சித்திரச் சபை

0 comment

1

அப்பா முதலும் கடைசியுமாக என் முன்னே அமர்ந்து குடித்தது என்னுடைய இருபத்து மூன்றாவது வயதில். பாண்டவையாற்றின் கரையிலிருந்த ஒரு கைவிடப்பட்ட கான்கிரீட் சுடுகாட்டில் அப்பாவும் நானும் அமர்ந்திருந்தோம். எங்களைச் சூழ்ந்து கரையில் செழித்திருந்த புற்களை ஆடுகள் வலுக்கட்டாயமாக மேயும் ‘வருக் வருக்’ சத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது. பாண்டவனூரில் நான் வெறுக்கும் பொழுது இந்தப் பின்மதியம்தான். ஆத்தா வீட்டில் தொலைக்காட்சி வாங்கப்படாதவரை விடுமுறை நாட்களில் இப்பொழுதின் நிசப்தம் என்னை அவ்வளவு அச்சுறுத்தி இருக்கிறது. சன் டிவியில் நகைச்சுவைத் திங்கள், காதல் செவ்வாய் என்று ஒளிபரப்பப்படும் பாடாவதியான படங்களை கால், அரை, ஆண்டிறுதித் தேர்வுகளில் சகித்துக்கொண்டு பார்த்ததற்குப் பின்மதியம் சகிக்க முடியாமல் இருந்ததே காரணம். ஊர் அமைதியில் நனைந்து போயிருக்கும். ஆத்தா ஒருக்களித்துப் படுத்துத் தூங்கிவிடும். இன்னும் கொஞ்ச நாட்களில் ஆத்தா செத்துவிடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கும். ஐஸ்காரர் திருப்பதியின் ‘பாம்பாம்’ ஒலியுடன் தொடங்கும் பின்மதியம், பால்காரர் மகேஸ்வரனின் ‘பாம்பாம்’ சத்தத்துடன் முடிவுக்கு வரும். பறவைக்கூச்சல்கள் மெல்லக் கேட்கத் தொடங்கும். மேயப்போன ஆடுகள் வீடு திரும்பும். மாடுகளின் கழுத்து மணியோசை தீர்மானமாக மாலையை அறிவிக்கும். மதிய உறக்கம் கலைந்த அத்தைகளும் சித்திகளும் வாசல் தெளிப்பார்கள். காலையில் வாசல் தெளிக்கும்போது அவர்களிடமிருக்கும் அணுக முடியாமை மாலையில் இருப்பதில்லை. பலரிடமும் என்னவோ ஒரு உற்சாகம் தொற்றியிருக்கும்.

பின்மதியத்தின் கொடுமையான மௌனத்தைக் களைந்துவிட்டு முன் அந்தி மெல்லப் பேசத் தொடங்கும். பின் அந்தி கத்தி எக்காளமிடத் தொடங்கும். கொல்லைப்புறத்து அடுப்புகளில் விறகெரியும். தெருப்பக்கத்து கயிற்றுக் கட்டிலில் தோளில் துண்டும் இடுப்பில் கைலியுமாக ஆண்கள் அமர்ந்திருப்பார்கள். தெருவில் என்னென்னவோ விளையாட்டுகள். ஒருசில வீடுகளில் தொலைக்காட்சிச் சத்தம். மதியத்தின் சிராய்ப்பு மெல்ல மெல்லக் குணமடையும். ஆனால் அப்பா பல வருடங்கள் கழித்து இன்று என்னை மீண்டும் அந்தச் சிராய்ப்புக்கு நடுவே இழுத்து வந்து நிறுத்தியிருக்கிறார்.

முழுவதுமாகச் சாத்தப்படாத அறையில் ஏற்றிவிடப்பட்ட கைலியுடன் ஒரு கையில் அலைபேசியையும் மறுகையில் என்னுடைய விரைத்த குறியையும் பிடித்திருந்த நிலையில் அப்பா என் பின்னே வந்து நிற்பதை நான் உணர்ந்துவிட்டேன். எனினும் நான் நிதானிப்பதற்குள் விந்து வெளியேறிவிட்டது. ஒருவேளை அவர் வந்திருக்காவிட்டால் இன்னும் சற்று நேரமெடுத்திருக்கும். அப்பாவின் கோபம் நான் சுயமைதுனம் செய்துகொண்டிருந்ததற்காக இருக்காது. அவர் முன்னே விந்தினை வழியவிட்டதே அவருக்கு அவமரியாதையாகத் தோன்றியிருக்கும்.

சிறு வயதில் வாரம் ஒருமுறை ஆத்தா வீட்டுக்கு வரும்போதெல்லாம் நன்றாக இஸ்திரி செய்யப்பட்ட சஃபாரி சூட் அணிந்திருப்பார். கூடத்தின் நடுவே நான் அமர்ந்திருக்க, கையைக் கட்டிக்கொண்டு என்னிடம் அந்த வாரத்தில் நடத்தப்பட்ட பாடங்கள் குறித்துக் கேட்பார். நான் ஒன்றுவிடாமல் ஒப்பிப்பேன். இந்தத் தண்டனை முடியும்வரை ஒரு வாரமாக என்னைப் பார்க்காததால் கண்களில் நீர்முட்டி நின்றிருக்கும். அம்மாவை நான் நெருங்க முடியாது. எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. மூன்றாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுகள் முடிந்திருந்தன. அதற்கு முந்தைய மூன்று வாரங்களாக அப்பா ஊருக்கு வரவில்லை. ஆத்தா தொலைபேசியில் எனக்குப் பிடிபடாதவாறு ஏதோ பதற்றமாகப் பேசிக்கொண்டிருந்தது.‌ மூன்று வாரங்களாக அம்மாவைப் பார்க்காத ஏக்கம் என்னைத் துளைத்தெடுத்தது. அப்பா என்னைத் தொலைபேசியில் பேச அனுமதிக்க மாட்டார். மூன்று வாரங்கள் கழித்து அப்பாவும் அம்மாவும் ஒரு சனிக்கிழமை ஊருக்கு வரப்போவதாக ஆத்தா சொன்னது. அதற்கு முதல் நாளுடன் தேர்வுகளும் முடிந்திருந்ததால் நான் உற்சாகமாகிவிட்டேன்.‌

இரவுவரை பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தேன். மாமா லேசாக முறைத்தாரே தவிர ஒன்றும் கேட்கவில்லை. மறுநாள் காலையிலேயே மாமா எங்கோ கிளம்பிப் போய்விட்டார். அவர் வீட்டிலிருந்தால் அப்பா என்னைக் கொஞ்சம் கம்மியாகக் கண்டிப்பார். அவர் அப்படிப் போனது எனக்குச் சற்று பயமாகிவிட்டது. அப்பாவும் அம்மாவும் பின்மதியத்தில்தான் வீட்டுக்கு வந்தனர். நான் வழக்கம் போல் திண்ணையில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்துப்போட்டு அமர்ந்தேன். ஜன்னல் வழியே என் முகத்தில் வெயில் அடித்துக் கண்கள் கூசின. ஒரேயொரு அணில் மட்டும் ஜன்னலை ஒட்டியிருந்த நார்த்த மரத்தில் இருந்து வேப்பமரத்துக்குத் தாவிக்கொண்டிருந்தது. அணிலோ அம்மாவோ என்னுள் துக்கத்தை எழுப்பினர். நான் உதட்டைக் கடித்து தலையைக் குனிந்து அமர்ந்திருந்தேன்.

‘டேய் நிமுந்து பாரு’ என்று அப்பா சொன்னார்.

அப்பாவின் முகம் என் கலங்கிய கண்களால் அதிருப்தியடைந்தது. என் பயத்தினால் கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் கோடென இறங்கியது. அப்பா அந்தக் கண்ணீருடன் சேர்த்து என்னை அறைந்தார். ஒரு நொடி முகம் மரத்துப்போனது. அடுத்த நொடியே நூற்றுக்கணக்கான தேள்கள் என் கன்னத்தின் உள்ளிருந்து கொட்டுவது போல வலி பெருகியது.

‘பொம்பள புண்டைய பாத்துட்டு உக்காரத்தான் ஓத்தா வூட்ல ஒன்னைய உட்டுட்டு போனனா?’ என்றார். நான் சுடுகாட்டின் தரையைப் பார்த்தேன். ஆங்காங்கு காரை பெயர்ந்திருந்த தரை முழுக்க நசீர் வரைந்த ஓவியங்களாகத் தெரிந்தன. சுடுகாட்டின் கான்கிரீட் தூண்களிலும் உச்சியிலும்கூட ஓவியங்கள்தான். அத்தனையும் வன்முறையும் காமமும் தெறிக்கும் ஓவியங்கள்.

2

நசீர் உசேன் பாண்டவனூரில் இருந்த ஒரே முஸ்லிம் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் வாரிசு. அவன் அப்பா முகம்மது நபீல் இவனைப் பிறப்பிப்பதற்காக ஒன்பது ஆண்டுகள் முயன்று ஆறு பெண் பிள்ளைகளைப் பெற்று இவன் பிறந்ததும் வாழ்நாள் லட்சியம் நிறைவடைந்த திருப்தியுடன் உயிரைவிட்டார். அப்பா இல்லாதது பற்றி நசீர் பெரிதாக வருந்தியதில்லை. அவன் வருத்தமெல்லாம் சாப்பாடு பற்றியதாகவே இருந்தது. அவன் அம்மா தினமும் காலையில் நாகப்பட்டினம் மீன் சந்தைக்கு சைக்கிள் ஓட்டிப்போய் மீன் வாங்கிவந்து பாண்டவனூர் கடைத்தெருவில் விற்றுதான் ஏழு பிள்ளைகளையும் வளர்த்தார். (வளர்த்தார் என்று சொல்வது எவ்வளவு சரியெனத் தெரியவில்லை.‌ ஏனெனில் நசீர்தான் வகுப்பிலேயே ஒல்லியானவன்.‌ அவனைவிட எட்டு வயது  மூத்த அக்காவின் எடையும் அவன் எடையும் சமமாகத்தான் இருந்தது.) நசீரின் அம்மா ஷம்ஷாத் பேகம் ஆத்தாவைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வருவார்.

‘மூத்த கொமறுக்கு எங்கூட சைக்கிள் ஓட்டி கன்னித்தெர விட்டுப்போச்சு யத்த’ என அவர் அழுதுகொண்டே சொன்னபோது கன்னித்திரை என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. எதிர்த்த வீடென்பதால் நசீர் எனக்கு உற்று தோழன்.‌ ஆத்தா எனக்குக் கொடுக்கும் தீனியில் சரிபாதியை அவனுக்குக் கொடுப்பேன். திரட்டுப்பால், தேங்காய்பாறை மாதிரி எனக்கு ரொம்பப் பிடித்த இனிப்புகளை மட்டும் அவன் கண்களில் காட்டமாட்டேன். நசீரின் வீட்டெதிரே அவனுடைய அத்தா கறிவெட்டும் மர அடிவட்டம் கிடக்கும். அம்மரத்தில் நானும் நசீரும் என் வீட்டிலிருந்து எடுத்துவந்த சிறிய வெட்டருவாளைக் கொண்டு பாண்டவையாற்றில் வெட்டிவந்த காட்டாமணக்கு குச்சிகளைக் கறியாகப் பாவித்து வெட்டுவோம். நான்தான் நசீரின் அத்தா. நசீர் ஷம்ஷாத் பேகம். நசீரின் கடைசி அக்காள்கள் இருவரும் சில பக்கத்து வீட்டுப் பிள்ளைகளும் ‘கஸ்டமர்கள்’.

‘கொஞ்சம் நெஞ்செலும்பு அதிகம் போடு கறிகாரு.’

‘கொழுப்பா போட்டு எடைய ஏத்தலாம்னு பாக்குறியா?’

‘நபீலு பிள்ளைக்கு ரத்தமே இல்ல, கொஞ்சூண்டு சொவொரொட்டி போடுய்யா.’

நான் நபீல் போலவே சட்டையின் முதல் பட்டனைத் திறந்துவிட்டுக்கொண்டு கறிமேடையின் பின்னே ஒரு செங்கல்லில் அலட்சியமாக அமர்ந்து கறி வெட்டிப் போடுவேன்.‌ அவரைப் போலவே வலது தோளில் முகத்தைத் துடைக்கவும் கறிக்கத்தியை ஒவ்வொரு முறை வெட்டிய பிறகு மரத்தில் தேய்க்கவும் நான் தவறியதில்லை. நசீரின் அம்மா நான் கறி வியாபாரம் செய்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பார். பின்னொரு நாள் நசீர் பைத்தியம் பிடித்து ஊரைவிட்டு ஓடினான். நீண்டநாட்கள் கழித்து நான் அவனை வேளாங்கன்னியில் சந்தித்தேன். ‘குணசேகரு’ என்று முழுவதும் கரையாகிப்போன பற்களுடன் சிரித்தவன், தன்னுடைய அழுக்கான முதுகுப்பையிலிருந்து ஒரு வெண்ணிற கார்ட்போர்ட் அட்டையை எடுத்தான். நசீர் மட்டும்தான் என்னைக் குணசேகர் என்று முழுப்பெயர் சொல்லி அழைப்பான். ‘இந்தத் தேவிடியாவை வரைஞ்ச கையால நான் வேற எதையும் வரையல குணசேகரு’ என்று என் கையில் அந்த ஓவியத்தைக் கொடுத்தான். நான் கறி வியாபாரம் செய்யும்போது என்னைப் பார்த்திருக்கும் ஷம்ஷாத் பேகத்தின் முகம் அது.

நசீரை எனக்குப் பிடித்துப் போனதற்கு ஷம்ஷாத் பேகம்தான் காரணம். கறி வியாபாரம் முடிந்தவுடன் ஷம்ஷாத் பேகம் எனக்கு முத்தம் கொடுப்பார். அம்மாவுக்குப் பிறகு, முத்தம் என்பதன் அர்த்தம் புரிந்த பிறகு, என்னை முத்தமிட்ட ஒரே பெண் இன்றுவரை ஷம்ஷாத் பேகம் மட்டும்தான். நசீர் இப்படி எலும்பனாக இல்லாமல் ஆரோக்கியமாக இருந்திருந்தால் எப்படி இருப்பானோ அப்படித்தான் ஷம்ஷாத் பேகம் இருந்தார். அவரின் உதட்டுக்கு மேலாக ஒரு மரு இருக்கும். மருவிலிருக்கும் ஒற்றை முடி அவ்வப்போது அவர் உதடுகளில்படும். அவர் நெற்றியில் பொட்டு இல்லாததால் எங்கள் ஊர்ப் பெண்களிலேயே அவர் முகத்தில்தான் அதிக இடம் இருந்ததாக எனக்குப்பட்டது. விற்று முடித்தபிறகு மீன்களில் நெத்திலி மட்டும் கொஞ்சம் மிஞ்சும். அந்தக் குச்சியான மீன்களை நசீர் அம்மா எனக்கென வறுத்துத் தருவார். நாக்கில் பட்டதும் கரைவது போலிருக்கும். காரம் கண்களில் ஏறும் ருசியுடன்தான் ஷம்ஷாத் பேகம் எனக்கு நினைவிருக்கிறார்.

நசீர் என்னைவிட நன்றாகப் படிப்பான். நன்றாக வரைவான். உடலில் சதையும் ஆற்றலும் இல்லாததால் அவனால் எந்த விளையாட்டிலும் கலந்துகொள்ள முடியவில்லை. உடற்பயிற்சி வகுப்பின் போதும் மைதானத்துக்கு வராமல் எங்காவது அமர்ந்து படம் வரைந்துகொண்டே இருப்பான். அவன் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் அரசுப் பொறியியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பிருந்தும் பயணச் செலவுக்கும் தங்குவதற்கும் தேவைப்படும் குறைந்தபட்ச பணம்கூட இல்லாமல் திரு.வி.க கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்தான். ஆனால் அக்கல்லூரியில் அவனால் பொருந்திப்போக முடியவில்லை.

‘கூடப் படிக்கிற பயலுவொல்லாம் ரொம்ப ரேக்குறானுங்கடா குணசேகரு’ என்று தொலைபேசியில் சொன்னபோது நான் கண்களில் நீர் வழிய அவனுக்குத் திடமான சொற்களால் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன். நானும் கல்லூரியில் துன்பப்பட்டுக்கொண்டுதான் இருந்தேன். மதியம் வரை மட்டுமே வகுப்புகள் இருக்கும். நான் படித்த பொறியியல் கல்லூரி திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவிலிருந்தது. விடுதி அறையில் இருந்து பார்த்தால் யூகலிப்டஸ் மரங்கள் மட்டுமே கண்களுக்குத் தெரியும். காரணமே இல்லாமல் பின்மதியங்களில் விடுதியில் இருக்கும்போது தற்கொலை எண்ணம் தலைதூக்கி இருக்கிறது. மூன்று மாடிகள் கொண்ட விடுதியின் மொட்டை மாடியில் மூன்று மூலைகளில் தண்ணீர் டேங்குகள் இருக்கும். அதில் ஒன்றில் ஏறிக்கொண்டேன். வெயில் உச்சியைப் பிளக்கும் பின்மதிய நேரம். மாடியிலிருந்து கீழே பார்த்தேன். அழுத்தமான இரக்கமேயில்லாத செந்நிற பூமி. விழுந்தால் சாவதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தது. திடீரென நான் ஏற்கெனவே செத்துவிட்டேன் என்று தோன்றியது. சூழவும் உயிரின் அசைவே இல்லை. கடுமையான அச்சம் தோன்றி உடல் எடையை இழந்தது. கண்கள் இருட்டின. தண்ணீர்த் தொட்டியில் இருந்து மாடியின் உள்ளே விழும் போதுதான் பிரக்ஞை திரும்பியது. கால்களில் அடிபட்டு நடக்க முடியாமல் கிடந்தேன்.

உண்மையில் அந்த நாட்களில்தான் என் உடலை நான் எவ்வளவு விரும்பினேன் என்று புரிந்தது. கால்களில் நிரந்தரமான எலும்பு முறிவு இருக்குமோ, என்னால் இனி நேராக நடக்க முடியாமல் போய்விடுமோ என்றெல்லாம் பயந்தேன்.‌ குறைகளற்ற மனித உடல் என்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு! விபத்துகளில் உறுப்புகளை இழக்கிறவர்கள், குறைகளுடனேயே பிறக்கிறவர்கள், ஆட்கொல்லி நோய்களால் வதைக்கப்படுகிறவர்கள் என்று எத்தனையோ கெடுவாய்ப்புகளைக் கடந்து நான் உயிருடன் இருக்கிறேன் என்று புரிந்தது. எனக்கு நசீர் இன்னும் நெருக்கமாகப் புரியத் தொடங்கினான். அவன் தன்னுடைய பென்சில் ஓவியங்களை எனக்கு மின்னஞ்சல் செய்வான்.‌ முன்பு நான் அவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை. அவன் ஓவியங்களில் பெரும்பாலும் அவனே இருப்பான்.‌ அவன் வரையும் பெண்கள் எல்லோரும் தஸ்தாயேவ்ஸ்கி நாவல்களில் வரும் பாவப்பட்ட நோஞ்சைப் பெண்களைப் போலவே இருப்பார்கள். ஆனால் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கையில் அவன் அனுப்பும் ஓவியங்களின் குணம் மாறியது. சத்தற்ற உடல் கொண்டவர்கள் வெறி இளிப்புடன் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.‌‌ அவர்கள் உடலிலிருந்து தெறித்த ரத்தத்தின் வீரியத்தை அந்தக் கருப்பு வெள்ளை ஓவியங்களிலும் தெளிவாக உணர முடிந்தது. தொடர்ச்சியாக அந்த ஓவியங்களைப் பார்ப்பதற்கு நான் அஞ்சினேன்.‌ அவன்தான் எப்போதும் என்னை அழைத்துப் பேசுவான்.‌ ஆனால் ஆறு மாதங்களாகத் தன்னுடைய ஓவியங்களை மட்டுமே அனுப்பிக்கொண்டிருந்தான். நான் இப்படி எண்ணிய மூன்றாம் நாள் நசீர் என்னை அழைத்தான்.

‘குணசேகரு ஒரு கனவு வந்துச்சு எனக்கு’ என்றான்.‌ அவன் குரலில் இருந்த பதற்றத்தை வைத்தே அவன் சரியான மனநிலையில் இல்லை எனப் புரிந்துகொண்டேன்.

‘என்ன கனவு?’

‘ரொம்ப நாளா வருது குணசேகரு.‌ ஒரு வருஷமா வருது.’

‘என்ன கனவு?’

‘ஒரு பெரிய அருவி குணசேகரு. அருவி முழுக்க கொழகொழன்னு ரத்தமா கொட்டுது. ரத்தம் ஜில்லுன்னு இருக்கு. அருவிக்கி கீழ நான் நிக்கிறேன். ரத்தம் என் மேல கல்லு மாதிரி வுளுவுது.’

நான் அமைதியாக இருந்தேன்.

‘அந்த ரத்தத்த வழிச்சி வழிச்சி நான் படமா போட்டுட்டு இருக்கேன்.’

மூன்று வருடங்கள் கழித்து நேற்று முன்தினம் நசீரை வேளாங்கன்னியில் பைத்தியமாகச் சந்திக்கும் வரை அவன் என்னிடம் பேசியது அதுவே கடைசிமுறை.

அந்த உரையாடல் நடந்த சில நாட்களில் நசீர் காணமல் போனான். ஆனால் அவனை‌ப் பல ஊர்களில் பலரும் கண்டதாகச் சொல்லத் தொடங்கினர். அவன் காணப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஊர்களில் எல்லாம் கைவிடப்பட்ட சுவர்களில் ஓவியங்கள் வரைந்திருந்தான். அவ்வோவியங்கள் சமூக வலைதளங்களில் பிரபலமடையத் தொடங்கின. அதீதமான புணர்ச்சி நிலைகளும் சித்திரவதைகளும் அவ்வோவியங்களில் வெளிப்பட்டன.

1. நிர்வாணமாக முட்டிபோட்டு நிற்கும் ஒரு பெண்ணின் தொண்டைக்குள் ஒருவனின் ஆண்குறி இருக்கிறது. அவள் முகம் புணர்ச்சியில் சொக்கி இருக்கிறது. அதேநேரம் அவள் தன் இடக்கையால் அவனுடைய ‌குறியின் வேர்ப்பகுதியை அறுத்துக்கொண்டிருக்கிறாள்.  

2. மலைவேம்பின் தோலை உரிப்பதைப் போல ஒரு பெண் பற்களால் கடித்து தொடையிலிருந்து கால்வரை ஒருவனின் மேல்தோலைக் கிழிக்கிறாள்.

3. மகிழ்ச்சியில் முகம் விரிந்திருக்கும் ஒருவனின் வாய்க்குள் ஒருவன் உளியை நுழைத்து பற்களைப் பெயர்க்கிறான். 

4. தாகத்தில் வாய்திறந்திருக்கும் குழந்தையின் மேலே கால்களை அகட்டி நின்று ஒரு பெண் மூத்திரம் பெய்கிறாள்.

5. மூன்று குழந்தைகள் ஒன்று சேர்ந்து ஒரு தாய்க்கழுகினை மூன்று பக்கமாகப் பிய்த்து உண்கின்றன.

இப்போது நானும் அப்பாவும் அமர்ந்திருக்கும் இந்தச் சுடுகாட்டில்தான் ஒரு மாதத்துக்கு முன் நசீர் கடைசியாகப் படம் வரைந்துவிட்டுச் சென்றிருக்கிறான்.‌ நசீரின் அம்மா தினமும் இங்கு வந்து உட்கார்ந்து ஒப்பாரி வைப்பதும் கண்கொடுத்தவனிதம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் அவருடைய மூத்த மகள் ஜாஸ்மின் தினமும் அவரைத் திட்டி இழுத்துச்செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. பொறுக்க முடியாமல் நானும் ஒருநாள் அந்தச் சுடுகாட்டுக்குச் சென்றேன்.

‘இந்தா இவனும்தான் அவன்கூட படிச்சான். புத்தியா பொழைக்கல? அவனக் கடைசியா பாத்தப்பய்யே எனக்கென்னவோ தீதார் பாக்குற மாதிரிதான் இருந்துச்சு. வுட்டுட்டு வேற வேலைய பாரும்மா’ என்று சொல்லி ஜாஸ்மின் என்னை வெறுப்புடன் பார்த்தபடி தன் அம்மாவை இழுத்துச் சென்றாள். எனக்கு விபரம் தெரிந்தே ஷாம்ஷத் பேகம் இருபது வருடங்களாக அழுகிறார். ஆனால் இன்னமும் அவர் கண்களில் நீர் வற்றியிருக்கவில்லை. 

‘நீ ஒரு வேலை மயிரும் பாக்க வேணாம். கெளம்பி மெட்ராஸ் போ’ என்றார்.

எனக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை கிடைத்ததில் இருந்தே அப்பா என்னை வெறுக்கத் தொடங்கிவிட்டார்.

‘படிச்சது இன்ஜினியரிங். ஆனா ஒம்மவன் கலெக்டருக்கு ஊம்பிவிடுற வேலைக்கு போறது உனக்கு பெரும மயிரா இருக்கா?’ என்று ஒரு வருடம் முன்பு எனக்கு வேலை கிடைத்ததை அம்மா சொன்னபோது அப்பா இவ்வாறாக வாழ்த்தினார். அப்போது நான் வழக்கம் போல் சுவரில் சாய்ந்து தலைகுனிந்து நின்றேன்.

3

என்னால் என் கல்லூரியில் பொருந்தியிருக்கவே முடியவில்லை. பன்னிரண்டாம் வகுப்புவரை பாடமெடுத்த ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மீது கொஞ்சமாவது கருணை இருந்தது. ஆனால் பொறியியல் கல்லூரியில் அத்தனை‌ ஆசிரியர்களும் எங்களை வெறுத்தனர். சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய மாணவர்களை, நகரப் பின்னணி கொண்ட மாணவர்களையே என் கல்லூரி ஆசிரியர்களால் நேசிக்க முடிந்தது. நான் கல்லூரியில் முழுமையாகக் கைவிடப்பட்டவன், முழுச் சுதந்திரம் பெற்றவன் என்ற விசித்திரமான இருமையிலேயே என் நாட்களைக் கழித்தேன். அப்பா திருச்சியில் வேலை செய்தும் என்னை அம்மாவின் அம்மா வீட்டில் தங்கி படிக்கச் செய்தார். எனக்கு அதற்கான காரணம் புரியவில்லை.‌ என் புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும்.

கல்லூரி இறுதியாண்டில் பொறியியலுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று புரிந்துகொண்டேன். அப்பாவுக்குப் பயந்தே அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கினேன்.‌ ஒரு வழியாக, கல்லூரி முடித்த மறுவருடமே Group 2 Non-interview பிரிவில் எனக்கொரு வேலை கிடைத்தது. வேலை கிடைத்த பிறகு நான் நசீரை மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கினேன். அலுவலகச் சூழலைக் கையாள்வது மிக மிக எளிதாக இருந்தது. இளம் வயதிலேயே வேலைக்கு வந்துவிட்டதால் அலுவலகத்தில் இயல்பாகவே மரியாதை இருந்தது. கல்லூரியில் கிடைக்காதா என்று ஏங்கியிருந்த பெண்களின் நட்பு அலுவலகத்தில் மிக இயல்பாக அமைந்தது. மணமான பெண்கள் மணமாகாத பெண்களைவிட இயல்பாகப் பழகினர். திருவாரூரிலேயே வேலை கிடைத்திருந்ததால் தினமும் பாண்டவனூரிலிருந்தே வேலைக்குச் சென்று வந்தேன். மூன்று மாதங்கள் வரை அப்பா என்னைப் பார்க்க வராதது மேலும் நிம்மதியைக் கொடுத்தது. அவர் வந்த அன்று வழக்கம்போல் நிம்மதி கெட்டது.

‘உன் மூஞ்சியப் பாத்தா மேல போறவன் மூஞ்சி மாதிரியே இல்ல.‌ சோறு கண்ட எடம் சொர்க்கம்னு ஒக்காந்திருவ போலருக்கு. உள்ளுக்குள்ள வெறி இருக்கணும். பத்தி எரியணும்.’

எனக்கு அவர் பேசியது முழுக்கப் புரியவில்லை. ஆனால் ஆத்திரம் வந்தது. என்னுடைய இணக்கமான அலுவலகச் சூழல் அவருக்குப் பொறாமையைக் கொடுக்கிறதா என்றுகூட நினைத்தேன். ஆனால் அதன்பிறகு அப்பா என்னிடம் எதுவுமே பேசவில்லை. விடுமுறை நாட்களில் முன்பு போல் பின்மதியம் என்னை வதைக்கவில்லை. சூழலையும் பொழுதையும் மனதிற்குள் ஏற்றிக்கொள்ள அவசியமில்லாத அளவுக்குப் பொழுதுபோக்குகள் சூழ்ந்து பெருகியிருந்தன. 

நசீரின் அம்மா சுடுகாட்டில் வந்து அழுத மறுநாள்தான் நான் வேளாங்கன்னிக்குக் கிளம்பிப் போனேன். உண்மையில் எந்தக் காரணமும் இல்லாமல்தான் கிளம்பினேன். மாதா கோவிலிலிருந்து கடற்கரைக்கு வரும் குறுகிய பாதையில் எண்ணற்ற கடைகள். வேளாங்கன்னியில் விபச்சாரிகள் நிறைய உண்டு என்ற பேச்சு ரொம்ப நாட்களாகவே என் காதில் விழும். அப்படி யாரும் இருக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்தேன். பின்மதியத்தில் விபச்சாரிகளைத் தேடும் என் அறிவீனத்தை உடனடியாக நொந்துகொண்டேன். ஆனாலும் அங்கு காணும்  ஒவ்வொரு பெண்ணையும் ஏதாவது விபச்சாரியாகக் கற்பனை செய்து ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்று ஆடையைக் கழற்றும் கற்பனைகளைத் தவிர்க்க முடியவில்லை.

பின்மதியத்தின் கடுமையான வெயில்.‌ ஒரு லெமன் சோடா குடிக்கலாமா என்றிருந்தது. ஏதோ கறுப்பு அட்டை தோளில் ஒட்டியது போன்ற அருவருப்பு தோன்ற ‌உடலை அசைத்துக்கொண்டு திரும்பினேன்.‌ நசீர் கடுமையான வாய்நாற்றத்துடன் ‘குணசேகரு’ என்று அழைத்தான். உண்மையில் நசீரை அங்கு பார்த்தது எனக்கு ஒவ்வாமையையே அளித்தது.‌‌ அவன் கதைபோல மாறி இருந்தான். அவனை இப்படி ஒரு கோலத்தில் நேரில் சந்திப்பேன் என நினைக்கவில்லை. அவன் கைகள் எரிந்துபோன புள்ளிகள் போலக் கறுத்திருந்தன. எலும்புக்கூட்டில் தோலை ஒட்டி வைத்தது போலச் சதையே இல்லாத முகம். மூக்குக்குக் கீழ் புண்கள் மண்டியிருந்தன. கையில் ஒரு அழுக்கு மூட்டை. அலைந்து திரிகிறவர்களின் வாழ்க்கை சாகசம் நிறைந்ததுதான். ஆனால் அத்தகையவர்கள் நம் நண்பர்களாக இருக்கக்கூடாது. அவனுடைய வெண்ணிறம் அழுக்காலேயே இல்லாமலாகி இருந்தது.

நசீரை அவன் நாற்றத்துடன் கட்டிப்பிடித்து அழுதேன். அவனை என் வீட்டுக்குக் கூட்டிவந்து கருநிற ஓடையென அழுக்கு ஓட குளிப்பாட்டினேன். அவனுக்கு நல்ல உடைகள் வாங்கிக் கொடுத்தேன். பத்து வினாடிகளுக்குள் எவ்வளவு கற்பனை!

‘நல்லாருக்கியா குணசேகரு?’ என்றான். அவனுடைய கால்சட்டை கிழிந்திருந்தது. தொடைகளில் பூஞ்சை பிடித்து அழுகியிருந்தது. அவன் உடலே மெல்ல அழுகிக்கொண்டிருந்தது. அதனால்தான் அப்படி நாறுகிறான் எனக் கண்டுபிடித்தேன். அவனை அவன் வீட்டில் கொண்டுபோய் விடலாமா என்று யோசித்தேன். மூத்த பெண் மட்டும் மணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள். மற்ற அனைவரும் மணமாகி நல்ல நிலையில் இருக்கின்றனர். ஷம்ஷாத் பேகத்தை நன்றாகவே பார்த்துக்கொள்கின்றனர்.

‘அந்தத் தேவிடியாளப் பத்தி எங்கிட்ட சொல்லாதடா’ என்றான். நான் நினைப்பதுகூட அவனுக்குக் கேட்கிறதா?

‘எல்லாம் படத்துல இருக்கு குணசேகரு. எதுவுமே நெஜமில்ல.‌ எல்லாம் படம்.‌ எல்லாம் படம்.’

நறநறவெனப் பல்லைக் கடித்தான். நசீரைப் போன்றவர்களை நான் பார்த்திருக்கிறேன். சாலையில் பல்லைக் கடித்தபடியே நடந்து போவார்கள். எண்ணங்கள் அலையலையாக எழுந்து அவர்கள் உள்ளத்தில் குமுறும். எல்லா எண்ணங்களும் உணர்ச்சிகளாகவே இருக்கும். நூற்றுக்கணக்கான மிகை உணர்ச்சிப் படங்களை ஒரே நேரத்தில் காண்பது போலிருக்கும் அந்தக் கொந்தளிப்பு. ஆனால் அந்தக் கொந்தளிப்பும் நிலையழிவும் ஒரு குறிப்பிட்ட காரணத்தால் உருவாவது இல்லை. அது மெல்ல மெல்ல உருக்கொள்ளும். நசீர் இப்படி ஆவான் என்பது எனக்குச் சிறுவயதிலிருந்தே தெரிந்திருந்தது என்றே நினைக்கிறேன். அவனை நான் ‘மீட்க’ விரும்பவில்லை. அவன் என்னிடம் கொடுத்த அவனுடைய அம்மாவின் படத்தை மட்டும் பெற்றுக்கொண்டேன். இன்று செல்வத்தாலும் துயராலும் உடலூதிப்போன ஷம்ஷாத் பேகம் போலல்லாமல் பாக்கு வாசனையுடன் என்னை முத்தமிடும் பழைய ஷம்ஷாத் பேகமாகவே அவர் அப்படத்தில் இருந்தார். நசீர் அப்படத்தைக் கொடுத்துவிட்டு திரும்பி நடந்தான். அவனுடைய ஒட்டிப்போன முதுகையும் புண்கள் மண்டிய புட்டத்தையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அழுதுகொண்டுமிருந்தேன். 

‘நீங்க ஆர்டர் போடுறதையே பண்ணிட்டு இருக்க முடியாதுப்பா. நான் இந்த வேலைலதான் இருப்பேன். மெட்ராஸ் எல்லாம் போவ முடியாது’ என்றேன்.

அப்பா சற்று நேரம் என்னையே புரியாதது மாதிரி பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென எழுந்து சென்றார். நான் சுடுகாட்டின் கூரையைப் பார்த்தேன். நசீர் என்னிடம் கொடுத்தது போலவே ஷம்ஷாத் பேகத்தை வரைந்திருந்தான். அப்படத்துக்கு எதிரே அமர்ந்து ஒருவன் சுயமைதுனம் செய்துகொண்டிருந்தான். அவன் குறியில் விந்து வழிந்திருந்தது.