நாவல் மரம் – மோனிக்கா அரேக் தே நியாக்கோ

1 comment

நீ தாயகம் திரும்புகிறாய் என்னும் செய்தியை நமது பக்கத்து வீட்டு மம்மா அத்திம் சொல்லக் கேள்விப்பட்டேன். அவரை உனக்கு நினைவிருக்கிறதல்லவா? நாமிருவரும் கைகளைக் கோர்த்துக்கொண்டோ, குதித்தபடியோ, ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டோ பள்ளிக்குச் செல்லும் வழியில் அவரைப் பற்றிப் பேசியவாறே செல்வோம். மக்காச்சோளத்தை மொய்க்கும் எறும்புகள் போல அவரது வாய் வார்த்தைகளின் மீது இயங்கிக்கொண்டே இருக்கும். ஒஹ்! அவருடைய ஓயாத க்வாக்- க்வாக்- கவாக்- வாயைப் பற்றித் தெரிந்திருந்தாலும் தன்னுடைய இயந்திரத் துப்பாக்கி போன்ற வாயால் படபடவென வார்த்தைகளைப் பொழிந்து அதன் மூலம் அவர் நிகழ்த்தும் அழிவைக் கண்டு அனைவரும் பேச்சிழந்து நிற்பார்கள். அவருக்கு நாம் பேராசிரியர் எனப் பட்டப்பெயர் சூட்டியிருந்தோம். பேராசிரியரைப் போல மேடை மீது நின்று, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற  தன்னம்பிக்கையுடன் திறமையைப் பறைசாற்றுவது போல அந்தப் பெண்மணி பேசுவார்.

நீ திரும்பி வரும் விஷயம் அவருக்கு எப்படித் தெரிந்ததென்று நீ ஆச்சர்யப்படுவாய் என நன்றாக அறிவேன். சில யூகங்களைக்கூடச் செய்ய முடியும். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அப்படிச் செய்தால் நான் உனக்குக் கொடுத்த வாக்கைத் தவற வேண்டியிருக்கும். அதை நான் வெறுக்கிறேன். அவரைப் பொருட்படுத்தக் கூடாதென்றும் அவரால் நாம் பாதிக்கப்படக் கூடாதென்றும் சபதம் எடுத்துக்கொண்டோம். அந்த இரவுக்குப் பின் அப்படித்தான் பேசிக்கொண்டோம். நம்மால் எப்போதுமே மறக்க முடியாத இரவு அது. அதன் பின் என்னிடம் விடைபெறாமல்கூட நீ சென்றுவிட்டாய். அது அப்போதைய நிர்ப்பந்தம்  என்பதை நான் புரிந்துகொண்டேன். ஒருவேளை, அதுதான் இருவருக்குமே நல்லதோ என்றும் நினைத்துக்கொண்டேன். அப்படியே அந்த விஷயம் மங்கி மடிந்து விட்டிருக்கக்கூடும். ஆனால் எதுவும் எப்போதும் மறைவதில்லை. நம்மிருவரின் பெயரும் தடை செய்யப்பட்ட ஒரு விஷயத்தோடு காலத்துக்கும் இணைந்துவிட்டது. அவமானம்.

அன்யாங்கோ-சன்யூ

அந்த இரவைக் கடந்து வெளிவந்து விட்டார் என் அம்மா. சில நாட்கள் எடுத்தன, இருப்பினும் அவரால் முடிந்தது. உன்னுடைய அம்மாவும் அப்படி இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர் மீது புழுதி வாரித் தூற்றிச் சிரிக்கும் பெண்களின் முகத்திலேயே அதைத் திரும்பப் பூசிவிட்டு அவர்கள் குடியிருக்கும் வீட்டைக் கடந்து செல்கையில் தலை நிமிர்ந்து கம்பீரமாக நடந்து செல்ல வேண்டும். 

நக்காவா குடியிருப்பு வளாகம் எப்போதும் மாறுவதேயில்லை. அது குலைந்து போன கனவுகளை உடையவர்களும், வாழ்வைச் சரியாகத் திட்டமிடாத  குடும்பத்தினர்கள் அக்கம் பக்கத்தினராக  இருப்பதற்காகவே கட்டமைக்கப்பட்ட சேரிப் பகுதி என நமது சமூக அறிவியல் ஆசிரியர் மிஸ்டர்.வங்கோலோ ஒருமுறை குறிப்பிட்டார். ஒரு ஏக்கர் நிலத்தில் ஓராயிரம் குடும்பங்கள் வசிக்கும் இந்த நக்காவா குடியிருப்பை இன்னும் வளாகம் என்று சொல்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலான பெண்கள் பணிக்குச் செல்வதில்லை. மம்மா அத்திமைப் போல உட்கார்ந்து பேசிப் பேசி நேரத்தை ஓட்டிக்கொண்டு தங்கள் கணவன்மார்கள் கொண்டுவரும் ஒரு கிலோ ஈரல் கறிக்காகக் காத்திருப்பார்கள். அந்தப் பெண்களைப் போல வாழ்க்கையை ஓட்ட நாம் விரும்பவில்லை. சருமத்தை வெளுப்பாக்கும் மெக்காக்கோ சோப்பைக் கொண்டு சூரிய ஒளியில் காய்ந்த குழந்தையின் சருமம் போல மென்மையாகவும் வெளுப்பாகவும் மாறும் வரை தங்களைச் சலவை செய்வார்கள். கோலிக்குண்டு விளையாட்டிலும், எறிபந்து விளையாட்டிலும் குழந்தைகளுக்கிடையே எழும் சில்லறைத் தகராறுகளை அவர்கள் கையிலெடுத்துக்கொண்டால் தீர்ப்பு சொல்ல உள்ளூர் நகர சபைத்தலைவர் வர வேண்டியிருக்கும். அதன்பின் ஒரு வருடம் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள மட்டார்கள். நவாக்கா பெண்கள் அனைவரும் ஒருவர் மற்றவரை சுட்டிக்காட்டித் தெரு வணிகர்களிடம் அவர்கள் வாங்கி அணியும் மலிவான காலணிகளைப் பார்த்துச் சிரிப்பார்கள். சன்யூ, ஆளை மயக்கும் வசீகர வித்தைகளையும் மந்திரவாதிகளின் கூடார முகவரிகளையும் அவர்கள் மனப்பாடமாக வைத்திருப்பார்கள், கணவன்மார்களின் காதலையும் குறியையும் தங்கள் பக்கம் ஈர்க்கவும், கோழி வறுவலின் இறைச்சி வாசம் நிறைந்த மதுக்கூடத்தில் விழுந்து கிடக்கும் அவர்களை வசியப்படுத்தவும் மாய மந்திரங்கள் தேவையாக இருக்கின்றன. கணவர்களின் துரோகத்தைப் பற்றி ஆன்மாவிடம் ஆலோசனை கேட்கையில் பசுத்தோல் விரிப்பின் மீது உருட்டப்படும் சோழிகளும், காப்பிக் கொட்டைகளும் இரட்டைப் படை எண்ணில் இருந்தால் அது கெட்ட சகுனம் என்பது வரை அந்தப் பெண்கள் அறிந்திருந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு நடந்து செல்கையில் அவற்றைத்தான் நாம் எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தோம். நானும் நீயும் கைகோர்த்துக் கொண்டு, நவாக்கா குடியிருப்பைச் சூழ்ந்திருக்கும் அலை நம்மையும் அதனுள் மூழ்கடித்து, வம்பு பேசிக் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் பயங்கரமான இல்லத்தரசிகளாக மாற்றி விடுவதிலிருந்து விலகி பள்ளி நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம். நாம் எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம். நீ உனக்குள் சொல்லிக்கொள்வாய். உனது வாயிலிருந்து வரும் சொல் ஒவ்வொன்றும் அனுபவப்பூர்வமாகவும் உயிர்ப்புடனும் இருக்கும். மாமரக் கிளையின் மீது நாம் அமர்ந்திருக்கையில் சொன்னாய். மரத்தின் மீதேற நாம் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் நாம் அதைச் செய்தோம், அங்கு, அந்தப் பசுமையான கிளைகளுக்கு நடுவே நீ சொன்னாய், ’நாம் எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம்’. ஒரு கணம் நிதானித்து நமது விருப்பங்களை வேண்டிக்கொள்ளச் சொன்னாய். நான் வெண்ணிற உடை அணிந்த செவிலியாக இருந்தேன். பெரிய பெரிய ஊசிகளால் நான் குழந்தைகளைப் பயமுறுத்தவில்லை. நீ எதையுமே வேண்டிக்கொள்ளவில்லை. உன் அப்பா நீ என்னவாக விருப்பப்படுகிறாரோ அதுவாக மட்டும் ஆகக்கூடாதென்று வேண்டிக்கொண்டாய்- பொறியாளர், கட்டிட வரைவுகளைத் திட்டமிடுதல், அவருடைய மாளிகைக்கு, அவருடைய அலுவலகத்துக்கு, அவருடைய ரயில்வே கிராமத்திற்கு. ஒவ்வொரு நாளும் படுக்கையில் அவர் காணும் கனவு அது.

சன்யூ, இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் அவமானம் என்னுடைய ஆடை மடிப்பில் பிணைந்துகொண்டு என்னைப் பின்தொடர்வதாகவே உணர்கிறேன். மற்ற வேளைகளில் கடலுக்கும் பாலைவனத்திற்கும் அப்பால் அது உன் கனவுகளில் மிதந்தபடி இருப்பதைப் பார்க்கிறேன். நாம் எந்த வேலிகளைத் தாண்டினோமென்று அது உனக்கு நினைவுறுத்துவதாகத் தோன்றும். மம்மா அத்திமின் பிரகாசமான டார்ச் விளக்கின் ஒளி நம்மீது படரும் போது நாம் செய்திருக்கக்கூடாத செயல்- நிர்வாணம். சரியாக எந்த நேரத்தில் விளக்கொளியைப் பாய்ச்ச வேண்டும் என்பது எப்படி அவருக்குத் தெரிந்தது? விடை கண்டுபிடிக்கக்கூடிய கேள்வியைக் கேட்பதென்பது வீணான தேடலோ? எனக்கு எந்த விடையும் கிட்டவில்லை. அந்தப் பெண்மணிக்கு எல்லாமே தெரியும் என்பதை ஏற்றுக்கொள்வதுதான் எளிது போல. அந்தக் குடியிருப்பு வளாகத்தின் ஒற்றைப் படுக்கையறை வீட்டினுள் யாருடைய கணவன் யாருடைய மகளுடன் படுக்கையைப் பகிர்கிறான் என்பது அவருக்கு மட்டுமே முதலில் தெரியும் விஷயம். நீ கடலுக்கடியில் ஒரு முதலையுடன் படுத்திருந்தால்கூட அவர் கண்டுபிடித்து விடுவார் என்று சத்தியமே செய்வேன். குடியிருப்புப் பகுதியிலிருந்து குறுக்குப் பாதை வழியே சென்றால் வரும் ஜிஞ்சா பிரதான சாலையில் உள்ள வணிக மையத்தில் அமைந்திருக்கும் லுகோகோ மைதானத்தின் மதில் சுவருக்குள் யாருடைய மகன்கள் பிடிபட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். யார் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள், யாரிடமிருந்து அந்தத் தொற்றை அவர்கள் பெற்றார்கள், லுகோகோ மைதானத்தில் காவல் புரியும் இராணுவக்காரனிடமிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றார்கள் என்பது வரை மம்மா அத்திம் அறிவார்.

உனக்கு அந்த இராணுவ வீரர்களின் நினைவிருக்கிறதல்லவா? பச்சை வண்ணச் சீருடையில், தோள்களில் இயல்பாகத் துப்பாக்கிகள் தொங்கிக்கொண்டிருக்க வெயிலில் அமர்ந்திருப்பார்கள். அவர்களுடன் இருக்கையில் அந்த ஏ.கே.47 துப்பாக்கிகூட அபாயமில்லாததாகவும், உடலோடு நெருக்கமாக ஒட்ட வைத்துக்கொள்ளக் கூடிய கருப்பு ஆபரணம் போலவும் இருக்கும். புட்டத்தோடு இறுக்கமாக ஒட்டி உறவாடும் குட்டைப் பாவாடை அணிந்து செல்லும் பெண்களைப் பார்த்து அவர்கள் சீட்டி அடிப்பார்கள். இரவுகளில் நைல் லேஜர், டோண்ட்டோ, மொபுக்கு மதுபானங்களை அருந்திக்கொண்டு புரட்சிக் கீதம் பாடுவார்கள். 

ஏ,மோட்டோ நவாக்கா மம்மா ஏ மோட்டோ நவாக்கா 

ஐ நெவாக்கா டொரொரொ, நவாக்கா மோட்டோ

நவாக்கா மோட்டோ, நவாக்கா மோட்டோ

 ‘இந்த நெருப்பு பற்றியெரிகிறது, இந்த நெருப்பு

டொரோரோ நகரில் எரிகிறது…

பற்றியெரிகிறது..பற்றியெரிகிறது..

அவர்கள் தங்கியிருக்கும் பச்சை வண்ண முகாமுக்கருகில் மம்மா ஒருபோதும் சென்றதில்லை.  அவர்களைப் பற்றிப் பேசும் போது வாயைக் கோணிக்கொள்வார். லுகோகோவைக் காவல் காத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் இந்த இராணுவ வீரர்கள்? இதுவென்ன முதன்மைக் கூடாரமா? மம்மா அத்திம் இராணுவ வீரர்களைப் பார்த்து மிகவும் பயப்படுவார். அவருக்குள் அந்தப் பயத்தை விதைத்தது யாரென்று தெரியவில்லை. யாராகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதைத்தான் நமது இரகசிய ஆயுதம் போலப் பிரயோகித்தோம். அப்போதெல்லாம் அவரது விதியை நிர்ணயிக்கும் தெய்வங்கள் போல நம்மைக் கற்பனை செய்துகொள்வோம். நமது தெய்வக் கரங்களால் அவரை ஒரு கொடும்பாவி பொம்மையாக்கி அதன் மீது இராணுவத்தினரைக் கல்லால் அடிக்கச் செய்வோம். அப்படிக் கல்லடி படுவதே தனது பெருத்த அளவுள்ள இடுப்பு உள்ளாடைக்குள் அவரை மூத்திரம் பெய்ய வைத்துவிடும் எனக் கற்பனை செய்துகொள்வோம். அவருடைய குழந்தைகளின் மீந்து போன துணியைக்கொண்டு தையற்காரரிடம் அவர் தைத்து வாங்கிய உள்ளாடை அது. அதன் வண்ணம் பச்சையாக இருக்கக்கூடாதா என்று எவ்வளவு ஆசைப்பட்டோம்! ஏனென்றால் ஒவ்வொரு முறை அணியும் போதும் தொடைகளுக்கிடையில் இராணுவத்தினரையும் கற்களையும் அவர் பார்ப்பார் அல்லவா? இராணுவத்தின் பச்சை வண்ணம், கற்களை வீசும் வண்ணம், ஏ.கே.47 துப்பாக்கியின் வண்ணம்..

நமது கால்பந்து மைதானத்தின் சுவர்களில் இராணுவ வீரர்கள் அமர்ந்திருக்கும் காட்சிக்கு நாம் பழக்கப்பட்டு விட்டோம். அது அவர்களுக்கு இடப்பட்ட புதிய கட்டளை. இராணுவத்தினர் காவல்காரர்களின் பணியை மேற்கொள்வது! கேள்விகள் கூடாது. உகாண்டா, யேட்டு, ஹக்கூனா மட்டாடா.* இது எவ்வளவு விநோதமானது, மறுக்கப்பட்ட வண்ணத்தில் சுதந்திரம்.. அடர் பச்சை இலைகளின் மீது படர்ந்திருக்கும் பனித்துளிகள் உலர்ந்த பின் அவமானத்தையும், மாசையும் உலகிற்கு அறிவிக்கும் காலையின் வண்ணம். சட்டென்று எல்லாமே திரைகளற்றதாக, வெளிப்படையானதாக, நிர்வாணமாகப் போனது.

அன்யாங்கோ-சன்யூ

உனது தாயகமான நவாக்கா குடியிருப்பு வளாகத்துக்குத் திரும்பி வருவதை நீ தேர்ந்தெடுத்தாய் என்றும் கோலோலோ மலையில் அமைந்துள்ள பரந்துபட்ட பிரதேசத்திலும், சீரான சாலைப் பகுதிகளிலும் வாழ நீ மறுத்துவிட்டதாகவும் மம்மா கூறினார். இங்கே, நவாக்காவின் சிறிய குன்றின் மீது ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாகக் கட்டப்பட்டு ஜிஞ்சா சாலையையும், கால்பந்து மைதானத்தையும், லுகோகோ காட்சியரங்கையும் நோக்கியிருக்கும் வீடுகளமைந்த பகுதிக்கு வருகிறாய். சன்யூ, காலை நேரங்களில் செம்மண்ணில் கோலிக்குண்டும், எறிபந்தும் விளையாடுகையில் கத்திக் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகள் வசிக்கும் இந்த இடத்தை நீ தேர்ந்தெடுத்து வருகிறாய்- இது பழக்கப்பட்டது- நினைவுகளையும், வரலாறையும் பொத்தி வைத்திருப்பது. மழைநாளில் பழுப்பு வண்ணத்தில் கெட்டியான சேறு கோர்த்திருக்கும் சாலைக்கும், அதன் ஒவ்வொரு குழியிலும் குட்டை போல் தேங்கியிருக்கும் நீருக்கும், இறுகிய மண்ணிலிருந்து எழும்பும் புத்தம் புது இனிய மழை வாசத்துக்கும் நீ மீள்கிறாய் சன்யூ, மம்மா அத்திமைக் கண்டுபிடிக்க நீ திரும்பி வந்துவிட்டாய்.

இப்போதும் ஒவ்வொரு இரவிலும் சமையல் செய்வதற்குத் தன் கணவன் கொண்டுவந்து தரும் உணவுப் பொருட்களுக்காகக் காத்திருக்கிறார் மம்மா. ஒன்பது மகன்களையும் ஒரு மகளையும் பெற்றெடுத்தவள் தன் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நாம் சொல்லிக்கொண்டிருப்போம், ’அந்தக் குடியிருப்பிலுள்ள சில பெண்களைப் போல அவரும் ஏன் தொழிற்பேட்டையில் ஏதாவது ஒரு பணியில் அமர முயலக்கூடாது? அவருடைய பெரிய இடுப்பையும் இரண்டு பிருஷ்ட பாகங்களையும் அசைத்துக்கொண்டு தொழில் முனைவோர் போல நடந்துகொள்ளலாம். சிறு தொகை கடன் தரும் கூட்டுறவுநிதி நிறுவனத்திலிருந்து எண்டாக்டிவா* பெற்று ஓவினோ சந்தையில் இரண்டாம் விற்பனைக்கு வரும் துணிகளை வாங்கி நவாக்கா அங்காடிகளில் விற்கலாம் அல்லவா? இரண்டாம் விற்பனைத் துணிகள் நிச்சயமாக நவீன நாகரீகத்தில் உள்ளன. இரவில் குடியிருப்பில் சுற்றித் திரியும் இளைஞர்கள், யுவதிகளிடையே Tommy Hilfiger, Versace போன்ற லேபிள்கள் மிகவும் புழக்கத்தில் உள்ளன. இரண்டாம் விற்பனை ஆடைகள் அதிக நாட்கள் விற்காமல் தொங்கிக்கொண்டிருப்பதில்லை. வறட்சிக் காலத்தில் கிடைக்கும் நீரைப் போல விரைவில் விற்றுத்தீர்ந்து விடும்.’

இரண்டாம் விற்பனை ஆடைகள் லண்டனின் உரிக்கப்பட்ட சடலங்கள் என அம்மா சொல்லிக்கொண்டிருப்பார். அதனால்தான் அவற்றின் மீது, ’நீ லண்டனுக்குச் சென்றாய். எனக்குக் கொண்டு வந்ததெல்லாம் இந்த மோசமான டி-ஷர்ட்தான்!’ என்னும் வாசகங்களைத் தாங்கி நிற்கிறது என்பார். லண்டனைப் பற்றி அவர் பேசும் போதெல்லாம் வாயைப் பிளந்தபடி கேட்டுக்கொண்டிருப்போம். அங்கு அவர் ஒரு முறை, இரு முறையல்ல, மூன்று முறை தன் சகோதரியைப் பார்க்கச் சென்று வந்தவர். ஒவ்வொரு முறையும் பெட்டி நிறைய கதைகளை அடைத்துக்கொண்டு வருவார். அவருடைய சகோதரி இறந்து போனதும் அம்மாவின் பயணங்களும் அவர் கண்களில் மின்னும் பிரகாசமான ஒளியும், ராணி எலிஸபெத்தின் கதைகளும் நின்று போயின. மீண்டும் மீண்டும் அக்கதைகளைச் சலிக்காமல் சொல்லும் ஆவலை அவர் இழந்துவிட்டார். அதன்பின் நாங்களும் வளர்ந்து விட்டோம். நீயும் எங்கேயோ வேறு பிரதேசத்திற்கு, மாறுபட்ட கால நேரத்துக்கு, புதிய நினைவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்குச் சென்றுவிட்டாய். நாமிருவரும் இரு பெரிய பெண்களாக, நான்கு மலர்ந்த முலைகளுடன், பூசணிக்காய் போன்ற பருத்த பிருஷ்டங்களுடன் வளர்ந்துவிட்டோம். அம்மா கூறிய அந்தக் கதைகள் யாவும் உண்மையில்லை என்றும் அறிந்துகொண்டோம். அவர் டான்ஸானியாவுக்குத்தான் சென்றிருந்தார்- விக்டோரியா ஏரியிலிருந்து வெறும் படகுப் பயணம்தான். லண்டனும் இல்லை, எந்த எலிஸபெத் ராணியும் இல்லை.

லண்டன் உனக்குச் சலித்துப்போய் விட்டதெனவும் இதற்கு மேல் உன்னால் அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று மம்மா சொன்னார். லண்டன் குளிராக உள்ளது. லண்டன் என்னும் பூதம் எந்த வேலை வாய்ப்பையும் தரவியலாதது. விரட்டப்பட்டவர்களுக்கான வசதியான வெளிநாடு இல்லை லண்டன். ஒழுக்கம் கெட்டவர்களின் அடைக்கல முகாம் அல்ல லண்டன். ’ஒழுக்கம் கெட்டவர்கள்’- இந்த வார்த்தையை என்னிடம் சொல்கையில் மெதுவாக, அழுத்தமாகச் சொல்வார் மம்மா. அப்போதுதான் என் மூளையில் அந்த வார்த்தை அழுத்தமாகப் பதியும் என்பதற்காக அப்படிச் செய்வார். என் ஒவ்வொரு சுவாசத்திலும் அந்த வார்த்தையை நான் கேட்க வேண்டுமென்றும் ஒவ்வொரு வாசத்திலும் நான் அந்த வார்த்தையை நுகர வேண்டுமென்றும் அவர் விரும்பினார். அப்போதுதான் நான் உன்னை முதன்முதலாகத் தொட்ட அந்த நாளைப் போல, நீ என்னை முதன்முதலாகத் தொட்ட நாளைப் போல, அது என்னைத் துரத்த வேண்டும் என்பதற்காகச் சொன்னார். அவருடைய வீட்டின் முன்பு, நாவல் மரத்தடியில் என்னுடைய நிச்சயமற்ற, தயக்கமான, குளிர்ந்த கைகள் உன்னுடைய வலது மார்பைப் பற்றியிருந்தன. உன்னுடைய குளிர்ந்த, அச்சம் கொண்ட கைகள் என்னுடைய இடுப்பைப் பற்றி உன்னை நோக்கி நெருக்கமாக இழுத்தன. நீ உலோக இறகுகளின் மீதமர்ந்து திரும்பி வருவதாக மம்மா அத்திம் சொன்னார்- கென்யா விமான சேவை.

சூடான கம்ப்பாலாவின் வெயிலில் வந்து இறங்குவாய். அனைவருடனும் ஏதோ ஒரு பகைமை போல வெக்கை சருமத்தைக் கடிக்கிறது. உன் அம்மா என்னோடும் என் அம்மாவோடும் பேசுவதில்லை. மம்மா அத்திம் ஒரு கிலோ ஈரல் கறியை சமையல்விட்டு அடுத்த ஒரு கிலோ கிடைக்கும் வரை அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். கரி அடுப்பை நோக்கிக் குனியும் போது அவரது பெருத்த, நீண்ட முலைகள் ஆகாச வெளியிலிருந்து பசு மாடுகளின் மடிக்காம்புகள் சமையல் பாத்திரத்தைப் பார்ப்பது போலத் தோன்றும். அந்த வழியே யாராவது நடந்து சென்றால் சமையல் செய்வதை நிறுத்திவிடுவார். அப்போதுதான் அவர்கள் கிசுகிசுப்பதைக் கேட்க முடியும். ஒருவேளை அதுதான் அவரது பால்வினை நோய்க் கதைகளுக்கும், லுகோகோ காட்சி அரங்கின் கதைகளுக்கும் மூலமாக இருக்கும். தன்னுடைய ஒன்பது ஆண் பிள்ளைகளையும், ஒரு பெண் பிள்ளையையும் போலவே உலகத்தையும் எண்ணி தன்னுடைய சமையலறையிலிருந்து கட்டளையிடுவார். அவர் பிள்ளைகள் எல்லோருமே உதவாக்கரைகள்.. சன்யூ, இத்தனை வருடங்களாக உன்னையும் என்னையும் பற்றி அவர் தூற்றுவதைக் கேட்டால், ஏதோ அவர் பிள்ளைகள் எல்லோரும் உத்தமர்கள் என்பதாக நீ நினைத்துக்கொள்ளக்கூடும். குறைந்தபட்சம் ஏதோ ஒரு பிள்ளையாவது நல்ல கல்வி கற்று அரசாங்கத்தில் குறைந்த சம்பள வேலையில் பணி புரியலாமென்றும், ஒருவனாவது வீட்டிற்குக் குணவதியான மருமகளை அழைத்து வந்திருப்பானென்றும் நீ நினைத்துக்கொள்ளக்கூடும். ஆனால்… வாபி! அவர்கள் மனைவிமார்கள் அனைவரும் குடியிருப்பின் ஆண் மக்களால் ஒதுக்கப்பட்ட, சலித்து உதறப்பட்ட பயன்படுத்திய சைக்கிள்களைப் போன்றவர்கள். நடந்துகொண்டிருக்கும் ஒரு குரங்கு முன்னால் செல்லும் குரங்கின் வாலைப் பார்த்துக் கேலிசெய்யக் கூடாதென்பார்கள். மம்மா அத்திம் பற்களைச் சில்லறைகளைப் போலக் காட்டிக்கொண்டு சிரிப்பார். அப்படிச் சத்தமாகச் சிரிக்கும் அவருக்குத் தெரியாது, அந்தக் குடியிருப்புப் பகுதி முழுக்கவும் அவருக்கு சிறுநீர் கழிக்கவும், உரையாற்றவும் அற ஒழுக்கம் என்னும் புனிதக் கோட்பாட்டின்படி நற்செய்தி வழங்கவும் எந்தவித உரிமையுமில்லை என்று.

நீ எவ்வளவு மாறிவிட்டாய் என்று சில சமயம் நான் ஆச்சரியப்படுவேன். எப்படி வளர்ந்து நின்றாய்? என்னைவிட அதிக உயரமாக இருந்தாய். உனது கண்களில் தெரியும் உறுதியும் வன்மையும் உன்னைச் சுற்றிலும் ஒரு மாயையை உருவாக்குகிறது – அது எப்படி இருக்குமென்றால், உன்னைக் காணும் சிறுவர்களைச் சில கணங்கள் நிறுத்தி வைக்கும், சட்டென்று உன்னைக் கடந்து சென்றுவிட வேண்டுமா அல்லது சில கணங்கள் நின்று தங்களுக்குள் உருவாகும் அச்சத்தை உன் கண்கள் மதிப்பிடுகிறதா என அறிந்துகொள்ள வேண்டுமா என்று அவர்கள் உறுதிப்படுத்திக்கொள்வது போலவும் இருக்கும். அதன்பின் இறுதியில், உன்னை ஆராய்ந்து, அலசி, கூட்டியும் பெருக்கியும் வகுத்தும் நீ உண்மையாகவே இப்படி இருக்கிறாய் என அறிந்துகொள்வார்கள். 

பெரிய பையன்கள் என்னிடம் அடாவடித்தனம் செய்யும் போது அவர்களைத் தைரியமாக எதிர்கொண்டு என் மீது அவர்கள் விரல்கூடப் படாமல் பார்த்துக்கொள்வாய். “விரலை வை பார்ப்போம்” என எச்சரித்துவிட்டு உன் பற்களெல்லாம் அலுமினியத்தால் ஆனது போல அவற்றை அரைத்துக்கொண்டு நிற்பாய். நீ வீணாகச் சுற்றி வளைத்துப் பேச மாட்டாய் என்றும், உன்னுடைய கோபம் ஆசிரியர்கள் தரும் மூங்கில் பிரம்படியைவிட மோசமானதென்றும் அவர்களுக்குத் தெரியும். உன்னிடம் சவால் விடுபவர்களையும், உன்னை எதிர்க்கத் துணிபவர்களையும் சுற்றி மலைப்பாம்பு போல உன்னுடைய கோபமும் மூர்க்கமும் சுருண்டு இறுக்கிவிடும். அப்படித்தான் பற்களாலும் கைகளாலும் பெரும்பாலும் கால்களை உபயோகித்து நீ சண்டையிடுவாய். ஒருமுறை பள்ளியின் குடிநீர்க் குழாயருகில் நீரருந்த என் முறை வருகையில் அதை அனுமதிக்காமல் அழிச்சாட்டியம் செய்து என் பல்லையும் உடைத்துவிட்ட ஜுமாவை அவற்றால் சுற்றி வளைத்தாய்.

நான் என்னுடைய அடர்பச்சை வண்ணச் சீருடையை அணிந்திருந்தேன். மதிய உணவு வேளையில் நீர் பிடிக்க எப்போதும் நீண்ட வரிசை இருக்கும். அப்போதெல்லாம் பையன்கள் வரிசையைத் தாண்டிச்செல்வது வழக்கம். மதிய உணவுக்குப்பின் குடிநீர் பிடிக்க எனது பாத்திரத்தை நீட்டிய போது ஜுமா குறுக்கே வந்து என்னைக் கீழே தள்ளிவிட்டான். அவன் மிக வலுவுள்ளவனாக இருந்தான். ஒரே தள்ளு, நான் கீழே விழுந்துவிட்டேன். எழுந்த போது ஒரு பல்லை மண்ணுக்கு இழந்துவிட்டு, பச்சை வண்ணத்தின் மீது இரத்தம் தெறிக்க மேலே எழுந்தேன். அடர்பச்சை, இலைகளின் மீது அமர்ந்திருக்கும் பனித்துளிகள் உலர்ந்த பின் தோன்றும் வண்ணம்.

நீ தூரத்தில் நின்றிருந்தாய். கவனிக்கக்கூட இல்லை. ஆனால் என்ன நிகழ்ந்ததென்று புரிந்துகொள்ள உனக்கு அதிக நேரமெடுக்கவில்லை. கூட்டத்தை விலக்கி வந்து, அங்கு நடக்கும் குழப்பமும் கூச்சலும் ஆசிரியர்கள் காதுகளில் விழும் முன்பே, நீ கூட்டத்தை விலக்கி வந்து உன் கால்களால் ஜூமாவைப் பின்னிச் சுற்றிக் கட்டிப்போட்டாய். நீ எப்படிச் செய்தாயென்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அவனால் அசைய முடியவில்லை.

“ஜுமா, மாட்டிக்கொண்டாயா? ஹஹஹஹ!”

மற்ற சில மாணவர்களுக்கும்கூட மிகத் திருப்தியாக இருந்திருக்குமென்று எனக்குத் தெரியும். இறுதியாக அவனுடைய போக்கிரிப் பிம்பத் தசைகள் உடைக்கப்பட்டு மண்ணில், நிலத்தில் மாவு போல விழுந்துவிட்டன. அந்த நினைவே இனிப்பும் உப்பும் கலந்த சுவையாக, வெட்டுக்கிளிகளை வெங்காயத்துடன் கொஞ்சம் கமுலாரியுடன்* -காரமான, மிகக் காரமான மிளகாயுடன் சுவைப்பது போல இருந்தது.

ஒரு கையை முட்டியில் தாங்கித் தாங்கி நடக்கும் மிஸ்டர்.வங்கோலோ கையில் பிரம்புடன் அங்கு வந்தார். அந்தப் பிரம்பு மஞ்சள் வண்ணத்தில் இருந்தது. பள்ளிக்கு வெளியே வளர்ந்திருக்கும் மூங்கில் புதரிலிருந்து காலையில்தான் ஒடித்துக்கொண்டு வந்திருப்பார் போல. மண் கலவை மாவைப் போல இருந்த ஜுமாவை இழுத்து விடுவித்தவர் உன்னைப் பள்ளியைவிட்டுக் கால வரையரையின்றி நீக்கப்போவதாக மிரட்டினார். நீயும் ஜுமாவும் இரண்டு வாரத் தற்காலிக நீக்கம் மட்டுமே பெற்றுத் தப்பித்துவிட்டீர்கள். யாரும் கைகலப்பில் ஈடுபடக்கூடாதென்பது பள்ளி விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நீ மீறிய மற்ற விதிகளுடன் ஒப்பிடுகையில் அந்த விதி மிகச் சிறியது. நானும் மீறியது. நாம் இருவரும் மீறியது.

அது நடந்து நாளாகிய பின் வீட்டில் உன் அம்மா இதையறிந்து மிகவும் கோபமடைந்தார். வீட்டிற்குத் திரும்பும் வழியில், அந்தச் சண்டை எப்படித் தொடங்கியது என்று நாம் சொல்லக்கூடாதென்று கேட்டுக்கொண்டாய். அவன் உன்னை அடித்தான், அதனால் நீ அவனைத் தாக்கினாய் என்று மட்டுமே சொல்ல வேண்டும். என் வீட்டிலிருந்து இரண்டு வளாகங்கள் தாண்டி உன் வீடு இருக்கிறது. நமது குடியிருப்புக்கு அருகில் இந்தப் பள்ளி மட்டும்தான் உள்ளது. குடியிருப்பிலிருக்கும் பெரும்பாலான சிறுவர்கள் நகாவா கட்டாலே ஆரம்பப் பள்ளியில்தான் படிக்கிறார்கள் என்றாலும், நாம் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதை அனைவரும் அறிவார்கள். உன் அம்மா வந்து எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிய போது, என் அம்மா அப்போதுதான் ஆட்டிறைச்சியை வறுப்பதற்காக வெங்காயத்தைக் கரி அடுப்பின் மீது போட்டுக்கொண்டிருந்தார்.

அம்மாவுக்குச் சம்பளம் கிடைத்திருந்ததால் ஆட்டிறைச்சி வாங்கி வந்தார். மாதக் கடைசியில் எப்போதும் ஆட்டிறைச்சி இருக்கும். அவர் நல்ல மனநிலையில் இருந்தால் கொஞ்சம் அரிசிச் சோறுகூடக் கிடைக்கும். அம்மாவின் சமையல் நல்ல மணமாக இருந்தது. அவர் சமைக்கும் போது நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். “அப்பாவுக்குக் கொஞ்சமாவது அறிவிருந்திருந்தால் மூன்று குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை விட்டுவிட்டு, தன் மனைவியென்று அவர் கூறிக்கொண்டிருக்கும் அந்த வேசியிடம் போய் சரணடைந்திருக்க மாட்டார். அப்பாவின் புதிய மனைவிக்குச் சமைக்கவே வராதென்றும், அவள் அவருடைய மகளென்று கூறுமளவுக்கு வயதில் இளையவளென்றும் சொல்வார். அவளுடைய முதல் மகனைப் பெற்றெடுக்கையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தார்கள். அவர் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? அவளுடைய குறுகிய இடுப்பு குழந்தையை வெளித்தள்ள முடியுமென்றா?” என்றெல்லாம் அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்பாவைப் பற்றிப் பேசுகையில் அவர் குரலில் ஒரு தொனி இருக்கும். அது வெறுப்புக் குரலாக இல்லாமலும், விருப்பக் குரலாக இல்லாமலும், இத்தனை நடந்த பின்னரும் அவர் எங்களுக்கு உணவு, புத்தகங்கள், சோப்பு, அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகை ஆடைகள் வாங்குவதற்கு ஒரு செண்ட்கூட அனுப்பாத நிலையிலும் அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் கதவைத் திறந்து வரவேற்கும் போது ஒலிக்கும் குரல் போல இருக்கும். என் அப்பா உன்னுடைய அப்பா போல இல்லை சன்யூ. உன் அப்பா போக்குவரத்து அமைச்சகத்தில் பணிபுரிகிறார். அவர் உகாண்டா ரயில்வே துறையை நிர்வகிக்கிறார். அதனால்தான் உன்னை அவருக்காக நீ ஒரு கிராம ரயில்வே பாதையைக் கட்டமைக்க வேண்டுமெனச் சொல்லுகிறார். அவர் ரயில்வே துறையால் மிகவும் போதையுற்றிருக்கிறார் என்றும் ஒவ்வொரு முறையும் அதைப் பற்றிப் பேசும் போது, வாழ்வின் ஆகச்சிறந்த ஞாபகங்களை நினைவுறுவது போல உள்ளங்கைகளைத் தேய்த்துக்கொள்வார் என்றும் சொல்லியிருக்கிறாய். உன் அப்பாவிடம் நிறைய பணம் உள்ளது. பள்ளியின் பல ஆசிரியர்கள் அவரை அறிவார்கள். பிற சிறுவர்களும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் உன்னுடைய கடுமையான பார்வையும், வெற்று முகபாவமும் உன்னைப் பற்றிய மிகை பிம்பமாகப் பார்க்கப்படுகிறது. அச்சமும் ஆச்சரியமும் கலந்த பார்வையுடன் உன்னைப் பார்க்கிறார்கள். ஒரு செல்வந்தரின் குழந்தை.

சில சமயம் உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சற்றே இகழ்ச்சியுடன் பேசுவார் அம்மா. அத்தனை இடங்கள் இருக்கையில் பணம் இருக்கும் எவரும் நவாக்கா குடியிருப்பு வளாகத்தில் வசிக்க மாட்டார்கள், உங்களிடம் அத்தனை செல்வங்கள் இருக்கும் போது ஏன் முயேங்கா, கொலோலோ, கன்சங்கா பகுதிக்குப் போய் சக மெர்சிடஸ் பென்ஸ்காரர்களுடன் சேர்ந்து வாழக்கூடாது என்பார். ஆனால் ஒவ்வொரு பருவத்திற்கும் நீ புதுக்காலணிகளுடன் வருவாய். ஒவ்வொரு பருவத்துக்கும் புதிய இரண்டு பச்சை வண்ணச் சீருடைகள் இருக்கும். உன் பெயர் எப்போதுமே கல்விக் கட்டணம் கட்டத் தவறியதற்காக அழைக்கப்படுவதில்லை. எங்களைப் போன்ற மற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்குக் கல்விக் கட்டணம் பற்றிய குறிப்புச் சீட்டுகள் அனுப்பப்படும்.

அன்பார்ந்த பெற்றோர்களே,

இந்தக் கடிதம் மூலம் உங்களுக்கு நடப்புக் கல்வியாண்டுத் தொகையைச் செலுத்துமாறு நினைவுறுத்துகிறோம். தவறினால் உங்கள் மகள்/மகன் …….. இந்த ஆண்டு இறுதித் தேர்வுக்கு அமர அனுமதி மறுக்கப்படுவார்கள்…

ப்ளா..ப்ளா..ப்ளா..

அம்மாவுக்கு அந்தக் கடிதங்கள் கிடைத்துக்கொண்டே இருந்தன. அப்போதெல்லாம் அவருடைய வீடே பற்றி எரிந்துவிட்டதாகக் கேள்விப்பட்டவர் போல உதடுகளை இறுகக் கடித்துக்கொள்வார். அந்த வேளையில்தான் வீட்டுக் கூரையின் பழுப்பு வண்ண ஓடுகளின் ஏதோவொரு ஒற்றைப் புள்ளியில் பார்வையை நிலைகுத்தி வெறித்துப் பார்க்கத் தொடங்கிவிடுவார்.

அந்த நாட்களில் தன் பழைய அடர்சிவப்பு வண்ணப் பெட்டியில் எதையோ தேடப் போய்விடுவார். அது பழைய காலத்துப் பெட்டி. இப்போதெல்லாம் அந்த வகைப் பெட்டிகள் கடைகளில் விற்கப்படுவதில்லை. அதனுடைய பளபளப்பை அது இழந்துவிட்டிருந்தது. அதை வெயிலில் உலர்த்த அவர் வெளியே எடுத்து வரக்கூடாதென்று வேண்டிக்கொள்வேன். அவர் தன் டான்ஸானியா பயணத்துக்கு எடுத்துச்செல்வதை வெளியே கொண்டுவந்தால் தர்மசங்கடம் கொஞ்சம் குறைவாக இருக்கும். அது குறைந்தபட்சம், உன் அம்மா வீடு சுத்தம் செய்யும் நாளில் வெளியே உலர வைக்க எடுத்துவரும் அங்காடிப் பையைப் போலாவது இருக்கும். அந்தப் பெட்டியில் அம்மாவின் கடிதங்கள் உள்ளன- அப்பா அவருக்கு எழுதியவை. அம்மாவின் கூற்றுப்படி, அவரது முலைகள் மாங்காய்கள் போல கெட்டியாக இருந்த நாட்களில் எழுதப்பட்டவை. மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் அந்தக் கடிதங்களை உரக்க வாசித்து, அந்த நாட்களின் ஒவ்வொரு கணத்தையும், ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு சத்தியத்தையும் மீண்டும் வாழ்ந்து பார்ப்பார்.

நாம் உன்னை ஒருபோதும் நீங்கிச் செல்ல மாட்டேன். நீ என்றென்றைக்கும் என்னுடையவள். வானிற்கு நட்சத்திரங்கள், எனக்கு நீ. என்னுடைய வானவில்லின் இனிய மாய வண்ணங்களே, வந்தனம். என்னுடைய மலரில் அமரும் ஒரே வண்டு நீதான். உன்னைக் காதலிப்பது குற்றமென்றால், நான்தான் உலகின் மிகப்பெரும் குற்றவாளியாக இருப்பேன்.

அந்தக் கறைபடிந்த காகிதங்களின் ஒவ்வொரு துண்டிலும் உள்ள வார்த்தைகளை உரத்து வாசிக்கையில் அம்மா சிரிப்பார். அவை அனுப்பப்பட்ட நீலமும் பச்சையும் ஓரங்களில் அலங்கரித்திருக்கும் வான்வழித் தபால் உறைகளுக்குள் அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். சில வேளைகளில் அப்பா வான்வழித் தபால் உறைகளில் கடிதம் அனுப்புவார். திறக்கையில் கிழிந்து போகாமலிருக்கும்படி மிகக் கவனமாகவும் திறமையாகவும் அந்த உறைகள் பிரிக்கப்பட்டிருந்தன. நேர்த்தியான கையெழுத்தில் அழகான கடிதம் எழுதுவதில் அப்பா ஒரு அற்புதமான கலைஞர், எனக்கு அது தெரியும், ஏனென்றால் அம்மாவின் நினைவுப் பேழையை நான் அடிக்கடி திறந்து பார்ப்பேன். இதை ஏன் செய்கிறேனென்று எனக்கே பிடிபடவில்லை. அதுவும் பிறர் கடிதங்களைப் படிப்பது. அது அத்துமீறிய செயலாகும். அம்மா தனது ’ஜோசஃபைன் அதினொ பெஸ்ட்’டுக்கு என்று எழுதப்பட்ட கடிதங்களைப் பிரித்துப் படித்தாலும் என்னைக் கடிந்து கொள்வதில்லை என்ற போதும் இது சரியான செயலல்ல என்றே தோன்றும். 

அவரை அந்தக் கோலத்தில் பார்ப்பதை நான் வெறுத்தேன். அம்மா இப்போது ரம்ஜா செக்யூரிட்டீஸ் நிறுவனத்தில் தட்டச்சு வேலை செய்கிறார். அவருடைய சம்பளம் அதிகமில்லை என்ற போதும் எப்படியோ அதற்குள் எப்படி எப்படியோ சமாளித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவருடைய அழகைப் பற்றிப் பேசும் மனிதர்கள் ஏதோ அவர் கணவரில்லாமல் வாழும் நிலைக்கு உரியவரல்ல என்பது போலப் பேசுவார்கள். குரலில் பரிதாபத்துடன், ’ஓ, எவ்வளவு நீண்ட, வளைந்த கழுத்தும், அகண்ட விழிகளும் அதில் சோகமும் கொண்டவள்’. அந்தப் பெண்ணின் குரல் எவ்வளவு கனிவாகவும் மென்மையாகவும் பொறுமை நிரம்பியதாகவும் இருக்கிறது. அவளைப் போன்றவளை எப்படி ஒரு ஆண் உதறிவிட்டுச் செல்ல முடியும்? சில வேளைகளில் அம்மா துயருற்றவராகத் தோன்றலாம். ஆனால் அவர் பரிதாபத்துக்குரியவர் அல்ல. அவர் வாழ்க்கையைத் தன் சொந்த விரல் நகங்களைப் போன்ற தனது குணங்களோடு வாழ்கிறார். அமைதியாக, நிதானமாக, சமநிலையோடு வாழ்கிறார். அதாவது, அப்பாவின் கடிதங்களை லாந்தர் விளக்கொளியில் வாசிக்கும் தருணங்களைத் தவிர்த்து அப்படித்தான் இருக்கிறார்.

இதைப் பற்றியெல்லாம் உன்னிடம் சொல்லியிருக்கிறேன் சன்யூ. உன்னுடைய அம்மாவைப் போலவே என் அம்மாவும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்று நான் எத்தனை ஆசைப்பட்டிருக்கிறேன் தெரியுமா? அங்காடிகளுக்குச் சென்று திரும்புகையில் உன் அம்மாவுடன் இரண்டு வலுவான பையன்கள் பைகளைச் சுமந்துகொண்டு வருவார்கள். ஏனென்றால் அவர் உனக்கு, உன்னுடைய அப்பாவுக்கு, உன்னுடைய மகிழ்ச்சியான குடும்பத்திற்கென நிறைய பொருட்கள் வாங்குவார். உன்னிடம் இதைச் சொல்லாமல் மறைத்துவிட்டேன், இரைச்சல் நிரம்பிய சந்தையில் பொருட்களை வாங்க உன் அம்மா தன் வழியே செல்லும் போது அவ்வப்போது நான் அவரைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறேன். அங்கே கூட்டம் அதிகமிருப்பதால் அவர் என்னைப் பார்த்ததே இல்லை. சில பொருட்களைக் கையை நீட்டிக் குறிப்பிட்டுக் கேட்பார். அவரால் வாங்குவதற்கென்றே காத்திருப்பவை போலப் பழங்கள் கனிந்து நிற்பதாகத் தோன்றும். தனது பற்பசை விளம்பர, மின்னும் பற்களோடும் குழி விழும் கன்னங்களோடும் உன் அம்மா ஒரு கடையிலிருந்து இன்னொரு கடைக்குச் சென்றுகொண்டே இருப்பார். சில சமயங்களில் நான் நீயாக இருக்கக்கூடாதா என்று நினைத்துக்கொள்வேன். மகிழ்ச்சியைக் கடைகளில் வாங்கும் அம்மாவோடு இருக்க வேண்டும். மக்களைத் தன் முன் மண்டியிட்டு வணங்க வைக்கும் கபாகா * அரசரைப் போல சந்தோஷங்களைத் தன் காலடியில் அடிபணிய வைக்கிறார் உன் அம்மா.

உன் வீட்டிற்கு வீட்டுப் பாடம் எழுத வந்தபோது அவர் சமைப்பதைக் கண்காணித்தேன். அவர் கைகள் வேர்க்கடலை சூப்பைக் கிளறிக்கொண்டிருந்தன. ஒருபோதும் யார் வீட்டிலும் உணவருந்தக் கூடாதென என் அம்மா என்னிடம் சொல்லி வைத்திருந்ததை இப்போது நான் சொல்லியாக வேண்டும். அது நம்மை ஏழைகளாகக் காட்டும், என்னைப் பேராசைக்காரியாக ஆக்கிவிடுமென்றும் சொல்வார். உணவு தயாராக இருக்கும் நிலையில் நான் உன் வீட்டிலிருந்து கிளம்பிவிடுவேன். உன் அம்மா, தனது மகிழ்ச்சியை அடிபணிய வைக்கும் குரலில், ‘இரவு உணவு தயாராகிவிட்டது, சாப்பிட வாருங்கள்‘ என்பார். ஆனால் நான், நேரத்தைப் பற்றிக் கவலைப்படுபவள் போல நடித்து, ’நான் உடனே வீட்டிற்குப் போக வேண்டும், அம்மா கவலைப்படுவார்’ என்று எப்போதும் நழுவிவிடுவேன். அந்த நேரங்களில் உன் அப்பா படுக்கையறையில் அமர்ந்திருப்பார். ஒரு சடங்கு போல தினமும் பணியிலிருந்து நேராக வீடு திரும்பிவிடுவார்.

‘மிக நல்ல கணவர்’ என எண்ணிலடங்கா முறை இதைச் சொல்லியிருக்கிறார் என் அம்மா.

‘நான் அவரை வெறுக்கிறேன்’ என எண்ணிலடங்கா முறை இதைச் சொல்லியிருக்கிறாய் நீ. அவர் செய்யாததைப் பற்றி உனக்கு ஒரு குறையுமில்லை. அவர் செய்வதைப் பற்றித்தான் குறை. அந்தத் தொடுகைகள், அவரின் தொடுகைகள் என்று நீ சொல்லியிருக்கிறாய். அதை நீ அம்மாவிடமும் கூற முடியாது. அவர் உன்னை நம்ப மாட்டார். எதையும் நம்பியதும் இல்லை.

என்னுடன் அடாவடித்தனம் செய்ததற்காக ஜுமாவுக்கு நீ நன்றாகப் பாடம் கற்பித்த மறுநாள் என் வீட்டிற்கு வந்தாரே? அந்த நாளைப் போலத்தான். என் அம்மாவுடன் மெல்லிய குரலில் பேசுகையில் உடைந்த பீங்கான் போல அவர் குரல் ஒலித்தது.

‘அவள் என்னிடம் எல்லா விஷயங்களையும் சொல்வதில்லை. காரணமே இல்லாமல் ஒரு பையன் அவளை எப்படி அடிக்க முடியும்? அந்த விஷயத்தின் ஆழம் வரை அறிந்துகொள்ளத்தான் இங்கு வந்தேன். இப்போதே தெரிய வேண்டும்!’

அதையே திரும்பத் திரும்ப அவர் சொல்லிக்கொண்டிருந்த போது சமையலறையிலிருந்த என்னை அம்மா அழைத்தார். தன் பின்னால் ஆட்டைப் போல உன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து என் வீட்டுக் கதவை அவர் தட்டியதைப் பார்த்த போதே நான் சமையலறைக்குப் போய் ஒளிந்துகொண்டேன்.

‘அயாங்கோ, அயாங்கோஓஓஓ.’ அம்மா அழைத்தார்.

வெளியே வந்த நான் உன் கண்களைத் தவிர்த்தேன். பள்ளிக் கட்டணத்தைக் கட்டாததற்காக ஒவ்வொரு முறையும் ஆசிரியர் என் பெயரைச் சொல்லி அழைப்பதைக் கேட்கையில் ஏற்படும் சங்கடமும் பயமும் கலந்த உணர்வுடன் கைகளை முன்னால் கட்டியபடி வந்து நின்றேன்.

அவர்கள் மணிக்கணக்காகப் பேசினார்கள். நான் அளவுக்கதிகமாகப் பயந்துவிட்டேன். அதனாலேயே ஓரளவு உண்மையைக் கூறிவிட்டேன். நாம் வீட்டிற்கு வரும் வழியில் பேசி வைத்திருந்ததை நீ அவசரமாக ஒப்பிக்கத் தொடங்கினாய். உன் அம்மா கேட்டார். ’அன்யாங்கோ, இப்போது என்ன சொல்லப் போகிறாய்?’ நீ சொன்னதையே நான் திருப்பிச் சொல்லிய போது, ’எனக்குத் தெரியும், இருவருமே பொய் சொல்கிறார்கள், பள்ளிக்குச் சென்று இரண்டு வாரங்களில் இந்த விஷயத்தின் ஆழம்வரை கண்டுபிடிக்கிறேன்’ என்றார். அப்படியே செய்தார். உனக்குக் கிடைத்த அடியில் ஒரு வாரம் பின்பக்கத்தைக் கீழே வைத்து உன்னால் அமர முடியவில்லை.

நாம் வீட்டுக்குச் சென்றபின் அவர்களிருவரும் மெல்லிய குரலில் பேசிக்கொண்டார்கள். நம் இருவரையும் வீட்டிற்கு வெளியே அனுப்பி கொசுக்கடியை அனுபவிக்க விட்டார்கள். நம்மை உள்ளே அழைத்த பின் அவர்கள் எதுவுமே கூறவில்லை. உன் அம்மா மறுபடியும் ஆட்டைப் பிடிப்பது போல உன் கையைப் பிடித்துக்கொண்டார். அப்படி நீ இழுத்துச் செல்லப்படுவதை ஜுமா பார்த்திருந்தால் மிதிக்கப்பட்ட உன் நம்பிக்கையின் அளவைவிட நூறு மடங்கு அதிகமாகச் சிரித்திருப்பான். நீ திரும்பிப் பார்க்கவே இல்லை. அதன்பின் சில நாட்களுக்கு நீ என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தாய். அப்படி நிறைய விஷயங்கள் இருந்தன. பள்ளி முடிந்த பிறகு சன்யூவுடன் நடந்து செல்ல வேண்டாம்.. பள்ளிக்கு உடன் அழைத்துச் செல்வதற்கு ஒவ்வொரு நாள் காலையும் அவள் வீட்டிற்கு முன் நிற்க வேண்டாம். வகுப்பில் அவளருகே அமர வேண்டாம். அவள் புத்தகங்களைக் கடன் வாங்க வேண்டாம். உனக்கு நானே புத்தகங்கள் வாங்கித் தருகிறேன். அவளுடன் பேசக்கூட வேண்டாம். வேண்டாம், வேண்டாம், சன்யூவுடன் இனிமேல் எதுவுமே வேண்டாம்.

அப்படித்தான் எல்லாமே இருந்தது. ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. நாம் இருவரும் பேசத் தொடங்கியதும், ஒருவருக்கொருவர் கண்களால் பார்த்துக்கொண்டதும் நம் பெற்றோர்களின் பார்வையில் படவில்லை. அதனால்தான் நம் மேல்நிலைப் பள்ளி விண்ணப்பங்கள் கண்டுகொள்ளாமல் போயின. நாம் இருவரும் ஒரே பள்ளிகளுக்கு, ஒரே வரிசையில் விண்ணப்பம் செய்திருக்கிறோம் என்று புகார் செய்திருந்தாலும் நாம் அதைக் கேள்விப்படவில்லை.

1.மேரி கல்லூரி, நமாகுங்கா 2.நபிசுனா பெண்கள் பள்ளி, 3.நகர மேல்நிலைப் பள்ளி, 4. மாடர்ன் மேல்நிலைப் பள்ளி.

உன்னுடைய முதல் தேர்வுப் பள்ளியில் உனக்கு இடம் கிடைத்துவிட்டது. எனக்கு மூன்றாவது தேர்வு. விடுமுறைகளின் போதுதான் நாமிருவரும் சந்தித்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நான் என் பள்ளியைப் பற்றிச் சொன்னேன். எனக்கு ஆரஞ்சு வண்ணக் குட்டைப் பாவாடை, வெள்ளை மேல் சட்டை, வெள்ளைக் காலுறைகள், பையன்கள் அணியும் பேட்டா காலணிகள். அது பூக்களைக் காட்சிக்கு வைத்திருப்பது போல எங்களைக் காட்டியது. உணவு இடைவேளைகளில் ஆரஞ்சு, வெள்ளைப் பூக்களின் படைகள் போலப் பள்ளி உணவகத்தையும், நாடக அறையையும், கால்பந்து மைதானத்தையும் நோக்கிப் போவோம். 

உன் பள்ளி உனக்கு மிகப் பிடித்திருக்கிறதென்று நீ சொன்னாய். ஐரிஷ் தலைமையாசிரியை சகோதரி செஃபாஸ் உங்கள் அனைவரையும் ஆங்கிலேயக் கறுப்பினப் பெண்களாக மாற்ற விரும்புவதாகக் கூறினாய். எங்கள் பள்ளியைப் போல ஒரே அங்குல நீளக் கேசம் வைத்துக்கொள்ளாமல், கேசத்தை நீளமாக வளர்த்துக்கொள்ளவும், ஒரே கட்டாகத் தூக்கிக் கட்டிக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்ட மிக அழகான பெண்களாக அங்கு இருந்தனர்.  

நாமிருவரும் நாவற்பழ மரத்தடியில் அமர்ந்திருந்தோம். அது மிக உயரமாக வளர்ந்துவிட்டது.. அந்த மரம் பன்னெடுங்காலமாக யாரும் பறிக்க இயலாத பழங்களுடன் அங்கிருந்தது. அந்தக் குடியிருப்பு வளாகத்தின் வீடுகள் கட்டப்படும் முன்பாகவே அந்த மரம் இருந்ததாகச் சொன்னார்கள். ஏப்ரல் மாதத்தில் இனிப்பும் துவர்ப்புமான சுவையுடன் நாவையே ஊதாவாக மாற்றிவிடும் சிறிய ஊதா வண்ணப் பழங்களைச் சுமந்திருக்கும் மரம், ஒவ்வொரு ஏப்ரல் மாதத்தின் காலை வேளைகளில் அந்தப் பழங்கள் உதிரத் தொடங்கியதும் நிலமே ஊதா வண்ணத் தரைவிரிப்பைப் போலக் காட்சியளிக்கும்.

அந்த விடுமுறையில் நீ வந்த போது உனது கன்னங்களிரண்டும் அவற்றுக்குள் இரண்டு ஆரஞ்சுகளைப் பொதித்து வைத்திருப்பதைப் போல பூரித்திருந்தன. அப்புறம் உன் முலைகள், நகாவா ஆரம்பப் பள்ளியில் இருந்த காலம் முழுவதும் நீ பார்த்துக்கொண்டும் வளர்வதற்கு வற்புறுத்திக்கொண்டுமிருந்த அந்த இரு பொருட்களும் அப்போது திரண்ட இரு நாவற்பழங்களைப் போல உன் மார்பிலிருந்தன. என்னுள் இருந்த, உன்னிலும் இருந்த, நம்மிடம் இருந்த அதே உணர்வுகள்- ஒருபோதும் சொல்லப்படாத, ஒருபோதும் பேசப்படாத உணர்வுகள்- புத்தம் புது மண்டஸி * போல நம்முள் பொங்கித் ததும்பியது. உன் குரலின் ஏற்றத்தாழ்வுகளை நான் கவனித்தேன். உன் மீது நான் பொறாமை கொண்டேன். உன்னை வெறுத்தேன். உன்னை மீண்டும் பார்க்கப் போகும் அடுத்த விடுமுறைக்காகத் தவிக்கும் என் கைகள் துணிவுடன் உன்னிரு நாவற்பழங்களைத் தீண்டும் அந்த நேரத்திற்காகக் காத்திருப்பது கடினமாக இருந்தது. 

இரண்டு விடுமுறைகளுக்குப் பின்னர், ஒரு இரவு நேரமாக அது இருந்தது. நீ அதிர்ச்சி அடையவில்லை. விரட்டவுமில்லை. உனக்கோ, எனக்கோ, நம் இருவருக்குமோ அந்த எல்லையை நாம் மீறக்கூடாது, மீறுவதைப் பற்றிச் சிந்திக்கவே கூடாது என்ற நினைப்பே எழவில்லை. உனது, எனது நாவற்பழங்கள். இரண்டும் இரண்டும் சேர்ந்து நான்கு- இரட்டைப் படை எண்கள் அதிர்ஷ்டம் வாய்ந்தவை. அந்த அதிர்ஷ்டம்தான் நம் இருவரையும் ஈர்த்ததா? நீ என்னை இழுத்து உன்னுடன் அணைத்துக்கொண்டாய். நாமிருவரும் பழுப்பு மண்ணில் உருள, அந்த மண் அதனுடைய சிவப்பு வண்ணத்தோடும் அழுக்கோடும் நம் கேசமெங்கும் ஒட்டிக்கொண்டது. மம்மா அத்திம் வீட்டிற்கு நேரெதிராக. அவர் நம் மீது டார்ச் விளக்கொளியைப் பாய்ச்சினார். அவர் நம்மைக் கவனித்துக்கொண்டே இருந்திருக்கிறார். தனக்கு ஒரு எலும்புத்துண்டு கிடைக்கப் போகிறதெனத் தெரிந்துகொண்ட பின் நாய் அதை விடாமல் உறுதியுடன் கவனித்துக்கொண்டிருப்பதைப் போல அவர் நம்மைக் கவனித்துக்கொண்டே இருந்திருக்கிறார். அதற்கான நேரம் மட்டுமே வாய்க்க வேண்டியிருந்தது.

சன்யூ, அடுத்த நாள் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தபின் நான் பாவ மன்னிப்புக்காகச் சென்றேன். புனித ஜூட் தேவாலயத்தில் சிலுவைக் குறியிட்ட பின் ஊதுவத்திகளின் நறுமணத்தை நுகர்ந்தேன். காற்றில் மிதப்பது போல, பலவீனமாக, களைப்பாக உணர்ந்தேன். பாதிரியாரிடம், ’என்னை மன்னித்து விடுங்கள் அப்பா, நான் பாவம் செய்து விட்டேன்’ எனக் கூறுகிறேன். கடைசி பாவ மன்னிப்புக்குப் பிறகு இரண்டு மாதங்களாகியிருந்தன. என் தலைக்குள்ளோ, இரண்டும் இரண்டும் சேர்ந்தால் நான்கு நாவற்பழங்கள்…

எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஆனால் உன்னுடைய அப்பா ரயில்வேயில் அவர் ஈட்டிய பணத்தைச் செலவழித்து உனக்குக் கடவுச்சீட்டு பெற்று பறவையின் சிறகுகளில் அமர்த்தி அனுப்பிவைத்த போது வருத்தமடைந்தேன். வந்தனம் லண்டன், இதோ சன்யூ வந்துவிட்டாள்.

உனது விமானம் நாளை வருவதாக மம்மா அத்திம் கூறினார். சன்யூ, நீ இங்கே எதை எதிர்பார்த்து வருகிறாயோ தெரியவில்லை. ஆனால் என் அம்மாவைக் காண்பாய். தன்னுடைய இயந்திரத்தில் அவர் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு வார்த்தையும் அவர் முகச்சுருக்கங்களை ஆழமாக்கி, அதற்கப்பால் அவர் கண்டடைந்த உண்மைகளைக் கூறும். நவாக்கா குடியிருப்பு வளாகத்தைக் காண்பாய். எதுவுமே இங்கு மாறவில்லை. பெண்கள் வீட்டிற்குள் அமர்ந்துகொண்டு தங்கள் கணவன்மார்கள் கொண்டுவந்து தரும் ஈரல் கறிக்காகக் காத்திருக்கிறர்கள். மம்மா அத்திமின் மகன்கள் அவருடைய சாப்பாட்டை உண்டபின் பெண்களை அழைத்து வந்து அவருடைய படுக்கையிலேயே உறவுகொள்கிறார்கள். முதுகைத் தாழ்த்திக் குனிந்தபடி நடக்கிறார் உன் அம்மா. அவர் தன்னுடைய மகிழ்ச்சியைக் கடைவீதிகளில் வாங்கும் உற்சாகத்தை இழந்துவிட்டார். பணி முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்துவிடுகிறார் உன் அப்பா. என் அம்மா சொல்வார், ’அவர் ஒரு  நல்ல கணவர்’.

ஒவ்வொரு வார இறுதியிலும் அம்மாவைப் பார்க்க வீட்டுக்குப் போவேன். அடர் சிவப்புப் பெட்டியைத் திறந்து பார்ப்பதை அவர் நிறுத்திவிட்டார். ஆனால் நான் பார்க்கிறேன். நீ லண்டனிலிருந்து எனக்கு எழுதியிருந்த கடிதத்தை அவற்றோடு சேர்த்துவிட்டேன். நீ நீங்கிச் சென்றபின் ஐந்தாண்டுகள் கழித்து எனக்கு வந்த ஒரே ஒரு கடிதம். நீ எழுதியிருந்தாய்-

A

I miss you.

S.

சன்யூ, நான் மெங்கோ மருத்துவமனையில் செவிலியாகப் பணிபுரிகிறேன். மருத்துவமனையின் அருகில் எனக்கு ஒரு சிறிய அறை உள்ளது. இரண்டு நாற்கலிகளாலும், கட்வே நகரிலிருந்து பெறப்பட்ட மேசையாலும், ஒரு கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டியாலும், நகர்ப்புற ஓவியக் கலைஞரிடம் எனக்காக வரைந்து தரச்சொல்லிக் கேட்டு வாங்கிய இரண்டு பெரிய நாவல் மரங்கள் கொண்ட இரண்டு ஓவியங்களால் அந்த அறை அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த மரங்களின் இலைகள் ஊதா வண்ணத்திலிருக்கின்றன. அவை புன்னகைக்கின்றன என்றே நான் சொல்வேன்.

நான் பெரும்பாலும் இரவு நேரப் பணியையே மேற்கொள்கிறேன். எனக்கு அவை பிடித்திருக்கின்றன, என்னால் இரவுகளில்தான் துல்லியமாகப் பார்க்க முடிகிறது. இரவுகளில் மீண்டும் மீண்டும் என் கண்களின் முன் ஒவ்வொரு முறையும் நீ உயர்ந்து நின்றதைப் பார்க்க முடிகிறது. சன்யூ, நீ சூரியனைப் போல எழுந்து, மம்மா அத்திம் வீட்டின் முன்பாக நிற்கும் நாவல் மரத்தைப் போல உயரமாக நிற்கிறாய்.

*

அருஞ்சொற்கள்:

  1. எண்டாக்டிவா- விளிம்பு நிலை மக்களுக்காக வழங்கப்படும் அரசாங்கத் தொகை
  2. கமுலாரி – உகாண்டாவில் விளையும் காரமான மிளகாய்
  3. ஹக்கூனா மட்டாட்டா- கவலையேதுமில்லை (ஸ்வாஹிலி மொழி)
  4. கபாகா- பலுண்டா பகுதியின் தொல்குடி அரசர்
  5. மண்டஸி- எண்ணெயில் பொறித்தெடுக்கப்படும் மாவுப் பதார்த்தம்.

ஆசிரியர் குறிப்பு:

Monica Arac de Nyeko (1979) உகாண்டா நாட்டு எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், குறுநாவல்கள் எனப் பல தளங்களில் இயங்குபவர். இவரது கதைகள் பெரும்பாலும் உகாண்டா நாட்டின் அரசியல், சமூகப் பிரச்சினைகளைப் பின்புலமாகக் கொண்டவையாகவே இருக்கின்றன. உகாண்டா பெண் எழுத்தாளர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும், T:AP Voices பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் இருக்கிறார். இவரது அரசியல், கட்டுரைகள் சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளன. நாற்பது வயதிற்குட்பட்ட சிறந்த ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் ஒருவராக இவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இவரது இந்தச் சிறுகதை, தற்பாலின ஈர்ப்பு தடைசெய்யப்பட்ட நாட்டில் இரு பெண்களிடையே ஏற்படும் ஈர்ப்பைப் பற்றிப் பேசுகிறது. மிகுந்த விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஒருங்கே பெற்ற இந்தச் சிறுகதை ஆப்பிரிக்கப் புனைவுக்கான உயரிய விருதான Caine prize-ஐ வென்றுள்ளது. தற்போது இவர் கென்யா நாட்டில் வசித்து வருகிறார்.

*

ஆங்கில மூலம்: Jambula Tree by Monica Arac de Nyeko, Jambula Tree and Other Stories, New Internationalist Publications Ltd, 2009 Edition.

1 comment

Kasturi G October 19, 2021 - 8:36 pm

Very Good
Salutations to Monica and Latha translator.
Thanks

Comments are closed.