நீண்ட மரத்திண்டின் மீது யுவான் தன் சிவந்த மெல்லிய இடது கரத்தை அழுத்தி ஊன்றிக்கொண்டு குனிந்து நின்றான். அந்தச் சிறுவீட்டின் வடக்குப்புறமாக இருந்த கணப்பினுள் வைக்கப்பட்டிருந்த கிண்ணத்தின் தண்ணீரிலிருந்து ஆவி எழுந்தது. அவனுடைய தாய் அதை இரும்பு இடுக்கியால் பற்றி எடுத்து கோப்பையில் ஊற்றும் ஒலி அவனுக்குத் தனித்துக் கேட்டது. அந்த ஒலியைக் கேட்டபடி தன் வலது கரத்திலிருந்த இழைப்பு உளியால் ஓக் மரத்தின் தண்டைச் சீவிக்கொண்டிருந்தான். மரச்சீவல்கள் சுருண்டு சுருண்டு விழுந்தன. சுருண்டு விழும் மரச்சீவல்களில் அவன் லயித்திருந்தான். அதன் பின்னணியில் நீர் ஊற்றும் ஒலி. அவன் முகம் மலர்ந்தது. அந்த மர வீட்டிற்கு வெளியே உறைபனி மண்ணை மறைத்தபடி இருக்க, வளைந்து சென்ற ஒற்றையடிப் பாதையைப் பார்த்தான். உடலை நிமிர்த்தினான். முதுகில் ஒரு புள்ளியாக இருந்த வலி மேனியெங்கும் படர்ந்தது. கைகளால் அந்த இடத்தை நீவியபடி சின்னஞ்சிறு கண்ணாடிச் சன்னலருகே சென்று நின்றான்.
ஆல்பைன் மலைச்சிகரங்கள் எங்கும் பனி மூடியிருந்தது. கண் முன்னே தூய வெண்மையான பனித்துகள்கள் விழுந்துகொண்டிருந்தன.
“யுவான்…”
தாயின் குரல் அவனை நிமிண்டியது. உடலை உதறிக்கொண்டு திரும்பினான்.
“எப்போதும் அந்த மலைகளில் என்ன பார்க்கிறாய் யுவான்?” என்று அவனுடைய செம்பட்டை நிற முடிகள் அடர்ந்த தலையைத் தனது இடது கரத்தினால் கோதினாள். ஆவி எழுந்துகொண்டிருந்த காய்கறி ரசம் நிறைந்த கோப்பையை அவனிடம் நீட்டினாள். அவன் தன் தாயின் முகத்தைப் பார்த்துப் பேசத் தொடங்கினான். சுருக்கங்கள் படரத் தொடங்கியிருந்த வட்ட முகம் அவளுக்கு. அதில் நெற்றிச்சுருக்கம் ஒன்று மட்டும் மாறாத வேதனையைப் போல நிரந்தரமாக தங்கியிருந்தது. தன் இடதுகை ஆள்காட்டி விரலால் அந்தச் சுருக்கத்தை இருமுறை தடவினான். அவள் அவன் கையை விலக்கிவிட்டு புன்னகை செய்தாள்.
“அம்மா.. எங்கிருந்து இவ்வளவு பனித்துகள்கள் இங்கு வருகின்றன? யார் இத்தனை பனியை இங்கே வரச்செய்தார்கள்?”
“யாரும் வரச்செய்யவில்லை மகனே.. அவை தானாகவே இங்கே கொட்டுகின்றன.”
“தானாகவே வருகிறதா? யாரைத் தேடி, எதைத் தேடி? இத்தனை தூய நிறத்தில், இத்தனை தூய குளிராக…”
அவள் அதற்கு மேல் பதில் சொல்லத் தெரியாதவளாக அமைதியானாள். அவன் தொண்டையில் ரசத்தின் இதமான வெப்பம் இறங்கியது. அவன் தன் கண்களைத் திருப்பி பனிமூடி மறைந்திருந்த செடிகளை, ஆங்காங்கே தெரிந்த சிறிய வீட்டுக்கூரைகளை, உறைந்த ஆல்பைன் மலைச்சிகரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்தப் பனிப்பொழிவினூடே, வீசும் காற்றில், தொலைவிலுள்ள வீட்டின் முன்பு கோரையால் செய்யப்பட்ட விண்மீன் ஒன்று காற்றாடி போல அசைவது அவனுக்குத் தெரிந்தது. அறுந்து விழுவதற்காகக் காத்திருக்கும் காற்றாடி. காற்று அசைப்பதன் அதிர்வு தாங்காது அது ஊசலாடியது. அதைக் காண இயலாமல் பார்வையை மாற்றிக்கொண்டான்.
அவன் மீண்டும் இழைப்புளியை எடுத்து மரத்தை இழைக்கத் தொடங்கினான்.
“யுவான்…”
அவன் காதில் அது விழவில்லை. ஒரு செவியில் தன் தாயின் அழைப்பு கேட்க, மறுசெவியில் எங்கிருந்தோ வந்த ஒரு செந்நாரையின் ‘தவக் தவக்’ குரலொலி தாயின் விளியைக் கேட்கவிடாது அவனைத் தடுத்தது.
அவன் தன்னுள் ஆழ்ந்தான். தூய வெண்மையில் குருதி கலந்ததைப் போன்று வெண்சிவப்பான பறவை. அது யாருடைய ரத்தம்? தேவன் சிலுவையில் சிந்திய குருதியின் ஒரு துளியை இந்தப் பனிக்கு அளித்துச் செந்நாரையாக மீண்டும் உயிர்கொண்டாரோ? பனிக்கு எங்கோ கூட்டமாக ஒதுங்கி நிற்கும் அவையெல்லாம் அவர் உயிர்த்தெழுகைகளா? அவற்றைத் தூதுவிட்டு தேவ மைந்தர் எதற்காக என்னை அழைக்கிறார்? இந்தக் குரல் ஏன் என் தொண்டையை வலிக்கச் செய்கிறது? என் உயிரும் அவருக்கானதுதானோ என்று அவன் நினைக்கும்போதே, “யுவான்.. என்ன செய்கிறாய் நீ?” என்றபடி அவனுடைய தாய் அந்தச் சொற்களின் குறுக்கே வந்து நின்றாள்.
அவன் மீண்டும் இழைக்கும் மரத்திலேயே கவனமானான். அவள் சன்னலில் சாய்ந்து நின்றாள்.
“அம்மா.. இந்த ஓக் மரம் இப்போது நிர்வாணமாக எத்தனை அழகாக உள்ளது! ஆனால் வெளியே அந்தச் செடிகள் பனி மூடிக் கிடக்கின்றன.”
“இறைவனின் குழந்தைகள் இப்படிச் சொல்லக்கூடாது மகனே.”
“நிர்வாணம் அழகுதானே அம்மா?”
“அது பாவம் மகனே.”
“எனக்கு அழகாகத் தெரிகிறதே..”
அவள் எதுவும் சொல்லாமல் அருகில் கிடந்த பெரிய மரத்திண்டில் பெருமூச்சுடன் அமர்ந்தாள். அவளின் மெலிந்த உடலில் இருந்து மூச்சு விசையாக வெளியேறிக்கொண்டிருந்தது. வறுமையும் பசியும் எரித்த உடலின் மிச்சத்தை அவனுக்காக வைத்திருப்பவள். மகனின் ஓயாத சிந்தனைகள் அவளையும் அலைக்கழித்தன. காற்றில் உளையும் கடலில் அதனுடன் சேர்ந்து உளையும் பெருங்கலம் போல அவனுடன் அவளும் ஆட்டம் கண்டாள். மகனின் புன்னகை கசியும் முகம் தனக்கு ஏன் பதற்றத்தை அளிக்கிறது என்று எண்ணி எண்ணி மருண்டாள்.
‘பிள்ளையின் சிரிப்பைக் கண்டு அஞ்சும் தாயெனத் தன்னைத் துரத்தும் அச்சம் எது?’ என்ற கேள்வியைத் தனக்குத்தானே தினமும் கேட்டுக்கொண்டாள். அவனுடைய இளஞ்சிவப்பான உதடுகளின் மீது மெல்லிய சிவந்த பூனைமயிர்கள். வெள்ளை முகத்தின் சிவந்த பருக்களை மேலும் அழகாக்கும் அந்தத் தூயப் புன்னகை அவளை ஏன் கலவரப்படுத்துகிறது? பேரழகு தரும் அச்சம். அவனைப் பேரழகாக்குவது எது? இவனிடமுள்ள இதே அழகுதான் இவன் வயதுப் பிள்ளைகள் அனைவரிடமும் உள்ளது. கண்களிலுள்ள அந்த வெறிப்பும், எதையோ தொலைத்தவன் அதை நிரந்தரமாக ஒவ்வொரு கணமும் தேடுவதைப் போன்ற கண்களும்தான் அவனை இத்தனை அழகாக்கி வைக்கிறது. முலை தேடும் சிசுவின் பரிதவிப்புள்ள கண்கள் இவை. பால் வற்றிப்போன முலையைச் சப்பிய குழந்தை பசியுடன் தாய் முகத்தை அண்ணாந்து பார்க்கும் கண்கள் இவை. இந்தப் பார்வையைத் தாள முடியாமல்தான் இவனை எப்போதும் அதட்டுகிறாள். அருகில் இருந்து விலக்கி வைக்கிறாள். தாய் அஞ்சும் பிள்ளை யாரைத் தேடுகிறது?
அதற்குள் யுவான் மரச்சிம்புகளை இணைத்து ஒரு மர வாளியைச் செய்யத் தொடங்கினான். அவன் கைகள் அனிச்சையாக இயங்கின. மெதுவாகவும் அழகாகவும் அவன் மரச்சிம்புகளை இணைத்தான். அது மரத்தைக் கொண்டே மரத்தை இணைத்துக் கட்டப்பட்ட அகலமான வாளி.
“இன்று இதை நிக்கோலாவின் வீட்டில் கொடுத்தால் நாம் பசியாறும் அளவுக்குப் போதுமான கோதுமை மாவு கிடைக்கும்.”
“ஆமாம் அம்மா. ஒரு லில்லிப்பூ பூத்ததைப் போல இந்த வாளி விரிந்து பூத்திருக்கிறது. லில்லிப் பூவும்கூட நிர்வாணமானதுதானே தாயே?”
“யுவான்… இந்தக் குளிரில் எதையாவது நினைத்துக்கொண்டிருக்காமல் படுத்து உறங்கு. நான் நிக்கோலா வீட்டிற்குச் சென்று வந்தபின் உணவு தயாரித்துத் தருகிறேன்” என்றபடி தலைமுக்காடை எடுத்துக்கொண்டு, அங்கியை உடல் முழுக்கப் போர்த்தியபடி தோல் காலணிகளைத் தேடினாள்.
பின்காலைப் பொழுது. வீட்டைவிட்டு வெளியே வந்ததும் பனியால் உடல் சிலிர்த்தது. யுவானைப் பற்றிய நினைவு மறுபடியும் சூழ்ந்துகொள்ள, பனி உதிர்ந்துகொண்டிருந்த சாலையில் நிதானமாக நடந்தாள். ‘அனைவரும் சொல்வதைப் போல இவன் இளைஞனாகிவிட்டதால் இப்படிப் பேசுகிறானா? ஆனால் இளைஞனான எவனும் இப்படி வெகுளியாகப் பேசி அறிந்ததில்லையே! இல்லை, மற்றவர்கள் சொல்வதைப் போல இவன் பித்தனா? ஒரு பித்தனால் இவ்வளவு அழகான மர வாளியைச் செய்துவிட முடியுமா!’ என நினைத்துத் தன் வலது கையிலிருந்த வாளியை உயர்த்திப் பார்த்தாள். அவன் சொல்வதைப் போலவே இதுவொரு பெரிய லில்லி மலர்தான். அவன் சொல்வதில் பிழை என்ன? செதுக்கச் செதுக்க மரப்பட்டைகள் உதிர்ந்த தண்டு எத்தனை வழுவழுப்பாக, எந்த முரடுகளும் அற்று அழகாகிறது. அது மரத்தின் நிர்வாணம்தானே என்று மனம் நினைத்த உடன் அங்கேயே நின்று மன்னிப்பிற்கான வார்த்தைகளை முணுமுணுத்தாள்.
வீட்டு வாசலின் மரப்படிகளில் அமர்ந்து பனித்துருவல்களை உதிர்த்து யுவான் பூக்களாக்கினான். அந்தப் பூக்கள் மண்ணைத் தொட்டு வெப்பமில்லாத சூரிய ஒளியில் நட்சத்திரங்கள் போல மின்னின. அதன் ஒளியில் திளைத்தவனாக மீண்டும் மீண்டும் பனியை அள்ளி அள்ளி உதிர்த்தான். குளிரில் அவன் கைகள் மரத்துக்கொண்டிருந்தன. சற்று நேரத்தில் அவனால் விரல்களை வளைக்க முடியவில்லை. பத்து விரல்களும் விரிந்தபடியே நின்றன. அவனால் கொஞ்சம்கூட விரல்களை மடக்க இயலாது என்றான பின் அப்படியே கதவில் சாய்ந்து அமர்ந்துகொண்டான். விரல்களில் இருந்த வலி ஊர்ந்து கைகளுக்குச் சென்றது. பின்னர் தோளில் ஏறியது.
2
சில மாதங்கள் கழித்து மருத்துவமனையில் வேலை பார்க்கத் தொடங்கியிருந்தான் யுவான். அங்குள்ள பள்ளிக்கூடத்திற்குச் செல்லத் தொடங்கியதும் அவன் தாய் நிம்மதி அடைந்தாள். சாலமன் பள்ளியில் அவன் படிக்கச் செல்வதை ஊரார் பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள். இனி அவன் திரும்பி இந்தச் சிறு வீட்டிற்கு வருவானா என்ற எண்ணமே தாய்க்கு உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. பனியும் வெயிலுமான ஓர் இளங்காலையில் அவன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான். தன் வீட்டைத் திரும்பிப் பார்க்காமலேயே செல்லும் அவனை அந்தச் சிறு மரவீட்டின் வாசல்கதவில் நின்றவாறு தலைசாய்த்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் தாய். அவளின் மார்பகங்கள் அதிர்ந்து துவண்டன. அவன் ஒரு நெருப்புத்துண்டம் போல இருந்ததை அவள் எப்போதும் உணர்ந்திருந்தாள். அவன் எப்போது வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளும் கங்குத் துண்டு. அவன் பற்றி எரிவதைப் போல கனவு கண்ட அந்த நாளில் தேவாலயத்தில் ஒரு முழுநாளும் மண்டியிட்டுக் கிடந்தாள். கூப்பியக் கரங்களைக் கீழிறக்காது ஈரமான கண்களுடன் அண்ணாந்து பார்த்தபடி இருந்தாள்.
இரவு அணைந்து விண்மீன்கள் பூக்கத் தொடங்கிய பொழுதில் திடுக்கிட்டுக் கண்களை மாற்றி தேவாலயத்தின் மேற்கு வாயிலைப் பார்த்தாள். ‘எரிவதாலேயே அவை விண்மீன்கள்’ என்று சொல்லிச் சிரித்தபடி யுவான் அவளிடம் வந்தான். அவளது தோளைப் பற்றியிருந்த அவன் கைகளின் குளுமை அவளைச் சிலிர்க்க வைத்தது. அந்தத் தொடுகையில் எப்போதும் இருக்கும் ஆறுதலை உணர்ந்தவளாக அவள் அவனுடன் அந்த இருள் மின்னும் ஒற்றையடிப் பாதையில் வீட்டைநோக்கி நடந்தாள். நடந்த வழியெங்கும், ‘இவன் இப்படியே இருந்துவிட்டால் என்ன?’ என்று அவள் மனம் விம்மிக்கொண்டிருந்தது. அவள் கண்களில் மீண்டும் மீண்டும் ஈரம் சேர்ந்தது. அந்த ஈரம் கண்களை எரித்து மறைக்க, இன்று அவள் கண்முன்னால் சூரியனின் வெள்ளை வெயிலுக்குள் மறைந்து, எங்கோ தான் தேடும் தொலைவை நோக்கி அவன் சென்றிருந்தான்.
3
அந்த வசந்தகாலத் தொடக்கத்திற்கு அனைவரும் தயாராக இருந்தனர். தானியங்களை அரைத்து மாவாக்கி வைத்திருந்தார்கள். இரவெல்லாம் கணப்பின் முன் அமர்ந்து உலர்ந்த மாவை இனிப்பிட்டுப் பிசைந்தார்கள். மாவை உருண்டைகள் ஆக்கினார்கள். குறைத்து எரியவிடப்பட்ட கணப்பின் கல் சுவரில் மாவு உருண்டைகளை வில்லைகளாகத் தட்டி வைத்தனர். பக்குவமான வெப்பம் தொடத் தொட மாவு பூரித்து எழுந்தது. அவர்கள் தங்களின் தேவனுக்காகக் கடல் வழிவிட்ட நிகழ்வைப் பாடல்களாகப் பாடியபடி அப்பங்களுக்குத் தேவையான பழங்களை எடுத்து விண்மீன்களைப் போலச் சிறுசிறு துண்டங்களாக்கித் தட்டுகளில் வைத்தார்கள்.
அந்த நகரத்துத் தேவாலயத்தில் பாதிரியான யுவான், தன்னுடைய அறையில் பரவசமாக இருந்தார். தன்னுடைய ஏடுகளில் எழுதி வைத்திருந்த கவிதைகள் அவர்களிடம் சிக்கியிருந்ததைக்கூடக் கவனிக்காதவராக ஆழ்ந்த மகிழ்ச்சியில் இருந்தார். சாலமனின் வரிகள் அவருக்குள் ஊற்று போலப் பீய்ச்சி அடித்துக்கொண்டிருக்க, அதைத் தாள முடியாமல் எப்போதும் சிரித்தபடியும் அந்தப் பாடல்களைப் பாடியபடியும் வலம் வந்துகொண்டிருந்தார்.
‘உமது பெயரோ உன் வாசனையைவிட
மேலாக எங்கும் பரவியுள்ளது.
திராட்சை ரசத்தைவிட மேலானது
உனது காதல்.
திராட்சை ரசத்தைவிடத் தூயது
உன்னுடைய காதல்’
என்ற சாலமனின் வரிகளை அப்போது அவர் பாடிக்கொண்டிருந்தார்.
உறைந்த பனி அமைதியாய் இருளில் நிற்க, கவிதை வழிந்து பெருகும் நெஞ்சத்துடன் யுவான் தன் கைகளைக் கட்டிக்கொண்டு இருளைப் பார்த்தபடி நின்றார். விவரிக்க முடியாத ஒன்று உள்ளுக்குள் அவரை ஆட்கொண்டிருந்தது.
‘கிச்சிலி மரத்தடியில் நான் உன்னை எழுப்பினேன்.
அங்கேயல்லவா உன் தாய் உன்னை வலித்துப்பெற்றாள்.
உன் நெஞ்சில் என்னை முத்திரையாகப் பொறித்துக்கொள்.
உன் கைகளில் என்னை இலச்சினையாய் அணிந்துகொள்.
ஆம், சாவைப் போலவே காதல் மகத்தானது.’
என்ற சாலமனின் கவிதையைப் பாடத் தொடங்கினார்.
தேவாலயத்திற்கு வரும் பெண்கள், ‘அந்தப் பாடல் யாருடையது? தங்களைப் போல ஒரு பெண் பாடினாரா?’ என்று கேட்கத் தொடங்கினார்கள். அந்தப் பாடலைக் கேட்கும்போது அவர்களின் பழுப்பு நிற விழிமணிகள் வியப்பில் விரிந்தன. பின்னர் அவர்கள் தங்கள் முகபாவங்கள் தெரியாது தலைமுக்காட்டை இழுத்து விட்டுக்கொண்டு குனிந்தமர்ந்து கேட்டார்கள்.
அன்று மேலும் மேலும் அந்தச் சூரியன் பனிப்பரப்பைத் தன் கதிர்களால் தொட்டு உருக வைத்துக்கொண்டிருந்தது. பனியாக உறைந்திருந்த நீர் உருகி வழிய, நகரவாசிகள் தங்கள் அப்பங்களை மற்றவருடன் பகிர்ந்துகொண்டார்கள். யுவான் மேலான பரவசத்தில், ‘ஆம்.. சாவைப் போலவே காதல் மகத்தானது’ என்று பாடிக்கொண்டிருந்தார்.
அன்று அவரின் உள்ளுக்குள் ஓடிய சாலமனின் வரிகள் நின்றுவிட்டிருந்தன. அவர் கண்கள் நிறைந்துகொண்டிருக்க, கண்களை மூடித்திறந்தார். அந்தத் தேவாலயத்தின் பெரிய முற்றத்தில் வெயில் வழிந்து அந்தப் பனிவெளியைத் தொட்டதும் தன் உடலை உலுக்கிக்கொண்டார். ஒளி விழுந்த இடத்தில் பனி உருகிக் கரைந்தது. அந்த நீரில் ஒளி கலந்து சிவப்பு நிறமாய்த் தன்னைக் காட்டியது. கிச்சிலி பழங்களின் புளிப்பானது இனிப்பாய் மாறும் காலம் அது. கிச்சிலி மரத்தின் பச்சைப் பழங்களில் இனிமை ஊறத் தொடங்கும் காலை அது. யுவான் தன்னை அறியாது தனக்கான பாடலைப் பாடத் தொடங்கியிருந்தார்.
4
எங்கோ இருள்வெளிக்கு யுவான் கொண்டுசெல்லப்பட்டார். அங்கே ஒலிகள் இல்லை. அவர் தன்னுள் ஒளிர்ந்த மிகப்பெரிய வெளிச்சத்தால் தன் கண்களை மூடியபடி இருந்தார். அவர் கைகள் பிணைக்கப்பட்டிருந்தன. அங்கே அவரைத் தரையில் மண்டியிடச் செய்தார்கள்.
“நீ சொல்வது உண்மையா யுவான்?”
“ஆம்.”
“அதை மீண்டும் சொல்.”
“நான் அந்த ஆண்டவரின் காதலி. இந்த நாளில் அதை நான் இந்த உலகிற்கு அறிவிக்கிறேன். பெண்ணாகியே என் தேவனை நான் முழுமையாகச் சென்றடைகிறேன்” என்று யுவான் சொல்லும்போதே அவரது மேலங்கி களையப்பட்டது. அவரின் வெற்று முதுகில் சாட்டையின் கரம் சுளீர் என்று தொட்டது.
‘பெருங்கடலும் அணைக்காது பெருங்காதலை’ என்று மீண்டும் சொன்னார்.
“இது அந்த மாமன்னர் சாலமனின் வரிகள். ஒளித்தாலும் அவை இவன் வரை வந்துசேர்ந்துவிட்டன.”
“இவன் பித்தன், காமுகன். சிறையில் அடைந்து கிடக்கட்டும்.”
அவரின் முதுகில் சாட்டைகள் வரிகளாகப் பதிந்தன. அவர், ‘ஆம்.. சாவைப் போலவே காதல் மகத்தானது’ என்றே முனகிக்கொண்டிருந்தார். அவரை ஓர் இருட்டு அறையில் தள்ளி அதன் கதவுகளை நிரந்தரமாக மூடினார்கள். முதுகுத்தண்டில் மின்னல் வெட்டுவதைப் போல வலி மின்னிக்கொண்டிருக்க, அவர் குளிர்ந்த தரையில் கிடந்தார். அந்த வலி கால்களில் பரவியது. உடல் துடித்துத் துள்ளியது. உடலெங்கும் குளிர் நிறைந்து உறைந்தது. அவருக்குச் சிறிய கோதுமை அப்பமும் தண்ணீரும் ஒரு சதுரத்துளை வழியே தரப்பட்டன. சில நாட்களில் அவர் காதுகள் அந்தத் தரைக்குக் கீழே நடமாட்டத்தை உணர்ந்தன.
அவருக்குத் தன் கால்களால் ஓர் அடி எடுத்து வைப்பதே அத்தனை கடுமையானதாக இருந்தது. நேராக நிற்பதற்குக் கால்கள் ஒத்துழைக்கவில்லை. ஒவ்வொரு அடிக்கும் மிகுந்த பிரயத்தனம் வேண்டியிருந்தது. மனம் ஊற்றாகப் பொங்கிக்கொண்டிருந்தது. உடலெங்கும் வலியைத் தாங்கிக்கொண்டு ஏதோ ஒன்று அவரை நிலைகொள்ளாமல் ஆக்கியது.
‘ஓர் இருண்ட இரவில்
காதலால் எரிந்தபடி
நான் என் வீட்டைவிட்டுச் செல்கிறேன்.
எத்தனை இனிய வாய்ப்பு!’
என்று தனக்குத்தானே பாடிக்கொண்டார்.
ஒரு நாள் அவர் அங்கிருந்து அருவமாக வெளியேறினார். வழியெங்கும் பனி அவருக்கு வழிவிட்டுச் சென்றது. பனி மீது நடந்துகொண்டே தன் உயிர் எரிக்கும் வெம்மையைப் பற்றிப் பாடினார். அந்த வெம்மையில் தானே எரிந்து சுடர்ந்துகொண்டிருந்தார். எங்கும் முடியாத சாலைகளில் தன் கால்களை இழுத்து இழுத்து நடந்தபடி சென்றுகொண்டேயிருந்தார்.
அவர் தனக்கு மேலானவனை, எங்கோ இருப்பவனைத் தேடியடையும் காதலியானார். எந்த நேரமும் அவர் விழிகள் வானத்தைக் கண்டு புன்னகை செய்தன. தன்னைப் பித்தன் என்றவர்களுடன் இணைந்து தானும் சிரித்தார். பனி படர்ந்த கிராமங்களிலும் மடாலயங்களிலும் தங்கினார். மடாலயங்கள் இல்லாத ஊர்களில் அவர் தன் தச்சு உளியைக் கையிலெடுக்கும் தோறும் அவருக்குள்ளே பாடல்கள் பெருகின. அவரின் கைகளில் இருந்து சின்னஞ்சிறு சுடரைப் போன்ற மடாலயங்கள் எழுந்து வந்தன. அவர் முழுமையாக அவனின் காதலியானார்.
அவரின் பாடல்களில் அவன் ஔியானான்.
‘காலம்
என்னைக் கொண்டுசேர்க்கும்
எனக்காகக் காத்திருக்கும் ஒருவனிடம்.
நான் நன்கறிந்தவன். என் உள்ளத்திற்கு இனியவன்.
எவருமே இல்லாத இடத்தில் எனக்காகக் காத்திருப்பவன்’
என்று இருளை ஒளியாக்கினார். தன்னை அவன் அருகில் கொண்டுசேர்க்கும் ஒளிமிக்கப் பாதையாகப் பாடல்களை ஆக்கிக்கொண்டார்.
தன் பாடல்களால் அவனை நோக்கியே சென்றுகொண்டிருந்தார். உள்ளுக்குள் பொங்கிய ஊற்று அவரின் உடல் வலிகளைப் பாடல்களாக மாற்றியது. வழியெங்கும் பனிநிலத்தில் குளிர்முட்கள் தங்களின் கூர்முனைகளுடன் அவருக்காகக் காத்திருந்தன.
மீண்டுமொரு உறைபனி காலத்தில் அவர் வயிற்றுக்குள் உண்டாகிய கத்தியானது தொண்டை வரை குத்திப் புண்ணாக்கி அவரை அறுக்கத் தொடங்கியது. எங்கும் வலி. அவன் நிறைந்து ஊறும் ஊற்றானது அவர் உடல். நோயும் வலியும்கூட அவனே என்று அவர் பாடினார்.
5
நான் யுவான். பனிவெளி எங்கும் அவனைத் தேடினேன். இந்த ஊருடன் அந்தப் பயணம் முடிகிறது என்று என் மனம் சொல்கிறது. தீராத தாகம். அருகில் யாரும் இல்லை. கேட்கவும் தோன்றவில்லை. அவனுக்கான பல்லாயிரம் ஆலயங்களில் ஏதோ ஒன்றின் மூலையில் கிடக்கிறேன்.
‘அவனுடைய கரம் மிக மென்மையாக
என் தொண்டையை வெட்டிச் செல்கிறது.
என் உணர்வுகள் குருதியென வழிந்தோட நான் நினைவிழந்தேன்.
என்னை இழந்தேன் எனினும் எஞ்சுகிறேன்.
என் தலைவன் தோள் சாய்ந்து என்னை உணர்கிறேன்.
இதோ எல்லாம் மறைகின்றன.
எஞ்சியவை எல்லாம்
என் ஆசைகள் முழுக்க.
ஏன் நானேகூட!
நான் இறந்த அந்த லில்லி மலர்வெளியில்
அனைத்துமே தொலைந்துபோயின!’
என் உடல் குளிர்ந்துகொண்டிருக்கிறது. என் கால்களில் வலியில்லை. கைகளில் வலி இல்லை. வயிற்றிலிருந்த கத்தி எங்கோ கிழித்து வெளியேறியிருந்தது. மெல்ல மெல்ல நான் காணாமல் போய்க்கொண்டிருக்கிறேன். லில்லி மலர்கள் வெண்மையாய்ப் பூத்திருக்கும் காட்டின் எல்லையில் கையில் ஒரு லில்லி மலருடன் அவன் நிற்கிறான். அந்தக் கிச்சிலி மரத்தடியில் நான் கண்டுகொண்டது இவனைத்தான். இன்று அவன் எனக்காகவே வந்து நிற்கிறான். நான் இதற்காகவே என் வீட்டைவிட்டு வெளியேறி இத்தனை தொலைவு வந்தேன்.
1 comment
வசீகரமான மொழியும் கதைக்களமும்
மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்தை தருகிறது. வாழ்த்துக்கள்
Comments are closed.