உடையாது காத்திருந்த குமிழிகள்

0 comment

எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்டுள்ள அமுதா ஆர்த்தியின் பருந்து சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினான்கு சிறுகதைகள் உள்ளன. ஆம்பக்காய் சிறுகதையைத் தவிர மற்ற எல்லாக் கதைகளுமே அருமையாக உள்ளன. இந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கதை என்று எதையும் தனித்துச் சொல்வது சிரமம். ஆனாலும் சைக்கிள் சவுட்டு, நெகிழிக் கனவு, அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும் ஆகிய கதைகளை நான் முன்னிறுத்துகிறேன்.

சைக்கிள் சவுட்டு கதை ஊரில் நான்கு நாட்கள் நடக்கும் சைக்கிள் சவுட்டு (தொடர்ந்து சைக்கிள் விடுவதும் அதை ஒட்டி நிகழும் பிற கலை நிகழ்ச்சிகளும்) பார்க்க ஊரே திரண்டு வருகிறது. அதுவொரு திருவிழாப் போலக் கொண்டாடப்படுகிறது. இந்த நான்கு நாள் நிகழ்ச்சியில் நிகழ்த்துக் கலைஞனான கதிரேசனுக்கும் டென்சிலிக்கும் காதல் மலர்கிறது. ஊரில் இது அலரைப் பரப்புகிறது. இதுவரை சாதாரணமாக சைக்கிள் சவுட்டையும் இந்தக் காதல் உருவாவதையும் சொல்லிச் செல்லும் கதை கடைசி ஒரு பத்தியில் வேறொரு தளத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. டென்சிலி காதலிக்கும் அதே இளைஞனை ஒரு திருநங்கை அவன் தனக்குரியவன், தன்னை ஒரு வருடம் முன்பே திருமணம் செய்துகொண்டான் என்கிறாள். சுற்றியிருப்போர் சிரிக்கிறார்கள். திகைத்து நிற்கும் திருநங்கை பிளேடால் கையைத் தாறுமாறாகக் கிழித்துக்கொள்கிறாள். இரத்தம் சொட்டிக்கொண்டு நிற்க ஊர் திகைத்து நிற்கிறது. சமூகத்தின் பொதுப்புத்தி மீதும் மொண்ணைத்தனத்தின் மீதும் அந்த இரத்தத் துளிகள் வழிகின்றன. இதே கதையில் ஓரிடத்தில் இளவட்டப் பையன் ஒருவன் திருநங்கையிடம் பாவாடையைத் தூக்கிக் காட்டச் சொல்கிறான். ‘உன் அம்மைட்டப் போய்க் கேளு’ என்று சொல்லிவிட்டு நகர்கிறாள்.

இந்தக் கதையில் கடைசிப் பத்தியைத் தவிர திருநங்கையர் அதன் மையத்துக்கு வரவேயில்லை. ஆனால் இந்தக் கடைசிப் பத்தி அப்படியே கதையைத் திருப்பிப் போட்டுவிடுகிறது. இந்தக் கதையில் கதிரேசன் நாயகியிடம் அவளை விரும்புவதாகச் சொல்லி எங்காவது ஓடிப் போய்விடலாம் என்று சொல்கிறான். திருநங்கையைவிட அவனுக்கு வயது குறைவு. டென்சிலி வீட்டு ஓலைச்சாய்ப்பில் நான்கு நாட்கள் தங்கிக்கொள்ள திருநங்கையுடன் கதிரேசன் வருகிறான். அப்போது அவன் கையை வலுக்கட்டாயமாய்ப் பிடித்துக்கொண்டு திருநங்கை வருகிறாள். அவன் திருநங்கையைப் பிரிய விரும்புகிறான் என்பதும் தெரிகிறது. தாலியறுப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

மீறல் இலக்கியம் அல்லது பிறழ்வெழுத்து என்பது அடிப்படைச் சமூக ஒழுக்கங்கள், சுரணையை அவமதிக்கக்கூடிய அல்லது மீறக்கூடிய எழுத்து. நெகிழிக் கனவு கதையை இந்த வகையிலும் சேர்க்க முடியும். கல்லறையில் படுத்துறங்கி காலையில் தாசில்தார் அலுவலகத்துக்கு முன் மனு எழுதிக் கொடுத்து பிழைப்பு நடத்தும் ஒருவனைப் பற்றிய கதை இது. மதுவிடுதியில் சந்திக்கும் ஒருவர் வாடகைக்குக் குடிவர அவனை அழைக்கிறார். மிகச்சிறிய வீடு. பாத்திரம் கழுவுவதற்குச் சின்னதாய் ஓர் இடம். ஒட்டினாற்போலச் சற்று உயரமான சுவர். அதையடுத்து அடுப்படித் திண்டு. ஒரு பத்தி. வீட்டுக்குள் இருக்கையில் ஒட்டுமொத்த உலகத்திலிருந்தும் துண்டித்துக் கொண்டதுபோல் இருக்கிறது அவனுக்கு. கல்லறையைப் போலின்றி வீட்டில் அவனால் நிம்மதியாக உறங்க முடிகிறது. ஆனால் கழிப்பறை? முதலில் சிலநாள் தன் வீட்டுக் கழிப்பறையை உபயோகித்துக்கொள்ள வீட்டுக்காரர் அனுமதித்தாலும், கழிப்பறைக்குள் சத்தம் வராமல் மலம் கழிக்கக் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. அப்புறம் வீட்டுக்குள்ளேயே பாத்திரம் கழுவும் இடத்தில் மலம் கழிக்கத் தொடங்குகிறான். அவனுக்கு மலம் கழிக்கையில் பீடி குடிக்கும் பழக்கம் உண்டு. தண்ணீர் ஊற்றிக் குச்சியை வைத்துத் தள்ளிவிடுகிறான். தண்ணியாகப் போனால் தண்ணீர் ஊற்றித் தள்ளிவிடுவதும், கட்டியாகப் போனால் நெகிழித்தாளில் பொதிந்து தூரமாய் எடுத்துச்சென்று போட்டுவிடுவதுமாகக் கழிகிறது. இதற்காக நெகிழிப் பைகளைத் தேடியெடுத்துச் சேகரிக்கத் தொடங்குகிறான். கனவுகளில்கூட நெகிழிப்பைகள் வருகின்றன. இந்தக் கதை கிட்டத்தட்ட கிறுக்குப்பிடிக்க வைக்குமளவு சமூக அவலத்தை முன்வைக்கிறது.

பக்கத்துத் தெருவில் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். நான் இருப்பது அதிகப் போக்குவரத்து மிக்க இடம். காவலுக்கு ஆள் போட்டிருக்கிறார்கள். ஒரேயொரு கூரை செட். பத்து மாதங்கள் ஆகின்றன. ஆளில்லாத இடத்துக்குப் போக வேண்டுமென்றால் நான்கைந்து கிலோமீட்டர் செல்ல வேண்டும். கட்டணக் கழிப்பறைக்கு ஒரு கிலோ மீட்டர். தண்டவாளத்து ஓரம் இருந்து வைப்பது எளிது. இந்தப் பாராமுகங்கள், அவலங்களை எல்லாம் கடந்துவர இன்னும் எத்தனை தலைமுறைகளைக் கடக்க வேண்டுமோ!

இந்தக் கதையில் சுகாதாரப் பணியாளர்களின் கோணமும் பேசப்படுகிறது. யாரோ இப்படித் தினமும் மலத்தை நெகிழிப்பையில் கொண்டுவந்து போட்டுவிடுகிறார்கள். யாரென்று தெரியவில்லை என்று அவர் புலம்புகிறார். கழிப்பறையின் அவசியத்தைப் பேசக்கூடிய முக்கியமான கதை இது என்று சொல்லி நகர்ந்துவிட முடியாது. இந்தக் கதையின் நாயகனைத் தஸ்தாயேவ்ஸ்கியின் விளிம்புநிலைக் கதாபாத்திரத்தோடு ஒப்பிடலாம். கதையில் ஆமை குறியீடாக வருகிறது. அவன் ஆமையைப் போல இருக்கிறான். ஓரிடத்தில் கல்லறைத் தோட்டத்தைவிட்டு வீட்டுக்குக் குடிபோகும்போது கல்லறைகள் நகராமல் கிடக்கும் ஆமைகள் போலிருப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. என்னதான் தாசில்தார் அலுவலகத்துக்கு முன் மனு எழுதிக் கொடுத்து பிழைப்பை ஓட்டினாலும், கிட்டத்தட்ட சமூகத்திலிருந்து விலக்கப்பட்ட அல்லது விலகியிருக்கும் மனிதன் அவன். சமூகம் கொடுக்கும் சின்ன இடமும் அவனுக்குப் பொருந்தாமல் போகிறது. இந்தத் தொகுப்பில் பெரும்பாலான கதைகள் ஏற்கெனவே இதழ்களில் வெளிவந்திருந்தாலும் இந்தக் கதை எந்த இதழிலும் வந்திருக்கவில்லை. அமுதா ஆர்த்தி இதை வெளியிடத் தயங்கினாரா என்று தெரியவில்லை. ஆனால் இது ஓர் உலகத்தரமான கதை என்பதில் ஐயமில்லை.

அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும் கதையை விளக்க முடியாது. ஒரு பெண்ணின் தனிமையை, ஆசைகளை, அவள் அன்றாடங்களை மிக நுட்பமாக இக்கதை வரைந்து காட்டுகிறது. கதையில் ஓரிடத்தில் கணவனோடு சடவில் இருக்கும் அவள், பாதி சாப்பிட்ட பின்பு குழம்பில் மிளகாய்த்தூள் போடவில்லை என்று உணர்கிறாள். ‘மிளகாய்த்தூளுக்குப் பதிலாக நாலு முள் கால்களில் குத்தினால் ஈடாகிவிடும்’ என்று சொல்லிக்கொள்கிறாள். இந்த வரி அந்தப் பெண்ணின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை மிகத் துல்லியமாக உணர்த்திவிடுகிறது.

பல வரிகள் கவிதைக்கான வரிகள். ஆனால் அமுதா ஆர்த்தி கவிதைத் தொகுப்பு ஏதும் இதுவரை கொண்டுவரவில்லை. ‘அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும்’ கதை கவிதைக்குள் அடக்க முடியாத, ஆனால் கவிதையாக உள்ள ஒரு சிறுகதை. ஓரிடத்தில் ‘கத்தரிச் செடியின் சிறிய காயைப் பார்க்கும்போது, அம்மா முதல்முதலாக வாங்கிக் கொடுத்த மழைத்துளி கம்மலைப் போல இருந்தது’ என்று வருகிறது. அடையாளம் அற்றவனின் ஆடை என்ற சிறுகதையில் மனநிலை பிறழ்ந்த ஒருவன், டம்ளரைத் தூக்கிக்கொண்டு திரிகிறான். அதில் மழைநீரை மட்டுமே பிடித்துக் குடிப்பான். ஒருநாள் மழை பெய்கையில் டம்ளரில் பிடித்துக் குடித்துவிட்டு ‘மறுபடியும் மழையின் சுவடே இல்லாமல் டம்ளரைத் துடைக்கின்றான்’ என்று வரும் வரி புன்னகை புரிய வைக்கிறது.

அவனுக்கு யார்யாரோ விதவிதமாகப் பெயர்கள் வைத்து அழைக்க அவனோ ‘பெயர்களுக்குக் காது இல்லை என்பது போன்று நடந்துகொள்கிறான்’ என்று ஒரு வரி. அமுதா ஆர்த்தி அடிப்படையில் ஒரு கவிஞர் என்பதற்கான அடிப்படைக் கூறுகள் இவை. இதே கதையில் ஓரிடத்தில் ‘டீக்கும் ஆண் வாசனைதான் போலும்’ என்று வருகிறது. ஆம்பக்காய் கதையில், ‘குளத்தின் படிக்கட்டுகளில் இறங்கி மெல்லத் தன் முகத்தை நீரில் பார்த்தாள். புதிதாய் உள்ள சில்வர் பாத்திரத்தில் முகம் தெரிவதுபோல் இருந்தது.’ சமயங்களில் இந்த உலகத்தை இரசிக்கவும், கொண்டாடவும், மகிழவும் தெரிந்தவர்கள் பெண் குழந்தைகள் மட்டும்தான் என்று தோன்றுகிறது. என் மகளையும் மகனையும் உதாரணமாக எடுத்துக்கொண்டால்கூட, ஒவ்வொரு சின்னச்சின்ன விசயங்களிலும் பெண் குழந்தைகள் மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள். அவர்கள் முகம் பூரிப்பதிலிருந்தே நம்மால் உணரமுடியும். அது நமக்கும் தொற்றிக்கொள்ளும். அந்தப் பூரிப்புக்காக அவர்களுக்குத் தொடர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். ஆண்பிள்ளைகள் எளிதில் சலிப்படைந்து விடுவார்கள் அல்லது பரபரப்பான விசயம் அவர்களுக்குப் பிடித்ததாக இருக்கிறது.

’இரவை வெளிச்சமிடும் வானம்’ சிறுகதை ஊதாரியான கணவனால் வீட்டைவிட்டு இரவு நேரத்தில் துரத்தப்படும் பெண்ணைப் பற்றிப் பேசுகிறது. அடிக்கடி இப்படி நடந்தாலும், ஒருவழியாய் ஒரு வேலை தேடி தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும், அவள் அவன் வந்துவிட மாட்டானா என்று தேடுகிறாள். பொருளியல் விடுதலை இருந்தால் பெண் தன்னளவில் விடுதலையை உணர மாட்டாளா? உண்டுதான். ஆனாலும் இங்கே அந்தப் பெண்ணின் ஏக்கம், தேடல் என்பதைத் தாண்டி சமூகத்தின் மறைமுக அழுத்தமும் இருக்கிறது. ஏன் அவள் அவனைத் தேடுகிறாள்? அவன் மீது அவ்வளவு காதலா? ஓரிடத்தில் ‘உணர்வுகளின் உச்சியில் திளைத்திருந்தபோது நீ என் தாய் விருட்சமென மெய்யால் புணர்ந்த தருணம் புலம்பியதாக அவள் நினைவு.’ என்று சொல்லப்படுகிறது. அற்புதமான வரி. ’உண்மை எப்போதுமே உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய ஒன்று’ என்றொரு வரி இந்தக் கதையில் வருகிறது. இது ஆன்மீகத்தைக் குறிக்கவில்லை. திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லி அதைத் தாங்களே நம்பிக்கொள்ளும் பலரைப் பார்த்திருக்கிறேன். ஒருசிலர் ஒருவரைப் பற்றி ஒரு பொய்யைச் சொல்லி அந்த நபரையும்கூட அதை நம்பவைத்து விடுவார்கள். உண்மைக்கான மதிப்பு என்ன? உண்மை என்பது முதலில் யாருக்குத் தேவை? வாய்மை என்பது ஒருவருக்கு விளக்கல்லவா? அது இல்லாமல் உலகில் எப்படி வாழ்வது என்பது திகைப்பாக இருக்கிறது. ஆனால் இதே உலகில்தான் எத்தனையோ கழிசடைகள், ஈனப்பிறவிகள் திரிவதையும் பார்க்கிறோம். உண்மையால் என்ன பலனைக் கண்டோம்? ஆனாலும் அதுவன்றி இருக்க முடிவதில்லை.

பருந்து சிறுகதையில் ஒரு வர்ணனை வருகிறது. ‘சற்றுத் தள்ளியே வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிக்குள் நடுங்கிய உடலுடன் தலையைக் கவிழ்த்தியவாறு குற்றமற்ற கைதியைப் போல அமர்ந்திருந்தது.’ இதில் குற்றமற்ற கைதி என்ற வார்த்தை திகைக்க வைக்கிறது. ஒரு பருந்துக்குஞ்சை வர்ணிக்க எப்படியொரு வார்த்தை. கோழிக்குஞ்சுகளைக் கள்ளப்பிராந்து தூக்கிச் செல்லும் கோபத்தை சிறுவர்கள் அந்தக் குஞ்சின் மீது காட்டுகிறார்கள். கோழிகூடக் குஞ்சுகளை இழந்த கோபத்தில் வெறியோடு கொத்த வருகிறது. குற்றமற்ற கைதி என்பது எத்தனை பொருத்தமான வார்த்தை! பிறக்கும் எல்லாக் குழந்தைகளுமே குற்றமற்ற கைதிதானே!

வெற்றுடல் குளம் சிறுகதையில், ‘கை, கால்கள் வியர்த்து சிறுநடுக்கத்துடன் இருக்க, ஏமாற்றத்தின் உருவம் அழகாகச் சிரித்துக்கொண்டது. கொலுசின் முத்துகள் இரண்டாகப் பிளந்து மண்ணில் விழ, வழிப்போக்கனின் கால்களில் மிதிபட்டுப் புதையுண்டது. நிறங்களற்ற எண்ணங்கள் ஒரே இடத்தில் வெகுநேரம் தேங்கிப் போனது’ என்றொரு பத்தியில் வருகிறது. கை கால்கள் வியர்க்க ஏமாற்றத்தின் உருவம் அழகாகச் சிரித்துக்கொண்டது என்பதிலுள்ள முரண்நகை கசப்பாக இறங்குகிறது. மனம் வெறித்துப் போய், இயலாமை கவிய எண்ணங்கள் அப்படியே இன்னதென்று அறியாமல் அல்லது எண்ணங்கள் இன்றி சோகம் இரவைப் போலக் கவிந்துவிடுகிறது. இரவுக்குக் கருநிறமுண்டு. நிறங்களற்ற எண்ணங்கள் ஒரே இடத்தில் தேங்கிப்போனது என்ற வரி இந்தக் கதையில் நமக்குக் கடத்தும் உணர்வு அந்தச் சோகத்தை மட்டுமல்ல, அந்த நீண்ட நேரத்தையும் நமக்குள் பதித்துவிடுகிறது.

இந்தத் தொகுப்பில் இரு குறைகளைச் சொல்வேன். ஒன்று ஆம்பக்காய் சிறுகதை. இந்தக் கதை பால்யகால அற்புத நினைவுகளைச் சித்திரங்களாய் வரைந்து காட்டுகிறது. ஆனால் அவை மட்டும்தான் உள்ளதே தவிர இது கதையாகவில்லை. இரண்டாவது, கதைகளை மீள ஒருமுறை பிழைதிருத்தம் செய்திருக்கலாம். ஒரு கதையில் ஆசிரியர் கூற்றாகத் தொடர்ந்து வந்த நிலையில் தன்மையில் சில் வரிகள் விவரிக்கின்றன. இரவை வெளிச்சமிடும் வானம் சிறுகதையின் முதல்வரி, ‘அவள் தங்கியிருக்கும் கட்டடம், ஏரியை ஒட்டிய உண்டு உறைவிடப்பள்ளிக் கட்டடம்’ என்று தொடங்குகிறது. இதுபோன்ற வரிகளை மாற்றி எழுதலாம். இந்தக் குறைகள் எல்லாம் இரண்டாம் பதிப்பில் எளிதில் நீக்கக்கூடியவையே. அவசியம் வாசிக்க வேண்டிய நல்லதொரு சிறுகதைத் தொகுப்பு இது.

*

நூல்: பருந்து, ஆசிரியர்: அமுதா ஆர்த்தி, எதிர் வெளியீடு, விலை: ரூ.200