டல்ஸ் மரியா லொய்னாஸ் கவிதைகள்

2 comments

1. ரோஜாக்கள்

என் தோட்டத்தில்,
ரோஜாக்கள் உள்ளன:
நான் உங்களுக்கு ரோஜாக்களைக் கொடுக்க விரும்பவில்லை
அது நாளை…
நாளைக்கு உங்களிடம் தங்கியிராது.

என் தோட்டத்தில்,
பறவைகள் இருக்கின்றன
தமது ஸ்படிகப் பாடலுடன்:
நான் அவற்றை உங்களுக்குக் கொடுக்கவில்லை;
அவற்றிற்குப் பறந்துசெல்ல இறக்கைகள் உள்ளன.

என் தோட்டத்தில்,
நல்லதொரு தேன் கூட்டை உருவாக்கிடும்
தேனீக்கள் உண்டு:
நிமிட நேர இனிமை…
நான் அதை உங்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை!

உங்களுக்காக,
எல்லையற்றதை அல்லது ஒன்றுமில்லாததை
எது அழியாத ஒன்றோ அதை அல்லது உங்களால் புரிந்துகொள்ளவியலாத
இந்த ஊமைத் துயரை,
கொடுப்பதற்கு எதுவுமில்லை
என்கிற சொல்ல முடியாத சோகத்தை,
நித்தியத்தின் ஒரு பகுதியென
நெற்றியில் சுமக்கும் ஒருவருக்குத்
தருவதற்கு விரும்பினேன்:

புறப்படுங்கள், தோட்டத்தைவிட்டு வெளியேறுங்கள்…
ரோஜாக்களைத் தொடாதீர்கள்:
மரித்துவிடும் விஷயங்களைத்
தொடக்கூடாது.

*

2. இன்று மதியம்

இன்று மதியம் பார்த்த,
ஆற்றில் தன் துணிகளைத் துவைத்துக்கொண்டிருந்த
பெண்ணைப் போல,
உன் உருவத்தைக்
குனிந்து நோக்கினேன்.
பிரவகித்தோடும்
உனது இன்மையின்
கரிய நதியின் மீது
மண்டியிட்டவாறு,
மணிக்கணக்காக என்
முழங்காலில்,
குந்தியிருந்தேன்.

*

3. கூழாங்கல்

கூழாங்கல்
என்பது
ஒரு கூழாங்கல்தான்,
மேலும்
நட்சத்திரம் என்பதும்
ஒரு நட்சத்திரம்தான்.
ஆனால்
நான் ஒரு கூழாங்கல்லைக்
கையில் எடுக்கும்போதும் அழுத்திப் பிசையும்போதும்
அதைத் தரையில் வீசியெறியும்போதும்
என் விரல்களுக்கு இடையே
அதை முன்னும் பின்னுமாக உருட்டி விளையாடும்போதும், ​​
நட்சத்திரம் ஒரு நட்சத்திரமேதான், ஆனால் கூழாங்கல்லோ என்னுடையது.
தவிரவும் நான் அதை விரும்புகிறேன்!

*

4. உன் பெயர்

நான் உனது பெயரைச் சொல்லி ஒருபோதும் அழைத்ததில்லை,
ஆனாலும்
ஒரு வானம்பாடி பாடாதிருக்கும்போதும்
அதன் தொண்டையை
அடைத்திருக்கும் பாடல் போல
என்னுள் நீ நிரம்பியிருக்கிறாய்.

*

கியூபாவிலுள்ள ஹவானா நகரில் ஒரு மேல்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர் டல்ஸ் மரியா லொய்னாஸ் (Dulce María Loynaz, 1902 – 1997). வீட்டுப் பள்ளி முறையில் ஆரம்பக்கல்வி பயின்றவர், சட்டப்படிப்பை ஹவானா பல்கலைக்கழகத்தில் முடித்தார். தன்னுடைய இளம் வயதிலேயே கவிதை எழுதத்தொடங்கிய இவர், கியூப இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். 1959-இல் நிகழ்ந்த புரட்சிக்குப் பிறகு 25 ஆண்டுகளுக்கும் மேலாக எதுவும் எழுதாமல் இலக்கிய உலகினின்றும் விலகியிருந்தவர், தனது 80 வயதிற்கு மேல் திரும்பவும் எழுதத் தொடங்கினார். 1984-இல் மிகெல் டி செர்வாண்டிஸ் விருதும், 1987-இல் இலக்கியத்திற்கான கியூபாவின் தேசிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

2 comments

கார்த்திகேயன் மாகா July 2, 2023 - 8:29 am

இன்மையின் கரியநதி மீது மண்டியிட்டவாறு👏👏♥️

Selvam kumar July 2, 2023 - 3:59 pm

மிகவும் அருமையான கவிதைகள் , மொழி அழகு நான் அதைக்கொடுக்க விரூம்பவில்லை….

Comments are closed.