யாதவப் பிரகாசர்

9 comments

கால்பந்து மைதானத்திற்கு அருகில் இருந்த கேலரியின் படிக்கட்டுகளில் அமர்ந்து, உடலை வளைக்கும் பயிற்சிகள் செய்தபடி, தூரத்தில் ஹாக்கி மைதானத்தில் எங்களுடைய பயிற்சியாளர் அகஸ்டின், தனியாக மைதானத்தில் மட்டையால் பந்தை வலதுபுறம் தள்ளி மறுபடி இடதுபக்கம் வெட்டி இழுக்கிற பயிற்சியை மறுபடி மறுபடி செய்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். சாதரணமானதுதானே என்று தோன்றலாம்.

அது அப்படியில்லை. வலதுபுறத்துக்குப் பந்தைத் தள்ளும்போது வலது காலும் அங்கே பறந்து, பிறகு காற்றிலேயே இடதுபுறத்துக்கு வந்து ஊன்றியவுடன் இடது காலும் சேர்ந்து திரும்புகிற பயிற்சி. பறவையொன்று கிளையின் உச்சியில் ஒருகாலை ஊன்றி நின்று, வலதுபக்கம் பறக்கப் போவது போல எம்பி, இடதுபுறம் பறப்பது. பறவை ஆற அமரவா இதைச் செய்யும்? சிறகசைக்கிற நேரத்தில் அதைச் செய்து முடிக்கும். அப்படியான செய்கையை மைதானத்தில் ஒரு மனிதன் பந்தையும் மட்டையையும் வைத்துத் தூரத்தில் செய்து பார்த்துக்கொண்டிருந்தான். எதிராளியை ஏமாற்றிப் பந்தைக் கம்பத்திற்குள் தள்ளுகிற புதிய உத்தியது.

எங்களுடைய கோச் தன் மனதில் இப்படி ஏதாவது புதிய நுணுக்கங்கள் தோன்றும் சமயங்களில், எங்களை எல்லாம் துரத்தி விட்டுவிடுவார். தூரத்தில் நின்று நாங்கள் பார்ப்போம் என்று அவருக்குத் தெரியும்தான். ஆனால் பயிற்சியில் மைதானத்திற்குள் கால் பாவி நிற்கையில்தான் நுணுக்கங்கள் வசமாகும்.

மந்திரவாதியைத் தூரத்தில் இருந்து பார்ப்பதற்கும், பக்கத்தில் போய் அமர்ந்து மனனம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? மைதானம் என்கிற செவ்வக வட்டத்திற்குள் போன பிறகுதான் கற்றல் என்பதே நிகழும். தண்ணீருக்குள் விழாமல் எப்படி வெளியே நின்று நீச்சல் கற்றுக்கொள்ள இயலும்?

வெளியில் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருப்போம். அந்த நேரத்தில் மைதானமும் அவரும் மட்டுமே தனித்து இருப்பார்கள். அவர் மறுபடி மறுபடி அந்த நுணுக்கங்களைச் செய்து காட்டி அந்த மைதானத்திடம் அனுமதி பெறுவதைப் போல இருக்கும் அந்தக் காட்சி. பிறகு அதில் மேலும் மேலும் நுணுக்கங்களைக் கூட்டி, அதை ஒரு சர்வதேச நுணுக்கமாக மாற்றி எங்களிடம் கைமாற்றுவார். முழுமையடையாத ஒன்றை அவர் ஒருபோதும் எங்களுக்குக் கையளிப்பதில்லை. கிழிந்த தோசைகளைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, பூரணமான தோசையைப் பிள்ளைக்கு வழங்கும் அம்மாவைப் போல.

எத்தனையோ பேர் பிறகு பல ஆட்டங்களில் சலிக்கச் சலிக்கப் பலமுறை அந்த நுணுக்கத்தைச் செய்து காட்டுவார்கள். ஆனாலும் அவரிடமிருக்கும் அந்த நுணுக்கத்தின் கூர்மை மற்றவர்களுக்கு வசம் வருவதே இல்லை. அது ஒன்றைக் கண்டுபிடித்தவனின் நளினம். அது அசலானது. பிறகு நாங்கள் எல்லாம் அதைப் போலச் செய்கிறோம்.

அதைப் போல நுணுக்கம் ஒன்றைப் புதிதாகக் கண்டுபிடிக்கிற முடிகிறவன் பயிற்சியாளனாக மாறுகிறான். அதை ஆடிக்காட்டுகிறவன் விளையாட்டு வீரனாக இருக்கிறான். ஒரு வகையில் நாயைப் பழக்குவதைப் போலத்தான். அதன் முன் பல்வேறு மணங்களை, நுணுக்கங்களாகப் போட்டு, தனித்தனியாக அடையாளம் காணவைப்பது.

அடிப்படையில் மைதானத்தின் முக்கிய விதியே அடிபணிவதுதான். நாயைப் போல அடிபணிந்தால் மட்டுமே நுணுக்கமான மணங்கள் மைதானத்தில் தட்டுப்படும். அங்கே பயிற்சியாளனின் குரலே இறுதியானது. அதை மீறுகிறவர்களுக்கு அங்கே இடமே இல்லை.

எங்களுடைய பயிற்சியாளர் அவருடைய துறையில் புதிய நுணுக்கங்களை உருவாக்குவதற்குப் பெயர் பெற்றவர். அவர் கண்டுபிடித்த பெனால்டிக் ஸ்டோக் யோசனையை இந்திய அணியில்கூடப் பயன்படுத்தினார்கள். “அகஸ்டின் கோச் கைப்பட்டு வர்ற பொருளை தயங்காம எடுத்துப் பயன்படுத்தலாம். அது சிந்தாம சிதறாம முழுமையா இருக்கும்” என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிரேம்சந்த் சொன்னதை நானே பக்கத்தில் நின்று கேட்டிருக்கிறேன்.

எங்களுடைய பயிற்சியாளருக்கு இந்தியாவின் பல பக்கங்களில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் தனக்கு அந்தச் சிறிய நகரமே போதும் என ஒதுங்கிக்கொண்டார். எங்களைப் போன்ற ஆட்களை அடையாளம் கண்டு பயிற்சியளித்து இந்திய அணிக்குத் தள்ளிவிடுவதையே அவருடைய கடமையாகக் கருதினார். அதை ஒரு வேள்வியைப் போல மேற்கொண்டார் என்பதால், துறையில் அவரைப் பணிமாற்றல் செய்து தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

எப்படியாவது மிகச்சிறந்த வைரத்தைக் கண்டறிந்து அதைப் பட்டை தீட்டி இந்திய அணிக்கு அர்ப்பணித்துவிடுவார். அவர் பட்டை தீட்டி பார்வைக்கு அனுப்பிய எதுவுமே இதுவரை உச்சம் தொடாமல் திரும்பியதில்லை. அவர் மிகச் சரியாக ஒரு இந்திய வீரனைக் கணிப்பார் என்று தங்கராஜ் வார்டன் சொல்லுவார். நாயின் மூக்கைக் கொண்டே அதன் வீறாப்பைச் சொல்லிவிடுவதைப் போல.

சிலரை அவர் மனதொடித்து வெளியே அனுப்புவதையும் பார்த்திருக்கிறேன். அப்படியான சமயங்களில் மட்டும் அன்பான வார்த்தைகள் அவரது வாயில் இருந்து கூடுதலாக வரும். “நல்ல பையனா நான் சொல்றதைக் கேளு. உனக்கு அந்த நுணுக்கம் இதுல வரலை. உன்னோட கால் ஒரு நூல் அளவுக்கு அதிகமாவே பிளந்து ஸ்டெப் வைக்குது. நிச்சயமா உனக்கு புட்பால் நல்லா செட் ஆகும். உனக்குத்தான் அதுவும் நல்லா ஆடத் தெரியும்ல? கேமை மாத்துறோம்னு நெனைக்காத. கொஞ்சம் முயற்சி செஞ்சா அங்க உச்சம் தொட்டிருவ. ஆனா இங்க இருந்தீன்னா பத்தோட பதினொண்ணு. இந்தியன் டீம்ல இடம் கிடைக்குது கிடைக்கலைங்கறது எல்லாம் தனி. ஆனா நீ உன்னளவுல இண்டர்நேஷனல் மெட்டீரியலா இருக்கியாங்கறதுதான் முக்கியம்” என்றார் அவனிடம்.

அவர் சொன்ன மாதிரியே அடுத்த ஒரு வருடத்தில் இந்தியக் கால்பந்து சப்-ஜூனியர் அணியில் அவன் இடம்பெற்றான். ‘பாத்தீயா?’ என்பதைப் போல அவனைக் காட்டி எங்களிடம் உதடு பிரியாமல் சிரித்தார். அவர் கிராமங்களில் செய்வதைப் போலப் பல்லைப் பிடித்து மாடுகளைப் பதம் பார்த்துக்கொண்டே இருப்பார். கையில் ஹாக்கி மட்டையுடன் மைதானத்தில் நின்று எங்கள் எல்லோரையும் ஒரே பார்வையில் எடை போட்டுக்கொண்டிருப்பார். அந்த ஒட்டுமொத்தமும் அவரது பார்வைச் சட்டகத்திற்குள் இருக்கும்.

எல்லா மாடுகளும் ஒன்று என்றாலும், ஒரு சில மாடுகள் மீது கூடுதல் நம்பிக்கை இருக்குமே? அதைப் போலத்தான் என்மீது கொண்டிருந்தார். அவரது வீட்டின் சமையலறை வரைக்கும் போகிற அனுமதியைப் பெற்று இருந்தேன். அவர் என்ன அனுமதிப்பது? அவர் இல்லாவிட்டாலும் அவருடைய மனைவி என்னை விடவே மாட்டார். “அவரு கிடக்கறாரு. அங்கதான் கோச். வீட்டுல நான் சொல்றதுதான். நீ வாடா. சிக்கன் குழம்பு வச்சிருக்கேன்” என்று சொல்லும் அந்த அக்கா.

நான் வீட்டில் இப்படி அன்னியோன்யமாகப் புழங்கிக்கொண்டிருந்ததை ஒருநாள் பார்த்த பிறகு மைதானத்தில் என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். தொழில்முறையிலான பேச்சுகள் உண்டு. தனிப்பட்ட முறையிலான பேச்சுகளைத் திடீரென அந்த அக்கா வழியில் சொல்லத் தொடங்கினர். என்னுடைய சின்ன மூளைக்கு நிஜமாகவே குழப்பமாகிப் போனது.

”ஒழுங்கா அவனை முடியை வெட்டச் சொல்லு. இல்லை மொட்டை அடிச்சு விட்டுருவேன் பார்த்துக்கோ” என்பதை என்னிடமே அவர் சொல்லி இருக்கலாமே? எதற்காக அந்த அக்கா வழியாகச் சொல்கிறார் என்று குழப்பமாகவே இருந்தது. இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள் பலவற்றை அவ்வாறே கடத்தினார், தாமதமாய் உருண்டு வரும் பந்தைப் போல. அவர் எனக்குத் தண்டனை அளிக்கிறாரோ என்றுகூடத் தோன்றியது. ஆமாம், எதற்காக தண்டனை?

என் ஆட்டத்தை நுணுக்கிச் செப்பனிடுவதில் அவர் கடமை மீறவில்லை என்பதையும் கவனித்தேன். பரிவுச் சொற்களையும் தனிப்பட்ட வழிகாட்டுதல்களையும் எதற்காகச் சமையலறைக்குள் இருந்து வீசுகிறார்? ஆனால் அதில் ஒரு கவனமும் இருந்தது. மைதானத்தையும் சமையலறையையும் அவர் இரண்டாகத் தனித்தனியாக வகுந்தார். அவர் கொஞ்சம் விநோதமான குணத்துக்காரர் என்பதால், அந்த விளையாட்டில் நானுமே பங்கெடுத்து ஆடத் தொடங்கிவிட்டேன்.

அதற்கடுத்து மேலும் கூடுதலாகக் கவனித்துப் பார்த்தேன். மைதானத்தில் மேலும் மேலும் என்னைப் பாடாய்ப்படுத்தி இழைக்கத் தொடங்கினார். கட்டையொன்றை இழைத்து இழைத்து மரச் சிற்பம் செய்வதைப் போல. நான் அப்போது லெப்ட் எக்ஸ் பொசிஷனில் ஆடிக்கொண்டிருந்தேன். மைதானம் ஒரு செவ்வகக் கட்டம். அதில் பாதி எதிராளிக்கு, மீதி நமக்கு. நம்முடையதில் முதல் வரிசையில் ஐந்து பேர், இரண்டாம் வரிசையில் மூன்று பேர், கடைசி வரிசையில் இரண்டு பேர், கடைசியாய் கோல் கீப்பர். இதுதான் பொதுவான இந்திய அணியின் மைதான வரிசை. இதில் ஒவ்வொரு பொசிஷனில் இருப்பவனுக்குமே ஒவ்வொரு கடமை உண்டு. 

பந்தை முன்னோக்கிக் கொண்டுபோகிறவர்கள், அவர்களுக்குப் பந்தைக் கொடுப்பவர்கள், நம்முடைய கோல் கம்பத்தை நோக்கி வரும் எதிராளிகளைத் தடுப்பவர்கள், கடைசியாய் பந்தைத் தடுக்கும் கோல்கீப்பர் என்று செயல்பட வேண்டும். நூல் பிடித்த மாதிரி மைதானத்தில் இந்த இடத்தில் சுழன்றுகொண்டிருக்க வேண்டும். நொடிப் பொழுதுகளில் பந்தைக் கடத்தி முன்னேறுவதும் பின்னேறுவதுமாக ஒரு சக்கரம் இயங்கிக்கொண்டிருக்கும்.

இதில் லெப்ட் எக்ஸ் என்பது மைதானத்தில் இடதுபுறத்தில் ஆகக் கடைசியாக இருப்பது. இடதுபுறமாக ஒரு ரயில் என்ஜினை போல ஓடிக்கொண்டிருக்க வேண்டும். எப்போதாவதுதான் கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேறுகிற வாய்ப்பு இருக்கும். நகரத்தின் இதயப் பகுதியை நோக்கி ரயில் நகர முடியாது இல்லையா? பொதுவாக எதிராளிகளைக் குறுக்கே நெடுக்கே நீண்ட தூரம் ஓட வைத்து தாவா காட்டுவதற்காக எங்களைப் போன்றவர்களிடம் பந்தைப் போட்டுப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

மாறாக ரைட் எக்ஸ்ட்ரீம் என்பது மைதானத்தில் கௌரவமானது. வலது ஓரத்தில் இருப்பவனுக்கும் நடுவில் இருப்பவனுக்கும் நடுவில் இருக்கிற பொசிஷன் அது. மைதானத்தின் ஒரு புள்ளியாக நின்று ஒட்டுமொத்த மைதானத்தையும் கட்டுப்படுத்துகிற பொசிஷன். அகஸ்டின் கோச்சினுடைய பொசிஷனும் அதுதான்.

அந்த பொசிஷனில் ஆடுவதற்கு நிறைய நுணுக்கங்களைக் கைக்கொள்வது அவசியம். அதில் ஆடுகிறவன் நினைத்தால் சக்கரத்தின் வேகத்தைக் குறைக்க முடியும். மேலும் தீவிரமாகச் சுழல வைக்கவும் முடியும். ஏனெனில் மைதானத்தின் அந்தப் புள்ளியில் நின்றால், ஒட்டுமொத்தச் சக்கரமும் சுழல்வதைக் கண்களைச் சுழற்றி நன்றாகப் பார்க்க முடியும். அதுவொரு கேப்டனுக்கான இடம் போல.

திடீரென லெப்ட் எக்ஸ்ட்ரீமில் விளையாடுவது எனக்குத் தன்னம்பிக்கைக் குறைவைக் கொடுக்கத் தொடங்கியது. புதிய நுணுக்கங்கள் என் மட்டையில் பட்டுத் தெறித்து விலகின. “உன்னோட வேலை சக்கரத்தோட சேர்ந்து சுத்தறதுதான். வெளியே நின்னு அதை வேடிக்கை பார்க்கறது இல்லை” என்றார் கடுமையாக.

“இல்லை, என்னால முடியலை. ரைட் எக்ஸ் ஆடினா எனக்கு நல்லா வரும்னு தோணுது. என் ஐசைட் பறந்து விரியத்தான் விரும்புது. ஒரு இடத்துக்குள்ள குறுக மாட்டேங்குது” என்றேன் கூர்மையாக நெற்றிப்புருவத்தைச் சுருக்கி. அதைச் சொன்ன பிறகுதான் சொல்லி இருக்க வேண்டாமோ என்று தோன்றியது. பயிற்சியாளருக்கு எதிராக வீசிய என்னுடைய முதல் எதிர்ச்சொல் அது.

அதை அவர் விரும்பவே மாட்டார் என்பது நன்றாக எனக்குப் புரிந்தது. என்னையே குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் வாயில் இருந்து என்ன வரப் போகிறது என்கிற நடுக்கம்தான் எனக்கு வந்தது. என்னுடைய ஆடும் இடத்தை மாற்றுவது குறித்த சிந்தனையெல்லாம் அப்போது வரவே இல்லை. மட்டையை நான் நடுங்கும் கரங்களால் பற்றி இருந்ததைப் பார்த்தார்.

மற்றவர்கள் தூரத்தில் வெவ்வேறு பயிற்சிகளைப் பந்தை மடக்கிக் கடத்திச் செய்துகொண்டிருந்தனர். “ஸ்டிக்கை கீழே போட்டுட்டு கிரவுண்டை சுத்தி நான் சொல்ற வரைக்கும் நிறுத்தாமல் ஓடு” என்றார். உடனடியாகவே அதை மறுப்பில்லாமல் செய்தேன். எல்லோரும் மைதானத்தைவிட்டுக் கிளம்பிப் போய்விட்ட பிறகும் நான் ஓடிக்கொண்டே இருந்தேன்.

தூரத்தில் கல்மேடையில் அமர்ந்து இருந்தார் அவர். எவ்வளவு நேரம்தான் அமர்ந்திருப்பீர்கள் என நானும் வீம்பிற்குப் பலத்தை இழந்துவிடக் கூடாது என, என்னூக்கத்தைத் திரட்டி ஓடினேன். கடைசியில் விழுந்து சோர்ந்து போகிற நிலை வந்தபோது ஓட்டத்தை நிறுத்தச் சொல்லிக் கை காட்டினார்.

நான் நிலத்தில் விழுந்து மூச்சிரைத்துக்கொண்டிருந்த போது என்னருகே வந்து நின்று, “இப்ப சொல்லு. இப்பவும் பொசிஷன் மாத்தணும்னு தோணுதா? மைண்ட்க்குள்ள இப்ப எதுவுமே இருக்காது. அது இப்ப கரெக்டா சொல்லும்” என்றார். வேண்டுமென்றேதான் அதைச் செய்தார் என்று அந்தக் கணத்தில் தோன்றியது.

ஆனாலும் நுணுக்கமாக யோசித்து, “ஆமாம் கோச். ரைட் எக்ஸ்க்கு ஆன ஆள்தான் நான். அதுக்கு நான் மட்டும்தான் சரியான ஆள்” என்றேன். எதுவுமே பேசாமல் மட்டையைத் தரையில் தட்டியபடி இருளுக்குள் நடந்து போனார். வெறுப்பாக இருந்ததால் மைதானத்திலேயே அன்று இரவு எட்டு மணிவரை சாப்பிடக்கூடப் போகாமல் படுத்துக் கிடந்தேன்.

மறுநாள் ஏதாவது செய்வார் என எதிர்பார்த்து அவரது கண்களையே பார்த்தேன். ஆனால் அவர் வழக்கம் போல எங்களுக்கான பயிற்சிகளைத் தொடர்ந்தார். லெப்ட் எக்ஸ்க்கான பயிற்சிகள் சிலவற்றையுமே எனக்குத் தந்தார். இல்லை, அவர் என்னுடைய பொசிஷனை மாற்ற விரும்பவில்லை என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. நான் எனக்கு விதித்ததற்குத் தோதாக மறுபடியும் என்னைப் பழக்குவிக்கிற செயலில் கவனத்தோடு ஈடுபடத் தொடங்கினேன்.

“அகஸ்டினுக்கு தெரியாதது எதுவும் இல்லை. விளையாடறவனுக்கு அடிக்கடி தீடீர் திடீர்னு அவன் மேல சந்தேகம் வரும். அதுல அசந்துடக் கூடாது. ஆனா ஒரு கோச்சுக்கு அது நல்லா தெரியும். ஒன்னை புரிஞ்சுக்கோ.. வாழ்க்கையோ மைதானமோ நிதானமா வெளிய நின்னு பார்க்கிறவனுக்குத்தான் ஒட்டுமொத்த ஆட்டமும் தெரியும். அப்பத்தான் அவன் குருநாதன் ஆகுறான். உள்ள விளையாடறவன் வெறும் நட்டு போல்ட்டு. அந்தச் சக்கரத்தை தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கிறவந்தான் கோச். அவன் சொன்னா சரியா இருக்கும். நீ இந்த மாதிரி யோசிக்கிறதை நிறுத்திட்டு அவனோட பாதத்தில சரணடைஞ்சிரு. அவந்தான் எல்லாம் இங்கே” என்றார் மார்க்கர் என்னிடம்.

ஒருவகையில் மார்க்கர்களுமே பயிற்சியாளர்களைப் போலத்தான். மைதானத்தில் வெறுமனே சுண்ணாம்புக் கோடுகளைப் போடுகிற கீழ்மட்ட வேலையில் மட்டும் இருப்பவர்கள் அல்ல. நல்ல மைதானப் பராமரிப்பாளரிடம் ஒரு கேப்டனே வந்து யோசனை கேட்பான். அப்படியான மார்க்கரே என்னுடைய நிலைக்கு எதிராகப் பேசியபோது நானுமே சமாதானம் அடையலாமா என யோசித்தேன்.

நடந்து போகையில், “ஆனாலும் மார்க்கர்.. என் கண்ணுல காட்சி பரவலா தெரியுது. மைதானம் முழுக்க ஒரு செகண்ட்ல சுத்திட்டு வந்திருது. அதை ஒருபக்கமா ஒடுக்குறப்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. சின்ன மில்லி மீட்டர் வித்தியாசம் தெரியுது. இயல்பா இருக்கறதுல பறக்க விடலாம்” என்றேன் மெதுவான குரலில். ஆனால் சந்தேகத்தின் பலனையும் நான் சொன்னதற்குக் கொடுக்கிற பாவனையில் அதைச் சொன்னேன். மார்க்கர் நடப்பதை நிறுத்திவிட்டுத் திரும்பி நின்று என் கண்களையே உற்றுப் பார்த்தார்.

பிறகு அவருமே ஒன்றும் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டார். என்னுடைய பயிற்சியாளர் கொடுத்த பொசிஷனில் மாட்டைப் போல மீண்டும் மீண்டும் நடை பழகினேன். நுகத்தடியை மாட்டிவிட்டால் அதுபாட்டிற்கு ஓடுமே அப்படி. ஆனால் அதை ரசித்து ஓடுவதைப் போல.

ஒருநாள் மைதானத்தின் நடுவில் அமர்ந்து என்னுடைய காலணி நூலைப் பிரித்துக் கட்டிக்கொண்டிருந்த போது வந்து நின்று, “வீட்டுக்கு எதுக்கு போக மாட்டேங்குற? அது வேற? இது வேற? மட்டன் எடுத்து குடுத்திட்டு வந்திருக்கேன். போ அங்க. என்னமோ ஏதோன்னு அவ கேட்டுக்கிட்டே இருக்கா” என்றார். அப்போது சிறுபுன்னகையுடன் அவர் அதைச் சொல்வதைப் போல இருந்தது. அவருக்கு எல்லாமே மைதானத்தைப் போல நூலளவுக் கணக்கில்தான். புன்னகை உதட்டைப் பிரிப்பதற்குள் மறுபடி இறுகிவிடுவார்.

ஒருவேளை நானும் பயிற்சியாளராக மாறுகிறபோது இப்படி ஆகிப் போய்விடுவேனோ என்று தோன்றியது. ஆனாலும் எதற்காக எனக்காக மட்டனெல்லாம் வாங்கிக்கொண்டு போய் கொடுத்துவிட்டு அதை வந்து சொல்ல வேண்டும்? மைதானத்திலும் வெளியிலும் அவர் சொல்லுக்கு மறுப்பு ஏது?

அந்த அக்கா போனதுமே கேட்டது. “என் கண்ணைப் பார்த்து உண்மையைச் சொல்லு. உனக்கும் அவருக்கும் அப்படி என்ன மனசு விலக்கம்?” என்றபோது, நான் சுருக்கமாக பொசிஷன் மாற்றும் விஷயத்தைச் சொல்லிவிட்டு, “அவரை எதுத்து பேசலை. சில நேரங்கள்ள நமக்கு ஒன்னு அடியாழத்தில தோணும்ல? தோணிச்சு, சொல்லிட்டேன். ஆனா நான் நினைக்கறதுங்கறது சரிங்கற மாதிரித்தான் எனக்கு தோணுது. அந்த பொசிஷன்ல என்னை வச்சு யோசிக்கறப்ப அது என்னோட இடம்னு இயல்பா தோணுது” என்றேன் பதிலுக்கு.

அந்த அக்காவிற்கு நான் சொல்வது ஓரளவிற்குத்தான் புரிந்தது. “ஒருநாள் அவரோட சட்டையை எடுத்துப் போட்டுப் பாரு. செட் ஆனா போட்டுக்கோ. செட் ஆகலைன்னா விட்டிரு. இப்ப இருக்க சட்டையையே போட்டிரு. ஆனா ஒன்னு எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு. உன்னை மாதிரி எத்தனை ஆளை இந்த வீட்டில பாத்திருக்கேன்” என்று சொன்ன அக்காவை நிமிர்ந்து பார்த்தேன்.

எங்கேயோ வெளியே போய்விட்டுத் தாமதமாகத்தான் அகஸ்டின் கோச் வீட்டுக்கு வந்தார். சாப்பிடத் தட்டில் கைவைத்த போது, பக்கத்தில் நின்ற அக்கா, “ஒரு தடவை அவனுக்கு சான்ஸ் கொடுத்துத்தான் பாருங்களேன்” என்றாள். அவர் அமர்ந்த வாக்கிலேயே திரும்பிப் பார்த்து, “கிரவுண்ட் நடுவில உக்காந்து தலைவாழை இலைபோட்டு சாப்பிடுவீயா” என்றார் என்னிடம்.

”சத்தியமா அக்காட்ட ரெகமண்டேஷன் போகலை. விஷயத்தை சொன்னேன். அவங்களா சொல்றாங்க” என்றேன் அவசர அவசரமாக. “அப்ப விஷயம்ணு ஒன்ன மண்டையில இன்னமும் வச்சிருக்க அப்படித்தானே” என்றார். என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் திக்கிக்கொண்டிருந்த போது அந்த அக்கா, “சிவனே சிவனேன்னு உக்காந்து பாடம் கேட்டிருக்கார். கல்லுக்குள்ளயும் தேரை இருக்கும்ல? உங்களுக்கு அப்படி என்ன கர்வம்?” என்று சட்டெனக் கேட்டுவிட்டாள். அவருமே மட்டையால் அடித்த பந்தைப் போலவே சாப்பிடாமலேயே எழுந்து விருட்டென அறைக்குள் பாய்ந்தார்.

மைதானத்தில் மறுநாள் அவரது கண்களைச் சந்திக்கவே எனக்கு அச்சமாக இருந்தது. ஆனால் அவர் இரண்டாக வகுந்த கோட்டில் உறுதியாக நின்றார். முந்தைய தினம் நடந்ததை முகத்தில் காட்டிக்கொள்ளவே இல்லை. “தண்ணியையும் பாலையும் பிரிக்கிற அன்னப்பறவை மாதிரி இருக்கறதுதான் மனுஷனுக்கும் அழகு” என்றார் என்னிடம்.

வழக்கம்போல, எங்களைவிடப் பெரிய அணியொன்றுடன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுவாக இதுமாதிரியான சமயங்களில் எங்களுடைய பயிற்சியாளரும் அவரது ரைட் எக்ஸ் பொசிஷனில் எங்களோடு இணைந்து ஆடுவார். அந்த மாதிரியான சமயத்தில் அந்தத் தடத்தில் ஆடுகிறவனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுவிடும். இந்த மாதிரி வெளியில் இருந்து வரும் அணிகளுடனான போட்டிகள் எங்களுடைய அகஸ்டின் கோச்சிற்குக் கௌரவப் பிரச்சினையாக ஆகிவிடும். ”அவங்க உங்களோட ஆட வரலை. என்னோட ஆட வந்திருக்காங்க. என்னை அசத்திக் காட்ட வந்திருக்காங்க” என்று சொல்லி, அந்தப் போட்டியை ஒருபோதும் தோற்றுவிடக் கூடாது என நினைப்பார். எனவே அந்த பொசிஷனில் நின்று ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அவர் எடுத்துக்கொள்வார். துரோணாச்சாரியாரின் கையில் வில்லைக் கொடுத்துவிட்டு அந்த அர்ஜுனன் கேலரியில் அமர்ந்து போட்டியைப் பார்த்துக்கொண்டிருப்பான்.

வருகிறவர்களுமே அகஸ்டின் கோச் சொன்னது மாதிரி, அவர்  விளையாடுவதைப் பார்ப்பதற்காகவே வருவார்கள். பந்தை விட்டுவிட்டு அவர் கடத்திக்கொண்டு போவதையே சிலர் வேடிக்கை பார்ப்பார்கள். அந்தச் சமயங்களில் எதிரணி கேப்டன், “எழவெடுத்தவனே எதுக்கு அவரு குண்டிக்கு பின்னாடியே பார்க்கிற? போய் தடு சீக்கிரம். நண்டு வளைக்குள்ள போற மாதிரி கோல் போஸ்ட்டுக்குள்ள அவரு சரசரன்னு புகுந்திருவாரு” என்பான். பல தடவை இந்த உதாரணத்தையே அவன் மறுபடி மறுபடி சொல்லி இருக்கிறான். 

அவருடைய ஆட்டத்தில் இருந்து புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு போவார்கள், வெளியில் இருந்து வருகிறவர்கள். அன்றைக்கு எல்லோரும் போட்டிக்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த போது, அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். விளையாட்டுக்கான உபகரணங்களை முறையாக அணிந்து கேலரிக்கு கீழே இருந்து மேலே ஏறுகிற பாதை வழியாகத் துள்ளிக்கொண்டு ஓடி வருவார் எப்போதும்.

ஆனால் அன்றைக்குச் சாதாரண வழக்கமான உடையில் வந்தார். என்ன ஆச்சு அவருக்கு என எல்லோரும் நிமிர்ந்து பார்த்தோம். என் முன்னே வந்து நின்றவர், “இன்னைக்கு உனக்கு வாய்ப்புத் தர்றேன். என் பொசிஷன்ல ஆடு. என் கௌரவப் பிரச்சினை இது. கழுத்தில கத்தியை வச்சு உனக்கு இந்த வாய்ப்பை தர்றேன். நீந்தி வர்றீயான்னு பார்க்கலாம்” என்றார். விளையாட்டு வீரனும் சீண்டப்படுகிற இடமுண்டு களத்தில்.

“அது என்னோட இடம். எப்படி அதை பயன்படுத்தணும்னு மனசால நிறைய ஒத்திகை பாத்திருக்கேன் கோச்” என்றேன் பணிவான குரலில்.

“மனசில ஒத்திகை பார்க்கிறது வேற அதுவாவே ஒத்திசைஞ்சு போறது வேற. அதுவாவே கரைஞ்சு போகணும். உன் நுணுக்கத்தையும் பார்க்க காத்திருக்கேன். கர்வமாம்ல?” என்றார். எழுந்து தயாரான போதுதான் அது எனக்குப் புரிய வந்தது. மைதானத்திற்கும் சமையலறைக்கும் நடுவிலான கோடு எப்போது அழிந்தது?

அந்த ஆட்டம் என் வாழ்நாளின் மிகச்சிறந்த ஆட்டமாக அமைந்தது. ஆட்டம் தொடங்கிய போதும் அவரையே நான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் அதற்கு முன் ஆடிக் காட்டிய நுணுக்கங்களை அவரைப் போலவே செய்துகொண்டிருந்தேன். சில தடவை அவர் இருக்கும் திசையில் நல்ல நகர்வு ஒன்றைச் செய்துவிட்டுத் திரும்பிப் பார்த்தேன். இரண்டு கைகளையும் கட்டி அதில் ஒன்றால் கன்னத்தைச் சொறிந்தபடி மையமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

இடைவேளைக்கு முன்வரை பந்து எங்கள் தரப்பிலேயே இருந்தது. எதிர்தரப்பு எங்களைச் சுற்றி அடைத்துக்கொண்டு இருந்தார்கள். கட்டம் குறுகலாகி, இரண்டு அணியினரும் சுருங்கி ஒரு இடத்தில் குறுகி இருந்ததால், இரு அணியினராலுமே கோல் கம்பத்தை நோக்கிப் பந்தைக் கடத்த முடியவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் தலையைக் குனிந்து பந்தைக் கடத்திக்கொண்டிருந்த போது, பரந்த மைதானம் சுருங்கி நெருக்கியடித்து இருந்ததை என்னுடய கண்கள் உள்வாங்கின. உடனடியாக மைதானத்திற்குத் தேவைப்படுவது ஒரு விசாலம் என்பதை உணர்ந்தேன். ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து, பந்தை நாலாபுறமும் விசிறியடித்து, ஆட்டத்தை என் கைகளுக்குள் கொண்டுவந்தேன். எதிரணியினர் இங்குமங்குமாய் பிரிந்து சிதறிய பிறகு எதிர்பார்த்த விசாலம் அமைந்து கோல் கம்பம் மட்டும் தனியாகத் தெரிந்தது. என்னையறியாமல் அதை நோக்கி முன்னேறினேன்.

பறவையைப் போலச் சுழற்றிப் பார்க்கிற கண்களின் அமைப்பு அந்தச் செயலைச் செய்வதற்கு அமைந்து வந்தது. அந்த நேரத்தில்தான் புதிய நுணுக்கம் ஒன்றை மைதானத்தில் என்னை மீறிச் செய்துகாட்டி அந்தக் கோலைப் போட்டேன். அது நிகழ்ந்த பிறகுதான் என்ன செய்தேன் என்பதே உறைத்தது. அந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம்.

வெற்றிக் களிப்பில் வெளியே வந்து அவரது கண்களைச் சந்திக்க அலைமோதினேன். ஆனால் அவர் எங்களுடைய அணிப் பக்கமே வராமல் வந்திருந்த அணியினரோடு பேசியபடியே மைதானத்தைவிட்டு வெளியே போனார். வழக்கமாக அப்படிச் செய்கிறவர்தான். மிகச் சிறப்பான ஆட்டங்களின் போது மட்டுமே எங்களிடம் வந்து பாராட்டுகிற மாதிரி சில சொற்களைச் சொல்லுவார். அப்படிச் சொல்லாமல் போனால், நூறு ஆட்டங்களில் அதுவும் ஒன்று என்று அர்த்தம்.

அப்படியானால் நான் ஆடியது மிகச் சிறந்த ஆட்டம் இல்லையா? ஏமாற்றமாக இருந்தது எனக்கு. அன்றைக்கு இரவில் நெடுநேரம் தூங்காமல் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். அகஸ்டின் கோச் அடுத்த இரண்டு நாட்கள் மைதானத்திற்கு வரவே இல்லை. எனக்கு உடனடியாகக் கிளம்பிப்போய் அவரிடம், “என்னதான் பிரச்சினை உங்களுக்கு?” என உரிமையாகக் கேட்க வேண்டும் போலத் தோன்றியது.

மைதானத்தில் வாலிபால் பயிற்சியாளர்தான் எங்களுக்கான வழக்கமான உடற்பயிற்சிகளைக் கொடுத்தார். எங்களுடைய பயிற்சியாளர் சென்னையில் இருக்கிற தலைமையகத்திற்குப் போகிற சமயங்களில் இப்படி நடக்கும். ‘இப்போது அப்படி போயிருக்கிறாரா என்ன?’ என யோசித்தேன்.

குளிக்கக்கூடச் செய்யாமல் வேறு உடைகளை அணிந்து அவரது வீட்டிற்குக் கிளம்பிப் போனேன். அந்த அக்கா மட்டுமே வீட்டில் தனித்து இருந்தார். “மெட்ராஸூக்கு போயிருக்காரா என்ன? மீட்டிங் இருந்தா முன்னமே ரிப்போர்ட்லாம் எழுதச் சொல்லி இருப்பாரே” என்றேன்.

“அங்க போன மாதிரி தெரியலை. என்னாச்சுன்னு தெரியலை, ரெண்டு நாளா முகத்தை தொங்கப் போட்டு உக்காந்திருந்தாரு. என்னன்னு கேட்டேன். ஏதோ அவர் கணிப்பில தோத்திட்டேன்னு புலம்பிக்கிட்டு இருந்தாரு. சரிதான் உன் காரியம்ணு நெனைச்சுக்கிட்டேன். பக்கத்தில போயி, ‘நம்ம பையந்தானே? புதுசா ஒன்னை செஞ்சு காட்டினா கத்துக்கறதுல என்ன தப்பு? உங்க கிட்ட கத்துக்கிட்டுதானே அந்த புது வித்தைய செஞ்சு காட்டுறான்? ஏதோ ஒரு வகையில நீங்களும் அதுல இருக்கீங்கள்ள?’ அப்படீன்னு சொன்னேன். ‘என்னைத் தேடாத. மனசு சரியில்லை. ரெண்டு மூணு நாள்ள வந்திர்றேன்’னு பேக்கை எடுத்துக்கிட்டு கிளம்பிப் போனார். இதுக்கு எல்லாமா கிளம்பிப் போவாங்க? கிறுக்குத்தனத்தோடவே வாழ்ந்து பழகிட்டேன்” என்று சொல்லிவிட்டு அமைதியாக மூச்சு வாங்கினார்.

அதற்கு மேல் அந்தக்காவை எந்தத் துயரத்திற்குள்ளும் தள்ளிவிடாமல் வேறு விஷயங்களைச் சாதாரணமாகப் பேசிவிட்டுக் கிளம்பி வந்தேன். வரும் வழியில் அந்தக்கா சொல்வது சரிதானே என்கிற மாதிரி யோசித்துக்கொண்டு வந்தேன். இரவு முழுவதுமே உறக்கம் இல்லை எனக்கு.

மிகச் சாதாரணமாக அதை என்னால் கடக்க முயலவில்லை. என் மிகச் சிறந்த ஆட்டத்தைக் கண்முன் நானே பார்த்தேன். எதிரணியே பாராட்டுகிற வித்தைகளைச் செய்தேன். என் குருநாதர் அழைத்து ஒரு சொல்கூடச் சொல்லவில்லை என்பதில் எனக்கு ஆழமான காயம் உண்டானது. எதற்காக அவருக்கு அந்த ஆட்டம் ஒரு பொருட்டாகவே இல்லை? ஒருவேளை அவரை மீறியதால் இருக்குமோ? இதுமாதிரி எல்லாம் பயிற்சியில் இருந்த ஒருநாளும் யோசித்ததில்லை.

அன்றிரவு நான் நுணுக்கமாக அந்த ஆட்டத்தின் திசையையே மாற்றிய அந்த உடல்நகர்வைக் காட்சி காட்சியாய்க் கொண்டுவந்து பார்த்தேன். ஒருகணம் பறவை பறக்கிற மாதிரி உணர்வு கிடைத்தபோது தூங்கியும் விட்டேன். கனவா நினைவா என்றுகூட எனக்குத் தெரியவில்லை.

அதற்கடுத்த இரண்டு நாட்கள் கழித்து அகஸ்டின் கோச் வந்து கேலரியில் நிற்பதைப் பார்த்தோம். தாய் மாட்டைப் பார்த்த குட்டிகள் மாதிரி எங்களுடைய கண்கள் மலர்ந்து விரிந்தன. இதயமான அவர் வந்தால்தான் மற்ற பாகங்கள் இயங்கத் தொடங்கும் என்பதைப் போல ஒரு உணர்வு அவர் இல்லாத காலத்தில் இருந்தது. அதெல்லாம் வானிலையைப் போலச் சட்டென மாறிய உணர்வு எங்களது எல்லோருக்குள்ளுமே இருந்தது. அதை ஒவ்வொருத்தன் கண்ணிலுமே பார்த்தேன்.

எங்களை நோக்கி அவர் நடந்து வந்தபோது, எல்லோரும் மரியாதை கொடுக்கும் விதத்தில் எழுந்து நின்றோம். அப்போது உடற்பயிற்சிகள் நடந்துகொண்டிருந்தன. வந்து நின்றவர், கையில் இருந்த ஹாக்கி மட்டையைத் தூக்கி என்னை நோக்கி எறிந்தார். அதைக் கவ்விப் பிடித்தேன்.

இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றிக் கால்களை அழுத்தமாக விரித்து நின்று, “அன்னைக்கு செகண்ட் ஹாஃப்ல ஒன்னு பண்ணுனீல்ல? அதை மறுபடி பண்ணிக் காட்டு. சரியா அமைஞ்சு வந்தா கத்துக்க தயாராவே இருக்கேன்” என்றார்.

இடப்புறம் பார்க்காமலேயே சிறகை மட்டும் அந்தப் பக்கம் பறப்பதைப் போலக் காட்டிவிட்டு, மொட்டைக் கிளை உச்சியில் இருந்து எழும்பி வலப்புறம் எக்கிப் பறந்தது அந்தப் பறவை. வேகமான சிறகசைப்பினால் மைதானத்தில் காற்றோடி மண்துகற்கள் பறந்தன. மைதானம் எனும் பெரும் வானம் விரிந்து கிடப்பதை அகஸ்டின் அப்போது பார்த்தார்.

*

(குறிப்பு: யாதவப் பிரகாசர் ராமானுஜருக்குக் குருவாக இருந்தார். பின்னே மனத்தால் விலகிப் போனார். பின் தன் அம்மையின் சொல் கேட்டு கர்வம்நீங்கித் தன் சீடனுக்கே சீடனானார்.)

9 comments

Vijay January 31, 2023 - 1:01 pm

ஏஏ யப்பா கண் முன்னே தன்ராஜ் பிள்ளே வந்து போனார் , இது போல் நிறைய எழுத வேண்டுகிறேன்

ஆ.செங்கதிர்ச்செல்வன் January 31, 2023 - 11:07 pm

மிக அபாரமான கதை. வாழ்த்துகள் சரவண சந்திரன்

Ramesh MUNIRATHINAM February 1, 2023 - 10:34 am

Super saravana

ஆ.செங்கதிர்ச்செல்வன் February 1, 2023 - 10:36 am

வடிவக் கச்சிதமான கதை. விளையாட்டு ஏரியாவை இப்படியான சிறுகதை கிராஃப்ட்டுக்குள் நான் வாசிப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு யாராவது எழுதியிருப்பார்களா எனத் தெரியவில்லை. எழுதுக்குப் பழகின கைகொண்டவர் சரவணன் சந்திரன் என்பது இந்தச் சிறுகதையில் தெரிகிறது. வாழ்த்துகள் சரவணன்.

Raju February 1, 2023 - 2:34 pm

Very Best Story hatts off

Perumalsamy Thiagarajan February 1, 2023 - 7:49 pm

ஆடுகளத்தின் நுணுக்கங்களை பார்வையாளனாக இல்லாமல், ஆட்டத்தில் கலந்து கொள்ளும் ஆட்ட வீரனாக….

வாசகனை உணரச் செய்து ஆட்டக்களத்தில் மனதளவில் இறங்கி ஆடச்செய்யும் உத்தியில் வெற்றி பெற்று இருக்கிறார் சரவணன் சந்திரன்.

மன சமாதானம் என்பது எதிலும் வரும். அதை உணர்ந்து செயல்படாமல் விட்டுவிட்டால், ஜெயமோகனின்… கன்னியாகுமரியின் கதாநாயகன் மமதையில் நின்று விட்டது போல ஆகும் வாய்ப்பும் உள்ளது.

வீடும், ஆட்டக்களமும் வேறுவேறு என்றாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு இடத்தில் தன்னை விட்டு தன்னின் தான் என்பதைக் கடந்து சமாதானமாக ஏற்றுக் கொள்வதை மிகச்சரியாக வெளிப்படுத்துகிறர் ஆசிரியர்.

அதில்…..

வெற்றியின் முழுமையை கோச்சும், ஆட்டக்காரனும் அடைந்திருப்பதை வாசகன் தெளிவாக உணருகிறான்.

வாழ்த்துக்கள் சரவணன் சந்திரன்.

லெட்சுமி நாராயணன் பி February 1, 2023 - 9:39 pm

அட்டகாசமான கதை. சிறப்பு. ❤️

Ramakrishnan February 1, 2023 - 10:13 pm

நல்ல கதை சார். நன்றாக வந்திருக்கிறது

JAdalarasan Adalarasan February 3, 2023 - 12:50 am

கதை சிறப்பு தலைப்பு அழகு

Comments are closed.