கீறல்

by கமல தேவி
0 comment

புத்தகப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு பள்ளிவாயிலை நோக்கி உஷா ஓடினாள். வகுப்பிலிருந்து அனைவருமே வெளியேறியிருந்தார்கள். காலை பதினொரு மணிக்குப் பள்ளிக்கூடம் சாத்தப்படும் என்று பிள்ளைகள் எதிர்பார்க்கவில்லை. நேராக வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு வகுப்பிலும் அறிவுறுத்திச் சொல்லி அனுப்பினார்கள். குதித்துக்கொண்டும் சிரித்தபடியும் தலைமையாசிரியர் அறைக்கு அப்பால் உள்ள தென்னை மரங்களைக் கடந்து சிறிய படல் வழியில் வெளியேறினார்கள்.

பள்ளிக்காவலாளி ராமசாமி மேற்குப் பக்கமாக இருந்த பள்ளியின் முக்கிய வாயிலைப் பெரிய தென்னம்படலை இழுத்து வைத்து மூடிக்கொண்டிருந்தார். பக்கவாட்டில் உள்ள நெட்டிலிங்க மரத்தின் அடித்தண்டுடன் படலைப் பிணைக்கும் கனமான இரும்புச் சங்கிலியை இரண்டு முறை கீழே தவறவிட்டு எடுத்து மாட்டினார். பெரிய அரச இலை வடிவிலான இரும்புப் பூட்டு அது. அவருக்குப் பூட்டை எடுத்துக்கொடுப்பதற்காக உஷா திரும்பி ஓடி வந்தாள்.

“நானே பூட்டிக்கிறேன்.. நீ  சுருக்க வூட்டுக்கு ஓடு” என்று அவர் கத்தினார். அவர் குரல் இரும்பு ட்ரம்மை குச்சியால் அடிப்பதைப் போல அழுத்தமாக ஒலித்தது.

அவள் திரும்பி தார்ச்சாலையின் கிழக்குத் திசையில் நடந்தாள். தலைமையாசிரியரின் சாம்பல் நிற ஸ்கூட்டி அவர்களைக் கடந்துசென்று நின்றது. அவர் அவர்களை விரைவாக வீட்டிற்குச் செல்லச் சொல்லிவிட்டு வண்டியை முடுக்கினார். பாஸ்கர் அவளைத் திரும்பிப் பார்த்து நின்றான்.

“எல்லாப் பிள்ளைகளும் வூட்டுக்கு போயிருச்சு. நம்ம வாத்தியாரு சீக்கீரம் போவச் சொன்னாருல்ல?”

“என்னால பையத் தூக்கிக்கிட்டு ஓட முடியலடா.”

சாந்தி அவர்கள் இருவரையும் பார்த்தபடி நின்றாள். உஷா தார்ச்சாலையில் இருந்து சந்துக்குள் இறங்கினாள். பாஸ்கர் தயங்கி நின்றான்.

“ந்தா பாரு பிள்ள.. சந்து பொந்துல ஓடாம… தார் ரோட்டு வழியா நேர் வழியில போவச் சொன்னாங்கல்ல?” என்ற சாந்தி, அவளின் கையைப் பிடித்து இழுத்தாள்.

“அங்க ஒரு நாய் குட்டி போட்டுருக்கு. மூனு குட்டி… புசுபுசுன்னு சுருண்டு படுத்திருக்கு…”

பாஸ்கரும் சாந்தியும் தாங்கள் அவளுடன் வரவில்லை என்று சொல்லிவிட்டு நேராகத் தார்ச்சாலையில் ஓடினார்கள். தார்ச்சாலை திரும்பும் முடக்கில் இருக்கும் டீக்கடை அதிசயமாக மூடியிருந்தது. அங்கு கொஞ்ச நேரம் நின்று தட்டியில் ஒட்டப்பட்டிருந்த திரைப்படத்தின் சுவரொட்டியைப் பார்த்தாள் உஷா.

பின் மெதுவாக நடந்து சுரேஸ் வீட்டின் சந்துக்குப் பின்னால் இருந்த அரச மரத்துக் கல்கட்டில் பையை இறக்கி வைத்தாள். பழைய காலத்து கருங்கல்கட்டு மேடை அது. பழுத்த இலைகள் மஞ்சளாக மேடை முழுவதும் உதிர்ந்து கிடந்தன. எங்கும் உக்கிரமான வெயில் சலனமில்லாது படிந்து கிடந்தது. அரச மரத்திற்குக் கீழே சற்றுத் தள்ளி மேற்குப்புறம் கம்பித் தடுப்பிற்கு அப்பால் அமர்ந்திருந்த செல்லியம்மன், விழி நிறைய சினத்துடன் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

உஷா தன் பாவாடையைச் சுருட்டியபடி கல்மேடையில் அமர்ந்தாள். பளபளக்கும் சிவப்பு நிறப் பாவாடை அசைய அமர்ந்திருக்கும் செல்லியம்மனைத் தலைசாய்த்துப் பார்த்தாள். தன்னைப்போல ஆறாம் வகுப்பு படிக்குமோ? ‘இல்லையில்லை, சின்னப்பிள்ளையா இருக்கே! அஞ்சாப்புதான்’ என்று அவளே சொல்லிக்கொண்டாள். ‘எந்தப் பள்ளிக்கூடத்துல படிக்கும்?’ என்ற யோசனையைத் தள்ளி வைத்துவிட்டு எழுந்தாள்.

உதிர்ந்து கிடந்த இலைகளில் ஒன்றைப் பொறுக்கிச் சுருட்டிக் குழல் போல ஊதினாள். சத்தம் வரவில்லை. அங்கே கிடந்த கருங்கல் பாறையில் ஏறி நின்றாள். இடிந்த மண்சுவருக்கு அப்பால் பெரிய நாய் படுத்திருந்தது. அதன் வயிற்றுப்பக்கத்தில் மூன்று நாய்க்குட்டிகள். புசுபுசுவென்று தேங்காய்ப்பூத் துண்டு போலச் சுருண்டு படுத்திருந்தன. அதில் இரண்டு குட்டிகள் கறுப்பு, ஒன்று செவலை.

கல்லில் இருந்து இறங்கி நெருஞ்சிச் செடிகளில் கால்படாமல் தாவித்தாவி ஓடினாள். பாதி நின்ற செம்மண் சுவருக்கு இந்தப் பக்கமே நின்று சுவரில் கையூன்றிக்கொண்டாள். வெயில் ஏறிக்கொண்டிருந்தது. குட்டிகளின் மடங்கியிருந்த சிறிய காதுகளை, ஏறி இறங்கும் வயிறை மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு வியர்த்து வழிந்தது. துடைப்பதற்காகப் பாவாடையைப் பிடித்தபடி குனிந்தாள். ஊதா நிற அரைப்பாவாடை.

“பாவாடையைத் தூக்கறப்ப அக்கம் பக்கம் ஆளிருக்காங்களான்னு பாக்கணும். பொட்ட பிள்ளைக்கு பதிவுசு இருக்கணும்” என்று எப்பொழுதும் திட்டும் அப்பாயியின் கத்தல் நினைவிற்கு வந்தது. சட்டென்று பாவாடையைக் கீழே விட்டாள். சுற்றிலும் திரும்பிப் பார்த்துவிட்டு பாவாடையால் முகத்தைத் துடைத்தாள். ஈரத்தைப் பாவாடை உறிஞ்சவில்லை.

மீண்டும் நாய்க்குட்டிகளைப் பார்க்கத் தொடங்கினாள். குட்டிகள் பாலுக்காகக் காம்பைச் சப்பத் தொடங்கியிருந்தன. ‘அய்யே..’ என்று சிரித்து கண்களை மூடிக்கொண்டாள். நாய்க்குட்டிகளை மட்டும் பார்ப்பதற்காகப் பாதிக் கண்களைத் திறந்தாள். மரத்திலிருந்து காகங்கள் பறந்து இலைகளை உதிர்த்தன. பெரிய நாய் தலையை உயர்த்தி விருட்டென்று பார்த்தது.

அது அவளைப் பார்த்து ‘ற்ற்…ற்ற்’ என்று பற்களைக் காட்டி உறுமியதும் அரச மரத்திடம் ஓடி வந்தாள். இன்னொரு இலையை எடுத்துச் சுருட்டி ஊதினாள். இந்த முறை பச்சையான இலையை வசமாகச் சுருட்டியதால் சத்தம் எழும்பியது. ‘பீ..பீ..பீ…’ என்று ஊதிக்கொண்டே பையை எடுத்துக்கொண்டு சந்திலிருந்து நடந்து தார்ச்சாலையில் ஏறினாள்.

முடக்கில் கறுப்பு நிற ஜீப் ஒன்று நின்றது. மேற்கூரை இல்லாத வண்டி. பள்ளிக்கு அருகில் உள்ள தேநீர்க் கடையில் அவள் எப்போதும் பார்க்கும் தாத்தா வண்டிக்குப் பின்புறம் நின்றார். உள்ளே யாரோ ஒருவர் படுத்திருந்தார். கால்கள் மட்டும் ஆடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவள் உற்றுப் பார்த்தபடி ஜீப்பை நோக்கி நடந்து அருகில் சென்றாள்.

உயரமான ஒருவர் சட்டென்று திரும்பி, “ஏய்… அந்தப் பிள்ளைய அந்தட்டம் நவுத்துடா” என்றார். அந்தப் பக்கம் நின்றவர் ஓடி வந்து அவளின் தோளைத் திருப்பினார். அப்படியும் அவள் பார்த்துவிட்டாள்.

அவள் கால்கள் நடுங்கத் தொடங்கின. ஒரு உடல் தளர்ந்து கிடக்க, பாதி அறுபட்ட தலையிலிருந்து ரத்தம் ஊறி வழிந்திருந்த சட்டை வேட்டியுடன் அந்த உருவம் சரிந்து கிடந்தது. அந்த உடல் முழுவதும் வெட்டி இழுத்து ஒருமுறை அதிர்ந்தது. பின்னர் துள்ளியது. மாடு அடிவயிற்றிலிருந்து கத்துவதைப் போல ஒரு சத்தம். அவளின் அடிவயிறு கூசியது. உடலைக் குறுக்கிப் படுத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒன்று நெஞ்சுக்குப் பாய்ந்து அழுத்தியது.

அவள் தோளைப் பிடித்து நகர்த்தியவர் எதோ சொன்னார். அவளுக்குச் சரியாக விளங்கவில்லை. கால்கள் எடுத்து வைக்க முடியாதபடிக்குத் தள்ளாடின. சட்டென்று பின்புறமிருந்து ஜீப் சத்தம் ஒலித்ததும் அவளின் உடல் திடுக்கிட்டு அதிர்ந்து தரையில் விழுந்தது.

அவள் அருகில் காலடிச் சத்தங்கள் கேட்டன. ஒருவர் அவளை உட்கார வைத்து முதுகில் கைத்தாங்கலாகப் பிடித்தார். சூரியவொளி கண்களைக் கூசி மறைக்கவும் அவள் தன் கண்களை மூடிக்கொண்டாள்.

“ஏட்டு, தூக்கி தோளுல போடு..”

“யாரு வூட்டு பிள்ள?” என்ற குரல்கள் மாறி மாறிக் கேட்டன. ஒரு கை அவளைத் தோளில் இருத்திக்கொண்டது. அப்படியே தோளில் சாய்ந்துகொண்டாள். அந்தக் கை அவள் முதுகை மெதுவாக இரண்டு முறை தட்டிவிட்டு முதுகிலேயே இருந்தது. அவள் எதையோ முணுமுணுத்தாள்.

“பிள்ள தகப்பன தேடுது சார்… பாவம்!”

“ஆம்பளயாளுக ஒருத்தனும் வெளிய தலைகாட்டப்பிடாது. ஒம் பொண்டாட்டிய வரச்சொல்லு …” 

“வெள்ளெனயே ஸ்கூல் விட்டுருச்சு ஏட்டு…”

“ஊரை சுத்திட்டு கெடந்திருக்கும்… இதெல்லாம் நம்ம கண்ணுல படாம சந்து பொந்துல நடந்து வந்திருக்கும்.”

அவர்கள் நடக்கும் காலடி ஓசைகளும், காக்கைகளின், சிட்டுக்குருவிகளின் ‘கா.. கா.. கிச்.. கிச்..’ ஓசைகளும் கலந்து கேட்டன.

“சார்.. அதோ அந்த கம்பத்து வூடு தாங்க…”

“சரி, சரி.. நீ போ..”

“இந்தப் பிள்ளக்கு வேர்வையில சட்டையே நனைஞ்சுருச்சு சார்.”

“பயந்திருச்சு… நமக்கே என்னடான்னு போயிருச்சுல்ல? கெடா வெட்றாப்ல.. இன்னொருத்தன நுங்கு சீவறாப்ல அங்கங்க சீவி போட்டுருக்கான். ஆறு பேர தொரத்தி தொரத்தி ஒருத்தனே வெட்டியிருக்கான் பாத்துக்க. வயசுப்பய கையில கத்திய குடுத்தா இப்படித்தான்.”

கொஞ்ச நேரம் அவளுக்கு அப்பாயியின் சத்தமும் வேறு சில பேச்சுக்குரல்களும் கேட்டன. பின் சத்தங்கள் நின்று அப்பாயியின் குரல் மட்டும் கேட்டது.

“ஏய் தாண்டவா.. இங்கன கொஞ்சம் வந்துட்டு போ. பிள்ள பயந்துருச்சுய்யா… சுருக்க வாடான்னா” என்று அப்பாயி கத்தியது. அவள் முற்றத்துக் கட்டிலில் படுத்திருந்தாள்.

“அடுப்பு கங்குல இரும்பு கரண்டி காம்பை போடுக்கா” என்ற தாண்டவன் தாத்தாவின் குரல் அவள் அருகில் வந்தது. நெற்றியில் அவரின் கை சொரசொரப்பாகத் தொட்டுத் தடவியது. கண் இமைகளை வழுக்கட்டாயமாக இழுத்துப் பிரித்தார்.

அவளின் மணிக்கட்டைப் பற்றினார். சிறிது நேரம் கழித்து தன் கைக்குள் அவள் மணிக்கட்டைச் சுற்றிப் பிடித்தார். நெற்றியில் திருநீறைப் பூசிவிட்டார்.

“ஒன்னுமில்ல, ஒன்னுமில்ல.. அந்த கரண்டியை எடுத்தா.. திடுக்குத்தண்ணி குடுத்துப் பாப்போம்.”

சுர்ர் என்ற சத்தம் எழுந்தது. கையிலிருந்த மோர் சொம்பில் சுடுகரண்டிக் காம்பைவிட்டுக் கலக்கி எடுத்தார்.

அவளை இடது கையால் தூக்கிப்பிடித்து, “இதை குடிச்சுட்டு படுத்துக்கம்மா,” என்று சொம்பை வாயில் வைத்தார். புளிப்புச்சுவையுடன் வெதுவெதுப்பாக அவள் தொண்டையில் மோர் இறங்கியது.

“திடுக்குத் தண்ணி குடிச்சிருச்சு.. ஒன்னும் பயமில்ல. பசி நேரம், வெயில் வேற! பாக்கக் கூடாதத பாத்திருச்சுல்ல… அதான்” என்றபடி நெற்றியைத் தடவி படுக்க வைத்தார்.

“ஒங்க ஆள தொடையில ரெண்டு மூனு எடத்துல சீவி போட்டுட்டாங்களாமே?”

“எத்தன பேரு வெட்டுனானுங்க, வெட்டுபட்டவனுங்க எத்தன பேருன்னே இன்னுமும் தெரியலையேய்யா.”

“ஆமாமா..”

“மச்சினனுக்கு என்ன ஆச்சோன்னு இந்தப் பிள்ளையோட அப்பன் பஸ் ஏறிட்டான். அப்பனும் ஆத்தாளும் அங்க போயிட்டாங்க. பள்ளிக்கூடம் விட்டு ஊரு சுத்திப்பிட்டு இதுக்கு இப்பதான் வூடு தெரிஞ்சிருக்கு.”

“உங்காளு பொழச்சு வருவாரோ என்னமோ!”

“வந்திருவான். இவனுக்கெதுக்கு பைசலும் பஞ்சாயத்தும்? ஊரு மெக்க அலைஞ்சா.. இப்டித்தான் ஆவும்.”

“தாத்தன் காலத்துலருந்து போறாங்க.. இன்னிக்கு போறப்ல புதுசா பேசறியே?”

“அத விடு.. இந்தப் பிள்ளையப் பாரு. பொட்டப் பிள்ளைன்னா சொன்ன பேச்சக் கேட்டாதானே? ஊர் சுத்திட்டு கண்டத பாத்துட்டு வந்திருக்கு. சொன்னா இவங்கப்பனுக்கு கோவம் அய்யாத்து தண்ணியாட்டமா பாஞ்சுக்கிட்டு வரும்…”

அப்பாயி போர்வையைப் போர்த்திவிட்டது. அன்று ஒருநாள் பெரியசாமி கோவிலில் பாதி கத்தியுடன் தெறித்த ஆடு அவள் கண்ணில் வந்தது. ‘அய்யா….அய்யா’ என்று பதறினாள். தாண்டவன் தாத்தாவின் கை அவள் முதுகைத் தடவியது.

“மனசுக்கு போதம் சரியில்லக்கா… தூங்கி எந்திருச்சா சரியாப் போயிடும்…”

அவள் கண்களுக்குள் கறுப்பும் சிவப்புமாக ஒளியிலைகள் பிரிந்தன. செஞ்சிவப்பு விரிந்தது. பின் கருமை. கட்டிலுக்கு அடியில் விரிந்து சென்ற கரும்பரப்பு ஆழ ஆழமாக நகர்ந்தது. அதில் அவள் சருக்கி விழுந்துகொண்டிருந்தாள்.

ஆழத்திலிருந்து அவள் அழைத்தாள். ஒரு கை நீண்டு வந்து அவளைப் பிடித்துத் தூக்கியது. அவனின் இடது தொடை இரண்டாக உடைந்து தொங்கியது. ரத்தம் வழிந்துகொண்டிருக்க, அவன் புன்னகைத்தான். தன் நீண்ட கையை இன்னும் நீளமாக நீட்டி பொம்மை போல அவளைத் தூக்கி ஆற்றின் அக்கரையில் வைத்தான். அவள் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

எதிரே முற்றத்துச் செம்பருத்திச் செடி நிழலில் தாண்டவன் அமர்ந்திருந்தார். வெற்றிலை பாக்கை சிறிய இரும்பு உரலில் குத்திக்கொண்டிருந்தார். விரலை விட்டு விழுதைத் தோண்டியெடுத்து அப்பாயியிடம் கொடுத்தார். தானும் கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டு மீண்டும் உரலைத் தலைகீழாக இடது உள்ளங்கையில் கவிழ்த்தார்.

“பிள்ள பேச்சுக் குரல் கேக்குதே?” என்று எழுந்து அருகில் வந்தார். குனிந்து அவள் பேசுவதை உற்றுக் கேட்டார். சிரித்தபடி அப்பாயியை அருகில் அழைத்தார். அவள் பேசுவதைக் கேட்ட அப்பாயி நிமிர்ந்து இடுப்பில் கையூன்றி நின்றது.

“துரியோதனன் கனவுல வந்திருப்பானோ? நல்லதா கெட்டதா…”

தாண்டவன் தாத்தா வெளியே சென்று வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்தார்.

“கீழ விழுந்துட்டா தூக்கிவிடற தாட்டியமுள்ளவனைத்தானே கூப்புடுவோம்? சரியான ஆளைத்தான் உம் பேத்தி கூப்புடுது.”

“இவங்கப்பன் எப்ப பாத்தாலும் கதை சொல்லிக்கிட்டு இருப்பான். நேத்து ராவுகூட பின்னாடி வேப்ப மரத்துக்கடியில ஒக்காந்து கத கேட்டுச்சு.. அந்த நெனப்புல பேசுது.”

“ம்மாடீ… ந்தா இப்ப துரியோதனன் வந்திருவான். தூங்கு…” என்று அவள் தலையைத் தடவிய பின், “துரியாதனரே எறங்கி வாரும்.. எம் பிள்ளைக்கு மனசு ஒருமிக்கற வரைக்கும் எந்த ரூபத்துலயாச்சும் கூடவே இருய்யா” என்று கண்கள் மூடிக் கும்பிட்டு அவள் தலையில் கை வைத்துவிட்டு வெளியேறினார்.

பொழுது இருட்டத் தொடங்கியிருந்தது. அவள் எழுந்து கட்டிலில் அமர்ந்தாள். முற்றத்தில் குண்டு பல்பின் மஞ்சள் வெளிச்சம் தண்ணீரில் எண்ணெய்ப் பிசுக்கைப் போலப் பரவியிருந்தது. கட்டிலில் கால்களைக் குறுக்கியபடி அமர்ந்தாள். வெள்ளைத்தாளை எண்ணெயில் நனைத்து குண்டு பல்பின் அருகே தொங்கவிட்டிருந்தார்கள். அதில் சிறுபூச்சிகளின் கண்ணாடிச் சருகு போன்ற மிகச்சிறிய இறக்கைகள் ஒட்டிக்கொள்ள, பறப்பதற்கான துடிப்புகூட இல்லாத பூச்சிகள் ஓவியம் போல அசையாமல் இருப்பதைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். கால்களில் உளைச்சல் இருந்தது. கீழே இறங்கி நடக்கலாமா வேண்டாமா என்று தரையைப் பார்த்தபடி குனிந்திருந்தாள். மீண்டும் படுத்து உறங்கிப்போனாள்.

செல்லியம்மனின் சிவந்த பாவாடை காற்றில் ஆடியது. உறுமிய பெரிய நாயின் நாக்குச் சிவப்பு அவளை நோக்கி நீண்டு வந்தது. பின் மெதுவாக அது குட்டிகளின் உடலை நக்கியது. அவை பால்காம்புகளைப் பற்றி இழுத்தன. அவள் கண்களை மூடிச் சிரித்துக்கொண்டாள். செல்லியம்மனின் முகத்தைப் பார்த்து நிமிர்ந்தாள். சிரித்த கண்களுடன் அவளை விளையாட வரச்சொல்லி அழைத்தாள். செல்லியின் கைகளில் அந்த மூன்று நாய்க்குட்டிகளும் இருந்தன. அய்யாவின் குரல் கேட்டது. அப்பாயி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது. அவரின் பதைபதைப்பான குரல் அவள் அருகில் வந்து நின்றது. கண்களைத் திறந்து பார்த்தாள்.

சட்டென மிரட்சியில் விழிமணிகள் விரிந்தன. பின் கண்களை மூடிக்கொண்டாள். அவர் குனிந்து அவளின் கண்கள் நிலைத்த இடத்தைப் பார்த்தார். வெள்ளைச் சட்டையில் பரவியிருந்த ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்தில் காய்ந்திருந்தது. சட்டையைக் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு அவள் பக்கத்தில் வந்து நின்றார்.

அவள் கண்களுக்குள் சிவப்பு வண்ணம் சுழன்று கருமையாகத் தொடங்கியது. அவர் கைகளின் தண்மை அவள் கன்னத்தைத் தட்டியது. அவள் தன் கண்களைத் திறக்க முயன்றாள். இமைகளுக்கு அடியில் விழிமணி உருண்டு அசைந்தது. கண்களுக்குள் மீண்டும் மீண்டும் செந்நிறம் விசிறி அலைந்தது. துள்ளி விழுந்தது. “உஷா எந்திரி” என்று திரும்பத் திரும்ப அய்யா அழைத்துக்கொண்டிருந்தார்.