ஜுன், 2003.   

கோடையின் கோரத் தாண்டவத்துக்குக் காடு பலியாகியிருந்தது.

எங்கும் வறட்சி. பெயருக்குக்கூடப் பச்சையைப் பார்க்க முடியவில்லை. இலைகளின்றி வெறும் கூடுகளைப்போல் காய்ந்த கிளைகளும் சுள்ளிகளுமாய் நின்ற மரங்களைப் பார்க்கச் சகிக்கவில்லை. சோர்வை விதைக்கும் சாம்பல் நிறத்தில் பரிதாபமாய் நின்றது காடு. மழையைக் கண்டு மாதங்கள் பல கடந்துவிட்டன. ரந்தம்பூரின் தடாகங்கள் பலவும் நீரின்றிப் பாளம்பாளமாக வெடித்துக் கிடந்தன. கரையில் நின்ற புற்கள் காய்ந்து மடிந்தன. ஈரமற்ற நிலத்தில் எதுவும் நிலைக்கவில்லை.

நூற்றுக்கணக்கான மான்கள் திரிந்திருக்கும் தடாகங்களில் வறண்ட கால்தடங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. இறகுகளை விரித்துச் சரிந்திறங்கி மீனைக் கொத்திச்செல்லும் நாரைகளையோ அத்திமரக் கிளைகளில் அடுக்கடுக்காய் அமர்ந்தபடி கீச்சிட்டு மகிழும் கிளிகளையோ மதில்களின் மேலமர்ந்து அகவும் மயில்களையோ காணவில்லை. நீர் இருக்கும் இடம் தேடிப் பறந்துவிட்டிருந்தன பறவைகள் அனைத்தும். வழிதவறிய புள்ளிமான் ஒன்று காய்ந்து ஒடிந்து விழுந்திருந்த மரங்களுக்கு நடுவே தளர்ந்து நடந்தது. கண்களில் சோர்வு. ஈரத்தைக் காணவேண்டும் என்ற தவிப்பு. இணையாக நடந்து வந்த இன்னொரு மான் இன்று காலையிலேயே பாறையிடுக்கின் நிழலில் நா வறளப் படுத்துவிட்டது. இதுவும் எத்தனை தொலைவு நடக்கும் என்று தெரியாது. விடிகாலையிலேயே வெயில் உக்கிரம் கொண்டுவிடுகிறது. உச்சிவேளையில் தீயை எறிந்ததுபோலக் காடு முழுக்கச் சூட்டில் பதறுகிறது.

“ஒன்னுமே செய்ய முடியலை மைக். விநாயக் சாப்பெல்லாம் இப்ப இங்க வர்றதுக்கே யோசிக்கறாங்க. மானும் கேளையும் குரங்கும் அங்கங்கே செத்துக் கெடக்கறதைக் கண்கொண்டு பாக்க முடியலை. முடிஞ்ச அளவுக்கு தண்ணிக்கு ஏற்பாடு பண்ணிப் பாத்தாச்சு. ஆனா எதுவுமே பத்தலை. நானும் இந்தக் காட்டை அஞ்சு வயசுலேர்ந்து பாக்கறேன். இப்படியொரு கொடுமையைப் பாக்கலை.” நவாஸ் தொப்பியைக் கழற்றி வேர்வையைத் துடைத்துக்கொண்டான்.

அங்கங்கே பள்ளம் வெட்டி லாரிகளில் கொண்டுவந்து நீரைக் கொட்டித் தாகம் தீர்க்கும் ஏற்பாடுகளை வெகுகாலம் செய்ய முடியவில்லை. கொட்டிய நீரைக் கணப்பொழுதில் நிலம் உறிஞ்சிவிட மான்களும் குரங்குகளும் ஈரமண்ணில் புரண்டு உடல்வெப்பம்தான் தணிக்க முடிந்தது. பெரிய பெரிய பிளாஸ்டிக் தொட்டிகளும் போதவில்லை.

“டூரிஸ்டுகளை பெர்மிட் பண்றதையும் கொஞ்சங் கொஞ்சமா நிறுத்தியாச்சு. ஒரு தடவை இப்பிடி காட்டைப் பாத்துட்டா அப்பறம் கஷ்டம். எப்பவும் அது மனசை கஷ்டப்படுத்திட்டே இருக்கும்.”

மைக்கின் சருமம் கன்றிச் சிவந்திருந்தது. அவனால் தாங்க முடியாத வெப்பம். ஈரமாக்கிக் கழுத்தில் சுற்றியிருந்த துவாலை எப்போதோ காய்ந்துபோயிருந்தது.

“வல்லவன் வாழ்வான்னு சொல்வாங்க இல்ல? இதுதான் அதை உறுதிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பம். இப்ப இங்க மிஞ்சியிருக்கிற உயிர்களுக்கு முதல் எதிரி இந்த வெயில்தான். வறட்சிதான். அதுக்கப்பறந்தான் இன்னொரு உயிர்.”

“சரிதான். அதனாலதான் மச்லி இந்த ராஜ்பாக் ஏரியாவுல யாரையும் அண்ட விடறதில்லையா?”

நவாஸ் எதிரிலிருந்த தடாகத்தை வெறித்தான். மொத்தக் காட்டிலும் சேறும் சகதியுமாய் இங்கு மட்டுந்தான் தண்ணீர் கொஞ்சமாய்த் தேங்கிக் கிடக்கிறது. பாசி படர்ந்து நெடியுடன் வெயிலைத் தாங்கி நிற்கிறது.

மச்லி சற்றே மேட்டுப்பாங்கான காய்ந்த புல்தரையில் படுத்திருந்தது. தரையிலிருந்த ஈரம் அதன் வயிற்றுக்கு ஒத்தடம் தந்திருந்தது. அதன் ஆளுகையில் இருக்கும் தடாகம் இது. உயிர்ச்சுனை. இன்னொருவருக்கு அதைக் கொஞ்சமேனும் பகிர்ந்துகொடுப்பதென்பது தற்கொலைக்குச் சமம். கவனமாய் கண்வைத்துப் பார்த்திருந்தது.

“விநாயக் சாப் சொன்னாங்க. அந்த ஃபுட்டேஜை இன்னும் பாக்கல. பத்து நாட்களுக்கு முன்னால முதலை ஒன்னு ஒரு மானைக் கவ்விட்டு போயிருச்சு. மச்லி சுதாரிச்சு தாவிப் பாயறதுக்குள்ள மான் கழுத்தைக் கவ்வி இழுத்துட்டு போயிருச்சு அந்த முதலை. அதுகிட்டேயிருந்து பறிக்க முடியல. அதனால அந்த முதலை மேல ரொம்ப கோவமா இருக்கும்” நவாஸின் பார்வை வறண்ட  நிலத்தின் சருகுகளைத் துழாவியது.

“அதோ, அந்த உடை மரங்களுக்கு மேலா கல்லெல்லாம் அடுக்கிருக்கு இல்ல? அதுக்குப் பின்னாடி சின்னதா ஒரு பள்ளம். முதலைங்க இருக்கற எடம்தான். இப்ப கொஞ்சமா சகதி இருக்கு. ஒரேயொரு முதலைதான் இருக்கு. மத்ததெல்லாம் பசியில செத்துருச்சு. இது பதினாலு அடி நீளம். நல்ல வலுவான முதலைதான். அதனாலதான் தாக்குப் புடிக்குது. முன்னாடி அந்த கல்வரிசையில அப்பிடியே படுத்து வெயில் காயறதைப் பாத்துருக்கேன். அதுதான் அந்த மானைக் கவ்விட்டுப் போயிருக்கணும்.”

வெளுத்த மீசை மயிர்கள் அசைந்திருக்க சிவந்த நாக்கை நீட்டியபடி மச்லி மேலே பார்த்தது. இரக்கமற்ற வெயில். காய்ந்த அருகம்புற்கள் அடர்ந்த கரையில் சலனம் கண்டு தலைதூக்கிப் பார்த்தது. கேளை மானொன்று கரையில் நின்றது. மருளும் கண்களுடன் தலை உயர்த்திப் பார்த்துவிட்டு ஆவலுடன் நீரைப் பருகியது. ஆனால், மச்லியின் கண் கருவேல மரத்துக்குக் கீழே கூர்ந்து பார்த்திருந்தது.

மைக்கும் பைனாகுலரால் கவனமாகப் பார்த்தான். நவாஸ் எச்சரிக்கையுடன் உற்று நோக்கினான். உக்கிரமான வெயிலில் அனல்காற்று புறங்கழுத்தைத் தொட்டது. மச்லி கழுத்தை உயர்த்திப் பார்க்கிறது. வால் சற்றே உயர முதுகை மேலுயர்த்தி முன்னங்கால்களை ஊன்றி மெல்ல எழுகிறது.

“மைக், இந்தப் பக்கம் பாரு. கருவேல மரத்துக்குக் கீழே…” நவாஸ் கிசுகிசுத்தான்.

வெடித்த பட்டைகளுடன் உடைந்தும் சிதைந்தும் நின்ற கருவேல மரத்தின் கீழே தரையில் சலனம். சருகுகள் அசைகின்றன. உடைந்த சுள்ளிகள் மேலெழுந்து தணிகின்றன. கருத்த முதுகின் உறுதியான தோலுடன் தரையோடு தரையாக நகர்ந்து வருகிறது முதலை.

மச்லி இப்போது புற்களுக்கு நடுவே உடல் தளர்த்தி நின்றிருந்தது. முதலை தடாகத்தை நோக்கி நகர்வதைக் கணித்தபடி கரையோரமாய் மெல்ல நடந்தது. வெளுத்துத் துவண்ட கற்பூரப் புற்களுக்கு நடுவே உடல் அசைத்து வருகிறது.

சருகுகளும் சுள்ளிகளுமான மேட்டிலிருந்து தடாகத்தை நோக்கி இறங்கும் சரிவில் காய்ந்து ஒடிந்த புற்கள் புழுதியுடனான வெற்று வெளி. அதைக் கடந்தவுடன் தடாகத்தில் இறங்கிவிட முடியும். ஆனால் அதுதான் சவாலான தொலைவு. முதலை அந்தத் திறந்தவெளிக்கு வருவதற்காகத்தான் மச்லியும் பதுங்கிக் காத்திருக்கிறது.

மரங்களுக்கு அப்பால் நிறுத்தியிருந்த ஜீப்பிலிருந்து கேமராக்களை இருவரும் புல்வெளியை நோக்கித் திருப்பினார்கள். இரண்டுமே அந்த இடத்தில்தான் மோத நேரும்.

சருகுப் பத்தைகளைக் கலைத்துக்கொண்டு முதலை தலை நீட்டிப் பார்த்தது. வாலை அசைத்தபடி விரைந்து நகர்ந்தால் நொடிக்குள் அது மானை நெருங்கிவிட முடியும். மச்லியை அது இன்னும் அறியவில்லை.

விருட்டென ஒரு கணத்தில் முதலை வெட்டவெளியில் விரைந்து நகர்ந்தது. நீண்ட அதன் உடல் சவுக்கைப்போல் சொடுக்கி அசைந்தபோது கேளை மான் திரும்பிப் பார்த்தது. அதே நொடியில் காய்ந்த புற்களின் பின்னிருந்து தாவிப் பாய்ந்தது மச்லி. முதலையின் உடல் வளைந்து நகர்ந்தது. கூரிய பற்களைக் காட்டி வாய் பிளந்தபடி வாலை அசைத்து மச்லியை நோக்கி நகர்ந்தது. மச்லி காற்றில் கைகளை உயர்த்தி வீசியபடி பக்கவாட்டில் நகர்ந்தது. நேருக்கு நேராக அதை வீழ்த்த முடியாது. மின்னலெனச் சுழலும் அதன் உடலும் கூரிய பற்களும் அபாயகரமானவை. நொடியில் கவ்விவிடும்.

வெட்டவெளியில் இரண்டும் நெருங்காது ஒன்றையொன்று கணித்தபடியே நகர்ந்திருக்க, கேளை மான் காய்ந்த புற்களுக்கு நடுவே பாய்ந்து ஓடியது.

மச்லி உறுமியபடி வலதுபக்கமாய் நகர்ந்து தாவிய கணத்தில் முதலை அதன்வாக்கிலேயே சுழன்றது. இரண்டடி முன்னாலும் பிறகு பக்கவாட்டில் நகர்ந்தும் முதலையை நெருங்க முயன்றது மச்லி. சுழலும் வாலுடன் மின்னலெனத் திசைமாறிச் சீறியது முதலை. ரம்பம் போன்ற அதன் பற்களைக் காட்டியபடி வாய்பிளந்து தாவியது. மச்லியின் காலைக் கவ்வும் முனைப்புடன் ஒருமுறை முன்னால் பாய, அதே கணத்தில் வாலால் உடலைத் தாக்கவும் முயன்றது. மச்லியின் கவனம் முழுக்க முதலை உடலின் மேல்தான். வசமான நொடியில் பாய்ந்து முதுகில் சரிந்து இரண்டு பக்கமும் கால்களைக்கொண்டு உடலை அசையாமல் இறுக்கிவிட வேண்டும். எல்லாமே நொடிப்பொழுதுக்குள் நடக்க வேண்டும். அதுதான் முக்கியம். உடலை அசையவிட்டால் முதுகிலிருந்து கீழே விழ நேரும். சொடுக்கும் வால் தாக்கவும் கூடும். கணப்பொழுது கவனமின்மை எல்லாவற்றையும் பாழாக்கிவிடும்.

மச்லியும் முதலையும் ஒன்றையொன்று நெருங்காமலும் அதேசமயம் தப்பியோட விடாமலும் சுற்றி வந்தன. ஒருகணந்தான். மச்லி அப்படியே திரும்பி இடதுவசமாகத் தாவி முதலையின் முதுகில் முன்னங்கால்களை ஊன்றி ஆக்கிரமித்தது. தனது உடலுக்குக் கீழே முதலையின் உடல் வசமானதை உறுதிசெய்தவுடன் அதன் புறங்கழுத்தில் தன் பற்களைப் பதித்தது. இப்படியும் அப்படியுமாகச் சுழன்று அசைந்து மச்லியைத் தன் உடலிலிருந்து உதிர்க்க முதலை முயற்சி செய்தது. தடித்த தோலினூடாகக் கழுத்தில் தன் கோரைப்பற்களை அழுத்தி இறக்கியது மச்லி. ரத்தம் கொப்புளித்து வழிந்தது. உடல் துடிதுடிக்க, முதலை இன்னும் ஆக்ரோஷத்துடன் வாயைப் பிளந்து அலறியது. தலையை உயர்த்தி விசிறிய கணத்தில் பிடி விலகிவிட, மச்லி முதலையின் மீதிருந்து சரிய நேர்ந்தது. ஆனால் கடித்த இடத்திலிருந்து பற்களை விலக்காமல் அதே உக்கிரத்துடன் கையை ஓங்கி அறைந்தது.

சில நொடிகளில் முதலையின் உடல் சலனமற்றுக் கரையில் கிடக்க, ரத்தம் சொட்டும் வாயுடன் மச்லி கரையோரமாய்ப் படுத்திருந்தது. வயிற்றுத் தசை வேகமாக மேலும் கீழுமாய் அசைய சிவந்த நாக்கு உள்ளும் புறமுமாய் அசைந்திருந்தது.

பேச மறந்தவனாய் கண்களை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் மைக். கண்டது நிஜந்தானா? இல்லை வெறுங் கனவா? இப்படியும் ஒரு சம்பவம் நடப்பது சாத்தியம்தானா? எத்தனை வருடங்களாய் காடுகளில் அலைந்திருக்கிறேன்! கொடூரமான எத்தனை மோதல்களைப் படம் பிடித்திருக்கிறேன்! ஆனால் முதலையும் புலியும் மோதும் காட்சி என்பது கற்பனை செய்திராத ஒன்று. பதினான்கு அடி நீளத் திடமான முதலை. அரைமணி நேரத்துக்கும் மேலாக இந்தப் போராட்டம். களைக்காமல் சோர்ந்துபோகாமல் ஆற்றலுடன் மோதிப் போராடி இந்தப் புலி அதைச் சாகடித்திருக்கிறது.

“இது பிறந்தபோது இதுக்கு மச்லின்னு பேர் வெச்சாரில்ல, பகதூர்ஜி. அவர் சொன்னது ரொம்ப சரிதான். இது சாதாரணமான, வழக்கமான புலி இல்லை. ரொம்ப அபூர்வமானது. ரந்தம்பூரின் ராணிதான்.” நவாஸின் குரலில் நடுக்கம். வேர்வையைத் துடைத்துக்கொண்டான்.

அன்றிரவு வீடியோ காமிராவில் அந்தக் காட்சியை ஓடவிட்டு கவனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்த விநாயக்கின் நெற்றியிலும் வேர்வைத் துளிகள் பளிச்சிட்டன. குளிரூட்டப்பட்ட அறைக்குள் சுழன்றது சுருட்டின் கார நெடி. அவராலும் காண்பதை நம்ப முடியவில்லை.

“இட்ஸ் அன்பிலீவபிள் மைக். எப்பிடி இது முடிஞ்சுது? எங்க இருந்தீங்க? சொல்லி வெச்ச மாதிரி நடந்திருக்கு? யுர் கொயட் லக்கி.”

“ராஜ்பாக்ல மட்டுந்தான் தண்ணி இருக்கு. அங்கதான் எதையாச்சும் பாக்க முடியும். அப்பறம் மச்லியும் அதுக்குள்ளதானே சுத்திட்டு இருக்குங்கற நெனப்புலதான் போனோம். இப்பிடி நடக்கும்னு நினைக்கலை.”

“அந்த முதலை கல்வரிசைக்குப் பின்னாடிதான் கெடக்கும். வழக்கமா இப்பிடிப் போய் சிக்கிக்காது. ரொம்ப ஸ்ட்ராங். கரையோரத்துல வர்ற மானையோ பன்னியையோதான் வேட்டையாடும். மச்லி அதையும் முறியடிச்சிருச்சு.”

கோப்பையில் சில்லென்று நுரைத்திருந்த பீரை பருகிய விநாயக், சுருட்டுப் புகையை இழுத்தார். “ரெண்டாவது ஈற்று முடிஞ்சு கொஞ்ச நாள்தான் ஆகியிருக்கு. ஆனாலும் என்ன பலம்! ஆக்ரோஷம்!”

“பலமும் ஆக்ரோஷமும் மட்டுமில்லை சாப். ஸ்ட்ரேடஜி. தாக்குதலை அது மேற்கொண்ட விதம்தான் அதோட வெற்றிக்குக் காரணம். முதலையைச் சுத்தி சுத்தி வந்துச்சு. பக்கத்துலயே போகலை. சரியான கோணத்துல வந்ததுமே முதுகில தாவி ஏறி அமுக்கினதும் முதலையால ஒடம்பை அசைக்கவே முடியலை. அதே சமயத்துல கழுத்தைக் கடிச்சுது. சரியான எடத்துல சரியான சமயத்துல விழுந்த கடி. ரத்தம் கொப்புளிக்க… கொஞ்ச நேரந்தான். முதலை ஓஞ்சிருச்சி.”

மைக் மீண்டும் அந்தக் கணத்தை மட்டும் ஓட்டிக் காட்டினான்.

“ஆமாம் மைக். அதுதான் ரொம்ப முக்கியம். அதனாலதான் மச்லி ரொம்ப ஸ்பெஷல்” என்றபோது வீடியோவில் வாய் பிளந்தபடி மூச்சிளைக்கும் மச்லியைப் பார்க்க முடிந்தது.

“வெயிட். கொஞ்ச முன்னாடி நகர்த்து மைக்…” விநாயக்கின் குரலில் பெரும் பதற்றம். சுருட்டை ட்ரேயில் எறிந்துவிட்டு முன்னால் குனிந்து வீடியோவை கவனத்துடன் பார்த்தார்.

நவாசுக்கும் அந்தப் பதற்றம் தொற்றிக்கொண்டது. முக்கியமான ஏதோவொன்றை அவர் கவனித்திருக்கிறார். நடுங்கும் கைகளுடன் வீடியோவைப் பின்னால் நகர்த்தித் தொடரவிட்டான் மைக். அசைவற்றுக் கிடக்கும் முதலையிடமிருந்து விலகி மெல்ல நகர்ந்து கரையோரத்தில் படுக்கிறது மச்லி. வயிற்றுத் தசையில் மூச்சிழுக்கும் அசைவுகள். நாக்கை நீட்டி வாயைப் பிளக்கிறது.

“நிறுத்து மைக். இங்கதான்…”

விநாயக் கத்தினார்.

படம் நின்றது. மோகன் உற்றுப் பார்த்தார். ரத்தம் வழியும் மச்லியின் வாய் திரையில் உறைந்திருந்தது. சலீமும் மைக்கும் உற்றுப் பார்த்தனர்.

“ஓ காட்”. விநாயக் தலையில் அடித்தபடி பின்னால் சாய்ந்தார்.

நவாஸ் இன்னும் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். எதைப் பார்த்து இப்படிப் பதற்றம் கொள்கிறார்?

“என்னாச்சு சாப்?”

மைக்கின் பார்வையும் திரையிலேயே நிலைத்திருந்தது.

“உன்னால பாக்க முடியலையா? லுக் தேர். என்னாயிருக்குன்னு தெரியலை உனக்கு?” அவரது குரலில் ஆத்திரம். நவாசுக்குப் புரியவில்லை.

ரத்தம் வழியும் திறந்த மச்லியின் வாய்க்குள் அப்படி அதிரும் அளவுக்கு என்ன என்று யோசித்த கணத்தில் நவாஸ் அதைக்  கண்டுகொண்டான்.

“அய்யோ… என்ன சாப் இது? ரெண்டு கோரைப் பல்லையும் காணோம்.”

மைக் அப்போதுதான் அந்த அபாயத்தை உணர்ந்தான். இடதுபக்கத்தில் மேலும் கீழமாய் கோரைப் பற்கள் இருக்க வேண்டிய இடத்தில் முழுமையாய் அவை இல்லை. உடைந்திருந்தன. 

“அஞ்சு வயசுதான் ஆச்சு. இன்னும் அஞ்சாறு வருஷம் வாழணும். கோரைப் பல் இல்லாம எப்பிடி வேட்டையாடும்? கடவுளே, என்ன சோதனை இது?”

பீரை எடுத்துச் சப்பினார் விநாயக். அவரது முகத்தில் இறுக்கம். இரண்டு மிடறுகள் பருகிய பின் நிதானமாகச் சுருட்டைப் பற்ற வைத்தார். மெல்ல மெல்ல இறுக்கம் தளர்ந்து முகம் இளகியது. கண்களில் மீண்டும் அந்த வெளிச்சம்.

“முதலையோட தோலைத் துளைத்து இறங்கறதுன்னா இப்பிடித்தான் நடக்கும். ஓகே. அது நடந்துருச்சு. பெரிய சண்டை. எந்த நஷ்டமும் இல்லாம ஜெயிக்கணும்னு எதிர்பார்க்க முடியாது. பாப்போம்… எப்பிடி இந்த கோரைப் பல் இல்லாம இது சர்வைவ் ஆகுதுன்னு…”

அவரது முகத்தை உற்றுப் பார்த்தபடி சொன்னதை யோசித்தான் மைக். நவாஸ் கண்களை மூடியபடியே இருக்கையில் சாய்ந்தான். ரத்தம் வழியும் வாயுடன் கோரைப் பற்களை இழந்த மச்லி திரையில் இன்னும் உறைந்திருந்தது.

*

எம்.கோபாலகிருஷ்ணனின் “வேங்கை வனம்” நாவலிலிருந்து ஒரு பகுதி. தமிழினி வெளியீடு.