புனைவில் சொல்லடுக்கின் கலை

by ஆர்.அபிலாஷ்
1 comment

மிக எளிமையாகத் தோன்றும் மொழிக்குச் சொந்தக்காரர் அசோகமித்திரன். ஆனால் அந்த மொழி ஒன்றும் கவனமின்றி வெறுமனே சிக்கனமான சொற்களால் உருவாக்கப்பட்டதல்ல. சிக்கனத்துக்கும் அடங்கின தொனிக்கும் அப்பால் அசோகமித்திரனிடம் தன்னுடைய ஸ்டைல் குறித்த அபாரமான தெளிவு உள்ளது. இந்த ஸ்டைல் வெறும் அழகுக்கானது அல்ல. அதற்குப் பொருள் நோக்கம் உள்ளது. எப்படி கவிதையில் ஒரு சொல்லை எந்த வரிசையில் வைக்க வேண்டும் என்பதற்குக் கவிஞனுக்கு என ஒரு நியதி, புரிதல், இத்யாதி உள்ளதோ, அவ்வாறுதான் புனைவிலும் ஒரு கதைக்கலைஞனுக்கு இருக்க முடியும்.

ஒரு சொல் தவறான இடத்தில் வந்தால் எப்படி ஒரு கவிதையின் தொனி, இசை லயம், தீவிரம் உருக்குலையுமோ கிட்டத்தட்ட அப்படியே சிறுகதையிலோ அல்லது ஒரு நாவலில் வரும் முக்கியமான உணர்ச்சிகரமான / கவித்துவமான பத்தியிலும் நிகழக்கூடும். ஆம், கவிதையைப் போன்று புனைவையும் நாம் வாய்க்குவந்த விதமாக எழுதுவதில்லை. ஒரு சொற்றொடரில் எவ்வளவு சொற்கள் இருக்க வேண்டும், எங்கு தொடங்க வேண்டும், எங்கு நிறுத்தற்குறி இட வேண்டும், சில சொற்களை மீள மீளச் சொல்ல வேண்டுமா, எங்கு சந்தம் பொருந்தி வர வேண்டும் என்பன கவிதையைப் போன்று புனைவிலும் முக்கியமே. இந்த நுட்பமான சொற்தேர்வு, வாக்கிய அடுக்குகளை நாம் தமிழில் முக்கியமான ஸ்டைலிஸ்டுகளிடம் காண்கிறோம். ஒரு சாதாரண விசயத்தைச் சொல்லும்போதும் மந்திரம் போல ஒரு அதிர்வு அவர்களுடைய மொழியில் கூடிவருவது இதனால்தான். இதையே நாம் அந்த எழுத்தாளனின் ‘குரல்’ எனப் புரிந்துகொள்கிறோம். ஆனால் உண்மையில் இது ‘குரல்’ அல்ல, இது அவனது நடை நுட்பமாகும்.

ஓர் உதாரணத்திற்கு, கீழே வரும் பத்தியைப் படித்துப் பாருங்கள்.

“மாலை பெருங்கூட்டம் சிறிது குறைந்திருந்தது. என்றாலும் பஸ் ஸ்டாப்பில் பஸ் வந்தால் கண்ணியமாக ஏற முடியாத அளவுக்கு ஆண்களும் பெண்களும் காத்திருந்தார்கள். தூரத்தில் பார்வையைச் செலுத்தி நிற்பது சகுந்தலாவுக்கு அவளுடைய வேதனையைக் குறைப்பதாக இல்லை. பஸ் வந்தால் அதிகப் பயணம் செய்யும் நாற்பது நிமிடங்களுக்கு அப்பயண அனுபவங்களைத் தவிர வேறெதன் மீதும் மனம் செல்ல முடியாது. அதிலும் பஸ்ஸில் நிற்க இடமென்றால் முழுக்க முழுக்க அவளுடலைப் பற்றித்தான் கவனம் இருக்க முடியும். இப்போது பஸ் வந்தால் தாற்காலிக நிம்மதி.”

“இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்”.

-அசோகமித்திரன்.

இந்தக் கதையில் சகுந்தலாவுக்கு அக்கா ஒருத்தி இருக்கிறாள். அவளுக்குக் கல்யாணம் ஆகாமல் சகுந்தலாவுக்குக் கல்யாணம் சாத்தியமில்லை. சகுந்தலாவின் காதலன் ராஜரத்தினம் ஒருநாள் அவளை அழைத்து ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து இனிமேல் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது, ஒன்று அவள் அவனை உடனடியாகக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் அல்லது மறந்துவிட வேண்டும் என்று (நேரடியாகவும் மறைமுகமாகவும்) சொல்லிவிடுகிறான். சகுந்தலா தான் ஒருபோதும் கேட்க விரும்பாத இறுதி எச்சரிக்கையைக் கேட்டுவிடுகிறாள். அவள் இடிந்துபோய் வீடு திரும்புகிறாள். பேருந்துக்காகக் காத்திருக்கிறாள். அவளுக்கு அப்போது அமர இடமில்லாமல் நாற்பது நிமிடங்கள் பேருந்தில் நிற்பது நிம்மதியாக இருக்கும் எனத் தோன்றுகிறது, தன் உடம்பை யாரும் உரசாமல் இருக்கப் பார்த்துக்கொள்ளும் தவிப்பானது நிம்மதியாக, தற்காலிக ஆறுதலாக இருக்கும் எனத் தோன்றுகிறது. மனம் கடுமையாக நோகும்போது எங்காவது போய் மோதி, அந்த வலியை இந்த வலிகொண்டு மறக்க வேண்டும் என்று நினைப்போமே, அதைப் போல. கூடவே, மத்திய வர்க்க வாழ்க்கையின் பல நசுங்கல்கள், இடைஞ்சல்கள், சின்னச் சின்ன அவமானங்கள் போன்றவை இருத்தலின் துன்பத்தில் இருந்து தப்பிக்க உதவும் என அசோகமித்திரன் தன் கதைகளில் அடிக்கடி குறிப்பிடுவதை இங்கு நினைவுகூர்வது பயனளிக்கும். அப்படியான சந்தர்ப்பம்தான் இதுவும்.

இதுதான் இந்தப் பத்தியின் கரு, உளவியல் அவதானிப்பு எல்லாம். ஆனால் இந்தப் பத்தி இது மட்டுமல்ல. வாக்கியங்களில் சில சொற்கள் வந்தமரும் இடத்தைக் கவனித்தால் அசோகமித்திரனின் மேதைமையும், தான் உத்தேசிக்கிற தாக்கத்தை அவர் நடையின் நுணுக்கத்தால் சாதிப்பதும் புரியும்.

முதலில், ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் வரும் சொற்களைப் பட்டியலிடுவோம்:

  1. குறைந்திருந்தது
  2. ஆண்களும் பெண்களும் காத்திருந்தார்கள்
  3. வேதனையைக் குறைப்பதாக இல்லை
  4. மனம் செல்ல முடியாது
  5. கவனம் இருக்க முடியும்
  6. தாற்காலிக நிம்மதி

இந்த கடைசிச் சொற்களைப் படித்தாலே ஒருவாறு அசோகமித்திரன் இங்கு உணர்த்த விரும்புவது புரியும்; கூட்டம் அதிகமாக இருப்பது, அவளுடைய வேதனை குறையவில்லை, அவளுடைய மனம் எங்கோ செல்லவில்லை, அவளுடைய கவனம் மட்டும் எங்கோ செல்ல முடியும், அது அவளுக்குத் தற்காலிகமாக நிம்மதி அளிக்கும்.

இது ஏன் முக்கியம்? நாம் பொதுவாக வாசிக்கையில் முக்கியமான சொற்களை வாக்கியத்தின் முடிவிலே எதிர்பார்க்கிறோம். வேக வாசிப்பு எனும் உத்தியில் முக்கியமாக அறிவுறுத்தப்படுவது ஒரு பத்தியின் பிற்பகுதியில் வரும் சொற்களில் பார்வையை ஓட்டினால் மேலோட்டமாகப் புரிந்துபோகும், வாசிப்பும் வேகமாகும் என்பதே. அடுத்து, ஒரு சேதியைக் கடைசியில் சொல்லும் போதே அதன் கனம் கூடும் என்பது கவிதையில் தவிர்க்க முடியாத சங்கதி. “நான் அவனைக் கொன்றேன்” என்பதற்கும் “நான் கொன்றேன் அவனை” என்பதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா?

அடுத்து, 3–6 வாக்கியங்களில் உணர்வுநிலையை / மனநிலையைக் காட்டும் சொற்கள் கடைசியில் அநேகமாக ஒரே இடத்தில் வருவதைப் பாருங்கள் (வேதனை குறைத்தல் / [பயண அனுபவங்களில்] மனம் செல்லுதல் / [உடல் மீது மட்டும்] கவனம் செல்லுதல் / நிம்மதி). இது ஒரு லயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, படிப்படியாக அவளுடைய மனநிலையில் வரும் மாற்றத்தை, அதன் நகைமுரணை நாம் துல்லியமாக உணர்வதற்கு இந்த ஒரே வகையான சொற்கள் குறிப்பிட்ட இடத்தில் மீள மீள வருவதும் காரணம்.

அதே போல இந்த வர்ணனையின் முதல் வாக்கியம் ‘பெருங்கூட்டம் சிறிது குறைவு’ என முடிந்தால் இறுதி வாக்கியம் ‘மன நிம்மதி’ என நிறைவுறுவதைக் கவனியுங்கள். இரண்டையும் முடிச்சிட்டால் ஒரு கச்சிதமான சித்திரம் வந்துவிடும். ஒரு ஹைக்கூ கவிதையைப் போல – ‘கூட்டமான பஸ், மன நிம்மதி’.

ஓர் எழுத்தாளன் இந்தளவுக்குத் திட்டமிட்டு முத்துக் கோப்பதைப் போலவா எழுதுவான் என்று கேட்டால் இல்லை, ஆனால் அதே நேரம், தான் எழுத நினைப்பதை மனத்துக்குள் அவன் ஒரு உச்சாடனத்தைப் போல தொகுத்துக்கொண்டே எழுதும்போது இந்த உணர்வுக்கோவை சரியாக வந்துவிடும். அதற்கு அவனுக்குள் உரைநடைக்கும் கவிதை நடைக்குமான பொருத்தப்பாடு இருக்க வேண்டும் என்பேன். அதாவது, அவன் கவிதையாக எழுத வேண்டியதில்லை, ஆனால் தான் நினைப்பதை ஓசை லயமோ, சொல்லமைவோ இன்றித் தட்டையாக எழுதுவதல்ல நடை என்கிற புரிதல் இருக்க வேண்டும்.

எனில் கவிதைக்கும் புனைவுக்கும் வித்தியாசம் இல்லையா?

உண்டு. கவிதை உணர்ச்சிகரத்தின் உச்சம் நோக்கி நம்மை ஒரு வேட்டை மிருகத்தைப் போல இழுத்துச் செல்கிறதென்றால், புனைவுநடை அந்த உச்சத்தில் இருந்து ஒரு தளர்வான பள்ளத்தாக்கு நோக்கி நம்மை ஒரு தாயைப் போலத் தூக்கிச் செல்லுகிறது. இதைத் தவிர கவிதைக்கும் புனைவு நடைக்கும் மற்றொரு வித்தியாசமும் உண்டு – கவிதை உணர்ச்சிகளுடன், ஒரு உடைவை, தத்தளிப்பை, கலக்கத்தை, பரவசத்தை, முரண்களின் உச்சத்தைத் தொட்டுக் காட்டினால் போதும் அல்லது ஒரு கருத்து நிலையில் ஆரம்பித்து கருத்தற்ற வெட்டவெளிக்கு நம்மைக் கண்ணைக் கட்டி இட்டுச்சென்றாலும் போதும்.

ஆனால் புனைவு நடையோ மேற்சொன்ன சங்கதிகளை லேசாக உள்ளிழுத்துக்கொண்டு கதையையும் மறக்காமல் சொல்ல வேண்டும். கோணங்கியைப் போல முழுக்க முழுக்க கவிதையின் கலவி அனுபவத்துக்குள் நிற்கும் படைப்பாளிகள் அரிது. பெரும்பாலானோர் இதுபோன்ற இடங்களை உருவாக்கிவிட்டு நேரடியான வர்ணனை கொண்ட எளிய பத்திகளையும் எழுத வேண்டும். நல்ல கதையானது கதைக்கும் கவிதைக்கும் இடையில் ஒரு சமரசத்தை எட்டிவிடுகிறது!

1 comment

லெட்சுமி நாராயணன் பி January 3, 2023 - 12:01 pm

ஆஹா. அற்புதமான கட்டுரை. நன்றிகள் அபிலாஷ் சார்.

Comments are closed.