1
திட்டமின்றி மின்னோடைவெளியில் உலவிக்கொண்டிருந்த ஓர் இரவு, When They See Us (2019) தொடரின் முதல் பகுதியைப் பார்க்கத் தொடங்கினேன். எப்போதோ கோகுல் பிரசாத்தின் பரிந்துரைப் பட்டியலில் கண்டு என் விருப்பப் பட்டியலில் சேர்த்தது. உண்மையிலேயே உலுக்கிவிட்டது. தொலைக்காட்சி வரலாற்றில் மிகச்சிறந்த ஒரு மணி நேரம் என்று பல தொடர்களின் பகுதிகளைக் குறிப்பிடுகிறார்கள். இப்படம் அவ்வரிசையில் எளிதாக இடம்பிடிக்கத் தகுந்தது. சமூக அக்கறையுடன் செயல்படுவதில் கலையின் சாத்தியங்களை விரிவுபடுத்திக் காட்டுகிற தொடராக இதைக் காண்கிறேன்.
உண்மை நிகழ்வுகளைத் தழுவிய கதை. நியூ யார்க் நகரப் பூங்காவொன்றில் ஒரு பெண் கடுமையாகத் தாக்கப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டு நினைவை இழக்கிறாள். சாட்சிகளாகப் பதின்பருவத்துக் கறுப்பினச் சிறுவர்கள் ஐவரை அழைத்துச் செல்கின்றனர் காவல்துறையினர். பின் அவர்கள் மீதே குற்றம் சாட்டுகின்றனர். அதில் கோரி என்பவன் நண்பனுக்குத் துணையாகக் காவல்நிலையத்துக்கு அழைப்பின்றித் தானாக வந்தவன். ஒவ்வொருவரையும் மிரட்டி உருட்டிப் பிறர்மீது பொய்க்குற்றம் சாட்டவும், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் வைக்கின்றனர். மிகக் குறைவாகவே நேரடி வன்முறை காட்டப்படுகிறது. காட்சியமைப்பும் தொகுப்பும் வசனங்களும் வன்முறை குறித்த அச்சத்தைக் கதைமாந்தருள் கிளர்வதைக் காட்டி, உச்சமான வன்முறையை நமக்கும் உணர்த்துகின்றன. பொய்க் குற்றம் சாட்டப்படுவதைக் கருவாகக் கொண்டுள்ள எண்ணற்ற படங்களில் அடையாத அளவிலான அதிர்ச்சி இதில் ஏற்பட்டது.
இந்த அதிர்ச்சி விலகும் முன்பே இக்குறிப்பை எழுதிவிடலாம் என்று இதுவரை எழுதிவிட்டேன். மீதித் தொடரில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றுதான் எதிர்பார்க்கிறேன். குற்றமற்றவர்கள் இறுதி வெற்றிபெறும் வழக்குகளே பெருமளவு நம் கவனத்தை ஈர்க்கும் கதைகளாகின்றன. முதலில் தோன்றும் அதிர்ச்சியை மீறும் எழுச்சியை அவ்வெற்றிகள் ஏற்படுத்திவிடுகின்றன.
ஆனால் இப்படிப் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டு வெற்றி பெறாமல், சரியான வழக்குரைஞர்கள் கிட்டாமல், சிறையில் வாடும் எளிய மக்கள் உலகெங்கிலும் எத்தனை பேர்? வாழ்வை இழந்து தவிக்கும் வறிய குடும்பங்கள் எத்தனை என்ற கேள்வியை இந்த முதல் படலம் மனதில் எழுப்புகிறது. அவர்களது கதைகளை யார் கூறுவது? ஏன் அவர்களில் பெரும்பாலானோர் எளிய மக்களாகவே உள்ளனர்?
2
தொடரின் நான்கு படலங்களையும் பார்த்துவிட்டேன். எதிர்பார்த்த போக்கில் செல்லாமல், கடுமையான உள அலைப்பைத் தரும் தொடர். இறுதிப்படலம் முதற்படலத்துக்கு இணையானது. (மேற்கொண்டு செல்லுமுன்: உண்மை நிகழ்வுகள் என்பதால் spoilers பற்றிக் கவலைப் படாமல் எழுதியுள்ளேன்.)
1989ஆம் ஆண்டு ‘Central Park Jogger Case’ என்றழைக்கப்பட்ட இந்த வன்புணர்வுக் குற்றம் நியூ யார்க் நகரில் நிகழ்ந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து சிறுவர்களையும் கொடூரமான பாதகர்களாக ஊடகங்கள் சித்தரித்திருக்கின்றன. அவர்களது ஆர்லம் பகுதி மக்கள் மட்டுமே அவர்கள் பக்கம் நின்றிருக்கிறார்கள். டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நாளிதழ்களில் ஒருபக்க விளம்பரம் கொடுத்திருக்கிறார். இத்தகைய ஒருவரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் அளவு அமெரிக்கா அடுத்த 25 ஆண்டுகளில் முன்னேறியது. இத்தகைய காலகட்டத்தில் சிறைத் தண்டனையையும் விடுதலையான பிறகு சமூகம் கொடுத்த தொடர் தண்டனையையும் சந்தித்தனர் இவ்விளைஞர்கள். கூடவே அவர்களது குடும்பங்களும் அல்லலுறுகின்றன; சிதைகின்றன. அதிலும் கடைசிப் படலத்தில் காட்டப்படும் கோரியின் கதை மிகக் கொடுமையானது. நண்பனுக்குத் துணையாக வந்த அவனுக்கு மட்டும் பதினாறு வயது நிரம்பியிருந்ததால் பெரியவர்க்கான சிறைக்குத் தனியே அனுப்பப்படுகிறான். வன்புணர்வுக் குற்றவாளி என்ற முத்திரையால் தொடர் தாக்குதல்களைச் சந்திக்கிறான். ஆனால் குற்றத்தை ஒப்புக்கொண்டால் மட்டுமே சிறைவிடுப்பு கிடைக்கும் என்ற நிலையிலும் உறுதியுடன் ஒருபோதும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறான். அவனது உறுதியே அவன் விடுதலைக்கு வழிகோலுகிறது.
இறுதியில் சட்டத்தின்முன் வெற்றிபெறத்தான் செய்கிறார்கள். அப்போதும் இது சட்டத்தின் வெற்றியன்று. எதிர்பாராமல் நடந்த வேறு நிகழ்வால் இவர்களது களங்கமின்மை நிறுவப்பட்டது.
இத்தொடர் முடிந்ததும் ஓப்ரா வின்பிரியுடன் ஓர் உரையாடல் உள்ளது. அத்தனை பேரும் ஆறாத வடுக்களைச் சுமந்துகொண்டுள்ளனர். தருமம் மறுபடி வெல்லலாம். ஆனால் அதற்குமுன் இழந்தவை மீட்கப்படுவதே இல்லை.
காவல்துறை தொடங்கி வழக்காடுமன்றம், நாடாளுமன்றம்வரை நம் நீதி அமைப்பு அதிகார போதையின் பிடியில் உள்ளது. நம் சமூக அமைப்பு அதற்குத் துணைபோகிறது. இடத்துக்கேற்ப நிறவெறியும் இனவெறியும் பணவெறியும் மதவெறியும் சாதிவெறியும் இப்போதையைப் பெருக்குகின்றன.
குடிபுறம் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில். சரி. ஆனால் கோலதூஉங் கோடாது முறைசெய்ய வேண்டுமே! ஒவ்வொரு முறை எவர்மீதேனும் குற்றம் சாட்டப்படும்போதும் கண்மூடித்தனமாக இப்படி அறுக்கவேண்டும், அப்படி ஒறுக்கவேண்டும், உடனடியாகக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்று கூக்குரலிடும் முன் இத்தொடரைப் பார்த்துவிட்டுச் செய்யலாம். முறையாய் உண்மை வெளிவரச் சற்றே பொறுத்திருக்கலாம். குற்றமற்ற ஒருவர் தண்டிக்கப்படும்போது, அதற்குத் துணைபோன அனைவரும் குற்றவாளிகளாகிறோம்.
ஒரு தொடர்கொலைக் குற்றவாளி – பலரையும் வன்கலவிக்குப்பின் கொலை செய்தவன், குற்றமற்றவர்கள் தன்பொருட்டு சிறையில் வாடுவதைக் கண்டு குற்றவுணர்வு கொண்டு இக்குற்றத்தையும் தானே செய்ததாக ஒப்புக்கொள்கிறான். ஆனால் அவர்கள் மீது குற்றம் சுமத்திய அதிகாரிகளும் அரசு வழக்குரைஞரும், தண்டித்த நடுவர்குழுவும் அவர்களைத் தண்டிக்க அவர்களிடமிருந்து காவல்நிலையத்தில் வலிந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் பொருட்படுத்தாது அச்சிறுவர்களின் வாழ்வைப் பறித்தனர். பின்பு அவர்கள் குற்றமற்றவர்கள் என்று பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உண்மைக் குற்றவாளி தானாக ஒப்புக்கொண்டதால் மெய்ப்பிக்கப்பட்டபோதும் தமது பெருந்தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். கொலை வெறியைக் காட்டிலும் அதிகார வெறியும் இனவெறியும் கூடுதலாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. நியூ யார்க் ஆட்சியாளர்கள் மேலும் 12 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு இழப்பீடு வழங்கினர். ஆனால் மன்னிப்புக் கோரவில்லை.
தொடரின் இயக்குநர் ஆவா டூவெர்னே ‘The Central Park Five’ என்ற தலைப்பை வைக்க மறுத்திருக்கிறார். அது ஊடகங்கள் அவர்களுக்குச் சூட்டிய பட்டம். அதுவன்று அவர்களது அடையாளம். அவர்கள் ஒவ்வொருவரின் பறிபோன வாழ்வுகளும் தனித்தனியானவை. அவர்களது இடர்ப்பாடுகள் தனித்தனியாவை. ஐவர் சேர்ந்து செய்யாத ஒரு செயலுக்கு எப்படி ஒரு பொது அடையாளத்தை அவர்கள் சுமக்க முடியும்?
‘அவர்கள் நம்மை நோக்கும்போது’ என்பது ஆழமான தலைப்பு. எண்ண எண்ணப் பொருள் விரிந்துசெல்கிறது. அவர்கள் இவர்களை ஏன் நோக்குவதில்லை? தமது இயல்பு வாழ்க்கை தடைபடும்போது மட்டுமே நோக்குவது ஏன்? நோக்கும்போதும் நோய்நோக்காகத்தான் இருக்குமா? நோய் தீர்க்கும் நோக்குக்கு எங்கே செல்வது?