ஹேம்லட் – ஷேக்ஸ்பியர்

1 comment

கெர்ட்ரூடும் பொலோனியஸும் நுழைகின்றனர்.

பொலோனியஸ்

அவர் இங்கு வரும்போது அவரைத் துருவிக் கேட்டு நிலைமையை அறிய முயலுங்கள். அவரது வீண் விளையாட்டுகள் அரசரைச் சினமூட்டியதாகச் சொல்லி, அவருக்காக நீங்கள் பல துன்பங்களைத் தாங்கி வருவதாகவும் வருந்துங்கள். நான் இங்கேயே அமைதியாகக் கரந்து நிற்கிறேன். அவருடன் நேரடியாகப் பேசுங்கள்.

ஹேம்லட்

(மேடைக்கு வெளியிருந்து) அன்னையே! அன்னையே!

கெர்ட்ரூட்

கவலை வேண்டாம். நீங்கள் சொன்னபடியே செய்வேன். உடனே ஒளிந்துகொள்ளுங்கள். அவன் வரும் ஓசை கேட்கிறது.

(பொலோனியஸ் மறைய ஹேம்லட் நுழைகிறான்.)

ஹேம்லட்

அன்னையே, எதற்காக என்னை அழைத்தீர்கள்?

கெர்ட்ரூட்

ஹேம்லட், உன் தந்தைக்கு நீ இழுக்கு ஏற்படுத்திவிட்டாய்!

ஹேம்லட்

அன்னையே, நீங்கள்தான் என் தந்தைக்கு இழுக்கு ஏற்படுத்தினீர்கள்.

கெர்ட்ரூட்

என்ன மூளையற்ற சொற்கள் பேசுகிறாய்?

ஹேம்லட்

நீங்கள்தான் என்மீது கொடிய வினாக்களை ஏவுகிறீர்கள்.

கெர்ட்ரூட்

ஏன் ஹேம்லட்? என்னவாயிற்று உனக்கு?

ஹேம்லட்

உங்களுக்கு இப்போது என்ன பிரச்சினை?

கெர்ட்ரூட்

நான் யாரென்பதை மறந்துவிட்டாயா?

ஹேம்லட்

கடவுள்… ஆணையாக… நான் மறக்கவில்லை. நீங்கள் இந்நாட்டின் அரசி, உங்கள் கணவனின் இளவலை மணந்தவர், நான் விரும்பாதபோதும் எனக்கு அன்னையானவர்.

கெர்ட்ரூட்

அப்படியானால் எனக்காகப் பேசக்கூடிய சிலரை அழைக்கிறேன்.

ஹேம்லட்

கூடாது. அமருங்கள். ஆடியை முன்னிருத்தி உம் மனத்தின் ஆழத்தில் இருக்கும் தீமைகளைச் சுட்டிக்காட்டாவிடில் ஒருபோதும் பிழையறிந்து திருந்தமாட்டீர்கள்.

கெர்ட்ரூட்

என்ன செய்யப் போகிறாய்? என்னைக் கொன்றுவிடாதே! உதவி! உதவி!

பொலோனியஸ்

(திரைமறைவிலிருந்து) கொலை கொலை! உதவி உதவி!

ஹேம்லட்

இது என்ன பெருச்சாளியா? இனிமேல் அது செத்த பெருச்சாளி!

(தன் வாளைத் திரைவழியே செருகி பொலோனியஸைக் கொல்கிறான்.)

பொலோனியஸ்

(திரைக்குப் பின்னால் இருந்து) ஐயகோ! நான் கொலையுண்டேன்!

கெர்ட்ரூட்

அட கடவுளே! என்ன பாதகம் செய்துவிட்டாய்?

ஹேம்லட்

நானறியேன். ஒளிந்திருந்தது அரசனா?

கெர்ட்ரூட்

ஐயகோ! எத்தகைய கொடிய இரக்கமற்ற பாதகச் செயல்!

ஹேம்லட்

ஆம் கொடுங்செயல்! நல்லம்மையே! அரசரைக் கொன்று அவர் மனைவியைக் கவர்வதற்கு இணையான கொடுஞ்செயல்!

கெர்ட்ரூட்

அரசனைக் கொன்றனரா?

ஹேம்லட்

நான் அப்படித்தான் சொன்னேன், நல்லரிவையே!

(திரைச்சீலையை விலக்கி பொலோனியஸைக் காண்கிறான்.)

அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைக்கும் கீழ்த்தரமான பறக்காவட்டிப் பன்றியே! ஏதோ முக்கியமான ஒருவன் என்று நான் நினைத்துவிட்டேன். உனக்குத் தக்கதைப் பெற்றுக்கொண்டாய். பறக்காவட்டியாக இருப்பது எத்தனை ஆபத்தானது என்று இப்போது புரிந்திருக்கும் உனக்கு. (கெர்ட்ரூடிடம்) கைகளைப் பிசைவதை நிறுத்துங்கள். உம் இதயத்தைச் சற்றுப் பிசைந்து பிழிய வேண்டிய நேரமிது. இன்னும் அதன் ஓரத்தில் சற்றே மென்மையும் கனிவும் இருந்து உம் தீய வாழ்க்கை முறையால் ஈரமே இன்றி உலராமல் இருக்குமாயின் அதில் சற்று நன்மை விளையக்கூடும்.

கெர்ட்ரூட்

நீ இத்தனை வன்மையுடன் என்னிடம் பேச நான் என்ன தீங்கிழைத்தேன்?

ஹேம்லட்

நாணுடைமையை அழித்து, பொற்புடைமைக்குப் பாசாங்கைப் பதிலீடு செய்து, பொதும்பல் மலர்வின் தூய்மையைக் களங்கப்படுத்தி, மண உறுதிமொழியை வாக்குறுதியாக சூதாடியின் மாற்றிய செயல். அந்தோ பரிதாபம்! நீங்கள் செய்த செயல் திருமணத்தின் ஆன்மாவை உதறித் தள்ளியது. பிரார்த்தனையை வெற்று உளறலாக மாற்றிய அவச்செயல். தீர்ப்பு நாள்தான் வந்துவிட்டதோ என்று கருதி இந்த ஞாலத்தை உற்றுப் பார்த்த விண்ணகம் உங்கள் இழிசெயலைக் கண்டு அயர்கிறது.

கெர்ட்ரூட்

எனக்கே தெரியாமல் இத்தனை பழிச்சொற்களுக்கு நான் எப்படிப் பொறுப்பானேன்? சொல்! சொல்!

ஹேம்லட்

இந்த ஓவியத்தைப் பாரீர்! அதோ அந்த ஓவியத்தையும் பாரீர்! இரு சகோதரர்களின் உருவங்கள்! இவர் தோற்றம் சுருள் சிகை சென்னி புரள – எத்தனை கனிவுடன் – கிரேக்கக் கடவுளரை ஒத்திருக்கிறது. போர்க்கடவுளைப் போல ஆணை பிறப்பிக்கும் தோரணை. மலையுச்சியில் தோன்றிய மெர்க்குரியை ஒத்த வல்லாண்மை. அனைத்துக் கடவுளரும் ஒன்றுகூடிச் சான்றளித்தது போன்ற தோற்றமும் நல்லியல்புகளும் ததும்பும் முகம். இவர் உங்கள் கொழுநனாக இருந்தவர். இப்போது அதைப் பாருங்கள், உங்கள் தற்போதைய கணவர். அருகில் இருக்கும் நற்சோளத்தைக் கெடுத்துவிடும் நோயுற்ற களைச்செடியைப் போலிருக்கிறார். உமக்குக் கண்ணிருக்கிறதா இல்லையா? அத்தனை உயரத்தில் உங்களை அமர்த்தியவரிடமிருந்து கீழ்மையில் உழல்பவனை இத்தனை விரைவாக எப்படி ஏற்க முடிந்தது? காதலால் குருடாகிவிட்டதாகவும் நீங்கள் சொல்ல முடியாது. உங்கள் வயதில் அறிவின் வழிகாட்டுதலை ஏற்குமளவு இதயம் பக்குவமாகி இருக்கும். ஆனால் எந்தக் காரணி உங்களை இங்கிருந்து அகற்றி அங்கு சேர்ப்பித்தது? வியப்பு! தீரா வியப்பு! நீங்கள் நடையுடையாக உலவுவதைக்கொண்டு பார்த்தால் உங்களுக்குச் சற்றேனும் மழுங்காத பகுதி மூளையில் இருந்தாக வேண்டும். ஆனால் அதுவும் செயலிழந்து ஒழிந்ததோ? மனம் பிறழ்ந்தவருக்குக்கூட இவ்விரண்டில் சரியானவரைத் தேர்வது எளிது. உங்கள் விழிகளை மூடிய சாத்தான் எது? உணர்வற்ற விழிகள், காட்சியிலா உணர்வு, திறனற்ற செவி, எதுவுமற்ற முகர்ச்சி! நொய்வடைந்த புலன்களுள் ஒன்றைப் பயன்படுத்தியிருந்தாலும் இந்த அவலநிலை உங்களுக்கு வந்திருக்காது. கொடுமையே.. ஏன் முகம் சிவக்கிறது உங்களுக்கு? தீமைக்கு முதிய பெண்ணின் தசையெலும்பைக்கூட உருக்கத் திறனுண்டு எனில் அது என்னையும் சேர்த்தே உருக்கட்டும். ஆவேசச் சடுதியில் செயல்களை நிகழ்த்துவது சரியென்றானால், முதியவர்களே அப்படிச் செய்யத் தொடங்கிவிட்டால் என்னவாகும்? இச்சைகளின் ஆணைகளைப் பகுத்தறிவு பின்தொடர்ந்து செல்ல வேண்டியதுதான்.

கெர்ட்ரூட்

ஐயகோ! ஹேம்லட்… நிறுத்து! என் அக ஆழத்தை உற்றுப் பார்க்க வைக்கிறாய்.  அதில் பாவத்தின் இழைகள் இனியொருபோதும் தூய்மையாக்க ஒண்ணாவண்ணம் கறுத்துத் தடித்திருக்கின்றன.

ஹேம்லட்

ஆம். அங்கிருந்தவாறே நீங்கள் அழுகி நாறும் வஞ்சக மஞ்சத்தில் கிடந்து காமக் களியாட்டம் புரிக!

கெர்ட்ரூட்

போதும் நிறுத்து! உன் சொற்கள் குறுவாளென என்னைத் துளைக்கின்றன. இனியும் என்னைக் கொல்லாதே ஹேம்லட்!

ஹேம்லட்

உங்கள் முதற் கொழுநரின் இருபதில் பத்தில் ஒரு பங்குகூட இணை வைக்க ஒண்ணாதவன், அரசர்களில் கொடுங்கோலன், கிரீடத் திருடன் – அதைச் சுயமாகச் சூட்டிக்கொண்ட கயவன்!

கெர்ட்ரூட்

நிறுத்து!

ஹேம்லட்

பாவிகளிலும் படுபாவி!

(ஆவி வருகை.)

தேவதூதர்களே! உம் சிறகுகளால் எமைக் காத்தருளும்! உங்களுக்கு என்ன சேவை செய்யட்டும் கருணைமிகுந்த அரசே!

கெர்ட்ரூட்

ஐயகோ! என் அன்பு மகன் ஹேம்லட் முற்றிலும் பைத்தியமானானே!

ஹேம்லட்

தங்கள் மகன் தன் நோக்கத்திலிருந்து பிறழ்ந்து தாமதமாகச் செயல்களை நிகழ்த்தி உங்களது முதன்மை ஆணையைத் தவறவிடக்கூடும் என்ற எண்ணத்தில் என்னை ஒருக்க வந்தீர்களா?

ஆவி

மறவாதே. பழியீட்டிற்கான பசியுணர்வைக் கூர்தீட்டிச் செல்லவே வந்தேன். ஆனால் பார், உன் அன்னை மூர்ச்சையாகி இருக்கிறாள். தடுமாறும் அவள் ஆன்மா அச்சத்தில் இன்னும் கொடிய உளமயக்குகளைக் காணாதவாறு அவளைக் காத்திடு! மென்னுடல் உடையோரிடம் கற்பனையின் வீச்சு கட்டின்றிப் பெருகும். அவளிடம் பேசு ஹேம்லட்!

ஹேம்லட்

தேவியே, தங்களுக்கு என்னவாயிற்று?

கெர்ட்ரூட்

உனக்கென்ன ஆயிற்று? காற்றைக் கண்டு கதையளக்கிறாய். உன் விழிகளே மனத்தின் சஞ்சலங்களைப் பறைசாற்றுகிறது, போருக்கு அழைப்பு வந்த வீரனைப் போல் மேனியெங்கும் மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கின்றன. எனதருமை மைந்தனே! வெந்து கொதித்திருக்கும் உன் மனத்தைக் குளிரச் செய்! அமைதி கொள்! எதை வெறிக்கிறாய்?

ஹேம்லட்

அவரைத்தான்! எத்தனை வெளிறிய துயர முகத்துடன் அவர் என்னைப் பார்க்கிறார்? நீங்களே பாருங்கள்! அவர் போதித்தால் கல்லும் வீரியம் கொள்ளும். (ஆவியைக் கண்டு) என்னை அப்படிப் பார்க்காதீர்கள்! கொலைச்சினம் ஆறிக் கதறிவிடுவேன்!

கெர்ட்ரூட்

நீ யாரிடம் பேசுகிறாய்?

ஹேம்லட்

உங்கள் விழிக்கு அவர் தென்படவில்லையா?

கெர்ட்ரூட்

எதுவுமே தென்படவில்லை. ஆனால் இங்கிருக்கும் பிற எல்லாம் தெரிகிறதே.

ஹேம்லட்

எந்த ஒலியும் கேட்கவில்லையா?

கெர்ட்ரூட்

இல்லை, நாம் பேசுவதைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை.

ஹேம்லட்

பாருங்கள்! அது எப்படி சோர்ந்து அகல்கிறது என்று! என் தந்தை உயிருடன் இருந்ததைப் போலவே தோற்றமளிக்கிறார். பாருங்கள் கதவைத் தாண்டி வெளியேறுகிறார்!

(ஆவி வெளியேறுகிறது.)

கெர்ட்ரூட்

இது உன் கற்பனையின் ஒரு பகுதி! பித்துநிலையில் நிறைய உளமயக்கும் தோற்றங்களும் ஒலிகளும் புலன்களை அடையும்.

ஹேம்லட்

பித்துநிலையா? என் இதயம் உம்முடையதைப் போலவே லயத்துடன் துடிக்கிறது. நான் இப்போது சொன்னதில் எந்தப் பிறழ்வும் இல்லை. என்னைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் சொல்லும் ஒரு சொல்லும் விடுபடாமல் மீள உரைப்பேன். பைத்தியத்தால் அது சாத்தியமா? கடவுள் மீது ஆணையாக அன்னையே! அத்தனை குழப்பத்திற்கும் காரணம் என் பைத்தியக்காரத்தனமே என்றும் உங்கள் குற்றங்கள் இல்லை என்றும் மனப்பால் அருந்தாதீர்கள்! உங்கள் உள்நின்று உடற்றும் உண்மையை உதற முயலாதீர்கள்! அது உங்களை மென்மேலும் அழுகச் செய்யும்! குற்றங்களை ஏற்று, பாவ மன்னிப்புக்காகக் கடவுளிடம் மன்றாடுங்கள்! மண்டியிட்டுக் கைதொழுது மனமொன்றி அரற்றி ஆன்ம அழிவைத் தவிருங்கள்! இதயத்தில் விளைந்த களைக்கு உரமிடாதீர்கள். அவை மென்மேலும் உங்களை அரித்து அழிக்கும்! தீயவர்களிடம் மேலோர் வந்து முகமன் சொல்லித் தங்களைக் கருணைகூர்ந்து காத்துக்கொள்க என்று மன்றாட வேண்டிய முரணுலகு இது! என் நல்லெண்ணங்களை இங்கு மன்னித்தருளுங்கள்! 

கெர்ட்ரூட்

ஐயகோ ஹேம்லட்! என் இதயத்தை இருகூறாகப் பிளந்துவிட்டாய்!

ஹேம்லட்

அப்படியானால் அழுகிய பாதியை அரிந்துவிட்டு செம்பாகத்தை உளமுற்று வாழ்வைத் தொடருங்கள். நல்லிரவு! என் சிற்றப்பனின் மஞ்சத்திற்குச் செல்லாதீர்கள்! நீங்கள் உண்மையில் கற்பை இழந்த நிலையிலும் நற்பெண்டிரைப் போல் நடிக்கவேனும் முயலுங்கள். பழக்கம் கொடியது; துளி தீங்குணர்வும் சூழாமல் தீமைகளைச் செய்யவைக்க அதனால் முடியும். ஆனால் பழக்கம் நல்லதும்கூட; ஒருவரை நல்லவராக்குவதும் அதனால் இயல்வதே. இன்று மஞ்சக் களிப்பை மறுங்கள். அது அடுத்தமுறை மறுப்பதற்கு எளிதாக இருக்கும். அதற்கடுத்த முறை இன்னும் இலகுவாகும். ஒருவரது இயற்கையான உள்ளுணர்வையே பழக்கத்தினால் மாற்றுதல் இயல்வதே. ஒன்று மனத்தில் தீங்கைக் கட்டுக்குள் வைக்க வேண்டும், இல்லாவிடில் உதைத்துத் துரத்த வேண்டும். மீண்டும் நல்லிரவு! நீங்கள் தற்பிழையை முற்றுணர்ந்து வருந்தும்போது நானும் ஆசி கோரி உங்களிடம் வருவேன்! (பொலோனியஸைச் சுட்டி) இந்தக் கனவானுக்கு நிகழ்ந்த துர்கதிக்கு வருந்துகிறேன். இவரைக் கொன்ற பாவத்தால் என்னையும், என் கையினால் இவரையும் கடவுள் தண்டித்துள்ளார். ஆகவே நான் இறைக்கட்டளையை நிறைவேற்றும் தூதனாகவும் தன்னெஞ்சுக்கு நீதிமானாகவும் இருக்கிறேன். இது கொடுமை, ஆனால் வரவிருக்கும் கொடுமைகள் மேலும் கடுமையானவை. இன்னுமொன்று தேவி!

கெர்ட்ரூட்

நான் என்ன செய்ய வேண்டும்?

ஹேம்லட்

எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஒன்றைத் தவிர! கொழுத்த அரசன் உங்களை மஞ்சத்துக்கு அழைத்து, செல்வமே என்று கன்னலாகப் பேசி, என் பித்துநிலை ஏமாற்று வேலை என்று சொல்லி, எச்சில் முத்தங்களை உமிழ்ந்து, உங்கள் கழுத்தை இதமாக வருட அனுமதிக்காதீர்கள். எத்தனை நல்ல திட்டம்? ஒரு பொற்பின் தேவி, தவளையும் பன்றியும் ஒன்றிணைந்த ஓர் அரசனைக் கண்டு எதற்காக வாய்மையை மூடி மறைக்க வேண்டும்? இல்லை இல்லை. நெல்லி மூட்டையை அவிழ்த்துக்கொட்டி பூனையை வெளியே எடுப்போம். இதற்கிடையே கழுத்து நெரிபடினும் இதைச் செய்வோம்!

கெர்ட்ரூட்

நீ அமைதிகொள். சொற்கள் மூச்சாலானது, மூச்சு உயிருள்ளவர் வெளியிடுவது! இறந்த பிணமான நான் உன் விருப்பப்படி எந்தச் சொல்லையும் கூறாது அமைவேன்! 

ஹேம்லட்

நான் இங்கிலாந்து செல்ல வேண்டியிருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா?

கெர்ட்ரூட்

ஆம், அதை மறந்தேவிட்டேன். அது முடிவு செய்யப்பட்டுவிட்டது.

ஹேம்லட்

ஆம், முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆவணங்கள் ஒருக்கப்பட்டுவிட்டன. நச்சரவமென நான் நம்பும் இரு பள்ளிப்பருவத் தோழர்களும் பொறுப்பேற்றுத் துணை வருகிறார்கள். அவர்களே என்னைப் பித்துக்கொள்ளி வேடம் தரிக்க வைத்தவர்கள். நடப்பவை நடக்கட்டும். காரணகர்த்தா கைவினையால் செய்த வெடிகுண்டுகளால் தானே வெடித்துச் சிதறுவது ஒரு விந்தை நிகழ்வுதான்! முடிந்தால் அவர்களுக்குக் கீழ் குழி தோண்டி வெடிவைத்து அவர்களை நிலவுக்கு உலவ அனுப்புவேன்! ஒற்றைக் கல்லில் இரு மாங்காய் அடிப்பது எப்போதும் ஆனந்தமே! (பொலோனியஸைச் சுட்டி) இந்த ஆளைக் கொன்றதால் நான் விரைந்து இயங்க வேண்டும். மறு அறையில் இப்பிணத்தைச் சுருட்டிப் பதுக்குகிறேன். நல்லிரவு அன்னையே! தன் வாழ்நாள் முழுவதும் மடமையுடன் உளறிய இந்த அரசியல்வாதி இப்போது மௌனமாகத் தீவிர பாவனையுடன் காட்சியளிக்கிறார். வருக ஐயா, நம் கணக்கை முடிப்போம். நல்லிரவு அன்னையே!

(அவர்கள் வெளியேறுகின்றனர். ஹேம்லட் பொலோனியஸை மேடைக்கு வெளியே இழுத்துச் செல்கிறான்.)

*

கோ.கமலக்கண்ணன் மொழியாக்கத்தில் தமிழினி வெளியிட்டிருக்கும் ஹேம்லட் நூலிலிருந்து ஒரு பகுதி.

1 comment

Radha February 12, 2023 - 5:23 pm

நல்ல தமிழாக்கம்..பள்ளிக்காலத்து நாடக மேடையை நினைவில் கொண்டு வந்தது. புத்தக ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.

Comments are closed.