சிகை – வில்லியம் ஃபாக்னர்

by கார்குழலி
1 comment

1

இந்தப் பெண் சூசன் ரீட் ஓர் அனாதை. பர்ச்செட் குடும்பத்தினர் தங்களின் மற்ற இரண்டு மூன்று குழந்தைகளுடன் சேர்த்து அவளையும் வளர்த்தனர். சூசன் அவர்களின் கூடப்பிறந்தவர்களின் மகள் அல்லது வேறு யாரோ உறவினரின் மகள் என்று ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டனர். இன்னும் சிலர் திருவாளர் பர்ச்செட்டின் நடத்தையில் சந்தேகம் கொண்டனர். இன்னும் சிலருக்கு அவர் மனைவியின் ஒழுக்கம் குறித்து சந்தேகம். உங்களுக்குத்தான் தெரியுமே!

இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்தான்.

ஹாக்சா இந்த ஊருக்கு வந்து சேர்ந்தபோது அவளுக்கு ஐந்து வயதிருக்கும்.

மேக்சியின் முடிதிருத்தும் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். இந்த ஊரில் அவன் கழித்த முதல் கோடைக்காலத்தின் போது சூசனை திருமதி பர்ச்செட் கடைக்கு முதல்முறையாக அழைத்துவந்தார்.

திருமதி பர்ச்செட் மூன்று நாட்களாகச் சூசனை கடைக்கு அழைத்துவர எத்தனை பாடுபட்டார் என்பதைத் தானும் கடையில் வேலைசெய்பவர்களும் வேடிக்கை பார்த்த கதையை மேக்சி சொன்னார். அப்போது சூசன் மெலிந்த தேகமும் மருட்சியோடு பார்க்கும் பெரிய கண்களும் நேரான மென்மையான தலைமுடியும் கொண்டிருந்தாள். தலைமுடியின் நிறம் இளம்பழுப்பும் இல்லை அடர்பழுப்பும் இல்லை. கடைசியில் ஹாக்சா கடைக்கு வெளியே போய் அவளிடம் கால்மணி நேரத்துக்கும் மேலாகப் பேசி சமாதானம் செய்து கடைக்குள் அழைத்துவந்து முடியை வெட்டியதாகச் சொன்னார் மேக்சி. இதுவரையில் அந்த ஊரில் யாரிடமும் ‘ஆமாம்’, ‘இல்லை’ என்ற இரு வார்த்தைகளுக்கு மேலே ஹாக்சா பேசியதில்லை என்பதும் தெரிந்ததுதானே? “அவள் கடைக்கு வரும் நாளுக்காக ஹாக்சா காத்திருந்ததைப் போலவே இருந்தது,” என்று சொன்னார் மேக்சி.

அவள் அன்றுதான் முதன்முதலாகத் தலைமுடியை வெட்டிக்கொண்டாள். ஹாக்சா வெட்டி முடிக்கும் வரையிலும் பயந்து நடுங்கும் முயல்குட்டியைப் போல உட்கார்ந்திருந்தாள். 

அடுத்த ஆறு மாதத்தில் தனியே கடைக்கு வந்து ஹாக்சாவிடம் முடி வெட்டிக்கொள்ளப் பழகிவிட்டாள். இன்னமும் மருண்ட பார்வை கொண்ட முயல்குட்டியைப் போலத்தான் உட்கார்ந்திருந்தாள். எந்தவிதமான சிறப்பான பெயருக்கும் பொருத்தமற்ற அவள் முடி போர்த்திய துணிக்கு மேலே தெரியும். ஹாக்சா வேலையாக இருந்தால் அவன் வரும் வரையிலும் அருகே இருக்கும் பெஞ்சில் மெலிந்த நீண்ட கால்களை நீட்டியபடி பொறுமையாக உட்கார்ந்திருப்பாள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சவரம் செய்துகொள்ள வருபவர்களைப் போலவே அவளும் ஹாக்சாவின் வழக்கமான வாடிக்கையாளராகிப் போனதாகச் சொன்னார் மேக்சி. ஒருமுறை ஹாக்சா வேறு வாடிக்கையாளருக்கு முடிவெட்டிக்கொண்டிருந்தான். மேட் ஃபாக்ஸ் என்ற இன்னொரு பணியாளர் முடியை வெட்டிவிடுகிறேன் என்று சொன்னபோது மின்னல் வேகத்தில் தலையை உயர்த்தி, “ஓரிரு நிமிடத்தில் நானே வந்து வெட்டி விடுகிறேன்,” என்று கூறினான் ஹாக்சா. அங்கு வேலைக்குச் சேர்ந்த அந்த ஒரு வருடத்தில் அன்றுதான் முதல்முறையாக ஹாக்சாவின் நீளமான பேச்சைக் கேட்டதாகச் சொன்னார் மேக்சி.

அந்தக் கோடைக்காலம் முடிந்ததும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினாள் சூசன். இன்னமும் குட்டிப் பெண்தான். வெட்கத்தோடு கடையை வேகவேகமாகத் தாண்டிப் போகையில் அந்த மஞ்சளும் பழுப்பும் கலந்த தலைமுடி ஜன்னல் வழியாகத் தெரியும். முதலில் தனியாகத்தான் போனாள். பிறகு மற்ற தலைகளுக்கு நடுவே அவளுடைய தலையும் தெரிந்தது. ஆனால் மும்முரமாகக் கதை பேசியபடியே போனதால் அவளுடைய தலை கடைப் பக்கம் திரும்பாது. ஜன்னலருகே நின்றபடி தெருவைப் பார்த்துக்கொண்டிருப்பான் ஹாக்சா. “எட்டு மணியாக ஐந்து நிமிடம் இருக்கிறது என்பதையும் மூன்று மணியாகி விட்டதையும் கடிகாரத்தைப் பார்க்காமலே நானும் மேட்டும் தெரிந்துகொள்வோம்” என்று சொன்னார் மேக்சி. தான் என்ன செய்கிறோம் என்பதை உணராமலேயே பள்ளிக் குழந்தைகள் தெருவைக் கடக்கும் நேரத்தில் ஜன்னலருகே போய் நின்று வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்குவான் ஹாக்சா. தலைமுடியை வெட்டிக்கொள்ள அவள் கடைக்கு வரும்போது மற்ற குழந்தைகளுக்குத் தருவதை விடவும் அவளுக்கு இரண்டு மூன்று பெப்பர்மிண்ட் மிட்டாய்களைக் கூடுதலாகத் தருவான் என்பதையும் சொன்னார் மேக்சி.

இல்லை, அதைச் சொன்னது மேட் ஃபாக்ஸ். கிறிஸ்துமஸின் போது அவளுக்கு அந்தப் பொம்மையைப் பரிசாக ஹாக்சா தந்ததைச் சொன்னவனும் அவன்தான். அந்த விஷயத்தை எப்படிக் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. அதுகுறித்து அவனிடம் ஹாக்சா எதையும் சொல்லியிருக்கவில்லை. ஆனால் எப்படியோ தெரிந்துகொண்டான். ஹாக்சாவைப் பற்றி மேக்சியைவிடவும் அதிகமாக அவனுக்குத்தான் தெரியும். மேட்டுக்குத் திருமணமாகி இருந்தது. கொஞ்சம் குண்டான சதை பிதுங்கும் உடல்வாகு. தட்டையான வெளுத்த முகம். சோகமும் சோர்வும் கலந்த கண்கள். வேடிக்கையான மனிதன். ஹாக்சாவைப் போலவே வேலை தெரிந்தவன். ஆனால் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. அப்படி ஒருவன் வாயே திறக்காத ஹாக்சாவிடம் இருந்து இந்தத் தகவல்களை எல்லாம் எப்படிக் கறந்தான் என்பது தெரியவில்லை. அதிகம் பேசுபவர்கள் சொற்களைத் தவிர வேறு எதையும் கற்றுக்கொள்வதற்கு நேரம் இருப்பதில்லை என்று நினைக்கிறேன்.

அவள் வளர்ந்து பெரியவள் ஆன பிறகும் ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கும் ஹாக்சா பரிசு தந்ததைப் பற்றியும் சொன்னான் மேட். அவள் இன்னமும் அவனிடம்தான் முடி வெட்டிக்கொண்டாள். அவனும் காலையிலும் மாலையிலும் அவள் பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் காத்திருந்து அவளைப் பார்ப்பதை நிறுத்தவில்லை. அவள் வளர்ந்துவிட்டாள், அதனால் இப்போதெல்லாம் வெட்கப்படுவதில்லை.

அவள் அதே பெண்தான் என்பதை நீங்கள் நம்பக்கூட மாட்டீர்கள். அவள் வளர்ந்துவிட்டாள். அதிவேகமாக வளர்ந்துவிட்டாள். அதுதான் பிரச்சினையே. ஒரு சிலர் அனாதையாக இருப்பதுதான் காரணம் என்றார்கள். ஆனால் அதுவல்ல காரணம். பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிடவும் வித்தியாசமானவர்கள். பெண்கள் சீக்கிரம் வளர்ந்துவிடுகிறார்கள். ஆண்கள் எப்போதுமே வளர்வதில்லை. ஓர் ஆணுக்கு அறுபது வயது ஆகியிருந்தாலும் கண்சிமிட்டும் நேரத்தில் தொட்டிலில் போய் படுத்துக்கொள்ளவில்லை என்றால் என்னைக் கேளுங்கள்.

அவள் மோசமானவள் என்று பொருளில்லை. தனிப்பட்ட ஒரு பெண்ணை மாத்திரம் மோசமானவளாகப் பிறந்தாள் என்று சொல்வதற்கில்லை. பெண்கள் எல்லோருமே மோசமானவர்களாகத்தான் பிறக்கிறார்கள், மோசமான விஷயம் உள்ளூரப் புதைந்திருக்கிறது. அது தலைதூக்கி தன்னுடைய இயல்பான உருவைப் பெறுவதற்கு முன்னால் அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்துவிட வேண்டும். ஆனால் நாமோ குறிப்பிட்ட வயதை அடையும் வரையில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்யக்கூடாது என்ற அமைப்பின்படி நடக்கிறோம். இயற்கை அமைப்புகளைப் புறந்தள்ளுகிறது. பெண்கள்கூட அமைப்புகளுக்கோ மற்ற விஷயங்களுக்கோ முக்கியத்துவம் தருவதில்லை. அவள் வெகு வேகமாக வளர்ந்தாள். அவளுக்கான நேரம் வந்துவிட்டது என்று அமைப்பு சொல்வதற்கு முன்னரே அவளின் மோசமான பகுதி தலைதூக்கியது. அப்படி நடக்கையில் அவர்களால் அதுகுறித்து எதுவும் செய்ய முடிவதில்லை. எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள் என்பதனால் இதைச் சொல்கிறேன்.

அவள் கதையைப் பார்ப்போம். அப்போது அவளுக்குப் பதிமூன்று வயதுதான் இருக்கும் என்று கணக்கிட்டோம் என்றான் மேட். முகப்பூச்சையும் சிகப்பு நிறத்தையும் பயன்படுத்தியதற்காக அவளை வெளுத்து வாங்கிவிட்டார் திருமதி பர்ச்செட். அதுவுமில்லாமல் அந்த வருடம் முழுவதும் அவளும் இன்னும் இரண்டு மூன்று பெண்களும் சேர்ந்துகொண்டு பள்ளிக்குப் போகாமல் கிறீச்சிட்டபடியும் சிரித்தபடியும் தெருவில் சுற்றித் திரிந்தார்கள் என்றும் சொன்னான். இன்னமும் மெலிந்த உடலோடுதான் இருந்தாள். தலைமுடியும் இளம்பழுப்போடும் சேராமல் அடர்பழுப்போடும் சேராமல் இருந்தது. முகத்தில் அப்பியிருந்த வண்ணப்பூச்சு வறண்ட நிலம் போல வெடித்துப் போகுமோ என்று நினைக்கச் செய்தது. பதிமூன்று வயது குழந்தைகள் வழக்கமாக அணிந்துகொள்ளும் எளிய கட்டம் போட்ட ஆடைகளைத்தான் அணிந்திருந்தாள். ஆனால் வளர்ந்த பெண்கள் பட்டாடைகளை அணிந்துகொள்கையில் செய்வதைப் போல அவளிடம் இல்லாதவற்றை வெளியே காட்டுவதற்காக ஆடையை அங்கேயும் இங்கேயும் இழுத்துவிட்டிருந்தாள்.

அப்படி ஒரு நாள் அவள் கடையைக் கடந்துபோகையில் அவள் மெல்லிய காலுறை அணியவில்லை என்பதைக் கவனித்தார் மேட். கொஞ்சம் யோசித்த போது அவள் அந்தக் கோடைக்காலத்தில் எந்த நாளுமே காலுறை அணிந்திருக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. அவள் காலுறை அணியவில்லை என்பதைவிட அவளுடைய கால் வளர்ந்த பெண்ணின் காலைப் போல இருந்தது என்பதே தனக்கு ஆச்சரியமூட்டியது என்பதை உணர்ந்தேன் என்றார். அப்போது அவள் வயது பதிமூன்று.

அதற்கு அவள் என்ன செய்ய முடியும்? அது ஒன்றும் அவளின் தவறில்லையே! அது பர்ச்செட்டின் தவறும் இல்லை. இப்படி எல்லாமே சீக்கிரம் நடக்கும் துரதிருஷ்டம் பிடித்தவர்களையும் மோசமானவர்களையும் ஆண்களைத் தவிர வேறு யாராலும் இத்தனை கனிவுடன் நடத்த முடியாது.  இந்த ஊரைச் சேர்ந்த அதே ஆண்கள் ஹாக்சாவை எப்படி நடத்தினார்கள் என்பதைப் பாருங்கள். ஊரில் இருப்பவர்களுக்கு இதுபற்றி தெரியவந்து எல்லோரும் இது பற்றி பேசத் தொடங்கினாலும்கூட யாரும் ஹாக்சாவின் முன்னால் பேசவில்லை. அவனுக்கும் அதுபற்றி தெரிந்திருக்கும் என்று நினைத்தார்களோ? கடையில் அவளைப் பற்றி பேசும்போது பக்கத்தில் ஹாக்சா இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள். கடை வழியே அவள் நடந்து போகையில் ஹாக்சா ஜன்னல் அருகே போய் நின்று அவளைப் பார்ப்பதை எல்லோருமே கவனித்தார்கள் அல்லது  திரைப்படம் முடியும் நேரத்தில் அரங்கத்துக்கு வெளியே நின்றபடி அவள் வேறு ஒருவனுடன் வெளியே வருவதைப் பார்த்துக்கொண்டிருப்பான். பதினான்கு வயது முடியும் முன்னரே மற்ற ஆண்களோடு வெளியே போகத் தொடங்கிவிட்டாள். வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து பிறகு அதே போல யாருக்கும் தெரியாமல் வீடு வந்துசேர்வாள்.  அவள் ஏதாவது பெண் தோழியின் வீட்டுக்குப் போயிருந்தாள் என்று திருமதி பர்ச்செட் நினைத்துக்கொள்வார்.

ஆனால் ஹாக்சாவின் முன்னால் அவளைப் பற்றி எதுவும் பேசமாட்டார்கள். அவன் உணவுண்ணப் போகும் வரை காத்திருப்பார்கள் அல்லது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் இரண்டு வார விடுமுறையில் போகையில் பேசுவார்கள். ஏப்ரல் மாதத்தில் எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அவன் கிளம்பிப் போனதும் அந்தப் பெண் ஊர் சுற்றுவதையும் எப்போது ஏதாவது வம்பு விவகாரத்தில் மாட்டிக்கொள்ளப் போகிறாளோ என்பதையும் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். ஆரம்பத்தில் பர்ச்செட்டுக்கு இதைப் பற்றி எல்லாம் எதுவும் தெரியவில்லை. அவள் பள்ளிக்கூடத்துக்குப் போவதை நிறுத்தி ஒரு வருடமாகி இருந்தது. பள்ளிக்கூட கட்டிடத்துக்குள்ளேகூட அவள் போயிருக்காத அந்த ஒரு வருட காலமும் திருவாளர் பர்ச்செட்டும் அவரது மனைவியும் அவள் பள்ளிக்குப் போகிறாள் என்று நினைத்துக்கொண்டு இருந்தார்கள். உயர்நிலை வகுப்பில் படிக்கும் பையன்களோ, திருமணமான ஆண்களோ, யார் என்பதைப் பற்றி எல்லாம் அவளுக்குக் கவலையில்லை, யாராவது ஒருவர் அவளின் பள்ளி மதிப்பெண் அறிக்கையை எடுத்து வருவார்கள். அதை அவளே நிரப்பி எடுத்துக்கொண்டு போய் திருமதி பர்ச்செட்டிடம் கையொப்பம் வாங்குவாள். ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டால் அவள் தன்னை ஏமாற்றுவதுகூடத் தெரியாத மனிதர்களைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.

பிறகு பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு பத்து செண்ட் கடையில் வேலைக்குச் சேர்ந்தாள்.

தலைமுடியை வெட்ட கடைக்கு வரும்போது முகத்தில் ஒப்பனை சுவர் பூச்சு போல அப்பியிருக்கும். உடல் வெளியே தெரியும்படியான மெலிதான ஆடையை அணிந்திருப்பாள். ஆனால் தைரியமாக எல்லோரையும் எடைபோடும் பார்வையைப் பார்ப்பாள். தலைமுடி கோந்து அப்பியது போல ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டும் திருகிக்கொண்டும் முகத்தின்மீது விழுந்து கிடக்கும். என்ன செய்தும் முடியின் பழுப்பும் மஞ்சளும் கலந்த நிறம் கொஞ்சமும் மாறவில்லை. எப்போதும் ஹாக்சாவின் நாற்காலியில்தான் அமர்வாள் என்பதில்லை. அவனுடைய நாற்காலி காலியாக இருந்தாலும் வேறொரு முடிதிருத்துபவரின் நாற்காலியில் போய் உட்கார்ந்துகொண்டு உரத்த குரலில் பேசுவாள். கடையே அவளின் பேச்சொலியாலும் வாசனை திரவியத்தின் மணத்தாலும் நிறைந்து போகும். கால்கள் மேலே போர்த்திய துணிக்கு வெளியே துருத்திக்கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் ஹாக்சா அவள் பக்கம் திரும்பவே மாட்டான். வேலை இல்லாத போதும் இருப்பது போலக் காட்டிக்கொள்வான். மும்முரமான தீர்க்கமான பாவனையோடு வேலை இருப்பது போல அந்த நடிப்புக்குப் பின்னால் ஒளிந்துகொள்வான்.

இரண்டு வார விடுமுறையில் அவன் போனபோது நிலைமை இப்படித்தான் இருந்தது. அவனுடைய இரகசியப் பயணம் குறித்துத் தெரிந்துகொள்ள ஊர் மக்கள் முயன்று, முடியாமல் கைவிட்டு, பத்து வருடமாயிற்று. அவன் கிளம்பிப்போன இரண்டொரு நாளில் ஜெஃபர்சன் வந்துசேர்ந்தவன் நேரே கடைக்குப் போனேன். அவனைப் பற்றியும் அவளைப் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தனர்.

“இன்னமும் அவளுக்குக் கிறிஸ்துமஸ் பரிசுகளைத் தருகிறானா?” என்று கேட்டேன்.

“இரண்டு வருடத்துக்கு முன்னால் கைக்கடிகாரம் ஒன்றை வாங்கிக் கொடுத்தான். அதன் விலை அறுபது டாலராம்,” என்றான் மேட் ஃபாக்ஸ்.

வாடிக்கையாளருக்கு முகச்சவரம் செய்வதை நிறுத்தினார் மேக்சி. அவர் கையில் இருந்த சவரக்கத்தியில் சோப்பு நுரை மண்டியிருந்தது. “அடக்கடவுளே! அப்படியானால் அவன்தான்….அவன்தான் முதலாவதாக இருக்குமோ… அதைச் செய்தவனாக…”

அவர் பக்கம் திரும்பாமலே பேசினான் மேட். “இன்றுவரை அவளிடம் அவன் அதைக் கொடுக்கவில்லை,” என்றான்.

“அதற்கான வேளைக்குக் காத்திருக்கிறானா?” என்றான் மேக்சி. “சின்னப் பெண்களோடு கும்மாளம் போட நினைக்கும் வயதான ஆண்கள் மோசம். அதிலும் அவளை ஏமாற்றி தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டு அதற்கான விலையையும் கொடுக்காதவன் படுமோசம்..”

வாடிக்கையாளருக்கு முகச்சவரம் செய்துகொண்டு இருந்தான் மேட். திரும்பி அவரைப் பார்த்தான்.

“அதை அவன் கொடுக்காததற்கான காரணம் தெரிந்தால் இப்படிப் பேசமாட்டீர்கள். இரத்த உறவு அல்லாதவர்களிடம் இருந்து ஆபரணங்களைப் பரிசாக வாங்கிக்கொள்ளும் வயதை அவள் எட்டவில்லை என்பதுதான் காரணம்.”

“அவனுக்கு எதுவுமே தெரியாது என்றா சொல்கிறாய்? திருவாளர் மற்றும் திருமதி பர்ச்செட்டைத் தவிர இந்த ஊரைச் சேர்ந்த எல்லோருக்கும் மூன்று வருடமாக நன்றாகத் தெரிந்த விஷயம் அவனுக்குத் தெரியாது என்றா சொல்கிறாய்?”

மீண்டும் வாடிக்கையாளர் பக்கம் திரும்பினான் மேட். அவனுடைய முன்கையும் சவரக்கத்தியும் சீராக அசையத் தொடங்கின. “அவனுக்கு எப்படித் தெரியும்? இன்னொரு பெண்ணைத் தவிர வேறு யாரும் அதைச் சொல்ல முடியாது. அவனுக்கோ திருமதி கோவனைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் தெரியாது. அவரும் அவனுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறார் போல.”

“அதுவும் உண்மைதான்,” என்றார் மேக்சி.

அவன் வழக்கம்போல இரண்டு வார விடுமுறையில் போகும்போது நிலைமை இப்படித்தான் இருந்தது. ஜெஃபர்ஸனில் நான் வந்த வேலை ஒன்றரை நாளில் முடிந்துவிட்டது. வாரத்தின் இடைநாளில் டிவிஷனை அடைந்தேன். நான் அவசரப்படவில்லை. அவனுக்குக் கொஞ்சம் அவகாசம் தர விரும்பினேன். ஒரு புதன்கிழமை காலையில் அங்கே போய்ச் சேர்ந்தேன்.

2

ஒரு காலத்தில் காதல் இருந்திருந்தால், ஹாக்சா அவளைப் பற்றி மறந்துவிட்டான் என்றுதான் சொல்வார்கள். அதாவது காதலை மறந்துவிட்டான் என்று பொருள். பதிமூன்று வருடங்களுக்கு முன்னால் அவனை முதலில் பார்த்தேன். அப்போதுதான் வடக்கு மிஸ்ஸிஸிப்பிக்கும் அலபாமாவுக்குமான என் பயணங்களை ஆரம்பித்து இருந்தேன். போர்டர்ஃபீல்டில் இருந்த முடிதிருத்தும் கடையில் இருந்தான். “பிறக்கும் போதே பிரம்மச்சாரியாகப் பிறந்த ஒருவனைப் பாருங்கள். பிரம்மச்சாரியாக மட்டுமல்ல, நாற்பது வயதுக்காரனாகவே பிறந்தவனும் இவன்தான்” என்று சொன்னேன்.

சிறிய உருவம். பழுப்பு நிறம். பெரிதாக நினைவில் வைத்துக்கொள்ளும் முகமல்ல. பத்து நிமிடம் கழித்துத் திரும்பப் பார்த்தால் நினைவுக்கு வராத முகம். நீல நிறக் கம்பளியால் ஆன சூட்டும் கறுப்பு நிற ரிப்பன் வடிவ டையும் அணிந்திருந்தான். தயார்நிலையில் இருக்கும் டை. கொக்கியை மாட்டிக்கொண்டால் போதும். ஒரு வருடம் கழித்து ஜெஃபர்ஸன் இரயில் நிலையத்தில் இறங்கிய போது இதே சூட்டையும் டையையும் அணிந்திருந்தான் என்று மேக்சி சொன்னார். நல்ல தோலால் செய்யப்பட்டது போன்ற தோற்றம் கொண்ட, ஆனால் அட்டையால் செய்யப்பட்ட போலிப் பெட்டியைக் கையில் எடுத்துவந்தான்.

அடுத்து அவனைப் பார்த்தது ஜெஃபர்ஸனில். மேக்சியின் கடையில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். முடிதிருத்தும் நாற்காலியின் பின்னால் நிற்கவில்லை என்றால் அடையாளம் தெரிந்திருக்காது. அதே முகம், அதே டை. நாற்காலி, வாடிக்கையாளரோடு அவனை அப்படியே அங்கிருந்து எடுத்து அறுபது மைலுக்கு அப்பால் இருக்கும் இடத்தில் கொண்டுவந்து வைத்தது போல இருந்தது. ஒரு துளியேனும் எதிலும் எந்த மாற்றமும் இல்லை. இந்த இடம் ஒரு வருடத்துக்கு முன்னால் நான் சென்றிருந்த போர்ட்டர்ஃபீல்ட் அல்ல என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ஜன்னலுக்கு வெளியே பார்க்க வேண்டியிருந்தது. ஆறு மாதத்துக்கு முன்னால் போர்ட்டர்ஃபீல்டுக்குப் போயிருந்த போது அவன் அங்கே இல்லை என்பது நினைவுக்கு வந்தது.

இது நடந்து மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் அவனைப் பற்றிய தகவல்கள் தெரியவந்தன.

வருடத்துக்கு ஐந்து முறை டிவிஷனுக்குப் போவேன். ஒரு கடையும் நான்கைந்து வீடுகளும் மிஸ்ஸிஸிப்பி அலபாமா மாகாணங்களுக்கு இடையே ஓடிய நெடுஞ்சாலையில் இருந்த மர அறுவை ஆலையும் மட்டுமே அந்த ஊரில் இருந்தன. அங்கே ஒரு வீட்டைப் பார்த்தேன். அருமையான வீடு, அங்கு இருந்தவற்றிலேயே சிறந்தது எனச் சொல்லலாம், என்றாலும் எப்போதும் மூடியே கிடந்தது.

இளவேனில் பருவத்தின் முடிவிலோ கோடைக்காலத்தின் தொடக்கத்திலோ வீட்டில் ஏதோ மாற்றம் தெரியும். முற்றத்தில் இருக்கும் களைகள் பிடுங்கப்பட்டு மலர்ப்பாத்திகள் நேர்த்தியாக்கப்பட்டு வேலியும் கூரையும் சீரமைக்கப்பட்டு இருக்கும். இலையுதிர் காலத்திலோ பனிக்காலத்திலோ போகையில் முற்றத்தில் களைச்செடிகள் முளைத்திருக்கும். வேலியின் சில பகுதிகள் உடைந்தோ காணாமலோ போயிருக்கும். யாராவது வந்து அவர்கள் வீட்டு வேலியைச் சீரமைக்கவோ அடுப்பில் விறகு எரிக்கவோ எடுத்துக்கொண்டு போயிருப்பார்களோ என்னவோ! வீட்டின் முன்கதவு எப்போதும் அடைத்திருக்கும். சமையலறை புகைபோக்கியின் வழியே புகை வராது. ஒருநாள் கடைக்காரரிடம் விசாரித்த போது தகவலைச் சொன்னார்.

அந்த வீடு ஸ்டர்ன்ஸ் என்பவருக்குச் சொந்தமானது, ஆனால் அந்தக் குடும்பத்தில் இப்போது யாரும் உயிரோடு இல்லை. அந்த ஊரிலேயே சிறப்பானவர்கள் என்று கருதப்பட்ட குடும்பம் அது. ஏனெனில் அவர்களுக்குச் சொந்த நிலம் இருந்தது, அதற்காக வங்கியில் கடன் வாங்கி இருந்தார்கள். திருவாளர் ஸ்டர்ன்ஸ் ஒரு சோம்பேறி. நிலத்துக்குச் சொந்தக்காரனாக இருப்பதிலேயே நிறைவுகொண்டவர். சாப்பிடப் போதுமான உணவும் கொஞ்சம் புகையிலையும் இருந்தால் போதும். அவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள். நிலத்தைப் போகியதுக்கு எடுத்து அதில் விவசாயம் செய்துவந்த ஒருவரின் இளவயது மகனுக்கும் அவளுக்கும் திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது. அவளின் அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் ஸ்டர்ன்ஸ் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை ஸ்ட்ரிப்ளிங் (அதுதான் அந்த இளைஞனின் பெயர்) கடுமையான உழைப்பாளி என்பதால் இருக்கலாம் அல்லது மறுப்பு தெரிவிக்கக்கூட ஸ்டர்ன்ஸ் சோம்பல்பட்டதாலும் இருக்கலாம். எப்படியோ இருவரின் திருமணமும் நிச்சயமாகி இருந்தது. கொஞ்சம் பணம் சேமித்து வைத்து முடிதிருத்தும் பணியைக் கற்றுக்கொள்வதற்காகப் பர்மிங்காமுக்குப் போனான் ஸ்ட்ரிப்ளிங். ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத்தில் அவளைப் பார்ப்பதற்கு வருவான். பாதி தூரத்துக்கு வண்டிகளிலும் மீதி தூரத்துக்கு நடந்தும் வருவான்.

ஒரு நாள் தன் வீட்டு முற்றத்தில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கையில் இறந்துபோனார் ஸ்டார்ன்ஸ். மூச்சுவிடுவதற்குச் சோம்பேறித்தனப்பட்டு இறந்துபோனதாகப் பேசிக்கொண்டார்கள். ஸ்ட்ரிப்ளிங்குக்குத் தகவல் சொல்லி அனுப்பினார்கள். பர்மிங்காமில் கடை திறந்து நன்றாகச் சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தான். வீடு ஒன்றைப் பார்த்து தேவையான பொருட்களையும் வாங்கிவிட்டான். அந்தக் கோடைக்காலத்தில் திருமணம் செய்துகொள்வதாக முடிவு. தகவல் கிடைத்ததும் வந்தான். வீட்டுக்கடனை மட்டும்தான் சேர்த்துவைத்திருந்தார் ஸ்டர்ன்ஸ். இறுதிச் சடங்குக்கான செலவு முழுவதையும் ஸ்ட்ரிப்ளிங்கே ஏற்றுக்கொண்டான். ஸ்டர்ன்ஸின் தகுதிக்கும் கூடுதலாகச் செலவு செய்தான். ஆனால் திருமதி ஸ்டர்ன்ஸ் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற வேண்டியிருந்தது. சேமிப்பு முழுவதும் கரைந்தது. மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தான்.

ஏற்கெனவே வீட்டைக் குத்தகைக்கு எடுத்திருந்தான். வீட்டுப் பொருட்களுக்குச் செலவு செய்திருந்தான். திருமண உரிமத்தையும் வாங்கி வைத்திருந்தான். மீண்டும் அவசரத் தகவல் வந்தது. இந்த முறை அந்தப் பெண்ணுக்கு உடம்பு சரியில்லை. ஏதோ காய்ச்சல் என்றார்கள். இந்தக் காட்டுக்குள் வசிக்கும் மக்களைப் பற்றித்தான் தெரியுமே? அவர்களைப் பொறுத்தவரை மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் என்று யாரும் தேவையில்லை.

அவர்களை அறுத்துப் போடுங்கள், சுட்டுத் தள்ளுங்கள், எதையும் தாங்குவார்கள். ஆனால் ஒரு சளி பிடித்தால் போதும். ஒன்று சீக்கிரம் சரியாகிவிடும் அல்லது இரண்டு நாளில் காலரா பீடித்துச் செத்துப் போவார்கள். ஸ்ட்ரிப்ளிங் வந்து சேரும் முன்னர் அவளுக்குச் சன்னி கண்டது. தலைமுடியை முழுவதுமாக வெட்டவேண்டி இருந்தது. அதையும் ஸ்ட்ரிப்ளிங்கே செய்தான். அவன்தான் அதில் தேர்ந்தவன் ஆயிற்றே! வீட்டிலேயே ஒரு தொழில்காரன் இருக்கும்போது வெளியே தேடவேண்டுமா என்ன? அவள் மெலிந்த சோகை பிடித்த பெண் என்றும் மஞ்சளும் இல்லாமல் பழுப்பும் இல்லாமல் நேரான தலைமுடி கொண்டவள் என்றும் கேள்விப்பட்டேன்.

அவளுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. தன்னுடைய தலைமுடியை யார் வெட்டியது என்பதுகூடத் தெரியவில்லை.

அதைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ளாமல் இறந்துவிட்டாள். தான் இறந்துபோவதைப் பற்றிக்கூடத் தெரிந்துகொள்ளாமல் அப்படியே போய்விட்டாளோ என்னவோ! ஒன்றை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னாள் – “அம்மாவைப் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டுக் கடன். அப்படியே விட்டுவைத்திருப்பது அப்பாவுக்குப் பிடிக்காது. ஹென்றிக்குச் சொல்லி அனுப்புங்கள். (அவன்தான் அது. ஹென்றி ஸ்ட்ரிப்ளிங்; ஹாக்சா. அவனை அடுத்த வருடம் ஜெஃபர்சனில் பார்த்தேன். “நீதான் ஹென்றி ஸ்ட்ரிப்ளிங்கா?” என்று கேட்டேன்.) வீட்டுக்கடன். அம்மாவைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஹென்றிக்குச் சொல்லி அனுப்புங்கள். வீட்டுக்கடன். ஹென்றிக்குச் சொல்லி அனுப்புங்கள்.” அவள் இறந்துபோனாள். அவர்களிடம் இருந்தது அவளின் ஒரேயொரு புகைப்படம் மாத்திரம்தான்.

அந்தப் புகைப்படத்தையும் அவள் தலையில் இருந்து வெட்டி எடுத்த முடிக்கற்றை ஒன்றையும் சட்டம்போட்ட புகைப்படமாக மாற்றுவதற்காக விவசாய இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு அனுப்பிவைத்தான். ஆனால் இரண்டுமே தபாலில் வரும்போது தொலைந்து போயின. திரும்பக் கிடைக்கவேயில்லை.

அவளை அடக்கம் செய்த மறு வருடம் அவளுடைய கல்லறையில் தலைக்கல் ஒன்றை நட்டான். அப்புறம் பர்மிங்காம் போய் அந்த வீட்டையும் அதில் இருந்த பொருட்களையும் திரும்பக் கொடுத்தான். இனி மீண்டும் முதலில் இருந்து சேமிப்பைத் தொடங்க வேண்டும். கொஞ்ச நாளில் பர்மிங்காம் கடையில் வேலையை விட்டுவிட்டான் என்று கேள்விப்பட்டனர்.

வேலையை விட்டவன் மாயமாக மறைந்து போனான். இருந்திருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் அந்தக் கடைக்குச் சொந்தக்காரன் ஆகியிருப்பான் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அடுத்த ஏப்ரல் மாதத்தில் அந்தப் பெண்ணின் முதலாம் நினைவு நாளில் திரும்பி வந்தான். திருமதி ஸ்டர்ன்ஸை பார்க்க வந்தவன் இரண்டு வாரத்தில் கிளம்பிவிட்டான்.

அவன் கிளம்பிப் போன பிறகு வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டியைக் கட்டிவிட்டு போனான் என்ற விஷயம் தெரியவந்தது. திருமதி ஸ்டர்ன்ஸ் உயிரோடு இருக்கும் வரையில் ஒவ்வொரு வருடமும் வந்து இதைச் செய்தான்.

அப்படி அவன் வந்திருந்த சமயத்தில்தான் அவள் இறந்துபோனாள். அவள் உயிரோடிருந்த வரையில் வருடந்தோறும் வந்து இரண்டு வாரம் தங்கி இருந்து வீட்டைச் சுத்தம் செய்து பழுது பார்த்து இன்னும் ஒரு வருடத்துக்கு அவள் சௌகரியமாக வசிப்பதற்கேற்ற வகையில் சரிசெய்துவிட்டுப் போவான். அவளும் அவன் செய்வதை ஏற்றுக்கொண்டாள். என்ன இருந்தாலும் தான் பிறப்பால் அவனைவிட உயர்ந்தவள், பணம் சம்பாதிப்பதால் மட்டுமே இப்போது மேலே வந்துவிட்டான் என்ற எண்ணம் கொண்டிருந்தாள். அப்புறம் அவளும் ஒரு நாள் இறந்துபோனாள். “சோஃபி என்ன செய்யவேண்டும் என்று சொன்னாள் தெரியுமா?” என்றாள். “இந்த வீட்டுக்கடன். திருவாளர் ஸ்டர்ன்ஸை நான் சந்திக்கையில் அதுகுறித்து வருத்தப்படுவார்.”

அவளையும் அடக்கம் செய்தான். அவள் தகுதிக்கு ஏற்ற தலைக்கல் ஒன்றை அவள் கல்லறையிலும் நட்டான். பிறகு வீட்டுக்கடனின் முதன்மைத் தொகையைச் செலுத்த ஆரம்பித்தான். ஸ்டர்ன்ஸின் உறவினர்கள் யாரோ அலபாமாவில் இருந்தனர். அவர்கள் வந்து அந்த இடத்துக்குச் சொந்தம் கொண்டாடுவார்கள் என்று ஊர் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஒருவேளை கடன் முழுவதையும் ஹாக்சா கட்டி முடிக்கட்டும் என்று காத்துக்கொண்டிருந்தார்களோ என்னவோ! ஒவ்வொரு வருடமும் தவறாமல் கடனைச் செலுத்தினான். அந்த இடத்தைச் சுத்தம் செய்தான். வீட்டின் உட்பகுதியைக் கழுவியும் தேய்த்தும் ஒரு பெண்ணைப் போலச் சுத்தம் செய்வான் என்று பேசினார்கள். இதை எல்லாம் செய்துமுடிக்க ஏப்ரல் மாதத்தின் இரண்டு வாரங்கள் தேவைப்பட்டன. அப்புறம் அங்கிருந்து கிளம்பிவிடுவான். எங்கே போவான் என்பது யாருக்கும் தெரியாது. பிறகு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வந்து வங்கியில் கடனைச் செலுத்திவிட்டு அவனுக்குச் சொந்தமில்லாத வீட்டையும் சுத்தம் செய்துவிட்டுப் போவான்.

போர்டர்பீல்டில் பார்த்ததற்கு அடுத்த வருடம் ஜெஃபர்ஸனில் மேக்சியின் கடையில் அவனைப் பார்த்தேன். அங்கே வந்து ஐந்து வருடமாகி இருந்தது. அதே கம்பளி சூட்டும் ரிப்பன் டையும் அணிந்திருந்தான். ஜெஃபர்ஸன் இரயில் நிலையத்தில் அட்டைப் பெட்டியோடு வந்து இறங்கிய போது அதைத்தான் அணிந்திருந்தான் என்று சொன்னார் மேக்சி. ஊரின் சதுக்கத்தைச் சுற்றி வந்தபோது அவனைக் கவனித்தார்கள். அந்த ஊரில் அவனுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்பது புரிந்தது. ஏதோ வேலையாக வந்தது போலவும் இல்லை. அவசர வேலை எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. சதுக்கத்தைச் சுற்றிச் சுற்றி வந்து வேடிக்கை பார்த்தான்.

கிளப்பின் முற்றத்தில் சீட்டாட்டத்தில் பணத்தைத் தொலைத்துக்கொண்டிருக்கும் ஒரு வீணர் கூட்டம் பின்மதிய நேரத்தில் வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு கொக்கரிப்போடு இடுப்பை அசைத்தபடி குளிர்பானக் கடைக்கு வரும் இளம்பெண்களைப் பார்ப்பதற்காகக் காத்துக்கிடக்கும். அந்த இளைஞர் பட்டாளம்தான் அவனுக்கு அந்தப் பெயரைச் சூட்டியது. அவன் ஒரு துப்பறியும் நிபுணன் என்றார்கள். ஏனென்றால் அவனைப் பார்த்தால் கொஞ்சம்கூடத் துப்பறியும் நிபுணனைப் போல இல்லை என்பதுதான் காரணம் என்றார்கள். அதனால் அவனை ஹாக்சா என்று அழைக்கத் தொடங்கினார்கள். ஜெஃபர்ஸனில் இருந்த பன்னிரண்டு வருடமும் மேக்சியின் கடையில்தான் வேலை செய்தான் ஹாக்சா. தான் அலபாமாவைச் சேர்ந்தவன் என்று மேக்சியிடம் சொல்லியிருந்தான்.

“அலபாமாவின் எந்தப் பகுதி? அது பெரிய இடமாயிற்றே? பர்மிங்காமா?” என்று கேட்டார் மேக்சி. ஹாக்சாவைப் பார்த்தால் பர்மிங்காமைத் தவிர அலபாமாவின் எந்தப் பகுதியில் இருந்து வேண்டுமானாலும் வந்திருக்கலாம் என்பது போலத் தோற்றமளித்ததால் அப்படிக் கேட்டார்.

“ஆமாம், பர்மிங்காமைச் சேர்ந்தவன்,” என்றான் ஹாக்சா.

நான் அங்கு வந்து அவனைப் பார்க்கும் வரையில் இதைத் தவிர அவனைக் குறித்த எந்தத் தகவலும் அவர்களுக்குத் தெரியாது. எனக்கு அவனைப் போர்ட்டர்பீல்டில் பார்த்த ஞாபகம் வந்தது.

“போர்ட்டர்பீல்டா?” என்று கேட்டார் மேக்சி. “என்னுடைய மைத்துனன் அங்கே கடை வைத்திருக்கிறானே? நீ போன வருடம் போர்ட்டர்பீல்டில் வேலை செய்தாயா?”

“ஆமாம், அங்கே வேலை செய்தேன்,” என்றான் ஹாக்சா.

அவன் வருடாவருடம் எடுத்துக்கொள்ளும் விடுமுறை பற்றிச் சொன்னார் மேக்சி. கோடைக்காலத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஏப்ரல் மாதத்தில் இரண்டு வாரம் விடுமுறையில் போவான் என்றார். ஏப்ரல் மாதத்தில் நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று மேக்சி சொன்னபோது அதுவரையில் இருந்துவிட்டு அப்புறம் வேலையை விட்டுவிடுவதாகச் சொன்னான். கோடைக்காலம் வந்ததும் “வேலையை விடுகிறாயா?” என்று மேக்சி கேட்டார். அந்தக் கோடைக்காலத்தில்தான் சூசன் ரீடை முதன்முதலாகத் திருமதி பர்ச்செட் கடைக்கு அழைத்துவந்தார்.

“இல்லை. எனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் இரண்டு வாரம் விடுமுறை வேண்டும்” என்றான் ஹாக்சா.

“வேலை விஷயமாகவா?” என்று கேட்டார் மேக்சி.

“வேலை விஷயமாகத்தான்,” என்று சொன்னான் ஹாக்சா.

அவன் விடுமுறை எடுத்துக்கொண்ட போது நேரே போர்ட்டர்பீல்டுக்கு போய் தன்னுடைய மைத்துனரை மேக்சி சந்தித்தார். கடலில் இருக்கும் மாலுமி விடுமுறையைக் கழிக்க ஏரியில் படகோட்டுவது போல மைத்துனரின் வாடிக்கையாளர்களுக்கு முகச்சவரம் செய்தாரோ என்னவோ! ஹாக்சா தன்னுடைய கடையில் வேலைக்குச் சேர்ந்து ஏப்ரல் மாதம் வரையிலும் எந்த விடுமுறையும் எடுக்காமல் வேலை செய்ததையும் அதற்கப்புறம் போனவன் திரும்பி வரவே இல்லை என்பதையும் சொன்னார் மைத்துனர். “உன்னிடமும் அதே போலத்தான்  செய்வான்,” என்றார். “டென்னஸ்ஸியில் இருக்கும் பொலிவாரிலும் அலபாமாவில் இருக்கும் ஃப்ளோரென்ஸிலும் இதேபோல ஒரு வருடம் வேலை செய்துவிட்டுப் போனவன் அதற்கப்புறம் திரும்பி வரவேயில்லை. அவன் திரும்ப வரமாட்டான், நீ வேண்டுமானால் பார்,” என்றார்.

ஊருக்குத் திரும்பியதும் ஹாக்சாவிடம் பேசி இதுவரையிலும் அலபாமா, டென்னஸ்ஸி, மிஸ்ஸிஸிப்பி மாகாணங்களில் ஏழெட்டு ஊர்களில் ஓரோரு வருடம் வேலை செய்திருக்கிறான் என்ற உண்மையைத் தெரிந்துகொண்டார் மேக்சி. “அந்த வேலையை எல்லாம் ஏன் விட்டாய்?” என்று கேட்டார். “நீ திறமையானவனாயிற்றே? நான் இதுவரை பார்த்ததிலேயே குழந்தைகளுக்கு முடிதிருத்துவதில் சிறப்பான தகுதி பெற்றவன் நீதான். ஏன் அந்த வேலையை எல்லாம் விட்டாய்?”

“சும்மா ஊரூராகப் போய்ப் பார்க்கலாம் என்றுதான்,” எனப் பதிலளித்தான் ஹாக்சா.

ஏப்ரல் மாதம் வந்தது. இரண்டு வார விடுமுறையில் போனான். மழிக்கப்பட்ட முகத்தோடு அந்த அட்டைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வடக்கு நோக்கிச்செல்லும் இரயிலில் ஏறிச் சென்றான்.

“தெரிந்தவர்களைப் பார்க்கப் போகிறாயா?” என்று கேட்டார் மேக்சி. 

“சும்மா அப்படியே போய் வரலாமென்றுதான்,” என்று பதில் சொன்னான் ஹாக்சா.

எப்போதும் போல அந்தக் கம்பளி சூட்டையும் ரிப்பன் டையையும் அணிந்திருந்தான்.

அந்த வருடம் சேமித்து வைத்த தொகையை வங்கியில் இருந்து எடுத்துப்போனான் என்ற தகவல் அடுத்த இரண்டு நாளில் தெரிய வந்ததாகச் சொன்னார் மேக்சி. திருமதி கோவனின் வீட்டில்தான் உணவருந்துவான். சர்ச்சில் உறுப்பினராக இருந்தான். பணத்தைச் செலவே செய்யமாட்டான். புகைக்கும் பழக்கமும் கிடையாது. வருடம் முழுவதும் சேர்த்துவைத்த பணத்தை எடுத்துக்கொண்டு மெம்ஃபிஸில் இருக்கும் சிகப்பு விளக்குப் பகுதிக்குப் போயிருப்பான் என்று மேக்சி, மேட், நான் மட்டுமில்லாமல் ஜெஃபர்ஸன் ஊர்மக்களும் நினைத்தார்கள். சரக்குக் கிடங்கு முகவராகப் பணியாற்றிய மிட்ச் எவிங்கும் திருமதி கோவனின் வீட்டில் தங்கியிருந்தான். இரயில் சந்திப்பு வரையில்தான் ஹாக்சா பயணச் சீட்டு எடுத்தான் என்ற தகவலைச் சொன்னான். “அங்கிருந்து மெம்ஃபிஸுக்கும் போகலாம் அல்லது பர்மிங்காம் அல்லது நியூ ஆர்லியன்ஸுக்கும் போகலாம்,” என்று விளக்கினான் மிட்ச்.

“எப்படியோ, இங்கிருந்து போய்விட்டான்,” என்றார் மேக்சி. “நான் சொல்வதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இனி அவனை இந்த ஊரில் பார்க்க முடியாது.”

அடுத்த இரண்டு வாரம் வரையிலும் எல்லோரும் அப்படித்தான் நினைத்திருந்தார்கள்.

பதினைந்தாவது நாள் வழக்கம் போல கடைக்கு வந்தான் ஹாக்சா. அவன் அந்த ஊரை விட்டு எங்கேயும் நகரவில்லை என்பது போல மேலங்கியைக் கழற்றிவிட்டு சவரக்கத்தியைத் தீட்ட ஆரம்பித்தான். எங்கே போயிருந்தான் என்ற தகவலை யாரிடமும் சொல்லவில்லை. கேட்டால், ‘சும்மா சாலை வழியே ஒரு பயணம்’ என்பான்.

சில நேரம் எனக்குத் தெரிந்ததை அவர்களிடம் சொல்லிவிடலாமா என்று யோசித்ததுண்டு. நான் ஜெஃபர்ஸனுக்கு வரும்போதெல்லாம் கடையில் வேலை செய்துகொண்டிருப்பான். அவன் கொஞ்சமும் மாறவில்லை. முகத்தில் முதுமை எட்டிப் பார்க்கவில்லை. என்ன கோந்தும் சாயமும் போட்டும் அந்தப் பெண்ணின் தலைமுடி கொஞ்சமும் மாறாதது போலவே.

ஒவ்வொரு வருடமும் சும்மா சாலை வழியே ஒரு பயணத்தை முடித்துவிட்டுத் திரும்புவான். அடுத்த வருடம் முழுவதும் பணம் சேமிப்பான். ஞாயிற்றுக்கிழமையானால் சர்ச்சுக்குப் போவான். அவனிடம் முடி வெட்டிக்கொள்ள வரும் குழந்தைகளுக்காகப் பெப்பர்மிண்ட் மிட்டாயை வாங்கிவைப்பான். எல்லாம் ஒரு வருடத்துக்குத்தான். பிறகு டிவிஷனில் வீட்டுக்கடனைக் கட்டவும் வீட்டைச் சுத்தம்செய்யவும் பெட்டியைத் தூக்கிக்கொண்டு அந்த வருடச் சேமிப்பையும் எடுத்துக்கொண்டு  கிளம்பிவிடுவான்.

சில சமயம் நான் வருகையில் ஜெஃபர்ஸனில் இருக்க மாட்டான். சூசனின் தலைமுடியை அவன் வெட்டிவிடும் கதையை என்னிடம் சொல்லுவார் மேக்சி. ஒரு நடிகைக்குச் செய்வது போல அப்படியும் இப்படியும் பார்த்துப் பார்த்துக் கத்தரித்து கண்ணாடியில் அவளுக்குக் காண்பிப்பான். “அவளிடம் பணம் வாங்கமாட்டான். அவளுக்கான கட்டணத்தை அவனே பெட்டியில் போட்டுவிடுவான்,” என்று சொன்னான் மேட் ஃபாக்ஸ்.

“அது அவன் பிரச்சினை. எனக்குத் தேவை என் கட்டணம். யாரிடம் இருந்து வருகிறது என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை,” என்றார் மேக்சி.

இன்னும் ஐந்து வருடங்கள் கழிந்த பின்னர் இதைக் கேள்விப்பட்டிருந்தால், “ஒருவேளை, அதுதான் அவளுக்கான விலையோ?” என்று சொல்லியிருப்பேனோ என்னவோ! இறுதியில் பிரச்சினையில் சிக்கிக்கொண்டாள் சூசன் அல்லது அப்படிச் சொன்னார்கள். எனக்குத் தெரிந்து இளம்பெண்கள், பெண்கள் பற்றிச் சொல்லப்படுபவை எல்லாம் துணிச்சல் இல்லாதவர்கள் அல்லது தோல்வி அடைந்தவர்களின் பொறாமைப் பேச்சு அல்லது எதிர்த்தடிக்கும் பேச்சாகத்தான் இருந்திருக்கிறது. ஒரு ஏப்ரல் மாதத்தில் அவன் இல்லாத போது அவள் பிரச்சினையில் சிக்கிக்கொண்டாள் என்றும் தனக்குத்தானே மருத்துவம் பார்த்துக்கொள்வதற்காக டர்பன்டைனைப் பயன்படுத்தி நிலைமை மோசமாகிவிட்டது என்றும் பேசிக்கொண்டார்கள்.

எப்படியோ மூன்று மாதத்துக்கு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாள். மெம்ஃபிஸ் மருத்துவமனையில் இருந்தாள் என்றும் பேசிக்கொண்டனர். அவள் மீண்டும் கடைக்கு வந்தபோது ஹாக்சாவின் நாற்காலி காலியாக இருந்தாலும் மேட்டின் நாற்காலியில் போய் உட்கார்ந்தாள். கண்ணைப் பறிக்கும் ஆடை அணிந்திருந்தாள், என்றாலும் அவள் முகம் பேயறைந்தாற்போல இறுகிப்போய் உணர்ச்சியற்று இருந்தது. மேட்டின் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு காலுறை அணியாத கால்களை நீட்டியபடி தன் பேச்சினாலும் சிரிப்பினாலும் வாசனைத் திரவியத்தாலும் அந்தக் கடையை நிறைத்தாள். ஹாக்சா தன்னுடைய நாற்காலியருகே நின்றபடி வேலை இருப்பது போலப் பாவனை செய்தான்.

சில நேரம் அவர்களிடம் சொல்லிவிடலாம் என்று நினைப்பேன். ஆனால் காவின் ஸ்டீவன்ஸைத் தவிர வேறு யாரிடமும் சொல்லவில்லை. அவர் ஓர் அரசு வழக்கறிஞர். திறமையான மனிதர். அரசுப் பதவியில் இருக்கும் மற்ற வழக்கறிஞர்களைப் போல அற்ப விஷயங்களில் கவனத்தைச் சிதறவிடாதவர். ஹார்வர்டில் படித்தவர். கோர்டன்வில் நகர வங்கியில் நான் பணிபுரிந்தபோது நோய்வாய்ப்பட்டேன். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகையில் மெம்ஃபிஸுக்குச் செல்லும் இரயிலில் ஸ்டீவன்ஸைச் சந்தித்தேன். அவர்தான் இந்தப் பணியில் ஈடுபடலாமே என்று பரிந்துரைத்ததோடு இந்த நிறுவனத்தில் வேலையும் வாங்கித் தந்தார். அவரிடம் இந்தத் தகவலை நான் சொல்லி இரண்டு வருடம் இருக்கும்.

“இப்போது அந்தப் பெண்ணுடனான உறவு சரியில்லை. அவனுக்கும் வயதாகிவிட்டது. இனிமேல் இன்னொரு பெண்ணைத் தேடித் திருமணம் செய்துகொள்வதற்குக் காலம் இல்லை,” என்று சொன்னேன். “அந்த வீட்டுக்கடனைக் கட்டி முடித்ததும் அலபாமா உறவினர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அப்புறம் அவன் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?”

“தெரியவில்லை,” என்றார் ஸ்டீவன்ஸ். 

“அப்படியே செத்துப்போய்விடுவானோ?” என்றேன். 

“அப்படியும் நடக்கலாம்,” என்றார் ஸ்டீவன்ஸ்.

“அதுசரி, அடுத்தவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தபடியே வாழ்க்கையை ஓட்டும் முதல் மனிதன் அவன்தான் என்று சொல்ல முடியாது,” என்றேன்.

“அப்படியே இறந்துபோகும் முதல் மனிதனும் அவனல்லவே,” என்றார் ஸ்டீவன்ஸ்.

3

சென்ற வாரம் டிவிஷனுக்குப் போயிருந்தேன். புதன்கிழமையன்று போய்ச் சேர்ந்தேன். வீட்டைப் பார்த்தேன். புதிதாக வர்ணம் பூசப்பட்டு இருந்தது. ஹாக்சா கடைசித் தவணையை இந்த மாதம் செலுத்தியதாகச் சொன்னார் கடைக்காரர். ஸ்டர்ன்ஸின் வீட்டுக்கடன் முழுவதுமாகக் கட்டி முடிக்கப்பட்டது.

“இப்போது அந்த அலபாமா ஸ்டர்ன்ஸ் குடும்பம் வந்து அதை எடுத்துக்கொள்ளலாம்,” என்றார்.

“திருமதி ஸ்டர்ன்ஸுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டான் ஹாக்சா,” என்று சொன்னேன்.

“ஹாக்சாவா?” என்று ஆச்சரியப்பட்டார். “அப்படியா அவனை அழைக்கிறார்கள்?  ஹாக்சா… என்ன ஆச்சரியம்?”

நான் திரும்பவும் ஜெஃபர்ஸன் போக மூன்று மாதமானது. முடிதிருத்தும் கடையைக் கடக்கையில் உள்ளே எட்டிப் பார்த்தேன். ஹாக்சாவின் இடத்தில வேறொரு இளைஞன் இருந்தான். ‘பெப்பர்மிண்ட்டு மிட்டாயையும் கையோடு எடுத்துச் சென்றுவிட்டானோ?’ என்று நினைத்தேன். ‘ஒருவழியாக இங்கிருந்து கிளம்பிவிட்டான்,’ என்று எண்ணினேன். வயதாகி எங்கும் நகர முடியாத நிலைமை ஏற்படுகையில் எங்கே போவான் என்று சிந்தித்தேன். எங்காவது சின்ன ஊரில் இருக்கும் சின்ன முடிதிருத்தும் கடையில் அந்தக் கம்பளி கால்சட்டையையும் கருப்பு டையையும் அணிந்துகொண்டு வேலை செய்துகொண்டிருக்கும் போதே இறந்து போவானோ!

வழக்கம்போல என்னுடைய வாடிக்கையாளர்களைச் சந்தித்தேன். உணவுண்ட பிறகு மதியம் ஸ்டீவன்ஸின் அலுவலகத்துக்குச் சென்றேன். “ஊருக்கு புதிய முடிதிருத்துபவர் வந்திருப்பதைப் பார்த்தேன்,” என்று சொன்னேன்.

“ஆமாம்,” என்றார் ஸ்டீவன்ஸ். சிறிது நேரம் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு, “நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டார்.

“என்ன கேள்விப்படவில்லை?” என்றேன். பார்வையை என் பக்கமிருந்து விலக்கினார்.

“ஹாக்சா வீட்டுக்கடனை அடைத்துவிட்டான், வீட்டுக்கு வர்ணம் பூசி இருக்கிறான் என்று நீங்கள் எழுதியிருந்த கடிதம் கிடைத்தது. விஷயத்தைச் சொல்லுங்கள்,” என்றார்.

இங்கிருந்து ஹாக்சா கிளம்பிப்போன மறுநாள் நான் டிவிஷன் போய்ச் சேர்ந்ததைச் சொன்னேன். அலபாமாவைச் சேர்ந்த ஸ்டர்ன்ஸ் குடும்பம் எப்போது வரும் என்பது குறித்தும் அவனைப் பற்றியும் கடை வாசலில் கூடியிருந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். வீடு முழுவதற்கும் அவனே வர்ணம் பூசினான். இரண்டு கல்லறைகளையும் சுத்தம் செய்தான். ஸ்டர்ன்ஸின் கல்லறை பக்கம் போகவில்லை. அவரைத் தொந்தரவு செய்யவேண்டாமென்று நினைத்தானோ என்னவோ! கல்லறைகளைப் பார்க்கப் போனேன். தலைக்கற்களையும் தேய்த்துச் சுத்தம் செய்திருந்தான். அந்தப் பெண்ணின் கல்லறைக்கு மேலே ஆப்பிள் செடி ஒன்றை நட்டிருந்தான். அது பூத்துக் குலுங்கியது. அவனைப் பற்றி ஊர்மக்கள் பேசிய கதையைக் கேட்டு வீட்டுக்குள் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. கடைக்காரரிடம் சாவி இருந்தது. ஹாக்சா ஒன்றும் சொல்லமாட்டான் என்றபடியே கொடுத்தார்.

வீடு மருத்துவமனை போலப் பளிச்சென்று சுத்தமாக இருந்தது. அடுப்புக்கு மெருகூட்டி விறகுப் பெட்டியை நிறைத்து வைத்திருந்தான். ஒவ்வொரு வருடமும் விறகுப் பெட்டியை நிறைத்து வைத்துவிட்டுத்தான் போவான் என்றார் கடைக்காரர்.

“அவனுடைய வேலை சுத்தத்தை அலபாமா சொந்தக்காரர்கள் மெச்சுவார்கள் என்று நினைக்கிறேன்,” என்று சொன்னேன். மீண்டும் முன்னறைக்குச் சென்றோம். அறையின் மூலையில் ஒரு மெலோடியன் இசைப்பெட்டி இருந்தது. மேசையின் மேல் ஒரு விளக்கும் பைபிளும் இருந்தன. விளக்கின் குழி நன்கு சுத்தம் செய்யப்பட்டிருந்தது. எண்ணெய் வாசம் துளிகூட இல்லை. திருமண உரிமம் சட்டம் போட்டு கணப்படுப்புக்கு மேலே சுவரில் மாட்டப்பட்டு இருந்தது. ஏப்ரல் 4-ஆம் தேதி 1905 என்று குறிக்கப்பட்டு இருந்தது.

“இங்கேதான் வீட்டுக்கடனுக்கான கணக்கை எழுதி வைத்திருக்கிறான்,” என்றார் கடைக்காரர் பிட்வெல். மேசையில் இருந்த பைபிளைத் திறந்தார். முதல் பக்கத்தில் பிறப்பு இறப்புக்களை இரண்டு நெடுவரிசையில் எழுதி இருந்தான். அந்தப் பெண்ணின் பெயர் சோஃபி. இறப்புகளைப் பதிவுசெய்திருந்த வரிசையில் கடைசிக்கு முந்தையதாக இருந்தது அவள் பெயர். திருமதி ஸ்டர்ன்ஸின் கையெழுத்தில் எழுதி இருந்தது. அதை எழுதுவதற்குப் பத்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டிருப்பார் போல. ‘சோஃபி ஸ்டர்ன்ஸ்: இறப்பு ஏப்ரல் 16, 1905’ என்று தப்பும் தவறுமாகச் சின்ன எழுத்தும் பெரிய எழுத்துமாக எழுதி இருந்தார். கடைசி வரியை நேர்த்தியான அழகான கையெழுத்தில் ஹாக்சா எழுதியிருந்தான். கடையில் கணக்கு எழுதுபவரின் கையெழுத்தை ஒத்திருந்தது. ‘திருமதி வில் ஸ்டர்ன்ஸ்: இறப்பு ஏப்ரல் 23, 1916.’

“கடன் கணக்கு பின்பக்கம் இருக்கும்,” என்றார் பிட்வெல்.

பின்பக்கத்தில் ஹாக்சாவின் கையெழுத்தில் நேர்த்தியாக வரிசையாக எழுதி இருந்தது. ஏப்ரல் 16, 1917, 200 டாலர் என்று தொடங்கியது. அடுத்தடுத்த தவணையை வங்கியில் கட்டிய தேதி வரிசையாக எழுதப்பட்டு இருந்தது: ஏப்ரல் 16, 1918, 200 டாலர், ஏப்ரல் 16, 1919, 200 டாலர். கடைசித் தவணையின் தேதி: ஏப்ரல் 16, 1930, 200 டாலர். கீழே மொத்தத் தொகையைக் கூட்டி எழுதியிருந்தான். “முழுத் தொகையும் செலுத்தப்பட்டது. ஏப்ரல் 16, 1930.”

பழைய கையெழுத்துப் புத்தகத்தில் எழுதப்பட்ட வாக்கியம் போல வளைவு சுழிவுகளுடன் நேர்த்தியாக இருந்தது. அவனையும் மீறி பேனா வெற்றிக்களிப்போடு வாக்கியத்தை ஒரு மேல்நோக்கிய சுழிப்போடு எழுதி முடித்தது போல இருந்தது. பெருமை பீற்றிக்கொள்வதைப் போல இல்லை. ஆனால் முடிவில் இருந்த சுழிப்பு பேனாவைவிட்டு வெளியே ஓடி வந்து தானே மேல் நோக்கி எழுதிக்கொண்டதைப் போல இருந்தது. அவன் தடுத்து நிறுத்துவதற்கு முன்னால் அது நடந்து முடிந்துவிட்டதைப் போல இருந்தது.

“அவளுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டான்,” என்றார் ஸ்டீவன்ஸ்.

“நானும் இதையேதான் பிட்வெல்லிடம் சொன்னேன்,” என்றேன்.

நான் சொல்வது காதில் விழாதது போல பேசிக்கொண்டே போனார் ஸ்டீவன்ஸ்.

“இனி அந்த மூதாட்டி நிம்மதியாக உறங்குவார். அவன் கட்டுப்பாட்டை விட்டு ஓடிய பேனா அதைத்தான் சொல்ல முனைந்திருக்கும். அவள் இனி நிம்மதியாக உறங்கட்டும். அவனுக்கு நாற்பத்தைந்து வயதுகூட இருக்காது. அத்தனை வயது ஆனாற்போலவே இல்லை. ஆனாலும் ‘மொத்தத் தொகையும் கட்டப்பட்டது’ என்று எழுதுகையில் மலர்மாலையும் மலர்க்கிரீடமுமில்லாத எல்லா இளைஞர்களையும் இளைஞிகளையும் சூழும் காலமும் துயரமும் மெல்ல அவன்மீதும் கருமையாகப் படர்ந்துவிட்டது போல இருந்தது.”

“அந்தப் பெண் அவனிடம் மோசமாக நடந்துகொண்டாள்,” என்றேன். “நாற்பத்தைந்து வயதுக்கு மேல் இன்னொரு பெண்ணைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினமான வேலை. அதற்குள் ஐம்பத்தைந்து வயதாகிவிடும்.”

ஸ்டீவன்ஸ் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தார். “நீங்கள் இன்னும் கேள்விப்படவில்லை என்று நினைக்கிறேன்,” என்று சொன்னார்.

“ஆமாம்,” என்றேன். “முடிதிருத்தும் கடையைத் தாண்டி வரும்போது உள்ளே பார்த்தேன். அவன் இங்கிருக்க மாட்டான் என்பது தெரியும். வீட்டுக்கடனைக் கட்டி முடித்துவிட்டால் அவன் ஓரிடத்தில் தங்கமாட்டான் என்பதும் தெரியும். ஒருவேளை அந்தப் பெண்ணைப் பற்றி எதுவும் தெரியாதோ என்னவோ! ஒருவேளை தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்தானோ என்னவோ!”

“அவனுக்கு அவளைப் பற்றி தெரியாது என்றா நினைக்கிறீர்கள்?”

“தெரிந்தாலும் அவன் எதுவும் செய்திருக்க முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் ஒன்றும் சொல்ல முடியாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“எனக்கும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் நான் விரும்பவில்லை. ஆனால் அதைவிடவும் சிறப்பான ஒன்று எனக்குத் தெரியும்.”

“என்னது?” என்று கேட்டேன். அவர் என்னையே உற்றுப் பார்த்தார். 

“நான் விஷயத்தைக் கேள்விப்படவில்லை என்று சொல்லிகொண்டே இருக்கிறீர்கள். நான் கேள்விப்படாத அந்த விஷயம் என்னவென்றுதான் சொல்லுங்களேன்.”

“அந்தப் பெண்ணைப் பற்றியதுதான்,” என்றபடியே என்னைப் பார்த்தார் ஸ்டீவன்ஸ்.

“இந்த முறை விடுமுறைக்குப் போன ஹாக்சா திரும்பி வந்ததும் அன்றைய இரவே இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இந்த முறை அவளைத் தன்கூடவே அழைத்துப் போய்விட்டான்.”

*

ஆங்கில மூலம்: Hair by William Faulkner, Collected Stories of William Faulkner, Published by Vintage International, Oct, 1995 Edition.

1 comment

Selvam kumar October 12, 2022 - 8:30 pm

மிகவும் அருமையான கதையாடல்

Comments are closed.