பெண் உகந்த பெரும்பித்தன்

2 comments

திருப்பள்ளி எழுச்சி பாடல் 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்;

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;

திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே!

என்னையும் ஆண்டுகொண்டு இன்அருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி எழுந்துஅரு ளாயே!

இறைவரை உறக்கம் நீங்கி எழச் சொல்லித் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறோமே, முதலில் இறைவருக்கு உறக்கம் உண்டா? அவர் உறங்கினால் அல்லவா அவரை எழுப்புவதற்கு என்று கேள்வி எழுப்பினோம்; இறைவர் உறங்கினார் என்பது உபசார வழக்கு என்று சமாதானம் சொல்லிக்கொண்டோம். அதென்ன உபசார வழக்கு? ஒன்றன் தன்மையை மற்றொன்றின்மேல் ஏற்றிக் கூறுவது உபசார வழக்கு.

வேலைகளை முடித்துக் களைத்திருக்கும் மனிதர்களுக்கு ஓய்வு வேண்டி இருக்கிறது; உறங்குகிறார்கள். இறைவர் மட்டும் என்ன வேலைவெட்டி இல்லாதவரா? அவருக்கும்தான் வேலைகள் இருக்கின்றன; உலகத்தை உருட்டிக்கொண்டே இருக்கிறார் இல்லையா? அவருக்கும் களைப்பு மேலிடாதா? ஆகவே உறங்குகிறார். உழைத்துக் களைத்து உறங்குதல் உயிர்களின் இயல்பு. அவற்றின் தன்மையைக் கடவுளுக்கு ஏற்றிக் கூறியதால் இது உபசார வழக்கு.

அது ஒருபுறம் இருக்கட்டும். உபசாரத்துக்காகச் சொல்வதென்றாலும் கடவுள் உறங்கினார் என்பது பொருத்தமாக இல்லையே? இன்றைக்குக் கடவுள் உறங்கினார் என்பீர்கள்; நாளைக்குச் செருமானிய நாட்டு மெய்யியலாளன் நீட்சேயைப்போலக் கடவுள் இறந்துவிட்டார் என்று இடக்கு மடக்காக ஏதாவது சொன்னாலும் சொல்வீர்கள்; ஆகவே சொல்வதை எல்லோரும் ஏற்குமாறு பொருத்தமாகச் சொல்லுங்கள் என்பாரும் இருக்கலாம்.

அவர்கள் அறியச் சொல்வது இது: கடவுளுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் என்று பொதுவாக மூன்று தொழில்கள் சொல்வதே வழக்கம். இவற்றோடு மறைத்தல், அருளல் என்று கூடுதலாக இரண்டு தொழில்களையும் சேர்த்து ஐந்தாகச் சொல்கிறது சைவ சித்தாந்தம். இவற்றில் அருளல் புரிகிறது. அதென்ன மறைத்தல்? யாருக்கு மறைக்கிறார்? உயிர்களுக்கு மறைக்கிறார். எதை மறைக்கிறார்? யாரும் காணாமல் தன்னையே மறைத்துக்கொள்கிறார். இதென்ன கூத்து? வேப்ப மரத்துக்கு நோய் வந்தால் வைத்தியரிடம் போகலாம். வைத்தியருக்கே நோய் என்றால் யாரிடம் போவது? காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தரச்சொல்லிக் காவலர்களிடம் விண்ணப்பம் வைக்கலாம். காவலர்களே காணாமல் போவார்கள் என்றால் யாரிடம் விண்ணப்பம் வைப்பது? மந்தையில் தொலைந்த ஆடுகளாக நாம் காணாமல் போனால் மீட்டெடுக்கும் கடவுள் தானே காணாமல் போனால் யார் மீட்டெடுப்பார்?

இது, தன்னைத் தேடும் உயிர்களோடு கடவுள் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு. நான் மறைந்துகொள்வேன், நீ கண்டுபிடி என்று கடவுள் மறைந்துகொள்ள, உயிர்களோ கண்ணுக்கு முன் காணாத கடவுளை விட்டுவிட்டுக் கண்ணுக்கு முன் கண்டவற்றை மெய்யாகக் கருதித் தங்களைத் தொலைக்க, விளையாட்டு வினையாக ஆகிவிடுகிறது. ஒளிந்துகொண்டவரையும் காணவில்லை; கண்டுபிடிக்கப் புறப்பட்டவர்களையும் காணவில்லை. ஒரு தரப்பு மட்டுமே காணாமல் போகும் விளையாட்டாகத் தொடங்கி இறுதியில் இரு தரப்புமே காணாமல்போகும் விளையாட்டாக ஆகிவிட்டது புதுமைதான், இல்லையா!

தேடிக் கண்டுபிடிக்கப் போன தானே கடைசியில் தொலைந்துபோனதைக் கண்டுகொள்ளும்போது, மறைப்பு நீங்கி, உயிர் விழிப்படைந்துவிடுகிறது. காலையில் நேரத்துக்குக் கிளம்ப வேண்டியவர்கள் நேரம் தெரியாமல் உறங்கிவிட்டால் எழுப்பாமல் விட்டவர்களைக் காரணமாக்குவதுபோல, தான் உறங்கிக் கடவுளைக் கோட்டைவிட்ட உயிர், கடவுள் உறங்கிவிட்டதாகவும் அதனால் தன் வேலை கெட்டுவிட்டதாகவும் சமாளித்துக்கொண்டு கடவுளை எழுப்பத் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறது. அதுவரையில் உயிரைப் பற்றியிருந்த மறைப்பு நீங்கிவிட்டது, உயிர் தன் இலக்குக்குத் திரும்பிவிட்டது என்பதுதான் திருப்பள்ளி எழுச்சியின் அடிப்படை.

திருப்பள்ளி எழுச்சியின் நான்காம் பாட்டில் சொல்வதென்ன? திருப்பெருந்துறை உறை சிவனே! உன்னைத் துயில் எழுப்புவதற்காக வந்து நிற்பவர்களின் கைகளைப் பார்: வீணையும் யாழுமாக, இன்னிசை மீட்டும் கையினர் ஒரு பக்கம் நிற்கிறார்கள். வேதங்களும் ஆகமங்களும் கொண்ட துதிக்கையர் ஒரு பக்கம் நிற்கிறார்கள். உனக்குச் சூட்டுவதற்காகத் தொடுத்த மலர்க் கையினர் ஒரு பக்கம் நிற்கிறார்கள். தொழுதுகொண்டிருக்கும் தொழுகையர் ஒரு பக்கமும், உன்னை எண்ணி உருகிக் கண்ணீர் கசியும் அழுகையர் ஒரு பக்கம் நிற்கிறார்கள். கைகளைத் தலைக்குமேல் வைத்துக் கும்பிட்ட மேனிக்கு இருப்பவர்கள் ஒரு பக்கம் நிற்கிறார்கள். இந்தக் குழுக்கள் எதிலம் சேர ஒட்டாதவனாகக் கையைப் பிசைந்துகொண்டு, உன்னை அன்றி வேறு ஏதும் அறியாதவனாக நானும் நிற்கிறேன். என்னையும் ஆண்டுகொள் அப்பா! பள்ளி எழுந்து, அருள்!

*

பெண் உகந்த பெரும்பித்தன் நூலிலிருந்து ஒரு பகுதி. தமிழினி வெளியீடு.

2 comments

J.Adalarasan February 3, 2023 - 2:14 am

சிறப்பு

Radha February 12, 2023 - 5:07 pm

அருமை..இன்றைக்கு தான் திருப்பள்ளி எழுச்சிக்கு அழகான பொருள் விளங்கினேன்.!

Comments are closed.