அகிலம்

by வண்ணதாசன்
2 comments

தவமணிக்கு இப்படித்தான் ஆகிவிடுகிறது.

மனதுக்குச் சரியில்லாமல் என்னமோ மாதிரி இருக்கிறது, நல்ல வெயில் அடித்தாலும் வீடு முழுவதும் இருட்டில் மிதக்கிறது, அவள் என்ன இது என்ன மாதம், இன்றைக்கு என்ன கிழமை, போன வருஷம் இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று நினைத்துக்கொண்டா இருக்கிறாள்? ஆனால் வேண்டாதது எல்லாம் ஞாபகம் வந்து இம்சை பண்ணுகிறது.

செல்வமணி இருந்திருந்தால் இன்றைய தேதிக்கு +1 படித்துக்கொண்டு இருப்பான். அவனுக்குப் பின்னால் பிறந்த செல்வராணியே இப்போது எட்டாம் வகுப்பு வந்துவிட்டாள். எந்த நேரத்திலும் அவள் உட்காரும் பருவத்தில் இருக்கிறாள். ஆனாலும் அவனுக்கு அப்படி ஆகியிருக்க வேண்டியதில்லை.

தவமணி கூடத்தான் வந்தான். யூ.கே.ஜி போகிற வயது. ஷூ லேஸ் வாங்க வேண்டும். ரோட்டைத் தாண்டிக் குறுக்கே போய் எதிர்த்தாற்போல் உள்ள ’ஷாப் கடை’யில் வாங்கியாயிற்று. ஒன்றுக்கு இரண்டு ஜோடி, மினுமினு என்ற கருப்பில். தவமணியிடமிருந்து கேட்டு அதைத் தனது கால்சட்டைப் பையில் வைத்துக்கொண்டான். முழுவதும் உள்ளே போகாமல் வெளியே துருத்தியபடி இருந்தது. அந்த இடத்தை உள்ளே தள்ளித் தட்டிக் கொடுத்தான். அவன்கூடக் கேட்கவில்லை. தவமணியே அவனுக்குப் பபிள் கம் வாங்கித் தந்தாள். 

முன்சக்கரம் மோதின வேகத்தில் பபிள் கம் எங்கே போய் விழுந்ததோ! எல்லாம் முடித்துப் பொட்டலமாய்க் கட்டிக்கொண்டுவந்து கொடுக்கையில் அவனுடைய கால் சட்டையில் அந்தக் கருப்பு லேஸ்கள் அப்படியே இருந்தன.

இது என்ன விதமான நோக்காடு என்று தெரியவில்லை. எந்த லோகத்தில், எந்தப் புற்றில் சுருண்டு கிடக்குமோ! சரியாக அந்த மாதம், அந்தத் தேதியில் தவமணி இருக்கிற இடத்தை மோப்பம் பிடித்துவந்துவிடும். முன்னே இரண்டு நாள் பின்னே இரண்டு நாள் தவமணி உடம்பைச் சுற்றி முறுக்கும். அவள் தலையை விழுங்கப் போவது போலக் கழுத்தை இறுக்கியபடி வாயைப் பிளந்தபடியே இருக்கும். விழுங்கவும் செய்யாது. கொத்தவும் செய்யாது. எப்போது என்று தெரியாது. தன் வீச்சத்தை மட்டும் தவமணியிடம் விட்டுவிட்டு, சுருளலை உருவிக்கொண்டு போய்விடும். வாலும் தெரியாது. தலையும் தெரியாது.

தவமணி இப்படி இருப்பது நவநீதனுக்குத் தெரிந்துவிடும். அந்தக் குறிப்பிட்ட நாள் நெருங்க நெருங்க, அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தயாராகிவிடுவான். அவனுக்குத் தெரிந்ததை முடிந்தவரைக்கும் இடையிடையே சமைத்து வைப்பான். செல்வராணிக்குத் தலை பின்னிவிட்டு ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டுக் கொஞ்சம் தாமதமாக ஆபீஸ் போவான். இரண்டு நாட்கள் போட்ட அதே சட்டையும் கசங்கலும் பெரிதாகத் தெரியாது.

ஆரம்பத்தில் சில தடவை எப்போது பார்த்தாலும் சாப்பிடாமல் கொள்ளாமல் அழுதுகொண்டே இருப்பாள். சமைக்க மாட்டாள். குளிக்க மாட்டாள். சேலையிலேயே மூத்திரம் போயிருப்பாளோ என்னவோ? அதே வாடையோடு நாள் முழுவதும் நடமாடிக்கொண்டிருந்ததும் உண்டு. ஒரு கட்டத்தில் நவநீதனைச் சம்பந்தமே இல்லாமல், ‘நீரு வச்சுக்கிட்டு இருக்கேருல்லா ரெடிமேட் ஸ்டோர்க்காரி, அவ கிட்டேயே போக வேண்டியதுதானே? எம் பக்கத்திலே வந்து மோந்து பார்த்துக்கிட்டு மேலே கையை கிய்யை வச்சேரு, அப்புறம் இருக்கு’ என்று கத்தி இருந்திருக்கிறாள்.

நவநீதன் நெஞ்சில் அவள் பிராண்டின நகக்கோரை வரிவரியாய்ப் பொருக்காடிக் கிடந்திருக்கிறது. இதற்கு நேர் மாறாக, காணாது காணாது இன்னும் வை என்று மேலிலும் காலிலும் சிந்துகிற மாதிரி அள்ளி அள்ளிச் சாப்பிடுவது போல, ராத்திரி பகல் என்று பாராமல் கதவைச் சாத்திக்கொண்டு நவநீதன் மேல் அப்பிக்கொண்டு கிடப்பதும் நடக்கும். எத்தனை தடவை சேலையை எடுத்து அவளைப் போர்த்திவிட்டாலும் தூக்கித் தூர வீசிவிடுவாள். ஒரு தடவை இந்தச் சூழ்நிலையை முன்னிட்டு ஆபீசுக்கு லீவுகூடப் போட்டிருக்கிறான். தப்பித் தவறிப் பொம்பிளைப் பிள்ளை கண்ணில் பட்டுவிடுமோ என்று நவநீதனுக்கு அவமானமாக இருக்கும்.

தவமணிக்கே தான் இருக்கிற இருப்பு தெரியும். இந்த மாதிரிச் சமயங்களில் கொஞ்ச நாள் மேல வளவு பாலா சித்தியோடு ஏதாவது மேட்னி ஷோ போய்விடுவாள். சித்திக்கும் இவள்தான் டிக்கெட் எடுப்பாள். அப்படிக் கொஞ்ச நாள் போயிற்று. சித்தி இப்போது வீடு மாற்றி டவுண் ஒத்த மாடத் தெருவுக்குப் போய்விட்டாள். சிந்து பூந்துறை வடக்குத் தெரு எங்கே இருக்கிறது, டவுண் எங்கே இருக்கிறது! சினிமா பார்ப்பதற்காக அப்படிப் பஸ்ஸில் போய்விட்டு வருவது எல்லாம் நடக்கிற காரியமா?

நவநீதனுக்கு அவள் மகளிர் குழுவின் சேர்ந்தது எல்லாம் பிடிக்கவில்லை. செல்வராணியை இவனிடம் விட்டுவிட்டு ’இன்றைக்குக் குழு கூட்டம் இருக்கு’ என்று ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்குப் போனால், சாப்பிடுகிற நேரத்துக்குத்தான் வருவாள். கொஞ்ச நாள் தவமணி மூன்றாம் கிளாஸ் டீச்சர் போல, பெட்டி போட்டுத் தேய்த்த சேலை கட்டுவதும் கொண்டை போடுவதும் போவதும் வருவதுமாக ஆர்வமாகத்தான் இருந்தாள்.

என்ன கூத்தோ? ‘உருப்படியா தையல் தைக்கவும் சொல்லித் தரலை, எம்பிராய்டரியும் சொல்லித் தரலை, ஒரு மண்ணும் நடக்கலை. வட்டிக்கு விடுகிறதுக்கும் சீட்டுத் தட்டுகிறதுக்கும் ஆளுக்கு ஆளு அலையுதாளுக. இது எதுக்கு நமக்கு? நான் இந்த மாசத்தோட நின்னுக்கிடுதேன்னு சொல்லீட்டேன்’ என்றாள். கட்டிலில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த மகளின் தலையைத் தடவிக்கொடுத்தாள். ‘உருண்டு விழுந்திரப் போகுது’ என்று ஒரு தலையணையை அண்டைக்கு வைத்து, குவிந்த விரல்களை முத்திக்கொண்டாள். நவநீதன் ஒன்றும் சொல்லவில்லை. பார்த்துக்கொண்டே இருந்தான்.

நவநீதனுடன் ஆபீஸில் வேலை பார்க்கிற நாராயணிக்கு அவனைவிட ஏழெட்டு வயது கூடுதலாக இருக்கும். ஒவ்வொரு தடவை வீட்டில் கொலுவைக்கும் போதும் கூப்பிடுவார். வீட்டில் தவமணி நிலைமையை உத்தேசித்து, எதற்கு வம்பு என்று பேசாமல் இருந்துவிடுவான். பஜாரில் கொலுப் பரிசாகக் கொடுக்க, பிளாஸ்டிக் சாமான்கள் வாங்குவதற்கு மகனோடு இந்தப் பக்கம் பைக்கில் வந்தவர், நேரே வீட்டுக்கு வந்து தவமணியிடமே கொலுவுக்கு வரச்சொல்லிக் கூப்பிட்டுவிட்டாள். தவமணி அன்றைக்கு யானைக் கலரில் தற்செயலாக ஒரு சில்க் காட்டன் சேலை கட்டியிருந்தாள். நாராயணி தவமணி பக்கத்தில் வந்து, சேலைத் தலைப்பைத் தொட்டுப் பார்த்து, சேலை நன்றாக இருப்பதாகச் சொல்லி , எங்கே எடுத்தது என்ற விபரத்தையும் கேட்டுவிட்டார்.

தவமணிதான் ஒருநாள் காலையில் நவநீதன் ஆபீஸ் புறப்படும்போது ஞாபகமாகக் கேட்டாள். ‘சீக்கிரம் வந்தா, அந்த மாமி வீட்டுக் கொலுவுக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துருவமா? நானும் சும்மாவேதானே வீட்டில அடைஞ்சு கிடக்கேன்?’ அப்படி செல்வராணி, தவமணி, நவநீதன் மூன்று பேருமாகக் கொலு பார்க்கப்போன இடத்தில்தான் அகிலாண்டமும் வந்திருந்தாள்.

அகிலாண்டத்தைச் சின்ன வயதில் இருந்தே நவநீதன் மட்டும் அல்ல, அவன் அக்காள், தங்கை எல்லோரும் அகிலா மச்சி என்றுதான் கூப்பிடுவார்கள். நவநீதனுக்கு ஒன்றுவிட்ட தாய்மாமன் மகள். அது என்னமோ, அவள் ஆள் அப்படி இருப்பாள். புது நிறம்தான். ஆனால் வளர்த்தியும் சதையும் உருவிவிட்டது போல் இருக்கும். 

தெலுங்கு பேசும் யாத்ரீகர் கூட்டத்தில் ஒருதடவை அப்படி ஒருத்தியை ரயில் பயணத்தில் நவநீதன் பார்த்திருக்கிறான். அவள்தான் தவறான ஸ்டேஷனில் இங்கே இறங்கிவிட்டாள் என்று நவநீதன் நினைப்பான். அவள் பில்லாக்குப் போட்டிருந்தாள். இவள் போடவில்லை. கோணல் வகிடு எடு என்று யார் சொன்னார்களோ இவளிடம்? சுருட்டை முடி மற்ற இடங்களில் எல்லாம் சொன்னபடி கேட்பது போல அப்படியே வழுவழு என்று படிந்திருக்க, இடது காதுப் பக்கம் ஒரே ஒரு கொத்து மட்டும் பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொள்ள, வெயிலில் அலையும் படவரைக்கொடி நுனிச்சுருளாக எப்போதும் அசையும்.

நவநீதன் பி.காம் முடிக்கும்போது அகிலா மச்சி எம்.ஏ ஆங்கிலம் முடித்திருந்தாள். நவநீதனின் அக்காவுக்கு இவன் அகிலா மேல் ஆசைப்படுவது தெரியும். ‘உனக்கு மூப்பு மட்டும் இல்ல. அவளுக்கும் நமக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது பார்த்துக்கோ’ என்று சுருக்கமாகச் சொல்லி முடித்துவிட்டாள்.

அவளுடைய வக்கீல் பெரியப்பா போல அவளும் வக்கீலுக்குப் படிக்கப் போவதாகத்தான் சொன்னார்கள். அவள் வக்கீலூக்குப் படித்தால் என்ன, டாக்டருக்குப் படித்தால் என்ன என்று நவநீதன் நினைக்கவில்லை. அவள் வக்கீலுக்குப் படிப்பது நவநீதனுக்குப் பிடித்திருந்தது. ஏதோ ஒரு படத்தில் சுஜாதா கறுப்புக்கோட்டு எல்லாம் போட்டுக்கொண்டு வக்கீலாக வருவார், கறுப்புக்கோட்டைவிட, அதற்குப் பெயர் எல்லாம் தெரியாது, கழுத்தில் இரண்டு வெள்ளை ரிப்பன் பிரிந்து கவர் மாதிரித் தொங்குமே? அதைக் கட்டிக்கொண்டு அகிலா மச்சி வாதாடுவது போல நினைத்துக்கொள்வான். முக்கியமான காட்சிகளில் சுஜாதாவுக்குச் சில சமயம் ஆண் குரலா பெண் குரலா என்று தெரியாத ஒரு குரல் இருக்கும். அகிலா மச்சி அந்தக் குரலில் இங்கிலீஷில் மை லார்ட் என்று பேசினால் எவ்வளவு கம்பீரமாக இருக்கும் என்று நினைக்கும்போது நவநீதனுக்கு விறுவிறுவென்று ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. நாகர்கோவிலில் ஸ்வர்ணா மெடிக்கலஸ், ஸ்வர்ணா ரெடிமேட்ஸ், ஸ்வர்ணலட்சுமி சிட்ஃபண்ட் என்று நடத்துகிற பெரிய குடும்பத்தின் ஜனார்த்தனனுக்கு அகிலா மச்சியைப் பெண் கேட்டுவந்து, உடனே கல்யாணத்தையும் அதே சூட்டோடு சூடாக முடித்துவிட்டார்கள்.

ஏழெட்டு வருஷத்துக்குள் என்ன நடந்ததோ, அகிலாவுக்குப் பிள்ளை எதுவும் இல்லை என்று மட்டும் தெரியும். செல்வி நகரில் ஒரு பெரிய வீடு வாடகைக்கு அமர்த்தி, ஜனா மெடிக்கல்ஸ் என்று ஒரு மருந்துக் கடையையும் அகிலா ரெடிமேட்ஸ் என்று ஒரு கடையையும் திறந்து கொடுத்துவிட்டுப் போனார்கள். ஜனார்த்தனன் மருந்துக் கடையையும் அகிலாண்டம் அகிலா ரெடிமேட்ஸையும் பார்த்துக்கொண்டார்கள். அகிலா மேல் பார்ப்பதைவிடக் கல்லாவில் இருப்பது மிகுந்த தோரணையோடு இருந்தது. ஒரு கறுப்புக் கண்ணாடியோடு ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு அகிலா மச்சி போவதை நவநீதன் அந்தப் பக்கம் ஆற்றுத்தெருவின் வழியாகப் போய்க் குளித்துவிட்டு வரும்போது பார்த்திருக்கிறான். இடுப்பில் ஈரத்துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அவன் அப்படி வருவது அகிலா மச்சி கண்ணில்பட்டால் நன்றாகவா இருக்கும்? 

ஜனா மெடிக்கல்ஸில் வியாபாரம் அவ்வளவு ஓட்டம் இல்லை என்றும், ஆனால் அகிலா ரெடிமேட்ஸில் அந்தத் தடவை தீபாவளி சேல்ஸ் பிரமாதம் என்றும் கடைக்குள் நிற்பதற்கு இடமில்லாத அளவுக்கு நெரிசல் என்றும் சொன்னார்கள். ஒரு கட்டத்தில், நடத்திப் பிரயோஜனம் இல்லை என்று மெடிக்கல்ஸ் ஸ்டோரை மூடிவிட்டார்கள்.

ஜனார்த்தனனைப் பார்த்தால் பஜாரில் அப்படிக் கடையை நடத்த முடியாமல் மூடினவர் மாதிரியே தெரியாது. யார்தான் அவருக்கு அப்படி சட்டையையும் வேட்டியையும் வெளுத்துக் கொடுக்கிறர்களோ, அப்படி ஒரு வெள்ளையில் உடுத்திக்கொண்டுதான் அகிலாவுடன் நடந்து போவார். மலையாள நடிகர் சோமன் மாதிரி இருப்பது சரி. மீசையையும் ஏன் அப்படி அளவுக்கு அதிகமாக இரண்டு ஓரங்களிலும் நறுக்கிக்கொள்ள வேண்டும்? நவநீதன் இப்படி நினைப்பது எல்லாம் அவருக்கு எப்படித் தெரியும்? அடுத்தாற்போல ஒரு பாடல் காட்சி வரப்போவது போல, இரண்டு பேர் முகத்திலும் அவ்வளவு சந்தோஷம் இருக்கும்.

ஒருவகையில் சொன்னால் அகிலா ரெடிமேட்ஸ் கடையில்தான் நைட்டி என்கிற உடையை, போவோர் வருவோர் கண்ணில் படும்படி ஷோகேசில் தொங்கவிட்டார்கள். மற்ற குழந்தைகள் ஆடை விற்பனையை எல்லாம் குறைத்துக்கொண்டு அகிலா ரெடிமேட்ஸ் கடையில் பெண்களுக்கான உள்ளாடைகளையும் விதவிதமான விலையிலும் ரகத்திலும் நைட்டிகளையும் மட்டும் விற்க ஆரம்பித்தார்கள்.

இதுவரை இந்தப் பக்கத்து ஊர்களில் கிடைக்காத விலையுயர்ந்த உள்பாடிகள் அங்கே கிடைக்கிறதாகவும், காரில் வந்து இறங்கி வாங்கிப்போவது எல்லாம் அதைத்தான் என்றும், அகிலாவே இப்போதெல்லாம் அப்படி ஒன்றைத்தான் அணிந்துகொள்கிறாள் என்றும் பேச்சு. வர வர அகிலாவைப் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கும் என்று நவநீதனுக்குத் தோன்றியது.

அகிலா ரெடிமேட்ஸ் கடைக்கு அடுத்தாற்போல ஒரு செருப்புக் கடை இருந்தது. அந்தக் கடைக்கு முன்னால் சச்சவுக்கமான கடிகார ரிப்பேர் செய்யும் கண்ணாடிக் கூண்டையும் ஸ்டூலையும் போடும் அளவுக்கு இடம் கொடுத்திருந்தார்கள். ஒரு பல்பு எரிகிற அளவுக்கு அந்தக் கடையில் இருந்தே கரண்ட் இழுத்திருக்கும் ஏற்பாட்டில் இரட்டை முறுக்கு ஒயர் தொங்கும். 

ஒருதடவை தன்னுடைய வாட்சை ரிப்பேர் செய்யப்போன நவநீதன், அங்கே இருந்து அகிலா அவளுடைய கடையில் எழுந்திருப்பதையும், திரும்பி நிற்பதையும், மேலே அட்டத்தில் இருக்கும் ஒரு அட்டை டப்பாவைக் கையை உயர்த்தி வாங்குவதையும், பணம் வாங்குவதற்காக அவசரமாக வந்து கல்லாவில் உட்கார்வதையும் பில்லில் ஒரு ரப்பர் ஸ்டாம்பைக் குத்தி பாக்கியை அவர்களிடம் கொடுக்கும்போது சிரிப்பதையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.

அகிலா முன்பு மூக்குக் குத்தியிருந்தவள் இல்லை. இப்போது சேட்டு வீட்டுப் பெண்களைப் போல இடதுபக்க மூக்குத்தி போட்டிருக்கிறாள். என்ன போட்டாலும், என்ன செய்தாலும் அகிலா நன்றாக இருக்கிறாள் என்று நவநீதன் நினைத்தான். ஒரு சமயம் எல்லோரும் சொல்கிற அந்த விலைகூடின உள்பாடியைத் தவமணிக்கு வாங்கிக்கொண்டு போய்க் கொடுத்தால் என்ன என்றுகூடத் தோன்றியது.  

ஜனார்த்தனனை எர்ணாகுளம் விடுதி ஒன்றில் இருந்து வீச்சம் வந்த பிறகுதான் கண்டுபிடித்து நேரே நாகர்கோவிலுக்குக் கொண்டுபோனார்கள். கடையில் அகிலா இருக்கும் போதுதான் தகவல் வந்தது. ஜனார்த்தனனின் மாமா ஒருத்தர் காரை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். அவர்தான் அப்படி அப்படியே கடையை மூடி, வேலைக்கு நின்றுகொண்டிருந்த மூன்று பெண் பிள்ளைகளுக்கும் ஒரு தொகையைக் கொடுத்து தகவல் சொன்ன பிறகு வரச்சொல்லி அனுப்பினார்.

பகல் பன்னிரண்டு மணிக்கு ஷட்டரை இழுத்து மூடுகிற சத்தம் கேட்டால் பஜாரில் கூட்டம் கூடாமல் எப்படி இருக்கும்? வேலை பார்த்த பெண்கள் மூன்று பேரும் கிளம்பிப்போகாமல் கடைக்கு வெளியில் நடைபாதையிலேயே நின்றுகொண்டு இருந்திருக்கிறார்கள். ஒருத்தி சாப்பாடு கொண்டுவந்த டிபன்பாக்ஸை மறந்துவிட்டிருந்தாள். ஷட்டரைப் பாதி இறக்கியபடி இருந்த நிலையிலேயே குனிந்து உள்ளே போய் அதை எடுத்துவிட்டு வெளியே வந்தாள்.

மூன்று நான்கு மாதங்களுக்கு அப்புறம் அகிலா வந்ததோடு சரி. கடையைத் திறந்தார்களே தவிர நடத்தவில்லை. இருந்த சரக்கோடு அப்படியே கடையைக் கைமாற்றி விட்டார்கள். இரண்டு கடை தள்ளி ஒரு ஸ்டேஷனரி கடையை மூன்றாவது தலைமுறையாக நடத்துகிற ஒருவர்தான் தைரியமாக அகிலா ரெடிமேட்ஸை வாங்கி நடத்தினார். கடை விலாசத்தை மட்டும் மாற்றினார். ஒன்றும் குறையில்லை. கடை முழிப்பாகத்தான் போகிறது.

செல்வி நகரில் இருந்த பெரிய வீட்டைக் காலி செய்துவிட்டு அதே பகுதியில் ஒரு மூன்று தட்டு வீட்டுக்கு வாடகைக்கு வந்தாள். மீனாட்சிபுரம் ஸ்கூலில்தான் அகிலா பன்னிரண்டு வரை படித்தாள். அது பெண் குழந்தைகள் மட்டும் படிக்கிற பள்ளிக்கூடம். அங்குள்ள பிள்ளைகளுக்கு இலவசமாக ஆங்கிலம், முக்கியமாக கிராமர் சொல்லிக் கொடுத்தாள்.

அகிலாவுக்கு அவளுடைய கடையில் நிறைய விற்பனையான நைட்டிகளின் மீது ஒரு விருப்பமே வந்திருந்தது. மறுபடியும் அதன் மூலமே ஜெயிக்க விரும்பினாள். அகிலா ரெடிமேட்ஸ் கடையில் விற்பனைப் பெண்ணாகவும் ஆல்டரேஷன் மாஸ்டர் ஆக, தேவைப்படும் சிறிய அளவு மாற்றங்களை வாடிக்கையாளர்களுக்குக் கடையில் வைத்தே செய்து கொடுத்துக்கொண்டு அங்கே கடையில் இருந்தவரிடமே தையல் தைக்கக் கற்றுக்கொண்டாள்.

தைப்பதைவிடவும் மிகச் சரியாகப் பெண்களின் ஆடைகளை வெட்டுகிற ‘கட்டிங்’ நுட்பம் நிறைந்த ஒரு மாயக் கத்தரிக்கோலை அவள் வசமாக்கிக்கொண்டாள் என்பதை, அவளிடம் பிளவுஸ் தைக்கக் கொடுக்கக் காத்திருந்தவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்ததில் தெரிந்தது. அடுத்த கட்டத்தில், மணப்பெண்களுக்கு விதவிதமாக ஆடைகள் வடிவமைப்பவராக மாறிய உடன், அகிலாவுக்கு மறுபடியும் அந்த நைட்டி விற்பனைக் கனவு வந்தது.

அகிலா செல்ஃப் ஹெல்ப் க்ரூப் ஆரம்பிப்பதோ வங்கிக்கடன் வாங்குவதோ அவளுடைய தோற்றத்துக்கும் ஆங்கிலத்துக்கும் அவளுடைய பிரபலத்துக்கும் மிகச் சுலபமாக இருந்தது. தென் மாவட்டங்களில் பஸ்ஸில் பிரயாணம் செய்பவரின் கண்களில் தவிர்க்கமுடியாமல் படும் தூரத்துச் சுவர் விளம்பரங்கள் இப்போது ‘அகில உலகப் பெண்களுக்கு, அகிலா நைட்டீஸ்’ என்பதுதான்.

பெரிய ஆச்சரியம். நவநீதனுக்கு நம்பவே முடியவில்லை. நாராயணி வீட்டுக் கொலுவில் அகிலா மச்சி கீழே ஜமுக்காளத்தில் உட்கார்ந்து பாடிக்கொண்டு இருந்தாள். புது பவானி ஜமுக்காளம். பட்டைப் பட்டையாக அதன் அழுத்தமான நிறங்களோடும், திரடு திரடான கனத்தோடும் பளீர் என்று கிடந்தது. ஜமுக்காளத்தை விரிக்கத் தெரிந்த யாரோ விரித்திருந்தார்கள். நுனி வரை ஒரு மடங்கல் சுருளல் இல்லை. அதைவிட, பளீர் என்றும் புதிதாகவும் அதன் நடுவில் அகிலா! முதுகுத்தண்டின் அத்தனை கண்ணிகள் வழியாகவும் உச்சிக்குச் சரசர என்று ஏறிப் படம் எடுக்கிற குரலோடும் பாடிக்கொண்டு இருந்தாள்.

’என்ன கவி பாடினாலும்’ பாட்டை மதுரை சோமு மாதிரிப் பாட வேண்டும், அருணா சாய்ராம் மாதிரிப் பாடக்கூடாது என்பாள். அவளுக்குச் சோமுவின் முகம் வந்து இறங்கியிருந்தது. நெற்றி நிறைய விபூதி தெரிந்தது. வாயைத் திறந்து பாடும் விதம்கூட அவருடையது போலவே ஆகி, வாயின் இரண்டு ஓரங்களிலும் வெற்றிலைச்சாறு சிறு குமிழியிட்டிருந்தது. உச்சமான கடைசி வரிகளில் இருந்தாள். ‘இச்செகத்தில் நீ நினைந்தால் எனக்கோர் குறைவில்லை முருகா.. முருகா’ என்று மேலே மேலே ஏறிக் காணாமல் போய், காணாமல் போய்விட்டவளின் குரலில், ‘இன்னும் என்ன சோதனையோ’ என்று விம்முகையில் நவநீதனின் இடதுகையில் தவமணியின் இரண்டு கைகளும் இறுகின.

அவளுடைய பாரம் முழுவதும் அங்கே இறங்கி, தவமணி வெற்றுடலாகத் தொங்குவது போல் நவநீதன் மேல் சாய்ந்து விக்கி விக்கி அழுதுகொண்டு இருந்தாள். நவநீதன் அப்படியே தவமணியை அணைத்துக்கொண்டான். அவன் அணைப்புக்குள் இருந்து ‘முருகா, முருகா’ என்று அகிலா உருகுவது கேட்டது. தவமணி அகிலா உயரத்திற்கு வளர்ந்திருந்தாள். இடதுபக்கம் ஒரு கொத்துச் சுருட்டை முடி சிலும்பிக்கொண்டு நின்றது. அதுவும் ‘பட்சமுடனே எனக்குப் பரிசளிக்க யாருமில்லை’ என்று அரற்றியது.

தவமணி இவனிடமிருந்து அவளை உருவிக்கொண்டு போய்  ஜமுக்காளத்தில் இருந்து பாதி எழுந்துகொண்டிருந்த அகிலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். ‘ராணி.. அப்பா நீங்க பாட்டுப் படிக்கதைப் பத்திச் சொல்லியிருக்காங்க. நீங்க ‘ஆடு மேய்க்கும் கண்ணா’ பாடினா அவ்வளவு நல்லா இருக்குமாம். அருணா சாய்ராம் மாதிரியே தொடையை அப்படித் தட்டி, உட்கார்ந்திருக்கிற இடத்தில் இருந்து அசைஞ்சு அசைஞ்சு சிரிச்சுக்கிட்டே பாடும்போது அகிலா அப்படியே சம்மணம் போட்ட மாதிரியே பறந்து போயிருவாளோன்னு அவங்களுக்குத் தோனுமாம். சொல்லியிருக்காங்க’ என்றாள்.

அகிலா ஜமுக்காளத்தில் அப்படியே மறுபடியும் உட்கார்ந்தாள். ஒரு பெரிய கொலு பொம்மை மாதிரி இருந்தது, இன்றைக்கு என்று யாரோ ஒரு வேளாளர் இப்படி ஒரு பொம்மையைச் செய்து, வர்ணம் எல்லாம் பூசி, யார் கண்ணிலும் படாமல் இப்படி இறக்கி வைத்துவிட்டுப் போயிருக்க வேண்டும்.

பாட ஆரம்பித்தாள். தொடையைத் தட்டினாள். வலதுபக்கம் அவளுக்கு அடுத்தாற்போல இருக்கும் கடம் வாசிப்பவரையும் அடுத்து இருக்கும் மிருதங்கக்காரரையும் பார்த்துச் சிரித்தாள். அப்படி ஒரு மாயம். அங்கே இருக்கிற எல்லோரும் ‘மாடு மேக்கும் கண்ணனைப் போக வேண்டாம்‘ என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள். தலையை உருட்டினார்கள். கையைத் தாளமாகத் தட்டினார்கள்.

நாராயணி நகர்ந்து நகர்ந்து வந்து தவமணியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். கொஞ்ச நேரம் கையைப் பிடித்தவருக்கு அது போதாது என்று பட்டிருக்க வேண்டும். தவமணியின் கை வளையல் இரண்டையும் முழங்கையில் நகர்த்தினார். தன் மீது தவமணியை அப்படியே சாய்த்துக்கொண்டார். அப்படிச் சாய்ந்தபடியே பக்கத்தில் இருந்தவருக்குக் கையால் சைகை செய்தார், கைக்கு வந்துசேர்ந்த பிச்சிப்பூச் சரத்தை அப்படியே தவமணியைத் திரும்பச் சொல்லி வைத்துவிட்டார்.

தவமணி அப்படித் திரும்பி நின்று பூவை வாங்கிக்கொள்ள இலேசாகக் குனிந்திருப்பது நவநீதனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஏன், நாராயணிக்கு என்ன குறைச்சல்? அவரும் அழகாய்த்தான் இருக்கிறார். சின்னாளப் பட்டுப் பாவாடை கட்டிக்கொண்டு வந்திருக்கும் செல்வராணியின் அழகு அப்படி இருக்கிறது! அங்கே இருந்து ‘அப்பா’ என்று நவநீதனைப் பார்த்துக் கூப்பிட மாட்டாளா என்று அவனுக்குத் தோன்றுகிறது. தூரத்தில் பிரம்புச் சாய்வு நாற்காலியில் மடங்கினாற்போல, நரை வகிடும் மூக்குத்தியுமாக உட்கார்ந்திருக்கும் அந்த எண்பது தொண்ணூறு வயது மனுஷியின் அழகு அவரைச் சுற்றிப் பிரகாசத்தை உண்டு பண்ணியிருக்கிறது. இங்கே இருக்கிற எல்லோரும், அந்தக் கொலு பொம்மைகள் உட்பட, எப்படி இவ்வளவு அழகாகிவிட்டார்கள்!

அதற்குப் பின் கொஞ்ச நேரம்தான் அகிலா மச்சி இருந்தாள். எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள். செல்வராணியைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, தவமணியைப் பக்கத்தில் இழுத்துக்கொண்டாள். நவநீதனின் முகத்தைப் பார்த்து ‘சந்தோஷம்’ என்றாள். தவமணியை அவள் இடுப்போடு நெருக்கிக்கொண்டு ‘சந்தோஷம்’ என்றாள். செல்வராணியைக் கீழே இறக்கிவிட்டு, கன்னத்தில் தட்டிக்கொடுத்து, ‘சந்தோஷம் குட்டி’ என்றாள். ’எல்லோரும் வீட்டுக்கு வாங்க’ என்று கும்பிட்டாள்.

நாராயணியோடு தவமணியும் அகிலாவை வாசலுக்கு வழியனுப்பப் போனார்கள். நவநீதன் அகிலா உட்கார்ந்து பாடின காலி ஜமுக்காளத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். செல்வராணி கிண்ணமும் கரண்டியுமாக உட்கார்ந்து சுண்டலைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது.

நாராயணிக்கு அம்மா ஊர் சிவசைலம். அங்கே இருந்து நான்கைந்து தாழம்பூ வந்திருந்தது போல. வெற்றிலைப் பாக்கு, குங்குமம், ரவிக்கைத் துண்டோடு ஒரே ஒரு மடல் தாழம்பூவையும் வைத்துக் கொடுத்திருந்தார். ஓரத்து முள்கூடச் சரியாக வலுக்காத, சின்ன, உட்பக்கத்து மஞ்சள் மடல். வீட்டுக்குப் போகிற வழி எல்லாம் வாசம் கூடவே வந்தது. செல்வராணி, ‘அப்பா.. இது என்ன பூ, இது என்ன பூ?’ என்று நவநீதனிடம் கேட்டுக்கொண்டே வந்தது. ‘இந்தப் பூ பேரு செல்வராணி’ என்று அதன் கன்னத்தை முத்தினான். ’இந்தப் பூ பேரு தவமணி’ என்று மறுபடியும் அழுத்தமாக முத்தினான். ‘இந்தப் பூ பேரு அகிலா மச்சி’ என்று சொல்ல வந்தது. சொல்லவில்லை.

வீட்டு வேலை எல்லாம் முடிந்து தவமணி வந்து படுக்கும்போது உடுமாத்துச் சேலையில் இருந்தாள். அப்படிச் செய்வது புதிது ஒன்றும் இல்லை. ‘கொலுவுக்கு போகும்போது கட்டியிருந்த சேலை நல்லா இருந்ததே’ என்று சொன்னவன், நிலைக்கண்ணாடிப் பக்கம் தனியாக எடுத்துவைத்திருந்த அந்த ஒரே ஒரு தாழம்பூ மடலை எடுத்துவந்து கையில் வைத்திருந்தான். அப்போதைவிட இப்போது வாசனை கூடிவிட்டதாக இருந்தது.

தவமணியும் நெகிழ்ந்து போய்த்தான் இருந்தாள். ‘அதே சேலையில்லாட்டா என்ன, அதே தவம்தானே?’ என்றாள். கையில் தீச்சட்டியை வைத்திருப்பது போலக் கணகணவென்று அந்தத் தாழம்பூ மடல் சுட்டுச் சுடர்ந்தது. அவனை அறியாமல் பாட ஆரம்பித்தான். ‘காய்ச்சின பாலும் தாரேன், கல்கண்டு சீனி தாரேன்.’ தவமணியின் புறங்கழுத்துக்குள் குனிந்து, ‘கை நிறைய வெண்ணெய்  தாரேன்’ என்று கன்றுக்குட்டி போல முட்டினான். கண்ணுக்குள் ஜமுக்காளத்தில் அகிலா மச்சி உட்கார்ந்திருந்தாள். அவள் தொடையை அப்படிச் சிரித்தபடி தட்டும்போது நவநீதனின் தொடை அதிர்ந்தது. தவமணியை அப்படியே பின்னால் இருந்து இறுக்கிக் கட்டினான்.

நவநீதனுக்குக் குப்புற விழுந்துவிட்டது போல இருந்தது. இதுவரை பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்த ஆறு வற்றி எங்கே காணாமல் போயிற்று? இது படித்துறைதானே? முடிச்சு முடிச்சாக ஏழெட்டு நத்தைகள் ஊர்ந்து போய்க்கொண்டிருக்கிறதே! போய்க்கொண்டிருக்கிறதா, வந்துகொண்டு இருக்கிறதா? தன்மேல் எப்போது ஒன்று ஏறியது? எடுத்துப்போட, எடுத்துப்போட, அதே இடத்தில் இன்னொன்று ஊர்ந்து வருவது எப்படி? இன்னொன்றா, அதேதானா? நவநீதன் மேல் சுவரைப் பார்த்தபடி மரப்பொம்மையாக மல்லாந்து படுத்திருந்தான்.

’இதுல என்ன இருக்கு? எப்பமாவது ஒருதடவை இப்படி நடக்கிறதுதானே?’ என்று தவமணி ஓரமாகக் கிடந்த வேட்டியை எடுத்து அவன் மேல் போட்டாள். ‘இதுக்கு முன்னால இந்தச் சமயத்தில என்னைக்காவது இப்படி நீங்க பாடினது உண்டா ராணிப்பா? இல்லேல்லா? அந்தப் பாட்டு போதும் இன்னைக்கு’ என்று தவமணி தனக்கு மேலும் துணியை எடுத்துப் போட்டுக்கொண்டாள்.

‘எங்கே போய்க் கிடக்கு பாருங்க’ என்று அவள் இடது புஜத்திற்கு அடியில் கிடந்த தாழம்பூ மடலை எடுத்துத் தனது தலையணைக்கு அடியில், ‘எல்லாம் உன்னால வந்தது. நீ இங்கேயே இரி’ என்று வைத்துக்கொண்டு மறுபடியும் நவநீதன் பக்கம் சாய்ந்து படுத்தாள்.

‘போகும்போது கையைப் பிடிச்சுக்கிட்டு அகிலாக்கா எல்லாரும் வீட்டுக்கு வாங்கன்னு சொன்னா. ஒருநாள் போயிட்டு வருவோம்’ என்றாள்.

நவநீதன் பொதுமிப் பொதுமி அழ ஆரம்பித்தான்.

2 comments

அம்பை December 31, 2022 - 6:39 pm

அருமையான கதை.
அம்பை

இரா.விஜயன் December 31, 2022 - 8:10 pm

கதையும் கவிதையும் கலந்த நல்லதொரு காக்டெய்ல்.வண்ணதாசனுக்குள் உறைந்துள்ள கல்யாண்ஜியும் கதை நெடுகிலும் பயணிப்பதால் படித்து முடித்த பின்னரும் தாழம்பூ வாசமாய் மனதை விட்டு அகலாமல் கிறங்கடிக்கிறது கதை.
அதிலும் அந்த ‘சுருட்டை முடி மற்ற இடங்களில் எல்லாம் சொன்னபடி கேட்பது போல அப்படியே வழுவழு என்று படிந்திருக்க, இடது காதுப் பக்கம் ஒரே ஒரு கொத்து மட்டும் பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொள்ள, வெயிலில் அலையும் படவரைக்கொடி நுனிச்சுருளாக எப்போதும் அசையும்.’-என்ற வரிகளில்
நம்மை வாரிச் சுருட்டி உள்ளிழுத்துக் கொள்கிறார் எழுத்தாளர்.
கதையின் இறுதி வரிகளில் படித்துறை நத்தைகள் பற்றிய கவித்துவமான படிமம்தான் இக்கதையின் மகுடம்.
ஆம்.கால வெள்ளத்தால் அடித்துச் செல்ல முடியாத சில நினைவு முடிச்சுகள் நம் எல்லோர் மனச் சுவரிலும் நத்தைகளாக ஒட்டிக் கொண்டு இம்சை கொடுத்துக் கொண்டுதானே இருக்கின்றன இன்பமாகவும் துன்பமாகவும்.
ஓர் அருமையான வாசிப்பனுபவத்தைக் கொடுத்த எழுத்தாளருக்கு என் நன்றியும் வணக்கமும்.

Comments are closed.