சுடர்த்தொடி கேளாய்!

by மானசீகன்
4 comments

“ஃபௌசி.. இன்னிக்கு நா சி.எல் இல்லடி. ஸ்கூலுக்கு திரும்ப வந்துட்டிருக்கேன்.”

“அச்சோ.. ஒங்க பண்டல் மச்சானோட படத்துக்குப் போகலையா?”

“இல்ல.. அவருக்கு திடீர்னு கம்பெனில வேல வந்திருச்சாம்.”

“……………”

“வந்து சொல்றேன். நீ முதல்ல ஆஃபிஸ்க்கு போயி லீவ் லெட்டர திரும்ப வாங்கிடு.”

ஃபௌசி அயர்ச்சியாகத் தொலைபேசியை வைத்தாள். மகாவை நினைத்தால் பாவமாயிருந்தது. திருமணமாகி ஆறே மாதத்தில் அவர்கள் சேர்ந்து கிளம்புவதாகத் திட்டமிடும் ஒவ்வொரு முறையும் இதே மாதிரிதான். இறுதிக்காட்சி மட்டும் மாறாமல் உறைந்துவிட்ட ஒரே நாடகத்தின் விதவிதமான காட்சி ஒத்திகைகளைக் காதில் கேட்பது போல் ஃபௌசிக்குத் தோன்றும்.

“அவரு கேரளா போகணுமாம்.”

“இன்னிக்கு சரக்கு டெலிவரி.”

“கட்டிங் மாஸ்டர் வரலையாம். வேறொரு ஆளை இவர்தான் கூட்டியாரணும் போல.”

“பேங்க்ல வரச்சொல்லிருக்காங்கன்னு சொன்னார்.”

“டெய்லர்களுக்கு சம்பளம் தர கம்பெனில மொத்தமா பணம் இல்லன்னு இப்பத்தான் சொன்னாரு. வெளில வாங்கப் போயிருக்கார்.”

“சூரத்ல இருந்து ஏஜெண்ட் வந்திருக்காராம்.”

தானாயிருந்தால் கடித்துத் துப்பியிருப்போம், குறைந்தபட்சம் அவன் சங்கையாவது! மகா அவ்வளவு பொறுமைசாலியெல்லாம் இல்லை. பிறகேன் இப்படி? திருமணம் பெண்ணின் பிறவிக் குணத்தைச் சேலையோடு சேர்த்து முதலிரவிலேயே உருவிவிடுகிறதோ?

“ஏண்டி ஒங்களுக்குள்ள ஏதாவது நடந்துச்சா இல்லையா?”

“எதைக் கேக்குற?”

“அதாண்டி…”

“வேணுன்னா அடுத்த தடவை பெட்ரூம்ல கேமரா வச்சு லைவ் ரிக்கார்ட் பண்ணி டி.வில போட்ரலாமா? உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாகன்னு சொல்லிச் சொல்லியே முப்பது தடவை போட்ருவான்.”

மகா எப்போதும் இப்படித்தான். அவளை எது மூழ்கடிக்க முயன்றாலும் அதிலிருந்து தன் இயல்பான குறும்புத்தனத்தால் மட்டுமே மூச்சுமுட்டாமல் திமிறி வந்திருக்கிறாள். சில தருணங்களில் எல்லை மீறி அந்த இயல்பே சுமையாகிவிடுவதை ஃபௌசி அடிக்கடி உணர்ந்திருக்கிறாள்.ஆனால் அதை மகாவிடம் சொல்ல முயன்றதில்லை. மனிதர்களின் குறைகாணும் இயல்புக்கெல்லாம் அப்பாற்பட்டது அவள் குணச்சித்திரம் என்கிற எண்ணம் வந்த உடனே வார்த்தைகள் வழுக்கி வாய்க்குள்ளேயே நின்றுகொள்ளும்.

இருவரும் ஆறாம் வகுப்பிலிருந்தே தோழிகள். பன்னிரண்டாம் வகுப்பில் ஃபௌசி 998 எடுத்ததற்கே மூக்கால் அழுதாள். மகாவுக்குக் கணக்கில் போய்விட்டது. அதைப் பற்றிக் கவலையே படாமல் கொட்டும் மழையில் பனிக்கூழைக் கையில் ஏந்தி, ‘உனக்கு?’ என்று குழந்தையைப் போல் நீட்டிய மகாவின் முகத்தைப் பார்த்த அன்று தனக்கு ஓவியம் வரையத் தெரியாததற்காக முதன்முதலாய் கவலைப்பட்டது ஃபௌசிக்கு நினைவு வந்தது.

“ஃபெயிலானதுக்கு கவலைப்படாமகூட இருக்கலாம். ஆனா வெக்கமும் இல்லையாடி துப்புக் கெட்டவளே?”

“நா எழுதி வச்ச லவ் லெட்டருக்குப் போயி அந்தாளு 58 மார்க் போட்டு வச்சிருக்கான். ஆக்சுவலா ஒரு அரை ஜொள்ளனப் போயி வேல மெனக்கெட்டு வாத்தியாராக்குனதுக்கு அரசாங்கம்தான் கவலப்படணும். நா ஏன்?”

அடுத்த வருடமே தேர்ச்சி பெற்று ஃபௌசி படித்த அதே கல்லூரியில் ஆங்கில இலக்கியம் வந்து சேர்ந்தாள்.

“இங்கிலீஷ் நல்லா வருமாடி ஒனக்கு?”

“கதை விட வரும்ல? சேக்ஸ்பியர் ஃபோட்டாவுக்கு கீழ முட்டை ஓதி வச்சிருக்கேன். ஒரு இங்கிலீஷ் பொயட்டோட வயிறை காப்பாத்துறக்காகவாவது திராட்சை ரசத்துல இங்கிலீஷ மிக்ஸ் பண்ணி நா தூங்குறப்ப ஜீசஸ் என் வாய்ல ஊத்திருவார்.”

தனம்‌ அக்கா மகாவுக்கு நேர் எதிர். பெண்களையே ஒரு நொடிக்கு மேல் கண்களைப் பார்த்துப் பேசாது. அக்காவின் உடலில் இருந்து விநோதமான வெண்ணெய் வாசனை வரும்‌. ‘எப்படிக்கா இது?’ என்று கேட்டால் வெட்கமாய்ச் சிரித்துவிட்டு சமையலறைக்கு ஓடிவிடுவாள். இத்தனைக்கும் அவர்கள் வீட்டில் பால், தயிர்கூட அதிகம் புழங்க மாட்டார்கள். தனக்காவின் அழகு அவள் உடம்பிலும் முகத்திலும் வாசனையிலும் மட்டுமே இருப்பதாக ஃபௌசிக்குத் தோன்றும். மகாவின் அழகு அப்படியல்ல. அவள் அழகு குளிர் பிரதேசத்தின் சாரல் மாதிரி. எப்போதும் தூறியபடி அவளுடைய ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கும். தளும்பித் தளும்பித் தீராத பேரழகின் நீருற்றொன்று அவளுக்குள் எங்கோ இருக்கிறது. அவள் அழகு முடிந்துவிட்ட ஒன்றல்ல. மகாவோடு சேர்ந்து அவள் வயதைப் போலவே எவருக்கும் தெரியாமல் தினந்தோறும் வளர்ந்துகொண்டேயிருப்பதைத் தன்னால் மட்டும்தான் இவ்வளவு நுட்பமாக உணர முடிகிறதா?

ஆனால் மகாவிடம் இதைச் சொன்னால், “போடி லூசு.. என்னைவிட அக்காதாண்டி அழகு. காக்கைக்கும் தன் தோழிக் குஞ்சு பொன் குஞ்சு.”

இருபொருள் படும்படி விநோதமாகக் கண்சிமிட்டுவாள். கல்லூரியில் எல்லோருக்குமே மகாவைக் கண்டால் பொறாமையாக இருக்கும். ஆனால் மகாவின் வீடு அந்தப் பொறாமைக்கு எந்த விதத்திலும் தகுதி படைத்ததில்லை. மற்ற பிள்ளைகளின் வீடுகளில் இருக்கிற சாதாரணப் பொருட்கள்கூட அவர்கள் வீட்டில் இருக்காது. தனக்கா தனக்கென்று எதையுமே கேட்க மாட்டாள். மகா நேர் எதிர். வீட்டில் எதையாவது கேட்டு அடம்பிடித்து கெட்ட பெயர் வாங்குவது அவளுடைய அன்றாடத் தொழில். பள்ளிக்குப் போவதுகூட வெறுமனே உபதொழில் மட்டும்தான்.

கர்ம சிரத்தையாக மூத்தவளுக்குப் பேன் பார்த்துக்கொண்டிருக்கும் சின்னத்தாயம்மாவிடம் போய், “ம்மா.. எவ்வளவுன்னு கேட்டு இந்த ஞானம்மன் கோயில் தேரை எனக்கு வாங்கிக் கொடேன்.”

சிணுங்கியபடியே தோளில் சாய்வாள்.

“ம்.. அதுக்கென்ன? வாங்கிரலாம்.. துரைராசு செட்டியார்ட்ட சொல்லி வச்சிருக்கேன். நாளைக்கி மஞ்சப்பைல மகாலட்சுமிய கொண்டு வருவாரு. கூடத்துல கொட்டட்டும். பெறக்கிட்டுப் போயி கோயில் டிரஸ்டி முன்னாடி ஆனஸ்டா துட்டை ஆட்டலாம்.”

“சரி.. அப்ப ஹார்லிக்ஸ் வாங்க நூறு ரூபா காசு கொடு. செட்டியார் அதான் குடிப்பாராம்.”

அம்மா முன்னாடி காசுக்காகக் கை நீளும். சின்னத்தாயம்மா அறிந்தோ அறியாமலோ பலமுறை இப்படி ஆசிர்வதித்திருக்கிறாள்.

“ஒன் வாய்க்கு போற வீட்ல சீப்பட்டு செங்க செமக்கப் போறடீ.”

பாலகிருஷ்ணன் நல்ல சிவப்புதான். ஆனால் மகாவிற்கு முன்னால் தேவியின் சிலையில் கக்கா போவதற்காகக் குத்த வைத்து உட்கார்ந்திருக்கும் வயதான நாரை மாதிரி பரிதாபமாக இருப்பான். மகாவின் அப்பா நவநீதன் வேறு எதையுமே யோசிக்கவில்லை. காரணம் அது மூத்த மருமகனின் தேர்வு. அழகுராசா கொட்டாவி விடுவதற்காக வாயைத் திறந்தால்கூட அவர் ‘தம் குடும்பத்திற்கான தேவ செய்தி’ வரப்போகிற பாவனையில் பவ்யத்தோடு கைகளைக் கட்டிக் கவனிப்பார். ‘மாமா! ஒடனே ஒரு கருங்கல்லைக் குஞ்சில கட்டி கடலில் குதியுங்க’ என்று அவன் விளையாட்டாகச் சொல்லி முடிப்பதற்குள் கடலில்லாத தன் ஊரை நினைத்துக் கொஞ்ச நேரம் கண்ணீர் சிந்திவிடுவார். அந்தளவுக்கு மூத்த மருமகன் மீது விசுவாசம்.

அவருக்கு ஆண்பிள்ளை இல்லை. மூத்த பெண் பிள்ளை பிறந்த உடனே இறந்துவிட தனமும் மகாவும் அடுத்தடுத்து இரண்டே ஆண்டுகளில் வரிசையாய் ஜனித்தார்கள். ருக்மணியம்மா முத்துலாபுரம் சோதிடரை அழைத்து, ‘வம்சம் செழிக்க ஆண் வாரிசு இருக்கா?’ என்று குறி கேட்க, அவர் அவனையும் உட்கார வைத்து சோழியை விதவிதமாய் உருட்டினார்.

“ஒஞ் ஜாதகத்துல ஆம்பளைப் புள்ளைக்கு வழி இல்லடா. பதினாறு பெத்தாலும் குஞ்சுமணிய கண்லகூட பாக்க முடியாது. அடுத்தும் வரிசையா பொட்டைதே. நீ கூத்தியா வெச்சுக்கிட்டாலும் அவ சூலுக்கும் அதேதேன் கதி. நாஞ் சொல்லலை; ஒஞ் சாதகம் சொல்லுது. இன்னொன்னு சொல்றேன்.. மனச விட்ராத. இப்ப இருக்குற ஓங்கட்டத்துக்கு நீ எதைத் தொட்டாலும் வெளங்காது. ராசாவோட கல்லாப்பெட்டியே றெக்கை முளைச்சு ஒங்கைக்கு வந்தாலும் மூதேவி ஃபிளைட்ல ஏறி வந்து டக்குன்னு நக்கிட்டுப் போயிருவா. ஆனா எல்லா கஷ்டமும் ஒன் மூத்த மக கழுத்துல தாலி ஏர்றது வரைக்குந்தே. அந்த மருமவன் ஒனக்கு மகனா வருவான். அழகருக்கு முருகன் மாதிரி. அவன் காலடி பட்ட நாள்ல ஒந்தரித்திரியம் குண்டில போட்ட குசு மாதிரி ‘ப்பூ’ன்னு போயிடும். அவனைக் கெட்டியாப் புடிச்சுக்க. எல்லாஞ் சரியாயிடும். மத்தபடி ஒன் வம்சத்துக்கே என் சோழி தீர்க்காயுசு காட்டுதுடா. நல்லா இருப்பீங்க.”

அந்த நாளில் இருந்தே பாவாடையைக்கூடத் தானாகப் போடத் தெரியாத தனம் புருஷனுக்காக நவநீதன் காத்திருக்கத் தொடங்கினார். அகலிகை பற்றி யாராவது சொல்கிற போதெல்லாம் தன்னையே கதைக்குள் நிரப்பிக்கொள்வார். மருமகன் குறித்த கனவுகளில் ஆழ்ந்து களித்து தாமதமாக எழுந்ததாலேயே செய்த தொழில்கள் எல்லாம் நொடித்துப் போயின.‌ அவர் சோம்பலுக்கும் சேர்த்துச் சம்பளம் தந்து தன் பாவக்கணக்கைக் கரைக்கத் தெரிந்த ஒரு ராவுத்தரின் ஜவுளிக்கடையில் தனக்கான இடத்தைத் தேடிக்கொண்டார். அந்தக் கடைக்கு வேட்டி, சட்டை, துண்டு, ஏன் பனியன் ஜட்டி வாங்க வந்தால்கூட இருபத்தைந்து வயதுக்குக் கீழே இருந்தால் அவருக்கு அது வருங்கால மருமகனின் சொரூபம்தான். யார் வந்தாலும் வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்கிற மாதிரி குனிந்து வளைந்து கடையெல்லாம் பல்லாக நிற்பார். ராவுத்தர் இல்லாத தருணங்களில் மனசுக்குள் கவுளி அடித்துவிட்டால், ‘தம்பி நீங்க கோனாக்கமாரா?’ என்று துணிந்து கேட்டுவிடுவார்.

தனம் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறபோது வயதுக்கு வந்துவிட்டாள்‌. அவருக்கு அதுவரையில்கூடப் பொறுமை இருக்கவில்லை. அவளுக்குப் பன்னிரண்டு வயசு ஆனதில் இருந்து தினந்தோறும் அவர் வீட்டுக்கு வந்த உடனே இப்படித்தான் ஆரம்பிப்பார்.

“இன்னிக்காவது தனம் ஒக்காந்துட்டாளா?”

“அவ ஒக்காந்தா தூமத்துணியோட கட வீதிக்கு வந்து ஒம் மூஞ்சி முன்னாடி ஆராதனை காட்றீ . போதுமா?”

மனைவி அறுத்துக் கிழித்த பிறகுதான் அமைதியானார்‌. எப்போது மாப்பிள்ளை அமைந்தாலும் தனத்தின் படிப்பை உடனே நிறுத்தத் தயாராக இருந்தார். இத்தனைக்கும் மகா மாதிரி தனம் அலட்சியப் பிறவி இல்லை. சூட்டிகையாகப் படிப்பாள். கையெழுத்தும் அவ்வளவு அழகாக இருக்கும். ஆசிரியர்களுக்கு ‘நோட்ஸ் ஆஃப் லெசனெல்லாம்’ அவள்தான் எழுதித் தருவாள். ஆனாலும் அவர் தேடிய ராஜகுமாரன் அவள் கல்லூரி முடிக்கும்வரை தன் குதிரையில் ஏறவில்லை.

அழகுராசாவிற்குப் பார்த்து வைத்திருந்த பெண் பத்திரிகை அடித்த மறுநாளே யாருடனோ ஓடிவிட்டாள்.

“என்ன செய்வீஹளோ, ஏது செய்வீஹளோ தெரியாது. அதே தேதில எனக்குக் கல்யாணம் நடந்தாகணும். எவ்வளவு காசு வேணும்னாலும் கேட்டுத் தொலைங்க. காலடில கொட்டித் தொலையுறீ.”

பணக்கார அழகுராசா கறாராகச் சொல்லிவிட, புரோக்கர் முருகன் நேராக நவநீதன் வீட்டுக்குத்தான் வந்தார்.

“மாப்ள,

இது கிருஷ்ணனோட லீலையாக்கும். அர்ஜூனனுக்காண்டி தங்கச்சி கல்யாணத்தை நிறுத்தினவனுக்கு இதைச் செய்யத் தெரியாதா? மாப்ள பெரிய இடம். கம்பத்துல ரெடிமேட் கம்பெனி வெச்சு பல ஊருக்கு எக்ஸ்போர்ட் பண்றான். அதுலயும் பாரு, ஒங்க சாமி மாதிரியே துணி தர்ற மேட்டரு. ஒத்த புள்ள‌. அப்பா கெடையாது‌. அம்மா மட்டுந்தே. அதும் வயசான கெழவி. ‘கோவிந்தா கோவிந்தா’ன்னு வாசலையே பாத்துக்கிட்டு கெடக்குது. நம்ம தனக்குட்டி ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து மடில போட்டுட்டா தொட்டுத் தடவிப் பாத்துட்டு வாயப் பொளந்துரும். என்ன நாஞ் சொல்றது? பத்தாக்குறைக்கி ஏகப்பட்ட சொத்து இருக்கு. அழகரைத் தேடி வர்ற முருகனை கூறுகெட்டுப் போயி கதவடைச்சி வேணான்ட்ராத. ஊரு ஆயிரஞ் சொல்லும். நம்ம காரியந்தே நமக்கு முக்கியம். காதெ கொடு. ஒரு ரகசியம் சொல்றீ.. ஓடிப்போன பொண்ணு பேரும் தனந்தே. ஆச்சரியமா இருக்குல்ல? பேரு அதுதே. ஆனா சாமி போட்ட முடிச்சுல சோடி வேறல்ல? அதான் ஒங்காளு கிருஷ்ணரு தன் ஆட்டத்தை காட்டிப்புட்டாரு. என்ன இருந்தாலும் கூத்துக்காரச் சாமில்ல?”

புரோக்கர் முருகனுக்குச் சோதிடர் சொன்ன விஷயம் அரசல்புரசலாகத் தெரியும். அந்த நூலைப் பிடித்துவிட்டால் உடனே காரியத்தைச் சாதித்துவிடலாம் என்றுதான் நவநீதனையே தேடி வந்தார். அதனால்தான் மிகச் சரியாக நேரம் பார்த்து அழகர், முருகன் பிட்டைப் போட்டார். அடுத்த நொடியே நவநீதன் தன்னையே பார்த்தபடி தூணைப் பற்றி நின்றிருந்த இளைய மகளை நோக்கி, “மகா! அக்கா போட்டோவ கவர்ல வச்சு எடுத்துட்டு வா” எனத் தெருவெல்லாம் கேட்கும்படி உற்சாகத்தோடு கத்தினார்‌. சின்னத்தாயம்மா ஒரே ஒருமுறை அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு அடுப்பங்கரைக்குப் போய்விட்டது.

2

அக்கா திருமணமாகி நாற்பது நாட்கள் வரை சந்தோஷமாகவே இல்லை என்பதை மகா பௌசியிடம் வந்து சொன்னாள். அப்போது இருவரும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்கள். அம்மா என்னென்னவோ கேட்டுப் பார்த்தும் அக்கா வாயையே திறக்கவில்லை. ஆனால் வாழ்ந்து சலித்தவளுக்குப் புதுப்பெண்ணின் முகரை வகுசி தெரியாதா?

“புதுப்பொண்ணாடி நீயி? மூஞ்சில அருளே இல்ல.’

“……….”

“நான் கேட்டது புரியுதா? மல மாடு மாதிரி பதில் சொல்லாம நிக்கிற?”

“எல்லாம் புரியுது. போயி அடுப்புல வேலை இருந்தா பாருமா.”

“என் வாய அடைச்சிருங்க. கொங்கப்பங்காரன் என்னவோ கருக்கல்ல கெனா கண்ட சீமைல இல்லாத கழுதைய காசு கொடுக்காம கடைவீதில பாத்த மாதிரி நடுவீட்ல தூக்கி வச்சு உருவிவிட்டுட்டு இருக்கான். நீ என்னடான்னா அம்மிக்கல்ல பகல்லயே முழுங்கிட்டு ‘கஷாயம் காச்சுடீ கண்டாரோலி’ங்கிற. என் ஆத்தாமய நா எவ மடில எறக்கி வெக்கிறது? எனக்கு ஒன்னுன்னா நாயம் கேக்க ஆத்தாவா அப்பனா? ஆரு இர்க்கா? கிருஷ்ணன் ஒர்த்தந்தே சொந்தம்னு கெடக்கான். நா அவன்ட்ட போயி அழுகிறீ. நீ பதில் சொல்லாம கவட்டுக்குள்ள மூஞ்சிய வச்சுக் கவுந்தே கிட.”

மூக்கைச் சிந்திச் சேலையிலும் சுவரிலுமாகத் தடவினாள். அம்மா அழுதுகொண்டே கேட்ட கேள்விக்குத் தனக்கா ஒரே மாதத்தில் தொலைபேசி வழியாகப் பதில் சொன்னது.

“எம்மா வாந்தி வாந்தியா வருது. நாக்கெல்லாம் கசப்பாருக்கு.. ஏம்மா?”

சின்னத்தாயம்மா மகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தொலைபேசி வயரை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு ‘ஓ’வென்று பெருங்குரலெடுத்து அழுது ஆக்குப்பாரை புகைக்கூட்டில் கருநீலக் கண்ணன் பொழுதுபோகாமல் புல்லாங்குழலோடு நிற்பது மாதிரியான பாவனையில் அவனைத் திட்டுவது போலவே புகழ ஆரம்பித்தாள். நவநீதனைத்தான் கையிலேயே பிடிக்க முடியவில்லை. காலரை மேலே தூக்கிக் கைச்சட்டையைக் கம்முக்கூடுக்குப் பக்கம் வரை மடித்து ஒரே தோரணையாக அலைந்தார்.

தனக்கா பிள்ளை உண்டான பிறகுதான் குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் எந்திரம், வண்ணத் தொலைக்காட்சி என்று அத்தனை ஆடம்பரப் பொருட்களும் இந்த வீட்டையும் தேடி வந்து அலங்கரித்தன. தொலைக்காட்சி இயக்கியைக் கையில் சுழற்றியபடி சாய்வுநாற்காலியில் உட்கார்ந்துகொண்டே, ‘சின்னத்தாயி.. ஏலக்கா போட்டு ஒரு டீ’ என்று உள்ளே குரல் கொடுத்துவிட்டு, “நமக்கு அவரு மருமகன் இல்ல, மகன். நம்ம புள்ள யார் வகுத்துலயோ பொறந்திருக்குன்னு நினைச்சுக்குவேன். கிருஷ்ணரு என்னா நந்தகோபனுக்கா பொறந்தாரு?” என்று வந்திருப்பவர்களிடம் கதையளக்கவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.

வீட்டில் இத்தனை பொருட்களைப் பார்த்த உடனே சின்னத்தாயம்மாவும் அந்த ‘ஜோசியர் சொன்னது நெசந்தானோ?’ என்று நம்ப ஆரம்பித்தாள். அதுவரை அசட்டையாய் இருந்தவள், அதற்குப் பிறகு மருமகன் வந்தாலே நாணிக் கோணி முந்தானையை இழுத்துக் கழுத்து வரை போர்த்தியபடி, ‘தனம் அவுஹ வந்துட்டாஹ. வெளிய வாவேன்’ என்று அவள் அகராதியிலேயே இல்லாத புதுமொழியில் பேச ஆரம்பித்திருந்தாள். தரகர் சொன்னதைப் போலவே கிழவி தன் பேரனைப் பார்த்த உடனே ‘பல்ராமரே செக்கச் செவீர்னு வந்துருக்காரு’ என்று ஆசிர்வதித்துவிட்டு ஒரே வாரத்தில் கண்களை மூடியது. ‌கைக்குழந்தையை வளர்ப்பதற்காக இங்கே வந்த தனம், எப்போதாவது மட்டுமே தன் வீட்டுக்குப் போனாள்.

அழகுராசா வீட்டில் எல்லோரிடமும் நன்றாகப் பேசுவான். பக்கத்து வீட்டுக்காரர்களோ தனம் வீட்டு ஆட்களோ வந்தால்கூட உறவுமுறை சொல்லித்தான் கூப்பிடுவான்.

“சின்னாத்தா.. காலு எப்டி இர்க்கு? மெடிக்கல் ஷாப்புல ஆயின்மெண்ட் வாங்கியாரட்டா?”

நவநீதனுக்கு மூனுவிட்ட தங்கையைக்கூட அக்கறையாக விசாரிப்பான். ஆனால் மகாவிடம் பேசுவதேயில்லை. எப்போதாவது அவளே வலிந்து பேசினாலும் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் தலையைக் கீழே போட்டுக்கொள்வான். ஏதாவது கேட்கப்போனால், ‘ம்’, ‘சரி’, ‘வச்சிரு’ என்பான். இதற்கு மேல் பதில் வராது. இத்தனைக்கும் அவன் அனுமார் பக்தனோ ஏக பத்தினி விரதனோ இல்லை. தனக்காவின் தோழிகளோ கொழுந்தியாள் முறைகொண்ட உறவுக்காரிகளோ வந்தால் அப்படிக் கொட்டமடிப்பான். அவர்களும் வந்த உடனே கண்ணை அங்குமிங்கும் சுழலவிட்டு அவனைத்தான் விசாரிப்பார்கள். எந்த இடத்திலும் அவனைச் சுற்றிப் பெண்கள் கூட்டம் சிரித்தபடி வழிந்து நிற்பதை மகாவே பலமுறை பார்த்திருக்கிறாள். மகா மீதான அவன் அசட்டைக்கு வழக்கம் போல் நவநீதன் மட்டும் விநோதமான அர்த்தத்தைக் கற்பித்துக்கொண்டார்.

“பொட்டப்புள்ள வயசுக்கு வந்து இத்தனை நாளாகியும் கழுத்துல தாலி ஏறலேங்கிற தகப்பனோட கவலை எம் மாப்ளைக்கு. சின்னவள மஹ ஸ்தானத்துல வச்சு பாக்குறார்டீ” என்று அவ்வப்போது சின்னத்தாயிடம் நெகிழ்வார். அவளுக்கு இது புருஷனைப் பிடித்திருக்கும் நெடுநாள் பைத்தியத்தின் மற்றுமொரு உளறல் என்று நன்றாகத் தெரியும். ஆனாலும் சின்னத்தாயம்மா அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை.

“அவகிட்ட இருக்கிற ஏதோ ஒரு கொணம் அவுஹ மனசுக்குப் பிடிக்காம இருக்கலாம். காலாகாலத்துல இவளையும் அடக்கி ஆள ஒரு ஆம்பள வந்தா எல்லாஞ் சரியாயிடும்” என்று நினைத்துக்கொண்டே ‘பொழப்ப பாப்போம்’ என்றபடியே கீரையோ காயோ அரிய அரிவாள்மனையைத் தூக்கி வைத்துக் கூடத்தில் அமர்ந்துவிடுவாள்.

பக்கத்து வீட்டுச் சாந்தி உடையார் கிறிஸ்தவனோடு ஓடிப்போன அன்று அழகுராஜா கொதிப்பாகவே இருந்தான். அப்படி ஒரு கோபத்தை அதுவரை அவனிடம் எவரும் கண்டதில்லை.

“மாமா! மகாவையும் காலேஜ்ல இருந்து நிப்பாட்டிரலாம்‌. காலம் கெட்டுக் கெடக்கு. புத்துக்குள்ள கெடந்த பாம்பெல்லாம் இப்ப நடுவீட்ல ஏறி படுக்கையை மோந்து பாக்க ஆரம்பிச்சிடுச்சு”.

நவநீதனுக்கு மருமகனை மறுத்துப் பழக்கமேயில்லை. 

“அதுவுஞ் சர்தே மாப்ள.”

சின்னத்தாயிக்குக் கணவனின் அவசரம் பிடிக்கவில்லை என்றாலும் மருமகன் முன்னால் குரல் உயர்த்தக் கூடாதென்று அமைதியாயிருந்தாள். மகாவுக்கு முதன்முதலாக மாமாவின் மீது பயங்கரமாகக் கோபம் வந்தது. ‘இந்தாளு யாரு என் படிப்பை நிறுத்த?’ என உதட்டைக் கடித்து ஆத்திரத்தை மட்டுப்படுத்திக்கொண்டாள். தனம்தான் புருஷனை நோக்கி நல்ல பாம்பைப் போல் சீறிக்கொண்டு வந்தாள்.

“எவளோ ஒருத்தி புத்தி கெட்டு ஓடிப்போனதுக்கு எந்தங்கச்சி ஏன் படிக்காம இருக்கணும்? ஒங்க தங்கச்சின்னா இப்பிடி சந்தேகப்படுவீஹளா? நீங்க படிக்க வைக்கீறஹன்னுதானே நாக்குல பல்லு போட்டு இப்பிடி ஈனத்தனமா பேசுறீஹ? என் நகையை வித்து நானே படிக்க வைக்கிறேன் கடைசி வரை… ஆமா சொல்லிப்புட்டேன் கடைசி வரை.. இனி ஒங்க நாறக்காசு அவளுக்கு வேணாம்.”

தனம் கோபப்பட்டு ஏதாவது சொல்லிவிட்டால் அழகுராசா எப்போதும் மறுவார்த்தை பேச மாட்டான். அது அரிதான ஒன்றென்று அவனுக்கே தெரியும். மௌனமாக உள்ளே போய்விட்டான்.

மாமாவுக்கு முதலில் பார்த்து திருமணத்துக்கு முன் ஓடிப்போன அந்தப் பெண்ணைப் பற்றித் தோழிகள் என்னவோ கேட்க, மகா எந்த உள்நோக்கமும் இல்லாமல் விளையாட்டாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். சரியாக அந்த நேரத்தில் அழகுராசா வீட்டுக்குள் வந்தான். அப்போதே கொஞ்ச நேரம் வெளியே நின்று ஒட்டுக்கேட்டுவிட்டு உள்ளே வந்தது மாதிரிதான் மகாவுக்குத் தோன்றியது. தனத்திடம் என்ன சொன்னாரென்று தெரியவில்லை. அக்கா அடுத்த தடவை வந்தபோது அவளிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. மாமா இப்படியொரு சந்தர்ப்பத்திற்காகத்தான் கொக்கைப் போல் காத்திருந்திருக்கிறார் என்பது மட்டும் மகாவுக்குப் புரிந்தது. அக்கா பேசாமல் இருக்கிற வருத்தத்தோடு மாமா தன்னைப் பற்றி அவளிடம் என்ன சொல்லியிருப்பார் என்கிற விஷயம் மனதைக் கூடுதலாக அறுத்துக்கொண்டிருந்தது.

யாருமில்லாமல் அவள் மட்டும் தனித்திருக்கும் தருணங்களில் மாமா உள்ளே வந்தால் அடுத்த நொடியே எந்தச் சத்தமும் இல்லாமல் வெளியே போய்விடுவார். ‘வாங்க மாமா’ என்று இவளே வாசலுக்குப் போய் அழைத்தும்கூடப் பதிலே சொல்லாமல் கொஞ்சம் நேரம் ‘வெறுக் வெறுக்கென்று’ திண்ணையிலேயே உட்கார்ந்திருந்துவிட்டு திடீரென்று செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பிப் போய்விடுவார். சில சந்தர்ப்பங்களில் இவள் பக்கத்தில் அமர்கிற மாதிரி சூழல் உருவானால் அடுத்த நொடியே விசுக்கென எழுந்துவிடுவார். ஒரே ஒருமுறை உடை மாற்றும்போது தெரியாமல் அறைக்குள் வந்து, இவளுக்கு நிகழ்ந்தது என்னவென்று புரிவதற்குள் மின்னல் மாதிரி சட்டென்று வெளியேறிவிட்டார். அதற்குப் பின் மூன்று மாதம் வீட்டுப் பக்கமே வரவில்லை‌‌.

“மாமாவை புரிஞ்சுக்கவே முடியல பௌசி” என்று மகா புலம்புகிற போதெல்லாம் ஃபௌசி ஏதோ சொல்ல வாயெடுத்துச் சட்டென்று அமைதியாகிவிடுவாள். ஃபௌசி ஒரு புகைப்படத்தை மகாவிடம் காட்டி, “ஏண்டி.. மாலயுங் கழுத்துமா தனக்கா பக்கத்துல நிக்கயிலயே, குத்துவிளக்கைத் தூக்கிட்டு நிக்கிற ஒன்னய ஏண்டி பசில இருக்கவன் பன்ன பாத்த மாதிரி அந்தாளு அப்புடி பாக்குறாரு?” என்று அடிக்கடி கேட்பாள்.

உண்மையில் அந்தப் புகைப்படம் அப்படித்தான் இருக்கும். ஆனால் மகா அதை இப்படி ஓர் உள்ளர்த்ததோடு எப்போதும் யோசித்ததில்லை. “ஐஸ்வர்யா ராய் குத்து வெளக்கத் தூக்குனா அப்துல்கலாமா இருந்தாலும் பிரம்மச்சாரி பதவிய ரிசைன் பண்ணித்தானே ஆகணும்?” என வழக்கம் போல் விளையாட்டாகப் பதில் சொல்லிக் கடந்துவிடுவாள். ஆனால் அந்தப் பார்வை சாதாரணப் பார்வையில்லை என்பது இப்போதுதானே புரிகிறது? கண்டதும் யோசனையாய் வந்து மண்டைக்குள் மொய்க்க ஒரே ஒரு நொடி சுவரில் மாட்டியிருந்த தனம் புகைப்படத்தை வெறிப்பது போல் பார்த்துவிட்டு எதுவுமே நிகழாதது போல் மகா மருதாணி போடப் போனாள்.

3

மகாவுக்கு இருபது சம்பந்தமாவது பார்த்திருப்பார்கள். அத்தனையும் நின்றுபோனதற்கு மாமா மட்டுமே காரணம். ஆனால் அதை வீட்டில் அக்கா உட்பட எவருமே அறிந்திருக்கவில்லை. அவர் அவ்வளவு நுணுக்கமாக ஆட்டையைக் கலைத்தார். ‘மாமா எதை மனதில் வைத்து இப்படியெல்லாம் செய்கிறார்?’ என்பதை அவளால் இப்போது வரையிலும் ஊகிக்கவே முடியவில்லை. திருமணம் தொடர்ந்து தள்ளிப்போனதால் பரிகாரத்துக்கென்று மாமா அழைத்துவந்த இரண்டு சோதிடர்களுமே ‘இவ ஜாதகத்தில பெரிய கண்டம் இருக்கு. கண்டிப்பா கட்றவனுக்கு ஆபத்து’ என்று அடித்துச் சொன்னார்கள். இந்தச் செய்தியைத் துணைக்கோளின் தயவின்றியே ஊர் மறுஒளிபரப்புச் செய்ய, இருபத்து ஐந்து வயது வரை மகா கன்னியாகவே வீட்டில் இருந்தாள். அவளுக்கு என்ன காரணத்தாலோ காதல் மீதும் வெறுப்பு உருவாகியிருந்தது. அது காதல் மீதான வெறுப்பில்லை; மாமாவை முன்னிட்டு ஆண்கள் மீது உருவான வெறுப்பென்று உணர்வதற்குள் மனதளவில் மரத்துப் போயிருந்தாள்.

பாலகிருஷ்ணனை மாமாதான் வீட்டுக்கு அழைத்து வந்தார். அவனை முன்பே பார்த்த ஞாபகம் இருந்தது. ஆள் நல்ல சிவப்பு. படிய வாரிய தலையும் மடித்துவிட்ட வெள்ளைச் சட்டையும் நெட்டையான ஸ்கேல் வடிவத்தில் ஒரு விநோதமான ‘பழம்’ பழுத்துதிர யாரோ பாவப்பட்டு வேட்டி சட்டை மாட்டிவிட்ட மாதிரி இருந்தான். வெளக்கெண்ணெய் அபிசேகம் செய்தது மாதிரி ஒரு முகம். ‘நீங்க ஃபிரீயா இருந்தா என்னையக் கொஞ்சம் ஏமாத்திட்டுப் போங்களேன்’ என்று பார்க்கிறவர்களிடமெல்லாம் கோரிக்கை வைக்கிற அசட்டுத்தனமான கண்கள்.

அவனும் கிட்டத்தட்ட அழகுராசா போலத்தான். அப்பா, அம்மா இருவருமே பேருந்து விபத்தில் ஒன்றாய்ப் போய்ச் சேர்ந்துவிட, சித்திதான் தண்டச்சோறு போட்டாள். சின்ன வயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, கம்பெனிக்கு வந்து அழகுராசாவின் கால்களில் தஞ்சமடைந்துவிட்டான். பிசிறு வெட்ட வந்தவன், இப்போது பார்சலைத் தூக்கிக்கொண்டு கேரளாவுக்கு லயன் போவது வரை தொழில் பழகிவிட்டான். மருமகன் கூட்டி வந்த வரதட்சணை கேட்காத மாப்பிள்ளை, ‘ஜாதகம் குறித்தெல்லாம் கவலையில்லை’ என்று வந்த உடனே சொன்னதும் வீடு நீண்ட நாட்களுக்குப் பின் பெருமூச்சுவிட்டது. அந்த ஆசுவாசத்தில் எவருக்குமே அவளுடைய நல்லது, கெட்டது பற்றி யோசிக்கக்கூடத் தோன்றவில்லை. மகா கழுத்தில் தாலி ஏறியபோது தற்செயலாய்ப் பின்னால் நின்றிருந்த மாமாவைப் பார்த்தாள். மாமா இவளைப் பார்த்துக்கொண்டே அட்சதை அரிசியைச் சாவகாசமாக மென்றுகொண்டிருந்ததை அவளைத் தவிர வேறு எவரும் கவனிக்கவில்லை.

முதலிரவு அறைக்குள் பாலகிருஷ்ணன் உள்ளே வருகிறபோது துணி பண்டல் நாற்றம் அடித்தது.

“நீ பால் கொண்டு வரலையா?”

“அடுப்படில இருக்கு.”

“இல்ல சினிமால..”

அவன் எதையோ சொல்ல வருவதற்குள் தொலைபேசி ஒலித்தது. ‘நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாருமில்லை’ என எஸ்.பி.பி முதலிரவு அறைக்குள் நேர காலம் தெரியாமல் பாட, எரிச்சலோடு அதை அணைத்தாள். மாமாதான் அழைத்திருந்தார் போலிருக்கிறது. அவளால் கொஞ்சம்கூட விளங்கிக்கொள்ள முடியாத தொழில்முறைச் சொற்கள் காதில் விழுந்து எரிச்சலூட்டின. ஒவ்வொரு சொல்லுக்கும் நடுவே ‘சரிங்கண்ணா’, ‘ஆமாங்கண்ணா’, ‘நெசந்தாங்கண்ணா’, ‘நீங்க சொன்னா ஓகேண்ணா’, ‘சொல்லிடறங்கண்ணா’ என்று அவன் ஆதி பவ்யத்தின் மானுட வடிவமாகவே மாறியிருந்தான். எதிர்முனையில் மாமா குரல் கேட்கிற போதெல்லாம் நாற்காலியில் இருந்து சடாரென்று எழுந்துகொண்டான். ‘அண்ணா.. சரியா எத்தனை மணிக்கு இவ சேலையை அவுக்கட்டும்?’ என்பதை மட்டும்தான் மாமாவிடம் அவன் கேட்கவில்லை. ஒரு வலைக்குள் நுணுகி நுணுகி இழைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான கண்ணிகளுக்குள் தான் மட்டும் ஈரம் சொட்டச் சொட்டத் துள்ளியபடி கிடக்க, துள்ள முயலும் வாலை மாமா அழுத்திப் பிடித்திருப்பதாக மகா உணர்ந்தாள். எதிலிருந்து தப்பினாலும் துரத்துகிற ஆளின் மீதே மோத முடிகிற முடிவற்ற சுழல் பாதை அவளுக்கு முன்னால் விரிந்து வாரிச் சுருட்டி தனக்குள் போட்டுக்கொண்டபோது மெதுவாக முள் நகரும் கடிகார ஓசையின் பயங்கரம் தாளாமல் காதுகளைப் பொத்திக்கொண்டாள்.

பாலகிருஷ்ணன் யாரென்று சில மணி நேரங்களிலேயே தெரிந்துபோனது. அந்தக் களிமண் பொம்மை மண்டைக்குள் வேறு எதுவுமில்லை. இன்னொருவர் உள்ளுக்குள் கையைவிட்டுச் சாவி கொடுப்பதற்கான ஒரு சதைத்துளை மட்டுமே எஞ்சி இருக்கிறது. அவனுக்கு அதைத் திருக ஒரு ஆள் வேண்டும். அவன் வாழ்வின் மொத்தத் தேடலும் ஒரு சாவி கொடுக்கும் கரம் மட்டும்தான். முன்பு சித்தியாக இருந்திருக்கலாம். இப்போது மாமா. நாளையே நாம் சாவி கொடுத்தாலும் அந்த அசட்டுத் தலை ஆடும்தான். ஆனால் மாமா விடுவாரா? மகாவுக்கு யோசிப்பதற்கே பயமாக இருந்தது.

திருமணத்தில்கூட அக்கா தன்னோடு பேசவில்லை. கண்களில் நீர் வழிய அழுதுகொண்டே தூரத்தில் நின்று அட்சதை போட்ட அக்காவைப் பார்த்தபோது, காலையிலிருந்து படர்ந்திருந்த சொல்லத் தெரியாத வெறுமையையும் தாண்டி விநோதமாக மனம் துள்ளியது. அவள் இயல்புப்படி தனத்தைப் பார்த்து யாருக்கும் தெரியாமல் கண்ணடிக்க, அவள் பொங்கி வரும் சிரிப்பை மறைக்க முயன்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

‘ஒரு நிமிஷம்.’

கசப்பூட்டும் இளிப்போடு அவளைப் பார்த்துக்கொண்டே பாலகிருஷ்ணனே வேறு யாரையோ அழைப்பதற்காக மீண்டும் தொலைபேசி டயலைச் சுழற்றினான். அவன் ஜவுளி உலகத்தின் சில்லறைக் கணக்கிலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்து மலையாளம் கற்காமலே வண்டியேறப் போகும் பண்டல் வாடையிலிருந்தும் மீண்டு, ‘தானொரு புது மாப்பிள்ளை’ என்பதை உணர்ந்து அந்த அறையில் கால் பாவியபோது, மகா நெஞ்சுக்குக் குறுக்கே கைகளைக் கட்டியபடி மின்விசிறிகூடப் போடாமல் முகமெல்லாம் வியர்க்கத் தூங்கிப் போயிருந்தாள்.

“வாலி பட அஜீத் மாதிரி ஒம் புருஷன தொட விடாம அவனே அனுபவிக்கணும்னு நினைக்கிறானா? சைக்கோப் பய.”

ஃபௌசி கத்தியபோது, “தப்பா பேசாதடி. கல்யாணத்துக்கு அப்புறமும் மாமா அதே மாதிரி ஜென்டில்மேனாதான் இருக்கார்” என்றாள் மகா.

“ஜென்டில்மேனோ? குஞ்சுமோனோ? ஆம்பளப் புத்தி ஒனக்கு சரியா தெரியாதுடி.. நா ஏதாவது சொல்லிறப் போறேன்.. சும்மா கெட”.

“…………….”

“இப்பவாவது இத வீட்ல சொல்லுடி. நா வேணா தனக்காட்ட பேசட்டுமா?”

“லூசு மாதிரி ஏதாவது செஞ்சுராதடி.. கெஞ்சிக் கேக்கிறேன்.”

மகா எழுந்தோடி சேலை நழுவ அவள் கால்களில் விழப்போனாள்.

“இப்ப ஏன் இவ்வளவு பதர்ற? நீ எந்த விஷயத்துக்கும் இப்பிடி டென்சனாயி நா பாத்ததே இல்லியே?”

மகா எதுவும் பேசாமல் எங்கோ வெறித்துக்கொண்டிருந்தாள்.

“சரி சொல்லல.”

“ப்ராமிஸ்?”

“ப்ராமிஸ்.”

“அல்லா பிராமிஸ்டி?”

“இல்ல.. மகா பிராமிஸ்.”

மகா முகத்தில் வழக்கமான சிரிப்பைப் பார்த்த பிறகுதான் ஃபௌசி சற்று சமாதானமடைந்தாள்.

“நா ஒன்னு கேட்கிறேன். நீ தப்பா எடுத்துட்டாலும் பரவால்ல. நீ ஏன் அந்தாளைக் காப்பாத்த இந்தப் பாடுபடற? ஒங்க மாமா மேல எதும் கிரஷ் இருக்கா?”

மகா எழுந்து புடவையைச் சரிசெய்துகொண்டே ஃபௌசி தோளில் செல்லமாக அடித்தாள்.

“எனக்கு எல்லா ஆம்பள மேலயும் கிரஷூதான். எங்க சாமியோட பொம்பள வடிவம் நானு. போதுமாடி?”

அந்தக் கொல்லிவாய் சோதிடர் என்றோ வரப்போகும் மூத்த மருமகன் குறித்துப் பேசியதில் இருந்து அவள் அப்பா நவநீதன் வேறொரு ஆளாகியிருந்தார். அவருக்குத் திடீரென்று எல்லா விதத்திலும் ‘தனம்தான் உசத்தி’ என்றாகியிருந்தது. வீட்டிற்கு என்ன வாங்கி வந்தாலும் தனத்திற்கு மட்டும் ரெண்டு மடங்காகக் கையில் இருக்கும். மொத்தமாகத் தனத்தின் கையில் கொடுத்து, ‘நீயே சின்னவளுக்கும் கொடும்பார்’. தனம் யாரும் சொல்லாமலேயே அனைத்தையும் இரண்டாகப் பகிர்ந்து தங்கைக்குக் கொடுப்பாள்.

“ஜோசிய மயிர்லாம் விடுறீ. அவகிட்ட இருக்கிற அந்தக் கை நீளம் ஒங்கிட்ட இருக்கா? நீ பொறப்புலயே காஞ்ச சிறுக்கிடீ.”

அம்மாவும்கூட மகாவைத்தான் கரித்துக் கொட்டுவாள். காய்ச்சல் வந்து மதிப்பெண் குறைந்ததற்காகத் தனத்தைச் சின்னத்தாயி திட்ட முனைந்தபோது, “அந்த வக்கத்த வாத்தியான் போடற ஒன்னுக்கும் ஆகாத மார்க்குதே ஊருக்கே படியளக்கப் போற எந்தனம் மடிய நெப்பப் போகுதோ?”

சம்பந்தமில்லாமல் கத்திய நவநீதன் தனத்தை உட்கார வைத்துப் பெரும் பாசத்தோடு தலையைத் தடவிக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் மகா வேண்டுமென்றே குறைந்த மதிப்பெண் வாங்கினாள். அக்காவைப் போல் வீட்டு வேலையை ஒழுங்காகச் செய்யாமல் சோம்பேறி மாதிரி நடித்தாள். தனம் மாதிரி அளந்து பேசாமல் வலிந்து வாயடித்து எல்லோரிடமும் கெட்ட பெயர் வாங்கினாள். ஆனால் எல்லாம் வீட்டில்தான். பள்ளியில் அவள் அனைவராலும் கொண்டாடப்படும் வேறொரு ஆள். அந்த முகம் வீட்டில் எவருக்கும் தெரியாது. பள்ளி நாடகத்தில் மாதவியாக நடித்து தலைமையாசிரியர் உள்ளிட்ட எல்லோரின் பாராட்டைப் பெற்றுப் பரிசோடு வந்தபோது, “நீ இங்க போடற நாடகம் பத்தலையாக்கும்? ஊரே பாக்க மேடைலயும் வேற ஏறி குடும்ப மானத்தைச் சந்தி சிரிக்க வைக்கப் பாக்குறியா?” என்கிற குத்தல் பேச்சோடுதான் வீடு வரவேற்றது.

அவள் ஆங்காரத்தோடு சில்வர் தட்டை வீசியெறிய, அது எதிர்பாராமல் தனத்தின் கால்களில் பட்டு ரத்தம் கசிந்தது. ருக்மணி பாட்டி உட்பட வீடே சேர்ந்து அவளைக் கும்மியெடுத்தது. தனம்தான் ரத்தக்காலோடு வந்து தங்கையை அணைத்துக்கொண்டாள். மகா அக்காவின் கையை உதறி எழுந்துபோய் சாப்பிடாமலே வெறும் தரையில் தலையணைகூட இல்லாமல் படுத்தபோது, தெருவே அவளை ‘ராங்கிக்காரி’ என்று திட்டிவிட்டு, ‘எந்த மவராசி மாமியாவா வந்து இவ காலை ஒடிச்சு வெறகாக்கி வெந்நி வைக்கப் போறாளோ?’ என இரக்கமே இன்றி நொடித்துப் பேசியது.

சில தருணங்களில் நவநீதன் கொண்டுவந்த பண்டங்களை மூர்க்கமான பிடிவாதத்தோடு அவளே எடுத்து அக்காவுக்குத் தந்தபோதும் செமத்தியாக அடி விழுந்தது. அந்த மாதிரி நேரங்களில் மட்டும் சின்னத்தாயம்மா பருந்திடமிருந்து குஞ்சைப் பாதுகாக்கும் தாய்க்கோழியைப் போல் சீறி வருவாள். ஆனால் அம்மாவின் கைகளை விலக்கிவிட்டு பலிபீடத்தில் தானே வந்து அமர்ந்துகொள்ளும் ஆட்டைப் போல் மகா மௌனமாக நிற்பாள்.

தங்கைக்கு அடி விழும்போதெல்லாம் தனம்தான் தேம்பித் தேம்பி அழுவாள். மகா கல் மாதிரி அப்படியே நிற்பாள்.

“அங்க பாரு, ஒனக்கு அடி விழறதுக்கு அவ கெடந்து தவியா தவிக்குறா. நீயும் இருக்கியே? ஒரு கல்லையாடி ஈரக்கொலைல சொமந்து பெத்து நா சீப்படுறீ?”

அம்மா மூக்கைச் சிந்தி அவள் மீது துடைக்க வருகிறபோது மகா அசூயையோடு விலகி உள்ளே போய்விடுவாள்.

5

இந்த வாரம் மகா நான்கு நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்திருந்தாள். அவள் விடுமுறையைத் தேவையில்லாமல் வீணாக்குகிறவள் இல்லை. பள்ளிக்கு வந்தபோது முகமெல்லாம் வீங்கியிருந்தது. கண்களில் சுரத்தே இல்லை. ஃபௌசி ஓரளவு காரணத்தை ஊகித்திருந்தாள். மதியம் வரை அவள் ஃபௌசியின் அருகில்கூட வரவில்லை. உணவுப்பொதியைத் தூக்கிக்கொண்டு தனியே சென்றபோது ஃபௌசியால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

“ஏண்டி இப்பிடி பண்ற?”

“ஏன் பண்றீன்னு தெரியாதா ஒனக்கு?”

“ஒன் நல்லதுக்குத்தே…”

“வாய மூட்றி.. அல்லாவவிட மகாதான் பெருசுன்னு என் மேலதான அன்னிக்கு சத்தியம் பண்ண? விடு நா அழிஞ்சு மண்ணா போறேன். எனக்கென்ன புதுசா?”

“அக்காட்ட மட்டுந்தேண்டி ஃபோன்ல சொன்னீ.”

“மயிரு, அக்காட்ட மட்டும்.. அவதாண்டி வெனயே. புள்ளைய தூக்கிட்டு விசுவிசுன்னு பஸ்ஸேறி வந்துட்டா. இனி திரும்பியே போக மாட்டாளாம். என்னை மாதிரி மழுமட்ட இல்லடீ அவ. அழுத்தக்காரி. இப்ப வரைக்கும் என்ன ஏதுன்னு யார்ட்டயும் ஒத்த வார்த்தை சொல்லல தெரியுமா? என்கிட்ட கூட. ஆனா வந்த ஒடனே ‘மகா மகான்னு’ ஓன்னு கத்திட்டே எங்கால்ல விழுந்தாடி. பாவிமக… எனக்கு பொக்குன்னு ஆயிருச்சு… எல்லாம் உன்னால. உன்னைய எதுக்கு நா சொல்லனும்? எல்லாம் என்னால.. என்னால… என்னாலதான்.. ஆனா பாவம்டி அந்தாளு.”

“என்னது பாவமா.. நீ தெரிஞ்சுதே பேசுறியா?”

“ஆமா.. ஆமா.. தெரிஞ்சுதேண்டி பேசுறே.. ஒனக்குத்தான் நடந்தது எதுவுந் தெரியாம ஒளறிக்கொட்டி வச்சிருக்க. மாமாவுக்கு புரோக்கர்ட்ட கொடுக்க அன்னிக்கு என்னைதான் அப்பா ஃபோட்டோ எடுத்துத் தரச்சொன்னாருன்னு காலேஜ் படிக்கிறப்ப சொல்லிருக்கீன்ல உன்ட்ட?”

“ம்.”

“நா எடுத்து கவர்ல வச்சது அக்கா ஃபோட்டோ இல்லடி. எம் ஃபோட்டோ.”

ஃபௌசி திகைத்துப் போய் தரையில் சரிவது போல் அமர்ந்தாள். இதுவரை அவளறிந்த உலகம் அப்படியே உதிர்ந்து பூமிக்குள் போய்விட, வேறொரு புது உலகத்தில் முகமறியாத ஒருத்தியோடு நிற்பதைப் போல் உணர்ந்தாள். கொஞ்ச நேரம் அதே கோலத்தில் மௌனமாக இருந்தவள் குரல் நடுங்கக் கேட்டாள்.

“நீ ஏன் அப்படி செஞ்ச?”

“சத்தியமா அப்ப எந்த இண்டன்சனும் இல்ல.”

“அப்புறம் ஏண்டி?”

“தெரியலையே… தெரியலையே.. தெரியலையே.”

மகா தன் கைகளால் மாறி மாறி தலையில் அடித்தாள். அவள் மொத்த வாழ்விலும் இல்லாத அதிசயமாய் தன் கண் முன்னால் கதறி அழும் மகாவைத் தடுக்கவோ தேற்றவோ முனையாமல் அப்படியே விட்டுவிட்டு ஃபௌசி எந்தச் சலனமும் இல்லாமல் தன் எச்சில் தட்டோடு குழாயை நோக்கிப் போனாள்.

4 comments

பிரோசு December 30, 2022 - 4:01 pm

‘பெரிய’ சிறுகதை
மகாவின் குணாதிசியம் முன்னரே யூகிக்க முடிந்தது.

முனைவர்.சு.சங்கீதா December 31, 2022 - 10:03 pm

படிப்போரை நகராமல் இருக்க வைக்கும் அற்புதமான கதை. மகா என்ற கதாபாத்திரத்தை தத்ரூபமாக கண் முன் நிறுத்தி விட்டீர்கள்…அருமை👏👏👏

பூச்செல்வி January 2, 2023 - 7:37 pm

அனைத்து கதாபாத்திரத்தையும் கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள் மிகவும் அருமை தோழரே

லெட்சுமி நாராயணன் பி January 3, 2023 - 12:03 pm

நல்ல கதை. நன்றிகள்.

Comments are closed.