்.’

அவர் போன பிறகு கதவைச் சும்மா சாத்திவிட்டு தோட்டத்துக்கு வந்தாள். பசுவுக்குத் தண்ணீர் காட்டாததால் அது நேரம் அறிந்து கத்தியது.

‘அது அது வெசனமத்து தூங்குது. எல்லாம் நம்ப தலையிலதான் கூழக் கரைச்சி ஊத்தி வச்சிருக்கறாப் போல இருக்குது.’ முனகலுடன் சால்சட்டியிலிருந்து ஒரு குடம் தண்ணீர் சாய்த்து தொட்டியில் ஊற்றி, மூட்டையிலிருந்து முறத்தில் கொஞ்சம் தவிட்டை அள்ளிப்போட்டுக் கலக்கி, பசுவை அவிழ்த்துத் தண்ணீர் காட்டினாள்.

வைத்த வாயை எடுக்காமல் தாகத்தோடு அது உறிஞ்சுவதையே பார்த்துக்கொண்டிருந்தவள், குடித்து முடித்ததும் இழுத்துக் கம்பத்தில் கட்டி நாலு வைக்கோலை அள்ளிப்போட்டாள்.

உள்ளே வந்தாள்.

‘எல்லாம் நமக்குப் பெரிய இமுஷை. ஒன்னும் புரிய மாட்டுது. பெரிய தலமூச்சனையா போச்சி இதுங்களோட. ஆரியோ இட்டாந்து வச்சி ஆக்கப் போறன்னாரே… அவளக் கூடம் காணமே! தனபாக்கியம்மாதான் பத்த வக்யணும் போலருக்குது.’

அடுப்பை மூட்டி சோற்று உலை சாய்த்துப் போட்டாள். அரிசியை அளைந்து தண்ணீர்விட்டுக் கழுவி அரித்து அடுப்பில் போட்டுவிட்டு, வாசற்படிப் பக்கமாய்ப் போய்க் குந்திக்கொண்டாள்.

‘இதுக்குத் தூக்கம் போலருக்குது. மூஞ்சை கீஞ்சையெல்லாம் போட்டு பிச்சிக்குது’ என்று கால்களை நீட்டிக் குழந்தையைக் கவிழ்த்துப் போட்டுத் தட்டினாள். கட்டில் கிறீச்சிட்டது. அவன் புரண்டு தூக்கம் கலைந்து எழுந்தான். கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தான்.

அவள் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கொஞ்ச நேரம் அமைதியிலே கழிந்தது. 

‘அய்யர் வந்துட்டுப் போனாரு…’ தனபாக்கியம் தலையைத் திருப்பாமலே கூழுப் பானையிடம் சொன்னாள்.

‘என்னாவாம்…’

‘ம்… ஓங்கம்மாவுக்கு நாளைக்கு தெவசமாம்.’

‘அப்புறம் என்ன சொன்னாரு?’

‘அப்புறம் என்ன சொல்லுவாரு…’

மீண்டும் கொஞ்ச நேரம் அமைதியில் தவழ்ந்தது.

‘புள்ள தூங்கிப்புட்டு இருந்தா.. இப்படி கொண்ணாந்து ஏணையில் போடேன், நான் ஆட்டறேன். நீ அடுப்பு வேலையை கவனிப்ப!’

‘ஒன்னும் வேணாம், அது நல்லா தூங்கிட்டுது. தோட்டத்துக்குப் போயி நாலு முருங்கக்காயன்னா தட்டு. பதார்த்தத்துக்கு ஒன்னும் இல்ல.’

(மார்ச், 1973)