உன் யாதுமாகிய நான்

2 comments

அடர்ந்த கானகத்தின் நடுவே – ரியோகன்

அடர்ந்த கானகத்தின் நடுவே

அமைந்திருக்கிறது

எனது குடிசை;

அங்கே

ஆண்டுதோறும்

நீண்டுவளர்கின்றன

பசுமையான கொடிகள்;

அரிதாக ஒலிக்கும்

விறகுவெட்டியின் பாடல்களைத் தவிர,

மனிதர்களைக் குறித்த

கதைகள் ஏதும்

காதில் விழுவதில்லை;

சூரியன் பிரகாசிக்கும்போது

எனது உடைகளைச் சீர்செய்கிறேன்!

நிலவு ஒளிரத் தொடங்குகையில்

கவிதைகளை வாசிக்கிறேன்!

அர்த்தத்தை நீங்கள்

அறிய விரும்பினால்,

அவற்றைத் துரத்திப்போவதை

நிறுத்திவிடுங்கள்!

*

சிறுவனும் முதியவரும் – ஷெல் சில்வர்ஸ்டீன்

சிறுவன் சொன்னான்,

“சில நேரங்களில் நான் எனது கரண்டியைத்

தவற விட்டுவிடுகிறேன்.”

முதியவர், “நானும் அதைச் செய்கிறேன்” என்றார்.

“நான் உறக்கத்தில்

என் உடையை நனைத்துவிடுகிறேன்.”

சிறுவன் கிசுகிசுத்தான்.

“நானும் அதைச் செய்கிறேன்” என்று சிரித்தார் முதியவர்.

“நான் அடிக்கடி அழுகிறேன்” என்றான் சிறுவன்.

முதியவர், “நானும் அப்படித்தான்” என்று ஆமோதித்தார்.

“ஆனால் இவை எல்லாவற்றையும்விட மோசமானது,

வளர்ந்த பெரியவர்கள் என்னைப் பொருட்படுத்தவே மாட்டார்கள்”

என்று சொன்ன சிறுவன்

சுருக்கங்கள் நிறைந்த

ஒரு முதுமையான கையின் வெதுவெதுப்பை உணர்ந்தான்.

”நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரிகிறது”

என்றார் அச்சிறிய முதியவர்.

*

கிளிஞ்சல் பற்கள் – ஆமி லுட்விக் வாண்டர்வாட்டர்

கடல் அதனுடைய குழந்தைப் பற்களை இழந்துவிட,

அவை கரை மீது கிளிஞ்சல்களாயின.

ஒவ்வொரு நாளும்

அதற்குப் புதிய பற்கள் முளைக்கின்றன;

ஒவ்வொரு இரவும் அது

அப்பற்களை அதிகமாக இழக்கவும் செய்கிறது.

கடல் தனது பற்களைக்

கரையில் பரப்பி வைக்க,

அதனின்றும் ஒரு கையளவு சேகரித்து

நான் வீட்டிற்குக் கொண்டுவந்தேன்.

ஆதலால்

கடலினுடைய புன்னகையில் ஒரு பகுதியை

என்னால் பத்திரப்படுத்தி

வைக்க முடிந்தது.

*

பெயரிடுதல் – லூசி ப்ரோக்-பிராய்டோ

பெயரிடுவது என்பது

வழிபடுதலின் ஒரு வடிவம்;

உடைமை பாராட்டுதலும்கூட.

என் வாழ்க்கையில்

என்னை நேசித்த அல்லது

என்னால் நேசிக்கப்பட்ட

எவரொருவருக்கும்

இன்னொரு பெயர் இல்லாதிருந்ததில்லை.

ஒரு பெயரிட்டு

மறுபெயர் மாற்றி

வேறு பெயரிட்டதுமுண்டு.

இதனை நான் உயர்வுநவிற்சியாகக் கூறவில்லை.

இது நடந்த உண்மை;

நீங்கள் எதேனும் ஒன்றைக்

கூடுதலாகவும் நெடுங்காலமாகவும்

விரும்புகிறீர்கள் எனும்போது,

அதைச் சுட்டுவதற்கு

உங்களிடம் அதிகமான பெயர்கள் இருக்கும்.

*

எல்லோரும்தான் – ஆஸ்கார் வைல்டு

எல்லோரும்

இதை அறியட்டும்;

மனிதர்கள்

ஒவ்வொருவருமே

தாம் விரும்புகிற

ஒன்றைக் கொன்றுவிடுகிறார்கள்.

சிலர் இப்பாதகத்தை

இழிவான பார்வையால் செய்கிறார்கள்,

சிலர் புகழ்ச்சியான வார்த்தையால்,

கோழையோ அதை ஒரு முத்தத்தால் முனைகிறான்

வீரனோ தன் வாளால் அதை நிறைவேற்றுகிறான்!

சிலர் இளமையிலேயே தம் காதலைக் கொன்றுவிடுகிறார்கள்.

சிலரோ வயதாகிய பிறகு

அதைச் செய்கிறார்கள்;

சிலர் தமது தங்கக் கைகளால் கழுத்தை நெரிக்கிறார்கள்:

கருணை மிக்கவராயின் கத்தியைப் பயன்படுத்துகிறார்,

அவ்விதமாக இறப்பவை விரைவாகக்

குளிர்ந்துவிடுகின்றன.

சிலர் குறுகிய நேரத்திற்கும்,

சிலர் நெடுங்காலம் வரையிலும் நேசிக்கிறார்கள்,

சிலர் விற்கிறார்கள்,

மற்றவர்கள் வாங்குகிறார்கள்;

சிலர் அச்செயலைக் கண்ணீருடன் செய்திடும்போது,

பலர் அரவம் ஏதுமின்றி

அதனைச் செய்கிறார்கள்:

ஒவ்வொரு மனிதனும் தான் விரும்புவதைக்

கொன்றுவிடுகிறான்.

ஆயினும் மனிதர்கள்

ஒவ்வொருவருமே மரிப்பதில்லை.

*

நான் கவலைப்பட்டேன் – மேரி ஆலிவர்

நான் வெகுவாகக் கவலைப்பட்டேன்.

தோட்டத்தில் செடிகள் வளருமா,

ஆறுகள் சரியான திசையில் பாயுமா,

பூமி அதற்கு விதிக்கப்பட்ட பாதையில் சுழலுமா,

அல்லாது போயின்

அதை எவ்விதம் சரிசெய்வது?

நான் செய்வது சரியா, தவறா, நான் மன்னிக்கப்படுவேனா,

என்னால் நல்லவிதமாகச் செயல்பட முடியுமா?

நான் பாடவியலுமா?

சிட்டுக்குருவிகள் கூடப் பாடுகின்றன.

என்னாலும் அது முடியும்,

ஆனால் நான்

நம்பிக்கையற்று இருக்கிறேன்.

என் கண்பார்வை மங்குகிறதா அல்லது

நான் அவ்வாறு கற்பனை செய்துகொள்கிறேனா,

எனக்கு வாதநோய் வருமா,

முகவாய்ப் பிடிப்பு, ஞாபக இழப்பு உண்டாகுமா?

கடைசியில்

கவலைப்படுவதால்

ஒன்றும் ஆவதில்லை என்பதைக் கண்டேன்.

ஆகவே அதைக் கைவிட்டேன்.

காலையில்

என் மூப்படைந்த உடலுடன் வெளியே சென்றேன்,

கவலையற்றுப் பாடினேன்.

*

ரசனை – மஹ்மூத் தர்வீஷ்

ரயிலில்

நமது இருக்கைகளை

நாம் மாற்றிக்கொண்டோம்.

நீ ஜன்னலருகே

இருக்க விரும்பினாய்;

நானோ உன்னைப் பார்த்துக்கொண்டிருக்க

விரும்பினேன்.

*

இணைநலம் – வார்சன் ஷையர்

எனக்கு

எனது அம்மாவின் வாயும்

தந்தையின் கண்களும்

வாய்த்திருக்கின்றன;

என் முகத்தில்

அவர்களிருவரும்

இப்போதும்

இணைந்திருக்கிறார்கள்.

*

எனக்காக – சந்தோகா தனேடா

என்னிடம் ஏதுமில்லாத போதும்

எனக்காகச் செர்ரி பூக்கள்

மலரும் உதிரும்.

*

துலக்கம் – சியோ-நி

மெல்லத் துலங்குகிறது

மலைக்குப் பின் மலை.

முதலாவது மூடுபனி.

*

மாயை – சுடா கியோகோ

இவ் உலகமா, அப்பால் உள்ள அவ் உலகமா?

கடலில்

சூரியன் மறையும் ஒளி.

*

என் வாழ்வு – ரவீந்திரநாத தாகூர்

என் வாழ்வில்

மிதக்கின்றன,

இனி மழையைத் தரவோ

புயல்களை உருவாக்கவோ இயலாத

சில மேகங்கள்.

ஆனாலுமவை

வண்ணம் சேர்க்கின்றன

எனது அந்தி வானத்திற்கு.

*

தனிமை – தூஃபூ

பருந்தொன்று 

வானில் வட்டமிடுகிறது; 

இரண்டு வெள்ளை நாரைகள் 

ஓடையில் மிதக்கின்றன. 

சட்டென்று கீழிறங்கி 

நீரோட்டத்தில் முட்டாள்தனமாக அலைந்தவாறிருக்கும் 

அப்பறவைகளைப்

பற்றியெடுத்தவண்ணம்

காற்றில் மேலெழுந்து போவது எளிது.

புல்லில் பனித்துளிகள் ஒளிரும் இடத்தில்,           

வலைச் சிலந்தியானது இரைக்காகக் காத்திருக்கிறது.                          

இயற்கையின் நடத்தையோ 

மனிதர்களின் வணிகத்தை ஒத்திருக்கிறது

பத்தாயிரம் துக்கங்களோடு நான் 

தனித்து நிற்கிறேன்.

*

க. மோகனரங்கன் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள உன் யாதுமாகிய நான் நூலிலிருந்து சில கவிதைகள், தமிழினி வெளியீடு.

2 comments

Radha January 31, 2023 - 10:19 pm

Glad I came across this ❤️ Loved every poem.Stolen my heart❤️ especially கிளிஞ்சல் பற்கள், சிறியவனும் முதியவரும், ரசனை.

Selvam kumar February 1, 2023 - 8:07 pm

மிகவும் அருமையான கவிஞர்களின் கவிதைகள் , மிகவும் சிறப்பு சார்….

Comments are closed.