தெருவெல்லாம் மாவிலைத் தோரணங்கள் கட்டி ஊரே விழாக்கோலம் பூண்டிருந்த மாரியம்மன் கோயில் சாகை. முதல் நாள் சாகை ஊற்றி சாமி ஊர்வலம் முடிந்து மறுநாள் தெருக்கூத்து. வாடிக்கையாய் ஆடுகிற வேகாக்கொல்லை சின்னதுரையை விடுத்து மேல்பாதி மாணிக்கம் சமாவிற்குப் பாக்கு வைத்திருந்தார்கள். இந்தப் பக்கத்திற்குப் ‘புது சமா’ என்பதால் சுற்றுப்பட்டு ஊர்களிலிருந்து சனங்கள் கூத்துப் பார்க்க வந்திருந்தார்கள். செயக்கொடி, ஆசைத்தம்பியை இட்டுக்கொண்டு தெய்வீகமும் கிளம்பிவிட்டாள்.

தெருவில் அரவம் அடங்கி கிழக்கத்திக் காற்றில் கூத்து ஆரம்பித்ததின் அடையாளமாகத் தாள மத்தாளச் சத்தம் சன்னமாய் வந்துகொண்டிருந்தது. பச்சைப் புள்ளையைத் தூக்கிக்கொண்டுபோய் பனியில் எப்படிக் கூத்துப் பார்ப்பது என்பது ஒருபக்கம் என்றாலும் கோகிலாவுக்குப் போகப் பிடிக்கவில்லை. சந்திரவேலு படுத்துகிற பாட்டில், சூரசங்கு ஊரைவிட்டுப் போனதைக் குறுக்கே இழுத்து சனங்கள் பேசுகிற சாடைப் பேச்சில் அவளுக்கு வெளியே தலைகாட்டவே கூச்சமாக இருந்தது. ‘முகத்தில் முழித்த கதை’யைச் சும்மா விளையாட்டுக்குச் சொல்லப்போய் வாழ்க்கையில் இவ்வளவு இக்கட்டு வந்து நேருமென அவள் எதிர்பார்க்கவேயில்லை. ‘நம்ப கூத்த தான் ஆண்டவன் பாக்கறான். இந்த லட்சணத்துல எங்க போயி..’ கல்லாய்க் கனத்துப்போய் கைப்பிள்ளையோடு முடங்கிக் கிடந்தாள். மேலே எரிந்த குண்டு பல்பு வெளிச்சத்தில் ஒரேயொரு பூச்சி தன்னந்தனியாய் றெக்கையை அடித்துப் படபடத்தது.

மெல்ல வந்து கவிகிற தெருக்கூத்துச் சத்தத்தையும் மீறி கண்ணை இழுத்துக்கொண்டு போகிற நேரம் வாசலில் பேச்சு அரவம் கேட்டது. என்றைக்குமில்லாத மகிழ்விலிருப்பதாய் சந்திரவேலுக்குத் தன்னைக் கடந்த போதையிலும் ‘தங்கப் பதக்கத்தின் மேலே முத்துப் பதித்தது போலே…’ பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. திடுக்கிட்டு விழித்த கோகிலாவின் கையதிர்வில் கையைக் காலை உதைத்து உருண்ட குழந்தையை மெல்ல ஒருக்களித்துப் படுத்துத் தட்டித் தூங்க வைத்தாள். பாட்டுடன் வந்துக் கதவைத் திறந்தவனை அவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

நடுவீட்டில் நின்று சிரித்தபடி, “நம்ப பாப்பாத்திப் பொண்ணு தூங்கிட்டுதா…” என்று கேட்டவன் பட்டென்று குனிந்து குழந்தையின் கன்னத்தில் ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு அதே சூட்டோடு நகர்த்தி கோகிலாவின் கன்னத்திலும் ஒன்றை இறுத்தினான். கொள்ளிக்கட்டையால் தீண்டிய சூட்டில் “ச்சீ… எட்ட ஓடு…” கையால் ஒரு நெட்டு நெட்டினாள். கடந்த போதை வேறு. எதிர்பார்க்கவில்லை அவன். தடுமாறிப் படாரென்று பின்னுக்கு விழுந்தான். இன்னும் ரவ தூரந்தான், ரொப்பு உரல் பின்மண்டையைப் பதம் பார்த்திருக்கும்.

“என்னா அம்மாளுக்கு என்னைக்குமில்லாம கை ரொம்ப நீளுது…” விழுந்ததைப் பொருட்படுத்தாமல் இயல்பாய் இருப்பது போல் காட்டியபடி முன்னிலும் தடுமாற்றத்துடன் எழுந்து திரும்பவும் கிட்ட வந்தான். குழந்தையை நகர்த்தி முந்தானையை விடுவித்தவள் கட்டையின் மீது கிடத்தப்பட்ட பிணம் சூடு தாங்காமல் எழுவதாய் மெல்ல விறைப்புடன் எழுந்து குந்தினாள்.

பக்கத்தில் குந்தியவனுக்கு முற்றிலும் குரல் இறங்கிக் குழைந்ததுy, “இனிமேல்பட்டு இந்த பிராந்திக் கடையப் பக்கம் தலையக்கூட வைச்சிப் படுக்க மாட்டன் கோகிலா…” கெஞ்சலாய்ச் சொல்லியபடி அவளைக் கட்டியணைத்துக்கொள்ள வளைத்தான். அவன் பிடிக்குச் சிக்காமல் நெட்டித் தள்ளிவிட்டுச் சடாரென்று எழுந்து தோட்டத்துப்பக்கம் போனாள். வேகமாய்ப் போய் வேப்பமரத்து அடியில் குந்தியவள் குந்தியவள்தான். எழுந்திரிக்கவே இல்லை. காற்றில் மேளச் சத்தம் பிசிறில்லாமல் மிதந்து வந்துகொண்டிருந்தது.

வாசலில் வண்டிப் பாட்டையளவிற்கு விழுந்து கிடந்த வெளிச்சத்தில் வந்து நின்றவன் இருட்டை உற்றுப் பார்த்தான். இடுப்பில் செருகியிருந்த கோட்டர் பாட்டிலை உருவி அதே வேகத்தில் மறுக்கென்று மூடியைத் திருகி நின்ற நிலையில் வாயில் ஊற்றினான். இருட்டில் வேலிப் பக்கம் அவள் முகத்தில் எறிவதாய்த் தூக்கிக் கெடாசினான். அது குப்பைக்குழியில் போய் பொத்தென விழுந்தது. நேரே வேப்பமரத்தடி இருட்டில் அவளிடம் போனான்.

“துப்பாக்கி வேட்டைக்காரன்டி… அடி குல்லாப் பெண்ணே கோகிலவதியே…” தெருக்கூத்தில் கட்டியக்காரன் பாட்டு காற்றில் அலையலையாய் வந்தது. எகிறிய கூடுதல் போதையில் அவளையே இருட்டில் பார்த்தபடி வெகுநேரமாய் நின்றவன் திடுமென அழ ஆரம்பித்தான். “கோகிலா, சத்தியமா இனிமே குடிக்கவே மாட்டன் கோகிலா. என்னை நம்பு கோகிலா…”

கருங்கல் சல்லிகளைக் கொட்டிக் குலுக்கிய இறுக்கத்தில் எதற்கும் வாயைத் திறக்காமல் குந்தியிருந்தவளை நோக்கி இருட்டில் திரும்பவும், “அப்பிடிப் பாக்காத கோகிலா. இம்மாம் நாளு குடிச்சது வேற. ரெண்டு நாளாக் குடிக்கிறது வேற. சந்தோஷத்துல குடிக்கிறன் கோகிலா. ரெண்டு நாளாதான் மனம் லேசா இருக்குது. இனிமேல்பட்டு எனக்கு எந்தக் கவலையும் இல்ல கோகிலா. இனிமே எங்கியும் ஒன்ன வுட்டுட்டு நா போவ மாட்டன் கோகிலா. குட்டி போட்ட பூனயாட்டம் ஒன்னியே சுத்திக்கிட்டுக் கெடக்கறன் போதுமா?” இருட்டில் குருட்டாம்பாக்கியமாய் அவளைக் கட்டி அணைக்கிற ஆவலில் நெருங்கினான்.

அவளுக்குள் காத்துசேட்டை இறங்கிய ஆக்ரோஷம். பட்டென்று அவனை மறித்து எட்டத் தள்ளிவிட்டு எழுந்தாள். “அப்பறம் என்னா… போல்டேசன் வரைக்கும் போயி இல்லாத தையும் பொல்லாததையும் அள்ளிப்போட்டு ஒரு பாவத்தையும் அறியாத அந்த மெடிக்கல்காரன ஊர வுட்டுத் தொருத்திட்ட. இதுக்கு மேல… ஒனக்கு என்னா சந்தோஷத்துக்கு கொறைச்சலு. இருந்துட்டுப் போயன்.”

இருட்டில் அவனிடமிருந்து எந்தச் சத்தமும் இல்லை. அவளுக்குத் தாங்கவில்லை. மாரியம்மன் கோயில் பக்கம் திரும்பி நட்சத்திரங்கள் மின்னிய வானத்தைப் பார்த்து அழுகையினூடே வாசாங்காய் விட்டாள். “சாமி எனுமோ வெள்ளாட்டும் பேர்ல ஓம் மூஞ்சில முழிச்சதால எனக்குச் செவுப்பா பொறந்துட்டுதுன்னு அந்த மெடிக்கல்காரங்கிட்ட சொல்லிட்டன். அதுலேர்ந்து இந்தக் குடுத்தனக்காரன் குடியாக் குடிச்சு என்னியும் சந்தேகத்துல அந்தல்ல கட்டி அடிச்சி பழிகாரியா ஆக்கிட்டு அந்த அப்பாவி பொழப்புலயும் மண்ண வாரிப் போட்டுட்டு… எம்மா மகமாரி நீ எங்க இருக்கியோ…”

அவள் வார்த்தையை முடிக்கவிடாமல் அந்தப் போதையிலும் குறுக்கே புகுந்து செவுளில் அறைகிற கூரத்தில் கறாராய் சொன்னான். “யேய்… இங்க பார்டி. இதுவரைக்கும் நடந்தத வுட்டுடு. இதுக்கு மேல அந்த மெடிக்கல்காரன் பேச்ச எடுத்த, நடக்கறது வேற. நா சொல்லிட்டன்.”

“எல்லாந்தான் நடந்து போச்சி. மெடிக்கல்காரனுக்குதான் இந்தப் புள்ள பொறந்துதுன்னு ஊரு பூரா தமுக்கு போட்டுட்டு வந்துட்ட. இதுக்கு மேல என்னா நடக்கப் போவுது.” அழுதபடியே எழுந்து வீட்டுப் பக்கம் போனாள். கூடவே தள்ளியாடியபடி சந்திரவேலும் போனான். உள்ளே நுழைந்து நடுவீட்டில் பிள்ளைக்கும் பக்கத்தில் குந்தி ஆத்திரம் தாங்காமல் கனிந்து அழுதாள். கூடவே அவனும் குந்தி அழுதபடியே சொன்னான். “அழுவாத கோகிலா. இனிமே நா எதியும் யாரப் பத்தியும் கேக்கமாட்டன் கோகிலா. அழுவாத…”

என்ன நினைத்தாளோ பட்டென்று அவனை வளைத்துக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் புதைந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள். ஓய்ந்த நேரத்தில் அவனுக்கும் மனதின் இறுக்கம் உடைந்த ஆசுவாசம். அவள் முகத்தை நிமிர்த்தி கண்களைத் துடைத்துவிட்டுக் கெஞ்சுகிறவனாய் கேட்டான். “செந்தாமரை மொக்காட்டம் நம்ப சந்திராப் புள்ள நமக்குதான் பொறந்துது, அதுல எனக்கு சந்தேகமும் இல்ல கோகிலா. ஆனா… நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் குடுக்குணும்.”

சற்றே தெளிந்து தேறியிருந்தவளைத் திரும்பவும் மூக்கரக் காற்று சூழ்ந்தது. வெடுக்கென்று எட்ட நகர்ந்து குந்தினாள்.

சந்திரவேலு ஒன்றும் சொல்லாமல் எழுந்து சாமியா வீட்டிற்குள் போனான். கையில் தாம்பாளத்தட்டில் விபூதி கற்பூரத்தோடு வந்தவன், எட்டி மாடத்திலிருந்த வத்திப்பெட்டியை எடுத்தான். கற்பூரத்தைக் கொளுத்தி படுத்துக்கிடக்கிற பிள்ளைக்கு நேரே பிடித்தபடி சொன்னான். “நம்ப புள்ள மேல சத்தியமா இனிமே அந்த மெடிக்கல்காரன மனசால கூடும் நெனைக்க மாட்டன்னு சொல்லு. கல்பரத்த அமிச்சி சத்தியம் பண்ணிச் சொல்லு…”

எரிந்துகொண்டிருந்த வில்லை சடுதியில் பக்கத்தில் கிடந்த எல்லாக் கற்பூரங்களையும் வளைத்து கொழுந்துவிட்டுப் பெரிய நாவை நீட்டி அலைந்தது. இருவர் முகத்திலும் தகதகக்கிற அனல். குபீரென்று பொங்கிய ஆத்திரத்தில் குமுறி அவன் காலடியில் விழுந்து கதறுகிறாள். “எலேய்… ஒனக்கு என்னாடா ஆச்சி? ஏன்டா என்ன இந்தப் பாடு படுத்தற. இப்பிடி அணுவணுவா சித்ரவத பண்றதங்காட்டியும் என்ன ஒரேடியா கொன்னுடுடா…”

கற்பூரம் முற்றிலுமாய் எரிந்து அணைந்துவிட்டது. வெகுநேரமாய்க் குலுங்கிக் குமுறியவள் தேம்பலோடு நிமிர்ந்தாள். விடவில்லை அவன். திரும்பவும் கண்ணில் கற்பூரத்தை ஏற்றினான். “சொல்லு. நம்ப புள்ள மேல சத்தியமா இனிமே அவன மனசாலகூட நெனைச்சிப் பாக்க மாட்டன்னு சொல்லு. சொல்லுடி”

அப்படியே அவனை எரித்துவிடுகிறவளாய்ப் பார்த்தாள். வழிந்துகொண்டிருந்த கண்களைத் துடைத்தபடி எழுந்து தீர்க்கமாக அவனிடம் சொன்னாள். “வாணாம். இம்மாஞ் சொல்லியும் ஒரு குடுத்தனக்காரன் புரிஞ்சிக்காமத் திரும்பத் திரும்ப முருங்க மரத்திலேயே ஏறிக்கிட்டு இருந்தின்னா ஓங்கூட நா வாழ்ந்ததுக்கு அர்த்தமே இல்ல. இதுக்கு மேலயும் ஓங்கூட வாழ்ந்து ஒன்னும் வாரிக் கொட்டிக்கப் போறதில்ல. போய்ச் சேரறதுதான் நெல்லது. வுடு…” முந்தானையை உதறியபடி எழுந்தாள்.

அப்போதும் கடந்த போதையில் சிரித்தபடி சொன்னான். “எங்க கௌம்பிட்ட… மெடிக்கல்காரன தேடிக்கிட்டு கல்லமோட்டுக்கா…”

அப்படியே மேலெல்லாம் தீப்பற்றியெறிகிற தணலில் தகிக்கிறாள். ஆனாலும் எதுவும் பேசவில்லை. வீச்சென்று வாசலுக்குப் போகத் திரும்பினாள். “சொல்லு. இல்ல சாவகீவப் போறியா…” விடவில்லை அவன்.

“ஆமன்டா. சாவத்தான் போறன். இதுக்குமேல ஓங்கூடப் படுத்து ஏந்திரிச்சி குடும்பம் நடத்தனா ஏத்தா என்ன ஓராயிரம் பேருக்கு முந்தானி விரிச்சி படுத்தான்னு அர்த்தம்…” அக்கம் பக்கம் எல்லாம் கோயிலடிக்குக் கூத்துப் பார்க்கப் போய்விட்ட இரவு. கடகந்தாயத்தில் நிற்பவள், ‘இனிமேல்பட்டு என்னா கெடக்கு…’ வாரி வாட்டபலியில் தூற்றுவதாய்ப் பேசுகிறாள்.

“ஒன்னலாம் நம்பி வுட்டுட்டு வெளிநாட்டுக்குப் போனம் பாரு நாந்தான் சாவணும். நில்லு… நீ எதுக்குப் போற…” சொன்னவன் உள்வீட்டுக்கு ஓடி அதே சுருக்கில் வெளியே வந்தான். கையில் வெள்ளை வெளேர் என்று டெமக்கரான் பாட்டில். திறப்பதற்கு மூடியைப் பல்லாலயே கடித்தான்.

கோகிலாவிற்கு அப்படியே ஒருகணம் மூச்சே நின்றுவிட்டது. சடசடவென அதிர்கிறது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஓடி, “வாணாம் சந்திராப்பா… வாணாம் சந்திராப்பா…” பாட்டிலைப் பிடுங்குகிறாள். அவளின் பிடிக்கு மருந்து பாட்டில் சிக்காமல் ஒதுங்கிய அதே நேரம் ஓங்கி ஒரே உதையாய் எட்டி அவளின் வயிற்றில் உதைத்தான்.

உதைக்குச் சிக்காமல் தடுமாறி நின்றவளிடம் கிட்ட வந்து திரும்பவும் குரலில் கூர்முனையைப் பாய்ச்சினான். “சொல்லு. அந்த மெடிக்கல்காரப் பயல மனசாலகூட நெனைச்சிப் பாக்கமாட்டன்னு சொல்லு…”

“ஐய்யோ சாமீ நா என்னா செய்வன்னு தெரியிலிய. தெருவுல யாரும் இல்லாத நேரத்துல இந்தக் கங்காட்சிய நடத்துறான நா என்னா செய்வன்னு தெரியிலிய சாமீ…” தலையில் அடித்துக்கொள்கிறாள். அவன் கேட்டதற்கு எதுவும் பதிலைச் சொல்லாமல் மறுபடியும் அவள் பழைய பாட்டையே பாடவும் அவனுக்குத் தாண்டிவிட்டது.

ஓங்கி அவள் செவுளில் ஒன்று வைத்தான். “தேவுடியா… அவன எப்பிடி வுட்டுக் குடுக்கறதுன்னு ஒனக்கு மனம் துணியில போல்ருக்கு. நாடுமாறி… ஒன்ன நம்பி வூட்ல வுட்டுட்டு வெளிநாட்டுக்குப் போனா… கொழுந்தனாரு மச்சான்னு கண்ட பயலையெல்லாம் ஒறவு கொண்டாடிப் படுத்து ஏந்திரிச்சிட்டு… கேட்டா மூஞ்சியில் முழிச்சன் மொகரையில முழிச்சன்னு கத சொல்லிகிட்டு… தேவுடியா…” மயிரைக் கொத்தாய்ப் பிடித்து வலுக்க இன்னொன்றும் வைத்தான். கரகரவெனக் கண்கள் சுழல அப்படியே பின்னுக்குச் சுவரில் சாய்ந்து சரிந்து குந்தினாள். விடாமல் திரும்பவும் மயிரைப் பிடித்து உலுக்குகிறான். “சொல்லுடி. அந்தப் புள்ள… அந்த மெடிக்கல்காரனுக்குதான பொறந்துது? சொல்லுடி.”

அதட்டலுக்கும் உலுக்கலுக்கும் அவளிடம் எந்தப் பதிலும் இல்லை. “என்னாடி இப்பதான் நீலி வேஷம் போடற.” மயிரை இழுத்து இழுத்துச் சுவரில் நெத்தினான். “வாணாம்… இனிமே எதுவும் சொல்ல வேணாம். எந்த எடறும் இல்லாம நீ நெல்லபடியா மகராசியா போயி அவங் கூடவே வாழு…” கீழே மயங்கிச் சரிந்தவளைப் பொருட்படுத்தாமல் எட்டி எறவாணத்தில் செருகியிருந்த சூரிக்கத்தியை எடுத்து மறுக்கென்று மருந்து பாட்டிலின் கழுத்தை அறுத்தான். மடமடவென்று குடித்துவிட்டு பாட்டிலைத் தூக்கி வாசலில் போட்டான்.

வீடெங்கும் வளைத்துக்கொண்டது டெமக்ரான் மருந்தின் விஷ வாடை. பச்சைக் குழந்தை மூச்சுக்குச் சிரமமாகி திமிறிக் கத்த ஆரம்பித்ததும்தான் கோகிலாவுக்கு மெல்ல நினைவு வந்தது. எழுந்து குந்தியவள் நடுவீட்டில் கோடுதுமாடுதாய் பினாத்திக்கொண்டு கிடந்தவனைக் கண்டதும் அப்படியே இடிந்து நொறுங்கினாள். “அய்யய்யோ நா என்னா செய்வன். யாராவது ஒடியாங்களன்…” கதறியபடி வாயில் மருந்து நுரை வழியக் கிடந்தவனை ஓடித் தூக்கினாள்.

“சொல்லு… புள்ள அந்த மெடிக்கல்காரனுக்குதான பொறந்துது…”

*

“சந்திரவேலு மருந்து குடிச்சிட்டானாம்…”

“சந்திரவேலு மருந்து குடிச்சிட்டானா. யாரிடி அவ… அந்த மெடிக்கல்காரன தொருத்தி வுட்டுட்டான்னு போதையில கெடந்தவன் காதுல அரவப்படாம மருந்த ஊத்தியிருந்தாலும் ஊத்தியிருப்பா. அவனுக்கு என்னா பைத்தியமா மருந்து குடிக்கிறதுக்கு.”

“அவம் பண்ணனதும் அப்பிடி. எதோ வெளிநாட்ல இருந்தப்ப எலமறவு கா மறவா நடந்துட்டுது. சரி நம்ப வந்தப்பறம் சரியா இருக்கறாளான்னு பாத்துக்கிட்டுப் போவுணும். குத்தன காயத்து மேலயே குத்திக்கிட்டு இருந்தா அவ மட்டும் என்னாதாம் பண்ணுவா. அதான் தொந்தரவு தாங்காம வைச்சி அழுவறத வித்து அழுவும்னு வேல பாத்துட்டா போல்ருக்கு.”

“கொழுந்தனார கொழுந்தனாரன்னு நங்காவார்த்த வடிச்சிக்கிட்டு நின்னாள, அந்த எடுமொனையிலேயே வளைச்சி வைச்சி அவள மயிர அறுத்துருந்தான்னா, இம்மாம் அளவுக்கு கொண்டாந்து வுட்ருக்காது. அவன் காசி காசின்னு வெளிநாட்டுக்குப் போனான். இவ என்னா பஸ்சு புடிச்சிகிட்டா அவனத் தேடி போவப் போறா. குறுக்காலதான தெருவு. தலைவலித் தைலம் வாங்கப் போற மாதிரி தெருவத் தாண்டிட்டா…”

“அந்த சந்திரவேலுப் பய சொல்ற மாதிரி அப்பிடியே செக்கச் செவேர்னு அந்த மெடிக்கல்காரன உரிச்சி வச்ச மாதிரிதான் அந்த சந்திராக் குட்டியும் கெடக்கறா…”

”எனுமோ பக்கத்து வூட்டுக்காரி தெய்வீகம் அக்கா மொவனக் கொண்டாந்து வைச்சி, சந்திரவேலு குடும்பத்த ஒன்னுமில்லாத ஆக்கிட்டா…”

டாட்டா சுமோவில் சந்திரவேலை ஏற்றிக்கொண்டு போன ரோட்டையே பார்த்துக்கொண்டு சனங்கள் நிற்கிறார்கள். காற்றடியில் கலகலவென ஓசையில்லாமல் உதிர்கிற புளியஞ்சருகுகள் மாதிரி குசுகுசுவென வார்த்தைகள். ஆட்டக்காரர்களும் சனங்கள் ஏதுமில்லாமல் கூத்தைத் தற்காலிகமாய் நிறுத்தியிருந்தார்கள்.

டாட்டா சுமோ இருசாலக்குப்பம் முடக்கு திரும்புகிறது. பின்னிருக்கையில் சந்திரவேலை மடியில் கிடத்திக்கொண்டு கதறுகிறாள். “சந்திராப்பா… சந்திராப்பா… இப்பிடிப் பண்ணிட்டிய சந்திராப்பா…” அழுது புலம்பியபடி முன்னால் குந்தியிருந்த கிழக்குத் தெருத் தம்பியிடம் கெஞ்சுகிறாள். “செத்த வேகமாப் போங்க சாமீ…”

டிரைவர் கடந்து மிறிக்கிறான். சீறிப்போகிறது வண்டி. கோபுராபுரத்து வேகத்தடையில் எகிறிக் கூரையைத் தொட்டுவிடுகிற அதிர்வில் தூக்கிப்போட்டதும் பட்டென்று கோகிலா பெருங்குரலில் அலறுகிறாள். “செத்த வண்டிய நிறுத்தங்கப்பா. வண்டிய நிறுத்துங்கப்பா…”

உச்சிமயிரைப் பிடித்து இழுத்ததாய் வண்டியை நிறுத்தித் திரும்பி கலவரமாய்ப் பார்க்கிறார்கள்.

கோகிலா மடியில் கிடந்த சந்திரவேலின் உடம்பு வெட்டி வெட்டி இழுக்கிறது. முகம் கோணைகோணையாய்ப் போகிறது. அழுகையை நிறுத்திச் சந்தேகமாய் அவன் தலையைக் கைகளில் ஏந்திக் கூப்பிட்டாள். “சந்திராப்பா… சந்திராப்பா…”

வெட்டி இழுப்பது சட்டென்று நின்று முகத்தில் ஒரு தெளிவு. சந்திரவேலின் கண்கள் ரொம்பவும் ஊக்கமாக அவள் முகத்தை ஏறிட்டன. “ஒன்னும் பயப்படாதீங்க சந்திராப்பா… இன்னம் கொஞ்சம் நேரம்தான் நம்ப கோயிந்தசாமி டாக்டருகிட்ட போய்டுவம்.”

அவள் சொல்வதை எதையும் பொருட்படுத்தாமல் அவன் கண்கள் அவள் முகத்தையே குறி வைத்திருந்தன. கூடவே அவன் உதடுகள் எதையோ சொல்வதற்குத் துடித்தன. “என்னா சந்திராப்பா… என்னா பாக்குற… தே செத்த நேரத்துல போய்டுலாம்.” ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சொல்கிறாள்.

“இருங்க எதியோ சொல்றதுக்குப் பாக்கறாரு. முடியில போல்ருக்கு.” சந்திரவேலின் முகத்தை ஊனாடிப் பார்த்துவிட்டு டிரைவர் தம்பி சொன்னான்.

“என்னா சந்திராப்பா…” முகத்தோடு முகமாய் கிட்ட கொண்டுபோய் கேட்கிறாள். குரல் அடங்கலாக இருந்தாலும் பேசுவது புரிந்தது. மிகச் சிரமப்பட்டு உதடுகளைக் குவித்து கோகிலா முகத்தைப் பார்த்துக் கேட்டான். “அந்தப் புள்ள மெடிக்கல்காரனுக்குதான பொறந்துது…”

டிரைவருக்கும் கிழக்குத் தெருத் தம்பிக்கும் வெறுத்துவிட்டது. திரும்பிக்கொண்டார்கள்.

“இல்ல சந்திராப்பா… சத்தியமா அவன் வெரல்கூட ஏம் மேல பட்டதில்ல. என்ன நம்பு சந்திராப்பா… என்ன நம்பு சந்திராப்பா…” கையைப் பிடித்து அழுதபடியே சத்தியம் செய்கிறாள்.

“இல்ல… நீ பொய் சொல்ற. இல்லன்னா எப்பிடி செவுப்பா புள்ள பொறக்கும். நீ பொய் சத்தியம் பண்ற… பொய் சத்தியம் பண்ற. ஓம் மொகத்த நா பாக்கவே கூடாது. என்ன வுடு. எட்டத்தப் போ…” கால்கள் விலுக்விலுக்கென உதைத்துக்கொள்கின்றன. முன்னிலும் கூடுதலாய் வாயில் நுக்கும்நுரையுமாய்ப் பொங்குகிறது.

கணநேர ஆட்டவோட்டம்தான். சந்திரவேலுக்குத் தலை சாய்ந்துவிட்டது.

*

சேதி கேள்விப்பட்டு வந்த கெங்காசல நாட்டாருக்கு எட்ட நகர முடியவில்லை. அதிலும் ஆலடிப் பக்கமே திரும்பாமல் மகள் வீட்டில் பெரிய வடவாடியிலேயே கிடந்த சந்திரவேலின் ஆத்தாள் செல்லப்பாங்கியை அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. “அந்தத் தேவுடியா வந்து வூட்டுக்குள்ள நொழையறதங்காட்டியும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என்னை வெளிய தொருத்தனவ. இன்னைக்கு அடுத்தவனக் கைக்குள்ள போட்டுக்கிட்டு ஏம் புள்ளையையே கொன்னுட்டா. இதுக்கு மேல என்னா கெடக்கு, அவ மயிர அறுத்து வெளியில தொருத்தாம…” தாண்டுகிறாள்.

ஆத்தாளுக்குச் சளைக்காமல் சந்திரவேலின் தங்கச்சி அதற்குமேல் தாண்டுகிறாள். “என்னைக்கி இந்த மகராசி அடியெடுத்து வைச்சாளோ அன்னைக்கே எங்க அண்ணனுக்கு மருந்த வைச்சி நாங்க இருக்கற தெசப் பக்கமே திரும்ப வுடாம அடிச்சவ. அவளுக்கு மருந்து ஊத்தி வேலைய முடிக்கறதுக்கா சொல்லித் தருணும். அண்ணங்காரனே பூட்டான். இதுக்கு மேல இவளுக்கு என்னா மானியம் கெடக்கு…”

அவளது ஆம்படையான் பெரிய வடவாடியானோ அவளுடன் சேர்ந்துகொண்டு ஆகாசத்துக்கும் பூமிக்குமாய் குதிக்கிறான். “நீ என்னாடி அங்க போயி பஞ்சாயத்தம் வைச்சிக்கிட்டு நிக்கிற. ஆயிரம் குத்தம் அவுங்க பக்கம் இருந்தாலும் ஊருக்காரங்களுக்குதான் சப்பக்கட்டு கட்டுவாங்க. வாடி நாம போல்டேஷன் போவும். மங்கலம்பேட்டைக்கிக் போனாதான் இதுக்கு நாயம் பொறக்கும்…” மனைவியின் கையைப் பிடித்து ரோட்டுப்பக்கம் இழுக்கிறான்.

கோகிலா ஆத்தாள் தனகோடி வழியிலும் ஒன்றும் இறுத்திப் பேசுவதற்கு ஆளில்லை. உள்ளே அடித்து மாய்ந்துகொண்டு கிடந்தவள் வெளியே எழுந்து வந்து நாட்டாரின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். “ஊருக்கார சாமீயுளா… ஏம் புள்ளைய ஒங்க பொறப்பா நெனைச்சி காபந்து பண்ணுங்க சாமீ.”

வந்த ஆத்திரத்தில் எதாவது தாண்டிதான் பேசுவார்கள் பொருட்படுத்தக் கூடாது என்று கெங்காசல நாட்டார் வெகுநேரமாய் அமைதியாகத்தான் குந்தியிருந்தார். வடவாடியான் கடந்து போவதுபோல் தெரிந்ததும் எழுந்தார். நிறைபோதையில் நிற்பவன் போலிஸ் ஸ்டேஷன் பக்கம் போய் கேசைக் கொடுத்துவிட்டால் அப்பறம் மலையை வெட்டி எலி பிடிக்கிற கதைதான். சத்தம் போட்டார். “வடவாடித் தம்பி போல்டேசனுக்குதான போற… போய்ட்டு வா. என்னா பொணத்த எடுத்துக்கிட்டு போயி அறுத்து நங்கசோளம் பண்ணிக் குடுப்பான் அவ்வளவுதான். அதுக்காக ஊருக்காரங்க எல்லாத்தையும் உள்ள புடிச்சிப் போட்டுட மாட்டான். அப்பிடியே போட்டாலும் நாங்க பாத்துக்கறம். நீ போய் கேசு குடுத்துட்டு வா…”

கேசு குடுக்கப் போவதாய் சூர் காட்டிய வடவாடியான் சற்றே தேங்கினான். “இல்ல நாட்டார… ஆளான ஆள இப்பிடிப் பண்ணனா என்னா அர்த்தம். ஒங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்ல…” இழுத்தான்.

இதுதான் சமயமென்று கெங்காசலம் அடுத்தும் ஒரு இறுத்து இறுத்தினார். “உள்ளூர்ல இருந்தாலும் நாங்களும் ஒன்ன மாதிரிதான். எங்குளுக்கு மட்டும் என்னா நடந்துதுன்னு கிட்ட இருந்தா பாத்தம். சண்ட பேர்ல மருந்த எடுத்துக்கிட்டு குடிக்கப் போயிருக்கான். இந்த புள்ள ஓடி மறிச்சிருக்கு. மயிரப் புடிச்சி வளைச்சி அடிச்சி செவுத்துல இழுத்து கெடாசியிருக்கான். மண்டுன்னு மோதி அந்த புள்ளைக்கிம் நெத்தி வீங்கியிருக்கு பாரு. மயக்கம் போட்டு வுழுந்து கெடந்துருக்கு. அப்பறமா புள்ள அழுவுற சத்தம் கேட்டு நெதானம் வந்து பாத்துருக்கு. இவன் மருந்து குடிச்சிட்டு கேடுபாடாக் கெடந்துருக்கான். அப்பறம்தான் இந்தப் புள்ள வாரிச் சுருட்டிக்கிட்டு ஒடியாந்து கூத்து நடக்கற எடத்துல வுழுந்து கத்தி… நம்ம பசங்க கார்ல தூக்கிப் போட்டுக்கிட்டு ஓடியும் பாத்தானுவோ. ஒன்னும் கதைக்கி ஆவுல. இதுல நாம என்னா சொல்றது…”

ஊரே வேடிக்கை பார்க்கிறது. விடாமல் கெங்காசலம் பேசியதில் வேகம் தணிந்து கிட்ட வந்தார்கள். மறுபடியும் பேசினார். “அதுக்கு மேல நடந்தது எது உண்ம எது பொய்யின்னு மேல நல்லதுன்னு இல்லாம கெட்டதுன்னு இல்லாம எரிச்சிக்கிட்டு போறாம் பாரு அவனுக்குதான் வெளிச்சம். ஊர்ல சாகை ஊத்துங்கறதால அக்கம்பக்கத்துல யாரும் சனங்க இல்லாமப் பூட்டுது. மின்னியே மொகத்துல முழிச்சன் போனன் வந்தன்னு சேதி காதுல வுழுந்ததும் அந்த சந்திரவேலு கம்னேட்டிகிட்ட அந்த புள்ளலாம் அதுமாதிரி இருக்காது மனசு போட்டு கொழப்பிக்கிட்டு குடும்பத்த கந்தரகோலம் பண்ணிடாதடான்னு நானே ஒரு அணைய போட்டும் வைச்சிருந்தன். அவன் எதியும் காதுல வாங்காமத் தாண்டித் தாண்டி நின்னுகிட்டு இருந்தான். கடைசியா இப்பிடி வேல குடுத்துட்டான்.”

பூவரச மரத்தின் கீழ் கிடந்த பெஞ்சில் குந்தியவர், தெய்வீகத்திடம் திரும்பிச் சொன்னார் “ஒரு சொம்பு தண்ணி கொண்டா புள்ள…”

மடியில் குந்தியிருந்த ஆசைத்தம்பியை எழுந்திரிக்கச் சொல்லிவிட்டு வேண்டா வெறுப்பாய் தண்ணீரை மொண்டுவந்து கொடுத்தாள். வாங்கிக் குடித்த கெங்காசலம் என்ன நினைத்தாரோ தெய்வீகத்திடம் கேட்டார். “நீ ஊரு நெல்லா இருக்குணும்னு கிட்ட இருந்தா ஒரு ஊசிய கீசிய போட்டுக்கலாமுன்னு ஒக்கா மொவன கொண்டாந்து வைச்ச. அது கடைசியில பாவம்… இந்த புள்ளைக்கித் தீம்பா வந்து வெளைஞ்சி போச்சி.”

பேச்சு பட்டென்று தெய்வீகம் பக்கம் திரும்பியதும் மொத்த சனங்களுக்குள்ளும் ஒரு பரபரப்பு. பதிலுக்குத் தெய்வீகம் என்ன சொல்வாள் என்கிற ஒரு எதிர்பார்ப்பு. எல்லோரின் பார்வையும் தெய்வீகத்தின் பக்கமே திரும்பியிருந்தன.

தெய்வீகம் ஒரு கணம் ஆடிப்போய்விட்டாள். ‘அக்காள் மகனைக் கொண்டுவந்து வைத்து ஒரு விளக்கை அணைத்துவிட்டாள்’ என ஊரே சூத்துக்குப் பின்னால் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் நாட்டார் பல்லில் போட்டு தெறித்த மாதிரி சொன்னதும் அவளுக்கு சடசடப்பு கண்டுவிட்டது. ஆனாலும் இந்த நேரத்தை விட்டுவிட்டால் கடைசி வரைக்கும் குற்றவாளியாகவே சனங்கள் முன்னால் தலைகுனிய நேரிட்டுவிடும் என்று அவளும் கடந்து பேசினாள். “என்னா நாட்டார… ஒரு வெவரம் தெரிஞ்ச ஆளு நீனும் இந்த சனங்களாட்டம் எடுத்துப் போட்டன் கழுத்த முறிச்சன்னு தீம்பக் கொண்டாந்து வுட்டுட்டன்னு பேசனா என்னா அர்த்தம். நா மட்டும் இப்பிடிலாம் நடக்கும்னு சோசியமா பாத்தன். எதோ வெள்ளாட்டும் பேர்ல எல்லார்கிட்டயும் பேசறாப்லதான் அவங்கிட்டயும் பேசறாள்னு இருந்துட்டன். இல்ல ஊரு ஒலகத்துல அண்ணி, கொழுந்தனாரன்னு யாரும் பேசிக்கிறது இல்லியா…”

சொல்லிக்கொண்டிருந்தவள் பட்டென்று பேச்சைக் கோகிலா பக்கமாய்த் திருப்பினாள். “எல்லாத்துக்கும் காரணம் இவதான். எல்லா ஈங்கிசமும் இவளாலதான் வந்து வெளைஞ்சிது. இவ பாட்டுக்கு வாய மூடிக்கிட்டு இருந்துருந்தா ஒன்னுமில்ல. வாயி கொழுப்பு சீலையால ஒழுவுதுங்கற மாதிரி ஓம் மூஞ்சியில முழிச்சன். அதான் செவுப்பாப் புள்ள பொறந்துட்டுன்னு சொல்லப் போயிதான இம்மாம் தீவினையும் வந்து சேந்துது.”

தெய்வீகத்தின் பேச்சில் மொத்த சனமும் கிணுக்மொணுக் என்றில்லாமல் வேடிக்கை பார்த்தது. தெய்வீகம் கெங்காசலம் பக்கம் திரும்பினாள். “நாலு ஊருக்கு நல்லது கெட்டதுக்குன்னு பஞ்சாயத்துக்குப் போற ஆளுதான நீ… எந்த ஊர்லியாவது எந்த பொம்னேட்டியாச்சும் இவளாட்டம் புள்ள பெத்த கதையயெல்லாம் சொல்லி கேட்ருக்கியா. இல்ல கேள்விதான் பட்ருக்கியா. சொல்லு பாக்கும். அவ அவ மதங்கொண்டு போறதுக்கும் பேசறதுக்கும் நா என்னா பண்ணுவன். அதான் சிக்கலு உண்டாக்கி மங்கலம்பேட்ட வரைக்கும் போயி நீதான களருகுப்பத்து வாத்தியார வைச்சி அவனை இட்டாந்த. இம்மாம் நடந்தப்பறம் அந்தப் பயல இனிமே இங்க வைச்சிருக்கக் கூடாது. அனுப்பி வுட்டுடுன்னு நீனும் சொன்ன. நானும் அத தான் நெனைச்சன். அதுக்குள்ள அந்தப் பயலே இதுக்கு மேல இந்த ஊருல நாம இருக்கக்கூடாதுன்னு வாரிச் சுருட்டிகிட்டுக் கௌம்பிட்டான். தே… போயி ஒரு வாரத்துக்கும் மேல ஆச்சி. அவனால மறுபடி எதாவது சிக்கலு உண்டா. அதோட வுட்டுட்டு குட்டியும் பயலும் வேற வேலயப் பாக்கணும். இல்ல இவந்தான் எதியும் பாக்காம போன கதையயெல்லாம் புளி ஊத்திக் கரைச்சிக்கிட்டே நிக்கிறான்னு இவளாவது வுட்டுட்டுப் போயிருக்கணும். அவன் துள்ளுவிரியன்னா இவ கொம்பேறி மூக்கன்னு எதிருக்கு எதிரா நின்னுக்கிட்டு இருந்தா என்னா ஆவும். எல்லாம் முடிஞ்சி… கடைசியில தெய்வீகம்தான் இம்மானையும் கொண்டாந்து வுட்டுட்டான்னு ஏந் தலைய போட்டு உருட்னா என்னா அர்த்தம்.” சொல்லிவிட்டுச் சடாரென அவரின் கையிலிருந்த செம்பை வெடுக்கென்று பிடுங்கினாள்.

‘புள்ளைய வந்து தூக்கு புள்ள. அழுது முறைக்கிறது’ எனச் சந்திரவேலு மேல் விழுந்து கிடந்த கோகிலாவைத் தூக்கி நிறுத்தினார்கள். திடுமென வந்து விளைந்துவிட்ட விதிமோசத்தில் நிற்கக்கூடத் தெம்பு இல்லாமல் கைத்தாங்கலில் தடுமாறினாள். பால்தெளிக்கு அடிக்கிற ஒற்றை மேளமாய் காதில் விழுந்த தெய்வீகத்தின் பேச்சு அவளைச் சுக்குசுக்காய் உடைத்து நொறுக்கியிருந்தது. அதுவும் ‘அவ அவ மதங்கொண்டு போனதுக்கு…’ எனத் தெய்வீகத்தின் கோடாலி போட்டதான சொற்கள் அவளைப் பிளந்தன.

மொராசுக்காரன் நாலைந்து பேருடன் வந்து கும்பிட்டான். “என்னா மூத்தவர மோளத்துக்கு எதுனாச்சும் சேதி வரும்னு இருந்து பாத்தம். ஒன்னியும் காணம், அதான் பாத்துட்டுப் போவலாம்னு வந்தம்…” தலையைச் சொறிந்தார்கள்.

“எலேய்… நீங்க வேற ஏன்டா. நடக்கற கங்காட்சியத் தெரிஞ்சிம் குறுக்கால வந்து…” பொய்யாய் முறைத்துவிட்டு சந்திரவேலின் தங்கச்சி பக்கம் திரும்பினார். “இங்க பாரு பாப்பா. நடந்தது நடந்து போச்சி. இதுக்கு மேல எங்க போயி எங்க வந்தாலும் போன உசுரு திரும்ப வரப் போறதில்ல. ராத்திரி மின்னேரத்துல வுட்ட உசுரு. இதுக்கு மேலயும் போட்டி போட்டுக்கிட்டு போட்டு வைச்சிருக்கறதுல அர்த்தம் இல்ல…”

மொத்த சனமும் எதுவும் சொல்லாமல் நாட்டாரையே பார்த்தார்கள். இடைவெளி விட்டு அவரே தொடந்தார். “சனங்க சொல்றாப்ல காதுல ஊத்தி வுட்டுட்டா… வாயில ஊத்திட்டான்னு நாமளும் சேந்து சொல்றது நெல்லா இல்ல. ஆயிரமே அவன் கொடுமப் படுத்தியிருந்தாலும் கைப்புள்ளைய வைச்சிருக்கறவ கட்னவனப் போயி இந்த வேலைய செஞ்சிருப்பாங்கறத என்னாலலாம் நம்ப முடியில. அதுக்கு மேல நாஞ் சொன்னாப்ல மேல இருக்கறவந்தான் சாட்சி…” சொல்லி நிறுத்தினார். அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்பதாய் அவரையே பார்த்தார்கள்.

தொண்டையைச் செருமினார். “அப்பிடியே கடந்து எதாவது அந்தப் புள்ள நடத்தியிருந்தாலும் நடத்தியிருந்துட்டுப் போவட்டும். தே செத்த நேரம்… நாம பிரேதத்த எடுத்துக்கிட்டுப் போயி தவனப் படுத்திட்டா நாம வேற வேலைக்கி போயிடப் போறம். நாளைக்கி பச்சைப் புள்ளைய வைச்சிக்கிட்டு அந்தப் புள்ளதான் தெவைக்கப் போவுது. காலம் பூரா நடந்தத மனசுல வைச்சி நெனைச்சிப் பாத்து பாத்து வெந்து மாளப் போறது அந்தப் புள்ளதான். நாம ஒன்னும் நித்தம் வந்து முட்டுக் குடுத்துக்கிட்டு நிக்கப் போறது இல்ல. அதால செத்துட்டான் இதால செத்துட்டாங்கறதலாம் வுட்டுட்டு அவனுக்கு அவ்வளவுதான் விதி. எனுமோ செத்தவம் புள்ள இருந்தவனுக்கு அடையாளம்னு வுட்டுட்டு அடுத்து ஆவ வேண்டியதப் பாக்கறதுதான் நெல்லதுன்னு எனக்குப் படுது. அதுக்கு மேல ஒங்க சவுரியம்…” கறாராய்ச் சொல்லிவிட்டு எழுந்தார்.

“நாட்டாரு சொல்றமாதிரி வுட்டுட்டுப் போவ வேண்டிதுதான். ஊருக்கு சேதிக்கா போயிருக்கான். போயி சண்ட போட்டு இட்டாரதுக்கு. இதுக்கு மேல யாரு தப்பு பண்ணனாங்க போனாங்கன்னு பாத்து ஒன்னும் ஆவப் போறது இல்ல. பச்சப் புள்ளைய வைச்சிக்கிட்டு இனிமே அவ தான் செமக்கப் போறா. நாம்பளா தாங்கப் போறம்…” சனங்களும் கலைந்து எழவு வாசலுக்குப் போனார்கள். வெளியூரிலிருந்து யாரோ மாலையோடு போய் வீட்டுக்குள் நுழையவும் திடுமெனக் கோகிலாவின் தனித்த கதறல் சத்தம் நின்றிருந்த எல்லோர் மனதையும் மீண்டும் நார்நாராய் கிழித்தது.

கெங்காசலம் மேற்கில் குந்தியிருந்த மொராசுக்காரர்களைப் பார்த்துச் சத்தம் போட்டார். “நீங்க வேற ஏன்டா குறுங்குறுன்னு குந்திப் பாத்துகிட்டு இருக்கீங்க. மோளத்த எடுத்தாந்து நாலு தட்டு தட்டுங்களன். அதுக்காக பெரிய ரெட்டிவூட்டு சின்னாம்மா காரியத்துக்கு எதுபாத்த மாதிரி சாயந்திரம் அங்க பட்டுவாடா பண்ற எடத்துல கொறம்பாடிக்கிட்டு நிக்கக்கூடாது, சொல்லிட்டன். எடந்தடத்த பாத்து சரிதான்னு குடுக்கறத வாங்கிக்கிட்டு போவக் கத்துக்கணும்.”

சந்திரவேலின் தங்கச்சி முன்னால் நின்றிருந்த வூட்டுக்காரன் வடவாடியானைச் சீண்டவும் அவன் இழுத்த மாதிரி நாட்டாரிடம் சொன்னான். “மச்சான் உயிரோட இருக்கறப்பையே யாரும் பொறந்த பொண்ணு ஒன்னு இருக்குங்கற நெனைப்பே இல்லாமப் பொழுத ஓட்டிட்டாங்க நாட்டார. இதுக்கு மேல யாரு எங்களத் திரும்பி பாக்கப் போறாங்க. பொண்ணாப் பொறந்த புள்ளைக்கு உண்டான பங்கு பாத்தியத்த இப்பியே நாலு பேரு பாத்து எங்குளுக்கு ஒரு வழி சொல்லிட்டுப் போங்க…”

வடவாடியானின் கொக்கி போட்ட பேச்சில் எழவு வாசல் பக்கம் திரும்பியவர்கள் மறுபடியும் திருவல் போட்டு நின்றார்கள். கெங்காசலத்திற்குப் பற்றிக்கொண்டு போனது. ‘இந்த சொத்துப் பிரிக்கிற சங்கதிக்குதான் போலிசுக்கு போறன்னு கோர்ட்டுக்கு போறன்னு சூரு வுட்டுக்கிட்டு நின்னாம் போல்ருக்கு…’ வெளியில் சொல்லாமல் மனசுக்குள் சொல்லியபடி அவன் பின்னால் தலைகுனிந்து நின்றிருந்த சந்திரவேலின் தங்கச்சியைப் பார்த்தார். அவள் தலைகுனிந்து நின்ற விதமே இதுக்குக் காரணமே அவள்தான் எனச் சொல்லாமல் சொல்லியது. வேலியோரம் நின்றிருந்த நொண்டி மகனிடம் உள்ளே அழுதுகொண்டிருந்த சந்திரவேலின் ஆத்தாள் செல்லப்பாங்கியைக் கூப்பிட்டு வரச் சொன்னார்.

செல்லப்பாங்கி பறந்து கிடந்த நரைத்த தலையோடு “என்னை இப்பிடி வுட்டுட்டுப் பூட்டிய ராசா…” ஒப்பாரியோடு பூவரசு மரத்துக்கு வந்தாள். “தே கவணையாங்கள… அழுவறத நிறுத்து. ஓம் மருமொவன் என்னா சொல்றான்னு ஒரு வார்த்த கேளு. நீ சொல்றத வைச்சிதான் என்னா செய்றதுன்னு முடிவு பண்ணலாம்…” சுருக்கமாக வடவாடியான் சொத்தில் குறி வைத்திருப்பதைச் சொன்னார்.

கெங்காசலம் மட்டுமில்லாமல் வந்திருந்த அத்தனை சனங்களுக்குமே செல்லப்பாங்கி மீது காறித் துப்பாத குறைதான். கண்களைத் துடைத்துக்கொண்டு கம்மிய குரலில் சொன்னாள் செல்லப்பாங்கி.

“அவுங்க சொல்றது ஞாயந்தான். இதுக்கு மேல யாரு பாக்கப் போறாங்க. நானும் இனிமே இங்க இருக்கப் போறது இல்ல. ஏம் மொவன மருந்து ஊத்திக் கொன்னாப்ல என்னியும் முடிக்க மாட்டான்னு என்னா நிச்சயம். இருக்கறத மூணாப் பிரிச்சி எனக்கு, ஏம் மொவளுக்கு, அந்த மகராசிக்கின்னு ஆளுக்கொரு பாகமா வுட்டுடுங்க. நாங்க யாருகிட்டனாச்சும் குத்துவைக்கு வுட்டு குடுக்கற பத்து ரூவாய வைச்சி பொழப்ப ஓட்டிக்கிறம்.” சொல்லி முடிக்கையில் கோவென்று பெருங்குரலில் அழுதாள். “நானு பவடங்குடி வயக்காடு கண்ட மட்டும் அறுப்பு அறுத்தாந்து போட்டு இந்த நெலம் பலத்த வாங்கனன். இன்னைக்கி நாங் குந்தித் திங்க எனக்கு பொசுப்பு இல்லாம போச்சே சாமீ…”

“அதுக்கு ஒரேடியா அவளையும் அவ புள்ளையையும் கொன்னு போட்டுட்டு எடுத்துக்கிட்டு போங்களன். எதுக்கு இம்மாம் ராமாயணத்த நடத்திக்கிட்டு நிக்கிறீங்க.” செல்லப்பாங்கியைக் கூப்பிட்ட போதே தானும் வந்து ஒதுங்கி நின்ற கோகிலாவின் அம்மா தனகோடி குறுக்கே நுழைந்தாள்.

“நீங்க பெசாம இருங்க கோட்டேரி” எனத் தனகோடியை அமர்த்திவிட்டு செல்லப்பாங்கியிடம் ஞாயம் கேட்கிறவராய் சொன்னார். “பாவம் அறியாப் புள்ளைய வைச்சிக்கிட்டு அது என்னா பண்ணும். கூட மாட இருந்து அது நெடுவற வரைக்கும் பாப்பும்னு இல்லாம சொத்தையும் பிரிங்கன்னா… இதுலாம் சரியான்னு நீங்களே சொல்லுங்க கவணையாங்கள…”

“அதுலாம் முடியாது. நாஞ் சொன்னமாதிரி சொத்த…” சொல்லக்கூட விடவில்லை கடைசி வூட்டுக்காரி. எட்டி செல்லப்பாங்கி மயிரைப் புடிக்காத குறைதான். “என்னாடி செல்லப்பாங்கி, நீதான் ஒலகத்துல இல்லாத சொத்த சம்பாரிச்சிட்டுன்னு பேசற. நாங்க ஒன்னும் வெளியூர்ல இல்ல. குடிச்சிட்டு வந்து அந்தப் பய நித்தம் சண்ட சண்டன்னு… என்னா கெட்ட நேரமோ நடக்காததுலாம் நடந்து போச்சி. நாட்டாரு சொல்றாப்ல கையில பசலக்கொடியாட்டம் ஒரு புள்ளைய வைச்சிக்கிட்டு அவ தெவைச்சி தெகமாறி நிக்கிறா. நீ எனுமோ எரியற வூட்ல புடுங்கறது லாவங்கற மாதிரி மொவளயும் மருமொவனையும் செகா சேத்துக்கிட்டு நிக்கிற…”

கெங்காசலம் இறுதியாக ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

“இந்தா கவணையாங்கள… நாஞ் சொல்றன்னு தப்பா நெனைக்காத. இந்தப் புள்ளைய கட்டிக் குடுக்கறப்ப ஒனக்கு ஒரு காணிதான் மேல வெளியில இருந்துது. அத வித்துதான் சந்திரவேலு நாலைஞ்சி பவுன போட்டு சாமாஞ் செட்டு எடுத்து வைச்சிதான் தங்கச்சிய கட்டிக்குடுத்தான், சும்மா வெறும் பொம்னேட்டியா ஒன்னும் அனுப்பி வுடுல. மீதி அய்னாரு கோயில் வெளியில இருக்கற ஒரு காணியும் அவன் வெளிநாடு போயி சம்பாரிச்சி வாங்கனது. அதுல வந்து நீங்க ஒன்னும் கோடு கிழிக்க முடியாது. பொறந்த பொண்ணுக்குச் செய்ய வேண்டியதச் செய்யாம வுட்ருந்தாதான் ஒங்க செக்குலாம் கோர்ட்டுக்கே போனாலும் செல்லும். அதனால சொத்துப் பிரிக்கிற நெனப்ப வுட்டுடுங்க. இன்னைய நெலைமைக்கி நீங்க எல்லாருந்தான் அந்தப் புள்ளைக்கிக் கிட்ட நின்னு நெல்லது கெட்டது பாக்கணும். அத வுட்டுட்டு நீங்களே இப்பிடி நிக்கறது சரியில்ல. பச்சைப்புள்ளய வைச்சிக்கிட்டு தெவைக்கறவகிட்ட இருக்கறதப் பிரிச்சி ஒங்ககிட்ட குடுக்கறதுக்கு ஊர்ல நாலு பேரு எதுக்கு… இந்த நாட்டான் எதுக்கு… எந்தச் செடியா இருந்தாலும் இந்த நாட்டான மாதிரி மின்ன நிக்கிறவன் நட்டு வைச்சிதான் பாப்பான். வேரப் புடிங்கி வேலி மேல போட மாட்டான்…”

பிறகு வேறு யாரும் எதுவும் பேசவில்லை. பெரிய ஆடம்பரம் எதுவுமில்லாமல் சந்திரவேலு ஆலடி சுடுகாட்டில் எரிந்து போனான். 

சுடுகாட்டிலிருந்து நேரே மகள் மருமகனோடு செல்லப்பாங்கி கிளம்பிவிட்டாள். செந்தாமரை மொக்காய் முந்தானி விரிப்பில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தபடியே முடங்கிக் கிடந்தாள் கோகிலா. கையிலிருந்த முட்டை தவறி விழுந்து உடைந்து உருக்குலைந்து போய்விட்ட நிராதரவில் கண்ணீர் தாரைதாரையாய் இறங்கித் தரையை நனைத்துக்கொண்டிருந்தது.

*

கண்மணி குணசேகரனின் ‘பேரழகி’ நாவலிலிருந்து ஒரு பகுதி.

2 comments

J.Adalarasan February 3, 2023 - 1:57 am

முழு புதினத்தையும் படிக்க
ஆவலேற்படுத்தும் பதிவு
கண்மணி குணசேகரன்
தமிழ் சமூகத்தின் வாழ்க்கையை
நேர்த்தியாகவும் நாட்டார்களின்
அறத்தையும் பதிவு செய்துள்ளார்
வாழ்த்துகள்

Ezhilarasan E February 8, 2023 - 11:06 am

Full padika thondrum Anna oda azhgiya ah varikal.

Comments are closed.