வீரத் திருமகன்கள் – வில்லியம் ஃபாக்னர்

by கார்குழலி
1 comment

பீட்டும் (Pete) நானும் முதியவர் கில்லேக்ரூவின் வீட்டுக்கு வானொலி செய்திகளைக் கேட்கப் போவோம். இரவு உணவு முடிந்து இருட்டு விழுந்த பிறகு அவர் வீட்டு முன்னறை ஜன்னலுக்கு வெளியே நின்றுகொள்வோம். கில்லேக்ரூவின் மனைவிக்குக் காது கேட்காது என்பதால் வானொலியின் சத்தத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கூட்டி வைப்பார். அதனால் அவர் மனைவிக்கு எவ்வளவு தெளிவாகக் கேட்குமோ அவ்வளவு தெளிவாக ஜன்னலுக்கு வெளியே நிற்கும் எங்களுக்கும் கேட்கும்.

“என்னது? ஜப்பானியர்களா? பேர்ல் ஹார்பர் என்றால் என்ன?” என்று இரவு பீட்டிடம் கேட்டேன். “ஷ்ஷ்ஷ்…” என்ற பதில் மட்டும் வந்தது.

அங்கே அந்தக் குளிரில் நின்றபடியே வானொலியில் செய்தியாளர் சொல்வதைக் கேட்டோம். எனக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. சிறிது நேரத்தில் அப்போதைக்கு வேறு செய்தி எதுவும் இல்லை என்று சொன்னார் செய்தியாளர். வீட்டுக்குத் திரும்பும் வழியில் அவர் என்ன சொன்னார் என்பதை விளக்கினான் பீட். அவனுக்கு இருபது வயது ஆகிவிட்டது. சென்ற ஜூனில் பள்ளிப் படிப்பை முடித்திருந்தான். அவனுக்கு நிறைய விஷயம் தெரிந்தது. முக்கியமாக, பேர்ல் ஹார்பரின் மீது குண்டு வீசும் ஜப்பானியர்களைப் பற்றியும் பேர்ல் ஹார்பர் தண்ணீருக்கு அந்தப் பக்கம் இருப்பது பற்றியும் நிறையத் தெரிந்தது.

“எந்தத் தண்ணீருக்கு அந்தப் பக்கம்? ஆக்ஸ்போர்டில் இருக்கும் அரசாங்க நீர்த் தேக்கத்துக்கு அந்தப் பக்கமா?” என்று கேட்டேன்.

“இல்லை, பெரிய நீருக்கு அந்தப் பக்கம். பசிஃபிக் பெருங்கடலுக்கு அந்தப் பக்கம்,” என்று விளக்கினான் பீட்.

வீடு வந்துசேர்ந்தோம். அம்மாவும் அப்பாவும் தூங்கியிருந்தார்கள். நானும் பீட்டும் உறங்கப் போனோம். பசிஃபிக் பெருங்கடல் எங்கே இருக்கிறது என்பது எனக்குக் கொஞ்சமும் புரிபடவில்லை. பீட் எனக்கு எல்லாவற்றையும் சொன்னான்.

“உனக்கென்ன எதுவுமே தெரியவில்லை? ஒன்பது வயசாகிறது. செப்டம்பரில் இருந்து பள்ளிக்குப் போகிறாய். இன்னும் ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லையா?” என்று கேட்டான் பீட்.

“நாங்கள் இன்னும் பசிஃபிக் பெருங்கடல் வரையில் போகவில்லை என்று நினைக்கிறேன்,” என்று பதில் சொன்னேன்.

அப்போதுதான் வெட்ச் செடியை விதைத்துக்கொண்டிருந்தோம். நவம்பர் 15ஆம் தேதிக்குள் அந்த வேலையை முடித்திருக்க வேண்டும். ஆனால் அப்பா இன்னும் செய்து முடிக்கவில்லை. எனக்கும் பீட்டுக்கும் நினைவுதெரிந்த நாளில் இருந்து எல்லாவற்றிலும் பின்தங்கி இருப்பது போலவே இதிலும் இருந்தார். இன்னும் விறகு வெட்டும் வேலையும் முடியவில்லை. ஆனாலும் ஒவ்வொரு இரவும் நானும் பீட்டும் முதியவர் கில்லேக்ரூவின் முன்னறை ஜன்னலுக்கு வெளியே நின்றுகொண்டு குளிரில் நடுங்கியபடியே வானொலி செய்தியைக் கேட்போம். பிறகு வீட்டுக்கு வந்து படுக்கையில் படுத்தபடியே எல்லா விஷயங்களையும் எனக்கு விவரிப்பான் பீட். அதாவது, சிறிது நேரத்துக்குச் சொல்லுவான். அப்புறம் மெளனமாக இருப்பான். எதைப் பற்றியும் பேச விரும்பாதது போல இருக்கும். “தூங்க வேண்டும், நீ கொஞ்சம் பேசாமல் இரு,” என்பான். ஆனால் அவனுக்குத் தூங்கும் எண்ணமில்லை என்பது தெரியும்.

அப்படியே படுத்திருப்பான். தூங்கியிருந்தால்கூட இப்படி அசையாமல் படுத்திருக்க மாட்டான். அவனுக்குள் இருந்து ஏதோ ஒன்று வெளிப்படுவதை என்னால் உணர முடிந்தது. என்னிடம் கோபமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் அவன் என்னைப் பற்றி நினைக்கவில்லை என்பதும் தெரியும். எதையோ எண்ணி வருத்தப்படுவது போல இருக்கும். ஆனால் அதுவும் உண்மையல்ல. ஏனென்றால் வருத்தப்படும் அளவுக்கு எந்த விஷயமும் இல்லை. அவன் அப்பாவைப் போல எதிலும் பின்தங்கவில்லை. அதனால் எதையும் செய்து முடிக்காமல் விட்டான் என்பதும் இல்லை.

அவன் பள்ளிப்படிப்பை முடித்ததும் பத்து ஏக்கர் நிலத்தை அவனுக்குக் கொடுத்தார் அப்பா. பத்து ஏக்கர் அளவிலாவது தன் பிரச்சினை குறைந்ததே என்று மகிழ்ச்சியுற்றார் என்று எனக்கும் பீட்டுக்கும் தோன்றியது. அந்தப் பத்து ஏக்கரிலும் வெட்ச் செடியை விதைத்து அது வளர்ந்ததும் பனிக்காலம் முடிவதற்குள் அதை மண்ணில் மட்க வைத்திருந்தான். அதனால் அதைக் குறித்தும் அவன் யோசிக்கவில்லை என்பது தெரியும்.

ஆனால் ஏதோ ஒரு விஷயம் இருந்தது. இன்னமும் ஒவ்வொரு இரவும் முதியவர் கில்லேக்ரூவின் வீட்டுக்குப் போய் வானொலி செய்திகளைக் கேட்டோம். அவர்கள் இப்போது பிலிப்பைன்ஸில் இருந்தார்கள். படைத்தலைவர் மேக்ஆர்தர் அவர்கள் முன்னேறி வருவதைத் தடுத்து நிறுத்தியிருந்தார். பிறகு வீட்டுக்குத் திரும்பி வந்து படுத்துக்கொள்வோம். பீட் என்னிடம் எதைப் பற்றியும் விளக்கவோ பேசவோ மாட்டான். தாக்குவதற்காக ஒளிந்துகொண்டிருப்பதைப் போல அசையாமல் படுத்திருப்பான். அவனைத் தொடுவேன். அவன் உடம்பும் காலும் இரும்பாக இறுகியிருக்கும். கொஞ்ச நேரத்தில் தூங்கிவிடுவேன்.

அந்த நாள் முழுவதும் அவன் என்னிடம் எதுவுமே பேசவில்லை. மரம் வெட்டும்போது போதிய அளவு வெட்டவில்லை என்று எரிந்து விழுந்தான். அன்றைய இரவுதான் அதைச் சொன்னான். “நான் போகவேண்டும்.”

“எங்கே போகவேண்டும்?”

“போருக்கு.”

“இன்னும் வேண்டிய விறகை வெட்டி முடிக்கவில்லையே.”

“விறகா… நாசமாகப் போகட்டும்.”

“சரி, எப்போது கிளம்புகிறோம்?”

நான் சொன்னது அவன் காதில் விழவில்லை. இருட்டில் இரும்பைப் போல கடினமாக அசையாமல் படுத்திருந்தான். 

“நான் போகவேண்டும். அமெரிக்காவை மற்றவர்கள் இப்படி நடத்துவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது.”

“ஆமாம். விறகு இருக்கிறதோ இல்லையோ, நாம் கிளம்பியாக வேண்டும்,” என்றேன். 

இந்த முறை நான் சொன்னது அவன் காதில் விழுந்தது. அப்போதும் அசையாமல் படுத்திருந்தான். ஆனால் இந்த அசைவின்மை வேறு மாதிரியானது.

“நீயா? போருக்கா?”

“நீ பெரியவர்களோடு சண்டை போடு. நான் சின்னவர்களோடு சண்டை போடுகிறேன்,” என்றேன். 

ஆனால் நான் போருக்குப் போகமுடியாது என்றான். முதலில் நான் அவன் பின்னாடியே சுற்றுவது பிடிக்கவில்லை என்று நினைத்தேன். டல் கடைக்கு வரும் பெண்களைச் சந்திப்பதற்காக அவன் போகும்போது அப்படிச் செய்வான்.

பிறகு சிறுவனாக இருப்பதால் இராணுவம் என்னைச் சேர்த்துக்கொள்ளாது என்றான். அப்போதுதான் அவன் உண்மையாகவே சொல்கிறான் என்பது புரிந்தது. எந்த வகையிலும் நான் அவனுடன் போக முடியாது. அது வரையில் அவன் போகப் போகிறான் என்பதைக்கூட நான் நம்பவில்லை. ஆனால் இப்போதுதான் அவன் போகப் போகிறான் என்பதும் என்னை அழைத்துச் செல்லமாட்டான் என்பதும் தெளிவாகியது.

“நான் வந்தால் தேவையான விறகை வெட்டித் தருவேன். தண்ணீர் எடுத்து வருவேன்! எப்படியும் விறகும் தண்ணீரும் வேண்டுமே!” என்று சொன்னேன்.

நான் சொல்வதைக் கேட்டான். இப்போது இரும்பு போல இல்லை. 

ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்தான். அவன் கையை என் நெஞ்சில் வைத்தான். இப்போது நேராகப் படுத்துக்கொண்டு இருந்தேன்.

“இல்லை, நீ இங்கேயே அப்பாவுக்கு உதவியாக இரு,” என்றான்.

“எதில் உதவுவது?” என்று கேட்டேன். “அவர் இன்னும் எதையும் உருப்படியாகச் செய்யவில்லை. இதைவிடவும் பின்தங்கி இருக்கவும் முடியாது. நானும் நீயும் போய் ஜப்பானியர்களைத் தோற்கடிக்கும் வேலையைப் பார்ப்போம். இந்தச் சின்ன நிலத்தை அவராகவே பார்த்துக்கொள்வார். நானும் உன்னுடன் வந்தே தீருவேன். நீ போயாக வேண்டுமென்றால் நானும் போய்த்தான் ஆகவேண்டும்.”

“இல்லை,” என்றான் பீட். “சத்தம் போடாதே. ஷ்ஷ்ஷ்ஷ்….” அவன் உண்மையாகச் சொல்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவனே அதைச் சொல்லட்டும் என்றுதான் காத்திருந்தேன்.

என் முயற்சியைக் கைவிட்டேன்.

“அப்படியென்றால் நான் உன்னுடன் வரமுடியாதா?” என்று கேட்டேன். 

“முடியாது. நீ என்னுடன் வரமுடியாது. நீ எல்லா விதத்திலும் மிகவும் சின்னவன்.”

“சரி. கொஞ்ச நேரம் பேசாமல் இரு. நான் தூங்கவேண்டும்,” என்றேன்.

எதுவும் பேசாமல் திரும்பிப் படுத்தான். நான் தூங்குவது போல நடித்தேன். சிறிது நேரத்தில் அவன் தூங்கிவிட்டான். இதுநாள் வரையிலும் போருக்குப் போகவேண்டும் என்ற கவலையால்தான் தூக்கம் வராமல் சிரமப்பட்டான் என்பதும் போகவேண்டும் என்ற முடிவுக்கு வந்த பிறகு அந்தக் கவலை போய்விட்டது என்பதும் புரிந்தது. 

அடுத்த நாள் காலை அம்மாவிடமும் அப்பாவிடமும் சொன்னான். அம்மா எதுவும் சொல்லவில்லை. அப்புறம் அழுதார்.

“இல்லை, அவன் போகக்கூடாது,” என்று அழுகைக்கு நடுவே சொன்னார். “முடியுமென்றால் அவனுக்குப் பதிலாக நான் போகிறேன். நான் ஒன்றும் இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் போகவில்லை. வேண்டுமென்றால் ஜப்பானியர்கள் நாட்டை எடுத்துக்கொள்ளட்டும், அவர்களே வைத்துக்கொள்ளட்டும். ஆனால் என்னையும் என் குடும்பத்தையும் குழந்தைகளையும் விட்டுவிட்டால் போதும். என் தம்பி மார்ஷ் போருக்குச் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. அவனுக்குப் பத்தொன்பது வயதாகும்போது போகவேண்டிய கட்டாயம் வந்தது. எதற்காகப் போகவேண்டும் என்று புரியாமல் இப்போது நான் பரிதவிப்பது போன்ற அதே நிலைமையில்தான் என் அம்மாவும் அப்போது இருந்தார். ஆனாலும் ‘நீ போயாக வேண்டுமென்றால் போகத்தானே வேண்டும்’ என்றார். அது போலவே இப்போதும் பீட் போய்த்தான் ஆகவேண்டுமென்றால் போகட்டும். அதற்கான காரணத்தை நான் புரிந்துகொள்ளவேண்டுமென்று மாத்திரம் சொல்லாதே.”

அப்பாதான் மனம்விட்டுப் பேசினார். “போருக்கா போகிறாய்?” என்று கேட்டார். “அதனால் கொஞ்சமும் பிரயோசனம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உனக்கு இராணுவத்தில் சேரும் வயதும் ஆகவில்லை. யாரும் நாட்டை முற்றுகையிடவுமில்லை. வாஷிங்டனில் பிரதமர் நடப்பதை எல்லாம் கவனித்தபடி  இருக்கிறார். ஏதேனும் சரியில்லை என்றால் உடனே நமக்குத் தெரிவிப்பார். உன் அம்மா சொல்கிறாளே? அந்த இன்னொரு போரின் போது நானும் இராணுவத்தில் சேர்ந்தேன். என்னை நேரே டெக்சஸுக்கு அனுப்பினார்கள். அங்கே எட்டு மாதங்கள் இருந்தேன். இறுதியில் போர் முடிந்தது. உங்கள் மாமா மார்ஷ் பிரான்ஸ் நாட்டுப் போர்க்களத்தில் பட்ட காயமே எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் போதுமானது என்று தோன்றுகிறது. என்னுடைய வாழ்நாளில் இந்த நாட்டைக் காப்பதற்காகத் தேவையானதை ஏற்கெனவே செய்து முடித்துவிட்டேன். அத்தோடு நீ இல்லையென்றால் வயலைப் பார்த்துக்கொள்ள யார் உதவி செய்வார்கள்? நான் இன்னுமே பின்தங்கி விடுவேன் என்று தோன்றுகிறது.”

“எனக்கு நினைவுதெரிந்த நாளில் இருந்து நீங்கள் பின்தங்கித்தான் இருக்கிறீர்கள்,” என்றான் பீட். “எப்படியானாலும் நான் போகத்தான் செய்வேன். நான் போகவேண்டும்.”

“அவன் போய்த்தான் ஆகவேண்டும். அந்த ஜப்பானியர்கள் இருக்கிறார்களே…” என என் பங்குக்கு நானும் சொன்னேன்.

“நீ கொஞ்சம் பேசாமல் இரு!” என்று அழுதபடியே சொன்னார் அம்மா. “உன்னிடம் யார் கேட்டது! நீ போய் விறகை வெட்டி வா! இப்போதைக்கு நீ அதைத்தான் செய்யமுடியும்.”

நான் போய் விறகை வெட்டி வந்தேன். அடுத்த நாள் முழுவதும் நானும் பீட்டும் அப்பாவும் முடிந்த வரையில் பனிக்காலத்துக்குத் தேவையான விறகை வெட்டினோம். இன்னும் அடுப்பில் எரிக்காமல் இருக்கும் ஒற்றை விறகையே மிகுதியான விறகு என்று அப்பா சொல்வார் என்று விளக்கம் சொன்னான் பீட்

அம்மா பீட் கிளம்புவதற்கான ஆயத்தங்களைச் செய்தார். அவனுடைய துணிமணியைத் துவைத்து, தைக்க வேண்டியவற்றைத் தைத்துச் சீர்ப்படுத்தினார். அப்புறம் ஒரு பெட்டி நிறைய அவனுக்குத் தேவையான உணவைச் சமைத்தார். அன்று இரவு அம்மா அழுதுகொண்டே பீட்டின் பெட்டியைத் தயார்செய்வதைக் கேட்டபடி படுக்கையில் கிடந்தோம். சிறிது நேரம் கழித்து பீட் எழுந்து போனான். அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் ஓசை கேட்டது.

“உனக்கு விருப்பம் என்பதால் நானும் ஒத்துக்கொண்டேன். ஆனால் அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளச் சொல்லாதே. அது எப்போதுமே என்னால் முடியாது, நீ எதிர்பார்க்கவும் செய்யாதே,” என்று இறுதியாகச் சொன்னார். பீட் திரும்பவும் வந்து படுக்கையில் படுத்தான். இரும்பைப் போல இறுக்கமாகப் படுத்திருந்தான். அப்புறம் “நான் போயாக வேண்டும். போய்த்தான் ஆகவேண்டும்,” என்றான். யாரிடமும் சொல்லவில்லை. என்னிடமும் பேசவில்லை. பொதுவாகச் சொன்னான்.

“நீ நிச்சயம் போகவேண்டும். அந்த ஜப்பானியர்கள்…” என்றேன். வேகமாக என் பக்கம் திரும்பினான். இருட்டில் என்னைப் பார்த்தான். 

“நல்ல வேளையாக நீ இதை எளிதாக ஏற்றுக்கொண்டாய். மற்ற எல்லோரையும் விடவும் உன்னைச் சமாளிப்பது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன்,” என்றான்.

“என்னால் வேறு என்ன செய்யமுடியும்? இன்னும் சில வருடங்கள் கடந்த பிறகு நானும் உன்னோடு அங்கு வரமுடியும் என்று நினைக்கிறேன். வேண்டுமென்றால் பாரேன். நீ இருக்கும் இடத்துக்கு நானும் வந்துவிடுவேன்.”

“அப்படி நடக்கவேண்டாம் என்று நினைக்கிறேன். போருக்குப் போவது விளையாடுவதற்கல்ல. ஒரு மனிதன் பெற்ற தாயை அழவிட்டுப் போவது விளையாட்டல்ல,” என்றான்.

“அப்படியென்றால் நீ எதற்காகப் போகிறாயாம்?”

“நான் போயாக வேண்டும். எப்படியும் போகவேண்டும். நீ தூங்கு. காலையில் முதல் பேருந்தைப் பிடிக்கவேண்டும்.”

“சரி. மெம்ஃபிஸ் பெரிய இடம் என்று சொல்வார்களே? இராணுவம் இருக்கும் இடத்தை எப்படிக் கண்டுபிடிப்பாய்?”

“யாரையாவது கேட்டுப் போய்விடுவேன். நீ இப்போது தூங்கு.”

“அப்படியா? இராணுவத்தில் சேர எங்கே செல்லவேண்டுமென்றா கேட்பாய்?”

“ஆமாம்,” என்றான் பீட். எனக்கு முதுகைக் காட்டித் திரும்பிப் படுத்தான். “கொஞ்ச நேரம் பேசாமல் தூங்கு.”

இருவரும் உறங்கினோம். மறுநாள் விளக்கை ஏற்றிவைத்து அதன் ஒளியில் காலை உணவைச் சாப்பிட்டோம். பேருந்து ஆறு மணிக்கு வந்துவிடும். அம்மா அழுவதை நிறுத்திவிட்டார். முகத்தில் புன்னகை இல்லை. மும்முரமாக வேலை செய்தார். எங்களுக்கு உணவைப் பரிமாறினார். பீட்டின் பெட்டியை அடுக்கியிருந்தார். போருக்குப் போவதற்குப் பெட்டியெல்லாம் தேவையில்லை என்றான் பீட். பண்பட்ட மனிதர்கள் மாற்று உடுப்பு இல்லாமல் எங்குமே போகமாட்டார்கள், அது போருக்குப் போவதாக இருந்தாலும் சரி. அந்த உடுப்பை வைத்துக்கொள்ள பெட்டியும் எடுத்துச் செல்வார்கள் என்றார் அம்மா.

உணவுப் பெட்டியில் வறுத்த கோழி இறைச்சி, பிஸ்கோத்து இவற்றோடு பைபிளையும் எடுத்து வைத்தார். கிளம்பும் நேரமாகிவிட்டது. அது வரையில் அம்மா பேருந்து நிலையத்துக்கு வழியனுப்ப வரப்போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியாது.

பீட்டின் தொப்பியையும் மேலங்கியையும் எடுத்து வந்தார். இப்போது அழுவதை நிறுத்திவிட்டார். பீட்டின் தோளில் தன்னுடைய கைகளை வைத்துக்கொண்டு நகராமல் நின்றார். அவன் தோள்களைப் பற்றியபடி நின்ற அவர் முகம் கடுமையாகவும் குரூரமாகவும் தெரிந்தது. நேற்றிரவு என்னிடம் ‘நீ சரியாக இருப்பதே போதும்’ என்று பீட் சொல்கையில் அவன் முகமும் இப்படித்தான் இருந்தது.

“அவர்கள் இந்த நாட்டை எடுத்துக்கொள்ளட்டும். அவர்களே வைத்துக்கொள்ளட்டும். என்னையும் என்னவர்களையும் தொல்லைப்படுத்தாமல் இருந்தால் சரி,” என்றார் அம்மா. “நீ யாரென்பதை ஒருபோதும் மறக்காதே. நீ பணக்காரனில்லை. இந்த ஊரின் எல்லையைத் தாண்டியிருக்கும் உலகில் இருப்பவர்கள் உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டதுகூட இல்லை. ஆனால் உன் இரத்தம் மற்ற எவரின் இரத்தத்தைப் போலவும் சிறப்பானது என்பதை எப்போதும் மறந்துவிடாதே.”

அம்மா அவனை முத்தமிட்டார். பிறகு வீட்டில் இருந்து கிளம்பினோம். அப்பா பெட்டியை எடுத்துக்கொண்டார். அது பற்றி பீட் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை. இன்னும் விடியலின் வெளிச்சம் வரவில்லை. நெடுஞ்சாலையில் இருக்கும் தபால்பெட்டி வரையில் நடந்துசென்ற பிறகும்கூட சூரியன் வரவில்லை. சிறிது நேரத்தில் பேருந்தின் விளக்கொளி தெரிந்தது. பேருந்து அருகில் வரும்வரையில் கண்கொட்டாமல் பார்த்தேன். பீட் கையைக் காட்டி நிறுத்தினான். அப்போது விடியத் தொடங்கியது. நான் கவனிக்காத நொடியில் அது நடந்திருந்தது.

அந்தக் காலத்தில் மார்ஷ் மாமா பிரான்ஸில் அடிபட்ட கதையையும் 1918இல் டெக்சஸுக்கு அப்பா கிளம்பிப் போனதே 1942இல் அமெரிக்காவைக் காப்பாற்றப் போதுமானது என்பதையும் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பதைப் போல இப்போதும் அப்பா எதையேனும் உளறுவார் என்று நானும் பீட்டும் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. சரியாகவே நடந்துகொண்டார். “போய் வா மகனே. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிதம் எழுது என்று உன் அம்மா சொன்னதை மறந்துவிடாதே,” என்று மட்டும் சொன்னார்.

பிறகு பீட்டின் கையைக் குலுக்கினார். பீட் கண்விலக்காமல் என்னைப் பார்த்தான். பிறகு என் தலையில் கையை வைத்து அவன் ஆட்டியதைப் பார்த்தால் என் தலையே பிய்ந்து கையோடு வந்துவிடும் போல இருந்தது. பிறகு சட்டென பேருந்துக்குள் குதித்து ஏறினான். கதவு மூடிக்கொண்டதும் முனகலோடு கிளம்பியது பேருந்து. அங்கிருந்து நகரத் தொடங்கியதும் அதன் முக்கலும் முனகலும் சக்கரம் அரைபடும் ஓசையும் அதிகமானது. வேகமாகப் போனது என்றாலும் அதன் பின்புறம் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்த விளக்குகள் சிறியதாக மாறவே இல்லை. இரண்டும் ஒரே சீராகப் பயணித்து ஒரு கட்டத்தில் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு ஒரே விளக்காக மாறிவிடும் போலத் தோன்றியது. ஆனால் அப்படி நடக்கவில்லை. பேருந்து போய்விட்டது. நான் வெடித்து அழுதிருப்பேன். ஒன்பது வயது ஆகியிருந்தால் என்ன? அதற்கு அதிகமாகவும்தான் ஆகியிருந்தால் என்ன?

நானும் அப்பாவும் வீட்டுக்குத் திரும்பினோம். அன்றைய நாள் முழுவதும் மரம் வெட்டுவதில் கழித்தோம். மதியம் வரையில் ஓய்வே கிடைக்கவில்லை. பிறகு என்னுடைய கவண்வில்லை எடுத்துக்கொண்டேன். நான் சேகரித்த பறவை முட்டைகளைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. பீட் தான் சேகரித்தவற்றை என்னிடம் கொடுத்துவிட்டான். அவனுக்கு இருபது வயதாகியது என்றாலும் என்னோடு சேர்ந்து பெட்டியை எடுத்து வைத்துக்கொண்டு அவற்றை வேடிக்கை பார்ப்பான்.

பெட்டி பெரிதாக இருந்ததால் நீண்ட தூரம் தூக்கிப் போவது சிரமமாக இருந்தது. நாரையின் முட்டையை மட்டும் தீப்பெட்டியினுள் வைத்தேன். இருப்பதிலேயே சிறந்தது அதுதான். அதையும் கவண்வில்லையும் களஞ்சியத்தில் ஒளித்து வைத்தேன். இரவு உணவைச் சாப்பிட்டதும் எல்லோரும் தூங்கப் போனோம். அந்த அறையிலும் படுக்கையிலும் இன்னொரு இரவைக் கழிக்க முடியாது என்று தோன்றியது. அப்பாவின் குறட்டைச் சத்தம் கேட்டது. அம்மாவிடம் இருந்து எந்த ஓசையும் எழவில்லை. தூங்குகிறாரா விழித்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் தூங்கவில்லை என்றே தோன்றியது.

காலணிகளை ஜன்னலுக்கு வெளியே வீசினேன். பீட்டுக்குப் பதினேழு வயதான போது இந்த வயதில் இரவு நேரத்தில் ஊர் சுற்றப்போவது சரியல்ல என்று அப்பா அவனை வெளியே விடாத இரவுகளில் அவன் செய்தது போலவே ஜன்னல் வழியாக வெளியே இறங்கினேன். காலணிகளை அணிந்தேன், களஞ்சியத்துக்குப் போய் கவண்வில்லையும் நாரை முட்டையையும் எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலையை நோக்கி நடந்தேன்.

குளிரவில்லை. ஆனால் கும்மிருட்டாக இருந்தது. நெடுஞ்சாலை விரிந்து கிடந்தது. யாரும் அதைப்  பயன்படுத்தியது போலவே தெரியவில்லை. ஒரு மனிதன் கீழே படுத்தால் உயரமாகத் தெரிவது போல இன்னும் கொஞ்சம் நீண்டு கிடந்தது. இருபத்தியிரண்டு மைல்களைக் கடந்து ஜெஃபர்ஸன் போய்ச் சேர்வதற்குள் சூரியன் உச்சிக்கு ஏறிவிடுவான் என நினைத்துக்கொண்டேன். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. மலைமீது ஏறி ஊருக்குள் நுழைந்த சமயத்தில்தான் விடியத் தொடங்கியது. அருகில் இருக்கும் வீடுகளில் தயாரிக்கப்படும் காலையுணவின் நறுமணம் நாசிக்குள் நுழைந்தது. கையில் ஒரு உலர்ந்த பிஸ்கோத்தையாவது எடுத்து வந்திருக்கலாமோ என்று நினைத்தேன். ஆனால் இப்போது அதைச் செய்யமுடியாது.

ஜெஃபர்ஸனைத் தாண்டித்தான் மெம்ஃபிஸுக்குச் செல்லவேண்டும் என்று சொல்லி இருந்தான் பீட். ஆனால் அங்கிருந்து எண்பது மைல் தூரத்தில் இருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. காலியாக இருந்த ஊர் சதுக்கத்தில் நின்றிருந்தேன். பொழுது கொஞ்சங்கொஞ்சமாகப் புலர்ந்தது. தெரு விளக்குகள் இன்னும் எரிந்தன. அப்போதுதான் சட்டம் என்னை மேலிருந்து கீழாகப் பார்த்தார். நான் இன்னமும் மெம்ஃபிஸில் இருந்து எண்பது மைல் தொலைவில் இருந்தேன். ஓர் இரவு முழுவதும் நடந்து இருபத்தியிரண்டு மைல்களைக் கடந்திருந்தேன். அதே வேகத்தில் நடந்து மெம்ஃபிஸை அடைவதற்குள் பீட் பேர்ல் ஹார்பருக்கு கிளம்பியிருப்பான்.

“எங்கிருந்து வருகிறாய்?” என்று கேள்வி கேட்டார் சட்டம். 

மீண்டும் சொன்னேன். “மெம்ஃபிஸுக்குப் போகவேண்டும். என் அண்ணன் அங்கே இருக்கிறான்.”

“உன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இங்கே இல்லையா?” என்று கேட்டார் சட்டம். “அந்த அண்ணனைத் தவிர வேறு யாரும் இல்லையா? அண்ணன் மெம்ஃபிஸில் இருக்கும் போது நீ எப்படி இத்தனை தொலைவில் இங்கே வந்து சேர்ந்தாய்?”

மீண்டும் சொன்னேன். “மெம்ஃபிஸுக்குப் போகவேண்டும். உங்களோடு பேசி நேரத்தை வீணாக்க முடியாது. நடந்து போகவும் அவகாசமில்லை. இன்றைக்குள் அங்கே போய்ச் சேர வேண்டும்.”

“இங்கே வா,” என்றார் சட்டம்.

இன்னொரு தெருவுக்குப் போனோம். அங்கே பேருந்து நின்றிருந்தது. நேற்று காலை பீட் ஏறிச் சென்றதைப் போன்ற பேருந்து. இப்போது அதன் விளக்குகள் எரியவில்லை. காலியாக இருந்தது. இரயில் நிலையத்தைப்  போலவே பேருந்துக்கும் ஒரு நிலையம் இருந்தது. பயணச்சீட்டு வழங்கும் இடம் இருந்தது. அதை வழங்க ஒரு மனிதரும் உட்கார்ந்திருந்தார். “அங்கே போய் உட்கார்,” என்றார் சட்டம். அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்தேன்.

“உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டும்,” என்று அங்கிருந்த மனிதரிடம் சொன்னார் சட்டம். பேசி முடித்ததும் அவரிடம் சொன்னார். “இவன்மீது ஒரு கண்வைத்துக் கொள்ளுங்கள். திருமதி ஹேபர்ஷம் எழுந்து தயாரானதும் வந்துவிடுவேன்.” பிறகு வெளியே போனார். நான் எழுந்து பயணச்சீட்டு வழங்கும் இடத்துக்குப் போனேன்.

“எனக்கு மெம்ஃபிஸுக்குப் போகவேண்டும்,” என்றேன்.

“போகலாமே,” என்றார் அந்த மனிதர். “இப்போதைக்குப் போய் அங்கே உட்கார். திருவாளர் ஃபுட் இதோ இப்போது வந்துவிடுவார்.”

“எனக்குத் திருவாளர் ஃபுட் என்று யாரையும் தெரியாதே. மெம்ஃபிஸுக்குப் போகவேண்டும்.”

“காசு வைத்திருக்கிறாயா? பயணச்சீட்டு விலை எழுபத்தி இரண்டு செண்ட்,” என்றார்.

தீப்பெட்டிக்குள் இருந்து நாரை முட்டையை வெளியே எடுத்தேன். “இதை வைத்துக்கொண்டு மெம்ஃபிஸுக்கு ஒரு சீட்டு தாருங்கள்.”

“என்னது அது?”

“நாரை முட்டை. நீங்கள் இதற்கு முன்னால் இதைப் பார்த்திருக்கவே முடியாது. ஒரு டாலர் மதிப்பு பெறும். ஆனால் உங்களுக்காக எழுபத்தியிரண்டு செண்டுக்குத் தருகிறேன்.”

“இல்லை, இந்தப் பேருந்து நிறுவனத்தில் பணத்தைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பறவை முட்டை, ஆடு. கோழி என்று பணத்துக்குப் பதிலாக வேறு பொருளைப் பண்டமாற்றாக பெற்றுக்கொண்டால் என்னை வேலையைவிட்டுத் தூக்கிவிடுவார்கள். நீ போய் அங்கே உட்கார். திருவாளர் ஃபுட்…”

கதவை நோக்கி நகர ஆரம்பித்தேன். என்னை எட்டிப் பிடித்துவிட்டார். கையை மேசையின்மீது ஊன்றித் தாண்டிக் குதித்து என் சட்டையை எட்டிப் பிடித்தார். சட்டெனப் பேனாக்கத்தியை வெளியே எடுத்துத் திறந்தேன்.

“தொட்டால் வெட்டிவிடுவேன்.” 

அவரை ஏமாற்றிவிட்டு கதவுப் பக்கம் ஓட முயன்றேன். ஆனால் மற்றெவரைவிடவும் வேகமாக நகர்ந்தார். பீட்டைப் போலவே. என்னைத் தடுத்து நிறுத்தும் வகையில் கதவுக்குக் குறுக்கே ஒரு காலைத் தூக்கிப் பிடித்து நின்றார். வெளியே போக வேறு வழியே இல்லை. 

“போய் அந்த இருக்கையில் உட்கார்,” என்றார்.

வெளியே போக வேறு வழியே இல்லை. கதவை மறித்தபடி நின்றார். மீண்டும் இருக்கையில் அமர்ந்தேன்.

சிறிது நேரத்தில் பேருந்து நிலையத்தில் ஒரே கூட்டமாக இருந்தது.

சட்டம் மீண்டும் வந்தார். அவருடன் மென்முடி மேலங்கி அணிந்த இரண்டு பெண்மணிகள் இருந்தார்கள். ஒருவர் இளையவர், மற்றொருவர் வயதானவர். அவர்கள் முகத்தில் நிறைய வர்ணம் பூசி இருந்தார்கள். ஆனாலும் அவசர அவசரமாக எழுந்து வந்ததைப் போலத் தோன்றியது. அவர்களில் ஒருவர் இத்தனை காலையில் எழுந்திருக்க வேண்டி வந்ததை இரசிக்கவில்லை என்பதும் தெரிந்தது. இருவரும் என்னை உற்றுப் பார்த்தார்கள்.

“மேலங்கிகூட அணியவில்லையே!” என்றார் வயதில் மூத்தவர். “எப்படி இத்தனை தூரம் தனியே வந்து சேர்ந்தான்?” என்றார்.

“அதைத்தான் உங்களிடம் கேட்கிறேன்,” என்றார் சட்டம். “அவன் அண்ணன் மெம்ஃபிஸில் இருக்கிறான் என்பதைத் தவிர வேறு எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அங்கே இப்போதே போகவேண்டும் என்கிறான்.”

“சரியாகச் சொன்னீர்கள். நான் இன்றே மெம்ஃபிஸுக்குப் போகவேண்டும்.”

“நிச்சயம் போகவேண்டும்,” என்றார் வயதில் மூத்த பெண்மணி.

“மெம்ஃபிஸுக்குப் போனால் உன் அண்ணன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடுவாயா?

“என்னால் கண்டுபிடிக்க முடியும். எனக்கு அவன் ஒருவன்தான் இருக்கிறான். வாழ்நாள் முழுவதும் அவனைப் பார்த்திருக்கிறேன். பார்த்ததும் அடையாளம் கண்டுபிடித்துவிடுவேன்.”

வயதில் மூத்த பெண்மணி மீண்டும் என்னைப் பார்த்தார். “எனக்கென்னவோ இவன் மெம்ஃபிஸைச் சேர்ந்தவன் என்று தோன்றவில்லை,” என்றார்.

“இருக்கலாம்,” என்றார் சட்டம். “ஆனாலும் உறுதியாகச் சொல்லமுடியாது. அவன் எந்த ஊரைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம். இந்த நாளிலும் நேரத்திலும் ஒரே இரவில் சிறுவர் சிறுமியர் என இருபாலரும் தொலைந்து போகும் வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் நடக்கத் தொடங்குவதற்கு முன்னரே இது நடந்துவிடுகிறது. நேற்று இவன் மிஸ்ஸூரியிலோ டெக்சஸிலோ இருந்திருக்கலாம். ஆனால் அண்ணன் மெம்ஃபிஸில் இருப்பது குறித்து இவனுக்கு எந்தச் சந்தேகமுமில்லை. எனக்கென்னவோ அண்ணனைத் தேடிக்கண்டுபிடி என்று அங்கே அனுப்பிவிட்டால் போதும் என்று தோன்றுகிறது.”

“ஆமாம், சரிதான்,” என்றார் வயதில் மூத்த பெண்மணி.

இளைய பெண்மணி என்னருகே அமர்ந்தார். கைப்பையைத் திறந்து பேனாவையும் சில தாள்களையும் வெளியே எடுத்தார்.

வயதில் மூத்த பெண்மணி என்னுடன் பேசத் தொடங்கினார். “கண்ணே, நீ உன் அண்ணனைத் தேடிக் கண்டுபிடிக்க உதவப் போகிறோம். ஆனால் எங்களின் கோப்பில் பதிவுசெய்ய உன்னைப் பற்றிய சில விவரங்கள் வேண்டும். உன் பெயர், அண்ணனின் பெயர், எங்கே பிறந்தீர்கள், பெற்றோர் எப்போது இறந்தார்கள் என்பது பற்றிச் சொல்ல முடியுமா?”

“எந்த விவரமும் சொல்ல முடியாது. எனக்கு மெம்ஃபிஸுக்குப் போக வேண்டும். இன்றைக்கே போக வேண்டும்,” என்றேன்.

“பார்த்தீர்களா?” என்றார் சட்டம். நடப்பதையெல்லாம் இரசித்தார் எனத் தோன்றியது. “நான் சொன்னேன் அல்லவா?”

“நீங்கள் அதிர்ஷ்டசாலி, திருமதி ஹேபர்ஷம்,” என்றார் பேருந்துநிலைய மனிதர். “அவனிடம் துப்பாக்கி இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அந்தப் பேனாக்கத்தியை மின்னல் வேகத்தில் உருவி விடுவான்.”

வயதில் மூத்த பெண்மணி அங்கே நின்றபடி என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். 

“எல்லாம் சரி, ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குப் பிடிபடவில்லை,” என்றார்.

“எனக்குத் தெரியும்,” என்றார் பேருந்துநிலைய மனிதர். “கலகம், இரத்தக்காவு இதிலெல்லாம் இருந்து நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காக என் பணத்தைப் போட்டு அவனுக்குப் பயணச்சீட்டை வாங்கித் தரப்போகிறேன். ஒருவேளை இது குறித்து நகரமன்றத்திடம் திருவாளர் ஃபுட் சொன்னாரென்றால் இதைக்  குடிமைநல விவகாரம் என்று சொல்லி எனக்குப் பணத்தைத் திருப்பித் தருவதோடு பதக்கமும் வழங்குவார்கள். இல்லையா திருவாளர் ஃபுட்?”

யாரும் அவர் சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. வயதில் மூத்த பெண்மணி இன்னும் என்னையே பார்த்தபடி நின்றார். “சரி,” என்று மீண்டும் சொன்னார். பிறகு கைப்பையில் இருந்து ஒரு டாலரை எடுத்து பேருந்துநிலைய மனிதரிடம் கொடுத்தார்.

“குழந்தைகளுக்கான சீட்டுதானே எடுக்கவேண்டும்?” என்றார்.

“வழிமுறை என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. இவனை மரப்பெட்டியில் அடைத்து ‘விஷம்’ என்று எழுதிச் சரக்கில் ஏற்றவில்லை என்றால் என்னை வேலையைவிட்டே நீக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் அந்த அபாயத்துக்குத் துணிவதைவிடவும் வேறு வழியில்லை.”

பிறகு அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். சட்டம் ரொட்டி வாங்கி வந்து கொடுத்தார். 

“நீ உன் அண்ணனைத் தேடிக் கண்டுபிடித்து விடுவாயா?” என்று கேட்டார்.

“எப்படிக் கண்டுபிடிக்க முடியாமல் போகும்? ஒருவேளை நான் பீட்டைப் பார்க்கவில்லை என்றால் அவன் என்னைப் பார்த்துவிடுவான். அவனுக்கும் என்னை அடையாளம் தெரியுமே!”

பிறகு சட்டமும் வெளியே போனார். ரொட்டியைச் சாப்பிட்டேன். இன்னும் சில பேர் வந்து பயணச்சீட்டு வாங்கினார்கள். “கிளம்பும் நேரமானது,” என்றார் பேருந்துநிலைய மனிதர். பீட் ஏறியதைப் போலவே நானும் பேருந்தில் ஏறினேன். பேருந்து கிளம்பியது.

எல்லா ஊர்களையும் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்த்தேன். பேருந்து வேகம் பிடித்ததும் எனக்குத் தூக்கம் தூக்கமாக வந்தது. ஆனால் இதற்கு முன் பார்த்திராத காட்சிகள் எனக்காகக் காத்திருந்தன. ஜெபர்ஃஸனைத் தாண்டினோம். வயல்களையும் மரங்கள் அடர்ந்த பகுதிகளையும் கடந்தோம். இன்னொரு ஊருக்குள் நுழைந்து அங்கிருந்து வெளியே வந்ததும் வயல்களையும் மரங்கள் அடர்ந்த பகுதிகளையும் கடந்தோம். அடுத்து மளிகைக்கடைகளும் பஞ்சாலைகளும் தண்ணீர்த் தொட்டிகளும் இருந்த ஊருக்குள் நுழைந்தோம். பிறகு இருப்புப்பாதையோடு இணைந்து பயணம் செய்தோம். கைகாட்டி மரம் நகர்வதைப் பார்த்தேன், இரயிலையும் பார்த்தேன். இன்னும் சில ஊர்களைக் கடந்தோம். களைப்பு மேலிடத் தூக்கம் வந்தது. ஆனால் மெம்ஃபிஸைத் தவறவிட்டு விடுவேன் என்ற பயத்தில் தூங்க முடியவில்லை. மெம்ஃபிஸுக்குள்ளேயே பல மைல் தூரம் பயணம் செய்தோம்.

கடைகள் நிறைந்த பகுதியைக் கடக்கையில் வந்து சேர்ந்துவிட்டோம் என்று நினைப்பேன். பேருந்தும் நிற்கும். ஆனால் இன்னும் மெம்ஃபிஸ் வந்திருக்காது. இன்னும் பல தண்ணீர்த் தொட்டிகளையும் ஆலைகளின் கூரையில் அடுக்கடுக்காக அமைந்த புகைப்போக்கிகளையும் கடந்து போவோம். பஞ்சாலைகளும் மர அறுவை ஆலைகளும் இருக்கும். இவ்வளவு கடைகளும் ஆலைகளும் இருக்கும் என்பதே எனக்குத் தெரியாது. இத்தனை பெரியதாக இருக்கும் என்பதும் தெரியாது. இவை எல்லாம் வேலை செய்யத் தேவையான பருத்தியும் மரமும் எங்கிருந்து கிடைத்தன என்பதும் புரியவில்லை.

அப்போதுதான் மெம்ஃபிஸைப் பார்த்தேன். இந்த முறை என் அனுமானம் சரியாக இருந்தது. நடுவானில் நின்றுகொண்டு இருந்தது. ஜெஃபர்ஸனைவிடவும் பத்துப் பதினைந்து மடங்கு பெரியதாக இருந்தது. ஊர் மொத்தத்தையும் திரட்டி பெரிய வயல்வெளியின் ஒரு புறத்தில் வைத்தது போல இருந்தது. நடுவானில் நீண்டு உயர்ந்து நிற்பதைப் பார்க்கையில் யோக்னபட்வா மாவட்டத்தில் இருக்கும் மலையைவிடவும் உயரமானதாக இருந்தது.

ஊருக்குள் நுழைந்தோம். பேருந்து ஒவ்வொரு சில அடிகளுக்கு ஒருமுறை நின்றது. இரு புறமும் கார்கள் விரைந்தன. ஊர் மக்கள் முழுவதும் சாலையில் கூடியது போலக் கூட்டம் நெருக்கி அடித்தது. மிஸ்ஸிஸிப்பியில் இருந்த எல்லோரும் இங்கே வந்துவிட்டாற்போல இருந்தது, எனக்கு ஒரு பேருந்துச் சீட்டை விற்கக்கூட மிஸ்ஸிஸிப்பி பேருந்து நிலையத்தில் இப்போது ஒருவரும் இருக்க மாட்டார்கள். அப்புறம்தானே என்னைப் பற்றிய விவரங்களைக் குறிப்பெடுக்க யாராவது இருக்க முடியும்?

பேருந்து நின்றது. இன்னுமொரு பேருந்து நிலையத்தில் இருந்தோம். ஜெஃபர்ஸனில் இருந்ததைவிடவும் பல மடங்கு பெரியதாக இருந்தது. “மக்கள் இராணுவத்தில் சேரும் இடம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டேன்.

“என்னது?” என்றார் பேருந்து நிலையத்தில் இருந்தவர். 

மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். “மக்கள் இராணுவத்தில் சேரும் இடம் எங்கே இருக்கிறது?”

“ஓ!” என்றார். பிறகு அங்கே போகும் வழியைச் சொன்னார். முதலில் பயமாக இருந்தது. இத்தனை பெரிய ஊரான மெம்ஃபிஸில் எப்படி வழி கண்டுபிடிப்பேன் என்று பயமாக இருந்தது. ஆனால் ஓரிரண்டு தடவைக்கும் அதிகமாக யாரையும் கேட்கவில்லை. ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்தேன். விரைந்தோடும் கார்களையும் நெட்டித் தள்ளும் மனிதர்களையும் இரைச்சலையும் விட்டு வெளியேறியது நிம்மதியாக இருந்தது. இதோ வந்து சேர்ந்துவிட்டேன். உள்ளே போனதும் நான் பார்ப்பதற்கு முன்னால் பீட் என்னைப் பார்த்துவிடுவான். அறைக்குள்  நுழைந்தேன். அங்கு பீட் இல்லை.

எங்கேயும் இல்லை. தோள்பட்டையில் பெரிய அம்புக்குறி இலச்சினையை அணிந்திருந்த இராணுவ வீரர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அவர் முன்னால் இரண்டு பேர் நின்றுகொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்சம் பேரும் அந்த அறையில் இருந்தார்கள் என்று நினைக்கிறேன். அங்கே பார்த்தவர்களில் சிலர் இன்னும் நினைவில் இருக்கிறார்கள். 

எழுதிக்கொண்டிருந்த இராணுவ வீரரின் மேசையருகே சென்றேன். “பீட் எங்கே?” என்று கேட்டேன். அவர் நிமிர்ந்து பார்த்தார். “என் அண்ணன். பீட் க்ரியர். எங்கே அவன்?”

“என்னது? யார்?”

மீண்டும் சொன்னேன். “நேற்றுதான் இராணுவத்தில் சேர்ந்தான். பேர்ல் ஹார்பருக்குப் போகிறான். நானும்தான். அவனைப் பார்க்க வேண்டும். அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?”

இப்போது எல்லோரும் என்னையே பார்த்தார்கள். ஆனால் நான் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. “வாருங்கள், அவன் எங்கே?” என்று அழைத்தேன்.

இராணுவ வீரர் எழுதுவதை நிறுத்தினார். இரண்டு கைகளையும் மேசையின்மீது பரத்தி வைத்தார். “ஓ, நீயும் போகவேண்டுமா?”

“ஆமாம். அவர்களுக்கு விறகும் தண்ணீரும் வேண்டுமல்லவா? நான் வெட்டித் தருவேன். வாருங்கள். பீட் எங்கே?”

இராணுவ வீரர் எழுந்து நின்றார். “உன்னை யார் உள்ளே விட்டது?” என்றார். “கிளம்பு. ஓடிப்போய் விடு.”

“என்ன சொன்னீர்கள்? பீட் எங்கே இருக்கிறான் என்பதைச் சொல்லுங்கள்….”

பேருந்துநிலைய மனிதரைவிடவும் வேகமாக நகர்ந்தார். மேசையைத் தாண்டி வரவில்லை. அதைச் சுற்றிக்கொண்டு வந்தார். நான் சுதாரிப்பதற்குள் எட்டிப் பிடித்தார். சட்டெனப் பின்னால் நகர்ந்து பேனாக்கத்தியை வெளியே எடுத்துக் கண்ணிமைப்பதற்குள் ஒரு சின்ன கீறல் போட்டேன். அலறியபடி பின்னால் நகர்ந்தார். காயம்பட்ட கையை மற்றொன்றால் பிடித்துக்கொண்டு சாபமிட்டார், கதறினார்.

அங்கிருந்தவர்களில் ஒருவர் பின்னால் இருந்து என்னைக் கட்டிப் பிடித்தார். கத்தியை அவர் பக்கம் வீசினேன். ஆனால் எட்ட முடியவில்லை.

இப்போது இரண்டு பேரும் சேர்ந்து என்னைப் பிடித்துக்கொண்டனர். அப்போது இன்னொரு இராணுவ வீரர் அங்கே வந்தார். பொதி சுமக்கும் குதிரைக்குப் பூட்டப்படும் பட்டி ஒன்று அவர் தோளில் இருந்து தொங்கியது.

“என்ன இழவு நடக்கிறது இங்கே?” என்றார்.

“அந்தப் பையன் என்னைக் கத்தியால் வெட்டிவிட்டான்!” என்று கத்தினார் முதலாமவர். அவர் அப்படிச் சொன்னதும் மறுபடியும் கத்தியை அவர் பக்கம் வீசினேன். ஆனால் இரண்டு பேரும் என்னை இழுத்துப் பிடித்துக்கொண்டார்கள். ஒருவனுக்கு இரண்டு பேர். பட்டியை அணிந்திருந்த வீரர் என்னிடம் பேசினார். “இங்கே பாரப்பா. அந்தக் கத்தியைக் கொஞ்சம் உள்ளே வை. எங்கள் ஒருவரிடமும் ஆயுதமில்லை. வெறுங்கையோடு இருப்பவர்களோடு கத்திச் சண்டை போடுவது சரியல்ல.” அவர் சொல்வதிலும் உண்மை இருந்தது. பீட் என்னிடம் பேசுவதைப் போலவே இருந்தது. “அவனை விடுங்கள்,” என்றார். அவர்கள் என்னை விடுவித்தனர். “இந்தப் பிரச்சினைக்கெல்லாம் என்ன காரணம்?”

விஷயத்தைச் சொன்னேன். “அப்படியா. அவன் நன்றாக இருக்கிறானா என்று பார்ப்பதற்காக வந்திருக்கிறாய், அதுதானே?”

“இல்லை, அதுவல்ல…”

நான் சொல்வதற்குள்ளாகக் கைக்குட்டையால் கையில் கட்டுப் போட்டிருந்த முதல் வீரரை நோக்கித் திரும்பினார். 

“அவனைக் கண்டுபிடித்தீர்களா?” முதலாமவர் மேசையில் இருந்த தாள்களைப் புரட்டினார்.

“இதோ இங்கே இருக்கிறான். நேற்றுதான் சேர்ந்தான். இன்று காலையில் லிட்டில் ராக்குக்குப் போகும் படைப்பிரிவில் இருக்கிறான்.”

கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். “அந்த இரயில் இன்னும் ஐம்பது நிமிடங்களில் புறப்படுகிறது. ஊர்க்காரப் பையன் என்பதால் இப்போதே இரயில் நிலையத்தில் இருப்பான் என்று நினைக்கிறேன்.”

“இரயில் நிலையத்தைத் தொலைபேசியில் அழையுங்கள். அவனுக்கு ஒரு காரை அனுப்பி வையுங்கள். நீ என்னுடன் வா,” என உத்தரவிட்டார் பட்டியைத் தோளில் தொங்கவிட்டிருந்த மனிதர்.

அவரின் அலுவலகம் பின்புறம் இருந்தது. ஒரு மேசையும் சில நாற்காலிகளும் மட்டுமே இருந்தன. உள்ளே போய் உட்கார்ந்தோம். அந்த வீரர் சிறிது நேரம் புகை பிடித்தார். காலடிச் சத்தத்தை வைத்தே பீட்தான் வருகிறான் என்பதைக் கண்டுகொண்டேன்.

முன்பு பார்த்த வீரர் கதவைத் திறந்தார். பீட் உள்ளே நுழைந்தான். இராணுவ வீரர்களுக்கான சீருடையை அணிந்திருக்கவில்லை. நேற்று காலை பேருந்தில் ஏறியபோது எப்படி இருந்தானோ அப்படியே இருந்தான். ஆனால் அவனைப் பார்த்து ஒரு வாரம் ஆகிவிட்டதைப் போல இருந்தது. அதற்குள்ளாக நிறைய விஷயம் நடந்துவிட்டாற்போல இருந்தது. நிறைய பயணம் செய்துவிட்டாற்போல இருந்தது. அவன் உள்ளே வந்தான். என்னைப் பார்த்தான். அவன் என்னுடன் வீட்டில் இருந்தால் பார்ப்பதைப் போலவே இருந்தது. ஆனால் நாங்கள் இருந்ததோ மெம்ஃபிஸில். அவன் பேர்ல் ஹார்பருக்குப் பயணப்பட்டுக்கொண்டு இருந்தான்.

“அட, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேட்டான்.

“உனக்குச் சமைக்க விறகும் தண்ணீரும் தேவையல்லவா? அதை வெட்டவும் தூக்கி வரவும் உதவியாக இருப்பேன்.”

“இல்லை, நீ வீட்டுக்குத் திரும்பிப் போ.”

“இல்லை பீட். நானும் உன்னுடன் வருவேன். வந்தே தீருவேன். என் மனது வலிக்கிறது, பீட்.”

“இல்லை,” என்றான் பீட். இப்போது அந்த இராணுவ வீரரிடம் பேச ஆரம்பித்தான். “அவனுக்கு என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை லெப்டினண்ட். இதுவரை அவன் யாரையும் கத்தியால் காயப்படுத்தியதில்லை.”

இப்போது என்னைப் பார்த்தான். “எதற்காக அப்படிச் செய்தாய்?”

“எனக்குத் தெரியவில்லை. செய்யவேண்டிய நிலைமை. இங்கே வருவதற்காகச் செய்தேன். உன்னை எப்படியாவது கண்டுபிடிக்கவேண்டும் என்று நினைத்தேன்.”

“சரி, இனி ஒருபோதும் அப்படிச் செய்யக்கூடாது, புரிந்ததா?” என்றான் பீட். “கத்தியை உள்ளே வை. இனி யாரையாவது காயப்படுத்தினாய் என்று காதில் விழுந்தால் எங்கே இருந்தாலும் வந்து விளாசிவிடுவேன். கேட்டதா?”

“நீ திரும்பி வந்து என்னுடனேயே இருப்பாயென்றால் கழுத்தை வெட்டக்கூடத் தயார். பீட்,” என்றேன். “பீட்.”

“இல்லை,” என்றான் பீட். இப்போது அவன் குரல் கடுமையாகவோ வேகமாகவோ இல்லை, அமைதியாக இருந்தது. அவன் மனதை மாற்றவே முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன்.

“நீ வீட்டுக்குப் போ. அம்மாவைப் பார்த்துக்கொள். என்னுடைய பத்து ஏக்கர் நிலத்தை உன்னை நம்பித்தான் விட்டுப்போகிறேன். நீ வீட்டுக்குப் போகவேண்டும். இன்றைக்கே. நான் சொல்வது கேட்கிறதா?”

“கேட்கிறது,” என்றேன்.  

“அவன் தனியாக வீட்டுக்குப் போய்விடுவானா?” என்று கேட்டார் அந்த இராணுவ வீரர்.

“தனியாகத்தானே இங்கே வந்தான்?” என்றான் பீட்.

“நான் தனியாகப் போய்விடுவேன். நான் இதுவரை ஒரே இடத்தில்தான் வசித்தேன். அது வேறு எங்கும் நகர்ந்து போய் இருக்காது என்று நினைக்கிறேன்.”

பீட் சட்டைப்பைக்குள் இருந்து ஒரு டாலரை எடுத்துக் கொடுத்தான்.

“இதை வைத்து ஊரில் இருக்கும் தபால் பெட்டி வரை போவதற்கான பயணச்சீட்டை வாங்கிக்கொள்.”

“லெப்டினண்ட் சொல்படி நட. அவர் நீ பேருந்தில் ஏறுவதற்கு உதவி செய்வார். வீட்டுக்குப் போய் அம்மாவையும் என்னுடைய பத்து ஏக்கரையும் பத்திரமாகப் பார்த்துக்கொள். அந்தக் கத்தியை சட்டைப்பைக்குள் இருந்து வெளியே எடுக்கக்கூடாது. நான் சொல்வது கேட்கிறதா?”

“சரி, பீட்.”

“நல்லது.”

“நான் கிளம்பவேண்டும்,” என்றபடியே என் தலைமீது கையை வைத்தான். ஆனால் இந்த முறை கழுத்தைத் திருகுவது போல அசைக்கவில்லை. அப்படியே ஒரு நிமிடம் தலைமீது கையை வைத்திருந்தான். குனிந்து முத்தமிட்டான். பிறகு அவன் கதவை நோக்கி நடப்பதைக் காலடி ஓசையை வைத்துத் தெரிந்துகொண்டேன். நகராமல் அப்படியே உட்கார்ந்து பீட் முத்தமிட்ட இடத்தைத் தொட்டுப் பார்த்தேன். 

இராணுவ வீரர் நாற்காலியைவிட்டு வேகமாக எழுந்து ஜன்னல் அருகே போய் நின்று வெளியே பார்த்து இருமினார். கால்சட்டைப் பைக்குள் கையைவிட்டு எதையோ எடுத்து என்னிடம் கொடுத்தார். சூயிங்கம் துண்டு.

“மிக்க நன்றி. நான் கிளம்ப வேண்டும் என்று நினைக்கிறேன். நீண்ட தூரம் போக வேண்டும்,” என்றேன்.

“பொறு,” என்றார். யாரையோ தொலைபேசியில் அழைத்தார். நான் கிளம்ப வேண்டும் என்பதை மீண்டும் சொன்னேன். “பொறு”. பீட் சொன்னதை நினைவுபடுத்தினார். மென்முடி மேலங்கியை அணிந்த இன்னொரு பெண்மணி வந்தார். இவர்மீது நல்ல மணம் வீசியது. கையில் பேனாவோ என்னைப் பற்றிய குறிப்பை எழுதும் தாளோ வைத்திருக்கவில்லை. அவர் உள்ளே வந்ததும் இராணுவ வீரர் எழுந்து நின்றார். பெண்மணி அறையைச் சுற்றிலும் நோட்டமிட்டார். என்னைப் பார்த்ததும் அருகே வந்து தோளில் கையை வைத்தார். அம்மா கையை வைப்பது போல இலகுவாகவும் மென்மையாகவும் இருந்தது.

“வா. வீட்டுக்குப் போய் இரவு உணவு சாப்பிடலாம்.”

“இல்லை. நான் ஜெஃபர்ஸனுக்கு போகும் பேருந்தைப் பிடிக்க வேண்டும்.”

“எனக்குத் தெரியும். அதற்கு நிறைய நேரம் இருக்கிறது. முதலில் வீட்டுக்குப் போய் இரவு உணவைச் சாப்பிடலாம்.”

அவரிடம் கார் இருந்தது. சிறிது நேரத்தில் சாலையில் மற்ற கார்களுக்கு நடுவே பயணம் செய்தது. பேருந்துகள் உயரத்தில் இருந்தன. தெருவில் நடந்துபோன மக்களிடம் அப்படியே பேசலாம் என்பது போல நெருக்கமாகப் போனது கார்.

சிறிது நேரத்தில் காரை நிறுத்தினார். “இதோ வந்துவிட்டோம்,” என்று அவர் சொன்னதும் அந்த வீடு முழுவதும் அவருடையதாக இருக்குமென்றால் நிறைய குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்களோ என்று நினைத்தேன். ஆனால் வீடு முழுவதும் அவருடையதல்ல.

மரங்கள் வளர்ந்திருந்த கூடத்தைத் தாண்டி ஒரு சின்ன அறைக்குள் நுழைந்தோம். அந்த அறையில் பொருட்கள் எதுவும் இல்லை. இராணுவ வீரர்களைவிடவும் பளபளப்பான உடையணிந்த கறுப்பினப் பணியாளர் ஒருவர் இருந்தார். கதவைச் சாற்றினார்.

“கவனம்!” என்று கத்தியபடி பிடிமானத்தைத் தேடினேன். அந்த அறை முழுவதும் அப்படியே மேல் நோக்கி நகர்ந்தது. சிறிது நேரத்தில் நின்றது. கதவு திறந்தது. இப்போது வேறு ஒரு கூடத்துக்குள் நுழைந்தோம். அங்கிருந்த ஒரு அறையின் கதவைச் சாவி போட்டு திறந்தார். இருவரும் உள்ளே போனோம். அங்கே இன்னொரு இராணுவ வீரர் இருந்தார், வயதானவர். அவரின் இரண்டு தோளையும் வெள்ளிநிறப் பறவைகள் அலங்கரித்தன. ஒரு பக்கத்தில் பட்டி ஒன்று தொங்கியது.

“வீடு வந்தாயிற்று. இவர்தான் கர்னல் மேக்கெல்லாக். இரவு உணவுக்கு என்ன சாப்பிடுகிறாய்?” என்று என்னிடம் கேட்டார்.

“கொஞ்சமாகப் பன்றி இறைச்சியும் முட்டையும் காப்பியும் போதும்,” என்றேன். 

தொலைபேசியை எடுத்தவர் அப்படியே நின்றார். “காப்பியா? எப்போதிருந்து காப்பி குடிக்க ஆரம்பித்தாய்?” என்றார்.

“தெரியவில்லை. எனக்கு நினைவு தெரிவதற்கு முன்னால் இருந்தே என்று நினைக்கிறேன்.”

“உனக்கு எட்டு வயதிருக்குமா?” என்று கேட்டார்.

“இல்லை, எட்டு முடிந்து பத்து மாதமாயிற்று. பதினொன்றாவது மாதம் நடக்கிறது,” என்றேன்.

தொலைபேசியில் பேசினார். அங்கேயே உட்கார்ந்து பீட் முந்தைய நாள் பேர்ல் ஹார்பருக்குக் கிளம்பியதைப் பற்றிச் சொன்னேன். நானும் அவனோடு போக வேண்டும் என்று நினைத்ததைப் பற்றிச் சொன்னேன். ஆனால் இப்போது வீட்டுக்குப் போய் அம்மாவையும் பீட்டின் பத்து ஏக்கர் நிலத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கினேன். அவருக்கும் என்னை போலவே ஒரு மகன் இருக்கிறான் என்றும் கிழக்குப் பகுதியில் இருக்கும் பள்ளிக்குப் போகிறான் என்றும் சொன்னார். சிறிது நேரத்தில் இன்னொரு கறுப்பினத்தவர் அங்கே வந்தார். சிறிய மேலங்கி அணிந்திருந்தார். சக்கர வண்டியை உருட்டிக்கொண்டு வந்தார். நான் கேட்ட பன்றி இறைச்சியும் முட்டையும் பாலும் இனிப்பும் அதில் இருந்தது. பசித்தாற்போல இருந்தது. ஆனால் ஒரு கடி கடித்ததும் விழுங்க முடியவில்லை. அப்படியே வைத்துவிட்டு எழுந்தேன்.

“நான் போகவேண்டும்,” என்றேன்.

“பொறு,” என்றார்.

“நான் போகவேண்டும்.”

“ஒரு நிமிடம் இரு. காரை வரச்சொல்லி இருக்கிறேன். இன்னும் ஒரு நிமிடத்தில் வந்துவிடும். கொஞ்சம் பாலையாவது குடியேன். அல்லது நீ கேட்ட காப்பியைத் தரட்டுமா?”

“வேண்டாம். எனக்குப் பசிக்கவில்லை. வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன்.”

அப்போது தொலைபேசி ஒலித்தது. ஆனால் அவர் அதை எடுத்துப் பேசவில்லை.

“அதோ, கார் வந்துவிட்டது,” என்றார். மீண்டும் அந்தச் சின்ன நகரும் அறைக்குள் நுழைந்தோம். உள்ளே அந்தக் கறுப்பினத்தவரும் இருந்தார்.

இந்த முறை வந்தது பெரிய கார். அதை  ஓட்டி வந்தவர் ஒரு இராணுவ வீரர். அவருடன் முன்னால் உட்கார்ந்துகொண்டேன். அந்தப் பெண்மணி இராணுவ வீரரிடம் ஒரு டாலரைக் கொடுத்தார்.

“அவனுக்குப் பசிக்கும். ஏதேனும் நல்ல இடமாகப் பார்த்து அழைத்துச் செல்லுங்கள்.”

“சரி, திருமதி மேக்கெல்லாக்,” என்றார் இராணுவ வீரர்.

அங்கிருந்து கிளம்பினோம். இப்போது மெம்ஃபிஸைச் சுற்றி வருகையில் பளீரென்ற சூரிய வெளிச்சத்தில் அந்த நகரைப் பார்த்தேன். காலையில் பேருந்தில் வந்தபோது பயணம் செய்த அதே சாலையில்தான் இப்போதும் சென்றோம். அதே கடைகளையும் பஞ்சாலைகளையும் மர அறுவை ஆலைகளையும்தான் இப்போதும் கடந்தோம். பல மைல்களுக்கு விரிந்த மெம்ஃபிஸ் எல்லைக்கு வந்தோம். சிறிது நேரத்தில் வயல்களுக்கும் மரங்களுக்கும் நடுவே வேகமாக ஓடியது வண்டி. அந்த இராணுவ வீரரைத் தவிர நான் மெம்ஃபிஸுக்கு வந்ததற்கு எந்தச் சான்றும் இல்லை. வேகமாகப் போய்க்கொண்டிருந்தோம்.

இந்த வேகத்தில் கண்மூடித் திறப்பதற்குள் வீடு போய்ச் சேர்ந்துவிடுவோம். ஒரு இராணுவ வீரர் ஓட்டி வரும் காரில் வீடு வரை போனால் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டதும் அழத் தொடங்கினேன். 

அடக்கப் பார்த்தேன், ஆனால் முடியவில்லை. ஓர் இராணுவ வீரரின் பக்கத்தில் உட்கார்ந்தபடி அழுதேன். கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது.

*

ஆங்கில மூலம்: Two Soldiers by William Faulkner, The Uncollected Stories of William Faulkner, Published by Vintage International, September 1997 Edition.

1 comment

ஜெகன் மித்ரன் January 3, 2023 - 5:26 pm

இந்தக் கதையின் ஆன்மா அந்தச் சிறுவனின் உலகில்(அவன் அண்ணன் பீட் பற்றி விவரிக்கையிலும், அவன் அம்மாவின் கலப்படமற்ற கிராமத்தனமும் உட்பட) களங்கமின்மை வெளிப்படும் செயல்களிலும் உரையாடல்களிலும் தான். அதை ஆசிரியர் எவ்வாறு நிகழ்த்தியிருக்கிறார் என்றால் தென் மாநிலத்தவரின் கொச்சை பேச்சு வழக்கை பயன்படுத்தியும் (Southern accent) அவர்களின் இயல்பான மொழி நடையில் மொத்த கதையை அமைத்தும் தான். முதல் வாசிப்பிலேயே தெரியும்படி ஆங்கிலத்தின் இலக்கணம் உடைத்து மீறப்படுகிறது ஒவ்வொரு வாக்கியத்திலும், அதன் மூலம் மீறலின் அழகையும், குழந்தைமையின் மென் புன்னகையையும் உரைநடை சாத்தியப்படுத்துகிறது. (சிரித்துக் கொண்டே படித்த இடங்கள் கதையின் பாதிப் பங்கிருக்கும் மேல்) இதை அறிவதற்கு அமெரிக்காவில் இருக்கவேண்டும் என்பதில்லை, ஹாலிவுட் படங்களிலே இவை காட்டப் படுகின்றன. (உ.ம்: Logan Lucky சோடர்பேர்க்கின் இப்படம் வெஸ்ட் வெர்ஜினியாவை களமாகக் கொண்டது இருப்பினும் southern accentல் உரையாடல் அமையப் பெற்றது)

ஒரு உதாரணம் கொண்டு நான் சொல்ல வருவதை விளக்குகிறேன்:

“What’s the matter with you?” Pete said. “You’re going on nine years old. You

been in school now ever since September. Ain’t you learned nothing yet?”

“I reckon we ain’t got as fer as the Pacific Ocean yet,” I said.

இதை படித்து சிரிக்காமல் எப்படி கடக்க முடியும்? இதில் தான் எத்தனை இலக்கண மீறல்கள்? இதை எப்படி மொழிபெயர்ப்பில் கொண்டுவருவது என கார்குழலி சிந்தித்திருக்க வேண்டும், ஆனால் அவரின் மொழிபெயர்ப்பு எப்பிடி இருக்கிறது:

“உனக்கென்ன எதுவுமே தெரியவில்லை? ஒன்பது வயசாகிறது. செப்டம்பரில் இருந்து பள்ளிக்குப் போகிறாய். இன்னும் ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லையா?” என்று கேட்டான் பீட்.

“நாங்கள் இன்னும் பசிஃபிக் பெருங்கடல் வரையில் போகவில்லை என்று நினைக்கிறேன்,” என்று பதில் சொன்னேன்.

மிகச் சுதந்திரமான மொழிபெயர்ப்பிலும் அந்த மீறலையோ மென் புன்னகையையோ தொடும் அருகில் கூட வரவில்லை. ஆக ஆங்கிலம் அறிந்தவன் ஏன் இம்மொழிபெயர்ப்பை படிக்க வேண்டும்? இலக்கிய மொழிபெயர்ப்பு என்பதும் ஒரு படைப்புச் செயல்பாடு என்றே இதுவரை நினைத்திருந்தேன், முறுக்கு பிழிவதும் மொழிபெயர்ப்பதும் ஒன்று தான் என தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

Comments are closed.