உயிர்க்கருணையின் பேரியக்கம்: வி.அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’

1 comment

பேரியற்கையின் முன் மனிதனும் ஓர் உயிர். பிரபஞ்சத்தின் எண்ணற்ற சிறிதும் பெரிதுமான உயிர்களுக்கு நடுவே அவனும் ஓர் உயிர்தான். என்றாலும் ஆற்றல் மிகுந்தவன். பகுத்தறிவு மிக்கவன். எனவே, பிற உயிர்களைக் காட்டிலும் மேன்மையுடனும் கூடுதல் மகிழ்ச்சியுடன் நிறைவுடன் வாழும் வாய்ப்பைப் பெற்றவன். ஆனால், உண்மையில் பிற அனைத்து உயிர்களைக் காட்டிலும் அதிகமும் துன்புறுவதும் அலைக்கழிந்து அல்லலுறுவதும் அவனன்றி வேறு எதுவுமில்லை. அறிவின் துணைகொண்டு நோய்களுக்கான காரணிகளைக் கண்டறிந்து நீளாயுளுடன் வாழ்வதைச் சாத்தியமாக்கியிருக்கிறான். அண்டமளக்கிறான். அணுவைத் துளைக்கிறான். காலம் இடம் சார்ந்திருக்கும் எல்லா எல்லைகளையும் கடந்து சாதனைகளைப் புரியத் தொடர்ந்து முயல்கிறான். இயற்கையை மீற எத்தனிக்கும்போது அதனைச் சிதைக்கவும் சீரழிக்கவும் தயங்குவதில்லை. இயற்கை முன்னிறுத்தும் எல்லைகளை அவன் தகர்த்தபடியே முன்னகர்கிறான். ஒன்றை அடைந்தவுடன் அதை அனுபவிக்க எண்ணாமல் அடுத்த இன்னொரு படிக்கு முயல்வதே அவனுடைய இயல்பாகிறது. இத்தனையும் எதன் பொருட்டு? எது அவனைத் தொடர்ந்து மேலும் மேலும் என இயக்குகிறது? ஏன் எதிலும் அவன் நிறைவுறுவதில்லை?

எல்லா உயிர்களுக்குள்ளும் அடிப்படையாக அமைந்திருக்கும் ‘உயிரிச்சை‘யே அவனையும் இயக்குகிறது. ஆனால், அது மனிதனுக்குள் ஒரு அணையா நெருப்பாக உக்கிரமாக எரிந்துகொண்டே உள்ளது. அந்த நெருப்பைக் கட்டுப்படுத்தும் பொருட்டே நாகரிகத்தின் வளர்ச்சிப்போக்கில் பல்வேறு விதிகளும் அமைப்புகளும் மனிதனால் உருவாக்கப்பட்டன. ஆனால், சுயநலத்தின்பொருட்டு அவனே அந்த நெறிகளையும் அறங்களையும் சமூக விதிகளையும் மீறிச் செல்வதற்கு யோசிப்பதேயில்லை. உலகின் எல்லாத் தீமைகளுக்கும் காரணமாக அதுவே அமைகிறது.

இதை அப்படியே கண்மூடித்தனமாக மேற்கொள்கிறானா என்றால் அப்படியுமில்லை. உலகீய விழைவுகளுக்கான அடிப்படை எது? அதிலிருந்து எங்ஙனம் விடுபடுவது என்பதைப் பற்றிய தொடர்ச்சியான சிந்தனையின் பலனாகவே பல்வேறு யோக நெறிகளும் தியான முறைகளும் கண்டறியப்பட்டன. இச்சைகளால் அலைகழிக்கப்படும் மனத்தையும் உடலையும் கட்டுக்குள் கொண்டுவர இந்நெறிகள் பயன்படுகின்றன.

எளிய வாழ்க்கைப் பின்னணியைக்கொண்ட ஒரு சாதாரண சிறுவன், வாழ்வின் எல்லா நடப்பியல் அனுபவங்களையும், சிறிதும் பெரிதுமான கசப்பும் களிப்புமான அன்றாடங்களையும் கடந்து கல்வியின் வழியாகவும் தொடர்ச்சியான தேடலின் வழியாகவும் எதிலும் நிறைவுகொள்ளாத மனித மனத்தை உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பகுத்தறிய முயலும் பயணத்தைச் சொல்வதே இந்த நாவல்.

1970களில் தொடங்கும் இந்நாவல் வடசென்னையைப் பின்புலமாகக்கொண்டுள்ளது. கீழ் மத்தியதர மக்களுடைய வாழ்வின் பல்வேறு அம்சங்களை, அடையாளங்களை, தனிக்கூறுகளை அடுக்கிக் காட்டியபடியே விரிகிறது. தொகுப்பு வீடுகளிலும், தெருவிலும், பக்கத்து வீடுகளிலும் அன்றாடம் காணும் வாழ்க்கைச் சித்திரங்கள். பள்ளிகள், ஆசிரியர்கள், விளையாட்டுத் தோழர்கள், விந்தையான மனிதர்கள், வேடிக்கையான கதைகள். நோய்மை, மரணம், வரை மீறும் ஆண் பெண் உறவுகள், அவற்றின் விளைவுகள், துயரம், கண்ணீர் என எல்லாவற்றையும் காட்டுகிறது. வாலிபப் பருவத்தின் காதல் கனவுகள், சாகசங்கள், மனக்கோலங்கள், அபத்தங்களையும் விவரிக்கிறது. உயிரூட்டமிக்க கதாபாத்திரங்களைக் கொண்டு மனித உறவுகளின் தீர்க்கவியலா ஆழங்களைத் தொட்டுச் செல்கிறது.

ஒரு தனி மனிதனின் ஐம்பதாண்டு கால வாழ்வைச் சொல்வதன் ஊடாக இந்த நாவல் சென்னையின் புறச்சூழலிலும் சமூக அமைப்பிலும் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை, மாற்றங்களை, சிதைவுகளையும் நுட்பமாகவும் விரிவாகவும் சித்தரித்திருக்கிறது. எளிமையான ஒரு நகரம் பெருநகரமாகும்போது எவையெல்லாம் இல்லாமல் போயிருக்கின்றன என்பதையும் உணர்த்தியுள்ளது. கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வேலை வாய்ப்புகள், பொருளாதாரம் ஆகியவற்றின் வழியாக நகரம் வளர்ந்து நவீனமயமாகும்போது அங்கு வாழும் மக்களின் வாழ்வும் அன்றாடங்களும் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப உருமாறுவதையும் நுட்பமாகப் புலப்படுத்துகிறது.

பெரும் தொழிற்சாலைகள் உருவாகி வளர்ந்து மண் வளத்தையும் சுகாதாரத்தையும் மாசுபடுத்தும் ஆலைக் கழிவுகள் அசுரவேகத்தில் குவிவதும், அதற்கு எதிர்நிலையில் சூழல் காப்பு குறித்த விழிப்புணர்வைத் தர முனையும் தன்னார்வக் குழுக்கள் தொடங்கப்பட்டு தொண்டாற்றுவதும் இணைச் சரடுகளாக நாவலில் அமைந்துள்ளன. அதேபோல, இன்னொரு சரடாக அமைந்திருப்பது நோய்களின் மூலத்தைக் கண்டறியும் நோக்குடன் ஆரம்பிக்கப்படும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரமாண்டமாக வளர்ந்து வியாபார நோக்கை எட்டுவதும் அதன் எதிர்நிலையில் மனிதனின் உள்மன அறிதலைத் தரும் நோக்குடன் வெவ்வேறு தியான, யோக மார்க்கங்கள் பரவலாக உருவாவதும் அமைந்துள்ளது. இவ்வுலகின் ஆற்றல்கள் அனைத்தையும் சமநிலையுடன் பேணும் இயற்கையின் நடவடிக்கைகளோ இவை என யோசிக்க முடிகிறது.

எண்ணற்ற கதாபாத்திரங்கள், ஏராளமான சம்பவங்கள் நாவலில் இடம்பெற்றிருந்தபோதும் வாழ்வின் திரண்ட சாரத்திலிருந்து அவை எழுதப்பட்டிருப்பதால் உயிரூட்டத்துடன் அமைந்துள்ளன. ‘இந்த வாழ்வின் பொருள் என்ன?’ என்ற நாவலின் மையக் கேள்விக்கு இத்தனை கதாபாத்திரங்களும் சம்பவங்களும் வெவ்வேறு கோணங்களில் அடிப்படைகளில் வலுசேர்க்கின்றன.

நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் மரணம் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. மூப்படைந்தோரின் மரணங்கள், விபத்தினால் ஏற்படும் அகால மரணங்கள், நோயுற்ற மரணங்கள், எதிர்பாரா மரணங்கள் என்று எண்ணற்ற சாவுகள். வாழ்வின் அபத்தத்தை, நிலையாமையை, மெய்நிலையை உணர்த்தவே முனைகிறது மரணம். ஆனால், மனிதன் அதைக் கடந்து மேற்செல்லவே முயல்கிறான். அறிவைக்கொண்டு அதன் எல்லைகளை மீறவே விழைகிறான். உடலை இல்லாமல் ஆக்கும் மரணத்தை இயல்பாக அணுகும் முதிர்ச்சியை அடையவே மனத்தை அவன் பழக்க முற்படுகிறான். மரணத்தை மீறுவதன் வழியாக வாழ்வின் இருப்பைப் பொருள்கொண்டதாக மாற்ற ஆசைப்படுகிறான். இந்த மோதல் நாவலின் இன்னொரு வலுவான சரடாக அமைந்திருக்கிறது.

கல்வியின் வழியாக ஒருவன் அடைய முடிகிற வாழ்வு. அதன் போதாமை. எதிலும் நிறைவுகொள்ளாமல் நீளும் ஆழ்மனத் தேடல். முறியும் உறவுகள். மனிதர்களின் மீது நீங்காத நம்பிக்கை, பிற உயிர்களின் மீது உள்ளார்ந்து ஏற்படும் பரிவும் கருணையும் எனப் பல்வேறு ஆழங்களைக் கொண்டிருக்கும் இந்த நாவல் இயல்பான, சரளமான வாசிப்புத் தன்மையை எங்குமே தவறவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்வின் விசாரங்கள், யோக தியான அனுபவங்கள், சூழல் சீர்கேடு உள்ளிட்ட பொதுப் பிரச்சினைகள் போன்றவற்றை எழுதும்போது பொதுவாக அமையநேரும் செய்தி எழுத்துத் தன்மை எங்குமே இடம்பெறவில்லை என்பது முக்கியமானது. கடந்த நாற்பதாண்டுகாலமாக இலக்கிய ஆக்கங்களின் மொழியிலும் நடையிலும் சிறுபத்திரிகைகள் வலுவான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறான தன்மையிலிருந்து விலகி நிற்பதே இந்த நாவலின் சிறப்பு. நாவலின் மொழியும் நடையும் மரபான தமிழில் அமைந்தவை. அதேசமயத்தில் நெருக்கமான வாசிப்பு அனுபவத்தைத் தருபவை. நாவலின் பிற்பகுதியில் எழுதப்பட்டுள்ள அத்தியாயங்களில் இவ்வாறான மொழியின் உச்சங்களை அனுபவிக்க முடியும்.

திருப்பதி குடைத் திருவிழா, ஆங்கிலோ இந்திய வாழ்க்கை, எதிர்பாராது அமைந்த மாட்டு வண்டிப் பயணம், பெருமழையின்போதான அபாயகரமான பேருந்துப் பயணம், பத்துநாள் மௌனம் அனுசரிக்கும் விபாஸனா தியானப் பயிற்சி, சிறுவர்களுடனான ஆனைமலைப் பயணம், ஜே கேயின் வசந்த விஹாரின் சூழல், கொடைக்கானல் அஞ்சுவீடுக் காட்டுப் பகுதியில் நேரும் அனுபவங்கள், காகங்களையும் மீன்களையும் உற்று நோக்குகையில் அடைய நேர்கிற மன எழுச்சிகள் போன்ற அபாரமான தருணங்கள் நாவலுக்குச் செறிவூட்டியுள்ளன. பாடம் சொல்லித்தரும் தேவி அக்காவின் மீதான முதல் காதல், ஆராய்ச்சி மையத்தில் புவனாவுடனான காதலும் திருமணமும் பிறகு முறிவும், ஷெரீனுடனான அடுத்த காதலும் திருமணமும் என்று ஜெர்ரியின் வாழ்வினூடாகப் பெண் உறவுகள் நிலையின்மையுடன் இருந்தபோதும், எதிர்பாரா மரணங்களையும் ஏமாற்றங்களையும் சரிவுகளையும் சந்திக்க நேர்ந்தபோதும் அவன் சமநிலை குலைவதில்லை. தன்னியல்பில் அவன் பிறருக்கு உதவும் குணம்கொண்டவனாக, இசை, எழுத்து என கலைகளின் மீது ஆர்வம்மிக்கவனாக, உயிர்களின் மீது பரிவுள்ளவனாக, இயற்கையை அதன் விந்தைகளை ரசிப்பவனாக இருக்கும் தன்மையினால் இவ்வாறான அனுபவங்கள் அவனை நிதானப்படுத்துகின்றன. மேலும் பக்குவப்படுத்துகின்றன. வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு அகம் சார்ந்த அறிதலும் உயிர்களின் மீதான பரிவுமே முக்கியம் என்ற நிலையை எட்டச் செய்கின்றன.

தொடக்கத்திலிருந்து சொல்லப்பட்ட எண்ணற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கை, அதன் சிக்கல்கள், துன்பங்கள், துரோகங்கள், தீர்வு காணமுடியாத புதிர்களைக் கொண்ட ஆண் பெண் உறவுகள், சரிவுகள், ஏமாற்றங்கள், சூழல் சீர்கேடு, நோய்மை, மரணங்கள் ஆகியவற்றிலிருந்து எழும் சிறிதும் பெரிதுமான பல்வேறு கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும், தீர்வுகாண முயலும் ஒற்றைக் கதாபாத்திரமாக ஜெர்ரி திரண்டு நிற்பதை உணரும்போது நாவல் ஆழ்ந்த அமைதியுடன் நிறைவடைகிறது.

மனத்தை அறியவும் அதனைக் கட்டுப்படுத்தவுமான பல்வேறு யோக, தியான மார்க்கங்கள் நாவலில் சொல்லப்பட்டுள்ளன. முக்கியமாக, பௌத்தத் தியான முறை, அதன் பயிற்சிகளைக் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தமிழ் மெய்யியல் இவ்வகையான அனைத்து தேடல்களுக்கான சூத்திரங்களையும் உள்ளடக்கியது என்பதைத் தொடர்ந்து உதாரணங்களின் வழியாகச் சுட்டிக் காட்டுகிறது.

இந்த மனித வாழ்வைப் புரிந்துகொள்வதும், பிற அனைத்து உயிர்களையும் பெருங்கருணையுடன் அணுகுவதுமான மேலான நிலையை அடைவதே மானுட இருப்பின் பொருளாக இருக்க முடியும் என்பதை ஒரு உயிரியலாளனாகவும் ஆழ்மன தியானத்தில் உறைபவனாகவும் விலகி நின்று கண்டடைவதே இந்த நாவலின் சிறப்பு. செறிவான, மரபான தமிழ்நடையும் மொழியும் இந்நோக்கத்திற்கு வலுசேர்த்துள்ளன. அகத்தையும் புறத்தையும் நுட்பமாக அணுகி ஆராய்ந்து ஒன்றின் மீது மற்றது செலுத்தும் தாக்கங்களையும் உற்றறிந்து உயிரின் சாரத்தை வரையறுக்க முயலும் முதன்மையான தன்வரலாற்று நூல் இதுவேயாகும்.

*

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம், வி.அமலன் ஸ்டேன்லி, தமிழினி வெளியீடு, விலை ரூ.550

1 comment

Yasmin July 1, 2023 - 12:24 pm

சு. வேணுகோபாலன் எழுதிய ‘நுண்வெளி கிரகணங்கள்’ பற்றிய தங்கள் நூல் மதிப்புரையை வாசிக்கும்போது நூலின் சிறப்பு அதன் தன்மை இவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.. ஆனால் இந்த கட்டுரையின் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கும் தங்களின் நுட்பமான, நுணுக்கமான சிந்தனை வடிவங்கள் வழக்கம்போல் மனம் கவர்கின்றன..

‘உண்மையில் இந்த நாவல் இன வரைவியலின் அனைத்து அம்சங்களையும் நம்முன் கடை பரப்பி அதைக் கடந்து செல்வதற்கான பாதையை நுட்பமாகக் காட்டுகிறது. வெளிப்பார்வைக்கு இன வரைவியல் நாவலாகத் தோற்றமளிக்கும் நுண்வெளி கிரகணங்கள், அதன் ஆழத்தில் மானுட தரிசனத்தையே முன் வைத்திருக்கிறது.’ தங்கள் ஆழமான உணர்தலைத் தங்கள் வரிகளில் படிக்க சுகம்..

‘நான்கு தலைமுறைகளின் வரலாற்றை நம் கண் முன்னே விரித்துக் காட்டிவிட்டு இவ்வளவுதான் மக்கா மனசுப்பய வாழ்க்கை என்று துண்டை உதறித் தோளில் போட்டபடி ஆகாயம் வெறிக்கும் கனிந்த முதியவரின் நிதானம்’… தங்கள் டச்!!

‌ சமஸ்கரா நாவலின் நாரணப்பா, ‘தலைமுறைகள்’ ‘கோபல்லபுரத்து மக்கள்’ யூமா வாசுகியின் ‘ரத்த உறவு ‘ , உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை’….
இவையெல்லாம் தங்கள் பரந்த வாசிப்பை, அதைத் தாங்கள் எழுதும் கட்டுரையோடு பொருத்தும் திறமையை உணர்த்தும் இடங்கள்!!!

இந்த கட்டுரையின் வாயிலாக, தங்கள் எழுத்தை ரசித்த பல இடங்கள் உள்ளன..

‘மனிதர்களின் அக இருளை எழுத்தின் வழியாக அள்ளிக் கொட்டும் இந்த நாவல் அவற்றின் ஊடாக வெளிப்படுத்தும் சமநிலை காரணமாக இருத்தலியல் நாவலாக மாறிவிடாமல் ஒளி பொருந்திய தருணங்களைக் கண்டடைகிறது நாவலில் வருகிற பல கதாபாத்திரங்கள் தம்முடைய மனத்திலும், பிறரிலும் உறைந்திருக்கும் .பேரருளை அடையாளம் கண்டுபிடிகிறார்கள் அதற்குப் பின்பும் யாரோ ஒருவருடன் கொண்ட பிணைப்போ அல்லது அப்படி ஒரு நம்பிக்கையோ அவர்களை வாழ்வின் இது நேசம் கொள்ள வைக்கிறது’.. நாவலைப் பற்றிய தங்கள் உணர்தல் அருமை..

‘ஆண் பெண் உறவின் சிக்கல்களுக்கும் அதனால் விளையும் சமூகத் தவறுகளுக்கும் அடையாள பேதமோ அரசியலோ இல்லை என்கிற நுட்பமான புரிதலை நாவலை வாசிக்கும் வாசகர் சென்றடைய முடியும்’… அருமையான வரிகள் டாக்டர்!

‘மனத்தில் உறையும் குரூரங்கள் வன்முறையாகவோ தீர்க்க முடியாத வன்மம் ஆகவோ வெளிப்படுவதை திரை விலக்கியபடி மிகவும் நுணுக்கமாக வேணுகோபால் படைத்துக்காட்டி இருக்கிறார்’… தங்கள் டச்!!!

நம்மைக் கவர்ந்த தங்கள் எழுத்தின் பல இடங்கள்…👇

‘ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியை பண்பாட்டு மரபின் பின்னணியில் விளக்க முயலும் நாவல்களில் தவறாமல் இடம்பெறுவது ‘சாபத்தின் பேராற்றல்’. இந்த நாவல் அதனையும் கடந்து செல்கிறது’

‘இந்த நாவல் சராசரித்தளத்தை தாண்டி மேலெழுவது மரபுக்கு எதிராக ஒலிக்கும் சீர்திருத்தக் குரல்களால் மட்டுமே அல்ல. அவற்றையெல்லாம் தாண்டிய மனித மனத்தின் ஆழங்களை நாவல் மிக நுட்பமாகத் தொட்டுச் செல்வதால் தான்’

‘ புறவுலகில் நாம் பேசும் முற்போக்கு பாவனைகளைத் தாண்டி நிஜத்தில் நம்மை ஆக்கிரமத்திருக்கும் ஆதி இச்சையையும் கடக்கவே முடியாத கருவறைப் பதிவுகளையும் அற்புதமான படிமமாக வேணுகோபால் படைத்துக் காட்டியிருக்கிறார்.’

‘ பசு வழியாகவோ பெண் வழியாகவோ சாதி உள்ளே நுழைந்து ஒருவரை புனிதமாக்கி இன்னொருவரைத் தீட்டாக்கி விடுகிறது என்பதை நாவல் குறிப்பால் உணர்த்துகிறது’.

‘நாவலில் இடம்பெறும் மேற்கண்ட அகப்புறச் சித்திரங்களை தியாகம் என்கிற ஒற்றைப் புள்ளியில் இணைத்து வேறொரு கோணத்தில் பார்த்தால் வேணுகோபாலின் மேதைமை புரியும்’.

‘விவசாயம் அழிகிற போது நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் கூடச் சேர்ந்து உடன்கட்டை ஏறித்தானே ஆக வேண்டும்?’.

‘ தம் மரபின் அனைத்து வேர்களையும் மனதளவில் துறந்தாலும் கூட மனைவி உடல் மீதான உடைமை உணர்வை விட்டு விலக முடியாமல் தத்தளித்து தம்பியையோ, மனைவியையோ தண்டிக்க மனமின்றித் தன்னையே தண்டித்துக் கொண்டு நாவலின் இறுதியில் சீரங்கு அடைகிற அக விடுதலை. அதுவே நாவலின் அனைத்துச் சிக்கல்களையும் நுட்பமாக விடுவித்து அந்தக் குடும்பத்திற்கு வேறொரு பாதையைக் காட்டுகிறது.’

நிறைவாக, தாங்கள் எழுதி இருக்கும் வரிகள் மிகவும் ஆழமானவை… மனம் கவர்பவை….👇

‘ உண்மையில் மரபுகள், பண்பாடுகள், நம்பிக்கைகள், வரலாறுகள், புனிதங்கள் யாவற்றையும் விட வல்லமை கொண்டதாய் எழுந்து நிற்கிறது பேதமற்ற இயற்கை. அதன் மகத்தான வல்லமையின் முன் அடிபணிவதைத் தவிர வேறென்ன சாதித்துவிட முடியும் இந்தச் சிறு உயிரால்?’.

‘மனதில் துளயளவும் பக்தியே இன்றி கோவிலின் சிற்பங்களை, கட்டடக்கலை நுணுக்கங்களை, தலவிருட்சத்தின் மகிமைகளை வழிப்போக்கனுக்கு வகைவகையாய் விவரித்துவிட்டு, காக்கை தூக்கிப் போகும் அணில் குஞ்சின் வெறும் சடலம் கண்டு மனம் ஒடுங்கிக் கைகூப்பும் அறிவார்ந்த முதியவரின் கனிவை சு.வேணுகோபால் தன் 25 வயதிற்குள் அடைந்திருக்கிறார் என்பதற்கான வரலாற்று சாட்சியே இந்த நாவல்’

தங்கள் வழியில் வாசிக்காத ஒரு நாவலைத் கண்டடைவது, அழகாக படைக்கப்பட்ட வண்ணமற்ற ஓர் ஓவியத்தை, பிறகோர் ஓவியர் உரிய வண்ணங்களைத் தீட்ட, கண்டு ரசித்து ஆனந்திப்பது போல் இருக்கிறது… வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே!!!

Comments are closed.